சுந்தர ராமசாமி சிறுகதைகள்: தமிழாசியா கலந்துரையாடல்

தமிழாசியாவின் சிறுகதை வாசிப்புப் பகிர்வு 2023 ஏப்ரல் மாதம் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழ் இலக்கியப் பரப்பில் முதன்மையான ஆளுமைகளும் அவர்களின் குறிப்பிடத்தக்க சிறுகதைகளும் இந்தக் கலந்துரையாடல்களில் விரிவாக ஆராயப்படுகிறது. அவ்வகையில் கடந்த முறை (20.1.2024) எட்டாவது சந்திப்பில் எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் பிரசாதம், ரத்னாபாயின் ஆங்கிலம், விகாசம் ஆகிய சிறுகதைகள் உரையாட எடுத்துக்கொள்ளப்பட்டன. தொடக்கமாக எழுத்தாளர் ம. நவீன் சுந்தர ராமசாமியின் எழுத்துலகத்தைப் குறித்த பொதுவான அறிமுகத்தை வழங்கினார். தொடர்ந்து நண்பர்கள் ஒவ்வொருவரும் சிறுகதைகள் குறித்து உரையாடத் தொடங்கினர்.

பிரசாதம்


சுந்தர ராமசாமியின் குறிப்பிடத்தக்க சிறுகதைகளில் ஒன்று பிரசாதம். இந்தச் சிறுகதையை முதல் வாசிப்புப் பகிர்வாக வைத்துக் கொண்டோம். தன்னுடைய குழந்தையின் ஒரு வயது பிறந்தநாளைக் கொண்டாட தேவைப்படும் ஐந்து ரூபாயைக் கையூட்டாகப் பெற 7347 என மட்டுமே அடையாளப்படுத்தப்படும் கடைநிலைக் காவல் துறை அதிகாரி காலையிலிருந்தே சாலையில் காத்திருக்கிறார். திருமணமாகிப் பத்தாண்டுகளுக்குப் பின் பிறந்த குழந்தையின் பிறந்தநாளைக் கொண்டாட தேவைப்படும் பணத்தில் பெரும்பகுதியை மனைவி தேடிவிட எஞ்சிய ஐந்து ரூபாயைத் தேடும் சுமை மட்டுமே கணவனுக்கு வழங்கப்படுகிறது. அந்தப் பணத்தைப் பெறுவதற்குச் சாலையில் செல்வோரிடம் கையூட்டாகப் பெற செய்யும் முயற்சிகள் எதுவும் பலனளிக்காமல் போவதை நகைச்சுவையுடன் கதையில் சொல்லப்படுகிறது. சம்பளம் தவிர்த்து கூடுதல் தொகையைத் தேடுவது கணவனுக்குச் சுமையாக இருக்குமென்ற எண்ணம் மனைவி பொன்னம்மைக்கு இருந்திருக்க வேண்டும். அதனைக் குறிப்பிடுகின்ற வகையில் ‘கலர்நூல் வைத்துப் பின்ன வேண்டும். அந்தப் பின்னலில் ஒரு ரோஜா – ஒன்றே ஒன்று – அதற்குத் தனி அழகு’ என எண்ணுகிறாள். மாதக் கடைசியில் காலணா கூட இல்லாத வீட்டில் குழந்தையின் பிறந்தநாளைக் கொண்டாட வேண்டும் என்பதும் தன்னை எப்படி சுற்றியுள்ளவர்கள் பார்க்க வேண்டும் என்று அவளாகவே கற்பனை செய்து சொல்வது, ஒரு சின்ன வட்டத்திற்குள் தன் இரசனைகளெயெல்லாம் நிகழ்த்திப் பார்க்கிற ஒரு குழந்தை போன்ற மனோபாவம், இருப்பதைக் கொண்டு பிறந்தநாளைக் கொண்டாட மெனக்கெடுகிறாள் பொன்னம்மை.

