ஃபோன் பேசிவிட்டு ஜஸ்டின் கொஞ்சம் பதற்றத்துடன் திரும்பி வருவதைக் கசாயம் கவனித்தான். “என்ன மக்கா? மாமாவா?”
“ஆமா வர சொல்லுகாரு. என்னவொ பெரிய சோலியாம். வண்டி எடுல”
கசாயத்துக்கு அவன் சொல்லும் தொனியிலேயே சங்கதி ஓரளவு புரிந்தது. பள்ளி நாட்களிலிருந்தே அவனுடன் இருப்பவன் கசாயம். ஜஸ்டினின் அப்பா மோகன் ராஜ் அவன் பாலிடெக்னிக் முதலாம் ஆண்டு படிக்கும்போது ஒரு ’விபத்தில்’ இறந்தார். அதிகம் விசாரணை இல்லாமல் அந்த வழக்கு மூடப்பட்டது. மோகன் ராஜும் தற்போதைய ஆளும்கட்சி கௌன்சிலரான ஜஸ்டினின் தாய்மாமன் இருதய ராஜும் கட்டயன்விளை காலனியில் சின்ன சின்ன பேரங்கள், மிரட்டல்கள், கடைகளில் வசூல் என வளர்ந்தவர்கள். தந்தை இறந்தவுடன் ஜஸ்டினும் கசாயமும் சேர்ந்து தொழிலுக்கு வந்தனர். பெரும்பாலும் மாமா சொல்லும் சில்லரை வேலைகள் தான். சகாயம் என்கிற கசாயம் தான் ஜஸ்டினின் டிரைவர், கையாள் எல்லாம்.
அன்று மாலை முழுக்கவே ஜஸ்டின் பரபரப்பாக இருந்தான். அவன் மொத்த வாழ்க்கையும் அன்று தான் தீர்மானிக்கப்படும் என்பது போல. கழுத்தில் தொங்கிய தங்கச் சிலுவையைத் தொட்டுத் தொட்டு முத்தியபடி இருந்தான். இரவு இருவருமாகச் சென்று மாமாவைக் கண்டு வந்தனர். விஷயம் இதுதான், ஒழுகுனசேரி மேலத்தெருவில் ஒரு காண்டிராக்டருக்கும் மாமாவுக்கும் ஏற்பட்ட தகராறில் சின்ன கைக்கலப்பாகிவிட்டது. அவன் எல்லார் முன்னாலும் மாமாவைக் கை ஓங்கிவிட்டான். வழக்கமாகக் கொஞ்சம் சமநிலையோடு இருக்கும் மாமா ஏனோ இதை மிகப் பெரிதாக ஆக்கிக்கொண்டிருந்தார். அவன் உயிரோடு இருக்கக்கூடாது என்று ஆரம்பித்தது பேச்சு. ஜஸ்டினும் கசாயமும் அவரைச் சமாதானம் சொல்லி அடக்க முயன்றனர்.
”இப்ப நானே வெட்டுக்கத்தியும் கொண்டுட்டு எறங்கனுமால? புடுங்கதுக்காலெ இருக்கியோ ரெண்டுவேரும்?” அவர் மூச்சிறைக்க கத்தினார். முன்வழுக்கையில் வியர்வைத் துளிகள் துளிர்த்து நின்றன.
அவர் சொல்வதிலும் நியாயம் இருந்தது, அவனை ஒன்றும் செய்யாமல் விட முடியாது. ஜஸ்டின் சற்று உணர்ச்சிகரமாக வாக்குக் கொடுத்தான்.
“நீங்க சும்ம இரிங்க மாமா, நாங்க செய்யத செய்யோம், அவன் எங்க உள்ளவன் யாரு என்னன்னு சொல்ல சொல்லுங்க”
கசாயத்துக்கு எதற்கு இவ்வளவு நாடகம் என்று ஒன்றும் புரியவில்லை. திரும்பும் வழியில் அவன் ஜஸ்டினின் முகத்தைத் திரும்பி திரும்பி பார்த்தபடி வந்தான். அவனுக்குத் தெரிந்த வகையில் ஜஸ்டினால் அப்படி யாரையும் அடிக்கவோ வெட்டவோ முடியாது. அவன் உருவத்தைப் பார்த்தே ஆட்கள் பயந்து விலகிவிடுவதுதான் வழக்கம். பத்தாம் கிளாசிலேயே மீசையும் தாடியுமாக ஆறடி உயரம் இருப்பான். அறிதாகக் கோபம் வந்து ஒரு அறைவிட்டால் கன்னத்து எலும்புகள் நொறுங்கிவிடும்.
அன்றிரவு வைன்ஷாப் பின்புறம் ரயில்வே தண்டவாளம் அருகே ஐந்து பேராகக் கூடி என்ன செய்வது என்று பேசப்பட்டது. இஞ்சினீரிங் படிக்கும் ஜஸ்டினின் தம்பி ஸ்டெஃபின் வந்திருந்தான். அவனுக்கு இவ்விஷயத்தில் அதீத ஆர்வம் தென்பட்டது. ”அவனை முடிக்கலாம்ணே” என்றான் படு தீவிரமாக.
