உணர்வு இடைவெளிகளில் உறைந்துள்ள பாதை


மலேசிய சீன, மலாய், தமிழ் இலக்கியங்கள் குறித்த ஆழமான அறிதலையும் இந்த இலக்கியங்களுக்கிடையே அணுக்கமான உறவையும் வளர்க்கும் விதமாக தற்போது முழு வேகத்துடன் வல்லினம் செயல்படுகிறது.

வல்லினம் தொடங்கப்பட்ட 2009 முதலே, மலேசியாவி்ன் மலாய், சீனம், ஆங்கில இலக்கியங்களை அவ்வப்போது அறிமுகப்படுத்தி வந்துள்ளது பன்மொழி இலக்கியங்கள் குறித்த கட்டுரைகள், இலக்கிய மொழிபெயர்ப்புகள், மற்ற மொழி எழுத்தாளர்களின் நேர்காணல்கள் வல்லினத்திலும், வல்லினம் இலக்கியக் குழுவினால் தயாரான ‘பறை’ இதழிலும் இடம்பெற்றுள்ளன.

அதன் தொடர்சியாக வெவ்வேறு மொழி எழுத்தாளர்களிடையே கலந்துரையாடல்கள், இலக்கியவாசிப்புகளை நடத்துவதுடன், மலாய், சீனக் கதைகளைத் தமிழிலும் தமிழ்க் கதைகளை மலாய் மொழியிலும் மொழிபெயர்த்து ஜூன் மாதம் மூன்று நூல்களை வல்லினம் வெளியிட்டுள்ளது.

மலேசியாவின் தேசிய இலக்கிய வரையறைக்குள் மலாய் இலக்கியம் மட்டுமே இடம்பெறுவதால், சிறுபான்மையினரின் இலக்கியங்கள் சுய ஊக்கத்திலேயே வளரவும் செயல்படவும் வேண்டியுள்ளது. வளங்களின் பற்றாக்குறை நிலவினாலும் மலேசியாவில் தமிழ் இலக்கியத்தை நிலைநிறுத்தும் ஆழமான முயற்சிகளுடன், மொழிபெயர்ப்புகள் வழி இலக்கியப் பரிமாற்றத்திலும் வல்லினம் தொடர்ச்சியாகச் செயல்பட்டு வருகிறது.

வல்லினத்தின் இப்பணி, பல வழிகளில் முக்கியமானது எனக்கூறலாம்:

குறிப்பாக மலேசியாவையும் அதன் மக்களையும் முழுமையாக அறிந்துகொள்ள அந்நாட்டில் வெவ்வேறு மொழிகளில் எழுதப்படும் இலக்கியங்கள் வழியமைக்கின்றன. மக்களுக்கிடையிலான பண்பாட்டுப் புரிதலுக்கும் அணுக்கமான இணக்கத்துக்கும் மொழிபெயர்ப்புகள் பாலங்களாகத் திகழ்கின்றன.

இலக்கிய மொழிபெயர்ப்புகள் வாசகர்களை இன அல்லது மொழித் தனிமைப்படுத்தலில் இருந்து வெளியே அழைத்து வருகிறது. செல்சி நீலம் தொகுப்பின் முன்னுரையில் அ.பாண்டியன் குறிப்பிட்டிருப்பதைப்போல, மலேசியத் தமிழர்களிடம் சீன உணவும், மொழியும், நம்பிக்கைகளும் ஆழ ஊடுருவியுள்ளன. எனினும் அவர்களை அந்தரங்கமாகப் புரிந்துகொள்ள இலக்கிய வாசிப்பே உதவும்.

அந்தவகையில், கற்பனையில் இருக்கும் இலக்கியச் சுற்றுவட்டங்களைத் தாண்டிச் செல்ல ஒரு தொடக்கமாக இருக்கிறது வல்லினம் வெளியீடாக வெளிவந்துள்ள மலேசியச் சீனக் கதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பான ‘செல்சி நீலம்’ தொகுப்பு.


***

இங் கிம் சியூ

மஹுவா இலக்கியம்

மலேசியச் சீனர்களின் சீன மொழி (மாண்டரின்) இலக்கியம் மஹுவா இலக்கியம் எனப்படுகிறது. மஹுவா என்பது ‘மலேசியா’ (Ma) ‘சீன’ (Hua) என்ற சொற்களின் இணைப்பாகும் (மலேசிய தியோங் ஹுவா – மலேசியாவின் சீன நாட்டு வழித்தோன்றல்கள் என்பதன் சுருக்கம்).

சீன மொழியில் எழுதப்பட்டாலும், இது மலேசிய சமூகத்தின் ஒரு கூறாக மாறி, பன்மொழி இலக்கிய உரையாடலுக்கான பாலமாகச் செயல்படுகிறது.

பல இன நாடான மலேசியாவின் மிகவும் தனித்துவமான பண்பாட்டு சொத்துகளில் ஒன்றாக, நூறு ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக்கொண்ட அந்நாட்டுத் தமிழ் இலக்கியம் விளங்குவது போலவே சீன இலக்கியமும் விளங்குகிறது.

மண்ணின் மரபுகள், சமூக நிலைகளில் ஆழமாக வேர்கொண்டிருக்கும் நிலத்தின் எழுத்துகளாக மலேசியத் தமிழ், மலாய் இலக்கியங்களுடன் சீன இலக்கியங்களும் விளங்குகின்றன. இவர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கே உரித்தான இலக்கியங்களை உருவாக்குகிறார்கள்.

