வர்ணகலா

இந்தச் சிறிய கதையின் முடிவு எப்படி அமையப்போகிறது என்பதைத் தேர்ந்த வாசகரான நீங்கள் இதற்கு அடுத்தடுத்த பத்திகளில் நிச்சயமாகவே ஊகித்துவிடுவீர்கள். அய்நூறுக்கும் அதிகமானவர்கள் உட்கார்ந்திருந்த அரங்கில், மிதுனா பாலப்பா இந்தக் கதையைச் சொல்ல ஆரம்பித்ததுமே நானும் முடிவைச் சட்டென ஊகித்துவிட்டேன். ஆனால், அந்த முடிவை நோக்கி கதை எவ்வழியால் அசையப்போகிறது என்று எனக்குப் புரியவில்லை. எனவே நான் பொறுமையாக உட்கார்ந்திருந்து மிதுனா பாலப்பா சொன்ன கதையை முழுவதுமாகக் கேட்டேன்.

பாரிஸிலிருந்து முந்நூற்றைம்பது கிலோமீற்றர்கள் தொலைவிலிருந்த ‘ரென்’ பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்து, அரசறிவியல் படித்துக்கொண்டிருந்த மிதுனா பாலப்பாவுக்கு அன்றைய காலை மற்றுமொரு கொடூரமான கொலைச் செய்தியுடன் விடிந்தது. அவள் படுக்கையிலிருந்து நகராமல், அலைபேசியின் தொடுதிரையை உருட்டி உருட்டிப் பார்த்தவாறேயிருந்தாள். காலையில் எட்டு மணிக்கு வகுப்பு இருக்கிறது என்பது அவளது ஞாபகத்திலேயே இல்லை.

மிதுனாவுக்கு ஆறு வயதாகியிருந்த போதுதான், அவளை இலங்கையில் விடுமுறையை கழிப்பதற்காக முதலும் கடைசியுமாக பெற்றோர் அழைத்துச் சென்றிருந்தார்கள். ஏழாலைக் கிராமத்திலுள்ள அவர்களது பாரம்பரிய, பெரிய நாற்சார் வீட்டில் மிதுனா கழித்த அந்த விடுமுறையை ஒரு குஞ்சுத் தேவதை போன்றே அவள் அனுபவித்தாள். தரையில் அவளது கால்களைத் தீண்டவிடாமல் சொந்தபந்தங்கள் எப்போதும் தூக்கி வைத்துக்கொண்டு திரிந்தனர். பிரான்ஸில் கண்டேயிராத விதவிதமான மரங்கள், கனிகள், வீட்டுக்குள் உல்லாசமாக நுழைந்து படுத்துக்கிடக்கும் வெள்ளாடுகள், தலையைத் தட்டிப் பறக்கும் கோழிகள், குங்கும நிறமூட்டிய கோழிக் குஞ்சுகள், வீட்டின் பின்னே தொழுவத்தை நிறைத்திருக்கும் பசுமாடுகள், வீட்டைச் சுற்றிப் பறந்தபடியே இருக்கும் வண்ணப் பறவைகள், தோள்களில் வந்தமர்ந்து விளையாட்டுக் காட்டும் பட்டாம்பூச்சிகள், இரவில் தேவதைகளைப் பற்றி மட்டுமே கதைசொல்லும் பாட்டியும் தாத்தாவும் என்றிருந்த சூழலின் ஒவ்வொரு வண்ணப் படிமமும் இப்போதும் அவளது நெஞ்சில் படிந்துள்ளது. அவர்கள் இலங்கையை விட்டுத் திரும்பவும் பிரான்ஸுக்குப் புறப்பட்ட அன்றுதான் மாவிலாறில் மறுபடியும் யுத்தம் வெடித்தது.

மறுபடியும் அவளைப் பெற்றோர் இலங்கைக்கு அழைத்துச் செல்லவில்லை. மிதுனா கேட்ட போதெல்லாம் “ஆமிக்காரங்கள் நிக்கிற முத்தத்த நான் இனி மிதிக்க மாட்டன்” என்று தந்தை பாலப்பா சொல்லிவிட்டார். ஆனால், ஒவ்வொரு வருட விடுமுறைக்கும் மிதுனாவை இலண்டன், நோர்வே, கிரேக்கம், துருக்கி, துனிஷியா என வெவ்வேறு நாடுகளுக்குப் பெற்றோர் கூட்டிச் சென்றனர். ஆனால், மிதுனாவின் கனவுகள் இலங்கையைச் சுற்றியேயிருந்தன. பெரியவளானதும் தனியாகவே அங்கு செல்ல வேண்டும் என்று நினைத்துக்கொள்வாள்.

வன்னியியில் இறுதி யுத்தம் நடந்த காலங்களில், பாரிஸ் நகர வீதிகளிலே ஈழத் தமிழர்கள் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டங்களுக்கு பாலப்பா செல்லும் போது, சிறுமி மிதுனாவையும் அழைத்துப் போயிருக்கிறார். அங்கேயிருந்த தட்டிகளிலும், பதாதைகளிலும் மிதுனா பார்த்த இலங்கை வேறுமாதிரியாக இருந்தது. தலையற்ற உடல்கள், எரிந்துகொண்டிருக்கும் வீடுகள், வரிசையாகக் கிடத்தப்பட்டிருக்கும் குழந்தைப் பிரேதங்கள் என்பவற்றைத் தான் அவள் அங்கே பார்த்தாள். பல மாதங்களுக்கு அந்தப் படங்கள் அவளது மனதை வதைத்துக்கொண்டேயிருந்தன. அப்போதிலிருந்தே இலங்கை குறித்த செய்திகளை அவள் கவனமாகப் பின்தொடர்ந்தாள். பல்கலைக்கழகத்தத்தில் நடக்கும் கருத்தரங்குகளில் இலங்கைப் போரைக் குறித்தும், இனப் படுகொலை குறித்தும் மிதுனா சில தடவைகள் உரையாற்றியிருக்கிறாள். இலங்கை இனமுரண்கள் குறித்ததே அவளது அரசறிவியல் பட்டத்திற்கான ஆய்வேட்டை எழுதுவதற்குத் தீர்மானித்து வேலை செய்கிறாள்.

இலங்கையில் நடக்கும் அரசியல் மாற்றங்களை அவள் உன்னிப்பாக அவதானித்துக் குறிப்புகளைச் சேகரித்து வைத்தாள். நீண்டகாலம் சிறைகளிலிருக்கும் அரசியல் கைதிகள், யுத்தத்தில் காணமற்போனவர்கள், இலங்கை அரசுக்கு எதிராக நடத்தப்படும் தொடர் ‘அரகலய’ போராட்டம் எல்லாலற்றையும் அவள் கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தாள். இலங்கையிலிருந்து கிடைக்கும் எந்தவொரு முக்கிய செய்தியையும் அவள் தவறவிடுவது கிடையாது.

