குளியலை முடிப்பதற்குள் சனிரா பஜ்ராச்சார்யாவிடமிருந்து (chanira bajracharya) இரண்டு முறை அழைப்புகள் வந்திருந்தன. விரைவாகக் குளியலை முடித்து, மிகுந்த உற்சாகத்துடன் அவளுக்கு மீண்டும் அழைத்தேன். அவளின் குரலை முதன் முறையாகக் கேட்கப் போகிறேன்; எந்த இடையூறும் இருக்கக் கூடாது என உறுதி செய்து கொண்டே தொலைப்பேசியைக் காதில் ஒத்திக் கொண்டேன். இரு முறையும் அழைப்புத் துண்டிக்கப்பட்டது. வருத்தமும் பயமும் பற்றிக் கொண்டன.
“முக்கியமான அழைப்பு வந்து, தவற விட்டுட்டேனே… இந்த நேரத்திலா குளிக்கப் போனேன்” என என்னையே நான் திட்டிக் கொண்டேன். கடவுளிடமிருந்து வரும் அழைப்புகள் என்பது அவரை உணர்வதற்கு மட்டுமானாதா? உரையாடலுக்கானது இல்லையா? உடல் முழுக்க பதற்றம்.
அன்று சனிராவுக்கு வேலை நாள். வேலை பலுவால் நிச்சயிக்கப்பட்ட சந்திப்பைத் தவிர்க்கதான் அழைத்தாளா? மனம் குரூரமாக யோசித்தது. அப்படி நடந்தால் எனக்கு அது பெரிய ஏமாற்றமாக இருக்கும். என் வாழ்க்கையில் அது மாபெரும் இழப்பு. சனிராவைக் காணச் செல்வதில் என்னைப் போலவே என்னுடன் பயணித்தவர்களுக்கும் நிறைய ஆவலுடன் இருந்தார்கள். நேற்றைய பிரியாவிடை விருந்தில், எங்கள் பயண வழிகாட்டி கணேஷ் மகர், தானும் சனிராவுடனானச் சந்திப்பில் கலந்து கொள்ள முடியுமா என மிகத் தாழ்மையாகக் கேட்டுக் கொண்டார். “நேபாளத்திலே இருக்கும் எங்களுக்குக் கூட இந்த வாய்ப்பு அமைந்ததில்லை. உங்கள் மூலம் அதை நிறைவேற்றிக் கொள்கிறேன். சனிரா வாழும் கடவுளாக இருக்கும்போது, அவள் தேரில் சென்றதை மிகத் தொலைவில் இருந்து பார்த்திருக்கிறேன். அவள் இப்பொழுது வளர்ந்து ஒரு பெண்மணியாக எப்படி இருக்கிறாள் எனப் பார்க்க ஆவலாக இருக்கிறேன்,” எனத் தன்னுடைய எதிர்ப்பார்ப்பை என்னிடம் பகிர்ந்து கொண்டார்.
“நீங்களும் எங்களுடன் கண்டிப்பாக வரலாம், கடவுள் எல்லோருக்கும் சொந்தமானவர். இதில் நான் யார் அனுமதி கொடுக்க? கிருஷ்ணன் போல நீங்கள்தானே எங்களின் தேரொட்டி. நீங்கள் இல்லாமல் எப்படி போவது?” எனக் கூறுகையில் மிக்க நன்றி என இரு கைகளையும் கூப்பி வணங்கினார் கணேஷ். சனிராவுடனான இந்தச் சந்திப்பு அவருக்கு எவ்வளவு அர்த்தம் மிகுந்ததாக இருந்திருந்தால் அவர் கைக் கூப்பி என்னிடம் நன்றி கூறியிருப்பார் எனத் தோன்றியபோது மேலும் பதற்றம் கூடியது. சோர்வடைந்து கட்டிலில் அமர்ந்தேன்.
