மேலே திறந்து கிடக்கிறது…

”ஒரு விந்தை!” என்று ராபர்ட் கோல்ட்மான் சொன்னார்.

கண்ணில் நுண்நோக்கியுடன் ஒரு கல்படிவத்தின்மேல் குனிந்திருந்த ராம்கோவிந்த் தலைதூக்கி புருவத்தை மட்டும் தூக்கினார்.

“இதைப்பாருங்கள்,” என ராபர்ட் கோல்ட்மான்  ஒரு சிறிய கல்லை நீட்டினார். அது ஒரு பெரிய சேற்றுப்படிவப் பாறையில் இருந்து உடைந்த கீற்று. மங்கலான  சிவந்த நிறத்தில் ஒரு சிப்பி போலிருந்தது.

“படிமமா?” என்றபடி அதை வாங்கினார்  ராம்கோவிந்த்.

“ஆம், அதைப் பாருங்கள்.”

நுண்நோக்கி வழியாக அதைக் கூர்ந்து பார்த்தபோதும்  ராம்கோவிந்தின் மூளையில் அந்த விந்தை உறைக்கவில்லை. “ஒரு தடம்… விரல்தடம்…” என்றார்

“ஆம், கட்டைவிரல்தடம்…. கைரேகை தெளிவாகப் பதிந்திருக்கிறது.”

“ஆம்!” என்று கவனமின்றிச் சொன்ன  ராம்கோவிந்த்,  உடனே திடுக்கிட்டு எழுந்துவிட்டார். “அதெப்படி…”

“அதேதான்… இந்த சேற்றுப்பாறைக்கு இருநூறு மில்லியன் ஆண்டுகளுக்குமேல் தொன்மை இருக்கலாம்… ஜுராஸிக் காலகட்டம்.”

“இது பிற்காலத்தையதாக…” என்று சொல்லவந்த  ராம்கோவிந்த்   அதை நீட்டிக்கவில்லை. அது ஓர் அபத்தமான எண்ணம் என அதற்குள் தோன்றிவிட்டது. அந்த தடம் சேற்றில் பதிந்து, இறுகி பாறையாகவே ஆகிவிட்டிருந்தது.

“அப்படியென்றால்…” என்றபின் “அது மனிதனல்ல… பெரும்பாலும் பரிணாமத்தின் முந்தையவடிவமான ஒருவகை குரங்கு…” என்றார்  ராம்கோவிந்த்.

“ஆனால் இந்த கைரேகை மிகத்தெளிவானது,” என்று கோல்ட்மான்   சொன்னார். “குரங்கின் கைபோல இது இல்லை. குரங்கின் கட்டைவிரல் இப்படி இருக்காது… அத்துடன் இந்தக் காலகட்டத்தில் ஒரு குரங்கு இருந்திருந்தால் அதுவே திகைப்பூட்டும் ஒரு கண்டுபிடிப்புதான்.”

“நாம் உடனடி முடிவுக்கு வரவேண்டியதில்லை,” என்றார்  ராம்கோவிந்த்    “பரபரப்படையவும் வேண்டியதில்லை… இந்த பிரபஞ்சத்தில் எல்லாவற்றுக்கும் சாத்தியம் உள்ளது என்பதுதான் ஓர் ஆய்வாளன் முதலில் தனக்குத்தானே சொல்லிக்கொள்ளவேண்டிய விஷயம்.”

“ஆம்!” என்றார் ராபர்ட் கோல்ட்மான்.  அந்த நிதானம் அவருக்கு கொஞ்சம் எரிச்சலை அளித்தது.

”நாம் இந்தக் கல்லை முதலில் ஆய்வுசெய்யவேண்டும், இதன் காலகட்டத்தை. இந்த படிமம் உருவான காலகட்டத்தை ஐயமில்லாமல் வரையறைசெய்யவேண்டும். வேறேதேனும் வகையில் பிற்காலத்தைய சேற்றுப்பதிவு ஒன்று ஒரு படிமமாக ஆகக்கூடுமா என்ற எல்லா வாய்ப்புகளையும் ஆராயவேண்டும். அழுத்தம், வெப்பம் அல்லது கதிரியக்கம்… ஏதாவது வாய்ப்புண்டா? அதன்பிறகுதான் இந்தப் படிமம் நாம் நினைப்பதுபோல ஜூராஸிக் காலகட்டத்தைச் சேர்ந்தது என உறுதி செய்யமுடியும்… அப்போதுகூட அடுத்த கட்டத்து வாய்ப்புகள் உள்ளன. அன்று இருந்து அழிந்துபோன ஏதேனும் உயிரினத்திற்கு குரங்கு அல்லது மனிதன் போன்ற கால்களோ கைகளோ இருந்தனவா? ஏன் ஒரு வகை டைனோஸருக்கு அப்படி கையோ காலோ இருந்திருக்ககூடும்தானே? எல்லா வாய்ப்புகளையும் விசாரித்தபிறகுதான் நாம் ஒரு கருத்தை நோக்கிச் செல்ல முடியும்.”

“ஆனால் இறுதியாக இது மனிதனின் மூதாதையின் கைரேகைப் பதிவு என நிரூபிக்கப்பட்டால் நாம் மானுடப்பரிணாமத்தின் வரலாற்றையே மாற்றி எழுதவேண்டியிருக்கும்… எல்லாமே மாறிவிடும்,” என்றார் ராபர்ட் கோல்ட்மான்

ராம்கோவிந்த் “நிரூபிக்கப்படும்வரை நாம் கிளர்ச்சியடைய வேண்டியதில்லை,” என்றார்.

***

மனிதனின் சிந்தனையைத் தீர்மானிக்கும் முதன்மையான கூறு என்ன? மானுடன் சென்றடைந்த கொள்கைகள், அறிந்த கண்டுபிடிப்புகள் அனைத்துமே எதனடிப்படையில் நிகழ்கின்றன? நூற்றுக்கணக்கான கோணங்களில் இந்த கேள்விக்கான பதில்கள் சொல்லப்பட்டுள்ளன. ஆனால் இருநூறாண்டுகளுக்கு முந்தைய தத்துவஞானியான பெரெஸ் முன்வைத்த மிகமிக எளிய விடை ஒன்றே காலந்தோறும் நிரூபிக்கப்பட்டுள்ளது.  ‘நோக்கம்’ என்று பெரெஸ் சொன்னார். கேள்விக்கான விடைகளையே இயற்கையும் பிரபஞ்சமும் மானுட வாழ்க்கையும் அளிக்கின்றன. எல்லா கேள்விகளுக்கும் பின்னால் நோக்கம் உள்ளது. அந்நோக்கமே எது அறியப்படவேண்டும் என்பதை தீர்மானிக்கிறது. எது ஏற்கப்படவேண்டும் என்று அல்ல. எது உண்மை, எது தர்க்கபூர்வமானது, எது பயனுள்ளது என்று அல்ல. எது அறியப்படவேண்டும் என்பதையே நோக்கம்தான் தீர்மானிக்கிறது. தன் நோக்கத்துக்கு வெளியே உள்ள ஒன்றை மானுடகுலம் இதுவரை அறிந்ததே இல்லை.

பசி, பாதுகாப்பு, நீடித்தல், வெல்லுதல், காமம் என அவனுடைய நோக்கங்களைத் தீர்மானிக்கும் பல விஷயங்கள் அவனுக்குள்ளும் இயற்கையிலும் உள்ளன. அதற்கேற்கபவே அவன் தன்னையும் வெளியேயும் பார்க்கிறான். ஒவ்வொன்றையும் அறிந்து வகுத்துக்கொள்கிறான். மிகத்தொடக்ககாலத்திலேயே அவன் அவ்வாறு ஏராளமானவற்றை வகுத்து புறவயமாகத் தொகுத்துக்கொண்டுவிட்டான். அவை படிமங்களாகவும் சொற்களாகவும் கருத்துக்களாகவும் அவற்றையொட்டிய உணர்வுகளாகவும் கனவுகளாகவும் மானுடத்திற்குப் பொதுவானவையாக ஆகிவிட்டன. அவைதான் சுருதி என கீழைச்சிந்தனையில் அழைக்கப்படுகின்றன. சுருதி என்பது மிகப்பிரம்மாண்டமான முன்னறிவுத்தொகுப்பு. மானுடன் மேற்கொண்டு சிந்தனை செய்வதெல்லாமே அந்த முன்னறிவுத்தொகுப்பின் விரிவாக்கமாகவே. அந்த அறிவுத்தொகை ஒரு களம், அக்களத்திற்குள்தான் சிந்தனையே நிகழமுடியும். அதை மறுப்பதும், மீறுவதுமெல்லாம்கூட அதற்குள்தான் நிகழமுடியும். ஏனென்றால் அவன் படிமங்களையும், மொழியையும்தானே பயன்படுத்தியாகவேண்டும்.

