தமிழ் இலக்கிய சூழலில் நன்கு அறியப்பட்ட மிக முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவர் ஜெயகாந்தன். ஜெயகாந்தனை அறியாத இலக்கிய வாசகர்கள் மிக அரிது. என் நவீன இலக்கிய வாசிப்பைக்கூட ஜெயகாந்தனின் எழுத்துகளின் மூலமே தொடங்கினேன். தமிழாசியாவில் தொடர்ந்து நடத்தப்படும் சிறுகதை கலந்துரையாடலில் இம்முறை(17.2.2024) ஜெயகாந்தனின் சிறுகதைகள் கலந்துரையாடப்பட்டது மிகுந்த மன நெருக்கத்தைக் கொடுத்தது. ‘நான் இருக்கிறேன்’, ‘முன் நிலவும் பின் பனியும்’, ‘தவறுகள்…குற்றங்கள் இல்லை’, ‘குருபீடம்’, ‘அக்னி பிரவேசம்’ ஆகிய ஐந்து ஜெயகாந்தனின் சிறுகதைகள் கலந்துரையாடலுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
ஜெயகாந்தனின் சிறுகதைகளைக் குறித்து கலந்துரையாடுவதற்கு முன், ஜெயகாந்தனின் படைப்புலகத்தைப் பற்றி ஒவ்வொரு இலக்கிய வாசகர்களும் அறிந்திருப்பது மிக அவசியம். எழுத்தாளர் ம.நவீன் அது குறித்து சிறிய விளக்கம் கொடுத்தார். ஜெயகாந்தனைச் சிலர் நவீனத்துவ எழுத்தாளராகவும் இன்னும் சிலர் பிரச்சாரத் தொனியில் எழுதக்கூடியவராகவும் அடையாளப்படுத்துகின்றனர். ஜெயகாந்தன் தமது கதைகளில் கையாளும் எழுத்து நடையே இதற்குக் காரணமாக அமைகின்றது. நவீன இலக்கியத்தின் அழகியலே அதன் கச்சிதம்தான். கச்சிதமாகவும் உட்குறிப்புகளின் மூலம் ஒன்றை உணர்த்துவதும் உணர்ச்சிவசமில்லாத நடையும்தான் நவீன இலக்கியத்தின் கூறுகளாக அமைகின்றன. ஆனால், ஜெயகாந்தனின் எழுத்து நடை பொதுவான நவீன இலக்கியத்தின் கூறுகளுக்கு எதிராகவே அமைந்துள்ளது. அவரின் எழுத்துகளில் பிரச்சார நெடியையும் சுருங்கக் கூறாமையையும் காண முடிகிறது.
ஜெயகாந்தனின் எழுத்து நடை நவீன இலக்கியத்திற்கான இயல்புகளுக்கு ஏற்ப அமையாததால் அவரை நவீனத்துவ எழுத்தாளர் இல்லை என்று நாம் நிராகரிக்க முடியாது என்றார் நவீன். ஜெயகாந்தனின் பல கதைகள் காலத்தால் நிற்கக்கூடியவையாகவும் தனிமனிதனின் அந்தரங்க உணர்வையும் அகத்தையும் வெளிக்காட்டக்கூடியவையாக அமைகின்றன எனத் தெளிவுப்படுத்தினார். முற்போக்குச் சிந்தனையைக் கொண்ட ஜெயகாந்தன் தம் புனைவுகளில் தொடர்ந்து சமூக விமர்சனக் கருத்துகளையும் மனித உளவியல் ஆழங்களைத் தொட்டுக் காட்டியும் வந்தார். அதற்காகச் சமூகத்திலிருந்து வந்த வசைகளாலும் எதிர்ப்புகளாலும் துவளாமல் தொடர்ந்து சத்தியவேட்கையுடன் கதைகளையும் புனைவுகளையும் படைத்தார் என இந்த விளக்கங்கள் வழி அறிய முடிந்தது.
