‘ஒரு எழுத்தாளனின் முக்கியத்துவம், மற்றவர்களுக்கு விவரிக்க நேரமில்லாத விடையங்களை விவரிப்பதே’ என்கிறார் ஜேம்ஸ் பால்டவின். ஆனால், மனிதர்களின் இயல்பையும் யாதர்த்தமான உள்ளுணர்வுகளையும் படம்பிடித்துக் காட்டுவது எளிதானது அல்ல. மனிதர்கள் மாற்றத்திற்கும் மறதிக்கும் பழக்கப்பட்டவர்கள். இப்படிப்பட்ட கட்டமைப்பிற்குள் சிக்கிக் கொண்ட நமக்குத் தனது எழுத்துகளின் மூலம் அனுபவத்தை ஆறப்போட்டுச் சிந்திக்கத் தூண்டுகிறார் தி. ஜானகிராமன். அந்த எழுத்தாளுமை குறித்து தமிழாசியா ஏற்பாட்டில் தொடர்ந்து நடந்துவரும் சிறுகதை வாசிப்பு பகிர்வு கலந்துரையாடலின் அவரது சிறந்த கதைகளில் நான்கினைத் தேர்ந்தெடுத்துக் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டோம்.
தி.ஜா தமிழ் புனைவு இலக்கிய உலகின் குறிப்பிட்டத்தக்க சிறந்த கலைஞர்களில் ஒருவர். இவர் ஏறத்தாழ நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் மட்டுமின்றி நாவல்கள், மேடை நாடகங்கள் மற்றும் பயண நாவல்களையும் எழுதியுள்ளார். ‘மோக முள்’ மற்றும் ‘அம்மா வந்தாள்’ போன்ற நாவல்களால் தமிழ் வாசகர்களுக்குப் பரிச்சயமானவர். பிரமாண குடும்பத்தில் பிறந்ததால் அவருடைய சிறுகதைகளில் பிராமணர்களின் சமஸ்கிருதம் கலந்த தமிழ் மொழிநடையையும் வார்த்தை பிரயோகத்தையும் அதிகம் காணலாம். இதற்கான விளக்கத்தை தி.ஜா ‘எதற்காக எழுதுகிறேன்’ எனும் கட்டுரையில் தெளிவுப்படுத்துகிறார். “நான் பார்த்தவர்களையும் பார்த்ததுகளையும் பற்றி எழுதுகிறேன். அல்லது என் கண்ணிலும் மனதிலும் பட்டவர்களையும் பட்டவைகளைப் பற்றியும் எழுதுகிறேன். சில சமயங்களில் அம்மாமி பாஷையாக இருக்கிறதே என்று சிலர் சொல்கிறார்கள். நான் என்ன செய்ய? அம்மாமிகளைத்தான் எனக்கு அதிகமாகத் தெரியும். ஆத்தாள்களைப் பற்றி ஏதோ சிறிதளவு தான் தெரியும். தெரிந்த விகிதத்துக்குதான் எழுத்தும் வரும்,” என்கிறார். இத்தகைய கதைகள் படிப்பதற்கும் புரிந்து கொள்வதற்கும் சிரமமாக இருந்தாலும், அவருடைய எழுத்தாளுமையால் நுட்பமான உணர்வுகளை வாசகர்களுக்குக் கடத்துவதில் வெற்றி கண்டுள்ளார்.
தி.ஜாவின் ‘பாயாசம்’ எனும் சிறுகதையில் எங்களது கலந்துரையாடலைத் தொடங்கினோம். கதையின் முக்கிய கதாபாத்திரமான சாமநாது தனது அண்ணன் மகனான சுப்பராயன் மீதிருக்கும் மன ஒவ்வாமையும் வன்மத்தையும் கதையோட்டத்தின் வழியே முடிச்சுகளாக அவிழ்கிறார் தி.ஜா. உணர்ச்சிகரத் தன்னுரையாக (Dramatic Monologue) கதை நகர்த்திச் செல்லப்படுகிறது. காலை பிரார்த்தனை முடித்துவிட்டு காவிரியை நோக்கி நடக்கிறார் சாமநாது. செல்லும் வழியெங்கும் இடது வலதில் கண்ணில் படும் பள்ளிக்கூடம் பாலம் எனச் சுப்பராயனின் தயவால் ஊருக்குள் ஏற்பட்ட வளர்ச்சியைப் பார்த்துப் பொறாமைப்பட்டு முனங்கிக் கொண்டிருக்கிறார். இவை அனைத்தும் சுப்பராயனின் சுய முயற்சியின் பலன் என்றும் சொத்தில் ஒரு பங்கை சாமநாதுவுக்கும் எழுதி வைத்திருப்பதாகவும் அவருடைய இறந்த மனைவி வாலாம்பாளின் குரல் நினைவுபடுத்துகிறது. அவை நிதர்சனமாக இருப்பினும் அவற்றை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை இழந்திருந்தார் சாமநாது. வீட்டிற்கு வந்ததும் சுப்பராயனின் இளைய மகளின் திருமண மாலை மாற்றும் வைபோகத்தில் கலந்து கொள்ள துரிதப்படுத்துகிறாள் கணவனை இழந்து வீட்டோடு வந்து விட்ட சாமநாதுவின் நான்காவது பெண். சபையில் தலை காட்டிவிட்டு அங்கிருந்து நகர்ந்து கொல்லைப்பக்கமாக வருகிறார். அங்கு அண்டாவில் பாயாசம் கொதித்துக் கொண்டிருக்க அதை முழு பலத்துடன் கவிழ்கிறார் சாமநாது. பணியாளர்கள் என்ன ஆயிற்று என்று அடித்துப் பிடித்து ஓடி வரப் பெரிய எலி இருந்ததாகவும் அவர் மட்டும் ஜோட்டியை கவிழ்க்கவில்லை என்றால் எல்லோருக்கும் எலிபாசனம் தான் கிடைத்திருக்கும் என்று அதட்டுகிறார். “அவ்ளோ பெரிய ஜோட்டியை எப்படி சாய்ச்சேள்?” என மகள் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாமல் நகர்கிறார் சாமநாது.
