திருவேட்கை

01

லண்டனிலுள்ள கப்பல் கட்டுமானத் துறையில் உயர் பதவி வகித்தவர் மோர்கன். அவருடைய ஒரே மகன் அல்பேர்ட் தன்னுடைய வீட்டுப் பணிப்பெண் கரோலினாவுடன் பள்ளி முடித்து திரும்பி வந்து கொண்டிருந்தான்.  வீதியோரச் சந்தை கடையொன்றில் சரிகை வைத்த சிறிய கைக்குட்டைகள் பல வண்ணத்தில் தொங்கின. நெரிசலான கடை தெருவில் கூடத் தொடங்கிய பலரும் பெறுமதியான கைக்குட்டைகளை ரசித்து வாங்கினார்கள். ஆசிர்வதிக்கப்பட்ட நூலால் நெய்யப்பட்டதைப் போன்று சிலர் உளம் கனிந்து ஆனந்தப் பெருக்கு அடைந்தனர். கரோலினாவின் கைகளைப் பிடித்தபடி, கைக்குட்டைகளையும் அங்கே கூடியிருந்தவர்களையும் வியந்து பார்த்துக் கொண்டிருந்தான் அல்பேர்ட்.

வீட்டில் தகப்பனும் தாயும் வைத்திருந்த கைக்குட்டைகளை, அல்பேர்ட் ஒருபோதும் தொட்டறிந்ததில்லை. தந்தை மோர்கனின் கைக்குட்டையை எடுத்துப் பார்ப்பதற்கே அல்பேர்ட்டுக்குத் துணிவிருக்கவில்லை. ஒருநாளிரவு குளிர் மிகுந்திருந்தது. தணலடுப்பில் குளிர்க்காய்ந்தபடி புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டிக் கொண்டிருந்த தாயிடம் அல்பேர்ட் கேட்டான்.

“அம்மா எனக்குமொரு கைக்குட்டை வேண்டும்”

“என் வைரமே! கைக்குட்டையானது உனது பெருமைகளில் ஒன்று. நீ அடைய விரும்பும் உன்னதங்களில் முதன்மையானது. அதனை அணிந்து கொள்ள ஒரு மொழியிருக்கிறது. அது உன் வசப்படும் நாள் வரைக்கும் காத்திரு. இதன் மகத்துவம் இப்போதுனக்குப் புரியாது. அப்பாவும் நானும் அழகான கைக்குட்டையொன்றை உனக்குப் பரிசளிப்போம். அது வரை காத்திரு” என்றாள்.

ஆனால், இன்று கரோலினாவுடன் சந்தையில் நின்று கொண்டிருந்த அல்பேர்ட்டிற்கு வண்ணமான கைக்குட்டைகளையும், அதனை வாங்கி களிப்புறும் மக்கள் திரளையும் கண்டு மூச்சு வேகமானது. என்னால் பெற இயலாத ஒன்றா இதுவென்ற கேள்வி எழுந்தது. அவனுக்குள் ஒரு தீ மழை இறங்கிற்று. தன்னுடைய சிறகுகளை விரித்துத் தாழப்ப றந்திறங்கும் கழுகின் மூர்க்கம் அவனுக்குள் அலகு தீட்டியது. 

வட்டத் தொப்பியணிந்து கைக்குட்டையை வைத்துப் பார்த்துக் கொண்டிருந்த வயோதிகனை இலக்கு வைத்தான். அவருடைய கையிலிருந்த கைக்குட்டையைப் பறித்துக் கொண்டு உயரப் பறக்கும் வேகத்தோடு ஓடி மறைந்தான். தன் குஞ்சைப் பறிகொடுத்த திகைப்போடு கழுகை விரட்டுபவளைப் போலவே கரோலினா, அல்பேர்ட்டை துரத்தினாள். 
“அல்பேர்ட் அல்பேர்ட்… ஓடாதே நில்லு”

வீதியின் குறுக்காய் பாய்ந்து வந்த குதிரை வண்டியில் மோதி இடறி விழுந்தான் அல்பேர்ட். கரோலினா ஓடிச் சென்று அவனைத் தாங்கிப் பிடித்தாள். இருவரின் மூச்சிரைப்பும் வீதியில் கூடி நின்றவர்களை நோக்கி குற்றத்தால் அதிகரித்தது. அல்பேர்ட் தாழ்த்திய தனது முகத்தை நிமிர்த்தாமல் பூமியையே பார்த்தான். 