கலந்துரையாடலுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட ஜெயகாந்தனின் சிறுகதைகளின் தெரிவு காலவரிசைக்கிரமமாக இருந்தது. அவருடைய தொடக்கக்காலச் சிறுகதைகளில் முக்கியமான ‘நான் இருக்கிறேன்’ ,’முன் நிலவும் பின்பனியும்’ ஆகிய சிறுகதைகள் கலந்துரையாடலுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
நான் இருக்கிறேன்
சமூகத்தால் நிராகரிக்கப்படும் ஒரு தனிமனிதனின் வாழ்க்கையையும் அகவோட்டத்தையும் ‘நான் இருக்கிறேன்’ சிறுகதை காட்சிப்படுத்துகிறது. குஷ்டரோகியான பிச்சைக்காரனொருவன் பிறரால் ஒதுக்கப்படுகின்றான். நோயின் கொடுமை ஏற்படுத்தியிருக்கும் அகோரத் தோற்றத்தால் பகல் வேளைகளில் வெளிச்சத்தில் யாசகம் கேட்கச் செல்ல முடியாத நிலையில் வாழ்கின்றான். தனது இருப்பினால் எந்தப் பயனும் இல்லை என்று அறிந்து தினமும் வாழ்வதற்கான காரணங்களைத் தேடிக் கொண்டே இருக்கின்றான். தன்னையே ஏமாற்றிக்கொள்ளும் வகையில் அவன் வாழ்வதற்கான காரணங்களை உருவாக்குகின்றான். இயற்கை அழகை ரசிப்பதற்காகவும் ரயில் தண்டவாளங்களில் மடிந்துபோக வரும் உயிர்களைக் காப்பாற்றுவதற்காகவும் வாழ வேண்டும் என்ற காரணங்களுக்காகத் தன் வாழ்நாட்களைக் கடக்கின்றான். ஒரு நாள் இரவு நேரத்தில் தண்டவாளத்தில் தற்கொலை செய்ய முனையும் உடல் ஊனமுற்ற ஒருவனைக் காப்பாற்றுகின்றான். குடும்பத்துக்குச் சுமையாக மாறிவிட்ட குற்றவுணர்வால் தற்கொலை புரிய வந்தவனுக்குக் குஷ்டரோகி அறிவுரைகளைக் கூறி வாழ்க்கைக்கு ஆற்றுப்படுத்துகிறான். அவனை ஆற்றுப்படுத்தியப்பின் குஷ்டரோகி எடுக்கும் முடிவே கதையின் உச்சமாகத் திகழ்கிறது.
இக்கதையில் ஒதுக்கப்படும் பிச்சைக்காரனின் மனநிலையை வாசிப்பவர்களால் உணர்ந்திட முடியும். தன்னுடைய இருப்பில் பயனில்லை என்று அறிந்தும் அவன் அனுதினமும் வாழ்வதற்கான காரணங்களை உருவாக்குவதும், தண்டவாளங்களில் மடிந்துபோகவிருந்த உயிர்களைக் காப்பாற்றி அதில் பெருமைபடுவதுமாக வாழ்கின்றான். அதைப் போலவே குறையுடைய உடலில் இன்னுமே எஞ்சியிருக்கும் பசி, உறக்கம் ஆகிய சுரணையுணர்வும் வாழ்வதற்கான காரணங்களாகின்றன. இந்தக் காரணங்கள் எல்லாம் தான் உயிர்த்திருப்பதற்கான பொருளற்ற காரணங்கள் என அவன் உள்ளூர உணர்ந்திருக்கிறான். தன் தோற்றத்தைக் காரணம் காட்டிச் சமூகம் தன்னை நிராகரிக்கும் சூழலில் அவன் அவர்களிடம் எதிர்பார்ப்பது கருணையைத்தான். இரவு வேளையில் உடல் ஊனமுற்றவனின் உயிரைக் காப்பாற்றி அவன் வாழ்வதற்கான அறிவுரைகளைக் குறிப்பிடுகிறான். மறுநாள் காலையில், தன் தோற்றத்தினால் அவனும் தன்னை நிராகரிக்கக்கூடும் என்ற அச்சத்தினால்தான் தன் உயிரை மாய்த்துக்கொள்கிறான். உள்ளூர வாழ்வாசையைக் கொண்டிருக்கும் ஊனமுற்றவன் தற்கொலையை நாடுகிறான். இன்னொரு புறத்தில், தற்கொலை புரிவதற்கான காரணங்கள் அமைந்திருந்தும் வாழ்வாசையைப் பிச்சைக்காரன் கொண்டிருக்கிறான். அவர்களின் சந்திப்பும் உரையாடலும் இருவரிலும் ஏற்படுத்தும் ரசமாற்றத்தையே இக்கதையின் மெய்ம்மையாக இருக்கிறது.
