எஸ்.எம். ஷாகீரின் விஷ்ணுபுரம் விருது விழா உரை

இலக்கியம், மெய்மை மற்றும் முடிவிலி

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம், 2010ஆம் ஆண்டு எழுத்தாளர் ஜெயமோகன் மற்றும் அவர்தம் நண்பர்களால் அவரின் முதன்மையான நாவலின் பெயரால் தொடங்கப்பட்ட இலக்கிய அமைப்பாகும். வழமையான யதார்த்தவாத தமிழ் நாவல்களிலிருந்து வேறுபட்டு மீ யதார்த்தவாதத்தையும் தத்துவத்தையும் விஷ்ணுபுரம் நாவல் பேசியதாக அறிகிறேன். நவீனத்துவ இலக்கியத்துக்குப் புது பரிமாணம் அளிக்கும் வகையில் இந்திய மரபின் காவிய அழகியலையும் ஆழ்நிலையையும் அந்நாவல் பேசியது. உலகம் முழுதும் தொடங்கிய நவீனத்துவச் சிந்தனை அலையே யதார்த்தவாத அழகியலையும் தோற்றுவித்தது. அதே சமயத்தில் அந்த இயக்கமே பின்நவீனத்துவம் போன்ற மாற்று சிந்தனைகளையும் பின்னாளில் உருவாக்கியது. காவிய அழகியலை முன்வைக்கும் விஷ்ணுபுரம் போன்ற நாவல் அமைவதற்கும் அந்த அலையே காரணமாக இருந்தது.

ஜெயமோகன் மரபையும் புதிய சிந்தனையையும் இணைத்துக் காவிய மரபை உருவாக்கிக் கொண்டிருந்தபோது, யுவன் சந்திரசேகர் என்ற எழுத்தாளர் இலக்கியத்தை மாற்றுமெய்மை எனும் புதிய பரிமாணத்துக்கு இட்டுச் சென்றார். இலக்கியத்தில் வடிவம் சார்ந்தும் பரிமாணம் சார்ந்தும் மாற்றுச் சிந்தனைகள் உலகின் எல்லாப் பகுதிகளிலும் தொடர்ந்து நடைபெற்று வந்திருக்கின்றன. 20ஆம் நூற்றாண்டில் உருவான நவீனச் சிந்தனை மரபு மரபார்ந்த இலக்கியத்தை முழுமையாக ஒடுக்கவில்லை. மாறாக, மரபையும் நவீனச் சிந்தனையையும் இணைத்துக் கொண்டு தனித்துவம் கொண்ட உள்ளூர் இலக்கியங்களை உருவாக்கியது. நவீன இலக்கியமே மெல்ல வளர்ந்து இன்றைக்கு நன்கு அறியப்பட்டிருக்கின்ற பின்நவீனத்துவத்தையும் மாய யதார்த்தவாதத்தையும் உருவாக்கியது. மரபும் நவீனமும் இணைந்தே இதனைச் சாத்தியப்படுத்தியிருக்கின்றன.

அந்நியச் சிந்தனைக்கும் மரபார்ந்த சிந்தனைக்குமான முரணியக்கமே மாற்றுச் சிந்தனைகளுக்கான இடத்தை உருவாக்குகிறது என ஹோமி கே பாபா குறிப்பிடுகிறார். காலனித்துவ ஆட்சி நடைபெற்றபோது காலனிய தேசங்களில் வெள்ளையர்களின் பண்பாடு உயர் பண்பாடாக முன்னிறுத்தப்பட்டது. அந்தப் பண்பாட்டுக்கும் உள்ளூர் பண்பாட்டுக்குமான முரண்பாடே பின்காலனியவாதத்தை உருவாக்கியது. பின்காலனியவாதத்துக்குப் பின், முரண்கள் கொண்ட இவ்விரண்டு கொள்கைகளையும் இணைக்கும் பரிணாமம் உருவானது. நவீனத்தாராளவாதச் சிந்தனையை அடிப்படையாகக் கொண்டு காலனித்துவம் கொண்டு வந்த நவீனச் சிந்தனைகளும் உள்ளூர் சிந்தனைகளுக்குமான முரணியக்கம் நடைபெறத் தொடங்கியது.

அதனாலே அந்நியச் சிந்தனைகளை உள்வாங்கிய தனித்துவமான சிந்தனைப்போக்கு உருவானது. உள்ளூர் பண்பாட்டின் தனித்துவத்தை நவீனத்துவத்தின் முகங்களில் ஒன்றாக முன்னிறுத்தப்பட்டது.