கசாயத்துக்கு எரிச்சல் வந்தது. “லேய் ஸ்டெஃபின் உனக்க பீர் முடிஞ்சாச்சுல்லா கெளம்பு, உனக்கு என்னதுல இங்க வேல. அம்மைக்கு போன் அடிக்கவா?”.
”அவன் இருக்கட்டும்ல உனக்கு யாம்? நீ சொல்லு, அவன சும்மா விடனுங்கியா?”
“இல்லல, அவன் எங்கீயா வசமா கிடைப்பான், வச்சு ரெண்டு சமுட்டு சமுட்டி விடுவோம். வேற என்ன செய்யனுங்கா?”
ஜஸ்டின் ஒத்துக்கொள்ளவில்லை “இப்படி தலைக்கு மேல யேர விட்டுதான் எனக்க அப்பன கொன்னானுவ. நான் மாமாக்கு வாக்கு கொடுத்திருக்கேன்”
கசாயம் ஒன்றும் சொல்வதற்கில்லை. அன்றிரவே காண்டிராக்டரின் வீட்டை நோட்டமிட காரில் புறப்பட்டார்கள். அவன் பெயர் நல்லபெருமாள். ஒழுகுனசேரி சதுப்பை ஒட்டிய புதிய வீடு, அதற்குச் செல்லும் சந்தும் குறுகலாக ஆளரவம் இல்லாமல் இருந்தது. தெரு விளக்குகள் இல்லை, வீடுகளின் முன் விளக்கு மட்டும்தான்.
சற்று நேரத்தில் வீட்டிலிருந்து ஒரு ஆள் வெளியே வருவது தெரிந்தது. அடையாளங்கள் எல்லாம் பொருந்தின.
ஜஸ்டின் பரபரப்பாக “லே எடுல எடுல, கத்தி வெச்சிருக்கியா?” என்று சீட்டில் குடைந்தான்.
”ஏம்ட ஏதுல கத்தி?”
“கத்தி இல்லாம மயித்துக்கா வண்டி எடுத்தா?” ஜஸ்டின் பல்லைக் கடித்தான்
”சும்மா பாக்க தானல வந்தோம்? லேய் நீ செய்யத சொல்லிட்டு செய்யி பாத்துக்க, மனுஷன வெப்றாளப்படுத்தாம”
சட்டையில்லாமல் வெளியே வந்தவர் தெருவில் நிறுத்தப்பட்டிருந்த பைக்கை நிதானமாக ஸ்டாண்டை எடுத்து கேட்டை திறந்து உள்ளே உருட்டிச்சென்று நிறுத்தினார். பின் சற்று நேரம் தெருவைப் பார்த்திருந்துவிட்டு கார் ஷெட் விளக்கை அனைத்துவிட்டு உள்ளே சென்றார்.
ஜஸ்டின் தாழ்ந்த குரலில் “நைட்டு வெட்டமும் வெளிச்சமும் இல்லாம செய்யது ரிஸ்க் தான் பாத்துக்க. ஆள மாறி வெட்டி பிரச்சனை ஆயிடக்கூடாதுல்லா?” என்றான்.
கசாயம் மௌனமாக ஆமோதித்தான். ஆனால் அவர்கள் இருவருக்குமே அது தான் நல்லபெருமாள் என்பதில் சந்தேகம் ஏதும் இருக்கவில்லை.
***
மறுநாள் காலை அனைத்தும் முடிவு செய்யப்பட்டது. கசாயம் காருடன் நல்லபெருமாள் வீட்டுக்குப் பின்னால் விரிந்த பெரிய சதுப்பைத் தாண்டி மறுகரையில் நிற்க வேண்டும். காலையில் நல்லபெருமாள் முதல்முதலாக வெளியில் வரும்போது ஜஸ்டின் அவனைக் கத்தியால் ’தாக்கிவிட்டு’ சதுப்பு வழியாக வந்து காரில் ஏறிக்கொள்ளவேண்டும். கொல்வதல்ல திட்டம், திட்டத்தில் பெரிதாகக் குழப்பங்கள் இல்லை. ஆனால் கசாயத்துக்கு நம்பிக்கை வரவில்லை. “வேற பயக்கள கூப்பிடுவமாலே?” என்றான் சற்றே தயங்கியபடி.
“பயராதல, பாத்துக்கலாம்” என்றான் ஜஸ்டின் அனிச்சையாகச் சிலுவையைத் தொட்டு முத்தமிட்டுக்கொண்டு. சரி, அப்படியென்றால் அப்படி. கசாயம் ஜஸ்டினைத் தெருமுனையில் இறக்கிவிட்டு சுற்றிவந்து சதுப்பின் கரையில் வண்டியை நிறுத்தினான்.
