நான் கடைசி நேரத்து பணிக்குவியல்களை விரும்பாதவன். அரக்கபரக்க பூர்த்தியாகும் செயல்பாடுகள், நேர்த்தியற்ற விளைபயன்களையே கொடுக்கும் என உறுதியாக நம்புபவன். இவ்வருட இலக்கிய விழா, பிரம்மாண்டமானது என்றும் அதை ஒட்டிய பணிகள் வலுவானவை என்பதையும் நான் அப்பேச்சு தொடங்கப்பட்ட காலத்திலேயே அறிவேன். எனவே, மே மாதமே அதன் செயல்திட்டங்கள் குறித்து விவாதிக்கத் தொடங்கியிருந்தோம்.
என்னளவில் விழா என்பது கடும் உழைப்பினால் விளையும் பலனைக் கொண்டாடும் வகையில் அமையவேண்டும். உழைப்பில்லாத கொண்டாட்டாங்கள் கேளிக்கைகளும் பணவிரையமும் மட்டுமே. அதுபோன்றவை பல சமயங்களில் யாரோ ஒருவர் தன்னைத்தானே முன்னிலைப்படுத்தவே வடிவமைக்கப்படுகின்றன. அந்த ஆடம்பரங்களுக்கு வரலாற்றில் எந்த மதிப்பும் இல்லை. எனவே இந்த விழா மலேசிய இலக்கிய, அறிவுச்சூழலில் தாக்கத்தை உருவாக்க வேண்டும் எனும் திட்டங்களை வடிவமைத்தோம்.
தமிழ் விக்கி அறிமுகவிழா, பி. கிருஷ்ணன் அரங்கு, மலேசிய சிங்கப்பூர் அரங்கு, ஜெயமோகனுடனான கலந்துரையாடல் இவற்றை ஒட்டிய நான்கு நூல் வெளியீடுகள் என ஒவ்வொன்றும் தனித்தனி உழைப்பைக் கோரின. அதை நகர்த்த எனக்கு பலரது ஒத்துழைப்புத் தேவைப்பட்டது. அ. பாண்டியன், பி. கிருஷ்ணனின் மொழிபெயர்ப்பு நாடகங்கள் குறித்த உரையாடல் மட்டும் போதாது; அவற்றை நாடகமாகவே நிகழ்த்தலாம் எனும் திட்டத்தை வழங்கினார். அது நல்ல திட்டம் என உடனடியாகத் தோன்றியது. அப்படி தோன்றும் எதையும் நான் நடைமுறைப்படுத்தவே முனைவேன்.
முதலில் தமிழ் விக்கி அறிமுகவிழாவுக்கு கட்டுரைகளைத் தயார் செய்ய வேண்டியிருந்தது. அதை ஒட்டிய பணிகள் என்னுடன் சேர்ந்து பதினோரு பேர் அடங்கிய குழுவால் முன்னெடுக்கப்பட்டன. அ.பாண்டியன், பரிமித்தா, அரவின் குமார், கோ. புண்ணியவான், சாலினி, சுப்புலட்சுமி, திலிப், தினேஸ்வரி, மீரா, குமாரசாமி ஆகியோர் உருவாக்கிய கட்டுரைகள் அனைத்தும் கடும் உழைப்பைக் கோரியவை. நவம்பர் 19, இருநூறு கட்டுரைகள் நிறைவடைந்திருந்தன.
ஷேக்ஸ்பியர் நாடகத்தைத் தயார்செய்ய இயக்குனர் விஸ்வநாதனை அணுகியிருந்தோம். அவர் சம்மதம் கிடைத்தபிறகு மை ஸ்கில்ஸ் மாணவர்களை நாடகத்திற்குப் பயன்படுத்த வழக்கறிஞர் பசுபதியை அணுகினோம். அவர்களின் முழுமையான ஒத்துழைப்பு கிடைத்தவுடன் மூன்று மாதங்கள் நாடக பயிற்சி நடந்தது. அனைத்து வகையான தயார்நிலைகளும் நவம்பர் 21ல் முடிந்து நாடகக் குழுவினர் நவம்பர் 22 கெடாவுக்குப் புறப்பட்டனர். முன்னமே பிரம்ம வித்யாரண்யத்தில் நாடகத்தை நிகழ்த்திப் பார்த்தால் மேடை பயத்தைக் குறைக்கும் என்பது திட்டம்.
நாடகத்திற்கு அரவின் குமார் பொறுப்பாளர். அரவினுக்கு இது முதல் அனுபவம். முதல் அனுபவத்தில் உள்ள தடுமாற்றங்களை அறிவேன். எனக்கு ஏற்கெனவே நாடகத்துறையில் அனுபவம் உண்டு. இரண்டு மேடை நாடகங்களை இயக்கியுள்ளேன். எனவே நானும் அதில் இணைந்துகொண்டேன். மேலும் எடுத்துக்கொண்ட பணியை அப்படி முழுமையாக ஒருவர் தலையில் கட்டிவிட்டு என்னால் விலகி இருக்கவும் முடிந்ததில்லை. இலக்கியச் செயல்பாடுகளில் மட்டும் நான் ஒரு மோசமான ‘பர்ஃவெக்ஷனிஸ்ட்’. எனவே என்னுடன் இலக்கியச் சூழலில் இணைந்து வேலை செய்பவர்கள் கொஞ்சம் எரிச்சல் அடையவே செய்வர். அல்லது நான் எரிந்து விழுவேன். ஷேக்ஸ்பியர் நாடக முயற்சி என்னுடைய அதிகமான நேரத்தை எடுத்துக்கொண்டது. ஒப்பனை பொருள்கள், மேடைக் கருவிகள், குரல் பதிவு, திரையில் வரவேண்டிய பின்னணிக் காட்சி அமைப்பு என ஓயாத அலைச்சல்கள். கடைசி வாரங்களில் அநேகமாக ஒவ்வொருநாளும் ஒரு மணி நேரம் பயணம் செய்து கலும்பாங்கில் இருந்த மை ஸ்கில்ஸ் சென்று வந்தேன். எக்காரணம் கொண்டும் நாடகம் ‘சிறுபிள்ளைத்தனமாக’ இருந்துவிடக்கூடாது என்பது மட்டுமே என் பயம். பல சமயம் நடிகர்களிடம் கடுமையாகவே விமர்சனம் வைத்தேன். நான் காணும் குறைபாடுகளை இயக்குனரிடம் சொல்லிக்கொண்டே இருந்தேன். என் அதிருப்திகளை வெளிப்படுத்தத் தயங்கவில்லை.
இவ்விழாவில் பி. கிருஷ்ணன் அரங்கு மூன்றாவது அங்கம். அவ்வரங்கை ஒட்டி நூல் தயாரிப்பது மட்டுமே கடும் பணி. கட்டுரையாளர்கள் அறுவரும் திறன் வாய்ந்தவர்கள். எனவே குறிப்பிட்ட நேரத்தில் படைப்புகள் அனைத்தும் கிடைத்தன. சாலினி, சுப்புலட்சுமி ஆகியோர் கட்டுரைகளைச் செறிவாக்கப் பங்களித்தனர். கட்டுரைகளை நானும் லதாவும் இறுதி மேற்பார்வை செய்தோம். யாவரும் பதிப்பக உரிமையாளர் நண்பர் ஜீவ கரிகாலன் துணையிருந்ததால் நூல் விரைவாக அச்சேறி ஒரு மாதத்திற்கு முன்பே என் கையில் கிடைத்தது.
