புதுமைதாசன் : சிங்கப்பூர் கலை எழுச்சியின் அடையாளம்

மெலிந்த சிறிய உருவம். தன்னை வெளிப்படுத்தாத மிகுந்த உள் அடக்கம். பெரும் நிகழ்விலோ  சிறு கூடலிலோ கைகளைப் பின்னால் கட்டியபடி அமைதியாக நிற்கும் பி.கிருஷ்ணனைப் புதிதாகப் பார்க்கும் ஒருவர் சராசரி முதியவர் என்று கடந்துவிடக்கூடும். ஆனால், பழுப்படைந்த விழிகளில் பொதிந்துள்ள அறிவின் ஒளியை எதிர்கொள்ளும்போதும் கணீரென கனத்து ஒலிக்கும் குரலைச் செவிமடுக்கும்போதும் அவர்பால் மரியாதை கலந்த ஈர்ப்பு ஏற்படவே செய்யும். அவருடன் ஒருமுறை உரையாடியபிறகு அந்த ஈர்ப்பு வாழ்நாளில் என்றும் குறையாதிருக்கும்.

சிங்கப்பூரின் மூத்த தலைமுறை எழுத்தாளரான பி. கிருஷ்ணன் மீது, இன்றைய தலைமுறையினர்  கொண்டுள்ள மதிப்பும் ஆச்சரியமும் அவர் தொடர் பணிகளால் உருவானது. தமிழையும் ஆங்கிலத்தையும் தானே படித்து, தன்னைத்தானே உருவாக்கிக் கொண்ட சுயம்பு அவர். தொண்ணூற்றியொரு வயதிலும் தன்னூக்கத்துடன் ஷேக்ஸ்பியரை மொழிபெயர்த்தவர். முதுமையையும் நோய்களின் உபாதைகளையும் பொருட்படுத்தாமல், பழைய நினைவுகளிலும் தன்னிரக்கத்திலும் கரைந்து போகாமல் எழுத்தை மட்டுமே தவமாகக் கொண்டவர்.

உலகளவில், சீன இலக்கியத்துக்கும் மேற்கத்திய இலக்கியத்துக்கும் பாலம் அமைத்த முதுபெரும் சீன  எழுத்தாளரான ஸு யுவான்சொங்கிற்கு (Xu Yuanchong) அடுத்து, இலக்கிய மொழிபெயர்ப்பில் ஈடுபட்டிருக்கும் ஆக வயதானவராகப் பி.கிருஷ்ணனே இருக்கக்கூடும். தொன்மையான சீனக் கவிதைகளை ஆங்கிலம், பிரஞ்சு மொழிகளுக்கும் மேற்கத்திய செவ்விலக்கியங்களைச் சீன மொழிக்கும் மொழிபெயர்த்த ஸு யுவான்சொங், 100 வயதில் இயற்கை எய்தியபோது ஷேக்ஸ்பியரைச் சீனத்தில் மொழிபெயர்த்துக் கொண்டிருந்தார்.

பி. கிருஷ்ணன், எழுபத்தைந்து வயதில் ஷேக்ஸ்பியரின் முதன்மையான  நாடகங்கள் அனைத்தையும் மொழிபெயர்க்கும் முயற்சியில் இறங்கி தன் 91வது வயதில் ஷேக்ஸ்பியரின் எட்டுப் பெரும் படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்து முடித்துள்ளார். அதற்கு முன் எண்ணற்ற நாடகங்கள், சிறுகதைகள், விலங்குப் பண்ணை, உலகப்பெருங்கதைகள் உள்ளிட்ட முக்கிய உலக இலக்கியங்களைத் தமிழ் நாடகங்களாக மறு உருவாக்கம் செய்துள்ளார்.

