எனக்கும் கருப்பனுக்கும் உறவு சுமூகமாக இருக்கப் போவதில்லை என்று முதல் நாளே தெரிந்துவிட்டது. வீட்டு வாசலிலேயே என்னை நோக்கி குரைத்துக் கொண்டு பாய்ந்து வந்தது. நல்ல வேளையாகக் கம்பி கதவு மூடியிருந்ததால், கதவை இறுக்கிப் பிடித்துக் கொண்டேன். உள்ளிருந்து குரைத்துக் கொண்டு நின்றது. அப்பா வந்து அதட்டி உள்ளே விரட்டிவிட்டு பிறகு கதவைத் திறந்தார். அப்பா இரண்டு வருடத்தில் அதிகமாகவே தளர்ந்திருந்தார்.
அம்மா அருகே வந்தமர்ந்து என்னுடன் பேசிக் கொண்டிருப்பதையும், எனக்குக் காபி கொடுப்பதையும் உக்கிராண அறை ஜன்னல் வழியாக கருப்பன் பார்த்துக் கொண்டிருந்தது. குரைப்பது நின்றிருந்தது. ஆனாலும் அவ்வப்போது என்னைப் பார்த்து உறுமியது. என்னுடைய வீட்டில், என்னை வெளியாள் போல் நினைத்து, அப்படி அது உறுமியது எரிச்சலைத் தந்தது. அப்பாவை போலவே நானும், “அடச்சே… சும்மா இரு!” என்று அதட்டிப் பார்த்தேன்.
முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தது கருப்பன்.
என்னுடைய சிறு வயதில், இதே வீட்டில் நிறைய நாய்கள் வளர்த்திருக்கிறோம். வீட்டுக்குப் புதிதாக வருபவர்கள், “நாய் இருக்கிறதா?” என்று பயந்த கண்களுடன் கேட்பது உள்ளூர பெருமிதமாக இருக்கும். “ஒண்ணும் செய்யாது… வாங்க!” என்று சொல்லி சிறிது நேரம் அவர்களை அல்லாட விடுவது எங்களுக்கொரு வேடிக்கை. பிறகு நாயை உக்கிராண அறையில் கொண்டு விட்டு கதவை மூடி, பிறகு விருந்தினர்களை உள்ளே அழைப்போம். படிப்பு, வேலை என்று இந்த வீட்டையும் ஊரையும் பிரிந்த பின், நாய் வளர்க்கும் சூழல் வரவேயில்லை.
அம்மா இரண்டு வருட கதையைச் சொல்லத் தொடங்கியிருந்தாள். ஏற்கனவே தொலைபேசியில் சொன்னதுதான் எனினும், நேரில் இன்னும் நுட்பங்களுடன், மேலதிக தகவல்களுடன் அம்மா விவரித்துக் கொண்டிருந்தாள். களைப்பில் அப்படியே தூங்கி விழுந்ததும், “சரி, சரி நீ போய் கொஞ்ச நேரம் தூங்கு,” என்றாள். காலை பத்து மணிவாக்கில் எழுந்து குளித்து முடித்து, டிபன் சாப்பிட உட்காரும்போதுதான் திரும்பவும் கருப்பனைப் பார்த்தேன். சிறிய தயக்கத்துடன் அம்மாவின் காலைச் சுற்றி வந்து கொண்டிருந்தான். என்னைக் கண்டுக்கொள்ளாத தொனி. அவ்வப்போது உற்றுப்பார்த்துவிட்டுப் பழையபடி அம்மாவையே சுற்றிக் கொண்டிருந்தான்.
எல்லாமும் மாறியிருந்த ஊரில், முற்றத்தின் வழியாக ஊஞ்சலில் விழும் வெயில் மட்டும் அப்படியே இருந்தது இதமளித்தது. ஊரிலிருந்து அப்பாவுக்கு வாங்கி வந்திருந்த பிஸ்கெட் டின்னிலிருந்து சில பிஸ்கெட்டுகளை எடுத்துக் கொண்டு வந்து ஊஞ்சலில் அமர்ந்தேன். ஒரு பிஸ்கெட்டை கருப்பனிடம் காட்டி கொஞ்சம் தள்ளி போட்டதும் ஆர்வத்துடன் பார்த்தான். சிறிது தயங்கி, பிறகு மெதுவாக வந்து பிஸ்கெட்டை கவ்வி எடுத்துக் கொண்டு ஓடினான். சிறிது நேரத்துக்கெல்லாம் திரும்பி வந்து என் முகத்தைப் பார்த்தான். இந்த முறை என் அருகேயே போட்டேன். சாப்பிட்டுவிட்டு சிறிது வாலையும் ஆட்டினான். அப்படி வா வழிக்கு என்று நினைத்துக் கொண்டேன்.
