காலப் பதிவுகளாகும் நாடகங்கள்: பி.கிருஷ்ணனின் நகைச்சுவை நாடகங்களை முன்வைத்து

சிங்கப்பூர் வரலாற்றில் 1960களும் 1970களும் மிக முக்கியமான காலக்கட்டமாகும். மலேசியாவிலிருந்து பிரிந்து நிச்சயமின்மைகளோடு நாடு தள்ளாடிக்கொண்டிருந்த காலம் முதல் தசாப்தம். அதிக மக்கள் தொகை, வர்த்தகத் தேக்கம், வேலையின்மை, வீடுகள் பற்றாக்குறை, இனங்களுக்கிடையேயான பதற்றம் எனப் பலவித பிரச்சினைகளை நாடு எதிர்கொண்ட காலக்கட்டமிது. இரண்டாவது தசாப்தத்தை அரசியல் நெருக்கடிகள், பொருளாதாரச் சவால்கள், சமூகப் பிரச்சினைகள் ஆகியவற்றை எதிர்கொண்டு இன்றைய சிங்கப்பூருக்கு வலுவான அடித்தளம் அமைத்த காலக்கட்டம் எனச் சொல்லலாம். வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் அடுக்குமாடி வீடுகள், தேசிய ராணுவச் சேவை போன்ற முக்கியமான திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறைக்கு வந்த காலக்கட்டமும் இதுதான். கம்பங்களிலும் எஸ்டேட்டுகளிலும் வாழ்ந்த மக்கள் பெருமளவில் அடுக்குமாடி வீடுகளுக்குக் குடியேறியதும் தொழிற்துறையும் வர்த்தகமும் மெல்ல வளரத்தொடங்கியதும் மக்களின் வாழ்க்கை தரம் மெல்ல உயரத்தொடங்கியதும் இந்தக் காலக்கட்டத்தில்தான் நிகழ்ந்தன. தேசிய அடையாளத்தை உருவாக்கவும் ‘சிங்கப்பூர் என் தேசம்’, ‘நாம் சிங்கப்பூரர்’ என்ற ஒற்றுமை உணர்வை மக்கள் மனதில் ஏற்படுத்தவும் அரசு இக்காலக்கட்டத்தில் முனைப்புடன் இயங்கியது. இயக்கங்கள், பிரச்சாரங்கள் மூலம் செயல்படுத்தும் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய தேவையும் அரசுக்கு இருந்தது.

இப்படியான சவால்களையும் தேவைகளையும் கொண்டு வரலாற்று முக்கியத்துவத்தோடு விளங்கிய தசாப்தங்களில் எழுதப்பட்ட பி. கிருஷ்ணனின் நகைச்சுவைத் தொடர் நாடகங்களும் (1962 முதல் 1978 வரை) பிற தனி நகைச்சுவை நாடகங்களும் அந்தக் காலக்கட்டத்து அரசியல், பொருளாதார, சமூக மாற்றங்களை மிகத் துல்லியமாகப் பதிவு செய்துள்ளன. அறிவித்தல், கற்பித்தல், மகிழ்வித்தல் என்னும் வானொலிக் கோட்பாட்டின் அடிப்படையில் அரசின் திட்டங்களையும் கொள்கைகளையும் பிரச்சார நெடி அடிக்காமல் மிக இயல்பாகத் தனது நகைச்சுவை நாடகங்களில் பி. கிருஷ்ணன் வெளிப்படுத்தியிருக்கிறார்.

புதுமைதாசன் என்ற புனைபெயர் கொண்ட பி. கிருஷ்ணன் 1962ஆம் ஆண்டு முதல் 1992ஆம் ஆண்டு வரை சிங்கப்பூர் வானொலியில் பணியாற்றி ஓய்வுபெற்றார். தனது பணிக்காலத்தில் இவர் பல வகை நாடகங்கள், இலக்கியப் பேச்சுகள், ஒலிச்சித்திரங்கள், நேரடி விளையாட்டு  வருணனைகள், நவீன கதாகாலட்சேபம் முதலியவற்றை நிகழ்ச்சியாக்கம் செய்து ஒலியேற்றினார். குறிப்பாக வானொலி நாடகத்துறையில் பி. கிருஷ்ணனின் பங்கு அளப்பரியது. மர்மத்தொடர் நாடகங்கள், துப்பறியும் நாடகங்கள், மொழிபெயர்ப்பு நாடகங்கள் எனப் பல வகைமைகளில் இவர் எழுதியிருக்கும் 360க்கும் மிகுதியான நாடகங்களில் ‘நகைச்சுவை நாடகங்கள்’ குறித்து மட்டும் பேசுவதே இக்கட்டுரையின் நோக்கம். 

புதுமைதாசனும் நகைச்சுவை நாடகங்களும்

ஒரு சிறுகதை எழுத்தாளராகவே தான் அடையாளம் காணப்பட வேண்டுமென ஆசைப்பட்ட பி. கிருஷ்ணன் பணியிட தேவையின் காரணமாகத்தான் நாடகங்களை எழுதியதாகத் தனது நேர்காணல் ஒன்றில் குறிப்பிடுகிறார். ஒலிபரப்புத்துறை அவரது மோகமாகவும் வானொலியில் சேர வேண்டுமென்பது அவரது கனவாகவும் இருந்தது. எனவே, தனது விருப்பமான வேலையின் நிலைத்தன்மை கருதியே நாடகங்களை எழுதத் தொடங்கினார். அவர் எழுதிய ‘மாடி வீட்டு மங்களம்’ நாடகம் அடைந்த வெற்றியைத் தொடர்ந்து சமூகத்தில் பல்வேறு அடுக்கில் உள்ளவர்களுக்கும் பி. கிருஷ்ணனின் நாடகங்கள் மீது ஈடுபாடு உண்டானது. எனவே, அப்பணியை அவர் தொடர்ந்து செய்யத் தொடங்கினார்.    

குறைவான பேச்சும் எடுத்த பணியில் தீவிரமும் கொண்ட பி. கிருஷ்ணனிடம் இயல்பாக நகைச்சுவை தன்மை வந்து சேர புதுமைப்பித்தன் இரண்டாவது காரணமாக இருப்பார் என எண்ணுவதற்கான சாத்தியங்களும் அவர் நேர்காணலில் கிடைக்கின்றன.  பி. கிருஷ்ணன் அங்கதச்சுவைக்கு ரசிகராகவும் வாசகராகவும் இருப்பவர். புதுமைப்பித்தனின் எழுத்துநடையில் உள்ள அங்கதச்சுவை, எள்ளல், குத்தல் முதலியவைத் தன்னைக் கவர்ந்ததாக அவர் பதிவு செய்கிறார். அதன் காரணமாகவே தனது பெயரைப் புதுமைதாசன் என மாற்றிக்கொண்டார். புதுமைப்பித்தன் எழுத்தில் பிடிப்புக் கொண்டிருந்தாலும் எழுத்தில் தனக்கென ஒரு தனி அடையாளத்தைக் கொண்டிருந்தார் பி. கிருஷ்ணன். அதனாலேயே சிங்கப்பூரின் மூத்த படைப்பாளராக, தமிழ் இலக்கிய வரலாற்றில் முக்கிய இடத்தைப் பெற்றார்.

மேடை, தொலைக்காட்சி போன்ற ‘காணும்’ ஊடகங்களில் நகைச்சுவை நாடகங்கள் மூலம் பார்வையாளர்களைச் சிரிக்க வைப்பது போல வானொலி நேயர்களைச் சிரிக்க வைப்பதும் ரசிக்க வைப்பதும் எளிதான காரியமல்ல. ‘கேட்கும்’ ஊடகமான வானொலி நாடகங்களில் உரையாடல்கள், இசை, ஒலிகள் போன்றவை முக்கியப் பங்காற்றுகின்றன. அரை மணி நேரமே ஒதுக்கப்படும் நாடகத் தொடருக்கு ஐந்து அல்லது ஆறு காட்சிகளுக்கு மிகாத கச்சிதமான எழுத்து, குறைந்த கதாபாத்திரங்கள், சிரிப்பை வரவழைக்கக்கூடிய உரையாடல்கள் போன்ற சவால்களை அநாயசமாகக் கடந்து பி. கிருஷ்ணன் வெற்றிப் பெற்றிருக்கிறார். இன்றளவும் மக்கள் இவரது நகைச்சுவை நாடகங்களில் இடம்பெற்ற கதாபாத்திரங்களை நினைவுகூர்வதும், இவரது சில நகைச்சுவை நாடகங்கள் ஒலி வழியாக மீண்டும், மீண்டும் ஒலிபரப்பப்படும்போது மக்கள் தரும் அமோக ஆதரவும் நகைச்சுவை நாடக ஆசிரியராகப் பி. கிருஷ்ணன் அடைந்த வெற்றிக்குச் சான்றுகளாகின்றன.  

வானொலியில் இடம்பெற்ற பள்ளிகளுக்கான ஒலிபரப்பு அங்கத்தில் சிறு சிறு நாடகங்கள் எழுதும் வாய்ப்பிலிருந்துதான் பி. கிருஷ்ணன் வானொலி நாடகங்கள் எழுதத் தொடங்கினார். அப்போது வானொலியில் பணியாற்றாதபோதும் நண்பர்களின் தூண்டுதலால் தொடர்ந்து சில சிறுகதைகளையும் நாடகமாக்கினார். இடையில் இவர் எழுதிய நாடகம் மேடை நாடகமாகவும் அரங்கேறியது. மெல்ல வானொலி நாடகத்தில் வில்லன், நடிகர் எனப் பரிணமித்தவர் கையில் குறுநகைச்சுவை நாடகம் எழுதுவதற்கான வாய்ப்பு வந்தது நகைமுரண்.