அசாதாரண தொடக்கம்

மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் 1932ஆம் ஆண்டு பிறந்தவர் திரு பி. கிருஷ்ணன். ஒன்பது வயதில் சாலை விபத்தில் கால் முறிந்து, நினைவுகளையும் தொலைத்துக் கிட்டத்தட்ட இரண்டாண்டுகள் மருத்துவமனையில் தங்கியிருந்ததில் தமது பெற்றோரையும் உடன்பிறந்தோரையும் இழந்தார். அப்பா பெருமாள் இறந்தது தெரியும். அம்மா செல்லம்மாள் என்பதும் தெரியும். ஆனால், பெயர் மறந்துபோன உடன்பிறந்தவர் பற்றிய நினைவோ, தகவல்களோ எதுவுமே இல்லாமல்  14 வயதில் சிங்கப்பூருக்கு வந்தார். ஜப்பானியர் ஆதிக்கக் காலத்தில் மூன்றாம் வகுப்புவரை மட்டுமே படித்திருந்தவர், சிங்கப்பூரில் அப்போதிருந்த ராமசாமி நாடார் கம்பெனியின் ஜவுளிக்கடையிலும் ராசுப்பிள்ளை மளிகைக்கடையிலும் மூட்டை தூக்கி, பொட்டலம் கட்டி கடைநிலை ஊழியராக வாழ்க்கையைத் தொடங்கினார்.  அப்போது  அவர் பெற்ற மாதச்  சம்பளம் $15. அந்த ஊதியத்தில்தான் மாதந்தோறும் நூல்கள் வாங்குவார். பணம் மிச்சமிருந்தால் ஆங்கிலப் படங்கள் பார்க்கப் போவார். அதற்கு மேல் தனக்காக எதற்கும் அவர் செலவிட்டதில்லை. உணவிலோ, உடைகளிலோ பெரிய விருப்பம் இல்லை. தீபாவளிக்குக் கடை முதலாளி எடுத்துத்தரும் ஒரு சட்டையும் வேட்டியும் துண்டும்தான் ஆண்டில் அவருக்குக் கிடைக்கும் ஒரே புத்தாடை.

ராசுப்பிள்ளை  கடையில் மேலாளராகப் பணியாற்றிய அவுலியா முகம்மது கதை சொல்லிக் கேட்டவருக்குக் கதைகளைத் தானே வாசிக்கும் ஆர்வம் ஏற்பட்டது. அவர் சொன்ன அந்தகக்கவி வீரராகவ முதலியார் பற்றி மேலும் தேடிப் படித்து, பி.கிருஷ்ணன்  தமிழ் முரசுக்கு எழுதி அனுப்பிய கட்டுரை பிரசுரமானதில், வாசிப்பதும் எழுதுவதும் பதின்மவயது கிருஷ்ணனுக்கு வாழ்வில் ஒரு தேடலைத் தந்தன. அந்தத் தேடல் அவரது பயணத்தின் இலக்கானது.

கடையில் முழு நேர வேலை பார்த்துக்கொண்டே கிடைக்கும் நேரத்திலெல்லாம் புத்தகங்கள் வாசிப்பார். திராவிடக் கழகத்தில் இருந்த நூல்நிலையமும் தமிழ்நாடு புத்தக நிலையமும் பொது நூலகமும் மற்றப் புத்தகக் கடைகளும் அவருக்குத் துணை நின்றன. வெளிச்சம் இல்லா இரவுகளில் மெழுகுவத்திகள்  துணை நின்றன.

தமிழ் இலக்கிய வாசிப்பு, இலக்கண நூல்களின் வாசிப்பைக் கோரியது. பல தமிழ் ஆசிரியர்களிடம் குறிப்பாகச் ச. சா. சின்னையாவிடம் யாப்பிலக்கணம் பயின்றார். அது அவருக்குக் கல்வியின்பால் நாட்டத்தை உண்டாக்கியது. கல்வியைத் தொடரும் நோக்கத்தில் 1952 இறுதியில் கடை வேலையைவிட்டு விலகி 20 வயதில் பிரிட்டிஷ் படைத்தளம் ஒன்றில் துணைக் காப்பாளராகப் (டி.சி.ஆர்.இ) பணியில் சேர்ந்தார். ஆல்பர்ட் ஸ்திரீட்டில் ஒரு  கடையில் வாடகைக்குத் தங்கி, ‘ஆங்கிலோ மலேய் ஈவனிங் ஸ்கூலில்’ தமது கல்வியை ஐந்தாம் வகுப்பிலிருந்து ஆரம்பித்தார். படிப்படியாகச் ‘சீனியர் கேம்ப்ரிட்ஜ்’ சான்றிதழும் பெற்றார்.

