ததும்பத்ததும்ப மக்காச்சோளத்தட்டைகளுடன் பள்ளத்திற்குள் இறங்கி ஏறித் திணறியபடி தாடிக்கொம்பு விலக்கில் வளைந்து கொண்டிருந்தது வேன். நான் ஓடிப்போய் அதன் முதுகில் கொட்டிக்கிடந்த சோளத்தட்டையில் ஒன்றை வலுப்போட்டு ஒடிக்க முயன்றேன், முடியவில்லை. சாலையோர மரத்திற்குக்கீழே சாயங்கால இருளுக்குள் தனது பள்ளிச்சீருடையுடனும் முகம் கழுவிய வெளிச்சத்துடனும் நின்று கொண்டிருந்த தான்யா வேண்டாமென்பதைப்போல கையை ஆட்டினாள். வேன் நகர்ந்து கொண்டேயிருந்தது. என்னால் அந்தச் சோளத்தட்டையை விடமுடியாது. கையில் சிராய்ப்புகள் வரிவரியாகப் பதிந்து கொள்ள, பற்களைக் கடித்தபடி ஒரே ஒடிப்பில் தட்டையை ஒடித்தேன். பால்வாசனைக் கமழ மக்காச்சோளத்தட்டைகளைக் கைகளில் அள்ளியபடி தான்யாவிடம் வந்தேன். எனது முகத்தில் அதனை நைச்சியமாகப் பற்றும்போதும் டிரைவருக்குத்தெரியாமல் பின்னால் போய் ஒடிக்கும்போதும் வந்திருந்த கோமாளித்தனமும் திருட்டுத்தனமும் சேர்ந்து வினோதமான இளிப்பைக் கொண்டுவந்திருக்க வேண்டும்.
ரத்தம் மெல்ல பொட்டுவிடத் தொடங்கிய காயங்களுக்கு நடுவே முத்துமுத்தான பல்வரிசையோடு கிடந்த மக்காச்சோளத்தட்டைகளைப் பார்த்துத் தான்யா முகத்தைச் சுண்டிக்கொண்டாள். எனது முகத்தில் துளித்துளியாக வடிகட்டி மறைக்கவேண்டிய ஒன்றோடு நான் உள்ளூரப் போராடியபடி மீண்டும் அவளை எடுத்துக்கொள்ளச்சொன்னேன். அவள் குன்றிவிட்ட முகத்தோடு பஸ் வரும் பாதையைப் பார்க்க ஆரம்பித்தாள். சுற்றிலுமிருந்த வயல்வெளிகளிலிருந்து பூச்சிகள் கத்திக்கொண்டிருந்தன. மைல்கல்லில் சாய்ந்து நின்றவாறு காயம் எரிய எரிய வாய் நிறைந்த மக்காச்சோளத்தை மென்று பாலைக்குடித்தபோது எனது வயிற்றுக்குள் எங்கோ எரிந்து கொண்டிருக்கும் ஒன்று அமைதியாவதை உணர்ந்தேன். எனக்கும் தான்யாவிற்குமிடையே வெகுதூரம் இருந்தது. அவள் நிற்கின்ற இடத்தில் இருக்கின்ற வெண்கல வெளிச்சத்திற்கும் வாயொழுகத் தின்றவனாக நான் நிற்கின்ற இருளிற்குமிடையிலான தூரம்.
சாலையின் வெகுதூரம் வரை வெளிச்சப்பொட்டுத் தென்படவில்லை. அக்கா வருகின்ற காரின் முகப்புவெளிச்சம் எனக்கு அத்துப்படி; ஒளியாலான துதிக்கையைப்போல இருளைக்கிழித்து அது வருவதைப் பலமுறை இதேபோல இருளுக்குள் மறைந்து நின்றவனாகப் பார்த்திருக்கிறேன். கடைசியாக அக்கா வந்தபோது தான்யா பள்ளிவிட்டு வரவில்லை. அவளுக்கென வாங்கி வந்திருந்த புத்தகங்களை அவளிடம் சேர்ப்பித்துவிடு என்றுகூட என்னிடம் கூறாமல் டிவி மேல் வைத்துவிட்டுச் சென்றாள். தான்யாவிற்கென எங்கிருந்தோ அவள் தழைத்துத் தொங்கவிடுகின்ற நூல்படிக்கட்டுகளைப்போல அவை வீட்டின் இருளுக்குள் ஒன்றன்மீது ஒன்றாகக் கிடந்தன. பள்ளிவிட்டுவந்த தான்யா அந்தச் சமிக்ஞையைப் புரிந்து கொண்டவளாக மகிழ்ச்சியோடு புத்தகங்களை அள்ளிக்கொண்டு அறைக்குள் புகுந்துவிட்டாள். வீட்டு வராண்டாவில் சீலை மறைப்பிற்கு நடுவே படுத்திருந்த அம்மா ஒருமுறை செருமினாள். நான் இருவருக்கும் நடுவே தீப்பெட்டியைக் கைகளுக்குள் சுழற்றியவனாக அமர்ந்திருந்தேன். சாலைகள் இரண்டாகப் பிரியுமிடத்தில் நான் எப்போதும் தேங்கி நின்றுவிடுபவனாகத்தான் இருந்து வந்திருக்கிறேன். பிறகு மெல்ல அங்கே ஊறி எழுகின்ற இருளுக்குள் அமிழ்ந்து விடுபவனாகவும் கூட.
