(ஜனவரி 28 சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் சிங்கப்பூர் வாசகர் வட்டம் முன்னெடுத்த நடந்த தாரா நாவல் வெளியீட்டில் எழுத்தாளர் மஹேஷ் குமார் பேசிய உரையின் எழுத்து வடிவம்,)
நவீனின் ‘தாரா’ நாவல் ஒரு வித்தியாசமான வாசிப்பனுபவத்தைக் கொடுத்தது. இது போன்ற வாசிப்பனுபவங்கள் அவ்வப்போதைய மனநிலையைப் பொறுத்தவையே. மறு வாசிப்பில் முற்றிலும் வேறொரு அனுபவத்தையும் கொடுக்கலாம்.
அத்வைதக் கதைகள் என்று ஒரு வகை உண்டு. அதில் ஒரு கதை. ஒரு குட்டி சிங்கம் தன் குழுவை விட்டுப் பிரிந்து எங்கெங்கோ அலைந்து பிறகு ஓர் ஆட்டு மந்தையில் போய் சேர்ந்துவிடும். அது ஆடுகளுடனேயே வளர்ந்து தன்னையும் ஆடாகவே நினைத்து புல் மேய்ந்து, மற்ற மிருகங்களைப் பார்த்து பயந்தே வளரும். பின்னர் ஒரு நாள் வேறொரு சிங்கம் இதைப் பார்த்து ஆச்சரியப்பட்டு அதை அழைத்து ஒரு நீர் நிலையில் அதன் முகத்தைக் காட்டித் தன்னோடு ஒப்பிட்டுப் பேசி மெள்ள மெள்ள அதன் சுயத்தை அறியச் செய்யும். சிங்கம் தன்னை யார் என்று அறிந்த பின்னரும் மறுநாள் புல் மேயப் போகும். பழக்கம் விடவில்லை என்று சொல்லும்.
இன்னொரு கதை. ஓர் அரசன். அவனுக்கு 4 வயதில் ஒரு அழகிய மகன். அரசனின் பிறந்தநாளுக்காக ஒரு நாடகம் போடுகிறார்கள். அதற்கு ஒரு சிறு வயது பெண் கிடைக்காததால் 4 வயது இளவரசனுக்கே திருத்தமாக சிறுமி வேடம் போட்டு நடிக்கவைக்கிறார்கள். சிறுமி வேடத்தில் இன்னமும் அழகாக இருந்த இளவரசனை ஓவியமாக வரைந்து அரண்மனையில் வைக்கிறார்கள். அந்த அழகிய ஓவியத்தைப் பார்த்து மயங்கி வளர்ந்த இளவரசக்கு மண வயது வந்தபின் பெண் தேடும்போது இளவரசன் அந்த ஓவியத்தில் உள்ள பெண்ணைத் தேடிக் கொண்டுவருமாறு கேட்கிறான். பிறகு அமைச்சர் உண்மையைச் சொன்னதும் அவன் தெளிவடைகிறான்.
அதாவது உண்மையை அறிந்தவுடன் அவனுக்குள் இருந்த விருப்பு மறைந்துவிடுகிறது. ஒரு வேளை அந்த சோவியத்தை வெறுப்பவனாக இருந்தாலும் உண்மையை அறிந்தவுடன் அவன் வெறுப்பும் விலகியிருக்கலாம். அதாவரு விருப்பு – வெறுப்பு (ராகம் – துவேஷம்). என்னும் இருமைத்தன்மை மறைந்து ஒன்றாக ஆகிவிடுகிறது.
இது போல நவீனின் தாரா கதையைப் படித்தபின் பல்வேறு எண்ணங்கள் முட்டி மோதின. அத்வைதம் என்பதே இருமை இல்லை என்ற தத்துவத்தை முன்வைப்பது. சங்கரரின் அடிப்படை தர்க்கமே ‘நேதி நேதி – ந இதி ந இதி’ என்று மறுத்து மறுத்து மேலும் மேலும் அறிந்து அறிந்து முன் செல்வது. (முன்னே என்பதை விட உள்ளே என்று சொல்லலாம்) அப்படி மறுத்து மறுத்தே தான் முன்வைத்த தத்துவத்துக்கும் ‘இருமை இன்மை’ என்று பெயர் வைத்தாரோ என்னவோ.
நாம் உலகில் அவதானிப்பவை அனைத்தையும் ஏதோ ஒரு வகையில் abstract ஆக ஏதோ ஒரு இருமைக்குள் அடக்கி விடலாம். அது புறவயமாக ஐம்புலன்களால் உணரப்படுவதாக இருக்கலாம் அல்லது அகவயமான அனுபவத்தாலும் இருக்கலாம். ஆனால் தேடலின் குறுகுறுப்பு உள்ளவர்களுக்கு வாழ்வில் ஏதோ ஒரு புள்ளியில் இந்த இருமை கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து இருமையின்மையின் தரிசனம் வசப்படும். அது சமயத்தில் கிளர்ச்சியையும் கொடுக்கும் அல்லது குழப்பத்தையும் கொடுக்கும். அறிவியல் துறையுமே எல்லா தூலமான பொருட்களையும் மறுத்து மறுத்து ஒருமையை (singularity) நோக்கி இட்டுச் செல்கிறது.