அப்போதுதான் அவருக்கு நண்பர்கள் அறிமுகமானார்கள். அவரது நண்பர்கள் அனைவரும் எழுத்தாளர்களாகவும் இலக்கிய ஆர்வலர்களாகவும் இருந்தனர். அந்த வட்டத்தில் திரு. கிருஷ்ணன்தான் மிக இளையவர். அந்தச் சமயத்தில் ஆங்கில நூல்களையும் அவர் படிக்கத் தொடங்கினார். குறிப்பாக ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் இவருள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.

வானொலிக் கலைஞர்

ஒரு கதையைத் தழுவி, 1954ஆம் ஆண்டு பி. கிருஷ்ணன் எழுதிய ‘இன்பம் எங்கே?’ எனும் முழு நீள மேடை நாடகம், அவரை நாடக உலகத்துக்கும் அதிலிருந்து வானொலிக்கும் ஈர்த்து வந்தது. நாடகக் கலையில் ஏற்பட்ட ஆர்வத்தினால், 1953ஆம் ஆண்டில் சிறுவர்களுக்கான வானொலி நாடகங்களில் நடிக்கத் தொடங்கியவர், தொடர்ந்து வானொலிக்குப் பல மாணவர் நாடகங்களை எழுதவும் தொடங்கினார். இதன்வழி, கிடைத்த அறிமுகத்தின் மூலம் வானொலிப் பணியில் சேர்ந்தார்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 1963-ல் சிங்கப்பூர் வந்தபோது வானொலிக் கலைஞர்களுடன் பி.கிருஷ்ணன் (வலதுகோடி)

நேயர்களை ஈர்த்துப் பலமுறை ஒலிபரப்பாகியது இவரது ‘அடுக்குவீட்டு அண்ணாசாமி’ நாடகம். கம்பத்துக் கூட்டு வாழ்க்கையிலிருந்து அடுக்குமாடி குடியிருப்புக்கு முன்னேறிய சிங்கப்பூரின் வரலாற்றைக் காட்டும் ஓர் அரிய ஆவணம் இந்நாடகம். மின்தூக்கியையும் உயரத்தையும் கூண்டுகள் போன்ற வீடுகளையும் கண்டு பயந்து அடுக்குமாடி வீடுகளுக்குச் செல்ல தயங்கிய கிராமங்களில் வாழ்ந்த மக்களுக்கு அடுக்குமாடி வாழ்வைப் பழகிக்கொள்ள நகைச்சுவையாகச் சொல்லிக்கொடுத்தது ‘அடுக்குவீட்டு அண்ணாசாமி’ நாடகம்.  

கதம்ப நாடகங்கள், இலக்கிய நாடகங்கள், தொடர் நாடகங்கள், நகைச்சுவை நாடகங்கள், மர்ம நாடகங்கள், மொழிபெயர்ப்பு நாடகங்கள் என வானொலியில் அதிகமான நாடகங்களை எழுதித் தயாரித்தவரான பி. கிருஷ்ணன், சிறந்த நடிகராகவும் பாடகராவும் புகழ் பெற்றவர். ஜோகூர் மருத்துவமனையில் இருந்த காலத்திலேயே எம்.கே. தியாகராஜ பாகவதர் போலவே பாடி ரசிகர்களைப் பெற்றவர். இவரது குரல் வளத்தாலும் இசை ஞானத்தாலும் இவர் பங்கேற்ற, படைத்த கதாகாலட்சேப நிகழ்ச்சிகள் நேயர்களின் விருப்ப நிகழ்ச்சிகளில் ஒன்றாகப் பிரபலமாகின.

