அள்ளிய கைகள்: புதுமைதாசனின் ஷேக்ஸ்பியர் மொழிபெயர்ப்பை முன்வைத்து

ஜெயகாந்தனுடன் பி. கிருஷ்ணன்

சிங்கை இலக்கியச் சூழலில் ஆண்டுக்கு ஒருமுறையாவது ஏதாவது ஓர் இலக்கிய அமைப்பில் அல்லது நண்பர் கூடுகையில், மொழிபெயர்ப்புப் படைப்புகளைக் குறித்த உரையாடல் நடைபெறுவது வழக்கம். படைப்புகளைப் பற்றிய உரையாடலில் ஒரு பகுதியாக மொழிபெயர்ப்பின் தரம் அல்லது மொழிபெயர்ப்பாளரின் வெற்றி, தோல்வி குறித்த விவாதம் நடைபெறும். அவ்வகை உரையாடல்களில் பங்குப் பெறும்போதெல்லாம் இரு வகையான உவமைகள் என் மனதில் தோன்றும். சில உரையாடல்களில் இவற்றைச் சொல்லியும் இருக்கிறேன்.

மொழிபெயர்ப்பாளரின் பணியென்பது கிட்டத்தட்ட அந்தரத்தில் கட்டப்பட்ட கயிற்றில் நடக்கும் கழைக்கூத்தாடியின் நிலையையொத்தது. மொழிக்கும் மூலத்துக்கும் நியாயம் செய்ய வேண்டும். இதில் ஏதாவது ஒன்றில் பிழை ஏற்பட்டாலும், சமநிலை தவறிக் கீழே விழும் அபாயம் இருக்கிறது. இச்சவாலைச் சிலர் வெற்றிகரமாகச் சந்திக்கிறார்கள்; பலர் வீழ்ந்து விடுகிறார்கள். வெற்றிகரமாகச் செய்யப்பட்ட மொழிபெயர்ப்பிலும் மூல ஆசிரியர் பேசப்படும் அளவிற்கு மொழிபெயர்ப்பாளர் பேசப்படுவதில்லை. மொழிபெயர்ப்பாளர் என்பவர் செயற்கைக்கோளை ஏந்திச் செல்லும் ராக்கெட் போன்றவர். மூலப் படைப்பை உச்சத்திற்கு அனுப்பிவிட்டு இவர் கீழே போய்விடுவார். ஆனாலும், வெற்றிகரமான மொழிபெயர்ப்பாளர்களை இலக்கிய உலகம் மறப்பதில்லை. காலம் கடந்தேனும் அவர்கள் நினைவுகூரப்படுகிறார்கள்.

மொழிபெயர்ப்பாளர் என்பவர் ஒரே சமயத்தில் மூலப் படைப்பின் தீவிர வாசகர், இணைப் படைப்பாளி என இரு வேடங்களில் இயங்குகிறார். ஒப்பு நோக்குகையில் அபுனைவைக் காட்டிலும் புனைவை மொழிபெயர்ப்பது கடும் உழைப்பைக் கோருவது. அதிலும் கவிதை மொழிபெயர்ப்பு மேலும் சவால் நிறைந்தது. குறிப்பாக, பல நூறு ஆண்டுகளுக்கு முந்தைய செவ்வியல் புனைவை மொழிபெயர்ப்பதென்பது மொழிபெயர்ப்பாளனுக்குச் சாகசம் நிறைந்த பயணமாக அமைகின்றது. இந்தச் சவால்களைச் சிங்கையின் மூத்த படைப்பாளி புதுமைதாசன் வெற்றிகரமாகச் சந்தித்திருக்கிறார். மொழிபெயர்ப்புக்கு அவர் தேர்ந்தெடுத்தவைப் பலருக்கும் சிம்மச் சொப்பனமாக விளங்கும் ஷேக்ஸ்பியர் நாடகங்கள். இதற்கே நாம் அவருக்கு முதற்கண் வணக்கத்தைத் தெரிவிக்கலாம்.

புதுமைதாசன் 1961-இல் வானொலிக்காக முதன்முதலில் ஷேக்ஸ்பியரின் ‘ஒதெல்லோ’ நாடகத்தைச் சுருக்கமாக மொழிபெயர்த்து ஒரு மணி நேர ஒலி நாடகமாகப் படைத்தார். அதன்பின் இதே பாணியில், ஷேக்ஸ்பியரின் ‘மெக்பெத்’ மற்றும் ‘சூறாவளி’ (The Tempest) ஆகிய நாடகங்களையும் மொழிபெயர்த்தார். 1992-இல் பணிஓய்வு பெற்ற பின்னர், ‘மெக்பெத்’ நாடகத்தை முழுமையாக மொழிபெயர்க்கத் துவங்கினார். இந்த நாடகத்தின் முழுமையான மொழிபெயர்ப்பு 1996-இல் பதிப்பானது. மீண்டும் 2015-இல் ஷேக்ஸ்பியரின் ‘ஹேம்லெட்’, ‘ஒதெல்லோ’, ‘மன்னன் லியர்’, ‘ஜூலியஸ் சீசர்’, ‘சூறாவளி’, ‘ரோமியோ ஜூலியட்’ உள்ளிட்ட பிற நாடகங்களை மொழிபெயர்க்கும் பணியில் ஈடுபட்டார். புதுமைதாசன் ‘ஆண்டனி கிளியோபாட்ரா’ நாடகத்தோடு ஷேக்ஸ்பியர் நாடகங்களை மொழிபெயர்க்கும் பணியை முடித்துக் கொள்ளும் திட்டத்தில் இருக்கிறார்.

புதுமைதாசன், ஷேக்ஸ்பியர் நாடகங்களை மொழிபெயர்க்க மிகத் தீவிரமாக உழைத்திருக்கிறார். குறிப்பாக, இன்றைய மொழிபெயர்ப்பாளர்களுக்கு இருக்கும் இணைய வசதியை அவர் நாடவேயில்லை. அனைத்து நாடகங்களையும் தன்னுடைய நீண்ட கால வாசிப்பனுபவத்தைச் சார்ந்தும் தரமான அகராதிகளின் துணையோடும் மொழிபெயர்த்திருக்கிறார். ஒரு நாடகத்தை மொழிபெயர்க்க கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் அவருக்குத் தேவைப்பட்டன.

***

ஷேக்ஸ்பியர் போன்ற ஒரு நாடக ஆசிரியரின் படைப்பை மொழிபெயர்க்கையில் ஒரு மொழிபெயர்ப்பாளர் சந்திக்கும் சவால்கள் என்ன?

● ஷேக்ஸ்பியர் நாடகங்களின் பழமையான ஆங்கிலம். தன்மை, முன்னிலை இடம் மாறிய அதன் கவிதை நடை, தற்காலத்தில் வழக்கத்தில் இல்லாத பல சொற்கள் ஆகியவை முதற்கட்ட சவாலை அளிப்பவையாகும்.
● ஷேக்ஸ்பியர் நாடகங்களில் கவிதைகள் அதிகம் இடம்பெற்றிருக்கும். ஆகவே, மொழிபெயர்ப்பாளர் உரைநடையில் மட்டுமல்ல, கவிதை மொழியிலும் வல்லவராய் இருத்தல் வேண்டும்.
● ஷேக்ஸ்பியர் நாடகங்களில் உள்ள பழமொழிகளை மொழிபெயர்ப்பது சவால் நிறைந்தது. மூல மொழி மட்டுமல்லாது, அந்த மொழி புழங்கிவரும் நிலத்தின் வரலாற்றையும் பண்பாட்டையும் பற்றிய அறிதலும் மொழிபெயர்ப்பாளருக்கு இருக்க வேண்டும்.
● ஷேக்ஸ்பியர் தன் நாடகங்களில் மிகுதியான கிரேக்கத் தொன்மங்களைப் பயன்படுத்தியிருக்கிறார். கிரேக்க வரலாறும் பண்பாடும் அதன் கடவுளர்கள் உருவாக்கி வந்த கதைகளையும் மொழிபெயர்ப்பாளர் அறிந்திருந்தால் மட்டுமே நாடகத்தில் உள்ள நுணுக்கமான உவமைகளையும் கவிப் படிமங்களையும் மொழிபெயர்க்க இயலும்.
● ஷேக்ஸ்பியர் நாடகங்களில் பகடிக்குத் தனித்துவமான இடமுண்டு. பகடியைப் புரிந்துகொள்வது மட்டுமல்லாமல், தமிழில் அதே பகடியை அதன் உணர்வு சிறிதும் குன்றாமல் மொழிபெயர்த்தல் வேண்டும். பொதுவாகவே, ஷேக்ஸ்பியர் நாடகங்களில் உள்ள ஏற்ற இறக்கமான மொழி, உணர்வுச்சம் மிகுந்த வசனங்கள், அங்கதம் போன்றவற்றை மொழிபெயர்ப்பது சவால் நிறைந்தது.

இச்சவால்களைப் புதுமைதாசன் எவ்வாறு வெற்றிகரமாகச் சந்தித்திருக்கிறார் என்பதை அவரது நான்கு மொழிபெயர்ப்பு நாடகங்களை வாசிப்புக்கு எடுத்துக் கொள்வதன் மூலம் அறிய முயற்சிக்கலாம்.

‘ஹேம்லெட்’

ஷேக்ஸ்பியர் முப்பத்தேழு நாடகங்கள் எழுதியிருந்தாலும் அவற்றுள் நான்கு நாடகங்களே மிக முக்கியமானதென்று விமர்சகர்கள் கருதுகிறார்கள். அவை ‘ஒதெல்லோ’, ‘ஹேம்லெட்’, ‘கிங் லியர்’ மற்றும் ‘மெக்பெத்’ ஆகியவையாகும். இந்த நான்கு படைப்புகளையும் விமர்சகர்கள் ஷேக்ஸ்பியரின் ‘Four Great Tragedies’ என்பார்கள். இந்த நாடகங்கள் ஷேக்ஸ்பியர் அவரது படைப்பூக்கத்தின் உச்சத்தில் இருந்தபோது எழுதப் பெற்றவை என அறியப்படுகின்றன. அவற்றில், ‘ஹேம்லெட்’ நாடகமே இன்றளவும் பல விவாதங்களை எழுப்பியபடி இருக்கிறது. குறிப்பாக, கதாநாயகனான ஹேம்லெட்டின் கதாபாத்திரமும் அவனது சிந்தனைகளும் பேச்சும் குழப்பமானவை என்று கருதும் விமர்சகர்கள் உள்ளனர். உறவுச் சிக்கல்கள், அகச் சிக்கல்கள், தத்துவக் குழப்பங்கள், கதைமாந்தர்களின் புகைமூட்டமான இயல்புகள் போன்றவை இந்த நாடகத்தில் மிகுதியாக இருப்பதாலேயே, இந்நாடகம் தொடர்ந்து விவாதத்துக்குள்ளாக்கப்பட்டு வருகிறது. இந்த இயல்புகள் காரணமாக, இந்த நாடகம் மொழிபெயர்ப்பதற்கும் சவாலானதாக அமைகின்றது.