அதிவேகமாக வந்த கைக்குட்டை கடைக்காரன் கரோலினாவை முதுகில் உதைந்து விழுத்தினான். அல்பேர்ட் விசுக்கென ஓடித் தப்பித்தான். கரோலினாவும் கைக்குட்டையும் வீதியில் பேசு பொருளாகின. இரண்டு போலீஸார் கூட்டத்தை விலத்திக் கொண்டு உள்ளே நுழைந்தார்கள். இரண்டு நாட்களிலேயே வோர்விக் நீதிமன்றத்தில் கைக்குட்டை திருடிய குற்றவாளியென கரோலினாவுக்குத் தீர்ப்பு வழங்கப்பட்டது. 

சர்வ வல்லமைகளாலும் தனது மகனைக் காப்பாற்றிய மோர்கன் குடும்பம் வோர்விக் நகரைவிட்டு வெளியேறினார்கள். குற்றத்தின் வேதனையில் நெளிந்தபடி அல்பேர்ட் தாயிடம் சொன்னான். 

“அம்மா, கைக்குட்டையைத் திருடியது நான்தான். இவர்கள் ஏன் கரோலினாவை தண்டிக்கிறார்கள்?”

சுவாசத்தில் வெக்கையும் அவமானமும் இருந்தது. பிளவுண்ட தன்னுடைய சொற்களை நடுங்காமல் தொகுத்து, ஒரு சூரியோதம் போல புன்னகையோடு அல்பேர்ட்டின் தாய் சொன்னாள்.

“அவர்கள் ஏழைகள். தண்டிக்கப்படுவதற்காகவே பூமிக்கு வருகிறார்கள். நீ அவர்களைப் பற்றி கவலை கொள்ளாதே”

அல்பேர்ட் தனது கண்களைத் தடாலென மூடிக் கொண்டு “கரோலினா என்னை மன்னித்துக் கொள்” என்றான்.

லண்டன் நீதிமன்றத்தில் ஐந்து வருடங்களுக்கு அதிகமாகச் சிறைத்தண்டனை வழங்கப்பட்ட குற்றவாளிகள் அனைவரையும் தனது காலனித்து நாடான ஆஸ்திரேலியாவுக்கு அனுப்புவதற்கு முடிக்குரிய பிரித்தானிய அரசு தீர்மானித்தது. கரோலினாவும் அவளது ஒரே மகனுமான டேவிட்டும் நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்தார்கள். அழுகையை உண்டாக்கும் திகிலோடு காற்று மூச்சு வாங்கி பறந்து போனது.

ஆயிரத்து நாநூற்றி எழுபத்து ஆறாம் ஆண்டு மார்ச் மாதம் இருபத்தாறாம் திகதி ஞாயிற்றுக்கிழமை மழையும் காற்றும் மிரட்டியது. ஆனாலும் குற்றவாளிகளைக் கப்பலில் அனுப்பும் முடிவில் பிரித்தானியா தாமதிக்கவில்லை. கடலில் விழுந்து அழுகினாலும் கவலையில்லையென அதிகாரிகள் அறிவித்தனர்.  கைக்குட்டை திருடிய குற்றத்தில் தண்டனை வழங்கப்பட்ட நூறுபேர் உட்பட  நூற்று நாற்பது குற்றவாளிகளுடன் “பிறின்ஸ் ஒவ் ஹம்ஷயர்” கப்பல் புறப்பட்டது. கரோலினா டேவிட்டை அணைத்து வைத்தபடி அமர்ந்திருந்தாள். விரிந்த கடலில் விழும் மானுடர் கண்ணீர் தனித்த கழிவு. 