நாய் என்னிடம் நெருங்கியது கண்டு சிரித்தார் அப்பா. “நம்ம வீடே நாய் ராசியுள்ள வீடுதான்,” என்றார்.
“அப்படி எல்லாம் ஒரு ராசி இருக்கா என்னா?”
“நல்ல கதை. நாய்ன்னு இல்லை… எந்த மிருகமும் வீட்டுலே இருக்குதுன்னா அதுக்கு ஒரு ராசி இருக்கணும். இல்லைன்னா வீட்டுலே தங்காது. சின்ன சொக்கைய்யா இருந்தாரே… மாட்டு வாகடமே தெரியும் அவருக்கு. நம்ம வீட்டுலே எந்த மாடு வாங்குனாலும் அவரை கேட்காம வாங்க மாட்டாங்க தாத்தா. ஆனா சின்ன சொக்கைய்யா வீட்டுலே ஒரு மாடு கூட தங்காது. சீமை பசுன்னு சுழி பாத்து வாங்கிட்டு வருவாரு. கோமாரி வந்து ஒரு மாசத்துலே செத்துபோயிடும். அப்படி ஒரு ராசி. நம்ம வீட்டுலே எப்போதும் நாய்க இருந்திருக்கு. அய்யா காலத்திலே, இந்த வீட்டுக்குதான் பாடகச்சேரி ராமலிங்க சாமி வருவாரு. அவரு வந்தா, எங்கேருந்துதான் அவ்வளவோ நாய் வருதுன்னே தெரியாது. ஒரு அம்பது நாய் கூட வரும். கைலே ஒரு தடி வச்சிருப்பாரு. அது நுனிலே நாய் மொகம் போட்டு இருக்கும். வெள்ளை வேட்டியை கழுத்தை சுத்தி கட்டிருப்பாரு. அவரு வந்துட்டா, தாத்தாவே இடுப்புலே துண்ட கட்டிக்கிட்டு பரிமாறுவாங்க. நாய்ங்க எங்கேயாவது சண்ட போடாம சாப்புட்டு பாத்துருக்கீயா? பாடகச்சேரி சாமியோட வர்ற நாய்ங்களுக்கு இலை போட்டுதான் சாப்பாடு போடுவோம். எல்லா நாயும் மனுசன் மாதிரி அதது இலையை பாத்து அதுலே என்ன போடுறாங்களோ, அதை மட்டும் சாப்பிட்டுட்டு எழுந்துபோவும்.”
“ஒரு நாய் கூடவா சத்தம் போடாது?”
“ஒரு சின்ன சத்தம் வராது. எப்பவாது ஒரு நாய் கொஞ்சம் உறுமுனுச்சுனா, அடுத்த இலையை பாத்துச்சுன்னா, பாடகச்சேரி சாமி அது பேரை சொல்லி அதட்டுவாரு. ‘என்னடா கந்தா, இன்னும் பக்கத்துவூட்டு வாசனை புடிக்கிறயா? பட்டது எல்லாம் போதாதா? கம்முனு சாப்புடுடா’ம்பாரு. ‘என்னா வேலாயுதம் புள்ளை இன்னும் ஜென்ம ருசி மறக்கலையா… போதும் சாப்புடு’ன்னு ஒரு அதட்டல். அவ்வளோதான் அதது வாலை சுருட்டுக்கிட்டு சாப்புட்டு போவுங்க. ஒரு நாய் சாப்பிடுறத, இன்னொரு நாய் பாக்காது. ஒரு குலைப்பு இருக்காது. சாமி, கால்நடையாதான் பாடகசேரிலேருந்து இங்க வருவாரு. ஆனா ஒருத்தரும் அவரை வழிலே பாத்தது இல்லை. சட்டுனு தெருமுக்குலே ஒரு நாப்பது, அம்பது நாயோட வருவாரு. அப்புறம் அப்படியே வேற ஊரு. சில சமயம் மாசக்கணக்குலே வரவே இல்லைன்னா, அய்யா தெருவுலே சுத்துற நாய்ககிட்டே சாமியை பாக்காணும் போல இருக்கே பைரவான்னுவாங்க. இரண்டு மூணு நாள்லே சாமி வந்துடுவாரு. ம்ம்… நாய்னா, நாய் மட்டும் தானா?”