இந்தக் காலையில், அவள் யாழ்ப்பாண இணையமொன்றை உருட்டிக்கொண்டிருந்த போது, இந்தக் கொலைச் செய்தியைப் பார்த்தாள். ஆனால், அது தனக்குத் தெரிந்த வர்ணகலா டீச்சர்தானா என்று அவளுக்கு உறுதிப்படத் தெரியவில்லை. வர்ணகலா டீச்சருக்கு எத்தனை வயதிருக்கும் எனக் கணக்குப்போட்டுப் பார்த்தாள். இவளுக்கும் வர்ணகலாவுக்கும் இடையே வயதால் பதினேழு வருடங்கள் வித்தியாசங்கள் என்பது மிதுனாவுக்குத் தெரியும். அப்படியானால் இப்போது வர்ணகலாவுக்கு முப்பத்தொன்பது வயது. கொலையுண்டவர் நாற்பது வயதுப் பெண் என்றும் வெளிநாட்டிலிருந்து அண்மையில் இலங்கைக்கு வந்தவர் என்றும் அந்த இணையத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. எல்லாவற்றையும் இணைத்துப் பார்க்கும்போது, அது தனக்குத் தெரிந்த வர்ணகலா டீச்சராக இருக்கலாமோ என்ற அவளது சந்தேகம் வளர்ந்துகொண்டே போனது. அந்த இணையத்தில் கொலையுண்டவரின் வண்ண ஒளிப்படத்துடன், சில வரிகள்தான் இவ்வாறு வெளியிடப்பட்டிருந்தன:

வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வந்திருந்த வர்ணகலா என்ற நாற்பது வயதுப் பெண்மணி, வட்டுக்கோட்டைப் பகுதியில் அவர் புதிதாக வாங்கியிருந்த வீட்டினுள்ளே தூங்கிக்கொண்டிருந்தபோது, நேற்று இரவு, தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். அந்தக் காணியையும், வீட்டையும் அவர் வாங்கியதில் எழுந்த தகராறுகள் காரணமாகவே அவர் ஒரு கும்பலால் கொடூரமாக முகம் சிதைக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று வர்ணகலாவின் உறவினர்கள் தெரிவிக்கிறார்கள். வட்டுக்கோட்டைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளார்கள்.

இந்தச் செய்தியின் நடுவில் பிரசுரிக்கப்பட்டிருந்த படத்தில், ஒளிப்பான சருமமுள்ள பெண் கொலையுண்டு கிடந்தார். அவரது முகம் இருந்த இடத்தில் ஓர் இரத்தக் கோளமேயிருந்தது. முகம் முழுவதுமாகச் சிதைக்கப்பட்டு, எந்தவொரு அடையாளமும் இல்லாமலிருந்தது. அந்தப் படத்தைப் பெரிதாக்கி, அது வர்ணகலா டீச்சர்தானா எனக் கண்டுபிடிக்க மிதுனா முயற்சி செய்தாள். கணினியில் இருந்த பல தொழில்நுட்பச் சாத்தியங்களையும் அதற்காக உபயோகப்படுத்தினாள். ஆனால், அந்தச் சடலத்தின் கழுத்துக்கு மேலே சிவப்புக் குழம்பைத் தவிர அவளால் ஓர் உறுப்பைக் கூடக் கண்டுபிடிக்க முடியவில்லை.

பாரிஸ் புறநகரொன்றில் இருக்கும் தன்னுடைய வீட்டுக்கு மிதுனா தொலைபேசியில் அழைத்து, தனது பெற்றோரிடம் இந்தக் கொலைச் செய்தியைப் பதற்றத்துடன் சொன்னாள். “ஸே வ்ரே? லங்காஸ்ரீ நியூஸில அப்பிடியொரு செய்தியையும் காணேல்லையே” என்றார் தகப்பன் பாலப்பா.

“ஆரு… அந்தத் தமிழ் டீச்சரோ?” என்று கேட்டார் தாயார் இந்திரா.

2

மிதுனாவுக்கு பத்து வயதான போது, வீட்டுக்கு அருகிலிருந்த தமிழ்ச்சோலையில் ஞாயிறு காலைகளில் நடத்தப்பட்ட தமிழ் வகுப்பில் அவளைப் பாலப்பா வலுகட்டாயமாகச் சேர்த்துவிட்டார். மிதுனாவுக்கு அது பிடிக்கவேயில்லை. அங்கே சொல்லிக்கொடுக்கும் பாடங்களும் அவளுக்கு வேதனையாகவேயிருந்தன. ஆனா, ஆவன்னா சொல்லிக்கொடுக்கும் முன்பே பத்துத் திருக்குறள்களைக் கொடுத்து மனனம் செய்து வருமாறு சொல்லிவிட்டார்கள். பாலப்பா பொறுமையாக திருக்குறளை மகளுக்குக் கற்றுக்கொடுத்தார். “எங்கிட தாய் மொழியை நாங்கள் மறக்கவே கூடாது” என்பது அவரது அன்றாடப் போதனையாக மிதுனாவின் குட்டித் தலையில் விழுந்தது.

வார நாட்கள் முழுக்க ‘அலெக்ஸாந்தர் துமா’ தொடக்கப் பள்ளியில் படித்த மிதுனாவுக்கு, அந்தப் பிரஞ்சுப் பள்ளிக்குப் போவதென்றால் ஒரே கொண்டாட்டம்தான். அங்கிருந்த ஆசிரியர்கள் மிதுனாவுடன் தோழர்களைப் போலவே பழகி, அவர்களுக்குச் சரிசமமாகவே அவளை நடத்தினார்கள் என்றே சொல்லலாம். ஆனால், இந்தத் தமிழ்ப் பாடசாலைஆசிரியையோ எரிச்சலும் கூச்சலுமாகத்தான் பாடங்களை நடத்தினார். இந்தத் தமிழ்ச் சித்திரவதையெல்லாம், அடுத்த வருடம் வர்ணகலா டீச்சரின் வகுப்புக்கு மிதுனா போகும் வரைதான் இருந்தது. வர்ணகலா டீச்சரின் வகுப்போ, கடவுளும் குட்டித் தேவதைகளும் போல கனவுலகமாக இருந்தது.

