மெழுகுடல்
எம்.டி.சி பேருந்தின் அத்தனை அத்தனை கண்களும் என்னைத்தான் பார்க்கின்றன, துருவேறி தோலைக் கீறிட கரந்து காத்திருக்கும் சிறு கம்பி நுனிகளைப் போல. சிறு வயதில் அப்பா ஒரு முறை சொல்லியிருக்கிறார் “சிறு துரு உடலில் ஏறினால் கூட அது நீரி நீரி உயிரை எடுத்துவிடும்.” இப்போது நான் நூறு மடங்கு மென்மை கொண்டது போல என் உடலை உணர்ந்தேன். எவர் கண்ணையும் நேராகப் பார்ப்பதைத் தவிர்த்தேன். எல்லாக் கண்களும் ஒன்றையே கூறின, நன்கு பழகிய நடத்துனரின் கண்களும் கூட. குரூரமாக விலக்கி நிறுத்தி அவை கூறின, ‘அழகி!’ என்று. சில நின்று நிலைத்தன, சில தீண்டி சென்றன, சில அசூயை கொண்டு அதை மறைக்க எள்ளலைச் சூடின. பார்வைகள் அத்தனை எடை கொண்டவையா? எத்தனை ஆடைகளைச் சுற்றிக் கொண்டாலும் அதிலிருந்து மறைத்துக் கொள்ள முடியாது எனத் தோன்றியது. கையிலிருந்த சிறு கைக்குட்டையை எடுத்து வாயை மூடி மறைத்துக் கொண்டேன். முன்தினம் வேக்ஸிங் செய்த இடம் இன்னமும் சிவந்து எரிந்து கொண்டுதான் இருந்தது. மேலுதடும் நெற்றியும் கன்னங்களும் புறங்கையும் எல்லாம் தோலை உரித்து எடுத்தது போல.
அழகு நிலையத்திற்கு நான் சென்றது முடியை சிறிது குட்டையாக வெட்டிக்கொள்ளவே. அவர்கள் முதலில் என் முடியின் நுனிகளுக்கு லேசாகச் செந்நிறம் பூசலாம் என்று கூறினர். பின் இரு பக்க முடிக்கற்றைகளையும் லேசாகச் சுருட்டி கர்ல் செய்தனர். என் முகம் வேறொன்றாக மாறியிருந்தது, மேலும் அழகாக, பண்பட்டவளாக. இவை எல்லாம் உனக்குள் இருப்பவைத் தான் என அவர்கள் மீண்டும் மீண்டும் கண்களால் உறுதியளித்தார்கள். “மேடம் நாங்க ஒன்னுமே பண்ணல” என்று அடிக்கடி சொன்னார்கள்.
“மேடம் ஹேர் க்ரோத் கொஞ்சம் நல்லாவே இருக்கு, லைட்டா வேக்ஸிங் பண்ணிகிட்டீங்கன்னா நல்லா இருக்கும், ஹனிபீ வேக்ஸ் தான் யூஸ் பண்றோம், முதல் தடவை கொஞ்சம் வலி இருக்கும், ஆனா ஸ்கின்னே வேற மாறி ஆயிடும்,” என்றாள் ஒருத்தி.
நான் ஏதோ ஒரு கணத்தில் மெல்ல ’ஆம்’ என்று தலையசைத்ததாக நினைவு. அவர்கள் என்னைச் சூழ்ந்து கொண்டு வேக்ஸிங் செய்வதற்கான ஆயத்தங்களைச் செய்ய துவங்கினர். ஒரு பெண் என்னிடம் ஒரு டின்னைத் திறந்து அடர்பழுப்பு நிறத்தில் இருந்த உறைந்த மெழுகு குழைவைக் காட்டினார். நான் தெரிந்தது போல சரியென்று தலையசைத்தேன். அவர்கள் அதை ஒரு சிறு அடுப்பில் வைத்து மெல்ல இளக்கி உருக்கினர். அதன்பின் இருவராக அமர்ந்து கொண்டு இரு கைகளிலும் உருகிய மெழுகைத் தடவினர். முதலில் நான் அதன் சூட்டில் ‘ஆ’வென்று கத்திவிட்டேன். “ஏ, கொஞ்சம் ஹீட் கம்மி பண்ணு” அந்தப் பெண் மென்மையாக மற்றவரிடம் கிசுகிசுத்தார்.