ஷேக்ஸ்பியரின் துன்பியல் நாடகங்களில் ‘ஹேம்லெட்’ மிகச் சிறந்த நாடகமாகும். ஷேக்ஸ்பியர் நாடகங்களில் மிகவும் சிக்கலான நாடகம் ‘ஹேம்லெட்’ என்பதைப் பல அறிஞர்களும் உறுதிப்படுத்துகின்றனர். இது கி.பி 1600-ஆம் ஆண்டில் எழுதப்பட்ட நாடகமாகும். ஷேக்ஸ்பியர் நாடகங்களை ஆராய்ந்த அறிஞர் பிராட்லி “Hamlet is the best, King Lear is the greatest” என்கிறார். ஆங்கில இலக்கிய உலகமும் இக்கூற்றை ஏற்றுக்கொண்டுள்ளதை வரலாறு காட்டுகிறது. இந்த ஒரு நாடகம் பற்றி மட்டுமே உலகில் இதுவரை சுமார் 70,000 நூல்கள் எழுதப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தன் மகன் ஹாம்னெட்டின் அகால மரணத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட ஷேக்ஸ்பியர், அவனது நினைவாகவே இந்நாடகத்துக்கு ‘ஹேம்லெட்’ என்று பெயரிட்டதாக ஒரு கருத்து நிலவுகிறது. இந்த நாடகத்தின் கதைக் களமே முற்றிலும் வித்தியாசமானது. அரசியல் கொலைகள், முறை மீறிய பாலுறவு, துரோகம் என மனிதனின் கீழ்மைகளும் இருண்மைக் குணங்களும் மலிந்த நாடகம் இது. வெறும் பழிக்குப் பழி வாங்கும் கதையாக முடிந்துவிடாமல், மனிதனுக்கு என்றுமுள்ள சில அடிப்படையான கேள்விகளை எழுப்புவதால் இந்த நாடகம் கலாபூர்வமாகவும் முக்கியமானதாகிறது.

புதுமைதாசனின் தனிச் சிறப்பாக நான் கருதுவது, ஆங்கில நாடகத்தை மொழித்தளத்தில் மட்டுமல்லாது, அதன் கலை மற்றும் பண்பாட்டுத் தளத்தையும் சிறப்பாகத் தமிழுக்குக் கொண்டு வந்திருக்கிறார். ‘ஹேம்லெட்’ நாடகத்தில் அவரது மொழிபெயர்ப்பின் தனிச் சிறப்பாக நான் கருதுபவை இவை ;

● ஷேக்ஸ்பியரின் பிற நாடகங்களைப் போலவே வசனங்களுக்கிடையே கவிதைகள் அதிகம் இடம்பெறும் நாடகம் இது. புதுமைதாசன், இதிலுள்ள கவிதைகளை அதன் தனித்துவம் குறையாமல் தமிழாக்கம் செய்திருப்பது முதன்மையான சாதனை.
● மேற்சொன்ன தத்துவச் சிக்கல்கள், உறவுச் சிக்கல்கள், அகச் சிக்கல்கள் போன்ற சவாலான அம்சங்களைத் தன்னுடைய நீண்ட கால ஷேக்ஸ்பியர் வாசிப்பனுபவத்தின் உதவியுடன் நேர்த்தியாக மொழிபெயர்த்திருக்கிறார்.
● பல்வேறு வடிவப் புதுமைகள் கொண்ட நாடகம் ‘ஹேம்லெட்’. குறிப்பாக, நாடகத்துக்குள் இன்னொரு நாடகம் இடம் பெறுகிறது. நாடகத்துக்குள் நாடகம் என்ற இந்தச் சவாலையும் எதிர்கொண்டு செவ்வனே மொழிபெயர்த்திருக்கிறார் புதுமைதாசன்.
● அனைத்திலும் மேலாக, ‘ஹேம்லெட்’ நாடகத்தின் கலை நேர்த்தியில் குறைபாடோ சமரசமோ இன்றி மூல மொழியில் இருந்து தமிழுக்கு வெற்றிகரமாக மொழிபெயர்த்திருக்கிறார்.

புதுமைதாசனின் மொழிபெயர்ப்பின் தனித்துவம் என்று நான் கருதுவது, நாடகத்தில் இடம்பெறும் கவிதைகளை அவர் மொழிபெயர்த்திருக்கும் நேர்த்தியே. பதினாறாம் நூற்றாண்டில் வெளியான நாடகத்தை நவீன காலத்துப் புதுக்கவிதை வடிவத்தில் மொழிபெயர்ப்பது தகுந்ததன்று என்பதால் மரபான யாப்பு வடிவத்திலே மொழிபெயர்த்திருக்கிறார். குறிப்பாக, ஆசிரியப்பா வடிவத்தையே அதிகம் பயன்படுத்தியிருக்கிறார். ஆசிரியப்பாவின் அகவலோசையிலேயே இசையொழுங்கு பூரணமாக இருக்கிறது என்று அவருடனான உரையாடலில் கூறினார். தமிழ்க் கவிதையில், தேய்வழக்குகள் இல்லாது முற்றிலும் வித்தியாசமான சொற்களையும் சொற்சேர்க்கைகளையும் பயன்படுத்தியுள்ளார்.

ஹேம்லெட் தன்னுடைய காதலி ஒஃபீலாவுக்கு எழுதும் காதல் கடிதத்தில் இக்கவிதை இடம்பெறுகிறது.

Doubt thou the stars are fire
Doubt that the sun doth move
Doubt truth to be a liar
But never doubt I love

ஆங்கிலத்திலேயே வாசிக்க இனிமையாக இருக்கும் இக்கவிதையைத் தமிழில் மொழிபெயர்க்கையில் வாசிப்பின்பம் சற்றும் குறையாமல், அரிய சொற்களால் பழந்தமிழ் நடையில் புதுமைதாசன் கீழ்க்கண்டவாறு மொழிபெயர்த்துள்ளார்.

உடுக்கள் நெருப்பென உரைத்தலில் ஐயுறு
ஞாயிறு தானும் நகர்தலில் ஐயுறு
மெய்ம்மை, பொய்ய னெனில்நீ ஐயுறு,
ஆயினென் காதலில் ஐயம் தவிர்ப்பையே

ஹேம்லெட் பொலோனியஸுடன் பேசும்போது ஓர் இடத்தில், “As by lot, God Wot” என்கிறான். இந்த இடத்தையும் கவித்துவம் சற்றும் குறையாமல், “தற்செயலாலே தலைவனும் அறிவான்” என்று மொழிபெயர்த்திருக்கிறார் புதுமைதாசன். இந்த இடத்தில், ஆங்கிலத்தைக் காட்டிலும் தமிழ் மொழிபெயர்ப்பு சிறந்த வாசிப்பின்பத்தைத் தருகிறது.

சில இடங்களில் மூலக் கவிதைக்கு ஊறு விளைவிக்காத மேலதிகமான சொற்களையும் பெய்து தமிழ்க் கவிதையில் அழகுற மொழிபெயர்த்திருக்கிறார் புதுமைதாசன்.

உதாரணமாக, நாடகத்துக்குள் இடம்பெறும் நாடகத்தில், மன்னன் தனது மனைவியை, “நீ இன்னொருவனை இரண்டாவதாக மணம் புரிவாய்”, என்கிறான். அவனது சொற்களால் மனம் புண்பட்ட ராணி, “நான் உங்களுக்குத் துரோகம் இழைக்க மாட்டேன்” என்ற பொருளில் கீழ்க்கண்டவாறு பேசுகிறாள்.

O, confound the rest!
Such love must needs be treason in my breast.
In second husband let me be accurst.
None wed the second but who killed the first

இக்கூற்று புதுமைதாசனின் மொழிபெயர்ப்பில் மேலதிகமான சொற்களைக் கொண்டு மெருகூட்டப்படுகிறது.

இன்னும் நீவிர் இயம்பல் வேண்டா.
அவ்வகை மறுமணம் ஆயிழை நானும்
வேண்டுவ ளாயின் விரைந்து என்னை
வசைமொழி கூறி வருத்திடு உலகே.
ஏந்திழை ஒருத்தி இரண்டாம் மணத்தை
ஏற்பா ளாயின் இழிவினள் அவளும்
முன்னைத் துணைவனைக் கொன்றவ ளாவளே

மேற்கண்ட செய்யுள் ஆசிரியப்பா வகையைச் சார்ந்தது. கவிதைகளை மொழிபெயர்க்கும்போது புதுமைதாசன் ஈரசைச் சீர்களையே அதிகம் பயன்படுத்துவதை வாசகர் அறியலாம். மூவசைச் சீர்களான காய்ச்சீர்கள் அவரது மொழிபெயர்ப்பில் இடம்பெறுவதில்லை. ஓசை ஒழுங்கை முன்னிட்டு ஈரசைச் சீர்களையே அவர் அதிகம் பயன்படுத்துகிறார். மேலும், மேற்கண்ட செய்யுளில் முதலாம் சீரிலும் மூன்றாம் சீரிலும் ஒரே எழுத்து அல்லது இனவெழுத்து இடம்பெறுவதை வாசகர் காணலாம். இது ‘பொழிப்பு மோனை’ எனப்படுகிறது. செய்யுளின் இசையொழுங்கிற்குப் ‘பொழிப்பு மோனை’ இன்றியமையாதது. அதைச் சிறப்பாகக் கையாண்டிருக்கிறார் புதுமைதாசன்.