சதுப்பின் பரந்த வானில் பருந்துகள் நூற்றுக்கணக்கில் சத்தமில்லாமல் வட்டமிட்டபடி இருந்தன. அலைவுரும் தென்னை மரங்களால் ஆன மறுபுறக் கரையைத் தாண்டி வீடுகள் துவங்கின. கசாயத்தால் இந்த நேரத்தில் இந்த இடத்தில் ஒரு வன்முறை நிகழும் என்பதைக் கற்பனை செய்ய முடியவில்லை.
சற்று நேரத்தில் ஜஸ்டின் தூரத்தில் தோன்றினான். சிரிப்பில் அவனது கரிய முகத்தில் பற்கள் அனைத்தும் தொலைவு வரை பளிச்சிட்டன. சதுப்பினிடையே ஒற்றையடிப் பாதை வழியாக ஆடி அசைந்து மெல்ல அடியெடுத்து வைத்து வந்துகொண்டிருந்தான்.
”சாமி மாலை போட்டிருக்குல” என்றான் அங்கிருந்தே சற்று சத்தமாக.
”என்னல சொல்லுக?” கசாயத்துக்கு அவன் சொல்வது சரியாகப் புரியவில்லை.
”சாமி சபரிமலைக்கு மாலை போட்டிருக்குல, எப்படி வெட்டுகது?”
“அதனால?”
“அதனால என்ன செய்ய? சாமி சரணம் சொல்லிட்டு அன்னா அந்த முக்கு கடையில டீயும் குடிச்சிட்டு இந்தா வாரென்”
கசாயத்தின் முகத்தில் புன்னகை படர்ந்தது.
”செரி ஏறு மக்கா”
“ஏம்பில சிரிக்க?”
“ஏறுல, வா” கசாயம் மேலும் சிரித்தான்.
***
அன்று மாலை மாமா ஆவேசமாக போனில் அழைத்தார்.
”என்னல சொல்லுகான் அவன், பைத்தியாரன் கணக்கா?”
”இல்ல அண்ணே, அவன் சொல்லதுலையும் ஒரு நியாயம் உண்டு பாத்துக்கங்க?”
“லே ஒரு மாதிரி மத்த எடத்து பேச்சு பேசப்பிடாது. நான் வேற ஆள பாப்பேங்கேன், அவன் என்ன வெட்டுவேங்கான்?”
“அப்படியா சொன்னான்? நான் பேசுகேன்”
“அக்கா மவன்னு பாக்க மாட்டேன் சொல்லிட்டேன்”
”நான் பேசுகேண்ணே. வைங்க” கசாயம் போனை துண்டித்தான்.
நிலைமை மொத்தத்தில் குழப்பமாகி விட்டிருந்தது. ஏற்கனவே ஜஸ்டின் இவ்விஷயத்தில் ஸ்டெஃபின் ஏதோ அத்துமீறி சொல்ல கத்தியும் கையுமாக அவனை நோக்கி பாய்ந்திருந்தான். அவன் மரண ஓட்டம் எடுத்து உயிர் தப்பிச்சென்றான். யார் சொல்லியும் ஜஸ்டின் கேட்பது போல தெரியவில்லை.
“லே மாலை போட்டிருக்கு ஒரு சாமின்னா பின்ன எந்த நம்பிக்கைல லே போட்டிருக்கு? அங்க கத்தியுங் கொண்டு நொட்டதுக்கா?”
எல்லாம் சில நாட்களில் சரியாகி விடும் என்றுதான் கசாயம் எண்ணினான். ஆனால் மாமாவுக்கும் ஜஸ்டினுக்கும் இடையில் நிலைமை மேலும் மோசமாகத்தான் போனது. மாமா மறுபுறம் கிடந்து துடித்தார் ஆனால் ஜஸ்டின் கொஞ்சமும் இறங்கி வருவது போல தெரியவில்லை. அவர் வேறு சில ஆட்களிடம் பேசுவதாகத் தெரிந்ததும் ஜஸ்டின் வண்டியும் எடுத்துக்கொண்டு நல்லபெருமாளின் தெருமுனையில் காவல் நின்றான். சாமி காலை ஐந்தரை மணிக்கு எழுந்து வெறுங்காலில் சென்று நாகராஜா கோவில் குளத்தில் குளித்துத் தொழுது வருவது வரை பின்னால் முழுநேரக் காவல் இருந்தது. கசாயமும் வேறு வழியில்லாமல் இணைந்துகொண்டான். வாழ்நாளில் முதல்முதலாக ஜஸ்டின் பொறுப்புடன் ஒன்றைச் செய்வது இதுவே. அவன் செயல்களில் நிறைய மாற்றம் வந்திருப்பதைக் கசாயம் கண்டான். ஒரு தெய்வ பயம். கர்த்தர் பேச தொடங்கிவிட்டாரா எனத் தெரியவில்லை. ஆனால் அவன் புரோட்டாக் கடையில் பீப்பும் சிக்கனும் மறுத்து ஆஃப்பாயில் போதும் என்றது கசாயத்துக்குச் சற்று அதிகப்படியாகப் பட்டது.
