பி. கிருஷ்ணன் சிறுகதைகள்: புதுமையின் ஊற்றுமுகம்

எழுத்தாளர் பி. கிருஷ்ணன் நாடகம், கட்டுரை, கதைகள் எனப் பல்வேறு இலக்கிய வடிவங்களை எழுதிய முன்னோடி படைப்பாளர். புதுமைப்பித்தனின் நேசனான அவர் தன் பெயரைப் புதுமைதாசன் என வைத்துக் கொண்டார். அந்தப் புனைப்பெயரிலேயே அவர் இன்றும் தொடர்ந்து எழுதி வருகின்றார். இன்று அவர் சிங்கப்பூர் வாசியாக அறியப்பட்டாலும், பூர்வீகமாக ஜொகூர் மாநிலத்தைச் சேர்ந்தவர். மேலும், சிங்கப்பூர் மலாயாவிலிருந்து பிரிந்து தனி நாடாக உருவாகும் முன்பிருந்தே அவர் எழுதிவருகின்றார். மிக நீண்ட காலமாகத் தொடர்ந்து எழுதி வரும் அவரின் பல நூல்கள் வெளிவந்துள்ளன. அதிகமும் நாடகத்துறையில் தனிக் கவனம் செலுத்தும் அவரது சிறுகதைகளைப் ‘புதுமைதாசன் சிறுகதைகள்’ என்ற தொகுப்பாக 2015-ல் சிங்கப்பூர் கலை மன்றம் வெளியிட்டுள்ளது. இத்தொகுப்பில் உள்ள கதைகள் வெவ்வேறு காலக்கட்டங்களில் எழுதப்பட்டவை. சில மிகப்பழையவை. ஆகப் புதியவையாக, 1993-ஆம் ஆண்டு எழுதப்பட்ட, ‘ஓய்வு’, ‘உதிரிகள்’ ஆகிய இரண்டு கதைகளும் அமைகின்றன. 1975-ஆம் ஆண்டு எழுதப்பட்ட ‘வெறுமை’, ‘காலக்கணக்கு’ ஆகிய கதைகளும் இத்தொகுப்பில் உள்ளன. மற்ற ஆறு கதைகளும் 1953 முதல் 1956-க்கு இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டவையாகும்.

ஆகவே, இத்தொகுப்பை வாசித்து இன்றைய இலக்கிய மதிப்பீடுகளை வைப்பது பொருந்தாது. மாறாகப் புதுமைதாசனின் சிறுகதைகளை வாசிப்பது அதன் கிளாசிக் தன்மைக்காகவும் மலேசிய சிறுகதைகளின் தொடக்கக்காலம் பற்றிய உரையாடலை நிகழ்த்தவும் ஏதுவாக இருக்கும். புதுமைதாசன் சிறுகதைகள் எழுதப்பட்டு ஐம்பது ஆண்டுகளைக் கடந்து விட்ட நிலையில் அக்கதைகளைப் பற்றிய உரையாடலைத் தமிழ்ச் சிறுகதை வரலாற்றுடன் ஒப்பிட்டுப் புரிந்து கொள்வதே பொருத்தமாக இருக்கும்.

