பெருங்கை

கேசவன் எப்போது வேண்டுமானாலும் ராத்திரியைக் கொண்டுவரக்கூடியவன். சிறிய அறைக்கு வடக்குப்பக்கமாகத் திறக்கும் ஒரே ஒரு ஜன்னல் தான். அதை மூடவும் முடியாது. இரு ஜன்னல் கதவுகளும் எப்போதோ விழுந்துவிட்டன. அதற்கு அப்பால் கேசவனின் கரிய விலாப்பக்கம் வந்து முழுமையாக மூடிவிட்டதென்றால் படுத்திருக்கும் இடத்திலிருந்து அவன் பார்க்கும்போது வெளியே கூரிருட்டு நிறைந்திருக்கும்.

பெரும்பாலும் அவனுக்குக் கேசவனுடன் இரவில்தான் வேலை. திருவிழாக்கள், சில சமயம் திருமணங்கள். இப்போதெல்லாம் அரசியல் கூட்டங்களுக்குக் கூட முகப்பில் யானை செல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். கட்சிக்கொடி ஏந்திக்கொண்டு அதன்மேல் ஒருவர் அமர்ந்திருப்பார். இருபுறமும் மேளக்காரர்கள் தாளத்திற்கு ஏற்ப துள்ளி ஆடிச்செல்ல பின்னால் கட்சிநிறச் சீருடையில் இளைஞர்கள் அணிவகுப்பார்கள். விடியற்காலையில் வேலை முடிந்து கேசவனை அவனிடம் ஒப்படைத்துவிட்டு ஆசான் பஸ்ஸில் கிளம்பிவிடுவார். அவன் கேசவனைக் கூட்டிக்கொண்டு ஊர் வந்து சேர மதியமாகிவிடும். கேசவனுக்குக் கைதை ஓலையும் தென்னை ஓலையும் வெட்டி தீனி போட்டுத் தளைத்துவிட்டுத் தன் அறைக்குள் வந்து பழைய கயிற்றுக் கட்டிலில் மெத்தையை இழுத்து விரித்துப்போட்டுப் படுத்துக்கொண்டால் அதுவரைக்கும் காதில் செண்டை மேளம் முழங்கிக்கொண்டிருந்தது என்பது தெரியவரும்.

யானையின் உடலின் இருளசைவு கண்களை மூடினாலும் உள்ளே நெளியும். படுத்திருக்கும் கட்டில் படகிலிருப்பது போல அலைந்தாடும். சில தருணங்களில் ஆழத்தில் விழுந்துகொண்டே இருப்பது போல் தோன்றும். அவன் யானையின் கருந்தோல் விரிசல்களைப் பார்த்துக்கொண்டிருப்பான். இருட்டு மெல்ல தடித்து, உலர்ந்த பரப்பாகி, விரிசலிட்டு, வெடிப்புகள் உருவாகி, அவற்றுக்குள்ளிருந்து மெல்லிய நீரூற்றுகள் கிளம்பும், அவன் யானையின் பளிச்சிடும் கருங்குண்டுக் கண்களைப் பார்த்துக்கொண்டிருப்பான். அவற்றில் பார்வை இருக்காது. மின்னும் கண்கள், ஆனால் பார்க்காதவை.

எப்போதும் யானையை நினைத்துக்கொண்டுதான் தூங்கினான். யானையை நினைத்துக்கொண்டுதான் விழிப்பும் வந்தது. விழித்து ஒருக்களித்து புரண்டு பார்க்கையில் வெளியே அப்போதும் கூரிருள் செறிந்து நின்றிருக்கும். கருக்குப்பொழுது என்று நினைத்துப் புரண்டு படுத்தால் அவனைப் பிரம்பால் ஓங்கி அறைந்து ஆசான் எழுப்புவார். “தெம்மாடி நாயே, வாங்கற சம்பளத்துக்கு உருட்டி விழுங்குற இல்ல? ஆன அங்க நின்னு கத்திட்டிருக்கு… இங்க சுருண்டு கிடந்து தூங்கறியா…?” என்று கத்துவார்.

போர்வையை உதறி பாய்ந்தெழுந்து நின்று அவிழ்ந்து சரியும் லுங்கியை இழுத்துக் கட்டியபடி ஜன்னலுக்கு வெளியே பார்த்தால் வெயில் வெள்ளி போல உருகி நின்றிருக்கும். ஒருமுறை அல்ல பலமுறை யானை அவனுக்கு இரவாக ஆகியிருக்கிறது. பிறகு இரவில் ஜன்னல் வழியாக இருட்டைப் பார்க்கையிலும் அங்கு கேசவன் நின்றிருப்பதாக நினைத்துக்கொள்வான். மிகப்பிரம்மாண்டமான ஒரு யானை. வானளாவியது அவன் காலடியில் மலைகளெல்லாம் சிறுசிறு கூழாங்கற்கள் போல அதன் உடல் வரிகளினூடாக ஆறுகள் ஒழுகிச் செல்கின்றன. வலிய கேசவன். ஆகாச கேசவன்.

யானைக்குக் காலையில் தீனி போட்டு, மதியம் அவிழ்த்துக்கொண்டு சென்று ஆற்றில் படுக்க வைத்து வெள்ளாரங்கல்லால் தேய்த்துக் கழுவி, திரும்பக் கொண்டு வந்து கட்டிவிட்டால் பெரும்பாலான நாட்களில் மேற்கொண்டு செய்வதற்கு ஒன்றுமிருப்பதில்லை. யானைக்குச் சற்று அப்பால், பலாமரத்தடியின் வேர்க்குவைக்குள் மரத்தூள் கொண்டு போட்டு அதன் மேல் ஒரு சாக்கை விரித்து வைத்திருந்தான். சுகமாக உடலைப்பொருத்தி காலை நீட்டி அங்கே அமர்ந்துகொள்ள முடியும். பலா மரத்தின் பொந்துக்குள் பீடியும் தீப்பெட்டியும் வைத்திருப்பான். ஆசான் அங்கு இல்லையென்றால் பீடியைப் பற்ற வைத்து ஆழ்ந்து இழுத்துப் புகையைச் சிறுசிறு குமிழிகளாக விட்டபடி வானத்தைப் பார்த்துக்கொண்டிருப்பான். அவன் வாயிலிருந்து கிளம்பும் புகைதான் வானம் முழுக்க மேகமாக நிறைந்திருக்கிறது என்று நினைத்துக்கொள்ள அவனுக்குப் பிடிக்கும்.

அவனுடைய பீடி புகை சந்திரிக்குப் பிடிக்கும். அவள் அவனைப் பாராட்டி ஒன்றும் சொன்னதில்லை என்றாலும் அந்தப் புகையைப் பற்றி ஏதாவது ஒன்று அவள் சொல்லாமல் இருப்பதில்லை. “என்ன மேகம் கெளம்பியாச்சுண்ணு தோணுது? இன்னிக்கு மழை உண்டு” என்று சொல்லிக்கொண்டு குடத்தில் தண்ணீருடன் செல்வாள். அவன் அவளிடம் எதுவுமே பேசுவதில்லை. அவள் பேசும்போது நீலக்கல் மூக்குத்தியுடன் வட்டமுகம் சிரிப்பதைத்தான் பார்த்துக் கொண்டிருப்பான். அவள் கண்கள் சிறியவை. சிரிக்கும்போது அவை இரு கோடுகளாகிவிடும். பற்களும் சிறியவை. ஆகவே ஈறுகள் வெளியே தெரியும் இரு கன்னங்களிலும் குழி உண்டு. காதுகளில் கல்லில்லாத இரண்டு தங்க வளையங்கள். கழுத்தில் பாசி மணி மாலைதான்.

அவன் ஒருமுறை ஆசானிடம் ”நம்ம சந்திரிக்கு ஒரு தங்கச்செயின் வாங்கிப்போடப்படாதா ஆசானே?” என்று கேட்டான். அவர் ஒரு உறுமலுடன் யானையின் சங்கிலியை அவிழ்த்து ஓசையுடன் அப்பால் போட்டார். கைகளைத் தட்டிக்கொண்டு “வெச்சிக்கிட்டா இல்லேன்னு சொல்லுதோம்? இந்த ஆனைய பாத்துக்கிடுத சோலியில கஞ்சி குடிச்சு கிடக்குததே பெரிய பாடு” என்றார்.