சாலையில் செல்வோர் யாருமே எந்த விதிமீறலையும் செய்யாதச் சூழலில் பணம் பெற முடியாத வெறுமையில் 7347 இருக்கிறான். அந்தச் சமயம் பார்த்து அஞ்சல் பெட்டியில் கடிதம் சேர்பிக்கச் செல்கின்ற நதிக்கிருஷ்ணன் கோவில் ஐயரின் பயந்த உடல்மொழியைப் பயன்படுத்தி அவன் மீது குற்றம் சுமத்திப் பணம் பறிக்க எண்ணுகிறான். ஐயரை மிரட்டிப் பணத்தைப் பறிக்க 7347 முயல்கிறான். அவனுடைய மிரட்டலுக்கு அச்சப்படும் ஐயர் பின்னர் அவனுடைய பணத் தேவையை அறிந்து கொள்கிறார். இந்தச் சூழலில் அதிகாரத்தைப் பயன்படுத்தி மிரட்டிப் பணம் பறிப்பதும் பக்தர்களிடம் பணிந்து கோவிலில் பூசை செய்து பணம் சம்பாதிப்பதும் ஒன்றைப் போன்றதே எனும் புள்ளிக்குக் கதை வருகிறது. அவர்களின் எல்லா பாவனைகளும் கலைந்து போய் சிரித்துக் கொள்ளும் தருணம் கதையின் உச்சமாய் இருக்கிறது.

‘பிரசாதம்’ என்ற இந்தக் கதையின் தலைப்பு எதனைச் சொல்கிறது என்பதைப் பற்றியும் கலந்துரையாடப்பட்டது. பிரசாதம் என்பது மனம் நிறைந்து அல்லது இறையாசியின் வெளிப்பாடாகக் கொள்ளலாம். மனிதர்கள் தங்களுடைய எல்லா பாவனைகளிலிருந்து வன்மங்களிலிருந்தும் விடுபடும்போது பிரசாதத்திற்கு ஒத்தவைகள் வந்து சேர்கின்றன. அதைத்தான் போலிஸ்காரருக்கு ஐந்து ரூபாயைக் கொடுக்கும் ஐயர் வழி காண முடிகிறது. அதிகாரங்களாலும் கள்ளத்தனங்களாலும் செய்து விட முடியாததை மனித நேயமும் நேர்மையுடன் இருப்பதன் மூலமும் பெற்று விட முடிவதை ஐயரின் மனோபாவத்தில் தெரிகிறது. போலீஸ் எவ்வளவோ மிரட்டியும் பயமுறுத்தியும் பணமில்லை என்று சொன்ன ஐயர் இறுதியாகப் போலீஸ் தன்னுடைய மகளின் பிறந்தநாளுக்காகப் பணம் தேவைப்படுவதைச் சொல்லும்போது ஐயர் இணங்குகிறார். இருவருமே மேடையிலிருந்து இறங்கி தங்களுடைய வேசங்களைக் களைப்பது போன்ற இடத்தில் நின்று சிரிக்கும் அந்த நொடி சாதாரண மனிதர்களாக மாறி ஒரே நிலையில் நட்பு கொள்வதைப் பார்க்க முடிந்தது. சுந்தர ராமசாமி முற்போக்கு இலக்கியத்துடைய அழகியல் கொண்டு இக்கதையை எழுதியதாகத் தொகுப்பின் முன்னுரையில் அவரே குறிப்பிட்டுருக்கிறார். பொதுவாக இந்த மாதிரியான கதையை வாசிப்பதற்கு அடிப்படையான வடிவமைப்பாக இரு முரண்பட்ட மனநிலை அல்லது சமூகநிலை கொண்ட நபர்கள் சந்திப்பதுதான் முற்போக்கு சிறுகதைகளின் பொதுப் புள்ளியாகக் காட்டப்படும். இப்படியான பழகிய கதையோட்டம் கொண்ட கதைகளைத் தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு அதன் கதையோட்டம் எதை நோக்கிப் போகிறதென்பதை இலகுவாக அவதானிக்க முடியும். அந்த வகை வடிவமைப்பிலிருந்து விடுபடும்போதுதான் நவீனத்துவ இலக்கியத்திற்கு வர முடியும். இதை ஒட்டியே ‘சீதை மார்க் சீயக்காய்த்தூள்’ என்ற சிறுகதையும் அமைந்திருப்பதையும் எழுத்தாளர் ம. நவீன் சுட்டிக் காட்டினார். சீதையை ஒருவன் வணிகப் பொருளாகவும் ஓவியன் ஒரு கலையாகவும் ஓவியனின் மனைவி தெய்வமாகவும் பார்ப்பது ; நவீன உலகம் எப்படி மாறி வருகிறதென்பதும் அந்த மாற்றத்திற்குக் கலை எப்படி ஒதுக்கப்படுகிறது என்பதையும் இந்தக் கதையில் தெரிகிறது. முற்போக்கு அழகியலை ஒட்டிக் கதைகளை எழுதி வந்த சுந்தர ராமசாமி நவீன இலக்கியத்திற்குள் போகிறார் என்பதற்கான தொடக்கக்கால அடையாளமாக இந்தக் கதை பார்க்கப்படுகிறது.

