பி. கிருஷ்ணன்: எல்லையைக் கடக்கும் கடல் பறவை

1

தமிழகத்தில் நாடகம் என்பது நவீன கலை மட்டுமல்ல. இங்கே குறைந்தது இருபது நாடக வகைகளுக்கு மேல் உள்ளன அல்லது நாடகத்தை போல் அமைப்புக் கொண்ட நிகழ்த்துக் கலைகள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டங்களும் அதற்கான தனி நாடக வகைமை/அமைப்புக் கொண்டிருப்பதைக் கரகாட்டத்தின் துணைக்கலைகள் வழி காணலாம். கரகாட்டத்தின் உட்பிரிவுகளான ராஜா ராணி ஆட்டம், கப்பல் பாட்டு, குறவன் குறத்தி ஆட்டம் என ஐம்பதிற்கும் மேல் துணையாட்டங்கள் தமிழகத்தின் வெவ்வேறு மாவட்டங்களில் நிகழ்த்தப்பட்டன. அவற்றில் பல இன்று வழக்கில் இல்லை. ஒவ்வொரு கலையும் அதற்கான தனி அழகியல் கொண்டது. அதே நேரம் ஒரு பொதுத் தன்மை இருப்பதையும் காணலாம்.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழகத்தில் மரபான நாடகங்கள் வழக்கொழிந்து வந்த காலங்களில் அதனை மீட்டெடுக்க ‘ஸ்பெஷல் நாடகம்’ தோன்றின. சங்கரதாஸ் சுவாமிகள் குழு, ஆலந்தூர் இந்து டிராமா கம்பெனி, ஆரியகான சபா எனக் குழுக்கள் சேர்ந்து ‘ஸ்பெஷல் நாடகம்’ நிகழ்த்தினர். அதில் மரபாக அமைந்த தெருக்கூத்து, நாடகம் போன்றவற்றை மீட்கும் பணியில் புது வகை நாடகங்களை அரங்கேற்றினர். இது தமிழகத்தில் பெரும் வரவேற்புப் பெற்றுச் செல்வாக்குடன் இருந்த கலை. மேலும் இந்தியாவை ஆட்சி செய்ய வந்த போர்ச்சுகீசியர்களாலும் ஆங்கிலேயர்களாலும் சில நாடக வகைகள் தமிழக நிகழ்த்துக் கலையில் இணைந்தன. உதாரணமாக வாசாப்பு நாடகம். வாசாப்பு நாடகம் தமிழகத்தின் வடமாவட்டங்களில் உள்ள கிறிஸ்துவ ஆலயங்களில் மட்டும் நிகழ்வது. வாசகம் + பா – வாசகமும் பாடலும் ஆன கலை. விவிலியத்தில் உள்ள வாசகங்களைப் பாடலாகப் பாடி நடித்துக் காட்டும் கலை இது. ஐநூறு ஆண்டுகளுக்கு முன் போர்ச்சுகீசியர்களால் தமிழகத்திற்குக் கொண்டுவரப்பட்டது.

பதினாறாம், பதினேழாம் நூற்றாண்டுகளில் கீர்த்தனைகளை நாடகமாக்குவது, நொண்டி நாடகம் எனப் பல நாடக வகைகள் தமிழ்நாட்டில் தோன்றியிருக்கின்றன. திருக்குறுங்குடி கோவிலில் மட்டுமே நிகழ்த்தப்படும் கைசிக புராண நாடகம் என ஒரு தனி வகை சடங்கு, கலையாக இன்றும் வழக்கில் உள்ளது.

பொதுப் பார்வையாளர்களின் ரசனைக்காகவும் அவர்களின் பொழுதுபோக்கிற்காகவும் தொடர்ந்து பல வகை நிகழ்த்துக் கலைகள், நாடகங்கள் தமிழகத்தில் நிகழ்ந்துள்ளன. அவை காலத்திற்கு ஏற்ப பரிணமித்தும் வந்திருக்கின்றன. காலத்தின் தேவைக்கேற்ப மாற்றம் கொள்ளாத கலைகள் அழிந்திருக்கின்றன. குறிப்பாக நான் மேலே சொன்ன கரகாட்டத்தின் பல துணைக் கலைகள் இன்று வழக்கில் இல்லை. இவ்வாறு நம் நாடகக்கலை தனி பாரம்பரியமும் நிகழ்த்தும் முறையும் கொண்டது.

