ரத்தம், கண்ணீர், சொற்கள் – பி. கிருஷ்ணன் மொழிபெயர்த்த ஷேக்ஸ்பியரின் மூன்று நாடகங்கள்

2016ஆம் வருடம் நாங்கள் லண்டனுக்கு அருகில் ஏவன்  நதிக்கரையில் அமைந்துள்ள ஸ்ட்ராட்போர்ட் என்ற ஊரில், ஷேக்ஸ்பியரின் இல்லத்தைப் பார்க்கப் போயிருந்தோம். அக்காலத்தைய கணக்கில் அது ஒரு நடுத்தர வர்க்க வீடு. இப்போதைய அளவுகோலில் சற்று வசதியான இல்லம்தான். அவ்வீட்டில் அவரது தந்தை கையால், பாதி தைக்கப்பட்ட தோல் செருப்பைப் பார்வைக்கு வைத்திருந்தனர். அது எனக்கு அப்போது புழக்கத்தில் இருக்கும் இல்லமாகத் தோன்றியது. புராதன வீடு எதனால் நம் மனதிற்கு இவ்வளவு நெருக்கமாகிறது என்று யோசித்துக் கொண்டேன். அது எப்படியோ நிகழ்காலத்தின் உயிர்ப்பைப் பெற்றுள்ளதாக மாறிவிடுகிறது. அதுபோலவே ஷேக்ஸ்பியரை வாசிக்கும்போதும் அவரை எந்த ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்திற்கான படைப்பாளியாகச் சுருக்கி விட முடியாது என்றே தோன்றுவதுண்டு. அவர் எக்காலத்திற்கும் பொதுவானவர் என்பது பரவலாக எல்லோராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய கூற்று.

ஷேக்ஸ்பியர் 1564இல் இங்கிலாந்தில் லண்டனுக்கு அருகில் உள்ள ஸ்ட்ராட்ஃபோர்ட் என்னும் ஊரில் பிறந்தார். அது ஏவன் நதிக்கரையில் உள்ளது. அவர் பெரிய நிலச்சுவான்தார் அல்ல எனினும் ஒரு புகழ்பெற்றக் குடும்பம் எனலாம். அவர் காலத்தின் இலக்கிய வடிவமாகத் திகழ்ந்தவை நாடகங்களே. மேடையில் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் முன்னிலையில் அவை நிகழ்த்தப்பட்டன. அது புகழ்பெற்ற ஒரு நிகழ்த்துக்கலையாக இருந்ததனால் ஷேக்ஸ்பியருக்கு அவர் வாழும் காலத்திலேயே மிகப் பெரும் புகழைப் பெற்றுத் தந்தது. அவர் தன் காலத்தில் புகழின் உச்சியில் இருந்த ஒரு நட்சத்திரம்.

அவர் மொத்தம் 37 நாடகங்களையும் 154 ‘சொனட்டா’ எனப்படும் 14 வரி செய்யுள் கவிதைகளையும் எழுதியுள்ளார். அதில் துன்பியல் நாடகங்கள், இன்பியல் நாடகங்கள், சோகமாக ஆரம்பித்து இனிமையில் முடியும் துன்பயின்பியல் நாடகங்கள் உள்ளன. அரசியல் நாடகங்கள், காதல் நாடகங்கள், பகடி நாடகங்கள், வரலாற்று நாடகங்கள் போன்றவை அடங்கும்.

ஆனால், இவை அனைத்திலும் எல்லா விமர்சகர்களாலும் கொண்டாடப்படுபவை ‘மெக்பெத்’, ‘ஹாம்லெட்’, ‘ஒதெல்லோ’, ‘கிங் லியர்’. இவற்றில் எல்லா நாடக அம்சங்களுக்கும் அப்பால் வாழ்வின் அரிய தருணங்களும் ஆழ்மனத்தின் இச்சைகளும் மானுட விழைவுகளும் வெறுப்பும் பயமும் பல பரிமாணங்களில் காட்டப்படுகின்றன. எல்லாவற்றையும் தொகுக்கும் தத்துவப் பின்புலமும் இவற்றுக்கு அமையப்பெற்றுள்ளன. காலம் எப்படி மாறினாலும் அடிப்படை மானுட உணர்ச்சிகள் உலகப் பொதுவானவை என்பதால் இவை எக்காலத்திற்குமாக நிலை கொள்கின்றன.

‘நாடகாந்தம் கவித்வம்’ என ஒரு சம்ஸ்கிருதப் பழமொழி உண்டு. நாடக உச்சமே கவித்துவமாக அமைய முடியும் என்னும் நம்பிக்கை பழைய இலக்கிய மரபுகளில் உண்டு. நாடகீயத் தருணங்கள்தான் பார்வையாளர்களை உடனடியாகத் தீண்டி உணர்ச்சி உச்சங்களை அவர்களில் நிகழ்த்துகின்றன. ஆனால் அதிலும் ஷேக்ஸ்பியர் தன் படைப்புத் திறனால் பல தளங்களைத் தொடுகிறார். கதாபாத்திரங்களின் அக ஆழங்கள், உள் மோதல்கள், முரண்கள் எனப் பல அடுக்குகள் அவர் நாடகங்களில் வெளிப்படுத்தப்படுகின்றன. நமக்கு நேரிடையாகப் புலப்படும் ஒவ்வொரு அடுக்கையும் மீறி மறைபிரதி எனக் கூறப்படும் பல தளங்கள் தொடர்ந்து வெளிப்பட்டு நம்மைத் திகைக்கச் செய்கின்றன. மனிதனின் இன்னதென்றறியாத காம, குரோத மோகங்கள் நேரடியாக நம் முன் காட்சியாகும்போது நாம் சொல்லிழந்து விடுகிறோம்.

பிரிட்டிஷ் சோக நாடகங்களுக்கு முன்னோடிகள் கிரேக்க நாடகங்கள் எனலாம். சோஃபாக்கிளிஸ், யுரிபைடஸ் என்பவர்களின் கிரேக்க நாடகங்கள் பெரும்பான்மையானவைச் சோக நாடகங்களே. அவை அனைத்தும் தெய்வத்தின் கைகளில் சிக்கிய பகடைக் காய்களாக மனிதனை உருவகம் செய்கின்றன. தெய்வங்கள் தங்களின் ஆணவப் போர்களுக்கு  எளிய மனிதனைக் கருவியாக்குகின்றன. விதியின் அல்லது ஊழின் கைகளில் சிக்கிய பகடைகளே மனிதன். ஷேக்ஸ்பியர் கிரேக்கச் செவ்வியல் நாடக மரபின் நீட்சி எனலாம். அவருடைய அத்தனை நாடகங்களையும் இணைத்து ஒற்றைப் பெருங்காவியமாகக் கொள்ளலாம் என்னும் கருத்தை முன்வைக்கும் டி. எஸ். எலியட், அவை கிரேக்க மரபின்படி ஊழின் ஆற்றலை முன்வைப்பவைதான் என்று சொல்கிறார். ‘மெக்பெத்’, ‘ஹாம்லெட்’, ‘கிங் லியர்’, ‘ஒதெல்லோ’ நான்குமே ஊழின் விளையாட்டைச் சொல்பவைதான்.

