தூறல் மழை

திடீரென நின்றது இரயில். இருண்ட கனவுலகிலிருந்து அவர் திடுக்கிட்டு விழித்தார். கண்ணீர் அவர் முகத்தை நனைத்திருந்தது. லக்கன் வகை டாக்பில் தொப்பியணிந்த ஆண்மகன் அவர்.

மழை கொஞ்ச நேரத்திற்கு முன்புதான் நின்றிருந்தது. ஜன்னல் கண்ணாடிகளில் நீர்த்துளிகளின்  அலங்கரிப்பு இன்னும் இருந்தது.

கனவில், அவர் இன்றைய வாழ்க்கைக்கு முற்றிலும் வேறான வாழ்க்கை வாழ்ந்திருந்தார். சாதாரண கம்பத்தில் வாழ்ந்த அவர், வாழ்வாதாரத்துக்குச் சாதாரண தொழில் செய்து கொண்டிருந்தார்.

தொடக்கப்பள்ளியில் ஒன்றில் சீன மொழி ஆசிரியராகப் பணிபுரியும் அவருக்குச்  சாதாரண சூழலுடன் பழக்கப்பட்டிருக்கும் மனைவியும் (திருமண பந்தத்திற்கு அப்பால் வேறெந்த உறவும் அவருக்கு இருந்தது கிடையாது) வயோதிகத்தால் தீண்டப்பட்டு இறக்கும் வரை பெற்றோரைக் கைவிடாமல் கவனித்துக்கொள்ளும் நான்கு பிள்ளைகளும் இருந்தனர்.

ஆனால், ஒரு படத்தொகுப்பில் தவறாக இடம்பெற்றுவிட்ட ஒரு காட்சி போலவோ அல்லது எரிந்துபோன திரைப்படச் சுருள்போலவோ காட்சிகள் சட்டென மாறிவிட்டன. (இரும்புப் பாலத்தைத் தாண்டிய பிறகு இரயில் வளைந்து திரும்பியதால் இருக்கலாம்.) இப்போது அவர் ஆர்ப்பரிக்கும் பெருங்கூட்டம் கூடியிருக்கும் சதுக்கத்தில் நின்றிருந்தார். அவருக்குத் திடீரென்று நாட்டின் மிக உயரிய விருது வழங்கப்படுகிறது. மக்களுக்கு மத்தியில் அவருக்கு உட்சபட்ச மரியாதையும் கொடுக்கப்படுகிறது. எதிர்க்கட்சி அமைப்புகளின் சதிகளைச் சிரமப்பட்டு முறியடித்து அனைவரையும் சிறைக்குள் தள்ளிய பிறகு, அவரது சிலை பொது இடங்கள் எங்கும் நிறுவப்பட்டன. மேலும், சிவப்பேறிய கன்னங்களுடன் அளவாகச் சிரிக்கும் அவரின் புகைப்படம் மாநாட்டு அரங்கச் சுவர்கள் எங்கும் மாட்டப்பட்டிருந்தன. (மலையிலிருந்து விரைந்து கீழிறங்கும் இரயிலில் தொடர்ந்து போடப்பட்ட பிரேக்குகளால் பெட்டிகள் அதிர்ந்தன). அவர் உயிராபத்தையும் துரதிஷ்டத்தையும் (நம்பிக்கைக்குரியவர்களின் துரோகத்தால்)  எதிர்கொண்டார். பின்னர், அவர் எதிரிகளால் தொலைதூர மலைப் பகுதிக்கு விரட்டப்பட்டு, குரங்குகள் கூட்டத்தால் சூழப்பட்டார். தலைக்குமேல் கரைந்த காகம் அவரை சுயநினைவுக்குக் கொண்டுவந்து சுற்றும் முற்றும் பார்க்க வைத்தது. வேதனை உணர்வு இதயத்தைத் துளைத்தது. டெங்குவால் பாதிக்கப்பட்டதுபோல் அவரது எலும்புகள் கடுமையாக வலித்தன. மலையிலிருந்து கீழே குதித்துத் தற்கொலைச் செய்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் தோன்றி மறைந்தது.

அதிர்ஷ்டவசமாக அவர் கனவிலிருந்து விழித்துக்கொண்டார். எழுந்த உடனே அவரது மனம் சோர்ந்து போயிருந்தது. “நான் இப்படி ஆழ்ந்து தூங்கலாமா? எனக்கு முதுமை வந்துவிட்டதோ?” என்று எண்ணினார். நீண்டகாலமாக ஆழ்ந்து தூங்கிவிடக்கூடாது என்ற சுய கட்டுப்பாட்டில் வாழ்வதன் காரணமாகக் குட்டித் தூக்கம் போட்டுப் பழகிவிட்டதால் அவருக்குக் கனவுகள் வருவதேயில்லை. ஆனால், ஹூனானில் (Hunan) இருபத்தெட்டு வருடங்களுக்கு முன்பு அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு, கடுமையான காவல் இருந்ததால் அவரால் நிம்மதியாகக் கண்களை மூடித் தூங்கமுடிந்தது. அவரது தோற்றம் முன்பைவிட இப்போது பெரிதாகிவிட்டது. அவரது உடலமைப்பில் கொழுப்பின் திரட்சி மிகவும் வெளிப்படையாகத் தெரிந்தது. நடக்கும்போதுகூட பெரும் பாரமாக இருந்தது. சில அடி தூரத்தையும் பெரும் மூச்சிரைப்புடனேயே கடக்க வேண்டி இருந்தது.

அவர் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு, சொந்த ஊருக்குத் திரும்பிச் செல்ல நினைத்த காலங்கள் மிகவும் வருந்தத்தக்கவை. கவலையும் சோகமும் தோய்ந்த அவரின் பெற்றோரின் முகம் அவ்வப்போது கனவில் தோன்றி மறையும். அவர்கள் எப்போதும் அவரை செல்லப் பெயரைச் சொல்லித்தான் அழைப்பார்கள். அவர்கள் முதுமைவரை வாழ்ந்து இறந்தாலும், அவரது நினைவுகளில் அவர்களின் முகங்கள் இப்போதைய வயதைவிட இளமையான தோற்றத்திலேயே பதிவாகியிருந்தது. அவர் வீட்டைவிட்டு வெளியேறும்போது அவருக்கு வயது 18 இருக்கும். அப்போது அவர் பெற்றோருக்கு சுமார் நாற்பது வயதிருக்கும். அவர்களின் அக்காலகட்ட முகங்களே அவரின் எல்லாக் கனவுகளிலும் வந்துகொண்டிருந்தன.

முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு பொதுவான நபர் ஒருவரின் மூலம் அவர்களின் ஆசீர்வாதத்தைப் பெற அவருக்கு ஒரு வாய்ப்புக்கிடைத்தது. அவருடைய வருகையை எதிர்பார்த்து அவரது பெற்றோர் மிகுந்த ஆவலுடன் காத்திருந்தனர். இருப்பினும், அவரது பெற்றோரின் அன்பு மடலைப்  பொறியாக வைத்து அவரை சுற்றி வளைக்க உள்துறை அமைச்சு முயல்வதை அவர் கண்டுகொண்டார்.

புரட்சிப் போராட்டத்திற்காகவும் ஆயுதமேந்திய தனது தோழர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும், அவர் தனது அனைத்து நெருங்கிய உறவுகளையும் துண்டிக்க வேண்டியிருந்தது. ஆனால், அதன்பின் புதிய புதிய அனுபவங்கள் வாய்த்துக்கொண்டே இருந்ததால், தான் சாமானிய வாழ்க்கைக்குத் திரும்பக் காலம் கடந்து விட்டதாகத் திடீரென அவருக்குத் தோன்றியது.

சிறுநீர் கழிக்கும் உந்துதல் எப்போதும் இருந்தாலும் சிறுநீர் கழிப்பதே சிரமமானதாக மாற மாற உடல் மேலும் மேலும் பலவீனமானது. இவை எல்லாம் அவருக்கு உண்டாகியிருந்த Benign Prostatic Hyperplasia (BPH) எனும் நோயால் விளைந்தவை. பலவீனமான செரிமான அமைப்பு, மலம் கழிப்பதில் அவ்வப்போது சிரமத்தை ஏற்படுத்தியது. அவரது தோல் மிகவும் ‘சென்சிடிவாக’ ஆகிவிட்டிருந்தது. பற்கள் ஆடத்தொடங்கின, இரத்தத்தில் அதிகக் கொழுப்புச் சேர்க்கைக் காரணமாக இரத்தக் குழாய் தடித்தது (ventricular hypertrophy). மேலும் நீரிழிவு, பற்களின் ஈறு சிதைவு, மங்கிய நகங்கள், துர்நாற்றம் வீசும் கால் பாதங்கள் எனப் பல உடல் உபாதைகள் சேர்ந்துகொண்டன. உண்மையில் சொல்லப் போனால், அவரது பெற்றோரின் நினைவுகள் எப்போதும் அவருடைய மனஅமைதியைக் குலைத்துக்கொண்டிருந்தன. தனது வாழ்க்கை முடிவடைவதற்கு முன்பாக மறைந்துவிட்ட பெற்றோரின் கல்லறைக்கு முன்னால்  மண்டியிட்டு மன்னிப்புக்கேட்க விரும்பினார்.

