தொலைதூரத்தில் இருந்த பூமி என்னும் கோளில் இருந்து வந்து சேர்ந்த மனிதனைப் பார்ப்பதற்காக ஆபா என்னும் கோளில் வாழ்ந்த மக்களான ஆபிகள் நகர்ச்சதுக்கத்தில் பெருந்திரளாகக் கூடினார்கள். அவர்கள் எதிர்பார்த்து வந்த ஒரு நிகழ்வு அது. ஆகவே, ஒவ்வொருவரும் கூச்சலிட்டுக் கொண்டும், விவாதித்துக் கொண்டும் இருந்தார்கள். அவர்களின் ஓசை அலையலையாக எழுந்தது. நகர்ச்சதுக்கம் மிகப் பெரிய கல்பீடம் ஒன்றை நடுவே கொண்டது.
அக்கல்பீடத்தின் மேல் ஆபாவின் அரசகுடியினர் அமர்வதற்காகச் சிவப்புப் பளிங்குக் கல்லால் ஆன நூறு பீடங்கள் போடப்பட்டிருந்தன. வலப்பக்கம் தூபமேடையும் இடப்பக்கம் அரசரின் அதிகாரத்தின் அடையாளமான சூர் என்னும் பெரிய படிகக்கல் வைக்கப்பட்ட மேடையும் இருந்தன. சதுக்கத்தைச் சுற்றி ஆபாவின் ஞானிகள் அமர்வதற்கான கல்லிருக்கைகள் இருந்தன. மனிதன் அங்கே காட்சிப்படுத்தப்படுவான் என முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது.
நெடுங்காலமாகவே மனிதனுடைய வருகை அங்கே பேசப்பட்டுக் கொண்டிருந்தது. பூமியுடன் அவர்கள் செய்தித்தொடர்பு கொண்டபின் ஆபிகளின் ஞானிகளுக்கும் மனிதர்களுக்கும் தொடர்ச்சியான உரையாடல் நிகழ்ந்து வந்தது. அந்த உரையாடல் ஒவ்வொன்றும் அங்கே முறையாக அறிவிக்கப்பட்டு ஆபாவில் செய்தியாகப் பரவியது. ஆபிகள் அச்செய்தியைப் பலவாறாகப் பேசிக் கொண்டே இருந்தார்கள். அச்செய்தி வளர்ந்து பலநூறு கதைகளாக அவர்கள் நடுவே புழங்கியது. அதை பற்றிய ஏராளமான வேடிக்கைகளும் பேசப்பட்டன. ஒரு செய்தியை நீண்ட நாட்கள் பேச விரும்பும்போதே அது வேடிக்கையாக உருமாறுகிறது.
மனிதனின் தோற்றம், அவன் உடலின் இயல்புகள், அவனுடைய குணநலன்கள் எல்லாமே ஆபிகளுக்கு நன்றாகத் தெரிந்திருந்தன. திரும்பத் திரும்ப அவை பேசப்பட்டமையால் அவர்கள் அச்செய்திகளைக் கற்பனை கலந்து திரித்துக் கொண்டனர். ஒரு கட்டத்தில் எது உண்மை, எது கற்பனை என்றே எவருக்கும் தெரியாமலாயிற்று. ஆகவே அவன் வருவதை அறிந்ததும் அவர்கள் தாங்கள் அறிந்தவற்றை உறுதிசெய்துகொள்ளவே ஆர்வமாக இருந்தனர். பலர் பந்தயங்களும் வைத்திருந்தார்கள்.
ஆபாவில் இருந்து தொடர்பு உருவானதும் பூமியில் முதலில் எச்சரிக்கைதான் ஏற்பட்டது. மெல்ல மெல்ல ஆபா நட்பான கோள்தான் என்ற நம்பிக்கை அவர்களிடம் உருவானது. அதன் பின்னர் மனிதர்கள் பல்லாயிரம் கேள்விகள் வழியாக ஆபா குறித்த செய்திகளை முழுக்க பெற்றபின் பூமியில் இருந்து விண்கலம் ஒன்றை ஆபாவுக்கு அனுப்புவதற்கான அனுமதியைக் கோரினர். ஆபாவில் அந்த அனுமதியை அளிக்கலாமா என்னும் விவாதம் தொடர்ச்சியாக நடைபெற்றது. பின்பு ஒரே ஒரு மனிதனை மட்டும் பூமியில் இருந்து ஆபாவுக்கு அனுப்பலாம் என்னும் முடிவு எடுத்து அதை தெரிவித்தனர்.
பூமியில் இருந்து அந்த மனிதன் கிளம்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய மேலும் காலம் ஆகியது. அவன் கிளம்பிவிட்ட செய்தி வந்து சேர்ந்த அன்று ஆபாவில் மக்கள் பேசிப் பேசிக் கொந்தளித்தனர். அந்தப் பரபரப்பு தாங்க முடியாமல் ஒரு சாரார் உண்மையில் அப்படி எவரும் கிளம்பவில்லை, அது வெறும் வதந்தி என்று சொன்னார்கள். அந்தத் தரப்பும் வலுப்பெறவே கடும் விவாதங்கள் நிகழ்ந்தன. ஆனால் அனைவருக்கும் மனிதன் வந்து கொண்டிருப்பது உறுதியாகத் தெரிந்தது. வந்து கொண்டிருக்கும் மனிதனைப் பற்றிய எல்லா செய்திகளும் அவர்களுக்குப் பூமியில் இருந்து அனுப்பப்பட்டன. ஒவ்வொரு நாளும் அவன் எங்கிருக்கிறான் என்னும் செய்தி வந்து கொண்டே இருந்தது.
அவர்கள் எண்ணியதைவிட மனிதன் பயணம் செய்த விண்கலம் வந்து சேர நீண்ட நாட்கள் ஆகின. ஒருகட்டத்தில் ஆபிகளின் ஆர்வம் தணிந்து சலிப்பு மேலோங்கியது. பின்னர் அவர்கள் அச்செய்தியை மறந்தனர். நீண்ட நாட்களுக்குப்பின் மனிதன் வந்து கொண்டிருக்கும் கலம் ஆபாவின் சூரியனாகிய எர்க்கின் சுற்றுவட்டப்பாதையில் நுழைந்துவிட்டது என அறிவிக்கப்பட்டபோது மீண்டும் செய்தி பற்றிக் கொண்டது. ஆபிகள் அந்த மனிதனைப் பற்றிப் பேச ஆரம்பித்தனர். வரும் மனிதனின் முகம் ஒவ்வொருவருக்கும் நன்றாகத் தெரிந்ததாக ஆகியது.