விந்தையான ஒன்றை பெரெஸ் சுட்டிக்காட்டுகிறார். மனிதனின் சிந்தனை என்பது தொடர்புறுத்தல் என்னும் வகையிலேயே நிகழமுடியும். அதாவது மனிதனின் சிந்தனை என்பதே ஒருவகை தொடர்புறுத்தல்தான். ஒரு மனிதன் பிறருக்குத் தொடர்புறுத்துவது அல்லது மூளையின் ஒரு பாவனை இன்னொரு பாவனையுடன் தொடர்புறுத்துவது. தொடர்புறுத்தலே இல்லாமல் ஒரு சிந்தனை சாத்தியமே அல்ல. அப்படி ஒரு சாத்தியம் இல்லை என்பதனால்தான் நாம் அப்படி ஒரு கோணத்தில் எண்ணியதே இல்லை. பெரெஸ் போன்ற கல்வித்துறைசார்ந்த எந்தப் பயிற்சியும் அற்ற ஒரு ‘காட்டுமிராண்டி’ தத்துவசிந்தனையாளரிடமே இத்தகைய அடிப்படையான, மிக மிக எளிய, எண்ணங்கள் உருவாக முடியும்.

நம் சிந்தனைகள், கற்பனைகள், கனவுகள் எல்லாமே உரையாடல்கள்தான். இலக்கியம், கலைகள் மட்டுமல்ல அறிவியலேகூட உரையாடல் மட்டும்தான். உரையாடலில் உரையாடப்படும் தரப்பும் இணையான முக்கியத்துவம் கொண்டது. உரையாடற்களமே உரையாடும் தரப்புகளின் தொகுப்பாக உருவாவதுதான். அது ஏற்கனவே உருவாகி இருந்துகொண்டிருக்கிறது. அதுவே சுருதி. ஆகவே எவரும் அந்த களத்தைவிட்டு வெளியே செல்லமுடியாது. அந்தக் களம் மானுடனின் நோக்கத்தால் வடிவமைக்கப்பட்டது. நோக்கத்தையே நாம் சிந்தனைகளாக கற்பனைகளாக நிகழ்த்திக் கொண்டிருக்கிறோம். ஞானமென அறிந்துகொண்டிருக்கிறோம். நாம் நம் நோக்கத்தின் நிரந்தரக் கைதிகள்.

நம் நோக்கத்திற்கு அப்பாலுள்ள பிரபஞ்ச நிகழ்வுகள் நம்மை பாதிப்பதே இல்லை என்று சொல்லவரவில்லை. உண்மையில் ஒவ்வொரு கணமும் நம் நோக்கத்திற்கு அப்பாலுள்ள பிரபஞ்சவிசைகள் நம்மை வந்து அறைந்துகொண்டேதான் உள்ளன. காலையில் சூரியன் எழுவதேகூட நம் நோக்கத்திற்கு அப்பாலுள்ள ஒன்றுதானே? ஒரு மலர் விரிவதுகூட அப்படித்தானே? ஆனால் நாம் அவற்றை நம் நோக்கம் வழியாகவே அறிகிறோம். ஆதிநோக்கம் நம்முள் முன்னறிவென உறைகிறது. அதன் நீட்சியாக அத்தருண நோக்கம் நிகழ்கின்றது. அவ்வறிவாகவே அவற்றை நாம் ஆக்கிக்கொள்வதனால் சூரியனும் மலர்களும் எல்லாம் நம் நோக்கத்தின் விளைவாகவே இங்கே நமக்குத் திகழ்கின்றன. அப்பால் அவை என்ன என எப்போதுமே நாம் அறிந்ததில்லை. அறிய வாய்ப்பே இல்லை.

நாம் அறிவதெல்லாம் அறிவு ஒன்றையே. அறிவு என்பது நோக்கம் கொண்டது. நோக்கமே அறிவுக்கு ஒத்திசைவை அளிக்கிறது. ஒத்திசைவையே நாம் அதன் கட்டமைப்பென அறிகிறோம். அக்கட்டமைப்பையே நாம் வரையறைசெய்துகொள்கிறோம். அதன்பின் அந்த வரையறையை அது என அறிகிறோம். அவ்வரையறையை ஒட்டியே அதற்குப் பெயர் போடப்படுகிறது. பின் பெயரே அது என ஆகிறது. வரையறைச் செய்யப்படாத ஒன்றை எவ்வகையிலும் நம் மூளையால் உணரவோ நினைவுகூரவோ தொடர்புறுத்தவோ இயலாது.

உதாரணமாக ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். இன்றைக்கு ஏறத்தாழ நூறாண்டுகளுக்கு முன்பு ஆப்ரிக்காவில் காங்கோ நாட்டில் மாதும்பா என்னும் நகருக்கு அருகே ஒரு பாறைப்பகுதியில் ஜூராஸிக் காலகட்டத்தைச் சேர்ந்த ஒரு கைரேகைத்தடம் கண்டடையப்பட்டது. அது ஜுராஸிக் காலகட்டத்தைச் சேர்ந்தது என்றும், ஒரு மனிதன் அல்லது மனிதனின் தொல்வடிவத்திற்கு உரியது என்றும் ஐயமற நிரூபிக்கப்பட்டது. உண்மையில் மனிதனின் பரிணாமம் பற்றி அதுவரை என்னென்ன சொல்லப்பட்டதோ அனைத்தையும் தலைகீழாக்கம் செய்யும் ஒரு கண்டுபிடிப்பு அது. பிரபஞ்சம் மனிதன் மேல் வந்து அறைந்த ஒரு சந்தர்ப்பம். அதை எப்படி எதிர்கொண்டது மானுட இனம்?

அது ஒரு தலைகீழாக்கத்தை உருவாக்கியது. எல்லாமே மாறிவிட்டன என்று உடனே தோன்றவும் செய்தது. ஆனால் அந்த தலைகீழாக்கம் என்பதும்கூட ஏற்கனவே இருந்த அறிதலின் களத்திற்குள் நிகழ்ந்ததே என்று சில ஆண்டுகளில் தெளிவாகியது. மானுடகுலம் அந்த புதிய அறிதலை தன் பழைய அறிதல்களுடன் மிகச்சரியாக இணைத்துக்கொண்டது. அறிதலை மானுடம் செரித்துக்கொள்ளும் முறை இது. இன்று அந்த அறிதல் ஒரு முற்றிலும்புதிய அதிர்வாக நிகழ்ந்தது என்று சொன்னால் நம்பவே முடியாது. மானுடம் அந்த புதிய அனுபவத்தையும் தன் நோக்கத்தைக்கொண்டே அறிந்தது, வகுத்துக்கொண்டது, தொகுத்து கைமாறிக்கொண்டது. ஆம், மீண்டும் சொல்கிறேன், நாம் நம்முடைய நோக்கத்தின் சிறைக்குள் நிரந்தரமாக இருந்துகொண்டிருக்கிறோம்.

மேலும் ஒரு வரியைச் சொல்லி இந்த உரையை முடிக்க விரும்புகிறேன், பெரெஸ் நாம் நம் நோக்கத்தின் கைதிகள் என்று கண்டடைந்ததும், அதை நான் இங்கு விளக்குவதும்கூட அந்த நோக்கத்தின் ஒரு பகுதியென்றே நிகழ்ந்துகொண்டிருக்கலாம். அப்படியென்றால் மட்டுமே நாம் நோக்கத்தின் கைதிகள் என்ற என் கருத்து நிறுவப்படுகிறது இல்லையா?

***

”சென்ற எட்டு நாட்களாக அங்கே மழைபெய்துகொண்டிருக்கிறது” என்று சாம் சொன்னார். “மிகக்கடுமையான மழை. அங்கே ஒரு மாதமாக எரிந்துகொண்டிருந்த காட்டுத்தீயை அந்த மழை அணைத்துக்கொண்டிருக்கிறது.”