மேலே சொன்ன நிகழ்த்துக் கலைகளின் நவீன வடிவமாகவே நாடகங்கள் தமிழகத்தில் தோன்றின. மேலும் அவற்றுக்கான கதைக்கருவைத் தெருக்கூத்து மற்றும் பல நிகழ்த்துக் கலைகளில் இருந்து எடுத்துக் கொண்டன. தமிழ்நாட்டில் நாடகத்தின் செல்வாக்கு 1930, 40களில் தொடங்கி 70, 80 வரை உச்சத்தில் நீடித்தன.

ஆரம்பக்கால நாடகங்களில் பக்தியின் தாக்கம் அதிகம் இருந்தது. திருவிளையாடல் போன்ற புராண நாடகங்களும், திரைப்படமும் சிறந்த உதாரணம். நீதிக் கதைகள் நாடகமாக்கப்படுவதும் தமிழக வழக்கமாக இருந்துள்ளன. காலத்தின் தேவைக்கு ஏற்ப நாடகத்தின் கதைக்கரு சார்ந்த மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. உதாரணமாகத் தேசிய விடுதலை காலக்கட்டத்தில் தேசப்பற்றுச் சார்ந்த நாடகங்கள் அரங்கேறத் தொடங்கின. அதே போல் 1950, 60களில் நாடகங்களில் மரபார்ந்த நீதிக் கதைகள், பக்தி கதைகள் செல்வாக்கு இழக்கத் தொடங்கிய போது, தேசிய விடுதலைக்குப் பின் தேசப்பற்று நாடகங்களும் பொருள் இழக்கத் தொடங்கின. அக்காலக்கட்ட நாடகங்களில்  மாற்றத்திற்கான தேவை இன்றியமையாததாகின. அவை இரண்டு வகையில் நிகழ்ந்துள்ளன. ஒன்று சமூகப் பிரச்சினைகள் அல்லது சமூக அவலங்களைக் கதைக்கருக்களாகக் கொண்ட நாடகங்கள் அரங்கேறத் தொடங்கின. இவை மன்னர் காலத்து அல்லது தெய்வ லோகத்தைக் களமாகக் கொண்டு நிகழ்ந்த கற்பனாவாத நாடக தன்மையிலிருந்து மாறி யதார்த்த அழகியலில் அமைந்த நாடகங்களாயின. ஆனால், ஒரு சமூகத்திற்கு முற்றிலும் யதார்த்த பாணி நாடகங்கள் மட்டும் போதாமல் ஆனது. அதன் காரணமாக அதன் மறு எல்லையில் துப்பறியும் நாடகங்களும் திகில் நாடகங்களும் அரங்கேறியதே இரண்டாம் நிகழ்வு. அவற்றின் பிரதிபலிப்பு வெகுஜன இலக்கியங்களிலும் சினிமாக்களிலும் பரவியது.

பொழுதுபோக்கு இலக்கியங்களிலும் துப்பறியும் மர்மக் கதைகள் எழுதப்பட்டன. இந்த வகைமையில் 1980களில் ராஜேஷ்குமாரின் ‘பாக்கெட் நாவல்கள்’ புதிய சாத்தியத்தை உருவாக்கின. சினிமாக்களில் ‘சி.ஐ.டி சங்கர்’, ‘வல்லவனுக்கு வல்லவன்’, ‘வல்லவன் ஒருவன்’ போன்ற படங்கள் வரத் தொடங்கின. ஜெயசங்கர் துப்பறியும் படங்களின் பிதாமகனாகத் தமிழ் சினிமாவில் வலம் வந்தார். இந்த இரண்டாம் வகை நாடகங்களில் இருந்து பி. கிருஷ்ணனின் வானொலி நாடகங்கள் எழுகின்றன.

2

பி. கிருஷ்ணன் போன்ற தமிழின் முக்கியமான படைப்பாளிகளில் ஒருவர் வாசக சுவாரசியத்துக்காக மட்டுமே துப்பறியும் நாடகங்கள் எழுதுவதை அவரது ஒட்டுமொத்த பங்களிப்பில் வைத்தே மதிப்பிட வேண்டியுள்ளது. அவர் தன் நேர்காணல்களில் கூறுவது போல நகைச்சுவை நாடகங்கள், சமூக நாடகங்கள் போலவே அவரது துப்பறியும் நாடகங்களும் முழுக்க முழுக்க வானொலிக்காகவும், பொழுதுபோக்கு அம்சத்துக்காகவும் எழுதப்பட்டவை. இதனைப் பி. கிருஷ்ணன் தன் முன்னுரையிலும் குறிப்பிடுகிறார். அதன் வழி துப்பறியும் நாடகங்கள் எழுதுவதை அவர் வானொலி நிலையத்தார் கேட்டுக் கொண்டதற்கு இணங்கவே எழுத ஒப்புக் கொண்டார் எனப் புரிகிறது.