மனிதன் அச்சு அசலாக ஆபிகளைப்போலவே இருந்தான். அளவு, நிறம், தோற்றம் எதிலும் எந்த வேறுபாடும் இல்லை. அவன் கண்களும் முகபாவனைகளும் ஆபிகளுக்குரியவை. அவன் ஆபிகளைப் போலவே வாயாலும் நாவாலும், தொண்டையிலுள்ள குரல்நாண்களின் உதவியால் பேசினான். அவனுடைய குரல் ஆபிகளின் குரலேதான். அவனுக்கு ஆபிகளின் மொழி கற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது என்றும், அவன் அவர்களைப் போலவே பேசுவான் என்றும் அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அவனுடைய மொழியையும் ஆபிகளில் பலர் நன்றாகக் கற்றுவிட்டிருந்தனர். அவன் ஆபாவில் ஆபிகளில் ஒருவனாகக் கலந்துவிடுவான் என்று பேச்சு இருந்தது.
ஆனால் அவனிடம் ஏதோ ஒன்று விந்தையானபடி வேறுபட்டிருக்கத்தான் வேண்டும் என ஆபிகளில் கல்வி கற்றவர்கள் சொன்னார்கள். அவ்வாறு ஒரு வேறுபாடு இல்லாமலிருக்க வாய்ப்பே இல்லை. அவ்வண்ணம் வேறுபாடு இல்லை என்றால் அவன் அவ்வளவு தொலைவில் இருக்க எந்த நியாயமும் இல்லை. அது தொலைவால் உருவாக்கப்பட்ட வேறுபாடு, அல்லது வேறுபாடு அந்தத் தொலைவுக்கு காரணம். அந்த வேறுபாடு என்ன என்று அறிவதற்கே அவர்கள் ஆர்வம் காட்டினார்கள். அந்த வேறுபாட்டை அவர்கள் பற்பல வகையாகக் கற்பனை செய்திருந்தனர். அதற்குத் தொலைவின் வேறுபாடு என அந்த ஞானிகள் பெயரிட்டனர். அந்தக் கொள்கையை அறியாதவர்களே ஆபாவில் இல்லை.
மனிதன் வந்திறங்கிய விண்கலத்தை அவர்கள் அனைவருமே பார்த்தனர். அது விண்ணில் ஒரு சிவந்த நட்சத்திரமாக முதலில் தோன்றியது. ஒவ்வொரு நாளும் பெரியதாகிக் கொண்டே இருந்தது. அதன்பின் அதன் வடிவம் தெரியத் தொடங்கியது. வெண்ணிறமாக மின்னும் ஒரு நீள்கோளம். அது ஆபாவின் காற்று மண்டலத்தை அடைந்ததும் அதில் ஏராளமான வெண்ணிறச் சிறகுகள் விரிந்தன. அது மெதுவாக மிதந்து கீழிறங்கி வந்து ஆபாவின் தரை மண்டலத்தை மூடியிருந்த மிக மென்மையான சதைக்கதுப்பு போன்ற சிவந்த புழுதியில் அமைந்தது. ஆபிகள் அதை சூழ்ந்து நின்று பார்த்தனர். அலையலையாக எழுந்த பேச்சுக்குரல்கள் அமைந்து, ஓசையின்மை உருவாகியது.
ஆபிகளின் ஞானிகள் அருகே சென்று அந்தக் கலத்தைத் திறந்தனர். உள்ளே வெண்ணிறமான மழுங்கிய நீள்உருளை வடிவில் இருந்த காப்புக்கலத்தை எடுத்து மண்ணுக்கு அடியில் கட்டப்பட்டிருந்த தங்கள் ஆய்வுகூடத்திற்குக் கொண்டு சென்றனர். அங்கே அதை கிழித்து திறந்தனர். உள்ளே மனிதன் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தான். அவனை அந்தக் கலத்தில் இருந்து எடுத்து மென்மையான மணல் படுக்கையில் வைத்தனர். அவர்கள் செய்வதற்கொன்றுமில்லை. அவனே கண்விழித்தாக வேண்டும்.
வெளிவந்த சற்று நேரத்திலேயே மனிதனின் உடல் வெப்பம் கொள்ள ஆரம்பித்தது. பின்னர் அவன் கண்களுக்குள் விழிகள் அசைந்தன. அவன் கண்களைத் திறந்ததும் திடுக்கிட்டு எழுந்து அமர்ந்து தன் மொழியில் “யார்?” என்று கேட்டான். ஆபிகள் அவனைப் போலவே இருந்தனர். ஆகவே, அவன் அவர்களை மனிதர்கள் என்று நினைத்தான். ஞானியரில் ஒருவர் அவனுக்குத் தன்னை அறிமுகம் செய்து கொண்டு அவன் ஆபாவுக்கு வந்துவிட்டதைத் தெரிவித்தார்.
அவன் திகைப்புடன் எழுந்து நின்றான். “ஆனால் நீங்கள் முற்றிலும் மனிதர்கள் போலவே இருக்கிறீர்கள்… இந்த இடமும் பூமி போலவே இருக்கிறது” என்றான்.
“ஆமாம், அதை உனக்கு முன்னரே சொல்லியிருப்பார்கள்”என்று ஞானியான சாக் சொன்னார்.
“சொன்னார்கள். ஆனால் இந்த அளவுக்கு எதிர்பார்க்கவுமில்லை. அத்துடன் நான் கலத்தில் வைக்கப்படுவதற்கு முன்னரே மயங்கிவிட்டேன். எனக்கு நெடுங்காலம் பயணம் செய்ததும் தெரியாது… ஆகவே, என் அறையில் கண்விழித்ததாகவே எண்ணினேன்,” என்றான்.
அவனுக்கு அவன் தன் கலத்தில் கொண்டு வந்த உணவு முதலில் கொடுக்கப்பட்டது. ஆனால் மறுநாளே ஆபாவின் உணவு அவனுக்கு மிகச் சிறப்பாக ஒத்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது. ஆபாவின் தட்பவெப்ப நிலைக்கும், கதிரியக்கச் சூழலுக்கும் அவன் அறிமுகப்படுத்தப்பட்டான். எல்லாமே அவனுக்குச் சரியாக ஒத்து வந்தன. பத்து நாட்களுக்குள் அவனுக்கும் மற்ற ஆபிகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்பது உறுதியானது.