பொறாமை பொதுவான ஆனால் குழப்பமான உணர்வு. தன்னுடைய சுய துக்கத்திலிருந்தும் தோல்வியிலிருந்தும் தப்பித்துக் கொள்ளத்தான் சாமநாது பொறாமைப்பட்டுச் சுப்பராயனிடம் போட்டிப் போட நினைக்கிறார். இருப்பினும் அவருடைய விரக்தியைப் பாயாசம் அண்டாவைக் கவிழ்ந்து கழ்புணர்ச்சியைத் தீர்த்துக் கொண்டது நல்லதுதான். ஏனெனில், வாழ்க்கையில் தனக்குக் கிடைக்காத ஒவ்வொன்றையும் நினைத்துப் புளுகிப்போன மனதிற்கு, அந்த ஒரு நொடி நிதர்சனத்தை விட்டுத் தப்ப வைத்து தன்னைச் சிறந்தவனாக சாமநாதுவை நம்ப வைத்திருக்கிறது. எழுத்தாளர் ம. நவீன் அவர்களின் விளக்கம் இக்கதையைப் புதிய கோணத்தில் அணுக வைத்தது. சாமநாது கைவிடப்பட்ட மனிதராக தி.ஜாவால் சித்தரிக்கப்பட்டிருக்கிறார் எனவும் அதுவே அவரை பொறாமை முழுமையாக ஆட்கொள்ள வழி வகுத்துள்ளது என்றார். தன்னை சிறந்தவன் என்று பறைசாற்றிக்கொள்ள ஒன்று ஒருவரைத் தாக்கி சண்டையிட்டு அழிக்க வேண்டும். இரண்டாவது ஆபத்திலிருந்து ஒருவரைக் காப்பாற்றியோ உதவியோ பெருமையைத் தேடிக்கொள்ள வேண்டும். சாமநாது இரண்டாவது யுக்தியைப் பயன்படுத்தி தன்னை சிறந்தவனாக மாற்றிக் கொண்டார். அதுவும் தன் தம்பி கொண்டுள்ள பண பலத்தைக் கடந்து அவர் கொண்டுள்ள உடல் பலமே அனைவரது உயிரையும் காப்பாற்றியது எனத் தன்னை நிரூபிக்க முயன்றார் என கூடுதல் விளக்கம் கொடுத்தார்.