ஒரு மணி நேரம் வேக்ஸிங் நடந்தது. முதலில் மூன்று நான்கு படலங்களாக வேக்ஸை தடவி அதன் மேல் மட்டம் உலர்வதற்கு முன் ஸ்ட்ரிப் பேப்பர் ஒன்றை அதன் மீது வைத்து அழுத்தி நீவி தோலோடு தோலாக ஒட்டிவிட்டார்கள். பின் எதிர்பாராத ஒரு கணத்தில் சட்டென்று வலியுடன் அதை பிடித்து உரித்து எடுத்தார்கள். உரித்த பேப்பரை அப்பெண் என்னிடம் காண்பித்தார், ஏளனம் தொனிக்கும் சிறு புன்னகையுடன். வெள்ளைத்தாளில் கரிய படலமாக ஒட்டியிருந்த மயிர்கற்றைகளைக் கண்டேன். ஒருகணம் அருவருத்து உடல் உலுக்கிக் கொண்டது. வலியில் கண்கள் திரையிட நான் தலையைக் குனிந்து கொண்டேன். அதன் பின் ஒன்றையும் நான் கவனிக்கவில்லை. எல்லாம் முடித்து வெளியில் இறங்கும்போது தான் முதல் பார்வையைச் சந்தித்தேன். மின்னதிர்ச்சி போல அது உடலில் பரவி சிலிர்த்தது, என்ன நான் செய்துவிட்டேன்?
அம்மா ஏசினார், ”ஏன் இந்த கருமத்தையெல்லாம் பண்ணுன?,” அப்பாவும் தம்பியும் கூட என்னை வித்தியாசமாகப் பார்த்தனர். வித்தியாசமாக என்றால் ஒரு ஆணின் பார்வையுடன். “நீ வேற ஏதோ பொண்ணு மாறி இருக்க” என்றான் தம்பி சிரிப்புடன். எனக்கு ஒவ்வாமையில் உடல் கூசியது. வீட்டைவிட்டு வெளிவரும்போது அம்மாவிடம் சீண்டும் மெல்லிய குரலில் சொன்னேன், ”நான் உன் பொண்ணு இல்ல, போதுமா?”
பேருந்து கல்லூரி வாசலில் சென்று நிறுத்த இறங்கிக் கொண்டேன். வாசலிலேயே கல்ச்சுரல்ஸ்க்கான அலங்காரங்கள் முழு மூச்சாக நடந்திருந்தன. எல்லாரும் அவரவர் கேளிக்கைகளிலும் கொண்டாட்டங்களிலும் மூழ்கி சிரித்து நின்றனர். யாரும் என்னைக் கவனித்தது போல தெரியவில்லை. நான் உள்ளே நுழைந்து அவனுக்கு அழைப்பு கொடுத்தேன். பின்னாலிருந்து என் கைகளை வந்து பற்றிக் கொண்டான்.
