
எழுத்தாளர் அரவின் குமாருக்கு இளம் எழுத்தாளர் விருது வழங்குவது குறித்து நண்பர்களிடையே எவ்விதமான மாற்றுக் கருத்தும் இல்லை. 2020க்குப் பின்னர் எழுத வந்தவர்களில் அரவின் குமார் தனித்துவமானவர். புனைவு, அ-புனைவு என இரண்டிலும் இடைவிடாது இயங்குபவர். அவரை ஊக்குவிப்பதும் அடையாளப்படுத்துவதும் வல்லினம் குழுவின் பொறுப்பு என்பதை அனைவருமே அறிந்திருந்தோம்.
விருது வழங்குதல் என்பது பணத்தையும் பரிசையும் மேடையில் ஒருவருக்கு வழங்குவதால் முழுமை பெறுவதில்லை. அப்படிச் செய்வது, ஒரு செயற்கையான செடியில் ஒட்டவைக்கப்பட்டுள்ள பூவை ரசிக்கும் பாவனை மட்டுமே. ஓர் உயிர்ச் செடி, தனது அத்தனை வளமான சாரத்தையும் திரட்டித் திரட்டி வண்ணமிக்க ஒளிவடிவமாக உலகுக்கு வெளிபடும் தருணமே மலர் பூத்தல். அந்த மலர் மணமெழுப்பி பூமிக்குத் தன் வருகையை அறிவித்துக் கொள்கிறது. அப்படி அது மணக்க நம் கண்ணுக்குத் தெரியாத வேருக்குப் பங்குண்டு. மிகச் சரியாக முன்னெடுக்கப்படாத விருதுகள் அனைத்தும் வேர்களற்ற நெகிழிப்பூக்கள்தான் என்பதில் எனக்கு அசையாத நம்பிக்கை உண்டு. எனவே, விருது விழாவிற்கு முன்னமே சில ஏற்பாடுகளைக் கவனமாகச் செய்ய வேண்டியிருந்தது.
முதலாவது, அரவின் குமார் விருது பெறுவதை மார்ச் மாதம் நடந்த மலாய், சீன இலக்கிய அறிமுகக் கலந்துரையாடலில் எழுத்தாளர்கள் எஸ்.எம். சாகீர், முனைவர் புளோரன்ஸ் முன்னிலையில் எழுத்தாளர் அ. பாண்டியன் மூலம் அறிவிக்கப்பட்டது. அவ்வறிவிப்பைச் செய்யும் வரை அரவின் குமாருக்கும் அது குறித்த தகவல் தெரியாது. அவர் அதிர்ச்சியுடன் நின்றுக் கொண்டிருக்க, இப்படி ஒரு விருது, இளம் தமிழ் எழுத்தாளர்களுக்கு வழங்கப்படுவதைப் பிற மொழி ஆளுமைகள் முன் அழுத்தமாகவே பதிவு செய்யப்பட்டது.
விருதுகளும் அறிவிக்கப்படும்போதே சர்ச்சைகளும் இணைந்து கொள்கின்றன. ”அரவின் குமார் உங்கள் அமைப்பில் உள்ளவர்தானே. உங்கள் அமைப்பில் உள்ளவருக்கே எப்படி விருது வழங்குகிறீர்கள்?” எனச் சிலர் கேட்டனர்.
முதலில் வல்லினம் என்பது ஓர் அமைப்போ இயக்கமோ அல்ல என்பதை பல முறை நான் தெளிவுப்படுத்தியுள்ளேன். அது இலக்கியத்தில் ஒத்தச் சிந்தனை கொண்ட நண்பர்கள் இணைந்து இயங்கும் குழு. ஒத்த சிந்தனை கொண்டவர்கள் இணைந்துதானே பயணிக்க முடியும். இணைந்து இயங்குதல் என்பது படைப்பிலக்கியங்கள் வழியாகப் பங்களித்தலும்தான். அப்படி அரவின் குமாரின் கணிசமான படைப்புகள் வல்லினம் இதழில் வெளிவந்துள்ளன. அவரது படைப்பிலக்கியங்களை வல்லினத்தில் பிரசுரிப்பதனாலேயே அவர் விருது பெற தகுதியற்றவராகிவிடுவாரா என்ன? இன்னும் சொல்லப்போனால் சிறப்பாக எழுதும் இளம் எழுத்தாளர்களை நாங்கள் தேடிப் பிடித்துப் படைப்புகளைப் பெறுகிறோம். அப்படியானால் வருங்காலத்தில் விருது பெறும் தகுதி கொண்ட ஒருவரின் படைப்புகளை வல்லினத்தில் பிரசுரிக்கக் கூடாதா?
ஓர் எழுத்தாளரிடம் இப்படி விளக்கம் கூறியப் பின்னர் ”அப்படியென்றால் அரவின் குமாரைவிட சமகாலத்தில் வேறு சிறந்த புதிய படைப்பாளிகள் இல்லை என்கிறீர்களா?” என்றார் குதர்க்கமாக.
”இருக்கலாம். அப்படி இருந்தால் அதை நிரூபிக்க வேண்டியது உங்கள் பொறுப்பு. நாங்கள் எங்கள் வாசிப்பின் வழியாகச் சமகாலத்தில் கண்டடைந்த சிறந்த படைப்பாளி அரவின் குமார். உங்கள் பார்வையில் வேறொருவர் இருந்தால் அவர் ஏன் முக்கியமானவர் என்று அவர் படைப்புகள் வழியாக நிறுவி அவரைக் கௌரவிக்கும் பொறுப்பை நீங்களே எடுத்துக்கொள்ளலாம். நானும் அவ்விழாவில் கலந்து கொள்கிறேன்,” என்றேன்.
”அப்படியல்ல…” என இழுத்துவிட்டு வேறு கதைக்குச் சென்றுவிட்டார்.