***

தமிழ்ச் சிறுகதைகளின் தொடக்கக்காலம் ஆங்கில எழுத்துலகம் கையளித்த நவீன கதைகூறல் உத்திமுறையைப் பின்பற்றி தொடங்கியது. வடிவத்திலும் கூறுமுறையிலும் உட்பொருளிலும் மரபார்ந்த தமிழ் இலக்கியத்திலிருந்து அது விலகியதன் காரணமாக நவீன இலக்கிய வகைமையாக அது தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டது. சிறுகதை இலக்கியம், அதன் நேரடியான கூறுமுறையால், அன்றைய இளம் வாசகர்களை அதிகம் கவர்ந்தது. அச்சு இதழ்கள் அதிகம் வெளிவந்த சூழலில் வாசகர்களைத் தக்க வைக்கும் பொருட்டு எல்லா இதழ்களும் சிறுகதைகளுக்குப் பக்கங்களை ஒதுக்கின. பாரதியார் பற்ற வைத்த திரி பரபரப்பாகத் தமிழ் இலக்கிய உலகில் பரவிக் கொண்டு வந்தது. இலக்கிய விமர்சகர்கள் வ.வே.சு ஐயரை முதல் சிறுகதை எழுத்தாளர் என்று ஏற்றுக் கொள்கின்றனர். ஆயினும் புதுமைப்பித்தன், கு. ப. ராஜகோபாலன் போன்றோர் திறந்துவிட்ட சாளரத்தின் வழிதான் சிறுகதை எழுதும் கலை பலரையும் பற்றிக் கொண்டது.

தமிழில் சிறுகதைகள் எழுதத் தொடங்கிய காலத்தில் அதன் நவீன தோற்றத்தால் ஈர்க்கப்பட்ட பல தரப்பினரும் கதை எழுதும் முயற்சியில் ஈடுபட்டனர். கலை நயம், சிந்தனைச் செறிவு, உத்திமுறைகள் பற்றிய கூறுகளைவிட உணர்ச்சி வேகம் மிக்க கதைகளையும் பிரச்சார நோக்கு கொண்ட கதைகளையும் எழுதும் தரப்பினர்கள் அதிகமிருந்தனர். சமூகச் சிக்கலை மையப்படுத்திய புனைவுகள் என்ற அளவில் அவை எழுதப்பட்டன. குறைந்த பக்கங்களில் ஒரு சமூகக் கருத்தைப் புனைவின் வழி சொல்லும் முயற்சியாக அக்கதைகள் அமைந்தன. காதல், திருமணம், குடும்ப உறவு பற்றிய கதைகளும் அதிகம் எழுதப்பட்டன. பிற்காலத்தில் மொழி அறிஞராக வாழ்ந்த மறைமலையடிகளும் ஆன்மீகவாதியாகச் செயல்பட்ட சுத்தானந்த பாரதியும்கூட சிறுகதைகளை எழுதியுள்ளனர் என்பதிலிருந்து சிறுகதை எழுதும் ஆர்வம் அக்காலக்கட்டத்தில் எழுத்துத் துறையில் ஈடுபட்ட எல்லாரையும் தூண்டியுள்ளது என்று புரிந்து கொள்ளலாம்.

தொடக்கக்கால தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர்கள் மேற்கத்திய இலக்கியவாதிகள் முன்வைத்த சிறுகதை இலக்கணத்தை அடியொற்றியே தங்கள் படைப்புகளை எழுதினர். மாப்பசான், செகாவ், மாக்சிம் கார்க்கி போன்ற புகழ் பெற்ற எழுத்தாளர்களின் தாக்கம் தமிழ்ச் சிறுகதைகளில் அதிகம் இருந்தது.

l சிறுகதை என்பது உட்கார்ந்து ஒரே மூச்சிலேயே படித்துவிடக் கூடியதாக இருத்தல் வேண்டும்.
l சிறுகதைகள் 2000 அல்லது 3000 சொற்களுக்கு மேல் இருக்கக் கூடாது.
l அரை மணி அல்லது ஒரு மணிக்குள் படிப்பதற்கு நேரம் எடுத்துக்கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும்.

போன்ற வடிவம் சார்ந்த அறிவுறுத்தல்களுக்கு ஏற்பவே அச்சிறுகதைகள் எழுதப்பட்டன. மேலும் அச்சு இதழின் பக்கக் கட்டுப்பாடும் இதில் சேர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அக்காலச் சிறுகதைகளின் உள்ளடக்கமும் சில விதிகளைக் கொண்டிருந்தன. அவற்றில் சில:

l சிறுகதைகளில் ஒரே நோக்கமும் ஒரே விளைவும்தான் எதிர்பார்க்கப்படுகின்றன.
l சிறுகதை எழுத்தாளர்கள் சிக்கலான பெரிய செய்திகளைப் பொருளாக எடுத்துக்கொள்ளக் கூடாது.