சட்டென்று என் முகத்தைப் பார்த்த அவன் ஒரு கணம் அதிர்ந்தான். நான் புன்னகையுடன் கேட்டேன், “நல்லா இருக்கேனா?”. அவன் என் கைகளை இறுக்கிக் கொண்டு “ம்ம்” என்றபடி தலைகுனிந்து கொண்டான். கைகள் கோர்த்து சிறிது தூரம் நடந்தபின் மீண்டும் என்னைப் பார்த்தான். வெட்கத்தில் நான் பார்வையை விலக்கிக் கொள்ள அருகில் வந்து என் காதில் சொன்னான் “பயங்கர அழகா இருக்க”
அன்று மாலை முழுவதும் அவ்வார்த்தைகளையே மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தான். ”பயங்கர அழகு”. ஒவ்வொரு முறையும் எனக்குள் நெருப்பு போல அது பற்றியெரிந்து அடங்கியது. கேண்டீன் சென்றோம், மேடை நிகழ்வுகளைப் பார்த்தோம், நடந்தோம். அவன் பற்றிய கைகளை ஒரு கணம் கூட விடவில்லை. இரவானதும் கிளம்பும் முன் அவனது கல்லூரி விடுதிக்குச் செல்லும் வழியில் விளக்குகள் இல்லாத அந்த மரங்களடர்ந்த சாலைக்கு நாங்கள் சென்றோம். வழியை ஒருமுறை பார்த்துவிட்டு அவன் என்னை அணைத்தான். சிவந்து எரிந்து கொண்டிருந்த என் மேலுதட்டில் மெல்ல ஈரமாக முத்தமிட்டான். என் உடல் உருகி வழிவது போல குழைந்தது. அவன் தோள்களைப் பற்றிக்கொள்ள முயன்றேன். மெல்ல மீசையடர்ந்த உதடுகளால் அவன் முத்தமிட்டான், மீண்டும், மீண்டும், மீண்டும்…
அன்று இரவு வீட்டிற்குச் செல்லும் வழிநெடுக என் கண்களில் நீர் பெருகிக் கொண்டே இருந்தது. வீட்டில் சென்று கை முகம் கழுவியபோது புறங்கையில் நீட்டியிருந்த சிறு முடியைக் கண்டேன். விடுபட்ட ஒற்றை முடி. சட்டென்று பார்வை ஒன்று என் மீது விழுவதை உணர யாரும் காணும் முன் தன்னிச்சையாக என் கை அதை பிடுங்கி எறிந்தது.
நரகம்
“என் குடும்பத்த நாசம் செஞ்சவன் அந்த தாயோளி”
நான் அமைதியாகச் சிறு புன்னகையுடன் சொன்னேன் “ஆமா செரிதான? உனக்க அம்மையதான அவரு…”
அவன் இலகுவாகவில்லை. “நீ அகராதி மயிரு பேசாத கேட்டியா?” என்றான் சீற்றத்துடன்.
அவனை உண்மையிலேயே தொந்தரவு செய்துவிட்டதாக உணர்ந்தேன். அவன் அப்போது நல்ல போதையிலும் இருந்தான். பல நாட்களுக்குப் பின் நாங்கள் சந்தித்துக் கொள்ளும் இரவு அது. ஊர் வழியாக அரசல் புரசலாகக் கேட்ட கதையை அவன் வாயால் கேட்க வேண்டும் என்ற ஆசை என்னிடம் இருந்தது.
“செரி நீ சொல்லு என்னாச்சு?”
அவன் தந்தை எங்கள் இருவருக்கும் கல்லூரியில் ஆங்கில வகுப்பு எடுத்திருக்கிறார். கண்ணியமான, மிடுக்கான மனிதர். அவர் மேல் அவனுக்கு அத்தனை வெறுப்பு வந்திருந்தது ஆச்சர்யமாக இருந்தது. அதுவும் அவர் இறந்து ஓராண்டுக்குப் பின்னும்.
மீண்டும் ஒரு விஸ்கி லார்ஜை ஒற்றையடியில் விழுங்கிவிட்டு அவன் சொன்னான்.
”அவன் செத்த நாள்லெருந்து இன்ன வரைக்கும் நிம்மதியா ஒரு பொட்டு உறக்கம் இல்லலே. குடும்பத்தையே பைத்தியம் பிடிக்க வச்சிட்டு போயிட்டான்”
“என்னத்துனால இறந்தாரு? கேன்சர்னு கேள்விப்பட்டேன்”
“கேன்சரு… மயிரு…”
சற்று நேரம் அமைதியாக இருந்துவிட்டு அவன் நடந்ததைச் சொல்ல தொடங்கினான்.