ஒரு நாட்டின் கலை, பண்பாடு, நம்பிக்கைகளைக் காணாத ஒருவரின் பயணங்கள் அர்த்தமற்றவை எனும் சிந்தனையுடையவள் நான். எல்லா கலை வடிவமும் பண்பாடும் ஒவ்வொரு இனத்தின் வரலாற்றைப் பிரதிபளிப்பவை. அதன் வழியாகவே அவ்வூர் மக்களின் ஆளுள்ளங்களை அறிய முடியும். சுற்றுலா மனநிலையில் உள்ள பயணிகளால் அங்குள்ள ஆச்சரியங்களையும் அதிசயங்களையும் மட்டுமே காண முடியும். நான் அவற்றை மட்டும் பார்ப்பவள் அல்ல. ஒரு நிலத்தின் ஆன்மாவான கலை வடிவங்களும் பண்பாடும் அந்த நாட்டின் ஆயிரக்கணக்கான வருட சாட்சியங்களாகக் காட்சியளிப்பவை. அந்தப் பிம்பத்தைப் பார்க்காதப் பயணங்கள் அர்த்தமற்றவை.
சனிரா இதற்கு ஒரு சான்றாக வாழ்பவள். அவள் நேபாள பண்பாட்டின் குறியீடு.
இணையத்தைத் தட்டினால், வாழும் கடவுளான குமாரி தேவியைப் பற்றி ஆயிரக் கணக்கான செய்திகளைப் படிக்க முடியும். அதற்கான காணொளிகளும் நிறைய உண்டு. ஆனால் அவையெல்லாம் வெறும் தகவல்கள். எனக்குத் தகவல்கள் அவசியமானதாக இல்லை. நான் அறிய விரும்புவது வேறொன்று. அது உணர்வு தளத்தில் இயங்குவது. அவர்கள் ஆயிர வருடங்களுக்கு முன் வாழ்ந்து கடைப்பிடித்த பண்பாட்டை கண் முன் நிறுத்திப் பார்க்க சனிராவுடனான உரையாடல் எனக்கு அவசியம். அந்தக் கலாச்சாரத்தில் கொஞ்சம் நேரம் வாழ்ந்துவிட்டு வர அவர்களை ஆழ்ந்து அறிவது முக்கியம். பல வருடங்கள் ஆனாலும், நினைவில் நீங்காமல் இந்தப் பயணம் இருக்க வேண்டும். மனம் புலம்ப ஆரம்பித்தது.
மீண்டும் ஒரு முறை சனிராவுக்கு அழைத்துப் பார்க்கலாம் எனக் கைத்தொலைபேசியை எடுத்த பொழுது, நான்கு வினாடிக்கு முன்னால் சனிராவிடமிருந்து புலனச் செய்தி வந்திருந்தது.
‘உன் அழைப்பை எடுக்க இயலவில்லை. ஒரு சந்திப்பில் இருந்தேன். என் வீட்டில் சரியாக இரண்டு மணிக்குப் பார்க்கலாம்’ எனக் குறுந்தகவலுடன் அவரின் முகவரியையும் அனுப்பியிருந்தார். அதனைப் பார்த்து நெகிழ்ந்துப் போனேன். உயிர் மீண்டும் புதுப்பித்தது. “அப்…பா…டி, வாழும் கடவுளிடமிருந்து அனுமதி வந்து விட்டது. இனி புலம்ப வேண்டாம். இந்தப் பயணத்தில் இந்த நாள் என் வாழ்வில் மிக முக்கியமான தருணமாக இருக்கப் போகிறது” எனப் பயணத்தை முடுக்கினேன்.