நிறைய தடவை அப்பா சொன்னதுதான். வீட்டிலிருக்கும் பாடகசேரி சாமியின் மங்கிய கறுப்பு வெள்ளை படம் ஞாபகத்தில் எழுந்தது.
நான் ஊருக்கு வந்திருப்பது தெரிந்து, சாயங்காலமாகச் சிவா வீட்டிற்கு வந்தான். சிவாவைக் கண்டவுடன் கருப்பன் எகிறி குதித்து அவனிடம் ஓடினான். அவனை முன்னங்கால்களால் கட்டித் தழுவிக் கொண்டான். குனிந்து கருப்பனை அணைத்துக் கொண்ட சிவாவின் முகத்தை நக்கினான். உடலே வால் ஆகிவிட்டது போல், கருப்பன் உடம்பை ஆட்டினான். முகத்தைக் கொஞ்சிய சிவா நாக்கால் நக்கியதும், செல்லமாக முதுகில் ஒரு அடி கொடுத்தான். வாங்கி கொண்டு கத்திய கருப்பன், திரும்பவும் அவனிடமே ஓடினான்.
“எப்படிடா உன்கிட்டே இப்படி பழகுது?”
“சும்மாவா? மூணு மாசம் முன்னே சாகலே கிடந்துச்சு. வயிறு முழுக்க கொப்பளம் வந்து, எதுவும் சாப்பிடாம கிடந்துச்சு. அப்பா போன் செஞ்சு சொன்னாங்க. வந்து பார்த்தா, எந்திருக்க கூட தெம்பில்லை. உடனே தூக்கி ஆட்டோலே போட்டுட்டு போய் டாக்டருகிட்டே காட்டினேன். வைரஸ் அட்டாக் ஆகிடுச்சுன்னு ஊசி போட்டாங்க. இரண்டு கால் நரம்புலேயும் டிரிப்ஸ் போட்டு புடிச்சிட்டுருந்தேன். டிரிப்ஸ் போட வந்த நர்ஸை கடிக்க பாத்துச்சு. மொகத்தை புடிச்சி அமுக்கிட்டு உட்கார்ந்திருந்தேன். அப்படி தொடர்ந்து மூணு நாளூ ஊசி போட்டு மெதுவா சரியாச்சு. வாய் முழுக்க கொப்பளம். வாயிலேருந்து எச்சி ஊத்திட்டே இருக்கு. எதுவுமே சாப்பிட முடியலை. அமுல் ஐஸ்கிரீம் வாங்கிட்டு வந்து கொடுத்தேன். கொஞ்சம் கொஞ்சமா சாப்பிட ஆரம்பிச்சு, இப்போ இப்படி குதிக்கிறாரு. ஞாபகமிருக்கும்லே, உசுரை காப்பாத்திவுட்டவன்னு.”
“என்கிட்டேயும் வந்தவுடனேயே ஒட்டிகிட்டான்டா.” என்றேன். பின்னர் “கருப்பா, இங்க வா…” சொடுக்குப்போட்டு கூப்பிட்டேன். பிஸ்கெட் ஞாபகம் இருக்குமென்று நினைத்தேன். தலையைத் தூக்கி மிதப்பாக என்னைப் பார்த்துவிட்டு, சிவாவின் காலை நக்கியது. இதற்கு மேலும் சிவா முன்பு கருப்பனின் அன்பைச் சோதிக்க வேண்டாம் என்று தோன்றியது.
“ஆனா, இப்படி பதுவுசா இருக்கானேன்னு நினைக்காதே. கெட்டபய இவன். அன்னைக்கு கறிகாய்கடைகாரரைப் பதம் பாத்துருப்பான். அப்பாவால செயினை இழுக்க முடிலை. அந்தாளு பயந்துபோய் சுத்தி சுத்தி வர்றாரு. நல்லவேளை நான் அந்த நேரம் பாத்து வந்ததால, புடிச்சி கட்டுனேன்,” என்றான் சிவா.