மனோஹரன் சார் என்று நாங்கள் அழைத்த கிறிஸ்டொஃபர் மனோஹரனுக்குக் கல்லூரி பேராசிரியராகி குடும்பம் நடத்த வேண்டிய சூழல் இருக்கவில்லை. ஷேக்ஸ்பியர் பக்தர், வகுப்பரையில் ‘கிங் லியரா’கவே சமயங்களில் மாறிவிடுவதுண்டு. பரம்பரையாக அவருக்கு வந்த சொத்துக்கள் ஏக்கர் கணக்கில் ரப்பர் எஸ்டேட் இருந்தது. விரும்பி செய்த பேராசிரியர் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின் பரம்பரையாக இன்னுமொன்று வந்து கூடியது. அறைக்குள் தனக்குத் தானே பேசிக்கொள்ள துவங்கினார். நள்ளிரவில் எழுந்து தலையை ஓங்கியோங்கி அறைந்து கொண்டார், வாழ்நாளில் ஒருபோதும் உச்சரித்திடாத கெட்ட வார்த்தைகள் அவர் வாயில் எழுந்தன. அவரை வீட்டிலேயே ஓர் அறைக்குள் வைத்துப் பூட்ட வேண்டிய சூழல். மனைவி மட்டுமே அவரை நெருங்கி உணவு வைக்க முடிந்தது. வயிற்றில் அல்சர் முற்றி குடலின் ஒரு பகுதியை வெட்டி எடுத்தனர். உச்சக்கட்ட வலியில் இருந்தார். “பற்றி எரியுதுடா, பற்றி எரியுது” என்று அறைக்குள் இரவு பகலாக ஓலமிட்டார். ஒரு கட்டத்தில் அது புற்றுநோயாக உருவெடுக்க மருத்துவர்கள் ஒன்றும் செய்ய முடியாது என்று கூறிவிட்டனர்.
இறப்பு நெருங்குகிறது என்றுணர்ந்ததும் அவர் சட்டென்று அமைதியானார். அவ்வபோது அறைக்குள் விசும்பி அழுவது மட்டும் கேட்டது. வலியின் முனகல்கள். ஒருநாள் இரவு மகனை அழைத்துத் தனக்கொரு டேப் ரிக்கோர்டர் வேண்டும் என்று கேட்டார். நண்பனுக்கு அது எதற்கு என்று புரியவில்லை. ஆனால் பாதியாக உடல் குறைந்து படுக்கையில் இருந்த அந்தக் கம்பீரமான மனிதனைப் பார்த்தபோது அது அவர் கடைசி ஆசையென தெரிந்தது.
ரிக்கோர்டரும் காலி கேசெட்டுகளும் வாங்கி கொடுத்த பிறகு அறைக்குள் ஷேக்ஸ்பியரின் வசனங்களும் உரைகளும் கேட்கத் துவங்கின. பதிவு செய்வதும், திரும்ப கேட்பதும். தனிமையில் அவருக்கு அது நல்ல துணையானது. ஓர் இரவு மட்டும் யாரும் விழித்திராத நேரம் அவன் அவர் அறைக்குள்ளிருந்து மீண்டும் பழைய ஓலங்களும் அறை கதவை தட்டும் அறையும் ஓசையையும் கேட்டு விழித்துக் கொண்டான். மறுநாள் மீண்டும் எந்தத் தடயமும் இருக்கவில்லை. அது அவனது கற்பனையோ கனவோ என்றெண்ணி மறந்துவிட்டான்.
சில நாட்களிலேயே அவர் உடல்நிலை சட்டென்று சரிந்து முற்றிலும் செயலிழந்தார். ஒரு நாள் காலையுணவு உண்டு அரை மணி நேரத்தில் இறந்தார். நண்பனின் அம்மாதான் படுக்கையின் அருகே மேசை மீதிருந்த அந்தக் கடிதத்தை கண்டெடுத்தார். அதில் அவரது கடைசி ஆசையாக, தன்னை அடக்கம் செய்யும்போது அந்த டேப் ரிக்கோர்டரை ஒலிக்க விட்டு பின் அதையும் தன்னுடன் சேர்த்தே புதைக்க வேண்டும் என்று எழுதியிருந்தார்.