***
சித்திரை மாதத்துக் கற்தளத்தின் மீது அம்மா எங்களது கைகளைப் பிடித்தபடி நின்று கொண்டிருந்தாள். பாளம் பாளமாக உடைந்தபடியிருக்கும் நெருப்புத் துண்டுகளைப் போல வானம் திடீர் மேகமூட்டத்திற்குள் குமுறியெழ முயன்று கொண்டிருந்தது. நிற்கவே முடியாதவாறு பொசுங்கிக் கொண்டிருக்கும் தரையிலிருந்தபடி, தூர வீட்டில் தொட்டித் தண்ணீரில் கழுத்து, முகம் கழுவியவாறு எங்களை வேடிக்கை பார்ப்பவளது உடலில் மினுங்கிய ஈரத்தை ஏக்கமாய் பார்த்தேன். அம்மாவின் முந்தி வெம்மையான காற்றில் அலைய, தெருநாய் அதனை விநோதமாகப் பார்த்தவாறு நுகர்ந்துகொண்டே சுற்றியது. அம்மாவின் கையை இறுகப் பற்றிக் கொண்டேன். எதிரே இருந்த பவனத்தின் பின்முற்றத்தில் பெரிய திண்டில் தாத்தா விசிறியால் முதுகைச் சொறிந்தபடி கிறங்கியிருந்தார். அருகே வாழையிலைகளைக் காது நறுக்கியபடியிருந்த மூத்த கடையாள் வாசுதேவன் தலையை நிமிர அஞ்சியவராக அரிவாள்மனையின் கொண்டையைப் பார்த்தபடியே நறுக்கிக் கொண்டிருந்தார். புழக்கடை தாண்டி வீட்டின் இருளுக்குள் ஒருவர் தோள்பற்றி ஒருவராக, சித்திகள் நின்றிருந்தனர். கண்ணீரிலும் அச்சத்திலும் மிளிர்ந்த அந்தக் கண்கள் என்னையும் ருக்குவையும் ஏறிட்டபோதெல்லாம் ஆங்காரமாக மூக்குறிஞ்சியபடி அழுகையை மென்றபடியிருந்தன. அம்மாவின் பின்புறம் வழியாக ருக்கு என்னை எட்டிப் பார்த்தாள். சூடு தாங்காமல் கலங்கிய என் கண்களைப் பார்த்தவள் உதட்டைப் பிதுக்கி அழப்போகிறவளாக முகத்தைச் சுருக்கினாள். நான் அந்த நாயின் மீதே கவனமாக இருந்தேன். அம்மாவின் கிழிந்த முந்தியின் நூலிழையொன்று நாயின் முகத்தில் படிந்து விலகியது. அம்மா அழுது முடித்திருந்தாள். அவளது குரலில் இப்போது நெறுநெறுவென ஒரு மிடுக்கு வந்திருந்தது.
“கெட்டி வெச்சதோட உம்ம வேலை முடிஞ்சிருச்சா பெரியாம்பிளை” என்றாள்.
தாத்தா விசிறிக்கம்பின் முனையை நீட்டியபடி, “பெரியாம்பிளைன்னுக்கிட்டிருந்த செருப்பு பிஞ்சிரும் நாயே. பொழைக்கிறதுக்கு வக்குத் தெரியலை. நாய்க்குப் பேச்சைப் பாரு”
”நானு போயா அவனைப் பல்லைப் பிடிச்சு சரிபார்த்துக் கட்டிக்கிட்டேன். நீருதானய்யா உட்காருன்னு சொன்னீரு. சமைஞ்ச தூமைத்துணி காயறதுக்குள்ள அந்த நாயி கையில பிடிச்சு குடுத்திட்டீரு”
”அப்படி நசுக்கியே இப்ப வாய் கொளுத்த கொழுப்புக்குக் குறைச்சலில்ல”
“என்னா அப்டி வகைதொகையா நக்கித் தின்ன குடுத்தீக? ங்கன இருந்தப்பவும் வேலைக்காரி வேசம்; கெட்டிப் போன இடத்துல மூதேவி வேஷம்.”
நாங்கள் நின்று கொண்டிருப்பதற்கு எதிரே சிறு மாளிகையைப் போலிருந்த இந்த இரண்டடுக்கு மொசைக் தளமிட்ட வீட்டைத் தாத்தா சமீபத்தில்தான் வாங்கியிருந்தார். அம்மா பிறந்து வளர்ந்து வருகின்ற போது புட்டுத் தோப்பின் வாசலில் சாக்கடை ஓடுகின்ற சாதாரண ஓட்டு வீட்டு மனிதராகவே அவர் இருந்தார். இரண்டில் வெற்றி, ஒன்றில் தோல்வி என வாழ்க்கைச் சக்கரம் எதிரும் புதிருமாக அவரைச் சுழற்றிக் கொண்டிருந்த காலம் அது; அம்மா அவருக்குத் தலைப்பிள்ளையாகப் பிறந்தாள். விளக்கு வெளிச்சம் கூட சொட்டு சொட்டாக அலைகின்ற வீட்டு இருளுக்குள் அம்மா வளர்ந்தாள். ஆச்சிக்குத் தாத்தாவைத் தவிர வேறு மனிதர்களே கிடையாது. ஒவ்வொரு மழைக்காலத்திலும் அவள் நிறைமாத வயிற்றுடன், எங்கோ பணத்திற்காக மோதிக்கொண்டிருக்கும் கணவனுக்காகச் சாப்பிடாமல் காத்திருக்கும் பெண்ணாக இருந்தாள்.
அம்மா வளரும்போதே, தனக்கருகே தவழுகின்ற தங்கைகளைப் பராமரிக்க வேண்டியிருந்தது. தங்கள் கையிலிருக்கும் சிறிய அளவு நாணயங்களை எப்படி உறை மோராக மாற்றி மேடேறுவதென அவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது இடுப்பில் ஒன்றும், மடியில் ஒன்றுமாகத் தங்கைகளைக் கொஞ்சியபடி அம்மா பார்த்திருப்பாள். வெகு சீக்கிரமே தாத்தா செல்வத்தின் ஊற்றைக் கண்டுபிடித்தார். ஓயாத வெறி கொண்டவராக நாளிரவு பாராமல் தனது தொழில்நிமித்தமாக அவர் திரிந்து கொண்டிருந்த வேளையில் அம்மா பெரிய மனுஷியானாள். அவளுக்குத் தலைக்கு ஊற்றிவிட்ட சில வாரங்களிலேயே ரூபாயையும் நாணயங்களையும் எண்ணியபடி, மூத்த சித்தியைக் கண்களால் அளந்த தாத்தா, வந்த பௌர்ணமிகளில் ஒன்றிலேயே அம்மாவுக்குத் திருமணம் நடத்திவிட்டார்.
அம்மா நல்ல கருப்பு நிறம். கருப்பையின் முழு இருளையும் தானே வரிந்து கொண்டவளாக உலகில் வந்து விழுந்தாள். பிறகு, அவ்வீட்டின் இருளை ஒழித்தவளாகவே குழந்தைகளும் கையுமாக அலைந்ததாகப் பட்டிவீரன்பட்டி பெரியப்பா சொல்லுவார்;
“நல்ல இருட்டுல முழு அலங்காரமா நீ நிக்குறப்ப வழில வர்றவன் சட்டுன்னு பார்த்தான்னா அங்கியே பேதலிச்சுருவான்”
அம்மா துவையல் வழித்தபடி கேட்பாள், “பயத்திலேயா”
பெரியப்பா சாப்பிட்ட தட்டைச் சப்தமில்லாமல் நகர்த்திவைத்தபடி, “பயம்னு சொல்லலாம். பயம்னா என்னா? மனுசனோட உச்ச ஆசை; அதை தொறக்குற தைரியம் யாருக்கும் சட்டுன்னு வரக்கூடாதுன்னுதான் அதுல ஒரு பூட்டு, பயம்னு.”