முதியவரான அனந்த் தன் ஆக்ஸிஜன் இணைப்பை நீக்கிவிட்டு நீண்ட மூச்சுவிட்டு இயல்பாக அமர்ந்தார். “காட்டுத்தீயின் புகைக்கே மழையை கொண்டுவரும் தன்மை உண்டு,” என்றார்  “பெரிய காட்டுநெருப்புகள் மழையால் அணைக்கப்பட்டிருக்கின்றன, ஆவணப்பதிவுகள் ஏராளமாக உள்ளன.”

“அங்கே இனிமேல் எரியாமல் எஞ்ச ஏதுமில்லை…. ஏறத்தாழ முந்நூற்றைம்பது சதுரகிலோமீட்டர் அளவுக்கு காடு முழுமையாகவே எரிந்து அழிந்துவிட்டது. ஒரு மரம்கூட எஞ்சியிருக்க வாய்ப்பில்லை. தொடர்ச்சியாக வீசிய தென்மேற்குக் காற்று தீ நின்று எரிவதற்கான ஆக்ஸிஜனை அளித்தது. புகைமேகங்கள் வடகிழக்காக சகாராவுக்கு சென்று வானில் கரைந்தமையால் புகையால் தீ மட்டுப்படுவது நடக்கவில்லை… மிகப்பெரிய மரங்கள் கொண்ட காடு. பெரும்பாலானவை தைலமரங்கள். ஆகவே எரிய எரிய வெப்பம் அதிகரித்து ஒரு கட்டத்தில் உலோகங்கள் உருகி ஓடுமளவுக்கு சூடு உருவாகியது. பாறைகள் வெடித்து சிதறியிருக்கின்றன,” என்றார் இளைஞரான சாம்.

“ஆம், காட்டுத்தீ என்று பார்த்தால் பதிவுசெய்யப்பட்டவற்றில் இதுதான் தீவிரமானது,”  என்றார் அனந்த்  “ஆனால் அந்நிலம் முற்றிலும் மானுடவாசம் அற்றுப்போய் எழுநூறாண்டுகளாகின்றது. ஆயிரமாண்டுகளுக்கு முன் அது காங்கோ என்னும் நாடாக இருந்திருக்கிறது. நீண்டவரலாறு அந்நாட்டுக்கு இருந்தது. ஆனால் ஆப்ரிக்க நாடுகளில் தொடர்ச்சியாக வெள்ளமும் வரட்சியும் வந்துகொண்டே இருந்தன. மக்கள் நிலங்களை கைவிட்டுவிட்டு அருகிருக்கும் பெரிய கடற்கரையோர நகரங்களுக்கு குடியேறினர். பல நாடுகள் முழுமையாகவே கைவிடப்பட்டன. கடல்நீர் ஏற்றத்தால் கரையோர நகரங்கள் மூழ்க ஆரம்பித்தபோது அந்நகரங்களில் வாழ்ந்தவர்கள் வேறு நகரங்களுக்கு குடியேறினார்கள். புதிய நகரங்கள் உருவாகி வந்தன. அவை இன்றைய நகரநாடுகளாக வளர்ந்தன. ஆப்ரிக்கா என அழைக்கப்பட்டிருந்த அந்த கண்டத்தில் இன்று பெரும்பாலும் மானுடவாழ்க்கை இல்லை. அது நம்மைப்போன்ற ஆய்வாளர்களுக்குரிய நிலமாகவே எஞ்சியுள்ளது…”

“ஆம்” என்று சாம் சொன்னார். ”மானுடன் தோன்றியதாகச் சொல்லப்படும் நிலம். பல்வேறு பண்பாடுகள் உருவாகி மறைந்த களம் அது,” பின்னர் புன்னகைத்து “இந்த நெருப்பு நல்லதுதான். நாம் நுழைய முடியாத அந்தக் காட்டை அழித்து நமக்கு ஒரு திரையை விலக்கிக் காட்டுகிறது… நாம் தேடுபவை அங்கே நமக்காகக் காத்திருக்கலாம்.”

“மறைந்துவிட்ட நாகரீகங்களை இப்படி தேடிக்கண்டடைந்து ஆவணப்படுத்துவது வீண்வேலை என்னும் எண்ணம் பரவலாக இன்று உண்டு. உடனடியாகப் பயன் அளிக்காத எதையுமே இன்றைய அரசுகளும் கல்வியமைப்புகளும் ஆதரிப்பதில்லை,” என்று அனந்த்  சொன்னார். “உனக்கும் அந்த ஐயம் அவ்வப்போது எழுந்துவந்திருக்கக் கூடும்.”

சாம் ஒன்றும் சொல்லவில்லை

“சொல், அப்படி ஓர் ஐயம் வந்ததுண்டா?”

“ஆம், அடிக்கடி”

“அதற்கு நீ என்ன விளக்கம் சொல்லிக்கொள்வாய்?”

“நாம் மனிதனை அறிய முயல்கிறோம்… பல லட்சம் ஆண்டுகளாக இங்கே   மானுட இனம் தோன்றி நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இந்த பிரபஞ்சத்தையும் இயற்கையையும் அறிந்து, அந்த அறிவை தொகுத்துக் கொண்டிருக்கிறது. இங்கே மனிதன் என்ன செய்கிறான், இனி என்ன செய்வான் என்று அறிவதற்கான ஒரே வழி நேற்றுவரை என்ன செய்தான் என்று தெரிந்துகொள்வது மட்டும்தான்….நான் வரலாற்றை அறிவது மனிதனை அறிவது மட்டும்தான்.” சாம் சொன்னார்.

“அது ஒரு நல்ல பதில்” என்றார் அனந்த் “ஆனால், மனிதன் அறிவது தன் அறிவை மட்டும்தான் என்று எப்போதாவது எண்ணியிருக்கிறாயா? மனிதனின் அறிவு அறியக்கூடுவது என்னும் எல்லைக்குள் அடங்கிவிடுகிறது. அதற்கப்பாலுள்ள எதையும் அவன் அறியமுடியாது. அந்த அறியக்கூடுவது என்பது மானுட மூளையின் இயல்பால் வரையறைசெய்யப்பட்டது. இப்படி சொல்கிறேன், மானுட மூளைக்கு ஓர் அமைப்பும் செயல்முறையும் உள்ளது. அந்த அமைப்புக்கும் செயல்முறைக்கும் ஏற்ப அது பிரபஞ்சத்தை அறிகிறது. அந்த அறிவை பிரபஞ்சம் என புரிந்துகொள்கிறது. அதாவது மூளை தன்னை வெளிப்பொருளில் ஒரு குறிப்பிட்ட வகையில் நிகழ்த்திப்பார்த்துக்கொள்வதுதான் பிரபஞ்சம் என்பது”

“அண்மைக்காலமாக நீங்கள் தொல்லியலில் இருந்து தத்துவம் நோக்கிச் செல்கிறீர்கள். அது உங்களுக்கு தொல்லியல்மேல் நம்பிக்கை இல்லாமலாக்குகிறது”

“அதை முழுக்க மறுக்கமாட்டேன்,” என்றார் அனந்த் “நீ ஓர் ஆய்வாளனாக என்ன நினைக்கிறாய்? மானுடன் அறிவு என்னும் மாபெரும் கட்டுமானத்தை உருவாக்கிக்கொண்டே செல்கிறான். இங்குள்ள அனைத்துமே அந்த அறிவின் பொருள்வய வெளிப்பாடுகள்தான். நகரங்கள், கிராமங்கள், கட்டடங்கள், சாலைகள் எல்லாமே மானுட அறிவின் புறவயமான வெளிப்பாடுகள்தான். மானுட அறிவுதான் இங்கே நம்மைச்சுற்றி பெருகி நிறைந்துள்ளது. மெம்பிஸ், ஸ்பார்ட்டா, ரோம், உஜ்ஜயினி எல்லாமே அறிவுகள் மட்டுமே… இந்த அறிவுத்தொகையின் நோக்கம் என்ன? எதன்பொருட்டு இதைச் செய்துகொண்டே இருக்கிறது மானுடம்?”

“அதை நம்மால் சொல்லிவிடமுடியாது. எப்படிச் சொன்னாலும் அது ஒரு பதிலாகவே இருக்கும், வேறு நூறு பதில்களுக்கு இடமிருக்கும்.”