ஒவ்வொரு நாளைக்கும் ஐநூறு ரூபாய்க்குக் குறையாமல் சாராயம் குடிப்பவர் ’ஆறுமாசம் சாராயம் குடிக்காம இருந்தா அட்டிகை செஞ்சு போட்டுரலாமே’ என்று அவன் நினைத்தான். அவன் ஒன்றும் சொல்லாததைப் பார்த்து அவர் அவனிடம் “என்னலே முழிக்க? சங்கிலியைத் தூக்கி அந்தால போடு. சவிட்டித்தாத்திருச்சுன்னா மண்ணிலேருந்து எளக்கி எடுக்கணும்” என்றார்.

அவன் சங்கிலியை இழுத்துச் சுருட்டி தென்னை மரத்தடியில் போட்டான். முன்பொரு முறை மழைக்காலத்தில் சித்தோடு ஆற்றில் உருண்டு வந்த மலைப்பாம்பொன்றைக் கரையில் இழுத்துப் போட்டிருந்தார்கள். அதைப்போன்றிருந்தது அச்சங்கிலி. மலைப்பாம்பின் தலை எங்கிருந்தது என்று அவன் அருகே சென்று குனிந்து குனிந்து பார்த்தான். அதன் பிறகு தலையைக் கண்டுபிடித்தபோது அது மிகச் சிறியதாக இருப்பதாகத் தோன்றியது. பின்னர் ஒருமுறை சித்தோடு ஆற்றில் சந்திரி குளித்துக்கொண்டிருக்கும்போது அவன் யானைக்குக் கைதை ஓலை வெட்டுவதற்காக மேலே ஏறி திரும்பி அவளைப் பார்த்தான். அவள் கால்களும் மலைப்பாம்பு போலிருந்தன. பருத்த தொடைகளும் கெண்டைக்கால் தசைகளுக்கும் பொருத்தமே இல்லாமல் மிகச்சிறிய பாதங்கள்.

அவன் எப்போதெல்லாம் புகை பிடிக்கிறானோ அப்போதெல்லாம் சந்திரி அவ்வழியாகப் போகிறாளோ என்று ஒரு சந்தேகம். புகையின் மணம் தான் அவளை இழுக்கிறதா? அவன் அதைக்கணக்குப்போட்டு பலமுறை சோதித்துப் பார்த்தான். ஒருமுறை கூட சந்திரி அவன் புகைபிடிக்கும்போது வராமல் இருந்ததில்லை. பிறகு தோன்றியது, அவன் புகைபிடித்தால் அங்கே ஆசான் இருக்கமாட்டாரென்று அவளுக்குத் தோன்றுகிறதா?

ஆசான் சுருட்டு தான் பிடிப்பார். ஆசானுடைய சுருட்டு மணம் அவளுக்குப் பிடிப்பதில்லை. “கருவாடு சுடுதமாதிரி ஒரு தீஞ்ச நாத்தம். அதைத் தூக்கிப்போட்டுட்டு நல்ல பீடி பிடிக்கப்படாதா?” என்று அவள் கேட்பதைக் கேட்டிருக்கிறான். “நீ போடி! பீடி… அதெல்லாம் சின்னப்பயலுவளுக்கு உள்ளதாக்கும். சுருட்டுதான் ஆம்பிளகளுக்கு உள்ளது” என்று ஆசான் சொன்னார். பிறகு கனைத்துக் காறித்துப்பியபின் “உனக்க அம்ம இந்தச் சுருட்டுக்கு மணத்துக்கு அடிமையாக்கும் தெரியுமாடி.”

“ஆமாம், அவளுக்குக் கிறுக்கு” என்று சொன்னபடி ஆசானுக்காகக் கொண்டு வந்த டீயின் மிச்சத்தை இன்னொரு டம்ளரில் விட்டு அவனுக்குக் கொடுத்தாள்.

அவன் அதை வாங்கிக்கொண்டபோது சந்திரி முகத்தைப்பார்த்தான். ஆசான் இருக்கும்போது சந்திரி அவனை அடையாளம் காண்பது போலும் இல்லை. அத்தனை அந்நியமாக அவள் கண்கள் இருக்கும் என்று அவனால் எண்ணியும் பார்க்க முடியவில்லை. அதெப்படி தெரிந்த ஒருவரின் கண்களைச் சந்திக்கும்போது முற்றிலும் தெரியாததுபோல கண்களை வைத்துக்கொள்ள முடியும்? முகம் மாறும் கண்கள் மாறுமா என்ன? ஒருவேளை பெண்களால் முடியுமோ என்னமோ…

சந்திரி பீடிப்புகை எழுந்தால் சற்று நேரத்தில் ஏதாவது வேலையாக அவ்வழியாகச் செல்வாள். அவளுக்கு இரண்டு எருமைகள் இருந்தன. இரண்டுக்கும் குடிப்பதற்கு வைப்பதற்கே பத்துப்பதினைந்து குடம் தண்ணீர் தேவைப்படும். அக்கம் பக்கத்து வீடுகளில் போய் கழுநீர் எடுத்து வருவாள். புல் பறித்துக்கொண்டு வருவாள். எங்காவது யாராவது பலாப்பழம் தின்று மட்டை போட்டால் அவற்றை எல்லாம் பொறுக்கிக்கொண்டு வருவாள். எது கொண்டுவந்தாலும் எருமை தின்னும். அவள் எருமைக்காகக் கண்ணால் மேய்கிறாள் என்று நினைத்தான்.

எப்போதும் வீட்டுக்கும் வெளியிலுமாக அவள் சென்று கொண்டே இருந்தாள். அவள் என்ன செய்கிறாள் என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும். எங்கேயுமே பார்க்க வேண்டியதில்லை. அந்தப் பலாமரத்தின் குவையில் படுத்தபடி கண்களை மூடிக்கொண்டாலே அப்போது அவள் எங்கிருக்கிறாள், என்ன செய்கிறாள் என்பதை அவனால் பார்க்க முடியும். சமைத்துக்கொண்டிருப்பாள். பருத்திக்குருவும் புளியங்கொட்டையும் ஊறவைத்து அரைத்துக்கொண்டிருப்பாள். பால் கறந்துகொண்டிருப்பாள். மத்துப் போட்டு தயிர் கடைந்துகொண்டிருப்பாள்.

காலையிலும் மாலையிலும் கறந்து அலுமினிய தூக்குகளில் நிரப்பி வைக்கும் பாலை எடுத்துக்கொண்டு போக முத்தப்பன் வருவான். முத்தப்பனுக்குப் பால் சொசைட்டியில் வேலை. எருமைக்கன்று மாதிரி பெரிய பைக் வைத்திருந்தான். அதன் இருபுறமும் பெரிய அலுமினிய தூக்குகள். சந்திரி வைத்திருக்கும் தூக்குப் போல பத்து மடங்கு பெரியவை. பாலை அளந்து ஊற்றி சிவப்புக் கார்டில் அதைக்குறித்து அவள் கையில் கொடுத்துவிட்டு ஒரு சில வார்த்தை அவளிடம் பேசிவிட்டு செல்வான்.

அவன் பைக்கை அணைப்பதில்லை. ஆகவே அவர்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பது அவனுக்குக் கேட்காது. ஆனால் அவன் முகம் மலர்ந்திருப்பதை, அவன் கண்கள் சந்திரியின் உடல் முழுக்க அலைவதை இங்கிருந்தே பார்க்க முடியும். சந்திரியும் தலையாட்டி உடலை நெளித்துத்தான் அவனிடம் பேசிக்கொண்டிருப்பாள். பாலை ஊற்றியபின் தன் பின்னலை எடுத்து முன்னால் போட்டுக்கொள்வாள். அதன் நுனியிலுள்ள ரப்பர் பட்டையை அவிழ்த்துப் போட்டபடி அவனிடம் சிரித்துப் பேசுவாள். அவன் போனபிறகு கூந்தலைத் தூக்கிப்பின்னாலிட்டபடி திரும்பி காலியான தூக்குகளுடன் வீட்டுக்குள் செல்வாள்.

ஒருமுறை அவன் மிக அருகே இருந்தான். சந்திரி முத்தப்பனிடம் பேசி சிரித்த ஒலி கண்ணிலும் முகத்திலும் எஞ்சியிருக்கத் திரும்பியபோது அவன் அவளைப் பார்த்தான். அவன் மனம் படபடத்தது. ஏதாவது சொல்லிவிடுவானோ என்று பயந்து இருகைகளையும் விரலைச் சுருட்டி இறுக்கிப்பற்றிக்கொண்டான். அவள் முகத்தில் எந்த மாறுபாடும் வரவில்லை. இயல்பாக அவனிடம் “அச்சன் அங்க இல்லியா?” என்றாள். “இருக்காரு” என்றான். “மீனு வாங்கிட்டு வரச்சொல்லு” என்றபடி திரும்பி அவள் வீட்டுக்குள் சென்றுவிட்டாள்.