இப்படிச் சல்லித்தனமான கருத்துகளுக்குச் சிரித்தபடி பதிலளித்துக் கொண்டே விழாவுக்கான பணிகளை முடுக்க வேண்டியிருந்தது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இவ்விருது அபிராமி கணேசனுக்கு வழங்கப்பட்டபோது ரிம 2000 மட்டுமே விருது தொகையாகத் தீர்மானிக்கப்பட்டது. இம்முறை இரண்டாயிரம் ரிங்கிட் தொகையுடன் விருது பெறுபவரின் நூலையும் பதிப்பிக்கலாம் எனத் திட்டமிட்டோம். அரவின் குமாரின் சிறுகதைகளைத் தொகுக்கலாம் என்பது என் திட்டம். அரவின் குமாருக்கு வேறு திட்டங்கள் இருந்தன.
தன் முதல் நாவல் விருது விழாவை ஒட்டி வெளி வர வேண்டும் என அவர் விரும்பினார். அம்முயற்சி தாமதமாகவே அவரது சிறுகதைகளைத் தொகுக்கும் பணி முடுக்கப்பட்டது.
அரவின் குமாரின் முதல் தொகுப்பு மிகச் சிறந்ததாக வெளிவர வேண்டும் என்பதில் கவனமாக இருந்தேன். முதல் தொகுப்பின் வழியாக எழுத்தாளனுக்குக் கிடைக்கும் ஏற்பு இலக்கியச் சூழலில் முக்கியமானது. எனவே, அவருடன் சுமார் மூன்று நாட்கள் அனைத்துச் சிறுகதைகள் குறித்தும் நேரடியாகச் சந்தித்து உரையாடி அவர் வழியாகவே சிறுகதைகளைச் செறிவாக்கும் பணி நடந்தது. அரவின் அடிப்படையில் புனைவு எழுத்தாளர். தீவிரமான வாசிப்பு கொண்டவர். எனவே, எங்கள் உரையாடல் வழியாக அவர் சிறுகதையில் செய்ய வேண்டிய நுட்பமான மாற்றங்களை எளிதாகக் கண்டு கொண்டார். மிக விரைவாகவே சிறுகதைகளை மேம்படுத்தினார்.
நான் வழக்கம் போல என் அறையில் மிகப் பெரிய மனவோட்டவரை ஒன்றை வரைந்து, செய்து முடிக்க வேண்டிய ஒவ்வொரு பணியையும் நிறைவேற்றியபடி இருந்தேன். விழாவுக்கு முதல் நாள், வல்லினம் இலக்கிய முகாம் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால் இரட்டிப்பான பணிகள் சூழ்ந்திருந்தன.
விருது விழா நெருங்கிக் கொண்டிருக்கும்போது சீன பயணத்திற்கான அழைப்பு வந்தது. என்னால் உடனடியாக எதையும் முடிவெடுக்க முடியவில்லை. ஆனால், வல்லினத்தின் செயல் திட்டங்களை அடுத்த தலைமுறையினர் மேலும் சிறப்பாகவே முன்னெடுப்பார்கள் எனும் நம்பிக்கை இருந்தது. ஓர் இணைய சந்திப்பை ஏற்பாடு செய்து வேலைகளைப் பகிர்ந்து கொடுத்தேன்.
***
அரவின் குமாரின் படைப்புகள் சமகாலத்தில் மலேசியாவில் எழுதப்படும் புனைவுகளில் தனித்துவமானது என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை. ஆனால், அது வெறும் கருதுகோளாகிவிடக் கூடாது. எனவே, எவ்வித சமரசமும் இல்லாமல் விமர்சனங்களை முன் வைக்கும் எழுத்தாளர்களிடம் அணுகி அரவின் சிறுகதைகள் குறித்து விமர்சனக் கட்டுரை கேட்கும் எண்ணம் இருந்தது. அப்படி எழுத முன் வந்தவர்கள் எம். கோபாலகிருஷ்ணன் மற்றும் லதா.

இருவருமே இளம் படைப்பாளிகள் வளர்ந்து வர வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டவர்கள். எனவே அரவின் குமாரின் பத்து சிறுகதைகளை வாசித்து விரிவான கட்டுரைகள் வழங்கினர். இரண்டுமே அரவின் குமாரின் புனைவுலகைக் கூர்மையாக அவதானித்து அவற்றின் கலை குறைபாடுகளைச் சுட்டிக்காட்டியும் கதைகளில் காணப்படும் புதுமையான வாழ்வியல் சூழலைப் பாராட்டியும் எழுதப்பட்டிருந்தன.

இதற்கிடையே கடந்த ஐந்து ஆண்டுகளில் எழுத வந்த புதிய எழுத்தாளர்களின் சிறுகதைகள் குறித்த உரையாடல் ஒன்றையும் உருவாக்கத் திட்டமிட்டோம். அதற்காக தயாஜியின் உதவியை நாடினேன். நூல்களாகவும் உதிரியாகவும் வந்த சிறுகதைகளைச் சேகரித்து அவற்றில் சிறந்த சிறுகதைகளை அடையாளம் காட்டுவதுதான் திட்டம். தயாஜியால் அப்படிச் சேகரிக்கப்பட்ட தொகுப்புகளும் உதிரியான சிறுகதைகளும் எழுத்தாளர்கள் கி. இளம்பூரணன், விஜயலட்சுமி, ஶ்ரீதர் ஆகியோருக்கு இரண்டு மாதங்களுக்கு முன்னமே பகிர்ந்தளிக்கப்பட்டன. அந்த அரங்கின் வழியாக அரவின் குமாரின் சமகாலத்தவர்களால் எழுதப்பட்ட சிறந்த சிறுகதைகளை அடையாளம் காட்ட முடிவதோடு புதிய எழுத்தாளர்களையும் கவனப்படுத்த முடியும் எனும் நம்பிக்கை இருந்தது. ஆனால் பல புதிய படைப்பாளிகள் தங்கள் சிறுகதைகளை வழங்கத் தயங்கினர். விமர்சனத்தின் மேலுள்ள அச்சம் அதற்குக் காரணம். தங்களைப் பாராட்டும் வட்டத்திற்குள் வாகாக அமர்ந்துகொள்ளும் எண்ணம் புதிய எழுத்தாளர்களுக்கு இருந்தது வருத்தமளித்தது.

இவையெல்லாம் ஒரு பக்கம் சென்றுக் கொண்டிருந்தாலும் எப்போதும் போல நிகழ்ச்சிக்கான போதிய பணம் இல்லாமல் கொஞ்சம் தடுமாறிதான் கிடந்தேன். தமிழாசியாவில் கிடைக்கும் சொற்பமான லாபத்தை மூலதனமாகக் கொண்டு பணிகளைத் தொடங்கினேன். ஆங்காங்கு முன்பணம் செலுத்தி உறுதிச் செய்ய அது உதவியாக இருந்தது.
எந்த நிகழ்ச்சியை முன்னெடுக்கும்போதும் போதிய பணம் கைக்கு எப்படியும் வந்து சேர்ந்துவிடும் என்பதில் எனக்கு எந்தக் குழப்பமும் இருந்ததில்லை. ஒரு திட்டம் பணமின்றி தோல்வியடைவதாக ஒருவர் கூறும்போது நான் அந்தத் திட்டத்தின் மீதுதான் சந்தேகம் கொள்வேன். காரணம் பிரபஞ்சம் சரியான திட்டங்கள் எதையும் நிறைவேற்றாமல் இருந்ததில்லை. அப்படி நம் திட்டங்கள் நிறைவேற மூன்று விடயங்கள் அடிப்படையானவை.
அ. இந்தத் திட்டத்தினால் இதை முன்னின்று செயல்படும் நான் பண ரீதியாக எவ்வித லாபமும் அடையப் போவதில்லை; மாறாக இத்திட்டத்தில் எனது தனிப்பட்ட பங்களிப்பும் பண ரீதியாகவும் உழைப்பு ரீதியாகவும் இணைந்திருக்கும் என்ற உறுதிப்பாடு.
ஆ. இந்தத் திட்டம் என் நன்மைக்கானதல்ல; இது முழுக்க முழுக்க இன்னொருவர் நன்மைக்காக அதன் வழி சமுதாய வளர்ச்சிக்கானது என்ற தெளிவு.
இ. இந்தத் திட்டத்தால் கிடைக்கும் புகழோ பாராட்டுகளோ எனக்கானதல்ல; நான் இதை செயல்படுத்திய ஒரு கருவி மட்டுமே. எனவே, காதில் விழும் பாராட்டையும் விமர்சனத்தையும் நான் ஏந்திச் செல்லப்போவதில்லை என்ற எண்ணம்.
நான் மிக உறுதியாக இந்த மூன்று விடயங்களையும் கடைப்பிடித்து வருகிறேன். என் எழுத்துகளன்றி நான் இலக்கியச் சூழலில் என்னுடையது என எதையும் முன்வைப்பதில்லை. எனவே, பிரபஞ்சம் என்னுடன் ஒத்திசைந்து அனைத்தையும் நடத்திக் கொடுக்கும் என்பதில் எனக்கு எந்தக் குழப்பமும் இல்லை. ஆனால், அது நிகழ தாமதமானது.