பொதுவாக அக்காலத் தமிழ்ப் படைப்புகளைக் கலை நயம் கொண்ட படைப்புகள், புரட்சியும் முற்போக்கும் கொண்ட படைப்புகள், லட்சியவாதம் மிகுந்த கதைகள் என பிரித்துப் புரிந்து கொள்ளலாம். ஆயினும் முற்போக்கு, தேசிய எழுச்சி போன்ற தளங்களில் எழுதப்பட்ட கல்கி, சி. என் அண்ணாதுரை போன்ற எழுத்தாளர்களின் படைப்புகளில் இல்லாத எதார்த்தமும் தீவிரமும் புதுமைப்பித்தன் எழுத்துகளில் வெளிப்பட்டதால் அவை நவீன எழுத்தின் தனித்த அடையாளமாக நிலை பெற்றன. இதன் அடிப்படையிலேயே வெகுஜன கதைகள், சிற்றிதழ் மரபு என்ற போக்குகள் வளர்ந்தன.

***

மலாயாவின் தொடக்கக்கால சிறுகதைகள் முற்றிலும் தமிழ்நாட்டு பின்னணியிலும் சமூக நோக்கும் லட்சியவாதமும் மிளிரும் கதைகளாகவும் எழுதப்பட்டதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மலாயாவில் 1924ஆம் ஆண்டு ‘தமிழ் நேசன்’ நாளிதழும் 1930ஆம் ஆண்டு ‘தமிழ் முரசு’ நாளிதழும் வெளிவரத்தொடங்கின. அவை தொடர்ந்து சிறுகதைகளை வெளியிட்டன. அதிகமும் தமிழ்நாட்டுப் படைப்பாளிகளின் படைப்புகளும் சில உள்நாட்டு எழுத்தாளர்களின் கதைகளும் வெளிவந்தன. தமிழ் முரசு சிறுகதை சிறப்பிதழ்களை வெளியிட்டுள்ளது. ஆயினும் அந்த இரண்டு நாளிதழ்களும் வெளிவரத் தொடங்கி முப்பது ஆண்டுகள் கழித்து அதாவது 1950ஆம் ஆண்டுகளில்தான் முழு மலாயா மண் மணம் கொண்ட சிறுகதைகள் வெளிவரத் தொடங்கின என எழுத்தாளர் சை. பீர்முகமது குறிப்பிடுகின்றார். அதே நேரம் 1971-ல் அதாவது தமிழ் நேசன் நடத்திய பவுன் பரிசு போட்டிக்குப் பிறகுதான் முழுமையான தோற்றத்துடனும் வடிவமைப்புடனும் மலேசிய சிறுகதைகள் வெளிவரத்தொடங்கின என்ற கருத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

ஆகவே எழுத்தாளர் பி. கிருஷ்ணன், மலாயா மக்களின் வாழ்வியலைப் பேசும் சிறுகதைகளை மலாயா எழுத்தாளர்கள் எழுதத் தொடங்கிய காலக்கட்டத்தைச் சார்ந்த மூத்த படைப்பாளி என அடையாளப்படுத்தலாம். அக்காலக்கட்ட சிறுகதைகளின் எழுத்து நடையையும் கூறுமுறையையும் சார்ந்தே படைப்புகளை அவர் எழுதியுள்ளார். நவீன எழுத்துமுறை வலியுறுத்திய எளிய வாக்கிய அமைப்புகளிலும் அடங்கிய குரலிலும் எழுதப்பட்டவை அவர் சிறுகதைகள். அதே நேரம் மலாயாவின் தோற்றத்தையும் வாழ்வியலையும் தமிழ்ச் சிறுகதைகளுள் கொண்டுவர அவை முயன்றுள்ளன. ‘வாழமுடியாதவள்’(1953), ‘தெளிவு’(1953), ‘பரோபகாரி’(1952) ஆகிய மூன்று சிறுகதைகளும் அதற்குச் சிறந்த உதாரணங்களாகும்.