“நான் சொன்னேன். இதெல்லாம் சரிப்பட்டு வராது, ஒழுங்கா மந்திரம் ஓதி ஜெபிச்சு குழிக்குள்ள இறக்குத சோலிய பாப்போம்னு. அம்மா விடல, கடைசி ஆசல, அதுல இதுலன்னா. நான் என்ன சொல்லது?
நான் செமிட்டேரில குழி கெடைக்குத ஆத்திரத்துல இது ஒன்னும் கேட்டுக்கல. கடைசில குடும்பம் மொத்தமும், தங்கச்சியும் அவ புருஷனும் எல்லாம் அடக்கத்துக்கு கூட்டி, ஃபாதர விளிச்சு வந்து ஜெபிச்சு சிலுவ காட்டின பிறகு அம்மா ரெக்கார்டர அமித்தினா. நல்ல சாந்தமா அவருக்க குரல்ல ரெக்கார்ட் பேசுது.
அம்மைட்டயும், தங்கச்சிட்டையும் என்கிட்டையும் மன்னிப்பு கேட்டாரு, ஈஸ்வர பயத்தோட இருக்கனும்னு சொன்னாரு. பின்ன இங்கிலீசுல ஏதோ நாலு வார்த்தை. கொஞ்ச நேரத்துல ரெக்கார்ட் நின்னுச்சு. ஃபாதர் கைகாட்ட முகத்துல வெள்ளத்துணிய போர்த்தி பெட்டிய மூடி ஆணி அடிச்சு உள்ள இறக்கியாச்சு. ஒவ்வொருத்தரா மண்ணெடுத்து போடுத நேரம் உள்ளேருந்து பெட்டிய முட்டுத சத்தம். மரத்துல ஓங்கி ஓங்கி தட்டுற மாறி, மிதிக்க மாறி. உள்ளேருந்து அவர் குரலு, ‘லேய் உசுரோட புதைக்குதியலாலே, தேவடியா பயலுவொலா, லேய் புண்டாச்சி மவனே, சொத்து வேணும்னாலே? லேய், நான் உயிரோட தாம்ல இருக்கேன். லேய் கொலகாரப்பாவியளா, நரவத்துக்கு போவியல’னு உள்ளெருந்து சத்தம்.
அதகேட்டு பொம்பிளையாளுவள்லாம் கத்தி கூப்பாடு போடுதாவ. தங்கச்சி அங்கேயே மயங்கி விழுந்துட்டா. நான் பிள்ளைகள காதை அடச்சி பொண்டாட்டிட்ட சீக்கிரம் கூட்டிட்டு போடின்னு கத்துகேன். அம்மை ஓடி வந்து என் காலு பிடிக்கா, ’லேய் திறந்து விடுல அவர, அவரு சாவலலே’ன்னு அழுகா. நான் ஃபாதர பாத்தேன். ‘ஜெபிச்சு மூடின பிறகு திறக்க கூடாது, எங்கெருந்து வருதுன்னு நமக்கு தெரியாது’ன்னாரு. எனக்கு வந்த ஆத்திரத்தில கண்ணுமண்ணு தெரியல ‘புண்டாமோன மூடுங்கல மண்ண போட்டு’னு கத்துனேன். எல்லாரும் போயி நானும் குழியெடுத்தவங்களும் மட்டும் தான் நின்னோம். மண்ணெல்லாம் போட்டு மூடி முடிச்ச பொறவும் அடியில குரல் கேக்குவு ‘திறந்து விடுல பாவீ’னு”
எனக்கு பேச்செழவில்லை. அவன் சற்று மூச்செடுத்து தணிந்து கிட்டத்தட்ட அழும் தொனியில் சொன்னான். “மூணு மாசத்துல அம்மை சீக்கு வந்து செத்து போனா, தங்கச்சி இன்னும் சைக்காட்ரிஸ்ட பாக்குதா, என் பிள்ளைகளுக்கும் மனைவிக்கும் யாருக்கும் நிம்மதியில்ல. ஊர்ல எல்லாவனும் நான் சொத்துக்காக உசிரோட புதைச்சேன்னு சொல்லானுவ.” அவன் உடைந்து அழத் துவங்கினான். ஒருவாறு அவனை தேற்றிவிட்டு அன்றிரவு அங்கிருந்து கிளம்பினேன்.