இப்படி ஒரு நிகழ்ச்சியை நடத்தப் போகிறோம் எனும் அறிவிப்பை வெளியிட்ட பிறகு தானாக முன் வந்து எனக்கு நிதி உதவி வழங்கினார் சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி. அதுபோல, ”உங்களுக்கு பணவுதவி தேவையா?” எனக் கேட்டு தன் தோழர்கள் வழியாக கணிசமான தொகை ஒன்றை வழங்கினார் சுப்புலட்சுமி டீச்சர். அன்னபூரணா மலை ஏற்றத்தில் அரவின் குமார் அறிமுகம் ஏற்பட்டதால் அவருக்காகச் செய்யப்படும் விழாவில் தன் பங்கு இருக்க வேண்டுமென எழுத்தாளர் கோகிலவாணி முன் வந்து பணம் வழங்கியது மறக்க முடியாதது. வல்லினம் தொடங்கிய காலம் தொட்டே உடனிருந்து வழிகாட்டும் மா. சண்முகசிவா, லதா போன்றவர்களும் தங்கள் பங்களிப்பை வழங்கினர். அது போல சிங்கை எழுத்தாளார் பொன். சுந்தரராசு அவர்களும் நிதி உதவி வழங்கியபோது ஓரளவு திட்டத்தை முன்னெடுக்கும் அடித்தளம் அமைந்தது. ஆனால், பணம் மேலும் தேவையாக இருந்தது. ஓர் இளம் எழுத்தாளரைக் கொண்டாடப் போகிறோம். அதில் எந்தக் குறையும் வந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். எனவே, விழா ஏற்பாட்டில் எந்தச் சமரசமும் செய்துக்கொள்ளவில்லை.

அப்போதுதான் ஜார்ச் டவுன் இலக்கிய அமைப்பில் இருந்து ஒரு அழைப்பு. இம்முறை வல்லினம் ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சியோடு தாங்களும் இணைந்து கொள்வதாகக் கூறினர். தங்கள் பங்களிப்பாக நிதி உதவி வழங்குவதாகத் தெரிவித்தனர்.
அப்போது நான் பள்ளியில் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். மேற்கொண்டு என்ன பேசுவதென தெரியவில்லை. நாம் இந்தப் பிரபஞ்ச ஆற்றலை மட்டுமே நம்ப வேண்டியுள்ளது. அதை மட்டுமே நம்பி எந்த அசாதாரண பணியிலும் இறங்கலாம். அதில் சுய லாபம் தேடாவிட்டால் அனைத்துமே நல்ல முறையில் நடக்கும் என்பதற்கு இன்னொரு உதாரணம். சந்தோஷத்தை நண்பர்களை அழைத்துப் பகிர்ந்து கொண்டேன்.
வேலைகள் விறுவிறுப்பெடுத்தன.
***
நிகழ்ச்சியை எங்கு நடத்துவதென முதல் குழப்பம் எழுந்தது. எப்போதும் நிகழ்ச்சியை நடத்தும் கிராண்ட் பசிப்பிக் தங்கும் விடுதி ஏற்றதாக அமையவில்லை. கிட்டத்தட்ட நான்கைந்து இடங்களை ஆராய்ந்து, நிகழ்ச்சியைக் கோலாலம்பூரில் இருந்த YMCA மண்டபத்தில் வைத்துக்கொள்வதென முடிவானது. விழாவுக்கு முன்னர் ஒன்றரை நாள் இலக்கிய முகாம் நடைபெற்றதால் தங்கும் வசதி, முகாமுக்கான அறைகள் என அவ்விடமே ஏற்றதாக அமைந்தது. இடம் முடிவான பின்னர் அடுத்தடுத்த ஏற்பாடுகள் தொடங்கின.
பதாகைகள், உணவு ஏற்பாடுகள் என எல்லாமே ஒன்றன் பின் ஒன்றாக முடிந்த பின்னர் எனக்கு ஓர் எண்ணம் தோன்றியது.

அரவின் குமாரின் சிறுகதையில் உள்ள சில வரிகளை அவர் புகைப்படத்துடன் இணைத்து ஆறு நீள் பதாகை செய்து அரங்கில் வைக்கலாம் எனும் ஆவல் எழுந்தது. தென்னரசுவிடம் கூறி, நான் அவரை அது வரை எடுத்த புகைப்படங்களைக் கொண்டே நீள் பதாகைகள் தயாரிக்க ஏற்பாடு செய்தேன். அத்தனையும் அற்புதமாக அமைந்திருந்தன. அனைத்தையும் அரங்கில் கற்பனையால் அடுக்கி பார்த்தபோது ஏதோ ஒன்று குறைந்தது. மேடை வெறிச்சோடி கிடப்பதை அப்படித்தான் முதன் முறையாக உணர்ந்தேன்.
YMCA மண்டபம் பெரியது. ஆனால் அங்கு சோஃபா வசதி இல்லை என்பது தாமதமாகவே தெரிந்தது. சோஃபாவை வாடகைக்குத் தேடியபோது கிட்டத்தட்ட மண்டபத்தின் வாடகை விலை சொன்னார்கள். அதற்குப் பேசாமல் சோஃபாவை வாங்கியே விடலாம் என நண்பர்கள் பரிந்துரைத்தார்கள். அத்தொகைக்கு வாங்குவது என்றால் மலிவான சோபாக்களாகவே கிடைத்தன. அவற்றை அரங்கில் கற்பனையில் பொருத்திப் பார்த்தபோது உடலில் தேமல் போல இருந்தது. விஜயலட்சுமி நூலகத்தில் உள்ள சோஃபாவை எடுத்துக் கொள்ளச் சொன்னார். அவை நீள் சோஃபாக்கள். எனக்குத் தனித்தனியாக ஐந்து தேவைப்பட்டன. கடைசியாக சோஃபாவை வாடகைக்கே எடுப்பதென முடிவானது; மனம் நிறைவடைந்தது.
அனைத்திற்கும் ஏற்பாடு செய்துவிட்டு, சீனாவுக்குச் செல்லும் முன் பெரும்பாலானவற்றுக்கு முன்பணம் செலுத்திவிட முடிவெடுத்தபோதுதான் புதிய சிக்கல் எழுந்தது. முகாமில் கலந்துகொள்வோருக்கு ஞாயிறு காலை பசியாறைக்கு ஏற்பாடு செய்திருந்த உணவகத்தில் முன்பணம் செலுத்தச் சென்றபோது ”ஞாயித்துக்கெழம வர முடியாதுய்யா” என்றார்.
”என்னக்கா… நீங்கதானே அந்த தேதியில முடியுமுன்னு சொன்னீங்க,” என்றேன் பரிதாபமாக. உண்மையில் அங்கு நாசி லெமாக்கை சுவைத்துப் பார்த்தப் பிறகே ஆர்டர் கொடுத்திருந்தேன். சுவையாகவே இருந்தது.
”நீங்க தேதி சொன்னீங்க… கெழம சொல்லலயே,” என்றார்.
மேற்கொண்டு பேச ஒன்றும் இல்லாதபடியால் அடுத்து என்ன செய்வதென யோசித்தபடி நடந்தபோது இளைஞர்கள் நடத்தும் சிறிய உணவகம் ஒன்று கண்ணில் பட்டது. முகாம் நடக்கும் கிழமையையும் திகதியையும் கூறி சாத்தியப்படுமா எனக் கேட்டேன். ”எப்ப வேணுமுன்னாலும் முடியுமண்ண… எத்தன மணிக்குச் சொன்னாலும் வருவோம்,” என்றார்கள். அந்த உற்சாகம் எனக்குப் பிடித்திருந்தது. எதையும் சுவைத்துப் பார்க்கவில்லை. உழைக்கத் தயாராக உள்ள இளைஞர்களுக்கு ஒரு வாய்ப்பு தருவதில் உள்ள சுவையைவிட வேறென்ன சிறப்பு இருந்துவிடப் போகிறது? முன்பணத்தைச் செலுத்திவிட்டு நிம்மதியாகத் திரும்பினேன்.