புதுமைதாசன் என்னும் புனைபெயரில் நமக்கு அறிமுகம் ஆகும் பி. கிருஷ்ணன் அவர்கள்  முறையாகப் பழந்தமிழ் இலக்கியங்களைப் பயின்றவர். இவர் ஷேக்ஸ்பியர் மேல் கொண்ட ஆழ்ந்த ஈடுபாட்டினால் தன் முப்பதாவது வயதிலேயே அவரது நாடகங்களை மொழிபெயர்க்கத் தொடங்கினார். இவர் வானொலியில் வேலை செய்ததனால் முதலில் அந்த வடிவத்தில் மொழிபெயர்த்தார். ஆனால், ஒரு உண்மையான கலைஞன் தனக்குப் பிரியமான ஆதர்சமான ஒரு முன்னோடியைத் தன் திறன் அனைத்தையும் தந்து தன் மொழிக்கும் பண்பாட்டுக்கும் கொண்டுவர விரும்புவான். அந்தத் தணியாத ஆவல் அவரை உந்தியதால் மீண்டும் முறையாகப் புத்தக வடிவில் அதை வெளியிட எல்லாவகையிலும் மூலத்துக்கு நியாயம் செய்யும் ஒரு மொழிபெயர்ப்பை 1995ல் செய்தார். முதலில் ‘மெக்பெத்’ நூலாக வெளியானது. அது மக்களிடம் பெற்ற வரவேற்பால் ஆவல் மேலும் தூண்ட அடுத்தடுத்து ஷேக்ஸ்பியரின் புகழ்பெற்ற ஏழு நாடகங்களை மொழிபெயர்த்தார் .

இக்கட்டுரையில் எடுத்துக்கொண்ட படைப்புகளைப் பார்க்கும்போது அவர் எடுத்துக்கொண்ட சிரத்தையும் உழைப்பும் அக்கறையும் தெரிகிறது. ஒருவர்  எண்பது வயதுக்குமேல் இத்தகைய முயற்சியை மேற்கொள்வது என்பதே அவரை வணங்கச் செய்கிறது.

***

ஷேக்ஸ்பியரை மொழிபெயர்ப்பதில் உள்ள சவால் என்பதே அவருடைய செய்யுள் நடையின் செவ்வியல் தன்மை கொஞ்சமும் குறையாமல் அதே சமயம் நமது செய்யுள் வடிவத்துக்கு அணுக்கமான ஒரு நடையில் அதை மொழிபெயர்ப்பதுதான். அந்த நடையின் தாளம் இவரது நடைக்கு மெருகூட்டுகிறது. இவரது மொழிப்புலமையால் மட்டுமே அதைச் சாதிக்கிறார்.

ஷேக்ஸ்பியரின் நடையில் ஒரு காவியச் சாயல் உண்டு. அது அந்த நாடகங்களுக்கு ஒரு தனித்துவமான அழகியல் கூறினை அளிக்கிறது. அது யதார்த்த தளத்திலிருந்து அந்நாடகங்களை மேலெழச் செய்கிறது. அச்சுவையினைச் சிறிதும் குறைவுபடாமல் புதுமைதாசன் தருகிறார்.

ஷேக்ஸ்பியரை மொழிபெயர்க்க அவர் படைப்புகளை முழுமையாகக் கற்றுத் தோய வேண்டும் என்பார்கள். அப்போதுதான் அதன் சாரம் குன்றாமல் சுவைபட மொழிபெயர்க்க முடியும். ஷேக்ஸ்பியரின் எட்டு நாடகங்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ள பி. கிருஷ்ணன் சிறு வயதிலிருந்தே அதைக் கற்றுத் தேறியதால் சிரமம் எதுவுமின்றி அதைச் சாத்தியமாக்கியுள்ளார்.

இங்குப் பேசப்படுபவை ‘மெக்பெத்’, ‘ஒதெல்லோ’, ‘ஜுலியஸ் சீசர்’ ஆகிய மூன்று நாடகங்கள். ஷேக்ஸ்பியரின் நாடகங்களில் உயர்குடிகள், அரசர், பிரபு குலத்தவர் அனைவரும் இலக்கண அமைப்புடன் கூடிய செய்யுள் நடையிலேயே உரையாடுகின்றனர். மற்ற வேலைக்காரர்கள், சாதாரண படைவீரர்கள் அனைவரும் அன்றைய அன்றாட உரைநடையில் பேசிக்கொள்கின்றனர். இந்த வேறுபாட்டைத் தன் மொழிபெயர்ப்பில் நேர்த்தியாகக் கையாண்டுள்ளார் ஆசிரியர் .

***

‘மெக்பெத்’ ஸ்காட்லாந்தில் நடக்கும் கதை. ஒரு தளபதி தன்னுடைய  மன்னனைக் கொன்று அரச பதவியைக் கைப்பற்றிய நிகழ்வு பத்தாம் நூற்றாண்டில் நடந்ததாகக் கூறப்படுகிறது. அதை ‘ஹோலின்ஷெட் க்ரோனிக்கல்ஸ்’ என்ற கதையிலிருந்து எடுத்துக்கொண்டு அதன் சாயலில் ‘மெக்பெத்’ எழுதப்பட்டதாகக் கூறப்படுகிறது. மூலக்கதை மிகத் தட்டையான சம்பவ அடுக்குகளிலானது. அது ஷேக்ஸ்பியரால் எழுதப்படும்போது மனிதனை மீறியே அவன் வாழ்வில் நிகழும் பல தருணங்களும் மானுடனின் அதிகார விழைவும் அவன் உள்ளார்ந்த தீமையும் அதை எதிர்கொள்ள அவன் மனம் இடும் வேடங்களும் மனநிலைப் பிறழ்வின் எல்லை வரை சென்று அது கொள்ளும் ஏற்ற இறக்கங்களும் என ஒரு பெரிய வாழ்க்கைச் சித்திரம் நமக்குக் காட்டப்படுகிறது.

‘மெக்பெத்’ நாடகத்தின் ஆரம்பக் காட்சியே அதனை முற்றிலும் வேறு ஒரு தளத்திலான படைப்பு என்பதை நிறுவி விடுகிறது. ஓர் அடர் கானகத்தில் மூடுபனி சூழ்ந்த இரவில் மூன்று மாயக்காரிகள் (சூனியக்காரிகள்) ஒன்றுகூடி தங்களுக்குள் பேசிக்கொள்வதுபோல் ஆரம்பிக்கிறது. அது இந்நாடகத்துக்கு வேறொரு தளத்தைத் தொடக்கத்திலேயே தந்து விடுகிறது. அவர்கள் வருவதுரைப்பவர்கள். இதன் நாயகனின் விதி தொடக்கத்திலேயே தீர்மானிக்கப் படுவதுபோல தோன்றுகிறது. நாம் இயங்கும் உலகத்தின் விதிகளை மீறிய ஒன்று இதில் தொழில்படுகிறது.

வெற்றிக் களிப்பில் வந்து கொண்டிருக்கும் நாயகன் மெக்பெத்தும் தோழன் பாங்கோவும்  மாயக்காரிகளை எதிர்கொள்கின்றனர். அவர்கள் இரு படைத்தளபதிகளிடமும் அதிகாரத்தின் விழைவைத் தூவிச் செல்கின்றனர். விதை ஊன்றுவது போல அல்லது ஏற்கனவே மனதின் அறியா ஆழத்தில் உறங்கும் இச்சையின் விதையை முளைக்கச் செய்வது போல. “நீ ஸ்காட்லாந்தின் மன்னனாவாய்” என மெக்பெத்திடமும், “உன் சந்ததிகள் அரச பதவிகள் பெறுவர்” எனப் பாங்கோவிடமும் கூறுகின்றனர்.