“அறிக அறிக என்று மானுடனை தூண்டும் அந்த விசை எது? ஆக்குக ஆக்குக என அவனை உந்திக்கொண்டே இருப்பது எது? மானுடன் உருவாக்கிய நகரங்களெல்லாம் அழிகின்றன. ஆனால் மீண்டும் மீண்டும் அவன் கட்டிக்கொண்டே இருக்கிறான்”

“அதை விளக்கமுடியாது… ஆனால் ஒன்று சொல்லலாம். பல லட்சம் ஆண்டுகளாக நீளும் இது ஓர் ஆக்கபூர்வமான பரிணாமம். இது வளர்கிறது, புதியவற்றை நிகழ்த்திக்கொண்டே இருக்கிறது. இதன் சாரமான உணர்வு இங்கே வாழவேண்டும், விரிவடையவேண்டும் என்னும் உந்துதல்தான். அதை மட்டும்தான் உறுதியாகச் சொல்லமுடியும்”

“அப்படி உறுதியாகச் சொல்லிவிடமுடியுமா?”

“இதுவரையிலான மானுடவரலாறு காட்டுவது அதைத்தான்”

“அதை மட்டும்தானா? இந்த பிரம்மாண்டமான கட்டமைப்புக்குள் எங்காவது ஏதாவது ஒளிந்திருக்கிறதா? ஒரு சிறு துளி? ஒரு துளியினும்துளி? நாம் செய்வதென்ன என்று நமக்கு தெரியுமா? நம் நோக்கம் உண்மையில் என்ன?” அனந்த்  கேட்டார்

சாம்  சற்றுநேரம் பேசாமல் அமர்ந்திருந்தார். பின்னர் “நாம் இதைப்பற்றி பேசுவதில் பொருளில்லை. பேசித் தெளிவடையும் விஷயம் அல்ல இது” என்றார்

“சரிதான்”

சாம் தொலைக்காட்சியை இயக்கும் சொல்லைச் சொல்ல சுவர் பெரிய திரையாக ஆகியது. மழைபெய்துகொண்டிருந்த ஆப்ரிக்க நிலம் தெளிவடைய ஆரம்பித்தது. மழை ஓய்ந்து தூறல் மட்டும் எஞ்சியிருந்தது. சாம்பல் நீரில் கரைந்தோடிப்பரவிய மண்  கன்னங்கரிய வரிகளாகவும், ஓடைகளாகவும், வழிவுகளாகவும், சுழிகளாகவும் தெரிந்தது.

சாம் அக்காட்சியை துல்லியப்படுத்திக்கொண்டே சென்றார். அனந்த்  அதை கவனமில்லாமல் பார்த்துக்கொண்டிருந்தார். காடு முழுமையாகவே எரிந்து நிலம் வெட்டவெளியாக இருந்தது. காட்சி ஓடிக்கொண்டிருக்க சட்டென்று சாம் “ஆ!” என்றார். அதே கணத்தில் அனந்த்  எழுந்துவிட்டார்

“அந்த நகரம்….அது வரலாற்றிலிருந்தே மறைந்துவிட்ட அந்த நகரம்!” என்றார் சாம்

இடிந்த கட்டிடங்களும் சதுக்கங்களும் சாலைகளும் ஊடுசாலைகளுமாக ஒரு பெரிய நகரம் கரிமூடி துலங்கிவந்தது. ஒரு கட்டத்தில் சாம் காட்சியை நிறுத்தியபோது துல்லியமாக அந்நகரைக் காணமுடிந்தது.

***

மிகத்தொலைவில் செம்மஞ்சள் நிறமான சூரியன் அந்தத் திசையை முழுமையாகவே நிறைத்திருந்தது. விண்கலத்தின் மறுபக்கச் சாளரத்திற்கு அப்பால் கன்னங்கரிய வெளியில் சுடர்த்துளிகளாக கோள்கள்  மிதந்து நின்றன.

“பெரும்பாலும் இந்த விண்மீனின் ஈர்ப்புக்களத்திற்குள்தான்” என்று அ சொன்னார்.

அந்தக் கலத்திற்குள் விழிப்புநிலையில் இருந்த இருநூறுபேருக்கும் அது தெரிந்திருந்தது. வேறு இருநூறுபேர் நீள்துயில் நிலையில் உயிர்வாயுக் குமிழிகளுக்குள் இருந்தனர். இருபத்துநான்கு அடுக்குகள் கொண்ட அவர்களின் விண்கலம் ஒரே இடத்தில் நின்றுகொண்டிருப்பதுபோலத் தோன்றினாலும் ஒளிவேகத்தின் ஆயிரத்தில் ஒரு பங்கு விரைவில் சென்றுகொண்டிருந்தது.

அ விண்கலத்தின் ஒரு முனையில் இருந்து இன்னொன்றுக்கு மிதந்து சென்றார். வெவ்வேறு கருவிகளின் திரைகளுக்கு முன் அவர் தோழர்கள் அமர்ந்திருந்தார்கள். இ மறுபக்கச் சாளரத்தின் அருகே நின்றிருந்தான். வெளியே ஒரு கோள் ஒளிப்புள்ளியாகச் சுடர்விட்டுக்கொண்டிருந்தது.

“இந்த விண்மீன் ஒன்பது கோள்கள் கொண்டது, ஒன்று மிகச்சிறியது. என் கணக்குகளின்படிப் பார்த்தால் அவற்றில் நடுத்தரமானது நாம் தேடும் கோள். அதை ஒரு நிலவு சுற்றிவருகிறது. நீலநிறமானது,” என்று அ சொன்னார்.

“அதை நான் பார்த்துவிட்டேன்,” என்று ஈ சொன்னான்.

அவர்கள் ஈ சுட்டிக்காட்டிய திரையை பார்த்தனர். கலத்தின் தூரநோக்கிகள் அதை படமெடுத்து விரிவாக்கின. நீலநிறமான அந்த கோளின் கடற்பரப்பும் நடுவே வெவ்வேறுவகையான தீற்றல்களாக நிலப்பரப்பும் தெரியலாயின.

“பெரும்பகுதி நீராலானது…” என்று அ சொன்னார்.

அவர்கள் அந்த கோள் அணுகி வருவதைப் பார்த்துக்கொண்டிருந்தனர். அதன் மலைமுகடுகள் கசங்கல்கள்போல தெரியலாயின.

“மலைகளில் நீர் உறைந்திருக்கிறது.”

“இங்கேயா க இறங்கினார் என்கிறீர்கள்?” என்று சிறுவனாகிய உ கேட்டான்.

“நீ இந்தக் கலத்தில் பிறந்தவன… இது திரும்பச் சென்றுசேர்ந்தபின்னர்தான் நம் கோளையே பார்க்கப்போகிறாய்… அதற்கு இன்னும் பல ஆண்டுகள் உள்ளன. உனக்கு இந்த பயணத்தைப் பற்றி பலமுறை முன்னரும் சொல்லியிருக்கிறோம்.”

”ஆம்!” என்று உ சொன்னான். தயங்கியபடி அ வை பார்த்தான்.

அ புன்னகைத்து “எனக்கு இதை திரும்பத் திரும்பச் சொல்வதில் மகிழ்ச்சிதான். இந்தக் கலத்திற்குள் நாம் பேசிக்கொள்வதற்கு இருக்கும் முதன்மையான விஷயமே இதுதானே,” என்றார். “நம் முன்னோடியான க நீண்ட காலம் முன்பு இந்த கலத்தில் விண்பயணம் மேற்கொண்டார். அணுவிலக்க விசையையும் வெவ்வேறு விண்மீன்கள் மற்றும் கோள்களின் ஈர்ப்புவிசைகளையும் பயன்படுத்திக்கொண்டு பயணம் செய்யும் இந்தக் கலம் எங்கோ ஏதோ கணக்கீட்டில் பிழை செய்துவிட்டது. வழி தவறி நீண்ட காலம் பயணம் செய்து இந்த நடுத்தரமான மஞ்சள்நிற விண்மீனின் வட்டத்திற்குள் நுழைந்தது… அவர் திரும்பவில்லை.”

“அது இங்குதான் என்பதற்கு என்ன சான்று?” என்று உ கேட்டான்.

