பி. கிருஷ்ணனின் நாடக வெளியில் உலக இலக்கியம்

அறிமுகம்

எழுத்தாளர் பி. கிருஷ்ணனின் ‘சருகு’ நாடகத் தொகுப்பின் முன்னுரையில் சிங்கப்பூர் வானொலி கடந்து வந்திருக்கும் மாற்றங்களையும் கால அடிப்படையில்  இந்தியப்பகுதியில் பணியாற்றிய அறிவிப்பாளர்களையும் தலைவர்களையும் குறிப்பிட்டு மிக நீண்ட விரிவான வரலாற்றுக் குறிப்பொன்றை அளிக்கின்றார். இந்த வரலாற்றுக் குறிப்பு அளிக்கும் சில அவதானிப்புகள் மிக முக்கியமானவை.

தொடக்கக்காலத்தில், புலம்பெயர்ந்த தமிழர்களின் வாழ்வில் வானொலியின் இடமென்பது மிக முக்கியமானதாக அமைகின்றது. குறைவான கல்வியறிவு கொண்டவர்களாகவும் எழுதப்படிக்கத் தெரியாதவர்களாகவும் இருந்த மக்களின் கடும் உடல் உழைப்புக்குப் பின்னான நேரத்தை நிரப்பியது வானொலி நிகழ்ச்சிகள்தான். இரண்டாம் உலகப் போர் காலக்கட்டத்தில், 1942ஆம் ஆண்டு தொடங்கி 1945ஆம் ஆண்டு வரை சிங்கப்பூரில் ஜப்பானியர்களின் ஆதிக்கம் இருந்தபோதிலும்கூட  இந்தியப்பகுதி வானொலியில் செய்திகள், திரையிசைப்பாடல்கள், நாடகங்கள், பக்திப் பாடல்கள் என ஒலியேறியிருக்கின்றன. தொடக்கக்கால வானொலிப் பிரிவில் பணியாற்றிய அறிவிப்பாளர்கள் பலரும் தேர்ந்த தமிழறிவு மிக்கவர்களாக இருந்தனர். ஆகவே, நிகழ்ச்சிகள் பலவும் மரபிசை, தமிழிலக்கியம் ஆகியவற்றை முன்னிறுத்துவதாக அமைந்தன. இந்தச் சூழல் 1960களில் புதிய அறிவிப்பாளர்களின் வருகையால் மெல்ல மாற்றமடைந்தது.

அந்தப் புதிய அலையில் வந்தவர்களில் இரு குறிப்பிடத்தக்கவர்களைத் தன்னுடைய முன்னுரையிலே குறிப்பிடுகிறார் பி. கிருஷ்ணன். அவர்களில் கவிஞர் கா. பெருமாள் மகாபாரதத்தில் இருக்கும் ‘ஏகலைவன்’ கதையை வானொலி நாடகமாக மாற்றினார். அதைப் போன்றே பி. கிருஷ்ணன் உலக இலக்கியத்தில் சிறப்புப் பெற்ற சிறுகதைகளை நாடகமாக மாற்றுகின்றார். இதில் பி. கிருஷ்ணன் எடுத்துள்ள பணி மிகச் சவாலானது. வாசிப்பில் முன்னரே இருந்து வந்த நவீன இலக்கிய வடிவமொன்றைச் செவிவழியாக வெகு மக்களுக்கு அறிமுகப்படுத்தும் முயற்சியை அவர் முன்னெடுத்துள்ளார். அத்துடன் புதிய ஊடகத்தின் சாத்தியமான வெளிப்பாட்டு வடிவத்தையும் அது அளிக்கும் வீச்சையும் நன்கு அறிந்தவர்களாகவே இருவரும் செயல்பட்டிருக்கின்றனர்.

இவ்வாறு புதுமைதாசன் என அறியப்படும் எழுத்தாளர் பி. கிருஷ்ணன், 1966 முதல் 1977 வரை எழுதி வானொலியில் நாடகமாக்கப்பட்ட உலகச் சிறுகதைகளே ‘சருகுகள்’ என நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகுப்பில் அமைந்திருக்கும் கதைகள் மொழிவழியிலான மாற்றத்தை மட்டுமின்றி இலக்கிய வடிவம் சார்ந்தும் மாற்றம் கண்டிருக்கின்றன. இந்தக் கட்டுரை புதுமைதாசன் மொழிபெயர்த்து வடிவ மாற்றம் செய்திருக்கும் நாடகங்கள், அதன் வெளிப்பாட்டிலும் வடிவத்தாலும் அடைந்த உச்சங்களை ஒட்டி விளக்க முயல்கிறது.

படைப்பின் புற வடிவம்

படைப்பின் உள்ளீட்டின் கலைபெறுமதியைத் தாண்டி அது அமைந்திருக்கும் வெளிப்பாட்டு வடிவத்தின் மதிப்பு என்னவாக இருக்கின்றது என்ற கேள்விக்குச் சில பதில்களைக் கண்டறிய முடியும். முதலாவதாகப், படைப்பு, தான் வெளிப்படுத்த முனையும் கருவின் மூலமே அதன் வடிவத்தையும் தெரிவு செய்கின்றது. படைப்பின் உள்ளீட்டை அகவயமானதாகக் கொள்வோமெனில் அதன் புறவய வெளிப்பாட்டில் சொல்ல முடியாமை ஒன்றைக் கொண்டிருக்கும் கருவுக்குக் கவிதையே ஏற்றதாக அமைகின்றது. கவிதை வடிவத்தில் மொழியை நெகிழ்வாக்கி ஒன்றைக் கூற முடிவதால் அவ்வாறாகக் கருத முடிகிறது. அதைப் போல குறிப்பிட்டப் பின்னணியில் மனிதர்களின் அகப்புற உணர்வுகளைக் காட்டி ஒன்றைச் சொல்லும் கரு இயல்பாகச் சிறுகதைகளையோ அல்லது நாவல் போன்ற வடிவங்களைத் தெரிவு செய்கிறது. ஒரு இலக்கிய வடிவத்தை இன்னொரு இலக்கிய வடிவமாக மாற்றும்போது அதன் உள்ளீடும் புதிய இலக்கிய வடிவத்திற்கேற்ப மாறுகிறது.