பி. கிருஷ்ணனின் முன்னுரையில் இருந்து சிங்கப்பூரில் சமூக நாடகங்களும் நகைச்சுவை நாடகங்களும் அரங்கேறிய காலங்களில், (சமூக நாடகங்கள் மிகுதியான விளம்பர செலவுடனே அரங்கேற்றப்பட்டிருக்கின்றன) 1960களில் துப்பறியும் நாடகங்கள் ஒரு புதிய போக்காக நாடகங்களுள் ஊடுருவியிருக்கின்றன என்பதை அறிய முடிகிறது.

சிங்கப்பூரில் 1960களில் வானொலியில் தொடர் நாடகங்கள் அரங்கேற்றப்பட்டன. அதன் பகுதியாகத்தான் பி. கிருஷ்ணனும் துப்பறியும் நாடகங்கள் எழுதத் தொடங்கினார். பி. கிருஷ்ணன் எழுதிய ஒவ்வொரு துப்பறியும் நாடகமும் ஏழு வாரம் சிங்கப்பூர் வானொலியின் இந்தியப் பகுதியில் வெளிவந்தன. ஏழு வாரம் தொடர்ந்து மக்கள் திரளைக் கட்டிவைக்கும் பொறுப்புப் பி. கிருஷ்ணனுக்குக் கட்டாயமாக்கப்பட்டக் காரணத்தினால் அதில் சுவாரஸ்யம் என்கிற அம்சம் இன்றியமையாததாக ஆனது.

எனவே 60களில் துப்பறியும் நாடகங்களுக்கு எனத் தனி இலக்கணம் உருவாக்கியிருக்கின்றன. பொது ரசனை சார்ந்த எதிர்ப்பார்ப்பும் தேவையும் கருத்தில் கொள்ளப்பட்டு அவை உருவாக்கப்பட்டிருக்கின்றன. பி. கிருஷ்ணனின் நாடகங்களும் இந்த வகையில் அமைந்த ஒன்றே.

நான் வெகுஜன இலக்கியங்களை வாசித்த பின்னரே நவீன இலக்கியத்துள் நுழைந்தேன். எனவே அதன் எல்லைகளையும் என்னால் வகுத்துச் சொல்ல முடியும். ஒரு துப்பறியும் வணிக நாவலின் இலக்கணம் என்ன? கொலையாளியை இறுதியில் கண்டடைவது. அந்த இறுதி எல்லை வரை சுவாரஸ்யம் குறையாமல் வாசகனை ஈர்த்துச் செல்ல வேண்டும். அதனைப் பி. கிருஷ்ணனின் நாடகங்கள் திறம்படச் செய்கின்றன. ஆனால், உலகில் எழுதப்பட்ட ‘செர்லாக் ஹோம்ஸ்’ போன்ற சிறந்த துப்பறியும் நாடகங்களோடு ஒப்பிடும்போது பி. கிருஷ்ணனின் துப்பறியும் நாடகங்கள் வணிகமாக்கப்பட்டவை. இப்படி ஒரு பகுப்பை உலக இலக்கியவாதிகளின் யாருடைய ஒட்டுமொத்த படைப்புகளையும் ஆராயும்போது தரவரிசையில் நிறுத்துப்பார்க்கும் வாய்ப்புகள் அதிகம். அவற்றையும் உள்ளடக்கியதே ஒரு படைப்பாளியின் ஆளுமை.

எனவே, புறத்தேவையால் உருவாகி வந்த இந்தத் துப்பறியும் நாடகங்களைப் பி. கிருஷ்ணன் ஆளுமையின் ஒரு சிறிய பகுதியை அறிவதற்காகவே வாசித்தேன். வணிக இலக்கியங்களைத் தொய்ந்து படிக்கும் மனநிலை சமீபத்தில் வாய்க்காவிட்டாலும் பி. கிருஷ்ணனின் நாடகங்களை முழுத் தீவிரத்துடன் படிக்க மனதில் உருவாகியிருக்கும் அவர் ஆளுமையே காரணமாக இருந்தது. தொண்ணூற்றியொரு வயதிலும் இடையறாது இயங்கும் அவரின் தீவிரமே அரூபமாக நூல் முழுவதும் கவிந்திருந்து வாசிக்கச் செய்தது.