“அவர் இங்கே வந்தமைக்கு இந்தக் கலம் மட்டும்தான் சான்று. இது நம் கோளுக்குத் திரும்ப வந்தபோது இதிலிருந்த அனைவருமே இறந்துவிட்டிருந்தனர். இதன் பதிவுகள் மட்டுமே ஓடிக்கொண்டிருந்தன. அப்பதிவுகளை மட்டும் கொண்டு இதிலிருந்த செய்திகளைப் புரிந்துகொள்ளவும் முடியவில்லை. நீண்டகாலமாக வெவ்வேறு வகையில் இப்பதிவுகளை பகுப்பாய்வு செய்ய முயன்றுகொண்டிருந்தார்கள். நான் இந்தக் கலத்திலேயே இது சென்ற அந்த பயணத்தை மீண்டும் நிகழ்த்தினால் அப்பதிவுகளைப் புரிந்துகொள்ள முடியும் என்று ஒரு திட்டத்தை முன்வைத்தேன். நீண்ட ஆலோசனைக்குப்பின் அந்த முன்மொழிவு ஏற்கப்பட்டது. நம் பயணம் தொடங்கியது. நான் அந்தப் பயணத்தை பெரும்பாலும் அப்படியே திரும்ப நிகழ்த்தியிருக்கிறேன். நம் கலம் நம்மை இங்கே கொண்டுவந்து சேர்த்திருக்கிறது….\ இந்தப்புள்ளி வரைக்கும்தான் முன்பு அது வந்திருக்கிறது.”

“இங்கிருந்து உலவுகலங்களில் அவரும் உடனிருந்தவர்கள் சிலரும் அந்த நீலநிறக் கோளுக்குச் சென்று இறங்கியிருக்கலாம். அவர்கள் எவரும் திரும்பவில்லை. கலம் வகுக்கப்பட்டிருந்த காலம் வரை காத்திருந்துவிட்டு வந்த வழியை அப்படியே தலைகீழாக நிகழ்த்தி நம் கோளுக்குத் திரும்பிவிட்டது.”

உ ஒரு கணத்து தயக்கத்துக்குப் பின் கேட்டான். “க ஏன் இங்கே வரவேண்டும்? இந்த கோளில் ஏன் அவர் மறையவேண்டும்?”

“நான் சொன்னேனே, தற்செயலாக, அதாவது வழிதவறி என்று…”

“ஆம், ஆனால் அப்படி ஒரு தற்செயல் நடக்க ஏதேனும் நோக்கம் உள்ளதா? அதன் விளைவாக ஏதாவது நிகழவேண்டும் என்று எங்கோ ஏதோ திட்டம் உள்ளதா?”

“அது விபத்து.”

“எந்த கோளிலும் சென்று இறங்கலாகாது, எதனுடனும் எந்தத் தொடர்பையும் கொள்ளலாகாது என நம் கோளின் ஆணை. அதை க மீறியிருக்கிறார்,” என்றான் உ. “அது விபத்து அல்ல. அவருக்கு அப்படித் தோன்றியிருக்கிறது… ஏன் அப்படித் தோன்றியது? பிரபஞ்சத்தில் முன்னர் அப்படி எவருக்காவது தோன்றியுள்ளதா? அப்படி ஒரு நிகழ்வு முன்னர் நடந்திருக்கிறதா?”

“இல்லை என்றே நினைக்கிறேன்”

“அவ்வாறென்றால் இந்நிகழ்வுக்கு ஏதோ நோக்கம் உள்ளது. இதன் விளைவுகளுக்கும் அந்நோக்கம்தான் உள்ளது.”

“நீ இங்கே தேவையில்லாத சிந்தனைகளை நிறைய தெரிந்துகொள்கிறாய்,” என்று இ சொன்னான்.

“இல்லை, அவன் கேட்பது சரிதான்… அந்தவகையான கேள்விகள் எழாத எவருமில்லை. ஆனால் அவை வெறும்வெளியைச் சென்றுமுட்டி வீணாகத் திரும்பி வரும்… பதிலே இல்லை,” என்று அ சொன்னார்.

***

ஒவ்வொன்றும் இன்னொன்றுடன் பிணைக்கப்பட்டிருப்பதிலுள்ள அபத்தமே இதுவரை சிந்தனையாளர்களை திகைப்படையச் செய்துள்ளது. சிந்தனையாளர்கள் இரண்டுவகையினர். முதல்வகையினர் ஆணவத்தை அல்லது மிதமான மொழியில் சொல்வதென்றால் தன்னம்பிக்கையை இழப்பதே இல்லை. ஆகவே அவர்கள் கடைசிவரை ஏதாவது கொள்கைகளை உறுதியாக முன்வைத்துக்கொண்டே இருக்கிறார்கள். பிரபஞ்சம் என்னும் இந்த பிரம்மாண்டமான இயக்கத்தின் முன் தன்னம்பிக்கையுடன் நின்றிருப்பது என்பது அறியாமையின் உச்சம். ஆனால் நாம் போற்றும் அறிஞர்கள் அனைவருமே அந்த அறியாமை கொண்டவர்கள்தான். அவர்களே நினைவுகூரப்படுகிறார்கள், பயிலப்படுகிறார்கள், ஏனென்றால் அவர்கள்தான் எதையாவது சொல்லிச்சென்றிருக்கிறார்கள்.

இந்தப்பேருருவை கண்டு தன்முனைப்பழிந்து, மெல்ல தன்னிலையும் கரைந்து விடுபவர்களே எதையேனும் மெய்யாக அறிந்தவர்கள். அவர்கள் அறிந்தது தங்கள் அறியாமையையும் பிரபஞ்சத்தின் அறியமுடியாமையையும்தான். அவர்களிடம் ஒரு திகைப்பும் வெறிப்பும் உருவாகி அது ஒரு சிரிப்பாக மாறுகிறது. அவர்களையே நாம் யோகிகள் என்கிறோம். சித்தபுருஷர் என்கிறோம். ஆனால் அவர்கள் அப்படியே மறைந்துவிடுகிறார்கள். அவர்களுக்குப் பெரும்பாலும் பெயரடையாளங்கள்கூட இருப்பதில்லை. ஏனென்றால் அவர்கள் எதையும் சொல்வதில்லை. அவர்களின் இயல்புகளும் வெளிப்பாடுகளும் எல்லாம் ஒன்றே. ஏனென்றால் அவர்கள் கண்டறிந்ததும் ஒன்றே.

இங்கே ஒரு கருத்து ஏன் ஏற்கப்படுகிறது என்று பார்த்தால் அதிலேயே அறிவு என்பதன் மாபெரும் அபத்தம் திகழ்வதைக் காணலாம். ஒரு கருத்து நிறுவப்படவேண்டும் என நாம் எதிர்பார்க்கிறோம். நிறுவப்படுதல் என்றால் என்ன? அது ஏற்கனவே இருக்கும் அறிவுடன் சரியாகப் பொருத்தப்படவேண்டும். அதாவது ஏற்கனவே இருக்கும் அறிவுக்கு ஏற்புடையதாக, அதன் இயல்பான நீட்சியாக இருக்கவேண்டும். இரண்டாவதாக அது இன்றுள்ள நடைமுறையில் பொருத்திக்காட்டப்படவேண்டும். அது எத்தனை புத்தம்புதிய உண்மையாக இருந்தாலும் சரி, எத்தனை அன்றாடம் கடந்த அரிய உண்மையாக இருந்தாலும் சரி.

நாமறிந்த அறிவெல்லாம் நம் அறிவால் உருவாக்கப்படும் அறிவே. அறிவுக்கு அப்பால் ஓர் அறிதல் நமக்கு இயல்வதல்ல என்று பார்க்கையில் நாம் யார்? நாம் அறிவின் கைதிகளா என்ன? மீன் கடலின் கைதி என்பதுபோல ஒரு வேடிக்கைக் கூற்றுதான். ஆனால் அது உண்மைதானே? மீனால் கடலுக்கு அப்பாலுள்ள எதையேனும் அறியமுடியுமா என்ன? வெவ்வேறுவகையில் அது அறிந்துகொண்டிருப்பது கடலை மட்டும்தானே? அறிவின்மீதான நம்பிக்கைதான் மானுடனின் மாபெரும் சுய ஏமாற்று. அறிவு என்பதுதான் மானுடம் உருவாக்கிக் கொண்ட மாபெரும் அறியாமை.