வர்ணகலா வார நாட்களில் ஓர் அச்சகத்தில் பக்க வடிவமைப்பாளராகப் பணியாற்றுபவர். ஞாயிறு தினங்களில் தொண்டு அடிப்படையில் தமிழ்ச்சோலையில் ஆசிரியையாகப் பணியாற்றினார். அவர் சங்கப்பாடல் விளக்கவுரை, தலைவர் மாமாவின் சிந்தனையிலிருந்து சில துளிகள் என்றெல்லாம் பொட்டலங்களைக் குழந்தைகளின் குரும்பைத் தலையில் சுமத்தி வைக்கவில்லை. அவரது முதல் வகுப்பையே இப்படித்தான் ஆரம்பித்தார்:

தாளந்தான் போடுகிறேனே
தமிழ் பாட அறியேனே
தாதிமிதா தாதிமிதா
தத்திமிதா தத்திமிதா

வர்ணகலா டீச்சருக்கு சிரிக்காமல் பேசவே தெரியாது. காலையில் வரும்போது, வீட்டிலிருந்து முறுக்கு, பிஸ்கட் போன்ற தின்பண்டங்களை எடுத்துவந்து இடைவேளையில் குழந்தைகளுடன் பகிர்ந்து சாப்பிடுவார். அவரது வகுப்பு பாடலாலும், நடனத்தாலும், சிரிப்பாலும் நிறைந்திருந்தது. இப்படியாகத்தான் மிதுனா ஆர்வத்துடன் தமிழ் மொழியைப் படிக்கத் தொடங்கிய கட்டமொன்று நிறைவேறிற்று.

மிதுனாவின் தமிழ்ப் படிப்புத் தீவிரம் பாலப்பாவையே திகைக்க வைத்தது. ஞாயிறு காலையில் ஒன்பது மணிக்கு ஆரம்பிக்கும் வர்ணகலா டீச்சரின் வகுப்புக்காக, எட்டு மணிக்கே மிதுனா தயாராகிவிடுவாள். பாடசாலைக்குக் காரில் அழைத்துவரும் பாலப்பாவும் மெல்ல மெல்ல வர்ணகலாவுடன் பழக்கமானார். இந்தப் பழக்கம் ஒருவருடைய வீட்டுக்கு இன்னொருவர் வந்து போவதுவரை வளர்ந்தது. வர்ணகலாவின் கணவர் வெள்ளையினத்தவர். அவரும் சிறிதளவு தமிழ் பேசக் கற்றிருந்தார். தீபாவளி விருந்துக்கு மிதுனாவின் வீட்டுக்கு வர்ணகலா குடும்பமும், புதுவருட விருந்துக்கு வர்ணகலாவின் வீட்டுக்குப் பாலப்பா குடும்பமும் பரிசுகளோடு போய்வந்து உறவு கொண்டாடினார்கள்.

ஒரு கொடுமையான பனிக்காலத்தில், தன்னுடைய பன்னிரண்டாவது வயதில் மிதுனா பருவமடைந்தாள். ஒரு வாரம் வீட்டிலேயே வைத்திருந்து, சோறும் நல்லெண்ணெய் ஊற்றிய கத்தரிக்காய் பால்கறியும், பச்சை முட்டைகளும், உளுத்தம்மாக் களியுமாகக் கொடுத்து உடலைத் தேற்றி, அடுத்த வாரமே அவளைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பிவிட்டார்கள். பருவமடைந்த காரணத்தைச் சொல்லியெல்லொம் பிரஞ்சுப் பள்ளிக்குப் போகமலிருக்க முடியாது. ஆனால், தமிழ்சோலைக்கு ஒரு மாதகாலம் அவள் அனுப்பப்படவில்லை. முப்பதோராவது நாள் அய்யரை வீட்டுக்கே கூப்பிட்டு, புண்ணியவாசம் செய்து தீட்டைக் கழித்த பின்புதான் மிதுனாவைத் தமிழ் வகுப்புக்கு அனுப்பிவைத்தார்கள். ஏழு மாதங்கள் கழித்து வரும் கோடைகாலத்தில், மஞ்சள் நீராட்டு விழாவை மிகச் சிறப்பாக நடத்துவதாக பாலப்பாவும் இந்திராவும் முடிவெடுத்தார்கள். பிரான்ஸில் கோடை காலம்தான் விழாக்களை நடத்துவதற்கு ஏற்ற காலம். அற்புதமான காலநிலையுள்ள அந்த நாட்களில்தான் நண்பர்களும் உறவினர்களும் வெளிநாடுகளிலிருந்தும் விழாவுக்கு வருவார்கள்.

ஆனால், மிதுனாவுக்கு மஞ்சள் நீராட்டு விழாவை நடத்துவது சரியற்றது என்பது பாலப்பாவின் தம்பியான பாலரஞ்சனின் எண்ணம். அவன், பாலப்பா வீட்டுக்கு வந்தபோது தனது மறுப்பைக் கடுமையாகத் தெரிவித்தான்:

“பெரியண்ணே… இது காலத்துக்கு ஒவ்வாத வழக்கம் கண்டியே. நீ இதைச் செய்யாத!”

பாலப்பா சற்றும் மனம் சளைக்காமல் உடனடியாகவே பாலரஞ்சனுக்குச் சுடச்சுடப் பதில் கொடுத்தார்.

“மடக் கதை கதைக்காத… வெளிநாட்டுக்கு வந்தா வெள்ளைக்காரனுக்கு நடிக்க ஏலுமே? எங்கிட கலாச்சாரத்தப் பண்பாட விட்டுக் கொடுக்க ஏலுமே… இஞ்ச எல்லாரும் தானே சடங்கு செய்யினம்.”

“இது சீரழிவுக் கலாச்சாரம் கண்டியே… ஊருக்கெல்லாம் சொல்லி பெரிய எடுப்பில சாமத்தியச் சடங்கு எதுக்கு நடத்துறது சொல்லு பார்ப்பம்?”

“என்னத்துக்கோ? எங்கிட பிள்ளை பெரிய பிள்ளையான சந்தோசத்தை நாலு இனசனத்தைக் கூப்பிட்டுக் கொண்டாடடத்தான்…”

“இல்லவேயில்லை… கலியாணத்துக்கு ரெடியா எங்கிட வீட்டில ஒரு பொம்புள இருக்கெண்டு ஊருக்குப் பறைதட்டிச் சொல்லத்தான் இந்தச் சடங்கு வந்தது.”

“இஞ்சே… நாலு பேப்பர் புத்தகத்த அரைகுறையாப் படிச்சுப் போட்டு லூசு மாதிரிக் கதைக்காத ரஞ்சன். எங்கிட கலாச்சாரத்தில ஒவ்வொண்டுக்கும் அர்த்தமிருக்கு…”

“இது எங்கிட கலாச்சாரமே இல்ல… இது தேவதாசிக் கலாச்சாரம் கண்டியே… எங்களட்ட ஒரு பொம்பிள தொழிலுக்கு ரெடியா நிக்கிறாள் எண்டு… உன்னட்ட எல்லாம் உடைச்சுச் சொல்லோணும் பெரியண்ணே…

“பொத்தடா வாயை… உனக்கு விருப்பமில்லாட்டி நீ வர வேணாம்… முறை மயிரொண்டும் செய்ய வேணாம்… நான் யானையில என்ர மகளை ஊர்வலம் கொண்டு போறனா இல்லையா எண்டு இருந்து பாரு!”