முழுக்க முழுக்க அவன் அவர்களைப் போலவே இருந்தான். அவர்களின் மொழியில், அவர்களின் முகபாவனை மற்றும் கையசைவுகளுடன் அவன் பேசினான். அவர்களின் வேடிக்கைகள் அவனுக்கு உடனே புரிந்தன. அவர்களுடன் சேர்ந்து வெடித்துச் சிரித்தான். அவர்களைக் கேலி செய்து பேசவும் தொடங்கினான். அவர்களை இன்னார் என அடையாளம் கண்டுகொள்வதில் மட்டும் அவனுக்குச் சிறிய இடர் இருந்தது.
அதன் பின்னரே அவர்கள் அவனைப் பொதுப்பார்வைக்குக் கொண்டு செல்ல முடிவெடுத்தனர். அது வரை அவன் வெளியே வரவே இல்லை. அவன் வெளியே வரும் நாள் ஆபாவில் ஒரு கொண்டாட்ட நாளாக அறிவிக்கப்பட்டது. ஆபிகள் அவனைக் காணவரும்படி அறிவிப்பு வெளியானது. அவன் ஆபாவின் உணவை உண்பதும், ஆபாவினரின் உடையை அணிவதும், ஆபாவினர் போலவே பேசுவதும் ஏற்கனவே தெரிந்திருந்தும்கூட அவனிடம் ஒரு திகைப்பூட்டும் விந்தை இருந்தே தீரும் என அவர்கள் நம்பினர். தொலைவின் வேறுபாடு. ஆகவே அவன் மேடைக்கு வந்தபோது அந்தச் சதுக்கம் முழுக்க கண்ணுக்கெட்டிய தொலைவு வரை தலைகளாகவே இருந்தது.
மேடையில் ஆபாவின் அரசகுடியினர் அனைவரும் முதலில் வந்து அமர்ந்தனர். முரசுகளும் முழவுகளும் இசைத்துக் கொண்டே இருந்தன. சதுக்கம் அலையலையாக ஓசை எழுப்பியது.
ஞானியரின் தலைவரான சாக் அவனை மேடையில் ஏற்றி “இதோ தொலைதூரத்துக் கோளான பூமியில் இருந்து வந்துள்ள மனிதன். இவன் பெயர் கால்.” என்று அறிவித்தார்.
அவன் பூமியின் முறைப்படி இரண்டு கைகளையும் கூப்பி வணக்கம் தெரிவித்தான். இரு கைகளையும் மாறி மாறி உதட்டில் வைத்து ஆபிகளுக்குப் பறக்கும் முத்தம் அளித்தான். அப்போது திகைத்துப்போய் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்த ஆபிகள் அவன் ஆபி முறைப்படி தன் தலையை மாறிமாறித் தொட்டு வாழ்த்து தெரிவித்தபோது மகிழ்ச்சியுடன் அவனுக்குத் திரும்ப வாழ்த்து தெரிவித்து பெருமுழக்கம் எழுப்பினர். அவன் உரக்க “ஆபிகளுக்கு வணக்கம். நான் பூமியில் இருந்து வந்த மனிதன். உங்களைப் போல் ஒருவன்,”என்றான்.
அதன்பின் நிகழ்ந்த விருந்தில் ஆபிகள் அவனிடம் ஓரிரு சொற்கள் பேசவும், அவனை ஒருமுறையேனும் தொடவும் ஆர்வம் காட்டினர். அவர்கள் அனைவரும் கிளர்ச்சி அடைந்திருந்தார்கள். ஆனால் அவர்கள் அனைவர் உள்ளத்திலும் ஆழமான ஓர் ஏமாற்றமும் உருவாகி வலுப்பெற்றுக் கொண்டிருந்தது. ஏனென்றால் அவனிடம் எந்த வேறுபாட்டையும் அவர்கள் காணவில்லை. தொலைவின் வேறுபாடு என்னும் கொள்கை அவர்கள் கண்ணெதிரே பொருளில்லாமல் ஆகிக்கொண்டிருந்தது.
வேறுபாடு இல்லை எனில் தொலைவென்பதும் இல்லாததே. தொலைவாலான பெருவெளியும் ஒரு பொய்யே. அந்நிகழ்வுக்குப்பின் ஒரு வதந்தி உருவாகி ஆபிகள் நடுவே பரவியது. அதற்கு எந்த அடிப்படையும் இல்லை என்றாலும் அனைவரும் அதை ஒருநாளாவது நம்பினர். அந்த மனிதன் உண்மையில் ஒர் ஆபிதான். அவர்கள் காணாத ஓர் ஆபியை அப்படி அவர்களுக்குக் காட்டியிருக்கிறார்கள். அவனை அதுவரை மறைத்து வைத்திருந்திருக்கிறார்கள். அதற்கு ஆட்சியாளர்களுக்கு ஏதோ காரணம் இருக்கும்.
தொலைவின் வேறுபாடு பொய்த்துப்போனதன் ஏமாற்றம் உண்மையில் ஆபிகளின் ஞானிகளுக்கும் இருந்தது. முதலில் அவன் ஆபிகள் போலவே இருப்பதன் விந்தை அவர்களிடமிருந்தாலும் அது விரைவிலேயே இல்லாமலாகியது.
சாக் தன் துணைவரான ராப்பிடம் “இவன் எந்தத் தனித்தன்மையும் இல்லாதவன் என்றால் இத்தனை தூரம் இவன் வந்ததற்கே பொருள் இல்லாமல் போகிறதே,” என்றார். ஆனால், அவர்தான் தொலைவின் வேறுபாடு என்னும் கொள்கையை வெறும் கற்பனை என அது வரை நிராகரித்து வந்தவர்.
“மனிதர்களும் நம்மைப்போன்றவர்களே என நாம் ஐயமற நிரூபித்துக்கொண்டோம் என்பது சிறப்பான ஒன்றுதானே?” என்று ராப் சொன்னார். “அவர்களின் உடல் மட்டுமல்ல, நாகரீகம்கூட அப்படியே நம்மைப்போலத்தான். பல ஒளியாண்டுகளுக்கு அப்பால் இருக்கும் ஒரு கோளில் உருவான உயிரினம் நம்மைப் போலவே இருப்பது மிகப்பெரிய ஓர் உறுதிப்பாட்டை அளிக்கிறதே… இனி அண்டவெளியில் வேறொரு முதன்மை உயிரினம் கண்டடையப்பட்டாலும் அது நம்மைப்போலவே இருக்கத்தான் வாய்ப்பு மிகுதி. ஏனென்றால் தொலைவின் வேறுபாடு என்பது ஒரு கொள்கையாக நிரூபிக்கப்படவில்லை என்றாலும் அது எப்போதும் நம் சிந்தனையில் இருந்தது. அதை கொண்டே நாம் அண்டவெளியை உருவகித்து வந்தோம். இனி அதன் சுமை நம் சிந்தனையில் இருக்கவேண்டியதில்லை.”
