விஷ்ணுபுரம் அரங்கில் எஸ். எம். ஷாகீருடன் உரையாடல்

தமிழ்ச்சூழலில் பிறமொழி இலக்கியங்கள் குறிப்பாகக் கிழக்கத்திய மொழி இலக்கியங்கள் குறித்த அறிமுகங்களும் விவாதங்களும் மிகக் குறைவாகவே நடைபெற்றிருக்கின்றன. தென்கிழக்காசிய மொழிகளில் ஒன்றான மலாய் மொழியின் இலக்கியமும் அவ்விதமே ஒப்பு நோக்க தமிழ்ச்சூழலில் குறைவாகவே அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. மலாயை ஆட்சிமொழியாகக் கொண்ட சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் தமிழர்கள் பரவி வாழ்ந்த போதிலும் மலாய் மொழி இலக்கியங்கள் குறித்த அறிமுகங்களும் விவாதங்களும் தமிழில் குறைவாகவே முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.

ஆக அண்மையில் எழுத்தாளர் அ. பாண்டியன் ‘அவர்களின் பேனாவிலிருந்து கொஞ்சம் மை’ (2014) என்கிற நூலில் சமகால மலாய் இலக்கியச் சூழலில் இயங்கும் நவீன படைப்பாளிகள் குறித்த அறிமுகக் கட்டுரைகளை எழுதியிருந்தார். அதன் பிறகு அவ்வாறான தொடர் முயற்சிகள் நடைபெறவில்லை. நூற்றாண்டு கால வரலாற்றைக் கொண்ட நவீன மலாய் இலக்கியத்தின் அறிமுகம் தமிழ்ச்சூழலில் மிகக் குறைவாகவே நிகழ்ந்திருக்கிறது.

அவ்வகையில் நடந்து முடிந்த விஷ்ணுபுரம் விருது விழாவில் சமகால மலாய் இலக்கியச் சூழலில் மிக முக்கியமான எழுத்தாளராக அறியப்படும் எழுத்தாளர் எஸ். எம். ஷாகீருடனான அமர்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமிழிலக்கியச் சூழலில் மிக முக்கியமான இலக்கிய நிகழ்வாக மாறியிருக்கும் விஷ்ணுபுரம் விருது விழா தொடர்ந்து ஆண்டு தோறும் இந்திய நிலப்பரப்பில் இருக்கும் அயல் மொழி எழுத்தாளர்களுடன் அமர்வுகளை ஏற்பாடு செய்து வருகிறது. இவ்வாண்டு முதன்முறையாக அயல்நாட்டு எழுத்தாளர்களையும் இலக்கியங்களையும் கவனப்படுத்தும் முயற்சியின் தொடக்கமாய் மலாய் எழுத்தாளர் எஸ். எம். ஷாகீரைச் சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தது. தமிழ் வாசகப் பரப்புக்கு ஷாகீருடைய புனைவுலகத்தை அறிமுகப்படுத்தும் வகையில் நிகழ்ச்சிக்கு முன்னரே ஷாகீரின் தேர்ந்தெடுக்கப்பட்ட 5 சிறுகதைகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வல்லினம் இதழிலும் வெளியிடப்பட்டிருந்தது.

ஷாகீருடனான அமர்வு கேள்வி-பதில் நிகழ்வாக நடைபெற்றது. அவருடனான அரங்கை நான் (அரவின் குமார்) நெறியாளராக இருந்து வழிநடத்தினேன். ஷாகீருடனான கேள்விகள் மலாய் இலக்கியச் சூழலையொட்டியும் அவருடைய புனைவுலகத்தை அறிந்து கொள்ளும் வகையிலும் கேட்கப்பட்டன.

கேள்வி: மலாய் நவீன இலக்கியச் சூழல் அடைந்திருக்கும் மாற்றத்தைக் குறித்து அறிந்துகொள்வதற்காக இக்கேள்வி தொடுக்கப்படுகிறது. உங்கள் தந்தையும் தேசிய இலக்கியவாதி விருதையும் பெற்ற எழுத்தாளர் எஸ். எம். ஒத்மான் கிளாந்தானை முன்வைத்து இலக்கியம் படைத்துள்ளார். அவர் குறித்துக் கூறுங்கள்.