உரத்த சத்தத்தைக் கேட்டு, சமையலறைக்குள்ளிருந்து மிதுனாவின் தாயார் இந்திரா எட்டிப் பார்த்தார்.

“இஞ்சேரும் இந்திரா இதைக் கேட்டீரே… சாமத்திய வீடு செய்ய வேணாமெண்டு இந்த விடுபேயன் சொல்லுறான்… ஸெ பா விறே பித்தான்..”

“பெரியண்ணே! முதலில பிரஞ்சப் பிழையாக் கதைக்கிறத நிப்பாட்டு.”

மிதுனாவின் தாயார் சொன்னார்:

“இருக்கிறது ஒரு பிள்ளை. அதுக்குச் சடங்கு செய்ய வேணாமே… சனம் என்ன சொல்லும்! ஊரில இருக்கிற உங்கிட அம்மா அப்பா ஒத்துக்கொள்ளுவினமே? நாங்கள் பிரான்சுக்கு வந்து இருபது வருசத்தில் எத்தின கொண்டாட்டங்களுக்குப் போய்க் காசு போட்டிருப்பம்… எப்படியும் ஒரு லட்சம் ஈரோவாவது இருக்கும். திருப்பி வாங்கத்தானே வேணும்… எங்கிட இவர் வீடு வாங்கி வித்த தமிழ்ச்சனமே அய்நூறு இருக்கும். அவயளும் வருவினம்…”

பாலரஞ்சன் மெல்லிய சிரிப்போடு கேட்டான்:

“ஏன் அண்ணி உங்களிட்ட இருக்கிற காசு காணாதே?”

எதுவும் பேசாமல் இந்திரா மாடிக்குச் சென்றார். ஒவ்வொரு படியிலும் ஏற அவருக்குப் பாலரஞ்சன் மீது கொதிப்பும் படிப்படியாக ஏறிக்கொண்டே வந்தது. ‘எல்லாம் இவர் குடுக்கிற இடம்’ என்று நினைத்துக்கொண்டார். ‘நாங்கள் கயிட்டப்பட்டு உண்ணாமத் தின்னாம, சுடுதண்ணீ பாவிக்காம குளிர் தண்ணியில தோய்ஞ்சு முழுகி ஒவ்வொரு சென்ரிமாச் சேர்த்துப் பெருக்கின காசு இவற்றை கண்ண உறுத்துதாமோ? சோம்பேறி நாய்… இதெல்லாம் புதுசாப் பெந்தக்கோஸ்தில சேர்ந்ததால கதைக்கிற கதை… அதுகள் தான் உதெல்லாம் செய்யாம புரியன் உயிரோட இருக்கேக்கையே வெள்ளைச் சீலை கட்டுறதுகள்’ என்று மனதிற்குள் கோபமும் கொந்தளிப்புமாகப் போய், மிதுனாவின் அறைக்குள் நுழைந்தார்.

படித்துக்கொண்டிருந்த மிதுனா என்ன என்பது போலப் பார்க்க “உன்ர சித்தப்பருக்கு உனக்குச் சாமத்தியச் சடங்கு செய்யிறது பிடிக்கேல்லையாம். சடங்கில உனக்கு ஏதாவது சங்கிலி காப்புப் போட்டு முறை செய்யோணுமே… அதுதான் அந்தக் கசவாரம் தேவையில்லாக் கதை கதைக்கிது.”

இதைக் கேட்டதும் மிதுனாவுக்குப் பெரும் கவலை பிடித்துக்கொண்டது. வரப் போகும் மஞ்சள் நீராட்டு விழாவுக்காக அவள் ஆவலுடனும், மனம் கொள்ளாத மகிழ்ச்சியுடனும் நாட்களை எண்ணிக்கொண்டிருக்கிறாள். அவள் பாரிஸில் நிகழ்ந்த எத்தனையோ மஞ்சள் நீராட்டு விழாக்களுக்குப் பெற்றோருடன் போயிருக்கிறாள். விழாவின் நாயகியான பெண்ணை எவ்வளவு சோபனமாக அலங்கரித்திருப்பார்கள். அந்த நாளின் உச்ச நட்சத்திரம் அவள்தானே! தேவதைக் கதைகளில் நிகழ்வதுபோல எவ்வளவு அற்புதப் பரிசுகள் அவளுக்குக் கிடைக்கும். அவளது தோழிகள் சூழ்ந்து மலர்களைத் தூவ நடுவில் ராஜகுமாரி போலல்லவா அவள் அமர்ந்திருப்பாள். எத்தனை எத்தனை புகைப்படங்கள்! மஞ்சள் நீராட்டு விழாவின் வீடியோப் பிரதி ஒரு பொலிவூட் படம் போல எவ்வளவு குதூகலமாகயிருக்கும்!

கோடை நெருங்கிக்கொண்டிருந்த போது, மிதுனாவின் பெற்றோர் வர்ணகலா டீச்சர் வீட்டுக்குப் பட்டுப் புடவை, பட்டு வேட்டி, வெற்றிலை, பழங்கள் சகிதமாகச் சென்று, மஞ்சள் நீராட்டு விழாவுக்குப் பத்திரிகை வைத்தார்கள். மிதுனாவின் அம்மா “டீச்சர் நீங்கள் வேளைக்கே வந்து உங்கிட வீட்டுக் கொண்டாட்டமா நினைச்சு முன்னுக்கு நிண்டு எல்லாம் செய்யோணும். மிதுனா உங்கிட பிள்ளை” என்றார்.

3

பாரிஸ் நகரத்தின் ஆகாயம் நீல வெளிச்சமாக மின்னிக்கொண்டிருந்தது. சரியாகப் பகல் பன்னிரண்டு மணிக்கு, அந்த வெளிச்சத்தைப் பிளந்துகொண்டு, ஒரு ஹெலிகொப்டர் கீழே இறங்கத் தொடங்கியது. மைதானத்தில் கூடியிருந்த நூற்றுக்கணக்கானவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்தார்கள். வெள்ளைக்கார விமானியால் மிக இலாவகமாக ஹெலிகொப்டர் தரையிறக்கப்பட்ட போது, நாதஸ்வரங்களும், தவில்களும் மங்கல இசையை முழங்கத் தொடங்கின.

ஹெலிகொப்டரின் கதவு திறக்கப்பட்டபோது, பட்டு வேட்டியும், பட்டுச் சட்டையும், தோளில் தங்கச் சரிகை அங்கவஸ்திரமும், கண்களிலே கறுப்புக் கண்ணாடியுமாகக் கைகளைத் தலைக்கு மேலே தூக்கிச் சனங்களைப் பார்த்துக் கும்பிட்டவாறு, கறுப்பு எம்.ஜி.ஆர். போலவே பாலப்பா ஹெலிகொப்டரிலிருந்து கீழே இறங்கினார். அவருக்குப் பின்னால் கும்பிட்டவாறே, திருவிழா காலத்து முத்து மாரியம்மன் போன்று மிதுனாவின் தாயார் இறங்கினார். அவர்களின் பின்னே தேவதையாக அலங்கரிக்கப்பட்டிருந்த மிதுனாவின் கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு வர்ணகலா இறங்கினார்.