உண்மையில் தனது சொந்த ஊரில் உள்ள தனது பெற்றோரின் கல்லறைகளைச் சென்று பார்க்க வேண்டும் என்ற கோரிக்கை, அவர் முன்பு கையெழுத்திட்ட சமாதான ஒப்பந்தத்தில் இடம் பெற்றிருந்தது. அவரது கண்ணோட்டத்தில் அது மிக நியாயமான கோரிக்கையாகவே இருந்தது. ஆனால் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவது அவ்வளவு எளிதான விஷயமாக இல்லை. பரிந்துரைக்கப்பட்ட அனைத்து நடைமுறை விதிமுறைகளுக்கும் இணங்கியிருந்தாலும் (அதிகாரபூர்வ விண்ணப்ப ஆவணங்கள் அனுப்பப்பட்டிருந்தாலும்) அவருடைய விண்ணப்பப் படிவங்கள் நிராகரிக்கப்பட்டே வந்தன. தன் தாய் நாட்டிற்குச் செல்ல அவருக்கு கடப்பிதழ்  ஒருமுறைகூட அங்கீகரிக்கப்படவில்லை.

அடையாள அட்டையில் நகல் சேர்க்கப்படவில்லை, புகைப்படம் மிகவும் பெரியதாக உள்ளது, புகைப்படம் மிகவும் சிறியதாக இருக்கிறது, பிறப்புச் சான்றிதழ் நகல் சேர்க்கப்படவில்லை… என்று அதிகாரிகள் கூறும் அர்த்தமற்ற காரணங்கள் அவரைக் குழப்பின. முன்பு அதிகாரத் தரப்பினர் அவரைக் கைதுசெய்யும் முனைப்புடன் இருந்தபோது அவர் எந்தவித ஆவணங்களையும் காட்ட வேண்டியிருக்கவில்லை. சுற்றறிக்கைகளில் அச்சாகியிருந்த அவரின் படமே அவர் முகத்தை  அடையாளம் கண்டுகொள்ளப் போதுமானதாக இருந்தது எப்படி என்பது அவருக்குப் புரியவில்லை. சில சமயங்களில் அவர் அனுப்பிய ஆவணங்கள் கைக்குக் கிடைக்கவில்லை என்று அதிகாரிகள் கூறினர். யாருக்குத் தெரியும்? அவர் மிகவும் சிரமப்பட்டு அனுப்பிய ஆவணங்களை அவர்கள் குப்பைத் தொட்டியில் வீசி விட்டார்களோ என்னவோ?

அவரின் ஊர் திரும்பும் விருப்பம் பற்றிய செய்தியை ஊடகங்கள் வெளியிட்ட பிறகு, அதிகாரிகள் அவரை இழிவுபடுத்த பல்வேறு அடையாளங்களை விரைவாக வழங்கினர். ‘தீவினை எதிர்ச்சக்தி’, ‘பயங்கரவாதி’, ‘குண்டர் கும்பலின் தலைவன்’, ‘தேச விரோதி’ என்று எத்தனையோ. தன்னை இன்னும் சுட்டுக்கொல்லாமல் விட்டிருக்கிறார்களே என்பதற்கு அவர்தான் நன்றி பாராட்ட வேண்டும்போல. இதில் அவர் எங்கே ஊர் திரும்புவது. அவர் இறந்து உடல் எரியூட்டப்பட்டு, சாம்பலானாலும் அவரது அஸ்தி மலேசியாவுக்கு எடுத்துவரப்படுவது நிச்சயம் தடுக்கப்படும்.

முழங்கைகளின் ஆதரவுடன், எலும்புகள் ‘கரக் கரக்’ என்ற ஒலியெழுப்பும் சத்தத்துடன் அவர் உடலை மெல்ல மெல்ல நிமிர்த்தினார். நசுங்கிக்கிடந்த டக்பில் தொப்பியைக் கையில் எடுத்து மெதுவாகத் தட்டினார். பின்னர், அந்த தொப்பியின் ஒவ்வொரு நெளிவையும் கையினால் தடவி, தனது வலதுகை கட்டைவிரலாலும் ஆள்காட்டி விரலாலும் நேராக்கினார். பிறகு, கவனமாக அவர் தனது பெரிய தலையை மறைக்க அந்தத் தொப்பியை அணிந்துகொண்டார். அவரது உடல் அனிச்சையாக நடுங்கியது. உடனே பக்கத்தில் இருந்த கறுப்பு மூக்குக்கண்ணாடியை அணிந்துகொண்டார்.  சுற்றும் முற்றும் பார்த்தார். வழக்கத்திற்கு மாறாக எதுவும்  இல்லை. ஜன்னலுக்கு வெளியே விளக்குகள் ஆச்சரியப்படுத்தின. மசூதியின் குவிமாடம்  ஆரஞ்சு நிற விளக்கொளியில் ஜொலித்துக்கொண்டிருந்தது. கம்பீரமான தோற்றத்துடன் நின்றுகொண்டிருந்த தேசிய மசூதி பல வருடங்களாகச் சந்திக்காத உற்ற தோழனைப்போல இருந்தது. இரயிலின் சக்கரங்கள்  மெல்ல நகர ஆரம்பித்தன. இவ்வளவு நேரம் அதிர்ந்துகொண்டிருந்த இரயில் மீண்டும் நின்றது. ‘கோலாலம்பூர் நிறுத்தம்’.

அவர் இளமையாக இருந்த காலத்தில் பலமுறை இங்கு வந்திருக்கிறார். இரயில் நிலையம் பெரிதாக மாற்றம் அடைந்திருக்கவில்லை. ஆனால் 40 ஆண்டுகள் ஓடி மறைந்துவிட்டன. 1969ஆம் ஆண்டு அதிபர் மாவோவால் வழங்கப்பட்ட ரெட் ஸ்டார் கைக்கடிகாரத்தைப் பார்த்தார். அந்தக் கடிகாரத்தின் நொடிச் சத்தம் அவரது இதயத் துடிப்பைவிட வேகமாக  இருப்பதைப்போல் தோன்றியது. இன்னும் அரை மணி நேரத்தில் இரயில் புறப்பட்டுவிடும். காற்றில் கலந்து வந்த காப்பியின் வாசனை அவரை உற்சாகமாக்கியது. சுற்றுப்புறச்சூழலை ஒருமுறை கவனித்தார். வழக்கத்திற்கு மாறான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. அவர் மனதில் ஒரு எண்ணம் தோன்றவே, முதலைத் தோல் போன்ற வடிவமைப்பு கொண்ட அவரின் பயணப்பையைப் படுக்கையின்  ஓரம் எடுத்து வைத்தார். (அந்த பையினுள் சில  சட்டைகள் மட்டுமே இருந்தன). ஒரு கையில் அலுவலகப் பையுடன், மறுகையால் கைப்பிடியை மிகக் கவனமாகப் பிடித்துக்கொண்டு இரயில் பெட்டியிலிருந்து கீழே இறங்கினார். ஒரு கால் கனமற்றும் மற்றொரு கால் கனமாக இருப்பதாகவும் உணர்ந்தார். காப்பியைப் பருகிக்கொண்டே கடந்தகால நினைவுகளை அசைபோட இன்னும் அவருக்கு நேரம் மிச்சமிருந்தது.

காலனித்துவக் காலத்தில் நிறுவப்பட்ட அந்த இரயில் நிலையம் அதன் தனித்துவமான  வட்டக் குவிமாடங்கள், சுவர்கள், தூண்களின் கட்டமைப்புகளைத் தெளிவாகப் பார்க்க இடமளிக்கும் உயரமான ஜன்னல்களுக்குப் பிரபலமானது. வெளியிலிருந்து வரும் வெளிச்சம்கூட அவ்வளவு பூரணமாக  உள்ளே வருவதில்லை. சுவர் சாயம் பெரும்பாலும் உதிர்ந்து காணப்பட்டது.  சுவரின்  வெள்ளை நிறம் மஞ்சளாக மாறிவிட்டிருந்தது. சுவரின் மூலைமுடுக்குகளும் கருமையாகியிருந்தன. அந்த வசதியான இடத்திலிருந்த இந்தியர்கள், மலாய்க்காரர்கள், சீனர்கள் முதியவர்கள், இளைஞர்கள் என எவரும் மற்றவரை அறிந்திருக்கவில்லை.