அவ்விரவுக்குப் பின் ஓரிரு மாதங்களில் நண்பன் தற்கொலை செய்து கொண்டான். பல நாட்களாகியும் என்னால் அது தந்த கொடுங் கனவுகளிலிருந்து மீள முடியவில்லை. இரவில் யாரோ பலமாகக் கதவுகளைத் தட்டும் சத்தம்.
புதையல்
முத்தைய்யா செட்டி புதையல் தேடிய கதை உங்களுக்கு தெரியுமா? இரண்டாம் உலகப்போரின் காலத்தில் லேவாதேவி கம்பனி ஒன்றில் வெறும் கணக்குபிள்ளையாக வேலை பார்த்து, பர்மாவில் அவர் சம்பாதித்து வந்த காசையெல்லாம் கொண்டு தெலுகு பேசும் கோமுட்டி செட்டிகளிடமிருந்து கூவம் நதிக்கரையில் அவர் அக்காலத்தில் வாங்கி போட்ட நிலத்தின் மதிப்பே இன்று பல நூறு கோடிகளுக்கு விலை போகும். முப்பது வருடங்கள் பொறுத்திருந்தால் கூட அந்த நிலமே புதையல் தான் என்பதை அவர் அறிந்திருப்பார். அவர் வாங்கிய நிலத்தில் இன்று சென்னையிலேயே பெரிய வணிக வளாகம் ஒன்று நிற்கிறது. ஆனால், இந்தச் சொத்துபத்து எதையும் அனுபவிக்க அவர் அதிக காலம் உயிரோடு இருக்கவில்லை. திருமணம் செய்துகொள்ளாத அவரது சொத்துக்கள் எல்லாம் தம்பி அழகப்பனுக்கும் வாரிசுகளுக்கும் சென்று சேர்ந்தது. இன்று சென்னையில் மிகப் பெரும் கோடீஸ்வரர்கள் அவர்கள்.
முத்தைய்யா செட்டியின் வாழ்க்கையை வீணாக்கியது, அவர் உயிரே போவதற்கு காரணமாக இருந்தது ஒரு மலையாள மாந்திரீகன். கடைசி வரை அவன் யாரென்று எவராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்படி ஒருவன் உண்மையில் இருந்தானா அல்லது அது ஐம்பது வயது வரை பர்மாவில் தனிமையில் வாழ்ந்த முத்தைய்யாவின் கற்பனையா என்பதும் இன்றுவரை சந்தேகமாகவே இருக்கிறது.
ஆனால் இது எதற்கும் இப்போது அர்த்தமில்லை. ‘கிராண்ட் மால்’ என்று பெயரிடப்பட்ட அந்த மாபெரும் வணிக வளாகத்தில், சொகுசாக அமர்ந்து காபி அருந்தும் யுவயுவதிகளுக்கு, தங்கள் கால்களுக்கடியில் இப்படி ஒரு கதை புதைந்திருப்பது தெரிய வாய்ப்பில்லை.
முத்தைய்யா இறந்தது சற்று வினோதமாகத் தான். நெடுநாட்கள் அந்த நிலம் விலைபோகாததற்கும் அதுவே காரணம். அதற்கு ஒருதலைமுறை கடக்க வேண்டியிருந்தது.