அவன் திரும்பி ஆசானை நோக்கி நடக்கும்போது உடல் மிகத்தளர்ந்திருந்தது. கைகள் கால்கள் எல்லாமே எடைமிகுந்து துவண்டன. ஆசான் அருகே போய் நின்றபோது அவனுக்குப்பேச்சு வரவில்லை.

“என்னலே?” என்று அவர் கேட்டார். அவன் “சந்திரி…” என்றான். “என்ன அவளுக்கு…” “மீனு வாங்கிட்டு வரச்சொன்னா…” ஆசான் “மீனு… அவளுக்க மத்தவன்லா காசு வச்சிருக்கான்?” என்று சொல்லி காறித்துப்பிய பிறகு “மீனு விக்கற விலைக்கு வாங்கித்தின்னுதான் கட்டுபடியாகுது” என்றார்.

அவர் சாராயக் கடையில் பொறித்த மீனை திரும்ப திரும்ப வாங்கித் தின்பதைப் பலமுறை அவன் வெளியே நின்று பார்த்ததுண்டு. வீட்டிலும் காலையிலும் மத்தியானமும் மீனில்லாமல் சாப்பிடமாட்டார். காலையில் மயக்கிய மீன்மீது முந்தைய நாள் மீன்குழம்பை விடவேண்டும். மதியம் அதே மீன்குழம்பை மறுபடியும் சூடு செய்து சோற்றில் விட்டுச் சாப்பிடுவார். இரவிற்கு எத்தனை தாமதமாக வந்தாலும் மீண்டும் சுடுசோறும் புதிய மீன்கறியும். ஆசான் எப்போதாவது மீன்கறியில்லாமல் சாப்பிட்டிருக்கிறாரா என்று எண்ணிப்பார்த்தான். சந்திரியின் கல்யாணத்தில் சாப்பிடுவாராக இருக்கலாம். அவர் இயல்புக்குக் கல்யாணத்திலேயே மீன்கறி வைத்துச் சாப்பிட்டால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஆசான் அவனிடம் “அவளுக்கு அஞ்சு பவுன் தேறும் கேட்டியாடே…?” என்றார். அவன் எப்போதோ கேட்டதை நினைவில் வைத்துக்கொண்டு தொடர்ச்சியாகப் பேசுகிறார். அவருடைய இயல்பு அது. அவர் அவன் எதைச் சொன்னதன் தொடர்ச்சியாகப் பேசுகிறார் என்பதை உடனடியாகப் புரிந்துகொண்டு அவன் மேற்கொண்டு பேச வேண்டும். இல்லையேல் பிரம்பை ஓங்கிவிடுவார்.

அவர்களுக்கு நடுவே கேசவன் நடந்துகொண்டிருந்தது. அதன் தும்பிக்கை தரையில் துழாவி துழாவி சிறிய வெண்ணிற கற்களை மட்டும் பொறுக்கி சேர்த்தது. பிறகு அக்கற்களை வாய்க்குள் போட்டு அதக்கிக் கொண்டது. ஆசான் மடியிலிருந்து அணைத்து வைத்திருந்த சுருட்டை எடுத்து மீண்டும் பற்றவைத்துக்கொண்டார்.

சுருட்டு எளிதில் பற்றாது. வாயை வைத்து நன்றாக உறிஞ்சிக்கொண்டே இருக்க வேண்டும். மெதுவாக அது கங்கு கனிந்து புகையத் தொடங்கியதும் ஆழ இழுத்து மூக்கு வாய் வழியாக விட்டு இருமி காறித்துப்பியபின் “அவளுக்கு அம்மை கொண்டுவந்தது பதினஞ்சு பவுன். அது பலநிலைகளிலா வித்துப்போச்சு. அவளுக்கு அம்மைக்கு தீனம் பார்க்குறதுக்குக் கொஞ்சம் போச்சு” என்றார். காறித்துப்பியபின் “இந்த காலத்திலே அஞ்சு பவுனுக்கெல்லாம் யாரு வாரான்? பின்ன, குட்டி பாக்க நல்லா இருக்கது கொண்டு எவனாம் வாரதா இருந்தா யோகம்னு வெச்சுக்கணும்.” என்றர்

அவன் ஒன்றும் சொல்லவில்லை. அவர் மீண்டும் புகையை இழுத்துத் துப்பியபடி “வருவானுவ, இவள மாதிரி ஐஸ்வரியம் உள்ள குட்டி இந்த ஏரியாவில என்ன இருக்கு சொல்லு” என்றார்.

“ஆமாம்” என்று அவன் சொன்னான். ”குட்டி சுந்தரியில்லா?” என்றார் ஆசான். “அதுகொண்டு இங்க ஊருல பல பேருக்கு கண்ணுல கடியாக்கும்” என்றபின் சுருட்டு நுனியை மென்று மேலண்ணத்தில் நாவைத்தள்ளி அதக்கினார்.

யானையின் வாயில் இருந்து எச்சில் கோழையுடன் கற்கள் உதிர்ந்தன. ஆசான் துரட்டியையும் குத்துக்கொம்பையும் தலைக்கு மேல் தூக்கி சோம்பல் முறித்தபடி “பலபேரு கேக்கதுண்டு, நம்ம சுப்ரமணியனுக்கு மவனுக்காக கேட்டானுவ. பய என்ன செய்யான்னு கேட்டேன். அவனுக்கு சோலி ஒண்ணும் இல்ல. கூலி வேலதான். கூலிவேலக்காரனுக்கு பொண்ணு குடுக்கமுடியாது. அதுக்கா இப்பிடி கிளி மாதிரி வளத்து வெச்சிருக்கோம்? சர்க்காரு சம்பளம் இருக்கணும். அஞ்சு பைசான்னா அஞ்சு பைசா. சர்க்காருக்கு காசு அதுக்கொரு வேல்யுவாக்கும். என்ன சொல்லுத?” என்றார்.

“ஆமா” என்று அவன் சொன்னான். ஆசான் “நீ இப்ப நம்ம சோலிய எடுத்துப்பாரு… இன்னிக்கு சோறு நாளைக்கு பாலுண்ணாக்கும் நம்ம சீவிதம். இந்நா வருதே இருட்டு, இதுக்கு கொணம் எப்ப மாறும்னு யாருக்குத் தெரியும்? லே, நம்ம கொணம் மோசமாக்கும். நாம தப்பு செய்யாம அவன் நம்மள ஒண்ணும் செய்யப்போறதில்ல. ஆனா நாம தப்பு செய்யாம இருக்க முடியாதில்லா? மனுசனாக்குமே… ஆனை தப்பு செய்யாது. அது அரசனாக்கும். மனுசனிலே ஆனையும் உண்டு. எலியும் உண்டு…”

ஆசான் சொன்னார் “எனக்க அப்பா ஆன அடிச்சாக்கும் செத்தது. எங்க அம்மா நீ பிச்சையெடுத்தாலும் செரி மக்கா, ஆனைவேலைக்கு மட்டும் போவதலேன்னாக்கும் காலப்பிடிச்சா. எனக்கு பிச்சை எடுக்க மனசில்ல. கூலிவேலைக்கு போறதுக்கும் மனசில்ல. நமக்கு மேல இன்னொருத்தன் நின்னு நமக்குச் சொல்லுதது நமக்கு பிடிக்காது கேட்டியா? அப்படியாக்கும் இங்க வந்தது. இப்ப நாம ஆனைக்க சேவுகனாக்கும். நமக்கு மேல இருக்கது மனுசன் இல்ல, ஆனையாக்கும். ஆனை யாரு? திருவாங்கூர் ராஜாவாக்கும் ஆனை. திருவாங்கூர் ராஜாவ விட நமக்கு பெரிய ஆளு ஆனையாக்கும். காமராஜும் எம்.ஜி.ஆரும் அதுக்கு கீழ தெரியுமாலே…”

“ஆமா” என்றான். அவர் “அதனால இந்தச் சோலிக்கு வந்தாச்சு. ஆனா எப்ப இருந்தாலும் இதுக்கு மதம் எளகும். பத்தில ஒரு பாகன் ஆனைக்கால் சவிட்டு பட்டுதான் சாவான் பாத்துக்கோ. நான் அதுக்கு தயார்தான். இந்தப் புள்ளய எவன் கையில எங்கிலும் புடிச்சு குடுத்திட்டேண்ணா பிறகு நமக்கு இங்க கணக்கொண்ணும் இல்ல கேட்டியா? போற வழிதான்.” என்றார்