மக்கள் குறைவாக இருக்கும் ஒரு மூலையில் உள்ள இருக்கையைத் தேர்ந்தெடுத்து ஒரு கப் காப்பியையும் நாசிலெமாக் பொட்டலம் ஒன்றையும் ஆர்டர் செய்தார். குனிந்த தலையுடனேயே தன்னைச் சுற்றி நடப்பதைக் கவனித்தார். தன்னை யாராவது அடையாளம் கண்டுகொள்வார்களோ என்று அஞ்சினார். இளைஞர்கள் அவரைக் கண்டுகொள்ள வாய்ப்பில்லை. ஒரே தலைமுறையைச் சேர்ந்தவர்கள் இன்னும் உயிருடன் இருந்தால் அவரை அடையாளம் கண்டுகொள்ள வாய்ப்பிருக்கிறது.  ஆனால் அவர்களில் பலர் இல்லை.

இப்போது, சில அறுவைசிகிச்சைகளையும் கூடவே  சீன  நாட்டு மருந்துகளையும் பயன்படுத்தி, (ஆனால் அது அவரது சிறுநீரகத்துக்குப் பக்கவிளைவுகளை ஏற்படுத்தியது.) ஏறக்குறைய 30 கிலோ கொழுப்பை அகற்றியாயிற்று. இப்போது அவரின் சட்டையின் அளவு XL-லிருந்து S-க்கு மாறிவிட்டது. அது அவர் இளம் வயதின் உடல் அளவு. இப்பொழுதெல்லாம் அவரால் துரிதமாகவும் வேகமாகவும் இயங்க முடிகின்றது. ஆனால் சில சமயங்களில் அவருக்கு இலேசான மயக்கம் ஏற்படுவதுண்டு. சில சமயங்களில் உறங்க முடியாமலும், இன்னும் சில சமயங்களில் மரணத்தின் விளிம்புவரை சென்று மீண்டு வருவது போல ஆழ்ந்த உறக்கத்திலிருந்து எழுந்திருக்க முடியாமலும் ஆகிவிடுவதுண்டு.  ஒரு வேளை அவருடைய ஆயுள் இந்த பூமியில் இன்னும் சொற்பக் காலமே எஞ்சியிருக்கலாம்.

அவர் மனதில் நினைத்துக்கொண்டிருந்த விருப்பம் ஒன்று நிறைவேறியது. சிங் மிங் திருவிழா நடந்து முடிந்த ஒருநாள், டக்பில் தொப்பி அணிந்த அவர் எந்தத் தடையுமில்லாமல் நாட்டின் எல்லைக்குள் நுழைந்தார். எல்லையில் இருந்த குடிநுழைவு அதிகாரிகள் அவரின் வருகையைக் கவனிக்கவில்லை. இரண்டு யானைகள் சண்டையிட்டுக்கொண்ட புராணக் கதையிலிருந்து பெயரைப் பெற்ற, சாதாரண இடுகாடுகள் சூழ்ந்த அந்த  நகரத்திற்கு அவர் திரும்ப வந்திருந்தார். அந்த நேரத்தில் சிங் மிங் திருவிழா நடந்து முடிந்திருந்தது. திருவிழா நேரத்துக்கு முன்னரோ அல்லது திருவிழா காலத்திலோ கல்லறைப் பகுதிக்குச் சென்றிருந்தால் அவரைச் சந்தேகப்படக் கூடிய ஆட்களை அவர் சந்தித்திருப்பதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். அந்த தினங்களில் மயானத்திற்குச் செல்பவர்களின் கூட்டம் பெரிதாகவே இருக்கும். அவரது பெற்றோரின் கல்லறையைக்கொண்டு சிலர் அவரை அடையாளம் கண்டு கொண்டிருக்கக்கூடும். ஆனால், இன்று மயானம் மிக அமைதியாக இருந்தது. கல்லறைகள் எல்லாம் ஒன்றைப் போலவே இருந்தன. பல கல்லறைகள் குடும்ப உறுப்பினரால் நேர்த்தியாகச் சுத்தம் செய்யப்பட்டிருந்தன. லாலாங் புற்கள் பிடுங்கப்பட்டிருந்தன. கல்லறைகளில் உள்ள பெயர்களும் சிவப்புச் சாயத்தால் புதுப்பிக்கப்பட்டிருந்தன. உறவினர்களைத் தவிர மற்றவர்களால் ஒரே மாதிரியான  இத்தனை ஆயிரம் கல்லறைகளிலிருந்து ஒரு கல்லறையை அடையாளம் காண்பது இயலாத செயல்.

இத்தனை காலமும் அவரைப் புகழின் உச்சியில் வைத்துக்கொண்டாடிய அவருடைய உறவினன் ஒருவன்தான் அவருடன் பெற்றோரின் கல்லறைக்கு உடன்வந்தான். (அவனும் அந்த இரகசிய சங்கத்தில் உறுப்பினராக இருந்தவன்). தாங்கள் மட்டுமே அறிந்த இந்த இரகசியத்தை, அவர்கள்  தங்கள் மனைவி, பிள்ளைகள் உட்பட யாரிடமும் சொல்லப் போவதில்லை. தலைமறைவு இயக்கம் கலைக்கப்பட்டுவிட்டாலும் இரகசியத்தைக் காக்கும் முந்தைய கடமையிலிருந்து அவர்கள் விலகவில்லை.

குளிர்ந்த காற்றுடன்  தூறல் போட்டுக்கொண்டிருந்தது. சிறுநீர் கழிப்பதற்காக ஒருவரைக்  கழிவறைக்குச் செல்லத் தூண்டும் குளிர் அது

சதுர வடிவில் நேர்த்தியாக நடப்பட்டிருந்த கல்லறைக் கற்கள் மலைச் சரிவை அழகுபடுத்திக் கொண்டிருந்தன. மழையினால் சுற்றுப்புறக் காட்சிகள் மங்கலாகத் தெரிந்தது.

மலையின் நடுப்பகுதியில் இருந்த அவரது பெற்றோரின் கல்லறைத் தளம் அடிவாரத்தில் நெருக்கமாக இருந்த மற்ற கல்லறைகளைவிடச் சற்று வித்தியாசமாகத் தெரிந்தது. அவரது பெற்றோரின் கல்லறைகள் அமைந்திருந்த தளம் பெரியதாகவும், சுற்றி நடக்கச் சிறு  பாதைகளும் அமைக்கப்பட்டிருந்தன. அந்தத் தளம் சுற்றுப்புறத்தில் இருக்கும் பங்களா வீடுகளிலும் இரட்டை வீடுகளிலும் வசிக்கும் மேல்தட்டு மக்களால் உருவாக்கப்பட்டிருக்கவேண்டும் எனத் தோன்றியது.

அரளிப்பூக்கள் பூத்துக் குலுங்கிக்கொண்டிருந்தன. குழிப் பெர்ரிப்பழம் போன்ற இலைகள் கல்லறைகளின் மேல் நிழல் பரப்பிக்கொண்டிருந்தன. தலைக்குமேல் எவ்வளவு பூக்கள் மலர்ந்துள்ளனவோ அதே அளவு பூக்கள் மழையில் நனைந்த ஈர மண்ணில் விழுந்துகிடந்தன.  சாலையோரத்தில் இருந்தவர்கள் அவசரமாகப் பூக்களைக்கூட்டி ஓரமாக ஒதுக்கி அவர் நடப்பதற்கு வழி அமைத்தனர்.