இன்னும் செய்ய வேண்டிய பணிகள் சில இருந்தன. நான் பாதியில் விட்டுச் செல்லும் அனைத்துப் பொறுப்புகளையும் நண்பர்கள் எடுத்துக் கொண்டபோது பயணம் கொஞ்சம் இனிமையானது. தர்மா, பேனர்களைக் கிள்ளானில் இருந்து அரங்கில் கொண்டு வந்து சேர்க்கும் பொறுப்பை எடுத்துக் கொண்டார். இன்னும் சிலர் வெளியீட்டுக்கான நூல்களைத் தயார் செய்வது தொடங்கி, விருது வழங்கும் நிகழ்வுக்கான அத்தனை சிறிய விடயங்களையும் தயார் செய்தார்கள்.
நான் சீனாவில் இருந்து வந்திறங்கிய அதே நாளில்தான் (நவம்பர் 28) தமிழக எழுத்தாளர்கள் பாவண்ணனும் ராஜகோபாலனும் மலேசியாவுக்கு வந்தனர். எனக்குப் பயணக் களைப்பு இருந்ததால் அரவின் குமார், அவர்களை விமான நிலையத்திலிருந்து அழைத்து வரும் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார். மறுநாள் அவர்கள் கோலாலம்பூரில் சில இடங்களைக் காட்டும் பொறுப்பை லாவண்யா எடுத்துக் கொண்டதால் எனக்குப் போதுமான ஓய்வு கிடைத்தது.
நவம்பர் 29 சிங்கை எழுத்தாளர்களான லதா, கணேஷ் பாபு, பாரதி ஆகியோர் வந்தனர். அவர்களை வரவேற்று பத்துமலையில் இறக்கிவிட்டு மீண்டும் விடுதிக்குச் சென்றபோது பாவண்ணன், அவர் மனைவி, ராஜகோபால் ஆகியோர் வந்தனர். அவர்களைக் கடைசியாக 2023 விஷ்ணுபுரம் விருதளிப்பு விழாவில் பார்த்தது. நல விசாரிப்புகள், இனிய உரையாடல்களுடன் இரவுணக்குவுக்குப் புறப்பட்டபோது அ. பாண்டியன் வந்து சேர்ந்திருந்தார். அனைவருமாக உணவுக்குச் சென்று திரும்பினோம். இடையில் நாளைய உரையாடலுக்கான அரங்கு ஒழுங்குகளையும் நானும் அரவினும் செய்து வைத்தோம். விருது பெறப் போகும் ஓர் எழுத்தாளனை வேலை வாங்குவது வருத்தமாக இருந்தாலும் அப்போதைக்கு வேறு வழி தெரியவில்லை.
***

நவம்பர் 30, காலையிலேயே பிரிக் பீல்ட்ஸ் சென்று விட்டேன். நண்பர்கள் சரியான நேரத்திற்கு வரத் தொடங்கினர். சுப்புலட்சுமி டீச்சர் உடல் நலக் குறைவிலும் அரங்குக்கு வந்திருந்தார். நோயுற்ற அவர் நிலையைக் கண்டு வீடு திரும்பச் சொல்லியும் ”பேசுவதைக் கேட்டுக் கொண்டாவது இருக்கிறேன்,” என வீடு திரும்ப மறுத்துவிட்டார். வெளியூர் பயணத்திற்குப் பின்னர் காய்ச்சல் கண்டிருந்த சல்மா முதல் நாள் இரவு தான் முகாமில் கலந்து கொள்வது சிரமம் என்றவர் முகக்கவரியை அணிந்து கொண்டு வந்திருந்தார். அதுபோல ஒவ்வொரு நண்பர்களும் பல்வேறு அலுவல்களுக்கு நடுவில்தான் அங்கு வந்திருந்தனர்.
எப்போதும் போல சிலர் கடைசி நேரத்தில் தங்கள் வருகையை ரத்துச் செய்தனர். இனி எப்போதுமே வல்லினம் முகாம்களில் கலந்து கொள்ள முடியாதோர் பட்டியலில் சிலர் இணைந்தனர்.

நவம்பர் 30 காலை தொடங்கி டிசம்பர் மதியம் 12 வரை ஐந்து அரங்குகள் YMCAவில் உள்ள ‘அல்லி’ அறையில் நடைபெற்றது. சிறிய அறைதான். இருபத்து ஐந்து பேர் வரை அமரலாம். ஆனால், இது போன்ற அரங்குகளில் ஏற்பாட்டுக் குழுவில் உள்ளவர்களால் முழுவதுமாக பங்கெடுக்க முடிவதில்லை.

முதலாவது, இடைவேளையில் டீ, காப்பியை நாங்களே கடையில் இருந்து எடுத்து வர வேண்டியிருந்தது. அப்பணியை நண்பர்கள் மேற்கொண்டனர். அது போல மறுநாள் நிகழ்ச்சிக்கான அரங்கு சார்ந்த சில சிக்கல்களைத் தீர்க்க நான் அவ்வப்போது வெளியே சென்று திரும்ப வேண்டியிருந்தது. இந்தச் சிக்கல்களெல்லாம் எங்களுக்குத்தான் என்பதால் மற்ற பங்கேற்பாளர்கள் முழுமையாக அரங்குகளில் கலந்திருந்தனர்.

‘அல்லி’ அறையில் முகாம் செய்வதில் எனக்கு முதலில் ஒரு தயக்கம் இருந்தது. சனி, ஞாயிறுகளில் நிறைய வகுப்புகள் அங்கு இடைவிடாது நடக்கும் என நிர்வாகிகளால் கூறப்பட்டது. மற்ற அறைகளில் எழும் சத்தம் முகாமுக்குத் தடையாக இருக்கலாம் என அவர்களால் முன்னமே எச்சரிக்கப்பட்டதால் தர்மாவிடம் கூறி சிறிய அறைகளில் பயன்படுத்தும் ஒலிப்பெருக்கி ஒன்றை வாங்கியிருந்தேன். முதல் நாள் அந்தச் சத்தங்கள் அப்படி ஒன்றும் தடையாக இல்லை. ஒலிப்பெருக்கி இல்லாமலேயே அரங்குகள் நடந்தன.