1960களில் ‘ஸ்வாரா சிங்கப்பூரா’ என்ற பண்பலை ஒலிப்பரப்பில்  பெரும்பாலான நாடகங்களை எழுதி, நடித்தும் இருக்கிறார். அதேபோல் விக்டோரியா தியேட்டரில் அரங்கேறிய வானொலிப் பெருநாள் நிகழ்ச்சிகளுக்கும் இவர் நாடகங்களைத் தயாரித்துள்ளார். சிறுவர் நாடகங்களின் மூலமும் இசை நிகழ்ச்சிகளின் மூலமும் இவர் பல இளம் கலைஞர்களை உருவாக்கியுள்ளார். 

தீவிர ‘மான்செஸ்டர் யுனைடெட்’ ரசிகரான இவர் காற்பந்து, ஹாக்கி, திடல்தடம், கார் பந்தயம் எனப் பலதரப்பட்ட விளையாட்டு நிகழ்ச்சிக்குத் தமிழில் நேரடி வர்ணனைச் செய்துள்ளார். தொழில்நுட்பம் அவ்வளவு வளர்ச்சி பெற்றிராத அக்காலத்திலே வெளிப்புற நிகழ்ச்சிகளுக்கு 25 கிலோ இருக்கக்கூடிய பெரிய ஒலிப்பதிவு கருவிகளைச் சுமந்து சென்று, பதிவு செய்தவற்றைச் செறிவாக்க மூன்று மணி நேரம்வரை ஆகும் சவால்கள் அவரது விளையாட்டு ஆர்வத்தின் முன் சாதாரணமாகின. ஆசிய விளையாட்டுகள், தென்கிழக்காசிய விளையாட்டுகள், மலேசிய கிண்ணக் காற்பந்து ஆட்டங்கள் எனப் பலவற்றையையும் நேரடி வர்ணனை மூலம் நேயர்கள் கண்முன் கொண்டு வந்தார் பி. கிருஷ்ணன். ஓடத் தொடங்கும் மோட்டார்களின் சத்தத்தையும் தாண்டி, பலத்த குரலில் அவரால்தான் அறிவிக்கும் முடியும் என்பதனால் மோட்டார் சைக்கிள் பந்தயங்களின்போது, போட்டி தொடங்கும் இடத்தில் நிர்வாகம் அவரை நிறுத்தியது.

கணீரென்ற கம்பீரக்குரலாலும் அச்சரசுத்தமான தமிழாலும் அறிவார்ந்த படைப்புகளாலும் சிங்கப்பூர் தமிழ் வானொலிக்கு உயிரூட்டி பெருமை சேர்த்தவர் திரு பி. கிருஷ்ணன். இவரின் குரலில் ஒலித்த விளையாட்டு வர்ணனைகளுக்கும் நாடகங்களுக்கும் தனி ரசிகர் வட்டம் சேர்ந்தது. 1962-இல்  முழு நேர அறிவிப்பாளராகப் பணியாற்றத் தொடங்கி 1991ஆம் ஆண்டில்  மூத்த நிர்வாகத் தயாரிப்பாளராக ஓய்வு பெற்றது வரையிலான 31 ஆண்டு காலத்தில் வானொலியில் பி. கிருஷ்ணன் ஆற்றிய பணிகளும் பங்களிப்பும் தனியிடம் கொண்டவை. 1962ல் அன்றைய பிரதமர் லீ குவான் இயூவின் தொகுதிச் சுற்றுலாக்களுக்குச் சென்றது அவரது மறக்க முடியாத வானொலி அனுபவங்களில் ஒன்று எனப் பதிவு செய்துள்ளார்.