சமையலறை இருட்டுக்குள் கையில் பாத்திரங்களுடன் நுழையும்முன் அம்மா சிரித்துக் கொள்வாள். அம்மாவின் சிரிப்புக்குச் சப்தமே இருக்காது. நீரில் மிதக்கின்ற நிலா மீது காற்று வருடினால் இசைமையான துண்டுகளாக அது உடையுமே, அதுபோலத்தான் அம்மா சிரிப்பாள்.
வயதான கிழவனின் நெற்றியைப் போல, மலைக்கோட்டை தனது பாறைப் புடைவுகளோடு வெகுதூரத்திலிருந்து எங்களைப் பார்த்துக் கொண்டிருந்தது. தாத்தா எழுந்து வீட்டினுள் போய்விட்டார். வாசுதேவன் அரிவாள்மனையைத் தள்ளிவைத்துவிட்டு, வாழைநுனிக் குப்பைகளை இரண்டு கை நிறைய பற்றிக் கொண்டு எங்களைப் பார்த்தவாறு நின்றார். நல்ல மதியமான அப்பொழுது, சட்டென மழை பெய்யத் துவங்கியிருந்தது. இந்தப்பக்கத்தில் அவ்வளவு ஆழமான மழைக்கு எப்போதும் வாய்ப்பில்லை. ஆனால் படலம் படலமாக மழை இறங்கிக் கொண்டிருக்க, அம்மா எங்களை எங்கே கூட்டிச் செல்வதெனத் தெரியாமல் அழுகையும் ஆங்காரமுமாக நடத்திக் கொண்டு சென்றாள்.
ஒரு பகீர் காட்சியைக் கண்ணுறுபவராகத் திகைத்து நின்ற வாசுதேவன் பிறகு ஒருமுறை என்னிடம் கூறினார். “மழையா அன்னிக்குப் பேஞ்சது; கொளுத்தியெரியக் கிளம்புன கண்ணகியோட புடவை மடிப்புல்ல அது. வேடிக்கை பார்த்தவங்க முகத்துல அறைஞ்சது மாதிரில இறங்கிக்கிட்டிருந்துச்சு.”
அசர்ந்தப்பமானவைகளுக்கென ஒரு பட்டியல் இருந்தால் அதில் திண்டுக்கல் மலைக்கோட்டைக்கும் ஒரு இடம் இருக்கும். சம்பந்தமில்லாத இடத்தில், தேவையில்லாமல் நின்றபடி, அப்படி நிற்பதை உள்ளூர அவஸ்தையாக உணர்ந்தபடி, அதை தன் பாறை முகங்கள் ஒவ்வொன்றிலும் வெளிக்காட்டுகின்ற ஒரு உயிருள்ள அசேதனப் பொருளாகவே நான் மலைக்கோட்டையை உணர்ந்திருக்கிறேன். நைந்த ரிக்ஷாக்களும் மர பீப்பாய்களை ஒற்றை மாடு கட்டி இழுத்துச் செல்லும் தண்ணீர் வண்டிகளும், சேற்றுக்குள் கள்வீச்சமடிக்க மயங்கிக் கிடக்கும் எம் ஜி ஆர் ரசிகர்களுமாக மலைக்கோட்டையின் இடதுபக்க அடிவாரம் கிடந்தது. அதிலிருக்கும் சிறிய குடிசையில்தான் எங்களின் நாட்கள் துவங்கின.
வெறும் கட்டாந்தரையும் ஓலைத்தடுக்குமான குடிசைக்கு வெளியே மழை பெய்கின்ற நாட்களில் மண் இளகி, புழுக்கள் நெளிகின்ற தரைக்கு நடுவே நாங்கள் சாப்பிட்டோம், உறங்கினோம். அம்மா அப்பாவைத் திட்டுவதை இப்போது குறைத்துக் கொள்ளத் துவங்கினாள். அன்றாடமே பிச்சையெடுக்கும்போது நினைவுகளுக்கோ பெருமிதங்களுக்கோ அதன் வழியான கசப்புகளுக்கோ இடமேயில்லை. நாங்கள் இப்படி தட்டுமுட்டுச் சாமானோடு சீரழிவது தெரிந்தும் சின்னாளப்பட்டியிலிருந்து அப்பா எங்களைப் பார்க்கவோ இதிலிருந்து மீட்டுச் செல்லவோ வரவில்லை என்பது பகல் முழுக்க எனக்கு அழுகைத் தருகின்ற விசயமாகவும், சப்தங்கள் சிறிய தீற்றலோடு மென்மையாக அப்பிக்கிடக்கின்ற நகரத்தை மலை மீது அமர்ந்து பார்க்கும்போது ஏதேனும் தெரு வழியாக அப்பா வருகிறாராவென ஏக்கமாகவும் கழிந்தது.
ஆனால் அக்கா சொன்னாள், அப்பா இனி வரமாட்டாரென. அவளுக்குச் சில விஷயங்கள் உறுதியாய்த் தெரியும். சின்னாளப்பட்டியில், தூங்கிக் கொண்டிருக்கும்போது என்னைக் கிள்ளி எழுப்புவாள். அம்மா சற்றுத்தள்ளிப் படுத்தபடி அழுதுகொண்டிருப்பாள். அப்பாவின் படுக்கை காலியாக இருக்கும். அக்கா கிசுகிசுப்பாக, “காலையில் சண்டை நடக்கும் பாரு” என்பாள். அழுக்கு வேட்டியோடு, வாசலில் அமர்ந்து தலை குனிந்தவராக அப்பா ஈர்க்குச்சிகளைப் பொடிப் பொடியாக ஒடித்தபடி, அம்மா பெருங்குரலெடுத்துக் கத்துவதைக் கேட்டவாறு அமர்ந்திருப்பார். வழக்கம் போல அப்பாவை மேலும் திட்டுவதற்காக நிலக்கோட்டையிலிருந்து பெரியப்பாவும் வந்து நின்று கொண்டிருப்பார்.