‘பரோபகாரி’ சிறுகதை சிங்கப்பூர் நகரில், பிழைப்புத் தேடி வரும் தமிழ்நாட்டு இளைஞர்களும் குடும்பங்களும் சேர்ந்து வாழும் ஒண்டுக்குடித்தன வாழ்க்கையைச் சித்தரிக்கிறது. ஒற்றைப் பாய் படுக்கையோடு வரும் தொழிலாளர்கள் செல்வச் செழிப்புடன் நாடு திரும்பும் நிலை உள்ளது. அத்தகைய ஒண்டுக்குடித்தனத்தில் வாழும் ஒரு பெண்ணின் ஒழுக்கக்கேடு பற்றிய கதைதான் ‘பரோபகாரி’. ‘நச்சரவு’ கதையும் நல்லவள் போல நடித்துத் தனிமையில் வாழும் ஆணை ஏமாற்றிய சிங்கப்பூர் நகர்புறப் பெண் ஒருத்தியின் கதை என்பது கவனிக்கத்தக்கது. இந்த இரண்டு சிறுகதைகளிலும் ஒழுக்க வாழ்வைப் பெரிதாக நினையாத இரண்டு சிங்கை நகரப் பெண்களை அவர் காட்டியுள்ளார். ஆனால், அவர்கள் வறுமையினால் வாடும் தரப்பினர் அல்ல மாறாக உல்லாசத்தையும் சொகுசான வாழ்வையும் விரும்பி உடலை மூலதனமாக்கி கொண்ட பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

‘வாழமுடியாதவள்’ சிறுகதையும், ‘தெளிவு’ சிறுகதையும் மலாய் பெண்ணையும் சீனப் பெண்ணையும் நாயகிகளாகக் கொண்ட கதைகள். ‘வாழமுடியாதவள்’ சிறுகதையில் மலாயாவுக்குச் சிறுவயதில் வந்து, நீண்ட நாட்கள் தனியாளாக வாழ்ந்து வரும் கண்ணுசாமி தன்னைப் போலவே ஆதரவற்று வாழும் மலாய் பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறான். பிறகு அவளையும் அழைத்துக் கொண்டு தமிழ்நாட்டில் உள்ள கிராமத்திற்குச் செல்லும் அவன், தன் பெற்றோரின் பணத்தாசையையும் துர்குணத்தையும் அறிந்து கொள்கிறான். அவர்களின் கொடுமை தாளாமல் அந்த மலாய் பெண் தற்கொலை செய்து கொள்கிறாள். மனமுடைந்த கண்ணுசாமி மீண்டும் சிங்கப்பூருக்கே வந்து தனிமையில் வாழ்கிறான். இக்கதை ரத்த உறவுகளைவிட அயல் நாட்டில் வேற்று இனத்தாரின் அன்பைப் பெரிதென்று காட்ட முயலும் கதையாகும். அதே நேரம் சொந்த உறவுகளிடம் கொள்ள முடியாத அன்பின் நெருக்கம் வேற்று இனத்தவருடன் அமையும் சாத்தியத்தையும் இக்கதை விவரிக்கின்றது.