இக்கட்டுரைக்காகப் பி. கிருஷ்ணனின் ‘எதிர்நீச்சல்’, ‘இரட்டை மனிதன்’, ‘மர்ம மனிதன்’ என மூன்று நாடகங்களை வாசித்தேன். அவை முழுக்க முழுக்க சுவாரஸ்யத்திற்காகத் துப்பறியும் பாணியில் எழுதப்பட்டவை. பொது வாசிப்பனுபவத்திற்கானவை. பொது ரசிகனின் தேவையும் அறிவு தரமும் கருத்தில் கொண்டு எழுதப்பட்டவை. ஆனால், அவற்றிலிருந்து பி. கிருஷ்ணன் போன்ற படைப்பாளி மேலதிகமாகச் செய்தவை என்ன என்பதே இக்கட்டுரையின் உரையாடலுக்கான பொருள்.

3

பி. கிருஷ்ணனின் துப்பறியும் நாடகங்களின் கட்டமைப்பு, நான் என் கல்லூரி காலங்களில் வாசித்த அகதா கிரிஸ்டியின் நாவல்களை நினைவுப்படுத்துபவை. பி. கிருஷ்ணனின் துப்பறியும் நாடகமும் இவ்வகை பாணியைக் கொண்டிருக்கின்றன.

துப்பறியும் நாடக எழுத்து முறையின் பிரதான அம்சம் என்பது சுவாரஸ்யம்தான். தமிழில் வெகுஜன இலக்கியம் தன் பாணியாகத் துப்பறியும் நாவல்களைச் சென்ற நூற்றாண்டில் கையில் எடுத்தது. அதன் விளைவாகச் சுவாரஸ்யமும் அதன் ஒரு பகுதியாக ஆனது. சுஜாதா, சுப்ரஜா, சுபா முதல் ராஜேஷ்குமார் வரை எல்லோரும் சுவாரஸ்யமும், வெகுஜன ஏற்புமே தங்கள் எழுத்துகளில் பிரதானமாகக் கையாண்டனர்.

இவர்களில் பி. கிருஷ்ணனின் துப்பறியும் நாடகங்கள் இரண்டு காரணங்களால் கவனம் கொள்ளத்தக்கது. ஒன்று சிங்கப்பூரின் அன்றைய சமூகச் சித்திரத்தைப் பற்றிய பார்வை. குறிப்பாக ஜப்பானியரின் வருகைக்குப் பின்பான சிங்கப்பூரின் சித்திரம். போருக்குப் பின்பாக ஒரு நாடு தன்னை எவ்வகையில் செயலிழந்த நாடாக மாற்றுகிறது, அதிலிருந்து எவ்வண்ணம் மீட்டெழ முயற்சிக்கிறது என்ற கோணம் இந்நூல்களில் கிடைக்கிறது.

பி. கிருஷ்ணன் எழுதிய ‘இரட்டை மனிதன்’ நாடகத்தின் மைய கதாபாத்திரங்களான மகேந்திரன், மாலா இருவரின் படிப்பும் ஜப்பானியர்களின் வருகையாலும் போரினாலும் தடைப்படுகிறது. மாலா அதிலிருந்து மீண்டெழுந்து தன் படிப்பை மீண்டும் தொடர முயற்சிக்கிறாள். மகேந்திரன் படிப்புத் தடையால் அங்குள்ள ‘கேங்களில்’(சிங்கப்பூரில் உள்ள கடத்தல், கொலைக்கான குழு) சேர்கிறான். சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் இந்த ‘கேங்’ போக்கு அந்தக் காலக்கட்டத்தில்தான் உருவாகி வந்திருக்க வேண்டும். அதே போல் ‘கேங்களில்’ பயிற்சி எடுத்து வந்த கோதண்டம் செய்யும் கொலை, கொள்ளை சம்பவங்களின் வழி அக்காலச் சிங்கப்பூர் பற்றிய சமூக யதார்த்தத்தை அறிய முடிகிறது.

இரண்டாவது, பி. கிருஷ்ணன் போன்ற ஒரு தீவிர இலக்கியவாதி வெகுசன இலக்கியத்தைக் கையில் எடுக்கும்போது அதற்குள் ஊடுருவிச்செல்லும் மொழி ஆளுமையைச் சொல்லலாம். ஒரு துப்பறியும் நாவலில் துருத்திக் கொண்டு இல்லாமல் இதிகாசங்கள், சங்க இலக்கியம், சங்க மருவிய கால இலக்கியம், நவீன இலக்கியம் என அவற்றைப் பற்றிய கருத்துகளைப் பொது வாசகனுக்கு அளிக்கும் பங்களிப்பு முக்கியமானது. தமிழில் இன்று கிடைக்கும் வணிக இலக்கியங்கள் கொண்டுள்ள இயந்திரத்தனமான அமைப்பிலிருந்து இது மாறுபட்டது. உதாரணமாக ‘எதிர்நீச்சல்’ நாடகத்தில் வரும் போலீஸ் திருவாசகம், திருக்குறள் மூலமாகக் குற்றமும் நன்னடத்தையும் சார்ந்த கருத்துகளைக் குற்றவாளியாக இருந்து சிறையிலிருந்து வந்த கோதண்டத்திடம் பேசுகிறார். கல்கியின் ‘சிவகாமியின் சபதம்’ நாவல் கதையின் மூலம் இரட்டை மனிதனில் வரும் மகேந்திரனிடம் போலிஸ் சிங்கப்பூரில் நடக்கும் கதையைச் சொல்கிறார். அவர் நாடகத்தில் கோதண்டம் என்ற கதாபாத்திரம் இலக்கிய மஞ்சரி, முத்தொள்ளாயிரம், கலித்தொகை என வாசிக்கிறான். பாவாணர் நூல்களைப் படிப்பவராக அதில் வரும் போலிஸ் இருக்கிறார்.