நாங்கள் பேசிக் கொள்வதை, ஒரு பக்கமாகத் தலையைச் சாய்த்துக் கேட்டுக் கொண்டிருந்தான் கருப்பன். செவித்திறன் ஒரு பக்கம் குறைந்தவர்கள், மற்றவர் பேசும்போது மறுபக்க காதைச் சாய்த்து கேட்பது போல் அது இருந்தது. உடம்பு முழுவதும் செவலை நிறமாகவும், முகப்பகுதி கருப்பாகவும், நுனி மூக்கு மட்டும் எப்போதும் ஈரமாக, கருப்பு பன்னீர் திராட்சையில் தண்ணீர் நனைத்து வைத்தது போல் இருந்தான் கருப்பன்.
வந்திறங்கிய மூன்று நான்கு நாட்களில், குலதெய்வ கோயில், பத்திரபதிவு என்று தொடர்ந்து அலைந்து கொண்டேயிருக்க வேண்டி வந்தது. வீட்டிற்கு வரும்போதெல்லாம் அப்பாவுடன் சுற்றிக் கொண்டிருந்த கருப்பன், பிஸ்கெட் போட்டு தாஜாபடுத்தினால் வாலாட்டிக் கொண்டு என்னிடம் வருவதும், பிறகு பழையபடி அப்பாவிடம் சென்றுவிடுவதுமாய் இருந்தான். ஒரு முறை பிஸ்கெட் கொடுக்காமல் போக்குக் காட்டியபோது உதடுகளைத் தூக்கிக் கொண்டு, சிங்கபற்களைக் காட்டி என்னைப் பார்த்து உறுமினான். பிஸ்கெட்டை போட்டவுடன் அந்தப் பயம் இருக்கணும் என்பது போல் சாப்பிட்டுவிட்டு ஓடினான். எப்படியோ என் கண்களில் பயத்தைப் பார்த்துவிட்டது என்று தோன்றியது. நான் எவ்வளவு சாஸ்வதமாக நடித்தாலும், என்னிடமுள்ள பயத்தைச் சீறி அல்லது உருமி தொடர்ந்து உறுதிப்படுத்திக் கொண்டே இருந்தது. ஏதோ ஒரு வகையில் தான் மட்டுமே அந்த வீட்டிற்கு நிரந்தரமானவன் என்றும், நீ சும்மா லீவுக்கு வந்திருக்கிறவன் என்றும் அது சொல்வது போல் தோன்றியது.
கருப்பன் படுத்திருக்கும் விதமே வித்தியாசமாக இருந்தது. பின்னங்கால்களைப் பரப்பிக் கொண்டுதான் படுத்திருந்தது. பொதுவாக நாட்டு நாய்கள் இப்படி படுப்பதில்லை. கருப்பன் நாட்டு நாய்க்கும் ஜாதி நாய்க்குமான கலப்பு. சிறு குட்டியாக இரண்டு வருடங்கள் முன்பு ஒரு மழையில் வீட்டின் ஓரம் ஒதுங்கியிருக்கிறது. அப்பா, அதற்குப் பால் ஊற்ற, இதுதான் தனது இடமென்று பற்றிக் கொண்டது.
இன்னொரு விசேஷமும் கருப்பனிடம் இருந்தது. நூற்றாண்டுகளைக் கடந்த எங்களது ஓட்டு வீட்டின் திண்ணையின் ஒரு மூலை இருந்தது. அந்த மூலையில் மட்டும் நீல நிறத்தில் வழவழப்பாக சிமெண்ட் போட்டு மொழுகியிருக்கும். எந்தக் கோடையிலும் அந்த இடத்தில் குளிர்ச்சி மீதமிருக்கும். அந்த நீல நிற சிமெண்ட் பாவிய மூலையில் தான் கருப்பன் எப்போதும் சென்று படுத்துக் கொண்டது. அப்படி அதற்கு முன்பு அந்த இடத்தில் எப்போதும் அமருபவனாக என்னுடைய அண்ணன் இருந்தான். தெருவை வேடிக்கை பார்க்க அவன் தேர்ந்தெடுக்கும் இடம் அது. சாலையில் செல்பவர்களுக்கு அந்த மூலை சட்டென்று தெரியாது. அப்படி ஒரு நாள் முழுவதும் கூட அவன் அங்கு அமர்ந்திருப்பது உண்டு.