மெக்பெத்தின் தீரச் செயலால் மகிழ்ந்த ஸ்காட்லாந்து அரசன் டங்கன் உடனே காடரின் அதிபனாக மெக்பெத்தை நியமிக்கிறான். அன்றிரவு அரசர் மெக்பெத்தின் இல்லத்தில் விருந்துண்டு உறக்கத்தில்  இருக்கும்போது மெக்பெத் அவரைக் கொன்று விடுகிறான். அதற்கான விதையை ஆழமாக அவனில் விதைக்கிறாள் அவன் மனைவி மெக்பெத் சீமாட்டி. அந்த அதிகார விழைவு முழு வீச்சாக அவளில் இருந்தே துவங்குகிறது. அதற்கான வாதங்களை அவள் ஆணித்தரமாக முன்வைக்கிறாள்.

மூன்று மாயக்காரிகள் வருவது, நிகழப்போவதை முன் உணர்த்துதல் என்பதைக் கிரேக்க மதமரபிலிருந்தும் அவற்றின் நாடகங்களில் இருந்தும் ஷேக்ஸ்பியர் எடுத்துக் கொண்டிருக்கலாம். ஏனெனில், கிரேக்க நாடகங்கள் திரையிடப்படலின்போது பிரதான மேடையின் இருபுறமும் சேர்ந்திசை பாடுபவர்கள் இருப்பார்கள். அவர்கள்தான் நாடகத்தைப் பாடித் தொடங்கி வைப்பார்கள். இடையில் முக்கிய காட்சியின்போது அவர்கள் பாடுவார்கள். அல்லது கடைசியில் முத்தாய்ப்பாக அவர்கள் சொல்ல வேண்டியதைச் சொல்வார்கள்.

அவை பெரும்பாலும் வரும்காலத்தை அல்லது இறந்த காலத்தை உரைப்பது என்ற அளவில் மட்டுமே கொள்ளத்தக்கவை அல்ல. கதாபாத்திரங்களின் ஆழ்மன இச்சைகள், அவர்களின் மனம் கொள்ளும் தடுமாற்றங்கள், அவர்களின் மனசாட்சியின் குரல் எனவும் அவர்கள் ஒலிக்கக் காணலாம். பார்வையாளர்களின் ஒருமித்த நீதியுணர்வின் சாட்சியாகவும் அவர்கள் மாறி ஒலிக்கலாம். அல்லது ஊழ்வினையின், அறிய முடியாத விதியின் வலைப்பின்னலின் இழைகளாக அவர்கள் வெளிப்படலாம்.

இவ்வியல்பு ‘நார்ஸ்’ தொன்மக் கதைகளிலும் உள்ளது. ‘நார்ஸ்’ தொன்மங்களின்படி மூன்று பெண்கள் மூன்று இழைகளைக் காலத்தில் முடிவின்றி பின்னுகின்றனர். ஓரிழைக் கடந்த காலத்தையும் மற்றது நிகழ்காலத்தையும் பிறிதொன்று எதிர்காலத்தையும் குறிக்கின்றது.  புடவி சமைப்பவர்களாக அவர்களைக் கொள்ளலாம். அந்த வகையிலேயே இம்மூன்று மாயக்காரிகளும் ஷேக்ஸ்பியரில் வருகின்றனர். அவர்கள் சொல்வது மெக்பெத்தின் ஆழ்மன இச்சையை என்றும் வாசிக்கலாம். இத்தகைய ஊடுபாவுகள்தான் இப்பிரதியை மிகுந்த வல்லமை மிக்கதாக்கி எக்காலத்திற்குமாக இதை நிறுவுகின்றன.

மெக்பெத்தின் அக ஆழத்தில்  இருக்கும் இச்சையை முன்னுணர்ந்து விடுகிறாள் மெக்பெத் சீமாட்டி. மெக்பெத்திடம் சிறிதளவாவது இருக்கும் பயம், நீதியுணர்வு எதுவுமற்றவளாக மெக்பெத் சீமாட்டி காட்டப்படுகிறாள். எல்லாவற்றையும் துடைத்தெறிந்தவளாகத் திகழ்கிறாள். ஒரு வரியில் அவள் எத்தகைய குரூரத்துக்கும் செல்லக் கூடியவள் என்பதை உணர்த்துகிறார் ஷேக்ஸ்பியர். “நான் ஒரு செயலைச் செய்ய முடிவெடுத்துவிட்டால் அதற்கு எந்தத் தடை வந்தாலும் பொருட்படுத்தமாட்டேன்.  அது என் மார்பகங்களில் தன் மென்மையான ஈறுகளால்  பாலருந்திக்கொண்டே  என்னைப் பார்த்துப் புன்னகைக்கும் என் குழந்தையாக இருந்தாலும் சரி. அதன் கபாலத்தைச் சுவற்றில் மோதி உடைக்க தயங்க மாட்டேன்” என்கிறாள்.

மெல்ல மெல்ல அந்த நச்சுமரத்தை மெக்பெத்தின் மனதில் விதைத்து வளர்க்கிறாள். அவன் ஒரு கட்டத்தில் டங்கனைக் கொல்வதற்குத் துணிகிறான். திடீரென்று மனம் தளர்கிறான். மன்னன் மேல் அவனுக்கு அதுவரை எந்த மனக்குறைகளும் இல்லை. அவர் அவன் வெற்றியைக் கேட்டதுமே ஒருகணமும் மறுயோசனையின்றி அவனைக் காடரின் அதிபனாக்கியவர். அவன் மீது அபிமானம் கொண்டவர். அவனை முழுவதுமாக நம்பி அவன் வீட்டுக்கு விருந்துண்ண வந்தவர். அதே நம்பிக்கையில் இப்போது நிம்மதியாக உறங்கிக் கொண்டிருப்பவர். அதுவே அவனைப் பின்னிழுக்கிறது.

ஆனால், லேடி மெக்பெத் மனம் துணிந்து வாளை வாங்கிக் கொண்டு நான் கொன்று வருகிறேன் என்று  செல்கிறாள். கொல்ல முடியாமல் திரும்புகிறாள். ஆழ்ந்து உறங்கும் அரசர் என் தந்தையைப் போலிருக்கிறார். என்னால் அவரைக் கொல்ல இயலவில்லை என்கிறாள். இது மிக நுட்பமான ஒரு இடம். அவளுடைய தர்க்கமனம் அறமற்றது, அவள் ஆழம் அறச்சார்பு கொண்டது. மெக்பெத்தின் மேல்மனம் அறச்சார்பு கொண்டது, ஆழம் அப்படி அல்ல. ஆகவே அவளுடைய துணிந்து முன்செல்லும் திடமும் ஈவிரக்கமற்றதன்மையுமே மெக்பெத்தை அவள் மேல் ஆழ்ந்த ஈர்ப்புக் கொண்டவனாக ஆக்குகின்றன.

மெக்பெத் தன் வாளைப் பற்றுகிறான். ஆனால், அவனுக்கு முன்னால் காற்றில் அந்தரத்தில் இன்னொரு வாள் தோன்றி அவனை டங்கனிடம் இட்டுச் செல்கிறது. அவனுடைய இச்சையின், குரூரத்தின், ஸ்தூலவடிவமாக அது அவனை ஒருபோதும் நன்மையின் உலகுக்குத் திரும்பமுடியாத தீமைக்கு அழைத்துச் செல்கிறது. அந்த இடத்தில் வரும் தன்னுரையாடல் மிக முக்கியமான எல்லோராலும் விதந்தோதப்படும் ஓர் இடம்.