பி. கிருஷ்ணனின் ஷேக்ஸ்பியர் நூல் தொகுப்பை வாங்குவதில் உள்ள பணச்சிக்கல், முன்பதிவின் திட்டத்தின் மூலமும் சிங்கை நண்பர்கள் திருவாட்டி ரமா சங்கரன், திரு அருண் மகிழ்நன், முஸ்தபா அறக்கட்டளை, திரு ஜோதி மாணிக்கவாசகம் ஆகியோர் வழங்கிய நன்கொடை மூலமும் தீர்ந்தது. சிங்கையில் இருந்து நூலை மலேசியாவுக்கு எடுத்துவர ஜோதி புஷ்பக்கடையின் உரிமையாளர் திரு. ராஜ்குமார் சந்திரா பேருதவி செய்தார். ஆனால் சிங்கையில் அனுப்பப்பட்ட நூல்கள் என்னிடம் வந்து கிடைக்க இரண்டு வாரங்களை எட்டியது. தாமதமான ஒவ்வொருநாளும் திக்திக்கென கடந்தன. மேலும் கடைசி நேரத்தில் ஜெயமோகனின் Stories of the True என்ற அறம் சிறுகதை தொகுப்பின் மொழிப்பெயர்ப்பு நூலை ஜார்ஜ் டவுன் குழுவினரால் அதன் பதிப்பாளரிடமிருந்து பெற முடியவில்லை எனச் சொல்லவும் அவசரமாக இருபது நூல்களை மட்டும் ஆர்டர் செய்து கப்பலில் தருவித்தேன். நிகழ்ச்சி நடக்க ஒரு மாதம் இருக்கும்போது ஆர்டர் செய்ததால் நூல்கள் கைகளுக்குக் கிடைக்குமா எனும் சந்தேகம் இருந்துகொண்டே இருந்தது. நிகழ்ச்சி நடக்க ஒரு வாரம் இருந்தபோதே நூல்கள் கைகளுக்குக் கிடைத்தன.
நான்காவது அங்கமான மலேசிய சிங்கப்பூர் அரங்கு குறித்து எனக்கு பெரிதாகக் கவலையில்லை. அந்நிகழ்ச்சி ஜார்ஜ் டவுனில் நடைபெற்றது. மேலும் உரையாடும் மூவரும் அனுபவம் உள்ளவர்கள் என்பதால் அது கச்சிதமாக நடந்து முடிந்துவிடும். அதுபோல பி. கிருஷ்ணனின் புத்தக வெளியீட்டுவிழா பொறுப்புகள் அனைத்தையும் கணேஷ் பாபுவிடம் ஒப்படைத்திருந்தேன். என் பதற்றமெல்லாம் ஜெயமோகனும் நானும் நடத்தும் உரையாடல் குறித்தே இருந்தது. அதற்கு தயாராகும் நேரமும் மனநிலையும் எனக்கு வாய்க்காமல் தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது.
நிகழ்ச்சி நடப்பது கெடாவில். எதையாவது விட்டுச்சென்றால் அதன் விளைவுகள் பெரிதாகவே இருக்கும். எனவே முறையான அட்டவணையிட்டு நாளுக்கு ஒன்றாகச் செய்துகொண்டிருந்தேன். நல்லவேளையாக நிகழ்ச்சி நடக்க சில நாட்கள் இருந்தபோது என் உறவினர்கள் சிலர் வீட்டிற்கு வந்திருந்தனர். அவர்களில் இருவர் இளைஞர்கள். எனவே நிகழ்ச்சிக்கு எடுத்துச் செல்லவேண்டிய நூல்கள், நாடகப் பொருட்கள் போன்றவற்றை முறையாகப் பெட்டியில் அடைத்து நீர் புக முடியாதபடி பைகளால் சுற்றி மூடினோம். கடும் மழைக்காலம் என்பதால் காகிதப் பெட்டிகளைப் பாதுகாக்க வேண்டியிருந்தது. என்னென்ன சிக்கல்கள் வரலாம் என்பதைக் கற்பனையில் நிகழ்த்தி அதற்கு முன்பாகவே அதற்கான பாதுகாப்பு அம்சங்களை உருவாக்கினோம்.
நவம்பர் 20 ஜி.எஸ்.எஸ்.வி நவின் தன் மனைவியுடன் கோலாலம்பூர் வந்து சேர்ந்தார். இரண்டு நாட்கள் அவருடன் செலவு செய்தேன். அதற்கிடைப்பட்ட நேரத்தில் வல்லினம் நவம்பர் இதழை பதிவேற்றினேன். இம்முறை பெரும்பாலான படைப்புகளை வாசிக்கவில்லை. அப்பொறுப்புகளைப் பாண்டியனே ஏற்றுக்கொண்டார். ஒருநாளில் 24 மணி நேரம் எத்தனை குறைவானது என தோன்றிய காலங்கள் இவை. அத்தனை வேகமாய் நாட்கள் நகர்ந்தன. ஆனால் முறையான கால அட்டவணையை உருவாக்கி என் பணியறையில் ஒட்டி வைத்திருந்ததால் எந்தச் சிக்கலும் இல்லை. அதை பின்பற்றி ஓடினால் போதுமானது.
***
தேர்தலில் அன்வார் தோற்றால் கலவரம் வரலாம் எனும் நிலை இருந்தது. ஆங்காங்கே அதற்கான வதந்திகளும் எட்டிப் பார்த்தன. ஆனால் அன்வார் வென்றவுடன் எல்லாமே சுமூகமானது. நவம்பர் 24 இரவு நான் ஜி.எஸ்.எஸ்.வி நவின் அவர் மனைவி ஆகியோர் ஒரு காரிலும் நிமலன், ஒளிப்பதிவாளர் செல்வன் இன்னொரு காரிலும் என கெடாவை நோக்கிப் புறப்பட்டு நள்ளிரவில் பிரம்ம வித்யாரண்யத்தை அடைந்தோம்.
பயணம் முழுக்க வெவ்வேறு பணிகள் மனதில் ஓடிக்கொண்டிருந்தன. அன்று இரவே அரங்கில் டிஜிட்டல் திரை பொருத்தப்பட்டிருக்க வேண்டும். திங்கள் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டிருந்ததால், சாலை நெரிசலைத் தவிர்க்க கோலாலம்பூரில் இருந்து பேருந்து சரியான நேரத்தில் புறப்பட வேண்டும். வருகையாளர்களுக்கான அறை போதுமானதாக இருக்க வேண்டும். நிகழ்ச்சி திட்டமிட்ட நேரத்தில் தொடங்க வேண்டும். இப்படி என்னென்னவோ குழப்பங்கள்.
இதற்கிடையில் நான் வியாழன் இரவு ஜார்ஜ் டவுன் தொடக்க விழாவில் கலந்துகொள்ள முடியாததால் அ.பாண்டியனை அவசியம் வல்லினம் சார்பாகக் கலந்துகொள்ளச் சொல்லியிருந்தேன். கோ. புண்ணியவானை ஜெயமோகனுடன் இருக்கும்படி கேட்டுக்கொண்டேன். அவர்கள் பொறுப்பை ஏற்றுக்கொண்டது நிம்மதியாக இருந்தது. நான் ஜார்ஜ் டவுன் விழாவின் தொடக்க நிகழ்ச்சிக்குச் செல்லாதது ஏற்பாட்டுக் குழுவினருக்கு அதிருப்தியை உண்டாக்கும். வேறு வழியில்லை.