‘தெளிவு’ சிறுகதையில் ஆதரவற்று கல்லுடைத்து வாழும் முருகன் ஒரு சீனப் பெண்ணைச் சந்திக்கிறான். அவளும் அவனைப் போன்றே உறவுகள் அற்ற ஏழைப் பெண். அவர்களிடையே காதல் மலர்ந்து இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர். அதன் பிறகு அவர்களின் பொருளாதாரம் மேம்படுகின்றது. ஆனால், முருகன் குடிப்பழக்கத்திற்கு ஆளாகி தன் மனைவியுடன் தகராறு செய்கின்றான். முருகன் தன் மனைவியின் மீது சந்தேகம் கொண்டு சண்டை வளர்ப்பதால், அவள் கோபத்தில் அவன் மேல் பொருளை வீசுகிறாள். இதனால் தலையில் காயமேற்பட்டு முருகன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னர், இருவரும் தங்கள் தவறுகளை உணர்ந்து சமாதானம் ஆகின்றனர். பிற இனப் பண்பாடுகளையும் பழக்க வழக்கங்களையும் புரிந்து கொள்ளாமல் தவறான முடிவுகளுக்குச் செல்லக் கூடாது என்பதே இக்கதையின் கருத்தாக அமைகின்றது.

மேற்கண்ட நான்கு கதைகளிலும் ஆசிரியர் பெண்களின் பல்வகை குணங்களைச் சித்தரிக்க முயன்றுள்ளார். ‘பரோபகாரி’ கதையிலும் ‘நச்சரவு’ கதையிலும் அழகையும் அன்பையும் ஆயுதமாக்கி ஆண்களைக் கவரும் பெண்களையும், ‘வாழமுடியாதவள்’ கதையில் அன்புக்காகத் தங்கள் வாழ்க்கையை மாய்த்துக் கொள்ளக் கூடிய எல்லைக்குச் செல்லும் பெண்களையும் அவர் கதைப் பாத்திரங்களாக்கியுள்ளார். இவற்றுக்கு மாறாக, அன்பின் பொருட்டு வன்முறையைக் கையில் எடுக்கும் பெண்ணைத் ‘தெளிவு’ சிறுகதையில் அமைத்துள்ளார்.

இக்கதைகளில் மற்ற இன மக்களின் வாழ்க்கை முழுமையாகச் சித்தரிக்கப்படவில்லை. ஆனால், வழக்கமான தமிழ்ச் சூழலில் இருந்து வெளியேறி, ஒரே நிலத்தில் ஒன்றாக வாழும் மற்ற இன மக்களையும் தமது கதைகளில் கொண்டுவர வேண்டும் என்ற அடிப்படையான திட்டத்தின் வெளிப்பாடாக இக்கதைகள் அமைகின்றன. அதே நேரம், மலேசிய மண் வாசனை மிக்க கதைகளின் தொடக்கமாகவும் இக்கதைகள் அமைகின்றன.

இக்கதைகள் எழுதப்பட்டு வெகு காலம் சென்று 1993ஆம் ஆண்டில் எழுதப்பட்ட ‘உதிரிகள்’ என்ற சிறுகதை, சிங்கப்பூரில் வாழும் மூன்றாம் அல்லது நான்காம் தலைமுறை மக்களின் சமூகச் சிக்கல் ஒன்றை வெளிப்படுத்தும் கதையாக அமைந்துள்ளது. முறையான கல்வியும் பொருளாதாரமும் அற்ற இளைஞர் குழுக்கள் பொது இடத்தில் அநாகரீகமாக நடந்துகொள்வதோடு சட்டவிரோத செயல்களிலும் ஈடுபடுவதைப் பற்றிய கதையாக இக்கதை எழுதப்பட்டுள்ளது. தமிழையும் மறந்து கொச்சை மலாயில் அவர்கள் பேசிக்கொள்வதாகப் பி.கிருஷ்ணன் சித்தரிக்கிறார். தன் மகள் ஓர் ஊதாரி இளைஞனிடம் கொண்ட காதலால் பெற்றோரைப் பகைத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்துக்குப் பிறகு சாமிநாதன் அவ்வாறான இளைஞர் கூட்டத்தினரை முற்றாக வெறுத்து ஒதுக்குகிறார். அவர்களின் முறையற்ற செயலை உடனுக்குடன் கண்டிக்க முயன்று ஆபத்துகளைச் சந்திக்கிறார். இறுதியில் இளைஞர் குழு ஒன்றால் சாமிநாதன் கொலையும் செய்யப்படுகின்றார். இக்கதை சிங்கப்பூரில் தங்கள் சொந்த பண்பாட்டையும் மொழியையும் மறந்து, மனம் போன போக்கில் வாழும் இளம் தலைமுறையை விமர்சிக்கின்றது.