கலந்துரையாடலில் அடுத்து ‘பரதேசி வந்தான்’ எனும் சிறுகதை. இக்கதை வக்கீல் அண்ணா எனும் முக்கிய கதாபாத்திரத்துடன் பயணிக்கும் பஞ்சாமியின் கண்ணோட்டத்தில் எழுதப்படப்பட்டிருந்தது. வக்கீல் அண்ணா ஆளுமையும் கம்பீரமும் நிறைந்த ஒருவர், எந்த வழக்கை எடுத்தாலும் திறமை மிக்க தனித்தன்மையுடன் வாதாடி வெற்றி காண்பவர். அவருடைய வாழ்க்கையில் சிறு தவற்றையும் குற்றத்தையும் பொறுத்துக் கொள்ள இயலாதவர். இப்படிப்பட்டவர் தனது மகனின் கிருகப்பிரவேச நிகழ்ச்சியில் பரதேசி ஒருவரைப் பந்தியில் பார்த்ததும் இரைச்சலிட்டு வெளியே துரத்துகிறார். பரதேசி அடுத்த மாதம் இதே நாளில் நீ என்னை அழுது கொண்டே சாப்பிடுவதற்கு அழைப்பாய் என்று சபிக்கிறான். கோபத்துடன் பரதேசியை இழுத்து வரச் சொல்லிய வக்கீல் அண்ணாவைச் சமாதானப்படுத்துகிறார் பஞ்சாமி. மாலையில் கச்சேரியின் நடுவில் கொல்லைபக்கமாகச் சென்ற வக்கீல் அண்ணாவின் மகன் மயங்கி விழுந்து உயிரிழக்கிறான். மகனை இழந்த துயரத்தில் நடமாடிக் கொண்டிருந்த வக்கீல் அண்ணாவின் வீட்டிற்கு அவர் சொன்னது போல் ஒரு மாதம் கழித்து வருகிறார் பரதேசி. “உன்னுடைய துயரத்தைச் சேர்க்க நான் வரவில்லை. வாக்கு கொடுத்தேன் என்பதற்காகத் தான் வந்தேன்” என்கிறார் பரதேசி. வக்கீல் அண்ணாவின் அகங்காரத்தின் விளைவுதான் தன் மகனின் இழப்பு என்பதை உணர்த்தவே பரதேசியின் உபயம்.
ஒரு சில வாசகர்கள் கதையை ஆன்மீக ரீதியாக எழுதப்பட்டிருக்கலாம் என்ற கருத்துக்களை முன்வைத்தனர். மேலும் பசியில் பரதேசி சாபம் விட்டதால் தான் வக்கீல் அண்ணாவின் மகன் இருந்ததாகவும் கருத்துக்கள் வந்தது. எனக்கு இக்கதை ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர்வினை உண்டு எனும் சித்தாந்தத்தை விளக்குகிறது. வக்கீல் அண்ணா தான் சிறந்தவன் என்ற கர்வமும் சுயநலமும் கொண்டிருந்தவர். தவறு இழைத்தவர்களுக்குக் கூட தண்டனையிலிருந்து தப்ப வைத்து எந்தக் குற்ற உணர்வும் இல்லாமல் நடமாடியவர். அவருடைய வாழ்க்கையின் நீதிபதியாக இதுவரை இருந்தவர் முதல் முறையாக அவர் இழைத்த அநீதியின் வீரியம் பரதேசியின் வருகையால் புலப்படுகிறது. அன்பையும் அறத்தையும் சுயநலத்துடன் அணுகாமல் பொது நலமாகக் கையாளும்போதுதான் நாம் உண்மையாகவே வாழ்க்கையில் நீதிபதியாக இருக்க முடியும். சில கருத்துகள் இக்கதையை இன்னும் ஆழமாகப் பார்க்க உதவின. உதாரணமாக, வாழ்க்கையில் மிகச் சில தருணங்களில் சாதாரண மனிதராக இருக்கும் நாம் அசாதாரண மனிதராக உருவெடுப்பதுண்டு. அதற்கான வினையூக்கிப் பசி, அதர்மம், அநீதி என எதுவாக இருந்தாலும் இத்தகைய தருணங்கள் எழுப்பும் நீதிக்கான குரல் நம்மை உன்னதமாக்குகிறது போன்ற கருத்துகள் கதையை ஆழமாக அறிந்துகொள்ள உதவின.
‘சிலிர்ப்பு’ எனும் அடுத்த சிறுகதையுடன் எங்களுடைய பகிர்வு தொடர்ந்தது. கதை அப்பா மகனின் ரயில் பயணத்தில் ஆரம்பமாகிறது. ஆரஞ்சு பழம் வேண்டுமென்ற அடம்பிடித்து வாங்கி அதை ஊருக்குச் சென்றதும் அம்மாவிடம் உரித்துத் தரச் சொல்லிச் சாப்பிடுவதற்குப் பத்திரப்படுத்தி வைக்கிறான் மகன். இவர்களின் எதிர் சீட்டில் ஒரு நடுத்தர வயதுடைய அம்மாவும் 10 வயது சிறுமியுடன் கல்கத்தாவிற்குச் செல்வதற்காக ரயிலில் பயணிக்கின்றனர். அவர்களிடம் பேசிக் கொண்டு வருகையில் அச்சிறுமி வீட்டு வேலைக்காகக் கல்கத்தாவிற்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும். அவளுடைய குடும்பத்தின் வறுமையினால் அவள் ஆறு வயதிலிருந்து வேலை செய்வதாகவும் சொல்கிறாள். அச்சிறுமியின் பாதுகாப்பைப் பற்றி யோசித்துக் கொண்டே பயணிக்கிறார். தன் மகனுடன் அவள் வாஞ்சையாக நடந்து கொள்வதில் அவள் மீது இனம்புரியா அன்பு பிறக்கிறது. கும்பகோணத்தை வந்தடைந்தும் இறங்குவதற்கு முன் ஒரு ரூபாயைச் சிறுமியிடம் கொடுக்கிறார் அப்பா. அதைப் பார்த்துக் கொண்டிருந்த மகனும் தன் கையிலிருக்கும் ஆரஞ்சு பழத்தை வாங்கிக்க சொல்லி அடம்பிடிக்க, சிறுமி அதையும் வாங்கிக்கொள்ளகிறாள்.