“உண்மை” என்று சாக் சிரித்தார். “ஆனாலும் அறிவியல் என்பது அடிப்படையில் விந்தைக்கான தேடல்தானே?”
ஆனால் சில நாட்களுக்குப்பின் ராப் சாக்கிடம் சொன்னார் “நேற்று கால் ஒரு விஷயம் சொன்னான். எனக்கு அவன் சொல்வதென்ன என்று புரியவில்லை. ஆனால் திகைப்பாக இருக்கிறது”
“என்ன?” என்றார் சாக். அவருக்குள் பெரிய ஆர்வம் உருவாகவில்லை. அவர் அரிதாகவோ விந்தையாகவோ எதையும் எதிர்பார்க்கவில்லை.
“அவன் சொல்வது குழப்பமாக இருக்கிறது,” என்றார் ராப் “இங்கே ஒவ்வொரு நாளும் சூரியன் அணைந்து மறுநாள் உதிக்கையில் ஒவ்வொன்றும் மாறிவிட்டிருக்கின்றன என்கிறான்”
“அதற்கென்ன?” என்றார் ராப். “அது இயற்கை நெறி அல்லவா?”
“அவன் அஞ்சி நடுங்கிக் கொண்டிருந்தான். அவனால் பேசவோ நிற்கவோ முடியவில்லை. இருண்ட அறைக்குள், எல்லா வாசல்களையும் சாளரங்களையும் மூடிவிட்டு சுருண்டு படுத்துக்கிடந்தான். அவன் எதற்கு அஞ்சுகிறான் என எனக்குப் புரியவில்லை. ஆகவே நான் அவனிடம் கேட்டேன்…” என்றார் சாக். “அவன் என்னையும் அஞ்சினான். மிக மெல்லத்தான் அவனின் அச்சத்தைக் களைய முடிந்தது. அவன் அஞ்சுவதென்ன என்று கேட்டேன். அதை அவனால் விளக்க முடியவில்லை. அவன் கைகள் நடுங்கின. உதடுகள் துடித்தன. குரல் உடைந்து அழுகையாக ஒலித்தது. திணறி தடுமாறி அவன் சொன்னவற்றில் இருந்து நான் ஒருவாறாக ஊகித்து புரிந்துகொண்டது இது”
“அதுதான் என்ன?” என்று ராப் எரிச்சலுற்றார்.
“இது கொஞ்சம் குழப்பமானது. நாம் நம் சிந்தனையின் எல்லையைக் கடந்துத்தான் இதை புரிந்துகொள்ள வேண்டும்,” என்று சாக் சொன்னார். “அவன் சொல்வது இதுதான். அவன் ஒருநாள் முழுக்க இங்கே ஓர் இடத்தில், சில ஆபிகளுடன் வாழ்கிறான். இங்கே எங்கும் தாவரங்களும் விலங்குகளும் பறவைகளும் உள்ளன. பாறைகளும் மண்ணும் இருக்கின்றன. அவன் பூமியில் கண்டதைப் போலவே அப்படியே அவை திகழ்கின்றன. ஆனால் அவன் இரவு தூங்கிக் கண்விழித்தால் எல்லாமே மாறிவிட்டிருக்கின்றன. புதிய ஆபிகள், புதிய தாவரங்கள், புதிய பாறைகளும் மண்ணும்… எல்லாமே வேறு. ”
ராப்புக்கு அப்போதும் அது என்ன சிக்கல் எனப் புரியவில்லை. அவர் கண்களைச் சுருக்கிப் பார்த்துக்கொண்டிருந்தார்
“அவன் இரவில் தான் வேறொரு இடத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டுவிட்டதாக முதலில் நினைத்தான். ஆகவே சில நாட்கள் அவன் தூங்காமல் இருந்து கவனித்தான். ஒரே இடத்தில், ஒரே படுக்கையில், ஒரே தூணைப் பிடித்தபடி இருட்டில் அமர்ந்திருந்தான். காலை எழுந்தால் அவன் பார்த்த எதுவும் அவனைச் சுற்றி இல்லை”
ராப் அப்போதுதான் புரிந்துகொள்ள தொடங்கினார். அவருடைய முகம் மாறிவிட்டது.
“நம் உடல்களும் மாறிவிடுகின்றன என்கிறான். ஆபிகளின் உடல்களும் முகமும் குரலும் கண்களும் எல்லாமே ஒவ்வொரு நாள் காலையிலும் முற்றிலும் புதியவையாக இருக்கின்றனவாம்”
“மாறுதல் என அவன் சொல்வது என்ன?” என்று ராப் கேட்டார். அவர் நடுங்கிவிட்டிருந்ததை உணர முடிந்தது.
“ராப், நம் உள்ளம் அப்படியே இருக்கிறதல்லவா? நம் நினைவுகள் இரவுக்கும் பகலுக்கும் அப்பால் ஒரே தொடர்ச்சியாக இருக்கின்றன, நம் சிந்தனைகள் தொகுக்கப்பட்டு உள்ளே திரண்டிருக்கின்றன. அதை மாற்றமின்மை என்கிறான். அதனுடன் ஒப்பிடும்போது பிற எல்லாமே ஒவ்வொரு நாளும் இன்னொன்றாக ஆகிவிட்டிருக்கின்றன. இங்கே பருப்பொருட்கள் ஓர் இரவுக்குப் பின் முற்றாக மாறிவிடுகின்றன. வடிவங்கள், வண்ணங்கள், இடங்கள், தொடர்புகள் எல்லாமே மாறிவிடுகின்றன. ஒன்று இன்னொன்றாக ஆகின்றன. அதை அவன் மாறுதல் என்கிறான்”
புரிந்துகொள்ளுந்தோறும் ராப் பதறிக்கொண்டே இருந்தார். அவரால் பேசவே முடியவில்லை. மிக மெல்லிய குரலில் “இவன், இந்த மனிதன், இவன் அவ்வாறு மாறுவதில்லையா? நாம் நம் உள்ளூர எப்படி மாறாமல் இருக்கிறோமா அப்படித்தான் அவன் வெளியே இருக்கிறானா?” மேலும் நடுங்கிய குரலில் “அவன் உடல் மாறுவதே இல்லையா?” என்றதுமே ஒரு மின்னலென அவருக்குத் தெரிந்தது.
“அதைத்தான் சொல்லவந்தேன்” என்றார் சாக். “திகைப்பூட்டும் விஷயம் அது. நான் அவனைக் கவனித்துக்கொண்டே இருந்தேன். மிக மிக தெளிவாக நினைவுகொள்கிறேன். அவன் மாறுவதே இல்லை. மாலையில் இருள் வரும்போது எப்படி இருந்தானோ அப்படியே மறுநாள் காலையிலும் இருக்கிறான்… அதே உடல். அதே கண்கள், அதே குரல்”
“மாறாதவன்!” என்று ராப் திகைப்புடன் சொல்லிக் கொண்டார்.
