- உனக்கென்ன கேடு சொல்லு
மிஸ்டர் குமார் பயந்துவிட்டார். இனி சமாளிக்கவே முடியாது. இவ்வளவு நாட்களாகப் காப்பாற்றி வந்தவை எல்லாம் காற்றோடு போகப்போகின்றது. ஏற்கனவே பாதி பறந்தாயிற்று. மிச்சமுள்ளவை எல்லாம் வீட்டிற்குப் போனதும் பறக்க தயாராக இருக்கின்றன.
தன் மனைவிக்குத் துரோகம் செய்திருக்கக் கூடாது. அதற்குப் பதிலாகத் தான் லீலாவைப் பார்த்திருக்கக் கூடாது எனலாம். முதல் நாள் அவளைப் பார்த்ததிலிருந்து இனம் புரியாத ஓர் உணர்வு அவரை உந்தசெய்தது. சிலவை அவரை அறியாமலேயே முந்தவும் உதவியது.
இன்று அவருக்கு வந்திருந்த புலனச்செய்தி அவரை நிலைகுலையச் செய்தது. எப்படியோ எங்கோ துருவி எடுத்திருந்தாள். “நானெல்லாம் ஒரு பிறவியா?”என மிஸ்டர் குமார் தன்னைத்தானே திட்டிக்கொண்டார். தன் நண்பர்கள் அளவுக்குத் தனக்கு திறமை இல்லையென மீண்டும் தன்னைத் திட்டினார்.
லீலாவும் தானும் தனிமையில் இருந்த புகைப்படத்தை மிஸ்ஸஸ் குமார் அனுப்பியிருந்தார். அதற்குக் கீழ் ஒரு செய்தியும் இருந்தது. ‘கம் டு ஹோம்’ . அதற்கும் கீழ் ஒரு சிமைலி. அந்தச் சிரித்த சிமைலியைப் பற்றி மிஸ்டர் குமாருக்கு நன்றாகவே தெரியும். அது அவரைச் சிதைக்கப்போகிறது.
கார் வீட்டை அடைந்தது. மிஸ்டர் குமாரும் மிஸ்ஸஸ் குமாரும் எதிரெதிரில். யாராவது ஒருவர் ஆரம்பிக்கத்தான் வேண்டும். மிஸ்டர் குமார் குற்றவாளி கூண்டில் இருக்கிறார். அவர் பேச முடியாது. பேசக்கூடாது.
மிஸ்ஸஸ் குமார் ஆரம்பித்தார்.
“எல்லாத்தையும் ஏட்டிக்குப் போட்டியா செய்யுற மாதிரி இதையும் செஞ்சிப்பாத்தியா?”
- சொல்லாயுதம்
அவளிடம் ஒரு துணிச்சலான வாக்கியம் இருந்தது. பலமுறை அது அவளைக் காப்பாற்றியுள்ளது. இரவு எத்தனை மணியென்றாலும் அவளால் தனியாய் வெளியில் நடமாட முடியும். அவளை அந்த வாக்கியம் பலமுறை காப்பாற்றியுள்ளது.
அன்றும் அப்படித்தான். பின்னிரவு. தனியாய் நடந்தாள் அவள். யாருமற்ற சாலையில் அவளும் அவளைப் பின் தொடரும் அறிமுகமற்றவனின் நிழலும் இருந்தன. சட்டென நின்றவள் திரும்பினாள்.
“ஏய்… என்ன வேணும் உனக்கு? எதுக்கு என் பின்னால வர…” என சத்தமிட்டாள்.
எதிர்திசையில் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை. ஆனால் அந்த அரைகுறை நிழல் மெல்ல முன்னே நகர்வதைக் கவனித்தாள். துணிவை ஏற்படுத்திக்கொண்டு சிரிக்கலானாள்.
“ரொம்ப ஆசையா? வா… எனக்கு ஏட்ஸ் இருக்கு…“என்று ஓரடி அவளும் முன் நகர்ந்தாள்.
“எனக்கும்தான்.”