
அந்த ஐந்து மாடி மலிவு விலை அடுக்குமாடியின் படிகளில் இறங்கி வரும்போது சுவரில் அமர்ந்திருந்த வண்ணத்துப்பூச்சி அஸ்லியின் கண்ணில் பட்டது. அதன் கோர முகம், அழகிய சிறகுகளுக்குப் பின்னால் மறைந்திருந்தது. அதன் சிறகில் வண்ணக்கோல திட்டுகள் சுழன்று கொண்டிருப்பது போல தோன்றியது. அது சுவரில் ஒட்டிக் கொண்டு அசையாமலிருந்தது. அசைவற்ற அதன் தன்மை அது இறந்துவிட்டதோ என்ற சந்தேகத்தை எழுப்பியது. அந்த வண்ணத்துப்பூச்சியைப் பற்றி தனித்துவமாக கூற ஒன்றும் இல்லை. அது பலவித மனிதர்களை அடைத்துக் கொண்டுள்ள பல பெட்டி வீடுகளைக் கடந்து வந்திருக்கிறது. அந்தப் பெட்டிகள் சில நேரங்களில் சிறைச்சாலை கூண்டுகள் போலவும் சில நேரங்களில் அடுக்கி விளையாடும் பிரம்மாண்ட விளையாட்டுப் பொருள் போலவும் தோற்றம் தந்தது.
அஸ்லி தனியார் கல்லூரியில் கல்வியை முடித்த பின்னர் தொழிற்சாலை ஒன்றில் வேலைக்குச் சேர்ந்து ஒரு வருடம்தான் ஆகின்றது. மாதம் 2800 ரிங்கிட் சம்பளத்தில் நிர்வாக பகுதியில் அதிகாரியாக வேலை செய்கிறான் என்பது கேட்க நன்றாகத்தான் இருக்கும். ஆனால், கிள்ளான் பள்ளத்தாக்கின் வாழ்க்கைதரம் அவனை ஒரு நகர்புற ஏழையாகவே வைத்திருந்தது. வீட்டு வாடகை, மோட்டார் சைக்கிள் தவணைப் பணம், பிற மாதாந்திர கட்டணங்கள், தாயாருக்குக் கொடுக்கும் செலவுப் பணம், போதாதற்கு இணையக் கட்டணம், ஆஸ்ட்ரோ கட்டணம் என எத்தனை எத்தனையோ செலவுகள். தொழிலாளர் சேமநிதி, சொக்சோ போன்ற பிடிப்புகளுக்குப் பிறகு கைக்கு வந்து சேரும் சொச்ச பணமும் அடுத்த சம்பளத்துக்குள் கிடுகிடுவென மறைந்து பாக்கேட் காலியாகிவிடும்.
ஒவ்வொரு மாதமும் அதே கதைதான். வங்கியில் உள்ள இருப்பு அடுத்த மாத சம்பள தேதிக்குள் தேய்ந்து பல்லிளித்துக் கொண்டிருக்கும். ஒரு வருடம் வேலை செய்த பின்னரும் அவனால் வங்கியில் சேமிப்பு என்று எதையும் வைத்துக் கொள்ள முடியவில்லை. உடம்பு சக்தியற்று போகும் வரை தினம் தினம் ஓயாமல் வேலை செய்யும் இன்றைய மனித வாழ்க்கையைச் சில நேரங்களில் எறும்புகளுக்கு ஒப்பானது என்று அவன் நினைத்துக் கொள்வான். எவ்வளவு காலத்திற்கு அவனால் தொடர்ந்து வேலை செய்ய முடியும். என்றாவது ஒரு நாள் வேலை செய்யும் தெம்பு இல்லாமல் போகும்போது குடியிருக்க வீடற்றவர்களாக ஐந்தடிக்குத் தூக்கி வீசப்படுவார்கள். வீடற்றவர்கள் என்ற சொல்லைப் பற்றி தீவிரமாக நினைத்தபோது தான் ஏதோ ஓர் ஐந்தடி தரையில் படுத்துக் கிடப்பதாகத் தோன்றியது.