நடந்தது இதுதான். கூவம் நதியோரமாக இப்போதைய சேத்துப்பட்டு அருகே அவர் வாங்கிப்போட்டிருந்த இருபத்தைந்து ஏக்கர் நிலமும் மொத்தமாக ஒரு சதுப்பு வெளி. வளர்ந்து வரும் மாநகரத்தின் குப்பைகள் அப்போதே நதியை அசுத்தமாக்க தொடங்கியிருந்தன. நிலத்தின் ஒரு சிறு பகுதியை வண்டி குதிரைக்காரர்களுக்கு லாயம் கட்டுவதற்காக முத்தைய்யா முதலில் விலைபேசி விற்றார். லாயத்திற்கான அஸ்திவாரம் அவர் முன்னிலையில் தோண்டப்பட்டபோது காலில் வந்து இடறிய பழைய தங்க நாணயத்தைச் சட்டென்று யாரும் அறியாது சேப்பில் எடுத்து வைத்துக்கொண்டார். வீட்டிற்குச் சென்று பார்த்தபோது தெரிந்தது, அது பழைய பிரிட்டீஷ் கிழக்கிந்திய கம்பனியின் நாணயம். உடனடியாகக் கொடுத்த விலைக்கு இரு விலைகொடுத்து நிலத்தைத் திரும்ப வாங்கிக் கொண்டார். அங்கு தான் தொடங்கியது கிறுக்கு. அதன்பின்னரே அந்த மாந்திரீகனை அவர் கண்டதாகச் சொல்லப்படுகிறது. அவன் முத்தைய்யாவிடம், “பெரும் நிதி ஒன்று உங்கள் நிலத்தில் இருக்கிறது, ஏழு தலைமுறை செல்வமாக மண்ணுக்கடியில் லட்சுமி குடி இருக்கிறாள்” என்று கூறியனுப்பினான். மண்ணில் புதைந்த லட்சுமியை மீட்டெடுக்கும் நல்லெண்ணம் தந்த உத்வேகத்தோடு முத்தைய்யா முதலில் செய்தது, மொத்த நிலைத்தையும் சுற்றி இரண்டாள் உயரத்திற்கு ஓலை கீற்றால் ஒன்றுமே வெளியே தெரியாதது போல அடைத்தது.
பின் அவரைச் சாகும் வரை யாரும் பகல் வெளிச்சத்தில் பார்க்கவில்லை. மாலைகளில் இருட்டிய பிறகு உணவு பொருட்களும் சில சில்லரை தேவைகளும் வாங்க வெளியில் வந்தார். மண்ணைத் தோண்டுவதற்கான பொருட்கள் பல மைல்கள் கடந்து சென்று யாரும் அறியாத இடத்தில் வாங்கிக் கொண்டார். புதையல் விஷயம் வேறு எந்த மனித ஜீவிக்கும் தெரியக் கூடாது என்பது மாந்திரீகனின் கட்டளை. முற்றிலும் தனிமையில் இரவு பகலாக முத்தைய்யா தோண்ட துவங்கினார். சதுப்பில் குழியெடுப்பது சாதாரணமான வேலையில்லை. கொஞ்ச நாட்களில் உடல்நிலை குன்றி காய்ச்சலில் விழ, கேட்பாரற்று நிலத்தின் மத்தியில் செய்வித்த தன் குடிலில் தனியாகச் சில நாட்கள் கிடந்து மீண்டு வந்தார். அதன்பின் தோண்டுவதை முறையாக்கினார். இரவுகளில் மட்டும் கைவசம் இருந்த சிறு சிம்னி விளக்கின் ஒளியில் தோண்டுவதும், பகலில் ஓய்வெடுப்பதும் என. ஒருமுறை கடும் மழையில் தோண்டிய மண் அனைத்தும் மீண்டும் சரிந்து குழிக்குள் விழ, அதன்பின் ஒவ்வொரு நான்கைந்து நாட்களுக்கும் ஒரு நாள் மண்ணை அள்ளி சற்று தள்ளி நதியோரம் சென்று கொட்டினார். ஐந்தாறு மாதங்களில் நம்ப முடியாத ஆழம் தோண்டிவிட்டார். ஆனால் புதையலின் தடயம் என ஏதும் தெரியவில்லை.