02

ஆஸ்திரேலியாவின் வன் டீமன் தீவுக் கரையைக் கப்பல் வந்தடைந்தது. கைதிகள் இறக்கப்பட்டார்கள். அந்நியத்தின் காற்று முகம் மோத கரோலினா மகனைத் தூக்கி வைத்திருந்தாள். குற்றமற்றவர்கள் தண்டிக்கப்படும் அநீதியின் துறைமுகமென காணும் வெளிமுழுதும் நீண்டிருந்தது. கரோலினாவின் கண்ணீர் கனத்து விழுந்த கப்பல் அலைகளில் நிதானமற்று ஆடியது. நீதியின் உப்பு பூமியில் மிஞ்சுமென்று அவளால் நம்ப முடியாமலிருந்தது. 

ஈரக்காடுகள் சூழ்ந்த மலையுச்சியில் உறைந்து கிடந்த சிறை. நூற்றுக்கணக்கான பெண் சிறைவாசிகளோடு  அடைக்கப்பட்டாள். குழந்தைகளைப் பராமரிப்பதற்குப் பிரத்தியேக இடம்.  சுண்ணாம்பு சுவர்களாலான நீண்ட மண்டபத்தில் ஆடைகள் தயாரிக்கும் முழு நேர வேலை. ஏழு வருட தண்டனையை ஒவ்வொரு நாளாக எண்ணத் தொடங்கினாள் கரோலினா. பணியிடத்தில் அழுது அரற்றுபவர்களின் மேனியைச் சிறையதிகாரிகளின் கசையடிகள் ரத்தம் பார்த்தன. சிலர்  மாதக் கணக்கில் இருட்டறையில் வீசப்பட்டார்கள். 

நீண்ட வெள்ளை துணிகளைத் தொட்டிகளில் முக்கியெடுத்து, சாயம் பூசுகின்ற வேலையைப் பார்த்து வந்தாள் கரோலினா. இழந்த வாழ்வின் வண்ணங்கள் எல்லாமும் கரைந்து போனதெனும் துயர் நுரைக்க கதறி அழுவாள்.  லண்டனில்  கைக்குட்டை கடைக்காரன் தரையில் அழுத்தி  விளாசிய அவமானச் சீழ் கொதித்து வலித்தது. தண்ணீர் கொண்டு வந்த வாகனத்துக்குள் பதுங்கி சிறையிலிருந்து தப்பியோட முற்பட்ட பெண் கைதிகள் எல்லோர் முன்னிலையிலும் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். 

டேவிட்டை அணைத்த கரோலினாவின் கைகள் அச்சத்தில் நடுங்கின. நெஞ்சு அதிர்ந்தது. குற்றமே செய்யாமல், தண்டனைக்குள் தலை கவிழ்த்துக் கிடக்கின்ற பாரம். தன் குழந்தையை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்ற தாய்மையின் தவிப்பு ஓலமாய் அவளுக்குள் எரிந்தது.

ஐந்து வருட சிறைத்தண்டனை பூர்த்தியானவர்களில் நன்நடத்தையின் அடிப்படையில் சிலர் விடுதலை செய்யப்பட்டனர். ஆஸ்திரேலியாவில் அவர்கள் விரும்பிய தொழிலைச் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. கரோலினாவும் டேவிட்டும் விடுதலையாகியும் கொஞ்ச நேரம் சிறையின் முன்பாக அமர்ந்திருந்தனர். அவள் டேவிட்டின் மடியில் தலை வைத்து, வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். கண்ணீர் பெருக்கில் அவனது கால்களை நனைத்தாள்.

“அம்மா, நாம் இப்போது குற்றமற்றவர்களா?”

“டேவிட், எப்போதுமே குற்றமற்றவர்கள் நாம். ஆனாலும் எப்போதும் தண்டிக்கப்படுவோம்” என்றாள்.

“ஏனம்மா?”

