நீ காத்திருந்தது கடல் நீருக்காகவா
அலையும் மணலும் இடைவெளியின்றி அசைகின்றன
உனக்குத் தெரியும்
இறுதியில் உடைவது கடல் நீரல்ல
உன்னால் மறக்க இயலாது.

பேரமைதியும் இளமையும் வனப்பும் பரிசுத்தமும் ஒருங்கே அமைந்தவள் அவள். பசுமையான மாணிக்கத்தின் தன்மையை ஒத்திருந்தாள் யூ சியாவ் யூ.
உன்னால் அந்த ஜீவனை மறக்க முடியாது. அவள், தான் ஒரு பெண் என்ற பரிவை எதிர்ப்பார்க்காதவள். அவளுடைய கைகள் ரத்தத்தில் தோய்ந்திருந்தாலும், முகமெங்கும் கரும் ஊதா நிற குருதி அப்பிக்கிடந்தாலும் முன்பிருந்ததைப் போலவே தூய்மையானவளாகவும் குற்றமற்றவளாகவும் தெரிந்தாள். கவி கூ செங்கையை நீ அறிந்து கொள்ள அவள்தான் காரணம். அந்த நாள் தொடங்கி, கவி கூ செங்கைப் பற்றியே சதா சிந்திக்கலானாய். கூ செங்கைப் பற்றி சிந்தித்தப்போதே உடன் அவளையும் சிந்தித்தாய். யூ சியாவ் யூ நீ மிகக் கொடூரமானவள்தான்.
குளிர் என்கிறார்கள்/ குளிரின் ரூபம் என்ன/ நான் அறிகிலேன்
குளிரை நீ அறிவாய். குளிர் என்பது யூ சியாவ் யூ புன்னகைக்கிறாளா இல்லையா என ஊகிக்கச் செய்யும் அவளின் இதழோர நெளிப்புக்கு ஒப்பானது. குளிர் என்பது அவளது முகத்தின் அண்மை காட்சி போன்றது. நீரின் மேற்பரப்பைக் கடக்காதே என்கின்றன அவளின் கண்கள்.
நீரின் பரப்பைக் கடக்குமெனில், சூரிய ஒளி பிரதிபலிக்கப்படும்.
நீ நடுங்கிக் கொண்டிருந்தாய். அப்போது, சன்னலுக்கு வெளியே சூரியன் சுட்டெரித்துக் கொண்டிருந்தது. இலைகள் தகித்துக் கொண்டிருந்தன. யாரோ வீசிய சிகரெட் துண்டும் பூனையின் சடலமும் சாலையில் கிடந்தன. ஆனால், உன் கவனம் சற்றுமுன் நடந்து முடிந்த சம்பவத்தில் மூழ்கிக் கிடந்தது. அவள் கண்ளைச் சாய்வாக மோதிய சூரிய ஒளி எதிர் திசையில் பிரதிபலித்துச் சென்றது. யூ சியாவ் யூ பேச எத்தனித்துச் சட்டென மௌனமானாள். மூக்கை குடைந்தபடி கூச்சலிட்டுக் கொண்டிருக்கும் பெண் போலீஸின் சத்தத்தை மீறி உனக்கும் அவளுக்கும் இடையில் நிகழும் சூனியத்தைத் தலை சாய்த்து நின்று செவிமடுத்துக் கொண்டிருந்தாள்.
உனக்கு என்ன ஆனது? யூ சியாவ் யூவிடம் அதைப் பற்றி கேட்டுவிட ஏன் அவ்வளவு ஆவல் கொண்டிருந்தாய். நீ அதைக் கேட்பதால் அது உனக்குள் இருக்கும் முரட்டுத்தனத்தையும் வாட்டத்தையும்தான் வெளிப்படுத்தும் என்பதை அறிந்தும் இருந்தாய். உன்னை யூ சியாவ் யூ குறைத்து மதிப்பிட்டிருக்கவும் கூடும். அதனால்தானோ என்னவோ நீ, சட்டத்துறையின் உளவியலைப் பற்றிய அறிமுகத்தைச் சொல்லிக் கொண்டிருந்தபோது அவள் கண்களைத் தாழ்த்திக் கசப்புடன் புன்னகைத்தாள். அவளுடைய பார்வை மூக்கின் நுனியை நோக்கியிருந்தது. மூக்கின் நுனி இதயத்தை நோக்கியிருந்தது. தன் நெஞ்சின் முன் மாட்டப்பட்டிருக்கும் ஒரு கண்ணாடியைப் பார்த்துச் சிரித்துக் கொள்வது போல அவள் தனக்குத் தானே நகைத்துக் கொண்டாள். இந்த மனிதர்களைப் பாருங்களேன்.
அவள் பேசுவதைக் கேட்க மனத்தைத் தயார்படுத்திக் கொண்டிருந்தாய். அவள்தான் உன்னைத் தேடியிருக்கிறாள். ஆகவே, தனக்கு என்ன தேவை என்பது அவளுக்கு நிச்சயமாய்த் தெரிந்திருக்கும். இந்தப் பெண்ணுக்கு இப்பொழுதுதான் இருபது வயதிருக்கும். இவள் வயதில் மற்ற பெண்கள் பாப் பாடல்களின் மீதான பித்தில் இருக்க இவள் தன்னுடைய தலையைச் சாய்த்து, அரூபமான வெளியில் பார்வையை ஊடுருவச் செய்து தனக்கு மட்டுமே கேட்கும் பாடலைத் தனிமையில் கேட்டுக் கொண்டிருக்கிறாள். அது ஒரு கவிதையாக இருக்கக்கூடும். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அவளை இன்னுமே அணுக்கமாகக் அறிந்து கொள்ள முயன்றாய். அவள், முகத்தில்தான் ஆழ்ந்த அமைதி, கரங்களோ மிகச் சுறுசுறுப்பானவை. ஒரே வீச்சில் எதிராளியின் கழுத்து துண்டாகியிருக்கிறது.
இறந்து போன அக்கவிஞனை இந்தத் தடுப்பு முகாமில்தான் யூ சியாவ் யூ முதன்முறையாக உன் நெஞ்சில் உயிர்த்தெழச் செய்தாள். ‘கூ செங்கின் படைப்பை வாசித்திருக்கிறாயா?’ எனக் கேட்க எண்ணியிருந்தாய். ஏனெனில், நீ அலுவலகத்தில் இல்லாதப்போது பல முறை உன்னுடைய அறைக்குள் நுழைந்து புத்தக அலமாரியின் முன் நீண்ட நேரம் யூ சியாவ் யூ நின்றிருந்ததைச் சக பணியாளர் கூறியிருந்ததைத் திடீரென நினைவு கூர்ந்திருந்தாய்.
அங்கு நின்று கொண்டிருக்கும் போது எதைப் பார்த்திருப்பாள்.
அலமாரியில் அடுக்கப்பட்டிருக்கும் புத்தகங்களின் மீது ஆண்டுகணக்காய்ப் படிந்திருக்கும் தூசுகளினால் கதிரொளி ஊடுருவும் தடமே மறைந்துவிட்டிருந்தது. அவளுடைய பார்வை எந்தப் புத்தகத்தின் மீது நிலை கொண்டிருந்தது என்பது உனக்கு நிச்சயமாய்த் தெரிந்திருக்கவில்லை. ஆனால், கூ செங்கின் முழுத் தொகுப்பும் அலமாரியில் இருந்ததை நினைவில் வைத்திருந்தாய். அந்த நேரத்தில், யூ சியாவ் யூவின் கவனத்தைக் கவர நீ ஒரு கவிதை வாசிப்பது பொருத்தமாக இருந்திருக்கும். ஆனால், கூ செங்கைப் பொறுத்தளவில் இரவுதான் எனக்குக் கருவிழியைத் தந்தது எனும் வரியை மட்டுமே நீ நினைவு வைத்திருந்தாய். அவை காலாவதியானதைப் போல உணர்ந்ததால், அத்துடன் நிறுத்திக் கொண்டாய்.
அவள் மிக அமைதியானவள் என்று பலர் உன்னிடம் முறையிட்டிருந்தார்கள். அவளா? அந்தப் புதிய உதவியாள். அதைக் கேட்டபோது வேலை முடிந்து திரும்பியிருந்த யூ சியாவ் யூவின் காலியான இருக்கையைத் திரும்பிப் பார்த்தாய். மேசையின் மீது நிறைய பொருட்கள் இருந்தாலும் அனைத்தும் மிக நேர்த்தியாக அடுக்கப்பட்டிருந்தன. நாற்காலியும் முறையாக நகர்த்தி வைக்கப்பட்டிருந்தது. நாற்காலியின் பின்புறத்தில் பின்னல் வேலைபாடுகள் கொண்ட குளிராடை நேர்த்தியாக மடிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. அதனைக் கண்டபோது நீ அவளின் அமைதியான இயல்பைக் காட்டிலும் தன்னொழுங்கையே அதிகமும் யோசித்தாய். அந்தக் காலக்கட்டத்தில் உள்ளுறைப் பயிற்சிக்காக வந்திருந்தவர்களிலே இவள்தான் மிக சிறப்பான மதிப்பெண்களைப் பெற்றிருந்தாள் என்பதில் எந்த வியப்புமில்லை.
இப்பொழுதுதான், மற்றவர்கள் சொன்ன, இறுக்கமும் தண்மையும் சேர்ந்த இரும்புத்தூணைப் போன்ற அவளின் அமைதியான இயல்பை உணர்கிறாய். விலங்குகளை வளையல்களைப்போல அணிந்திருப்பவளாகவே யூ சியாவ் யூவை அவர்கள் கண்டிருக்கக்கூடும். அது அவர்களுக்கு மிக வினோதமாக இருந்திருக்கக்கூடும். அவளுக்கு எந்த மனக்கவலையும் இறுக்கமும் இல்லையா? நீயோ யாருடைய அசெளகரியத்தையும் சிந்திக்கக்கூடியவளாய் இல்லை. அவள் உண்மையாகவே மன இறுக்கம் கொண்டிருந்தாளா? நீ அறிந்திருக்கவில்லை. மாறாக, யூ சியாவ் யூவின் பெற்றோரைச் சந்தித்தப்போது கண்களில் நீர் முட்டிக் கொண்டு நிற்கும் பெண்ணாக அவளைக் கண்டாய். அவள் அப்போது இடக்கை விரலில் யானை தந்தத்தில் செய்யப்பட்ட மோதிரம் ஒன்றை அணிந்திருந்தாள். அது எலும்புத் துண்டு போல குளிர்ந்து காணப்பட்டது.
அவள் அணிந்திருந்த வளையல்களும் இந்த மோதிரத்தை ஒத்த கலை வடிவம் கொண்டவைதான் என நினைவுகூருகிறாய். அவைதான் இப்பொழுது கைவிலங்குகளாகத் தெரிகின்றன. யூ சியாவ் யூ எந்த அசெளகரியத்தையும் காட்டவில்லை. அவள் தன்னுள் இசையைக் கேட்பதிலிருந்து யாரும் அவளைத் தடுத்துவிட முடியாது. அங்கு அமர்ந்தவாறே அவள் தன் இடுப்பை மெல்ல அசைப்பதை யாராலும் நிறுத்திவிட முடியாது. அவள் நீரின் மேற்பரப்பைக் கடந்துவிட்டாள்.
“யூ சியாவ் யூ , நான் குற்றவியல் வழக்குகளை எடுப்பதில்லை என நீ அறிவாய்… நான் அதில் வல்லுநர் இல்லை” என்றாய்.