அதிகாரத்துவமில்லாதபோதும் மஹுவா இலக்கியம் உற்சாகமாகவே இயங்குவதைக் காண முடிகிறது. மாஹுவா எழுத்தாளர்கள், மலேசியாவைப் படைப்பாற்றல் மிக்க சீன மொழி இலக்கியக் களமாக மாற்றி வருகின்றனர்.

அந்தவகையில், மாஹுவா இலக்கியம் உலக இலக்கியத் தளத்தில் கவனம் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இதற்கொரு காரணம், மலேசியச் சீன எழுத்தாளர்கள் பலர் தைவானில் குடியேறி அங்கிருந்து எழுதுகிறார்கள். எனினும் அவர்களின் இலக்கிய கருக்கள் மலேசியாவைத் தழுவியவையாகவே உள்ளன.

1969 மே 13 கலவரத்துக்குப் பின், சீனர்கள் ‘அரசியலிலிருந்து விலக்கப்பட்ட இனமாக’ சித்திரிக்கப்பட்டனர். அந்தப் பாதிப்பின் விளைவாக பல சீன மலேசிய அறிவுஜீவிகளும் மாணவர்களும் தைவானுக்குக் குடிபெயர்ந்தனர். தைவான் வாசம் அவர்களது மொழி, சிந்தனை வளத்துக்கு உதவுவதுடன், உலக கவனத்தைப் பெறுவதிலும் பங்காற்றுகிறது.

ஆழமும் கலைநயமும் மிக்கவையாக வளர்ந்துள்ள மலேசிய சீன இலக்கியம் குறித்த ஓர் அறிமுகத்தை செல்சி நீலம் தொகுப்பு தருகிறது.

***

செல்சி நீலம்

ஏழு மலேசியச் சீனக் கதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பு, செல்சி நீலம்.

இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள ஏழு சீனக் கதைகளும், மலாய் மொழிபெயர்ப்பு வழியாகத் தமிழாக்கம் செய்யப்பட்டவை.

மலேசியாவின் குறிப்பிடத்தக்க மலாய் எழுத்தாளரான எஸ்.எம்.ஷாகீர், சீன இலக்கிய கல்வியாளர் முனைவர் ஃபுளோரன்ஸ் ஆகியோரின் கூட்டு முயற்சியாக, நூசா சென்டர் பதிப்பகம் வெளியிட்ட ‘Tasik Itu Bagai Cermin’ எனும் தொகுப்பே செல்சி நீலம் எனும் பெயரில் தமிழாக்கம் கண்டுள்ளது.

கி. இளம்பூரணன், விஸ்வநாதன், அரவின் குமார், சாலினி, ஆசிர் லாவண்யா, சல்மா தினேசுவரி, ம. நவீன் ஆகியோர் இக்கதைகளை மலாயிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளனர்.

மலேசியாவின் முக்கிய எழுத்தாளர்களான அ.பாண்டியன், ம.நவீன் இருவரும் நூலைத் தொகுத்துள்ளனர்.

‘செல்சி நீலம்’, ‘கண்ணாடியை நிகர்த்தது அந்த ஏரி’ போன்ற இலக்கிய விருதுகள் பெற்ற, பிரபலமான சீன எழுத்தாளர்களின் கதைகள் முக்கியமான கதைகள் இடம்பெற்றிருப்பது இத்தொகுப்பை முக்கியமானதாக்குகிறது.

இளம் எழுத்தாளரான லின் ஜுன் லோங், 22 நூல்களுக்கு மேல் எழுதியிருக்கும் பிரபல எழுத்தாளர் டாய்  சியாவ் ஹுவா,  உலகளவில் அறியப்பட்ட  ஹுவாங் ஜின்ஷு (இங் கிம் சியூ) , ஹோ சொக் ஃபோங், புகழ்பெற்ற எழுத்தாளர்களான டான் ஜெங் சின், கிங் பன் ஹுய், லி ஸிஷு  என மூலக் கதைகளை எழுதியிருக்கும் எழுத்தாளர்கள் ஒவ்வொருவரும் சீன இலக்கிய சமூகத்தில்  நன்கு அறியப்பட்டவர்கள். இந்நூலில் இடம்பெற்றுள்ள அவர்களது கதைகள் விமர்சகர்களாலும் வாசகர்களாலும் அடையாளம் காணப்பட்டவை. வெவ்வேறு வயதுகளில் இருக்கும் அந்த எழுத்தாளர்கள் ஒவ்வொருவரின் இலக்கிய அனுபவமும் சமூக, வரலாற்று பார்வையும் வேறுபட்டிருப்பதே இத்தொகுப்பை சுவாரஸ்யமாக்குகிறது.

பலவிதமான கதை சொல்லும் முறைகள், பல்வேறு கருப்பொருள்கள், வேறுபட்ட பாணிகள் என மஹுவா இலக்கியத்தின் பரந்துவயப்பட்டதன்மைக்கு ஒரு சான்றாக இத்தொகுப்பு உள்ளது.  மீயதார்த்தவாதம் (சர்ரியலிசம்), மாயயதார்த்தவாதம் முதல் அமைப்பியல் பாணி, நேர்கோட்டுப் பாணி வரை வெவ்வேறு கதைசொல்லல் உத்திகளில் எழுதப்பட்டுள்ள இந்தக் கதைகள், எழுத்தாளர்களின் எண்ணப்போக்குகள், கவலைகள், ஆழமான உள்வாங்கல்களுடன், அவர்களது ஆழ்மன ஆசைகளின் சிறு எட்டிப்பார்த்தலையும் வெளிப்படுத்துகின்றன.  இந்த தொகுப்பில் பலவிதமான குரல்களையும் அணுகுமுறைகளயும் காணமுடிகிறது. கவித்துவமான, உணர்ச்சிகரமான, பூடகமான சீன எழுத்துநடைகளை முடிந்தவரையில் தமிழுக்கு கொண்டுவந்திருப்பது இத்தொகுப்பின் சிறப்பு.