பொதுவாக, நவீன சிறுகதைகள் அந்தரங்க வாசிப்புக்குரிய இலக்கிய வடிவமாகக் கருதப்படுகின்றன. சிறுகதையை வாசித்து அதன் நுட்பங்களை அறிந்து கொள்வதற்காகக் கூட்டு வாசிப்பு அல்லது கதைசொல்லியின் மூலமாகக் கேட்டல் ஆகியவற்றைச் செய்யலாம். எனினும் ஒவ்வொருவரும் தனித்தனியே கண்டடைவதற்கான பன்முக வாசிப்புத்தன்மையைச் சிறுகதைகள் கொண்டிருப்பதால், அந்தரங்க வாசிப்பே சிறுகதை எனும் இலக்கிய வடிவத்தை அணுகுவதற்கான சிறந்த முறையாக அமைகிறது. அதற்கு மாறாக, நிகழ்த்துக்கலை வடிவைச் சேர்ந்த குரல்வழியிலான நாடகங்களில் அந்தரங்கமாக உணரக்கூடிய உணர்ச்சி வெளிப்பாடுகள், உரையாடல்கள் இருந்தாலும் திரளாக அமர்ந்து கேட்பதற்கும் காண்பதற்குமான பொதுத்தன்மையைக் கொண்டவையாகத் திகழ்கின்றன. இரண்டுமே வெவ்வேறான இலக்கிய வடிவங்களைக் கொண்டவை. ஆக, சிறுகதைக்குண்டான பன்முக வாசிப்புத்தன்மை, நாடகங்களின் பொது ரசனைத்தன்மை ஆகிய இரண்டையுமே ஒருங்கே அமைக்க வேண்டியது அதன் சவாலாக அமைகின்றது. பி. கிருஷ்ணன் இக்கதைகளைத் தெரிவு செய்வதற்கு இதிலிருக்கும் நாடகீயத்தன்மையே முதன்மைக் காரணமாக அமைந்திருக்கிறது என ஊகிக்கலாம்.

பி. கிருஷ்ணன் தெரிவு செய்திருக்கும் சிறுகதைகளில் மிகப் பழமையானது 13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகவும் மிக அண்மையானது 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சேர்ந்ததாகவும் அமைந்திருக்கிறது. இந்தச் சிறுகதைகளைப் மொழிபெயர்த்து நாடகங்களாக மாற்றியதில் இந்தக் காலக்கட்டத்தில் இலக்கியம் கூறுமுறையாலும் வடிவத்தாலும் அடைந்திருக்கும் பரிணாமத்தையும் கூடவே ஆராய வேண்டியிருக்கிறது. இந்தத் தொகுப்பில் அமைந்திருக்கும் பல கதைகள் நவீனத்துவக் காலக்கட்டச் சிறுகதைகளாகவே அமைந்திருக்கின்றன. நவீனத்துவ காலக்கட்ட இலக்கியத்தின் முக்கிய எழுத்தாளர்களான துர்கனேவ், மாப்பாஸான், ஆண்டன் செகாவ், ஒ ஹென்றி போன்றோரின் கதைகள் இத்தொகுப்பில் அமைந்திருக்கின்றன. நவீனத்துவக் காலக்கட்ட சிறுகதைகளுக்கான மையமும் வடிவ ரீதியில் கச்சிதமும்  கலையமைதியுடன் கூடிய கதைகளாக இவை வரையறுக்கப்படுகின்றன.

நிகழ்த்துக்கலை வடிவைச் சேர்ந்த வானொலி நாடகங்கள் உணர்ச்சி வெளிப்பாடுகள், உரையாடல் தன்மை ஆகியவற்றின் வாயிலாக ஒன்றை உணர்த்தவல்லதாக அறியப்படுகின்றது. சிறுகதைகளை நாடகமாக மாற்றுகின்றபோது கதாபாத்திரம், சூழல் தன்மைக்கேற்ப கதையைக் காட்சிகளாக நிகழ்த்த வேண்டியதாகிறது. சிறுகதையை வாசிக்கும் வாசகன் அக்கதையைப் பொருள்படுத்திக் கொள்ளும் தனிப்பட்ட பொறுப்பைச் சிறுகதை வடிவம் வாசகனுக்கு அளிக்கின்றது. ஆனால், நாடகத்தில் சரியான உரையாடலின் வாயிலாகவும் குரல்வழி உணர்ச்சி மாறுபாடுகள் வழியாகவும் காண்பிக்க வேண்டியது நாடக ஆசிரியரின் பொறுப்பாக மாற்றம் காண்கிறது. இந்த நாடகங்களில் புதுமைதாசனே அந்தப் பொறுப்பை ஏற்கிறார். ஒவ்வொரு காட்சியின் தொடக்கத்தில் அமைகின்ற சூழல் சித்திரிப்புத் தவிர மொத்த நாடகத்தையுமே உரையாடல்களாகவே மாற்றியிருக்கிறார். அவ்வசனங்கள் வானொலி நாடகங்களாக மாற்றம் காண்பதால், குரல்வழி மற்றும் காட்சிச் சித்தரிப்பு ஆகியவற்றின் வாயிலாக மட்டுமே கதையின் உணர்ச்சியை வெளிப்படுத்த வேண்டிய கட்டுப்பாடும் அமைந்திருக்கின்றன. நவீனத்துவ சிறுகதைகளின் அந்தரங்கத் தன்மையும் இந்த வடிவ மாற்றத்தால் சிதையும் அபாயம் இருக்கிறது. இந்த அபாயத்தையும் தாண்டி கதைகளின் ஆன்மா கெடாத வகையில் மொழிபெயர்ப்பையும் வடிவ மாற்றத்தையும் செய்திருப்பதே பி. கிருஷ்ணனின் வெற்றியாகக் கொள்ளலாம்.