”நல்ல சூடுள்ள நாய்டா,” என்றார் அப்பா.
“ஆமா… பிஸ்கெட் போட்டால் வாலாட்டிகிட்டு போவுது. என்னத்த சூடு,” என்றேன்.
உண்மையில், கருப்பன் நல்ல கூர்மை கொண்டவன் என்பதை மூன்று நாட்களில் புரிந்து கொண்டேன். வெம்மை கூடிய பகல் பொழுதுகளில் முற்றத்து வெயிலில் வந்து படுத்துறங்கினான் கருப்பன். சமையலறையில் கைத்தவறி அம்மா பாத்திரங்களைக் கீழே போட்டால் கூட எழுந்திருப்பதில்லை. ஆனால், வாசல் கதவின் நாதங்கி லேசாக முனகினால் கூட சட்டென்று எழுந்து குரைத்துக் கொண்டே வாசல் பக்கம் ஓடினான். மற்றொரு நாள், அப்பா கால் வலி என்று முனகிக் கொண்டே அயோடெக்ஸ் தடவிக் கொண்டிருந்தார். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை அப்படி அவர் தடவிக் கொள்வது வலிக்காகவா அல்லது அயோடெக்ஸ் மணத்திற்காகவா என்பது பெருங்குழப்பம். அதை பார்த்துக் கொண்டிருந்த கருப்பன், கட்டில் அருகே சென்று தொங்கவிட்டிருந்த அப்பாவின் இடது காலை நக்கினான். அப்பா பெருமையுடன் என்னைப் பார்த்தார்.
அடுத்த நாளே, கருப்பன் என் மீது கொண்டிருக்கும் அன்பைப் பரிசோதிக்கவேண்டி வரும் என்று நினைக்கவில்லை. காலை எழுந்தபோதே, அப்பா கையில் சங்கிலியுடன் வாசலுக்கும் கொல்லைக்குமாய் நடந்து கொண்டிருந்தார். கருப்பன் கழுத்துப் பட்டையை அவிழ்த்துக் கொண்டது. இன்னும் கொஞ்சம் நேரத்தில் பேப்பர்கார், காய்கறி விற்பவர் ஆகியோர் வரக்கூடுமென்பதால் கருப்பனைக் கட்டிப்போடுவது வழக்கம். கருப்பனோ கொல்லைக்கும், வாசலுக்குமாய் பாய்ந்து ஓடிக் கொண்டிருந்தது. அம்மா பிஸ்கெட்டை கையில் வைத்துக் கொண்டு அழைக்க, தன்னைக் கட்ட போகிறார்கள் என்பதை அறிந்து கொண்டு இன்னும் குஷியாய் அவர்களுக்குப் போக்கு காட்டியபடி குதித்துக் குதித்து ஓடிக் கொண்டிருந்தது. நான் தூக்கத்திலிருந்து எழுந்து வெளியே வந்தவுடன், அப்பா என்னை உதவிக்கு கூப்பிட்டார். கதவை மூடிக்கொண்டு அதை பிடி என்றார். பிஸ்கெட்டை கையில் எடுத்துக் கொண்டு நெருங்கினேன். சட்டென்று ஓட்டம் நின்று, வாலை ஆட்டியபடி என்னருகே வரவும் அப்பா அதை பிடித்துக் கொண்டு கழுத்துப்பட்டையைச் சுற்றினார். ஆனால், வார் அறுந்துவிட்டதால், அதை கட்டமுடியாமல் திணறினார். நான் கழுத்துப்பட்டையை வாங்கி சுற்றி, டேப் போட்டேன். அப்பா பிடித்துக் கொண்டிருக்கும்போதே சட்டென்று கழுத்தைத் திருப்பி என் கையை நோக்கி பற்களை நீட்ட, நான் கையை உதறிவிட்டேன். இருப்பினும் கையில் பல் பட்டுவிட்டது போல் தோன்றியது. அழுத்தி பார்த்தும் தடம் எதுவும் தெரியவில்லை. எனினும், நான் அப்படி பார்க்கும்போதே அம்மா, “எதுக்கு ஊருலேருந்து வந்தவனை பிடிக்க சொன்னீங்க, சனியன் கடிச்சிடுச்சா,” என்றாள்.