அவனுக்கு அந்தப் பேச்சே பிடிக்கவில்லை. ஆசான் பேச்சு ருசி கண்டுவிட்டார். “எனக்கு பய இல்ல. இருந்தா அவன படிக்க வெச்சு நல்ல சோலிக்கு விட்டிருப்பேன். சர்க்காரிலேர்ந்து ஒரு பைசாவாவது நீ சம்பளம் வாங்கணும்னு சொல்லிருப்பேன். நான் செத்து பிச்சையெடுத்திருந்தாலும் ஆனைச்சோலிக்கு அவன விட்டிருக்கமாட்டேன். ஆனைச்சோறு கொலைச்சோறு… ஏல, ஆன சோலி செய்யுதவனுக்கு அடுத்தநாள் வாழ்க்கை அந்தநாள் கணக்காக்கும் பாத்துக்கோ…”

அவன் “ஆமாம்”என்றான். “பாப்போம், பல பேரு வாரானுக. இந்தப்பாலு கொண்டு போற பயலப்பத்தி நீ என்ன நினைக்க…?” என்றார் ஆசாம். குரல் கம்ம “நல்லவனாக்கும்” என்று அவன் சொன்னான். “அவனப் பத்தி பல பேச்சுகளும் உண்டு. போற எடத்துல எல்லாம் பொண்ணுகளுட்ட அவன் எறங்கி சிரிக்கான்னெல்லாம் பேச்சுக உண்டு. அது இப்ப சின்ன பயக்க எல்லாம் அப்படிதானே…” என்றார் ஆசான் “அவனாட்டு வந்து கேட்டான்னா குடுத்துப்போடலாம். என்னலே…?”

அவன் ஒன்றும் சொல்லவில்லை. அவர் உரக்க “ஏம்லெ?” என்றார். அவன் தலையசைத்தான். அதற்குள் ஆற்றுச்சரிவில் இறங்க ஆரம்பித்திருந்தார்கள். “ஆன எடத்தே” என்று ஆசான் கேசவனின் காதைப்பற்றியபடி சொன்னார். கேசவன் வயிற்றுக்குள் மெல்ல உறுமியபின் மிக மெல்ல கால்களை வைத்து ஆற்றை நோக்கி இறங்கிச் சென்றது.

மறுநாள் சந்திரியைப் பார்த்ததும் ஏன் தனக்குள் அப்படியொரு பதற்றம் கிளம்புகிறது என்று அவனுக்குப் புரியவில்லை. உடம்பெல்லாம் காய்ச்சல் வந்து சுடுவது போல் இருந்தது. வாயிலிருந்த நீரெல்லாம் வற்றிப்போய், கண்கள் கலங்கி அவன் தலைகுனிந்தான். அவள் அவனுடைய பீடி மணத்தைப் பார்த்து வந்திருந்தாள். “என்ன பொகையில தொடங்கி சஞ்சாரம் தொடங்கியாச்சா?” என்று கேட்டபடி சென்றாள்.

அவன் தொண்டையைக் கனைத்து “சந்திரி” என்றான். “என்ன?” என்று அவள் இடுப்பில் குடத்துடன் நின்று திரும்பிப்பார்த்தாள். அவளுடைய பின்பக்கத்தின் குடவளைவு, இடையில் விழுந்த சிறு மடிப்பு. தோள்களின் சரிவு. அவன் வெறுமே பார்த்துக்கொண்டிருந்தான். “என்ன?” என்றாள். “ஒண்ணுமில்ல” என்றான். “அவள் பைசா வல்லதும் வேணுமா?” என்றாள். “இல்ல இல்ல” என்று அவன் சொன்னான். “சரி” என்று அவள் திரும்பிப்போனாள்.

எதற்கு அவளை அழைத்தான் என்று அவனுக்குப் புரியவில்லை. முத்தனைப்பற்றி கேட்கவா? என்ன கேட்க? உன் அப்பா முத்தனுடைய ஆலோசனையுடன் வந்தால் ஒத்துக்கொள்வாயா என்றா? கண்டிப்பாக ஆமாம் என்று தான் சொல்வாள். இந்தப் பகுதியில் முத்தன் ஒரு அறியப்படக்கூடிய ஆள். சொந்தமாகக் காரைவீடு இருக்கிறது. பைக் வைத்திருக்கிறான். சொசைட்டியில் வேலை இருக்கிறது. ஐந்து பவுன் நகை வைத்திருக்கும் சந்திரிக்கு அவனைப்போல ஒருவன் கிடைப்பது கஷ்டம்.

மீண்டும் மீண்டும் அதையே யோசித்துக்கொண்டிருந்தான். அதை யோசிக்ககூடாது என்று பலமுறை தவிர்த்தாலும் வேறெங்கும் சிந்தனை போகவில்லை. அதை சிந்திக்காமலிருப்பதற்காக யானையை அவிழ்த்துக்கொண்டு குளிப்பாட்ட கொண்டு சென்றான். நீரில் அதை திருப்பித் திருப்பி புரட்டிப்போட்டு தேய்த்தான். தண்ணீரில் எத்தனை நேரம் இருந்தாலும் கேசவனுக்குச் சலிப்பதில்லை. தண்ணீருக்குள்ளிருந்து கூழாங்கற்களை வாய்க்குள் போட்டுக்கொண்டு வெறுமே மென்று கொண்டிருக்கும்.

அவன் யானையுடன் வரும்போது மாலை ஆகியிருந்தது. ஆசான் திண்ணையில் அமர்ந்திருந்தார். அவருக்கு முன்னால் ஒரு குப்பி ரம்முடன் முத்தன் அமர்ந்திருந்தான். அவர்கள் இருவரும் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள். அவன் வீட்டைப் பார்க்காதவன் போல கடந்து ஆனைக்கொட்டில் அருகே சென்றான். யானையைத் தளைக்கும்போது அது தும்பிக்கையால் அவன் முதுகை வருடியது. சீ கைய எடு” என்றான். அது அவன் முதுகின்மேல் தும்பிக்கையை வைக்க எடையால் அவன் முன்னால் சரிந்தான். “சீ சும்மா கெட” என்றான்.

உள்ளிருந்து சந்திரி ஒரு பெரிய பாத்திரம் நிறைய பொறித்த மீனைக்கொண்டு ஆசானின் அருகே முக்காலியில் வைத்துவிட்டுத் திரும்பி அவனைப் பார்த்தாள். பின்பக்கமாக வரும்படி கையைக்காட்டினாள். அவன் பின்பக்கமாக வந்து நின்றான்.

“மீனு பொரிச்சிருக்கு. முத்தன் வாங்கிட்டு வந்ததாக்கும். வாளமீன் நாலு துண்டு சாப்பிடறியா?” என்றாள். அவன் தலையசைத்தான். அவள் மரவள்ளிக்கிழங்கு மயக்கியதில் மீன் குழம்பை விட்டு நாலைந்து துண்டு மீன்களை எடுத்து வைத்துக்கொண்டு வந்து நீட்டினாள். அதை வாங்கிக்கொண்டு சென்று தன் இடத்தில் அமர்ந்து சாப்பிட்டான். தட்டைக்கழுவி கொண்டு வந்து கொல்லைப்பக்க திண்ணை மேல் வைத்துவிட்டு யானை அருகே சென்று நின்றிருந்தான்.

யானையைச்சுற்றி மாலையின் ஒளி நிரம்பியிருந்தது. அங்கு நின்றிருக்கும் வேறு யானையின் நிழல்போல கரிய யானை நின்றிருந்தது. அவன் யானையைப் பார்த்துக் கொண்டே நின்றான். அது ஒரு கரிய சொட்டுபோல தோன்றியது. ததும்பிக்கொண்டே இருந்தது. ”ஆனைக்கு சந்தோசம் தீனியிலே… ஆறாப்பசியும் திங்கிறதுக்கு காடும் குடுத்தாக்கும் அதை அனந்தப்பப்பனாவன் பூமிக்கு விட்டிருக்கான்”என்று ஆசான் சொல்வதுண்டு.