1962இல் வானொலி அறிவிப்பாளராகப் பணியில் சேர்ந்த பிறகு அவர் எழுதிய நாடகம்தான் ‘மாடி வீட்டு மங்களம்’. இவரது முதல் நகைச்சுவைத் தொடர் நாடகத்திற்கு மக்களிடையே கிடைத்த பெரும் வரவேற்பைத் தொடர்ந்து ‘தரகர் தணிகாசலம் (1965)’, ‘அடுக்கு வீட்டு அண்ணாசாமி (1969)’, ‘பச்சிலை பச்சையப்பர் (1971)’, ‘நல்ல வீடு (1976)’, ‘ஐடியா ஐயாக்கண்ணு (1978)’ என மொத்தம் ஆறு நகைச்சுவைத் தொடர் நாடகங்களைப் பி. கிருஷ்ணன் எழுதினார். இவற்றுள் சில நாடகங்கள் தொலைக்காட்சி தொடராகவும் வெளிவந்தன. இவற்றைத் தவிர ஏராளமான தனி நகைச்சுவை நாடகங்களையும் எழுதியிருக்கிறார். பி. கிருஷ்ணன் எழுதி நூலாக அல்லது கையெழுத்துப் பிரதியாகக் கிடைக்கின்ற நகைச்சுவை நாடகங்கள் மட்டுமே இக்கட்டுரைக்குப் பின்புலமாக அமைந்துள்ளன. 

நகைச்சுவை அம்சங்கள் 

வானொலி நாடகங்களில் கதாபாத்திரங்களின் குரல், தொனி, பேச்சு, உச்சரிப்பு, இசை இவையெல்லாம் நகைச்சுவையை வரவழைக்கக்கூடிய முக்கியமான கூறுகளாகும். ஆனால், எழுத்து வடிவத்தில் நாடகங்களை வாசிக்கையில் இந்தக் கூறுகள் இல்லாமற்போவது ஒரு குறைதான். இருந்தாலும் இக்கூறுகளை நமது கற்பனையால் நிரப்பிக் கொண்டால் இவரது நாடகங்களில் சிரிப்பதற்குரிய அம்சங்கள் எவ்வளவோ இருப்பதைக் காணலாம்.

‘தரகர் தணிகாசலம்’ நாடகத்தில் தணிகாசலத்தின் மனைவி பார்வதி, மச்சான் காசிநாதன் இருவரும் காது கேளாதவர்கள். பார்வதியைச் ‘செவிச்செல்வி’ என்றும் காசிநாதனைச் ‘செவிச்செல்வர்’ என்றும் தணிகாசலம் அழைப்பது சிரிப்பை வரவழைக்கக் கூடியது. தணிகாசலத்துக்கும் பார்வதிக்குமான உரையாடலும் பார்வதிக்கும் காசிநாதனுக்குமான உரையாடலும் நுட்பமானவை. சில இடங்களில் வாசகனுக்குப் புராண, இதிகாச அறிமுகம் இல்லாவிட்டால் அந்த நுட்பம் புரியாமல் போகவும் செய்யும். உதாரணத்திற்கு, தணிகாசலம் பார்வதியிடம் அவளது அண்ணனைக் குறித்துப் புகார் சொல்ல முயன்று, தோற்கும் காட்சியைச் சொல்லலாம்.

எ.கா:

தணிகாசலம்: ஒங்க அண்ணன் இருக்குறாருல்லே….

பார்வதி: கண்ணனா? அவருக்கு என்ன?

தணிகாசலம்: அவருக்கு ஒண்ணுமில்லே. அவரோட புல்லாங்குழல் தொலைஞ்சி போச்சாம். சொல்றதை ஒழுங்கா கேளு. மண்டையிலே அடிச்சுப்புடுவேன்

பார்வதி: சண்டையா? கண்ணனுக்கும் யாருக்கும் சண்டை?

தணிகாசலம்: கண்ணனுக்கும் சிசுபாலனுக்கும்

பி. கிருஷ்ணன் ஒவ்வொரு நாடகத்திலும் வெவ்வேறு நகைச்சுவை அம்சத்தைப் பயன்படுத்துகிறார். அதற்கேற்ப பாத்திரங்களை வடிவமைக்கிறார். ‘நல்ல வீடு’ நாடகத்தில் வரக்கூடிய நல்லசிவம் கதாபாத்திரம் சொற்களை மாற்றி மாற்றிப் போட்டுப் பேசும் இயல்புடையவர். குறிப்பாக மனைவியிடம் பேசுகையில் இப்படி மாற்றிப் போட்டுப் பேசுவதும் உடனே சுதாரித்துக்கொண்டு திருத்திக்கொள்ளும் உரையாடல்களுமாகப் பி.கிருஷ்ணன் உருவாக்கியிருப்பார்.

எ.கா:

மனைவி: திருடன்கள் வந்து கதவைத் தட்டும்போது நான் திறந்துவிட்டா என்ன நடக்கும்?

நல்லசிவம்: சாமான்கள் முகத்துலே மயக்க மருந்தை வச்சிட்டு உன்னைத் தூக்கிட்டுப் போயிடுவாங்க 

இந்த இரு நாடகத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரம் ஒன்றை ‘அடுக்கு வீட்டு அண்ணாசாமி’ நாடகத்தில் உருவாக்கியிருப்பார் பி. கிருஷ்ணன். இந்நாடகத்தில் வரும் அண்ணாசாமி, மனைவி கோகிலவாணியின் அறியாமையைப் பொறுத்துக் கொள்ள இயலாதவர். உலக நடப்புகளையும் ஊர் நடப்புகளையும் அறிந்து கொள்ளாமல் எப்போதும் திரைப்படம், தொலைக்காட்சி குறித்து மட்டும் பேசும் மனைவிக்குத் தன்னால் முடிந்த அளவு பயனுள்ள செய்திகளைச் சொல்லிவிடவேண்டுமென்று நினைப்பவர். அவர் சொல்வதற்குச் சற்றும் தொடர்பில்லாமல் கோகிலவாணி எதிர் கேள்விகள் கேட்பதும் அதற்கு அண்ணாசாமி எரிச்சலடைவதும் என நகைச்சுவையாக நகர்த்தியிருப்பார்.

எ.கா:

அண்ணாசாமி: சந்தனு மகாராஜனுக்கும் கங்காதேவிக்கும் இந்த அஷ்ட வசுக்கள் எப்புடிப் பிள்ளைகளா வந்து பொறந்தாங்கிறதைப் படிச்சிகிட்டிருக்கேன்

மனைவி: ஓ! அந்தக் கதையா? அது ராமாயணத்துலேல்ல இருக்கு. இப்ப நீங்க ராமாயணந்தான் படிக்கிறீங்களா?

அண்ணாசாமி: எது? ராமாயணம் படிக்கிறேனா?  திரேதா யுகத்தையும் துவாபர யுகத்தையும் ஒண்ணாக்கி கொழப்படி பண்ணுதே!

குடும்பம் சார்ந்த நகைச்சுவைகளைக் கையாளுவதில் பி. கிருஷ்ணன் திறன் அழுத்தமாகவே வெளிப்படக்கூடியது. குறிப்பாகக் கணவன் – மனைவிக்கு இடையிலான உரையாடலைச் சொல்லலாம். ‘நல்ல வீடு’ நாடகத்தில் வரக்கூடிய நல்லசிவத்தின் மனைவி கதாபாத்திரம் திரைப்படங்கள் பார்ப்பதில் விருப்பம் கொண்டவர். திரைப்படங்களில் காட்டப்படும் அனைத்தும் உண்மை என்று நம்பக்கூடியவர். திரைப்படங்கள் சார்ந்து அவர் கேட்கும் கேள்விகளும் அதற்கு நல்லசிவம் அளிக்கும் பதில்களும் அங்கதச்சுவை கொண்டவை.

எ.கா:

மனைவி: சீதை, ராமரோட காட்டுக்குப் போறப்ப நைலான் சேலையோ சில்க் சேலையோ கட்டிகிட்டுப் போனாங்களே அப்பவே இந்தப் புடவைங்க இருந்திருக்கும் போல

நல்லசிவம்: ஆமாம் தசரதச் சக்கரவர்த்தி ஜப்பானுக்குத் தந்தி அடிச்சு சேலைகளை அனுப்பி வைக்கும்படி  கேட்டுகிட்டாரு.

மனைவி: அப்பவே இந்தியாக்காரங்க ஜப்பான் பொடவைங்கள கட்ட ஆரம்பிச்சாட்டாங்களா?

மேற்சொன்னவைச் சில உதாரணங்கள் மட்டுமே. நகைச்சுவை தன்மையை உருவாக்க பி. கிருஷ்ணன் முதலில் அசாதாரண கதாபாத்திரங்களை உருவாக்குகிறார். அவர்கள் வழியாகவே இழை இழையாக அங்கதத்தை நாடகம் முழுவதும் இழைக்கிறார். வதந்திகளைப் பரப்பும் பெண்மணி, சாப்பாட்டிற்காக எதையும் செய்யத் துணிபவர், எப்போதும் தனித்தமிழில் பேசுபவர், உணவுக்குக் கூடச் செலவிடாமல் பணத்தைச் சேமிப்பவர் என மனிதர்களின் குணாதிசயங்களின் அடிப்படையில் நகைச்சுவையான உரையாடல்களை அமைப்பதைத் தன் முக்கிய உத்தியாகக் கொண்டுள்ளார்.

சொற்களின் பொருளை வேறு விதமாகப் புரிந்துகொள்வதன் வழி நகைச்சுவையை உருவாக்குவதும் இவரது மற்றொரு உத்தி. உதாரணத்திற்கு ‘தவ்கே’ (பயறு முளை) என்ற சொல்லைத் ‘தவக்கே’ (முதலாளி) எனத் தவறாகப் புரிந்துகொள்ளுமிடத்தைச் சொல்லலாம். இதுபோல, ‘நாக்குப் பூச்சி ரோடு இல்லை நார்த் பிரிட்ஜ் ரோடு’ என்று இடங்களின் பெயர்களை அடிப்படையாகக் கொண்டு இவர் செய்யும் நகைச்சுவை அன்றைய நேயர்களிடம் புகழ்பெற்றன.