அவன் இன்னும் வீடு வாங்கவில்லை. இன்றைக்கே அவனுக்கு வேலை செய்ய முடியாமல் போய்விட்டால் எங்கே ஒதுங்குவது. அஸ்லிக்கு எப்படியாவது ஒரு வீடு வாங்கிவிட வேண்டும் என்ற கனவு இருந்தது. இந்த அடுக்குமாடியிலேயே ஒரு துண்டு இடம் கிடைத்தால் கூட போதுமானது. ஆனால், எப்படி வாங்குவது? இந்த அடுக்குமாடியிலேயே ஒரு வீடு லட்சம் வெள்ளியைத் தொடுகிறதே? ஒரு புதிய அப்பாட்மென்டில் ஆயிரத்துக்கு ஆயிரத்து இருநூறு சதுர அடி கொண்ட வீட்டின் குறைந்த விலை நான்கு லட்சம் முதல் ஐந்து லட்சம் வரை இருக்காதா? குறைந்தது ஐந்து லட்சம் வெள்ளி வரை எகிறும். தரை வீடுகளைக் கனவிலும் நினைக்க முடியாது. உயர் பணிகளில் இருக்கும் இளைஞர்களே இந்தக் கிள்ளான் பள்ளத்தாக்கில் ஒரு அப்பார்ட்மெண்ட் வாங்கத் திணறும்போது கீழ்நிலை அதிகாரியான அவனின் நிலை சொல்ல வேண்டியதில்லை. இதே பட்டணத்தில் தன்னைவிட பல மடங்கு குறைந்த வருமானம் பெரும் மக்களின் நிலையை அஸ்லி நினைத்துப் பார்த்தான். ஏதோ ஒன்று கழுத்தை நெரிப்பது போல் இருந்தது.
அஸ்லி மோட்டார் சைக்கிளை முடுக்கியபடி நிறம் மங்கிய அந்த மலிவு விலை அடுக்குமாடியின் தோற்றத்தைக் கவனித்தான். பல இடங்களில் தாறுமாறாக என்னென்னவோ கிறுக்கப்பட்டிருந்தது. சாயம் வெளுத்து பாழடைந்த பழைய கட்டிடத்தின் தோற்றத்தை அது தந்து கொண்டிருந்தது. சற்று நேரத்தில் அஸ்லி ஊர்ந்து கொண்டிருக்கும் நெரிசல் மிக்க சாலையின் வாகன இடுக்குகளில் நுழைந்து நுழைந்து தன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தான். ஆனால், ஒரு கட்டத்தில் மோட்டார் சைக்கிள்களும் நுழைந்து வெளியேற முடியாதபடி சாலையில் வாகனங்கள் நெருக்கியடித்து நின்று கொண்டிருந்தன. அஸ்லி நின்று நின்று மெதுவாக வண்டியைச் செலுத்திக் கொண்டிருந்தான். தன்னைச் சுற்றிலும் வாகனங்கள் சூழ்ந்து சாலையை மறைத்துக் கொண்டிருப்பதை அவன் அயற்சியாக பார்த்துக் கொண்டிருந்தான்.
சட்டென, தலைக்கவச கண்ணாடியின்வழி பார்த்தபோது, நெரிசலில் சிக்கி நின்ற வாகனங்ளுக்கு மேலே பலூன்கள் மிதந்து கொண்டிருப்பது தெரிந்தது. அஸ்லி வியந்து பார்த்தான். சிறிய பலூன்கள். பல்வேறு நிறங்கள். அவை சாலை நெரிசலில் நிற்கும் வாகனமோட்டிகளின் தலையிலிருந்து புறப்பட்டு வந்து கொண்டிருந்தன. கண்ணுக்குத் தெரியாத நூலால் பிணைக்கப்பட்டது போல பலூன்கள் ஒவ்வொருவர் தலைக்கு மேலும் மிதந்து கொண்டிருந்தன.