முத்தாய்ப்பாக, ஒஃபிலீயாவின் இந்தப் பாடலை, தமிழில் ஒரு தனிக்கவிதையாகவே வாசிக்குமளவு மொழிபெயர்த்திருக்கிறார் புதுமைதாசன்.

Tomorrow is Saint Valentine’s day,
All in the morning betime,
And I a maid at your window,
To be your Valentine.
Then up he rose and donned his clothes
And dupped the chamber door,
Let in the maid, that out a maid
Never departed more

தமிழ் மொழிபெயர்ப்பில்,

நாளை யன்று நல்லா ராகிய
நல்வே லண்டைன் நாளென உணர்க.
காலைப் பொழுதில் கன்னி நானும்
உன்றன் சன்னல் ஓரம் உன்றன்
வாலண் டைனின் வடிவாய் நிற்பேன்.
இளவல் அவனும் எழுந்தான் விரைந்தே,
ஆடை தன்னை அமைவுற அணிந்தான்;
பாயல் அறையின் பாங்குறு கதவினைப்
பண்புடன் திறந்து பாவை யவளை
ஒப்பிலன் அவனும் உள்ளே விட்டனன்.
அறை யினின்று அகன்ற வேளை
கன்னி அவளும் கன்னி இலையே

புதுமைதாசனின் மொழிபெயர்ப்பை வாசிக்கும்போது அரிய தமிழ்ச் சொற்களை அறிந்து கொள்ள முடிகிறது. எ.கா. “கட்டில்” என்பதற்கு நிகரான “பாயல்” என்ற சொல்லையே அவர் பயன்படுத்துகிறார்.

ஷேக்ஸ்பியர் பழமொழி போல தொனிக்கும் சொற்றொடர்களை ‘ஹேம்லெட்’ நாடகத்தில் உருவாக்கியளித்திருக்கிறார். புதுமைதாசன் தகுந்த சொற்களில் அவற்றைத் தமிழுக்கு மாற்றியிருக்கிறார். உதாரணமாக, ஒரு காட்சியில் ஹேம்லெட் தன் பால்ய நண்பன் ரோஸன்கிராண்ட்ஸிடம் பேசும்போது சில விஷயங்களை எள்ளல் தொனியில் தெரிவிக்கிறான் ஆனால், அதைப் புரிந்துகொள்ளும் அறிவாற்றல் ரோஸன்கிராண்ட்ஸிடம் இல்லை. வெறுத்துப் போன ஹேம்லெட் “A Knavish speech sleeps in a foolish ear”என்கிறான். புதுமைதாசன் இச்சொற்றொடரைக் கவித்துவமாக “அங்கதம் அறியார், அறிவிலார்” என்று மொழிபெயர்த்திருக்கிறார்.

அதேபோல, ஒஃபீலியா தன் தந்தையின் அறிவுரைகள் தன் மனதில் தங்கிவிட்டன என்பதை

‘Tis in my memory locked
And you yourself shall keep the key of it”

என்கிறாள். புதுமைதாசன் இச்சொற்றொடரை “என் நினைவில் அது தாழிடப்பட்டுவிட்டது. அதன் திறவுகோல் உங்களிடமே இருக்கட்டும்” என்று மொழிபெயர்த்திருக்கிறார்.

ஹேம்லெட் தன் சிற்றப்பன் குளோடியஸிடம் நிலையாமைத் தத்துவம் பற்றிப் பேசுகையில், இறுதியில் மனிதன் மண்புழுக்களுக்குத்தான் இரையாகிறான் என்ற அர்த்தம் தொனிக்க “We fat all creatures else to fat us, and we fat ourselves for maggots” என்கிறான். இதைக் கவித்துவம் மிளிர, புதுமைதாசன் இவ்வாறு மொழிபெயர்க்கிறார்: “நம்மைக் கொழுக்க வைக்கும் பொருட்டு நாம் விலங்குகளைக் கொழுக்க வைக்கிறோம். புழுக்கள் உண்ணும் பொருட்டு நாம் நம்மைக் கொழுக்க வைக்கிறோம்”. “Frailty, thy name is woman!” என்ற சொற்றொடரை “மனவுறுதியின்மையும் பெண்மையும் ஒருங்கிணைந்து செல்வன!” என்று அந்தச் சூழலுக்குப் பொருந்தும்படி கவித்துவமாக மொழிபெயர்த்திருக்கிறார்.

‘ஹேம்லெட்’ நாடகத்தில் சில சர்ச்சைக்குரிய சொற்கள் இருக்கின்றன. குறிப்பாக ‘Handsaw’ என்ற சொல். ஹேம்லெட் தன் நண்பன் கில்டன்ஸ்டெர்னிடம் ஒரு காட்சியில் இவ்வாறு உரைக்கிறான்.

“I am but mad north-north-west. When the
wind is southerly, I know a hawk from a handsaw”

இதன் நேர்பொருளானது, “காற்று வடமேற்கில் வீசும்போது நான் தெளிவற்றவன், ஆனால், அதே காற்று தெற்கு நோக்கி வீசும்போது நான் தெளிவானவன், அவ்வேளையில் ஒரு வல்லூற்றுக்கும் சிறுகுருவிக்குமான வித்தியாசத்தை நானறிவேன்”. பறவையைக் குறிக்கும் ‘Hernsaw’ என்ற சொல்லே காலப்போக்கில் மருவி ‘Handsaw’ என்றாகிவிட்டது, என்கிறார்கள் அறிஞர்கள். புதுமைதாசனின் மொழிபெயர்ப்பிலும் இப்பகுதி சற்றுப் புகைமூட்டமாக இருக்கிறது. ஆனால், முற்றிலும் புதிய ஒரு உவமையை இவ்விடத்தில் பயன்படுத்தியிருக்கிறார் புதுமைதாசன்.

“காற்று தவறான திசையில் வீசும்போதுதான் நான் பித்தன். அது தெற்கு நோக்கி வீசுகையில் என் முழங்கையிலிருந்து நான் என் கையை அறிவேன்”

புதுமைதாசனின் மொழிபெயர்ப்பில் குறிப்பிடத்தகுந்த அம்சம், மூலத்தின் அனைத்துச் சொற்களையும் அவர் தமிழில் மொழிபெயர்க்கவில்லை. சில பெயர்ச்சொற்களுக்கு மூலத்தின் ஆங்கில வடிவை அப்படியே கையாண்டுள்ளார். எ.கா. ஐரோப்பிய நாணயத்தைக் குறிக்கும் ‘Ducat’ என்ற சொல்லை ‘டுக்கெட்’ என்று அப்படியே எடுத்தாண்டுள்ளார். அதேபோல, ஆங்கில உச்சரிப்புக்கு ஏற்றவாறே கதாபாத்திரங்களின் பெயர்களைப் பயன்படுத்தியிருக்கிறார். பிற மொழிபெயர்ப்பாளர்கள் ‘ஹாம்லெட்’ என்ற தலைப்பில் மொழிபெயர்த்துள்ளபோது, புதுமைதாசனோ ஆங்கில உச்சரிப்புக்கு ஏற்றவாறு ‘ஹேம்லெட்’ என்று சரியான தலைப்பைப் பயன்படுத்தியிருக்கிறார். ‘Herbs of Grace’ என்ற சொல்லுக்கு ‘அருள் மூலிகை’ என்ற புதிய சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார்.

‘ஹேம்லெட்’ மொழிபெயர்ப்பில் சில குறைகளையும் என் வாசிப்பில் காண முடிந்தது. முதல் காட்சியில், கோட்டை காவலர்கள் பெர்னார்டோவும் ஃபிரான்ஸிஸ்கோவும் சந்தித்துக் கொள்கிறார்கள். “எல்லாம் அமைதியாகத்தானே இருக்கிறது” என்று பெர்னார்டோ கேட்கும்போது மூலத்தில் “Not a mouse stirring” என்று அழகாகப் பதிலளிக்கிறான் ஃபிரான்ஸிஸ்கோ. ஆனால், தமிழில் அந்தச் சொற்றொடர் மொழிபெயர்க்கப்படவில்லை. ‘Heaven, Hell’ ஆகிய இரு சொற்களுக்கும் ‘விண்ணகம்’ என்ற ஒரே சொல்லையே பயன்படுத்தியிருக்கிறார். குறிப்பாக, தன் தந்தையின் ஆவியிடம் ஹேம்லெட் பேசும்போது, “Bring with thee airs from heaven or blasts from hell” என்கிறான். புதுமைதாசன் இச்சொற்றொடரை “விண்ணுலகத் தென்றலைக் கொண்டு வந்தனையா அல்லது அவற்றின் கொடுங்காற்றை ஏந்தி வந்தாயா” என்று மொழிபெயர்த்திருக்கிறார். இந்த இடத்தில், சொர்க்கம், நரகம் என்ற சொற்களைப் பயன்படுத்தியிருந்தால் அதன் அர்த்தம் மேலும் நன்றாகத் துலங்கியிருக்கும் எனக் கருதுகிறேன்.

புதுமைதாசனின் இந்த ‘ஹேம்லெட்’ மொழியாக்கம், மூல மொழியின் கலை நேர்த்தியையும் தனித்துவத்தையும் மிகச் சரியாகப் பிரதிபலித்துக் காட்டியிருக்கிறது. இலக்கிய வாசகர்கள் நன்றியுடன் நினைவுகூரத்தக்க மொழிபெயர்ப்பு இது.