நாங்கள் பிரம்ம வித்யாரண்யம் வந்து சேர்ந்தபோது சுவாமி லூனாஸ் ஆசிரமத்தில் இருந்தார். எனவே அங்கிருந்த மாதாஜி ஒருவரிடம் இரண்டு அறைகளின் சாவிகளை வாங்கிக்கொண்டு உறங்கச் சென்றோம். எனக்குத் தூக்கம் வரவில்லை. மின் பதாதைகைகளை சேமித்து எடுத்து வந்தேனா? கையில் இருக்கும் பணம் போதுமானதா? நாளை மழை பெய்தால் என்னாவது? துவக்க விழா காணொலியில் ஒலி முறையாக வெளிப்படுமா? இப்படி ஏராளமான கேள்விகளோடு எப்படி உறங்கினேன் என்றே தெரியவில்லை. மறுநாள் காலை ஆறு மணிக்கெல்லாம் எழுந்து பிரம்ம வித்யாரண்யத்தைச் சுற்றி சுற்றி வந்தேன். அலையலையான எண்ணங்கள். எங்காவது ஏதாவது பிசிருண்டா எனக் கேள்விகள்.
அன்று காலையில் சிங்கையில் இருந்து எழுத்தாளர் பி. கிருஷ்ணனும் அவர் குடும்பத்தினரும் ஒரு விமானத்திலும் எழுத்தாளர்கள் அழகுநிலா, கணேஷ்பாபு ஆகியோர் மற்றுமொரு விமானத்திலும் வந்து சேர்வதாக இருந்தது. அவர்களுக்கான வாகனங்களைத் தயார் செய்து அதன் பொறுப்பாளர்களுக்கு விமான நிலையத்தின் அருகே அறை பதிவு செய்திருந்தேன். குறிப்பாக எழுத்தாளர் பி. கிருஷ்ணனுக்கு சிறு சுணக்கமும் வரக்கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். அவருக்குத் தொண்ணூறு வயது. சமீபத்தில்தான் கோவிட்டில் இருந்து மீண்டிருந்தார். எனவே மிகுந்த அக்கறையுடன் அவரைப் பராமரிக்க வேண்டும். லாவண்யாவும் அவர் தோழிகளும் அப்பொறுப்பை ஏற்றுக்கொண்டனர். நான் விமான நிலையத்தின் நிலவரத்தை கேட்டு அறிந்தபடி இருந்தேன். மனம் எல்லாம் சரியாகவே நடக்கிறது எனச்சொன்னாலும் ஒரு பதற்றம் இருந்தது.
ஆசிரமத்தில் சுவாமி பிரம்மானந்தாவைப் பார்த்தவுடன் மனம் கொஞ்சம் அமைதிகொண்டது. இந்த விழாவுக்கு அவரது உழைப்பும் கடுமையானது. பிரம்ம வித்யாரண்யத்தை முழுக்கவே இந்த மூன்று நாள் விழாவுக்குத் தயார்படுத்திக்கொடுத்தார். அவரே முன்னின்று அனைத்தையும் செய்பவர். ஓய்வற்ற அலைச்சல்களுக்கு மத்தியில் அவர் அப்பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அவர் அருகாமை மனதை சாந்தப்படுத்தியது.
கொஞ்ச நேரத்தில் இரண்டு கார்கள் வந்து சேர்ந்தன. பி. கிருஷ்ணனையும் அவர் குடும்பத்தாரையும் பார்த்தவுடன் நிம்மதி. இன்னொரு காரில் அழகுநிலாவும் கணேஷ் பாபுவும் வந்து இறங்கினர். கணேஷ் பாபுவை நான் சந்திப்பது இதுவே முதன்முறை. ஆனால் அவர் எழுத்தின் மீது எனக்கு மதிப்பிருந்தது. சுவாமி அனைவரையும் வரவேற்றார். நல விசாரிப்புகள், உரையாடல்கள். நான் அங்கிருந்தாலும் மனம் எங்கெங்கோ அலைந்தது.
மதியம் நெருங்கும் முன்னரே ஜெயமோகன், அருண்மொழி நங்கை, அருண் மகிழ்நன், லதா ஆகியோர் பிரம்ம வித்யாரண்யம் வந்து சேர்ந்தனர். நான் அருண் மகிழ்நன் வந்ததில் மகிழ்ச்சியைத் தெரிவித்தேன். தமிழ் விக்கி அறிமுக விழாவுக்கு அவரே தலைமையேற்க வேண்டுமென விரும்பி வற்புறுத்தியே அழைத்திருந்தேன். அவரே அதற்கு பொருத்தமானவர் என்பது எங்கள் முடிவு. அருண் மகிழ்நன் அவர்களுக்கான அறையைக் காட்டிவிட்டு ஜெயமோகனை பார்க்க ஆவலாக ஓடினேன். என் குரல் கேட்டு அவரும் அறையில் இருந்து வேகமாக வந்தார். “வாங்க நியூசிலாந்து கொண்டான்” என்றார். அனைத்துக்கொண்டேன். பரவசம்.
அவர் தங்கியிருந்த அறைக்குச் சற்றுத் தள்ளி நூல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. என் நூல்களும் அதில் இருந்தன. “நீங்க மண்டை ஓடி எனும் சுயவரலாற்று நூல் எழுதியிருக்கீங்க அல்லவா?” என ஜெயமோகன் கேட்டார். அதை கிண்டல் என அறியாத யாரோ “இல்லை அது சிறுகதை தொகுப்பு.” என்றார். “அப்படியா நான் அதை சுயவரலாற்று நூலின் தலைப்பு என நினைச்சேன்!” எனச் சொல்லிபடி நடந்தார்.
கொஞ்ச நேரத்தில் அழகுநிலா, கணேஷ்பாபு, அருண் மகிழ்நன், ஜி.எஸ்.எஸ்.வி நவின் என அவரைச் சுற்றி சிறு வட்டம். நான் வாசகர்கள் சூழாத ஜெயமோகனை கண்டது அரிது. எப்போதும் அவர் உரையாடிக்கொண்டே இருக்கிறார். அது ஒவ்வொருமுறையும் புதுமையாக உள்ளது. நான் அங்கு முழுமையாக இருக்க முடியவில்லை. செய்ய வேண்டிய பணிகள் ஏராளம் இருப்பதுபோன்ற உணர்வு. அது நிலைகொள்ளாமல் அலையவிட்டது.
மதியம் தொடங்கி பரபரப்பு சூழ்ந்தது. கோலாலம்பூர், ஈப்போ ஆகிய மாநிலங்களில் இருந்து வந்த பேருந்துகளில் இருந்து இலக்கிய ஆர்வளர்கள் இறங்கியவுடன் அவர்கள் அறைகளுக்கான சாவிகளைக் கொடுக்கும் பணி தொடங்கியது. சாவியைக் கொடுக்க சுவாமி நியமித்திருந்த உதவியாளர் அங்கு இல்லாதபடியால் நானே அப்பணியை மேற்கொண்டேன். கொஞ்ச நேரத்தில் கல்லூரி மாணவர்கள் வந்தவுடன் மேலும் பரபரப்பு கூடியது. நல்லவேளையாக உதவியாளர் வந்தார். அவரை உதவியாளர் என்பதுதான் பொருத்தம். ஒவ்வொருமுறையும் அவர் காணாமல் போய்விடுவார். உணவுக்கூடத்தில் நடக்கும் உரையாடலைச் சுவாரசியமாகக் கேட்டுக்கொண்டிருப்பார். நான் அவரைத் தேடிச்சென்று “உதவி உதவி” எனக் கத்தினால் மட்டும் வந்து அறைச்சாவியைக் கொடுக்கவும் மாணவர்களுக்கான அறைகளைப் பிரிக்கவும் உதவுவார் உதவியாளர்.