பலூன்களுக்குள் ஏதோ இருப்பது போல தெரிந்தது. அஸ்லி அண்மையில் இருக்கும் பலூன் ஒன்றை கூர்ந்து பார்த்தான். ஆச்சரியம். அந்தப் பலூனுக்குள் ஒரு வீடு இருந்தது. அவன் மற்ற பலூன்களுக்குக் கவனத்தைத் திருப்பினான். எல்லா பலூன்களிலும் பல்வேறு வகையான வீடுகள் தெரிந்தன. அப்பார்ட்மெண்ட், வரிசை வீடுகள், அடுக்குமாடிகள், இரட்டை வீடுகள், பங்களா எனப் பல்வேறு வகையில் வீடுகள் அந்த மிதக்கும் பலூன்களுக்குள் மிதந்து கொண்டிருந்தன. அந்த இடமே வண்ண மயமாகக் காட்சி தந்தது. அவன் அண்ணாந்து பார்த்தான். ஆமாம். அவன் தலைக்கு மேலும் வீடு ஒன்றை சுமந்து கொண்டு ஒரு பலூன் பறந்து கொண்டிருந்தது. மீண்டும் சாலையைப் பார்த்தபோது எதிரில், திசை மாறிய கார் ஒன்று பாய்ந்து வந்து கொண்டிருந்தது. அவனால் மோட்டார் சைக்கிளை நிறுத்த முடியவில்லை. கடினமான ஏதோ ஒன்று தன்னை மோதுவதை உணர்ந்தான். தார் சாலையின் கருப்பு தரையைப் பார்த்தவன் மீண்டும் தலைக்கு மேல் மிதந்து கொண்டிருக்கும் பலூன்களைப் பார்த்தான். சாலை மேலும் நெரிசலானது.
நேற்று இரவிலிருந்து சுவரில் ஒட்டிக் கொண்டிருந்த வண்ணத்துப்பூச்சி இன்னமும் அங்கேயே இருப்பதை வஸீர் பார்த்தான். அது உயிருடன் இருக்கிறதா அல்லது செத்து இறுகிக் கிடக்கிறதா என அவனுக்குத் தெரியவில்லை. அதைத் தொட்டுப் பார்க்க நினைத்தான். ஆனால், அதன் சிறகு உதிர்ந்து உடனே கைகளில் ஒட்டிக் கொள்ளும் என்பதால் தயங்கினான். அது விஷமாகவும் இருக்கலாம் என்ற அச்சமும் அவனிடமிருந்தது. வண்ண மயமான சுழல் வட்டங்கள் அதன் சிறகுகளில் அசைந்து கொண்டிருப்பது போல தோன்றியது. வசீர் ஐந்தடுக்கு மாடி வீடுகளின் அடித்தளத்திற்குப் படிகளில் வேகமாக இறங்கி கீழ் மாடிக்கு வந்தான். கீழ் மாடி வீட்டுக் குடியிருப்பாளர்கள் வைத்திருக்கும் பூச்செடிகளால் கவரப்பட்டுதான் இந்தப் பட்டாம்பூச்சிகள் இங்குத் தங்கள் குடியிருப்பை அமைத்துக் கொள்கின்றன. பாழடைந்து சுவர் முழுதும் அருவருப்பாகக் கிறுக்கப்பட்டுள்ள இந்த ஐந்தடுக்கு மலிவு விலை அடுக்குமாடி, மனிதர்களுக்கும் பட்டாம்பூச்சிகளுக்கும் ஒரே நேரத்தில் குடியிருப்பாகியிருக்கிறது. ஒரே வேறுபாடு, வண்ணத்துப்பூச்சிகள் சுதந்திரமாக பறந்து திரிகின்றன. தாங்கள் விரும்பும் இலைகளைத் தேர்வு செய்து அதனடியில் முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கின்றன. ஆனால், மனிதர்கள் சதுரப் பெட்டிகளுக்குள் அடைபட்ட அடிமைகள். பல்வேறு கட்டணங்களைத் தங்கள் வாழ்நாள் முழுதும் செலுத்த வேண்டிய ஒப்பந்தச் சங்கிலியால் பிணைக்கப்பட்டவர்கள். லபெரன்ஸ் சிக்கல் போல வெளியேற வழி புரியாமல் மனிதர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தும் கொடுமையான சிஸ்டம் இது. சுய சிந்தனையும் சிறகுகளும் உள்ளவர்கள் மட்டுமே இந்த லபெரன்ஸிலிருந்து தப்பித்து வெளியேற முடியும்.