1993க்குப் பிறகு பி. கிருஷ்ணன் எழுதிய இன்னொரு சிறுகதையான ‘ஓய்வு’ முறையாக ஆராயாத முதலீட்டினால் ஏற்படும் ஆபத்தை மையமாகக் கொண்டுள்ளது. தன் சேமநிதி பணத்தைப் பங்குச்சந்தையில் முதலீடு செய்து அதனால் பெரும் இழப்பைச் சந்திக்கும் கதிரேசனின் துயர முடிவைக் கதையாக்கியுள்ளார். இதற்கு 1987ஆம் ஆண்டு நடந்த சிங்கப்பூர் பங்குச் சந்தை சரிவையும் அதன் கடும் விளைவையும் பின்னணியாகக் காட்டியுள்ளார். இவ்விரு கதைகளையும் முன்னைய கதைகளுடன் ஒப்பிடும் போது பி.கிருஷ்ணன் தன் கதைக் கருவில் மாற்றம் செய்துள்ளார் என்று புரிந்துகொள்ள முடிகின்றது. குடும்பம், ஆண்பெண் உறவு பிசிக்கிலிருந்து விடுபட்டுச் சமூகச் சிக்கல்களை அவர் இந்தக் காலக்கட்டத்தில் மையப்படுத்தியதாகத் தோன்றுகிறது

***

பி. கிருஷ்ணன் சில கதைகளில் நிலக்காட்சிகளைத் தெளிவாகச் சித்தரித்துள்ளார். ‘வெறுமை’ சிறுகதையில் அன்றைய சிங்கப்பூர் நகரமும் கட்டிடங்களும் அழகாகக் காட்டப்படுகின்றன. இரண்டாம் உலகப்போர், ஜப்பானிய ஆக்கிரமிப்பினால் உள்ளூர் மக்களுக்கு நேர்ந்த துயர் என வரலாற்றுச் சம்பவங்களும் ‘வாழமுடியாதவள்’ சிறுகதையில் பின்னணியாகப் பேசப்படுகின்றது. //காப்பிக்கடை, கால்கட்டை ஒலிகளால் கலகலத்துக் கொண்டிருந்தது. ரிடிஃப்பூஷனிலிருந்து சீனச் செவ்விசை வாடிக்கையாளர்களின் அசுரத்தனமான கத்தல்களையெல்லாம் விழுங்கி ஏப்பம் விட்டுக் கொண்டிருந்தது. ஒரு ‘கோப்பி ஓ’வை வாங்கி வைத்துக் கொண்டு ஒன்பது மணிநேரத்தைத் தின்று தீர்த்துக் கொண்டிருந்த அந்தக் கூட்டம்….//(நச்சரவு-1953) என்பன போன்ற கூர்மையான சித்தரிப்புகள் மலாயா இலக்கியத்தில் வலிமை சேர்ந்த கூறுகளின் அடையாளம் என்பதை மறுக்க முடியாது.