ஷாகீர் பதில்: என்னுடைய தந்தையார் அசலான கம்பத்து வாழ்க்கையை அனுபவித்தவர். அவருடன் அக்காலத்தைச் சேர்ந்த மற்ற எழுத்தாளர்களும் அம்மாதிரியான வாழ்க்கையைக் கொண்டவர்களென்பதாலே அந்த வாழ்க்கையை இலக்கியத்தில் கொணர்ந்தார்கள். அவருடைய ‘ஜுவாரா’ நாவல் அப்பொழுது கிளாந்தான் மாநிலத்தில் இருந்த காளை மாட்டுச் சண்டையைப் பின்னணியாகக் கொண்டது. அந்தச் சண்டையில் தோற்றவர்கள், மாடு பிடி வீரர்கள் துப்பாக்கியால் சுடப்படுவார்கள். அவருடைய ‘கோத்தா பாரு’ எனும் நாவலில் இசுலாமிய வாழ்க்கை நெறி மிகுந்ததாகச் சொல்லப்படும் கிளாந்தான் மாநிலத்தின் கோத்தா பாரு நகரத்தின் மறுபக்கம் காட்டப்பட்டது அக்காலத்தில், கோத்தா பாரு மலேசியாவின் பாரிஸ் என்றழைக்கப்பட்டது. குடி, கேளிக்கை, விலை மாதர் எனக் கேளிக்கையான வாழ்க்கை இருந்தது. இப்படியாக மலேசியாவின் தொடக்கக்கால யதார்த்ததை அவருடைய நாவல்கள் பிரதிபலித்தன.

கேள்வி: மலேசியா இசுலாமிய நாடென்பதால் பெண்கள் இலக்கியத்தில் ஈடுபடுவதற்கு ஏதேனும் தடைகள் இருக்கின்றனவா?

ஷாகீர் பதில்: மலேசியா இசுலாமிய நாடாக இருந்தாலும் மற்ற இசுலாமிய நாடுகளைப் போல இறுக்கமான கட்டுப்பாடுகளைக் கொண்டிருக்கவில்லை. பெண்கள் கல்வி கற்பதற்கும் இலக்கியத்தில் ஈடுபடுவதற்கும் எவ்விதத் தடைகளும் இருக்கவில்லை. ரோஹானி மாட் டாரின் போன்ற பெண் எழுத்தாளர்கள் மிகத் தீவிரமாக நவீன இலக்கியத்துக்குப் பங்களிக்கின்றார்கள். பெண்கள் பெண்ணியம் என்பதைத் தாண்டி பொதுவான சிக்கல்கள் குறித்தும் எழுதி வருகின்றனர். மலேசியா பல்லின நாடென்பதால் சிவில் நீதிமன்றம், ஷரியா நீதிமன்றம் என இரு வகை நீதிமன்றங்களும் மலேசியாவில் இயங்குகின்றன. அதனால், இசுலாமியப் பெண்களுக்கான உரிமையும் நிலைநாட்டப்படுவதில் எவ்வித சிக்கலும் எழுவதில்லை.

கேள்வி: உங்களுடைய கதைகளை வாசித்த வரையில் அதில் நவீனத்துவத்துக்கு எதிரான விமர்சனப்பார்வையைக் காண முடிகின்றது. நீங்கள் அத்தகையப் பார்வையைக் கொண்டவரா?

ஷாகீர் பதில்: நான் முற்றாக நவீனத்துவ வாழ்க்கை முறையை எதிர்க்கக்கூடியவன் இல்லை. அதனால் உருவாகி வந்திருக்கின்ற நன்மைகளை ஏற்றுக் கொண்டிருக்கிறேன். என்னுடைய கதைகளில் இருப்பது, கம்பத்து வாழ்க்கையின் மீதான ஏக்கம்தான். எனக்கு முந்தைய காலக்கட்டத்து எழுத்தாளர்கள் அசலான கம்பத்து வாழ்க்கையை எழுதினர். ஆனால், எனக்கு அம்மாதிரியான வாழ்க்கை பின்னணி கிடைக்கவில்லை. அந்த ஏக்கத்தை என்னுடைய கதைகளில் எழுதியிருக்கிறேன். கம்பத்து வாழ்க்கை முறையை நவீன நகர வாழ்வின் முரண்பாடுகளாக முன்வைக்கிறேன்

கேள்வி: மலேசியாவில் அரசு, சமயம் சார்ந்த கட்டுப்பாடுகள் உங்களுடைய இலக்கிய ஆக்கத்துக்குத் தடையாக இருக்கின்றனவா?

