ஆங்கிலத்தில்: ரேய்மண்ட் கார்வர்
தமிழில்: கோ.புண்ணியவான்

உடலை மூடிய குளிர் உடையுடன் புதிதாகப் பிறந்த குழந்தை கட்டிலை ஒட்டிய தொட்டிலில் படுக்க வைக்கப்பட்டிருந்தான். தொட்டில் புதிய வண்ணமிடப்பட்டு நீல ரிப்பனால் பூ போல முடிச்சிடப்பட்டு, நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. மூன்று சகோதரிகளும், குழந்தையைப் பிரசவித்த களைப்புடன் முழுமையாய் பேறு நோயிலிருந்து விடுபடாத குழந்தையின் தாயும், குழந்தையின் பாட்டியும் கட்டிலைச் சுற்றி நின்று ஆவல் பொங்கப் பார்த்துக் கொண்டிருந்தனர். குழந்தை தன் பிஞ்சுக்கை கால்களை ஆட்டிக் கொண்டும் வாயைத் திறந்து கோணலாய் அசைத்துக் கொண்டும் நோக்கமற்று பார்த்த வண்ணமிருந்தது. அது அழவோ புன்னகைக்கவோ இல்லை. ஆனால் சகோதரிகளில் ஒருத்தி அதன் கன்னத்தை மெல்ல வருடியபோது, அது தன் நாவை உதடு வரை துருத்தி உள்ளிழுத்துக் கொண்டது. அப்போது அதன் அழகு மேலும் மெருகேறியது.
சமையலறை பக்கம் இருந்த குழந்தையின் தந்தைக்குக் குழந்தையோடு அவர்கள் பேசி விளையாடிக் கொண்டிருப்பது கேட்டது.
“உனக்கு யாரை ரொம்ப பிடிக்கும்?” என்று அதன் கன்னத்தை மெல்லக் கிள்ளியபடி பில்லிஸ் கேட்டாள்.
“அதற்கு எல்லாரையும் பிடிக்கும்.” என்று பில்லிஸே சொன்னாள். “அப்பாவை ரொம்ப பிடிக்கும், ஏனென்றால் பேபியைப் போல அப்பாவும் ஆண்தானே,” என்றாள் மேலும்.
கட்டிலின் விளிம்பில் அமர்ந்திருந்த பாட்டி, “பாருங்க அதன் கை கொஞ்சம் தடிமனாக இருக்கிறது… அதன் விரல்களும் கூட, அவன் அம்மாவைப் போல,” என்றாள்.
அதனைக் கேட்டு மகிழ்ந்த குழந்தையின் தாய், குனிந்து குழந்தையின் நெற்றியில் முத்தமிட்டு உச்சி குளிர்ந்து, அதன் மென் கைகளை மூடியிருக்கும் உறையைச் சரி செய்தபடி சொன்னாள், “என் செல்வம் எவ்வளவு அழகாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறான்… என் கண்ணே பட்டிடும் போல இருக்கே. எங்க எல்லாருக்கும் உன்னை அவ்வளவு பிடிக்கும். கண்ணே.”
“ஆமாம் இவன் யாரைப் போல இருக்கிறான்? யாரைப் போல?” என்று கேட்டாள் எல்லிஸ் சற்றே அதிர்ந்த குரலில். எல்லிஸ் அவ்வாறு கேட்டபோது எல்லாரும் தொட்டிலை நெருங்கி குழந்தையைக் கூர்மையாகக் கவனிக்கத் தொடங்கினர்.
“இவனுக்கு அழகான கண்கள்!” கேரல் சொன்னாள்.
“எல்லாக் குழந்தைகளுடைய கண்களும் அழகாகத்தான் இருக்கும்!” என்று எல்லிஸ் பதிலுரைத்தாள்.
“இவனுக்குத் தாத்தாவுடைய உதடுகள் அமைஞ்சிருக்கு,” பாட்டி இப்படிச் சொல்லிவிட்டு, “உதடுகளை நல்லா பாருங்க!” என்று ஆள்காட்டி விரலை அவன் பக்கம் நீட்டிக் காட்டினாள்.