சங்கப் பாடல்கள், நவீன கவிதை, சிறுகதை என முதல் நாள் மூன்று அரங்குகள் இடம்பெற்றன. அனைத்து அரங்குகளிலும் கிட்டத்தட்ட அனைவருமே ஆர்வமாகப் பங்கேற்றனர். கேள்விகள் கேட்டனர். சந்தேகங்களைத் தெளிவுப்படுத்திக் கொண்டனர்.
கலந்து கொண்ட அனைவருமே நேர ஒழுங்கைக் கடைப்பிடித்தது மனதுக்கு நிறைவாக இருந்தது.

முதல் நாள் இறுதி அமர்வு முடிந்த பின்னர் நான் வெளியே எங்கும் செல்லாமல், தனியாக அமர்ந்து YMCA கீழ்த்தளத்தில் இருந்த கேஃபேவில் சாப்பிடத் தொடங்கினேன். ‘ஏதேனும் விடுபட்டுவிட்டதா… கடைசி நேர பணிகள் உள்ளனவா?’ என யோசித்துக் கொண்டிருந்தேன். மறுநாள் நிகழ்ச்சி குறித்து நண்பர்களுக்குப் புலனம் வாயிலாக நினைவுறுத்தியபடி இருந்தேன். அப்போது டாக்டர் சண்முகசிவாவிடம் இருந்து அழைப்பு வந்தது. எடுத்தபோது ”உன் அறையின் முன் நிற்கிறேன்,” என்றார். ”நான் அறையில் இல்லையே…” என்றபோது கீழே வந்தார். பாவண்ணனைச் சந்திக்க ஆர்வமாக இருந்தார். அவருடன் நிகழ்ச்சிகள் குறித்து உரையாடிக் கொண்டிருந்தபோது பாவண்ணனும் அங்கு வந்து சேர்ந்தார். இருவரும் ஏற்கனவே சந்தித்திருந்ததால் இயல்பான நட்போடு உரையாடி மகிழ்ந்தனர். பின்னர் அன்றைய இறுதி அங்கமாக பாவண்ணன் உரை கேட்க அனைவரும் இரவு 8.30க்கு ‘அல்லி’ அறைக்குச் சென்றோம்.

முதல் நாள் நிகழ்ச்சியின் இறுதி அங்கமாக பாவண்ணனின் உரை அமைந்தது. சண்முகசிவா அவர்களின் சிறிய உரைக்குப் பின்னர், ‘சிறுகதையில் நேர்மறை தரிசனங்கள்’ எனும் தலைப்பில் உரையாற்றினார் பாவண்ணன். தன் வாழ்வில் ஆசிரியர் விதைத்துச் சென்ற நல்லொழுக்கங்களில் இருந்து அவரது உரை தொடங்கி மெல்ல மெல்ல இலக்கியத்தில் நுழைந்து உணர்ச்சிகரமான ஓரிடத்தில் நிறைவுற்றது.

இந்தப் பயணத்தில் பாவண்ணனுடன் வந்த அவரது மனைவி அமுதா நுண்ணுணர்வு மிக்கவர். பாவண்ணனை அடிக்கடி கிண்டல் செய்பவராகவும் இருந்தது சுவாரசியம். உரை முடிந்த பின்னர் பாவண்ணனின் இலக்கிய ஆளுமையை அவர் அறிந்துள்ளாரா என அவர் மனைவியைக் நோக்கி நான் கேள்வியை முன்வைத்தபோது, ”அவரது அனைத்துக் கதைகளுக்கும் முதல் வாசகி நான்தான். அது போல அந்தக் கதைகள் குறித்து கருத்து கூறுவதும் நான்தான்,” என்றார். மேலும் பாவண்ணன் தமிழ் இலக்கியத்தில் எவ்வளவு முக்கியமானவர் என அவர் அறிந்து வைத்திருந்தார். அதை வெளிபடுத்தவும் செய்தார்.

அந்த அமர்வு இரவு 9.30க்கு நிறைவுற்ற பின்னர் நாளைய நிகழ்ச்சிக்கான அரங்கைத் தயார் செய்ய வேண்டிருந்தது. விருப்பம் உள்ள நண்பர்களை அப்பணியில் இணைந்துகொள்ளப் பணித்தேன். அரவின் குமார் மட்டும் வரக் கூடாது எனக் கூறிவிட்டேன். பத்துக்கும் அதிகமான நண்பர்கள் கூடி ஒரு மணி நேரத்தில் மறுநாளைய நிகழ்ச்சிக்குத் தயார் செய்தனர்.

அரவின் குமாரின் படங்கள் பதித்த நீள் பதாகையை ஒழுங்குச் செய்யும் பொறுப்பைச் சண்முகாவுக்கு வழங்கினேன். ஒவ்வொரு பதாகைகளையும் பிரித்துப் பார்த்து அவர் பரவசம் அடைவதை நான் தூரமாக நின்று ரசித்துக் கொண்டிருந்தேன். அப்படி ஒரு நண்பன் அமைவது அதிர்ஷ்டம். விருது விழா நிகழ்ச்சியின் தொடக்கத்தில் சண்முகா பாடல் ஒன்று பாட வேண்டுமெனக் கேட்டிருந்தேன். சண்முகா கர்நாடக சங்கீதத்தில் பயிற்சி எடுத்து வருபவர். சிறப்பாகப் பாடக் கூடியவர். ஆனால், அதே காலக்கட்டத்தில் மூக்கில் சிறிய அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்ததால் தான் நிகழ்ச்சியிலேயே கலந்துகொள்ளவது சந்தேகம்தான் எனக் கூறியிருந்தார். பின்னர் சிகிச்சையை ஒத்திப்போட்டு மகிழ்ச்சியுடன் பாட முன் வந்தார். நண்பனின் நீள் பதாகைகளைத் தர்மாவுடன் இணைந்து பொருத்தும் பணியில் ஆர்வமாக ஈடுபட்டார்.

பாண்டியன், ஆதித்தன், தேவகுமார் ஆகியோர் பிரமாண்டமான பதாகையைப் பொறுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். லாவண்யாவும் சாலினியும் மறுநாள் விற்பனைக்கு வரப்போகும் நூல்களை அடுக்கி ஒழுங்குச் செய்யும் பணியை மேற்கொண்டார்கள். சல்மா, புஷ்பவள்ளி, மலர்விழி ஆகியோர் நாற்காலிகளை அடுக்கத் தொடங்கினர். சர்வின் உணவுண்ணும் பகுதியைத் தயார் செய்தார். ரேவின் அறையில் இருந்த பொருட்களை எடுத்து வர உதவினார். உடல் நலக்குறைவு ஏற்பட்டிருந்தாலும் சுப்புலட்சுமி டீச்சர் எங்களுடன் இருந்து தேவையான உதவிகளைச் செய்துக் கொடுத்தார்.அனைவரின் ஒத்துழைப்பாலும் மண்டபம் மிக விரைவாகவே தயாரானது.
சட்டை வியர்வையில் தொப்பரையாகியிருந்தது. உடலுக்கு ஓய்வு தேவையாக இருந்ததால் அறைக்குச் சென்றேன். அன்றைய அரங்குகள் குறித்து நினைத்துக் கொண்டேன்.