பி. கிருஷ்ணன் தான் எழுதும் நகைச்சுவை நாடகங்கள் வானொலிக்கானது எனும் தெளிவில் இருப்பதை அவரது வசனங்கள் வழியாகவே அறிந்துகொள்ள முடியும். அதில் வாசகன் காட்சிப்படுத்திப் பார்ப்பதற்கான இடைவெளிகள் குறைவு. மொழி மட்டுமே அங்கதச்சுவையை உருவாக்கும் சவாலை ஏற்றுள்ளன. “நெனைக்க வேண்டியதை நெனைக்காமே நெனைக்கக்கூடாததை நெனைச்சா, நெனைக்க வேண்டிய நெனைப்புப் போயி நெனைக்க வேண்டாத நெனைப்பு வந்து” என ஒரே சொல்லைக் கொண்டு சுற்றி சுற்றிப் பேசிக் குழப்புவதன் மூலம் நகைச்சுவையை உருவாக்குவதெல்லாம் வானொலிக்குப் பொருத்தமாக அமைந்த வசனங்கள்.  இதே பாணியில் “கோலக்குரோ கோட்டியப்பன்னு ஒருத்தன், கொடல் கறி வாங்கித்தர்றேன்; கோட்டை மேலேயிருந்து குதிப்பியான்னான்; குதிச்சேன்!’’ என ஓசை நயத்தின் வழி நகைச்சுவையை அமைத்தல், “மிருணாளினி – ம்..மிளுரா..ரினி..மினி..லாருணி” எனப் பெயர்களை உச்சரிக்க சிரமப்படுவதன் மூலம் சிரிப்பை வரவழைத்தல்,  எப்போதும் இருமிக் கொண்டிருப்பவரின் பெயர் ஆரோக்கியசாமி, தலை மொட்டையாக இருப்பவரின் பெயர் முடியழகன் எனப் பெயர் வைக்கும்போதும் அதற்குச் சற்று அழுத்தம் கொடுத்து “குணமும் இல்லை, சுந்தரமும் இல்லை ஆனால் பெயர் குணசுந்தரி” என அலுத்துக்கொள்ளும் போதும் அவை அன்றைய வானொலி ரசிகர்களுக்கு எவ்வகையான சிரிப்பலையை உருவாக்கியிருக்கும் என உணர முடிகிறது.

பொதுவாகவே எழுத்தாளர்கள் தங்களது சொந்த வாழ்க்கை அனுபவங்களைப் படைப்புகளில் புகுத்திச் சுயபகடி செய்துகொள்வது வழக்கமான ஒன்றுதான். பி. கிருஷ்ணனும் இதற்கு விதிவிலக்கல்ல. 1956ஆம் ஆண்டு சீன ‘மிடில் ஸ்கூல்’ மாணவர்கள் செய்த கலவரத்தால் இவரது திருமணத்தன்று ஊரடங்குச் சட்டம் அமலாக்கப்பட்டுள்ளது. மணப்பெண்ணின் அக்காவின் கணவர் இவரைத் திருமணம் நடக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றதையும் சிறிது காலத்தாமதம் ஆகியிருந்தாலும் திருமணம் நடந்திருக்காது என்பதையும் மையமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள ‘ஊரடங்குக் கல்யாணம்’ என்ற தனி நகைச்சுவை நாடகம் தனித்துவமானது.

அதுபோல, ‘அடுக்கு வீட்டு அண்ணாசாமி’ நாடகத்தில் அண்ணாசாமி தனது மனைவியைக் ‘கிராண் பிரி’ (மோட்டார் சைக்கிள் & மோட்டார் கார் பந்தயம்) பார்க்க அழைக்கிறார். அதற்கு ரேடியோவில் கேட்டுக்கொள்கிறேனெனச் சொல்லும் மனைவியிடம் ‘‘ஆகாங்! கண்ணாலே பார்க்க வேண்டியதைக் காதாலே கேட்டுக்கிறேன்கிறியா? ரேடியோவுலே அந்தக் கிருஷ்ணன் செய்யிற வர்ணனை, காருங்க சத்தத்தைவிடப் பெரிசா இருக்குமே” என்ற அண்ணாசாமியின் பதில் வழியாகப்  பி. கிருஷ்ணன் தன்னையே பகடி செய்துகொள்வது வெடிச் சிரிப்பை வரவழைக்கக்கூடியது. (பி.கிருஷ்ணன் அக்காலக்கட்டத்தில் பல முக்கியமான விளையாட்டுப் போட்டிகளுக்கு வருணனையாளராக இருந்திருக்கிறார்.)   

பாத்திரப் பெயர்களும் மொழியும்

பி. கிருஷ்ணன் தன் பணியில் சிரத்தை எடுப்பவர். முழுமையை நோக்கிச் செல்பவர். நகைச்சுவை நாடகம் ஒரு வெகுசன கலை வடிவம் என அறிந்து அதற்கேற்பவே அவர் ஒவ்வொரு கூறையும் வடிவமைத்துள்ளார். எளிய மக்கள் எவ்வாறு நாடகத்தை அணுகுவார்கள் என அவரால் நாடிபிடித்துப் பார்க்க முடிந்துள்ளது. வானொலி போன்ற ஒலி சாதனங்கள் ஒரு முறைக்கு மேல் ஒன்றை மீண்டும் சொல்லாதது. காற்றில் கரைவது. அதை மனதில் பிடித்து வைக்க சில உத்திகளைப் பயன்படுத்துகிறார். அவற்றுள் ஒன்று பாத்திரப்பெயர்கள்.

வாரம் ஒருமுறை மட்டும் ஒலிபரப்பாகும் தனது நாடகத் தொடரின் கதாமாந்தர்களை நேயர்கள் மறந்துவிடாமல் இருக்கவும் நெருக்கமாகப் பின் தொடர்ந்து வரவும் பாத்திரங்களின் பெயருக்கு முன்பான குறியீடுகளை எதுகை மோனையுடனும் ஓசை நயத்துடனும் சூட்டியிருக்கிறார். எ.காட்டாக: தரகர் தணிகாசலம், பச்சிலை பச்சையப்பர், அடுக்கு வீட்டு அண்ணாசாமி, ஐடியா ஐயாக்கண்ணு, மாடிவீட்டு மங்களம், மேடைப்பேச்சு மெய்யழகு, கங்காரு காசிநாதன், மண்ணுமலை மருதப்பன், உலுபாண்டான் உத்திராபதி, புதையல் காத்த புண்ணியகோடி, சாப்பாட்டுக் கடை சாத்தப்பன், மண்ணுமலை அண்ணாமலை, கொசு வளர்த்த கோட்டியப்பன், பொலிட்டிக்ஸ் பொன்னுசாமி, அரசியல் ஆர்வலர் அப்பாசாமி, பாயிண்ட் பஞ்சாட்சரம், தலை தெறிக்க ஓடுன தனஞ்செயன், பயலேபார் ரோட்டு பக்கிரிசாமி, ஆயர்ஈத்தாம் அய்யாசாமி, பத்துபகாட் பண்டரிநாதன், சுண்ணாம்புக்கம்பம் சொயம்புலிங்கம், அராப் ஸ்திரீட்டுலே அத்தர் விக்கிற அய்யாசாமி, அண்டா வாய் அலங்காரம் இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். மக்கள் இப்போதுகூட இவரது கதாபாத்திரங்களின் பெயர்களை மறக்காமல் நினைவுகூர்வதற்கு இந்தக் கூறு ஒரு முக்கியக் காரணமாக உள்ளது.

பாத்திரப் பெயர்களைப் போலவே இந்த நாடகங்கள் மக்களிடம் நெருக்கமாகத் திகழ பி. கிருஷ்ணன் தேர்ந்தெடுத்த மக்களின் மொழியும் காரணம் எனலாம்.

ஒரு தேர்ந்த படைப்பாளியாக எந்தப் படைப்பிற்கு எவ்வித மொழியைப் பயன்படுத்த வேண்டுமென்ற தீர்க்கமான முடிவு அவரிடம் இருந்திருக்கிறது. அவரது மொழிபெயர்ப்புகள் உயர்ந்த இலக்கியத் தரத்துடன் வாசிக்க சற்று உழைப்பைக் கோரக்கூடியவை. ஆனால், நகைச்சுவை நாடகங்களில் அவர் பயன்படுத்தும் மொழி மக்கள் மொழி. மலாய், ஆங்கிலம், கொச்சைத் தமிழ் என எல்லாவற்றையும் கலந்து மக்கள் புழங்கும் மொழியில் எழுதி இருப்பது இவரது தனித்துவமும் பலமும் ஆகும். எனது வாசிப்பில் இதுவரை எழுதப்பட்டச் சிங்கை இலக்கியங்களில் மக்கள் மொழிக்கு இத்தனை முக்கியத்துவம் அளித்த ஒரு படைப்புப் கூடக் கிடையாது.  