ஒருமுறை, கோட்டை அடிவாரத்தில், பழைய கிணற்றின் ஈரமும், பாசி படர்ந்த சுவர்களுமாக அமைதிக்குள் கிடக்கின்ற வள்ளலார் மடத்து வாசலில் உட்கார்ந்து வாசுதேவன் கூறினார்: “ப்ச்.. வேறென்னத்தைச் செய்யப் போறாரு, பயந்த மனுசன். அதான் சட்டுன்னு சங்கிலியை அத்துகிட்டாப்ல வெளியேறிட்டாரு. அதொரு நேரம். பொண்டாட்டி பிள்ளைக வேலைன்னு எல்லாஞ்சரியா நடக்குறாப்ல தோணறப்பயே, இதைக் கொண்டு செலுத்த முடியுமான்னு வர்ற பயம். பாதி வழில மலையுச்சியைப் பார்க்கிறப்ப இன்னுமா போகணும்ங்கிற சோர்வு வருமே, அதுல வர்ற பயம். வப்பாட்டி வச்சிருக்கவனக்கூட, சரி போய்த்தொலைன்னு நாலு திட்டிட்டு இந்தப் பக்கமும் சேர்த்து ஒட்ட வெச்சுக்கலாம். ஆனா இப்டி வெளியேறுறவங்கள எப்பயும் திரும்பக் கொண்டாந்து வீட்டோட பூட்ட முடியாது. பயந்த மாடு வண்டிக்கு பாரம்.”
இத்தனைக்கும் தாத்தாவிற்கு ஊருக்குள் அப்போது நல்ல மதிப்பிருந்தது. அவர் ஒரு சொல்லின் வழியான வெளிச்சத்தை எங்களுக்குத் தந்திருந்தால் கூட இவ்வளவு திகைத்துப் போய் நின்றிருக்க மாட்டோம். ஆனால் புதிய செல்வந்தர்களுக்கேயுரிய எல்லா இறுக்கங்களும் தாத்தாவிடம் இருந்தன. அப்போதுதான் உருக்கி ஊற்றிய பொற்காசின் விளிம்புகளில் நெருடுகின்ற பிசிறுகளைப் போலப் புதிதாகக் கற்றுக் கொண்டிருந்த பணக்காரப் பிடிவாதங்கள் அவரது மூத்த பெண்ணின் இந்த வாழ்க்கைச் சிதைவை ஒருவகை அவமானமாகவே எதிர்கொண்டன. காரணமின்றித் தோற்று நிற்பவைகளுக்கு மன்னிப்பளிக்க மொழி இல்லை. அவை தோற்றவை. அதன் வழியாகத் தங்களது பெருமிதங்களை இழந்தவை. நல்ல மழைக்கு நடுவே, எங்களை உதறிவிட்டு தாத்தா எழுந்து சென்றதற்கு, சுற்றியிருந்த மச்சு வீடுகள், அந்த வீடுகளின் பாதி திறந்த ஜன்னல் வழியே வைர மூக்குத்தி மின்ன பார்த்த கண்கள், கனத்த தொப்பையும் தங்க சங்கிலியுமாகக் கை விசிறியால் விசிறிக்கொண்டு நின்ற மாளிகை வீட்டுக்காரர்களென மறைமுகமாகப் பல காரணங்களிருந்தன.
அம்மா தோற்றவளாகவே இருந்தாலும், தாத்தாவிடமிருந்த அதே குருதிச்சூட்டின் விசை, பொரி வறுக்கின்ற ஒவ்வொரு பேட்டை வாசலிலும் அரை நாள் கூலிக்குப் போய் கையேந்தி நின்றபோது எதிர்கொண்ட அவமானங்களின் வழியே எரிதழல்களாக உடலுக்குள் பற்றியெழுந்தது. நெல் அவித்த சுடுதண்ணியை வடிகட்டியவாறு அம்மாவின்மீது பூச்சியைப் போல கண்களை ஓடவிட்டபடி, “நைட் ஷிஃப்ட்தான். பரவால்லியா?” எனச் சிரிக்கின்ற அடுப்பு மூட்டிகளை நான் அவளது கைகளைப் பற்றிக்கொண்டு பார்த்தேன். அம்மா அங்கே நிற்கும்போதெல்லாம் அவள் முகத்தில் ஒரு சிரிப்பு வரும். அம்மாவை நினைத்தாலே குமட்டிக் கொண்டு வருவதற்கான முதல் அனுபவம் அந்த சிரிப்பால்தான் நிகழ்ந்தது. அப்போது பொரிப்பட்டறைகளில் பெரும்பாலும் நைட்ஷிஃப்ட் வைப்பதில்லை. லேசாக பவுடர் வாசமடிக்கும் முகத்தோடு, எங்களுக்கு அரைகுறை இரவு சாப்பாட்டை வைத்துவிட்டு அம்மா செல்வாள். அந்த இரவுகளில் அக்காவும் நானும் குடிசைக்குப் பின்புறமிருக்கும் மலை வழிந்து கிடக்கின்ற பாறை முற்றங்களில் படுத்துக் கொண்டு அம்மாவின் முகத்தில் சாரைப் பாம்பின் மினுமினுப்பைப் பார்த்ததாகக் கூறிக் கொள்வோம். ஒரு கட்டத்தில் அக்கா நான் கூறுவதை அமைதியாகக் கேட்பவளாக மட்டுமே ஆனாள். மறுநாள் அம்மா கொண்டுவருகின்ற காய்ந்த தின்பண்டங்களை அவதியவதியாக விழுங்குகின்ற என்னை அருவருப்பாகப் பார்ப்பாள். பசி என்பதைத் தவிர எனக்குள் அப்போது வயதிற்குரிய எந்த ஞாபகமும் இல்லை. காலைச் சாப்பாட்டை நாங்கள் மறக்கத் துவங்கிய அந்நாட்களில், வள்ளலார் மடத்தில் இடுகின்ற ஒருவேளை மதியச் சாப்பாட்டை ஒருநாளுக்கென சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். உடல் தசைகள் அனைத்தும் பசியில் இளகிக் கொண்டு முணங்கிக் கொண்டிருக்கும் மதிய வேளையில், ரோகிகளோடும் பைத்தியங்களோடும் சமயங்களில் எங்களைப் போன்ற சாதாரண மனிதர்களின் கூட்டத்திற்கு நடுவிலும் அமர்ந்து, அந்தச் சாப்பாட்டிற்காகக் காத்திருந்த கணங்களில் ஆவி பறக்க பேசனில் வெட்டி அள்ளப்படுகிற சாதக் குவியலைப் பார்க்கும் போது தீய்ந்து கிடக்கின்ற வயிற்றுக்குள் இளங்காற்று பரவுவதைப் போல கூச்சமான கிறங்கடிக்கும் உணர்வெழும்.