“ஆமாம்”
அவளுக்குத் தெரியும். அவள் பணி விலகும்போது, அந்த வழக்கறிஞர் நிறுவனத்தில் பத்து மாதம் பணியாற்றியிருந்தாள். முதல் ஒன்பது மாதங்களை நிறைவு செய்த பின்னர், அவளுக்குச் சட்ட நடைமுறை சான்றிதழ் வழங்கப்பட்டது. இருந்தும், என்ன காரணத்தாலோ, “இன்னும் கற்கப்போகிறேன்” என உறுதியுடன் சொன்னதால், உன்னுடைய பகுதிக்குப் பொது உதவியாளராக அமர்த்தப்பட்டாள். உன் அலுவலகத்து வெளிப்புறத்தில் வருகையாளர்கள் கதவை எதிர்கொள்ளும் இடத்தில் வரவேற்பாளரின் மேசையைப் போல காற்றையும் மழையையும் எதிர்கொண்டவாறு அவளது மேசை அமைந்திருந்தது. பொது அதிகாரியின் பணிகள் அதிகமாகவும் சலிப்பூட்டக்கூடியதாகவும் இருக்கும். அத்துடன், அலுவலகப் பணியாளர்களுடனும் வெளியாட்களிடமும் தொடர்பில் இருக்க வேண்டியிருக்கும். ஒரு மூத்த பணியாளர்கூட அவளுக்கு ஆதரவாக இல்லாதது போல இருந்தது. உடன் பணி செய்யும் மற்றவர்களும் அவளுடன் கலந்து பழக விரும்பாதவர்களாகவே இருந்தனர்.
ஆனால், ஆச்சரியமாக முதல் ஆறு மாதத்துக்கு யூ சியாவ் யூவிடமிருந்து எந்த எதிர்க்குரலுமே எழவில்லை. தந்தத்தால் ஆன பாரமான கைவளையல்களை அணிந்த அவள் கரங்களே அவளின் எல்லா பணிகளையும் நிறைவு செய்திருந்தது. அவள் சிடுசிடுப்பான முகத்துடன் இருந்ததையோ அல்லது எதாவது புகாரளித்தோ யாருமே பார்த்திருக்கவில்லை. வேலையிலிருந்து நின்றவுடன் அவள் காணாமல் போய்விட்டாள். ஒரு வேளை யாராவது அவளைப் பற்றி குறிப்பிட நேர்ந்தால், தலையை ஆட்டியவாறே அவள் மிக அமைதியானவள் என மட்டுமே குறிப்பிடக்கூடும்.
உன் அமைதியான இயல்பு பிடித்திருக்கிறது என யாருமே குறிப்பிட்டதில்லை.
இப்பொழுதுதான் உனக்குப் புரிகிறது. மற்றவர்கள் யூ சியாவ் யூவிடம் அசெளகரியமாக உணர்ந்த அவளின் அமைதியான இயல்பு உண்மையில் அவளுக்குள் இருந்த இறுக்கமும் பிடிவாதமும்தான் என. என்னத்தான் முட்களைக் கொண்டிருந்தாலும் யூ சியாவ் யூ ரோஜா செடியாக துளிர்க்கவில்லை. முள் மரமாகவே வளர்ந்திருந்தாள். அவளின் அமைதியான இயல்பு அவளை உள்ளுக்குள் கொந்தளிப்பவளாகவும் பலமானவளாகவும் பிழைகளை ஏற்காதவளாகவும் ஆக்கியிருந்தது. யூ சியாவ் யூ, நீ உன்னை மற்றவர்கள் யூகிக்க முடியாதபடி மறைத்து வைத்துக் கொண்டாய். தங்களின் பிரதிபலிப்பைக் காண முடியாத ஆழமான கிணற்றைப் போல பிறர் பார்வையிலிருந்து உன்னை மறைத்து வைத்திருக்கிறாய். காணாமற் போய்விட்டவளைப் போல உன் அமைதிக்குள் மறைந்து வாழ்கிறாய்.
“உனக்கு நன்றாகத் தெரியும், இந்தக் குற்றத்திற்கு நீதிமன்றத்தில் ஒரே ஒரு தீர்ப்புதான் உண்டு.”
யூ சியாவ் யூ எந்த மறுமொழியும் சொல்லாமல் கண்களை மட்டுமே சிமிட்டினாள். உங்கள் இருவருக்குமிடையில் எதோ ஒன்று தடையாக இருப்பதாக நீ உணர்ந்தாய். கண்ணாடிக்குள் தெரியும் பிம்பம் போல உன்னால் நுழைய முடியாத ஓரிடத்தில் அவள் இருக்கின்றாள். தூரமாக இருப்பதாகத் தெரிந்தாலும் உன்னால் பார்க்க முடியாத விழிகளால் உன்னை அருகிருந்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவளுக்கு மிக நிச்சயமாய்த் தெரிந்திருக்கக்கூடும். அவள், ஓடி ஒளியவில்லை. ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும், பதிவுகளின்படி, சாட்சிகள் கூச்சலிட்டுக் கொண்டிருந்தபோது யூ சியாவ் யூ சில அடிகள் பின் நகர்ந்து சில முறை ஆழ மூச்சிழுத்து விட்டிருக்கிறாள். தன்னுடைய கைப்பேசியை எடுத்து காவல்துறையினருக்கு அழைத்ததும், அவளின் முதல் அழைப்புக்கே காவல்துறையினர் பதிலளித்துள்ளனர். காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவளைக் கைது செய்யும் வரையில் தன்னிலை இழக்காமலும் அழாமலும் இருந்தாள். காவலர்களிடம் நடந்தவற்றை ஒளிவுமறைவின்றி சொல்லி ஒப்புக் கொண்டாள். சவரக்கத்தியிலிருந்து இன்னுமே ரத்தம் சொட்டிக் கொண்டிருந்தது. காற்றில் இன்னுமும் சாவின் ஈர மணம் வீசிக் கொண்டிருந்தது. அவன், தான் செத்துவிட்டதை இன்னும் நம்ப முடியாதவன் போல கண்கள் அகல விரிந்திருக்க ரத்த வெள்ளத்தில் கிடந்தான்.
இறந்த ஆசாமி, யூ சியாவ் யூவைவிட இரண்டு வயது இளையவன்; சிறுத்த உடல் கொண்டவனும் கூட. அந்தப் பரபரப்பான வார இறுதி மதிய வேளையில், அவன் கணினி விளையாட்டில் பாதி ஆட்டத்தைத் தாண்டியிருந்தான். அவனுடைய வேலை நேரம் முடிய இன்னும் இரண்டு மணி நேரமே எஞ்சியிருந்த வேளையில் எதிர்பாராத் திசையிலிருந்து வலியைக்கூட உணர முடியாத வகையில் சாவு அவனுக்குச் சம்பவித்ததுவிட்டது.
யூ சியாவ் யூவின் முகத்தைக்கூட அவன் தெளிவாகப் பார்த்திருக்க வாய்ப்பில்லை. உன்னைப் போலவே அவனுடைய நினைவிலும் மெலிந்து போய் பலவீனமான ஆனால், போராட்ட குணம் உள்ள பெண்ணாகவே அவள் இருந்திருக்கக்கூடும். அத்துடன் அவனுடைய மங்கலான நினைவில் அவளுடைய முகம் மறைந்துபோய், அவளின் மணிக்கட்டில் அசைந்த யானை தந்த வளையல்கள் பதிவாகியிருக்ககூடும். வெளிறிய எலும்பின் நிறம் கொண்ட யானை தந்த வளையல்கள் அப்போது தீப்பொறி போல அவனுக்குத் தோன்றியிருக்கும்.
அவள் சொன்னாள், “நான் தெளிவாக இருக்கிறேன், அவன் சாக வேண்டுமென மட்டும்தான் நினைத்தேன். பரிதாபமாகத் தவளையைப் போல நிர்கதியாக சாக வேண்டும்.” அதைத்தான் அவள் செய்து முடித்திருந்தாள். ஒரு சொல் கூட இன்றி, வலுவற்று எளிதில் ‘அவன்’ இறந்து போனான். இதுதான் யூ சியாவ் யூ. வெறும் இருபத்து மூன்று வயதே நிரம்பியவள். அவள் பேசிக் கொண்டிருந்தபோது, பெண் காவலதிகாரி ஒருத்தியின் பின்னாலிருந்த சிறு சன்னலிலிருந்து ஒளிக்கற்றை ஒன்று ஊடுருவியது. இப்பொழுதுதான் அவளுடைய இமை மயிர்களுக்குக் கீழே மறைந்திருக்கும் ஒளிமிக்கக் கண்களை நீ காண்கிறாய்.
நீரின் மேற்பரப்பைக் கடந்து விடாதே.
***
தொலைபேசியின் வழி, அவர்கள் இங்கு வந்து கொண்டிருப்பதாகப் பதிலளித்தனர். மிக நீண்ட பயணம். கதிரவன் மலையிலிருந்து இறங்கி நீண்ட நேரமாகிவிட்டிருந்தது. அந்த நகரத்தின் வெளி விளிம்பு கோடுகள் நிழல்களாலும் தூசுக்களாலும் மறைக்கப்பட்டுப் பலகைக் குவியல்களைப் போல் காட்சியளித்து. உலகம் பெரிய நிழலுருவம் போன்றது. அந்த முதியத் தம்பதிகள் உன் அலுவலகத்தை வந்தடைந்தபோது, தன் இடக்கை மோதிர விரலில் தந்தத்தால் செய்யப்பட்ட மோதிரமணிந்திருந்த அந்தப் பெண் முதலில் குளியலறைக்குச் சென்று தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள். அவள் அங்கிருந்து வெளியேறும்போது தலைமுடியை மிக நேர்த்தியாகச் சீவியிருந்தாள். வெளிறிப் போன மேகத்தைப் போல அவளுடைய முடி கருப்பும் சாம்பலும் கலந்த நிறத்தில் இருந்தது. அவளோடு வந்திருந்த கிழவன் தன் முகத்தைக் கழுவி முகத்தில் ஒட்டியிருந்த நீர்த்துளிகளை நன்கு மடிக்கப்பட்டிருந்த கைகுட்டையால் துடைத்துக் கொண்டார். சற்று நேரத்துக்குப் பின், அழுதவாறே பேசிய அந்த முதியப் பெண்ணும் தன் கைப்பையிலிருந்து எடுத்த வெளுத்துப் போயிருந்த வெளிர் பச்சை நிறக் கைகுட்டையால் கண்ணீரைத் துடைத்துக் கொண்டார்.
கண்ணீர் தொடர்ந்து வழிந்து கொண்டிருந்தது. அந்த இரு வயதானவர்களும் உள்ளார்ந்த புரிந்துணர்வு கொண்டவர்களைப் போல ஒழுங்கு தவறாமல் வெளியில் சத்தம் வராமல் சன்னமான குரலில் அழுது கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவரால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. மற்றொருவரே பதில்களைத் தொடர்ந்து கொண்டிருந்தார். சம்பவம் நடந்து இரண்டு மாதங்களாகத் தடுப்பு முகாமில் எந்த வழக்குரைஞரையும் சந்திக்க விரும்பாத யூ சியாவ் யூ திடீரென உன்னைப் பற்றி நினைவு கூர்ந்தாள் என்பதை அவர்கள் மூலம்தான் தெரிந்து கொண்டாய். உன்னைச் சந்திக்க அவள் விண்ணப்பித்தாள். புதிய அரசு தரப்பு வழக்குரைஞர் அவள் பெற்றோரை இன்று காலைத்தான் தொடர்பு கொண்டிருந்தார். மதியத்தில் தொடங்கி பல நூறு மைல்கள் அவர்கள் வாகனம் செலுத்தி வந்திருந்தனர்.
அவர்களிருவருமே ஒய்வு பெற்ற ஆசிரியர்கள்; சைவ உணவுக்காரர்கள், அதிர்ந்து பேசாதவர்கள் மற்றும் பொலிவான தோல் நிறத்தைக் கொண்டிருந்தார்கள். அவர்களின் நெற்றிச் சுருக்கங்கள்கூட சீராக வாரப்பட்டதைப் போல இருந்தன. காலையில் அவர்களிடம் தொலைப்பேசியில் பேசியபோது யூ சியாவ் யூ உன் நினைவில் எழவில்லை. அவர்களைச் சந்தித்தபோது அந்தப் பெண் அணிந்திருந்த மோதிரம் உனக்கு யூ சியாவ் யூவை ஞாபகப்படுதிவிட்டது. அந்தக் குடும்பத்தினரின் முகச்சாயல் ஒரே மாதிரியாக இருந்தமையால் உன்னால் அந்த இளம் பெண்ணை உடனடியாக நினைவில் மீட்டெடுக்க முடிந்தது.