கல்லறைக்கு வந்திருந்தவர்கள் வழக்கம்போல் பல சடங்குப் பொருட்களையும் எலுமிச்சம் பழங்களையும் கொண்டு வந்திருந்தனர். அவரோடு உடன் வந்த ஒருவர் கறுப்புக் குடையைத் திறக்க அவருக்கு உதவினார். அப்போது அவர் தொப்பியைக் கழற்றினார். அவரது வழுக்கைத்தலையில் senile purpura எனும் முதுமை தேமல்கள் நிறைந்திருந்தன. அவர், பணிவுடன் இறந்த தன் பெற்றோரின் கல்லறைகளைச் சுத்தம் செய்தார். தூபம் ஏற்றிவிட்டு, ஈரமான சிமெண்டில் குவித்து வைக்கப்பட்டிருந்த பழைய நாளிதழில் மண்டியிட்டு அமர்ந்தார். மறைந்த அவரின் பெற்றோருக்குத் தலைவணங்கி அஞ்சலி செலுத்தினார். பிரார்த்தனை முடிந்ததும் மற்றவர்களின் உதவியின்றி அவரால் எழுந்து நிற்க முடியவில்லை. அவரது பெற்றோரின் கல்லறைகளுக்கு முன்னால் தி காங் தூபச் சட்டியிலும் பூமி தேவன் தூபச் சட்டியிலும் மற்றத் தூபச் சட்டிகளிலும் ஊதுபத்திகளை ஏற்றினார். ஆனால் ஊதுபத்திகளின் கனலில் மழை நீர்பட்டு உடனே அணைந்தன. குடை மறைவில் தங்கக் காகிதங்களை தீயிலிட முயன்றாலும் தூபச் சட்டிகளில் தீ முழுமையாகப் பரவாமல் காகிதங்களின் ஒரு மூலையை மட்டும் எரித்துவிட்டு, பாதியில் அணைந்து போயின. அவரால் திருப்தி அடைய முடியவில்லை. மரியாதை செலுத்தும் சடங்கை நிறைவேற்றாத உணர்வுடன் அவர் அங்கிருந்து வெளியேற விரும்பவில்லை. அதனால் மீண்டும் ஒருமுறை முயற்சி செய்து பார்த்தார். இம்முறை, காய்ந்த சருகுகளையும் குச்சிகளையும் குவித்து, தங்கக் காகித குவியல் சற்று உயரமாக வந்ததும் அதை தான் கொண்டு வந்திருந்த லைட்டரால் பற்றவைக்க முயன்றார். மற்றவர்கள் உதவி செய்வதை அவர் விரும்பவில்லை. வியர்த்து மூச்சிரைத்தாலும் முயற்சியில் விடாப்பிடியாக இருந்தார். மூங்கில் திருக்குச்சிகளைச் சிதறவிட்டுக் குறி பார்த்தபோது அது  அவருக்குப் பெற்றோரின் ஆசி கிட்டியிருப்பதாகக் காட்டியது. அவரின் பெற்றோருக்குச் சேவை செய்யத் தவறிய அவரின் செய்கையைக் குறித்து இறந்துபோன அவரின் பெற்றோர்கள் மன்னித்துவிட்டார்கள் என்றே அவர் கருதினார். இருப்பினும் அவரின் மனம் அப்போதும் அமைதியற்று துக்கத்தில் தவித்தது. ஆழ்ந்த துயரில் மூழ்கிய அவர் அந்த கல்லறைகளின் முன் கதறி அழுதார். வனத்தின் அழகைப் பின்னணியாகக்கொண்டு அவர் அணிந்திருந்த பாத்தே சட்டை கண்ணீரில் நனைந்தது.

சொந்த ஊருக்கு சுமுகமாக வரமுடிந்தது அவருக்கு மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்தியிருந்தது. அமலாக்க அதிகாரிகளின் தடை இல்லாதது, சாதாரண உடையில் காவல் துறையினர்  சுற்றிவராதது, தன் அடையாளத்தை யாருமே சந்தேகிக்காதது  என எல்லாமே இயல்புக்கு அப்பாற்பட்டதாகத் தெரிந்தது. ஒருவேளை அதிகாரிகள் கல்லைறையைச் சோதனையிடவில்லைபோல. அல்லது அவருடைய பெற்றோர்களின் கல்லறைகள் எங்கே இருக்கின்றன என்று அவர்களுக்குத் தெரியாமலும் இருக்கலாம். அல்லது அவர் இப்படியான தோற்றத்தில் ஊருக்குத் திரும்புவார் என்று யூகித்திருக்கமாட்டார்கள் போலும். அவரது பெற்றோரின் கல்லறைகள் குடும்பத்தில் உள்ள இளைஞர்களால் சுத்தம் செய்யப்பட்டுப் பராமரிக்கப்படுவதால் நேர்த்தியாகத் தெரிந்தன. கல்லறையின் பின்புறமுள்ள காலி இடத்தில் ஒரு தோங்காட் அலி மரம் வளர்ந்திருந்தது. யாருடைய வாரிசுகள் அந்த மரத்தை நட்டிருப்பார்கள்? பலத்த காற்று வீசி அந்த நெடிய மரத்தைப் பக்கவாட்டில் சாய்த்திருந்தது. தூரத்தில் இருந்தே தெளிவாகத் தெரிந்த, ஒரு ஆணின் கெண்டைக்கால் தசையளவு இருந்த அந்த மரம் மற்றவற்றிலிருந்து தனித்துத் தெரிந்தது.

அவரது சொந்த ஊரைச் சுற்றியுள்ளப் பகுதிகளைப் பார்ப்பதற்கு அவரது உறவுக்கார இளைஞன் பட்டணத்துக்கு காரில் அழைத்துச் சென்றான். அந்தப் பட்டணம் பெரிய மாற்றங்கள் எதுவுமில்லாமல் முன்பு இருந்ததைப்போலவே இருந்தது. அவர் படித்த தொடக்கப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி, திடல், இளவயதில் நண்பர்களுடன் சேர்ந்து விளையாடிய கூடைப்பந்து மைதானம் ஆகியவை நீண்ட காலத்திற்கு முன்பு இருந்ததைப்போலவே காட்சியளித்தன. திடலில் சில வாலிபர்கள் காற்பந்து விளையாடிக்கொண்டிருந்தனர். சினிமா அரங்கம் ஒன்று நீண்ட காலமாகக் கேட்பாரற்று மூடப்பட்டிருந்தது. சுற்றிலும் சில சவுக்கு மரங்கள் வளர்ந்திருந்தன. மரங்களின் கிளைகளும் கொம்புகளும் கட்டடத்தின் ஜன்னல்களைத் தொட்டுக் கொண்டிருந்தன. ஒரு நாய் மரத்தடியில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தது. ஒரு காலத்தில் அவர் மிதிவண்டி ஓட்டிச்சென்ற பாதைகூட அப்படியே இருந்தது. சாலையின் இருபுறமும் அமைந்திருந்த கடைகளிலும்கூட பெரிய மாற்றமில்லை. இருப்பினும், காலத்தின் மாற்றம் நகரத்தைச் சுற்றி புதிய புதிய குடியிருப்புப் பகுதிகளையும் ஒரு பிரம்மாண்ட வணிகப் பேரங்காடியையும்  தோற்றுவித்திருந்தது. இவை முதலாளித்துவத்தின் அடையாளங்கள். ஆற்றின் குறுக்கே ஒரு புதிய பாலமும் எழுப்பப்பட்டிருந்தது. பலமுறை கைமாறிய பிறகு அவரது பழைய வீடு, சைக்கிள் கடையாக உருமாறியிருந்தது. அவர் ஒரு வார்த்தைகூடப் பேசாமல்  அனைத்தையும் கவனித்துக்கொண்டிருந்தார். கடையின் வாசலைக் கடந்து கார் மெதுவாக நகர்ந்தபோது அவர் கறுப்புக்கண்ணாடியைக் கழற்றாமலே கார் ஜன்னல் கண்ணாடி வழியாகக் கடையைப் பார்த்தார். முகத்துக்கு பிளாஸ்டிக் அறுவைசிகிச்சை செய்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு, அவரால் தன்னையே சரியாக அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. அவரது புருவங்கள் மிகவும் அடர்த்தியாகி விட்டிருந்தன. உதட்டுக்கு மேலே உள்ள மீசைக்குக் கறுப்புச் சாயம் பூசப்பட்டிருந்தது. முன்பு தளர்ந்து வயோதிகத்தைக் காட்டிய கண் இமைகள் இப்போது மேலே இழுக்கப்பட்டிருந்தன. எனவே, அவர் வட சீனாவில் உள்ள சீனரைப் போல் காட்சியளித்தார். அவரது பரந்த கன்னங்களும் தளர்ந்த முகத் தசைகளையும் பற்றிச் சொல்லவே வேண்டாம். பல ஆண்டுகளாகக் கொழுப்பு அவர் உடலில் தேங்கியிருந்தது. அவர்  முதுமை அடைந்துவிட்டார்.

சுருங்கிய முகத் தோல் தொங்கத் தொடங்கிவிட்டது.  இழுத்து  இறுக்கிய பின், முகம் திடீரென்று முன்பைவிடவும் சிறியதாகத் தெரிந்தது. சொத்தையான பற்கள் பிடுங்கப்பட்டு விட்டன. புதிதாகப் பொருத்தப்பட்ட பொய்ப் பற்கள் சிறியதாகவும் சீராகவும் அமைக்கப்பட்டிருந்தன. பெரியதாகத் தடித்துக் காணப்பட்ட நாசி இப்போது கனகச்சிதமாக முகத்திற்கு எடுப்பாக வடிவமைக்கப்பட்டிருந்தது. புதிய முகத்தைப் பெற்றிருந்தாலும், பல கடுமையான துயர்களைக் கடந்து வந்த சோர்வு அவரிடம் காணப்பட்டது.