ஓர் உதாரணம் வழியாக இதை விளக்கமுற்படுகிறேன். நீண்டகாலத்திற்கு முன்பு ஆப்ரிக்காவின் அன்றையநிலத்தில் அன்றைய ஆய்வாளர்கள் ஒரு பாறைத்துண்டைக் கண்டெடுத்தனர். ஜுராஸிக் காலகட்டத்தைச் சேர்ந்த ஒரு கைரேகைப் பதிவு. மானுடவிரலின் ரேகை போலவே இருந்தது அது. அந்தக் கை மனிதனின் தொல்வடிவமான ஏதோ விலங்குக்குரியது என்று ஆய்வாளர்கள் வகுத்தார்கள். வெவ்வேறு வகையான விவாதங்கள் அரைநூற்றாண்டுக் காலம் நடைபெற்றன. அந்த விலங்குக்கு ’பிரைம்-ஏ’ என்று பெயரிடப்பட்டது. பெயரிடப்பட்டதுமே அந்த விவாதம் அடங்கிவிட்டது.

அந்த விலங்கை விதவிதமாக உருவகித்து வரைய ஆரம்பித்தனர். இரண்டுகால்களில் நடமாடிய டைனோசர்கள், வெவ்வேறு வகையான தவளைகள் உட்பட ஏராளமான உடல்களின் விதவிதமான தொகுப்பாக அந்த உருவங்கள் அமைந்தன. அடுத்த ஐம்பதாண்டுகளில் அந்த விலங்குக்கு பொதுவாக ஏற்கப்பட்ட ஓர் உருவம் திரண்டுவிட்டது. மேலும் ஐம்பதாண்டுகளில் இன்னொரு விலங்கை எவராலும் உருவகம் செய்யமுடியாதபடி அது அனைவரிலும் நிலைபெற்றுவிட்டது. இன்று மானுடப் பரிணாமவியலில் அது ஒரு நிறுவப்பட்டுவிட்ட விலங்கு.

உண்மையில் அப்படி ஒரு விலங்கு இருந்திருக்க வாய்ப்பே இல்லை என்று ஒருவர் சொன்னால் அது அவ்விலங்கு பற்றிய வெவ்வேறு கொள்கைகளின் தொகுப்பில் ஒன்றாக ஆகும். அந்த விலங்கு ஜுராஸிக் காலகட்டத்திற்கு பூமிக்கு வந்த ஒரு வேற்றுக்கோள் உயிரினத்திற்குரியது என்றும், அந்த உயிரினம் மனிதனைப்போலவே இருந்தது என்றும், காரணம் அந்த கைரேகை இன்றைய மனிதனின் கைரேகைபோலவேதான் இருக்கிறது என்றும் சொன்ன ஆய்வாளர்கள் உண்டு. மனிதன் பரிணாமத்தில் உருப்பெற்ற உடல்கொண்டவன் அல்ல, அவன் இன்றிருக்கும் இதே உடலுடன் இங்கே வந்துசேர்ந்தவன் என்றார்கள் அவர்கள். அவர்களுக்கு அயற்கோள்வருகைக் கொள்கையாளர்கள் என பெயரிடப்பட்டது. அது சுருங்கி வருகைக்கொள்கை  என ஆகியது. Visitism மற்றும் visitist என்னும் சொற்கள் இருநூறாண்டுகள் புழக்கத்தில் இருந்து இன்று மறைந்து தொல்ஞான ஆய்வாளர்களால் மட்டுமே கையாளப்படுகின்றன.

அந்த ரேகை கண்டடையப்பட்டு நூற்றியிருபதாண்டுகளுக்குப் பின் அது கண்டெடுக்கப்பட்ட நிலத்தை ஆட்சிசெய்த மோரு என்னும் சர்வாதிகார ஆட்சியாளர் ஒருவர் அந்த கைரேகை தன்னுடைய மூதாதையருடையது என்றும், இந்த பூமிக்கே தாங்கள்தான் உரிமையாளர்கள் என்றும் வாதிட்டார். அவருக்கு அந்நிலப்பகுதியின் பெரும்பாலான மக்களின் ஆதரவு உருவாகியது. அந்த படிவுப்பாறையை தன்னிடம் திரும்ப அளிக்கவேண்டும் என்று அவர் கோரினார். அந்தப் பாறை அமெரிக்கக் கண்டத்தின் முதல்நிலை ஆய்வகம் ஒன்றில் இருந்தது. அவர்கள் உறுதியாக மறுத்துவிட்டனர்.

நீண்ட போராட்டத்திற்குப் பின் அந்த சர்வாதிகாரி இன்னொரு திட்டத்தை உருவாக்கினார். அந்த கல்லில் இருந்த கைரேகையை அப்படியே நுணுக்கமாகப் நகல்செய்துகொண்டார். அதை விரிவாக்கி விரிவாக்கி விரிவாக்கி ஒரு நகருக்கான வரைபடமாக ஆக்கினார். அப்படியே அந்த கைரேகையைப்போலவே மோரு என்னும் நகரம் உருவாக்கப்பட்டது. அந்தக் கைரேகையின் கோடுகளும் வரிகளும்தான் மோரு நகரின் தெருக்களும் சாலைகளும். அதன் மையச்சுழிப்பில் சர்வாதிகாரி மோருவின் மாளிகை அமைந்திருந்தது. அதைச்சுற்றி ராணுவத்தலைவர்களின் மாளிகைகள் இருந்தன. வெளிச்சுற்றில் ஏவலர்கள், மற்றும் கீழ்மக்களின் இல்லங்கள் அமைந்தன.

மோரு நகரத்தை முதன்மையான வரைவாளர்களும் பொறியாளர்களும் இணைந்து முப்பத்தைந்தாண்டுகளில் நுணுக்கமாக உருவாக்கினார்கள். சர்வாதிகாரி மோருவின் மகன் இரண்டாம் மோரு காலகட்டத்தில்தான் அந்நகர் கட்டி முடிக்கப்பட்டது. விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட அந்நகரின் புகைப்படங்கள் அக்காலகட்டத்தில் புகழ்பெற்றிருந்தன. அப்புகைப்படங்களை அந்த கல்லில் இருந்த கைரேகையின் புகைப்படங்களுடன் ஒப்பிட்டு அவை எப்படி பிரித்தறியமுடியாதபடி ஒன்றுபோல் உள்ளன என வியப்பது அன்றைய ஆப்ரிக்கநிலத்து மக்களின் கொண்டாட்டங்களில் ஒன்றாக இருந்தது என சில அக்கால நூல்களில் எழுதப்பட்டுள்ளது.

பின்னர் தொடர் இயற்கைநிலைமாறுதல்களால் மானுடர்களால் ஆப்ரிக்க நிலமே கைவிடப்பட்டது. மோரு நகர் முழுமையாகவே மறக்கப்பட்டு, அங்கே உருவாகி வந்த காட்டினால் மூடப்பட்டது. அடுத்த நூறாண்டுகள் உலகம் அன்று தொடர்ச்சியாக நிகழ்ந்த தீவிரமான இயற்கை மாறுதல்களுக்கு ஏற்ப தன்னை தகவமைத்துக் கொள்வதற்கான போராட்டத்தில் இருந்தமையால் அப்படி ஏராளமான பழைய நிலங்கள் எவராலும் கவனிக்கப்படாமல் மறைந்தன. ஏராளமான உயிரினங்கள் எப்போதைக்குமாக மறைந்தன. புவியெங்கும் இருநூறுகோடிபேருக்கு மேல் மடிந்திருக்கலாம் என கணக்கிடப்படுகிறது. மெல்ல புதிய நாடுகள், நகரங்கள் உருவாகி வந்தன. புதிய அரசுகளும், அரசுமுறைகளும் பிறந்தன. மீண்டும் உலகமெங்கும் நிலைத்த தன்மை உருவாகி வந்த பிறகுதான் அழிந்த நிலங்கள் மற்றும் கைவிடப்பட்ட இடங்கள் பற்றிய ஆர்வம் உருவாகியது. பழைய நாடுகளும் நகரங்களும் கண்டையப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டன.