ஐந்தாறு நாட்களில் மாமா துறையில் இருந்து ஆட்களை இறக்கினார். ஜஸ்டினும் கசாயமும் ஒழுகுனசேரி நடுத்தெருவில் அவர்களுடன் மோதினர். இருபுறமும் காயங்கள். கடைசியில் அவர்கள் பக்கம் இருந்து அழைத்துப் பேசியபோது தான் தெரிந்தது அந்தக் கும்பலில் டெஸ்மண்ட், ஜென்சன் எனப் பலர் ஜஸ்டினுடன் எஸ்.எல்.பி யில் உடன் படித்தவர்கள். அப்படி ஒருவாறாக அது மாமாவுக்கு வெளியே பேசி ஒதுக்கப்பட்டது. பின்னணியில் இவ்வளவும் நடந்து கொண்டிருக்க சாமி தன் விரதத்தைப் பிசிரில்லாமல் மேற்கொண்டது.
ஒரு வாரத்தில் கசாயம் ஒருவாறு பேசி மாமாவைப் பார்க்க ஜஸ்டினை அழைத்துச் சென்றான். மாமா கடும் கோபத்தில் அறுத்துகிழித்துக் கொண்டிருந்தார், ஜஸ்டின் அசையவில்லை. எல்லாம் கேட்டுவிட்டு இறுதியில் அமைதியாகத் தலையைக் கீழே குனிந்தபடி சொன்னான்.
“மாலை போட்டிருக்க வரை ஒன்னுஞ் செய்ய முடியாது, மலைக்கு போயிட்டு வரட்டு, பாக்கலாம்”
“கொண்டு போலெ இவன” என்று மாமா ஆற்றலிழந்தார்.
அன்றிரவு கசாயமும் ஜஸ்டினும் வேளிமலையில் அவர்கள் வழக்கமாகச் சென்றமரும் பாறையில் அமர்ந்திருக்கும் போது ஜஸ்டின் சொன்னான்.
“அப்படி என்ன வேணும்னாலும் செய்யலாம்னு இருக்க கூடாது மனுசனுக்கு கேட்டியால?”
“ம்ம்” கசாயம் அமைதியாக மதுவை அருந்தினான்.
அங்கிருந்து பார்த்தால் மொத்த நாகர்கோவிலும் தெரியும். அவர்களது மொத்த வாழிடமும் ஒற்றைப் பார்வையில். வடசேரி பஸ்டாண்ட், மணிமேடை, புத்தேரி பாலம் எல்லாம் ஒரு ஒளிப்படலமாக. அவ்வளவுதான். ஒரு கையளவு. ஜஸ்டினின் அப்பா இறந்த மறுநாள் அவர்கள் அங்கு வந்தது கசாயத்துக்கு நினைவு வந்தது, பாறைமேல் படுத்தபடி அன்று இரவு முழுக்க அவன் மேலே வானத்தை நோக்கி அழுதுகொண்டிருந்தான்.
***
நாற்பத்தியோரு நாள் விரதம் கழிந்து சாமி மலையேறியது. அதற்குள் மாமா அந்த விஷயத்தை முற்றிலுமாக மறந்துவிட்டது போல தெரிந்தது. அடுத்து ஏதோ காண்டிராக்ட் ஏலம் எடுப்பதிலும் அந்தப் பஞ்சாயத்திலும் அவர் மும்முரமாகி விட்டிருந்தார். அதுதான் அவர் இயல்பு. ஆனால் ஜஸ்டின் பரபரப்பானான். கசாயத்துக்கு அவனது எண்ணம் என்ன என்று தெளிவாகப் புரியவில்லை. மூன்று நாட்களில் நல்லபெருமாள் மலை ஏறிவிட்டு வீடு வந்தடைந்தான்
ஜஸ்டின் “லேய் வண்டியெடு போயி பாப்போம்” என்றான்.
“லேய் என்ன செய்யப்போரா?”
“எடுல நீ, சும்மா பாக்கதான்” என்றபடி ஜஸ்டின் காரில் ஏறி அமர்ந்தான்.
வண்டியைத் தெருமுக்கில் நிறுத்திவிட்டுக் காத்து நின்றனர். நல்லபெருமாள் அன்று காலையே கோவிலில் சென்று வழிபட்டு மாலையைக் கழற்றிவிட்டிருந்தான். கணேசபுரம் மீன் சந்தையில் ஐநூறு ரூபாய்க்குச் சாளையும் அயிலையும் வாங்கிவிட்டு பைக்கும் ஓட்டிக்கொண்டு சாமி ஆசாமியாக வந்துகொண்டிருந்தது.