வஸீருக்குச் சிறகுகள் இல்லை. ஆகவே, அவன் இந்த அடுக்குமாடியின் ஒரு பெட்டிக்குள் தன் மனைவியோடும் மூன்று குழந்தைகளோடும் சிக்கிக் கொண்டுள்ளான். அவன் முன்பு தொழிற்சாலையில் வேலை செய்தான். ஆனால், தொழிற்சாலைகள் அந்நியத் தொழிலாளிகளுக்கு வேலை கொடுக்கத் தொடங்கியதும் அவனுக்கும் நண்பர்களுக்கும் மெல்ல வேலையில்லாமலாகி விட்டது. சிலர் இரவுச் சந்தை வியாபாரிகளாகி விட்டனர். பலர் கிடைத்த வேலைகளைச் செய்து கொண்டிருந்தார்கள். வஸீர் என்னென்னவோ வேலைகள் செய்து கடைசியாக இப்போது தற்காலிக ஸ்டோர் சுப்பர்வைஸராக இருக்கிறான். இரண்டாயிரம் வெள்ளி சம்பளத்தில் தன்னால் எப்படி இன்னும் இந்தக் கிள்ளான் பள்ளத்தாக்கில் வாழ முடிகிறது என்பது வஸீருக்கே புரியாத புதிராக இருந்தது. வருமானத்தை அதிகரிக்க பக்கத்து தாமான் ஒன்றில் இரவு நேரக் காவலனாக வேலை செய்கிறான். மனைவி அண்டை அயலாரின் மூன்று குழந்தைகளைக் கவனித்துக் கொண்டு, கொஞ்சம் காசு பார்க்கிறாள். இது வரை அவர்களின் வாழ்க்கை, சுவரில் அசையாமல் அமர்ந்திருக்கும் அந்த வண்ணத்துப்பூச்சியை போலதான் இருக்கிறது. வஸீர் இந்த அடுக்குமாடியில் பத்து வருடங்களுக்கும் மேலாக வாடகைக்குக் குடியிருக்கிறான். அவனுக்கும் சொந்தமாக ஒரு வீட்டை வாங்கிவிட வேண்டும் என்ற கனவு இருக்கிறது. பல முறை அரசங்கம் அறிவிக்கும் பிபிஆர்டி குறைந்த விலை வீடுகளுக்கு விண்ணப்பித்து விட்டான். ஆனால், எல்லாம் தோல்விதான். என்ன பிழையோ அல்லது அவனது துரதிர்ஷ்டம்தான் காரணமோ தெரியவில்லை. அரசாங்கம் நகர்புற ஏழைகளுக்குக் கட்டித் தரும் குறைந்த விலை வீடு கூட அவனுக்கு வாய்க்கவில்லை.
வயது வேறு கூடிக் கொண்டே போகின்றது. எதிர்காலத்தில் தன் நிலையும் தன் குடும்பத்தின் நிலையும் எப்படி இருக்கப் போகின்றது என்பது அவனுக்குப் புதிராகவே இருந்தது. தனக்கு ஏதாவது நடந்துவிட்டால், சொந்தமாக வீடு கூட இல்லாமல் அவர்கள் எங்கே ஒண்டுவார்கள். கவலையில் அவன் குழம்பிப் போனான். அடுக்குமாடிக் கட்டிடத்தின் கீழே கார் நிறுத்தும் இடத்தில் தாறுமாறாக நிறுத்தப்பட்டிருக்கும் கார்களுக்கிடையே தன் காரை நோக்கி நடந்தான். அந்த அடுக்குமாடியின் நீண்டகாலக் குடியிருப்பாளன் என்ற சிறப்புச் சலுகையின் அடிப்படையில் தன் காரை நிறுத்த மர நிழல் படர்ந்த ஓர் இடத்தை அவன் தக்க வைத்துக் கொண்டிருந்தான். இருபது வயதாகி விட்ட தன் புரோட்டோன் சாகா காரை முடுக்கினான். அடிக்கடி பழுதாகி, அவன் பாக்கேட்டைக் காலியாக்கும் கார் அது. அவனால் புதிய கார் வாங்க முடியவில்லை. வேலைக்குப் போக இந்தக் காரையே நம்பிக் கொண்டிருக்க முடியாது என்றுதான் ஒரு மோட்டார் சைக்கிளையும் வைத்திருந்தான். காரில் அமர்ந்தவாறே தன் காருக்கு மிக அருகில் உள்ள மரக்கிளை ஒன்றின் இலை மறைவில் தொங்கும் கூட்டுப்புழு ஒன்றை பார்த்தான். அது என்ன பூச்சியினத்தின் கூட்டுப்புழு என உறுதியாகத் தெரியவில்லை. சற்று முன் பிலேட் சுவரில் பார்த்த வண்ணத்துப்பூச்சியினத்தின் கூட்டுப்புழுவாக இருக்கலாம்.