அவன் அங்கிருந்து எங்காவது சென்றுவிட விரும்பினான். நெடுந்தொலைவுக்குச் சென்றுவிடவேண்டும். ஆனால் எங்கு செல்வது? அவனுக்கென்று யாருமில்லை ஆசான் அவனுக்காக ஒதுக்கிய அந்தச் சிறிய அறை தவிர போக்கிடமில்லை. அதற்குள்ளே பழைய டிரங்குப்பெட்டியில் இரண்டே இரண்டு நல்ல சட்டைகள் தான் இருக்கின்றன. இரண்டு வேட்டிகள். யானைத்தொழில் தவிர வேறு எந்தத் தொழிலும் தெரியாது. செல்லுமிடத்திலும் யானைதான் இருக்கும். ஆனால் அவனுக்கு யானையைக்கூட பழக்கமில்லை. கேசவன் மட்டும்தான் பழக்கம்.

அவன் திரும்பத் திரும்ப எதையெதையோ நினைத்துக்கொண்டிருந்தான். ஆனால் எல்லா எண்ணங்களும் சந்திரியையும் முத்தனையும் ஆசானையும் சுற்றிதான் இருந்தன. அவன் பார்த்துக்கொண்டிருக்கையிலேயே இருட்டாகியது. யானை இருட்டில் மிதந்தது போல் நின்றது. சற்று நேரத்தில் அதன் இருபெரிய தந்தங்கள் மட்டும் தெரிந்தன. முழுமையாக அது மறைந்துவிட்டது. அதுவே இரவாக ஆகிவிட்டது.

அவன் தன் அறைக்குள் சென்று மெத்தையை விரிக்காமலேயே விழுந்து மல்லாந்து தாழ்ந்த மரக்கூரையைப் பார்த்துக்கொண்டிருந்தான். எப்போது தூங்கினான் என்று தெரியவில்லை. எப்போதோ புரண்டு பார்த்தபோது விடியவில்லை என்று தெரிந்தது. வழக்கம் போல ஆசான் ஓங்கி உதைத்தபோது பாய்ந்து எழுந்தான். இம்முறையும் அவன் ஜன்னலை இருட்டாக்கியது கேசவன்தான்.

இரவில் கேசவன் முடிந்தவரை சங்கிலியை இழுத்து அவனுடைய அறையின் ஜன்னலோரமாக வந்து நின்றுகொண்டிருப்பது வழக்கம். அவனுடைய உடலின் மணம் அதற்குத் தேவைப்பட்டது. கேசவனுக்கு ஆசான் மேல் பயமும் கொஞ்சம் விலக்கமும் உண்டு. ஆசான் கேசவனை நன்றாகவே அடிப்பார். ஆனால் அவன் ஒருமுறை கூட கேசவனை அடித்ததில்லை. அவன் சொன்ன எதையும் கேசவன் செய்யாமல் இருந்ததும் இல்லை.

கேசவன் அருகே தனியாக நின்றிருக்கையில் தும்பிக்கையால் அது அவனிடம் விளையாடிக்கொண்டேதான் இருக்கும். அவன் இடுப்பு வேட்டியை அவிழ்க்க முயற்சி செய்யும். பலமுறை மடியில் வைத்திருந்த பீடிக்கட்டை அப்படியே எடுத்து வாய்க்குள் போட்டு மென்று தின்றுவிட்டிருக்கிறது. ஆசானின் சுருட்டுகளைத் தின்று அதற்குப் புகையிலைச் சுவை பிடித்திருந்தது.

அவன் கேசவன் அருகே நின்றிருக்கையில் மட்டும் உணரக்கூடிய தன்னம்பிக்கையையும் நிம்மதியையும் நாடினான். தூங்கும் நேரம் தவிர பெரும்பாலும் அதன் அருகே இருந்தான். நீலிமலைச் சரிவில் சின்ன குடிசைகளைப் பெரிய பாறைகளை ஒட்டி கட்டுவது போல. தன்னைக் கேசவனைச் சார்ந்து உருவாக்கிக்கொண்டிருப்பதாக நினைத்தான். மழையில் மலை இடிந்து சரிந்தாலும் பாறை குடிசைகளை விடாமல் தாங்கிக்கொள்ளும்.

அன்று கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி கோயிலில் அம்மை எறக்கம். பெரிய சடங்கு கிடையாது. ஆனால் கூட்டம் நிறைய. இரவு முழுக்க செண்டை ஒலி நடுவே யானையுடன் நின்றிருந்தான். கேசவன் செண்டை ஒலியில் மயங்கியதுபோலிருக்கும். ஆசான் விழா முடிந்ததும் அவனிடம் “பத்திரமா வந்து வீடு சேருலே” என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார். பேசிய பணத்தை வாங்கியிருப்பார்.

ஆசான் சற்று தூரம் சென்றதும் திரும்பி வந்து அவனிடம் முன்னூறு ரூபாய் கொடுத்து “வெச்சுக்கோ” என்றார். பேசியதற்கு மேலே இரண்டாயிரம் ரூபாயாவது வாங்கியிருப்பார் என்று நினைத்துக் கொண்டான்.

அவர் சென்றபின் யானையைக் கொண்டு சென்று தளைத்துவிட்டு அருகிலிருந்த கோயில் குளத்தில் மூழ்கிக் குளித்தான். ஈர உடையுடன் சென்று அமர்ந்து திருவிழாவுக்காகப் போடப்பட்டிருந்த கீற்றுக்கொட்டகை ஓட்டலில் நான்கு தோசையும் இரண்டு ரசவடையும் சாப்பிட்டு ஒரு டீ குடித்தான். இரவு முழுக்க விழித்திருந்ததனால் கண்கள் சிவந்து காந்தின. வாயில் ஒரு ரப்பர் தன்மை இருந்தது. கால்கள் எடையற்றிருந்தன. ஆனாலும் மனம் மிகவும் கனமற்று இருப்பதாகத் தோன்றியது.

அங்கே ஆசான் வீட்டில், சந்திரியின் அருகே இருக்கும்போது எப்போதும் இருந்துகொண்டிருக்கும் ஒரு பாரம் இப்போது இல்லை. அந்த இடத்திலிருந்து நெடுந்தூரம் தள்ளி இருக்கிறோம் என்பதனால் கூட இருக்கலாம். அந்தப் பிரச்னை எல்லாம் அங்கிருக்க அவன் இங்கிருப்பதான ஒரு உணர்வு ஏற்பட்டது. பீடியைப் பற்றவைத்து இழுத்துப் புகைவிட்டபடி, கைகுழிக்குள் அதன் கொள்ளி இருக்க சுற்று முற்றும் பார்த்தபடி நடந்தான்.

அப்பால் ஓலைக்கூரையிட்ட கொட்டகையில் தரையில் விரிக்கப்பட்ட பனம்பாய்களில் இரவெல்லாம் ஆடிக்குதித்து வாசித்த செண்டைக்காரர்கள். தங்கள் வாத்தியங்களை அருகே வைத்துக்கொண்டு தாறுமாறாகப் படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தார்கள். ஒரேயொரு கிழவர் மட்டும் எழுந்து மூங்கில் தூணில் சாய்ந்தமர்ந்து வெற்றிலை மென்று கொண்டு பீளை படிந்த கண்களால் அவனைப் பார்த்தார்.

இரவு முழுக்க திறந்திருந்த எல்லாக் தரைக்கடைகளும் காக்கித்துணியால் மூடப்பட்டுக் கட்டப்பட்டிருந்தன. சோப்பு, சீப்பு, சாந்துபொட்டு, குங்குமம்… பல்வேறு வகையான அலுமினிய நகைகள், கண்ணாடிகள், வளையல்கள், ரப்பர் செருப்புகள். இரவு அவன் ஒருமுறை சுற்றிவந்தபோதுதான் எத்தனை ஆயிரம் பொருட்கள் அங்கே விற்கப்படுகின்றன என்று பார்த்தான். பிளாஸ்டிக்காலான கிளிகள், பிளாஸ்டிக் துப்பாக்கிகள்.

சட்டென்று அவனுக்கு வளையல் வாங்க வேண்டுமென்று தோன்றியது. சந்திரியின் நீலக்கல் மூக்குத்திக்கும் கம்மலுக்கும் பொருத்தமான நீலக்கண்ணாடி வளையல். மூடிக்கட்டப்பட்டிருந்த கடை அருகே அமர்ந்து வெற்றிலை போட்டுக்கொண்டிருந்த கிழவியிடம் “ஆத்தா நீலக்கண்ணாடி வளையல் இருக்கா?” என்றான்.

“கண்ணாடி வளையல் இப்ப வாறதில்ல. இப்ப எல்லாம் பிளாஸ்டிக்காக்கும்.”

“நீலத்தில இருக்கா?”