ஒரு கண்ணாடி பாட்டில் முழுக்க நீரை நிரப்பி, அதன் மத்தியில் புல்லைப் போன்ற சிறிய பச்சை செடியை அக்கா வளர்க்க ஆரம்பித்தாள். லேசாக அழுக்குப் பாவிய நீருக்கு நடுவே அந்த இளம்பச்சை செடி வேரூன்ற மண்ணில்லாமல் நீரிலேயே தன்னை நிலைநிறுத்தப் போராடியபடி அலைபாயும். அது வளரும் என அக்கா கூறினாள். எனக்கு அது பற்றி தெரியாது. ஆனால் சமீபமாக அக்கா வீட்டில் சரிவர சாப்பிடுவதில்லை; அம்மாவிடம் பணிந்து பேசுவதில்லை என்பது மட்டும் தெரியும். வள்ளலார் மடத்துச் சாப்பாட்டிற்குப் பிறகு அவள் வீட்டிலிருந்து ஒரு பருக்கையைக் கூட உண்ணாமல் தவிர்த்தாள். ஏற்கனவே மெலிந்திருந்த அவளது உடலில், பசையிழந்த அவளது தசை இறுக்கங்களில் அந்தப் பசியின் தணலால் ஒருவித பொலிவு எழுந்து கொண்டிருந்தது.
அம்மாவை முதன்முதலாக ‘தேவிடியா’ எனச் சொல்லி ஒருத்தி தெருவில் நின்று சண்டை போட்ட தினத்தில், அக்கா ஜன்னல் தப்பைக்கேட்டின் வழியே மெல்லிய புன்னகையோடு அதனைக்கேட்டபடி, உள்ளே திகைப்பும் அழுகையுமாகச் சுவரோரம் நின்றிருந்த அம்மாவைப் பார்த்தாள். அம்மா விசும்பலும் நீர் இழுவிய கன்னத்து அழுக்குத் தடத்தோடும் அக்காவைப் பார்த்து ஜன்னலை மூடு ஜன்னலை மூடு என முணகினாள். கன்னத்து எலும்புகள் துருத்திய சதைமேடுகளில் மெல்லிய வெளிச்சம் எதிரொலிக்க அக்கா குறையாத புன்னகையோடும் ஆவேசக் கண்களோடும் தொடர்ந்து பார்த்துக் கொண்டேயிருந்தாள். நான் அம்மாவின் தொடையைப் பற்றிக் கொண்டு நின்றவாறு அக்காவைப் பார்த்துத் திகைத்திருந்தேன். அதன்பிறகு அக்கா நீண்ட நாட்கள் எங்களோடு இருக்கவில்லை. வாசுதேவன் உறவினர் மூலமாகக் காந்திகிராமப் பள்ளியில் ஹாஸ்டலுக்குச் சேர்ந்து கொண்டாள். பிறகு அவள் பெரியவளாக மாறிய காலம்வரை அவளைச் சிலமுறையே சந்தித்தேன்.
நான் அம்மாவுடன் கூடவே வளர்ந்தேன். அந்தச் சண்டைக்குப் பிறகு எத்தனையோ சண்டைகள் வீதிகளில் எழுந்து எங்கள் சிறிய வீடு நோக்கி அம்மாவை அதே வசைச்சொல்லோடு தேடி வந்த நாட்கள் அவை. ஆனால் அம்மா இப்போது கதவைத்திறந்து வாசலுக்கு இறங்கி அதனை நேர்கொண்டாள். அரைத்துப் பூசிய மஞ்சள் சுடர்விடும் முகமும், பொதிந்து பொதிந்து உப்பிய தலைமுடிகளாலான திமிர்க்கொண்டையுமாக அம்மா தன்னைத் தூற்றுபவர்களைச் சிறிதும் பொருட்படுத்தாமல் வாசலில் சொளவில் ரேஷன் அரிசியைப் புடைத்துக் கொண்டிருப்பாள். பார்க்கின்ற ஒவ்வொரு ஆணும் அம்மாவை மிகுந்த ரகசியம் கொண்டவளாக எண்ணியபடி தயங்கியே கடந்தனர். அம்மா வெளிப்படையானவளாக இருந்தாள். பொரிப் பட்டறைகளில் நெல்மூட்டை இறக்கும்போது வேலைச்சுமை மறக்க ரெட்டை அர்த்தமாகப் பேசிச்சிரித்துக் கொள்கின்ற லோடுமேன்களிடம் அவளால் இயல்பாகப் பேசிச் சிரிக்க முடிந்தது. ஆனால் ஒரு பெண் எவ்வளவு வெளிப்படையாக இருக்கிறாளோ அவ்வளவு ரகசியமானவளாகவே ஒவ்வொருவராலும் ப்ரத்யேகமாக உணரப்படுகிறாள். குடும்பத்தை நகர்த்தவேண்டி, ஒருவேளை சோறு வேண்டி ரோட்டில் அம்மா இறங்கிவிட்ட பிறகு, அவளே எதிர்பார்க்காமல் அவளிடம் வந்துவிட்ட அந்தச் சுதந்திரத்தின்மீது ஒவ்வொருவரும் ஒவ்வொரு வலையை வீசிக் கொண்டிருந்தார்கள்.
யோசித்துப்பாருங்கள், ஒருவன் தேவிடியா மகனாகவே ஒவ்வொரு நபராலும் அழைக்கப்படுவதை, எல்லா முச்சந்தி முனைகளிலும் எதிர்பட நேர்வதை; எனது இளமைப்பருவம் அப்படித்தான் நகர்ந்து கொண்டிருந்தது. ஒருவகையில் அது பாதுகாப்பானதாகவும் சிலவேளைகளில் இருந்தது. ஒரு தேவிடியா மகனுக்குத் தந்தையாக, நீங்கள் நெருங்கவே அஞ்சுகிற எந்த ஆணையும் கைக்காட்டித் தப்பித்துக் கொள்ளலாம்.
நான் அப்போது பள்ளிப்படிப்பைப் பாதியில் கைவிடுகின்ற யோசனையில், உண்மையாகச் சொல்லப்போனால் – ஆசையில் இருந்தேன். என் சக நண்பன் பால்ராஜ் வாணிவிலாஸ் மேட்டினருகே இருக்கின்ற சுரண்டல் லாட்டரிக்கடையில் வேலைக்குச் சேர்ந்து, வெங்காய மண்டிகளின் கழிப்பறைகளுக்குள்ளே ரகசியமாகப் பீடி குடிக்க ஆரம்பித்திருந்தான். பீடிப்புகையின் இழிந்த நாற்றமடிக்கும் விரல்களோடு என்னோடு அவன் பேசும்போதெல்லாம் ஒரு பெரிய மனிதனைப்போலவே நடந்து கொண்டான்.