‘பக்கை பண்றது’, ‘தொங்கல் வீடு’, ‘ஆம்பரு’, ‘பிஞ்சம்’, ‘தவ்கே’, ‘லேலோங்’, ‘ஜாகா’, ‘கும்மா’, ‘தபே’, ‘கோசம்’, ‘கித்தாப்பாய்’, ‘பேதா’, ‘டாணா’, ‘பவுஞ்சா’, ‘செம்புத்துவான்’, ‘தகான்’, ‘சாலா ஓராங்’, ‘கெப்புரு’, ‘பிஞ்சாமா’, ‘லாங்கார்’, ‘பாறாங்’, ‘பெங்சான்’, ‘கச்சோர்’, ‘மாலாஸ்’, ‘சம்போர்’, ‘துந்தா’ என மலாய் சொற்களை மட்டும் பட்டியலிட்டால் ஒரு தனி நூலே உருவாக்கலாம். ‘டோய்லெட்டு’- toilet, ‘குரோஸ்’ – cross, ‘லோஜிக்’ – logic, ‘க்ஷோர்ட்’ – short, ‘சோரி’ – sorry, ‘ஓர்டினேரி’ – ordinary, ‘ரோங்’ – wrong, ‘பிஞ்சினு’ – pension, ‘ஓல்டு சொங்ஸ்கள்’ – old songs, ‘மோடர்ன்’ – modern என மக்கள் ஆங்கிலச் சொற்களை உச்சரித்த விதமும் அலாதியானதாக இருக்கிறது. “பொட்டி போடப்போறான்”, “ஊப்பையையெல்லாம் குப்பைத் தொட்டியில் போட்டுட்டு வா’’, “இந்த மனுஷனுக்கு ரொம்பக் கெப்புருதான்’’, “கடுதாசியை ஒடைச்சுப் பார்க்கலாம்’’ என்று வழக்கொழிந்த தமிழும் இவரது நாடகங்களில் காணக்கிடைக்கிறது.

வசனங்களில் பேச்சுத்தமிழை மிக இயல்பாக இணைத்துச் செல்லும் கிருஷ்ணன், தனது ஆழ்ந்த மொழியறிவையும் பழந்தமிழ் அறிவையும் நாடகத்தில் ஆங்காங்குத் தெளித்துச் செல்லவும் தவறவில்லை.

சிறந்த வாசகரான பி. கிருஷ்ணனின் புலமை உரையாடல்களில் சட்டென்று ஒரு தெறிப்பாகத் தோன்றி சிந்திக்கவும் சிரிக்கவும் வைக்கின்றன. “செய்ய வேண்டியதைச் செய்யாமே போனாலும் செய்யக் கூடாததைச் செஞ்சாலும் கெடும்ன்னு சொல்றது சும்மாவா? கந்தையானாலும் கசக்கிக்கட்டுன்னு சொன்னாரு. கந்தையானால் கழட்டி வீசுன்னு சொல்லலே” போன்ற உரையாடல்கள் வழியாகப் பி. கிருஷ்ணன் வள்ளுவனையும் ஔவையையும் தனது நாடகங்களில் பல இடங்களில் உலாவவிடுகிறார். இவர்கள் மட்டுமல்லாமல் பாரதிதாசன், இராமாயண மகாபாரதக் கதாபாத்திரங்கள் ஆகியோரும் அவ்வப்போது தலைகாட்டுகின்றனர். மேலும் தெனாலிராமன் கதைகள், நாட்டுப்புறக் கதைகள், நீதிக்கதைகள் என அனைத்தும் இவரது நாடகங்களில் அடங்கி உள்ளன. தான் வாசித்தவற்றை நாடகங்களில் மிகச் சரியான இடத்தில் கச்சிதமாகப் பொருத்தி அதன் மூலம் மக்களுக்குக் கற்றுக்கொடுக்கும் ஆசிரியராகவும் பி. கிருஷ்ணன் இருந்திருக்கிறார்.  

சிங்கப்பூர் போன்ற மிக விரைவாக மாற்றம் கண்டுவரும் நகரத்தில், சமூக ஊடக காலத்திலும் 50 ஆண்டுகளுக்கு முந்திய வானொலி கதாபாத்திரம், நினைவுச் சரத்தின் ஒரு கெட்டி முடிச்சாக இருப்பதற்கு வாழ்விலிருந்து பி. கிருஷ்ணன் உருவாக்கிய பாத்திரங்களையும் அன்றைய தினசரிகளில் இருந்து பெற்றுக்கொண்ட மொழியையும் காரணமாகச் சொல்லலாம்.

***    

பி. கிருஷ்ணன் நாடகம் எழுத வந்த காலத்தைக் கொண்டே அவர் நாடகத்தில் உள்ளுறைந்துள்ள கருத்துகளை அளவிட வேண்டியுள்ளது. அது சிங்கை பெருநகராக வளர்ச்சியை நோக்கி துரிதமாகச் சென்றுக்கொண்டிருந்த காலம். தொழில்துறையைத் தனது ஆயுதமாகக் கையில் எடுத்த தருணம். இந்தப் பொருளியல் வேட்கையில் அடிப்படை மானிடம் மெல்ல மெல்ல அழிவது எளிதாக நடக்க கூடியதே. மனிதன் தன்னை இயந்திரமாகப் பாவிக்கும் நிலையும் இதுபோன்ற சமயங்களில் தொடங்கும். இன்று நன்னெறி கருத்துகளாகத் தோன்றும் அவரது நாடகத்தின் சாரங்கள் அன்றைய சிங்கை குடிமக்கள் மன உருவாக்கத்திற்கு எத்தகைய பங்கை வகித்திருக்கும் என நாடகத்தை வாசிக்கும்போதே அறிய முடிகின்றது. நிலத்தில் ஊன்றி வளர்ந்த தமிழர்களைப் புதிய கலாச்சார வாழ்வுடன் தயார்படுத்தும் குரலாக அவர் நாடகங்கள் ஒலிக்கின்றன.

அன்றைய சிங்கப்பூர் இன்றைய சிங்கப்பூராக உருமாற அடித்தளமாக விளங்கிய செயல் திட்டங்களையும், இயக்கங்களையும், தொலைநோக்குப் பார்வைகளையும், சமூக மாற்றங்களையும் தனது நாடகங்களில் மிதமான நகைச்சுவையுடன் மக்கள் புழங்கும் மொழியில் இதமான தொனியில் முன்வைக்கிறார் பி. கிருஷ்ணன்.

அ.  வீடமைப்பு வளர்ச்சிக் கழகம்

சுகாதாரமற்ற சேரிகளையும் நெருக்கமான குடியிருப்புகளையும் முற்றொழித்துச் சுகாதாரமான வாழ்க்கை சூழலை உருவாக்க 1960ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட ‘வீடமைப்பு வளர்ச்சிக் கழகம்’ சிங்கப்பூர் வளர்ச்சியில் ஒரு முக்கியமான மைல்கல்லாகும். சிங்கப்பூரின் வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டத்தொடங்கியபோது, கம்பங்கள் எனப்படும் கிராமப்பகுதிகளிலில் இருந்து அங்கே குடியேறிய முதல் தலைமுறை அடுக்குமாடிவாசிகளின்  சுவாரசியமான வாழ்க்கை அனுபவங்களைப் படம்பிடித்துக் காட்டும் வானொலி நாடகம் அடுக்குவீட்டு அண்ணாசாமி.  1969 முதல் 1970ஆம் ஆண்டு வரை சிங்கப்பூர் வானொலியில் ஒலிபரப்பப்பட்டது.  தொலைக்காட்சி வளர்ச்சி பெற்றிராத அக்காலக்கட்டத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்களை வானொலி பக்கம் ஈர்த்தது இந்த நாடகம். மிகவும் பிரபலமாக இருந்ததால் 1975-ஆம் மீண்டும் ஒலிபரப்பப்பட்ட இந்த நாடகம், பின் 1985 வரை சில முறை ஒலிபரப்பானது. அடுத்தடுத்த தலைமுறைகளால் மேடை நாடகமாகவும் தொலைக்காட்சி நாடகமாகவும் இந்நாடகம் மீண்டும் மீண்டும் மேடையேற்றப்படுவதற்கு நகைச்சுவையோடு வெளிப்படும் இதன் சிங்கப்பூர் தன்மையே முக்கிய காரணம். மேலும் கழகத்தால் உருவாக்கப்பட்ட அடுக்குமாடி வீடுகள் பி. கிருஷ்ணனின் நாடகங்களில் மனிதர்களுக்கு இணையான கதாபாத்திரங்களாக இருக்கின்றன. ‘நல்ல வீடு’, ‘மாடி வீட்டு மங்களம்’ போன்ற நாடகத் தலைப்புகள் இதை உறுதிப்படுத்துகின்றன. 

அனைவரும் வீட்டு உரிமையாளர்களாக இருக்க வேண்டுமென்ற நோக்கத்தில் சாதாரணச் சம்பளம் பெறும் நடுத்தரவர்க்கத்தினருக்காகக் குறைவான விலையில் விற்கப்பட்ட, வாடகைக்கு விடப்பட்ட  அடுக்கு மாடி வீடுகளுக்குக் குடி போக முதலில் மக்களுக்குப் பெரும் தயக்கமிருந்தது. ஆனால், மெல்ல அந்தச் சூழல் மாறியது. கம்பத்தில் ஏற்பட்ட வெள்ளம், அடுக்கு மாடி வீட்டிலிருந்த வசதிகளின் மீதான ஈர்ப்பு போன்றவற்றால் மக்கள் விரைந்து அடுக்கு மாடி வீடுகளுக்குப் பதிவு செய்யத் தொடங்கினார்கள். அதிகரித்த பதிவுகளின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாத அரசு அவர்களைக் காத்திருப்புப் பட்டியலில் வைத்தது. குறைந்தது மூன்று வருடங்கள் காத்திருந்த பிறகுதான் மக்களுக்கு வீடுகள் கிடைத்தன.  வீடுகள் கிடைத்துக் குடியேறிய மக்கள் அதிக ஆர்வத்தோடு தங்களது வீடுகளைப் புதுப்பிக்கவும் அலங்கரிக்கவும் செய்தார்கள். தனியார் வீடுகளின் வாடகை, அடுக்கு மாடி வீடுகளின் வாடகையைவிட இரண்டு மடங்கு அதிகமாக இருந்தது. இப்படியாக அந்தக் காலக்கட்டத்தில் மக்களின் வாழ்விடம் பற்றிய ஒரு சித்திரத்தைப் பி. கிருஷ்ணனின்  ‘அடுக்கு வீட்டு அண்ணாசாமி’, ‘நல்ல வீடு’, ‘ஐடியா ஐயாக்கண்ணு’ போன்ற நாடகங்கள் நமக்குக் காட்டுகின்றன.