“எனக்குத் தெரியவில்லை, நான் அப்படிச் சொல்ல மாட்டேன்.” என்றாள் தாய்.
“மூக்கைப் பாருங்க… மூக்கைப் பாருங்க“ அலிஸ் வியப்போடு காட்டிச் சொன்னாள்.
“மூக்குக்கு என்னா?” அம்மா கேட்டாள்.
“இது யாருடைய மூக்கு மாதிரியோ இருக்கே,” என்றாள் அலிஸ் மீண்டும்.
“எனக்கு எதுவும் தெரியவில்லை, நான் அப்படி நினைக்கவில்லை,” என்று மறுத்தாள் அவளின் அம்மா.
“இவனுடைய உதடுகளைப் பாருங்கள்,” என்று பாட்டி முனுமுனுத்தாள். அவனுடைய கை உறையை நீக்கிய பின்னர், “இவன் விரல்களையும் பாருங்கள்,” என்று பையனின் மென் விரல்களை மெதுவாக விரித்துக் காட்டினாள்.
“யாரைப் போல இருக்கான், இப்ப சொல்லுங்க,”
“யாரைப் போலவும் இல்லை!” என்றாள் பில்லிஸ். அத்தருணத்தில் அவர்கள் அனைவரும் தொட்டிலுக்கருகே மேலும் நெருங்கிச் சென்றனர்.
“எனக்குத் தெரியும்! எனக்குத் தெரியும்,” “இவன் அப்பாவைப் போல இருக்கிறான்” என்று கேரல் ஆவல் மிகுதியோடு கூவினாள்.
“ஆனால் அப்பா யாரைப் போல இருக்கிறார்?” பில்லிஸ் வியப்போடு வினவினாள்.
“ஆமாம், அப்பா யாரைப் போல இருக்கிறார்?” அலிஸ் அதே வினாவை மீண்டும் எழுப்பினாள். அப்போது அலிஸோடு சேர்ந்து அனைவரும் அப்பா இருக்கும் இடத்தைத் திரும்பிப் பார்த்தனர். அவர் முதுகைக் காட்டிக் கொண்டு சமையலறை பக்கம் திரும்பியபடி நாற்காலியில் அமர்ந்திருந்தார்,
“அவர் ஏன் யாரைப் போலவும் இல்லை?” பில்லிஸ் இப்படிச் சொல்லிவிட்டு மெல்ல சிணுங்கினாள்.
“ஹஷ்….” என்ற உஷார்படுத்தும் ஓசையோடு பாட்டி எல்லாருடைய கவனத்தையும் தொட்டில் குழந்தையின் பக்கம் திருப்பினாள்.
அலிஸ் சொன்னாள், “அப்பா, யார் மாதிரியும் இல்லையே!”
“அவர் யார் மாதிரியாவது இருந்தாக வேண்டுமே!” என்று கட்டில் ரிப்பனில் தன் விழி நீரைத் துடைத்துக் கொண்டே சொன்னாள் பில்லிஸ். அப்போது பாட்டியைத் தவிர மற்றவர்கள் நாற்காலியில அமர்ந்திருக்கும் அப்பாவைப் பார்த்தனர்.
அப்பா நாற்காலியிலிருந்து திரும்பியபோது அவர் முகம் உணர்வற்று வெளிறிக் கிடந்தது.
அ.ரெங்கசாமி குறித்த கட்டுரை நெஞ்சை நெகிழ வைத்தது.
‘அப்பாவை’ வாசித்தல்.
கோ. புண்ணியவான் மொழிப்பெயர்த்து வல்லினத்தில் வந்திருக்கும் இந்தக் கதை ரேமண்ட் கார்வரால் 1976—ல் எழுதப்பட்டு அவருடைய முதல் சிறுகதைத் தொகுப்பான ‘Will you please be quite, please’ தொகுப்பில் வெளிவந்த கதையாகும்.