‘ரோமியோ ஜூலியட்’

‘ரோமியோ ஜூலியட்’ ஷேக்ஸ்பியரின் ஆரம்பக்கால துன்பியல் நாடகங்களில் ஒன்றாகும். இதன் கதை ஷேக்ஸ்பியருடையது அல்ல. இது இத்தாலி நாட்டின் வாய்மொழிக் கதையாகும். காலப்போக்கில் இக்கதை இங்கிலாந்தில் பிரபலமாகவே, ஷேக்ஸ்பியர் இக்கதையைச் சிறிது செப்பனிட்டு நாடகமாக்கினார். ஏ.சி. பிராட்லி உள்ளிட்ட முக்கியமான விமர்சகர்கள் பலரும் இந்நாடகத்திலுள்ள கலைத்தன்மையை அங்கீகரித்தாலும் இதன் கதையை ஏற்றுக்கொள்ள மறுத்தனர். இது குழந்தை காதலைச் சொல்லும் கதை என்றனர். காரணம், ஜூலியட்டின் வயது வெறும் பதினான்குதான். ரோமியோவுக்கு ஜூலியட்டைவிட ஓரிரு வயது அதிகமிருக்கலாம். ஆனால், இது ஒரு பெரிய குறையில்லை. காரணம், பதினாறாம் நூற்றாண்டில் குறிப்பாக ராணி முதலாம் எலிசபெத் காலத்தில் பன்னிரெண்டு வயது சிறுமிகளுக்கு மணம் முடிக்கும் வழக்கம் இருந்திருக்கிறது. இதே நாடகத்தில் ஜுலியட்டின் அன்னை, ஜூலியட்டைத் தான் பெற்றெடுத்தபோது தனது வயது பதினான்குகூட நிரம்பியிருக்கவில்லை என்கிறாள். நம் சிலப்பதிகாரத்திலும், கதை துவங்கும்போது கண்ணகிக்குப் பன்னிரெண்டு வயதுதான் ஆனால், கோவலனுக்குப் பதினாறு வயது. ஆகவே, கதைமாந்தர்களின் வயதின் அடிப்படையில் இக்கதையை விமர்சிப்பது சரியன்று. காதலைத் தாண்டி, இந்நாடகத்தில் உள்ள மிதமிஞ்சிய வன்முறையும் பாலியல் சித்தரிப்புகளும் இன்றளவும் விமர்சனத்துக்குள்ளாகியபடி இருக்கின்றன. ஆனாலும், இதிலுள்ள காதல் வசனங்களும் விறுவிறுப்பான சம்பவங்களும் இந்நாடகத்தை அமரக்காவியமாக மாற்றிவிட்டன.

இந்நாடகம் கி.பி.1594-ஆம் ஆண்டு எழுதப்பட்டது. நாடகத்தின் துவக்கவுரையிலேயே நாடகத்தின் கதை சொல்லப்பட்டுவிட்டது. அறிவிப்பாளன் ‘Star Crossed lovers’ என்று ரோமியோ ஜூலியட்டை அறிமுகப்படுத்தும்போதே அவர்களின் விதி என்ன என்று பார்வையாளர்களுக்குத் தெரிந்துவிடுகிறது.

புதுமைதாசன் வழக்கம்போலவே தன்னுடைய பிரத்யேகமான சொற்தேர்வின் மூலம் இந்நாடக மொழிபெயர்ப்பில் இயங்கியுள்ளார். ‘Wayward girl’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையாக, ‘தான்தோன்றித்தனமானப் பெண்’ என்ற புதுமையான சொல்லைத் தேர்வு செய்கிறார். ‘Nightingale’ என்ற ஆங்கில வார்த்தைக்கு மிகப் பொருத்தமான ‘இராப்பாடி’ என்ற சொல்லைத் தேர்வு செய்கிறார். அதேபோல, சில அரிய தமிழ்ச் சொற்களையும் பயன்படுத்தியிருக்கிறார். ‘படுக்கை’ என்ற வழக்கமான சொல்லுக்கு மாற்றாக ‘பாயல்’, ‘நட்சத்திரங்கள்’ என்ற சொல்லுக்கு மாற்றாக ‘உடுக்கள்’ என்று இம்மொழியாக்கத்தில் அரிய தமிழ்ச் சொற்கள் நிறைந்திருக்கின்றன.

ஷேக்ஸ்பியரின் பிற நாடகங்களில் பாடல்கள் அதிகம் இடம்பெற்றிருக்கும். ஆனால், காதல் கதையான ‘ரோமியோ ஜுலியட்டில்’ பாடல்கள் அதிகம் இல்லை என்பது வியப்பான செய்தியே. ஆகையால், பாடல்களை மொழியாக்கம் செய்வதில் புதுமைதாசனிடமுள்ள கவித்திறனை இந்நாடகத்தில் காண இயலவில்லை. ஆனால், புதுமைதாசனின் நகைச்சுவைத் திறன் இந்நாடகத்தில் நன்கு வெளிப்படுகிறது. எ.கா: முதல் காட்சியில் இரு பணியாளர்கள் பேசிக் கொள்கின்றனர். முதிய கேப்பயூலெட் தன் பணியாளர்களை நோக்கி “என் நீள்வாளைக் கொணர்வீர்” என்று ஆணையிடும்போது அவரது மனைவி நக்கலாக, “உங்களுக்கு இந்த வயதில் தேவை வாளல்ல, ஊன்றுகோல்”என்கிறாள். ஷேக்ஸ்பியரின் நகைச்சுவை உணர்வைத் தமிழுக்குக் குறைவறக் கடத்தியிருக்கிறார் புதுமைதாசன்.

காதலின் உன்னதத்தைப் புதுமைதாசன் அழகிய தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். ஜூலியட்டை ரகசியமாகச் சந்திக்க வரும் ரோமியோவிடம், “எங்கள் காவல் வீரர்கள் ஆயுதம் தாங்கியவர்கள், அவர்கள் கண்களில் பட்டுவிடாதீர்கள்”என்கிறாள். “அவர்களின் கொலை ஆயுதங்களைக் காட்டிலும் அதிக ஆபத்து உன் காதற்கண்களில் அல்லவா இருக்கிறது” என்ற பொருளில் ரோமியோ இவ்வாறு சொல்கிறான்:

“Alack, there lies more peril in thine eye
Than twenty of their swords”

புதுமைதாசன் இதனை “ஐயகோ, அந்தக் கூட்டத்தினர் தம் இருபது வாள்களினும், நான் உன் விழிகளுக்கு மிகுதியாய் அஞ்சுகின்றேன்” என்று மொழிபெயர்த்திருக்கிறார்.

ஜூலியட்டை விட்டுப் பிரிய மனமில்லாத ரோமியோ தன் பிரிவாற்றாமையைச் சொல்ல சுவாரஸ்யமான உவமையைப் பயன்படுத்துகிறான். பள்ளி மாணவன் தன் பள்ளியை விட்டு வெளியே வரும்போது காட்டும் விரைவுத்தன்மைக்கு இணையாகக் காதலன் காதலியைச் சந்திக்க வருகிறான், அவளைப் பிரியும்போதோ பள்ளி மாணவன் பள்ளிக்குச் செல்லும்போது அனுபவிக்கும் துன்பமான மனநிலைக்கு ஒப்பான மனநிலையுடன் பிரிகிறான் என்கிறான்.

“Love goes toward love as schoolboys from their books, But love from love, toward school with heavy looks “

புதுமைதாசன் இதனை, “பள்ளி மாணவன் ஒருவன் தன் நூல்களை விட்டுச் செல்கையில் பெருமகிழ்ச்சியுடன் செல்தல் போல், காதலன், தன் காதலியின்பால் செல்கையில் மட்டற்ற பேரார்வத்துடன் செல்கின்றான். ஆயின், அவன் தன் காதலியை விட்டுப்பிரிகையில், மீண்டும் பள்ளிக்குத் திரும்பும் மாணவன் மகிழ்ச்சியற்றவனாய் மாறுதல்போல் அவன் மகிழ்ச்சி குலைந்தவனாகிவிடுகின்றான்” என்று மொழிபெயர்த்திருக்கிறார்.

பள்ளி மாணவர்களின் மனநிலை ஷேக்ஸ்பியர் காலத்திலிருந்து தற்காலம் வரையில் அப்படியேதான் இருக்கிறது. எக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய ஓர் உவமைதான் இது.

அதேபோல, இளைஞர்களின் அலைபாயும் காதல் உணர்வுகளையும் இந்நாடகத்தில் காணலாம். கதையின்படி, ரோமியோ முதலில் காதலிப்பது வேறொரு பெண்ணை. அவளது பெயர் ரோஸலின். ஆனால், அவள் அவனைப் புறக்கணித்துவிடுகிறாள். அவளைப் பார்க்கத்தான் விருந்து நிகழ்ச்சிக்குப் போகிறான் ரோமியோ. ஆனால், அங்கு ஜூலியட்டைப் பார்த்தவுடன், அவன் விதியே மாறிவிடுகிறது. கண்டதும் காதல். அடுத்த நாளே திருமணம்.

இந்த மனநிலையைப் புரிந்துகொள்ள முடியாத பாதிரியார் ரோமியோவிடம் இவ்வாறு கேட்கிறார்,

“Young men’s love then lies not truly in their hearts, but in their eyes”

புதுமைதாசனின் மொழியாக்கம்: “இளையர் தம் விழிகளால் காதலிக்கின்றனர், நெஞ்சத்தினால் அல்ல”.

விருந்துக்கு முந்தைய இரவில், அழகு என்பது, காணும் கண்களுக்கு ஏற்ப மாறுபடுவது, என்ற தொனியில் ரோமியோவின் நண்பன் பென்வோலியோ இவ்வாறு உரைக்கிறான்,

“Sups the fair Rosaline whom thou so loves,
With all the admirèd beauties of Verona
Go thither, and with unattainted eye
Compare her face with some that I shall show,
And I will make thee think thy swan a crow”

புதுமைதாசனின் மொழியாக்கம்: “கேப்யூலெட்டின் இந்த விருந்தில் நீ மிகுதியாய் விரும்பும் அழகிய ரோஸலின், வெரோனாவில் மிகுதியாய் விரும்பப்படும் அழகியருடன் கலந்துகொள்வாள். நீ சென்று அந்த விருந்தில் கலந்துகொள். அதனுடன், எத்தகைய பாகுபாடுமின்றி நேர்மைமிகு கண்ணோட்டத்தில், ஒப்பிட்டுப் பார்த்தற்கு ஏதுவாய் நான் மற்ற அழகியரை உனக்குக் காண்பிக்கிறேன். அப்பொழுது, அன்னம் போன்ற அழகியென்று நீ கருதுபவள், உனக்கு அருவருப்புமிக்க காக்கையாய்த் தோன்றுவாள்.”