பி. கிருஷ்ணன் இந்தக் கதைகளைத் தொழில்நுட்ப ரீதியாக மட்டும் அணுகாமல் சக கலைஞனாகத் தன்னைச் செருகிக்கொண்டுள்ளதையும் இத்தொகுப்பின் வழி காண முடிகிறது. உதாரணமாக, வடிவ மாற்றத்தால் கதைகளில் இருக்கும் ஒற்றைப்படையான கதைகூறல் தன்மைக்கு மாறாக இக்கதைகள் உணர்ச்சி மாற்றம், உரையாடல் என உயிர்ப்புடையத் தருணங்களாக மாற்றப்பட்டுள்ளன. லியோ டால்ஸ்டாயின் ‘விடுதலை’ சிறுகதையில் செய்யாத கொலைக்காக 26 ஆண்டுகளாகச் சிறையிலிருக்கும் கைதி ஒருவர் தான் குற்றமற்றவர் என நிருபிக்கும் வாய்ப்புக்குப் பிறகு இறந்து போவார். இந்தக் கதையை நாடகமாக மாற்றும்போது கதையிலிருந்த நேரடியான கதையாசிரியரின் கூறல் முறைக்கு மாறாக உரையாடல் தன்மையால் இக்கதையைக் கையாளும்போது இக்கதை உயிர்ப்பு மிகுந்த கதையாக மாறுகிறது. இதே நாடகத்தில், மற்ற கைதிகளும் தங்களுக்குள் பேசிக் கொள்வதாக உரையாடலை அமைத்திருப்பதன் வாயிலாகச் சிறைச்சூழலை இன்னும் உயிர்ப்புடன் நாடகத்தில் அமைத்திருக்கிறார். லியானிட் ஆண்டெரெயெவ்வின் ‘அமைதி’ எனும் சிறுகதையில் தன்னுடைய மகள் வெரோக்சாவிடம் மிகவும் கண்டிப்பானவராக இக்னேஷியஸ் பாதிரியார் நடந்து கொள்கின்றார். முதன்முறையாக அவருடைய அனுமதியின்றி, செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்குச் சென்று திரும்பி வந்ததிலிருந்து யாரிடமும் பேசாதவளாக வெரொக்சா மாறுகின்றாள். அவளின் சிக்கலை அறிந்து கொள்ள அவளுடைய தாயார் ஒல்காவும் இக்னேஷியஸும் பல முயற்சிகளை மேற்கொள்கின்றனர். ஆனால், தன்னுடைய அமைதிக்கு எவ்வித காரணத்தையும் சொல்லாமல் ஒரு நாள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை புரிந்து கொள்கிறாள். அவளின் மரணத்தைக் கேள்வியுற்றதும் ஒல்காவுக்குப் பக்கவாதம் வந்துவிடும். இதனால், பாதிரியார் தன்னுடைய கண்டிப்பை இழந்து தன்னைச் சூழ்ந்திருக்கும் அமைதிக்கான காரணத்தைத் தேடியலைபவராக மாறுவார். இந்தக் கதையை நாடகமாக மாற்றும்போது, பாதிரியார் அடைந்திருக்கும் மாற்றத்தை இரண்டு கற்பனைப்பாத்திரங்கள் பேசிக்கொள்வதாய் உரையாடல் அமைந்திருக்கும். பாதிரியாரின் கஞ்சத்தனத்தைப் பற்றிப் பேசிச் சலித்துக் கொள்பவர்கள் பின்னர் பாதிரியாரின் தன்மையில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் குறித்து வருத்தப்படுவதாய் கதை உருவாகியிருக்கும். மூலக்கதையில் பாதிரியார் அடைந்த மாற்றத்துடன் அதைக் காண்கின்றவர்கள் வந்து சேரக்கூடிய இடத்தையும் தன்னுடைய நாடகத்தில் சேர்த்திருக்கிறார். நாடகாசிரியராகக் கதைகளில் அமைந்திருக்கும் இடைவெளியை நிரப்ப பி. கிருஷ்ணன் பயன்படுத்திக் கொள்ளும் இடங்களாக அவற்றைக் குறிப்பிடலாம்.

கதைகளின் சாரத்தை எவ்வித மிகையும் இல்லாமல் தெளிவான மொழியில் அமைத்து மொழிபெயர்ப்பதன் மூலமே புதுமைதாசனின் நாடகங்கள் வலுவடைகின்றது. இந்தத் தொகுப்பில் அமைந்திருக்கும் பெரும்பான்மையான நாடகங்களில் கதையில் இருந்த அதே உணர்வைக் கடத்தவே ஆசிரியர் முனைந்திருக்கிறார். கதைகளைத் தழுவி நாடகமாக எழுதுகின்றபோது அதன் உரையாடல் பகுதியை விரிவுபடுத்துவது, கதைமாந்தர்களின் மனநிலையைப் பிரதிபலிக்கும் காட்சிச் சித்திரிப்புகளை உருவாக்குவது தவிர ஏனைய இடங்களில் முற்றாகத் தன்னுடைய தலையீட்டைத் தவிர்த்திருக்கிறார்.