“ஆம், இதை எப்படி நாம் கவனிக்காமல் இத்தனை நாள் இருந்தோம்?” என்றார் சாக்.
“ஆம், நாம் கிளர்ச்சியடைந்திருந்தோம். மிக வெளிப்படையான வேறெதையோ எதிர்பார்த்தோம், ஆகவே ஏமாந்துவிட்டோம்” என்றார் ராப்.
“அங்கே அப்படியா?” என்று கேட்டபோது அவர் குரல் வெறும் மூச்சாகவே ஒலித்தது.
“ஆம் என்கிறான்”
ராப் தன் தலையைத் திரும்பத் திரும்ப வருடினார். “சாக், அவனுடைய பார்வையில் நாம் ஒவ்வொரு காலையும் முற்றிலும் புதிய உடலுடன் இருக்கிறோம் இல்லையா? அதாவது நம் வண்ணம் வடிவம் எல்லாமே முற்றிலும் வேறு? நான் சொல்வது சரிதானா?”
“மிகச் சரி. அவன் அப்படித்தான் சொல்கிறான்” என்றார் சாக். “நாம் மட்டுமல்ல இங்குள்ள ஒவ்வொன்றும்.”
“ஆனால் அவன் உள்ளே எப்படி மாறாமை கொண்டிருக்கிறானோ அதேபோல வெளியேயும் இருந்து கொண்டிருக்கிறான் இல்லையா?”என்று ராப் கேட்டார்.
“உண்மையாகவா?”
“உண்மையாக… பெருவிந்தை அது”
திரும்பத் திரும்ப அதை அவர்கள் உள்ளூர சொல்லிக் கொண்டார்கள். சொல்லுந்தோறும் மர்மங்கள் அழிந்து அந்த விந்தை குறையும் என நினைப்பவர்கள் போல. ஆனால் அது பெருகியது
“அதைவிட என்னைத் திகைப்படையச் செய்யும் விந்தை நாம் மாறிக் கொண்டிருக்கிறோம் என்பது. நீங்களும் நானும் நம்மைச் சுற்றியுள்ள அனைத்தும் ஒவ்வொரு பகலிலும் முற்றிலும் புதிய தோற்றம் கொள்கின்றன என்றால் எவ்வளவு பெரிய விந்தை அது” என்றார் ராப்.
“நீங்கள் சொல்வது புரியவில்லை… இது இயல்பானது”
“இயல்பானது என இருப்பது ஏனென்றால் நாம் இதிலேயே இருந்து கொண்டிருக்கிறோம் என்பதனால்தான்… நான் ஒவ்வொன்றும் மாறாமலிருக்கும் மனிதனின் உலகை என் கற்பனையில் பார்த்துவிட்டேன்… ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரே முகம், அவனைச் சுற்றியிருக்கும் பருப்பொருட்களெல்லாம் நிலையானவை… அந்த உலகைப் பற்றிய கற்பனை என்னை நடுங்கச் செய்தது. பின்னர் அங்கிருந்து இங்கே பார்க்கையில் இந்த உலகக் காட்சி என்னைச் சித்தப்பிரமை கொள்ளச் செய்கிறது”
“ராப், அப்படி மாறாமை என ஒன்று இருக்க முடியுமா?”
“ஆம், அதுதான் எனக்குக் குழப்பமாக இருக்கிறது”
அவர்கள் கால் என்னும் மனிதனை அவன் சுருண்டு அமர்ந்திருந்த அந்தச் சிறிய பொந்துக்குச் சென்று வெளியே அழைத்தனர். ராப் அவனிடம் சொன்னார். “நான் ராப்… என்னை நினைவுகொள்… தன்னை ஒருவன் ராப் எனச் சொன்னான் என்றால் அவனே ராப். இவன் சாக். ஏனென்றால் இவன் தன்னைச் சாக் என உணர்கிறான்”
கால் “இன்னொருவன் தன்னை ராப் எனச் சொன்னானென்றால் நான் எப்படி அது பொய் என்று புரிந்துகொள்வது?” என்றான். “என்னால் தாளமுடியவில்லை. இந்த நிலையின்மையைக் கண்டுகொண்ட நாள் முதல் ஒவ்வொன்றும் அச்சமூட்டுகின்றன. இதோ இந்தப் பொந்தில் நான் நேற்றிரவு படுக்கவில்லை. வெளியே தெரியும் இந்தப் பாறைகள், அந்த மலைகள், வானம் எதுவுமே நேற்று இருந்த வடிவில் இல்லை…” அவன் உடைந்து அழத்தொடங்கினான்
“உனக்கு என்னதான் பிரச்சினை?” என்று சாக் குரலை உயர்த்தி எரிச்சலுடன் கேட்டார்.
“நிலையின்மை… நீங்கள் முற்றிலும் நிலையற்ற உலகில் வாழ்கிறீர்கள். என்னால் இந்த நிலையின்மையைத் தாளவே முடியவில்லை”
ராப் “நான் புரிந்துகொள்கிறேன்” என்றார். “என்னால் உன் உலகைக் கற்பனை செய்ய முடிகிறது”
“என் சிந்தனை நிலையானவற்றை மட்டுமே அறியும் தன்மை கொண்டது. பொருட்களின் நிலைத்தன்மையைத்தான் நான் பெயரென அப்பொருட்கள் மேல் இடுகிறேன். அப்பெயர்களே சொற்கள். சொற்களால் ஆனது என் மொழி. மொழியாலானது என் உள்ளமும் அதிலோடும் சிந்தனையும். பொருள் நிலையற்றதாக ஆகுமென்றால் அது தன் மேலிருந்து சொற்களை உதிர்த்துவிடுகிறது. சொற்களால் அடையாளப்படுத்தப்படாதவற்றை என் உள்ளம் தொடவே முடியாது. என் மொழி அழிந்துவிடுகிறது. என் அகம் வெறுமை கொள்கிறது….”
சாக் ராப்பைப் பார்த்தார். ராப் ஏன் அப்படி வெளிறிப்போய் நடுங்கிக் கொண்டிருக்கிறார் என அவருக்குப் புரியவில்லை. கால் என்னும் அம்மனிதன் பேசிக் கொண்டிருப்பதென்ன என்றும் அவரால் விளங்கிக்கொள்ள இயலவில்லை.