இப்படைப்பு வாசகர்களுக்குச் சிலிர்ப்பை ஏறப்படுத்தக் கூடியது. குழந்தையின் பரிசுத்தமான குணம் மற்றும் அவர்களுக்கு அன்பை வாரி வழங்குவதற்குக் காரணிகள் தேவைப்படுவதில்லை என்பது பகிர்வின் பொதுவான கருத்துகளில் ஒன்று. இருப்பினும், எனக்குத் தனிப்பட்ட முறையில் உழைக்கும் வர்க்கத்தின் கருணையும் இரக்கத்தையும் இக்கதை விளக்குவதாகப்பட்டது. மனிதாபிமானத்தையும் அன்பையும் நாம் அடுத்த தலைமுறையினருக்குக் கடத்தி செல்லுவது அவசியம் என்றும் தி.ஜா குறிப்பிடுவதாகத் தோன்றியது.
பகிர்வின் இறுதி கதை ‘தீர்மானம்’. விசாலி திருமணமாகி நான்கு வருடம் கழித்து தந்தையுடன் கலந்து ஆலோசிக்காமல் புகுந்து வீட்டிற்குச் செல்ல தீர்மானம் எடுக்கிறாள். தன்னுடைய அத்தை எவ்வளவு தடுத்தும் அவள் முடிவு மாறவில்லை. வீடு திரும்பிய தந்தை செய்தி கேட்டுத் திகைக்கிறார். குழந்தை சாப்பிடாமல் கூட கிளம்பிவிட்டால் என்றிருந்து வண்டி பிடித்த விசாலியின் வண்டியை மறைத்துக் கொண்டு வந்த உணவினை ஊட்டி விடுகிறார். தந்தை மகளின் பாச போராட்டத்தில் விசாலியின் தீர்மானம் வெற்றியடைகிறது.
முதல் வாசிப்பில் இக்கதையின் மீது அதிக பிடிப்பில்லை என்றே சொல்ல வேண்டும். அதற்கான காரணம், கதையின்படி விசாலிக்கு 10 வயது. குழந்தை திருமணம்தான். ஆனால், 1950களில் எழுதப்பட்ட கதை அக்காலகட்டத்தின் இயல்பைத்தான் வெளிப்படுத்துகிறது. விசாலி, வருங்காலத்தில் தன் தந்தைக்குப் புகுந்து வீட்டினரால் பிரச்சினை வரலாம் என்பதை ஆராய்ந்து முடிவை எடுத்துள்ளாள். அவளுடைய தந்தை மகளின் முடிவிற்கு மரியாதை கொடுத்து அவளைத் தடுக்காமல் அனுப்பி வைக்கிறார். தந்தை மகளின் பாச பிணைப்பும் ஒரு சிறுமி பெண்ணாகப் பரிணமிப்பதே இக்கதை சாரம் என்பது வாசகர்களாகிய எங்களால் புரிந்த கொள்ள முடிந்தது.
தி. ஜாகிராமன் அவர் அனுபவத்தைச் சார்ந்தே எழுதுகிறார். அதனால், அவருடைய புனைவு இலக்கியம்கூட யதார்த்திற்கு அருகாமையில் இருக்கிறது. மனித உணர்வுகளையோ, நடவடிக்கைகளையோ தனது பார்வையிலிருந்து எழுதுவதால் எது சரி எது தவறு என்று ரகம் பிரிக்காமல் இரண்டையும் மனித இயல்பாக ஏற்றுக்கொள்கிறார். “மனிதாபிமானம், உயிர்களிடத்து அன்பு, இரக்கம், மன்னிப்பு-இவைத்தான் எனக்குப் பெரியவையாகத் தோன்றுகின்றன. ஆனால், இலக்கிய ரீதியில் இவற்றைச் செயல்படுத்த நான் ஒரு கொடியின் கீழோ, ஒரு இஸத்தின் கீழோ, ஒரு முத்திரையிட்டு நிற்க வேண்டியதில்லை. ஆனால் லேபில்கள் இல்லாமலே மனிதனையும் மற்ற உயிர்களையும் நேசிக்க முடியும். நேசிக்கும் சுதந்திரமும் வேண்டும்” என்பதே தி.ஜாவின் கருத்து.