பி. கிருஷ்ணன் நாடகமாக மாற்றியுள்ள சில சிறுகதைகள் நுண்ணுணர்வுகளால் பின்னப்பட்டவை. அவற்றை நாடகமாக அவர் கையாண்டுள்ள விதம் ஆச்சரியமானது. உதாரணமாக, ‘தனியன்’ எனும் சீனச் சிறுகதையைச் சொல்லலாம். இக்கதையில் இறக்கும் தருவாயிலிருக்கும் பாட்டி தன்னுடைய இறுதி ஆசையாகத் தன்னுடைய எஞ்சிய ஒரே உறவான வளர்ப்புப் பேரன், லியன் ஷூவைக் காண ஆசைப்படுகிறாள். ஆனால், குடும்பமும் உறவுகளும் மனிதன் தன்னுடைய சுயநலத்துக்காக ஏற்படுத்தியவை என்ற எண்ணம் கொண்ட பேரன், பாட்டி இறந்த பின்னர்தான் அவளைக் காண வருகிறான். கிராமத்திலிருக்கும் பூர்வீக வீட்டைப், பாட்டியை வயதானக் காலத்தில் கவனித்துக் கொண்ட பணிப்பெண்ணுக்கு அளிக்கின்றான். பாட்டியின் உடைமை பொருட்களை எரிக்கவும் செய்கிறான். மீண்டும் நகரத்துக்குத் திரும்பும் லியன் ஷுவைக் காண அவனது நண்பனான லூ ஷென் வருகிறான். நகரத்தில் தாய்தந்தை இழந்த பேரப்பிள்ளைகளைப் பராமரித்து வரும் கிழவி ஒருத்தியின் வீட்டில் வாடகைக்கு லியன் ஷூ குடியிருக்கிறான். அந்த வீட்டிலிருக்கும் குழந்தைகளிடம் லியன் ஷூ நெருங்கிப் பழகுவதைக் கண்டு நண்பன் அதிர்ச்சி அடைகிறான். பின்னர், லியன் ஷூவின் ஆசிரியர் பணி வேலையிடத்தில் ஏற்படும் சிக்கலொன்றால் பறிபோகிறது.  இன்னொரு வேலைக்குச் செல்ல விரும்பும் தருவாயிலும் தனித்து வாழவே விரும்புகின்றான். உலக நிகழ்வுகளிலிருந்து முற்றிலும் விலகி நின்று சன்னலொன்றை வெறித்துப் பார்த்துக் கொண்டு வாழ்நாள் முழுவதும் சிரித்திராத  தனது பாட்டி தன்னை மட்டும் மிகுந்த அன்புடன் வளர்த்ததை எண்ணி வருத்தமடைகின்றான்.  தளபதிக்கு ஆலோசகராக வேலைக்குச் சேர்ந்தப் பின்னர், மற்றவர்களுடன் பேசுவதும் பழகுவதும் முற்றிலும் குறைந்து ஒடுங்கிப் போகிறான். நெடுநாட்களுக்குப் பிறகு, மரணத்தருவாயில் இருக்கும் லியன் ஷூ, தன்னை வந்து சந்திக்குமாறு தன் நண்பன், லூ வென்னுக்குக் கடிதமொன்றை எழுதுகிறான். ஆனால், அவனுடைய இறப்புக்குப் பின்னரே நண்பன் அவனைக் காணச் செல்கிறான். இறப்புக்கு முன்பதாகத், தன்னுடைய சொத்தாக எதையும் விட்டுப் போக மனமில்லாமல் அவன் பொருட்களை வாங்கி அழித்ததை வீட்டுக்காரப் பெண் ஆச்சரியத்துடன் நினைவுகூர்கிறாள். வாழ்க்கையில் எவ்வித உறவு பந்தத்தையும் ஏற்படுத்திக் கொள்ளாமல் தங்களுக்குள் ஒடுங்கிப் போயிருக்கும் மனிதர்கள் தங்களது இறப்புக்கு முன்பதாக நெருக்கமான உறவொன்றைச் சந்திக்க எண்ணி முடியாமல் இறந்து போகின்றனர். ஒரு வகையில், தங்களின் நினைவுகளை அவர்கள் மீது படரவிட்டுத் தங்களின் தொடர்ச்சியை உலகில் உறுதிச் செய்து கொள்வதாகவே இதைப் புரிந்து கொள்ள முடியும்.  வாழ்வு மீதான அவநம்பிக்கையால் உள்ளொடுங்கிப் போன மனிதர்கள் உலகில் தங்களின் தொடர்ச்சியை உறுதிச் செய்தல் என்பது இக்கதையில் அரூபமாகவே அமைந்திருக்கிறது. இந்த நாடகத்தில், மக்களை எளிதில் சென்றடையக்கூடிய மிகையுணர்ச்சி தருணங்களும் உரையாடல்களும் குறைவாகவே அமைந்திருக்கின்றன. வெகுமக்கள் ஊடகமான வானொலிக்கு ஏற்ற வகையில் நாடகத்தின் சில இடங்களில் அமைந்திருக்கும் நாடகீயத்தருணங்களும் மிகையுணர்ச்சி வசனங்களும் விலக்கிப் பார்த்தால், இந்நாடகம் நிச்சயமாக மூலப்பிரதி சொல்ல முனைந்திருக்கும் உணர்வை நெருங்குவதாகவே அமைந்திருக்கிறது.

கதைகளின் பாதை

புதுமைதாசன் தெரிவு செய்த கதைகள் அனைத்திலும் இருக்கக்கூடிய பொதுவான தன்மையாகக் கதைமாந்தர்கள் எடுக்கக்கூடிய மிகை உணர்ச்சி சார்ந்த முடிவுகளைச் சொல்லலாம். கதைகளில் நிகழும் இக்கட்டுகளின் முன்னால் தருக்க நியாயங்களுக்கோ அல்லது மனித உளவியல் சார்ந்த ஊடாட்டங்களுக்கோ இடம் கொடாமல் உணர்ச்சிகரத்துடனே கதைமாந்தர்கள் முடிவெடுக்கின்றனர். 18-ஆம் நூற்றாண்டு தொடங்கி 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரையில் இலக்கியப் போக்கில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்திய நவீனத்துவ இலக்கியத்தின் பின்னணியில் எழுதப்பட்ட கதைகளையே பெரும்பாலும் இவர் மொழிபெயர்த்திருக்கிறார். நூலின் முன்னுரையிலே தான் தெரிவு செய்த கதைகளைப் பற்றிச் சொல்லும்போது //அவை சிறுகதை இலக்கணச் செந்நெறிக்கேற்ப ஒருமையுணர்வு மிளிர்ந்து ஒரு சுவையை – ஒரு தெறிப்பை மட்டும் தெள்ளிதின் சித்திரிப்பனவாகவும் அமைந்த செறிவார்ந்த கதைகள்// என வரையறுக்கிறார். இந்தக் கூற்றின் வாயிலாக, அவரின் இலக்கிய ரசனையையும் உணர்ந்து கொள்ள முடிகின்றது.