“பொருட்கள் மட்டுமல்ல அப்பொருட்களின் இயல்புகளும் மாறாமலிருக்க வேண்டும். மொழி என்று நான் சொல்வது மாறாமையைத்தான்… மாறாமை ஒரு தொடராக ஆகுமென்றால் அதுவே மொழி. அது மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கும் தலைமுறைகளிலிருந்து தலைமுறைக்கும் சென்று கொண்டிருக்கிறது” என்று அவன் சொன்னான். “உங்கள் மொழி ஒரு அலை மட்டுமே… அதற்கு எந்தப் பொருளும் இல்லை”
“ஆனால் மாற்றம் என்பது நிகழ்ந்தாக வேண்டுமே” என்றார் ராப்
“ஆம், மாற்றங்கள் நிகழ்கின்றன. ஆனால் நான் மாறாமையைக் கண்டுவிட்டபின் அந்த மாறாமையுடன் ஒப்பிடும்படியே அந்த மாற்றங்கள் நிகழ்கின்றன. மாறாமையுடன் ஒப்பிட்டு அந்த மாற்றங்களுக்கும் நான் பெயரிட முடியும். பெயர் அந்த மாற்றங்களின்மீது மாறாத அடையாளமாக நின்றிருக்கும். மாற்றத்தின் நெறி என அது அங்கே இருக்கும். அந்த நெறிகளைக் கொண்டு நான் மாற்றங்களின்மேல் என் மாறாத மொழியை பரப்பிக்கொள்ள முடியும்….”
சாக் பொறுமையிழந்து “நீயே நீ சொன்னவற்றை மறுத்துக் குழப்புகிறாய். அங்கே ஒவ்வொன்றும் மாறாமலிருக்கின்றன என்று சொன்னாய். மாற்றம் நிகழ்கிறது என்று இப்போது சொல்கிறாய்” என்றார்
“ஆம், நான் குழப்புகிறேன். நான் மிகவும் குழம்பிப்போயிருக்கிறேன். என்னால் இதையெல்லாம் வகுத்துக் கொள்ளவோ சொல்லவோ முடியவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன்” என்று கால் சொன்னான். “ஒருவன் தான் நின்றிருக்கும் அடிப்படைகளே ஒட்டுமொத்தமாக மாறும்போது எப்படி மேற்கொண்டு சிந்திக்க முடியும்?”
“மீண்டும் கேட்கிறேன், அங்கே மாற்றமின்மை உள்ளதா, மாற்றம் உள்ளதா?”
“மாற்றம் உள்ளது, ஆனால் அது மாற்றமின்மையால் வரையறை செய்யப்படுகிறது. ஆகவே மாற்றமின்மையே நிலைகொள்கிறது. அல்லது அங்கே ஒரு மாற்றமின்மையை உருவாக்கிக் கொள்ள வழியிருக்கிறது. அதன்மேல் நின்று மாற்றங்களை அறியமுடிகிறது… மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. ஆம். ஒன்றும் ஒரு கணமும் மாறாமலில்லை. எல்லாமே எப்போதும் மாறிக்கொண்டேதான் இருக்கின்றன அங்கும். ஆனால் நான் அங்கே ஒரு மாற்றமின்மையை உருவாக்கிக்கொண்டேன்… அதற்கு அங்கு வாய்ப்பிருந்தது… நான் மீண்டும் குழப்புகிறேன். என்னை மன்னியுங்கள்”
சாக் எரிச்சலுடன் தலையை அசைத்தபடி ராப்பைப் பார்த்தார். ராப் நிலைத்த விழிகளுடன் அந்த மனிதனைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
அவன் சட்டென்று எழுந்து உரத்த குரலில் “இதோ, இதோ நான் ஒன்றைக் காட்டுகிறேன்” என்றான். அவர்களைக் கைபற்றி அழைத்துச் சென்றான். நீர்ப்பரப்பைச் சுட்டிக்காட்டி தன் முகத்தை தொட்டான். “இதோ என் முகம்… இந்த முகமே நாளை விடியும்போதும் எனக்கிருக்கும்… அதாவது பெரும்பாலும்… பல ஆண்டுகளில் மெல்ல மெல்ல இது உருமாறி இன்னொன்றாகும். அப்போதும் இது நான் என அறிவிக்கும் சில விஷயங்கள் இதில் மாறாமல் இருந்து கொண்டிருக்கும்… இதை பார்த்து என்னால் இதை நான் என உணர முடியும். அந்த மாறாமையே என் புற அடையாளம்”
அவன் குரல் மேலும் எழுந்தது ”இங்கே நான் இருக்கிறேன் என்பதற்கான சான்று இந்த மாறாத முகம்தான்… நான் என என்னை உருவகிக்கச் செய்வது இதுதான். அதை மையமாக்கியே என்னுடைய சிந்தனைகள் நிகழ்கின்றன. இது மாறிவிட்டதென்றால் நான் இல்லை… சிந்தனைகள், அவை நிகழும். ஆனால் அவை என் சிந்தனைகளாக இருக்காது”
சாக் கோபத்துடன் “நாங்களும் நீரில் முகம் பார்ப்பதுண்டு” என்றார்.
“முந்தைய நாள் பார்த்த முகம் அதில் தெரியுமா?”
சாக் திகைத்துவிட்டார்.
“நான் கேட்கிறேன், முந்தைய நாள் உங்களுக்கு இருந்த முகம் உங்கள் நினைவில் இருக்குமா?”
சாக் பதற்றத்துடன் ராப்பைப் பார்த்தார்
“முந்தைய நாள் இருந்த ஏதாவது உங்கள் அகத்தே எஞ்சுமா?” என்றான் கால்.
சாக் பொருள் திரளாமல் தலையசைத்தார்
“இல்லை என்றால் நீங்கள் எப்படி மாற்றத்தை உணர முடியும்? நீங்கள் மாறிக்கொண்டே இருப்பதை நீங்கள் அறிவதே இல்லை. உங்கள் உலகம் மாறுவதையும் அறிவதில்லை”
சாக் “போதும், இனி இந்தக் கிறுக்குத்தனத்தை நான் கேட்பதாக இல்லை” என்றார்
“பொறு, அவர் சொல்வதில் ஏதோ ஒரு உண்மை உள்ளது” என்றார் ராப். “இதோ பார், என்னுள் நான் மாறாமலிருக்கிறேனே. அந்த மாற்றமின்மை போதாதா?”
“போதாது….நீங்கள் மாறாமலிருக்கிறீர்கள் என்பதற்கான சான்று என்ன?” என்றான் கால்.
ராப் சொல்லிழந்து மெல்ல வாய் திறந்தார்.