அடுத்தடுத்து தென்னரசு, தர்மா ஆகியோர் வந்து சேர்ந்ததும் கொஞ்சம் நிதானமடைந்தேன். ஒரு அரங்கில் எந்தக் கட்டளையும் இல்லாமல் செயல்படுபவர்கள் அவர்கள். நிறைய நிகழ்ச்சிகளை எடுத்து நடத்தியவர்கள். அரவின், சண்முகா, புஸ்பவள்ளி, சுந்தரி ஆகியோர் பேருந்திலிருந்து இறங்கியதும் நேராக அரங்குக்கு வந்தனர். பேருந்துக்கு பொறுப்பாளர் சண்முகா. அனைவரையும் திரட்டிக்கொண்டு பொறுப்பாக வந்து சேர்வது பெரும்பணி. அதை செவ்வனே செய்திருந்தார். இடையில் நெடுஞ்சாலையை விட்டு ஈப்போ நகரத்துக்குள் மதிய உணவுக்காக நுழைந்தது எனக்கு பதற்றத்தை ஏற்படுத்தியது. அது சரியான முடிவல்ல. அப்படி நுழைந்ததால் ஒரு மணி நேரமாவது தாமதமாகும். திங்கள் பொதுவிடுமுறையாததாலால் சாலை நெரிசலில் சிக்கினால் எல்லாம் தொலைந்தது. கொஞ்சம் கடுமையாகவே சண்முகாவிடம் கைப்பேசியில் பேசிவிட்டேன். நல்லவேளையாக பேருந்து உரிய நேரத்தில் வந்து சேர்ந்தபோதுதான் மனம் சமாதானம் அடைந்தது.
செய்ய வேண்டிய பணிகள் அனைவருக்கும் விளக்கப்பட்டது. எல்லாருக்கும் என்ன செய்ய வேண்டுமெனத் தெரிந்தது. இனி சிக்கலென ஒன்றுமில்லை. அரங்கை சரியாக ஐந்து மணிக்கு தொடக்குவதுதான் 8.30க்கு முடிக்கும் வழி. தாமதமானால் பசியில் பார்வையாளர்கள் நெளியக்கூடும். அது அரங்கின் சீர்மையைக் கெடுக்கும்.
***
நிகழ்ச்சி திட்டமிட்டபடி சரியாக 5 மணிக்குத் தொடங்கியது. பதிவின்படி மொத்தம் 360 பங்கேற்பாளர்கள். அவர்களில் 160 மாணவர்கள். கிட்டத்தட்ட 200 பொதுப் பார்வையாளர்கள் வந்திருந்தனர். கோலாலம்பூரில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் அறிமுகமான முகங்களே இருக்கும். இம்முறை நிறைய புதியவர்களைப் பார்த்தேன்.
நிகழ்ச்சிக்கு ஆசிரியர் பயிற்சி கல்லூரி மாணவர்களின் வருகையை மிக முக்கியமானதாகக் கருதினோம். அதற்கு முதன்மை காரணம் தமிழ் விக்கியின் பயன்பாட்டை அவர்கள் வழியாகவே மலேசியாவில் முன்னெடுக்க முடியும். மலேசியாவின் குறிப்பிடத்தக்க ஆளுமைகள், வரலாற்றுத் தருணங்கள், இலக்கியவாதிகள், இயக்கங்கள் என பெரும் தரவுச் சேமிப்புத்தளமாக உள்ள தமிழ் விக்கி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்குப் பெரும் கொடையாக அமையக்கூடியது. அதை வந்தடையும் பாதையாக இந்த விழா வடிவமைக்கப்பட்டிருந்தது. எனவே, மாணவர்களின் வருகையும் விரிவுரையாளர்களின் வருகையும் இந்த முயற்சி முழுமையடைய உதவுவதாய் அமைந்தது.
நிகழ்ச்சி பரபரப்பில் இருந்தபோது ஒரு பெரியவர் வந்து என் தோளில் கைகளைப் போட்டு, “வல்லினத்தைப் பற்றி எழுதப்படும், பரப்பப்படும் அவதூறுகளை பல ஆண்டுகளாகப் பார்த்து வருகிறேன். ஆனால் அவை எதுவும் என்னைப் பாதிக்கவில்லை எனக்காட்டத்தான் இந்த நிகழ்ச்சிக்கு தைப்பிங்கில் இருந்து நானே காரை ஓட்டி வந்தேன்,” என்றார்.
அது உண்மை. அவதூறுகள் குசுக்கள் போன்றவை. அதன் சத்தம் அனைவரையும் ஒருமுறை திரும்பிப்பார்க்க வைக்கும். பின்னர் மூக்கை மூடிக்கொள்ள வைக்கும். கடைசியாக நாகரீகமற்று வெளியிட்ட உறுப்பு அருவருப்பாக நோக்கப்படும். அவதூறு செய்யும் வாய்க்கும் துர்காற்றை விடும் மலவாய்க்கும் பெரிய வித்தியாசமில்லை. அரங்கில் குழுமியிருந்த வாசகர்களின் எண்ணிக்கை இதுபோன்ற அவதூறுகள் உண்மையான செயல்பாடுகளை ஒருபோதும் முடக்காது என்பதையே எங்களுக்கு நிரூபித்தது.
திருமலர் அறிவிப்பாளராகப் பணியாற்றினார். நான் சுருக்கமாக என் வரவேற்புரையை முடித்துக்கொண்டேன். தொடர்ந்து தமிழ் விக்கியில் பங்களித்தவர்களுக்கான நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது. அது உண்மையில் அழகான கண்ணாடி நினைவுச்சின்னம். ஆர்டர் கொடுத்த அவற்றைச் சேகரிக்கச் சென்றபோது ஒவ்வொன்றையும் எடுத்து ஆராய்ந்து பார்த்தேன். சிலவற்றில் தெறிப்பு இருந்தது. மறுபடியும் செய்துகொடுக்கும்படி கூறிவிட்டுதான் நியூசிலாந்து புறப்பட்டேன். திரும்பியதும் அவை நன்முறையில் கிடைத்தன.
நிகழ்ச்சி நடந்துகொண்டிருக்கும்போதே தமிழ் விக்கி பங்களிப்பாளர்களை சபையில் நானே அறிமுகம் செய்து வைத்திருக்க வேண்டுமெனத் தோன்றியது. ஒவ்வொருவரின் பணியும் மகத்தானது. அவர்கள் எடுத்துக்கொண்ட சிரமங்களுக்கு இந்த நினைவுச்சின்னமெல்லாம் சிறியது. அதை நானே விரிவாகச் சொல்லியிருக்கலாம் என நினைத்துக்கொண்டேன்.