சிறுகதை எழுத்தாளர்

நாடகம் எழுதுவது, இலக்கிய நிகழ்ச்சிகள், உலக இலக்கியங்களின் மொழிபெயர்ப்பு- மறு உருவாக்கப் படைப்புகள், கதாகாலட்சேபம், விளையாட்டு வர்ணனை, நடிப்பது, பாடுவது, இயக்குவது, நிர்வகிப்பது என்று பலதுறை வித்தகரான இவரது மனதுக்கு மிகவும் நெருக்கமானது சிறுகதை எழுதுவது. சிங்கப்பூரின் தடம் பதித்த மூத்த எழுத்தாளர்களுள் ஒருவரான பி. கிருஷ்ணன், தமிழ் முரசிலும் மற்றப் பல ஏடுகளிலும் ஏராளமான  சிறுகதைகளையும் கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார். 1952 தொடங்கி 1953 வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் 15க்கும் மேற்பட்டச் சிறுகதைகளை இவர் தமிழ் முரசில் எழுதியுள்ளார்.

எழுத்தாளர் அகிலன் 1975-ஆம் ஆண்டு சிங்கப்பூர் வந்திருந்தபோது. இடமிருந்து தி.சு.மோகனம், பி.கிருஷ்ணன், அகிலன், ந.பழநிவேலு.

சொந்தப் பெயரில் எழுதத் தொடங்கியவர், தமிழின் முதன்மையான எழுத்தாளர்களின் ஒருவரான புதுமைப்பித்தனின் எழுத்துகளால் ஈர்க்கப்பட்டுப், புதுமைதாசன் என்ற பெயரில் எழுதத் தொடங்கினார். ரெ. வெற்றிவேல் நடத்திய முன்னேற்றம் இதழ், சி. ஆர். நரசிம்மராஜ் ஆசிரியராக இருந்த புதுயுகம், சிங்கை அண்ணல் நடத்திய திரையொளி, மேலும் இந்தியன் மூவி நியூஸ், தமிழ் நேசன், சங்கமணி, மலேசிய நண்பன் முதலிய இதழ்களிலும் இவரின் சிறுகதைகள் பிரசுரமாகியுள்ளன. 1954-1955ஆம் ஆண்டுகளில் ரெ. வெற்றிவேலின் முன்னேற்றம் இதழிலும் கவிஞர் சிங்கை முகிலனின் ‘சிந்தனை’ என்னும்  இலக்கிய இதழிலும் துணையாசிரியராகப் பி. கிருஷ்ணன் பணியாற்றியுள்ளார். முன்னேற்றம், புதுயுகம் இதழ்களில் இவர் எழுதிய சிறுகதைகள் தீவிரமான கருத்தாக்கங்கள் கொண்டவை. ஆனால், அந்தக் கதைகள் எல்லாம் பாதுகாக்கப்படாமல் காலத்தோடு காணாமல் போய்விட்டன. தமிழ் முரசு நாளிதழில் தேடிப்பிடித்த சில கதைகள் மட்டுமே ‘புதுமைதாசன் சிறுகதைகள்’ என்ற நூலாக வெளிவந்துள்ளது. இந்நூல் சிங்கப்பூர் தேசிய புத்தக மேம்பாட்டு மன்றத்தின் பாராட்டு விருதைப் பெற்றது. இந்நூலும் இவரது சிறுகதைகளும் சிங்கப்பூர் தமிழ் இலக்கியப் பாடத்தில் இடம்பெற்றுள்ளன.