முன் நிலவும் பின் பனியும்
ஜெயகாந்தனின் மற்றொரு தொடக்கக்கால சிறுகதையான ‘முன் நிலவும் பின் பனியும்’ குறித்தும் உரையாடப்பட்டது. இக்கதை குடும்பத்தில் பெரியவர்களுக்கிடையே உள்ள தன்னலமும் குழந்தைகளுக்கிடையே உள்ள வெகுளித்தனமும் காட்டப்பட்ட கதையாக அமைந்துள்ளது. பெரிய கோனார், சின்ன கோனார் என இரண்டு சகோதரர்களின் வழி கதை தொடங்குகிறது. மனைவி, சொத்து என எல்லாவற்றையும் இழந்து சந்நியாசியாகச் செல்ல இருந்த பெரிய கோனாரைச் சின்னக் கோனார் தடுத்து நிறுத்தி அவருக்கான உரிய மதிப்பையும் பணிவிடைகளையும் செய்கிறார். மெல்ல தன் மனதில் தன் மகன் அவன் வழி பேரன் மீதான அன்பு எனத் தன்னைப் பெரிய கோனார் குறுக்கிக் கொள்கிறார். ஆண்டுக்கு ஒரு முறை வந்து சந்திக்கும் தன் பேரனுக்காகவே பெரிய கோனார் தன் வாழ்க்கையை கடக்கின்றார். பெரிய கோனாரின் மருமகளின் பிரசவத்தால் அவர் மகன் சபாபதியும் பேரன் பாபுவும் அவரை வந்து பார்க்க முடியாமல் போகிறது. இந்தச் சூழலில், அவர்களை எப்படியும் பார்த்துவிட பெரிய கோனார் முயல்கிறார். பாபுவின் வருகைக்காகக் காத்திருக்கும் சின்ன கோனாரின் மகள் வழி பேரனான தம்பையாவும் பெரிய கோனாருடன் இணைந்து கொள்கிறான். பேரன் வர சாத்தியமேபடாத ரயில் நிலையத்துக்குத் தம்பையாவுடன் சென்று முன்பின் தெரிந்திராத வடநாட்டுச் சிறுவனுக்கு முந்திரிப்பருப்பையும் பணத்தையும் தந்து தன் மனத்துக்குச் சமாதானம் தேடிக்கொள்கிறார். பாபுவின் வருகையை உண்மையெனவே நம்பி விடியற்காலையில் அவருடன் சென்று ரயிலில் அவனைப் பார்க்காத தம்பையா உள்ளூர கண்டுகொண்டது தம் களங்கமின்மையால் உருவான வெளிச்சத்தை என ம. நவீன் குறிப்பிட்டார். அதைப் போல, அன்பைத் தனக்குள் குறுக்கிக் கொண்டு பயணம் மேற்கொள்ளும் பெரிய கோனார் அடைவது இருளையே என்பது கதைக்குள் இருக்கும் இன்னொரு அடுக்கைக் காட்டியது.
தவறுகள்… குற்றங்கள் இல்லை
மூன்றாவது சிறுகதையாக ‘தவறுகள்… குற்றங்கள் இல்லை’ எனும் சிறுகதை கலந்துரையாடப்பட்டது. அலுவலகமொன்றில் உயரதிகாரியான நாகராஜன் பெண்கள் மீத மோகம் கொண்டவன். தன் உதவியாளரும் உறவினருமான கன்னையா பணத்தைத் திருடிச் சென்ற பின்னர் தனியே உணவைப் பரிமாறி உண்ண தடுமாறுகிறான். அவனுக்கு உணவு பரிமாறி உதவி செய்யும் குமாஸ்தா தெரஸாவிடம் தவறாக நடக்க முயல்கிறான். அவனை மெல்ல மறுத்துச் செல்கின்றவளின் இயல்பு நாகராஜனிடம் சங்கடத்தை ஏற்படுத்துகிறது. மரியாதையே வாழ்வில் முக்கியமானது என எண்ணுபவனைத் தெரஸா குற்றவுணர்ச்சிக்குள்ளாக்குகிறாள். தன் தவறை எண்ணி மன்னிப்புக் கேட்கும் நாகராஜனின் மன்னிப்பைத் தெரஸா ஏற்கின்றாள். அதே சமயம் நாகராஜனின் பணத்தைத் திருடிய கன்னையா மேல் கோபத்துடன் இருக்கும் நாகராஜன், தெரஸா தன்னை மன்னித்ததைக் கருதி, அவனும் கன்னையாவை மன்னித்து பெருந்தன்மை மிக்க மனிதனாகத் தன் குடும்பத்தினரின் முன் கருதப்படுகின்றான்.