பி. கிருஷ்ணன் தீவிரமான வாசிப்புப் பின்புலம் கொண்டவர். புதுமைப்பித்தனைத் தனது ஆதர்சமாகக் கருதுபவர். டால்ஸ்டாய், செகாவ், துர்கனேவ், மாப்பஸான், விக்டர் ஹூகோ, எட்கர் ஆலன் போ போன்ற உலக இலக்கியவாதிகளைத் தன் இளமை காலத்தில் வாசித்தவர். அவர்கள் சிறுகதைகளை நாடகங்களாக்கியவர். தான் ஏற்றுக்கொண்ட வானொலி தொழில் சார்ந்து  கையில் எடுத்திருந்த மர்ம நாடகங்களை அவர் கையாண்டுள்ள விதம் சுவாரசியமானது. ஒருவகையில் அது பலவீனங்களையும் உள்ளடக்கிய சுவாரசியம் எனலாம்.

நான் வாசித்த மூன்று நாடகங்களில் என்னை மிகவும் ஈர்த்தது ‘மர்ம மனிதன்’ நாடகம். இதில் வரும் ராமநாதன் இன்சூரன்ஸ் கம்பெனியின் முதலாளியாக வருகிறார். நாகராஜன், சங்கர், விமலா மூவரும் அவருக்குக் கீழே வேலை செய்பவர்களாக வருகின்றனர். அகல்யா என்றொரு பெண் சாமிநாதனைத் தேடி அந்த இன்சூரன்ஸ் கம்பெனிக்கு வருகிறாள். ஆனால், அங்கே சாமிநாதன் என்ற பெயரில் யாரும் வேலை செய்யவில்லை. சங்கருக்கு அகல்யாவை முன்பே தெரிந்திருக்கிறது.

அங்கே வந்து சென்ற மறுநாள் அகல்யா ரயிலில் கொலை செய்யப்பட்டுக் கிடக்கிறாள். நாடகம் அங்கிருந்து விரிகிறது. கொலையாளியைக் கண்டுபிடிக்கும் பொறுப்பைப் போலிஸ் இன்ஸ்பெக்டர் அருணகிரியும் மைக்கிலும் ஏற்கின்றனர். அருணகிரி, மைக்கிலின் சந்தேகம் ரயிலில் அகல்யாவைப் பிணமாக முதலில் பார்த்த வேணுகோபாலிடம் இருந்து தொடங்குகிறது. அங்கிருந்து இன்சூரன்ஸ் கம்பெனியில் வேலை செய்யும் சங்கர், விமலா, நாகராஜன் என அதன் முதலாளி ராமநாதன் வரை நீள்கிறது. நாடகத்தின் செல் திசையில் வாசகனுக்குச் சந்தேகம் ஒவ்வொருவரின் பேரிலும் விரிகிறது. நாடகத்தின் இறுதியில் உண்மையான குற்றவாளி கண்டறியப்படுகிறான்.

ஏறத்தாழ இதே கதை கட்டமைப்பைக் கொண்டதுதான் ‘எதிர்நீச்சல்’ நாடகமும் ‘இரட்டை மனிதன்’ நாடகமும். எனக்கு இந்நாடகங்களை வாசிக்கும்போது அகதா கிரிஸ்டியின் நாவல்கள் மனதில் எழக் காரணம் இது தான். அகதா கிரிஸ்டி தன் கதை சூழலையும் மாந்தர்களையும் முன்னரே அறிமுகம் செய்து விடுவார். திடீர் திருப்பங்களோ, சட்டென வரும் புது முகங்களோ, மாயமோ அவர் கதைகளில் இருக்காது. சார் ஆர்தர் கனோன் டோயல் போல் தீவிர அறிவியலோ, துப்பறியும் சாகசங்களோ இருக்காது. இது ஒரு வகையில் பிரபலமான பாணி தான். தமிழில் இதனைத் திறமையாகச் செய்தவர் சுஜாதா. சுஜாதாவின் கணேஷ், வசந்த் இத்தகைய கதாபாத்திரங்கள். அவர்கள் இருவரும் சாமானிய தளத்தில் நின்றே குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கின்றனர். பி. கிருஷ்ணனின் நாடகங்களில் வரும் போலிஸ் கதாபாத்திரங்களுள் சுஜாதாவின் கணேஷ், வசந்த் பாத்திரம் இருப்பதைக் காணலாம் (பி. கிருஷ்ணன் நாடகங்கள் சுஜாதா நாவல்களைவிட காலத்தால் முந்தையவை).