தமிழிய கருத்தாக்கங்களும் தனித்தமிழ் இயக்கங்களும் ஓங்கியிருந்த அந்தக் காலக்கட்டத்தில் பெரும்பாலான எழுத்தாளர்கள் முடிந்தவரையில் தனித்தமிழிலேயே கதைகளை எழுதினர். நல்ல தமிழை வளர்க்கும் நோக்கில், மலாய், சீனம் கலந்த பேச்சு வழக்கு வசனங்கள் கதையில் இடம்பெறுவதை முனைந்து தவிர்த்தனர். நல்ல தமிழை வளர்த்தவர்களின் குறிப்பிடத்தக்கவராகவும் மொழி பிழையைச் சகித்துக்கொள்ளாதவராகவும் அறியப்படும் பி. கிருஷ்ணன் இயல்பான பேச்சு வழக்கிலேயே  கதைகளை எழுதினார். புதுமைப்பித்தனையும் உலக இலக்கியங்களையும் வாசித்தவராக இருந்ததால், கதை சொல்லல் எனும் கலையை அவர் அறிந்திருந்தார். மொழியையும் கலையையும் குழப்பிக்கொள்ளாமல் பயணித்தார்.

சிங்கப்பூரின் ஒரு காலக்கட்டத்தின் வாழ்க்கை முறைகள், சமூக நிலைப்பாடுகள், எண்ணங்கள், அனுபவங்கள் போன்றவற்றை எளிய சித்திரங்களாகத் தருபவை இவரது சிறுகதைகள். ‘வாழமுடியாதவள்’, ‘காலக்கணக்கு’, ‘ஓய்வு’, ‘துணை’, ‘தெளிவு’, ‘உதிரிகள்’ என எல்லாக் கதைகளும் இன்றும் வாசிக்க ஏற்புடையவை. எளிய மக்களின் வாழ்க்கையை அதன் இயல்பில் சொல்பவை. கலை வடிவக் குறைகள் இருந்தாலும், சமூகத்தைச் சுயவிமர்சனம் செய்யும் இந்தக் கதைகள், சிங்கப்பூர் சமூகத்தின்  பல இனமக்களுக்கிடையிலான நுட்பமான ஊடாட்டங்களைப் பிரசாரங்களின்றி, காய்த்தல் வியத்தலின்றிச் சித்தரிப்பவை.

சிங்கப்பூரின் முக்கியமான முன்னோடி சிறுகதை எழுத்தாளர்களில் ஒருவரான பி.கிருஷ்ணன் எழுதியிருக்கும் 40க்கும் மேற்பட்டக் கதைகள் எல்லாம் இன்று வாசிக்கக் கிடைக்காமல் போனது பேரிழப்பு என்றே சொல்ல வேண்டும். அவற்றைத் தேடித் தொகுக்க முடிந்தால், தகுந்ததொரு சமூக வரலாற்றுச் சான்று சிங்கப்பூருக்குக் கிடைக்கும்.

இலக்கியம் படைப்பது மட்டுமல்லாமல் இலக்கிய விவாதங்களிலும் பி. கிருஷ்ணனின் பங்களிப்பு இருந்துள்ளது. 1952-இல் தமிழ் முரசு இதழில், கந்தசாமி வாத்தியார் என்ற பெயரில் கதை வகுப்பு நடத்திய சுப. நாராயண் எழுதிய ‘புதுமைப்பித்தன் இலக்கியவாதியா?’ என்ற கட்டுரை பல விவாதங்களை ஏற்படுத்தியது. 1952 முதல் 1953 வரை 9 மாதங்கள் நீடித்த இச்சர்ச்சையில் பி. கிருஷ்ணன் தீவிரமாகக் கலந்துகொண்டார். அதற்குப் புதுமைப்பித்தன் மேல் அவருக்கு இருந்த ஈடுபாடும் முக்கிய காரணமாகும்.

உலக இலக்கியங்களின் பரிட்சயம்

வானொலி மூலம் உலக இலக்கியங்களைச் சிங்கப்பூர்த் தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தி, பரந்துபட்ட இலக்கிய அறிமுகத்தை ஏற்படுத்தியவர் பி. கிருஷ்ணன். தமிழும் ஆங்கிலமும் சுயமாகப் படித்து, மொழியாக்கத் துறையில் இவர் செய்திருக்கும் பணி மிகப் பெரியது.