“எனக்கு முன்னால் ஒரு வாள் தொங்குகிறதே? அதன் கைப்பிடி என்னை நோக்கி இருக்கிறதே? என்னால் பார்க்க மட்டும்தான் முடியுமா? தொட இயலாதா? என் மூளையின் சூட்டினால் உருவாக்கப் படும் இப்பிழையான காட்சி என் அடிமனதின் மாயக்காட்சி மட்டும்தானா? என் உறையில் உள்ள வாள் அளவுக்கே இதை உண்மையாக உணர்கிறேனே. நான் போகவேண்டிய திசையையும் பாதையையும் இது சுட்டுகிறதே. என் கண்கள் அவற்றைத் தவிர அனைத்துப் புலன்களையும் மழுங்கச் செய்கிறதே. அந்த வாளின் நுனியில் ரத்தக் கறை காணப்படுகிறதே. சிறிது முன்னால் அது அப்படியிருக்கவில்லை.

உலகம் என் முன் இரண்டாகப் பிளவுபட்டுள்ளது. ஒரு பாதி ஒளிமிக்கதாக, இன்னொன்று இருள் கொண்டதாக. மாயக்காரிகளின் கடவுள் ஹெக்கேட் இங்கு ஓநாய் மீது நடமாடுவது போல் தோன்றுகிறது. பூமியே என் காலடிகளைச் செவிகூராதே. நான் செல்லுமிடத்தை மறைத்து வை!”

வாள் மாய வடிவில் மெக்பெத்முன் தோன்றி அவனை அழைத்துச் செல்லும்போது அவன் தனக்குள் பேசிக்கொள்ளும் வசனங்கள் குற்றத்தின் ஆற்றலைக் காட்டுகின்றன. குற்றம் மனிதனை வலிமை மிக்கவனாக ஆக்குகிறது. மனிதனுக்குரிய எல்லைகளைக் கடந்து அவன் தெய்வம் போல் ஆகிவிடுகிறான். அதன்பின் அவனுடன் விளையாடுபவை ஊழ்வடிவமான தெய்வங்கள் மட்டுமே.

கொன்று முடித்த மெக்பெத் அந்த மாய வாளைத் தன்னுடன் இட்டுவந்து விடுகிறான். மெக்பெத் சீமாட்டி அதை எடுத்துப் போய் அரசரின் மெய்க்காப்பாளர்களிடமே போட்டுவிட்டு, இரத்தத்தை அவர்கள் மேல் பூசி அவர்கள் கொன்றது போல் ஜோடனைச் செய்கிறாள். அதற்குப் பிறகு அவளுக்கு ஒரு நாளும் உறக்கமில்லை. மனம் பிறழ்ந்து முற்றி தன் முடிவைத் தேடிக் கொள்கிறாள். அவள் ஒரு இடத்தில் கூறுகிறாள், “என் கைகள் முழுவதும் இரத்தம் தோய்ந்துள்ளன. இந்த வாடையை என்னால் எத்தனை முறை என் கரங்களைக் கழுவினாலும் போக்க முடியவில்லை. அரேபியாவின் எல்லா வாசனைத் திரவியங்களாலும் இந்த இரத்த மணத்தைப் போக்க முடியாது” அது அவளுடைய அகத்தின் கொந்தளிப்பு வெளிப்படும் வரிகள், அவளுக்குள் உறையும் அறம் வெளிப்படும் வரிகளும்கூட.

அக்குற்றம் நடக்கும்போது போதையில் நிலைமறந்திருக்கும் காவலர்கள் டங்கன் கொல்லப்பட்டான் என உளறுகிறார்கள். அவர்களுக்கு எப்படித் தெரிகிறது? ஒலிகளில் இருந்து அவர்களின் கனவு அந்தக் குற்றத்தைப் புனைந்திருக்கலாம் என்பது ஒரு விளக்கம். ஆனால், ஆழுள்ளம் குற்றத்தை அறிகிறது என்பது மேலுமொரு விளக்கம். குற்றவுணர்வு காற்றென வந்து மெக்பெத்தின் மாளிகையைத் தட்டிக்கொண்டே இருக்கிறது. “மீண்டும் மீண்டும் தட்டுகிறார்கள். யாரது?(Knock Knock Who is there?)” என்று நாடகம் ஒசையிட்டுக்கொண்டே இருக்கிறது. “தட்டுவது யார்?” அதைக் கேட்பவன் தனக்குத் துணையாக நம்பிக்கையை அழைக்கிறான் (Faith!).

மொழிபெயர்ப்பாளர் பழந்தமிழ் இலக்கிய ஞானம் உடையவர் என்பது அவரது மொழிபெயர்ப்பில் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அந்த அளவுக்கு மூலத்தைத் தமிழின் செய்யுள் நடைக்கு அருகே கொண்டு வந்து அழகிய மொழியில் தந்துள்ளார் .

உதாரணம்:

Was the hope drunk

Wherein you dress’d yourself? Hath it slept since

And wakes it now to look so green and pale

At what it did so freely? From this time

Such I account thy love.

‘முன்னர் முனைப்புற்று முகிழ்த்திருந்த உங்கள் நம்பிக்கை, பின்னர் மயங்கி வீழ்ந்ததுவோ? இதுகாறும் உறங்கிய அந்நம்பிக்கை, உணர்வுற்று விழித்து தன் நோய்த் தோற்றத்தை அறியலுற்றதோ? இன்றுதான் நான் உங்கள் அன்பின் மதிப்பு எத்திறம் வாய்ந்ததென அறிந்து தெளிந்தேன்.’

***

‘ஒதெல்லோ’ இத்தாலியின் வெனிஸ் நகரைக் களமாகக் கொண்டது. ஒத்தல்லோ மிகத் தீரமிக்க படைத்தளபதி. வெனிஸின் சிற்றரசனின் (Duke) நம்பிக்கைக்குரிய வீரன். வெனிஸின் செல்வந்தரான ஓர் அரசவைக்காரர் (செனட்டர்) பார்பான்ஷியோ. அவருடைய ஒரே அழகிய மகள் டெஸ்டமோனா. அவள் ஒதெல்லோ மீது காதல் கொண்டு அவனுடன் ஓடி விடுகிறாள். அவனைத் திருமணம் செய்து கொள்கிறாள். அவள் ஒதெல்லோவைவிட வயதில் மிகச் சிறியவள். அவளுக்குப் பதினெட்டு, ஒதெல்லொ நாற்பதை நெருங்கிக் கொண்டிருப்பவன்.

பார்பன்ஷியோ இத்திருமணத்தைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகிறார். அவர் தன் படைகளுடன் ஒதெல்லோவைத் தேடிவரும் உச்சத் தருணத்தில் நாடகம் தொடங்குகிறது. அச்சமயத்தில் வெனிஸின் சிற்றரசர் அவர்களைச் சமாதானப்படுத்தி ஒதெல்லோவைச்  சைப்ரஸ் நோக்கி அனுப்பிவைக்கிறார். துருக்கியின் கடல் படையினர் இவர்கள் ஆளுகையின் கீழ் உள்ள சைப்ரஸை கைப்பற்ற விழைவதால் சைப்ரஸுக்கு ஒரு கப்பலில் ஒதெல்லோ தன் படையுடன் செல்கிறான். கூடவே வேறொரு கப்பலில் இயாகோ, ரோட்ரீகோ, டெஸ்டமோனா, எமீலியா, மைக்கேல் காசீயோ ஆகியோர் செல்கின்றனர்.