அன்னப்பூர்ணா மலையடிவாரம் ஏறுவதுதான் நேபாள் செல்ல காரணம் என்றாலும் அதை ஒட்டி ஏராளமான உப திட்டங்களும் எனக்கு இருந்தன. அதில் சனிராவைச் சந்தித்தல் பிரதானமானது. நேபாளில் இன்றும் இருக்கும் குமாரி தேவி பண்பாட்டில் முன்னால் குமாரி கடவுள் சனிரா. ஏப்ரல் 2000இல் வாழும் தெய்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் சனிரா. சனிரா ராயல் குமாரி அல்ல. நேபாளில் 12 குமாரிகள் இருப்பர். அவர்களில் காத்மண்டு தர்பார் சதுக்கத்தில் அமைந்துள்ள குமரிகரில் வாழும் தெய்வத்துக்கே நேபாளில் முதலிடம். அவருக்கே நேபாளில் கூடுதல் மரியாதை உண்டு. சனிரா தனக்கான மரியாதையை ஈட்டிக்கொண்ட விதம் காலத்தால் தீர்மானிக்கப்பட்டது. உலக வரலாற்றில் அவ்வளவு எளிதாக யாராலும் மறக்க முடியாத நேபாள அரசக்குடும்பத்தினர் படுகொலை செய்யப்பட்ட காலப்பகுதியில்தான் சனிரா பதான் தர்பார் சதுக்கத்தின் குமாரி தெய்வமாகத் திகழ்ந்தார். 2001, ஜூன் 1ஆம் திகதி நேபாளத்தின் தலைநகரம் காத்மண்டுவில் அமைந்த நாராயணன்ஹிட்டி அரண்மனையில் இப்படுகொலைகள் நிகழ்ந்தன. அந்தத் துர்சம்பவம் நடப்பதற்கு முன், மே 2001 இன் பிற்பகுதியில் மூன்று நாட்கள் இடைவிடாது அழத்தொடங்கினார் சனிரா. குமாரிகள் அப்படி அழுவது கெட்ட சகுனமாகக் கருதப்படும். எனவே, புத்த பிக்குகள் காரணம் தெரியாமல் குழம்பினர். ஏதோ கெட்ட செய்தி நடக்க உள்ளது என நடுங்கினர். மூன்றாவது நாள் தன் அழுகையை நிறுத்திய சனிரா தன் பணி முடிந்தது என அறிவித்தார். அடுத்த சில மணி நேரத்தில் குமரிகருக்கு தொலைபேசி வழி அரண்மனை படுகொலைகள் குறித்த செய்தி வந்தது. சனிரா நேபாள மக்களின் கவனம் பெற்றது அதன் பின்னர்தான்.
வாழும் கடவுளான குமாரி தேவிகள் வாழும் அரண்மனையின் பெயர் குமாரி கார். பத்தானில் இருந்த அந்த அரண்மனையில் அமர்ந்தபடி அவள் அழைப்புக்குக் காத்திருந்தோம். அந்த அரண்மனையில்தான் சனிரா தெய்வமாகப் பத்து ஆண்டுகள் வாழ்ந்தாள். அந்தக் காட்சியைக் கற்பனையில் ஓடவிட்டபடி இருந்தேன். மதியம் 1.45 போல “நீங்கள் நிற்கும் இடத்திலிருந்து, நேராக நடந்து வாருங்கள். நான் இளஞ்சிவப்பு ஆடை அணிந்து நிற்கிறேன்” எனச் சனிராவிடமிருந்து தகவல் வந்தது.
“கடவுள் இன்று இளங்சிவப்பு ஆடை அணிந்து நமக்காக நிற்கிறது” என அருகில் நடந்து வந்த அரவினிடம் சொல்லிச் சிரித்தேன். மனம் படபடத்தது. சனிராவிடம் எந்தத் தடுமாற்றமும் இல்லாமல் நிதானமாகப் பேச வேண்டும். கடவுளாக மிக உயர்வான நிலையில் வாழ்ந்தவளிடம், அவள் பெயரைச் சொல்லியோ, எந்த வகையிலும் மரியாதை குறைவாகப் பேசக் கூடாது என எனக்குள் நானே பலமுறை கூறிக் கொண்டு அவளை நோக்கி நடந்தேன்.
கடந்த ஆறு மாதங்களாக ‘இன்ஸ்டாவில்’ அவளுடன் நிறைய உரையாடியிருக்கிறேன். மிகவும் பரபரப்பான வேலை நாட்களில் சனிரா, எங்களைச் சந்திக்கும் வாய்ப்புக் கொடுத்ததற்கு நாட்டியம்தான் காரணம். குமாரி தேவியின் தவணை முடிந்த பிறகு, தான் இனி கடவுளாக இல்லையெனும் ஏக்கத்தை நடனத்தின் வழி சரிசெய்து கொண்டவள் சனிரா. தாரா தேவியின் ஒப்பனையணிந்து அவள் ஆடும் ஷார்யா நிர்த்தியா (charya Nirtya) நடனக் காணொலிகளைக் கண்டபோது அவளிடமிருந்து வெளிபடும் தெய்வீகத் தன்மை சிலிர்ப்பூட்டியது. “நான் ஒரு பரத நாட்டிய நர்த்தகி, இது ஒரு தென்னிந்திய நடனம். மிகத் தொன்மையான நடனமும் கூட” எனப் பல தகவல்களைச் சனிராவிடம் பகிர்ந்து கொண்டேன். அவளுக்குப் பரத நாட்டியத்தைப் பற்றி ஏற்கனவே கொஞ்சம் தகவல்கள் தெரிந்திருந்ததால், என்னிடம் பேச ஆரம்பித்தாள். அவளுக்குக் கலைகளின் மேல் ஈர்ப்பு இருந்தது. அவளுடைய நண்பர்களின் வரிசையிலும் அதன் பின்னர்தான் சேர்த்துக் கொண்டாள். அதுவே என்னைப் பெரிதும் கவர்ந்தது. யாருடன் பேச வேண்டும் என அவளிடம் ஒரு வரையறை உள்ளது. நான் பார்த்த நாட்டியக் கலைஞர்கள் எல்லோரும் அப்படிதான் இருப்பார்கள். கலைகளைப் பற்றியும் கலாச்சாரத்தைப் பற்றியும் எல்லாரிடமும் பேசிவிட முடியாது. ஆக, நண்பர்களைத் தேர்ந்தெடுத்துதான் பழகுவார்கள்.