‘ரோமியோ ஜூலியட்’ நாடகத்தில் பாலுறவுச் சித்திரிப்புகள் அதிகம் இடம்பெற்றிருக்கும். அதனாலேயே பல விமர்சகர்கள், இது ஒரு காதல் பிரதியல்ல (Love Text), இது பாலுறவுப் பிரதி (Sex text) என்கிறார்கள். ‘More sexual than romantic’ என்ற விமர்சனமும் முன்வைக்கப்படுகிறது. இது போன்ற பாலுறவுச் சித்தரிப்புகளைப் புதுமைதாசன் எப்படி மொழிபெயர்த்திருக்கிறார் என்று காண்கையில், இவற்றைக் கூடுதல் கவனமெடுத்து விரசம் தென்படாதவாறு மையமாக மொழிபெயர்த்திருக்கிறார். இதை விமர்சனமாகவும் முன்வைக்கலாம். சில பாலியல் வசனங்களைப் பொதுவான அச்சு மொழியில் மொழியாக்கம் செய்கையில், மூலத்திலுள்ள அந்த இரட்டை அர்த்தமும் பகடியும் மொழியாக்கத்தில் நழுவி விடுகிறது. குறிப்பாக, நாடகத்தின் முதல் காட்சியில் கேப்யூலெட் குடும்பத்துப் பணியாட்கள் இருவர் பேசும் காட்சியில், ஸேம்ப்ஸன் என்ற பணியாள், தன் தோழன் கிரெகரியிடம், தான் தன்னுடைய எஜமானனின் பரம எதிரியான மோன்டேகியூ குடும்பப் பெண்களைக் கற்பழிப்பேன் என்று பொருள்படும் வசனங்களைப் பேசுகிறான்.

SAMPSON: When I have fought with the men, I will be civil with the maids; I will cut off their heads

GREGORY: The heads of the maids?

SAMPSON: Ay, the heads of the maids, or their maidenheads. Take it in what sense thou wilt

தமிழில்:

ஸேம்ப்ஸன்: நான் அந்த ஆடவர் அனைவருடனும் சண்டையிட்ட பின்னர், அந்தப் பெண்டிருடன் நேர்த்தியாய் நடந்துகொள்வேன், அதாவது, அவர் அனைவர்தம் தலைகளை வெட்டியெறிந்துவிடுவேன்.

கிரேகரி: அந்தப் பெண்டிரின் தலைகளையா?

ஸேம்ப்ஸன்: ஆம், அந்தப் பெண்டிரின் தலைகள் அல்லது அவர்தம் கன்னியர் தலைகள். நீ விரும்பும் எந்த உணர்விலேனும் என் கருத்தை ஏற்றுக்கொள்ளலாம்.

இந்தக் கடைசி வசனத்தில் ‘கன்னித்திரை’ என்ற சொல் கவனமாகத் தவிர்க்கப்பட்டிருக்கிறது. ஆங்கிலத்தில் உள்ள அந்த இரட்டை அர்த்தம் தமிழில் சரியாக வரவில்லை.

ஷேக்ஸ்பியரின் இந்த நாடகத்தில் முழுக்க பாலியல் வசனங்கள் மலிந்திருக்கின்றன. சில இடங்களில் புன்னகைக்க வைக்கவும், சில இடங்களில் அருவருப்பூட்டக் கூடியதாகவும் இருக்கின்றன. குறிப்பாக, இந்த நாடகத்தில் இடம்பெறும் ‘குத்துவாள்’, ‘ஈட்டி’, ‘அம்பு’ போன்ற சொற்கள் பல இடங்களில் இரட்டை அர்த்தக் குறிப்புகள் நிறைந்தவையாகும். ஜூலியட்டின் செவிலி இவ்வகை இரட்டை அர்த்தம் தொனிக்கும் வசனங்களை அதிகம் பேசுகிறாள். அவளது வசனங்களில் உள்ள ‘Bird’s nest’, ‘Bear the Burden’, ‘seek happy nights to happy days’ போன்ற சொற்கள் யாவும் பாலியல் நெடியடிப்பவை. புதுமைதாசன் மிக நளினமாக “மகிழ்ச்சிக்குரிய நாட்களுக்காக நீ மகிழ்வான இரவுகளுக்குக் குறிபார்” என்று மொழிபெயர்க்கிறார். “இன்றிரவு படுக்கையில் உன் காதலனை நீ சுமக்க வேண்டியிருக்கும்” போன்ற வசனங்களை அவர் தவிர்த்துவிட்டார்.

ரோமியோவுடனான தன் முதலிரவிற்கென காத்திருக்கும் காட்சியில், ஜூலியட் தனக்குள்ளாக இவ்வாறு பேசிக் கொள்கிறாள்.

“And learn me how to lose a winning match
Played for a pair of stainless maidenhoods.
Hood my unmanned blood”

இந்த வசனத்தைப் புதுமைதாசன் இவ்வாறு கவித்துவமாக மொழிபெயர்த்திருக்கிறார், “இரவணங்கே, என் கன்னித்தன்மையைப் பணயம் வைத்து நான் எவ்வாறு இந்த (முதலிரவு என்ற) போட்டியில் வெற்றியும் தோல்வியும் பெற இயலும் என்பதை நீ எனக்குக் காண்பிப்பாய்.”

இந்நாடகத்தில், தன் காதலியான ஜூலியட்டை உறங்கச் செல்லுமாறு ரோமியோ கேட்டுக்கொள்கிறான். கவித்துவமாக அவன் உதிர்க்கும் சொற்கள் இவை;

“Sleep dwell upon thine eyes, peace in thy breast.
Would I were sleep and peace, so sweet to rest”.

இவ்வரிகளைக் கவிஞர் கண்ணதாசன் ஆலயமணி திரைப்படத்தில் பயன்படுத்தியிருப்பார்,

“தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே
அந்த தூக்கமும், அமைதியும் நானானால்
உன்னைத் தொடர்ந்திருப்பேன்
என்றும் துணையிருப்பேன்”

புதுமைதாசன் சற்று வித்தியாசமாக இவ்வாறு மொழிபெயர்த்திருக்கிறார், “என் உறக்கம் உன் விழிகளில் வதிகின்றது. என் அமைதி உன் மார்பகத்தில் அடங்கியிருக்கின்றது. நான் உறக்கத்துடனும் அமைதியுடனும் இருப்பின், இந்த இரவு முழுவதிலும் நான் உன்னுடன் இருத்தலையே விரும்புகின்றேன்.” இது ஆங்கில மூலத்தின் கவித்துவத்துக்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறது.

மொத்தத்தில் புதுமைதாசனின் இந்த மொழிபெயர்ப்பு, அள்ள வேண்டியதை அள்ளியும், தள்ள வேண்டியதை நயமாகத் தள்ளியும் ஷேக்ஸ்பியரின் ‘ரோமியோ ஜூலியட்’டை தமிழுக்கு அழகுற அழைத்து வந்திருக்கிறது. க.நா.சு-வின் மொழிபெயர்ப்புகளிலும் இத்தகைய போக்கினை அவதானிக்கலாம். அவ்வகையில், புதுமைதாசனின் இத்தகைய மொழிபெயர்ப்பு முறைக்கு நம் காலத்திலேயே நிறைய முன்னுதாரணங்கள் இருக்கின்றன.

‘மன்னன் லியர்’

‘மன்னன் லியர்’, ஷேக்ஸ்பியரின் துன்பியல் நாடகங்களில் ஒன்றாகும். அவரது நாடகங்களில் மிக நீண்ட நாடகமும் இதுவே. இது 1605-ஆம் ஆண்டில் எழுதப்பட்ட நாடகமாகும். அவரது பிற துன்பியல் நாடகங்களின் முடிவுகளை ஏற்றுக்கொண்ட பார்வையாளர்கள், இந்த ஒரு நாடகத்தின் முடிவை ஏற்றுக்கொள்ளத் தயங்கினர். மன்னன் லியரும் அவரது மகள் கார்டினியாவும் இறந்து போவதை விரும்பாத பல பிற்கால நாடக இயக்குனர்கள், இந்த நாடகத்தை மேடையேற்றும்போது மன்னன் லியரும் அவரது மகளும் வாழ்வது போலவும் இழந்த ராஜியம் அவருக்குத் திரும்பக் கிடைத்தது போலவும் மாற்றி அரங்கேற்றியிருக்கிறார்கள். எ.கா: நெய்ஹம் டெய்ட் (Nahum Tate) அரங்கேற்றிய, ‘மன்னன் லியர்’ நாடகம். ஆனாலும், இதுபோன்று முடிவு மாற்றப்பட்ட நாடகங்களை விமர்சகர்கள் தழுவல்கள் (adaptations) என்றே அடையாளப்படுத்துகின்றனர். 1838-ஆம் ஆண்டிற்குப் பிறகுதான் மீண்டும் மூலக்கதை மாறாமல் இந்த நாடகம் மேடையேற்றப்பட்டது.

ஷேக்ஸ்பியரின் நாடகங்களில் புகழ் பெற்ற நாடகங்களில் இதுவும் ஒன்று. வழக்கமாக, அவரது நாடகங்களில் காணப்படும் பாலியல் சித்தரிப்புகள் இந்த நாடகத்திலும் உள்ளன. ஆனால், இந்த நாடகத்தின் மையக் கருவான ‘நம்பிக்கைத் துரோகம்’ இன்றளவும் இந்த நாடகத்தை இளமையாகவே வைத்திருக்கிறது. ஒரு நாடகத்தில் எத்தனை நம்பிக்கை துரோகங்கள்! மகள்கள் தந்தைக்கு இழைக்கும் நம்பிக்கை துரோகம், மகன் தந்தைக்கு இழைக்கும் நம்பிக்கை துரோகம், சகோதரர்களுக்கிடையேயான நம்பிக்கை துரோகம், கள்ளக்காதலுக்காகக் கணவனைக் கொல்லத் துணியும் மனைவி என நாடகம் முழுக்க துரோகத்தின் பல்வேறு வடிவங்களைக் காண முடிகிறது.

ஷேக்ஸ்பியரின் மிக முக்கியமான இந்த நாடகத்தைப் புதுமைதாசன் கடுமையான உழைப்பைச் செலுத்தி மொழிபெயர்த்திருப்பதை நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் காண முடிகிறது.