இக்கதை மேலோட்டமாக அணுகினால், இக்கதை மன்னிப்பதன் மூலம் உண்டாகும் பெருந்தன்மையைக் குறித்துப் பேசுவதாகப் புரிந்து கொள்ளப்படலாம். ஆனால், இக்கதையை தீவிரமாக அணுகினால்அதிகாரத்தில் உள்ளவர்களின் உளவியலைப் பிரதிபலிக்கும் கதையாவதை அறிந்திட முடியும். தெரஸாவின் மேலதிகாரியாக விளங்கும் நாகராஜனினால் தெரஸா தன்னை மன்னிப்பதை முழுமையாக ஏற்க முடியவில்லை. ஏதோவொரு இடத்தில் நாகராஜனுக்கு அவனது சுய அகங்காரம் சீண்டப்பட்டிருக்கும். அதனால்தான் தானும் தெரஸாவைப் போல் பெருந்தன்மை மிக்கவன் என்பதனைக் கன்னையாவை மன்னிப்பதன் மூலம் காட்டுகின்றான். அகங்காரம் சீண்டப்படும் போது மனித அகம் புரியும் பாவனையைக் கதை பேசுகிறது.
குருபீடம்
அடுத்த கதையாக, ‘குருபீடம்’ கதை கலந்துரையாடப்பட்டது. ஜெயகாந்தனின் சிறந்த கதைகளில் ஒன்று ‘குருபீடம்’ சிறுகதை. தன்னை வெறும் உடல் மட்டுமேயானவாக உணருகின்றவனுக்கு உள்ளார்ந்து ஏற்படும் ஆன்மீக அனுபவத்தைக் கதை பேசுகிறது.
கதையின் முதல் பகுதியில் எதற்கும் பயனற்ற ஒருவனைக் கதாசிரியர் காட்சிப்படுத்துகின்றார். முற்றிலும் சோம்பேறியாக இருக்கும் அவன் உடற்பசி, வயிற்றுப்பசி ஏற்படும்பொழுது மட்டுமே செயலாற்றுகின்றான். இவனைக் குருவென கருதி சீடன் ஒருவன் வருகின்றான். மரபார்ந்த சமய மடத்தில் கூலிக்கு வேலை செய்கிறான். அந்தச் சீடன் அவனது குருவுக்காகப் பல பணிவிடைகளைச் செய்கின்றான். நாளடைவில் குருவின் செயலிலும் நல்ல மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. ஊராரால் ஒதுக்கப்பட்ட அவன் சீடனின் வருகையால் மற்றவராலும் போற்றப்பட்டான். தனது வாழ்க்கையை மாற்றிய அந்தச் சீடன்தான் தமது குரு என உணரும் தருணத்தில் சீடன் காணாமல் போகின்றான். ஆக, குரு சீடனாகவும் சீடன் குருவாகவும் மாறும் தருணத்தில் இக்கதை மரபுக்கும் நம்பிக்கைக்கும் அப்பால் உள்ள ஆன்மிக அம்சத்தை உணர்த்துகின்றது.
அக்னி பிரவேசம்
இறுதியாக, ‘அக்னி பிரவேசம்’ கதை குறித்த கலந்துரையாடல் நிகழ்ந்தது. ஜெயகாந்தனின் எழுத்துலகில் மிக முக்கியமான கதையாக அமைகின்றது ‘அக்னி பிரவேசம்’. இக்கதை எழுதப்பட்ட காலக்கட்டத்தில் பல தரப்பினரால் இக்கதை எதிர்க்கப்பட்டது. இலட்சக்கணக்கான வாசகர்கள் வாசிக்கும் ஆனந்த விகடன் போன்ற வெகுஜன இதழில் வெளியான ‘அக்னி பிரவேசம்’ கடும் சர்ச்சைக்குள்ளானது.