ஜஸ்டின் இறங்கி சென்று அவன் வீட்டருகில் நின்றான். கசாயம் காரில் இருந்தபடி நிலைகொள்ளாமல் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தான். நல்லபெருமாள் வீட்டருகே வண்டியை விட்டுவிட்டு இறங்க ஜஸ்டின் அருகில் சென்றான். சிரித்தபடி அவன் தோளில் கைவைத்து “அண்ணே நல்லா இருக்கிங்களா? ராஜண்ணன் எனக்க மாமாதான்” என்றான்.
நல்லபெருமாள் சட்டென்று அவன் கையை உதறி “உனக்கு என்னல இங்க சோலி புண்டாமொனே?” என்றான் எகிறியபடி.
”சும்மா பேச வந்தேம்ணே” ஜஸ்டின் அவரை அணைப்பது போல ஒரு கையை நீட்டினான்.
“நீ ஊம்புல புண்டாமோனெ” என்று நல்லபெருமாள் அடிக்க வந்த அக்கணம் ஜஸ்டின் சட்டென்று ஆத்திரம் பொங்க கத்தியை உறுவி அவன் இடுப்புக்குக் கீழே சொருகினான். கசாயம் பதறி வண்டியை எடுப்பதற்குள் ஜஸ்டின் மறுபுறம் சதுப்பை நோக்கி ஓடி மறைந்தான். எல்லாம் ஒரு சில நொடிகளுக்குள் நடந்து முடிந்தது.
மறுநாள் தினத்தந்தியில் செய்தி இடம் பெற்றது. ’ஒழுகுனசேரி காண்டிராக்டர் கத்தியால் தாக்கு’. வழக்குப் பதிந்து விசாரிக்கப் பட்டாலும் ஜஸ்டினை போலீஸ் கண்டுபிடிக்க முடியவில்லை. நல்லபெருமாள் ஒரு மாதம் ஆஸ்பத்திரியில் இருந்து விட்டு குணமாகி வீடு திரும்பினான். கசாயம், மாமா இருவரின் மீதும் விசாரனை நடந்து சில முறை கோர்ட்டுக்கு சென்று வர வேண்டியிருந்தது. வழக்கம் போல போதிய நிரூபணம் இல்லாமல் அவர்கள் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்கள். கசாயம் அதன்பின் மாமாவுக்காக வேலை செய்யவில்லை.
ஜஸ்டினை பற்றி அங்குமிங்குமாக தகவல்கள் கேள்விபட்டாலும் யாருக்கும் உறுதியாகத் தெரியவில்லை. சிலர் அவன் மும்பையில் இருப்பதாகச் சொன்னார்கள், சிலர் அவன் இறந்துவிட்டதாக.
***
நெடுநாட்கள் கழிந்தது.
பல்லாயிரம் பல லட்சம் ஆண்டுகள் கழிந்து, உலகின் கடைசி நாளும் வந்து சேர்ந்தது.
அன்று நியாயத்தீர்ப்பு. விண்ணுலகில் கோலாகலகங்களும் கீழே நரகத்தில் அதற்கான கொண்டாட்டங்களும் தொடங்கின. விண்ணுலக தூதுவனான கப்ரியேல் சாரம் உடுத்து நின்ற ஜஸ்டினைப் பரலோகத்துக்கு அழைத்து வந்தார். அவன் கண்கள் திகைப்பில் விரிந்திருந்தன.
விண்ணாளும் அரசர் யேசு ராஜா பொற்கிரீடத்துடன் தனது மாபெரும் பொன்னிருக்கையில் வந்தமர்ந்தார்.
”யாருடே இந்த நேரத்துல? நீங்களே பாத்து முடிச்சிவிட வேண்டியது தானடே?” என்றார் சற்று சலிப்புடன்.
“இவனுக்க காரியம் கொஞ்சம் குழப்பமாக்கும் ராசாவே. பய நல்ல பயதான், ஆனா செய்திருக்க கூடிய காரியம் அவ்வளவும் வேண்டாத்த வேல பாத்துக்கங்க” என்றார் கப்ரியேல் பணிவுடன் முன்னோக்கி வளைந்து.
யேசு ராஜா அசிரத்தையாக மேலும் கீழும் பார்த்துவிட்டு “பேரு என்னதுல?” என்றார்.
”ஜெஸ்டினு”
“ஸ்ஸோ பேர வெக்கானுவ பாரு.” சற்றே எரிச்சலடைந்து கப்ரியேலிடம் ”லேய், நான் இன்னைக்கு நல்ல மூட்ல இருக்கேம் பாத்துக்க, இவன் எதாவது மனசறிஞ்சு நல்லது செஞ்சிருக்காம்னா சொல்லச் சொல்லு உள்ளுக்கு விடலாம், சும்மா இந்த வாழப்பழம் கொடுத்த கதையெல்லாம் சொல்லக்கூடாது”
கப்ரியேல் தன் தோளிலிருந்து முளைத்திருந்த மாபெரும் சிறகால் ஜஸ்டினின் விலாவில் நிமிண்டி தாழ்ந்த குரலில் “என்னவாம் இருக்குமானா சொல்லுல விட்டுப்புடுவாரு” என்றார்.