“பூமியில் நாதியற்றவர்களை இப்படித்தான் பாலைப் புழுதி மூடும்” என்றாள்.
 டேவிட் கரோலினாவை முத்தமிட்டான். “பூமி நமக்கெனப் படைத்த குடிசையொன்றும் குற்றமற்ற சூரியனும் இங்கு இருக்கும். எழுந்து செல்வோம்” என்றான்.

03

லீட் பகுதியில் குடியேறினார்கள். அருகிலிருந்த கிராமத்துப் பாடசாலைக்கு டேவிட்டை அனுப்பினாள். அங்கேயே ஒரு சிற்றுண்டியகத்தை வைத்துக் கொண்டாள். எல்லா விதமான பலகாரங்களையும் விற்று வருவாயை ஈட்டினாள். ஒரு நாள் அதிகாலையில் சமையல் கட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்த கரோலினா மயக்கமாகி சரிந்தாள். பாத்திரங்களின் சத்தம் கேட்டு உறக்கம் விழித்த டேவிட் தாயின் மூச்சற்ற உடலைக் கட்டியணைத்தான். அவளது கால்களைத் தொட்டு அம்மாவென்று கதறினான். பூமி நன்றாக விடியும் வரை தாயின் கைகளைப் பற்றி வெறித்துக் கொண்டிருந்தான். குற்றமற்ற சூரியன் எழுந்து குடிலினுள்ளே ஒளி புகுந்தது. 

தாயின் பெருந்துயர் அவனுள் தகித்துக் குழம்பென உருப்பெருத்தது. நீதியால் வஞ்சிக்கப்பட்ட இனிமையான வாழ்வை இனி எவராலும் தர முடியாதென உணர்ந்தான். திருட்டுக் குற்றம் சுமத்தப்பட்ட தனது தாயின் அழிவிற்கு அவன் பதில் சொல்ல விரும்பினான்.

படிப்பை நிறுத்தினான். சிற்றுண்டியகத்தில் முழு கவனத்தையும் செலுத்தினான். முன்பிலும் பார்க்க பலர் உணவருந்த வந்தார்கள். தன்னிடம் ரொட்டியும் தயிர்க்கட்டியும் வாங்கும் அனைவருக்கும் இலவசமாக ஒரு கைக்குட்டையைக் கொடுக்கத் தொடங்கினான் டேவிட். 

தாயின் வாழ்விலிருந்து உதிர்ந்த வண்ணங்களை, ஒவ்வொரு கைக்குட்டைகளிலும் கோர்த்தெடுத்தான். இரவில் பல மணி நேரம் விழித்திருந்து கைக்குட்டைகளை உருவாக்கினான். அதன் பிறகு, காலையில் ரொட்டி செய்ய வேண்டிய மாவைப் பிசைந்து வைத்துவிட்டு, படுக்கைக்குப் போனான். டேவிட்டின் ரொட்டியைவிட, லீட் பகுதியெங்கும் அவனது கைக்குட்டையே பிரபலமானது. 

இலவச கைக்குட்டை பற்றிக் கேட்டவர்களிடம் தனது தாய்க்கு நேர்ந்தவற்றைச் சொன்னான். எந்தக் குற்றமுமற்ற அப்பாவிப் பெண்ணைப் பிரித்தானிய நீதிமன்றம் எவ்வாறு கடூழியச் சிறைக்குத் தள்ளியதென்ற சரித்திரம் லீட் பிரதேசத்தில் அனைவரிடமும் பரவியது. 

பாடசாலையிலுள்ளவர்கள் டேவிட்டின் தாய்க்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக வருத்தம் தெரிவித்தார்கள். நீண்ட இரவுகளாய் தனித்திருந்து துயரத்தின் துணியால் அவன் கைக்குட்டைகளைச் செய்தான். 

“ உன்னுடைய அம்மாவின் பொருட்டு நீ கைக்குட்டைகளை வழங்கியது போதும்” என்றனர்.