கடந்த ஆறு மாதங்களுக்கு முன் அவள் பதவி விலகினாள். அவள் பயன்படுத்திய மேசையை நீ பார்த்தாய். அவள் நாற்காலியின் பின்பகுதியில் மாட்டப்பட்டிருந்த வான்நீல வண்ணச் சட்டை ஒரு நாள் காணாமற் போயிருந்தது. அவளின் இடத்தை, இன்னொரு துறையிலிருந்து வந்த அனுபவமிக்க பணியாள் நிரப்பியிருந்தாள். அதன் பின், பயிற்சிப்பணியாளர்கள் இருவர் நிரப்பினர். இத்தனைக்கும் ஆறு மாதங்களே கடந்திருந்தன.
தனது பணி விலகலுக்கான காரணத்தை யூ சியாவ் யூ குறிப்பிடவில்லை என அந்த வயதான ஆண் சொன்னார். அவள் அதனைத் தொலைபேசி அழைப்பில்தான் குறிப்பிட்டிருக்கிறாள். சில நாட்கள் கழித்து, இரண்டு துணிப்பைகளுடன் வீட்டுக்குத் திரும்பியிருக்கிறாள். சிறுவயதிலிருந்தே எந்தச் சிக்கலையும் ஏற்படுத்தாத அவளுடைய இயல்பை நன்கு அறிந்திருந்தமையால், அவளை அவர்கள் இருவரும் அதிகமாய்க் கேள்விகள் கேட்டிருக்கவில்லை. அவர்கள் இதனைச் சொல்லும்போது, அவர்களின் மகள் குறித்து உன்னிடம் எதையோ வினவுவது போலவும் நீ அவளைப் பற்றி சொல்வாய் என்ற எதிர்பார்ப்பில் அவர்கள் இருப்பது போலவும் நீ உணர்ந்தாய். இல்லையெனில், யூ சியாவ் யூ ஏன் மற்றவர்களைச் சந்திக்காமல் உன்னை மட்டுமே சந்திக்க எண்ணினாள்.
எல்லா உரையாடலும் முடிய பின்னிரவு ஆகியிருந்தது. அவர்கள் இருவருக்கும் அருகிலிருந்த நடுத்தர தங்கும் விடுதியில் அறையொன்றை முன்பதிவு செய்திருந்தாய். அவர்களுடன் தரைத்தளத்துக்குச் சென்றாய். அவர்கள் இருவரையும் இரவுணவுக்கு அழைத்துச் செல்வதற்கு யோசித்துக் கொண்டிருந்தபோது, தங்கும் விடுதியின் கதவை அடையும் முன்னரே அவர்கள் இருவரும் உடலைத் தாழ்த்திப் பல முறை வணங்கி உன்னை வழியனுப்பி வைத்தார்கள். தெருவிளக்கு வெளிச்சத்தில் விழும் பிம்பங்களின் இடைவெளி போல மனிதர்களுக்கிடையே நிலவும் பாதுகாப்பான தூரத்தை நீ உணர்ந்தாய். அவர்கள் இருவரும் மிகுந்த ஒழுங்கும் நன்னடத்தையும் உடையவர்களாகத் தெரிந்தனர்.
பதினேழாவது மாடியில் இருக்கும் உன்னுடைய வீட்டைச் சென்றடைந்தபோது, உன்னுடைய கணவர் தூங்கியிருந்தார். விழித்துக் கொண்ட நாய், நீ குளிக்கும்போது குளியலறையின் கதவினருகே படுத்திருந்தது. கண்களை மூடியவாறே சலசலக்கும் நீரின் ஒலி உன் கனவில் ஊடுருவ அனுமதித்திருந்தாய். கனவில் நீ குளிர்ந்த காற்றைக் கைகளால் தொடுகிறாய்/ தூக்கத்தை உறிஞ்சுகிறாய்/ நீ மிகவும் களைத்திருக்கிறாய். அந்தக் கனவில் நிறைய குமிழிகள் உடைந்தன. முடிவற்றதைப் போல நீண்டிருந்த வெண்ணிறக் கனவில் தென்பட்ட பாதைகளனைத்திலும் நடந்தாய்; நீ விழிப்பாக இல்லையென்றால் கனவுக்கும் நினைவுக்கும் இடையிலுள்ள பாதாளத்தில் சிக்கிக் கொண்டிருந்திருப்பாய். அவ்வளவு நேரமும் கரையில் நின்ற இடப்பக்க மூளை, அஞ்சாதே, இது ஒரு துர்கனவு என முணுமுணுக்கும் குரலில் கடிந்து கொண்டே இருந்தது. கனவிலிருந்து விழித்தெழுந்தபோது, குளியல் தொட்டியிலிருந்த நீர் குளிர்ச்சியாகியிருந்தது. உடல் மறத்துப் போயும் ஊறிப்போயிருந்த தோல் மென்மையாகித் தசையினின்று பிரிந்ததைப் போன்றிருந்தது. தனது நகங்களால் கதவைப் பிறாண்டிக் கொண்டிருந்த நாய் அண்டை வீட்டாரைத் தொந்தரவு செய்ய விரும்பாததைப் போல மெல்லிய குரலில் அழுகையொலியை எழுப்பிக் கொண்டிருந்தது.
குறைந்த நேரமே தூங்குவது மிகக் களைப்பூட்டச் செய்யக் கூடியது. அது, ஆற்றுக்கு அக்கரையில் இருக்கும் உலகத்துக்குப் படகில் செல்ல முயன்று பாதி வழியில் துடுப்புகளை இழந்து இரு கைகளையும் துடுப்புகளாகப் பயன்படுத்தி நடு வழியில் சிக்கிக் கொண்டு மீள்வதற்காக கடும் பிரயத்தனங்களை மேற்கொள்வதைப் போன்றது. “மீளவே முடியாது’’ என்ற பதைபதைப்பில் வீங்கிப் போயிருக்கும் தலையை மறத்துப் போன கழுத்தில் சுமந்தவளாய். கட்டிலின் பாதி இடத்தை நிறைத்திருந்த கணவனின் உடலுக்குப் பக்கத்தில் உன் உடலைக் கிடத்துவதற்குத் தவித்துக் கொண்டிருந்தாய். பிறகு, கட்டிலில் சாய்ந்தாய். உனக்கு இன்னும் குளிர் குறையவில்லை. உன் கணவனின் உடலை நெருங்கி அவன் தோள்களை முகர்ந்தபடி முகம் புதைத்துக் கொள்கிறாய். ஈரத்தில் நனைந்த எறும்பு சாரையொன்றைப் போல சில தொடர்கள் தவழ்ந்து சென்று உன் மூளைக்குள் நுழைகின்றன. ஊறி நனைந்து போன உலகில் நனைந்து போன பறவையொன்று இருந்தது. மிகை பெருமிதத்தால் அதனால் கூட்டுக்குள் திரும்ப முடியாது.
உன்னை நோக்கி உருண்டு தழுவிய உன் கணவனை நீயும் தழுவிக் கொண்டாய். தன் விதை நிலத்தில் கனவு முளைவிடுவது போன்ற ஒலியை உன் கணவன் எழுப்புகிறான். மழையா? வெளியில் மழை பெய்கிறதோ? சிரித்தவாறே தலையை அசைத்துச் சிறிய சாளரத்திலிருந்து வந்த கனவுக்குள் தவழ்ந்து செல்கிறாய். உன் உடலைப் பிடித்து இழுத்து காதருகே எதனையோ கிசுகிசுக்கிறான் கணவன். அந்தப் பிடியில் மோதிச் சிக்கலான வழக்கொன்று இருப்பதாக உனக்குள்ளே சொல்லிக் கொள்கிறாய். உன் புருவங்களையும் இதழோரத்தையும் முத்தமிட்டு, வழவழப்பான தோலில் பாம்பு ஊர்வதைப் போல உடல் முழுதும் தன் கைகளால் அளைந்து கொண்டிருந்தான் உன் கணவன். வாழ்க்கையின் சிறிய துவாரத்தின் வாயிலாக அவன் நுழையக்கூடும் என்பதை அறிந்து கனவுக்குள் சிரித்துக் கொண்டாய். திரைச்சீலை இன்னும் மூடப்படவில்லை என்றாய். மாநகரின் மிக உயர்ந்த சாலை விளக்காக நிலவு பூரணமாய் ஒளிர்ந்து கொண்டிருந்தது.
***
யூ சியாவ் யூவின் பணி விலகலுக்கான காரணம் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. இந்தச் சிறுமி மிக அமைதியாகத் தனக்கான வாழ்க்கை சோதனையைத் தானே எதிர்கொண்டிருந்தாள். அவள் நிதானமாக இன்னும் நிதானமாக உலகைக் காண்பதற்கான தன் இலக்கை வகுத்திருக்கிறாள். உலகை விரித்துக் கொள்ள முயன்றிருக்கிறாள். ஆனால், உலகம் மெல்ல மெல்ல அவள் நிலையைப் புறக்கணித்திருக்கிறது. பின்னர் அவள் காணாமற்போய் மிதந்து கொண்டிருக்கும் மர்மமாய் ஆகியிருப்பாள். உலகிலிருந்து விடுபடுவதற்கான வழி கிடைத்து விட்டதைப் போலவே, அந்தத் துருப்பிடித்த கதவை உதைத்துத் திறப்பதற்கான துணிவை ஒரு நாள் பெற்றிருப்பாள்.
கதவுக்கு வெளியே கண்ணாடி பொருத்தப்பட்டிருக்கிறது. கண்ணாடியில் மழை வழிந்து கொண்டிருக்கிறது. தடுப்பு முகாமுக்குச் செல்வதற்கு முன்னர் அனைத்து ஆவணங்களையும் வாசித்திருந்தாய். வார இறுதி நாளின் மதிய வேளையில் நடந்த அந்தச் சம்பவத்தைப் பற்றி விவரிக்க அவர்கள் சலிக்கவில்லை. எல்லா விவரங்களும் சாட்சியங்களும் ஒன்றுக்கொன்று எவ்வித முரணுமற்றுத் தெளிவாகவே இருந்தன. யூ சியாவ் யூ தன் மிதிவண்டியை மிதிப்பதையும் அவளது பணி உடையான கடல் நீல நிறச் சட்டை வெளியிலிருந்த இரும்பு அலமாரியில் மாட்டப்பட்டிருந்ததையும் கூட உன்னால் தெளிவாகக் காண முடிந்தது. இரும்பு அலமாரியின் இடப்பக்கம் முழுவதும் ஒளி ஊடுருவக்கூடிய காகிதப்பூக்கள் இருந்தன. கதிரொளி எல்லாவற்றையும் ஊடுருவி மிக மெல்லிய நிழலைப் பரப்பியிருந்தது.