மலேசியாவில் நிலவும், இனத்துவம், மொழி  ஆகிய பிரிவினைகளால் உருவாக்கப்பட்ட அரசியல் சித்தாந்தங்களை இக்கதைகள் அறியத்தருகின்றன. அந்நாட்டின் பன்முகமான சமூக, பண்பாட்டுச் சூழலை இக்கதைகள் பிரதிபலிக்கின்றன.

சிறுபான்மையினமான சீனர்களின் வாழ்க்கை அனுபவங்கள், அவர்கள் எதிர்நோக்கும் அடக்குமுறை, இடைவெளிகள், பாலினம், அடையாளம், குடிநிலை, வர்க்க வேறுபாடுகள் போன்ற சிக்கல்களைப் பேசுகின்றன.

கவனமான வாசிப்பில் சீன சமூகத்தின் உலகமும் மனித உறவுகளும் ஒரு குழப்பத்தில் உள்ளதாகப் புரிந்துகொள்ளலாம். அதேவேளையில், ‘தேசியம்’என்பது சீன சமூகத்துக்கு வெளியே இல்லாததுபோல் இருக்கிறது, ஆனால் எங்கும் இருக்கிறது.

மொத்தத்தில் மலேசியச் சீன இலக்கியம், அதன் பேசுபொருள் குறித்த ஒரு குறுக்குவெட்டுப் பார்வையை இத்தொகுப்பு தருகிறது எனலாம்.

***

நீலத்தை உணர்தல்

வியப்பு வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்குகிறது. கற்பனைகளை வளர்க்கிறது. வாழ்க்கையின் வியப்பு கற்பனையால் விரியும்போது புனைவு எழுந்து நிற்கிறது.

இறந்த குழந்தை உயிர்பெறுவதும், தந்தை ஆசையாய் வளர்க்கும் மகன் அற்ப ஆயுளில் மடிந்து போவதும், வெறுப்போடு ஒதுக்கப்பட்டவன் நீண்ட காலம் வாழ்வதும், திருட வந்த இடத்தில் கைக்கெட்டிய புத்தரின் வெண்கலக்கிண்ணம் கைதவறிக்  குளத்தில் விழுந்தது வாழ்வின் புதிய தொடக்கமாவதும் என வியப்புமிக்க அமானுஷ்யங்கள் நிறைந்த கதை ‘செல்சி நீலம்’.

வறுமையிலும் தனிமையிலும் வாடி, காற்பந்தாட்டக்காரராக வேண்டும் எனும் ஆசை கடைசிவரை நிறைவேறாது போன கதையின் நாயகன், நிறைந்த மனத்தோடு உயிர்துறக்கிறார். கடைசியாக ‘செல்சி நீலம் தெரியுமா?’ என்று அவர் கேட்டது எதை என்று தேடும் மகன் இறுதியில், அப்பா சொன்னது உணர்வுநிலையை என்பதை உணர்கிறான். உணர்நிலைகளே மனத்தை உருவாக்குகின்றன. மனமே வாழ்வை வடிவமைக்கிறது என்பதை அறிந்துகொள்கிறான்.

ஆழ்மனத் தியான நிலையில், உள்ளுக்குள் கருநீல ஒளி பெருகும். அந்த ஒளியில் திளைக்கும்போது, விடுதலை உணர்வும் விவரிக்க முடியாத ஆனந்தமும் ஏற்படும். அதுவரை அனுபவித்த உடல், மன வலிகள், வேதனைகள் எதுவுமே இல்லாததாகிவிடும். அது ஓர் உணர்வுநிலை. அதை உருவகமாக, ஊடகமாகக் கொண்ட இக்கதை, நீலம் எனும் மன அமைதியின், நிறைவின் உணர்வுநிலையை அறிதலை, இத்தனை எளிதாகச் சொல்லமுடியுமா என்ற வியப்பைத் தருகிறது.

கறுப்பு பூனை குறி்த்த நாட்டுப்புறக் கதைகள், தாவோயிச குடும்ப உறவுகள், காற்பந்தாட்ட ஆர்வம், ‘பட்டாம்பூச்சி விளைவு’ எனும் அறிவியல், தத்துவக் கருத்து என புராண, நவீனக் கூறுகளை ஒன்றிணைத்து எழுதப்பட்டுள்ள இக்கதை, உயரிய 15வது ஹுவாசொங் இலக்கிய விருதில், புனைவுப் பிரிவில் முதல் பரிசை வென்றது.

விதி, ஆன்மிக சக்தி, எதிர்பாராத தொடர்புகளின் சக்தி என்பனவற்றின் மீது பின்னப்பட்டுள்ள இக்கதை, நவீன கதைசொல்லலில் எளிய கருக்களையும் சிறந்த கதைச்சித்திரமாக வடிக்க முடியும் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு.

வாழ்க்கை குறித்த புரிதலை பூனையின் இரகசிய நகர்வாக உணர்த்தும் இக்கதை இத்தொகுப்பின் சிறந்த கதைகளில் ஒன்று.