உண்மையில் இந்த அரங்குகளில் அனைவருமே முழுமையாகப் பங்கெடுக்க ஜா. ராஜகோபாலனின் அணுகுமுறை முக்கியக் காரணம். பங்கேற்பாளர்களின் முன்னறிவை ஓரளவு ஊகித்து அதற்கு ஏற்ப தனது உரைகளை வடிவமைத்துக் கொண்டார். நகைச்சுவையாகவும் உதாரணங்கள் வழியாகவும் அவர் விவரித்த பாடல்களும் கவிதைகளும் கூடுதல் ஒளி கொண்டு புரிதலை மேம்படுத்தியது. நாவல்களின் தரத்தை அறிவதில் அவர் கொடுத்த விளக்கம் பல காலமாக நாவல் வாசிப்போர் மத்தியிலும் ஆச்சரியத்தையும் ஆர்வத்தையும் உருவாக்கியது. அரங்குகள் முடிந்த பிறகும் நண்பர்கள் பலரும் ராஜகோபாலை மீண்டும் அழைக்க வேண்டும் எனப் பேசிக் கொண்டனர்.
***

மறுநாள் அரங்கு காலை 8 மணிக்குத் தொடங்கியபோது ஓர் அதிர்ச்சிக் காத்திருந்தது. பக்கத்து அறையில் இசைக்கருவிகளை வாசித்துக் கொண்டிருந்தனர். அன்றைய முகாம் பாதிக்கப்பட்டு விடுமோ எனும் அச்சம் எழுந்ததால் நேராக அவ்வறைக்குச் சென்றேன். மிகப் பணிவாக எங்களின் சிக்கலைச் சொன்னேன்.
”ஓ… இந்த இசைப் பயிற்சி காது கேளாதவர்களுக்கானது. எனவே அவர்கள் சற்று வேகமாகவே இசைப்பார்கள். மன்னிக்கவும் நான் ஒலியைக் குறைக்க முயல்கிறேன்,” என்றார் பணிவாக.
அதற்குப் பின்னர் எந்த ஒலியும் கேட்கவில்லை. அதுதான் மேன்மை.
முகாம் மதியம் 12க்கு முடிந்த பின்னர் 2 மணிக்கு நடக்க உள்ள இளம் எழுத்தாளர் விருதளிப்பு விழாவுக்கு அனைவரும் தயாரானோம். இடையில் இரண்டு மணி நேரம் பரபரப்பானவை. அரங்கில் ஏற்ற வேண்டிய சோபா வந்திறங்கிவிட்டதால் நான் இடையில் வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டது.

ஐந்து வெள்ளை நிற சோபாவை ஏற்றியபோது மேடையில் பிரமாண்டம் கூடியதை உணர்ந்தேன். நான் கற்பனையில் கண்ட கம்பீரம் ஓரளவு காட்சியானதும் நிறைவடைந்தேன். இது ஒரு விருது விழாவுக்கான மேடை எனப் பார்ப்பவர் யாருமே அறியும் வண்ணம் அது அமைந்தது. தனியனாக அரங்கில் போடப்பட்ட இறுதி நாற்காலியில் அமர்ந்தபடி அனைத்தையும் பார்வையிட்டேன். நிறைவாக இருந்தது. அரவின் மகிழ்ச்சியடைவார், அவர் குடும்பத்தினர் மகிழ்ச்சியடைவர், தன் வீட்டுப் பிள்ளை இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க இடத்தை அடைந்துள்ளார் என அவர்களுக்கு இந்த அரங்கு அரூபமாக உணர்த்தும். அரவினை வளர்த்தப் பாட்டிக்கு வாழ்வில் இது ஒரு மகிழ்ச்சியான தருணமாக அமையும். நினைக்கவே சந்தோசமாக இருந்தது.

இடையில் மதிய உணவில் சேர்க்க வேண்டிய பலகாரங்களை அங்காடிக்கடையில் சென்று எடுத்துக் கொண்டு அரங்குக்குள் மீண்டும் நுழைந்தபோது ஐம்பது பேராவது வந்திருந்தனர். ‘செல்லியல்’ முத்தரன், எழுத்தாளர் அரு. சு. ஜீவானந்தன், டாக்டர் சண்முகசிவா, விரிவுரைஞர் தமிழ்மாறன், விரிவுரைஞர் பிரவினா, ஆவணத் தொகுப்பாளர் மா. ஜானகிராமன், ஆசிரியர் கோபாலன், எழுத்தாளர் எஸ்.பி. பாமா, ஜெயபாலன், கவிஞர் சுதந்திரன், சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி, எழுத்தாளார் பத்மினி என ஒவ்வொருவரையாகச் சென்று கண்டு வரவேற்றேன்.
நேரம் ஆக ஆக பி. எம் மூர்த்தி, முனைவர் இளஞ்சோதி, நாடக ஆசிரியர் விஸ்வநாதன், எழுத்தாளர் எம். பிரபு, முனைவர் அருள்நாதன், பாலசேனா என சிலரது வருகை அவ்வரங்கை மேலும் அர்த்தபூர்வமாக்கியது. தொடர்ந்து எனது நண்பர்கள் நிர்மலா, கற்பகவள்ளி, எழுத்தாளர் கோகிலவாணி, கவித்ரா, நீலமலர், வத்சலா, சிவா பெரியண்ணன் போன்றவர்களும் இலக்கியத்தில் ஆர்வம் கொண்ட முன்னாள் இந்நாள் மாணவிகள் சிலரும், அஸ்வின், காமராசன், அருள்ராஜ் போன்ற இளம் இலக்கிய வாசகர்களின் வருகை என்னை உற்சாகப்படுத்தியது. 88 நாற்காளிகள் போட்டிருந்தோம். கொஞ்ச நேரத்தில் அது 120 ஆக அதிகரித்தது.
எனக்குத் தெரிந்து மலேசியாவில் ஒரு தமிழ் இலக்கிய விழாவில் இத்தனை இளம் தலைமுறையினர் வருவது வல்லினம் விழாக்களில் மட்டுமே நிகழ்கிறது. பல்வேறு துறை சார்ந்த முக்கிய ஆளுமைகள் ஓரிடத்தில் இணையும் இடமாக வல்லினம் விழா அமைகிறது. மனம் நிறைவாக இருந்தது. விருது பெறும் அரவின் குமாரின் உறவினர்கள் அரங்கில் நுழையத் தொடங்கியபோது நிகழ்ச்சி முழுமை பெற்றுவிட்டதாக நான் உணர்ந்தேன். எல்லா களைப்பும் ஓடோடி விட்டது.
***
நிகழ்ச்சியை ஆதித்தன் மகாமுனி வழிநடத்தினார். பேச்சாற்றல் உள்ளவர் என்பதால் அறிவிப்பு இயல்பாக இருந்தது. அவ்வப்போது என் குறுக்கீடு இருந்தாலும் மலர்ந்த முகம் மாறாமல் நிகழ்ச்சியைத் தொகுத்தளித்தார்.