பின்னர் சைப்ரஸ்தான் நிகழ்களமாகிறது. துணைத் தளபதியாக மதியூகம் கொண்ட மிக்கேல் காஸியோ ஒதெல்லோவால் தேர்ந்தெடுக்கப்படுகிறான். அது ஒதெல்லோவின் தோழனான இயாகோவைப் பொறாமையில் கொந்தளிக்கச் செய்கிறது. அதற்குப் பழிதீர்க்க இயாகோ நினைக்கிறான். வஞ்சமும் தந்திரமும் நிரம்பியவனும், தீமை மட்டுமே குணமாகக் கொண்டவனுமாகிய இயாகோதான் ஒதெல்லோவின் மனதில் பொறாமையையும் சந்தேகத் தீயையும் வளர்த்து ஒதெல்லோவின் வீழ்ச்சிக்கும் டெஸ்டமோனாவின் மரணத்துக்கும் காரணமாகிறான்.

இது ஆங்கில இலக்கியத்தில் முதல்முதலாக இன வேறுபாட்டைப் பற்றிப் பேசிய படைப்பு என்றும் கூறுவார்கள். இதன் நாயகன் ஒதெல்லோ இயாகோவால் “கறுத்த முரட்டு ஆண் ஆடு’’ என்று வர்ணிக்கப்படுகிறான். ஒதெல்லோ மூர் எனவும் அழைக்கப்படுகிறான். அவன் வட ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவன் எனவும் கறுத்த நிறமுடையவன் எனவும் சொல்லப்படுகிறான். அப்போது வட ஆப்பிரிக்காவில் அரேபிய இனக் கலப்பும் நிகழ்ந்திருக்கிறது. ஒதெல்லோவின் இனம் தோராயமாகவே சுட்டப்படுகிறது. பெருவீரன், மிக மிக நேர்மையானவன், அதிகம் உரையாடாதவன், உள்முகமாகத் திரும்பிய குணமுடையவன். அவன் நேர்மையானவன் என்பதாலேயே பிறரின் வெளித் தோற்றத்தையும் வெளி நடிப்பையும் எளிதில் நம்பி விடுபவன். அவனை இயாகோ தன் பகடைக்காயாகப் பயன்படுத்தியதை முடிவிலேயே அறிகிறான். அப்போது எல்லாமே கைமீறிப் போய்விடுகிறது.

சைப்ரஸுக்கு ஒதெல்லோ கப்பலில் வரும்போது கடல் கொந்தளிக்கிறது. வானத்துக்கும் கடலுக்கும் உள்ள எல்லைக்கோடு அழிவதுபோல் அலைகள் எழும்புகின்றன. சைப்ரஸை நோக்கி வந்த துருக்கியக் கடற்படை இலக்கை அடைவதற்குள் சிதறிச் சின்னாபின்னமாகிறது. ஓர் இயற்கை நிகழ்வு ஒரு துர் சகுனமாகவும் இங்குச் சித்தரிக்கப்படுகிறது எனவும் கொள்ளலாம்.  சிலப்பதிகாரத்தில் மதுரையில் கண்ணகியும் கோவலனும் நுழையும்போது இளங்கோவடிகள் இப்படிக் குறிப்பிடுகிறார். “போருழந்தெடுத்த ஆர் எயில் நெடுங்கொடி வாரல் என்பன போல் மறித்துக் கைகாட்ட.”  இங்கு உங்களுக்கு ஒரு துர் நிகழ்வு காத்திருக்கிறது. அதனால் இங்கு  வராதீர்கள் என்று குறிப்புணர்த்துவது போல் அசைந்தன கொடிகள் என்று கூறப்படுகிறது.

ஒதெல்லோ தன் சைப்ரஸ் வரையிலான கடல் பயணத்தில் தன் காதல் மனைவி டெஸ்டமோனாவைப்  பிரிந்து பின் மீண்டும் அவளைச் சந்திக்கும்போது வரும் வசனம் மிக உணர்ச்சிகரமானது. அதை மொழிபெயர்ப்பாளர் மிக நேர்த்தியாகச் செய்துள்ளார் .

It gives me wonder great as my content
To see you here before me. O my soul’s joy!
If after every tempest come such calms,
May the winds blow till they have waken’d death!
And let the laboring bark climb hills of seas
Olympus-high and duck again as low
As hell’s from heaven! If it were now to die,
‘Twere now to be most happy; for, I fear,

My soul hath her content so absolute
That not another comfort like to this
Succeeds in unknown fate.

“உன்னை இங்குக் காண்பதில், வியப்பும் மகிழ்ச்சியும் அடைகின்றேன். ஓ, என் ஆன்மாவின் மகிழ்ச்சியே! ஒவ்வொரு புயலுக்குப் பின்னும் இது போன்ற அமைதி வருமாயின் ,மாண்டாரை உசுப்பி விடும்வரை அந்தக்காற்று வீசட்டும்! அல்லாடுகின்ற கலம், ஒலிம்பிக் மலைவரை உயர்ந்து எழும்பி பின்னர் மீண்டும் விண்ணகத்தின் கீழ் அளறு வரை அமிழட்டும்! இப்பொழுதே நான் சாவேனாயின், இது எனக்குப் பெருமகிழ்ச்சி ஊட்டுவதாய்  அமையும். ஏனெனில் முழுமையாய் மனநிறைவு அடைந்துவிட்ட என் ஆன்மா, இதைப்போன்ற  பெருங்களிப்பு, உறுதியற்ற அறியப்படாத எதிர்காலம்வரை, வாராதென்றே நான் அஞ்சுகிறேன்.”

மேலே மொழிபெயர்த்திருக்கும் பத்தியில் அல்லாடும் ‘கலம்’, ‘அளறு’ என்ற இரு சொல்லாட்சிகளையும் கவனித்தால் புரியும். ‘அளறு’ என்பது நரகம். நரகம் என்றும் மொழிபெயர்த்திருக்கலாம். ஆனால் ‘அளறு’ என்ற பழந்தமிழ் சொல் ஒரு கூடுதல் அழகைத் தருகிறது. அதுபோல ‘கலம்’ என்பதும் பழந்தமிழ் சொல்லே.

ஒதெல்லோவின் அளவற்ற அன்பே விஷமாகிறது. கடைசியில் அவனே உணர்வது போல் அன்பு இன்னொரு பக்கம் அறிவாலும் தர்க்கத்தாலும் சமன் செய்யப்பட வேண்டும். அப்படி இல்லாத அன்பில் ஒரு துளி விஷம் கலந்தாலும் முழுதும் விஷமாகிவிடும். ஒதெல்லோ பொறாமை, சந்தேகத்தைப் பற்றிய நாடகம் அல்ல. கட்டற்ற அன்பின் மூர்க்கத்தைச் சொல்லும் நாடகம்.