ஜஸ்டின் குரல் லேசாக இடற தயங்கியபடி நடந்தவற்றை சொன்னான்.
”பொறவு?” யேசு ராஜா ஆர்வத்துடன் இருக்கையில் முன்னோக்கி நகர்ந்தார்.
”பொறவு மாலைய கெழத்துனோம்ன வெட்டி போட்டென். குடுத்த வாக்கு இருக்குல்லா?”
யேசு ராஜா வெப்ராளத்தில் தலையில் கைவைத்தார். ”கொண்டு போங்கடே” என்றார் பரிதாபமாக.
“ஆளு சாவல யேசப்பா, பொறவு நான்…” ஜஸ்டின் பதற்றத்துடன் எதோ சொல்ல முயன்றான்.
கப்ரியேல் அவனைப் பின்னாலிருந்து தள்ளியபடி “வா போயிருவோம், கோவம் வந்தா அவரு அப்பா மாறி, கிடந்து வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பாரு”
இருவரும் திரும்பிச் செல்கையில் பின்னாலிருந்து ஒரு கணைப்பு வந்தது.
தேவகுமாரன் ஜஸ்டினை நிமிர்ந்து பார்த்துப் பெருமூச்சுடன் அழைத்தார், “லேய் இங்க வா”
ஜஸ்டின் தயங்கி அருகில் செல்ல, யேசு ராஜா பொன்னிருக்கையில் இருந்து எழுந்தார். மிக அருகில் என வந்து அவன் முகத்தை உற்றுப் பார்த்தார். அவர் ஒளிமுகத்தைக் கண்ட ஜஸ்டினின் கண்கள் கண்ணீருடன் துளித்திருந்தன.
சில கணங்கள் அவனை முறைத்துவிட்டு அவன் கன்னத்தில் ஓங்கி ஒரு அறைவிட்டார். ஜஸ்டின் அதிர்ச்சியில் திகைத்து நின்றான்.
திருக்காயம் கொண்டு தழும்பேரிய தன் மென்கரத்தால் சொர்க்கவாசலை சுட்டி, ”போல உள்ள, அழுவுகாம் பாரு” என்றார்.
மகத்தான ஒளியுடன், பேரிசையும் எக்காளமுமாகச் சொர்க்கவாசல் திறந்தது. சிறுவனைப்போல கன்னத்தைக் கையால் பற்றியபடி தேம்பி அழுத ஜஸ்டினைக் கப்ரியேல் உள்ளே அழைத்துச்சென்றார்.
விண்ணாளும் அரசன் மீண்டும் தன் பொன்னிருக்கையில் வந்தமர்ந்தார். அவரது இன்முகத்தில் தந்தைமையின் கனிந்த புன்னகை ஒன்று மெல்ல தோன்றியது.
அன்புள்ள அஜிதன்,
நான்கு முறை மீண்டும் மீண்டும் வாசித்துவிட்டு எழுதுகிறேன்,சிரிப்பாகவும் பிறகு கண்ணில் கசியும் கண்ணீரோடும்.மெலோ டிராமாவுக்கு கண்ணில் நீர் கசியும் வயது எனக்கு இல்லை. இது வேறு எதோ ஒன்றுக்கு.இந்த ஆண்டின் மிகசிறந்த கதையாக இதுவும் இருக்கும். உங்களுக்கு நல்ல தொடக்கமாகவும் இருக்க வாழ்த்துக்கள். மேல்தட்டில் இருப்பவர்கள் எப்பொழுதும் மிகச்சிறந்த வியாபாரிகள். அவர்கள் குதிப்பதும் அடுத்து ஒரு பிரச்சனை அல்லது வியாபாரம் வந்த உடன் அதை நோக்கி போவதும் அவர்கள் குணம். ஆனால் அடுத்த கட்டத்தில் இருப்பவர்களுக்கு ஒரு நியாயம் இருக்கிறது. இந்த உலகம் சுற்றி சுழல்வது அந்த அச்சாணியில் தான். அந்த பிடிவாதத்தினால் தான். ஒவ்வொரு கிறிஸ்தவனும் அல்லது ஒவ்வொரு மனிதனும் இந்த குறைந்த பட்ச நியாயத்தை கொண்டாலே போதும் தானே. அப்படி வாழ்வதும் ஒரு விண்ணுலகுதான். சாமியை பின் தொடரும் கொலைகாரன் அல்லது காவலன்…நல்ல கரு. அதை வளர்த்தி எடுத்த விதம் அருமை. நீங்கள் 2k கிட்ஸ். இந்த உலக குடிமகன்கள் என்பது போதாமல் விண்ணுலகம் வரை கதையை கொண்டு போன விதம் அருமை.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் .
தந்தைமையின் கனிந்த புன்னகை தோன்றியது ஏசுராஜனுக்கு மட்டுமல்ல, ஜெயமோகனுக்கும் தான். மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை என்நோற்றான் கொல்லேனும் சொல்.