மைதானத்தில் அலங்கரித்து நிறுத்தப்பட்டிருந்த பலகீனமான யானை இலண்டனிலிருந்து கப்பலில் வரவழைக்கப்பட்டிருந்தது. அந்த யானையின் முதுகில், மலர்களால் அலங்கரிக்கப்பட்டுக் கம்பீரமாக இருந்த அம்பாரி மாடத்துள் மிதுனாவை உட்கார வைத்து, விழா மண்டபம் வரை அவளை ஊர்வலமாக அழைத்துச் சென்றார்கள்.

யானையிலிருந்து இறங்கியதும், எட்டுப் பேர்கள் சுமந்த அலங்காரப் பல்லக்கில் மிதுனாவை உட்காரவைத்து மேடைவரை தூக்கிச் சென்றார்கள். பல்லக்கின் இருபுறத்திலும் ஒவ்வொரு பக்கத்துக்கும் இருபது சிறுமிகள் மிதுனா மீது மலர்மாரி பொழிந்தவாறே நடந்தார்கள்.

மஞ்சள் நீராட்டு விழாவுக்கு வரமாட்டேன் என்று சூளுரைத்திருந்த பாலரஞ்சன் மண்டபத்தின் ஓரத்தில் அமைக்கப்பட்டிருந்த மதுபானச்சாலையில் நின்று விஸ்கி அருந்தியவாறே எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்தான். மதுச்சாலையை மெல்ல மெல்ல ஆண்கள் கூட்டம் சூழ்ந்துகொண்டது. பெண்கள் வட்டமான மேசைகளைச் சூழ உட்கார்ந்துகொண்டார்கள்.

ஒவ்வொரு மேசையும் வெண்ணிறப் பட்டுத் துணி விரிக்கப்பட்டு, சுற்றிவர எட்டு நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. நாற்காலிகளும் வெண்ணிற மஸ்லின் துணிகளால் போர்த்தப்பட்டிருந்தன. மேசைகளை நிரப்பி வகைவகையான சிற்றுண்டிகளும், குளிர்பானப் போத்தல்களும் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. தங்கத்தாலும் பட்டாலும் போர்த்தப்பட்டிருந்த மக்கள் கூட்டம் நாசூக்காக சிற்றுண்டிகளைக் கொறித்துக்கொண்டிருந்தது.

விழாவுக்கு நாயகி மிதுனா என்றால், புகைப்படக்காரரும் வீடியோ படப்பிடிப்பாளரும்தான் எப்போதும் போலவே இந்த விழாவிலும் நாயகர்கள். கல்யாணங்களின் போது தாலி கட்டுவது சரியாக வீடியோவில் பதிவாகவிட்டால், கழுத்தில் ஏறிய தாலியைக் கழற்றவைத்து மறுபடியும் கட்டவைக்கும் அதிகாரம் படைத்தவர்கள் இந்த ஒளி ஓவியர்கள். அதிலொரு ஒளி ஓவியர் பறக்கும் குட்டிக் கமெரா ஒன்றை மண்டபத்தில் ஒவ்வொருவரின் தலைக்கு மேலும் வேகமாக இறக்கியும், சட்டெனத் திசைமாற்றி ஏற்றியும் மொத்த வித்தையையும் காட்டிக்கொண்டிருந்தார். மண்டபத்தின் எல்லாப்புறங்களிலும் ஒலியைப் பெருக்கும் பெட்டிகள் பொருத்தப்பட்டிருந்ததால், பெரும் சத்தத்தால் மண்டபமே அதிர்ந்துகொண்டிருந்தது. இசைத்தட்டைச் சுழலவிடும் நிபுணரை ஜெர்மனியிலிருந்து அழைத்திருந்தார்கள். அந்தப் பையன் தன்னுடைய சேவல் கொண்டையைச் சிலுப்பிச் சன்னதம் ஆடியவாறே, ஒரு பாட்டைக் கூட முழுதாகக் கேட்க முடியாமல் பாடல்களைக் கொத்துரொட்டி போட்டுக்கொண்டிருந்தான்.

உணவு வகைகளில் இலங்கை, இந்திய, சீன வகைகளோடு கொஞ்சம் பிரஞ்சு அயிட்டங்களும் இருந்தன. பாலப்பாவுடைய ‘வீடு விற்பனை முகவர்’ நிறுவனத்தில் வேலை செய்யும் இரண்டு வெள்ளையர்களும் விழாவுக்கு வந்திருந்து வாய்களை அகலப் பிளந்து எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்தார்கள். மண்டபத்தில் நடக்கும் ஒவ்வொரு அசைவுக்குப் பின்னும் தமிழ்க் கலாசாரம் இருக்கிறதென்றே அவர்கள் நம்பியிருக்கக்கூடும். “பிரஞ்சுக்காரன் கலாச்சாரம் எண்டு எதைச் சொன்னாலும் த்ரில்லாகி நம்புவான்” என்று பாலரஞ்சன் அடிக்கடி சொல்வதுண்டு.

மேடையில் வைத்து மிதுனாவுக்கு பாற்சோறு, அரிசிமாவுக் களி, பிட்டு, பால்ரொட்டி ஆகியவை வைக்கப்பட்டிருந்த வெள்ளித் தட்டுகளால் ஆரத்தி சுற்றினார்கள். வர்ணகலாவும் இந்திராவின் தங்கையான சித்ராவுமே அவற்றைச் செய்தார்கள். ஆரத்தி சுற்றி முடித்ததும், ஏதோ மலையையே தூக்கிச் சுற்றிய பாவனையோடு சித்ரா முகத்தைச் சுழித்தவாறே, ஒற்றைக் கையால் இடுப்பைப் பிடித்துக்கொண்டு மேடையிலிருந்து இறங்கிவிட்டார். இவை எல்லாவற்றையும் மேடையில் நின்று கண்களில் நீர் கண்ணாடித் திரையிடப் பெருமிதத்துடன் பாலப்பாவும் இந்திராவும் பார்த்துக்கொண்டிருந்தார்கள். பாலரஞ்சன் தள்ளாடியபடியே திடீரென மேடையிலேறி, மிதுனாவைக் கன்னங்களில் முத்தமிட்டுப் பத்துப் பவுண் சங்கிலியை அவளது கழுத்தில் அணிவித்துச் சிற்றப்பன் கடமையை முடித்தான்.