இந்தத் தொகுப்பின் கதைகள் பலவும் மனிதர்கள் தமக்குள் உருவாக்கி வந்திருக்கும் நீதி, ஒழுக்கம், நம்பிக்கைகள் ஆகியவற்றைப் பரிசீலிக்கக்கூடியவையாக அமைந்திருக்கின்றன. மாப்பாஸான் சிறுகதைகளில் ஒன்றான ‘முழக்கயிறு’ எனும் கதையைத் தழுவிய நாடகத்தில் தனிமையில் இருக்கும் முதியவரான ஹோக்ஸம் சந்தைக்குச் செல்வதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார். அவ்வாறு செல்லும்போது தன் தனிமை தீர்வதாக உள்ளூர எண்ணுகிறார். அப்படிச் செல்லுகின்ற சந்தையில் கீழே கிடக்கின்ற முழக்கயிறு ஒன்றைப் பத்திரப்படுத்திச் செல்கின்றார். ஹோக்ஸம் உடனான முன்பகையின் காரணமாய் வணிகர்கள் இருவர் அவர் மீது திருட்டுப்பழியைச் சுமத்துகின்றனர். தன் மீது சுமத்தப்பட்டிருக்கும் பழியைக் களைய முயன்று தோல்வியுறுகிறார். அந்தப் பழியினால் மனமுடைந்த அவர்,  மீண்டு வராமலே நோய்வாய்ப்பட்டு இறக்கின்றார். மனிதர்கள் உருவாக்கிக் கொண்ட சமூக விதிகள் சுயநலத்துக்கேற்ற வகையில் மாற்றியமைக்கும் அபாயமிக்கவையாக அமைந்திருக்கின்றன.  ‘பித்தன்’ நாடகத்தில், காணுகின்ற மனிதர்கள் மீதான ஆழ்ந்த பயத்தால் தற்கொலை புரிகின்ற  பித்தனும் சமூகத்தின் ஒழுங்கு மீது அவநம்பிக்கை உடையவனே. ‘நேர்மை’ சிறுகதையில் தன்னுடைய வழக்கறிஞர் நண்பர் செய்த குற்றத்தைக் காட்டிக் கொடுத்ததற்காகத் தொழில், செல்வம் ஆகியவை இழந்து வறுமையில் வாடி இறந்து போகின்றான் லாட்கின். நவீனத்துவக் காலக்கட்ட சிறுகதைகள் அதுவரையில் மனிதர்கள் உருவாக்கி வந்திருக்கும் சமூக விதிகளை ஒட்டிக் கேள்விகளும் விமர்சனங்களும் எழுப்புகின்றன. இதற்கு எதிர்நிலையில், இந்த அவநம்பிக்கையான சூழலைக் கடந்து வருவதற்கும் மனிதர்களின் நல்லியல்புகள் காரணமாக அமைந்திருப்பதைக் காட்டும் கதைகளும் அமைந்திருக்கின்றன. அலெக்ஸ் டால்ஸ்டாயின் ‘காத்திருந்த நெஞ்சம்’ சிறுகதையில் ரஷிய போர்க்களத்தில் கடுமையான காயமுற்று முகம் சிதைவான ட்ரிமோவ் எனும் ராணுவ வீரனை அவனுடைய பெற்றோரும் காதலியும் முழுமையாக ஏற்றுக் கொள்கின்றனர். ‘ஒளிவிளக்கு’ எனும் சீனச் சிறுகதையில் திருமணம் நிச்சயிக்கப்பட்டச் சூழலில் கடுமையான நோய்க்குள்ளான தோ பூ எனும் இளைஞனைத் திருமணம் செய்து அவனுக்காகத் தன் வாழ்வை அர்ப்பணிக்கின்றாள் தோ ஷு எனும் பெண். இப்படியாக மனிதர்களுக்கு நேரும் இக்கட்டுகளின் முன்னால் நம்பிக்கையை ஊட்டும் தியாகச் செயல்களையும் நவீனத்துவ இலக்கியம் முன்வைக்கிறது. இவ்வாறாக நவீனத்துவக் காலக்கட்டப் படைப்புகள் மனிதர்கள் ஏற்படுத்திய நம்பிக்கைகள், ஒழுங்குகள் அத்தனையையும் கேள்விக்குட்படுத்தவும் நிலைநாட்டவும் முயல்கின்றன. இந்தக் கதைகளை வாசிக்கையில் அதனைப் பெரும் விவாதமாகவே கதைகள் நிறுவ முயல்வதைக் காண முடிகின்றது. அந்த விவாதத்தைத் தமிழுக்கும் பி. கிருஷ்ணன் கொண்டு வந்திருக்கின்றார் என்பதே இந்நாடக முயற்சியை முக்கியமானதாக ஆக்குகிறது.

இலக்கிய ரசனை

இந்தத் தொகுப்பு வாசிப்பின் வாயிலாக  உலக இலக்கியத்தில் சிறுகதை எனும் வடிவம் தொடக்கக்காலத்தில் வந்து சேர்ந்திருக்கும் தடத்தைப் பற்றிய குறுக்கு வெட்டுத் தோற்றமொன்றை ஏற்படுத்திக் கொள்ள முடிகின்றது. ஐரோப்பிய மொழிகளில் 18-ஆம் நூற்றாண்டில் உருவாகிய நவீன உரைநடை இலக்கிய வகையான சிறுகதை வடிவத்துக்கு வெகு முன்பதாகவே சீன மொழியில் 14-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ‘அடிச்சுவடு’ எனும் கதையை மொழிபெயர்த்து நாடகமாக மாற்றியிருக்கிறார். அத்துடன் சிறுகதை இலக்கியத்தின் முன்னோடிகளான எட்கர் ஆலன் போ, மாப்பாஸான், ஒ ஹென்றி ஆகிய எழுத்தாளர்களின் முக்கியமான கதைகளையும் இணைத்திருக்கிறார். மேலும், தமிழ் மொழிபெயர்ப்பில் நன்கு அறிமுகமான ஐரோப்பிய எழுத்தாளர்களின் கதைகளுடன் சேர்த்துப் பொதுவில் அதிகமும் அறியப்படாத ஜப்பானிய, சீனச் சிறுகதைகளையும் சுவீடன் நாட்டுச் சிறுகதையுமென உலகம் முழுவதும் சிறுகதை இலக்கியம் அடைந்திருக்கும் பரிணாமத்தையும் காட்டும்படியாகச் சிறுகதைகளைத் தெரிவு செய்து மொழிபெயர்த்துள்ளார். அதிலும் நவீனத்துவச் சிறுகதைகளில் உச்சமான படைப்புகள் சீன மொழியிலும் இருப்பதைக் காண முடிகின்றது.

லூ சின் எனும் சீன எழுத்தாளர் எழுதிய ‘பித்தன்’ சிறுகதையில் மனப்பிறழ்வுக்கு உள்ளாகித் தற்கொலை புரிந்து கொள்கின்றவனின் நாட்குறிப்பே கதையாக விரிகிறது. ஒவ்வொரு நாளும் தான் காண்கின்ற மனிதர்களுக்கும் தனக்குமான முற்பகை அல்லது ஏதேனும் சம்பவமொன்றை நினைவில் மீட்டித் தன்னைக் கொன்று உண்ணத்தான் காத்திருக்கின்றார்கள் என்ற முடிவுக்கு வந்து தன்னை முடிவில்லா மனப்பிறழ்வுக்கு ஆளாக்கிக் கொள்கின்றான். ஆனால், இந்த மனப்பிறழ்வுக்குப் பின்னால் நவீனக் காலக்கட்டத்து மனிதன் தன்னைச் சுற்றிலும் இருப்பவர்கள் மீது உணரும் ஆழமான பாதுகாப்பின்மையே சித்திரிக்கப்படுகிறது. அவனுடைய தற்கொலைக்கு முந்தைய நாளன்று இன்னும் மனிதர்களைத் தின்னாத கைக்குழந்தைகள் இருக்கலாம் அவற்றைக் காப்பாற்றுங்கள் என்ற வரிகளுடன் நாட்காட்டிக் குறிப்புகள் நினைவுறுத்துவதாகக் கதை முடிகிறது. மனித அகம் உணரக்கூடிய பாதுகாப்பின்மையால் ஏற்படும் உளவியல் சிக்கலையும் அதில் அமிழ்ந்து போயிருக்கக்கூடியவனிடமிருந்து வெளிப்படும் கவித்துவமான தரிசனத்துடன் நிறைவு பெறும் இக்கதை நவீனத்துவக் காலக்கட்டத்தின் முக்கியமான ஆக்கங்களில் ஒன்றாகக் கருதத்தக்கது.