பி. கிருஷ்ணனின் நாடகங்கள் ஏழு வாரம் ஒரு வாசகனை அல்லது பார்வையாளனைக் கட்டிவைத்திருக்கும் அம்சம் எது? நான் அகதா கிரிஸ்டியை இங்கே குறிப்பிடக் காரணமும் அது தான். அகதா கிரிஸ்டி கிட்டத்தட்ட எழுபது நாவல்கள் எழுதியுள்ளார். அவை அனைத்தும் ஒரே பாணியைச் சார்ந்ததே. ஆனால் அந்நாவலை நாம் விடாமல் படிக்க ஒரே காரணம் கொலையாளி யார்? என்ற ஒரே சுவாரஸ்யத்திற்காகத்தான். கதை மாந்தர்களை முன்னரே அறிமுகம் செய்து விடுவது துப்பறியும் நாடகங்களின் ஒரு யுக்தியும்கூட. அவர்களில் யார் என வாசகன் மனதில் சண்டை எழுந்து கொண்டே இருக்கும். அந்தச் சண்டையினூடே எழுத்தாளன் நுழைந்து புதிய முடிவினைக் கொடுப்பான். அது மர்ம நூல் வாசகனுக்குக் கொடுக்கும் கிளர்ச்சியே ஒரு தொடரைப் பின் தொடர வைக்கிறது.

பி. கிருஷ்ணனின் ‘எதிர்நீச்சல்’ நாடகம் ஆறாவது வாரம் நடக்கும்போது ஒரு போட்டி அறிவிக்கப்படுகிறது. அதில் கொலையாளி யார் எனச் சரியாகச் சொல்ல வேண்டும். சுஜாதா நாவல்கள் தொடராக வந்தபோது இதே போல் போட்டி நடைபெற்றது. கடிதத்தில் கொலையாளி யார் என அனுப்ப வேண்டும். எனவே உலகம் முழுக்க துப்பறியும் நாடகங்களுக்கு இதே இலக்கணம்தான். அதனைத் திறம்பட கையாண்டவர்களே சிறந்த ஆசிரியர்கள். சுஜாதா அதனைத் திறம்பட செய்தார். அகதா கிரிஸ்டி செய்தார். பி. கிருஷ்ணனும் இம்மூன்று நாடகங்களில் அச்சவாலைத் திறம்பட கையாண்டிருக்கிறார் என்றே தோன்றுகிறது.

மேலே பார்த்த பி. கிருஷ்ணனின் மூன்று நாடகங்களில் வரும் பெண்களிடையே பொதுவான ஒரு அம்சத்தைக் காண முடிகிறது. அவர்கள் விவரம் அறியாத வெகுளி பெண்களாகவே வருகின்றனர். ‘மர்ம மனிதன்’ நாடகத்தில் விமலா, ‘இரட்டை மனிதன்’ நாடகத்தில் மாலா, ‘எதிர்நீச்சல்’ நாடகத்தில் சம்பந்தத்தின் மனைவி நளினி, குலசேகரனின் மனைவி வேணி என எல்லோரும் எதுவும் அறியாத அபலைப் பெண்களாக இருக்கின்றனர். அந்தக் கதாபாத்திரங்கள் அன்று வாசகர்களைக் கவர்ந்திருக்கக்கூடும். ‘மர்ம மனிதன்’ நாடகத்தில் சங்கரைப் போலிஸ் தேடிக் கொண்டிருக்கும்போது விமலாவிடம் வந்து தான் கொலையாளி இல்லை எனச் சொல்கிறான். விமலா அதனை நம்புகிறாள். கொலை செய்யப்பட்ட அகல்யா அதற்கு முன் ராமநாதனின் இன்சூரன்ஸ் கம்பெனிக்கு வந்து விமலாவைச் சந்திக்கிறாள். “அங்கே சாமிநாதன் என யாரும் வேலை செய்கிறார்களா?” என வினவுகிறாள். விமலா அச்செய்தியைச் சங்கர், நாகராஜன், ராமநாதன் முதல் போலிஸ் வரை எல்லோருக்கும் செய்தியைக் கடத்தும் ஊடகமாகவே வருகிறாள்.