மாறாத அடுக்குகள்

தான் செங் சின்

நகரில் ஒரு மூன்றடுக்கு மாளிகை‘ திகில் கதை வாசிப்பு அனுபவத்தைத் தரும் பின்நவீனத்துவ எழுத்து. டான் சென் சிங்கின்  முக்கியமான சிறுகதையாக கூறப்படுவது.

கதையில் வரும் மூன்று மாடி பள்ளிக்கூடம்,  மலேசிய சீன சமூகத்தின் சமூக அடுக்குகள், மன அழுத்தங்கள், பண்பாட்டுப் பிளவுகளை பிரதிபலிக்கும் உருவகமாக உள்ளது. பள்ளிக்கூடமாக இயக்கும் அக்கட்டடம் கடைத்தொகுதியாக, சமூகக் கூடமாகி கடைசியில் எலிகள் வாழும் கிடங்காகிறது. பல தலைமுறைகளாக நகரின் சின்னமாகத் திகழும் அக்கட்டடத்தின் ஒவ்வொரு மாடியும் வெவ்வேறு சமுதாய அடுக்குகளின் உருவகமாக உள்ளது.

தேசிய அடையாளம், குடியேற்றத்தின் பண்பாட்டுச் சிக்கல்கள், இன அடையாளப் போராட்டம் முதலியவற்றைக் குறியீடுகளாகக் கொண்டிருக்கும், இக்கதை சீன மக்களின் அமானுஷ்யம், அதிர்ஷ்டம் உள்ளிட்ட பல்வேறு நம்பிக்கைகளைச் சுற்றிப் புனையப்பட்டுள்ளது

சுற்றுப்புற வளர்ச்சி, இரைச்சல், மாற்றங்களைத் தொடர்ந்து கண்டுவரும் மலேசிய நகரப் பகுதியில் அமைந்திருக்கும் ஒரு சாதாரணக்  கட்டடம். வேகமாக மாறும், தன்னலம் சார்ந்த நகரமே கதையின் பின்னணி. பரபரப்பான நகரத்துக்கு எதிர்மாறாக அமைதியாகவும்  மாற்றங்கள் இன்றியும் காணப்படும் கட்டடம் நிதானமாகவும் நிற்கிறது. நகர வளர்ச்சியால் மறக்கப்பட்டதுபோல அல்லது புறக்கணிக்கப்பட்டதுபோல. 

பழைய கட்டடம் பழமைவாய்ந்த நினைவுச்சின்னமாக நிற்க, சுற்றியுள்ள நகரம் வளர்ச்சியடைவதும் மாற்றம் காண்பதும், ஆன்மா அற்ற வளர்ச்சியையும் சமூகப் பிணைப்பு இல்லாத முன்னேற்றத்தையும் குறிக்கிறது. தொடரும் வாழ்வியல் சுழற்சிக்குள் சிக்கிய மக்கள், அவர்கள் வாழ்க்கையில் நின்றுவிட்டாலும், உலகம் அவர்களைக் கடந்துவிடுகின்றனர் என்பதை மாறாது நிற்கும் கட்டடம் காட்டுகிறது.

ஒவ்வொரு மாடியையும் வெவ்வேறு இனப்பிரிவு அல்லது பொருளியல் நிலைகள், தலைமுறை இடைவெளி,  பண்பாட்டுப் பாரம்பரியம், நவீனத்துவம், தேசிய உணர்வுகள் பற்றிய மாறுபட்ட அணுகுமுறைகளாகக் காணலாம்.

ஒருவருடன் ஒருவர் தொடர்புகொள்ளாமல் இருப்பதை,  தனிமை, சமூகப் பிணைப்புகள் அறுபட்ட நிலை,  நகர வாழ்க்கையின் பிணைப்பற்ற  நிலைகளை விவரிக்கிறது. மேல்மாடியில் இருப்பவர், கீழ்மாடியில் இருப்பவருடன் உணர்வுப் பிணைப்பு இல்லாதிருப்பதை, மேலிருந்து கீழ் வரும் சமூக/அரசியல் அமைப்பை உருவகமாகப் பார்க்கலாம். இடப்பெயர்வுக்கும் வேரூன்றுவதற்கும் இடையிலான உளவியல் மோதலையும் இக்கதை பிரதிபலிக்கிறது.

கட்டடத்தில் தலைமுறைகள் கடந்தும் குடியிருப்பதாக நம்பப்படும் ஆசிரியரின் ஆத்மாவும் எலிகளும் மனித மனத்தின் மாற்றமுடியாத, மாறாத பாரம்பரியங்களையும் அழுக்குகளையும் காட்டுவதாகக்கொள்ளலாம்.

இருந்தபோதும் நீளமான இக்கதையை வாசித்து முடிக்க மாடி அறையில் அமர்ந்து பயமுறுத்தும் ஆசிரியரின் ஆவி உதவுகிறது.

அழுத்தமற்ற, ஆனால் ஆழமான சமூக விமர்சனக் கண்ணோட்டத்தைக் கொண்ட கதை.

இருண்மையில் தொலையவைக்கும் இயலாமை

கிங் பன் ஹுய்

வாழ்க்கைப்பாடுகளை எதிர்கொள்ளல் குறித்த சீன சமூகத்தின் எண்ணப்போக்கின் ஒரு பார்வையைத் தருகிறது ‘நிசப்த பொழுது‘.