மண்டபத்தின் நடுவில் அமைக்கப்பட்டிருந்த அலங்கார ஊஞ்சலில் மிதுனாவை உட்கார வைத்துத் தாயும் தகப்பனுமாக ஆட்டினார்கள். யாழ்ப்பாணத்தில் ஊஞ்சல் ஆடியதற்குப் பிறகு, இப்போதுதான் மிதுனா ஊஞ்சலில் உட்கார்ந்திருக்கிறாள். அங்கே அப்போது ஒலித்த பாடலுக்கு அவளையறியாமலேயே அவளது கால் விரல்கள் அசைந்து தாளம் போட்டன.

விழாவில் பாடுவதற்கு ‘சுப்பர் சிங்கர்’ புகழ் ஆணும் பெண்ணுமாக இருவர் இந்தியாவிலிருந்து அழைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் இருவரும் பொருத்தமானதொரு பாடலை அப்போது பாடினார்கள்.

கொலுசுங்க சத்தமிட
கல் உடைய மண் உடைய
குதியாட்டம் போட்ட புள்ள
குமரி புள்ள ஆனாளே…

அவர்கள் அருமையாக இசைக்க, பாலப்பாவும் சளைத்தவரில்லையே… அவர் ஒரு கையால் ஊஞ்சலை ஆட்டியாவாறே அந்தப் பாடலுக்கு வாயசைத்துக்கொண்டே மற்றக் கையால் பலவித அபிநயங்களைச் செய்தார். இந்திரா தான் வெட்கப்பட்டுக்கொண்டே நடனத்திலிருந்து ஒதுங்க, வர்ணகலா டீச்சர் வாய்கொள்ளாச் சிரிப்புடன் பாலப்பாவுடன் சேர்ந்து நளினமாகச் சில நடன அசைவுகளைப் போட்டார்.

காலையில் மிதுனாவைப் படுக்கையிலிருந்து எழுப்பி, அவளது கைகளில் பாக்குகளும், ஈரோ நாணயங்களும் வைத்துச் சுருட்டப்பட்ட வெற்றிலைச் சுருளைக் கொடுத்துத் தலையில் பால் வார்ப்பதிலிருந்து மிதுனாவை விட்டு அசையாமல் கூடவேயிருந்தவர்கள் வர்ணகலா டீச்சரும், புகைப்படக்காரரும், வீடியோக்காரருமே. வர்ணகலா தன்னுடைய வீட்டு விஷேசம் போலவே எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டுக்கொண்டு ஓடியாடி வேலை செய்தார். நீலப்பட்டில் வெள்ளி நட்சத்திரங்கள் பொறிக்கப்பட்டிருந்த சேலைத் தலைப்பை இடுப்பில் வரிந்துகட்டிக்கொண்டு வர்ணகலா மண்டபத்தில் எந்த இடத்தில் நின்றாலும், அவர் எல்லோரது கவனத்தையும் ஈர்த்துக்கொண்டேயிருந்தார். மஞ்சள் நீராட்டு விழா நிறைவடையும் வரை வர்ணகலா சாப்பிடக் கூடயில்லை. பிற்பகலில் விழா நிறைவுற்று விருந்தினர்கள் எல்லோரும் கிளம்பிய பின்பாக, தனியாக உட்கார்ந்து நான்கு சோற்று உருண்டையை உருட்டி வாயில் திணித்துக்கொண்டிருந்த வர்ணகலாவைப் பார்த்தபோது, பாலப்பாவுக்கு கண்கள் கலங்கியதற்கு நன்றியுணர்ச்சி அடிப்படைக் காரணமாகயிருந்தாலும், கொஞ்சமாக அருந்தியிருந்த விஸ்கியும் ஒரு துணைக் காரணம் என்றே சொல்லலாம்.

அன்று மிதுனா தேவதை! அவளது சிறகுகள் வர்ணகலா!

4

மஞ்சள் நீராட்டு விழா சிறப்பாக நடந்து முடிந்தாலும், மிதுனாவின் தாய்மாமனும், இந்திராவின் தம்பியுமாகிய சுரேந்திரன் விழாவுக்கு வராதது ஒரு குறையாகவேயிருந்தது. விழாவுக்கு வரமுடியாதவாறு வேலைப்பளுக்களில் சிக்கியிருந்த சுரேந்திரன், கிறிஸ்துமஸ் விடுமுறையில் அவுஸ்ரேலியாவிலிருந்து குடும்பத்தோடு மருகளுக்கு முறை செய்ய வந்திருந்தான்.

சுரேந்திரனின் மனைவி நந்தினி பிரான்ஸ் குளிரைப் பார்த்து அரண்டு போய்விட்டாள். அன்றைக்கு காலநிலை மைனஸ் ஆறைத் தொட்டிருந்தது. மிதுனாவின் வீட்டைச் சுற்றி ஓரடி உயரத்திற்குப் பனி சொரிந்து கிடந்தது. வீட்டின் பெரிய வரவேற்பறையிலிருந்த கணப்பை விறகுகளைச் செருகி பாலப்பா எரியவிட்டார். மதிய உணவுக்குப் பின்னாக, எல்லோரும் உட்கார்ந்து மிகப் பெரிய தொலைக்காட்சித் திரையில் மஞ்சள் நீராட்டு விழாவின் வீடியோவைப் பார்க்க ஆரம்பித்தார்கள். மிதுனா இந்த வீடியோவைப் பத்தோ பன்னிரண்டாவதோ தடவையாகப் பார்க்கிறாள். அவளுக்கு இது ஒருபோதுமே சலிப்பை ஏற்படுத்தியதில்லை.

பாலப்பா ஹெலிகொப்டரிலிருந்து இறங்கும் காட்சி ஸ்லோமோஷனில் படம் பிடிக்கப்பட்டிருந்தது. அதைப் பார்க்கும் போதெல்லாம் பாலப்பாவே கொஞ்சம் நாணமுறுவார். சுரேந்திரன் பெரிதாகக் கெக்கடமிட்டுச் சிரித்து “அத்தார் அந்தமாதிரி க்ளாஸ்” என்றான். இப்படிச் சிரிப்பும் கனைப்புமாக அந்த வரவேற்பு அறை அமளிப்பட்டுக்கொண்டிருக்க, சுரேந்திரனின் மனைவி நந்தினி மட்டும் அமைதியாக வீடியோவைக் கவனித்துக்கொண்டிருந்துவிட்டுக் கேட்டாள்:

“நீலச் சாரியோட ஆரத்தி எடுக்கிற பொம்பிள ஆர் ?”

“அது மிதுனாவின்ர தமிழ் டீச்சர்… நல்ல குணமான பிள்ள. சாமத்திய வீட்டில அரைவாசி வேலை அதுதான் செய்தது” என்றார் இந்திரா.

“வர்ணகலாவே பேர்?” என்று கேட்டாள் நந்தினி.

“ஓமோம்… வர்ணகலா டீச்சரை உமக்குத் தெரியுமே நந்தினி?”