1980, 90களில் ஜெயமோகன் மற்றும் யுவன் ஆகியோர் தமிழிலக்கியத்துக்குப் புதிய பரிணாமங்களைச் சேர்த்ததைப் போலவே மலேசிய இலக்கியச் சூழலும் மாற்றம் கண்டிருந்த காலக்கட்டம் அது. இந்தக் காலக்கட்டத்தில் நான் மற்றும் என்னுடன் சேர்ந்து ஷின் கஸ்தூரி (Zaen Kasturi), முகம்மட் நசுருட்டின் டசுக்கி( Muhd Nasruddin Dasuki), மர்சிலி என். ஒ (Marsli N.O) மற்றும் சைனல் ரஷிட் அகமாட் (Zainal Rashid Ahmad) ஆகியோர் பரிசோதனை முயற்சியாகப் பல படைப்புகளை மலாய் இலக்கிய உலகத்துக்குள் கொண்டு வந்தோம். அந்த முயற்சியின் வாயிலாக மலாய் நவீன இலக்கிய உலகத்துக்குள் வலுவாக இருந்த யதார்த்தவாத அழகியலை ஒட்டிய எழுத்துப்பாணியை மாற்றியமைத்தோம். மேலும், மலாய்க் காவியங்கள், புராணங்கள் என ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த பழைய மரபை மீண்டும் அழகியல், சொல் முறையால் நவீனப்படுத்தினோம். யதார்த்தவாதத்துக்கும் யதார்த்தம் அல்லாத எழுத்துப்பாணிக்குமான இணைப்புப் பாலமாக எங்களின் எழுத்துப்பாணி கருதப்பட்டது. எங்களின் எழுத்துப்பாணியை பின்நவீனத்துவ எழுத்துப்பாணி என விமர்சகர்கள் மதிப்பிட்டனர். 1980களிலும் 1990களிலும் நாங்கள் மலாய் மொழியில் செய்த பரிசோதனை முயற்சிகள் ஜெயமோகன் மற்றும் யுவனின் எழுத்துப்பாணியை ஒத்திருக்கின்றன.

யுவன் சந்திரசேகர் தன்னுடைய படைப்புகளில் மாற்றுமெய்மையை அறிமுகப்படுத்தினார். அவருடைய படைப்புகள் தருக்க உலகத்துக்கு அப்பால் இருக்கக்கூடிய மெய்மையைப் பேசின. மனிதத் தருக்கத்துக்கு அப்பால் இருக்கும் மெய்மையே என்றுமுள்ள மெய்மையொன்றைக் கண்டெடுத்தன. தருக்க அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மைகளுக்கு அவை எதிரானதைப் போல தோன்றினாலும், ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மைகளுக்கே ஆதாரமாக மாற்றுமெய்மையே விளங்குகிறது. யுவனின் படைப்புகள் பொருள் மயக்கத்தை உருவாக்குவதோடு முரண்களையும் கொண்டதாக இருக்கின்றன. அவர் குறிப்பிடும் மாற்றுமெய்மை எனும் எழுத்து முறையுடன் நான் குறிப்பிடும் நியு ரியலிசத்தையும் (New Realism) இணைத்துப் பார்க்கிறேன். மெய்மையை விரிவுப்படுத்திப் பார்க்கும் முயற்சியாகவே இரண்டையும் குறிப்பிட முடியும். ஏற்கனெவே ஒப்புக்கொள்ளப்பட்ட தருக்க ஒழுங்கு முறையையும் கருத்துகளையும் மறு ஒழுங்கு செய்வதாகவே இரண்டையும் காண முடியும்.

இதுகாறும் கால, வெளி ஆகிய எல்லைகளுக்குள் குறுக்கப்பட்டிருந்த மெய்மையை விஸ்தரித்துப் பார்ப்பவையாகவே மாற்றுமெய்மை( Alternative Reality) , நியு ரியலிசம் ஆகிய இரண்டையும் காண்கிறேன். மெய்மையின் எல்லையின்மையே புதிய சிந்தனைகளைத் தன் எழுத்துகளில் கொண்டு வருவதற்கு யுவனுக்கு ஏதுவாக இருந்திருக்குமென எண்ணுகிறேன். யதார்த்த உலகிலிருந்து இலக்கியப்பிரதி எவ்வளவுத்தான் விலகியிருந்தாலும் வரலாறு, தருக்கம் ஆகியவற்றால் பிணைக்கப்பட்டே இருக்கின்றது என்பதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். அல்டெர்னெட் ரியல்டி மற்றும் நியு ரியலிசம் ஆகிய இரண்டும் வெவ்வேறு சிந்தனைப்பாணிகளைப் போல தோன்றினாலும் அடிப்படையில் ஒன்றுதான்.

இலக்கியத்துக்கு எல்லைகள் இல்லை என்பது மட்டும் மிக நிச்சயம். இலக்கியமென்பது மனிதர்கள் தமக்குள் எவ்வித வேறுபாட்டையும் பொருட்படுத்தாமல் படைப்பதை மட்டுமே முதன்மையாகக் கொண்டது. மொழியால் வேறுபட்டிருந்தாலும் சிந்தனை, வடிவம் என ஏதோ ஒருவகையில் இலக்கியங்கள் தமக்குள் ஒற்றுமையைக் கொண்டிருப்பவையே. இலக்கியத்தைக் கொண்டு எல்லாருக்குமான இணைப்புப் பாலமொன்றைச் சாத்தியமாக்கியிருக்கும் விஷ்ணுபுரம் நண்பர்களுக்கு என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...