ஷாகீர் பதில்: இலக்கிய ஆக்கத்துக்கான தடைகள் எனப் பார்க்கும்போது அமைப்பு சார்ந்த மதிப்பீடு, மக்கள் தாங்களே எடுக்கும் மதிப்பீடு என இரண்டு வகையாக இருக்கின்றன. இந்தோனேசியாவில் வரையறையற்ற காம எழுத்துகள் அனுமதிக்கப்பட்டிருந்தன. அதனை நறுமண இலக்கியம் என்று பெயரிட்டு அழைத்தனர். காலப்போக்கில் தொழிற்நுட்ப வளர்ச்சியினால் அந்த எழுத்து செல்வாக்கு இழந்தது. மலேசியாவில் அம்மாதிரியான அலையே உருவாகாத வகையில் கண்காணிப்புகள் தொடர்கின்றன. என்னைப் பொருத்தளவில், மெய்யான வாழ்க்கையின் பிரதிபலிப்பே இலக்கியம். ஆக, அதனை அதிகமாகக் கண்காணித்துத் தணிக்கை செய்வது சரியாக இல்லைத்தான்.

கேள்வி: இந்தோனேசியா இலக்கியத்தைப் போல மலேசிய இலக்கியம் ஏன் உலகம் முழுதும் அறியப்படுவதில்லை?

ஷாகீர் பதில்: இந்தோனேசிய இலக்கியத்தை உலகம் முழுவதும் இருக்கும் இந்தோனேசியப் புலம்பெயர் மக்கள் இலக்கிய முகவர்களைப் போலவே செயற்பட்டுப் பரப்புகின்றனர். அத்துடன் இந்தோனேசியா எழுத்தாளர்களுக்கு இருக்கும் சுதந்திரமும் காத்திரமான இலக்கியப் படைப்புகள் வெளிவருவதற்குக் காரணமாக அமைந்திருக்கின்றன. அத்தகையச் சூழல், மலாய் இலக்கியச் சூழலில் இல்லை. மலாய் வாசகப்பரப்பு மிக எல்லைக்குட்பட்டது. புலம்பெயர் நாடுகளிலும் மலாய் மக்கள் மலாய் இலக்கியத்தை வாசிப்பதோ கலந்துரையாடுவதோ மிகக் குறைவு. அம்மாதிரியான சூழலில் மலாய் இலக்கியம் மலேசியா எனும் சிறிய நிலப்பரப்புக்குள் மட்டுமே பேசப்படுகிறது.

கேள்வி: இந்திய இலக்கியச் சூழல் குறித்து அறிமுகம் இருந்ததுண்டா?

ஷாகீர் பதில்: என்னுடைய முதல் தமிழ்நாட்டு வருகையின்போது ஆங்கிலத்தில் வெளியீடப்பட்டிருந்த கவிஞர் வைரமுத்துவின் கவிதை தொகுதியை வாங்கி வாசித்தேன். அவர்தான் தமிழின் மிகச் சிறந்த கவிஞர் என்ற முடிவில் இருந்தேன். பின்னர், எழுத்தாளர் ம. நவீன் உரையாடலில் வைரமுத்துவின் இலக்கிய இடம் குறித்து எனக்கு விளக்கினார். அருந்ததி ராய், சல்மான் ருஷ்டி போன்றோரின் எழுத்துகளை ஆங்கிலத்தில் வாசித்திருக்கின்றேன். புக்கர் பரிசு பெற்ற கீதாஞ்சலி ஸ்ரீயை வாசித்திருக்கிறேன். இரண்டு நாட்களுக்கு முன்னர் எழுத்தாளர் ஜெயமோகனை முதன்முறையாகச் சந்தித்தப்போது அவருடைய அறம் சிறுகதைத் தொகுதியின் ஆங்கில மொழிபெயர்ப்பு பிரதியான Stories of the True ஐ கொடுத்தார். நிகழ்ச்சியின் இடைவேளைகளில் அவருடைய சிறுகதைத் தொகுதியை வாசித்தேன். தமிழில் எழுதப்படும் உலகத்தரமான கதைகளை வாசித்த நிறைவை அக்கதைகள் அளித்தன. அதிலும் யானை டாக்டர், அறம் சிறுகதைகள் என்னை மிகவும் தொந்தரவுப்படுத்தின. அந்தக் கதைகளை மலாயில் மொழிபெயர்த்து மலாய் வாசகப்பரப்புக்கு எடுத்துச் செல்ல மிக ஆர்வமாய் இருக்கிறேன்.