பட்டாம்பூச்சிகளின் வாழ்க்கை மனித வாழ்க்கையை விட மேலானது. அவை தாங்கள் விரும்பிய மரக்கிளையில் ஒண்டிக் கொண்டு முட்டையிட்டுக் குஞ்சு பொரித்து, கூட்டுப்புழுவாக வாழ்ந்து, பிறகு பட்டாம்பூச்சியாக மாறி உலகெங்கும் சிறகடித்துப் பறந்து மலர்களில் தேனுன்டு வாழ முடியும்.
இயற்கை எல்லா உயிர் வாழ்க்கைக்கும் தேவையான அனைத்தையும் நீதியுடன் இணைத்தே இந்த உலகைப் படைத்துள்ளது. ஆனால், மனிதன் தானே ஓர் இயக்கத்தை உருவாக்கிக் கொண்டான். அது இயற்கைக்கு எதிராகவே செயல்படுகிறது. மனிதன் உருவாக்கிய அமைப்பு ஒரு சிறு தரப்பு செழித்து வளரவும், அதிகாரம் பெற்று பெரும்பான்மையை அடக்கி அடிமையாக்கவும் உதவுகிறது. மனிதன் வடிவமைத்த இந்த வாழ்க்கை அநீதியானது. ஈவிரக்கமின்றி மனிதனின் ரத்தத்தைச் சன்னம் சன்னமாக உறிஞ்சி குடித்து அவனைச் சக்கையாக்கி வீசுகிறது. வஸீர் அந்தக் கூட்டுப்புழுவை உற்று கவனித்தான். மாயச்சுவர் ஒன்று இயற்கை உலகையும் மனிதன் படைத்த உலகையும் பிரித்துக் கொண்டு நிற்பது போல தோன்றியது. வஸீர் காரை நகர்த்திக் கொண்டு அந்த இடத்தை விட்டு வெளியேறினான். அடுக்குமாடி கட்டிட வரிசைகள் பிரம்மாண்ட கற்குவியல் போல தோன்றின. வஸீருக்கு வினோதமான காட்சி ஒன்று தோன்றியது. அந்த உயர்ந்த அடுக்குமாடிகளில் வீடுகள் இல்லாமலாகி விட்டன. எல்லா கோணங்களிலும் வண்ணத்துப்பூச்சிகளின் கூட்டுப்புழுக்கள் ஆயிரக்கணக்கில் தொங்கிக் கொண்டிருந்தன. பிரம்மாண்ட கற்குவியலைக் கூட்டுப்புழுக்கள் ஆக்கிரமித்திருந்தன. அடுக்குமாடி வரிசைகளில் வீடுகள் என்ற நான்கு சுவர் பெட்டிகள் இருந்த இடங்களைக் கூட்டுப்புழுக்கள் தன் வசமாக்கிக் கொண்டு அசைந்து கொண்டிருந்தன.
அஸ்லி நொண்டி நொண்டி நடந்து வெளியே வந்தான். நேற்று நடந்த விபத்துக்குப் பின் கிளினிக் சென்று மருத்துவ விடுப்பு எடுத்துக் கொண்டான். நல்ல வேளையாக காயம் அதிகமில்லை. மோட்டார் சைக்கிளும் பக்கக் கண்ணாடி உடைந்து சொற்ப சேதத்தோடு தப்பித்தது. மோட்டார் சைக்கிள் சுமூகமாகவே இயங்கியது. அஸ்லி காலில் ஏற்பட்ட காயத்துக்கு மருந்தகத்தில் சிகிச்சை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்து படுத்துவிட்டான். மோட்டார் சைக்கிள் கண்ணாடியை இன்னும் மாற்றவில்லை. அதற்கு அவனிடம் அப்போது பணமில்லை.
அலுவலகத்திற்கு அழைத்து விபத்தான தகவலைச் சொன்னான். நேற்று ஒரு நாள் முழுதும் வீட்டிலேயே ஓய்வெடுத்துக் கொண்டிருந்துவிட்டு இன்று மாலைதான் தன் மோட்டார் சைக்கிளைப் பார்வையிட வெளியே வந்தான். அடுக்குமாடி படியில் கீழிறங்கி வரும்போது அதே வண்ணத்துப்பூச்சி இன்றும் சுவரில் இருப்பதைப் பார்த்தான். இன்று அது வேறு இடத்திற்கு நகர்ந்திருந்தது. அதைத் தொட்டுப் பார்க்க அவன் கைகள் துடித்தன. ஆனால், அதைத் தொந்தரவு செய்ய வேண்டாமென்று தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான். அதோடு அது இன்னும் உயிருடன் இருக்கிறதா என்ற சந்தேகமும் எழுந்தது.