கிளாஸ்ட்டர் கோமான் தன் மகனிடம் பேசும் இந்த வசனமே ஒருவகையில் நாடகத்தின் கருவைத் தெரிவித்துவிடுகிறது. “Love cools, friendship falls off, brothers divide; in cities, mutinies; in countries, discord; in palaces, treason; and the bond cracked ’twixt son and father.” புதுமைதாசன் இதனை “அன்பு அன்பற்றுப் போகின்றது. தோழமை, நலிவுற்றுப் போகின்றது. உடன்பிறந்தார், பிரிந்துவிடுகின்றனர். நகர்களில் எண்ணற்ற கலகங்கள். உள்நாட்டுக் கலகம். அரண்மனைகளில் இரண்டகம். தந்தை-மகன் பிணைப்பு முறிந்து போகின்றது” என்று மூலத்திலுள்ள உணர்ச்சிகரம் குன்றாமல் மொழிபெயர்த்திருக்கிறார். சில இடங்களில் புதுமைதாசனின் சொல் தேர்வு வியக்கவைக்கிறது. எ.கா: கலப்பு நாய் (Mongrel), கோமாளி குல்லாய் (Coxcomb), பகரம் (adversary), அளறு (Hell) போன்ற சொல் தேர்வுகள்.

‘மொழி என்பது ஒரு மனிதனை மயக்கக்கூடிய வஸ்து’ என்பதை இந்த நாடகத்தின் மூலம் அறியலாம். முகஸ்துதியுடன் கூடிய அலங்கார மொழிகளில் தன் சிந்தையைப் பறிகொடுக்கிறான் மன்னன் லியர். அவனது ராஜியத்தை அடைய விரும்பிய இரு மகள்களும் போட்டி போட்டுக் கொண்டு புகழுரைகளால் மன்னன் லியரை மூழ்கடிக்கிறார்கள். மூன்றாம் மகளான கார்டீலியாவுக்கு அலங்காரமாகப் பேச வரவில்லை. உண்மையை உள்ளபடி பேசினால் அதிகாரத்தில் இருப்பவர்களுக்குப் பிடிப்பதில்லை. அதனாலேயே மன்னன் லியரின் வெறுப்புக்கு ஆளாகிறாள் கார்டீலியா.

“ஆற்றொழுக்காய்ப் பேசுகின்ற மொழியாற்றல் என்பால் இலதெனினும் குழைந்து பேசி வெற்று வாக்குறுதிகள் அளிக்கின்ற இயல்பினளும் அல்லேன் நான். சொற்களினும் செயலை விரும்புகின்றவள் நான்” என்று மன்னன் லியரிடம் அவள் தன்னுடைய தரப்பு நியாயத்தை முன்வைக்கிறாள். ஆனாலும் அவளது சொற்களை மன்னன் லியர் புரிந்துகொள்ளவேயில்லை.

“பார்வையற்றவனின் பரிதவிப்பு” என்ற ஒற்றை வரியில் ‘மன்னன் லியர்’ நாடகத்தின் கதைக்கருவைக் குறிப்பிட்டுவிடலாம். முகக்கண்களைக் காட்டிலும் அகக்கண்களுக்கே துல்லியமான பார்வைத் தேவைப்படுகிறது. இந்த நாடகத்தில் இரு தந்தையர்களின் துயரம் காட்டப்படுகிறது. ஒருவர், மன்னன் லியர். அவரால் மெய்யான அன்பைப் போலிப் பாசத்தினின்று அடையாளம் காண முடியவில்லை. இன்னொருவர், கிளாஸ்ட்டர் கோமான். அவராலும் தன்னுடைய இரு மைந்தர்களில், யார் தன்மீது மெய்யான அன்பைக் கொண்டவன் என்று பிரித்தறியமுடியவில்லை. இருவருமே நல்லவர்களை விட்டுவிட்டு தீயவர்களையே முழுமுற்றாக நம்பினார்கள். அதன் விளைவாக, பெரும் துயரங்களை அனுபவிக்கின்றனர். மன்னன் லியர் கிட்டத்தட்ட அரைப் பைத்தியமாகிவிடுகிறான். கிளாஸ்ட்டர் தன் இரு கண்களையும் இழந்துவிடுகிறார். முடிவில், இருவரும் இறந்து விடுகின்றனர்.

மன்னன் லியர் முன்கோபங்களும் முன்முடிவுகளும் நிரம்பியவன். அதன் காரணமாக, ஆராயாமல், அவசர முடிவுகள் எடுக்கும் தன்மையினன். கடும் கோபத்தில் அவன் உதிர்க்கும் சாபங்கள் ஏராளம். அந்தக் கதாபாத்திரத்தை மொழிபெயர்ப்பில் மனதுக்கு மிகுந்த நெருக்கமானதாக மாற்றுகிறார் புதுமைதாசன். கார்டிலியாவை நோக்கி, “எம்மை நன்கு மகிழ்வித்தற்கு இயலாத நீ பிறவாமலே இருந்திருப்பின், யாம் பெருமகிழ்வு எய்தியிருப்போம்” என்று சொல்கையில், புகழ்மொழிக்கு மட்டுமே மயங்கக்கூடிய மன்னன் லியரின் சுபாவம் மொழிபெயர்ப்பிலும் நன்கு வெளிப்படுகிறது. தன்னைப் புறக்கணிக்கும் மூத்த மகள் கானரிலை நோக்கி சாபம் விடுக்கும் காட்சியில், “இயற்கையே, செவிமடுப்பாய், அவளை மலடாக்கிவிடு. அவள் கருப்பையை வற்றச் செய்துவிடு. அவளது வெறுக்கத்தக்க உடல் எக்காலத்துக்கும் குழந்தைப் பேற்றைப் பெறுதற்கு இயலாதவாறு செய்துவிடு” என்கிறான் மன்னன் லியர். அவனது மூர்க்கம் நிரம்பிய பெருஞ்சினம் தமிழில் கச்சிதமான சொற்களில் கையாளப்பட்டிருக்கிறது.

மூலப்பிரதியில் உள்ள சில பழமொழிகள், தமிழிலும் பழமொழி நடையிலேயே மொழிபெயர்க்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. எ.கா: காட்டுப் பெருவாத்துகள் அவ்வழியே பறக்குமெனில், குளிர்காலம் இன்னும் முடியவில்லை (Winter’s not gone yet if the wild geese fly that way).

கவிதைகளை மொழிபெயர்ப்பதில் புதுமைதாசனின் திறமை நாமறிந்ததே. இந்த நாடகத்திலும், தமிழ்க்கவி போலவே தொனிக்கச் செய்யும் செய்யுள் நடையில் (ஆசிரியப்பா), ஆங்கிலக் கவிதைகளை மொழிபெயர்த்திருக்கிறார் புதுமைதாசன்.

மன்னன் லியரின் முட்டாள் தனத்தை ஏளனம் செய்யும் வகையில், கோமாளி ஒருவன் இவ்வாறு பாடுகிறான்,

For you know, nuncle,
The hedge-sparrow fed the cuckoo so long,
That it’s had it head bit off by it young.
So out went the candle, and we were left darkling

இப்பாடலைப் புதுமைதாசன் தமிழ்க்கவி போலவே யாப்பமைவில் மொழிபெயர்த்திருப்பது வாசிப்பதற்கு இனிமையாக இருக்கிறது.

அரிய தொன்றை அறிவீர் முதியரே
அடர்புதர் வேலியின் அழகிய சிட்டுக்
குயிலின் குஞ்சைக் குலவி மகிழ்ந்து
குறைவற உணவினைக் கொடுத்து வளர்த்தது
குயிலின் குஞ்சு குண்டென வளர்ந்ததும்
குருவியின் தலையைக் கொத்திப் போட்டது
அரிய வத்தி அணைந்து போனது
இருளில் யாமும் இருண்டு போனமே

இதேபோல,

Fathers that wear rags
Do make their children blind,
But fathers that bear bags
Shall see their children kind.
Fortune, that arrant whore,
Ne’er turns the key to th’ poor

என்ற பாடலை இவ்வாறு அழகிய தமிழில் அணிநடையில் மொழிபெயர்த்திருக்கிறார் புதுமைதாசன்.

தந்தையர் தாமும் கந்தை அணிந்திடின்
விந்தை மக்கள் விலகிச் செல்வர்
தந்தையர் தம்மிடம் தனமிக இருப்பின்
விந்தை மக்கள் விரும்பிப் போற்றுவர்
நற்பே றுடைய நயமிலாப் பரத்தை
நலிந்த ஏழையை நாடாள் மெய்யே

‘மன்னன் லியர்’ பெண்களுக்கு எதிரான நாடகம் என்பது இதன் மீது வைக்கப்படும் முதன்மையான குற்றச்சாட்டு. இந்த நாடகத்தில் காட்டப்படும் கானரில் மற்றும் ரீகன் என்ற இரு பெண்களையும் ஒழுக்கம் கெட்டவர்களாகவும் கணவன் இருக்கையில் பிற ஆடவன் மீது மையலுறும் கதாபாத்திரங்களாகவும் ஷேக்ஸ்பியர் காட்டியிருப்பது விமர்சனத்துக்குள்ளாகியது. ஒரு கட்டத்தில், மன்னன் லியர் தன் மகள்கள் தனக்கிழைத்த நம்பிக்கை துரோகத்தை நினைத்துப் புலம்புகையில், “Down from the waist they are centaurs, though women all above. But to the girdle do the gods inherit; beneath is all the fiend’s. There’s hell there’s darkness, there is the sulphurous pit; burning, scalding, stench, consumption” என்கிறான். புதுமைதாசனின் மொழியாக்கத்தில்: “பெண்டிர்தம் இடுப்பிற்கு மேலே கடவுளர் ஆட்சி; இடுப்பிற்குக் கீழே பேய்கள் ஆட்சி! அங்கே அளறு உளது; அங்கே இருள் உளது. அங்கே எரிகின்ற, புண்ணாக்குகின்ற, முடைநாற்றம் வீசுகின்ற கந்தகக் குழியுமுளது.” இவ்வகை வசனங்கள், தம் கதாபாத்திரத்தின் இருண்மைக் குணங்களைத் தூக்கலாகக் காட்ட நினைக்கின்ற ஒரு கதாசிரியனின் இயல்பான நோக்கத்தின் விளைவாக எழுதப்பட்டவை என்று புரிந்துகொள்வதே சரியான வாசிப்பாக அமையும்.

தொகுத்துப் பார்க்கையில், ஷேக்ஸ்பியரின் இந்த நீண்ட நாடகத்தை, அதன் உணர்வுச்சங்களும் கலையுச்சங்களும் குன்றாமல் தமிழில் மொழிபெயர்த்திருப்பது புதுமைதாசனின் குறிப்பிடத்தகுந்த சாதனை என்பதில் ஐயமில்லை.