ஆ. தேசிய சேவை

பாதுகாப்பான தேசமாகச் சிங்கப்பூரை உருவாக்கும் நோக்கத்துடன் 1967ஆம் ஆண்டு தேசிய சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் முக்கியத்துவத்தைப் பி. கிருஷ்ணன் நாடகப் போக்கில் இயல்பாகச் சொல்லி மக்கள் மனதில் பதிய வைத்திருக்கிறார்.

தேசிய சேவையில் ‘விழிப்புப்படை’ என்ற ஒரு பிரிவு உருவாக்கப்பட்டது. இந்தப் படையில் இருக்கும் ஆண்கள் வாரத்திற்கு இரண்டு, மூன்று மணி நேரங்கள் நாட்டில் எங்கெல்லாம் பொதுச்சேவை சார்ந்து மனித வளங்கள் தேவைப்படுகிறதோ அங்குச் சென்று பணிபுரிய வேண்டும். உதாரணத்திற்கு, அரசு அறிவித்த வரிசையில் நிற்கும் இயக்கத்திற்காகப் பேருந்து நிலையத்தில் மக்கள் வரிசையில் நிற்பதைக் கண்காணிப்பதும் அவர்களுக்கு வழிகாட்டுவதும் விழிப்புப்படையினரின் பணிகளில் ஒன்று. ‘அடுக்கு வீட்டு அண்ணாசாமி’ நாடகத்தில் அண்ணாசாமியின் மகன் இந்தப் படையில் இருக்கிறான். சம்பளம் கிடைக்காத இந்த வேலையை மகன் ஏன் செய்ய வேண்டுமென வினவும் மனைவிக்கு “தேசிய சேவை ஒவ்வொரு குடிமகனின் கடமை” என்ற அண்ணாசாமியின் பதிலின் வழி பி. கிருஷ்ணன் தேசிய சேவை பற்றிய புரிதலை மக்கள் மனதில் விதைக்கிறார். அரசாங்கம் மக்களுக்குச் செய்ய வேண்டியதைச் சரியாகச் செய்கையில் மக்களும் நாட்டுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைத் தவறாமல் செய்ய வேண்டுமென்பதை உறுதியாக வெளிப்படுத்துகிறார்.

இ. புதிய வாழ்வியலுக்கான வழிகாட்டல்       

பி. கிருஷ்ணனின் நாடகங்கள் ஒருவகையில் அரசாங்க பிரசார நாடகம் என்றபோதும் நாடகத்தில் பிரசார வாடை அடிக்காது. அடித்தட்டு மனிதர்களில் எளிய வாழ்க்கை எவ்விதமான சமரசங்களோ, நியாப்பாடுகளோ, அளவுகோல்களோ இன்றி அதன் இயல்பில் காட்டப்பட்டிருக்கின்றன.

நீர் வளங்கள் ஏதுமற்ற சிங்கப்பூர் இன்றளவும் நீர் மேலாண்மையில் சிறந்து விளங்க காரணம் அப்போதிருந்த தொலைநோக்குப் பார்வை என்பதைப் பி. கிருஷ்ணனின் நாடகங்கள் வழி அறிய முடிகிறது. நீரை வீணாக்கக் கூடாது என்பதைத் தனது அனைத்து நாடகங்களிலும் தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருக்கிறார் பி. கிருஷ்ணன்.

‘நல்ல வீடு’ எனும் நாடகத்தில், வானொலியிலும் தொலைக்காட்சியிலும் செய்யப்படும் அறிவிப்புகளைக் கேட்ட பிறகும் தண்ணீரை வீணாக்குவது பெரிய தப்பு என மக்களுக்குத் தெரிவிக்கிறார்.  ஆறு, குளம், ஓடை என நிறைய வளங்களைக் கொண்ட நாடுகளே அதையெல்லாம் நன்றாகப் பேணிக்காக்காமல் அலட்சியமாக இருக்கையில், இயற்கையான நீர் வளங்கள் ஏதுமில்லாத சிங்கப்பூர் கடுமையான உழைப்பாலும் மறுசுழற்சி போன்ற முயற்சிகளாலும்  நல்ல குடிநீர்  கிடைக்க வழிசெய்யும்போது தண்ணீரைத் தங்கமாகக் கருதிப் பாதுகாக்க வேண்டிய பொறுப்புணர்வு பொது மக்களுக்கு உள்ளது என்பதை அழுத்தமாகப் பதிவு செய்கிறார்.

குப்பை போடக்கூடாது, சாலையில் பணிவன்பு, சாலை பாதுகாப்பு போன்ற விழிப்புணர்வு இயக்கங்களைத் தனது எழுத்தின் வழி மக்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறார் பி. கிருஷ்ணன். ‘ஐஸ்கிரீம்’, ‘கச்சான்’ குப்பைகளை மின்தூக்கியில் போடுபவர்கள், மின்தூக்கியில் கிறுக்குபவர்கள், மின்தூக்கியில் சிறுநீர் கழிப்பவர்கள், பசுமைக்காக நடப்பட்டிருக்கும் மரங்களை நாசம் செய்பவர்கள் ஆகியோரைத் தணிந்த குரலில் கண்டிப்பதன் வழி பொதுச்சொத்துக்களுக்கு நாசம் விளைவிக்கக்கூடாது என்ற செய்தியையும் மக்களுக்குத் தெரிவித்திருக்கிறார்.

குப்பைகளை வீசி சுற்றுப்புறத்தை அசுத்தமாக்கும் மக்களை நினைத்து வருத்தப்படும் பி. கிருஷ்ணன் அசுத்தமான சூழலில் கொசுக்கள் பெருகும் சாத்தியத்தையும் அதனால் நோய்கள் உருவாகும் ஆபத்தையும் ‘ஐடியா ஐயாக்கண்ணு’ எனும் நாடகத்தில் சுட்டிக்காட்டுகிறார். சீனப் பெருநாளின்போது பட்டாசுகளைக் கொளுத்தி சிங்கப்பூரையே புகை மண்டலமாக மாற்றும் வழக்கத்திற்கு அரசு விதித்த தடை சுற்றுப்புறத்தைப் பாதுகாப்பதற்கெனவும் தூய்மையான நாடாகச் சிங்கப்பூரை வைத்திருக்க மக்களும் தங்கள் பங்கை ஆற்ற வேண்டுமெனவும் ‘நல்ல வீடு’ எனும் நாடகத்தில் குறிப்பிடுபவர் சுகாதாரத்தைக் கடைப்பிடித்துச் சுற்றுப்புறச்சூழலை மாசுபடுத்தாமலிருந்தால் நோய்களிலிருந்து தப்பிக்கலாம் என்ற செய்தியை அறிவுறுத்துகிறார்.

இதுபோன்ற தருணங்களில் அவர் பயன்படுத்தும் நேரடித் தன்மையிலான வசனங்கள் அழுத்தமானவை.

“பொழுதைப் பயனுள்ள வகையில் கழிக்க அரசு நிறையப் பணம் செலவழித்துக் கட்டுவது. சீட்டுப் போடுறதுலேயும் வேண்டாத கதைகளைப் பேசுறதுலேயுமே பொழுதைப் போக்கிடுவாங்க. ஓய்வு நேரங்களில் சமூக நிலையங்களுக்குப் போனால் எவ்வளவோ விஷயங்களைத் தெரிஞ்சிக்கலாமே”(அடுக்கு வீட்டு அண்ணாசாமி) என்று சொல்வதன் மூலம் இன்றளவும் சிங்கப்பூரில் வெற்றிகரமாக நடைமுறையில் இருக்கும் சமூக நிலையங்களின் தேவையையும் முக்கியத்துவத்தையும் நாடகத்தின் வழி மக்களுக்கு அறிவிக்கிறார்.

“சிங்கப்பூர் மக்கள் எப்பவும் நல்ல உறுதியான உடல் அமைப்போட இருக்கணுங்கிறதுக்காக அரசாங்கம் தேசிய உடலுறுதிப் பயிற்சியை நடத்தி வருது. இந்த உடற்பயிற்சியை நாம எப்படிச் செய்யணுங்கிறதை ரேடியோவுலே மியூஸிக்கோட சொல்லித்தர்றாங்க” (அடுக்கு வீட்டு அண்ணாசாமி) என்பதன் வழி சிங்கப்பூரின் முக்கிய வளமான மனிதவளத்தின் ஆரோக்கியம் குறித்துப் பேசுகிறார்.

ஈ. நில மாற்றங்களின் பதிவு

பி. கிருஷ்ணன் எழுதுவது நகைச்சுவை நாடகங்கள் என்றாலும் அவற்றுள் அவர் மிகக் கவனமாகவே சிங்கப்பூர் குறித்தச் சித்திரத்தை உருவாக்குகிறார். தனது நாடகத்தை மகிழ்விக்கும் ஒரு பொழுதுபோக்கு அம்சம் என மட்டும் கருதாமல் அதன் தேவையையும் பயனையும் தானே முன்னின்று வடிவமைக்கிறார். அதில் முக்கியமானது நாடகத்தில் ஊடாடிக் கிடக்கும் வரலாற்றுப்பதிவு.