யூ சியாவ் யூ டிசட்டையும் ஜீன்ஸும் கான்வாஸ் காலணியும் ஆரஞ்சு நிற உடற்பயிற்சி ஜாக்கெட்டையும் அணிந்திருந்தாள். அவள் அணிந்திருந்த ஜாக்கெட்டின் இருபக்கச் சட்டைப்பைகளில் பத்து ரிங்கிட் தாளும், சிறிய குறிப்புத் தாளொன்றும் கைப்பேசியும் இருந்தன. அந்தத் தாளில் அவளின் குடும்ப உறுப்பினர்களின் பிறந்தநாள் தேதிகள் மூன்று வெவ்வேறு ஜோடிகளாக ஆறு இலக்க எண்களாக எழுதப்பட்டிருந்தன. அவள் சூப்பர் ஜேக்பாட்டில் பணம் கட்ட எண்ணியிருந்தாள். யூ சியாவ் யூவின் தந்தை, ஒரு எண் குறைவதாகச் சொன்னார். அதனால், தன் மனதுக்குப் பிடித்தமான எண்ணைத் தெரிவு செய்து ஐந்து பந்தயத்துக்கு எண் வாங்கியிருந்தாள். ஆகவே, யூ சியாவ் யூ தன்னிடமிருந்த ஆறு இலக்க எண்களுக்குப் பின் சிவப்புப் பேனாவால் ‘+X’ எனக் குறித்திருந்தாள்.
நீ திடிரென யூ சியாவ் யூவின் கையெழுத்தைக் காண ஆவல் கொண்டாய். அவள் மார்க்கர் பேனாவால் எழுதிய பல சொற்கள் அடங்கிய கோப்புகள் அலுவலகத்தில் இருக்கின்றன. அவை எல்லாமே நேர்த்தியாகவும் அழகாகவும் எழுதப்பட்ட ஆங்கில எழுத்துகளாலும் அரபு எண்களாலும் ஆனவை. நிதானமான கொலைகாரியின் கையெழுத்து. அவள் கோபப்பட்டோ அல்லது சிவப்பு மையில் எழுதியோ நீ பார்த்ததில்லை; முள் புதைந்த கோபத்தின் சாயலைக்கூட அவளிடம் யாரும் கற்பனை செய்து பார்த்திருக்க முடியாது. யூ சியாவ் யூவால்கூட அதனை எண்ணிப் பார்த்திருக்க முடியாது. அவள் தன் மிதிவண்டியைத் தெற்காகச் செலுத்திக் கொண்டே நினைவுகளால் எதிர்த்திசையில் நடந்து கொண்டிருந்தாள். முதலில், நகரத்திலிருந்த சிறிய புத்தகக்கடைக்குச் சென்றாள்; பின்னர் கத்தியைச் சாணை பிடிக்கும் கடையைத் தேடி காய்கறிச் சந்தைக்குச் சென்றாள். அவள் தன்னுடைய பழைய சவரக்கத்தியை எடுத்துக் கொண்டு பிரதான சாலையில் இருந்த டோட்டோ லோட்டோ மையத்துக்குச் செல்ல எண்ணியிருந்தாள். ஆனால், வரைபடத்தின் பின்னாலிருந்து திறந்து கொண்ட கதவைக் கண்டடைகிறாள். அந்தக் கதவை உதை! அந்தக் கதவை உதை! மறுபக்கமிருந்த உலகை அடைந்திருந்தாள்.
இது அறிவுக்கு ஒவ்வாத, அவல நகைச்சுவை கொண்ட படமொன்றின் முழுமையான கதைச்சுருக்கத்தைப் போல இருக்கிறது. அன்று தன்னுடைய பிறந்தநாள் என யூ சியாவ் யூவின் தந்தை குறிப்பிட்டார். சிறப்பு நாட்களில் தங்கள் குடும்பத்தின் அதிர்ஷடத்தைச் சோதிக்கின்ற வகையில் லாட்டெரி டிக்கெட்களை வாங்குவது தன் வழக்கம் எனத் தன் மீது குற்றமிருப்பதைப் போன்ற தொனியில் அவர் சொன்னார். “ஆனால், என்னுடைய முந்தைய பிறந்தநாட்களில் என் சவரக்கத்தியை தீட்டச் சொன்னதில்லை” இவையெல்லாம் விதிப்பயனால் நடந்தது என்பதைச் சொல்லவே அவர் மனம் விரும்பியது. ஆனாலும் நடைபெறவே சாத்தியமற்ற அசாதரணமான ஒன்றின் தலையீடே காரணம் என உணர்ந்தபோது அவர் தவித்து நின்றார்.
அந்த ஒய்வு பெற்ற தலைமையாசிரியர் தன் தலையைத் தாழ்த்தி இரு கைகளையும் பிணைத்துக் கொண்டு தனது தவற்றை உணர்ந்து திருந்திய முதியவரைப் போன்று அமர்ந்திருந்தார். அடுத்தடுத்த ஆண்டுகளில் தனக்கு நேரப்போகும் குழப்பங்களை எதிர்கொள்ள தயாரானவரைப் போல அவர் இருந்தார்
உன்னை எப்படி என்னால் ஏந்த முடியும்/ சமனற்ற நிலத்திலிருந்து உன்னை எப்பொழுதுமே விடுவித்துக் கொள்ள தோற்றுப்போகிறாய்/ அந்தியைக் எப்பொழுதும் கடக்கின்றாய், இருளைக் எப்பொழுதும் கடக்கின்றாய்/ இனிய நாளில் எப்பொழுதும் வாழ்கிறாய்
ஆவணங்கள் தேவைக்கும் அதிகமாகவே கிடைத்திருந்தன. யூ சியாவ் யூ, ஆரஞ்சு நிறத்திலான விளையாட்டு ஜாக்கெட்டை அணிந்து மிகப் பொலிவுடன் தோற்றமளித்தாள். மிக மெதுவாக மிதிவண்டியைச் செலுத்துகிறாள். அவளிடம் எந்த அவசரமுமில்லை, அன்று அவளுக்கு மதிய நேரப் பணி. மாலை மணி ஐந்துக்கு முன்னர் குளித்து, வாய் கழுவி, பணியாடை அணிந்து பேரங்காடியில் இருக்கும் அந்த கே.எப்.சி துரித உணவுக்கடையைச் சென்றடைகிறாள். குறைந்த வெப்ப அளவு கொண்ட இஸ்திரிபெட்டி வழுக்கிச் செல்வதைப் போல நகரத்தில் காலமும் நிதானமாய் சிக்கலற்று வாழ்க்கைகுள் நகர்ந்து செல்கிறது. அவளையுமறியாமலே அங்கு வேலை செய்யத் தொடங்கி மூன்று மாதம் கடந்துவிட்டிருந்தது. சில நாட்களுக்கு முன்னர்தான், அந்தக் கடையின் உதவி மேலாளராகப் பணி உயர்வு பெற்று தனக்கு மிகப் பிடித்தமான கடல் நீல வண்ணத்திலான இரு ஜோடி உடைகளைப் பெற்றிருந்தாள்.
உன்னுடைய கற்பனையில் யூ சியாவ் யூவின் முகம் போதையில் ஆழ்ந்திருப்பதைப் போன்றிருந்தது. குட்டையாக வெட்டப்பட்டிருந்த மென்மையான தலைமுடி வீசிய காற்றுக்குக் கலைந்திருக்க பகலொளியில் படிகத்தைப் போல காட்சியளிக்கும் கல் பதித்த தோடுகளைக் காதுகளில் அணிந்திருந்தாள். அந்தக் கற்பனை காட்சியில் ஒலிகள்கூட உன் காதுகளுக்குக் கேட்பது போல இருந்தது. மிதிவண்டியின் சங்கிலி நீண்ட நாட்களாய் எண்ணெயிடப்படாததால், திரும்பும்போதெல்லாம் சாரைப்பாம்பைப் போல சீறிக் கொண்டிருந்தது. சாலையோர வியாபாரிகளின் கூச்சல் கேட்கிறது. சாலைகளில் நடந்து செல்பவர்களைக் கண்டு நாய்கள் குரைக்கின்றன. சிறுவர்கள் மகிழ்ச்சியுடன் விளையாடியவாறே ஒன்றாகச் சாலையைக் கடக்கின்றனர். மிதிவண்டியின் மணி ஒலிக்கின்றது. யூ சியாவ் யூ கைகளைத் துரிதமாக அசைத்து மிதிவண்டியை வளைத்துத் திருப்புகிறாள். பின்னர் பின்னால் திரும்பி புன்னகைக்கிறாள்.
அந்தப் படத்தின் நடுவில் நீர் ததும்பி கொண்டிருந்தது. அந்தப் படத்தில் தெரியும் பெண் அவ்வளவாக யூ சியாவ் யூவின் சாயலை ஒத்திருக்கவில்லை என்றாலும் அப்படம் தத்ரூபமாகவே இருப்பதாக நினைத்தாய். ஆனாலும், அது அவ்வளவு முக்கியமில்லை, ஒரு வழக்குரைஞராகிச் சிறப்பான எதிர்காலத்தை அமைத்துக் கொள்ளும் வாய்ப்புகளைத் தவறவிட்டு யூ சியாவ் யூ ஏன் பணி விலக வேண்டும் என்பதற்கான காரணத்தை யாராலும் சொல்லிவிட முடியாது. ஏரியில் விழுந்த இலை நுனி பனித்துளியைப் போன்றவள் யூ சியாவ் யூ. சில்லென்றிருந்த கோழித்துண்டுகளை மிக அமைதியாகவும் நேர்த்தியாகவும் தலை குனிந்து ஆய்ந்து கொண்டிருந்தாள். காகிதக் குவளையில் பொரித்த உருளைக்கிழங்கையும் சோடாத்தூளையும் அளந்து கொண்டிருந்தாள். ஒவ்வொரு நாளும் இயந்திர கல்லாப்பெட்டி இயங்கும் இரைச்சல் ஒலி கேட்டுக் கொண்டிருக்கும். எளிய சூத்திரங்களில் அன்றாட வரவு செலவுகள் வைக்கப்பட்டன.
“அவர்கள், நான் நோயுற்றிருப்பதாகப் பழி சுமத்தினார்கள்’’ யூ சியாவ் யூ தன் வாதத்தைத் தொடங்கியிருந்தாள். நோய், என்பதைச் சுரத்தில்லாமல் சொன்னாள். “நோய்’’ என்பது மீனவர்கள் மெல்ல நீருக்குள் விடும் மண் புழுவின் நெளிவை ஒத்திருந்தது.
நீ நீண்ட நேரம் மெளனமாக இருந்ததால், உனக்கு நன்கு பழக்கமானவள் போல யூ சியாவ் யூ உன்னிடம் பேசத் தொடங்கியிருந்தாள். அவள் ஒரு வாடிக்கையாளருக்குரிய முகமன்கள் ஏதும் சொல்லாமல் ஒரு பழைய தோழி போல, வெகு நாட்களாக நீங்கள் அவ்வாறுதான் பேசிக் கொண்டிருப்பது போல, சாதாரணமாக பேசத் தொடங்கியிருந்தாள். உடனே, அவளை மதிப்பீட்டுச் சோதனை எடுக்குமாறு அறிவுறுத்தினாய். யூ சியாவ் யூ உன்னைப் கூர்ந்து பார்த்தாள். கண்ணாடியைப் போல தெளிவாக இருந்த அவளது பழுப்பு நிற விழிகளின் தீண்டலிலிருந்து உன்னால் தப்பிக்க முடியவில்லை.
“மனநலச் சோதனையைக் குறிப்பிடுகிறீர்களா?’’ அவளுடைய விழிகள் கீழ் நோக்கின; மூக்கை நோக்கின; ஆழ்ந்து சிந்தித்தாள், பின் அவள் பார்வை மூக்கிலிருந்து அலட்சியமாக விலகியது.
என்ன செய்ய… இப்படித்தான் இருக்கிறார்கள் அவர்களைப் போன்ற மனிதர்கள்.
இப்படியாக நீங்களிருவரும் தத்தம் மெளனவெளிக்குள் மறைந்து கொண்டீர்கள். யூ சியாவ் யூ தான் சார்ந்திருந்த உலகத்தை மெல்ல மெல்ல புறக்கணித்தாள். அதன் பின் இக்கரைக்கும் அக்கரைக்கும் இடையில் அமைந்திருந்த கண்ணாடியைப் போன்ற கதவைச் சாத்தினாள். தன்னுடைய உடலைச் சற்றே அசைத்தாள். அங்குப் பாடல் இசைக்கிறதா? அல்லது கவிதை? உங்களுக்கிடையே நின்று கொண்டிருந்த பெண் காவலதிகாரி முதலில் மூக்குறிஞ்சினார். பின்னர், தூக்கம் தாளாமல் கொட்டாவி விட்டார். உடனே, நீ ஒரு வழக்குரைஞர் என்பதனை நினைவுபடுத்திக் கொண்டாய்.