ரத்னாபாயின் ஆங்கிலம்

இரண்டாவது கதையாக ‘ரத்னாபாயின் ஆங்கிலம்’ என்ற சிறுகதையைக் குறித்து கலந்துரையாடினோம். இந்தக் கதை முழுக்கவே ரத்னாபாய் பார்வையிலே சொல்லப்படுகிறது. ஆங்கில ஆசிரியையான ரத்னாபாய் இளம்வயதில் பேரழகியாக இருந்தவள். முரட்டுச் சுபாவமுடையவனைத் தவறுதலாகத் தன்னுடைய கணவனாகத் தேர்வு செய்து ஏமாற்றமடைகின்றாள். அவளின் இரு குழந்தைகளும் படிப்பில் நல்ல தேர்ச்சியைப் பெற இயலாதவர்களாக இருக்கின்றனர். இதனால் தன் குடும்ப வாழ்க்கையையே ஏமாற்றத்தோடு பார்க்கிறாள். எல்லா கசப்புகளிலிருந்தும் அவளை மீட்டெடுக்கின்ற ஒரே விசயமாக இருப்பது அவளுடைய ஆங்கிலப் புலமைதான். ஆங்கிலத்தில் எம்.ஏ படிக்க ஆசைப்பட்டு அதுவும் ஈடேராமல் குடும்ப சூழலின் காரணமாக ஆசிரியர் பணிக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகிறாள்.

இக்கதையில் நிஜ வாழ்க்கையின் உண்மைகளும் அந்த உண்மை தன்னை வந்து சேராமல் இருக்க அவள் அமைத்துக் கொள்ளக்கூடிய கற்பனை உலகம் என இரு உலகங்கள் சித்திரிக்கப்படுகின்றன. இந்தக் கதையில் மூன்று இடங்களில் உயர்தரமான ஆங்கிலத்தைப் பேசுகிறாள். அதன் வாயிலாக அந்த ஆங்கிலம் அவளிடம் என்னவாகச் செயல்படுகின்றது என்பதைத் தெரிந்து கொள்ள முடியும். பிள்ளைகளை வளர்ப்பதிலோ குடும்பத்தை நிர்வகிப்பதிலோ எந்தத் தேர்ச்சியுமில்லாமல் உலக வாழ்க்கையில் தடுமாற்றத்தில் இருக்கிறாள். இவையெல்லாம் நிகழ்வதற்கு அவள் ஆரம்பத்திலிருந்து எல்லாரிடமும் எதையாவது எதிர்ப்பார்த்து இருக்கிறாளே தவிர இவளிடமிருந்து மற்றவர்களுக்கு என்ன கிடைக்கிறதென்பதை எண்ணிப் பார்க்க மறுக்கிறாள். அவள் எதிர்ப்பார்ப்புக்கு அம்மாவிடமோ, கணவனிடமோ அல்லது பிள்ளைகளிடமோ கூட பதிலில்லை.