சாதாரண வேலை செய்யும் ஒரு பாட்டாளிக் குடும்பம் சிறுகச் சிறுகச் சேர்த்து அடுக்குமாடி வீடு ஒன்றை வாங்குகிறார்கள். தரகரால் ஏமாற்றப்படுகிறார்கள். கரையானும் ஈசலும் நிறைந்த, பழுதுகள் கொண்டதாக வீடு இருக்கிறது. சிரம வாழ்க்கையின் வசந்தமாக வரும் குழந்தை கருவிலேயே கலைந்துவிடுகிறது. அதனால், மனைவி மனஅழுத்தத்திற்கு உள்ளாகிறாள். நீண்ட தூக்கத்தில் தன்னைத் தொலைக்கிறாள். திடீரென பேரமைதியாகிவிட்ட வீட்டின் நுண்ணிய சத்தத்தையும் கணவன் உணர்கிறான்.

அதுவரை மனைவி மேற்கொண்டிருந்த குடும்பத்தையும் வீட்டையும் பராமரிக்கும் பொறுப்புகளுடன் மனைவியையும் கவனித்துக்கொள்ளும் பொறுப்பும் சேர்ந்துவிட, தனிமையிலேயே உழலும் கணவனும் மனச்சோர்வுக்கு ஆளாகிறான். அடைக்கப்பட்ட இடத்தில் சிக்கிக்கொண்ட பயம் அவனுக்கு ஏற்படுகிறது, சூழல் ஒரு கனவுநிலை போலாகிறது. போராட்டங்களும் வேதனைகளும் நிறைந்த வாழ்கையிலிருந்து தப்பிக்க விழையும் மனைவியும் கணவனும் மன அழுத்தத்தின் இருண்மைக்குள் தங்களைத் தொலைக்கிறார்கள்.

காஃப்கா உருவாக்கிய மனஅழுத்தம், தொலைதல், உள்ளார்ந்த வீழ்ச்சியை ஒத்த உருவாக்கம் இக்கதை. கதையின் நாயகனின் வீழ்ச்சி அமைதியாகவும், கவனிக்க முடியாத அளவுக்கு மெதுவாகவும் நிகழ்கிறது. ஆனால் அதன் விளைவு மிக மோசமானதாக பூமிக்குக் கீழே சத்தமின்றி வெடித்துச் சிதறும் எரிமலை போன்ற உணர்ச்சி வெடிப்பாக இருக்கிறது.

உறவுகளில் உணர்ச்சி உறைநிலையை வெளிப்படுத்தும் வகையில், இக்கதை காலத்தைச் சுருக்கி, மௌனத்தைப் பெரிதாக்குகிறது. மனைவி உறங்க ஆரம்பித்தபின், காலம் நிறைவற்றதாக உணரப்படுகிறது. நாள்கள் தெளிவற்றவையாகின்றன. வீட்டை நிறைக்கும் மௌனம், அமைதியற்றதாக இருக்கிறது.

வீடு என்பது பாதுகாப்பான காப்பிடம். அது இங்கே அறிமுகமற்றதும், நெருக்கடியானதும் ஆகிறது. கணவனின் தனிமையான, கையறு நிலையைப் பிரதிபலிப்பதைப்போல் சுவர்கள் உள்ளிறங்குகின்றன. அமானுஷ்யம் இல்லாத, திடுக்கிடல் நிறைந்த கதை.

மனைவியின் அசைவற்ற தன்மையும் (உணர்ச்சியற்ற தூக்கம்), அதை எதிர்கொள்ள முடியாத கணவனின் நிலையும், ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் உணர்ச்சிச் சுமைகளையும், உண்மையான உரையாடல் இல்லாத நிலையையும் வெளிப்படுத்துகின்றன. மனைவியின் தூக்கத்தை சமூக அல்லது மண வாழ்வின் எதிர்பார்ப்புகளிலிருந்து விடுபட்டுச் செல்லும் பெண்ணின் மனநிலையாகப் பொருள் கொள்ளலாம்.

பலராலும் எழுதப்பட்ட சுமைதாங்கிகளின் கதைதான் என்றாலும் மாய யதார்த்த பாணி எழுத்தும் கவித்துவமான நடையும் வாசிப்பை ஈர்ப்புள்ளதாக்குகின்றன. பொதுவான எதிர்பார்ப்புகளும் ஆசைகளும் கற்பனைகளும் நிறைந்த சாதாரண எளிய தம்பதியின் கசப்பையும் ஏமாற்றங்களையும் விரக்தியையும், சீனப் பண்பாடு, பழக்கவழக்கங்களினால் உருவான சிந்தனைப்போக்கின் வழி வாசிக்கும்போது மாறுபட்ட அனுபவம் கிடைக்கிறது.

இறைவனிடம் திரும்புதல்

டாய் சியாவ் ஹுவா

மிக மென்மையாக, இறகால் தடவி விடுதலைப்போல ஒரு பெரும் அரசியலை பேசும் கதை ‘இறைவனிடம் திரும்புதல்’. 

இஸ்லாம் குறித்து எதுவுமே அறியாது தைவானில் வளர்க்கப்பட்ட சீனப் பெண், இஸ்லாம் மதத்தை ஏற்று வாழ்ந்த தன் தாயின் இறுதிச் சடங்கில் தன் சமயம் குறித்து அறிந்துகொள்வதாக கதை நகர்கிறது.  அதேவேளையில் தன்னைக் குறித்தும், தன் தாய் குறித்தும் அவரது சிந்தனைகள் குறித்தும் அப்பெண் அறிந்துகொள்கிறாள்.

இக்கதையை நேரடியான நேர்கோட்டுக் கதையாகவும் வாசிக்கலாம், படிமங்களால் ஆன கதையாகவும் பொருள்கொள்ளலாம்.