பி. கிருஷ்ணனின் சிறுகதைகளில் சில ஒற்றுமைகளைக் காண முடிகிறது. முதலாவது, அவரின் கதை மாந்தர்கள், ஆதரவற்றவர்களாக இருக்கின்றனர். ‘தெளிவு, ‘வாழமுடியாதவள்’, ‘உதிரிகள்’, ‘வெறுமை’, ‘நச்சரவு’ எனப் பல கதைமாந்தர்கள் ஆதரவற்றவர்களாக அல்லது குடும்பத்தை இழந்தவர்களாகப் படைக்கப்பட்டுள்ளனர். பி. கிருஷ்ணன் தன் சொந்த வாழ்க்கையில் ஒன்பது வயதில் பெற்றோரைப் பிரிந்தார். ஒரு சாலை விபத்தில் நினைவை இழந்து தன் அடையாளங்களை மறந்த அவர் ஜொகூர் மருத்துவமனையில் கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் தங்கி தன் கால் முறிவுக்குச் சிகிச்சை பெற்றார். அதன் பிறகு ஒரு தாதியின் பாதுகாப்பிலும் பின்னர் பதினான்கு வயதில் சிங்கப்பூரில் மளிகைக்கடையிலும் ஜவுளிக்கடையிலும் சிப்பந்தியாக வேலைக்குச் சேர்ந்தார். தன் இளமை முழுவதையும் அவர் உறவினர் துணையின்றி தனிமையிலேயே கழித்தார். ஆகவே, தன் சொந்த வாழ்க்கையின் அடர்ந்த அனுபவத்தின் தாக்கம் பல கதைமாந்தர்களிலும் வெளிப்பட்டிருப்பதாகவே தோன்றுகின்றது.

அடுத்ததாக, குடும்பத்தை இழந்த தனிமையின் கழிவிரக்கமே சில கதைகளின் மையமாக உள்ளது. ‘வாழமுடியாதவள்’ கதையில் அன்பான மனைவியைத் தன் சொந்த கிராமத்தில் இழந்த கண்ணுசாமி மீண்டும் ஆதரவற்றவனாகச் சிங்கப்பூரில் அலைகின்றான். ‘தனிமை’ என்ற கதையில் தன் மகனின் முதலாம் ஆண்டு பிறந்த நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாட கடற்கரை வரும் சந்தானம் சாலை விபத்தில் தன் மனைவியையும் தன் மகனையும் பறிகொடுப்பதோடு தன் கால் ஒன்றையும் இழக்கிறார். அத்துயரச் சம்பவத்திற்குப் பின்னர் சந்தானம் மிகப் பெரிய தனிமை சிறையில் உழல்பவராகிவிடுகின்றார். அச்சம்பவத்தின் நினைவேக்கத்திலேயே அவர் தினமும் கடற்கரைக்கு வந்து கல் நாற்காலியில் அமர்ந்திருந்து எழுந்து செல்கிறார். ‘ஓய்வு’ சிறுகதையில் பணி ஓய்வுக்குப் பின் தன் சேமநிதி பணத்தைப் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய முயன்ற கதிரேசன் அதில் பலத்த தோல்வி கண்டு மனம் உடைந்து மாரடைப்பால் இறந்து போகிற சம்பவமே கதையாகியுள்ளது. ‘நச்சரவு’ சிறுகதையில் தன்னை ஏமாற்றிவிட்டுப் புதிய ஆணுடன் சென்ற மனைவியின் துயரோடு அவளால் ஏற்பட்ட ராஜபிளவை நோயினால் தன் வாழ்க்கை சிதைந்து கொண்டிருக்கும் துயரத்தையும் தாங்க முடியாமல் சுந்தரம் அவதிப்படுகின்றார். ‘காலக்கணக்கு’ கதையில் சோதிடர் சுந்தரலிங்கத்தின் கணிப்புகளில் சதாசிவம் வைத்திருந்த அபார நம்பிக்கை தன் மனைவியின் மரணத்தின் முன் பொய்யாகிவிட்டதை நினைத்துச் செயலிழந்து நிற்பதாக முடிகின்றது.