“தெரியாமலென்ன! இவள் என்ர ஊர்தான். முசலிக்குளம் கணவதி நளவன்ர மகள்…” என்று சொன்ன நந்தினி முஞ்சியைத் தூக்கிவைத்துக்கொண்டு பாலப்பாவைப் பார்த்து “என்ன அத்தார் நீங்கள்? வெளிநாட்டுக்கு வந்தா இதெல்லாம் பார்க்கேலாது தான்… ஆனால், அதுக்காக உள்வீட்டுக்கேயே அடுக்கிறது? அங்கபாரு எங்கிட பிள்ளைய அந்த நளத்தி ஆலாத்தி ஆலாத்தி எடுக்கிறாள்…” என்று சொன்ன நந்தினியின் கண்களில் நீர் முட்டிக்கொண்டு நின்றது.

பாலப்பாவும் இந்திராவும் ஏங்கிப் போய் அரைச் சவமாகிவிட்டார்கள். பாலப்பா மெதுவாக எழுந்து போய் ஓடிக்கொண்டிருந்த வீடியோவை நிறுத்தவிட்டு, கம்மிய குரலில் நந்தினியிடம் கேட்டார்:

“நீ சரியாத்தான் சொல்லுறியோ நந்தினி! அவளைப் பார்த்தால் அப்பிடித் தெரியேல்லையே…”

“இதென்ன அத்தார்… எங்கிட அடிமை குடிமையள எனக்குத் தெரியாதே? எங்கிட பின்வளவுப் பனையெல்லாம் கணவதி தானே இப்பவும் சீவிறவன்…போன வருச ஹொலிடேக்கு ஊருக்குப் போகக்கயும் அவன வளவுக்குள்ள கண்டனான்… மோள்காரி பிரான்ஸில இருக்கிறாள் எண்டும், தன்னை மரம் ஏறுறத நிப்பாட்டச் சொல்லியிருக்கிறாள் எண்டும் பெரிய நடப்பா என்னட்டச் சொன்னானே… மரம் ஏறுறதுகள நீங்கள் இப்ப மேடையில எல்லோ ஏத்தியிருக்கிறீயள். ஆர் என்னெண்டு விசாரிச்சு நடக்கிறதில்லேயே அத்தார்?”

பாலப்பா கொஞ்ச நேரம் பல்லை நெருமிக்கொண்டு, கையைக் கட்டியவாறே உட்கார்ந்திருந்தார். பிறகு அவக்கென எழுந்து போய் சி.டி. பிளேயரிலிருந்த குறுந்தகட்டை வெளியே வரச் செய்து, தனது பெருவிரலாலும் சுண்டுவிரலாலும் எலியின் வாலைப் பிடிப்பது போல குறுந்தகட்டின் ஓரத்தைப் பிடித்துக்கொண்டு கணப்பை நோக்கி நடந்து சென்று, முளாசி எரிந்துகொண்டிருந்த நெருப்பினுள் அதனைச் சுழற்றி வீசினார்.

நடப்பது எல்லாவற்றையும் பாதி புரிந்தும் பாதி புரியாமலும் பார்த்துக்கொண்டிருந்த மிதுனாவுக்கு குறுந்தகடு எரிக்கப்பட்டது பெரிய துக்கத்தை ஏற்படுத்தியது. மஞ்சள் நீராட்டு விழாவில் ஒரு தேவதையைப் போல இருந்த அவளையே நெருப்பில் தூக்கிப் போட்டது போலத்தான் அவள் உணர்ந்தாள். எதுவும் பேசாமல் எழுந்து சென்று, வெளியே பனி நடுவேயிருந்த மர இருக்கையில் உட்கார்ந்து கொண்டாள். சொரிந்துகொண்டிருந்த வெண்பனி அவளை மூடிக்கொண்டிருந்தது.

இதற்குப் பின்பு தமிழ்ச்சோலைப் பள்ளிக்குச் செல்லாமல் மிதுனாவைப் பாலப்பா தடுத்துவிட்டார். சில மாதங்களின் பின்பு, அவர்களது குடும்பம் இன்னொரு புறநகருக்குக் குடிபெயர்ந்தது. மிதுனாவும் மெல்ல மெல்ல வர்ணகலாவை மறந்துவிட்டாள். வர்ணகலாவும் மிதுனாவை மறந்திருப்பார்.

5

வர்ணகலா என்ற நாற்பது வயதுப் பெண்மணி முகம் முற்றாகச் சிதைத்துக் கொல்லப்பட்டதற்குச் சில வாரங்கள் கழித்து, மிதுனா பாரிஸ் புறநகரிலிருந்த பெற்றோரின் வீட்டுக்குச் சென்றாள்.

இரவுணவு மேசையில் அமர்ந்திருந்து பேசிக்கொண்டிருக்கும் போது வர்ணகலா டீச்சர் குறித்துப் பேச்சு வந்தது. “அண்டைக்கு போனில ஒரு நியூஸ் சொன்னனானெல்லோ… அது தமிழ்ச்சோலை டீச்சரே அப்பா?”

“தெரியேல்லையே பிள்ள. நாங்கள் இஞ்சால வீடு வாங்கி வந்தாப் பிறகு நான் அந்தப் பக்கம் போகவேயில்லை” எனச் சொல்லிவிட்டு, பாலப்பா சாப்பாட்டில் கவனம் செலுத்தினார்.

“நீ சாப்பிடு பிள்ள… ஆராராக்கு என்ன விதிக்கப்பட்டிருக்கோ அதுதானே நடக்கும்” என்று சொல்லிக்கொண்டே, தட்டில் இடியப்பங்களை வைத்து மேலாக இறால் சொதியை ஊற்றினார் இந்திரா.

நீண்ட நாட்களுக்குப் பின்பாகத் தமிழ்ச் சாப்பாடு சாப்பிட்டதில் மிதுனாவுக்குக் கண்களைக் கட்டிக்கொண்டு வந்தது. தந்தையையும் தாயையும் முத்தமிட்டுவிட்டுத் தனது அறைக்குச் சென்று படுக்கையில் சாய்ந்துகொண்டு, அலைபேசியின் தொடுதிரையை உருட்டத் தொடங்கினாள். கட்டிலுக்கு எதிரே சுவரில், மஞ்சள் நீராட்டு விழாவில் எடுக்கப்பட்டிருந்த மிதுனாவின் மார்பளவு ஒளிப்படம் மூன்றடிக்கு இரண்டடி அளவில் தொங்கிக்கொண்டிருந்தது. தற்செயலாக அந்தப் படத்தின் மீது மிதுனாவின் பார்வை படவும், அவள் கட்டிலிலிருந்து எழுந்து, அந்தப் படத்தை நெருங்கிச் சென்றாள். அப்படத்தில் தேவதை போன்று அலங்கரிக்கப்பட்டிருந்த மிதுனாவின் இடது தோளைச் சில விரல்கள் பற்றியிருந்தன. அந்த விரல்கள் வர்ணகலாவின் விரல்களாக இருக்குமோ என்று திடீரென அவளுக்குத் தோன்றவே, அவள் கடகடவென மாடிப்படிகளில் இறங்கிக் கீழே சென்றாள்.