முகம் இருளடைந்து கிடந்தது. கறுப்புக் கண்ணாடியை அணிந்த பிறகு, அவர் ஓர் ஓய்வுபெற்ற சீன ஆசிரியர் போன்றோ அல்லது பிரபலம் இல்லாத  (அமச்சூர்) கவிஞர் போலவோ தெரிந்தார். கவனமாகப் பரிசீலிக்காவிட்டால் அவர் மலாயா கம்யூனிஸ்ட் கட்சியை வீழ்த்திய மூன்று முகம் கொண்ட உளவாளி லை டெக் (Lai Teck) என்று தவறாகக்கூட அடையாளம் கண்டுகொள்ளப் படலாம்.

வட கொரிய கம்யூனிஸ்ட் ஆட்சியின் தலைவர் கிம் குடும்பத்திற்குச் சேவை செய்த பிளாஸ்டிக் அறுவைசிகிச்சை மருத்துவரின் முயற்சியால் அவருக்கு இந்தப் புதிய வாழ்க்கை சாத்தியமாகியிருக்கிறது.  பிளாஸ்டிக் அறுவைசிகிச்சை நுட்பங்களின் பல  தலைமுறை வாரிசாக விளங்கும் அரசவை மருத்துவரான அவர், மருத்துவத் துறையில் ஈடுஇணையற்றவர். தான்  இதுவரை பத்துக்கும் குறையாத சாமானிய ஏழை எளியவர்களின் முகங்களைத்  தலைவரின் முகத்தைப் போவே வெற்றிகரமாக மாற்றியமைத்து, தலைவரின் நகல்களாக உருவாக்கியதன் வழி அந்தத் தலைவர் தலைமறைவாக வாழ உதவியிருப்பதாக அவர் ஒருமுறை சொன்னார். அப்படி நகல்களாக மாற்றப்பட்டவர்களில் சிலர் உண்மையில் பருத்த உடல்கொண்ட பெண்களாவர். முக மாற்றம் செய்யப்பட்டவர்களின் உண்மை அடையாளத்தையும் அசல் முகத்தையும் கண்டறிவது மிகக் கடினம். அவரது உடல் முழுவதும் மயக்க மருந்து  செலுத்தும் போது  திடீரென  அவர் மூச்சு நின்றுவிடாமல்  இருப்பதை உறுதி  செய்வதற்காக, ‘நெருங்கிய சகாவினர்’ அவருக்கு அக்குபஞ்சர் சிகிச்சை செய்ய அரச மருத்துவரை அழைத்து வந்தார். தலை முழுவதும் ஊசிகள் செருகப்பட்டன. பிளாஸ்டிக் அறுவைசிகிச்சையின் போது அவர் அறவே தூங்கவில்லை. வாழ்வின் மிக மோசமான தருணங்களிலும் வாழ்வுக்கும் சாவுக்கும் நடுவே பயணித்த நாட்களிலும்கூட அவர் தன் முகத்தை மாற்ற வேண்டுமென்று ஒருபோதும் நினைத்ததில்லை என்பதை நினைத்தபோது வினோதமாக இருந்தது.

ஆனால் இப்போது அவர் எப்போதும் மருந்து மாத்திரைகளை எடுத்துச் செல்ல வேண்டிய நிர்பந்தமிருந்தது. நோய் எதிர்ப்புச் சக்திகளுக்குப் பயன்படுத்த வேண்டிய மருந்துகளைத் தவிர, அவருக்கு சிகிச்சையளிக்க வேண்டிய பிற நோய்களும் இருந்தன. சிங்கப்பூர் எலிசபெத் மருத்துவமனை வழங்கிய சிறுநீரகப் பரிசோதனை அறிக்கை அவரிடம் வழங்கப்பட்டது. அப்படியான அறிக்கை அப்போது அவருக்குத் தேவையாக இருந்தது. அவரைச் சோதனையிட வரும் அதிகாரிகளிடம் அந்த நோய் அறிக்கையைக் காட்ட முடியும். முக்கியமாக, இரகசியங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். மிகவும் நம்பகமானவர்களிடம் மட்டுமே இரகசியங்களை வெளியிட முடியும். இரகசியம் வெளிப்பட்டால், எல்லா முயற்சிகளும் வீணாகிவிடும்.

இது வெளியில் தெரிந்தால் நகைப்புக்குள்ளாகிவிடும். அதிபாதகமான சூழலில் அவர் இராணுவத்தால் தடுத்து வைக்கப்பட்டு மலேசியாவைவிட்டு வெளியேற்றப்படலாம். இவ்வாறானதொரு நிலை, கட்சியின் நற்பெயரைப் பாதிக்கும் என்பதோடு கட்சிக்கு எந்த நன்மையும் தராது. யாருக்குத் தெரியும். அவருடைய உண்மையான அடையாளம் தெரிந்ததும் அவர் சுட்டுக்கொல்லப்படலாம்.  ஆயுள்காலம் அதிகம் இல்லை என்பதை உணர்ந்ததால்,  தனது விருப்பத்தை அடைய உதவும் எந்த வழியையும் ஏற்கத் தயாராக இருந்தார். ஆ கோ என்ற கட்சியின் திட்ட ஆலோசகரும் சில மூத்த உறுப்பினர்களும் முன்வைத்த ஆலோசனையை,  கவனமாக ஆராய்ந்த பிறகு, அவர் அதை ஏற்றுக்கொண்டார். இந்தத் திட்டத்திற்கு ‘தூறல் மழை’ என்று பெயரிடப்பட்டது. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு, ‘நெருங்கிய சகா’ உட்படப் பல வெளித் தரப்பினரின் உதவியும் தேவைப்பட்டது.

தாய்லாந்தில் உள்ள உறுப்பினர்கள் அவரது புனைபெயருக்கு ஏற்ப பிறப்புச் சான்றிதழ், அடையாள அட்டை, கடப்புதழ்களைத் தயாரிக்க உதவினார்கள். மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்ட போலி  ஆவணங்கள் அவர் வாழ்நாள் முழுவதும் பயன்படுத்திய அசல் ஆவணங்களைப் போலவே இருந்தன. வியர்வை, கண்ணீர், மண் கறை, பொடுகு, இரத்தக் கறை, எரிந்த அடையாளம்,  பல்லியின் கழிவு, வித்தியாசமாக அவரது சிறுநீரின் ஒரு துளி ஆகிய அனைத்தும், ஆவணங்களைத் தயார்செய்யப் பயன்படுத்தப்பட்டன. இரண்டு கைவிரல் ரேகை முத்திரைகளும் புதியனவாக மாற்றப்பட்டன.

இரவல் பெற்று பயன்படுத்தப்பட்ட அடையாளங்கள், முப்பது வயது நிறைவடையும் முன் மரணமடைந்த ஒரு பிகேஎம் உறுப்பினருக்குச் சொந்தமானவை. அது நிகழ்ந்தது 1944-ஆம் ஆண்டு. லாய் தெக்கின் சூழ்ச்சியால் அந்த உறுப்பினர் ஜப்பானிய ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டார்.  புலிகளின் தடங்கள் எப்போதும் இருக்கும் ஆற்றங்கரை பகுதி ஒன்றில் அந்த உறுப்பினர் உயிர்நீத்தார். அந்த உறுப்பினரின் தகவல்கள் மிகப் பழையவை. பதிவேட்டில் முடிக்கப்பட்டவை.  இருப்பினும், தாய்லாந்தில் உள்ள பிகேஎம் உறுப்பினர்களிடையே உள்ள வல்லுனர்கள், தேசியப் பதிவுத் துறையின் சிஸ்டத்தில் இறந்தவரின் பெயரைப் புதுப்பித்து உண்மையான பிறந்த தேதி மாற்றி, பிந்தைய தேதியைப் பதிவு செய்தனர்.