அந்தக் காலக்கட்டத்தில் அசுர வேகத்தில் மாற்றம் கண்ட சிங்கப்பூர் நிலப்பரப்பைப் பி. கிருஷ்ணன் தன் நகைச்சுவை நாடகங்கள் வழியாக மிக விரிவாகவே  காண்பிக்கிறார். அடுக்குமாடி வீடுகளின் வருகையால் வெற்றிலைத் தோட்டங்கள், மரவள்ளிக்கிழங்குத் தோட்டங்களெல்லாம் இருந்த தடம் தெரியாமல் மறைந்து போவதும், கம்பத்திலிருந்த அத்தாப்புக் குடிசைகளெல்லாம் வானுயர்ந்த கட்டிடங்களாக மாறுவதும் எனத் தினசரி உருமாறும் சிங்கப்பூரின் சித்திரங்கள் இவரது நாடகங்களில் இருக்கின்றன. சிங்கப்பூரின் நகர மையத்திலிருந்து தீவின் அனைத்துப் பகுதிகளையும் இணைக்கும் வகையில் விரிவாக்கப்பட்ட சாலைகள், அதிகரித்த வாகனங்களால் ஏற்பட்ட நெரிசல்களையும் விபத்துகளையும் தவிர்க்கும் பொருட்டு அதிக நிதி ஒதுக்கி கட்டப்பட்ட மேம்பாலங்களென இவர் காட்டும் நிலப்பரப்பு மாற்றங்களின் வழியாக ஒட்டுமொத்த சிங்கப்பூர் நகரமே கலைத்துப் போடப்பட்டுள்ளது என்பதை உணர முடிகிறது.

மேலும் அன்றிருந்து இன்று காணாமல் போன அல்லது பெயர் மாற்றமடைந்த பல இடங்களைப் பற்றிய குறிப்புகளையும் இவரின் நாடகத்தில் காண முடிகிறது. சிராங்கம், காத்தோங் தியேட்டர், மண்ணுமலை, செவப்புப்பாலம், தண்ணிக் கம்பம், சுண்ணாம்புக் கம்பம், ராயல் தியேட்டர், ஈயமலை, டைமண்ட் தியேட்டர், ஓடியன் தியேட்டர், பாயலேபர் பழைய விமான நிலையம், கெப்பிட்டல் தியேட்டர், கூச்சாச்சுவி என வரலாற்றில் மறைந்த அல்லது மாறிப்போன இடங்களை இவரது நாடகங்கள் நினைவூட்டுகின்றன.

மேலும், சிங்கப்பூரில் ஏற்பட்ட பெரும் வெள்ளம் (1969), ஆர்ச்சர்டு ரோடு மெக்டோனல்டு ஹவுஸ் கட்டிடத்தில் குண்டு வெடிப்பு (1965), அப்போல்லோ விண்கலம் சந்திரனில் இறங்கியது (1969), அறிஞர் அண்ணாவின் மரணம் (1969) இப்படி அன்றைய நாட்டு நடப்புகளாகவும் உலகச் செய்திகளாகவும் இருந்து வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளாக மாறிப்போன பல சம்பவங்களை இவரது நாடகங்களில் காண முடிகிறது. இவை எவற்றையும் வலிந்து திணிக்காமல் உரையாடல்களின் இழையோடு இணைத்துச் சொல்லியிருப்பது ஒரு நாடக ஆசிரியராகப் பி.கிருஷ்ணனின் பலம் என்று சொல்லலாம்.

உ. வாழ்க்கை சித்திரங்கள்

நகைச்சுவை நாடகம் என்பதாலேயே பி. கிருஷ்ணனின் நாடக முயற்சிகளை வணிக இலக்கிய வகைமையில் இணைத்துவிட முடியாது. புற தேவைக்காகவும் நிர்வாகத்தின் நோக்கத்துக்காகவும் அவை எழுதப்பட்டிருந்தாலும் பல்வேறு சாத்தியங்களைக் கவனத்தில் கொண்டே அவை உருவாக்கப்பட்டுள்ளன. அரசின் நோக்கத்தைப் பதிவு செய்யவும் அதே சமயத்தில் மக்களின் உளவியலையும் மன சஞ்சலங்களையும் பதிவு செய்வதன் மூலமும் ஒரு சூழலைச் சமநிலையுடன் அணுகும் அவரது  திறன் வெளிப்படுகிறது.

பி. கிருஷ்ணன் நடுத்தரவர்க்கத்து மக்களின் வாழ்க்கையைக் கவனமாகவும் நுட்பமாகவும்  உள்வாங்கித் தனது நகைச்சுவை நாடகங்களில் வெளிப்படுத்தியுள்ளார். அதே வேளை, அடுக்கு மாடி வீடுகளுக்குக் குடி பெயர்ந்த பிறகு அண்டை வீட்டாருடனான இணக்கம், அவர்களுடனான பிணக்கு, உளவியல் சிக்கல்கள், பொருளாதாரச் சவால்கள், பழக்க வழக்கங்கள், பெண்களது நிலை, கலாச்சார மாற்றங்கள், பண்பாட்டுக் குறிப்புகள், சமூக உறவுகள், திரைப்படங்களின் தாக்கம் எனப் பலவிதமான வாழ்க்கை சித்திரங்களையும் முன் வைக்கத் தவறவில்லை.

இக்கட்டான வாழ்வின் பல்வேறு தருணங்கள் சொற்களின் வழி  நம் முன் காட்சிப்படுத்தப்படுகின்றன.

கம்பத்து வாழ்வை மறக்காமல் துணிகளைத் துவைத்து அடுக்குமாடி வீட்டு குசுனிக்குள் காயப்போட்டுச் சிரமப்படுதல், நன்றாகப் பிழிந்து மூங்கில் கம்புகளில் துணிகளைக் காயப்போடவில்லையென்றால் கீழே இருப்பவர்கள் சண்டைக்கு வருதல், அடுத்தவர் வீட்டில் என்ன பேசுகிறார்கள் என்பதைத் தனது வீட்டிலிருந்து ஒட்டுக்கேட்டல், கம்பத்திலிருந்து வந்ததால் அடுக்கு மாடி வீட்டில் குடித்தனம் செய்யத் தெரியவில்லை என்று இழிவாக ஏசுதல், தொல்லை தரும் அண்டை வீட்டாரைச் சமாளிக்க முடியாமல் வேறு வீடு மாறிச் செல்லுதல், வீடு மாறி தங்களது பிளாக்கிற்குக் குடி வரும் குடும்பத்திற்குச் சாமான்களை ஏற்ற உதவுதல், அண்டை வீட்டார்களை விருந்துக்கு அழைத்து உபசரித்தல், சாளரம் வழியாகத் தன் வீட்டைப் பார்ப்பதாக எண்ணி எதிர் பிளாக்கில் வசிக்கும் பெண்மணி வீண் சண்டை போடுதலெனப் புதிய வாழ்விடச் சூழலில் மக்களின் வாழ்க்கைப்பாடுகளை விலாவாரியாகப் பி. கிருஷ்ணன் தனது நாடகங்களில் முன்வைக்கிறார்.   

அண்டை வீட்டாரைப் போல அதிக விலையுடைய பொருள்களைக் கொண்டு வீட்டை அலங்கரிக்க வேண்டுமென விரும்பி கடன் வாங்கிச் செலவு செய்யும் ஒரு சாராரைக் காட்டும் பி. கிருஷ்ணன் மறுபுறம் வருமானத்தின் குறிப்பிட்ட பகுதியை மாதம் தவறாமல் தபால் நிலைய சேமிப்புக் கணக்கில் சேமித்துச் சிக்கனமாக வாழ்வை நடத்தும் மக்களையும் காட்டுகிறார்.

மின்தூக்கி பழுதடைந்து தனியாகச் சிக்கிக்கொண்டதன் விளைவாக ஒவ்வொரு முறையும் மின்தூக்கியில் ஏற துணைக்குக் காத்திருப்பதும் யாரும் வரவில்லையென்றால் படிகளில் ஏறிவரும் முதியவரையும், நடத்துனர் இல்லாமல் புதிதாக அறிமுகம் காணும் பேருந்துகளில் பயணச்சீட்டு வழங்கும் இயந்திரத்திடம் சென்று ‘‘எனக்கு டிக்கெட் கொடு’’ என்று பேசும் நபரையும் காட்சிப்படுத்துவதன் வழியாகத் தொழில்நுட்பத்தால் ஏற்படும் துரிதமான மாற்றங்களுக்கு ஈடுகொடுக்க முடியாத ஒரு தலைமுறையின் உளவியலைச் சித்தரிக்கிறார். 

“ஒவ்வொன்றும் இருக்கவேண்டிய இடத்தில் இல்லாமல் இருக்கக் கூடாத இடத்தில் இருக்கின்றன, மேலே போவதெல்லாம் எப்போதாவது கீழே இறங்கித்தானே வரவேண்டும்’’ என மக்களின் பேச்சு வழக்கிலிருந்து இயல்பாக எழுந்து வரும் தத்துவத் தெறிப்புகள் இவரது நாடகங்கள் முழுவதும் விரவிக்கிடக்கின்றன.

மண்ணெண்ணெய் அடுப்புகளைக் கொண்டு சமைத்து அடுப்படியே கதி என்று கிடந்த பெண்கள், சமையல் வேலைகளில் ஒத்தாசை செய்ய பக்கத்து வீடுகளுக்குச் செல்லும் பெண்கள், ஒன்றாகக் கூடி தீபாவளி பலகாரங்கள் செய்யும் பெண்கள், புடவை வாங்குவதிலும் அதனைப் பற்றிப் பேசுவதிலும் மோகம் கொண்ட பெண்கள், ஒரே திரைப்படத்தைப் பலமுறை பார்த்துவிட்டு கதையை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் பெண், அடுத்தவர் வீட்டுச் செய்திகளை ஊர் முழுதும் சொல்லித் திரியும் பெண், சமையல் வேலையில் கணவனைப் பங்கெடுக்கச் சொல்லும் பெண், கணவன் சொல் மீறாத பெண், கணவனை எடுத்தெறிந்து பேசும் பெண், பிறந்த குழந்தையைக் குளிப்பாட்ட உதவும் அனுபவசாலியான பெண், கல்வி கொடுக்கப்படாமல்  இளம் வயதிலேயே திருமணம் செய்து கொடுக்கப்படும் பெண்கள், பெற்றோருக்குத் தெரியாமல் தனது காதலனை ரகசியமாகச் சந்திக்கும் பெண் என்று அக்காலக்கட்டத்துப் பெண்களின் உலகையும் நிலையையும் தெளிவாக எடுத்துரைக்கிறார்.