‘சூறாவளி’

‘சூறாவளி’ ஷேக்ஸ்பியரின் இன்பியல் நாடகங்களில் ஒன்று. ஏறத்தாழ, அவரது இறுதி நாடகம் என்றே கருதத்தக்கது. கி.பி.1611-ஆம் ஆண்டு எழுதப் பெற்றது. முதலாம் ஜேம்ஸ் மன்னரின் அரசவையில் நடித்துக் காட்டப்பட்டது. லண்டனின் பரபரப்பான வாழ்க்கை சூழலில் சலிப்படைந்த ஷேக்ஸ்பியர் தன்னுடைய தொழிலில் இருந்து ஓய்வெடுத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்பினார். அந்த மனநிலையை இந்த நாடகத்தில் நன்கு வெளிப்படுத்தியிருக்கிறார். ‘சூறாவளி’ நாடகம் எழுதியபின் அவர் மேலும் ஒரு நாடகம் (எட்டாம் ஹென்றி) மட்டுமே எழுதினார். அதன்பின் சொந்த ஊரான ஸ்ட்ராட்ஃபோர்ட்க்குச் சென்று விட்டார். கிட்டத்தட்ட ஐந்தாண்டுகள் அங்கே ஓய்வெடுத்த பின்னர் 1616-ஆம் ஆண்டில் இறந்துவிட்டார்.

ஷேக்ஸ்பியர் தன்னுடைய சொந்த வாழ்வின் துயரங்களையும் அதன் விளைவாக ஏற்படும் கொந்தளிப்பான மனநிலைகளையும் தனது நாடக வசனத்தில் குறிப்பிடுவதுண்டு. இதைத் தெரிந்தே செய்தாரா அல்லது அவரையும் அறியாமல் படைப்பூக்க விசையில் வெளிப்படுத்தினாரா என்று தெரியவில்லை. “எழுதியது போதும், இத்துடன் நிறுத்திக்கொள்வோம்” என்ற மனநிலையை இந்த நாடகத்தின் சில வசனங்கள் வாயிலாக வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக, “I’ll drown my book”, “Release me from my bands”, “Every third thought shall be my grave” போன்ற வசனங்களில் அவர் தனது ஓய்வை மறைமுகமாக அறிவித்திருப்பதை உணரலாம். இந்த நாடகத்தின் கதாநாயகனான பிராஸ்பெரோ, கதை முடிவில் தன்னுடைய மந்திரக்கோலையும் மாய மேலாடையையும் துறந்து செல்வது போன்ற காட்சியை அமைத்ததன் மூலமும் தனது இந்த உள்ளக்கிடக்கையை ஷேக்ஸ்பியர் வெளிப்படுத்தியிருக்கிறார். புதுமைதாசன் இது போன்ற வசனங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து, மொழிபெயர்ப்பில் இவற்றின் பொருளை மேலும் நுட்பமாக்கியிருக்கிறார். குறிப்பாக, “என் மந்திரங்கள் யாவும் முறிக்கப்பட்டுவிட்டன”, “என்னை விடுதலை செய்வீர்” போன்ற வாக்கியங்கள் மூலம் ஷேக்ஸ்பியரின் மனநிலையைத் தமிழுக்குத் திறம்பட அழைத்து வந்திருக்கிறார்.

சொல் தேர்வு என்பதே ஒரு மொழிபெயர்ப்பாளருக்கு இருக்க வேண்டிய இன்றியமையாத திறன். ஆங்கிலச் சொற்களுக்கான நேர்த்தமிழ் சொற்களைக் காட்டிலும், அந்தச் சூழலுக்குத் தகுந்த சொற்களைத் தேர்ந்தெடுக்கையில்தான் மொழிபெயர்ப்பாளர் வாசகன் மனதில் நீங்கா இடம் பெறுகிறார். சொல் தேர்வில் தன்னுடைய திறனை நாடகத்தின் தலைப்பிலேயே காட்டிவிட்டார் புதுமைதாசன். ஏனைய தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள், ‘புயல் காற்று’ என்ற தலைப்பையே பயன்படுத்தியிருக்கின்றனர். ஆனால், புதுமைதாசன் ‘சூறாவளி’ என்ற சொல்லைத் தேர்வு செய்கிறார். ‘புயல் காற்று’ என்ற சொல்லைக் காட்டிலும் ‘சூறாவளி’ என்ற சொல்லே மிகுந்த பொருத்தமானதாகவும் காத்திரமாகவும் இருக்கிறது.

இன்பியல் நாடகம் என்பதால் இயல்பாகவே பல நகைச்சுவை வசனங்கள் இந்நாடகத்தில் இடம்பெற்றுள்ளன. சிறந்த நகைச்சுவை நாடகங்களை எழுதியவர் என்பதால் புதுமைதாசன் இது போன்ற நகைச்சுவை வசனங்களை எவ்வாறு மொழிபெயர்த்திருக்கிறார் என்பதையும் அறிய ஆவலாக இருந்தேன். எதிர்பார்த்தது போலவே புதுமைதாசன் இது போன்ற இடங்களில் தன் பாய்ச்சலைக் காட்டியிருக்கிறார். “This is a very scurvy tune” என்ற வசனத்துக்கு “இது ஓர் சொறிநோய்ப் பாட்டு.” அதேபோல, “இந்த நாய்க்குட்டித்தலை அரக்கனைப் பார்த்து நான் சாகும் வரை சிரிக்கப்போகின்றேன்”, “சிறுத்தைப் புலிகளுக்கிருக்கின்ற புள்ளிகளினும் மிகுதியான காயங்கள் இவனது உடலில் ஏற்படுமாறு செய்யச் சொல்”, “கடலின் ஒவ்வொரு துளி நீரும் அவனை விழுங்க முயன்றாலும் அவன் தூக்கினாலேயே மடிவான்” போன்ற வசனங்களில் புதுமைதாசனின் நகைச்சுவை நடை புன்னகையை வரவழைக்கிறது.

பத்தொன்பதாம் நூற்றாண்டு வரையிலும்கூட, இங்கிலாந்தின் பல குடும்பங்களில், இளம் பெண்களுக்கு ஷேக்ஸ்பியரின் நாடகங்களை வாசிக்கத் தடை இருந்திருக்கின்றது. ஷேக்ஸ்பியர் நாடகங்களில் இருக்கும் காமச்சுவை, தூக்கலான வசனங்கள், முறை மீறிய பாலுறவுச் சித்தரிப்புகள் போன்றவை இதற்குக் காரணமாக அமைகின்றன. ஷேக்ஸ்பியர் நாடகங்களைச் சிறந்த முறையில் இலக்கிய வாசகர்களுக்கு அறிமுகப்படுத்திய சார்லஸ் லாம் மற்றும் மேரி லாம், தங்களின் நூல் முன்னுரையிலேயே, இளைஞர்கள் ஷேக்ஸ்பியர் நாடக வசனங்களைத் தங்கள் இளைய சகோதரிகளுக்கு வாசித்துக் காட்டும்போது, பாலியல் சார்ந்த வசனங்களைத் தவிர்த்துவிட்டு வாசிக்கவும் என்ற அறிவுரை தரப்படுகிறது.

‘சூறாவளி’ நாடகத்திலும் அது போன்ற சில இடங்கள் இருக்கின்றன.

as leaky as an unstanched wench – பெண்டிற்குத் திங்கள்தொறும் ஒழுகுகின்ற விலக்கெனவும் இந்த மரக்கலம் இருப்பினும்

If thou dost break her virgin-knot – அவளது கன்னித்தன்மைக்கு உம்மால் இழுக்கு நேருமாயின், வானுலகு அனைத்தும் உமது உறவை வாழ்த்தமாட்டா.

மேற்காணும் வசனத்தில் ‘Virgin Knot’ என்ற சொல்லிற்கு நாகரிகம் கருதி புதுமைதாசன், ‘கன்னித்திரை’ என்ற சொல்லைப் பயன்படுத்தாமல் ‘கன்னித்தன்மை’ என்றே மொழிபெயர்த்திருக்கிறார்.

வழக்கம்போல, ஷேக்ஸ்பியரின் கவிதைகளை மொழிபெயர்ப்பதிலும் தன்னுடைய முத்திரையைப் பதித்திருக்கிறார் புதுமைதாசன். ஃபெர்டினன்ட் தன் தந்தை கடலில் மூழ்கி இறந்து விட்டார் என்ற துயரத்தில் இருக்கும்போது, அவனது சந்தேகத்தை வலுப்படுத்தும் விதமாக ஏரியல் என்ற ஆவி பாடும் பாடல் இது:

Full fathom five thy father lies.
Of his bones are coral made.
Those are pearls that were his eyes.
Nothing of him that doth fade
But doth suffer a sea change Into something rich and strange.
Sea nymphs hourly ring his knell

இப்பாடலை புதுமைதாசன் இவ்வாறு மொழிபெயர்த்திருக்கிறார்,

அன்பநின் தந்தை ஆழக்கடலில்
அன்னவர் எலும்புகள் ஆயின பவழம்
அவர்தம் விழிகள் ஆயின முத்தாய்
அவர்தம் உடலில் அனைத்தும் போயின
அலைகடல் மாற்றம், அவரும் மாறினர்
மலைநிறை வளமும் மதிப்பும் பெற்றார்
அலைகடல் தெய்வம் அடிக்கும் மணியும்
அன்னவர் தம்மின் அழிவின் மணியே

இப்பாடலைக் கேட்டதும் தன்னுடைய சந்தேகம் ஊர்ஜிதமானதை எண்ணி ஃபெர்டினன்டின் துயரம் பன்மடங்கு அதிகரிக்கிறது.

இதே ஏரியல் என்ற ஆவி, தூங்கிக் கொண்டிருக்கும் கொன்ஸாலோவின் செவியில் இவ்வாறு பாடுகிறது,

While you here do snoring lie,
Open-eyed conspiracy
His time doth take.
If of life you keep a care,
Shake of slumber and beware.
Awake, awake!