தொடர்ந்து கலை சேகர் குரலில் தமிழ் விக்கி காணொலி ஒளிபரப்பானது. கைதட்டல்களுக்கு மத்தியில் அருண் மகிழ்நன் அவர்கள் மலேசியத் தமிழ் விக்கியை அதிகாரபூர்வமாக அறிமுகம் செய்தார். தமிழ் விக்கியின் தேவை குறித்தும் அவர் முன்னெடுக்கும் முயற்சிகள் குறித்தும் அவ்வுரை அமைந்திருந்தது. தொடர்ந்து நான்கு கல்வியாளர்களுடனான கலந்துரையாடலை அ. பாண்டியன் வழி நடத்தினார். நேரம் போதாமையால் பல கேள்விகளைக் கேட்க முடியாமல் போனது. சிறப்புரை ஜெயமோகன். ஜெயமோகன் தன்னை முதன்மையான கலைஞன் என மட்டுமே முன் வைப்பவர். அந்த உரையைச் செவிமடுத்தால் ஏன் அவர் நம் மத்தியில் வாழும் தமிழின் முக்கிய சிந்தனையாளர் என்பதற்கான காரணம் புரியலாம்.
நிகழ்ச்சிக்கு இடையில் மைக் கோளாறு. சமீப காலமாக வல்லினம் நிகழ்ச்சிகளில் மைக் கோளாறு செய்வது ஒரு சடங்காகிவிட்டது.
இரண்டாவது அங்கம் ஷேக்ஸ்பியர் நாடகம். பயிற்சியின்போது முழுமையாகப் பலமுறை நாடகத்தைப் பார்த்திருந்தாலும் முழு ஒப்பனையுடனான நடிகர்களை அன்றுதான் பார்த்தேன். எம்.எஸ். மணியத்தின் அனுபவத்தின் வெளிப்பாடு தெரிந்தது. பயிற்சியின்போது நான் பெரிதும் ஏமாற்றம் அடைந்தது ‘ஹேம்லட்‘ நாடகத்தில்தான். அதில் உள்ள சிலருக்கு நடிப்பு கூடிவரவில்லை. நான் அதை நீக்கிவிடலாம் எனக்கூட நினைத்தேன். ஆனால் ஆசிரியர் விஸ்வநாதன் கடைசி நேரப் பயிற்சிகளை வழங்கி மாணவர்களைத் தேற்றியிருந்தார். ஒப்பனையும் அவர்கள் நடிப்புக்கு பலம் சேர்த்தது. ‘ரோமியோ ஜூலியட்‘, ‘ஒத்தெல்லோ‘ ஆகிய நாடகங்கள் நாங்கள் எதிர்பார்த்ததுபோலவே சிறப்பாக முடிந்தன.
ஒவ்வொரு நாடகத்தின் தயார்நிலைக்கு மத்தியில் சிறிய உரைகளை ஏற்பாடு செய்தோம். அவ்வகையில் மை ஸ்கில்ஸ் நிறுவனர் சி. பசுபதியும் நிர்வாக இயக்குனர் தேவாவும் தாமதமாகவே வந்து சேர்ந்திருந்தார்கள். நான் நினைத்ததுபோல திங்கள் பொதுவிடுப்பு கடுமையான சாலை நெரிசலை உண்டாக்கியிருந்தது. கலும்பாங்கில் இருந்து வழக்கமாக மூன்று மணி நேரத்தில் வர வேண்டிய பயணம் ஆறு மணி நேரமாக நீண்டிருந்தது. நல்லவேளையாக முதல் நாடகம் தொடங்கும் முன்னரே அவரும் தேவாவும் வந்து சேர்ந்தனர். பசுபதி அவர்கள் சிறு உரை ஒன்றை வழங்கினார். அதுபோல பி. கிருஷ்ணன் அவர்களை உரையாற்ற அழைத்தபோது அதிக நேரம் நின்றதால் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. பி. கிருஷ்ணன் உரை சுருக்கமாக அமைந்தது. அவரை அமரவைத்து அடுத்த நாடகத்தைத் தொடங்கினோம். இறுதியாக நாடக ஆசிரியர் விஸ்வநாதன் நெகிழ்ச்சியுடன் கூடிய தன் உரையை முடித்தவுடன் நிகழ்ச்சியும் நிறைவை கண்டது. திட்டமிடப்பட்ட நேரத்தைவிட பதினைந்து நிமிடம் தாமதம். அதனால் பாதகமில்லை.
இரவு உணவு ஆசிரமத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வல்லினத்துக்கு பணியாற்றிய நண்பர்களுக்கு உணவு கிடைக்கவில்லை எனத் தாமதமாகவே தெரிந்தது. அ. பாண்டியனிடம் அவர்களுக்கு உணவு வாங்கிக்கொடுக்கும் பொறுப்பை ஒப்படைத்து உறங்கச் செல்லலாம் என முடிவெடுத்தேன். பின்னர் லதா, லோஷினி இருவருக்கும் உணவு கிடைக்கவில்லை எனத் தெரிந்ததும் அவர்களை இரவுணவுக்கு அழைத்துச் சென்றேன். அப்படியே காரை லூனாஸில் விட்டு பேய்ச்சி நாவலின் களத்தைக் காண்பித்தேன். அந்தக் காட்சிகள் என் கண்களுக்கு மட்டுமே தெரிந்திருக்கும். லதாவும் லோஷினியும் இருள் சூழ்ந்த பகுதிகளை உற்று உற்று பார்த்து ஏதோ புரிந்துகொண்டனர். உண்மையில் நான் லூனாஸைப் பார்க்க ஆசைப்பட்டேன். அங்கு முன்னர் ஒரு சிறுவன் இருந்தான். காட்டுக்கும் இருளுக்கும் அஞ்சாத தன்னந்தனியான சிறுவன். கனவுகளுடன் அவன் அலைந்து திரிந்த வீதிகளைப் பார்க்க முயன்றேன்.
லூனாஸைப் பார்த்ததும் மெல்ல மெல்ல களைப்பு கரைந்திருந்தது.
***
மறுநாள் காலை உணவு எட்டு மணிக்கெல்லாம் தொடங்கிவிடும். கல்லூரி மாணவர்களுக்கான குளியல் அறை குறைவாக இருந்ததால் தாமதமாகிவிடும் எனும் அச்சம் இருந்தது. எனவே அவர்களை காலை 7 மணிக்கு எழுப்பிவிடும் பொறுப்பை அரவினிடம் கொடுத்திருந்தேன். பின்னர் நிமலனிடம் 7.15க்கு மாணவர்களை எழுப்பச் சொன்னேன். ஆனால் காலை 6.45க்கு நானே சென்று அனைவரையும் எழுப்பி தயாராகும்படி கூறிவிட்டு வந்தேன். கூடுதலாக சுவாமியும் ஒவ்வொரு அறையாக சென்று, மாணவர்களை எழுந்து புறப்படும்படி 7.10 வாக்கில் சொல்லிவிட்டு வந்தார். இப்படி ஒரு காலையை அம்மாணவர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
திட்டமிட்டபடி பி. கிருஷ்ணன் அரங்கு காலை 9 மணிக்குத் தொடங்கியது. ஏறக்குறைய 150 பார்வையாளர்கள். சரிபாதி மாணவர்கள். முதலில் லதா, பி. கிருஷ்ணன் குறித்து விரிவாக அறிமுகம் செய்து உரையாற்றினார். பிரம்ம வித்யாரண்யம் அரங்கு பெரியது. அதில் மின் பதாகை வைத்தது எவ்வளவு நல்லதாகப் போனது என்றே தோன்றியது. பேசுபவரின் உருவத்தை பின்னால் இருக்கும் பார்வையாளர் வரை துல்லியமாகப் பார்க்க முடிந்தது.