“நான் என்ன கேங்கா வைத்திருக்கிறேன் கிருதா வைத்துக் கொள்ள? எங்கேயாவது போய் நம்பர் திறந்தாயா?” போன்ற கேள்விகள் வழி அப்போது சமூகத்திலிருந்த குண்டர் குழுக்களை அறிந்து கொள்ள முடிகிறது. திருமணத்தில் மணமகன் வேட்டி அணியாமல் சிலுவார் போடுவது குறித்தும் பெண்கள் அணியும் நவீன ஆடைகள் குறித்தும் முந்தைய தலைமுறைக்கு இருக்கும் புகார்  பதிவாகி உள்ளது.

தொலைக்காட்சி வீட்டுச் சூழலை எவ்வாறு மாற்றுகிறது என்பதும் குறிப்பாக அது பெண்களிடம் ஏற்படுத்தும் தாக்கங்களும் காட்டப்பட்டுள்ளன. “வித்தியாசமான கதை, வித்தியாசமான நடிப்பு, வித்தியாசமான காட்சியமைப்பு, வித்தியாசமான ஆடையலங்காரமெனக் கிட்டத்தட்ட கடந்த எழுபத்தைந்து வருடங்களாக இதையே சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்’’ என்று திரைப்படங்களின் மீதான விமர்சனங்களும் இருக்கின்றன.

கல்வி அறிவு இல்லாத காரணத்தால் ஊரிலிருந்து உறவுகளை அழைத்து வர விவரம் தெரிந்தவர்களிடம் உதவி நாடும் ஆண்கள், உடம்பைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளப் பெருநடைப்போட்டிகளில் கலந்துகொள்ளும் ஆண்கள், வேலைக்குப் போகாமல் உடம்பு வளர்க்கும் ஆண்கள், பெற்றோருக்குப் பயப்படும் ஆண்கள், மனைவியின் அறியாமையைக் கிண்டலடிக்கும் ஆண்கள் என்று ஆண்களின் உலகத்தைக் காட்டவும் இவர் மறக்கவில்லை.    

அப்போது நடைமுறையிலிருந்த சில வித்தியாசமான பழக்க வழக்கங்கள் நாடகங்களின் பல பகுதிகளில் மீண்டும் மீண்டும் வருகின்றன. இங்கு நடக்கும் கல்யாணம், காதுகுத்து, பேர் சூட்டுதல் போன்ற நிகழ்வுகளுக்கு மொய் வைக்கும் ஊர்க்காரர்கள் ஊருக்குப் போய் அங்கேயே தங்கும் சூழ்நிலை ஏற்பட்டால் போட்ட மொய் வீணாகப்போய்விடுமென்ற காரணத்தால் ஊர் கிளம்பும் முன் ‘பெட்டிக்குச் சாம்பிராணி போடுதல்’ என்ற பழக்கத்தைக் கொண்டிருந்தார்கள். முறையான உரிமம் இல்லாமல் ‘கூட்டுப்பிடிப்பது’ (ஊரில் சீட்டுப் பிடிப்பது என்பார்கள்) வழக்கமாக இருந்துள்ளது. செலவுக்குக் காசு இல்லை எனும்போது குறிப்பாகப் பெண்கள் குலுக்குக் கூட்டுப்பிடிப்பதும் உபரிக்காசு கிடைக்கும் என்பதால் ஆண்கள் ஏல சீட்டுப்பிடிப்பதும் சகஜமாக இருந்துள்ளது. டவுனுக்குப் போகாமல் அருகாமை வீடுகளில் நடக்கும் பிளாஸ்டிக் சாமான் விற்பனையில்  சாமான்களை வாங்கிக்கொள்வதைப் பெண்கள் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு ‘மங்கு ஜாமான் பார்ட்டி’ அல்லது ‘பிளாஸ்டிக் பார்ட்டி’ என்று பெயர். பார்ட்டி வைக்கும் வீட்டின் உரிமையாளர்களுக்குக் கமிஷனாகப் பிளாஸ்டிக் பொருட்கள் இனாமாகக் கிடைத்துள்ளன. இப்படி வாழ்க்கை சார்ந்து எத்தனை, எத்தனையோ செய்திகளும் தகவல்களும் கொட்டிக் கிடக்கின்ற பெட்டகமாகப் பி. கிருஷ்ணனின் நாடகங்கள் இருக்கின்றன.       

1960, 1970களில் சிங்கப்பூர் மக்கள் பேசிய தமிழ், அவர்களின் வாழ்க்கை, அவர்களின் சிந்தனைப் போக்குகளையெல்லாம்  பி. கிருஷ்ணனின் நாடகங்கள் சித்திரிக்கின்றன என்பதற்கும் அப்பால் இந்த நாடகம் சிங்கப்பூர் தமிழ் வீடுகளில் பேசப்படும் கதைகளையும் பேச விரும்பும் கதைகளையும் பேசுகின்றன.

ஊரும் தொடர்பும்

குடியேறிகளின் தேசமான சிங்கப்பூருக்கும் தமிழ்நாட்டுக்குமிடையேயான பிணைப்பும் தொடர்பும் என்றென்றும் இருக்கக்கூடியவை. அக்காலக்கட்டத்தில் இங்கு வாழ்ந்த மக்கள் ஊரைப் பற்றிக் கொண்டிருந்த பிம்பம், ஊரிலிருந்து வேலைக்காக வந்தவர்கள் சிங்கப்பூரைப் பற்றிக் கொண்டிருந்த பிம்பமென்று இவர் காட்டக்கூடிய காட்சிகள் சுவாரஸ்யமானதாகவும் புனைவுக்கான சாத்தியமுடையதாகவும் இருக்கின்றன. 

தனது இறுதிக்காலமும் இறப்பும் ஊரில்தான் இருக்க வேண்டுமென முடிவெடுத்து ஊர் திரும்பியவர்களை இவரது நாடகத்தில் காணலாம். வாயைக்  கட்டி வயிற்றைக் கட்டித் தாங்கள் சம்பாதிக்கும் பணத்தை ஊரில் இருக்கின்ற உறவுகளை நம்பி மாசம் தவறாமல் அனுப்பிவிட்டு இறுதிக்காலத்தில் சொந்தங்களால் ஏமாற்றப்பட்டுப் பரம ஏழையாக இறந்து போகிறவர்களைப் பார்க்கலாம். தற்போது சிங்கப்பூர் குடியுரிமைக்கு இருக்கும் முக்கியத்துவம் போலல்லாமல் அக்காலக்கட்டத்தில் குடியுரிமையை ரத்துச் செய்து விட்டுப் போன மக்களும் இருந்திருக்கிறார்களென்பதை இவரது நாடகங்கள் காட்டுகின்றன.    

சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்த பெண்கள் ஊரிலிருக்கும் ஆண்களை மணம் முடித்துச் சென்ற பிறகு இங்கிருக்கும் வசதிகள் அங்கே கிடைக்காமல் போன ஆற்றாமையால் எரிச்சலடைந்து மீண்டும் சிங்கப்பூர்  வர விரும்புவதும், ஊரில் பிறந்து இங்கு வந்த பெண்கள் சிங்கப்பூரின் வசதி வாய்ப்பான வாழ்வின் மீது விருப்பம் கொண்டு ஊர் திரும்ப மறுப்பதும் இவரது நாடகங்களில் பதிவாகி உள்ளன. 

உணவுகளும் தொழில்களும்

இன்று மலேசியா, சிங்கப்பூரில் எழுதப்படும் புனைவுகளில் வைக்கப்படும் பிரதான விமர்சனம் அப்புனைவு அந்த நிலத்திலிருந்து வந்ததற்கான அறிகுறிகள் தென்படுவதில்லை என்பதுதான். இதற்கு விதிவிலக்காகப் பி. கிருஷ்ணனின் புனைவுகளைச் சொல்லலாம். இந்தப் பிரதேசத்திற்கென்றே உள்ள உணவுகளும் தொழில்களும் அடுக்கடுக்கடுக்காக அவர் நாடகங்களில் காணக்கிடைக்கின்றன.  ‘பூலோர்’, ‘ஊடான் சம்பல்’, காண்டா நண்டு, ‘கங்கோங் கீரை’, ‘ஆங்ஸா’, ‘கொய்தியாவ் மீ’, ‘மீ சியாம்’ என அவர் நாடகத்தில் காணக்கிடைக்கும் உணவுகள் அதிகம். அதுபோல சைவத்தைவிட மக்கள் அசைவத்தை அதிகம் விரும்புதல், காய்கறிகளின் விலை ஏற்றம் பற்றிய பெண்களின் புகார், தீபாவளி அன்று கம்பத்துக் கோழிகளை வளர்ப்பவர்களிடம் சொல்லிவைத்து வாங்குதல், பண்டிகை நாட்களில் முக்கிய மளிகை சாமான்கள் வாங்க சிராங்கத்துக்குச் செல்லுதல், மல்லி, மிளகாய் அரைக்கத் தேக்காவில் இருக்கும் அரைவையாலைக்குச் செல்லுதல் என உணவுடன் தொடர்புள்ள அக்கால வாழ்க்கை முறையையும் பதிவு செய்துள்ளார். அதுபோல தரகுத் தொழில், ஹார்பர் போர்டில் பணி, கேஸ் கம்பெனியில் வேலை, அள்ளூர் வெட்டுதல், கிளார்க் வேலை, கிராணி வேலை, பாய்லர் மெக்கானிக், பஸ் டிரைவர் என நடுத்தரவர்க்கத்துத் தமிழ் ஆண்கள் செய்த பல வேலைகளை இவரது நாடகங்களில் காணமுடிகிறது.  