அந்தப் போலி அடையாளம் அவரால் சொந்தமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. சீனாவில் கோமிந் தாங் இராணுவத் தாக்குதல்களில் இருந்து தப்பிக்கத் தென் கிழக்கு ஆசியாவில் மறைந்திருந்த கம்யூனிஸ்ட் கட்சியின் மறைந்த உறுப்பினர் ஒருவரை அவர் நன்கு அறிந்திருந்தார். அவர் இவரைவிடச் சில ஆண்டுகளே மூத்தவர் என்றாலும், அவரது சிந்தனை முதிர்ச்சி காரணமாகவும் மார்க்சியத் தத்துவத்தின்  தர்க்கத்தின் அடிப்படையில் வாதங்களை  முன்னெடுப்பதில் ஆற்றல் மிக்கவராக இருந்ததாலும் இவருக்கு வழிகாட்டியாகவும் ஆசிரியராகவும் இருந்தார். அனல் பரக்கும் அவரின் அன்றைய உணர்ச்சிமிகு உரைகள் இவரை வியந்து நோக்க வைத்தன. நீண்ட நாட்களாகிவிட்டாலும், உயர்ந்த இலட்சியக்கனவுகளைத் தந்த அந்த உரைகளை அவர் மறந்ததில்லை. எனவே, அவர் காலமான ஒருவரின் அடையாளத்தைப் பயன்படுத்த விரும்பியபோது, அவர்  வாங் ஷி-கு (Wang Shi-gu)  என்ற பெயரை  உடனே நினைவுகூர்ந்தார். பல பிகேஎம் கட்சி உறுப்பினர்கள் மறைந்த அந்த உறுப்பினரின் பெயரை ‘ ஷி – கு’ (Shi-gu)  என்று மட்டுமே அறிந்திருந்தார்கள். இது சீன மொழியில் வேறு அர்த்தங்களைக்கொண்டது. மறைந்த அந்த உறுப்பினரின் பெயர் அவர்களுக்குத் தெரியாது. மேலும் ‘வாங்’ என்பது அவரது உண்மையான குடும்பப் பெயர். அவருடைய உண்மைப் பெயரைவிடப் புனைபெயரில் அவர் அனைவராலும் நன்கு அறியப்பட்டார். எனவே, இன்னும் உயிரோடு இருக்கும் ஒத்த வயது அதிர்ஷ்டசாலிகளைத் தவிர இரவல் பெறப்பட்ட இந்த அடையாளம் பற்றிய உண்மையை  பிகேஎம் உறுப்பினர்களின் தோற்றம் பற்றிய வரலாற்றாய்வில் திறமையான ஆய்வாளர்களால் கூட  கண்டுபிடிக்க முடியாது. வாங் ஷி -கு விற்கு தீபகற்ப மலேசியாவில் உறவினர்கள் யாரும் கிடையாது. அவர் இறந்த பிறகு அவரது பிரேதம் உயிர்த்தியாகம் செய்த பிறருடன் சீன இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது. அவரது கல்லறைக் கல்லில் யாரும் அறியாத பெயரைத் தவிர அவரைப் பற்றிய விரிவான தகவல்கள் எதுவுமில்லை. கல்லறைக்கு அஞ்சலி செலுத்த குடும்ப உறவினர்களோ வாரிசுகளோ, யாரும் வருவதில்லை. பல காலம் ஆகிவிட்டது. இனி யாராலும் இன்னார் என்று கண்டு பிடிக்க இயலாது.

இறந்தவரின் பெயரை மீண்டும் பயன்படுத்துவது என்பது நீண்ட காலத்துக்கு முன் இறந்துபோன நபரை உயிர்ப்பிப்பது போன்றது. ஆனால், தற்போது அவரது உடலை நோய்மையும் முதுமையும் சூழ்ந்துள்ளன. ஐம்பது வருட வாழ்க்கை அப்படியே கழிந்து, வெறுமை ஆட்கொண்டுவிட்டது.  எதுவும் பொருள்  தருவதாக இல்லை. இனி அதிகாரிகளின் விசாரணையைத் தவிர்க்க நீண்ட கதை எதுவும் சொல்லத் தேவையிருக்காது. எல்லாவற்றிற்கும் மேலாக  இப்போது  அவரது தோற்றம் இலட்சிய வேட்கையை முகத்தில் தேக்கியிருந்த அந்த இளைஞனிலிருந்து வெகுவாக மாறிவிட்டது.  அவரது ஒட்டி உளர்ந்த முகம் மட்டுமே ஒத்து இருந்தது.

இறந்து போனவர் ஒருவேளை இன்றுவரை வாழ்ந்திருந்தால், அவரது முகம் சவாலான வாழ்க்கை அனுபவங்களை அனுபவித்த ஒருவரைப்போலவும், எப்போது வேண்டுமானாலும் உயிர் உடலைவிட்டுப் பிரிந்துவிடலாம் என்பது போலவும் இருந்திருக்கக்கூடும். அவரது கண் இமைகள் இரண்டும் கருத்திருந்தன.

இரயில் முன்னோக்கிப் போய்க்கொண்டிருந்தது. ஜன்னல் கண்ணாடியில் தெரிந்த முகம் அவருக்கு உவப்பாக இல்லை. கண்கள் இன்னும் அவரது கண்களாக இருந்தாலும் அவற்றை அலங்கரித்த கண்ணாடியின் வடிவமும் கண்களில் நடந்த பிலாஸ்டிக் அறுவைச் சிகிச்சையும் அவர் கண்களின் தோற்றத்தை மாற்றியிருந்தன. நேர்மையும் கவலையும் கலந்த பார்வை. மற்றவர் கண்களிலிருந்து பார்ப்பது போன்ற தோற்றம். மறைந்த தன் பெற்றோரை வணங்குவதற்காக ஊருக்கு வரும் திட்டம் நிறைவேறிய பிறகு தனது முகத்தை மீண்டும் மீட்டெடுக்க முடியாது என்பது அவருக்குத் தெரியும், (கண்களின் விளிம்புகளில் சதைப் பற்றுக்கொண்ட இடங்கள் மீண்டும் கீழே இறங்கக்கூடிய வாய்ப்பு இருக்கலாம்). ஒருநாள் அவர் தனது கல்லறைக்கு இந்தத் தோற்றத்தைத் தான் எடுத்துச் சென்றாக வேண்டும். முதுமையடைந்து இறுதி மூச்சை விடும்வரை பொது வெளியில் தோன்றுவதில்லை என்பதில் அவர் மிக உறுதியாக இருந்தார்.

இயக்கத்தில் அனைவரும் செயல்படத் தொடங்கியபோது, அவர் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அவரது அமைப்பு அறிவித்தது. கிருமித் தொற்றுகளிலிருந்து தடுப்பதற்காக எனக் காரணம் சொல்லி வெளியாட்கள் அவரைச் சந்திப்பதைத் தடுத்தனர்.

யாருடைய கவனமும் பெற்றுவிடக்கூடாது என்பதற்காக எப்போதும் உடன் வரும் மெய்க்காப்பாளர்கள்கூட இந்தமுறை தவிர்க்கப்பட்டனர். இந்த தலைமறைவு இயக்கத்தின் முன்னாள் தலைவர் இன்னும் மலேசியாவிற்கு வந்துபோக முடிகிறது. ஆனால் அவர் நெடுங்காலமாக உள்துறை அமைச்சின்  கடும் கண்காணிப்பில் இருந்தவர் என்பதால், இப்போது மெய்க்காப்பாளர்களை உடன் வைத்துக்கொள்வது சந்தேகத்தை உண்டாக்கும்.

ஆனால் அவர் முதுமையடைந்துவிட்டார். ஆகவே, ஆட்களால் தள்ளப்படுவது, நடக்கும்போது விழுவது, படிக்கட்டுகளைப் பயன்படுத்தும்போது தவறாகக் கால் வைத்து விழுவது, ஏதாவது பொருட்களை மிதித்து வழுக்கி விழுவது, கால் சுளுக்கிக் கொள்வது,  குண்டர் கும்பலால் வழிப்பறி செய்யப்படுவது, திடீரென நோய்வாய்ப்படுவது என ஏதாவது நேர்ந்துவிட்டால் என்ன செய்வது.

எனவே அரசு அதிகாரிகள் இன்னும் அறியாத சில அனுபவமிக்க கட்சி உறுப்பினர்களை, எப்போதும் நெருக்கமாக இருந்து அவரின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ளப் பணித்திருந்தார்கள். இவர் அமைப்பின் இதயமென்றால், அவர்கள், இரத்த நாளங்கள் போலச் செயல்பட்டு அமைப்பின் பல்வேறு சமூக அங்கங்களுக்குச் சக்தியைக்கொண்டு சேர்த்தனர். அவர்கள் சாதாரண மனிதர்கள்போல் வேடமணிந்து அவரை அறியாதவர்கள்போல் நடித்தனர். அவர்களில் யாரும் இப்போது இளைஞர்கள் அல்ல. மிகக் குறைந்த வயதுடையவர் என்றாலும்,  கூட ஐம்பது அறுபது வயதையொத்த ஆரோக்கியநிலை குறைந்தவர்களாகவே இருந்தார்கள். அவர்களில், இவரைக் கைது செய்ய முன்பு நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரி ஒருவரும் இருந்தார். முன்னாள் மூத்த அமைச்சு அதிகாரிகளும், மூத்த மாவட்ட அதிகாரிகளும் நியமிக்கப்பட்ட குழுவில் இருந்தனர். மற்றவர்கள், பிரிட்டன், ஆஸ்திரேலிய இரகசிய ஆவணங்கள் குறிப்பிடுவதுபோல அடையாளம் தெரியாத நபர்களாக இருந்தனர். இதையெல்லாம் அந்த அமைப்பினர் இரகசியமாகத் திட்டமிட்டுச் செய்வதால், இரயிலில் இருந்தவர்களின் தனக்குப் பாதுகாப்பாக வந்தவர்களின் எண்ணிக்கை அவருக்கேச் சரியாகத் தெரியவில்லை. இரயில் படுக்கையில் இருந்த வயோதிகச் சீனர்கள் எல்லாம் அவர்களாக இருக்குமோ? பக்கத்துப் படுக்கைகளில் மேற்கத்தியர்கள், இந்தியர்கள் மற்றும் மலாய்க்காரர்களும் இருந்தனர். அவர்களில் பெரும்பாலோர் இளைஞர்கள் அல்லது நடுத்தர வயதுடையவர்கள். இரயிலில் இருந்து இறங்கிய பயணிகளை அவர் நோட்டம்விட்டார். அதில் வயதான சீனர்கள் அதிகமில்லை.