அவ்வாறுதான் ஆய்வாளர்களால் மோரு மீண்டும் கண்டடையப்பட்டது. அந்நகரம் எங்கிருக்கிறது என்பதை ஆய்வாளர் தேடிக்கொண்டே இருந்தபோது ஒரு பெரும் காட்டுத்தீ அந்நகர்மேல் பரவியிருந்த பச்சைப்போர்வையை விலக்கி அந்நகரை மேலே கொண்டுவந்தது. புவியின் ஒருங்கிணைந்த அரசு அளித்த நிதியுதவியுடன் மோரு மீட்கப்பட்டது. பூமியில் இருந்து மறைந்துவிட்ட நாகரீகங்கள் திகழ்ந்த நிலங்களுக்குச் சுற்றுலா செல்வது அன்றைய மக்களுக்கு மிகுந்த ஆர்வமுள்ள ஒரு கேளிக்கையாக இருந்தது. ஆகவே மோரு ஒரு பெரிய ஒரு சுற்றுலா மையமாக ஆகியது. கணக்குகளின்படி ஒரு நாளைக்கு ஒருலட்சம்பேர் வரை அங்கே சென்று வந்தனர். அந்நகர் மீண்டும் கட்டி எழுப்பப்பட்டது. அந்த கைரேகை வடிவத்திற்கு எந்த வகையிலும் சிதைவு நிகழாதபடி பொறியாளர் மட்டும் வடிவமைப்பாளர்களின் வழிகாட்டுதலின்படி அங்கே விடுதிகளும் கேளிக்கைமையங்களும் அமைக்கப்பட்டன. மீண்டும் விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட கைரேகைப்படங்கள் மக்களிடையே புகழ்பெறலாயின.

மீண்டும் என் வினாவுக்கே வருகிறேன். இந்த ஒவ்வொரு மாற்றங்களிலும் இருக்கும் மாபெரும் அபத்தம் பற்றித்தான் நான் சொல்லிக்கொண்டிருக்கிறேன். இவை ஏன் நிகழ்கின்றன, எந்த வகையில் ஒன்றுடனொன்று தொடர்புகொண்டிருக்கின்றன என்பதற்கு ஏதேனும் ஒரு விளக்கத்தை எவரேனும் அளிப்பார்கள் என்றால் அவரைப்போல் அறிவிலி இருக்க முடியுமா என்ன? உதாரணமாக இந்த கைரேகை, இது உண்மையில் என்ன? அது மண்ணில் பதிந்து அத்தனை லட்சம் ஆண்டுகள் நீடித்து அழியாமல் கண்டடையப்பட்டு பேருருவம்கொண்டு நீடிப்பதற்கு ஏதேனும் நோக்கம் இருக்கமுடியுமா என்ன? பூமியின் அளவைக்கொண்டு பார்த்தால் இந்த கைரேகை என்பது துளியினும் துளியினும் துளி. கோடானுகோடி மணல்துளிகளில் ஒன்றுபோல போகவேண்டியது. ஆனால் அது பிடிவாதமாக நீடிக்கிறது. அப்படிப்பார்த்தால் அதற்கு ஒரு நோக்கம் உள்ளது. ஆனால் முழுக்க முழுக்க தற்செயல். முழுக்கமுழுக்க அர்த்தமின்மை.

வானம் நம் தலைக்குமேல் திறந்து கிடக்கும் ஒரு மாபெரும் வாசல். நம்மால் அதை மூடவே முடியாது.  ‘கதவற்ற வீட்டில் வாழும் பாதுகாப்பற்றவர்கள் நாம்’. புகழ்பெற்ற அறிவியலாளர் கார்ஜ் சொன்ன இந்த வரி எனக்கு மிக உவப்பானது. அதிலுள்ள பயங்கரம் என்னை எப்போதுமே அதிரச்செய்கிறது. ஆனால் அதைவிட பயங்கரமானது இங்கே நிகழ்ந்துகொண்டிருக்கும் எதையும் எந்தவகையிலும் நாம் அறியவே முடியாது என்பதுதான். நாம் அந்த அறியமுடியாமையை மழுப்பி, நமக்கொரு ஆறுதலை உருவாக்கிக்கொள்ளும் பொருட்டு அறிவு என்னும் மாயையை உருவாக்கிக்கொண்டிருக்கிறோம். கதவற்ற வீட்டுக்கு திரையை போட்டுக்கொள்வதுபோல. நம் முன்னோர் வானம் என்பது நீலநிறமான ஒரு அரைக்கோளக் கூரை என்றும், ஊடுருவமுடியாத மறைப்பு அது என்றும் நம்பினர். நாம் அறிவு என நம்பிக்கொண்டிருப்பதும் அதைப்போன்ற ஒன்றுதான் இல்லையா?

***

விண்கலத்தின் பன்னிரண்டு அடுக்குகள் முழுமையாகவே இயந்திரங்களுக்குரியவை. அங்கே இயந்திரர்கள் மட்டுமே செல்வது வழக்கம். அவை மேலிருக்கும் அடுக்குகளுடன் ஒரு பாலம்போன்ற அமைப்பால் இணைக்கப்பட்டிருந்தன. அதனூடாக சிறிய பறக்கும் குமிழி ஒன்றுக்குள் அ வும் உவும் இயும் ச வும் இயந்திரங்களின் பகுதிக்குள் நுழைந்தனர்.

“இங்கே நிகழ்வன அனைத்தையும் நாம் திரைகளில் பார்த்துவிட முடியும். ஒவ்வொரு கணமும் இப்பகுதி முழுமையாகவே கண்காணிக்கப்படுகிறது. ஆயினும் ஒருமுறை நேரில் பார்க்கவேண்டும் என விரும்புகிறேன்,” என்று அ சொன்னார். “நான் பார்க்க விரும்புவது இங்கிருக்கும் 00032அ12 என்னும் கருவியைத்தான்”

“அது ஒரு அழிப்பான்” என்று இ சொன்னார்.

“ஆம், நம் கோளிலுள்ள மிகப்பெரிய அழிவுக்கருவி அதுதான். ஒரு பெரிய கோளை ஒரே கணத்தில் ஆற்றல்மிக்க குவிகதிர் வழியாக உடைத்து துண்டுகளாகச் சிதறடித்துவிடும் ஆற்றல்கொண்டது…”

“நாம் இந்த நீலக்கோளை அழிக்கவிருக்கிறோமா?”

“நமக்கு அப்படி எந்த நோக்கமும் இல்லை. நாம் வந்தது அறிவதற்காக மட்டும்தான். ஆனால் இந்தக் கருவி நீண்டகாலம் முன்பு இந்தக் கலம் இங்கே வந்தபோது தாக்குதலுக்காக தயார்நிலையில் வைக்கப்பட்டிருக்கிறது. தாக்குதலுக்கான ஆணை அளிக்கப்படவில்லை. ஆணையைக் காத்து அது இத்தனைகாலம் அதே நிலையில் நின்றிருக்கிறது…” என்று அ சொன்னார். “நான் அந்தக் கருவியில் ஏதேனும் மாற்றம் நிகழ்கிறதா, அது எதையேனும் அடையாளம் காண்கிறதா என்று அறியவிரும்புகிறேன். நான் இத்தனை தொலைவு வந்ததே இதற்காகத்தான்.”

***

இதோ நாம் மானுடத்தின் விந்தையான இடமொன்றில் இந்த நாளைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். நண்பர்களே, இன்று காலை வானியலாளர்கள் ஒன்று சொன்னார்கள், விண்ணில் ஒரு புதிய எரிகோள் தென்பட்டுள்ளது. அது பூமியைச் சுற்றிவந்துகொண்டிருக்கிறது. அது ஒரு விண்கலமாக இருக்கலாம் என்று ஒரு சாரார் சொன்னார்கள். அதைப்பற்றிய விவாதம் நிகழ்ந்தபோது நான் சொன்னேன், அந்த விண்கலத்தில் இருப்பவர்கள் மானுடனின் கைரேகையை பார்ப்பார்கள் என்று. ஆம், எவ்வளவு விந்தையானது இல்லையா?

இனியவர்களே, இந்த நகரம் போல் ஒன்று மானுடநாகரீகத்தில் இதற்கு முன் உருவானதில்லை. இந்நகரம் நம் தொல்மூதாதையின் ஒரு சிறு கைரேகையிலிருந்து பேருருக்கொண்டது. இதற்கு முன்பு இத்தகைய வேறுசிலவும் பூமியில்  இருந்திருக்கின்றன. உதாரணமாக, தென்னமெரிக்கக் கண்டத்திலுள்ள நாஸ்கா  கோட்டுப்படங்களைச் சொல்லலாம். ஏறத்தாழ 1300 கிலோமீட்டர் அளவுக்கு, ஐம்பது சதுரகிலோமீட்டர் பரப்புக்கு வரையப்பட்டுள்ள நாஸ்கா கோட்டுப்படங்களின் நோக்கம் என்ன, பயன் என்ன என்று எவருக்கும் தெரியாது. விண்ணிலிருந்து பார்த்தால் மட்டுமே அவை சரியாகத் தென்படும். அவை வரையப்பட்டு பல ஆயிரம் ஆண்டுகளுக்குப்பின் விண்வெளி படங்கள் வந்தபின்னரே அவை சரியாக பார்க்கப்பட்டன. மனிதனால் உருவாக்கப்பட்ட அத்தகைய பல தொன்மையான வடிவங்கள் புவியில் மேலும் உள்ளன. நாம் அறியாதவையும் இருக்கலாம். நாம் இயற்கையான விண்கல்பள்ளங்கள் என நினைப்பவை கூட இவ்வாறு உருவாக்கப்பட்டவையாக இருக்கலாம்.