ஆங்கில மொழியாற்றல் அதிகம் இல்லாதவர்களாலும் எளிதில் படித்திவிடக்கூடிய, கார்வர் எழுதிய மிகச் சிறிய கதையிது. வெறும் ஒன்றரைப் பக்கமே அதன் நீளம். எளிதில் படித்துவிடக்கூடிய கதை என்பதால் அது ஒரு எளிய கதை என்று பொருள்கொள்ளாகாது. கதையில் புதைந்திருக்கும் நுட்பம் ஆழ்ந்த வாசிப்பைக் கோருவது. சிறுகதை எழுதும் கலையை பயில விரும்பும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் விரும்பி தேர்வு செய்து பயிற்றுவிக்கும் கதைகளில் இது ஒன்று என்ற தகவலைத் தெரிந்துக்கொண்டால் கதையின் முக்கியத்துவத்தை அறியலாம்.
கதைச் சுறுக்கம்
படுக்கையறையில், தொட்டிலில் குழந்தையோன்று கிடத்திவைக்கப்பட்டிருக்கிறது. குழந்தையைச் சுற்றி அவளின் மூன்று சகோதரிகள், தாய் மற்றும் பாட்டி சூழ்ந்திருக்கின்றனர். தந்தை, சமயலறையில் இருக்கிறார். அந்தப் பெண்மக்கள் குழந்தையுடன் விளையாடியபடி அவனின் அங்க அம்சங்கள் குடும்பத்தில் யாரை ஒத்திருக்கிறது என அடையாளம் காண முயலுகின்றனர்.
பாட்டி, குழந்தை தாயைப்போன்றும், தாத்தாவைப் போன்றும் இருப்பதாக அபிப்பிராயப்படுகிறாள். தாயிற்கு உறுதியாக தெரியவில்லை. குழந்தையின் சகோதரிகளில் ஒருத்திமட்டும் அப்பாவைப்போல் இருப்பதாக கூறுகிறாள்.
சகோதரிகள் இப்போது, அப்பா யாரைப் போல் இருக்கிறார் என்று கேட்டுக்கொள்கின்றனர். அவர் யாரைப் போலவும் இல்லையென்று முடிவெடுக்கின்றனர். பாட்டி, எல்லோரையும் அமைதியாக இருக்கும்படி சொல்கிறாள். பாட்டியைத் தவிர மற்றெல்லோரும் அப்பாவைத் திரும்பி பார்க்கின்றனர். அவர், உணர்ச்சியற்ற முகத்துடன் அவர்களைப் பார்க்கிறார்.
கதையின் கருப்பொருள் – அடையாளம்.
கதையின் உரையாடல்கள் ‘அந்த அடையாளத்தை’ சுற்றியே இருப்பதைக் காணலாம். முதல் பத்தியிலேயே, பிரசவத்திலிருந்து மீண்டெழுந்த தாய், ‘இன்னும் அவள் அவளாக இல்லை’ என்பதில் அடையாளச் சிதறல் கோடி காட்டப்படுகிறது. தொட்டியில் காணப்படும் நீல நிற ரிப்பன் குழந்தையின் பாலின அடையாளமாகும். (அமெரிக்கர்கள், நீல நிறம் ஆண் குழந்தைக்கும் இளஞ்சிவப்பு (pink) பெண் குழந்தைகளுக்கும் அடையாளம்கொள்ளும் போக்கு 19-ம் நூற்றாண்டு வழக்கமாகும்). பாட்டி, குழந்தையின் விரல்களை தாயுடனும், உதடுகளைத் தாத்தாவுடனும், அக்காள் ஒருத்தி, அப்பாவை நினைவுகொள்வது, இன்னொருத்தி யாரையும் ஒத்திருக்கவில்லையென்று சொல்வது யாவுமே அடையாளச் சிக்கலை பேசும் விஷயங்களே.
அதுவரை குழந்தையின் அடையாளத்தைப் பற்றியே பேசிய கதை, அடுத்து அப்பாவின் அடையாளத்தின்பால் நகரும் போது, அவர் யாரைப் போலவும் இல்லை என்று கதையில் சொல்லப்படுகிறது. ஆக, கதை யாருடைய அடையாளத்தைத் தேடுகிறது. கதையின் தலைப்பு ‘அப்பா’!.