நிகழ்ச்சியின் முதல் அங்கமாக கடந்த ஐந்து ஆண்டுகளில் உருவான புதிய எழுத்தாளர்களின் சிறுகதைகள் குறித்த உரை இடம்பெற்றது. விஜயலட்சுமி, இளம்பூரணன், ஶ்ரீதர் ரங்கராஜ் ஆகியோர் தங்களுக்கு வழங்கப்பட்ட பணிகளை நிறைவாகவே செய்தனர். சில பதிப்பகங்கள் தான் வெளியிடும் நூல்களை அனுமதி பெற்றே விமர்சிக்க வேண்டும் என நூலில் குறிப்பிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி விஜயலட்சுமி உரையைத் தொடங்கிய விதம் சிறப்பாக அமைந்தது. அதுபோல ஶ்ரீதர் ரங்கராஜ் அவர்களின் விமர்சனத்துடன் கூடிய உரை வந்திருப்போரைக் கவர்ந்தது.

விருது விழா தொடங்கியபோது சண்முகா பாரதியாரின் ‘நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா’ என்ற பாடலைப் பாடினார். நிகழ்ச்சிக்கு அது நல்லத் தொடக்கமாக அமைந்தது.
நான் வரவேற்புரையாற்ற அழைக்கப்பட்டேன். மூன்று விடயங்கள் குறித்து என் உரையில் பேசினேன்.

- விருது விழா என்பது எவ்வாறு முழுமையடைகிறது. அவ்வகையில் வல்லினம் இளம் எழுத்தாளர் விருது விழா எப்படி தனித்துவமானது.
- மொழிபெயர்ப்பு சார்ந்து வல்லினம் முன்னெடுக்கும் அடுத்தக்கட்டத் திட்டங்கள். அதன் வழியாக பிற மொழி எழுத்தாளர்களுடனான ஊடாடல்கள்.
- வல்லினத்திற்கு நிதியும் உடனிருந்து இணைந்து செயல்படும் நண்பர்களும் அவசியம். அது உதவியாக இல்லாமல் கடமையாக இருப்பதன் தேவை.

நிகழ்ச்சிக்கு எழுத்தாளர் மா. சண்முகசிவா தலைமை தாங்கினார். இளைஞர்கள் செல்ல வேண்டிய பாதை குறித்து அவர் உரை அமைந்தது.
சண்முகசிவாவின் தலைமை உரை காணொளி
அவரது உரைக்குப் பின்னர் அரவின் குமாரின் ‘சிண்டாய்’ சிறுகதை தொகுப்பு வெளியீடு கண்டது. நூலை எழுத்தாளர் பாவண்ணன் வெளியிட வல்லினம் முயற்சிகளுக்கு எப்போதும் பக்கபலமாக இருக்கும் சுப்புலட்சுமி டீச்சர் முதல் நூலைப் பெற்றுக் கொண்டதை பெருமையாக உணர்ந்தேன்.

தொடர்ந்து, அரவின் குமாரை எழுத்தாளராக அடையாளம் கண்ட மேனாள் விரிவுரைஞர் தமிழ்மாறன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். தான் கல்லூரியில் எவ்வாறு தனித்துவமான ஆசிரியராக இருந்ததன் வழியாக சிந்திக்கும் மாணவர்களை உருவாக்கினார் என்பதைக் குறித்துப் பேசினார். அரவின் குமார் எழுதியக் கட்டுரை ஒன்றில் தன்னைக் கலகக்காரன் என வர்ணித்ததைக் குறிப்பிட்டு தான் கல்லூரிக்கு ஜெயமோகனை அழைத்து வந்தபோது அந்நிகழ்ச்சிக்குப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட அரவின் குமார் எவ்வாறு ஜெயமோகன் வழியாக தாக்கம் பெற்று இலக்கிய வாசிப்பைத் தொடங்கினார் என்பது குறித்துப் பேசினார்.

அவரது உரைக்குப் பின்னர் வல்லினம் விருதளிப்பு விழா நடைபெற்றது. அப்போது மேடைக்கு அரவின் குமாரின் பாட்டி அழைக்கப்பட்டார். அரவின் குமாருக்குத் தான் விருது வாங்கும்போது பாட்டி உடன் இருக்க வேண்டும் என்பது விருப்பமாக இருந்தது. அது அம்மேடையில் நிகழ்ந்தபோது விருது விழா முழுமையடைந்தது. விருதை மா. சண்முகசிவா, சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி, பாவண்ணன் ஆகியோர் எடுத்து வழங்க அரவின் குமார் தன் பாட்டியுடன் பெற்றுக் கொண்டார்.

விருதளிப்புக்குப் பின்னர் சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி அவர்கள் ஆசியுரை வழங்கினார். ‘சிண்டாய்’ தொகுப்பில் உள்ள சிறுகதைகள் குறித்து சிலாகித்துப் பேசிய அவர், அக்கதைகள் யாரைப் பற்றியும் குற்றச்சாட்டல்கள் இல்லாமல் வாழ்க்கையை அதனதன் நியாயத்துடன் அணுகுவதாகக் கூறினார்.
சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி உரை
நிகழ்ச்சியில் பாவண்ணனின் உரை முத்தாய்ப்பாக இருந்தது. அரவின் குமாரின் சிறுகதைகளை ஆழமாக வாசித்துணர்ந்து அதன் கலைவெளிபாட்டை மிகச் சிறப்பாக எடுத்துரைத்தார். மேலும் சமகாலத்தில் தமிழில் வெளிவந்த புனைவு நூல்களுக்கு ஈடான கலைத்தன்மையைக் கொண்ட தொகுப்பு என அவர் ‘சிண்டாய்’ குறித்துக் கூறியபோது அரங்கு கைத்தட்டல்களால் நிறைந்தது.

இறுதியாக ஏற்புரையாற்றிய அரவின் குமார் மிகச் சுருக்கமாக தனது எழுத்துலகம் குறித்துக் கூறி தனது நன்றியைப் பதிவு செய்தார்.
திட்டமிடப்பட்ட நேரத்தைவிட நிகழ்ச்சி 30 நிமிடம் சீக்கிரமாகவே முடிந்தது. அனைவரும் நிதானமாக உரையாடிவிட்டுப் புறப்பட அச்சூழல் சாத்தியமானது. வந்திருந்த ஒவ்வொருவரும் வாழ்த்தும் நன்றியும் பாராட்டும் கூறி விடைபெற்றனர். அரவின் குமார் முகத்தில் மகிழ்ச்சியும் நிறைவும் இருந்தது. பலரும் அவரிடம் கையொப்பம் வாங்கி புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
சுவாமி பிரம்மானந்தா சரஸ்வதி அவர்களுடன் ஜா. ராஜகோபாலன் கெடா புறப்படுவதால் இருவரையும் Temple of Fine Artsஇல் நடைபெறும் இராமாயண நாடக நிகழ்ச்சிக்கு அனுப்பிவிட்டு மீண்டும் YMCA திரும்பினேன். சுவாமி என்னை அந்த நிகழ்ச்சிக்கு அழைத்தும் என்னால் இணைய முடியவில்லை. அனைத்தையும் நிறைவாக முடித்து வைக்க வேண்டிய பொறுப்பு இருந்தது.