இந்நாடகத்தில் இயாகோ தன்னை மிகுந்த புத்திக்கூர்மை உடையவன் எனவும் ஆனால், தன்னைக் காட்டிலும் தகுதி அற்றவர்கள் பெரிய பதவிகளில் அமர்ந்து விடுவதாகவும் எண்ணிக்கொள்கிறான்.   மைக்கேல் காஸியோ துணைத் தளபதி பதவியை அடைந்ததும் அவனின் பொறாமையும் நயவஞ்சகமும் உச்சத்துக்குச் செல்கிறது. அவன் ஒதெல்லோவின் மன அமைதியைக் குலைக்கவும் காஸியோவைத் பதவி இறக்கவும் துணிகிறான். இயாகோ சாத்தானின் நாவன்மை கொண்டவன். ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி ஒதெல்லோவைப் பூரணமாக நம்பவைத்து நரகத்தில் தள்ளுகிறான். பெண்களைப் பற்றிய மிகத் தாழ்வான கருத்துகளே அவனிடமிருந்து வெளிப்படுகின்றன. மெல்ல மெல்ல ஒதெல்லோவின் காதல் நிரம்பிய மனதில் சந்தேகமெனும் நஞ்சை விதைக்கிறான். நுட்பமாக அதற்குரிய தருணங்களை உருவாக்குகிறான்.

இயாகோ தன் தீமையைக் குறித்து ஒரு குற்ற உணர்வும் கொள்ளாதவன்.  அவனிடம் எந்த நன்மையும் இல்லை. ஆனாலும் அவன் தருணங்களில் செய்யும் தந்திரங்களும், அதைத் தனக்குத் தானே அவன் நியாயப்படுத்திக் கொள்வதும் அவனைப் பல பரிமாணம் கொண்ட கதாபாத்திரமாக ஆக்குகிறது. தீமைக்கே அதை அறம் சார்ந்து நியாயப்படுத்திக் கொள்ளவேண்டிய தேவை இருக்கிறது என்று தோன்றச் செய்கிறது.

தீமை தன்னைச் சூழ்ந்தவர்களை ஆட்சி செய்யும் ஆற்றல் கொண்டது. எல்லோரையும் தனக்குரிய கருவிகளாக மாற்றிக் கொள்கிறான் இயாகோ. தன் பணத்தேவைக்கு ரோட்றீக்கோவை ஏமாற்றுகிறான். காசீயோவைப் பதவியிலிருந்து விலக்க மாண்டோனாவைச் சாட்சியாக்கிக் கொள்கிறான். ஒதெல்லோவின் சந்தேகத்துக்கு முக்கியமான ஆதாரமான டெஸ்டமோனாவின் கைக்குட்டையைத் திருட தன் மனைவி எமிலியாவைப் பயன்படுத்திக் கொள்கிறான்.

பிரிவின் புயல் அடித்தால் அன்பின் இனிமை அழகுறுவதைப் பற்றி ஒதெல்லோ சொல்லும் இடமும் குறிப்புணர்த்தும் தன்மை கொண்டது. ஒதெல்லோவிடம் துன்பத்தை நாடும் ஆழத்து இயல்பு இருந்ததா? அவன் தனக்கான துன்பத்தைத் தானே தேடிக்கொள்கிறானா? தன்வதை தன்மை என்பது எப்போதும் பேரன்புடன் இணைந்துள்ளது. தன் அன்பை விதியின் முன் நிறுவிக்கொள்ள மானுடர் போடும் நாடகம் அது. 

மெக்பெத், ஒதெல்லோ இருவரும் தங்களை அதுவரை ஆட்டி வைத்த மாயத்திலிருந்து விடுபடும் நிகழ்வு ஒரு கணத்தில் நிகழ்கிறது. சட்டென்று திரை விலகி ஒரு கணம் தங்களைப் பார்த்துக் கொள்ளும் கணம். அந்த அறையும் தருணம் ஒவ்வொரு மனிதனும் தங்கள் வாழ்வில் சில சமயம் கடந்து வரும் உச்சம்தான் மெக்பெத்துக்கு மாக்டஃப் தன்னைக் கொல்லவரும் தருணத்தில், அந்த உச்சகணத்தில் எல்லாம் தெளிவாகிவிடுகிறது.  அதே போல், ஒதெல்லோவுக்கு எமிலியாவின் சொற்கள் அவனை வந்தடையும் தருணத்தில். ஒதெல்லோ “கடைசியில் இங்கு நடந்த அனைத்தையும் கூட்டவும் வேண்டாம். குறைக்கவும் வேண்டாம் . அப்படியே போய்ச் சொல்!  அத்தனை அன்பை வைத்திருந்த நான் தர்க்கபுத்தியுடன் ஆராயும் அறிவு இல்லாமல் போய்விட்டேன். இதுதான் என்னை நரகத்தில் தள்ளியது என்றுபோய்ச் சொல்!” என்று சொல்கிறான். 

***

‘ஜுலியஸ் சீசர்’ ஓர் அரசியல் நாடகம். ரோமில் நடக்கிறது. அப்போதைய ரோம் என்பது இத்தாலி மட்டும் அல்ல. இந்தப் பக்கம் துருக்கி எல்லை வரை விரிகிறது. துருக்கியைத் தவிர கிழக்கில் உள்ள அனைத்து நாடுகளையும் சீசர் ரோமுடன் இணைக்கிறார். கிறிஸ்துவுக்கு முன் நடக்கும் இக்கதை உண்மையான வரலாற்று நிகழ்வை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது. இதில் பேசப்படும் முக்கியத் தீமை என்பது மனித இயல்பில் உறையும் பொய்மையும் துரோகமும்தான். அதிகார விழைவால்  செனட்டர்களாக இருக்கும் நண்பர்களே சதிகாரர்களாக மாறி ஜூலியஸ் சீஸரைக் கொல்கிறார்கள். அந்த நம்பிக்கைத் துரோகத்துக்கு முறையீடாகத் தர்மத்தின் குரலாக மார்க் ஆண்டனியின் குரல் ஒலிக்கிறது.

முந்தைய அரசரான பாம்பேவைக் கொன்று இந்த ஜுலியஸ் சீசர் அதிகாரத்தைக் கைப்பற்றுகிறார் என்பதிலேயே அந்தத் துரோகத்தின் தொடக்கப்புள்ளி உள்ளது. ஜுலியஸ் சீசர் பதவியேற்பது அவரது நண்பர்களான செனட்டர்கள் சிலரை அதிருப்தி கொள்ளச் செய்கிறது. சிலர் தங்களை அவரை விட தகுதியானவர்களாகக் கருதிக் கொள்கின்றனர். சிலர் சீசருக்கு மிகுந்த அதிகார விழைவு உள்ளது, அது நல்லதல்ல என்று சொல்லிக் கொண்டு தங்களுக்குள் எழுந்த பொறாமையை மறைக்கின்றனர். மக்களின் ஆரவாரமும் அவர்களின் வழிபடும் மனநிலையும் இந்தச் சதிகாரர்களுக்கு மேலும் பொறாமையைக் கிளப்புகின்றன.

நாடகத்தின் பெயர்தான் ‘ஜுலியஸ் சீசர்’. ஆனால்,  இதன் இரு நாயகர்கள் ப்ருட்டஸும் ஆண்டனியும்தான். முதல் அங்கத்திலேயே சீசர் கொல்லப்படுகிறார். மார்க் ஆண்டனி  இருபத்து மூன்று முறை வாள் குத்துப்பட்ட தன் நண்பன் சீசரின் இறந்த உடலை மக்கள் மன்றத்தின் முன் கிடத்தி ப்ருட்டஸையும், காசியஸையும் மற்றச் சதிகாரர்களையும் அவர்கள் முன் அம்பலப்படுத்தி மக்கள் கூட்டத்துக்கு உண்மையையைப் புரிய வைக்கிறான்.