கேள்வி: தமிழ் மொழியில் வட்டார வழக்கு சார்ந்த வேறுபாடுகள் இருக்கின்றன. மலாய் மொழியிலும் அம்மாதிரியான வேறுபாடுகள் இருக்கின்றனவா? அவை இலக்கியத்தில் எவ்வாறு வெளிப்படுகிறது?

ஷாகீர் பதில்: மலாய் மொழியிலும் வட்டார வழக்குகள் இருக்கின்றன. மலேசியாவின் வடக்கு, கிழக்குக்கரை, தெற்கு என வெவ்வேறு வட்டார வழக்குகள் இருக்கின்றன. அந்த வேறுபாடுகள் இலக்கியத்திலும் வெளிப்படுகின்றன. இப்பொழுது எழுதும் சில எழுத்தாளர்கள், பொதுவான மலாய் இலக்கணத்தையொட்டி இலக்கண விதிப்படி திருந்திய மலாயிலே முழு படைப்பையும் எழுதுகின்றனர். நான் எழுதும் படைப்புகளில் கூடுமான அளவு வட்டார வழக்குடனே எழுதுகிறேன். நான் திருத்தும் படைப்புகளிலும் கூடுமான வரையில் வட்டார வழக்குகளை அனுமதிக்கவே செய்கிறேன். அதை தாண்டி, சபா, சரவாக் ஆகிய மாநிலங்களுக்குக் கடாசான், ஈபான் போன்ற தனித்த மொழிகள் இருக்கின்றன. இந்தோனேசியாவிலும் மலாய் மொழி பேசப்பட்டாலும் அவற்றை இந்தோனேசிய மொழி என்றே அந்நாட்டவர் அடையாளப்படுத்துகின்றனர். மொழிவழி தேசியமாகத் தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதால், மலாய் மொழியுடன் தங்களை அடையாளப்படுத்துவதைத் தவிர்க்கின்றனர். ஆகவே, அதனை மலாய் மொழி இலக்கியத்துடன் தொடர்புபடுத்திப் பார்க்க முடியாது.

கேள்வி: மலேசியாவில் மலாய் மொழி இலக்கியத்துக்கு அளிக்கப்படும் தேசிய இலக்கியமென்ற இடம் மற்ற மொழி இலக்கியங்களுக்குத் தரப்படவில்லை. அவ்வாறு பிறமொழிகளுக்கும் தேசிய இலக்கியமென்ற இடம் தரப்பட வேண்டுமென எண்ணுகிறீர்களா?

ஷாகீர் பதில்: பண்பாட்டுத் தளத்திலிருந்து பார்க்கின்றபோது இலக்கியத்துக்கு எல்லையில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால், மலேசியா தளத்தில் அரசியல் சார்ந்தே அணுகப்பட்டு அதற்கான எல்லைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. நான் தாய்லாந்தில் தென்கிழக்காசிய நாடுகளின் இளம் எழுத்தாளர் விருதைப் பெற்றப்போதும் இலக்கியத்துக்கென தனித்த மொழி, தேசிய எல்லைக்கோடுகள் இல்லையென்றே சொன்னேன். அதனைப் பண்பாட்டுத் தளத்தில் நின்று கொண்டு சொன்னேன். மலேசியாவைப் பொறுத்தளவில் தனித்தனியாக இயங்கக்கூடிய மலாய், தமிழ், மாஹுவா எனப்படும் மலேசிய சீன இலக்கியம் ஆகியவற்றுக்கிடையில் கண்ணுக்குத் தெரியாத அரசியல் எல்லையொன்று இருக்கிறது. அந்த எல்லையைத் தாண்டி மொழிகளுக்கிடையிலான ஊடாட்டங்கள் நிகழ அரசு சார்ந்த அமைப்புகளை நாம் வேண்டி நிற்பதால்தான் இந்த எல்லைக்கோடு சிக்கல் நேர்கிறது. மலாய் மொழியிலும் எல்லா தரப்பையும் அரசு முன்னிலைப்படுத்தவில்லை. குறிப்பிட்ட தரப்பினரையே அரசு முன்னிலைப்படுத்துகிறது. இந்த எல்லையைத் தாண்ட மொழிபெயர்ப்பு எனும் பாலமே ஏற்றதாக இருக்குமென நினைக்கிறேன். அதன் வாயிலாகத்தான் மலேசிய இலக்கியம் எனும் அடையாளத்தை எட்ட முடியும். அத்துடன் எங்கள் முன்னால் இருக்கும் அரசியல் வேலியையும் தகர்க்க முடியும்.