பரலோகத்தில் கன்னியாகுமரி பாஷை பேசும் கனிந்த தந்தையான ஏசுவை முதன்முதலில் வாசிக்க முடிந்தது:) புன்னகையையும் கனிவையும் நிறைக்கும் கதை. வாழ்த்துக்கள் அஜி!
‘’ஜஸ்டினும் நியாயத்தீர்ப்பும்’’ கதைத்தன்மை மிகுந்த சிறுகதை. சிறுகதை ஆசிரியர் அஜிதன் இந்த சிறுகதைக்குள் வாசகன் கற்பனை செய்து நிரப்பிக் கொள்ள வேண்டிய உள்கதைகளை கதைக்குள் வைத்திருக்கிறார்.
https://prabhumayiladuthurai.blogspot.com/2023/01/blog-post_2.html
’ஜஸ்டினும் நியாயத்தீர்ப்பும்’’ –
அழகான கதை. புன்னகையும் ஒரு துளி கண்ணீரும் ஒரு சேர வரவழைக்கும் முடிவு..ஜஸ்டின் பாத்திரம் அருமை. ‘சாமி மாலை போட்டிருக்குல’ என்னும் இடத்தில் பளிச்சென தூய்மையாக வருகிறது அவன் இயல்பு. அவனுடைய எளிமையான ஆனால் அசையாத இறைநம்பிக்கைக்கு முன் தர்க்கங்கள் பொருட்டில்லை. தன் நெஞ்சில் சுமக்கும் சிலுவையை தனக்கான யேசுவை அவ்வப்போது முத்தமிட்டுக் கொள்பவன். மாமாவுக்கு உணர்ச்சிகரமாக கொடுத்த வாக்கு ஒருபுறம். இறை நம்பிக்கை என்றால் என்ன எனும் விசுவாசம் ஒருபுறம்.
‘ஒரு சாமின்னா பின்ன எந்த நம்பிக்கைல லே போட்டிருக்கு?’ என அந்த நம்பிக்கைக்கு காவல் நிற்கிறான். விசாரனை இன்றி மூடப்பட்ட அவன் தந்தையின் மரணம் அந்த நம்பிக்கையை கேள்வி எழுப்பிய தருணமாக வாசிக்கலாம். ஒட்டுமொத்த நாகர்கோவிலைக் காணும் அந்த வேளிமலை பாறை அவனுக்கும் அவனது ஏசுவுக்குமான இடம்.
ஜஸ்டின் என்ற பெயர் தெரிவு அருமை.. தத்துவத்திலிருந்து இறை நம்பிக்கைக்கு சென்ற ஜஸ்டின் மார்டைர் நினைவு வந்தது.
‘பேர வெக்கானுவ பாரு’ என யேசு ராஜா அங்கலாய்ப்பது அழகு..
‘போல உள்ள, அழுவுகாம் பாரு’ என்ற யேசு ராஜா ஒரு தந்தையாக, புனைவில் வாசித்த ஏசுக்களில் மிக அணுக்கமானவராக ஆகிவிட்டார்…
கலக்கல் அஜி!!
//இன்முகத்தில் தந்தைமையின் கனிந்த புன்னகை ஒன்று மெல்ல தோன்றியது./// யேசப்பாவுக்கு மட்டுமல்ல, வாசிக்கும் நமக்கும் தான். பிரமாதமான கதைக்களம்+ சொல்லிய விதம். மாடன்மோட்சம் போன்ற அம்சமான கதை. வாழ்த்துக்கள் அஜி
சகாயம் என்ற பெயர் கசாயமாக மாறியபோதே நமக்கு சிரிப்பு வந்துவிடுகிறது. பின்னர் கத்தி ரத்தம் என்ற வன்மம்கூட நகைச்சுவை உணர்வோடுதான் சொல்லப்படுகிறது. ஜஸ்டினின் சுய நியாயத்தைக் கூட, உற்று நோக்கினால் பகடி நிறைந்ததுதான். கர்த்தர் அவனை அறைந்துவிட்டு சொர்க்கத்துக்கு வழிகாட்டுகிறார். அவனை அறைந்தது அவன் செய்த வன்மத்துக்காக, பின்னர் சொர்க்கத்துக்கு வழிகாட்டியது அவன் கொண்டுள்ள நியாயத்தை அங்கீகரிக்க அல்லவா? பதினாறடி பாய்கிறது குட்டிப் புலி.
முதல் முயற்சியிலேயே ஒரு வித்தியாசமான, தைரியமான கதைக்கரு/களம்!!!
வாழ்த்துக்கள் ?
Dear Ajithan
The most satisfying almost real happening story . The kindness of YEsuppa when i read this is the truth why nobody is feeling it . It is a touching, simple and beautiful story .
VG. Malathi
அருமை
அழகிய புன்னகைக்க வைக்கும் கதை. கதை முடிந்த பின்னும் இனிய உணர்வு நீடித்திருக்கின்றது.
சொல்லிக்கேட்க, சொன்னாலும் சாரமிழக்காத அருமையான கதை. வாழ்த்துக்கள் அஜி.