ஆனால் இந்நகரம் நாமறிந்த வரலாற்றில் உருவானது. நாம் கேட்டுக்கொள்ள வேண்டியது ஒன்றே. இந்த மிகமிகச் சிறிய தடம் ஏன் பிடிவாதமாக மானுடப்பண்பாட்டில் நீடிக்கிறது? ஏன் அது கண்டையப்பட்டது? ஏன் அது பேருருக் கொண்டது? புவியின் இந்த பிரம்மாண்டமான நிகழ்வில் அந்த கையொப்பம் ஏன் போடப்பட்டுள்ளது? இது மானுடத்தின் அறைகூவல். தலைக்குமேல் திறந்திருக்கும் வெட்டவெளியை நோக்கி, அதன் அறியமுடியாத முடிவின்மையை நோக்கி மானுடம் தன் விரலடையாளத்தை நீட்டுகிறது.  இதோ நான் என்கிறது. நாம் இங்கே துளித்துளியாகத் திரட்டி வைத்திருக்கும் மானுட அறிவு என்னும் பெருந்தொகையின் அடையாளம் என ஒன்றைச் சொல்லமுடியும் என்றால் அது இதுதான். ஆம் நண்பர்களே, மானுடநாகரீகம் கலை என்றும், இலக்கியம் என்றும், தத்துவம் என்றும், அறிவியல் என்றும் திரட்டித்தொகுத்துள்ள அறிவின் நோக்கம் என்ன என்றால் இதோ இதுதான்… வெல்க மானுடம்! இந்த தருணத்தில் நம் மதுக்கிண்ணங்களைத் தூக்கி ஆர்ப்பரிப்போம். மானுடம் வெல்க! 

***

அ தன் நண்பர்களுடன் பறந்த அந்த சிறுகுமிழி ஊர்தி நீண்ட குழாய் போல பேருருக்கொண்டு பாதி விண்கலத்தின் உள்ளேயும் எஞ்சியபகுதி வெளியேயுமாக இருந்த அந்த ஆயுதத்தின் அருகே சென்று மொய்த்து மொய்த்துப் பறந்தது.

“இதை நாம் எவ்வகையிலும் இயக்கமுடியாது… இதை கட்டுப்படுத்த, அல்லது அவிழ்த்து பிரித்துவிட சென்ற காலகட்டங்களில் பலர் பலவகையிலும் முயன்றிருக்கின்றனர். இத்தகைய கருவிகள் ஒரே ஒருவருக்கு முழுமையாகக் கட்டுப்பட்டவையாக இருக்கும்,” என்றார் அ.

அவர்கள் அதைச் சுற்றிச் சுற்றிப்பறந்தனர். “எந்த மாற்றமும் இல்லை. எதையும் அது உணரவில்லை. எப்போதும் அது எப்படி இருந்ததோ அப்படியே அது இருக்கிறது” என்றார் இ.

“நாம் என்ன செய்ய போகிறோம்? க இறங்கியதுபோல இந்த நீலநிறக் கோளத்தில் இறங்கவிருக்கிறோமா?”

“இல்லை, அவர் இறங்கியிருந்தால் அது ஒரு விபத்து, அல்லது விதிமீறல். நாம் வேறு கோள்களில் ஊடுருவக்கூடாது. அவற்றின் ஒத்திசைவைக் குலைக்கக்கூடாது. அது பிரபஞ்ச நியதி என நம் அறிஞர்களால் கண்டடையப்பட்டு வகுக்கப்பட்டது…”

“அ, என் ஐயம் என்னவென்றால் அவர் அங்கே வேண்டுமென்றே இறங்கியிருந்தால்…” என்று இளைஞனான உ கேட்டான்

“அப்படியென்றால் அந்த கோளின் சமநிலை அப்போதே குலைந்துவிட்டிருக்கும். சமநிலைக்குலைவு தானாகவே அழிவை தேடிக்கொள்ளும்,”

“அப்படித் தெரியவில்லை… அங்கே உயிர்கள் நிறைந்திருக்கலாம் என்றுதான் தோன்றுகிறது. நேற்று முழுக்க நான் அதன் படங்களை விரிவாக்கம் செய்து பார்த்துக்கொண்டே இருந்தேன். அங்கே நுணுக்கமான அசைவுகள் நிறைந்துள்ளன. நீரிலும் கரையிலும்…”

“இருக்கலாம், ஆனால் ஊடுருவலும் சமநிலை குலைவும் நிகழ்ந்துவிட்டது என்றால் அதற்குள் அழிவு பொறிக்கப்பட்டுவிட்டது” என்றார் அ. தன் கருவியை இயக்கி கலத்தினுள் இருந்த எ விடம் “கலம் திரும்பட்டும்….நாம் மீள்வோம்” என்றார்.

அந்தக்கலம் விண்வெளியில் திரும்பியது. அதன் ஒருபக்கச் சாளரத்தில் இருந்து மாபெரும் மஞ்சள்நிறமான சூரியன் விலகி மறைந்தது. மறுபக்கம் சாளரம் வழியாகப் பார்த்துக்கொண்டிருந்த இ “அது என்ன?” என்றார்

கீழே நீலநிறமான கோளத்தில் ஒரு கைரேகைப்பதிவு தெரிந்தது. “கைரேகைப்பதிவு… இத்தனை தொலைவுக்கு தெரிகிறதென்றால் அது ஒரு பெரும் கட்டுமானம், ஆனால்…”

அக்கணம் அந்த பெரிய தாக்குதல்கருவியின் கண்காணிப்பானின்  சிவப்புநிறக் கண்கள் மின்னின. அதனுள் மெல்லிய ரீங்காரத்துடன் கருவிகள் உயிர்கொண்டன. “அதை இயக்கும் ஆணை அந்த கைரேகை” என்று அ கூவினார். ”அது  நம் முன்னோடியான க வின் கைரேகை”

ஆயுதம் முழுமையாகவே விண்கலத்திலிருந்து புடைத்து வெளியே நீண்டது.

“அழகிய கோளம்” என்று அ அனுதாபத்துடன் சொன்னார்.

(முற்றும்)

7 comments for “மேலே திறந்து கிடக்கிறது…

  1. Krishnan Sankaran
    January 3, 2025 at 6:33 pm

    கருத்துக்களைத் தொகுத்துக்கொள்ளவே மூச்சுத்திணறச்செய்யும் பிரம்மாண்ட வெளியில் நிகழும் பிரம்மாண்டக் கதை. நாம் வியாழனிலும் நிலவிலும் பதித்துக்கொண்டிருக்கும் கைரேகைகள் நம்முடைய எந்த ஆயுதத்தைக் கிளர்ந்தெழச்செய்ய? எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம் என்ற மௌனியின் கேள்வி நிஜமாகவே எழுகிறது. உலக இலக்கியப்பரப்பில் தன் ரேகையைப் பதிக்க நீண்டிருக்கும் அந்தக்கைகள் எழுதி எழுதி மேற்செல்லட்டும்..வாழ்த்துக்கள் ஜெ.

  2. ராகவ்
    January 3, 2025 at 11:20 pm

    விஷ்ணுபுரம் நாவல் ஒரு short storyயாக மாறியது போல ஒரு சின்ன துணுக்குறல் ..

  3. January 6, 2025 at 12:25 pm

    பிரம்மாண்டம். சராசரி மனிதன் சிந்திக்க முடியாத அளவுக்கு கதை விரிகிறது.

  4. January 17, 2025 at 12:51 am

    உள்வாங்கவே இரண்டு மூன்று முறை படித்தாக வேண்டும். மனிதனின் அறிவை பிரித்தரிந்து கொள்ள சிறப்பான கதை வடிவம். ஆசானின் உருவாக்கம் என்னை பிரமிக்க செய்தது..

  5. kavignar Ara
    January 20, 2025 at 2:28 pm

    nice story really fantastic

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...