கேள்வி: உங்களுடைய புனைவுலகப் பரிணாமத்தைப் பற்றி சொல்ல முடியுமா?

ஷாகீர் பதில்: நான் எழுத வந்தபோது படைப்புகளில் பல விதமான வடிவச்சோதனைகளை நிகழ்த்திப் பார்த்தேன். அதற்காகப் பல முயற்சிகள் எடுத்தேன். ஆனால், வெகு விரைவிலே புனைவுக்கு வடிவச்சோதனைகள் என்பவை அலங்காரங்கள் போன்றவைதான் என்பதைக் கண்டு கொண்டேன். புனைவின் உள்ளடக்கமே முக்கியமானது என எண்ணம் எழுந்தது. அதற்குக் காரணமாக அமைந்திருந்தது, அமெரிக்க எழுத்தாளர்கள், Stenberg, Harper lee, Hemingway ஆகியோரின் எழுத்துகளை வாசித்ததுதான். அவர்களின் எழுத்தில் இருந்த நேரடித்தன்மை என்னைக் கவந்தது. அவர்களின் நேரடியான எழுத்தைக் கொண்டு நாம்தான் கருத்தியலைக் கண்டடைகிறோம். ஹெமிங்வே கொஞ்சம் வலதுசாரி கருத்து கொண்டவர். Upperlee, Stenberg போன்றவர்கள் இடதுசாரிக்கருத்தியலை முன்வைப்பவர்கள். அந்தப் பொருளில்தான், நாம் சொல்ல வருவது நம்முடைய கருத்தியல் வெளிப்படும் வகையில் இருக்கலாம். கருத்தியலை அடையாளப்படுத்துவது வாசகர்களின் வேலை. அது எழுத்தாளர்களுக்குத் தேவையானது. இப்பொழுது என்னுடைய வாசிப்பு ரசனையும் எழுத்து ரசனையும் மாறுபட்டிருப்பதை உணர்கிறேன். என்னுடைய வாசிப்பு ரசனையில் இயல்புவாத எழுத்துகளையே அதிகமாய் தேடி வாசிக்கிறேன். அம்மாதிரியான புனைவுகளைத் தரவேண்டுமென்ற எண்ணமே மிகுந்திருக்கிறது.

கேள்வி: ஒரு படைப்பை எதை அடிப்படையாகக் கொண்டு மதிப்பீடுகிறீர்கள்?

ஷாகீர் பதில்: நான் பல வகையிலான கோட்பாடுகளைக் கொண்டு இலக்கியத்தை மதிப்பீட்டிருக்கிறேன். இனவரைவியல், மாயயதார்த்தவாதம், அமைப்புவாதம், பின்காலனியவாதம் எனப் பல வகையிலான கோட்பாடுகளைக் கொண்டு மதிப்பீட்டிருக்கிறேன். இப்பொழுது அதிகமாக, புதிய யதார்த்தவாதம் எனப்படும் கோட்பாட்டை அதிகமாகப் பயன்படுத்துகிறேன். கோட்பாடுகள் இலக்கியத்தைப் புரிந்துகொள்ள உதவுகிறது. அதிலிருக்கும் அணிகள், குறியீடுகள் ஆகியவற்றைப் புரிந்துகொள்ள வரைமுறைப்படுத்தப்பட்ட சிந்தனைமுறை உதவும். ஆனால், கோட்பாடுகள் எழுத்தாளர்களுக்குத் தேவையில்லை என்றே நினைக்கிறேன். கோட்பாட்டை ஒட்டி எழுதத் தொடங்கினால் படைப்புகள் தேங்கிவிடுமென நினைக்கிறேன்.