இக்கோணத்தில் இந்தக் கதையைப் பார்த்தால் ரத்னாபாய் தன் தோழிக்கு அவள் எழுதுகிற கடிதமென்பது ஒரு தொழில் முறையில் எழுதப்படுவதல்ல என்பதைப் புரிந்துகொள்ளலாம். கவித்துவமான நடையில் எழுதப்படும் கடிதம் ரத்னாபாய்க்குள் இருக்கும் ஒரு கலைஞருக்கான இடத்தைக் காட்டுகிறது. மொழி வழியாகத் தன் கலை தன்மையை வெளிப்படுத்தக்கூடிய பெண். அவளிடம் அது மட்டும்தான் இருக்கிறது. இந்தக் கதையில் அவள் மொழியைக் கடிதம் வழி பயன்படுத்துவதால் அதை உலகியல் சார்ந்து பார்க்க வேண்டியதில்லை. தன்னுடைய கலை மனதை வெளிப்படுத்தக்கூடிய கருவி அல்லது மூலமாக இருப்பது கடிதம் என்ற ஒன்றே ஒன்று மட்டும்தான். கடிதம் வழி அந்தக் கலை மனதை வெளிப்படுத்தி சேர்க்கின்ற இடமாக அவளுடைய தோழி இருக்கிறார். இந்த நிலையோடு ஒத்து இருக்கிற இரண்டு கதைகளைப் பார்க்கலாம். அசோகமித்திரனின் ‘புலிக்கலைஞன்’ என்ற சிறுகதையில் வாழ்க்கையில் எதுவுமே இல்லையென்றானப் போதுகூட கலைஞன் புலியாக வேசம் போட்டுக் கொண்டு உள்ளுக்குள் அடையக்கூடிய நிறைவைப் போன்றதே ரத்னாபாய் கடிதம் எழுதி தன் தோழிக்கு அனுப்புவதன்வழி அடையும் உணர்வும். இதே போல ‘Pianist’ என்ற புகழ்பெற்ற ஆங்கிலப் படத்திலும் யூத இன அழித்தொழிப்பு காட்சியை ம. நவீன் நினைவுபடுத்தினார். நாஜிப் படையிடமிருந்து தப்பிய இசைக்கலைஞர் வீடொன்றின் மறைந்திருக்கிறார். சிறு சத்தம் எழுந்தாலும் சுட்டுக்கொல்வதற்கு நாஜிப்படையினர் காத்திருக்கின்றனர். அந்தச் சூழலில் வீட்டிலிருந்து பியானோ இசை கேட்கிறது. அவர் கைகள் வாசிக்கப் பரப்பரப்படைகின்றன. ஆனால் அது அவருக்கு மட்டும் கேட்கும்; பியானோ மீது விரல்கள் படாமலேயே அவனுக்குள்ளேயே நிகழ்த்திப் பார்ப்பான். ஒரு கலைஞன் அவனுடைய கலையை வெளிப்படுத்தாமல் அவனால் வாழவே முடியாது; அது மரணத்திற்குச் சமமானது. அப்படியான மனநிலையில் தன்னுடைய மொழி வழியாகக் கலையை நிகழ்த்திப் பார்க்க மட்டுமே தெரிந்த ரத்னாபாய் திரும்ப தோழியிடமிருந்து கடிதம் வரும்போது அவள் சாதாரண மனிதராகப் பதற்ற நிலைக்கு வருகிறாள். கலைஞராக ஒரு பக்கமும் முரட்டுத்தனமான கணவனும் பிரச்சனையான குழந்தைகளும் என்ற மோசமான குடும்பச் சுழல் ஒரு பக்கமும் என இந்த இரண்டுக்கும் முரண்பட்ட நிலையில் ரத்னாபாய் வேரொரு ஆளாக இந்தக் கதையில் தெரிகிறாள்.

விகாசம்


மூன்றாவது சிறுகதையாக ‘விகாசம்’ கலந்துரையாடப்பட்டது. விகாசம் என்பதற்கு மலர்ச்சி, கிளைத்த வடிவம் அல்லது பரந்து விரிதல் என்று பொருள் கொள்ளலாம். கணவன் மனைவி உறவுக்குள் இருக்கின்ற மெல்லிய ஊடலைப் போல இரு நண்பர்களுக்கிடையிலான உறவைப் பேசுகிறது. ஜவுளிக்கடையொன்றில் கணக்கராகப் பணியாற்றும் ராவுத்தருக்கும் கடை முதலாளி ஐயருக்குமிடையிலான உறவைக் கதை பேசுகிறது. ராவுத்தருக்கு இருக்கும் அபாரமான கணக்குப் போடும் திறன் ஐயருக்கு ஆணவச் சீண்டலை ஏற்படுத்துகிறது. அதனாலே இருவருக்கும் இடையில் அடிக்கடி மறைமுகமான ஊடல் ஏற்பட்டு மீண்டும் சேர்ந்துகொள்வதாக உறவு தொடர்கிறது. கால்குலேட்டரின் வருகை ராவுத்தரின் கணக்குப்போடும் திறனைப் பொருளற்றதாக ஆக்குகிறது. அந்தச் சூழலைத் தாண்டி ராவுத்தர் தன் இடத்தை நிலைப்படுத்திக் கொள்கிறார். இந்தச் சூழலைக் கால மாற்றத்தோடு நடக்கும் நவீன மாற்றங்களினால் தொழிலாளர் வர்க்கம் எப்படிப் பாதிப்புள்ளாகிறது என்ற அடிப்படையில் பார்க்கலாம். தொழிற்சூழல் மாற்றங்களின் காரணமாகத் தொழிலார்கள் தங்களைப் பொருத்தித் தகவமைத்துக் கொள்வதன் வழியாக நிலைத்திருக்க முடியும். கால மாற்றத்தோடு முதலாளியின் வாழ்க்கையும் குடும்பமும் வளர்ந்து வருவதும் தொழிலாளர் வர்க்கம் அப்படியே எந்த மாறுதல்களுமில்லாமல் வாழ்க்கையைக் கழிக்கிறது. ராவுத்தருடன் சண்டையிருந்தாலும் முதலாளிக்கு வியாபாரத்தைச் சமாளிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகத் தொடர்ந்து அவரைக் கூடவே வைத்திருப்பதும் அவர் குடும்பக் கடனிலிருந்து மீட்டுக் கொண்டு வருவதும் தெரிகிறது.