சூப்பர் கதை.. அங்கங்கே ஜெயமோகன் தனம் எட்டி பார்க்கிறது.. பார்த்தால் என்ன? நன்றாகத்தானே உள்ளது?
அருமையான கதை.
எவனுடைய மீறல் மன்னிக்கப் பட்டதோ அவன் பாக்யவான் என்கிறது பைபிள். மனிதன் ஏறி வர நினைத்தால் கடவுள் இறங்கி வருவார் என்கிறது இந்தக் கதை. வாழ்த்துக்கள் அஜிதன்!
– சுதா முருகேசன்
தங்கள் பதிவு கதையின் சாரமான அற்புதமான பைபிள் வரிக்கு இட்டுச்சென்றது. நன்றி…
சங்கீதம் 32:1-2
எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ, எவனுடைய பாவம் மூடப்பட்டதோ, அவன் பாக்கியவான்.
எவனுடைய அக்கிரமத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, எவனுடைய ஆவியில் கபடமில்லாதிருக்கிறதோ, அவன் பாக்கியவான்.
மனிதன் ‘ஏறி’ வர கடவுள் இறங்கி வருவார் என்கிறது கதை.வாழ்த்துக்கள் அஜிதன்!
மிக அருமை! கதை நெடுகிலும் ஊடாடும் மெல்லிய நகை (suttle, hidden humor) உயர் தரம். வடிவம், நேர்த்தி, நீளம் என எல்லாவற்றிலும் துல்லியமாய் இருக்கும் இந்தக் கதை உங்கள் முதல் படைப்ப்பு என்று நம்ப முடியவில்லை. வாழ்த்துகள், அஜிதன்!
nice story
தன்னுடைய கழுத்திலிருக்கும் சிலுவையை ஆத்மார்த்தமாக நேசித்து முத்தமிடுபவனுக்கு எதிரில் இருப்பவனுடைய கழுத்திலிருக்கும் மாலையை மதிக்கத் தெரிகிறது. தன்னைப்போல பிறரையும் நேசிக்கத் தெரிந்த னுக்குத் சொர்க்கவாசல் திறக்காமல் வேறு யாருக்குத் திறக்கும். ஆழமான கதை. பாவடைன்னு நக்கல் செய்பவர்களும் சங்கின்னு பதில் சொல்பவர்களும் கட்டாயம் படிக்க வேண்டிய கதை. குற்றப் பிண்ணனி கொண்ட கதைக்களம் என்றாலும் புன்னகையுடன் படிக்க ஆரம்பித்து புன்னகையுடனே முடித்த கதை. அஜிதன் மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
அழகான கதை. புன்னகையும் ஒரு துளி கண்ணீரும் ஒரு சேர வரவழைக்கும் முடிவு..ஜஸ்டின் பாத்திரம் அருமை. ‘சாமி மாலை போட்டிருக்குல’ என்னும் இடத்தில் பளிச்சென தூய்மையாக வருகிறது அவன் இயல்பு. அவனுடைய எளிமையான ஆனால் அசையாத இறைநம்பிக்கைக்கு முன் தர்க்கங்கள் பொருட்டில்லை. தன் நெஞ்சில் சுமக்கும் சிலுவையை தனக்கான யேசுவை அவ்வப்போது முத்தமிட்டுக் கொள்பவன். மாமாவுக்கு உணர்ச்சிகரமாக கொடுத்த வாக்கு ஒருபுறம். இறை நம்பிக்கை என்றால் என்ன எனும் விசுவாசம் ஒருபுறம்.
‘ஒரு சாமின்னா பின்ன எந்த நம்பிக்கைல லே போட்டிருக்கு?’ என அந்த நம்பிக்கைக்கு காவல் நிற்கிறான். விசாரனை இன்றி மூடப்பட்ட அவன் தந்தையின் மரணம் அந்த நம்பிக்கையை கேள்வி எழுப்பிய தருணமாக வாசிக்கலாம். ஒட்டுமொத்த நாகர்கோவிலைக் காணும் அந்த வேளிமலை பாறை அவனுக்கும் அவனது ஏசுவுக்குமான இடம்.
ஜஸ்டின் என்ற பெயர் தெரிவு அருமை.. தத்துவத்திலிருந்து இறை நம்பிக்கைக்கு சென்ற ஜஸ்டின் மார்டைர் நினைவு வந்தது.
‘பேர வெக்கானுவ பாரு’ என யேசு ராஜா அங்கலாய்ப்பது அழகு..
‘போல உள்ள, அழுவுகாம் பாரு’ என்ற யேசு ராஜா ஒரு தந்தையாக, புனைவில் வாசித்த ஏசுக்களில் மிக அணுக்கமானவராக ஆகிவிட்டார்…
கலக்கல் அஜி!!
போல உள்ள, அழுவுகாம் பாரு.. தந்தையும் இறையும் ஒன்றென எழுந்த தருணம். Well done