பள்ளிக்கூடம் செல்லாமல், உதிரி வேலைகளுக்கு அங்கே கிடைக்கின்ற பீடிகுடிக்கும், கெட்ட வார்த்தை பேசும் சுதந்திரத்திற்காக நான் செல்லத்தொடங்கிய சிறிது நாட்களிலேயே அம்மா அதனைக் கண்டுபிடித்துவிட்டாள். சிறிய காற்றுப் பட்டாலும் சாம்பல் நீங்கி கனன்றெழுகின்ற கங்கைப் போன்ற அம்மாவின் பழையமுகம் அன்று வரவில்லை. பொரிபட்டறைகளில் சதா சிணுங்கிப் பேசியே பழகிவிட்ட அவளது முகத்தில் பாவனையாக ஒரு சுழிப்பு மட்டுமே ஏற்பட்டது. எனக்கு இரண்டாவது முறையாக அந்தக் குமட்டல் உணர்வு வந்தது.
என்னை எப்படியாவது தரம்பிடித்துவிட வேண்டுமென வாசுதேவன் எவ்வளவோ முயன்றார். பீடிப்புகையை மறைத்துக்கொள்ளாத முகத்தோடு அவரைச் சாதாரணமாக நான் எதிர்கொள்ளத் துவங்கிய பருவத்தில் எதிர்காலம் குறித்துத் தித்திப்பான கனவுகள் காணுவதை இழந்தவனாக நான் எஞ்சினேன். அவருக்கும் அது புரிந்தது.
சிறிய பெருமூச்சோடு மலைக்கோட்டை வாசலிலிருந்து அவர் எழுந்து செல்லும்போதெல்லாம் வினாடிக்கும் குறைவான நேரத்தில் ஓடிச்சென்று அவரது கால்களைக் கட்டிக்கொண்டு அழத்தோன்றும். மறுகணம் எனக்குள்ளேயே புதிதாக வளர்ந்துவிட்டிருந்த முரட்டுக்கரமொன்று அதட்டி அடங்க வைக்கும்.
இப்போது யோசித்துப்பார்த்தால் அம்மா அப்படியொரு வாழ்வைத் தேர்ந்தெடுக்காமல் இருந்திருந்தால் நாங்கள் பிழைத்திருக்க மாட்டோமோ எனத் தோன்றும். நிச்சயம் எப்படியேனும் வயிற்றைக்கழுவி எங்கேனும் முணகிக் கிடந்திருப்போம்தான். ஆனால் நஞ்சுக்கொடி பிரிக்காமல் வளர்ந்துகொண்டிருக்கும் பிள்ளையைப்போல வயிற்றுப்பசியோடு நாங்கள் சுமந்து செத்திருக்கவேண்டிய நல்லவை என்பதன் சுமையை நாங்கள் விட்டொழித்ததே இன்றுவரை பிழைத்துக்கிடப்பதற்கான காரணமென நானே எண்ணிக்கொள்வதுண்டு. யோசிக்க அது எளிமையாகவும் இருக்கும். வெளிச்சத்திற்குத்தான் ஆயிரம் உபகரணங்கள் தேவை. இருளுக்கு? அது எப்போதும் சாஸ்வதமானது. ஒரு முள்மரத்திற்கு மிகப்பெரும் தண்டனையே அது அனிச்சையாகப் பூத்துவிடும் மலர்தான். அப்படித்தான் எனக்கும் அம்மாவிற்குமிடையே அக்கா அவ்வப்போது உள்நுழைந்தாள். எலிகளைப்போல நானும் அம்மாவும் எங்களது வீட்டின் இருளுக்குள் நாட்களை நகர்த்தும்போது எப்போதேனும் வீடுவரும் அவள் நாங்கள் என்னவாக எஞ்சியிருக்கிறோம் என்பதை அளந்துகாட்டும் பிரகாசத்தோடு வந்தாள். எங்களுக்கு அவளது அருகாமை கண்கூசும் ஒன்றாக மாறிப்போனது. அவள் அம்மாவைத் திட்டுவதில்லை. என்னையும் திருத்துவதில்லை. ஆனால் கலங்கலான நீருக்கு நடுவே மிதக்கின்ற தாவரம் நீரை வெட்கிக்கச் செய்வதுபோல எங்களை அஞ்சி ஒண்டச் செய்தாள்.
நான் மிருதுளாவைத் திருமணம் செய்தேன். அவள் கர்ப்பிணியாக நின்ற சமயத்தில் சுரண்டல் லாட்டரி வழக்கில் யாருக்காகவோ ஜெயிலுக்குப் போனேன். தான்யா பிறந்த செய்தியை ஜெயிலுக்குள்ளிருந்துதான் கேட்டேன். சில மாதங்களில் என்னை விடுவிக்கவும் செய்தனர்.
எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அந்த விடுதலை தினத்தன்று நான் கொடைரோட்டில் இறங்கி நன்றாகக் குடித்துவிட்டு பிறகு பேகம்பூர் வந்திறங்கினேன். திண்டுக்கல் எனும் பழைய நகைப்பெட்டிக்குப் பேகம்பூர்தான் நுழைவாயில். குழந்தைகள் கைகளால் கட்டி எழுப்பியதைப்போல இடுப்பு நெளித்த சிறிய கிறித்துவ தேவாலயங்களும் சாக்கடை வழிந்து ஓடுகின்றதைப் பொருட்படுத்தாமல் பாத்தியா ஓதுகின்ற சிதிலமான பள்ளிவாசல்களும் கொண்ட பேகம்பூரின் வசீகரமே ஒரு பழங்காலத்து சதிகாரி போன்ற அதன் இருள்பூசிய மினுமினுப்புதான். சிதிலமான அந்தச் சாலைத்தெருவின் வழியே நடந்துவரும்போது எப்போதும் நான் உணர்கின்ற ஆசுவாசம் இன்றும் தளும்பியது. அங்கிருந்தபடி பாதி இருளுக்குள் மூழ்கிக்கிடக்கின்ற மலைக்கோட்டையைப் பார்த்தவாறு நடந்தேன். கால்கள் முடங்கிவிட்ட யானையின் முதுகைப்போல அது சோர்ந்து கிடந்தது.