தொடர்ந்து ஜெயமோகனின் உரை. சிங்கப்பூரில் தான் வருகை தரும் எழுத்தாளராகப் பணியில் இருந்த மூன்று மாத அனுபவத்திலிருந்து தொடங்கி பி. கிருஷ்ணன் படைப்புலகத்தின் தனித்தன்மையைக் கூறி, ஊடே விமர்சனத்தையும் முன்வைத்தார்.
நிகழ்ச்சியில் வல்லினம் பதிப்பகம் மூலம் வந்த ‘பி. கிருஷ்ணன் படைப்புலகம்’ நூலை ஜெயமோகன் வெளியிட உத்ராபதி பெற்றுக்கொண்டார். உத்ராபதி என் மதிப்புக்குரியவர். இடைவிடாத தமிழ்ப்பணி ஆற்றுபவர். தெளிந்த சிந்தனையாளர். வல்லினம் நிகழ்ச்சிக்காக தன் சுய முயற்சியில் பேராக் மாநிலத்தில் இருந்து ஒரு பேருந்தில் இலக்கிய வாசகர்களைத் திரட்டிக்கொண்டு வந்திருந்தார்.
இந்நூலுக்காகப் பிரத்தியேகமாக ஓவியர் மணிவண்ணனால் வரையப்பட்ட பி. கிருஷ்ணன் அவர்களின் உருவப்பட ஓவியத்தை ஜெயமோகன் பி. கிருஷ்ணனுக்கு வழங்கினார். தொடர்ந்த பி. கிருஷ்ணன் நூல்களை சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி வெளியிட எழுத்தாளர் லதா பெற்றுக்கொண்டார். தொடர்ந்து லதா, பி. கிருஷ்ணன் ஆளுமை குறித்து உரையாற்றினார்.
அரங்கு தொடங்கியது. அரங்கினை எழுத்தாளர் முனைவர் இளம்பூரணன் வழிநடத்தினார். இளம்பூரணனிடம் எப்போதும் ஒரு கச்சிதம் உண்டு. இந்த அரங்கையும் அவ்வாறே வழிநடத்தினார். எழுத்தாளர்கள் அழகுநிலா பி. கிருஷ்ணனின் நகைச்சுவை நாடகம், ஜி.எஸ்.எஸ்.வி நவின் பி. கிருஷ்ணனின் துப்பறியும் நாடகம், அ. பாண்டியன் பி. கிருஷ்ணன் சிறுகதைகள், அரவின் குமார் மொழிபெயர்ப்பு கதைகள், அருண்மொழி நங்கை, கணேஷ் பாபு ஆகியோர் பி. கிருஷ்ணனின் ஷேக்ஸ்பியர் மொழிபெயர்ப்பு என பி. கிருஷ்ணன் புனைவுலகின் வெவ்வேறு பகுதிகள் குறித்து உரையாற்றினர். இளம்பூரணன் இவ்வரங்கை சிறப்பாகக் கையாண்டதோடு கட்டுரையாளர்களுக்கு நினைவு பரிசுகளையும் எடுத்து வழங்கினார்.
நிறைவாக பி. கிருஷ்ணனின் ஏற்புரை. சுருக்கமான உரை அது. இளம் எழுத்தாளர்களிடம் நம்பிக்கை ஊட்டக்கூடிய உரையாகவும் அமைந்தது.
நிகழ்ச்சியின் நிறைவில் மாணவர்களுக்குச் சான்றிதழ் வழங்கப்பட்டது. GTLF அங்கீகாரம் பெற்ற அச்சான்றிதழ் மாணவர்களின் புறப்பாட நடவடிக்கை புள்ளிகளுக்கு உதவும் என தயார் செய்திருந்தோம்.
மதிய உணவுடன் பிரம்ம வித்யாரண்யத்தில் நடைபெற்ற இலக்கிய நிகழ்ச்சிகள் நிறைவடைந்தன. நான் பினாங்கு நிகழ்ச்சியில் பங்கெடுக்கவிருந்த அ.பாண்டியன், லதா, அரவின் குமார் ஆகியோரை மதிய உணவை வெளியே எடுக்கச் சொல்லி விரட்டிக்கொண்டே இருந்தேன். எங்காவது சாலை நெரிசலில் சிக்கி பதற்றமாகச் சென்று சேர்ந்தால் அரங்கு முறையாக நடைபெறாது. அவர்கள் நிதானமாக இருக்க வேண்டும் என்பதே என் எண்ணமாக இருந்தது. GTLF வழங்கியுள்ள வாய்ப்பை முறையாகப் பயன்படுத்த வேண்டும். இனி தமிழுக்கு ஒவ்வொரு ஆண்டும் இத்தகைய வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். அதற்கு நேர நிர்வாக மிக முக்கியமானது.
பினாங்கு புறப்பட இருந்த நண்பர் குமரனிடம் ஜெயமோகனின் ஆங்கில நூல்களை ஒப்படைத்து அவற்றை GTLF புத்தகக் கடையில் சேர்ப்பிக்கும்படி கேட்டுக்கொண்டேன். எல்லாம் முடிந்தது என மனதுக்குத் தோன்றியதும் நானும் புறப்பட்டேன்.
நான் ஜெயமோகன், அருண்மொழி நங்கை, ஜி.எஸ்.எஸ்.வி நவின் மற்றும் அவர் மனைவியை ஏற்றிக்கொண்டு தங்கும் விடுதிக்குச் சென்றேன். போகும்வழியில் அடுத்தகட்ட திட்டங்கள் குறித்து ஜெயமோகனிடம் பேசி ஆலோசனை பெற்றேன். ஜெயமோகன் எனது சிறிய திட்டத்தை பிரம்மாண்டமாக்கி மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தினார்.
எனக்கும் ஜெயமோகனுக்கும் ஐந்து நட்சத்திர விடுதியான Prestige Hotel பதிவு செய்யப்பட்டிருந்தது. அவர்களை விடுதி அறைக்கு அனுப்பிவிட்டு காரை பார்க்கிங்கில் போட்டு அறையில் நுழைந்தேன். ஐந்து நட்சத்திர விடுதி என்பதற்கான அடையாளங்கள் இருந்தன. குளியலறை மட்டும் முப்புறமும் கண்ணாடி சூழ இருந்தது. உள்ளே குளிப்பவரை வெளியில் உள்ளவர் பார்க்கலாம். குளிப்பவர் விரும்பினால் துணியால் அந்தக் கண்ணாடியை சுற்றி மறைக்கலாம். ஆனால் மறைப்புத் துணி வெளிப்புறம் இருந்தது. “உள்ள இருக்கீங்களா?” என யாராவது விரும்பினால் விலக்கிப் பார்க்கலாம்.