நீங்கள் இங்கே தூங்கிக் கொண்டிருக்கிறீர்கள். உங்களைக் கொல்லச் சதி நடக்கிறது. உயிரைக் காப்பாற்றிக் கொள்ள உடனே விழித்தெழுங்கள் என்ற பொருள்பட, புதுமைதாசன் இவ்வாறு மொழிபெயர்க்கிறார்;

இங்கே நீரோ இந்தக் குறட்டையில்
அங்கே சரிமிகு அழிவின் ஆட்டம்
உம்முயிர் தன்னை உயர்வாய் மதித்திடின்
இம்மெனு முன்னே எழுவீர் விரைந்தே

மேலே சொன்ன இரு பாடல்களும் துயரச் சுவை நிரம்பியது. எந்தக் கவலையுமற்ற இனிமை தரும் கவிதைகளும் இந்நாடகத்தில் இருக்கின்றன. அவற்றையும் அதன் பொருளும் சுவையும் குன்றாது தமிழுக்கு மொழிபெயர்த்திருக்கிறார். எ.கா: தன் விடுதலையைக் கொண்டாடும் வகையில் ஏரியல் பாடும் பாடல்.

Where the bee sucks, there suck I.
In a cowslip’s bell I lie.
There I couch when owls do cry.
On the bat’s back I do fly
After summer merrily.
Merrily, merrily shall I live now
Under the blossom that hangs on the bow

இப்பாடலின் தமிழ் மொழிபெயர்ப்பு இவ்வாறு அமைந்துள்ளது

எங்கே தேனீ இன்தேன் உண்ணுமோ
அங்கே நானும் அருந்துவன் பனித்துளி
மணியினைப் போன்ற மலரின் வாயினில்
அணிபெற அங்கே ஆளுவன் நானும்
அரிய கூகை அலறும் வேளை
கரிய வௌவால் கரிய முதுகில்
இனிதாய் ஏறுவன; இன்பக் கோடையில்
நனியுறத் தானே நந்நிலம் சுற்றிக்
கனிவுற நானும் களிப்புடன் வாழ்வனே!

மேலே காணும் மூன்று பாடல்களும் புதுமைதாசன் அவர்களின் கவித்திறன் மிளிரும் மொழிபெயர்ப்புக்குச் சான்று பகர்வன.

இந்த நாடகத்தில் “Young scamels from the rock” என்றொரு வாக்கியம் இடம்பெற்றிருக்கிறது. காலிபன் என்ற கதாபாத்திரம் தன்னுடைய புதிய எஜமானனாகத் தான் கருதும் ஸ்டெஃபானோவிடம் தன்னால் கடற்பாறைகளில் இருக்கும் ‘Scamel’ என்ற பறவையைப் பிடித்து வந்து தர முடியும் என்கிறான். ‘Scamel’ என்ற சொல்லின் அர்த்தம் குறித்து இன்றளவும் ஆய்வாளர்களிடையே சர்ச்சை நிலவுகிறது. அது ஓர் மீனாகவும் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஆனாலும், மீன்களைப் பிடிப்பதற்குப் பாறைகளுக்கு ஏன் செல்ல வேண்டும், ‘Scamel’ என்பது பாறையிடுக்கில் கூடுக்கட்டும் அரிய வகை பறவையினமே என்றும் ஒரு தரப்பு வாதிடுகிறது. இவ்விடத்தில், தர்க்கத்திற்கு மிகவும் பொருந்திவரக்கூடிய பறவை என்ற பொருளையே புதுமைதாசனும் பயன்படுத்தியிருக்கிறார். “பாறைகளில் இருந்து உங்களுக்குப் பறவைகளையும் பிடித்துத் தருகிறேன்” என்றே மொழிபெயர்த்திருக்கிறார்.

தன்னுடைய எதிரிகளைப் பழிவாங்குவதற்காக, சூறாவளியை ஏற்படுத்திய பிராஸ்பரோ ஒரு கட்டத்தில் மனம் மாறுகிறான். பழிவாங்குவதைக் காட்டிலும் மன்னிப்பதே மேலான குணம் என்னும் பொருளில் “The rarer action is in virtue than in vengeance” என்கிறான். புதுமைதாசன் இதனை மிகச் சரியாக “பழிவாங்குவதிலினும், நேர்மையான முறையில் நடந்துகொள்தலே சிறப்புக்குரியது” என்று மொழிபெயர்த்திருக்கிறார்.

முற்றிலும் புதிய சொற்களையும் தன்னுடைய மொழிபெயர்ப்பில் பயன்படுத்தியுள்ளார். ‘Hell’ என்ற சொல்லுக்கு ‘அளறு’ என்றும், ‘Traitor’ என்பதற்கு ‘இரண்டகர்’ என்றும் ‘Widower’ என்பதற்கு ‘மனையிலி’ என்றும் முற்றிலும் புதிய சொற்களையும் பொருத்தமான சொற்களையும் தேர்வு செய்கிறார்.

இந்த மொழிபெயர்ப்பின் சில பகுதிகள் மேலும் துலக்கமாக வந்திருக்கலாம்.

குறிப்பாக, அரை அரக்கனான காலிபனை முதல்முறையாகப் பார்க்கும் டிரின்குலோ, இந்த அரக்கனை இங்கிலாந்தின் முச்சந்திகளுக்குக் கொண்டு போனால் நாலு காசு பார்க்கலாம் என்று நினைக்கிறான். ஆனாலும், இங்கிலாந்து மக்கள், தம்மிடையே வாழும் ஒரு பிச்சைக்காரனுக்கு ஒரு பைசாவும் ஈயமாட்டார்கள், ஆனால் இறந்து போன ஒரு இந்தியனைப் பார்ப்பதற்குப் பத்துப் பைசா தர முன்வருவார்கள் என்கிறான் (When they will not give a doit to relieve a lame beggar, they will lay out ten to see a dead Indian). இதன் பொருள், வழக்கமானவற்றைக் காட்டிலும் விசித்திரமானவற்றைக் காண்பதற்கு இங்கிலாந்து மக்கள் ஆர்வம் காட்டுவர் என்பதே. ஆனாலும், புதுமைதாசன் ‘இறந்த இந்தியன்’ என்ற சொல்லைப் பயன்படுத்தவில்லை. “அங்கிருக்கின்ற மனிதரெல்லாம் இரந்து வாழும் முடமான ஒருவனுக்கு ஒரு பென்னியும் ஈயார். ஆயின், அங்கு இருப்போர், இயல்புக்கு மாறான காட்சியைக் காண்பதற்குப் பத்துக்காசு கொடுப்பர்” என்று மொழிபெயர்த்துள்ளார்.

செபாஸ்டியன் தன் சகோதரன் அலோன்ஸோவிடம், அவன் தன் மகளை ஒரு ஆப்ரிக்க அரசனுக்கு மணம் புரிவித்தமைக்குக் கண்டனம் தெரிவிக்கையில் “But rather lose her to an African” என்கிறான். இக்கூற்றைப் புதுமைதாசன் இவ்வாறு மொழிபெயர்க்கிறார்: “உம் மகளை ஆப்பிரிக்கன் ஒருவனுக்கு விலைமகளாய்ச் செல்ல உதவி செய்துவிட்டீர்.” மூலத்தில் ‘விலைமகள்’ என்று பொருள்படத்தக்க வார்த்தை இல்லாதபோது மொழிபெயர்ப்பில் ஏன் ‘விலைமகள்’ என்ற வார்த்தைப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்று தெரியவில்லை.

மொத்தத்தில், புதுமைதாசனின் மொழிபெயர்ப்பு, மூலத்தினின்று பிறளாமல், அரிய சொற்கள், கச்சிதமான வாசகங்கள், இனிய ஓசை நிரம்பிய கவிதைகள் என சிறந்த வாசிப்பின்பத்தைத் தருகிறது.

***

புதுமைதாசனின் மனம் நவீன இலக்கியத்தில் தோய்ந்தது. குறிப்பாக, நவீன ரஷ்ய இலக்கியம், அமெரிக்க, பிரிட்டிஷ் இலக்கியங்களை விரிவாக வாசித்திருக்கிறார். டால்ஸ்டாய், செகாவ், துர்கனேவ், மாப்பஸான், விக்டர் ஹூகோ, எட்கர் ஆலன் போ போன்ற உலக இலக்கிய மேதைகளின் சிறுகதைகளை நாடக வடிவில் மாற்றி எழுதி புதுமை படைத்திருக்கிறார். இந்த நாடகங்களின் தொகுப்பு ‘சருகு’ என்ற தலைப்பில் வெளியாகியிருக்கிறது. ஜார்ஜ் ஆர்வெல்-இன் ‘விலங்குப் பண்ணை’ நாவலையும் நாடகமாக்கியிருக்கிறார். சங்கக் கவிதைகளைப் பலவற்றையும் நாடகங்களாக எழுதியிருக்கிறார். ‘இலக்கியக் காட்சிகள்’ என்ற தொகுப்பில் அவற்றைக் காணலாம். ‘அடுக்கு மாடி அண்ணாசாமி’ உள்ளிட்ட நகைச்சுவை நாடகங்களையும் எழுதியுள்ளார். ஒருபக்கம் ஷேக்ஸ்பியர் நாடகங்கள் உள்ளிட்ட தீவிர இலக்கியப் படைப்புகளின் மொழியாக்கம், மறுபக்கமோ, முற்றிலும் அதற்குச் சம்பந்தமற்ற நகைச்சுவை நாடகங்கள் என வித்தியாசமான களங்களில் படைப்புகளை அளித்துப் புதுமைகளைப் புகுத்தியிருக்கிறார். உண்மையில், பிற படைப்பாளிகளுக்கு மத்தியில் புதுமைதாசன், விதிவிலக்கானவர்.

000

துணைநூல்கள்
புதுமைதாசன். (2021). ஷேக்ஸ்பியரின் ஹேம்லெட். சிங்கப்பூர் : கிரிம்ஸன் எர்த் பதிப்பகம்
புதுமைதாசன். (2021). ஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜூலியட். சிங்கப்பூர் : கிரிம்ஸன் எர்த் பதிப்பகம்
புதுமைதாசன். (2021). ஷேக்ஸ்பியரின் மன்னன் லியர். சிங்கப்பூர் : கிரிம்ஸன் எர்த் பதிப்பகம்
புதுமைதாசன். (2021). ஷேக்ஸ்பியரின் சூறாவளி. சிங்கப்பூர் : கிரிம்ஸன் எர்த் அபதிப்பகம்

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...