என்னைத் தூரத்தில் பார்த்தவுடன் மெல்லியதாகச் சிரித்து, கைகளை அசைத்தாள். முகத்தில் தேஜஸ் பரவியிருந்தது. பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தாள். அவளின் நேர்மறையான அதிர்வை அவளை நெருங்கியதுமே என்னால் உணர முடிந்தது.
“என் வீடு இரண்டாவது மாடியில் இருக்கு. மேலே செல்லலாம்” எனக் கூறி அனைவரையும் அழைத்துச் சென்றாள். அவளிடம் எந்தப் பதற்றமும் இல்லை. முகத்தில் சிறிய புன்னகை அவ்வளவுதான். பிறகு, எங்களை அவளின் பிரத்தியேக அறைக்கு அழைத்துச் சென்று அனைவரையும் உட்காரச் சொன்னாள். இடம் போதமையால் என்னுடன் வந்திருந்த பெண்கள் அனைவரும் தரையில் உட்கார்ந்தோம். அவளுக்கென ஏற்கனவே தயார் செய்திருந்த நாற்காலியில் பூனையில் மென்பாதம் படர்வதுபோல எந்த ஒரு சலனமும் இல்லாமல் உட்கார்ந்தாள். தனக்கான இடத்தை அவள்தான் முடிவு செய்தாள். நளினமும் கம்பீரமும் அவளிடம் கூடியிருந்தது.
அவளுடம் கலந்துரையாடலை ஆரம்பிக்கும் முன், என்னுடைய தோழி வசந்தி, சனிராவுக்குப் பொன்னாடை போல நேபாள நாட்டின் உயர்தர துணியை மரியாதை நிமித்தமாகச் சாற்றினார். சனிரா அதற்கு நன்றிகள் எதுவும் சொல்லாமல், ஒரு கடவுள் தன் பக்தனின் அன்பிக்கிணங்கி வழிவிடுவதுபோல பெற்றுக் கொண்டாள். முகத்தில் மாறாத புன்னகை.
“என்னுடன் மலேசியாவில் முதன்மையான எழுத்தாளர் வருகிறார். அவர் உங்களைப் பற்றி தமிழில் எழுத விரும்புகிறார். அப்படி எழுதினால், அவர்தான் குமாரி கலச்சாரம் குறித்துத் தமிழில் எழுதிய முதல் எழுத்தாளராக இருப்பார்” என நவீனை அறிமுகம் செய்யும்போது அவளிடம் எந்த ஒரு மிகையான புன்னகையும் ஆர்வமும் இல்லை. மீண்டும் அதே மெல்லிய சிரிப்பு. முகம் மலர சிரித்தாள் மேலும் அழகாக இருப்பாள் எனத் தோன்றியது. ஆனால் தன்னுடைய சிரிப்பை மிக அளவாகவும் சுருக்கமாகவும் ஒரு கட்டுப்பாட்டில் வைத்திருந்தாள். தானும் தன் அனுபவங்களை ஒரு நூலாக எழுதுவதை எங்களிடம் பகிர்ந்து கொண்டாள்.