“சொல்லுங்கள் ராப், மாறாமல் நிகழும் அகம் எது? எவருக்குள்? நாளை உங்கள் உடல் இவருடலாக இருக்குமென்றால் அது இவருடைய அகம் அல்லவா?”
“உடல்தான் அகமா?”
“இல்லை, ஆனால் உடலால் அள்ளப்படவில்லை என்றால் அது ஒரு தனிப்பட்ட அகமாக ஆவதில்லை. இங்குள்ளது ஒற்றை அகம்… அது பல்லாயிரம் உடல்கள் வழியாக ஊடுருவிச் சென்று கொண்டிருக்கிறது. ஒட்டுமொத்தமாக நிகழ்கிறது” கால் சொன்னான். “உங்கள் அகமும் ஒவ்வொரு காலையிலும் முழுமையாகவே மாறிவிட்டிருக்கிறது. ஆனால் அதை நீங்கள் உணர்வதில்லை…”
“நான் ராப்…”
“ஆனால் நேற்றிருந்த ராப் வேறு. ராப் என்னும் மாறாநிலை இங்கே இல்லை. ஆகவே ராப் என்பது ஓர் உடல் அன்று காலை தன்னை உணரும் நிலை மட்டுமே…” அவன் உரக்க “அது வெறும் தற்செயல். அல்லது நீங்கள் உணரவே முடியாத ஒரு இணைவு விளையாட்டு… இரண்டுமே நீங்கள் அறிய முடியாதவை. ஆகவே முற்றிலும் பொருளற்றவை”
ராப் எழுந்து விரைந்து ஓட காலைப் பேரச்சத்துடன் பார்த்துவிட்டு சாக் அவர் பின்னால் ஓடினார்.
ஓடிய விரைவிலேயே ராப் மண்ணில் சென்று விழுந்தார். அவர் உடல் நடுநடுங்கி விழுந்தது. மண்ணை உறுதியாகப் பற்றிக் கொள்ள விழைபவர் போல அவர் கைகளை விரித்தார்.
“ராப் உங்களுக்கு என்ன செய்கிறது?”
“எனக்கு ஒரு தாலம் நிறைய நீர் கொண்டுவா… நீர்… நான் என் முகத்தை அதில் பார்க்க வேண்டும்”
“நாம் அதை தவிர்க்கலாமே”
“இல்லை, நான் பார்த்தாக வேண்டும். என் முகத்தை நான் நினைவில் நிறுத்தியாக வேண்டும். நான் நாளை என்னவாக இருக்கிறேன் என உணர்ந்தே ஆக வேண்டும்… இனி என்னால் அந்த விழைவிலிருந்து தப்ப முடியாது…”
“ராப், நாம் இந்தப் பொறியில் சிக்க வைக்கப்பட்டிருக்கிறோமா?”
“என்ன சொல்கிறாய்?”
“இவன் இதன் பொருட்டுத்தான் இங்கே வந்தானா? பிரபஞ்சவெளியில் எங்கோ இருக்கும் ஒரு கோளில் இருந்து வந்து சேர்ந்தது இந்த வேறுபாடுதானா?”
“எனக்குத் தெரியவில்லை. ஆனால் நாளை நான் இல்லை என்றால் எனக்கு இன்றும் இல்லை… நான் இல்லை என்றே அர்த்தம். அவன் எனக்கு அந்த எண்ணத்தை அளித்துவிட்டான். நான் அதை இனிமேல் உதறவே முடியாது”
“ராப், நாளை நீங்கள் விழிக்கையில் இந்த எண்ணம் இருக்காதே… அனைத்தும் முற்றாக மாறிவிட்டிருக்குமே”
ராப் கண்ணீர் நிறைந்த கண்களுடன் சாக்கைப் பார்த்தார்
“ராப், நீங்கள் எத்தனை கூர்ந்து நோக்கி எவ்வளவு நினைவுகூர்ந்தாலும் உங்கள் நினைவில் இது நீடிக்காது…. நாளை…”
“சொல்ல வந்ததைச் சொல்…”
“இல்லை, நான் குழம்பிவிட்டேன்”
“சாக், நீ நினைத்தது அதுதான்… நாளை இந்த எண்ணம் இங்கிருக்கும். நாளை இதன் தொடர்ச்சியும் இருக்கும். இந்த உடலில் இருக்காது. அது என்னுடையதாக இருக்காது… இங்கே நாம் எவருமே இல்லை”
சற்றுநேரம் சாக் தலைகுனிந்து அமர்ந்திருந்தார்
“என்ன செய்வது சாக்? சொல்”
“எனக்குத் தெரியவில்லை”
இருவரும் அமைதியாக அமர்ந்திருந்தார்கள். விண்ணில் ஆபாவின் சூரியனாகிய எர்க் மெல்ல சாய்ந்து கொண்டிருந்தது.
“இன்னும் சற்று நேரம்” என்று சாக் சொன்னார்.
“இந்தப் பகல் மட்டும்தான்” என்றார் ராப்.
சாக் நெஞ்சுகொள்ளா விம்மலுடன் “அவ்வளவுதானா? அவ்வளவு மட்டும்தானா?” என்றார்
ஆனால் சட்டென்று ராப் “அவன் பரிதாபத்துக்குரியவன்” என்றார்.
அபாரமான கற்பனை. சராசரி மனிதனின் சிந்தனைக்கு அப்பாற்பட்ட புனைவு. வாசகனை திகைப்புக்குள்ளாக்கும் கதை விரிவு,
புது வருடத்தில் முற்றிலும் புதிய ஒரு சிறுகதை.
இக்கதை பொதுவாசகர்களுக்கு ஒரு திகைப்பை அளிக்கும். ஆனால் ஆசிரியரின் தளத்தின் வாசகர்கள் எளிதில் புரிந்து கொள்வார்கள் இது பாமரர்கள் கட்டுரையின் கதை வடிவம் என்று.
‘பாமரர்கள்’ கட்டுரை ஒர மரம் அதன் கனி ‘தொலைவில் எங்கோ’ . ஆனால் தொலைவில் அல்ல நம்மை சுற்றி நம் அன்றாட பாமரத்தனங்களின் உச்சமே ராப் சொல்லும் ‘அவன் பரிதாபத்துக்குரியவன்’
ஆசிரியருக்கு நன்றி
மிகச்சிறந்த கதை. வாழ்த்துகள் ஜெ.
– ப. சரவணன், மதுரை.
வணக்கம். மிகச்சிறந்த கதை. வாழ்த்துகள் ஜெ.
– ப. சரவணன், மதுரை.