“இருக்கு புள்ள, தாரன்” என்று சொல்லி கயிறை அவிழ்த்து மூடியிருந்த காடாத்துணியை விலக்கி உள்ளே கைவிட்டு வளையல் கொத்துகளை எடுத்தாள். “பிளாஸ்டிக்கானாலும் கண்ணாடிமாதிரி இருக்கும்… எடுத்துப்பாரு மக்கா”

எல்லா வளையல்களும் அழகாக இருந்தன. ஆழ்ந்த சிவப்பு, நீலம், பச்சை, பொன்மஞ்சள். ஒருகணம் அவனுக்கு சிவப்பு வாங்கினால் என்ன என்று தோன்றியது. ஆனால் சந்திரிக்கு நீலம் தான் பிடிக்கும் என்ற எண்ணம் வந்தது.

“நீல வளவி” என்றான். கிழவி “அளவு…?” என்றாள். அவன் தன் கையைப்பார்த்தபின் “இதவிட கொஞ்சம் சின்னது” என்று தன் கையை நீட்டினான். கிழவி “தங்கச்சிக்கா?” என்றாள். அவன் புன்னகைத்து இல்லை என்று தலையசைத்தான். “கெட்டினவளுக்கா?” அதற்கும் அவன் இல்லை என்று தலையசைத்தான்.

கிழவி சிரித்து “செரி கட்டு. இந்த வளவிய குடுத்தா எவளும் உன்னையக் கெட்டுவா” என்றபடி கிழவி வளையல்களை எடுத்துவைத்தாள். “என்ன கலர் சொன்னே?” அவன் “நீலக்கலர்” என்றான். கிழவி “இதுவா…?” என்று ஆழ்ந்த நீல வளையல்களை எடுத்துவைத்தாள்.

அவன் அவற்றைத்தொட்டுப் பார்க்க விரல் நீட்டியபின் கையைப் பின்னால் விலக்கிக்கொண்டான். கிழவி “எம்புடு?” என்றாள். அவன் யோசித்தபின் “பத்து பத்து வீதம்” என்றான்.

“ரெண்டு கைக்குமா? ஆனா இது ஒடையாது பாத்துக்கோ. ஆட்டுக்கல்லில ஆட்டினா கூட உடையாது” என்றபடி பத்து பத்து வளையல்களை எடுத்து தாளாலான புட்டுக்குழல்போன்ற உருளையில் மாட்டி இணையாக வைத்து இன்னொரு தாளால் சுற்றி கட்டி அவனிடம் அளித்தாள்.“நூறு ரூவா”

அவன் நூறு ரூபாயைக்கொடுத்தவுடன் வாங்கி கண்ணில் ஒற்றி உள்ளே வைத்தாள். “போணியாக்கும்” என்றாள். “கைநீட்டம்.” அவன் “இது எவ்வளவு நாள் நெறம் மாறாம இருக்கும்?” என்றான். “அது தோதுபோல இருக்கும்… அதுக்கொரு காலம் இருக்கில்லா. அது சீக்கிரம் போறதாக்கும் நல்லது” என்றாள் கிழவி.

“ஏன்?” என்று அவன் கேட்டான். “அடுத்த வளவி வாங்கிக்குடுக்கலாமுல்லா… அப்பதான சினேகம் கூடும்” என்று சொல்லி கிழவி சிரித்தாள். வாயில் நாலைந்து பற்கள் தான் இருந்தன. அவனும் சிரித்தான்.

“கொண்டு குடு மக்கா. ஒன்ன எனக்கு சீவனாக்கும்னு சொல்லுததுக்கு வளவி குடுக்குறது மாதிரி வளி ஒண்ணுமில்ல” என்றாள். அவன் குரல் தாழ “அவ வாங்கணுமே…” என்றான். “வாங்குவா, ஒன்ன பிடிக்கல்லேன்னாலும் வளவி பிடிக்கும். வளவி வாங்கிக்குடுக்குத ஆம்பளையப்பிடிக்கும். வாங்குவாடே… போ” என்றாள் கிழவி.

அவன் வளையல்களைக் கையில் எடுத்தபடி யானையிடம் வந்தான். அவன் கையில் பொட்டலத்தைப் பார்த்ததுமே அது தும்பிக்கையை நீட்டியது. அதன் ஒரு பிடியில் மொத்தமும் நொறுங்கிவிடப்போகும் என்று நினைத்து அஞ்சி “லே, லே” என்று அவன் ஓசையிடுவதற்குள் யானை அவன் கையிலிருந்த வளையலைப் பிடுங்கிவிட்டது. அவன் எம்பி அதைப்பிடிப்பதற்குள் தும்பிக்கையை வளைத்துத் தலைக்குமேல் தூக்கியது.

“போச்சு! அம்புடும் போச்சு!” என்று அவன் மனம் தளர்ந்து நின்றான். யானை வளையல்களைத் தலைக்குமேல் சுழற்றியது. பிறகு முன்னால் கொண்டுவந்து வலது கொம்பின்மேல் துதிக்கையை வைத்துக்கொண்டது. அவன் துதிக்கையிலிருந்து வளையல்களைப் பிடுங்க முயன்றான். அது தலைக்குமேல் சுற்றி மறுபக்கம் இடது கொம்பின் மேல் தும்பிக்கையை வைத்துக்கொண்டது

“வெளையாடதலே மக்கா சொன்னது கேளு, வெளயாடத கேட்டுக்கோ” என்றபடி அவன் மறுபக்கம் போவதற்குள் தும்பிக்கை இந்தப் பக்கம் வந்தது. அவன் “சொல்லுகத கேளு… கேசவா… கேசவா” என்றான்.

யானை வளையலைத் தானே தரையில் வைத்தது. அவன் குனிந்து அதை எடுக்கப்போகும்போது அவன் பிருஷ்டத்தில் துதிக்கையால் தட்டியது. அவன் குப்புற விழுந்தான். அவன் எழுவதற்குள் மீண்டும் வளையலை யானை எடுத்துக்கொண்டது. தலைக்குமேல் மத்தகத்தின் குழியில் வளையலை வைத்துவிட்டுத் துதிக்கையைக் கீழே போட்டது.

அவன் சலித்து “நீ என்ன வேணா செய். நூறு ரூவா குடுத்து வாங்கினதாக்கும்.” என்றபடி அருகே நின்றான். “சந்திரிக்கு குடுக்க வாங்கினேன். ஒனக்கு இஷ்டம் இல்லேன்னா உடைச்சு போட்டுரு. ஒவ்வொருத்தனுக்கும் தலையில் எழுதிட்டுண்டுல்லா… நம்ம தலையில இப்படி எழுதிருக்கு” .

யானை மத்தகத்திலிருந்து வளையலை எடுத்து அவன் முன் நீட்டியது. அவன் அதை வாங்கிக்கொண்டான். பதற்றத்துடன் அதைச் சுற்றிக்கட்டியிருந்த சணல் நாரை பிரித்து உள்ளே பார்த்தான். ஒரு வளையல் கூட உடையவில்லை என்பது ஆச்சரியமாக இருந்தது. “கள்ளப்பயலே, அப்ப அறிவு உண்டும் உனக்கு” என்று சொன்னபடி அதை மீண்டும் பொட்டலமாகக் கட்டி சணலால் சுற்றினான். தன் ஆடையும் குத்துக்கோலும் வைத்திருந்த இடத்தில் அதைக்கொண்டு வைத்துக்கொண்டான்.

யானை தரையில் போடப்பட்ட மல்லிகைப்பூக்களைக் கசங்காமல் பொறுக்கிக் கொடுப்பதை அவன் முன்னரே பார்த்திருந்தான். ஆசான் அது ஒரு காட்சியாகச் செய்து காசு வாங்குவார். “மல்லியப்பூ போடுங்கம்மணீ, நீங்க நெனச்சது நடக்கும்ணா ஆனை எடுத்துதரும் மல்லியப்பூ ஒரு மல்லியப்பூ கசங்காது. ஒரு மல்லியப்பூ கசங்கினா நெனச்சது நடக்காதுன்னு அர்த்தம் போட்டுப்பாருங்க” என்பார். பெண்கள் மல்லிகைப்பூ வாங்கிப்போடுவார்கள். ஒரு மல்லிகைப்பூ கூட கசங்காமல் யானை எடுத்துக் கொடுக்கும். அவர்கள் நினைத்ததெல்லாம் நடக்கும் என்று ஆசான் கைத்தூக்கி ஆசீர்வாதம் செய்வார். “சொன்னது ஆனையாக்கும் காட்டுக்க தம்புரானாக்கும் சொல்லியிருக்கு. எல்லாம் நல்லபடிமனசு போல மங்கல்யம் என்பார். அவர்கள் கொடுக்கும் காசைக் கண்ணில் ஒற்றி மடியில் கட்டிக்கொள்வார்.