“நான் கைக்குட்டையை உங்களிடம் தருவதாக நீங்கள் நம்புகிறீர்கள். ஆனால் நான் அளிப்பது, நீதியின் கறையால் அழிக்கப்பட்ட ஒரு பெண்ணின் கருப்பையை, அவளது மேன்மையைக் கருக்கிய ரத்தம் உலராத கொடுமையின் நான்கு மூலை கொண்ட நினைவுச் சின்னத்தை” டேவிட் சொன்னான். 

04

இரண்டாயிரத்து இருபத்து மூன்றாம் ஆண்டு இயேசு பாலன் பிறந்த அன்றைக்குத் தேவாலயம் ஒன்றின் முன்பாக டேவிட்டின் சந்ததிப் பேத்தியான  மிஷேல் கைக்குட்டையை எல்லோருக்கும் வழங்கினாள். 

அவளுக்கும் எனக்குமிடையே காதல் உண்டானமைக்குப் பெரிய காரணங்கள் எதுவுமில்லை. அவளுடைய மூதாதையர்களைப் போல நானும் ஆஸ்திரேலியாவுக்குக் கடல் வழியாக வந்தவன். சொந்த மண்ணில் யுத்தத்தினால் கசக்கி வீசப்பட்ட கைக்குட்டைகளைப் போல குழந்தைகளும், பெண்களும் கொல்லப்பட்டார்கள். கரோலினாவைத் திருடியென வீதியில் அறைந்ததைப் போல, எங்களைத் தமிழர்கள் என்று கொன்று குவித்த தீவிலிருந்து வந்தடைந்தேன். மிஷேலும் நானும் முதன் முறையாகக் கலவியில் முயங்கி மீந்திருந்தபோது, அவள் சொன்னாள்.

“நானும் நீயும் ஒரு குழந்தையைப் பெற்றுக் கொள்ளும்போது பூமிக்கு நீதி திரும்பிவிடும்”

“அப்படியான எந்த அசட்டு நம்பிக்கையும் எனக்கில்லை மிஷேல். பூமிக்கும் நீதிக்குமிடையே பெரும்பாழ் தோன்றிவிட்டது” என்றேன்.

“தளராதே, இந்தப் பூமிக்கு எங்கள் கைக்குட்டை  நீதியை அழைத்து வரும் திலீபா. நான் கைக்குட்டையைக் கையளிப்பது போல, எனக்கு நீ குழந்தையை அளிக்க வேண்டும்”

“மிஷேல். நீ என்ன சொல்ல வருகிறாய்”

“நீ ஆயுதங்களாலும், கொடூர வஞ்சகங்களாலும் அழித்தொழிக்கப்பட்ட இனத்தின் மிச்சம். கொல்லப்பட்ட குழந்தைகள். நாங்கள் கையளிக்கும் கைக்குட்டைகள் போல. இந்தப் பிரபஞ்சம் முழுதும் புலம்பெயரும் பறவைகள் கிளைகளில் அமர்ந்து பறப்பதைப் போல, ஆசுவாசம் கொள்ள எம்மிடமிருப்பது நினைவுகள் மட்டும் தான்”

“எமக்குப் பிறக்கப் போகும் குழந்தை எப்படி நினைவாக இருக்கும்”

“இருக்கும். நினைவு என்பது இறந்த காலத்தில் உறைந்தது மட்டுமல்ல. நிகழ்வதும் தான். நாம் வழங்கும் கைக்குட்டை நினைவா? நிகழ்வா? நீயே சொல்”

அவளை இறுக அணைத்து முத்தமிட்டுச் சொன்னேன். 

“பூமிக்கு நீதி திரும்பிவிடும் மிஷேல். உன்னுடைய முப்பாட்டன் டேவிட் பிறந்ததும், அவனை நல்லூர் முருகன் கோவிலுக்கு அழைத்துச் செல்வோம்”

“ஆனாலொன்று திலீபா. அவனை நாம் கடல் வழியாக அழைத்துச் செல்ல வேண்டும். சமுத்திரம் முழுதும் கைக்குட்டைகளை நிறைக்க வேண்டும்” என்றாள்.