மற்றொரு பார்வையாக, அந்தக் கடையில் ராவுத்தரை ஒரு இயந்திரமாக மட்டுமே பார்க்கப்படுவதைக் குறிப்பிடலாம். ஒவ்வொருவரும் அவரை அணுகும் முறை கொண்டு அதனைத் தெரிந்து கொள்ளலாம். துல்லியமாகக் கணக்குப் போடும் திறன் மட்டும்தான் அவர் அங்கே இருப்பதற்கான ஒற்றைக் காரணம். அது ஓர் இயந்திரத்திற்கான இடம். இந்தக் கதையில் இரண்டு இடங்கள் முக்கியமானவையாக இருக்கிறது. கதையின் ஆரம்பத்தில் வாழ்க்கையில் சக மனிதராக மதித்து வீட்டிற்கே சென்று ராவுத்தரை முதலாளியின் மகன் அழைக்கிறான். இயந்திரமாகவே பார்க்கப்படும் ராவுத்தருக்கு ‘உங்கள் மனது புண்பட்டிருந்தால் அதற்கு அம்மா மன்னிப்பு கோருவதாக’ ஐயரின் மகன் வந்து சொல்கிறான். ஐயரை இயந்திராமாக அல்லாமல் மனிதனாக பார்க்கிறார்கள் என்றும் மனிதனுக்கான உரிமை தனக்கும் இருக்கிறது என்ற எண்ணமும் ராவுத்தரை நெகிழ வைக்கிறது.


இரண்டாவதாக ராவுத்தருடைய அகங்காரத்தை அடக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு முதலாளி ஒரு கணிபொறியைக் கடைக்கு எடுத்து வருகிறார். ஒரு முதலாளியின் மனம் ராவுத்தரை ஒரு இயந்திரமாகப் பாவித்துத் தொழிலாளிக்குப் மாற்றுப்பொருளாகக் கணிப்பொறியை வைத்து அடக்க முயல்கிறார். ஆனால் ராவுத்தர் தன்னை இயந்திரத்திலிருந்து ஒரு மனிதருக்கு மாற்றாக அதுவும் முதலாளிக்கு மாற்றாகத் தன்னை நிறுத்துகிறார். முதலாளி செய்யக் கூடிய அத்தனை வேலைகளையும் கண் பார்வையில்லாமல் ராவுத்தர் செய்கிறார். இந்த இடத்தில்தான் ராவுத்தர் விகாசம் அடைகிறார். கதையின் இறுதியில் முதலாளியிடம் மின்விசிறியைத் தன் பக்கம் திருப்பி வைக்கச் சொல்லும் ராவுத்தர், தான் இயந்திரங்களுக்கு மாற்று அல்ல என்பதையும் முதலாளிக்குச் சமமான இடத்தில் ஒரு மனிதன்தான் என்பதைக் காட்டுகிறார். அதற்கான எதிர்நிலைச் செயற்பாடாகவே தன்னை மனிதனாக முன்னிலைப்படுத்தி விகாசம் கொள்கிறார்.
சுந்தர ராமசாமியின் கதைகள் கச்சிதமும் சொல்லெண்ணி அடுக்கப்பட்ட நேர்த்தியும் கொண்ட நவீனத்துவ சிறுகதை பாணியைக் கொண்டவை. அவற்றை வாசித்துப் புரிந்து கொள்வதற்கான பல்வகை வாசிப்புச் சாத்தியத்தை தமிழாசியாவின் வாசிப்புக் கலந்துரையாடல் ஏற்படுத்தித் தந்தது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...