ஆங்கிலத்தில் 100 பக்கத்தில் ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய ‘விலங்குப் பண்ணை’ குறுநாவலை 500 பக்க நாவலாகத் தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார். கதாபாத்திரங்களை விரிவுபடுத்தியதுடன் எல்லா விலங்குகளையும் பேசவைத்து, எல்லாவற்றுக்கும் உரிமை கொடுத்துள்ளார்.

மேலும் வானொலிக்காக மொழிபெயர்த்த 40 உலகப் பெருங்கதைகளில் தேர்ந்தெடுத்த 26 படைப்புகளைச் ‘சருகுகள்’ எனும் நூலாக வெளியிட்டுள்ளார். வாசிப்புக்கான கதைகளை, ஒலி நாடகங்களாக்கும்போது, மூலத்தின் கருப்பொருளோ தொனியோ சிதைந்துவிடாமல் மிகக் கவனமாகக் கையாண்டுள்ளார். அதேநேரத்தில் நேயர்களின் புரிதலிலும் கவனம் செலுத்தி அக்கதைகளை நாடகமாக்கியுள்ளார். இது கடினமான பணி. விக்டர் ஹுயுகோவின்  ‘Toilers of the Sea’  நாவலின் படைப்பாக்கமான  ‘தகைமை’ நாடகமும் புதிய பாத்திரங்களை இணைத்து முடிவையும்  மாற்றி எழுதப்பட்டுள்ள  ஆண்டன் செக்வாவின் ‘பந்தயம்’(the bet) நாடகமும் இவரின்  மறு உருவாக்கப் படைப்புச் சிறப்புக்குச்  சில எடுத்துக்காட்டுகளாகும்.

சிங்கப்பூரில் ஷேக்ஸ்பியரைத் தமிழில் முதலில் மொழிபெயர்த்தவர் இவர். 1961ஆம் ஆண்டில் ‘ஸ்வாரா சிங்கப்பூரா’ என்ற பண்பலை ஒலிபரப்பிற்காக ‘ஒதெல்லோ’, ‘மெக்பெத்’ நாடகங்களை மொழிபெயர்த்தார். ‘மெக்பெத்’ நாடகம் முழுமையாக மொழிபெயர்க்கப்பட்டு 1996இல் நூலாக்கம் கண்டது. இந்நூல் பல அறிஞர்களின் பாராட்டையும் பெற்றது. 

இந்நூலுக்குப் பி. கிருஷ்ணன் நல்கிய உழைப்புச் சாதாரணமானதல்ல. ‘மெக்பெத்’ நாடகத்தின் பல பதிப்புகளையும்  தமிழ் இலக்கண நூல்களையும் மீண்டும் மீண்டும் சரிப்பார்த்து, மூலப் பிரதியை அடியொற்றி, வசனங்கள், கவிதைகள் அனைத்தையும் அதே அமைப்பில் செம்மையாகவும் திருத்தமாகவும் தமிழில் எழுதினார் பி. கிருஷ்ணன். ஷேக்ஸ்பியரின் கவிதைகளில் உள்ள மாத்திரை (மீட்டர்) அளவு மாறாமல் தமிழ்ச் சொற்களையும் பா வடிவங்களையும் தேர்ந்து வடிவமைத்தார். இந்நூல் அவருக்குக் கொடுத்த உளவெழுச்சி, இவரைத் தொடர்ந்து ‘ஹாம்லெட்’, ‘லியர் மன்னன்’, ‘ஒத்தெல்லோ’, ‘ஜூலியஸ் சீசர்’, ‘ரோமியோ ஜூலியட்’, ‘சூறாவளி’(டெம்பஸ்ட்), ‘ஆண்டனி அண்ட் கிளியோபாட்ரா’ ஆகிய ஏழு நாடகங்களையும் மொழிபெயர்க்க வைத்தது.