மீண்டும் வந்து சேர்ந்தபோது நண்பர்கள் பெரும்பாலும் அரங்கை ஒழுங்குப் படுத்தியிருந்தனர். சிங்கை நண்பர்களோடு பாவண்ணனையும் அழைத்துக் கொண்டு டீ சாப்பிடச் சென்றேன். பாவண்ணனையும் அவர் மனைவியையும் பராமரிக்கும் பொறுப்பை லதா எடுத்துக் கொண்டதால் நிம்மதியாக வீட்டுக்குத் திரும்பினேன்.
மறுநாள் பவித்திராவும் அரவின் குமாரும் சிங்கை தமிழக நண்பர்களை அழைத்துக் கொண்டு மலேசிய தேசிய தொல்பொருளகத்திற்குச் சென்றுவிட்டு பத்துமலை தமிழ்ப்பள்ளிக்கு வந்தனர். அங்குக் கோம்பாக் வட்டார ஆசிரியர்களிடையே ‘சிறுகதைகள் வழியாக சிறுவர்களின் உளவியலை அறிதல்’ எனும் தலைப்பில் பாவண்ணன் ஆசிரியர்கள் மத்தியில் உரையாற்ற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பத்துமலை தமிழ்ப்பள்ளி தலைமை ஆசிரியரின் முன்னெடுப்பில் இந்த நிகழ்ச்சி நடந்தேறியது. பாவண்ணன், ஆதவன் எழுதிய ‘அணிலும் வேப்பமரமும்’, தி.ஜானகிராமன் எழுதிய ‘முள்முடி’, மேலாண்மை பொன்னுசாமி எழுதிய ‘பிரம்பு உபதேசம்’ போன்ற சிறுகதைகளை முன்வைத்து உரையாடி ஆசிரியர்களை அதிகம் கவர்ந்திருந்தார்.

நிகழ்ச்சி முடிய 30 நிமிடம் இருக்கும்போது சிங்கை நண்பர்கள் புறப்பட்டனர். அவர்களை வழியனுப்பிவிட்டுப் பாவண்ணனையும் அவர் மனைவியையும் வீட்டுக்கு அழைத்துச் சென்றேன். அரவின் குமாரும் என் மாணவி அனுஶ்ரீயும் உடன் இணைந்து கொண்டனர். வீட்டில் கொஞ்சம் இளைப்பாறிவிட்டு மீண்டும் அவர்களைப் பிரிக் பீல்ட்ஸில் சேர்க்கும் பொறுப்பை அரவின் எடுத்துக் கொண்டார்.
நான் மிகவும் களைத்திருந்தேன். ஆனால் விருந்தினர்களை அப்படியே விடுவது முறையல்ல. கார் ஓட்டிச் செல்ல சக்தி இல்லாமல் இருந்ததால் வாடகை வண்டியில் மீண்டும் பாவண்ணன் தங்கியிருந்த விடுதி நோக்கிச் சென்றேன். இரவுணவை முடித்தோம். மறுநாள் மை ஸ்கில்ஸ் அறவாரியம் செல்வது குறித்து முறையாகத் திட்டமிட்டு விடைபெற்றேன்.
பொதுவாக வெளிநாட்டில் இருந்து வருபவர்களைக் கலும்பாங்கில் இருக்கும் மை ஸ்கில்ஸ் அறவாரியத்திற்கு அழைத்துச் செல்வது வழக்கம். மலேசியாவில் இப்படி ஒரு முயற்சி நடைபெறுவதை அனைவரும் அறிந்திருக்க வேண்டும் என விரும்புவேன். கைவிடப்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்படும் கல்வியும் அவர்களின் எதிர்காலத்திற்குப் போடப்படும் பாதையும் பலராலும் விரிவாகப் பதிவு செய்யப்பட வேண்டியவை. எனவே, பாவண்ணன் அங்குச் செல்வது முக்கியம் என நானும் டாக்டர் சண்முகசிவா அவர்களும் கருதியதால் அப்பயணத்தை உறுதி செய்தோம்.

மை ஸ்கில்ஸ் அறவாரியத்தை நாங்கள் முழுமையாகப் பார்வையிடவும் சண்முகசிவா அவர்கள் வந்து சேரவும் சரியாக இருந்தது. மதிய உணவை ஒன்றாக உண்ட பின்னர் மாணவர்களுடன் பாவண்ணன் அவர்கள் உரையாடினார். பாவண்ணன் அவர்களின் துணைவியார் மிகுந்த கரிசனத்துடன் குழந்தைகளின் கதைகளைக் கேட்டறிந்தார்.
அன்று இருவரும் ஊர் திரும்ப வேண்டியிருந்ததால் மதியம் மூன்று மணிக்கு விமான நிலையம் நோக்கிப் புறப்பட்டு மாலை ஐந்து மணிக்கு விமான நிலையத்தை அடைந்தோம். விமான நிலையத்தில் மீண்டும் ஒரு காப்பி, ரொட்டி எனச் சுவைத்துக் கொண்டு இலக்கியம், அரசியல் எனப் பேசினோம். பாவண்ணன் மிகவும் ஆழமானவர். அதை ஆர்ப்பாட்டம் இல்லாமல் காட்டத் தெரிந்தவர்.
நிதானமாகப் பெட்டிகளை அனுப்பிவிட்டு நுழைவுச்சீட்டைக் கையில் வாங்கியப் பின் ”கொஞ்சம் பதற்றமாவே இருந்துச்சி… இப்ப கொஞ்சம் பரவால,” என்றார் பாவண்ணன்.
உண்மையில் பாவண்ணன் மட்டுமல்ல பெரும்பாலான கலைஞர்களும் எழுத்தாளர்களும் விமான நிலையத்தைக் கண்டவுடன் கொஞ்சம் தடுமாறி போவதைப் பார்த்துள்ளேன். அதற்கேற்பவே விமான நிலைய அதிகாரிகளும் ஏதோ சொற்கத்தின் வாசலைத் திறப்பதுன்போல பாவனை செய்வார்கள். கலைஞர்களின் உலகம் என்பது வேறு.

ஏல்லாம் முடிந்து பாவண்ணனையும் அவர் துணைவியாரையும் வழியனுப்பி வைத்தேன். அணைத்துக் கொண்டோம். கஷ்டமாகத்தான் இருந்தது. இந்த விமான நிலையம்தான் இப்படி எத்தனை கஷ்டங்களைக் கண்டுள்ளது என நினைத்துக் கொண்டேன்.
பாவண்ணனின் துணைவியார் குமுதா கடப்பிதழை உறுதி செய்தப் பின் மீண்டும் திரும்பி எங்களுக்குக் கையசைத்துவிட்டு நிதானமாக நுழைந்தார். பாவண்ணன் அதே பதற்றத்துடன் ‘யப்பாடா உள்ள விட்டுட்டானுங்க’ எனும் மனநிலையுடன் நடந்து செல்வதைப் பார்க்க வேடிக்கையாக இருந்தது. சிரித்துக் கொண்டேன். ஆனால், அச்சிரிப்பு கனத்திருந்தது.
விரிவான கட்டுரை. இலக்கிய நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் அதிலுள்ள ஏற்பாட்டுச் சிக்கல்களை உணரமாட்டார்கள். எல்லாம் தானாக நடக்கிறது என்றே நினைப்பார்கள். ஏற்று நடத்துபவருக்கு மட்டுமே அதன் சூடு தெரியும். விருது பெறுவதற்கு அரவின் குமாரைவிட வேறு தகுதியான எழுத்தாளரைச் சமீபகாலமாக மலேசியாவில் கண்டடைவது இயலாத செயல்.
எல்லோரையும் ஞாபகம் வைத்துள்ளீர்கள்.
எம். பிரபு, பெந்தோங்.