இஸ்லாமிய இறுதிச் சடங்கை விவரிவாக விவரிக்கும் புனைவுக்கட்டுரையாக அமைந்துள்ள இக்கதை இப்படி முடிகிறது:

‘உண்மையில், இவ்வுலகில் உள்ள எந்த ஒரு மதமும் (அது வழிமாறிய போதனையாக இல்லாதவரை) அதை ஏற்றுக் கொண்டோரை உன்னத இதயமுள்ளவர்களாகவும், நல்லநோக்கங்களைக் கொண்டவர்களாகவும், ஒருவரையொருவர் மதிக்கவும் நேசிக்கவும்தான் அறிவுறுத்துகிறது.

இருப்பினும், மதத்தின் பெயரால் மோதலைத் தூண்டி போர்கள் ஏற்படச் செய்யும் மனிதர்களும் இருக்கவே செய்கின்றனர். சகிப்புத்தன்மையும் ஒத்துழைப்பும் பேரன்பும் கொண்டுள்ள மதம் ஏன் மனிதர்களால் திரிக்கப்பட்டுத் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது?’

இறைவனிடம் திரும்புதல் என்பது இங்கே ஒரு பேருண்மையாக விரிகிறது.


கவித்துவமான எதிர்ப்பு

ஹொ சொக் ஃபொங்


சிறுபான்மை இனமாக சீன சமூகம் அனுபவிக்கும் நெருக்கடிகளை வெளிப்படுத்தும் கதை ‘கண்ணாடியை நிகர்த்தது அந்த ஏரி’.

மாறுபட்டுச் சிந்திக்கும்;  இலக்கியத்தையும் இயற்கையையும் ரசிக்கும் கட்டற்ற மனம் கொண்ட ஓர் இளம் ஆசிரியையின் மனவோட்டமாகச் சொல்லப்படும் கதை. 

அந்த ஆசிரியரின் வகுப்பில் E. E. Cummings-இன் எளிய கவிதை அதன் வாசிப்பால் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு அந்த அவர் கேள்விக்குள்ளாகப்படுகிறார். அது அவருக்குச் சிக்கலாகிறது. விதிகளுக்கு உட்பட்டு சிந்தனைகளை அடக்கி வாழ்வது அவருக்கு மூச்சடைக்கிறது. 


மென்மையான, அதேசமயத்தில் பதற்றமூட்டும் சொற்களால் எழுதப்பட்டுள்ள இச்சிறுகதை, கூர்மையான அரசியலைப் பேசுகிறது. சொல்லப்படாத வார்த்தைகள், தடுக்கப்பட்ட ஆசைகள், உறுதியற்ற அடையாளங்களால் நிரம்பிய ஒரு கனவுநிலை உண்மையோடு கலந்த உலகத்துக்குள் வாசகரை இட்டுச் செல்கிறது.


பெண்கள் தங்கள் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் கட்டுப்பாடுகள், நகரமயமாதலின் வேகத்தால் நசுங்கும் அவர்களது வாழ்க்கைகளையும் இக்கதை அலசுகிறது.


இயல்பான உணர்வுகளைத் தூண்டும் கவிதைநயமிக்க உரைகளையும், நிலவும் அதிகார, அரசியல் அமைப்புகளை கடுமையாக விமர்சிக்கும் நேரடித்தன்மைகொண்ட காட்சிச் சித்திரங்களையும் இணைக்கும் சீன எழுத்தின் அழகியலை தமிழ் மொழிபெயர்ப்பில் காண முடிவது சிறப்பு.

குரல் எழுப்புவோர் அடக்கப்படுவர் அல்லது அடங்கிப்போக வைக்கப்படுவர் எனும் எண்ணம் சீன சமூகத்தில் உள்ளது என்பதை இக்கதை காட்டுகிறது என்றால், இழப்பு வந்தாலும் எதிர்த்து நிற்கும் மனப்போக்கும் இருப்பதை ‘ஒருவரின் வாழ்க்கை முறை’, ‘தூறல் மழை’ ஆகிய இரு கதைகளும் காட்டுகின்றன.

இருத்தலியக் கேள்வி

லி ஸிஷு

ஒரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையின் போராட்டத்தை கவிதையாகச் சொல்கிறது ஒருவரின் வாழ்க்கை முறை’. கொலை செய்வதையும் அதற்கான விழைவையும் உருவகங்களாக்கி, துணிவும் உறுதியும் கொண்ட, அறிவை நாடும் ஒரு பெண்ணின் ஒடுக்குதலுக்கு எதிரான போராட்டங்களைச் சொல்கிறது. தத்துவார்த்துமான, கவித்துவம் நிறைந்த வரிகளால் ஆன இக்கதை, ஒரு கனவுநிலை வாசிப்பைத் தருகிறது.

பிரபலமான சீன நவீனத்துவ கவிஞரான கு செங்கின் கவிதைகளாலே கதையும் மாந்தர்களின் உணர்வுகளும் அறிமுகமாகின்றன. கவிதைகளாலேயே கதையைப் பின்னியுள்ளார் கதையாசிரியர் லி ஸிஷு.

இளம் பெண்ணாண யு சியாவ்யூ ஆடவர் ஒருவரின் கழுத்தை கத்தியால் அறுக்கிறாள். யு சியாவ்யூ எதற்காக வாழ்விலிருந்து விலகிச்செல்கிறாள் என்பது யாருக்கும் தெரியவில்லை, கொலைக்கான காரணமும் யாருக்கும் தெரியவில்லை.

மரணமே இறுதி தீர்வாக இருக்கலாம் என்றாவது யு சியாவ்யூ எண்ணினாளா? அவளைப் பொறுத்தவரையில் வாழ்க்கைக்கு என்ன அர்த்தம்?