யானையுடன் திரும்பி வரும்போது அவன் மலர்ந்திருந்தான். ஒருநாளும் அவ்வளவு நல்ல நினைவுகளாக மனம் இருந்ததில்லை. வரும் வழியெல்லாம் அழகாக இருப்பது போல் தோன்றியது. திக்கணங்கோட்டு சந்துக்குள் ஒரு வேலி முழுக்க முருக்கு பூத்திருந்தது. யானை நின்று ஒவ்வொரு முருக்குப் பூவாகப் பறித்து வாய்க்குள் செருகியபடி வந்தது.

ராஜா குளம் இறக்கத்தில் வந்தபோது அங்கே பஞ்சாயத்து வேலை நடந்துகொண்டிருந்தது. பாலமாகக் கற்களை அடுக்கிக் கொண்டிருந்தார்கள். “லே ஒரு கை குடுலே” என்றார் அங்கே நின்றிருந்த கொத்தனார். “எனக்க கைய வெச்சு என்ன பண்ணுதது?” என்றான். “ஒனக்க கையா கேட்டேன்? ஏலெ ஆனைக்க கை உனக்க கையில்லா?” என்று கொத்தனார் சொன்னார்.

கரையில் குடையோடு நின்றிருந்த அச்சுதன் வாத்தியார் “ஏலெ பெருங்கை வேளம்னாக்கும் சொல்லப்பட்டிருக்கு. வேளம்னா என்ன தெரியுமா?” அவன் “வேளம்னா பேச்சு” என்று சொன்னான். “ஏலெ வேழம்னா ஆனை. சின்ன ள சொல்லு பாப்போம்” அவன் “ள” என்றான். “ஆமா நீ சொல்லி வாழ்ந்தே. இந்தப்பெருங்கையைக் கொஞ்சம் கொடுலே நாலு கல்லத்தூக்கி வெச்சிட்டுபோட்டும்.”

“ஆன க்ஷீணிச்சுப் போயாக்கும் வருது. ராத்திரி முழுக்க திருவிழாவாக்கும்” என்றான். “ஆமா திருவிழால கல்லுல்ல சொமந்திருக்கு. அதுக்கு இதொரு வேலையா? அதுக்கு பிடிச்சா செய்யட்டும்… நீ அதுக்கு சொல்லு. செய்யறதுண்ணா சோலி முடியும்லா?” என்றார்.

அவன் யானையின் காதைத் தட்டி அந்தக் கற்களைத் தூக்கி வைக்கும்படி சொன்னான். கேசவன் மிகுந்த ஆர்வத்துடன் ஒவ்வொரு கல்லாகத் தூக்கி வைத்தது.

“ஏலெ பூவத் தூக்கி வெக்க மாதிரில்ல வெக்குது” என்றார் கொத்தனார்.“நாலுபேரு ராப்பகலா கெடந்து பாடாப்பாடு படுதோம். அதுக்க சக்தியப் பாத்தியா?” வாத்தியார் “அதுக்கு கை அப்படியாக்குமே… நம்ம மாதிரியா?” என்றார்.

எட்டு கற்களையும் தூக்கி வைத்துவிட்டுக் கேசவன் மேற்கொண்டு கற்களுக்காக அங்குமிங்கும் துழாவியது. “இன்னும் நாலு கல்லு கொண்டான்னாக்கும் கேக்குது” என்றார் கொத்தனார்.

“கூட்டிட்டு போலே… வெச்ச கல்லத்தூக்கி திரும்ப வச்சிடப்போகுது” என்றார் வாத்தியார். கேசவனின் காதை அவன் தட்ட கேசவன் மீண்டும் கல்லுக்காகக் துதிக்கையை நீட்டியது. “அம்பிடுதான்… போவோம்” என்றான் . கொத்தனார் “ருசி கண்டு போட்டுது… இனி சர்வேக்கல்லையெல்லாம் பிடுங்கிப்போட்டிரும்” என்றார்

கேசவன் ஒற்றையடிப்பாதை வழியாக நடந்தது. எதிரில் வந்த இரண்டு எருமைகளுக்கு வழிவிட்டு வேலியோரமாக ஒதுங்கியது. அதன்பின் மீண்டும் நடந்தது. அவன் சட்டென்று சந்திரியையும் வீட்டையும் ஆசானையும் நினைவு கூர்ந்தான். குளிர்ந்த எதையோ அவன் மேல் கொட்டியது போல இருந்தது. அவன் எதையுமே எண்ணியிருக்கவில்லை. இந்த வளையலை அவன் என்ன செய்யப்போகிறான்? சந்திரிக்கா கொடுக்கப்போகிறான்? ஆசானுக்குத் தெரிந்தால் அக்கணமே பாளையரிவாளோடு பாய்ந்து வந்துவிடுவார். சந்திரி ஆசானிடம் சொல்லாமல் இருக்கமாட்டாள்.

அவள் அந்த வளையலை வாங்க மாட்டாள். சந்தேகமே இல்லை. அதற்கான ஒரு அறிகுறியும் அவள் காட்டியதில்லை. ஒருவார்த்தைக் கூட நெருக்கமாகப் பேசியதில்லை. அவனும் அவளிடம் பேசியதே இல்லை. எந்த நம்பிக்கையில் அதை வாங்கிக்கொண்டு வந்தான்? அவனுக்கு என்ன தகுதி? அவள் தரும் எச்சிலை தின்று கொல்லைப்பக்கம் வாழ்பவன்.

அவனால் மேற்கொண்டு நடக்க முடியவில்லை. யானையின் கழுத்தில் இருந்த கயிறுக்குள் கையை விட்டு தன் உடம்பின் எடையை யானைமேல் சார்த்திக்கொண்டான். யானை அவனைத் தூக்கிச் சென்றது. யானையின் கால்கள் தூக்கித் தூக்கி வைக்கப்பட்டபோது அவன் காற்றில் ஊசலாடி ஊசலாடி முன்னால் சென்றான். ஓர் ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருந்தான்.

அப்படியே யானையை விட்டுவிட்டு திரும்பி எங்காவது ஓடிப்போய்விடவேண்டும் என்று தோன்றியது. ஒன்று செய்யலாம். அந்த வளையல்களை இங்கே வீசிவிடலாம் அந்தப் பகுதியில் யாருமே இல்லை. குளத்தில் வீசி எறிந்தால் மூழ்கிவிடும். ஆனால் அவனால் முடியவில்லை. அவன் கையில் அது எடை கூடிக்கூடி வந்தாலும் கூட அதை இறுக்கப்பற்றிக்கொள்ளத்தான் தோன்றியது. வீசியெறியவே முடியாது. வீசியெறிய முடியாது. “நான் சாவுதேன், நான் செத்துத்தொலையுதேன்! எனக்க அம்மோ நான் சாவுதேன்” என்று அவன் தனக்குத்தானே சொல்லிக்கொண்டான். அவன் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. யானையின் கால்களில் முகத்தைப்பதித்துப் பிரக்ஞையற்றவன் போல் அமர்ந்திருந்தான்.

தன்னுணர்வு வந்தபோது யானையிடமே ஒட்டிக்கொண்டு சென்று கொண்டிருப்பதை மீண்டும் உணர்ந்தான். தொலைவில் வீடு தெரிந்தது இன்னும் கூட நேரமிருக்கிறது. யானை வீடு நோக்கிச் செல்ல பத்து நிமிஷமாகும் அதற்குள் அந்த நீல வளையல்களைத் தூக்கி வீசிவிடலாம். வேண்டாம். பலா மரப்பொந்தில் கொண்டு வைக்கலாம். ஒளித்து வைக்கலாம். ஏதோ ஒரு சந்தர்ப்பம் வரும்போது கொடுக்கலாம். அல்லது ஆசானே வாங்கிக்கொடுத்ததாகச் சொல்லிக் கொடுக்கலாம்.