இதைப் போன்றே ஜப்பானியக் கதையான ‘உயிரோவியம்’ கதையில் மிகச் சிறந்த ஓவியன் ஒருவனிடமிருந்து ஓவியத்தைப் பறிப்பதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைகின்றன. ஓவியத்தைப் பறிக்க எண்ணுபவர்கள் ஓவியத்திலிருந்து வெளிப்படும் நீரால் சூழப்பட்டுப் பழிவாங்கப்படுகின்றனர் எனக் கதை முடிகின்றது.  கலையை உன்னதப்படுத்தி அதனைக் கவர முயல்பவர்கள் அழியக்கூடும் என்ற தருக்கத்தை மீறிய உண்மையை இக்கதை நிறுவுகிறது. இவ்விரு கதைகளிலும் இருக்கும், தருக்கப்பூர்வமான உண்மைக்குச் சற்றே அந்நியமான மனநிலை என்பது கீழை நாடுகளின் வாழ்வியல் சூழலுடன் தொடர்புடையது.

ரஷ்ய நாட்டுச் சிறுகதைகளில் பெரும்பாலும் துன்பியல் உணர்வு மிகுந்திருக்கிறது. இக்கதைகள் பெரும்பாலானவற்றில் கதாபாத்திரங்களுக்கு வாழ்வில் நிகழ்ந்துவிடுகின்ற இக்கட்டுகள் இட்டுச் செல்லும் துன்பியல் சார்ந்த முடிவுகளே அமைந்திருக்கின்றன. ஆண்டன் செகாவின் ‘பந்தயம்’ சிறுகதையில் ஆயுள் தண்டனையைவிட மரண தண்டனையே கொடியது என வாதிட்டு அதனை நிறுவுவதற்காகப் பதினைந்து ஆண்டுகள் ஓர் அறையில் தன்னை அடைத்துக் கொள்ளும் மையக் கதைமாந்தர் தண்டனைக்காலத்தின் இறுதியில் இறந்து போகின்றான். அதைப் போல, மிகவும் இறுக்கமாகவும் கண்டிப்புடனும் இருக்கும் பாதிரியார் தன்னுடைய கண்டிப்பான வளர்ப்பு முறையாலே தன் மகள் இறந்து போகவும் காரணமாக அமைந்திருக்கிறார். இறுதியிலே, காரணம் எதுவும் தெரிவிக்காமல் இறந்து போகும் மகள், பக்கவாதத்தால் முடங்கிப் போன மனைவி ஆகியோர்கள் சூழ அமைதியில் ஆழ்ந்து போயிருக்கிறார். இப்படியாக, ரஷ்ய சிறுகதைகளில் கதைமாந்தர்கள் தாங்களாகவே இக்கட்டான முடிவுகளைத் தேடிக் கொள்கின்றனர்.

கதைகள் நாடகமாவதன் முக்கியத்துவம்

முந்தைய இரண்டு தலைமுறை மனிதர்களின் அன்றாடப் பொழுதுப்போக்குத்தளத்தில் மிக முக்கியமான அங்கமாக வானொலி அமைந்திருந்தது. வானொலியின் வாயிலாகச் செய்திகள், பாடல்கள், கதைகள், திரை வசனங்கள் ஆகியவற்றைக் கேட்டு ரசித்து மனனம் செய்த தலைமுறையினருக்குப் புதுமைதாசன் மொழிபெயர்த்திருக்கும் நாடகங்கள் மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கக்கூடும் என ஊகிக்க முடிகிறது. அதிலும், குரல்வழி நாடகங்களில் அரூபமான உணர்வுகள் கடத்துவதற்கான குறைந்த சாத்தியங்களே கொண்ட ஊடகத்தில் மனித உணர்வுகளை மையப்படுத்திய நாடகங்களை மொழிபெயர்த்திருக்கிறார். கதைகளை வெகுமக்கள் ஊடகமான வானொலியில் ஒலிபரப்பச் செய்ததின் வாயிலாக வாசகப்பரப்பை விரிவாக்கியதோடு குரல்வழி நாடகம் என்ற சாத்தியத்தை முழுமையாகப் பயன்படுத்தியிருக்கிறார்.

சிறுகதைகளில் ஆசிரியரே ஒவ்வொரு கதாபாத்திரமாகவும் உருமாறித் தன்னை வெளிப்படுத்துவதோடு ஆசிரியர் கூற்றிலும் கதையை நகர்த்துகின்றார். ஆனால், நாடகங்களில் கதைமாந்தர் தன்னை முழுமையாகப் புனைந்து வாசகன் முன் படைக்கும் வாய்ப்பு அமைகின்றது. பி. கிருஷ்ணன் தான் மொழிபெயர்த்த நாடகங்களில் உள்ள கதைமாந்தர்களின் உணர்ச்சி மாற்றங்களையும் எண்ணங்களையும் உரையாடல்களின் வழி முழுமையாகப் பதிவு செய்கிறார்.