அறையில் பரவியிருந்த வெளிச்சமனைத்தையும் உள்ளிழுத்து வெளியேற்றுவது போல உடலை நிமிர்த்தி நீண்ட மூச்சை இழுத்து விட்டாய். இம்மாதிரியான விவகாரங்களைக் கையாளும் திறமை உனக்கிருக்கவில்லை என்று கூறிக் கொண்டாய்.
“இம்மாதிரியான குற்றங்களில் தவறிழைத்தது உறுதியானால் ஒரே தண்டனைத்தான் வழங்கப்படும்’’
யூ சியாவ் யூ கண்களைச் சிமிட்டினாள். அந்தக் கண் சிமிட்டல்தான் ஒரு உயிரைப் பலி வாங்கியிருந்தது. மரணம் என்பது காயத்தை ஏற்படுத்தாத சிறு அறுவைச்சிகிச்சை. வழக்குரைஞர் நிறுவனத்தில் பணிபுரிந்த அனுபவத்தையும் அறிவையும் கொண்டிருந்த அவளிடம் நீ சொல்பவை மிக மேலோட்டமானவை. என்னத்தான் சட்டத்தின் விதி அதுவாக இருந்தாலும், அவளுக்கு அவை தேவையில்லை என உனக்குத் தெரியும். இல்லையென்றால், உன்னைச் சந்திப்பதற்காக இந்த நாள் வரை காத்திருந்திருக்க மாட்டாள்.
உன் முன்னால் இருந்த கோப்புகளில் ஆவணங்களை மீண்டும் கண்ணோட்டமிட்டாய். சம்பவ இடத்தின் படம். விசாரணைக் குறிப்புகள். இறந்தவரின் இறப்புச் சான்றிதழ். திரும்ப திரும்ப பார்த்ததில்… இறுதியாக, குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தில் முக்கியமற்ற விடயமொன்றைக் கண்டறிந்தாய். யூ சியாவ் யூ வீட்டிலிருந்து வெளியேறி முதலில் புத்தகக்கடைக்குச் சென்றதாகக் குறிப்பிட்டிருக்கிறாள். இது அந்தக் கொலைச் சம்பவம் நிகழ்வதற்கு முன்னதாக நிகழ்ந்தது. பட்டப்பகல் வேளையில் நகரின் அழுக்கு நிறைந்த சிறிய சாலைகளில் யூ சியாவ் யூ மிதிவண்டியை மெதுவாகச் செலுத்திக் கொண்டிருந்தாள்.
அவளுடைய கெண்டைக்கால்கள் வாளிப்பாக இருந்தன. ஆரஞ்சு ஜாக்கெட்டின் பின்பகுதியில் வெள்ளை எண்கள் பளிச்சென்று மினுமினுத்தன. ஒரு இஸ்திரிபெட்டி வழவழப்பான துணியில் மெல்ல பதிவதைப் போலத்தான் இன்றும் உன் கண்கள் அவளைப் பின் தொடர்ந்தன. சுட்டெரிக்கும் வெய்யில் உச்சியிலிருந்தது. சாலையின் மேற்பரப்பு மிக வெப்பமாக இருந்தது. நகர் தன் சொந்த நிழலைத் தழுவிக் கொண்டிருந்தது. சாலையினோரத்தில் புத்தகக்கடை இருந்தது. நீ இன்னுமே தூரமாகப் பின் தொடர்ந்து கொண்டிருந்தாய்.
“என்ன மாதிரியான புத்தக்கடை இது?’’ ஏனென்றால், குற்றச் சம்பவத்துடன் சற்றும் தொடர்பின்றி குற்றம் நிகழ்ந்த இடத்திலிருந்து மிகத் தொலைவாகவும் இருக்கிறது. ஒன்றுக்கொன்று தொடர்புடைய விசாரணை ஆவணங்களில் புத்தகக்கடை ஒன்று மட்டுமே
“அந்நியமானதாக’’ இருந்தது. அது பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டிய அவசியமே இல்லை. ஆனால், யூ சியாவ் யூ காவலதிகாரிகளிடம் அதனைக் குறிப்பிட்டிருக்கிறாள்.
நீ இதனைக் கேட்பாய் என எதிர்பார்க்காததால், யூ சியாவ் யூ புன்னகைத்தாள். அது பூத்தவுடனே வாடிவிடும் பிரம்மக்கமல மலரை ஒத்திருந்தது. அந்தப் புன்னகையால் குற்றமிழைக்காதவளாகவும் தூயவளாகவும் அப்பெண் தெரிந்தாள். அவள் கொடூரமாகச் செயற்படுவாள் என யாரால்தான் ஊகித்திருக்க முடியும். சிவப்பு நிறமிட்ட ‘X’ குறியீடு தவறாகப் பொருள் கொள்ளப்பட்டதால் அவள் அவ்வளவு கொடூரமாகச் செயற்படத் தூண்டப்பட்டிருக்கிறாள்.

ஒரு வேளை யூ சியாவ் யூவே தன்னை அந்நிலையில் கண்டிருக்க முடியாது. குறுகலான அந்தப் பழைய புத்தக்கடையில் பெரும்பாலும் காமிக் புத்தகங்கள், இதழ்கள், சிறுவர் நூல்கள் மற்றும் பரபரப்பாக விற்கப்படுகின்ற நூல்களின் திருட்டுப்பதிப்புகள், சில எழுது பொருட்கள் மற்றும் ஒலி-ஒளி கேசட்களும் விற்கப்படுகின்றன. மூலையில், சிறிய புத்தக அலமாரியில் இருந்த பழைய புத்தகங்களின் மீதே யூ சியாவ் யூவுக்கு அதிகமும் ஆர்வமிருந்தது. அவள் சில சமயங்களில் மிக மதிப்பு வாய்ந்தவற்றைக்கூட அந்த அலமாரியில் கண்டெடுத்திருக்கிறாள். உதாரணத்துக்கு, புகழ் பெற்ற எழுத்தாளர்களின் கவிதை நூல்களையோ அல்லது சவ அடக்கத்தின்போது வைக்கப்படும் பின்னல் வேலைபாடுகளுடன் கூடிய புத்தகங்களையோகூட கண்டெடுத்திருக்கிறாள்.
சம்பவம் நடந்த அன்று யூ சியாவ் யூ ஒரு பழைய படத்தின் அசல் பதிப்பைத் தேடிக் கண்டிருந்தாள். அந்த ஜப்பானியப் படத்தின் தலைப்பைக் குறிப்பிடவில்லையென்றாலும் படத்தை முன்பு பார்த்திருந்ததாகச் சொன்னாள். “எனக்கு அந்தப் படம் மிகப் பிடித்திருந்ததால், என்னுடைய சேமிப்பில் அப்படம் இருக்க வேண்டுமென நினைத்தேன்.’’ அந்தப் படத்தை வாங்குவதற்கான போதிய பணத்தை எடுத்து வராததால், கடை உரிமையாளரிடம் இன்னும் சில நாட்களில் குறுவட்டை வாங்கி கொள்வதாய்ச் சொல்லி அதனை வைத்திருக்குமாறு கேட்டுக் கொண்டிருக்கிறாள். யூ சியாவ் யூவும் மற்ற இளம் பெண்களைப் போல தன்னுடைய கைகளை ஜாக்கெட் பைக்குள் வைத்துக் கொள்வதில் விருப்பம் கொண்டிருந்தாள். அது மிடுக்கான பாணி. அந்தப் புத்தகக்கடை உரிமையாளர் அவளுடன் மிக அணுக்கமாக இருந்தார். மற்ற இளம் பெண்களிடம் இல்லாத தூய நன்னடத்தை அவளிடம் இருந்தது. அத்துடன் அவளிடம் தந்தத்தால் ஆன கைவளையல் ஒன்றும் இருந்தது.
“சிறிய பட்டணம்’’ யூ சியாவ் யூ சொன்னாள், “புத்தகக்கடையும் அதற்கேற்றாற் போல்தான் இருந்தது’’
உன்னால் அதனைக் கற்பனை செய்து பார்க்க முடிந்தது. அந்தப் பாழடைந்த கடையின் வசதிகள், புத்தகங்கள் அனைத்தையும். ஒவ்வொரு புத்தகமும் மழை மணம் கொண்டிருந்தது. இருந்தாலும், அது முக்கியமில்லை. உனக்கு எல்லாம் புரிந்தது. அந்தப் புத்தகக்கடை சம்பவ இடத்திலிருந்து மிகத் தொலைவில் இருந்தது.
தாமரையைப் போன்றது கொலை/ ஒருமுறை கொலை நிகழ்கிறது/ அதன் தடையம் கைகளில் எஞ்சுகிறது/ கைகளைப் புதிதாக மாற்றிக்கொள்ள முடியாது
நீ தூக்கத்திலிருந்து எழுந்தபோது உன் கணவன் போய்விட்டிருந்தான். அவன் உன்னை முத்தமிட்டிருந்ததை நினைத்துக் கொண்டாய். நாய் அங்குத்தான் இருந்தது. தன் கைவிரல்களைச் சுத்தப்படுத்திக் கொண்டிருக்கும் கொலைகாரனைப் போலவோ, உன் கணவனை விழுங்கிவிட்டது போலவோ கட்டிலின் கால்பகுதியில் அது நின்று கொண்டிருந்தது. கைகளைப் புதிதாக மாற்றிக் கொள்ள முடியாது. யாரொருவராலும் தன்னுடைய விதியை மாற்றிக் கொள்ள முடியாது என்பதை நீ அறிந்திருந்தாய்.
தீரைச்சிலையை மூடுவதேயில்லை. இந்தப் பெரு நகர் பெரிய நிழலை உனக்குத் தருகிறது. சூரியனின் கதிரொளி தீண்டாமலிருக்க உன் கைகளால் கண்களைப் பொத்திக் கொள்கிறாய். உன் கைகளிலிருந்து எழுந்த நிழலைக் கண்டு இருளுக்குள் சிரித்துக் கொள்கிறாய்.
நான் கரங்களை இழந்தேன், ஆக கண் ஒன்று திறந்து கொண்டது என அக்கவிஞன் சொல்லியிருந்ததை நினைத்துக் கொண்டாய்.
ஆனால், யூ சியாவ் யூ அந்தக் கவிதையை வாசித்திருக்கவில்லை. நேற்று நீ அங்கிருந்து வெளியேறியப் பின் அவள் ரகசியமாகச் சில கவிதைகளை வாசித்தாள். அவளுடைய குரல் விட்டு விட்டுக் கேட்டுக் கொண்டிருந்தது. நீ மூச்சையடக்கி அதனைக் கேட்டுக் கொண்டிருந்தாய். உன் பின்பகுதியிலிருந்த ரோமக்கால்களெல்லாம் குத்திட்டு நின்றன. வெளியில் சூரிய வெப்பம், அஸ்பால்ட் கற்களிலான தார் சாலை புகைந்து கொண்டிருந்தது. ஒரு துண்டு சிகெரெட்டின் தீ கங்கு மக்கி கிடக்கும் பூனையின் உடலை எரிக்கப் போதுமானதாக இருந்தது. அந்த வெப்பமான நாளில், உலகமே மண்ணுக்கடியில் அமைந்த பனிக்கட்டி வீடாக மாறிவிட்டதாக உணர்ந்தாய். உன் இதயமோ உறைந்து, என்றென்றும் கரையாத குளிர்ச்சியான தூணைப் போலாயிற்று.