மிகவும் இயல்பான கதையாடலாகத் தொடங்கும் அறிவியல் புனைவு பின்னர் ஆடிச்சில்லுகளில் தெறித்த கதிர்களைப் போல் பல்கோணங்களில் விரிந்தெழுகிறது. ஆள்புலக் கடப்பு(Extraterrestrial) தொடர்பான கதைகள் பொதுவாக அழிவின் தொடக்கமாகவோ அல்லது அழித்தெடுப்பதாகவோ அல்லது அண்டவியல் மீளியக்கத்தின் தொடக்கப்புள்ளியாகவோ திரைப்படங்களில், புனைவுவெளியில் காட்டப்பட்டு வருகின்றன. ஆனால், அறிவியக்கத்தினை மறுவிசாரணைக்குட்படுத்தும், ஆதி நம்பகத்தை ஆட்டிவைப்பதுமான விவாதத் தளத்தில் பேசுவது வாசிப்பின்பத்தில் வாசல்.
தனிமையின் நூறு ஆண்டுகள் நாவலில் இப்படியொரு வரி இடம்பெறும் : “ஆர்வம் அச்சத்தை விட பெரியது”. புதுமையின் வருகை கிளர்ச்சியூட்டக்கூடியவை. அதன் அடியாழத்திற்கு முன்னதான இடைப்பகுதியில் திளைக்கும்போது மட்டுமே சில கேள்விகளும் மெய்யுணர்வுகளும் புலப்படத் தொடங்கும். பூகோள மனிதனின் வருகையை எதிர்ப்பார்த்துக் காத்திருக்கும் பிறிதொரு மண்டலத்தின் கோளிளுள்ள ஆபா எனக் கூறப்படும் மக்களினத்தவர் நம்ப விரும்பும் ‘தொலைவின் வேறுபாடு’ கொள்கை பொய்த்ததாக ஏமாற்றமடைந்து பின்னர் அதன் நம்பகம் மெய்க்கருகிலிருக்க, அதுவே புட்டிக்குள் அடங்காத பேயாய் உருவெடுக்கிறது. ஒருவேளை ஆபா மக்கள் பூமிக்கு வருவதாகப் புனையப்பட்டிருந்தாலும் (சிற்சில மாற்றங்களோடு) செல்லுபடியாயிருக்குமென்றே தோன்றுகிறது. ஆனால், அதன் விவாதத் தளம் பிறிதொன்றாக இருந்திருக்கலாம்.
நமது மரபணுவில், சிந்தனையில் நிரலாக்கத்திற்குட்பட்டிருக்கும் ஒன்று வேறொன்றாக, அதுவும் ஏற்புடைமைக்கு அருகாமையிலுள்ள விஷயங்கள் நம்மை பதைக்கச் செய்கின்றன. உடல் வேறு ஆன்மா ஒன்று ஆகிய தத்துவச்சுழிகள் ஒருபுறமிருக்க, அதனை நிலைக்கொள்வதற்கும் செரிப்பதற்குமான மனநிலை அமைவதும் முக்கியமானதே. இன்று நமக்குத் தாயாக இருக்கும் ஒருவர் நாளை வேறொருவரின் (காட்டிற்குப் விரும்பாத ஒருவரின்/ பால்மாற்றிய நிலையில்) உருவத்தில் வந்து ‘நான் தான் டா/டீ உன் அம்மா’ என்று சொன்னால், இன்று நீங்கள் வாசிக்கும் புத்தகம் நாளை கொதிநீர்க்கான பாத்திரமாக மாறும் போது முன்னத்திற்கான, பின்னத்திற்கான சுட்டியும் வினையும் உருவும் வேறுகொள்ளும் போது அதன் அபத்தநிலையின் வீச்சென்னவோ என்னவோ அதுதான் இக்கதையிலும் நிகழ்கிறது. ரூபம் அரூபம், நிலையின்மை, இருத்தலியல் ஆகியன ஊடாடி வரும் தருணத்தின் இறுதியில் ஒவ்வாமைக்கெதிராக ஒலிக்குமந்த ராப்’பின் ஈற்றுச்சொல் அலட்சியத்தின், புறக்கணிப்பின் ஒரு வெளிப்பாடே. அப்படியான கால் என்ற பூகோள மனிதனின் மீதான கழிவிறக்கம் தன்னை மேட்டிமையின் மாயைக்குள், தனது நம்பிக்கைக்கூட்டுக்குள், தான் நம்ப விரும்பும் உண்மையை அதிபத்திரமாக அடைகாத்துக் கொள்ள மிக வசதியாய் அமைகிறது.
கதையை வாசித்த எனக்கு இன்னும் தலைசுற்றல் நிற்கவில்லை, உங்களின் புரிதல் மேலும் குழப்புகிறது.
ஸ்ரீவிஜி
. ஐயா,
இப்படி கூட கற்பனை செய்ய முடியுமா! மாறுதல் என்பதே மாறாதது என்றாலும், அந்த மாற்றம் தினமும் என்றால், நமக்கு அதை ஜீரணிக்க முடியவில்லை. என்றாலும் மாற்றம் நம்மிடமும் உண்டு, ஆனால் அது காலப்போக்கில் நடப்பது. தினமும் நடந்தால்?!
சத்தியமூர்த்தி.
கடைசி வரியில் வைத்தார் பாருங்கள் பன்ச்.. அதான் ஆசான். மறத்தலே இனிமை !!! மனிதர்கள்ன நாம் னினைவு சகதியில் உருண்டு கொண்டுகிருக்கிறொம்
உறங்குவது போலும் சாக்காடு விழிப்பதே புது ப் பிறப்பு இக்கதை இந்த குறளின் பொருளாக அமைந்தது ஜெ மோ அருமை அருமை இதை விரிவாக்கி எழுத லாம் என தழுவி எழுதலாம் என நினைக்கின்றேன் இனிய 2024 வாழ்த்துக்கள்—————கவிஞர் ஆரா
மாற்றம் என்பது மட்டுமே மாறாதது. அவ்வழி அன்றாடம் நிகழும் மாற்றம் செழிவானதொரு கற்பனை.ராக் சாக் இருவரும் வேற்று ஒரு உலகில் நித்தியபிறவிகள்.கால்தான் பூவுலகினன்.படைப்பாளியாய் இருக்கமுடியும்.வாசகனை புதிய தளத்திற்கு இந்தக் கதை நடத்திப்போகிறது. கண்ணிமைக்காதவர்கள் பூவுலகு வருவார்கள் அது பழங்கதை.
புத்தாண்டில் புதுக்கதை. தமிழ் சிறுகதைகளில் வருங்கால நோக்கத்திற்க்கு இப்படைப்பு ஒரு எடுத்துக்காட்டு.