சனிராவிடம் நான் மட்டுமே பேச வேண்டும் அப்பொழுதுதான் உரையாடலில் சிக்கல் வராது எனப் பேருந்தில் பயணிக்கும்போதே நவீன் அனைவரிடமும் கேட்டுக் கொண்டார். சில கலந்துரையாடலுக்குப் பிறகு, நவீனும் அரவினும் பரிந்துரைத்த கேள்விகளையெல்லாம் தொகுத்து ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்து, கைத்தொலைபேசியில் சேமித்துக் கொண்டேன். அதற்கேற்ப என்னுடைய முதல் கேள்வியை ஆரம்பித்தேன். என்னுடைய முதல் கேள்வி, குமாரி தேவிகளைத் தேர்ந்தெடுக்கும் முறையைப் பற்றியிருந்தது. அதனை மிகத்துள்ளியமாக விளக்கினார். அவரின் ஆங்கிலத்தின் புலமை ஆச்சரியப்படுத்தியது. அதற்கு அவள் பெற்றோர்களே காரணாம். சனிராவின் பெற்றோர்கள் தனது மகளுக்கு முறையான கல்வி வழங்கப்பட வேண்டுமென கேட்டுக் கொண்டதின் பேரில் குமாரிகளின் மரபில் சில மாற்றங்கள் எழுந்தன. அவர் வாழ்ந்த குமரிகரிலேயே அவருக்குப் பிரத்தியேக ஆசிரியர்களால் பாடங்கள் போதிக்கப்பட்டன. 15 வயதில் முதன் முறையாக மாதவிடாய் வந்தபோது சனிராவின் ஆட்சிக்காலம் முடிந்தது. கல்வி சனிராவுக்குச் சராசரி வாழ்வை வலுவாக்கிக் கொடுத்தது. காத்மண்டு பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தைப் பயின்றார். வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பெற்றார். இன்று ஒரு வங்கியில் பணியாற்றுகிறார்.
நேபாள நாடுகளில் ஆங்கிலம் பேசுபவர்கள் மிகக் குறைவு. ஆங்கில புலமை இருப்பதால், சனிராவால் உலக அளவிலான தொடர்புகளை வலுப்படுத்த முடிகிறது. பிபிசி வரை அவரின் ஆளுமை சென்றதன் காரணம் அவர் பேச ஆரம்பித்தபோது புரிந்தது. அவர் அருகில் அமர்ந்து, குருவிடம் தீட்சை பேரும் ஒரு பக்தரைப் போல அவளின் பதிலைக் கேட்டுக் கொண்டிருந்தேன். அவளின் கண்கள் என்னை நோக்கி மட்டுமே இருந்தது. எந்தக் கவனமும் சிதராமல் மிகக் கூர்மையான பார்வையுடன் என்னைப் பார்த்து அனைத்துக் கேள்விகளுக்கும் நிதானமாகப் பதிலளித்தாள்.
ஒரு நர்த்தகியின் பார்வை அது. மிகவும் ஆழமானது. அவள் அணிந்திருந்த கண்ணாடியைத் தாண்டி அவளின் கண்களின் ஒளியை நான் உணர்ந்தேன். கைகள் முத்திரை பிடிக்க, கால்கள் தாளத்திற்கேற்ப ஆட, முகம் பாடலுக்கேற்ப பாவனைச் செய்ய என ஒவ்வொரு உடல் உறுப்பும் நாட்டியத்தில் ஒவ்வொரு வேலையில் ஈடுபட வேண்டும். அப்படி ஈடுபடுவதற்கு முதலில் கவனம் சிதறாமல் இருக்க வேண்டும். கவனம் சிதறாமல் இருந்தால்தான் ஒவ்வொரு உறுப்பையும் அதற்கேற்ப அசைக்க முடியும். ஒருவரின் கவனத்தை அவர்களின் கண்களில் காணலாம். சனிரா வாழும் கடவுளாக இருக்கும் பொழுது, அவளின் கண்கள் என் மேல் படாதா எனத் தவம் கிடந்தவர்கள் பலர் இருப்பர். அத்தகைய சிறப்பைக் கொண்ட மகத்தான கண்கள் அவை. அதே கண்கள் என்னை இடைவிடாது நோக்கியவாறே இருந்தபோது கொஞ்சம் பெருமையாக இருந்தாலும், இந்த நெருக்கமெல்லாம் நாட்டியத்தினால்தான் சாத்தியமானது எனத் தோன்றியது.