‘எதிர்நீச்சல்’ நாடகத்தில் வரும் சம்பந்தத்தின் மனைவி நளினிக்குக் குலசேகரன் நன்கு அறிமுகமானவன். அவன் அலோர் ஸ்டாரில் ஒரு பெண்ணைத் திருமணம் செய்கிறேன் என ஏமாற்றியது நளினிக்குத் தெரியும். ஆனால், அவளால் அதனைத் தன் கணவனிடம் சொல்ல முடியவில்லை. மாறாகக் குலசேகரன் வந்து நளினியை மிரட்டிச் செல்கிறான். நளினி அதற்குப் பயப்படுகிறாள். ‘இரட்டை மனிதன்’ நாடகத்தில் வரும் மாலா படித்த பெண். மேலும் படிக்க ஆர்வம் கொண்டவள். ஆனால், அவளை மகேந்திரன் எளிதாக மிரட்டிச் செல்கிறான். ஒரு கடிதம் அவளை மிரட்டுகிறது. அவள் எதற்கும் எதிர்வினையாற்றாமல் ஒரு கைப்பாவை போலவே வருகிறாள். அன்றிலிருந்து இன்று வரை சினிமாவில் இருக்கும் கதாநாயகியின் சாயல் இவை. எதுவும் பெரிதாகச் செய்துவிடாத சுட்டிப்பெண்ணின் சாயல். வெகுஜன ரசனையில் பெண்களின் இந்த அம்சமும் தேவையானதாகிறது. அதன் காரணத்தினாலே தமிழ்ச் சினிமாவில் இன்று வரை இந்தச் சூத்திரம் வெற்றிகரமான ஒன்றாக இருக்கிறது. பி. கிருஷ்ணனின் நாடகங்களும் அதே பாணியையே கையாளுகின்றன.

பி. கிருஷ்ணன் இந்த மூன்று நாடகங்களையும் தொழில் பொருட்டுக் கையாண்டுள்ளார் என்பதை  ‘மர்ம மனிதன்’ தொடங்கி ‘எதிர்நீச்சல்’ வரை ஒரே கதையம்சம் கொண்டதாக உள்ளதன் வழி அறியலாம். குறிப்பாகச் சொல்வதென்றால் ‘இரட்டை மனிதன்’ நாடகமும் ‘எதிர்நீச்சல்’ நாடகமும் ஏறத்தாழ ஒரே கதை களம் எனலாம்.  தொழில் சார்ந்த முயற்சி என்பதால் பி. கிருஷ்ணன் அதில் தன் முழுமையைக் காட்டவில்லையோ என்ற எண்ணமும் எழவே செய்கிறது. ஆனால், மூன்று நாடகங்களும் துப்பறியும் நாவல்களின் இலக்கணப்படி எழுதப்பட்டவை. அதன் பொருட்டே அவை துப்பறியும் நாடகங்களாக வென்றவை.

4

பி. கிருஷ்ணன் 1962-ல் துப்பறியும் நாடகங்கள் எழுதும் முன் வானொலிக்காகச் சமூக நாடகங்களும் நகைச்சுவை நாடகங்களும் எழுதினார். அதன் பிரதிபலிப்புத் துப்பறியும் நாடகங்களில் தெரிகின்றன. துப்பறியும் நாடகங்களின் கதைப்போக்கைச் சுவாரஸ்யமாக்க அதனுள் நகைச்சுவையைக் கையாளுகிறார். குறிப்பாகப் பி. கிருஷ்ணனின் நாடகங்களில் வரும் போலிஸ் கதாபாத்திரம் நகைச்சுவை மூலமே குறிப்புணர்த்துகின்றனர். போலிஸ் விசாரணை நகைச்சுவை பாணியிலேயே நடக்கின்றன. அவை பி. கிருஷ்ணனின் நாடகங்களை வாசிப்புக்குரியவை ஆக்குகின்றன.