இளம் பெண்ணாண யு சியாவ்யூ சாதாரணமாக ஒரு கடைக்குப் போவதில், நம்பவியலாத காட்சிகள் விரிகின்றன. சட்டென்று தோன்றும் அதிர்ச்சியூட்டும் காட்சிகள். தற்செயலாக அமைந்ததோ என்னவோ,தொடக்கம், வளர்ச்சி, திருப்பம், முடிவு எனும் பின்னலைப் புறந்தள்ளும் அளவுக்கதிகமான திடுக்கிடல்கள். உரிமைகொள்ள எதுவுமின்றி, பொருள் கொள்ள முடியாத அளவுக்கு அது வடுவாகிறது.

மனஅழுத்தத்தின் ஒரு காட்சியாக இக்கதையைப் படைத்துள்ளார் எழுத்தாளர்.

இக்கதையை வாசித்தபோது வாழ்வின் படுகுழியின் விளிம்பில் நிற்பதைப்போன்ற உணர்வு ஏற்பட்டது.

இவ்வெழுத்து வழி ஓரளவு சீன எழுத்தாளரின் பண்பாட்டு பின்னணியை உணர முடிகிறது. மலேசிய சீனராக அவர் எதிர்கொள்ளும் பல்வேறு சவால்களை ஓரளவு அறிய முடிகிறது.

பாலைவனத்தின் அடிஆழத்தில் உள்ள ஆபத்துக்களை ஆராயும் ஒரு சுய முயற்சியாக கதையின் சிந்தனையோட்டத்தைப் பார்க்க முடிகிறது.



நிலைப்பாடு குறித்த கேள்விகள்

ஒரு சமூகத்தின் போராட்டத்தை வரலாற்றினூடாக முன்வைக்கிறது ‘தூறல் மழை.’ மலேசியாவின் முக்கிய கம்யூனிச அரசியல்வாதியாகவும் கொரில்லாப் படைத் தலைவராகவும் இருந்த சின் பெங், நாடு கடத்தப்பட்ட நிலையில், ரகசியமாக மலேசியாவுக்கு வந்துபோயுள்ளார் என்ற ஊகச் செய்தியின் புனைவாக்கம் இது.


சீன கம்யூனிசத்தின் இறுக்கமான கட்டமைப்பு, கட்டுப்பாடுகள் நிறைந்த வாழ்க்கைமுறை, மாற விரும்பாத சிந்தனைப்போக்கு என பலவற்றையும் கடுமையாக விமர்சிக்கும் ஆழமான அரசியல் சித்தாந்தங்களை அலசும் சுவாரஸ்யமான கதை. சாகசக் கதையின் விறுவிறுப்போடு நகரும் நடையும், ஆழமான அறிவு விசாரத்தின் வெளிப்பாடும் கதையை வேறு தளத்திற்கு எடுத்துச் செல்கின்றன.

கருத்தாக்கத்துக்கும் சுயத்துக்கும்  இடையே சிக்கிக்கொண்டிருக்கும் ஒருவரை மையமாகக்கொண்ட இக்கதை,  உண்மைக்கும் கற்பனைக்கும் ; தேசிய அடையாளத்துக்கும் சுய அடையாளத்துக்கும் இடையேயான மெல்லிய எல்லைகளை உருவகப்படுத்தி நகர்கிறது.

கதை எங்கும் இருக்கும் தூறல், அரசியல், உணர்வு, மொழி சார்ந்த ஓர் அழுத்தமற்ற, ஆனால் இடையறாத கலக்கத்தைக் காட்டுகிறது.  இடையறாத தூறல் போலவே, அந்தக் கலக்கமும் மையப்பாத்திரங்களின் வாழ்க்கையெங்கும் படர்கிறது. 

சீன அடையாளம், பேச்சுரிமை போன்றவற்றுக்கான உள்மனம் போராட்டம் மையப் பாத்திரத்திரத்தின் அரசியல் சிந்தாந்தம், வாழ்க்கை சார்ந்த நம்பிக்கைகளை அசைக்கிறது.

இந்தக் கதை, இங் கிம் சியூவின் பின்நவீனத்துவ எழுத்து பாணியையும்  மஹுவா இலக்கியத்தில் அவருடைய பங்களிப்பையும் எடுத்துக்காட்டுகிறது.

இக்கதை, தணிக்கையையும், தேசியவாதத்தையும் விமர்சிக்கிறது. அதேசமயம், இனங்களுக்கும், நாடுகளுக்கும் இடையில் மனிதன் எதிர்கொள்ளும் உளவியல் நிலைப்பாட்டை கேள்விக்குள்ளாக்குகிறது.

வரலாறு புனைவாவதில்லை; புனைவு வரலாற்றைச் சுவாரஸ்யமாக்குகிறது. பொதுபுத்தியை கேள்விக்கு உள்ளாக்கிறது. உண்மைத்தன்மையை அறியத் தூண்டுகிறது. இந்தத் தொகுப்பின் சிறந்த கதையாக இக்கதையைச் சொல்லலாம்.


இக்கதையின் ஆசிரியர் இங் கிம் சியூ, இலக்கிய உலகத்தில் மிகவும் மதிக்கப்படும் குறிப்பிடத்தக்க சீன எழுத்தாளர்களில் ஒருவர். ஜோகூரில் பிறந்த இவர் தாய்வானில் சீன இலக்கிப் பேராசிரியராக உள்ளார். தாய்வானில் குடியேறியும், மலேசியாவை எழுதிக் கொண்டிருப்பவர்களில் முக்கியமானவர்கள்.