மழை நேரத்தில் பேருந்துக்காகக் காத்திருக்கும் கல்லூரி மாணவி, முன் பின் அறியாத ஆடவனின் அழைப்புக்கிணங்கி காரில் ஏறி செல்கிறாள். காரில் செல்லும் அப்பெண்ணும் ஆணும் உடல் உறவு கொள்கின்றனர். இதனை அறிந்த அப்பெண்ணின் அம்மா நடந்ததைக் கேட்டு அழுகிறாள்; அப்பெண்ணையும் அடிக்கின்றாள். ஆனால், இதனை யாரும் அறியாதபடி அப்பெண்ணின் தாய், அப்பெண்ணின் மேல் நீரை ஊற்றி அவன் மனத்தளவில் இன்னுமே கற்பிழக்காதவளே என்கிறாள். கற்பு என்பது உடல் சார்ந்தது எனும் மரபான சிந்தனையிலிருந்து வெளிப்பட்டு மனம் சார்ந்ததாக அதனைக் கருதி அதனை நம்ப தாய் செய்யும் பாவனையே இக்கதையை முக்கியமான கதையாக மாற்றுகிறது.
இக்கதையைக் குறித்து பல விமர்சனங்களும் பார்வைகளும் காலம் காலமாக வைக்கப்பட்டுதான் வருகின்றது. இக்கதை ஒரு பெண்ணின் உளவியலைக் காட்டும் கதையாக அமைகின்றது எனலாம். அப்பெண் வலுக்கட்டாயத்திற்கு ஆளாகி அவ்வுறவில் ஈடுபடவில்லை, அவளே விரும்பி அதில் ஈடுபட்டாள் என்ற பார்வை அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஒவ்வொரு உயிருக்கும் உடற்பசி என்பது இருக்கும் என்பதனையும் அதனை சமூகத்தின் கட்டுப்பாட்டினால் ஏற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலையினால் அப்பெண் அழுது தான் நிரபராதி என்பதனை உணர்த்துகின்றாள் என்று கலந்துரையாடலில் பங்கேற்ற பலரும் கூறினர். அந்தப் பெண்ணின் தாய் செய்யும் சடங்கு முடிந்த பின்னரும் அந்த ஆடவன் கொடுத்த சூயிங்கத்தை அவள் மென்று கொண்டிருக்கிறாள் என்பது அவளது பாலியல் ஈர்ப்புக்கான சான்றாக இருப்பதை ஜெயமோகன் சுட்டிக்காட்டியிருப்பார்.
தமிழின் தேர்ந்த எழுத்தாளரும் விமர்சகருமான ஜெயமோகன் கதையின் மீது மிகச்சிறந்த வாசிப்பை அளித்து விட்ட காரணத்தாலே அதே போக்கிலே கதையை வாசிக்கும் முறைமை உருவாகிவிட்டது. அதனையும் தாண்டி இக்கதையை அடுத்தக்கட்ட வாசிப்புக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என ம. நவீன் குறிப்பிட்டார். இந்தக் கதையில் வரும் தாய்தான் மிக முக்கியமான புள்ளியாகத் திகழ்கின்றாள். இளம் வயதிலே கணவனை இழந்த அந்தத் தாயினால் மட்டுமே உடற்பசியைப் பற்றி அறிந்திருக்க முடியும். அதனால், தன் மகளும் அப்பசிக்கு அடிமையாகிவிடக்கூடாது என்ற அச்சத்தினால்தான் அவள் அப்பெண்ணின் மேல் நீருற்றி இவை அனைத்தும் ஒன்றுமில்லை என்பதனை அப்பெண்ணுக்கு உணர்த்துகின்றாள் என்று ம. நவீன் கூறியது இக்கதைக்கு மற்றொரு திறப்பைக் கொடுத்ததாக அமைகின்றது.
தமிழ் இலக்கிய சூழலின் முக்கிய புள்ளியாகத் திகழும் ஜெயகாந்தனின் ஐந்து சிறுகதைகளைக் குறித்து நடத்தப்பட்ட இக்கலந்துரையாடல் ஜெயகாந்தனின் எழுத்துலகை மேலும் நுணுக்கமாக அறிந்துகொள்ள உதவியது. பலதரப்பட்ட வாசிப்பு பார்வைகளைக் கொண்டு கதைகளை மேலும் தீவிரமாக அணுக இம்மாதிரியான கலந்துரையாடல் இலக்கிய சூழலில் பெரும் பங்கினையாற்றி வருகின்றது.