முதலில், அவர் தனது பெற்றோரின் கல்லறைகளைப் பார்வையிட மட்டுமே கிராமத்திற்குத் திரும்ப விரும்புவதாக அமைப்புக்குத் தெரிவிக்கப்பட்டது. சடங்குகள் முடிந்ததும் அவர் விரைவாகத் தென் தாய்லாந்திற்குத் திரும்ப வேண்டும். அனைத்தும் இரகசியமாகத் திட்டமிடப்பட்டன. சென்ற வேகத்தில் வந்துவிட வேண்டும். மீண்டும் திரும்பி வந்த பிறகு தான் அறிக்கை வெளியிடப்படும். அப்போது மலேசிய அரசு அதிகாரிகளால் அவர் வருகையை நிச்சயமாகத் தடுத்து நிறுத்த முடியாது. ஆனால் யாருக்குத் தெரியும்.

பெற்றோரின் கல்லறைகளைப் பார்வையிட்ட பிறகு, அவர் கண்ணுக்குத் தெரியாத தூரத்துக்குச் செல்ல முடிவுசெய்தார். தூரப் பயணம் மேற்கொள்வது இதுவே கடைசிமுறை என்று அவர் மனதில் நினைத்துக்கொண்டார். வாய்ப்பும் காலமும் இருக்கும்போதே தன் ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்ற விரும்பினார். அதனால் இரயில் நிலையத்தில் தெற்கு நோக்கிச் செல்லும் இரயிலுக்கு  டிக்கெட் வாங்கினார்.

அவர்  தற்போது பயன்படுத்தும் போலி அடையாளத்துக்குச் சொந்தக்காரரான மறைந்த முன்னாள் தோழரின்  கல்லறைக்குச் செல்ல விரும்பினார். அதே நேரம் போராட்டத்தில் மறைந்த மற்ற தியாகிகளின் கல்லறைகளிலும் வணக்கமும் மரியாதையும் செலுத்த விரும்பினார்.

இருப்பினும், அவரது அதிரடி நடவடிக்கைகள் அமைப்புக்கு மிகவும் தொந்தரவாக இருந்தன. அவர் இன்னும் ஒரு நாட்டின் எல்லையைத் தாண்டினால் இரகசியங்கள் அம்பலப்படும் ஆபத்துகள் அதிகமிருந்தது. அந்த நாட்டின் எல்லைக் கட்டுப்பாடுகள் மிகக் கடுமையானவை. அந்நாட்டில் வாழும் முன்னால் உறுப்பினர்களைத் தொடர்புகொள்வதும் இயலாத காரியம். அது அவர்களின் பாதுகாப்புக்கு உலைவைப்பது போலாகிவிடும். எல்லாவற்றிற்கும் மேலாக, அந்த உறுப்பினர்கள் துரோகமிழைக்காமல் உதவத் தயாராக உள்ளனரா, என்பதை அமைப்பால் உறுதிப்படுத்த இயலாது. அவர்கள் பல வருடங்களாகப் பிரிந்து தனியாக வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். முன்னால் புரட்சி பழங்கனவாக அக்காலகட்ட சித்தாந்தமாக ஆகிவிட்டது.

என்றாலும் அவர் தனது செயல்களில் எந்தவிதத் தடுமாற்றமும் அடையவில்லை. ஒரு காலத்தில் காலனித்துவ அரசாங்கத்தால் ஆளப்பட்டு இன்று செழிப்பாகவும் செல்வத்துடனும் இருக்கும் அந்தத் தீவு நாடு அவருக்கு அந்நியமானதல்ல. சில ஆண்டுகளுக்கு முன்பு, அவர் பலரும் அறிந்த  தனது உண்மையான அடையாளத்துடன் அங்கே சென்றிருந்தார். அது கல்வி நோக்கத்துக்கான பயணமாக இருந்தது. ஆனால்,  இது அப்படியானதல்ல. அன்று அமைப்பு அதிகாரத்துவ நடைமுறைகளைப் பின்பற்றுவதைப் பற்றி அஞ்சியது.

சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்திற்கு அரசு ஒப்புதல் அளித்திருந்தது. இருப்பினும், அவர் போலியான பெயருடன் அங்கே காலடியெடுத்து வைத்தார். அவரது போலி ஆவணங்கள் எல்லை சோதனையிலிருந்து வெற்றிகரமாக மீளமுடியுமா என்ற சந்தேகம் வலுத்திருந்தது. அவரின் உண்மை அடையாளம் தெரியவந்தால் ஒருவேளை அவரைக் கைதுசெய்து சிறையில் அடைக்கலாம்.

அவர் காப்பிக் கடையின் ஒரு மூலையில் அமர்ந்திருந்தார். உடலைக் குறுக்கி, தலையைக்குனித்து தொப்பியின் விளிம்பின்வழி சுற்றுப் புறத்தை ஆராய்ந்துகொண்டே  கடுங்காப்பியை அனுபவித்துக் குடித்தார். இப்போது அமைப்பில் உறுப்பினர்கள் எத்தனை பேர் அவரைச்  சுற்றி இருக்கிறார்கள்? கோடுபோட்ட சட்டையில் சஞ்சிகை விற்பனை செய்யும் நடுத்தர வயதுடைய கொழுத்த மனிதன் அவர்களில் ஒருவனா? பேயைப்போல ஒடிசலான தேகமுடைய அந்த வயதானவரும் அவர்களுள் ஒருவரா? இந்திய நாணயமாற்றுத் தரகர்களும் அவர்களில் ஒருவராக இருக்குமோ? அந்த இடத்தைச் சுற்றி வேறு சிலரும் அமர்ந்திருந்தார்கள். காப்பி குடிப்பவர்கள் அல்லது துரித உணவுகளை ஆர்டர் செய்பவர்கள் என அங்கே பல இன ஆண்களும் பெண்களும் கலந்திருந்தார்கள். ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் போல் சிலர், இளம் ஜோடிகள், சுற்றுப் பயணிகள், பயணிகளை இறக்கிவிட வந்தவர்கள் எனப் பலர் அங்கிருந்தனர்.  பலவிதமான முகங்கள்; அனைத்து முகங்களிலும் சோர்வு அப்பி இருந்தது. அமைப்பின் உறுப்பினர்களின் முகங்களை அவருக்கு அடையாளம் தெரியவில்லை. அவர்களின் பெயர்கள் அடையாள எண்களாக மாற்றப்பட்டிருந்தன. பல எண்களில் சில எண்கள் மட்டுமே அவருக்குச் சொல்லப்பட்டிருந்தன.

சில சமயம் மனதில் தோன்றும் வாசகங்களை எழுதி வைக்கும் அழுக்கடைந்த ஒரு பழைய நோட்டுப் புத்தகத்தைத் திறந்தார். வேலைப் பையில் மார்க்சின் ‘தி ஜெனரல் இன ஹிஸ் லேபிரிந்த்’. நூலின் மென் அட்டை பதிப்பு புத்தகம் ஒன்றை மட்டுமே உடன்கொண்டு வந்திருந்தார். இந்தப் புத்தகம் ஓய்வு நேர வாசிப்புக்காக அவரது முன்னால் தோழர் ஒருவரின் மகன் அவருக்குப் பரிசாக வழங்கியது. அந்த இளைஞன் ‘நிரந்தரப் பொதுச் செயலாளர்’ என்றே அவருக்கு மரியாதை கொடுத்தான்.