                                                                           ***                     


இலக்கிய மொழிபெயர்ப்பு என்பது பண்பாடு, அறிவாற்றலைப் புரிந்துகொள்வதுடன், மொழிபெயர்க்க சிக்கலான எழுத்தையும் சூழ்நிலையையும் புரிந்து எழுதுவதாகவும். மிகவும் சிரமமான பணி. அப்பணியை ஓரளவு சிறப்பாகவே இத்தொகுப்பின் மொழிபெயர்ப்பாளர்கள் மேற்கொண்டுள்ளனர். சில வாக்கிய அமைப்புகளும் சொற்றொடர்களும் இன்னும் செறிவாக்கப்பட்டிருந்தால், கதைகள் இன்னும் சிறந்த வாசிப்பைத் தரக்கூடும். 

மலாய், சீனம், தமிழ், மலேசியப் பழங்குடி மக்களின் மொழிகளில் எழுதப்பட்ட மலேசிய இலக்கியங்கள் தனித்துவமிக்க பார்வைகளைக் கொண்டவை. இவை அனுபவத்தின் இயற்கையான தன்மையை வெளிக்கொணருகின்றன. இந்த இலக்கியங்களை விமர்சனப் பார்வையில் வாசிப்பது, தேசிய அடையாளம், மொழி அடையாளம் எனும் கட்டுகளுக்குள் இருந்து விடுபட்ட பார்வைக்கு வழிவகுக்கிறது.

வெளிப்படுத்த முடியாததை வெளிக்கொணர, எழுத்தே கைகொடுக்கிறது. இக்கதைகளின் வரிகளுக்கிடையே உள்ள இடைவெளிகள் உணர்வுகளுக்கான பாதைகளைத் திறக்கின்றன.

இனம், மொழி, சமயங்களுக்கிடையே உள்ள அமைதியின் ஊடாக, ஒருவரையொருவர் கேட்கின்றோம், உணருகின்றோம், இணைகின்றோம்.

தமிழ் வாசகர்களுக்காக நவீன மஹுவா எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தும் தொகுப்பாக இதன் பங்கு, பண்பாட்டு, இலக்கிய, மொழிபெயர்ப்பு சார்ந்த ஆய்வுகளுக்கு ஒரு களமாக இருக்கும்.

1 comment for “உணர்வு இடைவெளிகளில் உறைந்துள்ள பாதை

  1. July 1, 2025 at 4:09 pm

    எழுத்தாளர் லதா எழுதியுள்ள இந்த விமர்சனக்கட்டுரையில் ‘இறைவனிடம் திரும்புதல்’ கதையைப் பற்றிப்பேசும் போது புனைவுக் கட்டுரை என்ற பதத்தைப் பயன்படுத்துகிறார். எனக்கு அதில் உடன்பாடு உண்டு. இஸ்லாம் இறப்புச் சடங்கையே துருவித் துருவி எழுதியிருக்கிறார் டாய் சியாங் ஹுவா. புனைவுத் தன்மை குறைந்தும் கட்டுரைத் தன்மை மிகுந்தும் காணப்படும் கட்டுரைக் கதை இது. லதா பயன்படுத்திய புனைவுக் கட்டுரை என்ற பதத்துக்கு நானும் என் புரிதலைப் கட்டுரைக் கதை என்று பொருத்திப் பார்க்கிறேன். மலேசியாவில் வேறு சமயத்தைச் சார்ந்தவர்கள் இஸ்லாம் சமயத்துக்கு மாறும் போது அவர்கள் எதிர்நோக்கும் பண்பாட்டு சமய சடங்கு அதிர்ச்சிகள் நிலைகுலைய வைப்பவை. விரும்வி இஸ்லாம் சமயத்தைத் தழுவுபவர்களுக்கு இந்த அதிர்ச்சிகள் பாதிப்பதில்லை. மூன்றாம் நபராக இருந்து அனுபவிப்பவர்களுக்கு இவை அதிர்ச்சியைத் தருபவைதான். இக்கதையில் மையப் பாத்திரமாக வருபவர் இந்த அதிர்ச்சிகளை புனைவாக்க முடியாமல் சற்று திணறியிருக்கிறார். இறப்புச் சடங்குகளே கட்டுரைத்தன்மைக்கு மிக நெருக்கமாக இருக்கிறது. கதையின் இறப்புச் சடங்குகள் நிறைய வருகின்றன. அவை அனைத்தையும் கதைக்குள் கொண்டுவரும் முயற்சியில் இதனை புனைவுக் கட்டுரையாக்கிவிட்டார் கதாசிரியர். ஆனால் கதை கடத்தும் தகவல் வலிமையாக நிற்கிறது. வாசிப்பவனை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. கட்டுரையும் அதிர்ச்சியைத் தரத்தானே செய்யும். இந்த ஏழு சீனக் கதைகளை வாசிக்கும்போது எனக்கு சீனச் சிறுகதைகளின் மீது மதிப்பு கூடியது. மலேசியாவில் மலாய்க் கதைகளைவிடவும், தமிழ்க்கதைகளைவிடவும் சீனமொழி புனைவுகள் தரத்தில் சற்றே உயர்ந்திருக்கின்றன. கண்டிப்பாக ஏழு கதைகளை அடிப்படையாக வைத்து ஒரு முடிவுக்கு வந்துவிடக் கூடாதுதான். ஆனால் இதனைப் பதச் சோறாக மதிப்பிட்டுக்கொள்வதிலும் தவறில்லை என்றே கருதுகிறேன்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...