இந்தப் போக்கில் பார்க்கும்போது தாரா நாவலில் வரும் கந்தாரம்மனும் தாராவும் வேறுவேறல்ல. கிச்சியின் குழந்தைமையும் அந்தராவின் முதிர்ச்சியும் வேறுவேறல்ல. கரங்கானில் புகையும் வன்மமும் தெலுக் கம்பத்தில் நிலவும் அமைதியும் வேறுவேறல்ல. சனிலின் பொறுமையும் ராக்காயியின் ஆத்திரமும் வேறுவேறல்ல. மருதுவின் சாதுர்யமான வாய்வீச்சும் முத்தையா பாட்டனின் மௌனமும் கூட வேறுவேறல்ல. அனைத்து இருமை உணர்வுகளும் மனித மனங்களில் நிகழ்பவை.
சனில், திமிலா, அந்தரா போன்ற முன்னுதாரண ஆதர்சங்கள் மிக அபூர்வமானவர்கள். அவர்களுக்குப் பொறுமையையும் கருணையையும் மன்னிக்கும் பெருந்தன்மையும் மன்னிப்புக் கேட்கும் மனநிலையும் பௌத்தக் கொள்கைகளும் தாரா தேவியின் கருணை பொங்கும் கண்களும் கொடுத்ததா? ராக்காயியின் ஆற்றாமையும் ஆங்காரமும் மருதுவின் சுயநலமிக்க குள்ளநரித்தனமும் கந்தாரம்மன் போன்ற உக்கிர தெய்வம் கொடுத்ததா? அல்லது இரண்டும் மனித மனதின் வேறு வேறு சாத்தியங்களா? க்வாண்டம் அறிவியலில் பார்ப்பவரின் நிலையைப் பொறுத்து பார்க்கப்பட்டதன் நிலை பல்வேறு சாத்தியங்களை வெளிப்படுத்தும். பார்வையாளரின் மனநிலை வேறு தளங்களுக்குச் செல்லச் செல்ல அது தானாகவே ஒருமையை நெருங்கும். அதனால்தான் அந்த நீலத்தாமரையை அந்தரா எடுத்து வந்து கிச்சியின் கையால் கந்தாரம்மனுக்குப் படைக்கும்போது அனைத்தும் ஒருமையில் ஒடுங்குவது போன்ற ஒரு மிதக்கும் உணர்வு மேலிடுகிறது.
அத்வைதத்தில் இருப்பின் இன்மையையும் இன்மையின் இருப்பையும் சேர்த்துப் பேசும்போது நாகார்ஜுனனின் பௌத்தம் இந்த இரு துருவங்களுக்கும் இடைப்பட்ட சூனியத்தை முன்வைக்கிறது. ஒரு புறம் வன்மத்தின் இருப்பையும் அறமின்மையும்… மறுபக்கம் இதெல்லாம் மனித வாழ்க்கையில் இருப்பவைதான்; ஆனால் அனைத்தையும் இல்லையென்று ஆக்கும் சனிலின் மன்னிப்புக் கோரல்.
ஒரு சமூக நாவல் வாசிப்பில் அத்வைத விளக்கங்கள் வர போக வேண்டுமா என்றால் அதுதான் வாசிப்பின் விநோதம். எங்கே எப்போது எதை எதனுடன் முடிச்சுப் போட்டுக் காட்டும் என்று சொல்லமுடியாது. மேலே சொன்னதுபோல மற்றொரு சமயத்தில் இதே நாவல் வேறு தளங்களுக்கு இட்டுச்செல்லலாம். அவரவர் மனநிலையைப் பொறுத்தது.
துவக்கத்தில் சொன்ன கதையில் வந்த சிங்கம்தான் நாம் அல்லது கரங்கான் கம்பத்து மக்கள். இரண்டு சமூகங்களும் கொஞ்சம் முன்பின்னாக வந்து குடியேறியவர்கள்தான். இங்கு இருக்கவேண்டிய ஒற்றுமையை உணர்ந்த சனில் காலில் விழுந்து மன்னிப்புக் கோரி மன்னித்ததை பிரதிபலித்துக் காட்டிய பின்னரும்… அதை உணர்ந்த பின்னரும் மறுநாள் கத்தியைத் தூக்கிக்கொண்டு போகும் கரங்கான் இளைஞர்கள் ஆட்டுச் சிங்கங்கள்தானே. அவ்வாறே இரு சமூகங்களும், அவற்றினிடையே உள்ள கொந்தளிப்பை சூனியமாக்கும் சனில் உண்மையை உணர்ந்த இளவரசனைப் போல.