“இல்லைம்மா, கடிக்கவெல்லாம் இல்லை” என்று சொல்லும்போதே எனக்கும் சந்தேகம் வந்துவிட்டது. அம்மா, அப்பா என அனைவரும் திட்ட, நான் கையைப் பார்த்துக் கொண்டிருக்க தான் ஏதோ தவறு செய்துவிட்டோமென்று தோன்ற கருப்பன் மூலையில் போய் படுத்துக் கொண்டான். குற்ற உணர்வில் அது பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு படுத்திருக்க, அம்மா திட்டிக் கொண்டேயிருந்தாள். மாலை மருத்துவரைப் பார்த்து எதற்கும் இருக்கட்டும் என்று ஊசி போட்டுக் கொண்டேன். காலையிலிருந்து கருப்பன் சாப்பிடவேயில்லை என்றாள் அம்மா. அதன் தட்டில் போட்டிருந்த இட்லி காய்ந்து கிடந்தது.
நாங்கள் எல்லாம் சமாதானம் ஆகி விட்டோமென்று தோன்றிய பின்னரே கருப்பன் அருகில் வந்தான். எனக்கே அவனைப் பார்க்க பாவமாக இருந்தது. பிஸ்கெட் போட்டவுடன் என் காலை நக்கினான். ஆனால் அடுத்த நாள் வழக்கம் போல் அப்பாவிடம் போய் ஒட்டிக் கொண்டான். ஊருக்குத் திரும்பும் கடைசி நாள் வரை கருப்பன் என்னிடம் ஒட்டவேயில்லை என்று தோன்றியது.
“வர வெள்ளிகிழமை அண்ணன் தெவசம்டா. சாமியாருங்களுக்கு சாப்பாடு போடணும்” என்றாள் அம்மா. தன்னிச்சையாக உள்வாசல்படி மேல் இருந்த அண்ணன் படத்தைப் பார்த்தேன். அண்ணன் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்? ஆனால் இருந்தபோது எலியும் பூனையுமாகச் சண்டை பிடித்துக் கொள்வோம். சட்டென்று ஒரு பகலில் அண்ணன் இல்லாமல் போனபோதுதான், இனி அவன் என்றென்றைக்குமாக மறைந்துவிட்டான் என்பதே உரைத்தது.
மூன்று வாரம் விடுமுறை முடிந்து ஊருக்குக் கிளம்பி வந்தேன். விட்டுப்போன அலுவலக வேலைகள், வீட்டுப்பணிகள் என்று ஒரு மாதம் ஓடோடிபோனது. ஒரு ஞாயிறு அன்று, ஊருக்கு போனில் கூப்பிட்டபோது, அங்கு சிவா எடுத்தான். “ஒன்னும் இல்லைடா, அப்பா கீழே விழுந்துட்டாங்க… உடனே கிளினிக் கூப்பிட்டுப்போய் எக்ஸ்ரே எடுத்தாச்சு. நல்ல வேளையா, ப்ராக்சர் ஒன்னும் இல்லை. ஆனா, கீழ விழுந்ததால, வலி இருக்கு. பெயின் கில்லர் கொடுத்துருக்காங்க. அப்பா தூங்குறாங்க… அம்மாகிட்டே பேசு” என்றான்.
“என்னம்மா ஆச்சு?” என்று கேட்டேன்.
“எல்லாம் இந்தக் கருப்பன் செஞ்ச வேலைதான். பாலிதீன் கவரை எங்கேயோ கிடந்து எடுத்தாந்து கடிச்சிட்டு இருந்திருக்கு. இவங்க கொல்லைக்கு போனவங்க அதட்டிக்கிட்டு போய் அதை எடுத்திருக்காங்க. அப்படியே சீறிட்டு பாஞ்சுருக்கு. இவங்க பின்னாடி நவுந்து அப்படியே நெலை தடுமாறி வுழுந்துட்டாங்க. எழுந்திரிக்க முடிலை. அப்புறம் அவங்க கத்தி, நா போய் தூக்குன்னேன். என்னமோ போ… நேரமே சரியில்லை. செய்றதையும் செஞ்சுட்டு, நான் என்ன பேசுறேன்னு தலையை சாய்ச்சு பாத்துட்டு நிக்குது பாரு. சனியன், இதை மொதல்லே தொலைச்சி தலை முழுவிட்டு மறுவேளை பாக்கணும்” என்றாள்.