ஆயினும் பி. கிருஷ்ணன் கதைகளில் காணப்படும் இவ்வகை அவல முடிவுகளும் தனிமையின் தொல்லைகளும்தான் அவரின் கதைகளை அன்றைய காலக்கட்ட கதைகளில் தனித்துவமிக்கவையாக ஆக்குகிறது. லட்சியவாதங்களையும் பிரச்சார நோக்கங்களையும் பேசிய அன்றைய மலாயா சிறுகதைகளில் இருந்து மாறுபட்டு அவர் கதைகளை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பி. கிருஷ்ணனின் சிறுகதைகளில் காணப்படும் மற்றுமொரு ஒற்றுமை அக்கதைகளில் வரும் பல கதைசொல்லிகள் பரந்த இலக்கிய வாசிப்பும் கலை ஈடுபாடும் கொண்டவர்களாக உள்ளனர். காண்டேகரின் தீவிர வாசகர், அப்பர் தேவாரத்தில் ஆழ்ந்த புலமை உள்ளவர், ஆங்கில நாவல் வாசகர்கள் எனப் பலர் கதைசொல்லிகளாக வருகின்றனர். இதுவும் கூட பி. கிருஷ்ணனின் பரந்த வாசிப்புப் பழக்கம் கொடுத்த உந்துதலாக இருக்கலாம்.

பி. கிருஷ்ணனின் எல்லா சிறுகதைகளும் வெகு எளிமையாகத் தொடங்கி சட்டென கதைக்குள் நுழைந்து விடுகின்றன. நவீன இலக்கியம் வலியுறுத்திய சுருக்கமான வாக்கிய அமைப்புகளும் சுருக்கமான உரையாடல்களும் கதையை நகர்த்திச் செல்கின்றன. கதைசொல்லி இன்னொருவரைச் சந்திக்கிறார். அவர் முன்பு என்றோ அறிமுகமானவராக இருக்கிறார் அல்லது முற்றிலும் புதியவராக இருக்கிறார். சில சொற்களில் கதைசொல்லிக்கும் புதிய நபருக்கும் அறிமுகம் ஏற்பட்டுவிடுகிறது. உடனே அந்தப் புதியவர் தன் கடந்த காலத்தைக் கதையாகச் சொல்லிவிடுகின்றார். கடந்த காலக் கதையே சிறுகதையாக அமைந்துவிடுவதைப் பல கதைகள் கூறு முறையாகக் கொண்டுள்ளன. அடுத்தவர்களின் வாழ்க்கை அவலங்களை வாசகனுக்கு விளக்கிச் சொல்லும் தோரணையோடு வாழ்க்கை அவ்வளவு சுலபமானது அல்ல என்ற மனோவியலும் இக்கதைகளின் சாரமாக உள்ளன.

புதுமைதாசன் சிறுகதைகள் பத்தையும் வாசித்து முடிக்கும்போது பி. கிருஷ்ணன் உண்மையில் (அக்காலக்கட்டத்தில்) புதுமையான எழுத்து முறையின் மேல் கொண்ட ஈடுபாட்டில் தன் புனைப்பெயரை அமைத்துக் கொண்டவர் என்ற முடிவுக்கு வர முடியும். எம்.ஜி.சுரேஷ் சொல்வது போல அந்தப் புதுமையான சிந்தனை புதுமைப்பித்தன் மீது கொண்டிருந்த ஆழ்ந்த ஈடுபாட்டினால் உருவாகியிருக்கலாம். அதனினும், இன்றைய காலக்கட்டத்தில் எழுதப்படும் மலேசிய சிங்கை பண்பாடுகளின் ஊற்றுமுகத்தை அவர் கதைகளில் காண முடிகின்றது. மிக முக்கியமாக மலாயா மண்ணின் வாசம் படிந்த கதைகளை அவர் தன் எழுத்தில் வெளிக்கொணர முயன்றார் என்பதே முக்கியமானதாகும்.

மேற்கோள் நூல்கள்
புதுமைதாசன்.(2015). புதுமைதாசன் கதைகள். சிங்கப்பூர்:கிரிம்சன் ஏர்த் பதிப்பகம்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...