வீடு நுழைந்து முன்வாசல் சுவிட்சைப்போடும்போது எழுந்த வெளிச்சத்தில், அம்மா நோயுற்ற உடலோடு இருளை விரும்பி அமிழ்பவளாகச் சுருண்டு படுத்துக்கொண்டாள். கூடத்தில் விடிவிளக்கு எரியாததால் சிம்னியை மூலையில் வெளிச்சத்திற்கு வைத்திருக்கிறாள். அதனருகே தொட்டிலில் தான்யா உறங்கிக்கொண்டிருந்தாள். மிருதுளாவைப் பெயர் சொல்லிக்கூப்பிட நினைத்தேன். ஆனால் வீட்டினுள் அவளது வாசனை நிச்சயமாக இல்லை. வாய்வரை வந்த அவளது பெயரை நிறுத்திவிட்டு கூடத்தின் இருளுக்குள் வெறுமனே நின்றேன். சேலையில் கட்டப்பட்ட தொட்டிலுக்குள் உறங்கிக்கொண்டிருந்த தான்யா, சுவற்றில் விழுந்த தொட்டிலின் நிழலின் இரண்டு பாதைகள் விலகிச்செல்கின்ற புள்ளியின் நடுவே உறங்கிக்கொண்டிருப்பவளாக இருந்தாள்.
தான்யா தவழத்தொடங்கிய நாட்களில் அக்கா முதன்முறையாக அவளைப் பார்க்க வந்தாள். அவளுக்கு அரசாங்க வேலை கிடைத்துவிட்டதெனத் தெரிந்தது. எங்களுக்கு அதுகுறித்துக் கேட்க ஏதுமில்லை. பசியை அடக்கி அடக்கி வளர்ந்த பருவத்தில் மெலிந்து எண்ணெய்ப்பசையோடு ஒளிர்ந்த அவளது உடல் இன்னமும் அதே நெருப்போடு மிளிர்ந்து கொண்டிருந்தது. தவழ்ந்து தவழ்ந்து எங்கெங்கோ சுற்றியபடியிருந்த தான்யாவை அமைதியாக நீண்டநேரம் பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் வருவது தெரிந்து வாசுதேவன் வந்துவிட்டிருந்தார். அவருக்கு இது நல்ல முதுமைப்பருவம். இரண்டொரு நரைகளோடு சுடர்போல அமர்ந்திருந்த அக்காவைப்பார்த்துப் புன்னகைத்தபடி வாசலிலேயே அமர்ந்துகொண்டார். புருவத்தில் பூத்த வியர்வையை விரலால் வழித்து உதிர்த்தவாறே,
“வெயில்னாலும் அப்படி ஒரு வெயிலு” என்றவாறு கதவுத்தடுப்பில் சாய்ந்து கொண்டார்.
முன்வராண்டாவில் கட்டிலில் படுத்திருந்த அம்மா “அடிக்கட்டும் அடிக்கட்டும், நல்லா கல்லும் மலையும் பத்திக்கிறாப்ல. அதுக்கும் கணக்கு தீரணும்ல” என்றாள்.
வாசுதேவனும் அக்காவும் பார்த்துக்கொண்டார்கள். என்ன செய்வதெனத் தெரியாது நான் கட்டில் கால்மாட்டைப் பிடித்தவனாக நின்றேன்.
“பூமியையே வெச்சாலும் அதுக்கு கணக்குப்பத்தாது. ஆனா சின்ன திரி போதும் அதை நிலையா நிறுத்த. இந்தா இத்தினியூண்டு திரி.” என்றார்.
அக்காவிற்குக் கண்கலங்கி புகுபுகுவென சிரிப்பும் அழுகையுமாக வந்துவிட்டது. சற்றுத்தள்ளி தவழ்ந்துகொண்டிருந்த தான்யாவை அள்ளி அடிவயிற்றோடு கட்டிக்கொண்டாள். தொண்டை ஆழ்ந்தெழும்பிக் கொண்டிருந்தது. வாசுதேவன் என்னைப் பார்த்து,
”அதான் ஒரு சொல் போதும்டா… ஒரு சொல். இந்தா பாத்துக்க” என்றார்.
மதிய வெயிலுக்கு நடுவே குட்டிக்குட்டிப் பாம்புகளாக எங்கிருந்தோ பறக்கவிடுகின்ற பட்டங்கள் மலைக்கோட்டையை முத்தமிட முயன்று கொண்டிருந்தன. அக்கா தான்யாவைத் தூக்கிக்கொண்டு வாசலில் போய் அமர்ந்து மடியில் அமர்த்திக்கொண்டாள். வாசுதேவன் அவளது அலுவலகம், பதவி, சம்பளம் என விசாரித்தபடியிருந்தார். தான்யா குனிந்து மண்ணைக்கிளற முனைவதை அக்கா கவனமாக விரல்களை இறுகப்பற்றித் தடுத்துக்கொண்டிருந்தாள்.
அம்மா கட்டிலில் படுத்தவாறு என்னைப் பார்த்துச் சிரித்தாள். அவளது உலகத்தில் இப்போது எஞ்சியிருக்கும் ஒரே மனிதன் நான்தான். விஷத்தை முழுவதும் உமிழ்ந்துவிட்ட நாகத்தின் சோர்வான, துளியளவு குற்றவுணர்வு சேர்ந்த சிரிப்பு. நான் அம்மாவின் உள்ளங்காலை அமைதியாகப் பிடித்துவிட்டேன். விரிசலும் வெடிப்பும் பெருகி தகரம்போல காய்ந்துவிட்ட பாதங்கள். எங்கெங்கோ பிடிசோற்றிற்காக அலைந்து ஓய்ந்த பாதங்கள். அம்மா முணகலான குரலில்,
“பரவால்ல விடுடா.” என்றாள்.
பழைய சேலைகளையே போர்வைப் போல தன்மீது போர்த்திக்கொண்டு படுத்திருந்த அவளது முகம் தெரியவில்லை. ஆனால் அந்த முணகலான குரலுக்குள் நான் அந்தப் பழைய நெறுப்பை உணர்ந்தேன். வெளியே அக்கா மகிழ்ச்சி ததும்புகின்ற குரலில் தான்யாவைக் கொஞ்சிக்கொண்டிருந்தாள். இருளுக்குள் வீழ்ந்துவிடுவதற்குள் அவளைக் கைப்பற்றிவிட்ட சந்தோஷமான குரல் அது.
“இந்த ஜன்னலைக் கொஞ்சம்…”
அம்மா மெலிதான மூச்சுவாங்கும் குரலுக்கு நடுவே என்னிடம் கூறினாள். எழுந்துபோய் ஜன்னல் திரைச்சீலைகளைத்தழைத்து அம்மா விரும்புகின்ற கதகதப்பான இருளை அங்கே முழுவதும் நிறையச் செய்தேன். செப்புச் சிலைகளைப்போல போர்வைக்குள் நிமிர்ந்திருந்த அவளது பாதங்களைப் பற்றியபடி அங்கேயே அமர்ந்து கொண்டேன். மிதமான நீரலைகளைப்போல இருள் எங்களைச் சூழ்ந்துகொண்டது.