“இங்கிருந்து போவதற்குச் சாத்தியமில்லை. அங்கிருந்து வேண்டுமானால் கடல் வழியாக வந்துவிடலாம்”

“அது எப்படி”

“அகதிகள் வருவார்கள் அல்லவா”

கடல் முழுதும் அகதிகள் படகுகளில் கையசைத்து ஆஸ்திரேயாவின் கடற்கரையில் கரையொதுங்கினார்கள். மிஷேல் சொன்னாள் “ அவன் வந்திறங்கியிருப்பான். வா சென்று பார்க்கலாம்”

“ஆர்?”

“எங்களுடைய பிள்ளை” என்று சொல்லி கட்டி அணைத்தாள். 

எனக்குள் ஒரு கடல் அந்தியொளியில் அலையற்று அசைந்தது. 

2 comments for “திருவேட்கை

  1. ஆருயிர் முத்தங்கள்
    January 3, 2024 at 11:02 pm

    ஏறக்குறைய ஐந்து நூற்றாண்டிற்கு முன்னதான கரோலினா-டேவிட்டின் துயர்க்கனல் இருபத்தொன்றாம் நூற்றாண்டில் வாழும் வாரிசு வரிசையிலிருப்பவளான மிஷேலினுள்ளும் கனன்றெரிகிறது. வஞ்சகத்தால் சுமத்தப்பெறும் சிலுவையின் ஸ்தூல உரு கரைவதற்கு அதனைப் பஞ்சுப்பொதிகளாக மிதக்கவிடவும் பறக்கவிடவும் ஒவ்வொரு நூற்றாண்டிலும் முயன்று அது தனித்த துயரின் முத்திரைத்தனமாகவே மாறிவிடும் முரண்நகையென அந்தக் கைக்குட்டைகளைப் புரிந்து கொள்ளலாம்.

    கொண்டாட்டங்களுக்கும் அலங்கரிப்புகளுக்கும் சடங்குகளுக்கும் காதலின் ஆழ்நிலையினையும் ஆமோதிப்பினையும் உதிர்நிலையையும் உணர்த்தவல்ல குறியீடுகளுக்கும் உயர்ந்த தகுதியினை நிறுவும் அடையாளங்களுக்குமெனப் பல்வகை பயன்பாட்டிற்குள் சுழன்றிருந்த கைக்குட்டைகள் பெருந்துயர்த்தொடரின் சின்னமாக நிலைபெறுகிறது. கதையில் வருபவர்கள் தனிமையால் சூழப்பட்டவர்களாகத் தென்படுகிறார்கள். தனியனொருவர் மற்றொரு தனியருடன் இளைப்பாறுவதாலும் அரவணைக்கத் தயாராவதாலும் பந்தக்குழு அமையப்பெறுமா? தனிமையின் பிடி மிக இறுக்கமானது; கடுந்தொற்று. நீறாகிய அறத்தின், அன்பின் மிச்சத்துகள்களைப் பட்டாம்பூச்சியின் முழுவுருவென வலைவீசி அகப்படுத்திக் கொண்டு அதில் குளிர்காய முயற்சிக்கிறோம். அது ஒன்றுக்குமேற்பட்டோர் இணைந்தமட்டில் தனிமையின் பங்காளித்துவத்தோடு நிலையின்மையின் நிலையில் திரிவது மட்டுமே.

  2. vijayalakshmi
    January 10, 2024 at 5:13 pm

    கைக்குட்டை – பதினைந்தாம் நூற்றாண்டில் நிகழ்த்தப் பட்ட மனிதகுல ஆராஜகங்களைச் சொல்லும் அநீதியின் குறியீடாக இருப்பினும், திடீர் திருப்புமுனை இலங்கையில் நடந்த கொடூரங்களை ஓரிரு வரிகளில் சொல்லி முழு கதையின் சாரம் என்ன என்பதை கதாசிரியர் உணர்த்திய விதம் அருமை. . ப.தெய்வீகன் சிறந்த கதை சொல்லி.

    ஸ்ரீவிஜி

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...