இதிலும் சாவினை முன்னுணர்தல் இரு தருணங்களில் சொல்லப்படுகிறது. ஒரு மனிதன் சீசரின் வெற்றிக் கொண்டாட்டத்தின் நடுவே அவரை எச்சரிக்கிறான். “மார்ச் மத்திய தேதிகளில் கவனத்துடன் பாதுகாப்புடன் இரு” என. ஆனால், சீசர் அதைப் பொருட்படுத்தவில்லை. சீசரின் மனைவி கல்புர்னியாவும் “செனட்டுக்கு இன்று செல்ல வேண்டாம். நான் துர்க்கனவு ஒன்று கண்டேன். நீங்கள் கொல்லப்படுவதாக, கலவரம் வெடிப்பதாக” என்று கூறி சீசரைத் தடுக்கிறாள். முதல் முன்னுணர்வு தர்க்கம் சார்ந்தது. இரண்டாவது எச்சரிக்கை உள்ளுணர்வு சார்ந்தது. 

மார்க் ஆண்டனியின் வாதங்கள் வலுவானவை. அதை அவன் மிகுந்த தந்திரத்துடன் முன் வைக்கிறான். அவனுக்கும் சீசருக்குமான நட்பு மிகுந்த உணர்ச்சி மிகுந்தது. ஆனால்,   எதை வேண்டுமானலும் நம்பும் தாற்காலிக உணர்ச்சி மிகுந்த கும்பலாக மாறிவிடும் மக்களைத் தர்க்கபூர்வமாக வென்று, பின்னர் தன் உணர்ச்சிகளை நம்பகமாக முன்வைத்துச் சதிகாரர்களின் சூழ்ச்சியை முறியடிக்கிறான்.

சந்தர்ப்பங்களைவிட வசனங்களே இந்நாடகத்தின் பலம். இது கிரேக்கச் செவ்வியல் நாடகங்களின் இயல்பு. கிரேக்க மரபில் மேடைப்பேச்சு என்னும் கலையே முதன்மையானது, நாடகம் அதன் நீட்சியாகவே கருதப்பட்டது.  இந்நாடகத்தில் காசியஸ் உணர்ச்சி மிகுந்தவன். ஆனால், ப்ரூட்டஸ் உணர்ச்சிகளை வெளிக்காட்டாத திரையிடப்பட்ட முகம் கொண்டவன். அதிகாரத்தில் இருப்பவர்கள் அப்படித்தான் இருக்க வேண்டும் என நினைப்பவன். 

காசியஸ் “ஏன் என்னிடம் முன்பு போல் தாங்கள் இல்லை” என்பதற்கு “நான் என் முகத்திற்கு ஒரு திரையை அணிவித்திருக்கிறேன். நான் என் மனதை நோக்கி உள்முகமாகத் திரும்பியிருக்கிறேன்” என்கிறான். “அதிகாரத்தின் படிநிலைகளில் ஏற ஆரம்பிப்பவர்கள் மக்களோடு ஒன்றி இருப்பார்கள். ஆனால் புகழின் அதிகாரத்தின் உச்சியில் சென்றதும் அவர்கள் மேகங்களில் மிதக்க ஆரம்பிப்பார்கள். புகழின் போதை அவர்களை மாற்றி விடும்” என்கிறான் .

கொல்வதாக நாம் உறுதி கொள்வோம் என்று சொல்பவர்களிடம் “நாம் உறுதி எடுத்துக் கொள்வது எதற்கு? நம் உணர்ச்சிகள் உண்மையானவை, இந்தக் காலகட்டத்தின் குழப்பங்களும் நம் ஆன்மாவின் நிம்மதியின்மையுமே மிக வலிமையான இலக்குகளை அடைய போதுமான காரணங்கள்” என்று ப்ரூட்டஸ் சொல்கிறான்.

சீசரின் வெட்டுப்பட்ட உடலை மக்கள் மன்றத்தின் முன் கிடத்தி நியாயம் கேட்பது தான் ஆண்டனியின் முக்கியமான காய் நகர்த்தல். ரத்தம் தோய்ந்து கிடக்கும் உடல் எவ்வளவு கடின மனம் உள்ளவர்களிடமும் உணர்ச்சியைத் தூண்டும். சட்டென்று அவ்வுடலே தன் மரணத்திற்கான நீதியைக் கோரும் ஒரு ஸ்தூல காரணமாக மாறி விடுகிறது.

“நீதிமானே  நீங்கள் என்ன பிழைக்காக இம்மன்றத்தின் முன் இப்படி கிடக்கிறீர்கள்? என் மனது பொறுக்கவில்லை. உங்களை நான் இக்கோலத்தில் பார்க்க வேண்டுமா? உங்கள் ஒவ்வொரு வெட்டுக் காயமும் தன் நாவெழாத மௌனத்தால் நீதி கேட்பது போல் உள்ளது. காயத்தின் வாய் ரத்தம் தோய்ந்த சிவந்த அதரங்கள் போல் உள்ளன. அவை மௌனமாக நம்மிடம் உரையாடுகின்றன” என்கிறான் ஆண்டனி.

ப்ரூட்டஸ் சொல்கிறான், “என்னுடைய  சீசர் மீதான அன்பு உங்களைவிட எந்த வகையிலும் குறைந்ததல்ல, ஆனால் அதைவிட நான் ரோமை விரும்புகிறேன். அவரது அன்புக்காகக் கண்ணீர் சிந்துகிறேன், அதிருஷ்டத்துக்காக மகிழ்கிறேன், போரில் அவர் காட்டிய தீரத்துக்காக அவரை வழிபடுகிறேன், ஆனால் அவரது அதிகார விழைவுக்காக அவரைக் கொன்றேன்”.

ஆண்டனி சொல்கிறான்,“ஒருவர் புரிந்த தீமைகள் நீண்டகாலம் வாழ்கின்றன. ஆனால், ஒருவர் புரிந்த நன்மைகளை அவருடனே அவர் எலும்புகளுடன் புதைத்து விடுகிறோம். அவர் ரோமின் எல்லைகளை விரிவாக்கினார். எதிரி நாடுகளுடன் போர்புரிந்து அந்தச் செல்வங்களால் நம் கருவூலங்களை நிரப்பினார். ஏழைகளின் துயரத்துக்காகக் கண்ணீர் சிந்தினார். அவரது உயிலில் என்ன எழுதியிருக்கிறார் என்று நான் படித்தால் நீங்கள் ஒவ்வொருவரும் அவர் காயங்களை முத்தமிடுவீர்கள். அவர் ரோமங்களை வழிபடுவீர்கள்.”

தன் உணர்ச்சி மிகுந்த உரையின் கடைசி பகுதியை இப்படி முடிப்பான் ஆண்டனி. அதைத் திரு. கிருஷ்ணன் தன் மொழிபெயர்ப்பில் அவ்வுணர்ச்சி சிறிதும் குறைவுபடாமல் நமக்குக் கடத்துகிறார் .

For when the noble Caesar saw him stab,
Ingratitude, more strong than traitors’ arms,
Quite vanquish’d him: then burst his mighty heart;
And, in his mantle muffling up his face,
Even at the base of Pompey’s statue,
Which all the while ran blood, great Caesar fell.