‘சருகு’ எனும் தொகுதியின் தலைப்புகுரிய கதை பனிக்கால ரஷியாவைப் பின்னணியாகக் கொண்டிருக்கின்றது. பனிக்காலம் என்பதால் விளைச்சலின்றி மிகுந்த வறுமையான சூழலில் வாழும் குடும்பமொன்றின் மூத்த உறுப்பினரான அனிக்கா எனும் முதியவள் தன்னுடைய பேரக்குழந்தைகள் உணவின்றித் தவிப்பதைக் காணச் சகிக்காமல் தன்னைக் காட்டில் விட்டுவிடுமாறு கெஞ்சுகிறாள். அவளுடைய மருமகளும் அவளை வீட்டை விட்டுத் தொலைப்பதில் குறியாக இருக்கின்றாள். அப்படி, காட்டில் விடுவதால் விரைந்து தன்னுடைய உயிர்போகும், குடும்பத்தாருக்கும் தான் சுமையாக இருக்கப் போவதில்லை என்கிறாள். அவளை வண்டியில் அமரவைத்துக் காட்டில் விட்டுச் செல்லும் மகன், பின் மனம் வருந்தி தாயை மீண்டும் அழைத்து வருவதற்காக அழுது புலம்பி ஓடுவதில் கதை நிறைவடைகிறது. அனிக்கா தனக்குள் பேசிக் கொள்வதாக அமைந்திருக்கும் புலம்பல், அரற்றல், அவளுடைய மகனான போட்டாப் தாயைக் காட்டில் விடவேண்டாம் என்று சிந்திக்கத் தொடங்கி போட்டுவிட்டு மீண்டும் அழைத்து வரச் செல்வது என அவனது மனக்கொந்தளிப்பை உரையாடலில் மிகச் சிறப்பாகக் கொண்டு வந்திருக்கின்றார்.  அதைப் போலவே, ‘நிலாவொளி’ எனும் மாப்பஸானின் கதையில் அந்நியரொருவருடன் அமர்ந்து நிலவொளி தவழும் ஏரியை ரசித்ததால் தான் களங்கமானவள் என எண்ணி வருந்தும் மனைவியின் மனநிலையைக் குறிப்பிடலாம். இப்படிக் குறிப்பிட்ட சம்பவங்களினால் மனமடைகின்ற மனவெழுச்சியைத் தன்னுரையாடல்களாக நாடகங்களில் அமைத்திருக்கிறார்.

காலந்தோறும் இலக்கியங்கள் வடிவ மாற்றத்தை அடைந்து கொண்டே இருக்கின்றன. வாய்மொழிப்பாடல்களாக இருந்த இலக்கியங்கள் பின்னர் எழுத்து வடிவத்துக்கு மாறியிருக்கின்றது. பின்னர், தொழிற்நுட்ப வளர்ச்சியால் காட்சியாகவும் ஒலி வடிவாகவும் மாறிக் கொண்டே இருந்திருக்கின்றது. அதன் வடிவ மாற்றத்துக்கேற்ப அதன் பரவலாக்கமும் நுட்ப மாற்றமும் நிகழ்ந்து கொண்டே இருந்திருக்கின்றது. பி. கிருஷ்ணன் மொழிபெயர்த்த நாடகங்களில் முதன்மையாகப் பெற்றிருப்பது உயிர்ப்பான உரையாடல்களே எனலாம். நவீனத்துவக் காலக்கட்ட கதைகள் முன்னெடுத்த மனித இருப்பின் மீதான விவாதத்தைத் தமிழில் உயிர்ப்பான காட்சிகளின் வாயிலாக நாடகமாகப் பி. கிருஷ்ணனால் மாற்ற முடிந்திருக்கிறது. குறிப்பாகக், கையறு சூழலை விவரிக்கும் உரையாடல் பகுதிகளைச் சொல்லலாம். ‘நினைவுச்சின்னம்’ சிறுகதையில் பெரும் செல்வந்த குடும்பத்தில் பணிப்பெண்ணாக இருந்த லூக்கெர்யா தனக்கு ஏற்பட்டிருக்கும் கடுமையான நோயால் அவதியுற்று இறப்பின் வாயிலில் இருக்கின்றாள். அவளுக்குச் சிகிச்சை அளிக்க முன்வரும் தனது முன்னாள் முதலாளியின் மகனான பெட்ரோவிச்சின் உதவியை மறுக்கின்றாள். தனது நோயின் கொடுமை அளிக்கும் வேதனை ஒருபுறமிருக்க மறுபுறம் இந்த உலக வாழ்விலிருந்து மீட்டெடுக்க வரும் மீட்பாகவும் சாவைக் காண்கின்றாள். //யாரோ என்னை அழைப்பதுபோல இருக்கிறது…அவர்….அவர்…யார் தெரியுமா…என்னை அழைத்தவர் ஏசு கிருஸ்துதான்……….அஞ்சாதே என்னைத் தொடர்ந்து வா! என்று அழைக்கின்றார்…உயர..உயரபறந்து கொண்டே இருக்கிறேன்…// நோயின் கொடுமையால் கண்களிலிருந்து வெளிப்படும் கண்ணீரைத் துடைக்கக்கூட தெம்பற்று இருப்பவளின் மனக்கண்ணில் வெளிப்படும் மீட்பை மிகுந்த உயிர்ப்புடன் வெளிப்படுத்தும் சொற்களாக மாற்றியிருக்கிறார். ‘முழக்கயிறு’ கதையில் தன் குற்றமின்மையை நிருபிக்க முடியாமல் துவண்டு கிடக்கும் கிழவரின் புலம்பல் பகுதியிலும் இதே உயிர்ப்பான உரையாடலைக் காணலாம். இப்பகுதிகளில் அவை அடையும் உச்சமென்பது மூலக்கதை ஏற்படுத்தும் உணர்வுக்கு நெருக்கமாக அமைந்திருக்கின்றன எனலாம்.

மிகையுணர்ச்சி

இக்கதைகளில் இருக்கும் மிகையுணர்ச்சியான நாடகீயத்தருணங்களையே முன்னிறுத்துவதால் நாடகங்களில் சில பகுதிகள் சற்றே மூலக்கதைகளின் உள்ளடங்கிய தருணத்தைக் குலைப்பதாக அமைந்திருக்கிறது. வெஸ்ஸெலோவாட் கார்ஷின் எழுதிய ‘காணிக்கை’ எனும் கதையில் ரஷியாவின் ரயில்வே துறையில் அடித்தளப் பணியாளராகப் பணியாற்றும் வாஸ்ஸிலி மேலதிகாரிகளாலும் உயரதிகாரிகளாலும் கடுமையான நெருக்கடிக்குள்ளாகிறான். அந்த ரயில்வே துறையில் பணியாற்ற வரும் செமியோன் போரினால் பாதிக்கப்பட்டு நீண்ட காலமாக வேலையின்றி கிடந்தவன். அதனால் கிடைத்த வேலையின் பொருட்டு நன்றியுணர்வுடையவனாகவும் இருக்கிறான். வாஸ்ஸிலி ரயில் தடத்தைத் தகர்த்து ரயில்வே துறையின் மீதான கோபத்தைப் பழிவாங்க காத்திருக்கும்போது, செமியோன் தன்னுடைய கையை அறுத்துச் சட்டையில் ரத்தக்கறை படியச் செய்து கொடியாக அசைத்து ரயிலை நிறுத்தி பல நூறு பேரின் உயிரைக் காக்கிறான். இந்த இறுதி காட்சியின்போது, வாஸ்ஸிலியிடம் மீண்டும் ரயில் தண்டவாளத்தை இணைக்க செமியோன் மன்றாடுகின்றான். அவனது மன்றாட்டத்தைப் பொருட்படுத்தாமல் வாஸ்ஸிலி அங்கிருந்து ஓடுகின்றான். அவன் பல நூறு பேரைக் காத்தவுடன், செமியோனின் தியாகத்தைப் போற்றும் வகையில் வாஸ்ஸிலி இறுதிக் காட்சியில் தன்னுடைய தவற்றை ஒப்புக்கொண்டு நண்பனின் தியாகத்தைப் பற்றிப் புகழ்கிறான்.