தடுப்பு முகாமிலிருந்து வெளியேறினாய். ஜூலை மாதத்து கதிரொளி உன் பெயரைப் பின்னிருந்து அழைத்தது; அதன் ராட்சத கைச்சுவட்டை உன் முதுகில் பதித்துச் சென்றது. நீ அதைப் பொருட்படுத்தவில்லை. கதிரவன் பின்னிருந்து பற்றி தன் அணைப்பில் உன்னைச் சேர்த்துக் கொண்டான். இருந்தும் பயனில்லை. உன் இடக்காதருகே ‘இது வெறும் கனவுத்தான்’ என உஷ்ணமாக முணுமுணுத்தான். உனக்கு விழிப்பு வராததால் அது பொய்யுரை என்பதை அறிந்திருந்தாய். அலுவலகம் திரும்புகின்ற வரையில் பெரு நகரைச் சூழ்ந்திருந்த சாய்வான நிழலில் பதட்டத்துடன் இருந்தாய்.
அந்தக் கவிதை எங்கிருக்கிறதென உனக்குத் தெரியும். அதுதான் முதல் இசைப்பா. கவிதையின் ஒரு பகுதியை யூ சியாவ் யூ பாடி காட்டினாள். யூ சியாவ் யூ வாசித்ததும், அந்த வரிகள் ஏன் வித்தியாசமாய்த் தெரிந்தன என உனக்குப் புரியவில்லை. நீ அந்த வரிகளை வாசித்ததில்லை என உணர்ந்தாய். உன்னிடமிருந்த கவிதையை யூ சியாவ் யூ அபகரித்துக் கொண்டதைப் போல கவிதைக்கும் உனக்குமான இடைவெளியைத் தூரப்படுத்தினாள்.
அலுவலகத்தை விட்டு வெளியேறுவதற்கு முன்னர், உன் அலுவலகத்தில் குற்றவியல் பிரிவில் பணியாற்றுபவர்களிடம் இந்த வழக்கு குறித்து விவாதித்தாய். அவர்கள் அனைவருக்குமே நம்பிக்கையிருக்கவில்லை. ஆகவே, அந்த உரையாடலைத் தொடர்கின்ற முனைப்பும் இல்லை. கூடுதலாக எதனையும் முடிவு செய்யவும் முடியவில்லை. கதிரவனும் மறைந்துவிட்டான். பெரு நகரத்தின் பின் நீண்ட தொளதொளப்பான கறுப்பு அங்கி எழுந்தது.
நீ காரை எடுத்து வீட்டுக்குத் திரும்பினாய்; வீட்டுக்குக் கீழே அருகிலிருந்த சிறிய பூங்காவுக்கு நாயுடன் உலவச் சென்றாய். மீண்டும் வீட்டுக்குத் திரும்பி குளித்து, இரவுணவு உண்டு சற்று நேரம் தொலைகாட்சி பார்த்தாய். உன்னுடைய கணவன் இன்னும் திரும்பியிருக்கவில்லை.
வெளியில் பெய்து கொண்டிருக்கும் மழைத்தூறலைக் கவனிக்காமல் சோபாவில் படுத்தவாறே புத்தகம் வாசித்துக் கொண்டிருந்தாய். கனவில் சஞ்சரிப்பதற்கான வாசலைத் தேடியபோது அதனுள்ளிருந்து மழைத்தூறல் ஒலி கேட்டது. புத்தகத்தை மூடிவைத்துவிட்டுச் சன்னலுக்கு வெளியே நிலவைப் பார்த்தாய். 17வது மாடியிலிருந்து பார்த்தபோது, நிலவு நனைந்து போன மெல்லிய அரிசித்தாள் போல தெரிந்தது.
யூ சியாவ் யூவைக் கனவில் காண்பாய் என எண்ணினாய். ஆனால், அவள் கனவில் தோன்றவில்லை. வெளியில் இருந்த நாற்காலி காலியாகவே இருந்தது, அதன் பின்பகுதி வான்நீல வண்ண குளிராடையால் போர்த்தப்பட்டிருந்தது. யாரோ உன்னுடைய அலமாரியில் புத்தகங்களை மாற்றி அடுக்கி வைத்திருக்கிறார்கள். அதிலும் கு செங்கின் புத்தக தொகுப்புகள் உன்னால் எட்டித் தொட முடியாத உயரமான இடத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. கனவில் அந்தப் புத்தகத்தை எடுத்து விட கடும் முயற்சிகளைக் செய்தாய். நாற்காலி வைத்து ஏறினாய், மூங்கில் அலக்கால் தொட முயற்சி செய்தாய். குதிகால் உயர்ந்த உன் காலணியைக் கழற்றிவிட்டுப் புத்தக அலமாரியின் மீது தாவி ஏறிவிட முயன்றாய். ஆனாலும், உன் விரல்களால் எட்டிப்பிடித்து விட முடியாத உயரத்திலே அந்தப் புத்தகம் இருந்தது. இம்மாதிரியான கனவுகள் மனிதர்களைப் பதைபதைப்புக்கு ஆளாக்கிவிடும். எல்லாரின் கதவுகளையும் தட்டி அவர்களை வந்து உதவுமாறு ஒடி அழைக்கிறாய். அவர்கள் உதவும் ஆவலுடன் இருந்தாலும் ஏனோ உன்னுடைய மன்றாடலைப் பொருட்படுத்த மறுக்கின்றனர். இறுதியில், மிகுந்த கோபத்துடன் உனது அலுவலகத்துக்கே திரும்பிவிடுகிறாய். வேரொன்றும் செய்ய முடியாமல் சட்டென விழித்துக் கொள்கிறாய்.
நாம் உலகத்தால் கடன்பெறப்பட்டிருக்கிறோம், அவை திரும்ப செலுத்தப்படுவதில்லை.
உன் கணவன் வீட்டுக்கு வந்து சீக்கிரமாகவே புறப்பட்டிருக்கிறான். கணவன் விட்டுச் சென்ற கோலத்தில் போர்வைக்குள் சுருண்டபடி கட்டிலருகே தன் கால்களை நக்கியபடி அமர்ந்திருக்கும் நாயை பார்த்துக் கொண்டிருந்தாய்.
உன் கனவு, யூ சியாவ் யூவின் கோபத்தைப் புரிந்துகொள்ள வைப்பதாக நினைத்துக் கொண்டாய். ‘X’ குறியீடு சரியாகப் புரிந்து கொள்ளப்படுவதும் கவிதைத் தொகுதி நூல் முறையாகப் புத்தகப் பேழையிலிருந்து சுற்றுக்குப் போவதும் ஏற்பானதுதான். எந்த ஒழுங்குமே அற்ற கனவிலிருந்து மீண்டு கண்களை விழித்தபோது, அந்தப் பெண் கனவிலிருந்து வீசப்பட்டு அதிலிருந்து வெளியேறும் வழியறியாதவளாக இருந்தாள்
லாட்டெரி டிக்கெட் விற்கும் இளைஞன் யூ சியாவ் யூவைக் காட்டிலும் இளையவன். நாம் உலகத்தை வாசிக்கவில்லை, உலகம்தான் நம்மை வாசித்துக் கொண்டிருக்கிறது என்பது புரியாதவன். ஆனால், எல்லாருக்குமே முன் அறிவுறுத்த கனவுகள் அமைவதில்லை. அதிலும், காலையிலிருந்தே, அவன் பெரு முயற்சியுடன் கணினி விளையாட்டைச் சிறப்பாக ஆடிக் கொண்டிருக்கிறான். ஆனால், சிவப்பு மார்க்கர் பேனாவால் எழுதப்பட்ட ‘+ X’ குறியீட்டை வலது ஆட்காட்டி விரலால் சுட்டிக் காட்டி அவனிடம் விளக்கியதை யூ சியாவ் யூ இன்னும் நினைவில் வைத்திருந்தாள்.
“இந்த இறுதி எண்ணை இயந்திரமே தெரிவு செய்யட்டும், மொத்தம் ஐந்து பந்தயத்துக்கானவை’’ எனப் பத்து ரிங்கிட்டை யூ சியாவ் யூ நீட்டினாள்.
லாட்டெரி டிக்கெட் வெளியாக்கப்பட்டது. அந்த இளைஞன் டிக்கெட்டையும் ஐந்து ரிங்கிட் உடன் யூ சியாவ் யூவின் குறிப்புத்தாளையும் சேர்த்துத் தந்தான். அதில் ஒரு பந்தய எண் மட்டும் ஐந்து முறைக்கு எழுதப்பட்டிருந்தது. தன் நெற்றிப் புருவத்தைச் சுருக்கி, அந்த டிக்கெட் தவறாக இருப்பதாகச் சொல்லித் திருத்தித் தருமாறு அந்த இளைஞனை யூ சியாவ் யூ கேட்டுக் கொண்டாள். தன் தலையைத் தூக்காமல், யூ சியாவ் யூதான் சரியாகக் குறிப்பிடவில்லை எனக் குற்றஞ்சாட்டினான். டிக்கெட் வெளியாக்கப்பட்டதும் அதனைத் திரும்பப் பெற முடியாதென்றும் சொன்னான்.
அந்த இளைஞனின் செய்கையைப் பொறுத்துப் போக யூ சியாவ் யூவால் முடியவில்லை. பலவீனமான தொனியில் எதிர்வினையாற்றினாலும், ஒரு அடி கூட நகராமல் இருந்தாள். அவளை நேராய் நோக்கியதும் அவனுக்கு உற்சாகமெழுந்திருக்க வேண்டும். ஆனால், அவன் கண்களும் விரல்களும் இன்னுமே திரையின் போர்களத்தை விட்டு அகன்றிருக்கவில்லை. ஆனால், அவனுடைய குரல் உரத்துக் கொண்டிருந்தது.
தாளில் இருந்த ‘X’ குறியீடு மடங்கைக் காட்டும் பெருக்கல் குறித்தான் என உறுதியுடன் சொன்னான். யூ சியாவ் யூ, சட்டெனக் கோபமடைந்தவளாய், கண்ணாடிச் சன்னலைப் பிடித்தவாறே ஆவேசமாக ‘X’ என்பது இன்னும் அறியப்படாத நிகரி என்றும் அதனைக் கணினி தானே தேர்தெடுக்கும் என்றும் விளக்கினாள். திரையில் இருந்த எதிரிகளை வீழ்த்துவதில் பரபரப்பாக இருந்த அவ்விளைஞன் கண்களைத் திருப்பாமல் தன் தலையை வேகமாக ஆட்டினான். யூ சியாவ் யூவின் உள்ளங்கைகள் நடுங்கின. அவளுடைய குரலும் நடுங்கத் தொடங்கியது. அந்தத் தாளின் மேற்புறத்தில் இருக்கும் சிவப்பு நிறக் குறியீட்டைக் காட்டி X + y = z என்ற கணிதக் கோட்பாட்டை விளக்கினாள். அவளுடைய குரல் முற்றிலும் மாறியிருந்தது. தன்னுடைய குரல் வேறொருவரின் குரலைப் போன்று கூர்மையுடன் இருப்பது அவளுக்கே விந்தையாக இருந்தது. தன் ஆட்டத்தில் ஏற்படுகின்ற தடைகளைப் பனிக்கட்டியாலும் நெருப்பாலும் தாக்கிக் கொண்டிருந்த மகிழ்ச்சியில் இளைஞன் பாதி சிரித்த முகத்துடனே மிக ஆணவமாக அமர்ந்திருந்தான்.