கதையில் நுட்பமாக சொல்லப்பட்டிருக்கும் இன்னொரு விஷயம், அந்நியபட்டுக்கிடத்தல், ஒதுங்கியிருத்தல். குடும்பமே பிறந்த குழந்தையைச் சுற்றிச் சூழ்ந்துகொண்டு அதன் அடையாளத்தைத் தேடி களிக்கிறது. (பிறந்த குழந்தயைக் காணச் செல்லும் யாருமே அதன் அடையாளத்தைக் காண முயலுவது அழகாக சொல்லப்பட்டிருக்கிறது). அப்பா சமயலறையில் அவர்கள் பேசுவது கேட்கும் தூரத்தில் ஒதுங்கியிருக்கிறார்.
“அப்பாவைப் போல் இருக்கிறான்..” என்று குடுப்பத்துடன் இணைக்கப்படும் குழந்தை, “அப்பா யாரைப் போலவும் இல்லை..” என்று சொல்லும் இடத்தில் அப்பா மட்டுமா அந்நியப்படுத்தப்படுகிறார்?.
“ஆனால் அப்பா யாரைப் போலாவது இருக்க வேண்டுமே?.” ஒரு மகள் கண்களைத் துடைத்துக்கொண்டே சொல்கிறாள். பாட்டியைத் தவிர மற்றெல்லோருமே அப்பாவைப் பார்க்கிறனர்.
எல்லோரும் திரும்பி அப்பாவைப் பார்க்க, பாட்டி ஏன் பார்க்கவில்லை? அவள் தாய் வழிப் பாட்டியோ?.
அப்பா, திரும்பி வெளிறிய, உணர்ச்சிகளற்ற முகத்துடன் அவர்களைப் பார்க்கிறார். எல்லோருடை உரையாடலையும் கேட்கும் தூரத்திலேயே அவர் அமர்ந்திருந்தும் அவர்களின் பேச்சு அவரிடம் எந்த சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. அந்த அளவிற்கு குடும்பத்தினின்று அந்நியப்பட்டுக்கிடக்கிறார் என்று பொருள்கொள்ளலாமா?. குடும்பத்தில் யாருக்குமே என்னுடைய அடையாளம் தெரியவில்லையா?.
அப்பாவின் அடையாளமின்மையையும் அந்நியப்பட்டுப் போவதும் இந்தச் சிறிய கதையில் புதைந்துக் கிடக்கிறது.
கோ. புண்ணியவானின் மொழிப்பெயர்ப்பில் நான் ஓரிடத்தை உறுத்தலாக உணர்ந்தேன். அது,
“குழந்தையைப் பிரசவித்த களைப்புடன் முழுமையாய் பேறு நோயிலிருந்து விடுபடாத குழந்தையின் தாயும்,”
குழந்தைப் பேறு நோயாகுமா?
கார்வரின் வார்த்தைகளில் அந்த வரி,
‘The mother, who had just gotten out of bed and was still not herself.’
நல்ல விளக்கம் ஸ்ரீ. குழந்தைப்பேறு என்பது அந்தக் குடும்பத்துக்கும் தாய்க்கும் மகிழ்ச்சியான விஷயம்தான். குழந்தை வயிற்றிலிருக்கும் போது தாய்க்கு உடல் வாதையே உண்டாகாதா. அதையும்தானே சேர்ந்துதானே சுமக்கிறாள். குழந்தையைப் பிரசவிக்கும்போது எப்பேற்பட்ட வலியை ஒரு தாய் அனுபுவிக்கிறாள் அதற்குப் பிறகும் உடற் புண்களின் வலியையும் சுமக்கிறாள் இல்லையா?அந்த வாதையெல்லாம் எதில் சேர்த்தி ஸ்ரீ?
the mother who had just gotten out of bed and was still not hersef. இந்த still not herself என்ற சொற்றொடர் பிரசவித்துவிட்டு உடல் வலியில் படுத்திருந்துவிட்டு அப்போதுதான் எழுந்தவள் நிலை எப்படியிருக்கும்? ‘அவள் அவளாக இல்லை’ என்றால் என்ன பொருள்? வலியன்றி வேறென்ன?