கதைக் களன் தமிழ்-நேபாள அல்லது தமிழ்-வங்காள அல்லது வங்காள-நேபாள என்று எந்த இரு கூட்டங்களுக்கிடையேயான பொறாமையும் பகைமையுமாக இருக்கலாம். சமூகம் சார்ந்து வேறுவிதமான குறியீடுகள் இருந்திருக்கலாம். ஆனால் நாவல் தன் ஓட்டத்தின் இறுதியில் இதே முடிவுக்குதான் வந்து சேர்ந்திருக்கும் என்பது என் பார்வை. கொஞ்சம் fantasy போன்ற முடிவானாலும் உண்மையில் அந்த சிக்கல் முடிந்திருக்குமோ தெரியாது. ஆனால் நவீன் தன்னளவில் ஒரு அற முடிவைக் கொடுத்தது ஒப்புக்கொள்ளூம்படிதான் உள்ளது.
நாவலில் குறிப்பிடப்படும் அந்த சர்யா நிர்த்தியா நடனம் சூஃபி நடனத்தை (Dervish Dance) நினைவுறுத்தியது. உடலிலும் மனத்திலும் அசைவற்ற தியானம் மூலம் ஓர் அமைதியை பெற முடியுமென்றால் புலன்களின் அசைவுகள் மூலமும் பெறமுடியும். போலவே த்ரிபங்கி பற்றிய குறிப்பும். அந்த நிலையிலுள்ள நளினத்தில் இயல்பாகவே கருணை என்னும் உணர்வே பொங்கும். அஜந்தா குகையில பத்மபாணி, வஜ்ரபாணி ஓவியங்களிலும் இதைக் காணலாம்.
அந்த நீலத் தாமரையின் முக்கியத்துவம், பௌத்த நம்பிக்கையில் மூடிக்கிடந்த அறிவு திறப்பது போல. தாரவின் இன்னொரு கரத்தில் இருக்கும் வஜ்ரமும், ஒரு மின்னல் வெட்டுப் போல அறிதல் நிகழ்வதையும் அந்த அறிதல் வஜ்ரம் போல இறுகி, அனைத்தின் மீதும் எல்லோர்க்கும் பெய்யும் மழை போல ஒரு நெகிழ்வான அணுகுமுறையை அளிப்பதையும் காட்டுகிறது.
பலரும் குறிப்பிட்டது போலக் கதையின் கருப்பொருளாக தமிழ் சமூகத்தின் பொறாமையும் வன்மமும் நேர்மையாக எழுதப்பட்டிருப்பது குறிப்பிடவேண்டியது. பொதுவாக கதாநாயகன் வில்லன் எல்லாம் ஒத்துக்கொள்ளப்படுவார்கள். ஆனால் நாம் சார்ந்த சமூகத்தை, அதுவும் வேறொரு நாட்டில் குடியேறிய பின்னர் ஆண் பெண் பாரபட்சமின்றி அறமற்று இருந்த நிலையை – அது சூழ்நிலை காரணமாக இருந்தாலும் – காட்டியது பாராட்டப்படவேண்டிய செயல்பாடு.
நேர்கோடற்ற தன்மையுடன் இருந்தாலும் குழப்பமின்றிக் கதை சொன்ன பாங்கு, ஊளைச்சதையற்ற எழுத்து, சொலவடைகள், விவசாயக் குறிப்புகள் என்று பலவிதங்களில் சுவாரசியமும் கூடுகிறது. விவசாயம் குறித்த நுணுக்கமான செய்திகள் கதைக்கு பெரிய அளவில் உதவவில்லையென்றாலும் இதுபோல ஒரு ஆவணப்படுத்துதல் (soft documentation) தேவைதான் என்றும் தோன்றுகிறது.
வாசிக்கும்போதே திரையில் காட்சிகளைப் பார்ப்பதைப் போலவும், நாமே அந்தக் காட்சிகளுக்குள் இருப்பது போலவும் ஒரு கச்சிதமான திரைக்கதையாகவும் கூட அனுபவிக்க முடிந்தது. வாசித்தபின் அசைபோடும்போது ஒவ்வொரு பாத்திரத்துக்கும் எந்த நடிக நடிகையர் பொருத்தமாக இருப்பார்கள் என்றும் யோசிக்கத் தோன்றியது. மருதுவாக நாசர் அல்லது வேல.ராமமூர்த்தி, அஞ்சலையாக சி.என்.சரஸ்வதி, ராக்காயியாக காந்திமதி என்று வேறு வகையிலும் சுவாரசியம் கூடியது.
பேய்ச்சி, சிகண்டி போன்றவற்றோடு ஒப்பீடு செய்வது போன்ற கருத்துகளை வாசித்தபோது அது தேவையில்லை என்றே தோன்றியது. ஒவ்வொன்றும் அதனதனளவில் வெவ்வேறு வாசிப்புகள். மேலும் இந்த நாவலுக்காக மேற்கொண்ட பயணங்கள், அதில் கிடைத்த புதிய திறப்புகள் போன்ற செய்திகளையும் வல்லினம் இதழில் படித்தபின் ‘தாரா’ நாவலைப் படிக்கும்போது ஒரு மேம்பட்ட அனுபவம் கிடைத்ததையும் சொல்லியாகவேண்டும். மலேசிய இலக்கியப் பரப்பில் முக்கியமானதொரு நாவல் ‘தாரா’.