O, what a fall was there, my countrymen!
Then I, and you, and all of us fell down,

“இதோ! இந்த வெட்டு, வெட்டுகள் எல்லாவற்றிலும் கொடிய வெட்டு! செய்ந்நன்றி மறந்து காட்டிக்கொடுக்கும் இரண்டகர்தம் கயமையினும் இழிந்த முறையில் புரூட்டஸ் குத்திய கொடுஞ் செயல், சீஸரைத் தோல்வியுறச் செய்துவிட்டது. அவர்தம் வலிமைமிகு நெஞ்சம் பிளவுண்டு போயிற்று! இந்த அங்கியால் முகம் மூடப்பட்டு அவர் நெடுந்தரையில் வீழ்ந்தார். இங்கே, இந்தப் பாம்பே சிலையின் அடியில், இந்த வேளைவரை அவர்தம் செங்குருதி ஓடிக்கொண்டே இருக்கிறது. ஓ! என் நாட்டவரே, அது எத்தகைய வீழ்ச்சி! பின்னர், நான், நீர், நாம் அனைவரும் கீழே வீழ்ந்தோம்.”

கடைசியில் போரில் ப்ரூட்டஸ், காசியஸ், காஸ்கா உட்பட அனைத்துச் சதிகாரர்களும் கொல்லப்பட்டுச் சீசரின் இருபத்திரண்டு வயது மகன் ஆக்டேவியஸ்  சீசர் முடிசூட்டப் படுகிறான்.

அப்போதுகூட வென்றது நீதியுணர்வு அல்ல, திறமையான அரசியலாளன் ஒருவனின் ஆற்றல்தான் என்பதே ‘ஜூலியஸ் சீசரை’ ஆழமான அரசியல் பிரதியாக ஆக்குகிறது. ஆண்டனியைத்  திறமையான ஓர் அரசியலாளன் வந்தால் மீண்டும் ஜூலியஸ் சீசர் அதிகாரவெறியனாக ஆகிவிடக்கூடும் என்னும் எச்சரிக்கையே நாடகம் முடிந்தபின் எஞ்சியிருக்கிறது.

***

இந்நாடகங்களை மொழிபெயர்த்த திரு. பி. கிருஷ்ணன் அடிப்படையில் ஒரு இலக்கிய வாசகர். புதுமைப்பித்தன் மேல் கொண்ட பற்றால் தன் பெயரைப் புதுமைதாசன் என மாற்றிக் கொண்டவர். மரபிலக்கியம் முதல் நவீன இலக்கியம் வரை தொடர் வாசிப்புக் கொண்டவர். அதே போல் மேலை இலக்கியத்தைத் தொடர்ந்து வாசித்தவர். வாசிப்பில் இன்பம் கண்ட ஒருவர் அதன் செவ்வியல் நோக்கியே செல்ல முடியும். பி. கிருஷ்ணனின் மனம் ஷேக்ஸ்பியர் நோக்கிச் சென்றதில் ஆச்சரியமில்லை. இம்மூன்று நாடகங்களில் உள்ள அற கேள்வியே பி. கிருஷ்ணனைத் தொந்தரவு செய்யும் அம்சங்கள்.

சிங்கப்பூரில் இருக்கும் ஒருவர் ஏன் ‘மெக்பெத்’ நாடகத்தை மொழிபெயர்க்க வேண்டுமென்றால், ‘மெக்பெத்’ சென்று நிற்பது என்றென்றைக்குமான அற கேள்வியில். அறத்திற்கும் அறமின்மைக்குமான போராட்டத்தில். அதே கேள்வியைத் தான் டால்ஸ்தோய் முதல் தற்கால சிறந்த உலக எழுத்தாளர்கள் வரை தங்கள் படைப்பில் எழுப்பிக் கொள்கின்றனர். பி. கிருஷ்ணனும் அதே கேள்வியைத் தன் மொழிபெயர்ப்பின் வழி சென்று தொடுகிறார். ‘ஜூலியஸ் சீசர்’ நாடகம் தன் மனிதனிலிருந்து ஒட்டுமொத்த மானுட சமூகம் கொள்ளும் மன நாடகங்கள் நோக்கி விரிகிறது. ஷேக்ஸ்பியர் பேச நினைத்தது மானுடத்தின் பிரச்சனையை, அதிலிருந்து மனிதன் தன்னுள் அறியாத காம, குரோத, மோகத்தினைக் கேள்வி கேட்கிறார்.  கிருஷ்ணனும் தன் மொழிபெயர்ப்பின் வழி அதே கேள்வியைச் சென்று உசாவிப் பார்க்கிறார். இக்காரணத்தாலே திரு. பி. கிருஷ்ணனின் மொழிபெயர்ப்பு வெற்றி பெற்றதாகிறது.

ஒருவர் ஒரு மொழிபெயர்ப்பை ஏன் செய்ய வேண்டும். அடிப்படையில் தன் ஆன்ம திருப்திக்காக. வாசிப்பின்பம் தரும் அதே நிறைவை எழுத்தின் மூலம் அடைய, அதனை மேலும் நுணுகி ஆராய. பி. கிருஷ்ணன் ஷேக்ஸ்பியர் மொழிபெயர்த்தது அவ்விசையாலே. அதில் அவர் வெற்றி காண்கிறார். மேலும், ஷேக்ஸ்பியர் மொழிகளின் உச்சம். ஷேக்ஸ்பியர் தரும் மொழி சுவையைச் சிறிதும் குறையாமல் மொழிபெயர்ப்பில் தருவது திரு. கிருஷ்ணனின் தனிச் சாதனை. கிருஷ்ணனின் மொழிபெயர்ப்பு மூலத்திற்கு விசுவாசமாக இருப்பதாலேயே நமக்கு ஷேக்ஸ்பியரை நேரடியாகத் தமிழில் வாசிப்பதற்கு இணையான இன்பத்தை இப்படைப்புகள் தருகின்றன. ஷேக்ஸ்பியரின் நடை செய்யுள் நடை என்பதாலேயே கொஞ்சம் பழமையானது. ஒரு காப்பியத்தைப் படிப்பது போன்ற உணர்வைத் தருவது. அந்தப் பழமையையும் இவர் தமிழில் தக்கவைத்து நேர்த்தியாக மொழிபெயர்த்திருக்கிறார்.

கிருஷ்ணனின் தேடலும் மொழிபெயர்ப்பில் உள்ள நேர்த்தியும் அவரது மொழியாக்கத்தை ஷேக்ஸ்பியர் மொழிபெயர்ப்புகளுள் முதன்மையானதாக நிறுவுகின்றன. இத்தனை ஆண்டுகள் ஒரு ஆசிரியனின் இலக்கியப் படைப்பில் தோய்ந்து அதிலேயே மூழ்கி இருப்பது வாழ்வின் வரம். பி. கிருஷ்ணன் ஷேக்ஸ்பியரைக் கண்டுகொண்டது அவரின் நல்லூழ். அதனை மொழிபெயர்த்து தமிழுக்குத் தந்தது நம் நல்லூழ். அவருக்கு என் வணக்கமும், நன்றிகளும்.

மேற்கோள் நூல்கள்

புதுமைதாசன்.(2015). மெக்பெத். சிங்கப்பூர்: கிரிம்சன் ஏர்த் பதிப்பகம்.

புதுமைதாசன்.(2021). ஒதெல்லோ. சிங்கப்பூர்: கிரிம்சன் ஏர்த் பதிப்பகம்.

புதுமைதாசன்.(2021). ஜூலியஸ் சீஸர். சிங்கப்பூர்: கிரிம்சன் ஏர்த் பதிப்பகம்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...