இவர்களின் பின்னால் லாட்டெரி டிக்கெட் வாங்க காத்திருந்தவர்கள் சூழ்ந்து கொண்டனர். அவர்களின் குரலைக் கேட்டுச் சிலர் முன் வந்தனர். யூ சியாவ் யூ நிகழ்தகவு மற்றும் ‘X’ குறியீடு தொடர்பான கணித விதிகளை விளக்கிக் கொண்டிருப்பதைக் கண்டு சிரித்தனர். அவளின் விளக்கத்தை அவ்விளைஞன் பொருட்படுத்தாதலால் யூ சியாவ் யூ, சுற்றியிருந்தவர்களிடம் நடந்த சம்பவத்தையும் ‘X’ கோட்பாட்டையும் விளக்கினாள். ஆனால், அவள் முனைப்புடன் அளித்த விளக்கம் வேடிக்கையாக இருப்பதாக சுற்றிலுமிருந்தவர்கள் நினைத்தனர். சிறப்பான வார இறுதி நாள். ஐந்து ரிங்கிட்டுக்கான லாட்டெரி. அவர்களில் சிலர் சிரிக்கத் தொடங்கினர். சிலர் சிரிப்பைக் கட்டுப்படுத்திக் கொண்டு யூ சியாவ் யூவை விளக்கத்தை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டிருந்தனர்.
உண்மையில், புரிதல் இல்லாதவர்களின் அற்பக் கருணையே, பகடியை விட அதிகமாக மனத்தைப் புண்படுத்துகிறது.
யூ சியாவ் யூவால் வெளியேற இயலவில்லை. அது கனவைப் போலவே இருந்தது. வெறுமையாய்த் தெரியும் சுவர் சூழ்ந்த அறைக்குள் வீசப்பட்டாள். தன்னைச் சுற்றிலுமிருக்கும் வெளியைத் தன்னினைவற்றவளாய்ச் சந்தேகத்துடன் நோக்கினாள். அதே நகரம்தானா? கே.எப்.சிக்குத் தன் பிள்ளையை அழைத்து வந்து குடும்பங்களுக்கான உணவு செட்டை வாங்கித் தரும் வயதான ஆண், தன் தந்தையின் சவரக்கத்தியை எடுக்கச் சென்றிருந்தபோது சற்றுமுன் கண்ட பெண், தன் வீட்டிலிருந்து சற்றுத் தொலைவில் வசித்தாலும் நட்பு பாராட்டும் வயதானவர் என இவர்களில் சிலரின் முகத்தை அவள் பார்த்த ஞாபகமுண்டு. இந்த விஷயத்தை விளக்குவது ஏன் இவ்வளவு கடினமாக இருக்கிறது என அவளுக்குப் புரியவில்லை. வகுப்பறையில் ஆசிரியர் கற்றுக் கொடுப்பது புரியாமல், புரிந்து கொள்ளவும் முயலாமல் எந்நேரமும் சிரித்துக் கொண்டே இருக்கும் தொடக்கப்பள்ளிச் சிறுவர்களைப் போல இருக்கிறார்கள். அது கு செங்கின் புத்தகங்களைப் எடுக்க நீ மேற்கொண்ட பெருமுயற்சியை ஒத்திருந்தது. யூ சியாவ் யூ திடிரென மெளனமானாள். எச்சிலை விழுங்கிவிட்டுக் கைப்பேசியை வெளியெடுத்துக் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தாள்.
காவல்துறை விரைந்து சென்றது. அவர்கள் மிகத் தெளிவாக விசாரித்தனர். இருவரின் பெயரையும் கைப்பேசி எண்களையும் மட்டும் எழுதிக் கொண்டு சென்றனர். கூடியிருந்தவர்கள் கைகளைக் கட்டிக் கொண்டு தலையை இடம்வலமாக ஆட்டிக் கொண்டிருந்தனர். பாதி முகத்தில் நகைப்பும் மறுபாதியில் முணுமுணுப்புமாய் இருந்தனர். உலகம் மெதுவாகச் சுழன்று கொண்டிருந்தது. சூரியன் மிக ரகசியமாக நகரில் இருக்கும் ஒவ்வொரு கட்டடத்தையும் நேராக்கிக் கொண்டிருந்தது. யூ சியாவ் யூ ஆழ்ந்த குழப்பத்தில் விழுந்து சுழன்று கொண்டிருந்தாள். யூ சியாவ் யூ தான் நின்று கொண்டிருந்த முகப்பிலிருந்து விலகாமலிருந்ததால், மற்றவர்கள் அருகிலிருந்த முகப்புகளுக்குப் பெயர்ந்து பந்தயம் கட்டத் தயாராகினர். சியாவ் யூவின் அருகில் யாரும் நிற்கவில்லை. அவளுக்கு லாட்டெரி டிக்கெட் விற்ற இளைஞன் கூட பக்கத்து இருக்கைக்கு நகர்ந்தான்.
யூ சியாவ் யூ தனிமையை உணரத் தொடங்கினாள். உலகம் தொடர்ந்து சுழல்கிறது. அவளின் இடத்தை மற்றவர்கள் மாற்றிவிட்டார்கள். உலகம் அவள் மொழியைப் புரிந்து கொள்ளவில்லை.
யூ சியாவ் யூ மெல்ல சுதாகரித்துக் கொள்வதைச் சுற்றிலுமிருந்தவர்கள் உணர்ந்தனர். குறைந்தபட்சம், அவளது குரல் தொனியாவது சற்று தணிந்திருந்தது. அவள் பயனீட்டாளர் சங்கத்துக்கு அழைத்துப் பேசினாள். முறைமையான மொழியில் நிதானத்துடனும் பணிவுடனும் அவள் பேசியது மற்றவர்கள் காதிலும் விழுந்தது. ஆனால் அதே பணிவான நிதானமான மொழியில் அவள் புகாரை எதிரில் பேசியவர்கள் நிராகரித்தனர்.
ஆகவே, அந்த இளம் பெண்ணும் நிதானமாக லாட்டெரி நிறுவனத் தலைமை அலுவலகத்துக்கு அழைத்து முறையீட்டுப் பிரிவின் தொடர்பெண்ணைப் பெற்று அவர்களுக்கு அழைத்தாள். நீண்ட நேரமாய்க் காத்திருந்து பதிவு செய்யப்பட்ட அறிவிப்புக் குரலுக்கு நிதானமாய் எதிர்வினை செய்து கொண்டிருந்தாள். எண் ஒன்றை அழுத்தவும். எண் நான்கை அழுத்தவும். சமக்குறியை அழுத்தவும். இம்முறை யூ சியாவ் யூவின் பதிலைப் பொருட்படுத்தாமல் வட்டார லாட்டெரி மையத்திடம் முறையிடுமாறு அறிவுறுத்தி இரண்டு தொடர்பு எண்களைத் தந்தார்கள்.
யூ சியாவ் யூ, அந்த இரண்டு எண்களுக்கும் இரு முறை அழைத்துப் பேச முயன்றாள். அழைப்பை யாருமே எடுக்கவில்லை. பதிவு செய்யப்பட்ட பாடல் முடிவற்று ஒலித்துக் கொண்டிருக்க வெறுமையாக இருந்தது. பாடலொலியால் காதுகள் சூடேறிக் கொண்டிருக்க முகமும் சோர்வடைய செய்வதறியாமல் நிலைக்குத்திப் போயிருந்தவள் மெதுவாக அழைப்பைத் துண்டித்தாள்.
புதிதாய்ப் பார்ப்பதற்கு இனியொன்றுமில்லை. சுற்றிலுமிருந்தவர்கள் தோளை உயர்த்திப் பெரு மூச்செறிந்து தலையை ஆட்டியவாறே சிரிப்புடன் புறப்பட்டனர். தன் சுழற்சியை நிறுத்திக் கீழே விழப் போகின்ற பம்பரத்தைப் போல உலகம் தன் இயக்கத்தை மெல்ல நிறுத்திக் கொள்ளத் தொடங்கியது.
ஆனால், நாம் உலகத்தால் இரவல் வாங்கப்பட்டிருக்கிறோம். திரும்ப மீளப்போவதில்லை.
லாட்டெரி டிக்கெட் விற்ற இளைஞன் தன்னுடைய கணினி விளையாட்டைக்கூட பொருட்படுத்தாத மகிழ்ச்சியில் இருந்தான். ரத்தமின்றி நிகழ்ந்த அந்தச் சண்டையில் தான் மிகச் சிறப்பாக வென்றதை இப்பொழுது உணர்ந்திருந்தான். இன்று வார இறுதி நாள். சிறப்பான வார இறுதி நாள்.
யூ சியாவ் யூவின் குழப்பத்தையோ அல்லது அலைகழிப்பையோ அல்லது ஜாக்கெட் பையில் கைப்பேசியை வைக்கும்போது அவனைக் கொல்வதற்காக அவள் கைவிரல்கள் தொட்ட பொருளையோ அவனால் உணர முடிந்திருக்காது.
பனிக்கட்டியின் ஒரு தாக்குதல், நெருப்பின் ஒரு தீண்டல்.
நேராகப் பார்த்து ஆணவத்துடன் யூ சியாவ் யூவின் காதோரத்தில், “பரவாயில்லை, இதை எல்லாரிடமும் சென்று சொல், நீதிமன்றத்துக்கும் எடுத்துச் செல், உன்னை யாராவது பொருட்படுத்துகிறார்களா எனப் பார்கலாம்!’’ என முணுமுணுத்தான்.
அது வார இறுதி நாளின் மாலை பொழுது. கதிரொளி நகர் முழுதும் பரவி கொடிகளை அசைத்துக் கொண்டிருந்தது. யூ சியாவ் யூ தன் கைவிரல்கள் பத்தும் சிறிய பனி உருளைகள் போல சில்லிட்டிருந்ததாக உணர்ந்தாள்; அவளுடைய உள்ளங்கைகள் இளக முடியாத பனிக்கட்டி போல குளிர்ந்து இருந்தன. அவள் பட்டெனத் திரும்பி எதிர்பாராத் தருணத்தில் குளிர்ந்து இறுகிப் போன தன் கைவளையலை லாட்டெரி விற்றுக் கொண்டிருந்த இளைஞனிடம் காட்டினாள்.
உலகத்தின் சுழற்சியை நிறுத்த அதன் ‘ராக் அன்டு ரால்’ஐ நிறுத்த வேண்டும். சுழன்று கொண்டிருந்த பம்பரம் கடைசியில் வீழ்ந்தது. மிக புத்துணர்வுடனும் நிதானத்துடனும் மிகச் சரியாகவும் நடந்து முடிந்தது.
இறுதியாக/ மரணத்தின் ஆற்றலின்மையை உணர்ந்தேன்/ அது விசில் சத்தத்தை ஒத்திருந்தது/ அவ்வளவு குறுகியதாக
நீ அதை மறந்திருக்கமாட்டாய். அந்த இளம் பெண்ணை நீ கவனித்துப் பார்த்ததில்லை. அவள் கட்டொழுங்கும் நிதானமும் மிக்கவள் என்பதையும் எல்லா செயல்முறைகளையும் சுயமாகச் செய்து முடிக்கக்கூடியவள் என்று மட்டுமே அறிந்திருந்தாய். மற்றவர்கள் கூச்சலிட்டு அங்குமிங்கும் ஒடிக் கொண்டிருந்த சமயத்தில் அவள் நிதானமாகப் பின்நகர்ந்து சீரற்ற மூச்சுடன் ரத்தம் தோய்ந்த கைகளால் கைப்பேசியில் அழைத்தாள். அந்த அழைப்பு இணைக்கப்பட்டதும், நிதானமான குரலில் நான் கொலை செய்துவிட்டேன் எனப் பதிலளித்தாள்.
அவர்களில் ஒருவர் கூட மற்றவரைப் பார்க்கவோ பேசவோ இல்லை. அத்தனை பேரும் அந்தச் சன்னலில் ஊடுருவிய வெளிச்சத்தைத் தலை தூக்கிப் பார்த்துக் கொண்டிருந்தனர். ஈரப்பதமிக்க வெளிச்சக் கதிர்கள் அப்பகுதியை அடைந்தவுடன் குளிர்ச்சியாகிவிட்டது. வெளிச்சத்தில் தூசுக்கள் மிதந்து இருளில் நிலைத்தன. அவள் நடந்தவை அனைத்தையும் கூறி முடித்துவிட்டாள் எனப் பொறுமையாகக் காத்திருந்தாய். ஆகவே, மேசையின் மீது இருந்த பொருட்களை எல்லாம் சீர்படுத்திவிட்டுப் புறப்படத் தயாரானாய். எழுந்து நின்று உடலைத் திருப்ப முயன்ற போது யூ சியாவ் யூ மெல்லிய குரலில் பேசியதைக் கேட்டாய்.