புதுமைதாசன் என்கிற பி. கிருஷ்ணனின் துப்பறியும் நாடகங்கள் கேட்பதற்கானவை என்பதால் அதில் பயின்று வரும் அடுத்தது என்ன? என்ற துப்பறியும் தொனியும் ஊடாடி வரும் நகைச்சுவையும் வானொலியில் அதிக வரவேற்பைப் பெற்றது. இதற்குப் பி. கிருஷ்ணனின் வாசிப்பு இன்றியமையாததாகிறது. தமிழ்-ஆங்கிலம் என இரு மொழிகளில் தொடர் வாசிப்பில் இருந்தவர் பி. கிருஷ்ணன் அதன் காரணமாக அவரது எழுத்திலும் வெவ்வேறு பாணிகளைக் கையாளும் உத்தி தெரிகிறது. ஒரு துப்பறியும் நாடகத்தில் மர்மம், நகைச்சுவை அதன் சுவாரஸ்யத்திற்காகச் சொல்லப்பட்டது என்றால் அதிலுள்ள சமூக அக்கறை ஆசிரியனின் உள்ளார்ந்த தேடல் சார்ந்தது.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி வரை மக்களுக்கு நீதி போதனைகள் இன்றியமையாத கருத்துகளாக வலியுறுத்தப்பட்டன. அரங்கேற்றபட்ட நாடகங்களின் வழி நீதி உபதேசங்கள் செய்தன. நான் மேலே சொன்ன நொண்டி நாடகமும் வாசாப்பு நாடகமும் நீதி உபதேசிப்பவையே. ஆனால், இருபதாம் நூற்றாண்டில் நீதிக் கதைகள், உபதேசங்களுக்கான செல்வாக்கு இழந்த காலக்கட்டம். இரண்டு பெரும் போர்களுக்குப் பின் உலகம் தலைகீழாக மாறியிருந்தது. உலகம் நவீனத்துவத்துள் நுழைந்திருந்தது. அதற்கான மாற்றங்களையும் அசௌகர்யங்களையும் எதிர்கொண்டிருந்தது.

குறிப்பாகச் சிங்கப்பூரில் நிகழ்ந்த சமூக மாற்றங்கள் கவனிக்கத்தக்கன. அப்போது நீதியை, சமூகத்தில் உள்ள சிக்கல்களை, சமூகப் பிரச்சினைகளைப் பூடகமாகச் சொல்ல துப்பறியும் கதைகள் ஒரு சிறந்த வழியாகின. பி. கிருஷ்ணன் அகதா கிரிஸ்டியில் இருந்து வேறுபடும் இடமும் இதுதான். பி. கிருஷ்ணன் முழுக்க முழுக்க வெகுஜன ஊடகத்திற்காக வானொலி நிலையத்தில் பல லட்சம் பேர் வாரம் தவறாமல் கேட்கும் சுவாரஸ்யத்திற்காக எழுதினார். ஆனால் அவரது படிப்புப் பின்புலமும் சமூதாய அக்கறையும் வேறு தளத்தில் நின்றது. அவர் தொடர் இலக்கிய வாசிப்பிலும் தொடர்ந்து சிங்கப்பூரில் ஏற்படும் மாற்றங்களைக் கவனிப்பவராகவே இருந்திருக்கிறார்.

இவ்வருடம் இந்நாடகங்கள் வெளிவந்து ஐம்பதாவது ஆண்டு நிறைவு என நினைக்கிறேன். இன்றும் அன்றிருந்த அதே செயலூக்கத்துடனே பி. கிருஷ்ணன் இருக்கிறார் என்பது உலகில் மிகச் சிலரால் மட்டுமே சாத்தியமாக்கக்கூடிய செயல். கடல் காக்கை ஒரு எல்லையை வகுத்துப் பறக்கும் பறவை. வானில் அதிக உயரம் சொல்லாது. தனக்கான இரையைத் தன் சிறு வட்டத்திற்குள்ளே தேடிக் கொள்ளும். ஆனால், ரிச்சர்ட் பேஷ் எழுதிய ‘ஜொனாத்தன் லிவிங்கிஸ்டன் சீகல்’ நாவலில் வரும் மையக்கதாபாத்திரமான ஜொனாத்தன் என்னும் கடல் காக்கை தன் எல்லையை மீறி பறந்து கொண்டேயிருக்கும். பறந்து பறந்து வான்விளிம்பின் எல்லை தாண்டி பறந்து கொண்டிருக்கும். பி. கிருஷ்ணன் தன் செயலூக்கத்தால் அத்தகையவர். அவருக்கு என் வணக்கங்கள்.

***

மேற்கோள் நூல்கள்

புதுமைதாசன். (2015). இரட்டை மனிதன். சிங்கப்பூர்: கிரிம்சன் ஏர்த் பதிப்பகம்.

புதுமைதாசன். (2015). எதிர்நீச்சல். சிங்கப்பூர்: கிரிம்சன் ஏர்த் பதிப்பகம்.

புதுமைதாசன். (2015). மர்ம மனிதன். சிங்கப்பூர்: கிரிம்சன் ஏர்த் பதிப்பகம்.

1 comment for “பி. கிருஷ்ணன்: எல்லையைக் கடக்கும் கடல் பறவை

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...