சட்டென்று போகமுடியாத தூரத்திலிருந்து கொண்டு இது போன்ற நிலையில் வருந்துவதை தவிர வேறு என்ன செய்ய முடியும்? சிவாவிடம் பேசி தினமும் வந்து பார்த்துக் கொள்ள சொன்னேன். வீக்கம் குறைந்துவிட்டது என்று இரண்டு நாட்கள் கழித்துப் பேசும்போது அம்மா சொன்னாள்.
ஒரு வாரம் கழிந்து, மறு ஞாயிறு அழைத்தபோது, “கருப்பனை காணும்டா” என்றாள் அம்மா.
“ஏன் எங்கே போச்சு?”
“எங்க பாத்தாலும் தேடியாச்சு. சிவாவும் ஊர் முழுக்க பைக் எடுத்துட்டு போய் பாத்துட்டு வந்துட்டான். போனவாரம் உன்கிட்டே போனில் பேசினேன்லே அன்னைக்கு நைட்டுலே இருந்து காணாம போயிடுச்சு. சரி நானும் வந்துடும்ன்னு பாத்தேன். ஒரு வாரம் ஆச்சு எங்க தேடியும் கிடைக்கலை. என்னமோ கோச்சுட்டு போன மாதிரி போயிடுச்சுடா. காலையே சுத்தி வரும். எங்க போணுச்சுன்னே தெரிலை. அதிசயமா இருக்கு. இந்த சின்ன ஊருலே யாரும் புடிச்சிட்டுபோகவும் வழியில்லே. அப்பாவும் புலம்பிட்டே இருக்காரு. என்னமோ மனுசா மாதிரி கோச்சுக்கிட்டு போச்சேடா” என்றாள்.
இனி கருப்பன் திரும்பி வரமாட்டான் என்று தோன்றியது.
மிருகங்களின் உளவியல் உற்காசமானவை. இலக்கியம் நெடுக விலங்குகள் சார்ந்த கதைகள் ஏராளம். அவற்றின் வரிசையில் கருப்பன். ம.நவீனின் ஞமலியில் நாய் மோப்பங்காணும் தனிமையும் அது உணர்த்தவிரும்பும் இருப்பையும், ஓ ஹென்றியின் மஞ்சள் நாயின் நினைவுக்குறிப்பின் கதையீற்றில் நாயின் உரிமையாளரின் கணவன் (பிறகு உரிமையாளனாகிறான்) ‘பீட்’ எனப் பெயர் வைக்கும் தருணத்தில் வருவதான ஆசுவாசம் போல கருப்பனில் சிந்தனை-உணர்வு போன்றவை மனித ஆக்கநிலையிறுத்தங்களால் கவரப்பட்டு அதன்பால் செயல்படுபவனாகவே கருப்பன் காட்டப்படுகிறான்.
தன்மான உணர்ச்சிக்குக் கட்டுப்பட்டு அவன் வீட்டை விட்டு விலகுவதாக, இனி திரும்பாது எனும் எண்ணத்தைக் கதைசொல்லியின் மனதில் தோன்றுவது கருப்பனை தன் அண்ணனின் இன்மையோடு பொருத்திப்பார்க்கும் மனநிலை உள்ளதாகயிருக்கிறது. ஒருவேளை, வருடத்தில் குறிப்பிட்ட நாட்களில் மட்டும் வீடு திரும்பும் போது கிடைக்கப்பெறும் கதைசொல்லிக்கான பலனும் மதிப்பும் கருப்பனும் அனுபவித்திடத் திட்டம் தீட்டினானோ என்னவோ?
அன்பு , மனிதனையும் தாண்டி மற்ற உயிரினங்களுக்கும் உண்டு. அவற்றை வெளிப்படுத்தும் வழிமுறை மாறலாம்.ஆனால், அப்பளுக்கற்ற பேரண்பு அப்படியே இருக்கும். அவ்வீட்டில் கருப்பன் நான்கு கால் கொண்ட உடன் பிறவா சகோதரன்.
தொடக்கத்தில் கருப்பனை அஃறினையில் அது என்று சொல்லிக் கொண்டிருக்கும் கதை சொல்லி, ஒரு குறிப்பிட்ட இடத்தில் உயர்திணையில் சொல்ல ஆரம்பிப்பார். கருப்பன் மீதான கதை சொல்லியின் பார்வையில் எழுந்த மாற்றத்தை குறிக்கும் நல்ல இடம் அது!