இவையெல்லாம் ஒரு தகவலாக வராமல் அன்றைய மக்களின் மனநிலையையும் காட்டுவதாக நாடகத்தில் பல காட்சிகள் உள்ளன. குறைவான உடலுழைப்பும், குளிர்சாதன அறைக்குள் சொகுசாக அமர்ந்து செய்யக்கூடியதுமான வேலைகளை அதிகம் விரும்பியது, தகுந்த படிப்பு இல்லாதவர்கள் கூடத் தங்களது தகுதிக்கும் அனுபவத்துக்கும் மேலான வேலைகளுக்கு ஆசைப்பட்டது, ‘லொங்காங்’ வெட்டுதல், அள்ளூர் வெட்டுதல்  போன்ற வேலைகளைக் கீழாக நினைத்து முகம் சுழித்தது என அந்தக் காலக்கட்டத்து நடுத்தரவர்க்கத்து ஆண்களின் மனநிலையையும் இவரது நாடகங்கள் பிரதிபலிக்கின்றன.   

குற்றங்கள்

தற்போது சிங்கப்பூர் பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் முதல் பத்து இடங்களில் இருக்கிறது. ஆனால் சுதந்திரம் அடைந்த காலக்கட்டத்தில் நிலைமை வேறாக இருந்திருக்கிறது என்பதைப் பி. கிருஷ்ணனின் நாடகங்கள் நமக்குக் காட்டுகின்றன.

பெரிய டோப்பா முடி செய்து அந்த டோப்பாவுக்குள் நகைகளை ஒளித்துவைத்து ஊருக்கு எடுத்துச் செல்லுதல் (கமிஷனுக்கு ஆசைப்பட்டு மாட்டிக்கொள்ளும் பெண் குருவி), பசாருக்கு செல்லும் பெண்மணியின் கழுத்திலிருந்து தங்கச் சங்கிலியை அறுத்துக்கொண்டு ஓடுதல், திரைப்படம் பார்க்க பிளேக் மார்க்கெட்டில் டிக்கெட் வாங்கி மாட்டிக்கொள்ளுதல், இன்ஷூரன்ஸ் புடிக்கிறவர்கள், சேல்ஸ் மேன்கள் எனச் சொல்லிக்கொண்டு வந்து நன்றாக நோட்டம் பார்த்துவிட்டுப் போய் பிறகு வந்து வீட்டைக் கொள்ளையடித்தல் எனக் குற்றங்கள் மலிந்திருந்த அக்காலச்சூழல் இவரது நாடகங்களில் பதிவாகியுள்ளன. “அப்ப இவங்களுக்குப் பயந்துகிட்டுக் கதவுகளை எப்பவும் மூடியே வச்சிருக்கணும் போலிருக்கு’’ என்ற உரையாடல் இன்றும் அடுக்குமாடி வீடுகளின் கதவுகள் மூடப்பட்டிருப்பதற்கு மக்கள் மனதில் ஏற்பட்ட அச்ச உணர்வின் தொடர்ச்சியைச் சுட்டிக் காட்டுகிறது,    

முடிவுரை 

இன்றைய இலக்கிய அளவுகோல்களின் படி பி. கிருஷ்ணனின் நகைச்சுவை நாடகங்களுக்கு எத்தனை விமர்சனம் எழுந்தாலும், இவரது நகைச்சுவைப் படைப்புகளின் மொழியும் சிந்தனையும் பதிவுகளும் உள்ளத்திலிருந்து சிங்கப்பூரின் ஒரு காலக்கட்டத்தைப் படம்பிடித்துக் காட்டுபவை. அதனால் உள்நுழைந்துவிடும் எக்காலத்து வாசகனையும் தன்னுள் வைத்திருக்கக் கூடியவை.

‘Stop trying to write jokes. Live your life and material will come’

பி. கிருஷ்ணன் இதைத்தான் செய்திருக்கிறார். ‘நகைச்சுவை நாடகங்கள்’ என்ற பெயரில் வெறும் நகைச்சுவைத் துணுக்குகளைச் சேகரித்து, ஒட்டவைக்காமல் தனது வாழ்க்கையிலிருந்தும் சமூகத்திடமிருந்தும் நாடகங்களுக்கான கச்சாப் பொருட்களை எடுத்துக் கொண்டிருக்கிறார். நகைச்சுவையை மட்டும் பிரதானப்படுத்தி எழுதியிருந்தால் இன்றைய காலக்கட்டத்தில் அந்த நகைச்சுவை தேய்மானம் அடைந்து பொருத்தமற்றுப் போகக்கூடிய வாய்ப்புகளை அமைத்திருக்கும்.

ஆனால் சிங்கப்பூரின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காலக்கட்டத்தில் வாழ்ந்த  தமிழ்ச் சமூகத்தின் பொருளாதார, பண்பாட்டு அம்சங்களை அங்கதம், எள்ளல், பகடி ஆகியவற்றோடு கலந்து மக்களின் புழங்கு மொழியில் தந்திருப்பதால் இவரது ‘நகைச்சுவை நாடகங்கள்’ சிங்கப்பூர் வரலாற்றிலும் இலக்கியத்திலும் மிக முக்கியச் சமூக ஆவணங்களாகத் திகழ்கின்றன. 1960களிலும் 1970களிலும் நமது முன்னோர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை இவரது நாடகங்களை வாசிப்பதன் வழி இளைய தலைமுறை நிச்சயமாக அறிந்துகொள்ள இயலும்.  எதிர்கால தலைமுறைக்கு இவரது நகைச்சுவை நாடகங்கள் காலப் பதிவுகளாக விளங்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

மலேசியா, சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் சிங்கப்பூர்  வானொலி பெரும் பங்கு வகிக்கிறது என்றால், அதில் ஒரு பங்கு புதுமைதாசனுக்குரியது. உருவக்கேலியும் உரத்த பேச்சும் அடுக்கு வார்த்தைகளுமே தமிழ் நகைச்சுவை என்றாகிவிட்ட நிலையில்,  இதற்கும் அப்பால்  சமூக விமர்சனங்களையும் அறிவார்ந்த ஆழமான பேச்சுகளையும் நகைச்சுவையாக முன்வைக்க முடியும் என்பதை எழுதிக்காட்டியவர் புதுமைதாசன்.

சிங்கப்பூர் தமிழ் படைப்பிலக்கிய வரலாற்றில் தனியிடம் பெறுபவைப் புதுமைதாசனின் நகைச்சுவை நாடகங்கள். சிங்கப்பூர் தமிழ் வாழ்வின் தனி அடையாளத்தை வளர்த்தெடுக்க, இந்நாட்டின் தமிழ்ச் சமூகவியல் வரலாற்றின் முக்கிய அத்தியாயங்களாக இந்நாடகங்கள் மீண்டும், மீண்டும் பேசப்பட வேண்டியதன் தேவை உள்ளது.

துணை நின்ற நூல்களும் இணையதளங்களும் 

கிருஷ்ணன், பி. (2012). இலக்கியப் படைப்புகள் ஓர் ஆய்வு. தேசிய நூலக வாரியம்.

சண்முகம், ரெ. (1997). இந்த மேடையில் சில நாடகங்கள். தாமான் சிலாசே: முகில் எண்டர்பிரைசஸ்.

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம். (2011). சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய வரலாறு ஓர்  அறிமுகம்.

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம். (2015). சிங்கப்பூர்ப் பொன்விழாக் கருத்தரங்கு (50 ஆண்டுகாலச் சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியத்தின் நோக்கும் போக்கும்).

பால பாஸ்கரன். (2018).சிங்கப்பூர் மலேசியா தமிழ் இலக்கியத் தடம் சில திருப்பம். சுய பதிப்பு.

புதுமைதாசன். (2000). அடுக்கு வீட்டு அண்ணாசாமி. கணியன் பதிப்பகம்.

புதுமைதாசன். (2014). நல்ல வீடு. சிங்கப்பூர்: கிரிம்சன் ஏர்த் பதிப்பகம்.

புதுமைதாசன். (2014). ஐடியா ஐயாக்கண்ணு. சிங்கப்பூர்: கிரிம்சன் ஏர்த் பதிப்பகம்.

புதுமைதாசன். (2014). ஸ்கூட்டரோ ஸ்கூட்டர்! .சிங்கப்பூர்: கிரிம்சன் ஏர்த் பதிப்பகம்.

புதுமைதாசன். (2015). கதாகாலட்சேபம். சிங்கப்பூர்: கிரிம்சன் ஏர்த் பதிப்பகம்.

புதுமைதாசன். தரகர் தணிகாசலம் (கையெழுத்துப் பிரதி).

நவீன், ம. (2018). மீண்டு நிலைத்த நிழல்கள் (நேர்காணல்கள்). மலேசியா: வல்லினம் பதிப்பகம்.

வரதன், ச., & ஹமிட், சா. (2008). சிங்கப்பூர் தமிழ் நாடக வரலாறு 1935 – 2007. சிங்கப்பூர்: இந்திய கலைஞர் சங்கம்.

வேணுகோபால், த. (1991). சிங்கப்பூரில் நாடகக் கலை (ஆய்வேடு). சிங்கப்பூர்: இலங்கை  மூன்றாம் அஞ்சி கல்லூரி.

A Singapore Government Agency Website. Singapore Infopedia. https://eresources.nlb.gov.sg/infopedia.

National Museum Of Singapore. Investigating History: Singapore’S FirstDecade.ActivitySheet_Teachers-HI-Resource-Unit-4-Post-Independence.pdf (nhb.gov.sg).

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...