வஸீர் அன்று மாலை குழப்பமான மனநிலையோடு வீடு திரும்பினான். அடுக்குமாடிக் கட்டிடங்களை அண்ணாந்து பார்க்கவே தயங்கினான். அவனுக்குக் கட்டிடம் முழுவதும் இன்னமும் கூட்டுப்புழுக்களின் அசைவுகள்தான் தெரிந்தன. கீழ்தளத்தில் ஓர் இளைஞனைப் பார்த்தான். எப்போதும் வேலைக்குக் கிளம்பும்போதும் வீட்டுக்குத் திரும்பும்போதும் அவர்கள் சந்தித்துக் கொள்வார்கள். வஸீர் நேசமாகத் தலையசைத்தான். அந்த இளைஞனும் அப்படியே செய்தான். அவன் எத்தனையாவது மாடியில் குடியிருக்கிறான் என்று வஸீருக்குத் தெரியாது. அது அவனுக்கு முக்கியமில்லை. ஆனால், இப்போது தலையசைத்துவிட்டுத் திரும்பியதும் அந்த இளைஞன் சட்டென ஒரு கூட்டுப்புழுவாக காட்சி தந்தான். நகரும் கூட்டுப்புழு. வஸீருக்குப் பகீரென்றது. மனம் தடுமாறியது. விலகி நின்று கொண்டான். கூட்டுப்புழுவாக மாறிவிட்ட அந்த இளைஞன் தன்னைப் பார்க்கும்போது கண்களை மூடிக் கொள்வதை வஸீர் கவனித்தான்.
மிதந்து கொண்டிருக்கும் பலூன்களின் நினைவு அஸ்லியை இன்றும் குழப்பிக் கொண்டிருந்தது. நேற்று முழுதும் அவன் யாரையும் சந்திக்கவில்லை. இன்று மாலையில் வெளியே வரும்போது அந்தப் பலூன்கள் தன் கற்பனையின் மாயத் தோற்றம் என்று நினைத்துக் கொண்டான். கீழ்தளத்தில் அதே கட்டிடத்தில் ஏதோ ஒரு மாடியில் குடும்பத்துடன் வசிக்கும் அறிமுகமான மனிதனைச் சந்தித்தான். நேசமாக தலையசைக்கும்போது அவனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. அவனுக்கு நேற்று தெரிந்த மாயத் தோற்றம் இன்று நிஜமாகவே தெரிந்தது. அந்த ஆண் தன்னை வினோதமாக பார்ப்பதும் அதிர்ந்து சற்று விலகிச் செல்வதையும் பார்த்துக் கொண்டிருந்தபோது, அவன் தலைக்கு மேல் ஒரு பலூனும் அதற்குள் ஒரு வீடும் மிதந்து கொண்டிருப்பது தெரிந்தது. அஸ்லி அதிர்ச்சியில் கண்களை மூடிக் கொண்டான்.
அஸ்லியும் வஸீரும் குழப்பத்தோடு அவரவர் வழியில் விலகி நடந்தனர். வஸீர் எல்லா கூட்டுப்புழுக்களும் ஒவ்வொன்றாக வெடித்து வண்ணத்துப்பூச்சிகளாக மாறுவதைப் பார்த்தான். அஸ்லி எல்லா பலூன்களும் ஒவ்வொன்றாக வெடித்து வண்ணத்துப்பூச்சிகளாக மாறுவதைப் பார்த்தான். வஸீர், அஸ்லி மற்றும் அந்த அடுக்குமாடியில் குடியிருக்கும் எல்லா குடியிருப்பாளர்களின் தலையிலிருந்தும் வண்ணத்துப்பூச்சிகள் கூட்டம் கூட்டமாகப் புறப்பட்டுப் பறந்தன.
அவை வண்ண மயமான கனவுகளைத் தூக்கிக் கொண்டு பறந்து வானத்தை நிறைத்தன. பிறகு சட்டென வெடித்து துகள்களாகி அந்த நகர்புறத்தின் புகைமண்டல இருண்ட வானில் கலந்தன.
RUMAH KUPU KUPU
மலாய் மூலம்: எஸ்.எம். ஷாகீர்/S.M. Zakir
தமிழில்: அ. பாண்டியன்