இந்தக் கதையை ஆங்கிலத்தில் வாசிக்கும்போது, தன்னைப் பிடித்துக் கொள்ளுங்கள் என வாஸ்ஸிலி சொல்வதுடன் கதை நிறைவடையும். ஆனால், நாடகமாக மாற்றப்படும்போது வாஸ்ஸிலி பேசும் மிகை உணர்ச்சி உரையாடல்கள், தியாகம் எனும் விழுமியத்தை உயர்த்திப் பிடிப்பனவாக அமைகின்றன. ரயிலை நிறுத்தி மற்றவர்களின் உயிரைக் காப்பாற்றும் முயற்சியைச் செமியோன் முன்னெடுக்கும் போதே வாஸ்ஸிலி ஓடிவிடுகின்றான். ரயில் நிறுத்தப்பட்டுத் தன்னுடைய முயற்சி தோல்வியுறும்போது விரக்தியே மேலோங்கியிருக்க இவ்வாறான உரையாடல்கள் எந்த வகையில் அவனது உணர்வைப் பிரதிபலிப்பதாக அமைந்திருக்கின்றன என்ற கேள்வி எழுகிறது.

ஆனால், மிகையுணர்ச்சித் தருணங்களைக் கொண்டு கச்சிதமான நாடகத்தையும் பி. கிருஷ்ணனால் படைக்க முடிந்திருக்கிறது. ஒ ஹென்றி எழுதிய ‘கடைசி இலை’ சிறுகதையைத் தழுவி அமைக்கப்பட்டிருக்கும் நாடகத்தைக் குறிப்பிடலாம். வாடகை வீடொன்றில் இரு பெண் ஓவிய நண்பர்களான ஜோன்ஸியும் ஷூவும் குடியிருக்கின்றனர். அந்த வீட்டின் உரிமையாளரும் ஓவியருமான பெர்மன் எந்நேரமும் வெற்றுத்தாளுடன் மிகச் சிறந்த ஓவியமொன்றை வரைய காத்திருக்கின்றார். நோய்வாய்ப்படும் ஜோன்ஸி வாழ்விச்சையைக் கொஞ்சம் கொஞ்சமாக இழக்கின்றாள்.  அவளது உடல் நலத்தைத் தேற்றி மீண்டெழ ஷு முயல்கின்றாள். இருந்தபோதிலும், அறையில் இருக்கும் சன்னலில் தெரியும் எதிர்வீட்டுச் சுவரில் படர்ந்திருக்கும் இலைகள் உதிர்ந்த கொடியை வெறித்துப் பார்த்துக் கொண்டு மரணத்துக்காக ஜோன்ஸி காத்திருக்கின்றாள். கொடியில் ஒட்டியிருக்கும் கடைசி இலை வீழ்ந்தவுடன் தன்னுடைய உயிரும் பறிபோகும் என எண்ணுகிறாள். கடுமையான மழைப்புயல் வீசியப் போதும் கொடியிலிருக்கும் இலை ஆடாமலும் வீழாமலும் இருக்கிறது. அந்த இலையின் உறுதி, ஜோன்ஸி மீண்டெழ துணைபுரிகிறது. அதன் பின்னர்தான், மூன்று நாட்களுக்கு முன்னர் காய்ச்சலால் வீட்டிலே இறந்த பெர்மனைப் பற்றி ஷு ஜோன்ஸியிடம் குறிப்பிடுகிறாள். முற்றிலும் இலையுதிர்ந்து போயிருந்த கொடியில் ஒட்டியிருந்த கடைசி இலை மிகவும் உயிர்ப்புடன் பெர்மன் வரைந்த இலைதான் என அறிகின்றாள்.  அதுதான் பெர்மன் வரைந்த தலைசிறந்த ஓவியமென்ற வரியுடன் கதை நிறைவடைகிறது. இம்மாதிரியான கதைகள், சிறுகதைகள் அளிக்கும் உணர்வைத் தக்க வைத்திருக்கின்றன எனலாம்.

முடிவு

வானொலி போன்ற பெருந்திரளுக்கான ஊடகமொன்றில் தமிழ் இடம்பெறும்போது, அதன் படைப்பாளர்களுக்கு இரு சாத்தியங்கள் அமைந்திருந்தன. அவற்றில் முதலாவது முன்னரே தமிழில் இருக்கும் இலக்கியப் பண்பாட்டுச் சாரங்களை மீளச் சொல்லுதல் அல்லது வடிவமாற்றம் செய்து படைத்தல். இன்னொரு சாத்தியமாக, வேற்று மொழிப் பண்பாட்டுச் செல்வங்களைத் தமிழில் படைத்துப் பரவச் செய்யுதல். அதுவே  ‘சென்றிடுவீர் எட்டுத் திக்கும் – கலைச் செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்’ எனப் பாரதியார் ஒலித்த அறைகூவலைச் சிறமேற்க்கொள்வதும் கூட. அந்த வகையில், பி. கிருஷ்ணன் நவீன உலக இலக்கியத்தைத் தமிழில் பரவ முயற்சி எடுத்த முன்னோடி ஆளுமை என ஐயமின்றிச் சொல்லலாம்.

மேற்கோள் பட்டியல்

கிருஷ்ணன், பி. (2006). சருகு நாடகத் தொகுப்பு. சென்னை: தமிழ் நிலம் பதிப்பகம்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...