இந்தக் கேள்விபதில் அரங்கத்துக்குப் பின் ஷாகீருடன் பல வாசகர்களும் எழுத்தாளர்களும் உரையாடினர். விஷ்ணுபுரம் விருது விழாவை ஒட்டி நடைபெறும் அமர்வுகளில் மூத்த எழுத்தாளர்-இளம் எழுத்தாளர் என்ற வேறுபாடுகளை இல்லாதது தமக்கு வியப்பை ஏற்படுத்தியதை ஷாகீர் குறிப்பிட்டார். அதிலும் படைப்புகளை மிக விமர்சனப்பூர்வமாக அணுகும் வாசகத்திரளைக் கண்டதும் தமக்கு மகிழ்வைத் தந்ததையும் குறிப்பிட்டார். தமிழ் மொழி இலக்கியத்துக்கும் மலாய் மொழி இலக்கியத்துக்குமான உரையாடல் பாதையில் விஷ்ணுபுரம் விருது விழா அமர்வு மிக முக்கியமானதென்பதையும் குறிப்பிட்டார். தமிழிலக்கியத்தை மலாய் வாசகப்பரப்புக்கு அறிமுகப்படுத்தும் வகையில் தன்னுடைய நுசா செண்டர் பதிப்பகத்தின் வாயிலாக யானை டாக்டர், அறம் போன்ற சிறுகதைகளை மலாயில் மொழிபெயர்க்கும் விருப்பத்தையும் வெளிப்படுத்தினார். அந்த நூலை மலாய் மொழியில் வெளியீட்டு தமிழ் எழுத்தாளர்களையும் அறிமுகப்படுத்தும் எண்ணத்தையும் குறிப்பிட்டார்.

ஷாகீருடனான அமர்வு மலாய் இலக்கியச் சூழல் குறித்த அறிமுகத்தைத் தமிழ் வாசகப்பரப்புக்குச் சேர்த்திருக்கிறது. அத்துடன், இரு மொழியின் இலக்கியங்களும் மொழிபெயர்க்கப்பட்டு அந்தந்த மொழி வாசகர்களுக்குக் கொண்டு செல்லப்படும் கதவுகளையும் அகலத் திறந்திருக்கிறது.

.

1 comment for “விஷ்ணுபுரம் அரங்கில் எஸ். எம். ஷாகீருடன் உரையாடல்

  1. January 1, 2024 at 1:10 am

    எஸ் எம் சாஹிரின் நேர்காணல் சில முக்கியமான விடயங்களை சொல்லியிருக்கிறது. அவற்றுள் கவனிக்கப்படவேண்டிய ஒன்று மலாய் மொழியில் எழுதப்படும் இலக்கியத்துக்கு மட்டுமே தேசிய அங்கீகாரம் வழங்கப்படுகிறது தொடர்பானது. தமிழ் சீன மொழிகளில் தரமான இலக்கியங்கள் எழுதப்பட்டாலும் அவை அரசு அங்கீகரிப்பதில் அரசியல் சிக்கல் இருப்பதைப் புரிந்தே வைத்திருக்கிறார், சில ஆண்டுகளுக்கு முன்னால் இந்தப் பிரச்னை தேசிய இலக்கியச் சம்மேளனத்துக்குக் கொண்டு சென்றபோது அவர்கள் வைத்த பதில் சீன தமிழ் எழுத்தாளர்கள் மலாய் மொழியில் எழுதவேண்டும் என்பதே. அவற்றை மட்டுமே பரிசீலிக்கப்படும் என்ற நகைமுரணான கோரிக்கையிகேயே அவர்கள் பிடிவாதமாக இருந்தார்கள், இது நடைமுறைக்கு சற்றும் ஒத்துவராதது. எழுத்தாளர் சாஹிர் போன்றவர்களை இது தொடர்பாகக் குரல் எழுப்பும் முக்கிய ஆளுமைகளில் ஒருவராகப் பார்க்கிறேன். அவர் இந்த்க் கோரிக்கையை அரசு காதுகளில் விழும்படி முன்னெடுத்தால் பலன் கிடைக்கலாம்,

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...