“அம்மா… என்னைக் குழந்தைப் பிள்ளையில எடுத்த போட்டோ அல்பங்கள் எங்கயிருக்கு?”

“என்ன பிள்ள திடீரெண்டு அதைத் தேடுறாய்?”

“சின்னப்பிள்ளையில் எடுத்த ஒரு நல்ல போட்டோ தேவைப்படுது… யூனிவர்ஸிட்டி புத்தகமொண்டில போடுறதுக்கு”

“ஸ்டோர் ரூமுக்குள்ள ஒரு சிவப்பு சூட்கேஸ் இருக்கும் பார். அதுக்குள்ளதான் பழைய அல்பங்கள் கிடக்கு” என்றார் இந்திரா.

ஸ்டோர் ரூமுக்குள் சென்ற மிதுனா அங்கே தாறுமாறாகத் தூசி தும்பு படிந்துகிடந்த பலசரக்குகளிடையே அந்தச் சிவப்பு பெட்டியைக் கண்டுபிடித்து, அதை எடுத்துக்கொண்டு தன்னுடைய அறைக்குச் சென்று, படுக்கையில் வைத்துப் பெட்டியைத் திறந்தாள்.

அதற்குள் பாலப்பா – இந்திரா கல்யாண அல்பம் முதற்கொண்டு பத்துப் பன்னிரெண்டு அல்பங்கள் கிடந்தன. அவற்றுக்கு நடுவேயிருந்த தன்னுடைய மஞ்சள் நீராட்டு விழா அல்பத்தை மிதுனா கண்டுபிடித்து, கொஞ்சம் பதற்றத்துடனேயே பக்கங்களைப் புரட்டினாள்.

பெரியளவிலான அந்த அல்பத்தில் பக்கத்திற்கு ஆறு ஒளிப்படங்கள் ஒட்டப்பட்டிருந்தன. எல்லாப் படங்களிலும் அவள் இருந்தாள். சில படங்களில் அவளோடு அவளது பெற்றோர் இருந்தனர். வேறு பலரும் இருந்தனர். ஆனால், அந்தப் படங்களில் வர்ணகலா டீச்சர் இல்லை.

அவள் சோர்வுடன் அந்தப் பெட்டியைக் கிளறியபோது, உள்ளேயொரு தடித்த கடிதவுறையைக் கண்டாள். அதைத் திறந்தபோது, அதற்குள்ளிருந்த பல ஒளிப்படங்களுக்குள், மஞ்சள் நீராட்டு விழாவில் மிதுனாவுக்கு ஆரத்தி சுற்றும்போது எடுத்த படம் ஒன்றுமிருந்தது. மிதுனாவுக்கு வலது புறத்தில் ஒளிப்பான சருமத்தோடு, நீலப்பட்டில் வெள்ளி நட்சத்திரங்கள் மின்ன வர்ணகலா டீச்சர் ஆரத்தி சுற்றிக்கொண்டிருந்தார். அவரது முகமிருந்த பகுதி மட்டும் அந்தப் படத்தில் திருத்தமாக வெட்டியெடுக்கப்பட்டு, கழுத்துக்கு மேலே மொட்டையாக இருந்தது.

இதற்கு மேலே மிதுனா பாலப்பா சொல்லிய கதையின் போக்கையும் முடிவையும் தேர்ந்த வாசகரான நீங்கள் நிச்சயமாகவே ஊகித்திருப்பீர்கள் என்பதால், நான் இந்த இடத்தில் நிறுத்திக்கொள்கிறேன்.


*

9 comments for “வர்ணகலா

  1. manguni
    January 3, 2023 at 6:59 pm

    ஷோபா சக்தி பற்றி நிறைய நிறைய கேட்டிருக்கிறேன்.. ஆனால் எதோ காரணத்தால் இப்போதுதான் அவரது கதையை முதன் முதல் இப்போது வாசிக்கிறேன்..

    ஒவ்வொரு துளியிலும் அங்கதம் சீட்டியடிக்கிறது. புலம்பெயர் வாழ்க்கை அப்படியே கண் முன் நிறுத்தி விட்டார்.

    ஐரோப்பா போனாலும் தமிழன்

    பாலப்பாக்கள் எங்கும் இருப்பார்கள். அவரே வர்ணகலாவை கொன்றிருக்க வேண்டியதில்லை. அங்கே யாரோ ஒரு பாலப்பா அவரை கொன்றிருக்கலாம்.. பாலப்பாக்கள் எங்கு இருந்தாலும் (ஐரோப்பாவோ இந்தியாவோ) தனது ‘கலாசாரத்தை’ (சாதி பார்த்தல்) விட்டு கொடுக்க போவதில்லை . 🙂 🙂

    இது ஒரு தட்டையான கதையல்ல என்று புரிகிறது. ஆனால் மேலதிகம் எப்படி அதை புரிந்து கொள்வது?

  2. January 4, 2023 at 12:53 pm

    மேலை நாட்டுக்குப் பிழைக்கப்போனாலும் சாதியையும் பாஸ்போர்ட் போல கொண்டுபோவது சாதி சாகா வரம் பெற்றுவிட்ட ஒன்றாக ஆகிவிட்டிருக்கிறது..

  3. sriram
    January 5, 2023 at 10:04 pm

    பார்ப்பனீயத்தின் கொடுங்கரமே சாதீயம்… கொடுமைகள்

  4. Ramasubramanian
    January 5, 2023 at 10:09 pm

    சாதி ஒரு விஷம் இரத்தத்தில் ஊறி உள்ளது. அடுத்த தலைமுறைக்கு கடத்த முயற்சி செய்யாமல் இருக்க வேண்டும்.

  5. Kulashekar T
    January 9, 2023 at 5:02 pm

    சாதீய கொடூரத்தை கலாப்பூர்வமாக இந்த படைப்பு உணர்த்துகிறது. நண்பருக்கு வந்தனங்கள் ??

  6. வெற்றிராஜா
    January 16, 2023 at 7:32 am

    வர்ணகலா இரண்டு முறை சாகடிக்க பட்டு விட்டாள். பாரிஸில் ஒரு முறை (conceptually, logically). இலங்கையில் ஒரு முறை (physically). கதைக்கு அருமையான தலைப்பும் கூட – வர்ணங்களின் கலை.

    ஹெலிகாப்டர், யானை, ஒளி ஓவியர்களின் அட்டூழியங்கள், கொண்டை தலை பையன் பாட்டுகளை கொத்து ரொட்டி போடுவது – அனைத்தும் தரமான சம்பவங்கள் ?

    இனி வரும் தலைமுறைகளில் அனைத்தும் மாறும் என நம்புவோமாக.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...