வாழும் கடவுளான குமாரி தேவியைத் தேர்ந்தெடுக்கும் முறையைப் பற்றி சனிரா விளக்கியதும் என்னுடன் பயணித்தச் சிலருக்கு ஆச்சரியங்கள் இருந்தன. தாங்கள் இணையத்தில் வாசித்தது குறித்துக் கூறினர். குமாரி தேவிகள் குறித்து இணையத்தில் நிறைய பொய்யான தகவல்கள் இருக்கிறது. அதையெல்லாம வெறும் கட்டுக் கதைகள் எனத் தன்னுடைய அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டாள் சனிரா. குமாரிகளைத் தேர்ந்தெடுக்கும் முறைகளைகளில் உள்ள கட்டுப்பாடுகள் குறித்துப் பற்றி சனிரா கூறுகையில் எனக்குப் பெரிதாக ஆச்சரியம் இருக்கவில்லை. காரணம் பரதநாட்டியம் எனும் ஒரு ஆடல் கலையைப் பயில்வதற்கே முன்பெல்லாம், அங்க லட்சணங்களைப் பார்த்துதான் நடன குருமார்கள் பரத நாட்டியத்தைக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார்கள். ஓர் ஆடலை ஆடுவதற்கே அங்க லட்சணங்களைப் பார்த்தவர்கள், வாழும் கடவுளைத் தேர்ந்தெடுக்கப் பார்க்க மாட்டார்களா? ஒரு கோவிலில் இருக்கும் சிலைகளுக்குக் கூட அங்க லட்சணங்கள் உண்டு. இத்தகைய தேர்வு முறைகள் வேறும் சடங்குக்காக மட்டும் அமைந்திருக்க முடியாது. ஒரு நாட்டின் கலையையும் கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் ஒரு நபர் மிக நேர்த்தியாக இருந்தால் மட்டுமே அதனின் உண்மையான அழகு புலப்படும். அதன் அழகு வெளிவந்தால்தான் அதன் சிறப்பும் வெளிவரும்.
நான் சனிராவைக் கூர்ந்து பார்த்தேன். நேர்த்தியான முகம். ஒளிமிக்க கண்கள். கனிவும் கம்பீரமும் இணைந்த தோற்றம். அவள் அப்போது அமர்ந்துதான் இருந்தாள். ஆனால் அமர்தலில் ஒரு நளினம் இருந்தது.
சனிரா குமாரி தேவியைத் தேர்ந்தெடுக்கும் 32 அம்சங்களில் சிலவற்றை விளக்கிய போது, அவை பெரும்பாலும் நாட்டியத்துடன் தொடர்புடையதாகவே இருப்பதை ஒப்பீடு செய்து கொண்டேன். முன்பெல்லாம், நாட்டிய வகுப்பில் ஒருவரைச் சேர்ப்பதற்கு முன், அவர்களின் ஜாதகத்தில் நாட்டியம் ஆடும் பிராப்தம் இருக்கிறதா எனப் பார்த்தப் பிறகே நடன துறையில் ஈடுபட முடியும் என வரையறை இருந்தது. காரணம் நாட்டியம் ஆடுபவர்கள் கடவுளுக்கு நிகரானவர்கள் என ஒரு நம்பிக்கையிருந்தது. ஆக, அந்த நிலையைச் சரியான நபரிடம் தான் கொடுக்க வேண்டும் என்பதால் ஜாதகத்தை மிகத் துள்ளியமாகப் கணிப்பார்கள். குமாரி தேவியைத் தேர்ந்தெடுக்கும் முறைகளில் ஜாதகக் கணிப்பு மிக முக்கியமான அம்சமாகத் திகழ்கிறது.