‘மெக்பெத்’, ‘ஹாம்லெட்’, ‘ஒத்தெல்லோ’, ‘மன்னன் லியர்’ ஆகிய நூல்களுக்கு அணிந்துரை எழுதியிருக்கும் பாரதிதாசன் பல்கலைக்கழக, ஆங்கிலவியல் துறையின் முன்னாள் பேராசிரியரும் தலைவருமான டாக்டர் கா. செல்லப்பனார், மொழி அறிஞர் நீதிபதி எஸ். மகாராஜன், தமிழறிஞர் டாக்டர் ஏ. சி. செட்டியார், பம்மல் சம்பந்த முதலியார் போன்றவர்கள் ஷேக்ஸ்பியர் மொழிபெயர்ப்புகளை ஒப்பிட்டு, பி. கிருஷ்ணனின் மொழிபெயர்ப்பில் உள்ள சிறப்புகளைக் குறிப்பிட்டு எழுதியுள்ளனர்.

பெரும்பணி வழங்கும் ஒழுங்கு

பி. கிருஷ்ணன் போன்றவர்களின் வாழ்க்கை முறையே பெரும் பணிகளைச் செய்ய ஆவல் கொள்ளும் இளம் தலைமுறைக்கான வழிமுறையாக அமைகிறது. நேர ஒழுங்கையும் எளிய வாழ்க்கை முறையையும் தன் வாழ்நாள் முழுக்க கைக்கொண்டிருப்பவர் பி. கிருஷ்ணன்.  முதுமை, நீண்ட காலம் பாதித்திருந்த நீரிழிவு நோய் போன்றவற்றால் பார்வை பாதிப்பு உள்ளிட்ட உடல்நலப் பிரச்சினைகளுக்காக மருத்துவச் சிகிச்சைகளைப் பெற்று வருகிறார். ஆனாலும் அன்றாடம் நேரம்  தவறாமல் உட்கார்ந்து எழுதுகிறார், படிக்கிறார். எழுத்து, உணவு, உறக்கம், குடும்ப நேரம், தொலைக்காட்சியில் விளையாட்டுப் பார்ப்பது என எல்லாவற்றையும் கால ஒழுங்கிற்குள் கொண்டுவந்து, தன் வாழ்வின் கணங்களை அர்த்தப்படுத்துகிறார்.

மீளமுடியாத ஆழ்துளைக்குள் அழுத்தும் அல்லற்பாடுகளையும் ஆற்ற முடியாத துயரங்களையும் வெல்லும் மனத்திடத்தை ஆத்மார்த்தமான எழுத்துத் தரும் என்பதைத் தன் நீண்ட வாழ்வால் நிரூபணமாக்கியிருப்பவர் பி. கிருஷ்ணன். 68 ஆண்டுகள் ஒன்றித்து வாழ்ந்த மனைவி முனியம்மாள் 2021-இல் இவ்வுலகைவிட்டுப் பிரிந்த வாழ்வின் பெருந்துயரை எழுதி எழுதித்தான்  கடத்துகிறார்.

எழுத்து வாழ்வெனும் குறுங்காலத்தைப் பல யுகங்களாகத் தன்னில் பொதித்துப் பெருக்கி மகிழ்விக்கவே செய்கிறது. சமூகத்திற்குச் சிந்தனையுள்ள மனிதன் வழங்கக்கூடிய பெருங்கொடையாகிறது.

2 comments for “புதுமைதாசன் : சிங்கப்பூர் கலை எழுச்சியின் அடையாளம்

  1. Manimaran A/L Ammasy
    January 7, 2023 at 10:49 am

    பி.கிருஷ்ணன் எனும் பல்கலை ஆளுமையை மேலும் அறிந்து கொள்ள உதவுகிறது இக்கட்டுரை.

  2. mahendran prabhu
    February 16, 2023 at 6:39 am

    இப்போதுதான் தெரிகிறது சிறுபிராயத்தில் நான் கேட்ட அடுக்கு வீட்டு அண்ணாசாமி இவர் எழுதியதுதென்று.

    எம். பிரபு, பெந்தோங்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...