நான் கொஞ்ச நேரம் படுத்து ஓய்வெடுத்தேன். நெடுநேரத்திற்குப் பிறகு தனியாக இருப்பதை உணர்ந்தேன். மனம் அமைதியானது. ஐந்து நட்சத்திர விடுதிகளின் தூய்மையும் மிதமான குளிரும் அப்படியான அமைதி இருப்பதாக நம்ப வைக்கின்றதோ என்னவோ. நாலறை மணிக்கு ஜி.எஸ்.எஸ்.வி நவினிடம் இருந்து டீ சாப்பிட அழைப்பு. நான் செல்ல மறுத்துவிட்டேன். ஒரு நிகழ்ச்சி முடிவான பிறகு அரை மணி நேர இடைவெளியில் எதையும் புதிதாகச் செய்யக்கூடாது. அது புதிய சிக்கல்களை உருவாக்கினால் தாமதம் நிகழும். மலேசிய – சிங்கை அரங்கு மாலை ஐந்து மணிக்கு. நான் 4.50க்குக் கீழே இறங்கினேன். யாரையும் காணாததால் ஜெயமோகனுக்கு அழைத்தேன். அவரும் டீ சாப்பிட சென்றவர்களுக்குக் காத்திருந்தார். உடனே கீழே வருவதாகக் கூறினார். நிகழ்ச்சி நடக்கும் அரங்கு எங்கே இருக்கிறது எனத் தெரியவில்லை. தேடுவதில் மேலும் தாமதமாகிவிடலாம். என்னால் நிகழ்ச்சி தாமதப்படக்கூடாது என அரங்கை தேடி நடக்கத் தொடங்கினேன். அங்கிருந்த என் மாணவனிடம் சொல்லி ஜெயமோகனுக்குப் பாதைகாட்டி அழைத்துவரப் பணித்தேன். ஐந்து மணிக்கு எழுத்தாளர்கள் அரங்கின் முன்வரிசையில் அமர்ந்தனர். சில நிமிடங்களில் உரையாடல் தொடங்கியது.
அரங்கு சிறப்பாகவே நடந்தது. ஏறக்குறைய ஐம்பது பேர் பார்வையாளர்களாக இருந்தனர். அரவினுடைய கேள்விகள் தெளிவாக இருந்தன. இடையில் சிங்கப்பூர் விருதுகள் குறித்தும், விமர்சனங்கள் குறித்தும் உரையாடப்பட்டது.
எனக்கு எப்போதும் இவை இரண்டு குறித்து மாற்றுக்கருத்துண்டு. எந்த விருதும் அதன் உருவாக்கத்திற்குப் பின்னால் ஓர் ஆளுமை இருக்கும்போதே கவனம் பெறுகிறது. அல்லது, அதுவரை அவ்விருது கிடைத்தவர்களின் வரிசை முக்கியமானதாக உள்ளது. அவ்வகையில் எனக்கு சிங்கப்பூரில் வழங்கப்படும் எந்த விருதுகள் மீதும் மதிப்பில்லை என்றேன். சிங்கையில் ஒருவர் இருபது வருடங்கள் எழுதினால் அங்கு உள்ள எல்லா விருதுகளும் அவருக்குக் கிடைத்துவிடும். அதனால் தமிழ் இலக்கியச் சூழலில் எந்தக் கவனமும் கிடைத்துவிடாது. அதுபோல விமர்சனம் என்பது பெரும் படைப்பாளிகளிடம் இருந்து வெளிப்படும்போதோ கறாரான விமர்சனங்களை தொடர்ந்து முன்வைத்த ஒருவரால் கவனப்படுத்தப்படும்போதுமே முக்கியத்துவம் அடைகிறது. சிங்கையில் எழுதும் சித்துராஜ் விருதுகளால் எனக்கு அறிமுகமாகவில்லை; எழுத்தாளர் ஜெயமோகனின் விமர்சனத்தால் அறிமுகமானார் என்றேன்.
தொடர்ந்து வெவ்வேறு கேள்விகள் வழி அரங்கு நகர்ந்து நிறைவடைந்தது. தொடர்ந்து பி. கிருஷ்ணனின் ஷேக்ஸ்பியர் நூல்களை ஜெயமோகன் வெளியிட கோ. புண்ணியவான் பெற்றுக்கொண்டார். பின்னர், கணேஷ் பாபு பி. கிருஷ்ணனுடனான கலந்துரையாடலைச் சிறப்பாக நடத்தி முடித்தார். பலரும் பி. கிருஷ்ணன் பதில்களால் கவரப்பட்டனர். ஆங்காங்கு கைதட்டல்கள் எழுந்தன. பி. கிருஷ்ணனுக்கான அரங்காக அது மாறியது. அவர் இங்கு வந்ததற்கான சிறந்த அரங்கு என நினைத்துக்கொண்டேன்.
அரங்கு முடிந்தபிறகு பேருந்தில் வந்தவர்கள் ஆசிரமத்தை நோக்கி புறப்பட்டனர். பாண்டியன் அரவின் குமாருடன் அவர் கைப்பேசிக்கான மின்னூட்டியைத் தேடி அலைந்தார். நான், தென்னரசு, லதா, லோசினி நால்வரும் gurney walk பகுதியில் உள்ள உணவகத்தைத் தேடி அலைந்தோம். நிமலன், செல்வம், பரிமித்தா, கௌசல்யா ஆகியோர் எங்களைத் தேடி அலைந்தனர். ஒரு வழியாக எல்லோரும் gurney walk பகுதியில் சந்தித்து இரவு உணவை முடித்தோம். தென்னரசு மறுநாள் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தங்கும் விடுதி ஒன்றை புக்கிங் செய்திருந்தார். அதை தவிர்க்கச் சொல்லி என் அறையில் வந்து தங்கிக்கொள்ள பணித்தேன். ஒப்புக்கொண்டார்.
அந்த ஐந்து நட்சத்திர விடுதி வரவேற்பு பானமாக வழங்கிய இலவச வைனை சுவைத்துவிட்டு விடுதியில் சென்று படுத்தோம். கண்ணாடி குளியல் அறை குறித்த எச்சரிக்கையை செய்துவிட்டே குளிக்கச் சென்றேன். கற்பு முக்கியம் அல்லவா.
மறுநாள் காலை நானும் ஜெயமோகனும் கலந்துகொள்ளும் அரங்கு. அதற்கு மனதளவில் தயாராக வேண்டுமென காலை உணவை முடித்துவிட்டு நானும் தென்னரசுவும் அறைக்குத் திரும்பியபோது பாலின் ஃபான் என்னை எதிர்கொண்டார். அவரே GTLF அமைப்பின் பொறுப்பாளர். “கடைசியாக உன்னைப் பார்த்துவிட்டேன்” என்றார். அது கொஞ்சம் அதிருப்தியின் வெளிப்பாடுதான். சிரித்து மழுப்பினேன். “இன்றைய உனது அமர்வை ஆங்கிலத்தில் செய்துவிடு,” என திடீரென ஒரு குண்டைப்போட்டார். “உடனடியாகச் செய்வது எனக்குச் சிரமம்,” என்றேன். “லதா இருக்கிறாரே… அவரை மொழிபெயர்க்கச் சொல்லலாமே” என்றார். என் காலை நிம்மதி கெட்டது.
ஜெயமோகனுக்கு அதிலெல்லாம் பதற்றம் இல்லை. ஆங்கிலம் என்றால் ஆங்கிலம் தமிழ் என்றால் தமிழ் எனச் சாதாரணமாக இருந்தார். “லதாவை வழி நடத்தச் சொல்லவா?” எனக்கேட்டேன். “எனக்கு நீங்க நடத்துனா நல்லா இருக்குமுன்னு தோணுது. அப்புறம் உங்க இஷ்டம்” என்றார். எனக்கெங்கே தனியாக இஷ்டம் என இருக்கிறது. நானே குழம்பிப்போய் கிடந்தேன்.
அந்த விடுதியில் நமக்கு ஏற்பாடு செய்யப்பட்ட மாடியைத் தவிர வேறு மாடிகளுக்குச் செல்ல முடியாது. அப்படி ஒரு தொழில் நுட்பத்துடன் மின்தூக்கி வடிவமைக்கப்பட்டிருந்தது. லதா இரண்டாவது மாடி. நானும் ஜெயமோகனும் நான்காவது மாடி. லதாவின் விடுதி அறை எண்ணுக்கு அழைத்து விரிவாக என்ன செய்யலாம் எனத் திட்டமிட்டோம். நான் வைத்திருந்த கேள்விகளை அனுப்பினேன்.