சனிரா, “தலேஜு பவானியின் பிரதிநிதிகள்தான் குமாரி தேவி, தலேஜுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுமி, தலைமை புரோகிதர் மந்திரங்களை ஜபிக்கும் போது, கை முத்திரைகளைப் பிடிக்க ஆரம்பிப்பாள், முகத்தில் ஒளி வீசும்,” எனச் சில அறிகுறிகளைக் கூறினாள். பொதுவாக நாட்டியம் ஆடுபவர்களை உயர்வாகப் பார்ப்பதற்கான காரணம், ஒரு நர்த்தகியின் உடலில் தெய்வம் இறங்கி வந்து ஆடும் என ஒரு நம்பிக்கை உண்டு. அதனால் நம்முடைய உடலைக் கோயில் போல சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். கையில் காலில் காயங்கள் தழும்புகள் படாமல், ஒரு நர்த்தகி தன்னுடைய உடலைப் பாதுகாக்க வேண்டும். மிக நேர்த்தியான உடலில் மட்டுமே கடவுள் வந்து இறங்கி ஆடுவாள் என என்னுடைய நடன குரு சொன்னது ஞாபகத்திற்கு வந்தது. இதெல்லாம் தவிர கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவரால் கை முத்திரைகள், மந்திர ஜபங்கள், முகத்தில் தேஜஸ் எனத் தோற்றத்திலே மிக வித்தியாசமானவர்களாக இருப்பார்கள். நாட்டியம் பயில வரும் முதல் நாளிலேயே அடவுகளை மிக விரைவாகக் கற்றுக் கொள்ளும் திறமை, கடவுளின் அணுக்கிரகம் இல்லாமல் கிடைக்காது. சனிரா கடவுளாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட விதம் ஏறக்குறைய பரதத்தின் மரபான நம்பிக்கைகளுடன் ஒத்திருந்தன.
சனிராவிடம் தொடர்ந்து அடுத்தடுத்தக் கேள்விகளைக் கேட்டுக் கொண்டே, அவளின் அசைவுகளை மிக உண்ணிப்பாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். கைகளை மிக அளவாக அசைத்துப் பேசிக் கொண்டிருந்தாள். ஆனால் முகத்தில் பெரிய மாற்றங்கள் இல்லை. கணக்குப் போட்டுச் சிரிப்பாள் போல. அவளின் சிரிப்பைப் பார்க்க மனம் ஏங்கியது. ஒரு முறை பற்கள் தெரியும் வரை சிரித்தாள். மெய் மறந்து ரசித்தேன். அவளுக்கும் என்னைப் போலவே, சிங்கப் பற்கள் இருந்தன. சிங்கப் பற்கள் இருக்கும் பெண்களுக்குக் கஜ கேசரி யோகம் இருக்கும் எனத் தாத்தா நான் சிறுமியாக இருக்கும்போது சொன்னது ஞாபகத்திற்கு வந்தது. கஜம் என்றால் யானை, கேசரி என்றால் சிங்கம். உருவத்தில் பெரியதாக இருக்கும் யானையைப் பார்த்து யாரும் பயப்பட மாட்டார்கள். ஆனால் யானைவிட உருவத்தில் சிறியதாக இருக்கும் சிங்கத்தைப் பார்த்து அனைவரும் பயப்படுவார்கள். உருவத்தில் பெரியதாக இருந்தாலும் யானையால் சிங்கத்திடம் வெற்றி பெற முடியாது. ஆக, சிங்கப் பற்கள் உள்ளவர்களையும் வெற்றி பெற முடியாது என ஒரு நம்பிக்கை உண்டு எனத் தாத்தா கூறிய ஒரு கதை நினைவுக்கு வந்தது. சனிரா ஒருகாலத்தில் தலேஜு பாவானியின் பிரதிநிதி. அரசராலேயே மண்டியிட்டு வணங்கப்பட்டவள். நேபாளில் நிறைய முன்னால் குமாரிகள் உள்ளனர். தங்கள் இறைத்தன்மையைத் தக்க வைக்க கலையைக் கையில் எடுத்தவர்கள் குறைவு. அவ்வகையில் சனிரா தன் கலையால் அவளின் ஆளுமையை மிகப் பெரியதாக மாற்றிக்கொண்டு இன்றும் வணங்கத்தக்கவளாக அமர்ந்திருக்கிறாள் எனத் தோன்றியது.