பின் ஒருநாள் இரவு தோண்டும்போது பாதி உடைந்த மண்டையோடொன்றும் சில எலும்புகளும் வந்தன. சிம்னியின் அரைவெளிச்சத்தில் சிரிக்கும் அதை கண்டு ஒரு கணம் உடல் விதிர்த்து பின்னால் விழுந்துவிட்டார். மேலும் தோண்ட தோண்ட மண்டையோடுகளும் எலும்புக்கூடுகளும் வர, பதறி மாந்திரீகனிடம் சென்றார். அவன் சொன்னான், “லக்ஷ்மி வருவதற்கு முன் வேறு யாரு வருவா? தோண்டு, எவ்வளவுக்கு எவ்வளவு எலும்பும் ஓடும் கிடைக்கிதோ அவ்வளவு சொர்ணம் அடியிலே உண்டு.”
அதன்பின் முத்தைய்யா வேறெதையும் பார்க்கவில்லை. எலும்புகளும் மண்டையோடுகளும் நூற்றுக்கணக்கில் பெறுகின. முன்பேதோ தாது வர்ஷ பஞ்சத்தில் இறந்தவர்கள். எலும்புகளை மண்ணோடு சேர்த்து நதிக்கரையில் இட்டால் ஆட்கள் கண்டு விடலாம் என்பதால் தன் குடிலிலேயே சேமிக்க தொடங்கினார். ஒவ்வொரு எலும்புக்கூடும் வரப்போகும் தங்கத்தை நினைவூட்ட மகிழ்ச்சியில் துள்ளினார். ஒவ்வொரு இரவும் எலும்புகள் பெருகின, பஞ்சத்தில் நலிந்து உடைந்த ஓடுகளும், குன்றி வளைந்த எலும்புகளும். குழந்தைகள், பற்களற்ற முதியவர்கள், பெண்கள். அடுக்கடுக்காக எழுந்து வந்தபடி இருந்தனர். இரண்டாம் தாது வர்ஷம், முதலாம் தாது வர்ஷம், காலரா, சின்னம்மை. ஒருகட்டத்தில் குடிலில் படுக்க இடமில்லாமல் அவர்கள் பெறுகினர். முத்தைய்யா பகலெல்லாம் அவற்றை சுத்தியலால் அடித்து நொருக்கி பொடியாக்கினார். கண்களிலும், சுவாசத்திலும் எலும்புத் துகள்கள் சென்றடைத்தது. மூச்சுமுட்ட அவற்றின் நடுவிலேயே படுத்துறங்கினார். உணவும் உறக்கமும் அறிதானது. மாலையில் வெளிவந்தபோதும் ஆட்களிடம் பேசுவதைத் தவிர்த்தார். பின் ஒரு கட்டத்தில் முற்றிலும் வெளியே வராமல் ஆனார்.
இரண்டு மாதங்கள் வரை அவரை யாரும் பார்க்காமல் ஆனபோது சுற்றும் குடிகளில் மக்கள் ஏதோ விபரீதத்தை உணர்ந்து ஓலைப்படலைப் பிரித்து உள்ளே சென்று பார்த்து அதிர்ந்தனர். வானிலிருந்து எரிகல் ஒன்று வந்து விழுந்தது போல பிளந்து கிடந்த மாபெரும் பள்ளத்தின் நடுவே எலும்புகளும் மண்டையோடுகளும் சூழ அணைத்தபடி பாதி அழுகிய நிலையில் விழித்த கண்களுடன் முத்தைய்யா சிரித்துக் கொண்டிருந்தார். பேய் சிரிப்பு. அருகே குன்றுபோல் தோண்டி குவித்திருந்த மண்மேட்டில் காணப்படாது பாதி புதைந்து கிடந்தன தங்கமும் வெள்ளியுமாக ஏராளமான நாணயங்கள்.
அஜிதனின் அருமையான கதைசொல்லி! சிரித்துக்கொண்டே பயந்தேன் என்று சொன்னால் சரியாக இருக்குமென நினைக்கிறேன்.
மூன்று கதைகளும் மிகவும் விறுவிறுப்பாக நகர்ந்தன.அஜிதன் கதை சொல்லும் பாங்கு அருமை.