அரங்கு சரியாக பத்து மணிக்குத் தொடங்கியது. எனது தயக்கங்கள் எல்லாம் மெல்ல மெல்ல களைந்தன. எனது கேள்விகளை கச்சிதமாகவே முன்வைத்தேன். லதா கேள்விகளை மொழிமாற்றி அரங்குக்கு வழங்கினார். ஜெயமோகன் ஆங்கிலத்திலும் தமிழிலும் ஒரே நேரத்தில் பதிலளித்தார். அவர் சொன்னதுபோல ஒருவேளை அவர் இன்னும் சில ஆண்டுகள் தீவிரமாக ஆங்கிலம் பயின்றால் உலகம் முழுவதும் பிற மொழிகளில் அறியப்படும் எழுத்தாளராகி விடுவார். நிகழ்ச்சியின் இறுதியில் ஜெயமோகனின் முதல் ஆங்கில நூலான Stories of the True வெளியிடப்பட்டது. ‘முரசு’ முத்து நெடுமாறன் வெளியிட எழுத்தாளர் யுவராஜன் பெற்றுக்கொண்டார்.
நிகழ்ச்சி ஒருவழியாக அந்த அங்கத்துடன் நிறைவடைந்தது.
அனைவரும் அரங்கை விட்டு வெளியே வந்தோம். அருண் மகிழ்நன் தொடர் திட்டங்கள் குறித்து உரையாடுவதற்காக உணவகம் ஒன்றில் சந்திக்கலாம் என்றார். நான் என்னை நம்பி வந்த நண்பர்களைப் பாதியில் விட்டுச் செல்வதில் சங்கடம் உண்டாகலாம் எனத் தயங்கினேன். அவர்களுக்கு வேறு திட்டங்கள் இருந்தன. ஜெயமோகன் மற்றும் நண்பர்கள் அனைவரிடமும் விடைபெற்றேன். ஜெயமோகன், “புனைவில் கவனம் செலுத்துங்கள். இதுபோன்ற நிகழ்ச்சி ஏற்பாடுகள் புனைவு மனதை கெடுக்கும். இவற்றைக் குறைத்துக்கொள்ளலாம்” என்றார். முழுமையாக ஆமோதித்து “சரி” என்றேன்.
கார் முழுவதும் பல பொருட்கள் இருந்தன. நல்ல மழை. ஆனால் சில நாடகப் பொருட்களை செல்லும் வழியில் கலும்பாங்கில் இறக்கி வைக்க வேண்டியிருந்தது. காரை கலும்பாங்கில் உள்ள மை ஸ்கில்ஸ் கல்லூரியில் விட்டேன். என் காரை பின் தொடர்ந்து நண்பர்கள் வந்தனர். திடீரென குறுக்கே ஒரு சீனர் மோட்டார் சைக்கிளில் புகுந்தார். நான் பிரேக்கை பிடித்து அழுத்தி நிறுத்தினேன். சில சென்டி மீட்டர்களில் அவரை இடிப்பதில் இருந்து காத்துக்கொண்டேன். ஆனால் அவர் பயத்தில் தடுமாறி விழுந்தார். அது முழுக்க சீனக்கம்பம். நம்மீது தவறில்லாவிட்டாலும் எதுவும் நிகழலாம். காரிலேயே அமர்ந்து காத்திருந்தேன். அவர் முறைத்தபடி போய்விட்டார். கலும்பாங்கில் சென்று நாடகப் பொருட்களை இறக்கி வைத்தோம்.
மழை உடலை நனைத்திருந்தது. அது உடலை மட்டும் நனைப்பதாக அப்போது தோன்றவில்லை.
அங்கிருந்த இரும்பு நாற்காலியில் அமர்ந்து கொஞ்ச நேரம் மழையைப் பார்த்தேன். இது இந்த ஆண்டில் தமிழில் நடந்த மாபெரும் விழா. இந்த விழாவுக்குப் பின்னால் பலரது உழைப்பு உண்டு. அப்படி உடன் வந்த ஒவ்வொருவராக என் நினைவுக்கு வந்தார்கள். இவர்கள் எல்லாம் இணைந்துதான் இந்நிகழ்ச்சி சாத்தியமானது. யாராவது வந்து கைக்கொடுத்து எனக்கு வாழ்த்து சொல்லும்போது எனது கையை அவர்கள் அத்தனை பேரின் சார்பாகவுமே பிடித்துக்கொள்கிறேன்.
மீண்டும் மழையைப் பார்த்தேன்.
முன்னே பொழிவது ஆயிரம் ஆயிரம் துளிகள். இதற்கு பங்களித்தவர்களைப்போல நானும் ஒரு துளி. எல்லாம் இணைந்துதான் மழையாகின்றன. பின்னர் ஏதோ தாவரத்தை உயிர் வாழ வைக்கின்றன. இம்முயற்சி அப்படி மலேசியாவில் தமிழ் இலக்கியத்தை நீடித்து வாழ வைக்கும் ஒரு பெருமழை தருணமெனத் தோன்றியது.
நினைவு கூரும் கட்டுரை.உதவியவர்களை யாரையும் விட்வடக்கூடாது என்ற பொறுப்புணர்வோடு எழுதப்பட்ட கட்டுரை.
வணக்கம் நவீன். வல்லினம் GTLF விழாவின் முழுவெற்றிக்கும் மூலமானவர் எனும் பாராட்டுக்குரியவர் நீங்கள். இந்த நிகழ்ச்சிக்கான தொடக்கத் தயாரிப்பிலேயே உங்கள் அக்கறையும் கவனமும் வெளிப்பட்டதை நான் உணர்ந்தேன். உங்களின் இந்தக்கட்டுரை அதற்குச்சான்று. இந்நிகழ்ச்சிக்கு இணைந்துழைத்த அனைவரும் பாராட்டுக்கும் மதிப்பிற்கும் உரியவர்களே. உலகத்தரத்திற்கு ஈடான தமிழ் இலக்கியப் பெருவிழாவை தயாரித்து சீர்மையுடன் வழங்கியது அரும்பெரும் காரியம். மலேசிய தமிழ் இலக்கியத்திற்கு இது ஒரு மைல்கல். இப்பெரும் பொறுப்பை செவ்வனேயாற்றி சரித்திரம் படைத்துள்ளீர்கள். இவ்விழாவின் ஒவ்வொரு அங்கமும் கவனத்திற்குரியது. கெடாவில் பிரம்மவித்யாரண்யத்தில் ஐயா. ஜெயமோகனை சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. அவரின் புனைவுலகிற்குகள் புதிதாக நுழைந்த சிறுவனாக என்னை எண்ணிக்கொண்டிருந்த போதே அவரை நேரடியாக சந்திப்பது நெகிழ்வாக இருந்தது.அவரருகே நின்று புகைப்படம் எடுத்தப்பின் “ஊமைச்செந்நாய்” குறித்த கேள்விகள் மண்டைக்குள் உருள அவரோடு பேச எண்ணி அருகில் சென்று பின் தயங்கிப் பின்வாங்கினேன். “வெண்கடலில்” அவர் கையெழுத்தோடு விடைப்பெற்றது இன்றளவும் மனதிற்கு நெருக்கமான நிகழ்ச்சியாக பதிந்திருக்கிறது.