சுமார் ஒரு மணி நேர உரையாடலில் ஒரு முறை கூட சனிராவின் கால்கள் அசையவே இல்லை. கால்களை ஒன்றிணைத்துப் பாதங்களை மடக்கி மிகவும் அடக்கமாக உட்கார்ந்திருந்தாள். ஒரு பெண்ணின் தன்மை அவளின் கால்களில் தெரியும் எனப் பரத சாஸ்திரத்தில் உண்டு. நாட்டியம் ஆடுகையில் பாத பேதம் மிகவும் முக்கியம். கொஞ்சம் பாதம் பிரண்டால் கூட, உடல் அமைப்பு அவலக்ஷணங்களாகத் தெரியும். சனிரா ஒரு கட்டுக் கோப்பான பெண் என அவளின் அசைவுகளை வைத்து என்னால் கணிக்க முடிந்தது. இவ்வளவு நளினம் அவளுக்கு நாட்டியம் வழி வந்திருக்கலாம் எனவும் தோன்றியது. ஆனால், இதையெல்லாம் தவிர்த்து யாரொருவர் தன்னுடைய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துகிறார்களோ அவர்களிடம் புலனடக்கமும் இருக்கும். கிட்டதட்ட 10 வருடங்களாக வாழும் கடவுளாக இருந்தவள் சனிரா. தன்னுடைய உணர்ச்சிகளைப் பக்தர்களுக்கு முன் காட்டாமல் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள மிகச் சிறு வயதிலேயே பழக்கப்பட்டவள். தன்னுடைய உணர்ச்சிகளை எப்பொழுது, யாரிடம் காட்டலாம் எனக் குழந்தைப் பருவத்திலேயே தெரிந்து வைத்தவள். மிகச் சரியான முடிவுகளையும் மிகச் சரியானவற்றைத் தேர்ந்தெடுக்கும் ஆற்றல் உள்ளவராகச் சனிராவைக் கணித்துக் கொண்டேன். தன்னுடைய உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் பொழுது வரும் திறன் அது. சனிராவின் பேச்சிலும் அவள் கூறிய பதில்களிலும் அதற்குச் சான்று தெரிந்தது.
ஒருவகையாக வல்லினத்திற்காகத் தொகுத்த கேள்விகள் அனைத்தையும் கேட்டு முடித்தப் பிறகுதான் கவனித்தேன். வசந்தி போர்த்திய பொன்னாடையை எங்களின் சந்திப்பு முடியும் வரை அணிந்திருந்தாள். பிறர் கொடுக்கும் பரிசை மதிக்கத் தெரிந்தவளாகச் சனிரா இருந்தாள். சனிரா தனக்குக் கிடைத்த அன்பளிப்பைவிட, மற்றவர்களின் மனதைப் பாதுக்காக்கத் தெரிந்தவளாக இருந்தாள்.
“மேலும் ஏதேனும் கேள்விகள் இருக்கிறதா?” எனக் கேட்டபோது, என்னுடன் பயணித்த நண்பர்கள் சில கேள்விகளைச் சனிராவிடம் முன் வைத்தார்கள். அதுவரை என்னை நோக்கியே இருந்தவள் குரல் வந்த திசையைப் பார்க்க திரும்பினாள். அந்த ஒரு நிமிடப் பார்வை, வெறும் மரியாதை நிமித்தமாகத்தான் இருந்தது. மறுபடியும் என் பக்கம் திரும்பி, அவர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கத் தொடங்கினாள். அப்போதுதான் ஆண்களை அவள் அதிக நேரம் நோக்குவதில்லை எனப் புரிந்தது. அவளது ஒவ்வொரு அசைவிலும் பெண்மை மிளிர்ந்தது.
எல்லாம் ஒருவழியாக முடிந்து சனிராவிடமிருந்து விடைப்பெறும் நேரம் வந்தது. உடன் வந்தவர்கள் சனிராவிடமிருந்து விடைப்பெற்று சென்றனர். நான் கடைசியாக அவளிடம் நன்றிகளைக் கூறி விடைப்பெற்றேன்.
என்னைத் தழுவி “நீ சிறந்த ஆன்மா… தொடர்பில் இரு” என்றாள். தலேஜு பாவானி ஆக்கிரமித்த, அவளின் சரீரம் என்னைத் தொட்டுத் தழுவியது. அவள் உடலின் உஷ்ணத்தை உணர்ந்தேன். அது தலேஜு பாவானியின் உஷ்ணமாகக் கூட இருக்கலாம் என நினைத்துக் கொண்டேன்.
அவளிடம் இறுதியாக, “நீ இன்னமும் வாழும் கடவுள்தான், அதற்காக எல்லா உயர்வான பண்புகளும் உன்னிடம் உள்ளது. உயர்வான பண்புகள் நிறைந்த எல்லா பெண்களும் கடவுள்தான்” எனக் கூறி அவளின் அணைப்பிலிருந்து விடைப்பெற்றேன்.