நாளுக்கு நாள் திருச்செந்தாழையின் எழுத்து மெருகேறிக் கொண்டு வருகிறது. மகுடிக்குக் கட்டுப்பட்ட பாம்பு போல் நான்.
மிக அருமையான எழுத்து
சார் வணக்கம் , நானும் திண்டுக்கல்ல வசிக்கிறேன் , திண்டுக்கல் நீங்கள் குறிப்பிட்ட இடங்கள் , பள்ளி நாட்களில் நாங்கள் ஆலை கரும்பை லாரியின் பின் புறம் இருந்து ஒடித்து தின்போம்
கதை அருமையாக உள்ளது.
தனித்துவமான எழுத்து நடையில் வார்த்திருக்கும் அருமையான கதை. “நீரில் மிதக்கின்ற நிலா மீது காற்று வருடினால் இசைமையான துண்டுகளாக அது உடையுமே, அதுபோலத்தான் அம்மா சிரிப்பாள்” / ” காரணமின்றித் தோற்று நிற்பவைகளுக்கு மன்னிப்பளிக்க மொழி இல்லை. அவை தோற்றவை. அதன் வழியாகத் தங்களது பெருமிதங்களை இழந்தவை” என்று பிரம்மிக்க வைக்கும்படியான – நின்று முன் நகரவிடாமல் திரும்பத் திரும்ப வாசிக்க வைக்கும் வாசகங்கள் கதை முழுதும் நிறைந்திருக்கின்றன. கதைக்கரு, வடிவம், செழுமயான எழுத்து என எல்லாமே போற்றும்படி உள்ளன. வாழ்த்துகள்!
மிக அருமையான கதை. நான்கு தலைமுறை வாழ்க்கையை அழகான படிமங்கள் வழியாக சொல்லிச் சொல்கிறது கதை. ஒரு நாவலாக விரித்தெடுக்கும் அளவு செறிவான கதை. கதை சொல்லி எப்பொழுதும் அம்மாவின் கைகளை தொடையை பாதத்தை பற்றியவாறே அவளோடு சேர்ந்து இருளில் மூழ்குகிறான். அந்த இருளில் மூழ்க மனம் இல்லாமல் அலைபாயும் சிறு செடியாய் தத்தளித்து வெளியேறுகிறாள் அக்கா. ஆனால் அவள் தம்பியை திருத்த முயல்வதில்லை. அந்த இருளில் அம்மாவுக்கு துணையாக தம்பியை விட்டு விட்டாள் போலும். இல்லை மீட்க முடியாத ஆழத்திற்கு சென்று விட்டான் என்று உணர்ந்து கொண்டாளோ! ஆனால் தான்யாவை அந்த இருளில் வேர் பதியும் முன்னே காப்பாற்றி விட்டாள். மண்ணைக் கிளரும் சிறு விரல்களை தடுக்கும் அன்னையின் கரங்களாய் அவளை நூல் படி ஏற்றி விடுகிறாள். விடுடா போதும் என்று அம்மாவே சொன்னாலும் அவள் பாதத்தை அவள் காலம் வரை விட முடியாது கதைசொல்லியால். அக்காவின் திரியின் மேல் ஒரு நாள் தான்யா தீபமாய் எழுந்து நின்று அந்த இருளை கிழித்தெறிவாள். திருச்செந்தாழைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
அருமையான விமர்சனம்❤️
‘கற்பு கற்பென்று கதைக்கின்றீரே, பாரும் ஐயா, இதுதான் பொன்னகரம்’ என்று முடித்திருப்பார் புதுமைப்பித்தன். அவர் முடித்த இடத்திலிருந்து தொடர்ந்திருக்கிறார் திருச்செந்தாழை.
சோரம் போக நூறு காரணங்கள் கொழுந்து விட்டு எரிந்தாலும், அப்படிப் போகாமலிருக்க சுடரின் திரிபோல ஒரு சிறு காரணம் இல்லாமலா போய்விடும்?
ஒரு தேர்ந்த புகைப்படக் கலைஞனைப் போல இருளையும் ஒளியையும் வகை பிரித்துக் காட்டியிருக்கிறார் எழுத்தாளர். வாழ்க! வளர்க!!
//அம்மா பெரிய மனுஷியானாள். அவளுக்குத் தலைக்கு ஊற்றிவிட்ட சில வாரங்களிலேயே ரூபாயையும் நாணயங்களையும் எண்ணியபடி, மூத்த சித்தியைக் கண்களால் அளந்த தாத்தா, வந்த பௌர்ணமிகளில் ஒன்றிலேயே அம்மாவுக்குத் திருமணம் நடத்திவிட்டார்.//
வாழ்க்கை பற்றிய அபரிதமான அவதானிப்புகளும், கவிதை உணர்வுகளும் ;
கதாசிரியர் சொல்கிறாரா? அல்லது அந்த சிறுவன் விவரிக்கின்றானா?
இந்த கதையை first person narration (தன்நிலை) வகையில் எழுத வேண்டுமா அல்லது third person narration (படர்க்கை) உகந்ததா?
சிறப்பான கதை. களமும் கூட. தன்நிலை கூறுமுறையால் (சிறுவன், இளைஞன், கணவன்) வாசிப்பனுபவம் தடைபடுகிறதோ என நினைக்கிறேன்.
மற்றவர்கள் இருளை வாரி வீசும்போது அதையே ஆயுதமாக கைப்பற்றிக்கொண்ட அம்மாவால், அதனை அம்மாவின் வாரிசாக கைப்பற்றிக்கொண்ட கதை நாயகனால், அதை விட்டு வெளியே வர முடியவதில்லை.
அடுத்த தலைமுறையை நேர் ஆக்கும் அக்காவின் வேட்கை இந்த வரிகளில் தெரிகிறது:
“இருளுக்குள் வீழ்ந்துவிடுவதற்குள் அவளைக் கைப்பற்றிவிட்ட சந்தோஷமான குரல் அது.”
இதில் கதை முடிகிறது.
வழக்கம் போலத்தான் . இல்லை இல்லை அப்படிச் சொல்ல முடியாது. மேலும் மெருகேரிய எழுத்து என்று தான் சொல்ல வேண்டும்.
ஒவ்வொரு வரியும் வியப்பு!
ஆழம்!
கவித்துவம்!
காட்சிகளாக, குரல்களாக கதை விழிவழி, செவிவழி விரிந்து கொண்டே இருந்தது. அன்புக்கும் மதிப்புக்கும் உரிய எழுத்தாளர் பா.திருச்செந்தாழை அவர்களுக்கு என் அன்பும் மகிழ்வும் வாழ்த்துக்களும்?❤️