ஆம், அது தான் சரி. ஆசான் வாங்கிக்கொடுத்தனுப்பியதாகச் சொல்லிக்கொடுக்கலாம். ஆசான் மறந்திருப்பார். குடிவெறியில் அவருக்கு நினைவிருக்காது. “நான் வாங்கிக்கொடுத்தேனாலே?” என்று அவரே கேட்டுக்கொள்வார். அவள் அதை கையில் போட்டுக்கொண்டால் போதும்…

அந்த எண்ணம் அவனை விடுவித்தது அவன் மீண்டும் கால்களைப் பதித்து நடக்க ஆரம்பித்தான். ஆசான் பெயரைச் சொல்லித்தான் கொடுக்க வேண்டும். ஆசான் பெயரைச் சொன்னால் அவள் வாங்கிக்கொள்வாள். ஒருவேளை எப்போதோ ஒரு நாள் அவன் தான் அதை வாங்கினான் என்று அவளுக்குத் தோன்றலாம். ஆனால் உடனே அதை மறுக்க அவளால் முடியாது. அதுதான் நல்ல வழி ஆசான் பெயரைச்சொல்லி கொடுக்கப்போகிறேன். அதையே திரும்ப திரும்ப தனக்குள் சொல்லிக்கொண்டான்.

முட்டன்பலா மேட்டை அவன் அடைந்தபோது பக்கவாட்டு வேலிக்கப்பாலிருந்து சந்திரியின் குரல் “இப்பதான் வாறியளா?” என்றது. அவன் திரும்பிப் பார்த்தான் “ஆமா” என்றான். “பிந்திப்போட்டுது”

“அச்சன் எங்கே?” என்றாள். “அவரு தனியா பஸ்ல வந்தாரு.” அவள் “சாராயம் குடிச்சு நாலு காலுல வந்து சேரும், நாசமத்துப்போக” என்றபடி அவள் அருகே வந்தாள். “கூட்டாலுமூட்டுல பேசின பணம் குடுத்தானா?”

“தெரியல்ல, குடுத்திருப்பான்” என்றான். அவள் “வருக்க மாங்கா இங்க வெளஞ்சிருக்கு வாங்கிட்டு போலான்னு வந்தேன் ஆனா பழுக்க வெச்சுட்டாங்க. நாளைக்கு வேற பறிச்சப்பிறவு தாறென்னு சொன்னாங்க” என்றாள். அவன் தலையசைத்தான். அவள் “நீங்க வாங்க… நான் வீட்டுக்குப் போய் கதவத்தெறக்கேன்” என்றபடி முன்னால் போனாள்.

சற்றும் எதிர்பாராதபடி கேசவனின் கை அவனுடைய மடியைப் பற்றியது அவன் “ஏ…” என்று உதறுவதற்குள் அது வளையலை எடுத்துக்கொண்டது. “என்னது அது?” என்று சந்திரி திரும்பிப்பார்த்தாள். கேசவன் வளையலைச் சந்திரியிடம் நீட்டியது. “என்னது?” என்றபடி அவள் அதை வாங்கிக்கொண்டாள். அவன் உடல் நடுங்க, தொடைதுள்ள அப்படியே நின்றான். அவள் பொட்டலத்தைப் பிரித்து நீல வளையல்களைப் பார்த்து யானையைப் பார்த்தாள். பிறகு அவனைப்பார்த்து புன்னகைத்தாள்.

19 comments for “பெருங்கை

  1. January 1, 2023 at 2:55 pm

    உரைநடை கம்பரிடமிருந்து இனிய புத்தாண்டு பரிசு. ஜெமோவிற்கு நன்றியும் வல்லினத்துக்கு வாழ்த்தும்

    • N Suresh Kumar
      January 9, 2023 at 2:58 pm

      உள்ளம் நிறைய எழுத்துக்கள் காட்சியாக

  2. Sridharan
    January 1, 2023 at 6:19 pm

    மிக அழகான கதை. யானை அரசன். தன் குடிகளின் தேவை அறிந்து செய்கிறான்.

    • Ramaswamy Dhanasekar
      January 2, 2023 at 12:26 pm

      ஆஹா ,

      என்ன அருமையான நடை,

      மொழியும் சரி,

      யானையும் சரி,

      சந்திரியும் சரி

    • KaliyaPerumal
      January 6, 2023 at 10:50 am

      மண் தரையில் போடப்படும் மல்லிகையை கசங்காமல் எடுக்கும் திறனை உடைய கேசவன் தன் பாகனை விட்டு விடுவானா? ஜெ வின் நடையும் விவரிப்பும் அழகியலும் சேர்ந்த சிறப்பு சிறுகதை

  3. manguni
    January 2, 2023 at 4:30 pm

    கதை ஒரு கனவுலகம் போல என்னை உள்ளிழுத்து கொண்டது. ஆசானின் மற்றுமொரு அருமையான கதை.

  4. January 2, 2023 at 6:06 pm

    கேசவன்தான் இதில் மைய ஹீரோ. அவன் தன் பாசமிக்க பாகனுக்குச் செய்யவேண்டியதைக் குறிப்பறிந்து செய்திருக்கிறான். அந்த வளையல்களை அவன் பாதுகாப்போடு வைத்து விளையாடியபோதே தன் பாகன்மேல் கொண்ட பிரியத்தை நிரூபித்துவிடுகிறான். சந்திரியும் பாகனும் இனி சந்தேகமே இல்லாமல் இணைந்துவிடுவார்கள். இந்த இணைவு கேசவனால்தான் உண்டானது என்று சந்திரியின் அப்பனுக்குத் தெரிந்தால் அவர்கள் காதலை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

  5. Manimaran A/L Ammasy
    January 4, 2023 at 8:12 am

    ஆசிரியருக்கு ஆனை மீது அம்புட்டு பிரியம் தெரியிது. மத்தகத்திலும் வெளிப்பட்டது. ஆனைக்கு பாகன் மேலப் பிரியம். பாகனுக்கு சந்திரி மேலப் பிரியம். சந்திரிக்கு நீல வளைவிமேலப் பிரியம். எல்லாம் ஒரு வட்டத்துக்குள்ள நடக்குது. அந்த பிளாஸ்டிக் வளைவிக்குள்ள..

    • எம்.எஸ்.ராஜேந்திரன்
      January 7, 2023 at 4:04 pm

      அவன் கையில் வைத்திருந்த வளையல்கள் மல்லிகைப்பூ என்றால், சந்திரிகையின் மீது அவன் வைத்திருக்கும் காதல் கருங்கல் போன்றதா?
      இரண்டையுமே கேசவன் லாவகமாக கையாள்கிறான்.
      அவன் உடலோடு ஒட்டிஒட்டி அவனின் மனதையும் படிக்கும் வித்தையை கேசவன் கற்றுக்கொண்டு விட்டானா என்ன?

      -எம்.எஸ்.ராஜேந்திரன்
      திருவண்ணாமலை

  6. செல்வா. திருப்பூர்
    January 4, 2023 at 1:42 pm

    பெருங்கை!!!
    பெறுங்கதைத்தான்?

  7. Bobby
    January 4, 2023 at 5:03 pm

    நமக்கும் நம் தேவைகளை அறிந்து நிறைவேற்ற ஒரு கேசவன் கிடைக்காதா என ஏங்க வைக்கிறது ஜெ’ வின். மொழி நடை

  8. Vaikuntam
    January 11, 2023 at 7:48 pm

    ஜெவின் காதல் கதைகளின் வரிசையில் இன்னொரு அற்புதமான காதல் கதை

  9. S வேலுமணி
    January 12, 2023 at 7:45 pm

    ஜெ யி‌ன் யானைக் கதைகளை மட்டும் தனியே ஒரு நூலாக தொகுக்கலாம். அருமையான கதை

  10. Malai nilathu kumaran
    January 14, 2023 at 10:13 am

    கேசவன் ஒற்றையடிப்பாதை வழியாக நடந்தது. எதிரில் வந்த இரண்டு எருமைகளுக்கு வழிவிட்டு வேலியோரமாக ஒதுங்கியது.

    யானையை விட பேரதிசயமனைவை இவ்விரு வரிகள். யானையின் பெருந்தன்மையையும் குழாவிதன்மையும் ஒருங்கே வெளிப்படும் இடம்.

  11. mahendran prabhu
    January 20, 2023 at 6:42 pm

    யானை செய்யும் சாகசங்கள் எங்கள் பூனையும் செய்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்ற ஏக்கம் வந்துவிட்டது.

    எம். பிரபு, பெந்தோங்.

  12. Il. Com
    April 23, 2023 at 12:50 am

    ஆஹா அருமை நண்பர் கூறியது போல் வளைவி வட்டத்தில் கேசவன் பாகன் சந்திரி. நன்றி அய்யா நன்றி?? பி குருசாமி.. நங்கநல்லூர். சென்னை.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...