என் பின்னால் மர்மமான கரிய இருள் இருக்கிறது
அது நகர்ந்து என் முடியைப் பிடித்திழுக்கிறது
மீண்டும் பிடித்திழுத்து, உரத்த குரலில் ஓலமிடுகிறது
“இம்முறை உன்னைப் பிடித்தது யார்? கண்டுபிடி பார்ப்போம்!’’ “மரணம்’’ என்றேன்
மணியோசையைப் போன்ற அதிரும் குரல் கேட்டது “இறப்பு அன்று, காதல்’’
***
காலை 9.10க்கு அழைத்த அந்த முதியவரின் குரல் இப்பொழுதுதான் தியானம் செய்து முடித்தவரைப் போல மிக நிதானமாய் இருந்தது. அதனைக் கேட்டு நீயும் உன் முதுகை நிமிர்த்தி அமரும் நிலையைச் சரிபடுத்திக் கொண்டாய். அவர் அந்தப் புத்தகக் கடைக்குச் சென்றதாகவும் யூ சியாவ் யூ வாங்க நினைத்த குறுந்தட்டு உண்மையாகவே ஒரு ஜப்பானியப் படம் என்றும் அதன் பெயர் ‘எப்பொழுது வாசிப்பு நாள்’ என்றும் சொன்னார்.
“அந்தக் குறுந்தட்டு இன்னுமிருக்கிறது” எனச் சற்றே நிறுத்தித் தன் தொண்டையைச் செருமியப் பின் “அவளுக்காக அதனை எடுத்து வந்திருக்கிறேன்” என்றார்.
அந்தக் கவிதை எங்கிருக்கிறது என அறிந்ததைப் போலவே, அந்தப் படத்தையும் நீ அறிவாய். பால் வினியோகம் செய்தும் பேரங்காடியில் கணக்கராகப் பணிபுரிந்தும் ஜீவனம் நடத்தும் தனிமையில் வாழும் முதியப் பெண்ணின் கதையைக் கொண்டது அப்படம். அவள், இரவு வேளையில் புத்தகங்கள் நிறைந்த தன் வீட்டில் படுத்து தாஸ்தயெவ்ஸ்கியின் படைப்பை வாசிக்கின்றாள். அப்படம் நிதானமான சீரான ஓட்டத்தைக் கொண்டது. அந்தப் படத்தின் இறுதிக் காட்சியை நினைவுப்படுத்த முடியாததால், அப்படம் முடியும் முன்னரே நீ தூங்கியிருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டாய். ஆனாலும், அப்படத்தின் சில காட்சிகளில் அழுததை நினைவில் வைத்திருந்தாய். ஏன் நினைவு மங்கலாக இருக்கிறது. நீ உடனே புத்தக அடுக்கில் இருந்த இசைப்பா (சோனேட்) நூலைத் தேடிக் கண்டுபிடிக்கத் சென்றாய். அந்தப் புத்தகம் இன்னும் அங்குத்தான் இருந்தது அதுவும், கு செங்கின் நூல் தொகுதிக்குப் பக்கத்திலேயே. எல்லாம் தூசு மூடி வெயிலின் முத்தத்தாலும் மழை மணத்தாலும் நிறைந்திருந்தது.
நீ தேடிப் பார்த்ததில், அந்தக் கவிதையும் இன்னும் அங்குத்தான் இருக்கிறது. கரிய நிழல் இன்னுமிருக்கிறது, மரணமும் இன்னும் இருக்கிறது, காதலும் இன்னும் இருக்கிறது.
நீ, மாலையில் மீண்டும் தடுப்பு முகாமுக்குத் திரும்பும்போது, வழியெல்லாம் வெப்பத்தைத் தணிக்கின்ற மாதிரி மழை பெய்து கொண்டிருந்தது. ஆனாலும், தடுப்பு முகாமில் இருள் இன்னும் அடர்த்தியாகியிருந்தது. தூசு பறந்து கொண்டிருந்த அறையின் ஈரப்பதத்தை மழை இன்னும் கூட்டியிருந்தது. பெண்டார்பலர் விளக்கு மங்கலாக ஒளிர்ந்து கொண்டிருந்தது. ஒவ்வொரு விளக்கின் மேலும் ஒட்டியிருந்த சிள்வண்டுகளின் கீச்சிடல் கேட்டுக் கொண்டிருந்தது. விளக்கின் கீழிருந்த எல்லாருமே வெளிறி காணப்பட்டனர்.
உன் பணிப்பையிலிருந்து கவிதைத்தொகுதியை வெளியிலெடுப்பதைக் கண்டவுடன் யூ சியாவ் யூவால் தன் சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியாமல் முன் நெற்றியிலிருந்த முடியைத் தடவிக் கொண்டாள். அவள் கைவிலங்கிலிருந்து சத்தமெழுந்தது.
“நீ ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டாய் என்பது உனக்குப் புரிந்திருக்கும்” என உன்னிடமிருந்து புத்தகத்தைப் பெறும்போது பூடகமாக அவள் குறிப்பிட்டாள்.
நீ மெளனமாக இருந்தாய். யூ சியாவ் யூ கவிதைத் தொகுதி நூலைத் திறந்து தலைப்புக்குக் கீழே நீ எழுதியிருந்த வாக்கியத்தை வாசித்தாள். அவளுடைய பார்வை அங்கே நிலைக்குத்தியிருக்க பழுப்பு நிறக் கண்களிலிருந்து ஜோடி முயல்கள் மெல்லத் தாவி தாவி வெளியேறின. அவை காற்றில் மறைந்து போகலாம். அவை எப்பொழுதும் ஒன்று மற்றொன்றைத் தேடிக் கொண்டிருக்கலாம். அவை இரண்டும் கண்ணாடிச் சுவரால் பிரிக்கப்பட்டிருக்கலாம். யூ சியாவ் யூ முகத்தைத் திருப்பினாள். வாய் இறுக மூடியிருந்தது, ரத்தின மாலையைப் போல கண்ணீர் துளிகள் உலர்ந்து போன உதட்டின் வழியாக வழிந்தன.
தனிமை உனக்கு சூரியனைக் கொடுக்கும்
சூரியனை பெறு
அதுதான் என் நம்பிக்கை
அன்றைய மாலை வேளையில், அந்த வழக்கை நடத்தப் போகும் வழக்குறைஞர் நண்பரிடம் வழக்கு கையளிப்புக்கான நடைமுறைகளை மேற்கொள்ள குற்றவியல்துறை அலுவலகத்திற்குச் சென்று அவருடன் பேசிக் கொண்டிருந்தாய். நீ புறப்படும்போது வானம் இருண்டு இருந்தது; மழைச்சாரல் கார் கண்ணாடியில் சரிந்து இறங்கி கொண்டிருந்தது.
நீ சீக்கிரம் வீட்டிற்குச் செல்ல பரபரப்பாக பல குறுக்குப் பாதைகளில் காரைச் செலுத்தினாய். ஆனாலும், வார இறுதி நாளின் இரவுப் பொழுது பெரு நகரில் அணிவகுத்து நிற்கும் கார்களின் வரிசையில் சிக்கிக் கொண்டாய். கார்களின் ஹாரன் ஓசையும் மழையோசையும் சேர்ந்து எங்கும் நகரவிடாமல் செய்தன. நீ கனவில் வந்த இடர்களை நினைத்துக் கொண்டாய்.
அப்பொழுது, உன் கணவன் அழைத்தான். வீட்டில் ஏற்பட்டிருக்கும் மின்சாரத்தடையைச் சொல்லிவிட்டு மழை நேரமாதலால் மிகக் கவனமாகக் காரைச் செலுத்துமாறு அறிவுறுத்தினான். பின் யூ சியாவ் யூவைப் பற்றியும் கேட்டான். இறுதியில், நீ புத்தகங்களை அவளுக்கு அனுப்பி வைக்க வேண்டுமென்ற நிபந்தனையுடன் வழக்கைக் குற்றவியல் வழக்குறைஞரிடமே ஒப்படைப்பதற்கு அந்த இளம் பெண் ஒப்புக் கொண்டாள் என அவனிடம் சொல்ல நினைத்தாய்.
“நான் எப்பொழுதும் புத்தகங்களைச் சிறைக்கு அனுப்புவேன் என உறுதி கூறுகிறேன்.”
மழை இன்னும் தொடர்ந்தது. மழைக்காலம் தொடங்கிவிட்டதால் இரவைக் கடந்தும் விடாமல் நனைத்துக் கொண்டிருந்தது. காரை கவனமுடன் செலுத்துமாறு உன் கணவன் நினைவுறுத்தியது கனவில் வரும் குரல் போல கேட்டது. அவன் நாயுடன் உனக்காக கீழே காத்திருப்பதாகச் சொன்னான்.
சிரித்துக் கொண்டே கைப்பேசியை அணைத்து விட்டு, பதினேழாவது மாடியின் வெளிச் சன்னலினருகே பழுதாகியிருக்கும் சாலை விளக்கை நினைத்துக் கொண்டாய். ஆக, பொறுமையாகவும் மெதுவாகவும் காரோட்டினாய். உன்னுடைய பயணத்தில் சிகரெட் துண்டுகளை இப்போதும் காரிலிருந்து வீசுகின்றவர்களைக் கண்டாய். உடல் மக்கிப் போயிருந்த பூனையின் சடலம் வசந்த காலத்துக்கான உரமாக மாறியிருந்தது. பின் கண்ணாடியை அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தாய். இளைப்பாறிக் கொண்டிருந்த இரண்டு வண்ணத்துப்பூச்சிகள், உன்னைக் கண்காணிக்கும் ஒரு ஜோடி கண்களைப் போல தோன்றின. அவற்றை உற்று நோக்கியபோது, வாழ்க்கையின் ஒளியை அவை பதுக்கி வைத்திருப்பதாகத் தோன்றியது.
நகரத்தின் சோக முகம் சன்னல் கண்ணாடியில் பதிந்திருந்ததைப் பார்த்திருப்பதால், மழை அதன் ஒப்பனையைக் கழுவுவதை வேடிக்கை பார்த்தாய்.
சீன மூலம்: லி ஸிஷு
மலாய் மொழிபெயர்ப்பு: சியோவ் ஸ்வி ஹார்
தமிழில்: அரவின் குமார்
அடிக்குறிப்பு
- தடித்த எழுத்துகளில் இருக்கும் சொற்கள் அனைத்தும் மற்ற நூல்களிலிருந்து கையாளப்பட்டவை. அவை பெரும்பாலும் கவிஞர் கு செங்கின் கவிதை வரிகள்
- கு செங் சீனாவில் நன்கு அறியப்பட்ட நவீனத்துவக் கவிஞர். மிஸ்டி போய்ட் இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவர்.
அருமை.. இந்த சிறுகதையின் பாதிப்பு இன்னும் சில நாட்கள் என்னில் இருக்கு என நினைக்கிறேன்.. புதுமையான கதை சொல்லல் முறை.. கதாபாத்திரங்களின் ஆழம் வியக்க வைக்கிறது. தமிழில் மொழிபெயர்த்த அரவின் குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
அருமை.. இந்த சிறுகதையின் பாதிப்பு இன்னும் சில நாட்கள் என்னில் இருக்கு என நினைக்கிறேன்.. புதுமையான கதை சொல்லல் முறை.. கதாபாத்திரங்களின் ஆழம் வியக்க வைக்கிறது. தமிழில் மொழிபெயர்த்த அரவின் குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள். ..