புத்தக அட்டையின் முனைகள் நசிந்து போகும் அளவு அந்த நூல் பலமுறை அவரால் வாசிக்கப்பட்டுவிட்டது. கிட்டத்தட்ட புத்தகத்தின் ஒவ்வொரு பக்கமும் முனை மடிக்கப்பட்டிருந்தது. இந்தப் பயணத்தின்போது அவரது மனம் நிலைகுலைந்தபடியே இருந்தது. அதனால், புத்தகத்தின் இறுதிப் பக்கம்வரை படித்து முடித்த போதும் தொடக்கத்தில் படித்தது மறந்துபோனது. மீண்டும் வாசித்தார். மீண்டும் மறந்தார். படிப்பதும் மறப்பதும் தொடர்ந்தது. நூலின் மூன்றில் ஒரு பகுதிக்கு மேல் வாசிக்கவே சிரமப் பட்டார். இந்த வாழ்நாள் முழுதும்கூட அதை வாசித்து முடிக்க முடியாது போல் இருந்தது.

அவர் எதிரில் உள்ள காட்சி திடீரென மறைந்தது. கறுப்புக் கோடு போட்ட சட்டையும்  ஷார்ட்சும் ஜீன்ஸ் தொப்பியும் அணிந்த ஓர் இளைஞன் எதிரே நின்று, சிரித்துக்கொண்டே எதிரே இருந்த இருக்கையைக் காட்டி காலியாக இருக்கிறதா என்று கேட்டான். “இங்கே யாரும் அமர்கிறார்களா?” அவர் சுற்றிலும் உள்ள இருக்கைகளைப் பார்த்தார். அனைத்தும் கிட்டத்தட்ட நிறைந்திருந்தன. அவரால் அந்த இளைஞனை நிராகரிக்க முடியவில்லை. அவர் தனது திறந்த கைகளுடன்  தோள்களை உயர்த்தினார். இளைஞன் நாற்காலி ஒன்றை இழுத்துப் போட்டு அவர் முன் அமர்ந்தான். இருக்கையின் கால் தரையில் மெதுவாக மோதி ‘க்ருக்’ என்ற ஒலியை எழுப்பியது

ஒரு கோப்பைக் காப்பியும் ஒரு  கறிபாப்பையும் ஆர்டர் செய்த பிறகு அந்த இளைஞன் தனது கால்களைக் குறுக்காகப் போட்டு காலை ஆட்ட ஆரம்பித்தான். உணவும் பானமும் பரிமாறப்பட்டபோது அவைகளை அவன்  ‘சப்சப்’ என அநாகரிகமான ஓசை எழும்படி வேக வேகமாகச் சாப்பிடத் தொடங்கினான் .

டக்பில் தொப்பி அணிந்தவர் கனவிலிருந்து விழித்தவர்போல சுதாரித்து தொப்பியை இலேசாகத் தாழ்த்தி கைக்கடிகாரத்தைப் பார்த்தார். இன்னும் ஐந்து நிமிடங்கள் இருந்தன. இன்னும் சற்று நேரத்தில் இரயில்,  நிலையத்துக்கு வந்துவிடும்.

அவர் தனது புத்தகத்தையும் குறிப்புகளையும் தனது அலுவலகப் பையில் கவனமாக வைத்துக்கொண்டார். மிக மெதுவாக நாற்காலியைப் பின்னுக்குத் தள்ளி எழ முயன்றார்.

அவர் அங்கிருந்து செல்லும்முன் அந்த இளைஞன் திடீரென்று அவரிடம் ஒரு புத்தத்தை நீட்டினான். “சார் இது உங்களுக்கான பரிசு,” என்றான். அவர் மூக்குக் கண்ணாடியைச் சரிசெய்து கொண்டு பார்த்தார். அந்த மெல்லிய நூலுக்கு ‘ஆபத்தான விஷயங்கள்’ என்று தலைப்பிடப்பட்டிருந்தது. அவர் திடுக்கிடலுடன் புத்தகத்தைத் தனது அலுவலகப் பையினுள் திணித்தார். அந்தப் புத்தகம் ஜெனரல் இன் லாபிரிந்துக்கும்  அவரது நீல நிறக் குறிப்பு நோட்டிற்கும் இடையில் திணிக்கப்பட்டது.

நடக்கும்போது கால்களை நகர்த்துவது அவருக்குக் கடினமாக இருந்தது. குடையைப் பிடித்தபடி அவர் இரயிலில் மெதுவாக ஏறினார். இரயிலில் ஏறும்போது ஒருமுறை திரும்பிப் பார்த்தார். அந்த இளைஞன் அங்கு இல்லை. அவருக்குப் பரிசு கொடுத்த அவனின் சுவடுகள் மறைந்து போயிருந்தன. அந்த இளைஞன் இரகசிய இயக்கத்தின் இரண்டாவது தலைமுறையாக இருக்குமோ என்ற சந்தேகம் வந்தது. அவர்களின் மறுமலர்ச்சி இயக்கம்  கலைக்கப்பட்டுவிட்ட பின்னரும் சித்தாந்தத்தைப் பின் தொடர்பவர்கள் இன்னும் இருப்பார்களா?

அவரின் அடையாளம் கசிந்திருக்குமோ? அல்லது  இளைஞன் அவரை ஒரு மூத்த எழுத்தாளர் என்று தவறாக நினைத்துவிட்டானா? அவர் கொண்டு வந்திருந்த பயணப்பை இன்னும் இரயிலில் வைத்த இடத்திலேயே இருந்தது. படுக்கைக்குத் திரும்பிய பிறகு, அவர் சோர்வாக உணர்ந்தார். நீண்ட பெருமூச்சுடன் கட்டிலில் சாய்ந்தார். இரயிலின் பிரேக்குகள் விடுவிக்கப்பட்டு இரயில் மெதுவாகத் தெற்கு நோக்கி நகரத் தொடங்கியது. அவர் மீண்டும் கூர்ந்துகவனித்தார். சற்றுமுன் அவர் அமர்ந்திருந்த இருக்கையில் இப்போது ஜீன்ஸ் தொப்பி அணிந்த நடுத்தர வயது ஆசாமி ஒருவன் அமர்ந்திருந்தான். அந்த நபரின் அலுவலகப் பை மேஜையின் மேல் வைக்கப்பட்டிருந்தது. கூர்மையான அவனது பார்வையில் வெறுமை தெரிந்தது. அவர் மனம் துணுக்குற்றது.

லாய் தேக் ?

அவருக்குத் தலைச்சுற்றுவது போலிருந்தது. இரயில் வண்டி பல்வேறு அதிர்வுகளுடன் நகர்ந்து கொண்டிருந்தது. அவர் சமுத்திரத்தை நோக்கிச் செல்லும் ஒரு கப்பலில் இருப்பது போல உணர்ந்தார்.

2.

புலியின் கோடுகள். யானையின் மூக்கு.

மானின் கால் தடங்கள்.

வெண்ணாந்தையின் கண்கள்

உடும்பின் சிரிப்பு.

சில ஸ்டேஷன்களின் பெயர்கள் அவருக்குத் தெரிந்தன. அவர் அறிந்திராத சில நிலையங்களின் பெயர்ப் பலகைகளும் இருந்தன.

Ayer Hitam, Kaki Bukit, Bandar Baru, Tebing Sungai, Pokok Mangga, Ikan, Kuching, Musang.

3.

‘டிங் டாங், டிங் டாங்’ இரயில் முன்னோக்கி சென்றுகொண்டிருந்தது. தூக்கம் கலைந்ததும் தரையில் விழுந்து கிடந்த தொப்பியை எடுத்து மீண்டும் அணிந்துகொண்டார். விளக்குகள் இன்னும் எரிந்துகொண்டிருந்தன. ஆனால் படுக்கைத் திரைச் சீலைகள் அனைத்தும் ஓரத்திற்கு விலக்கப்பட்டிருந்தன. இரயில் பெட்டி முழுக்க ஆள் அரவமில்லாமல் காலியாகக் கிடந்தது. எல்லோரும் எப்போது இரயிலைவிட்டு இறங்கினார்கள்? விளக்குகள் இன்னும் எரிந்துகொண்டிருந்தன.   பிண அறையைப் போலக் குளிராக இருந்தது. இரயில் பெட்டிகள் நீண்ட இரவைக் கடந்து விட்டிருந்தன. வெளியில் தூறல் போட்டுக்கொண்டிருந்தது.

4.

இரயில் நின்றது.

ஜன்னலுக்கு வெளியே மலாய் மொழியில் ‘கூலாய்’ (Kulai) என்று எழுதப்பட்ட பெயர்ப் பலகையை  மழை நனைத்திருந்தது. மழை மேலும் வலுத்தது.

மழைநீர்த் துளிகள் சொட்டிக்கொண்டிருந்தன. முழு விழிப்பில்லாத நிலையில், இரயிலில் ஏறிக்கொண்டிருப்பவர்களின் பிம்பங்கள் அவருக்குக் கனவுக்காட்சி போலத் தெரிந்தன.  அவர் தனக்கு அறிமுகமானவர்களின் முகங்களை ஒவ்வொன்றாக நினைவுகூர்ந்தார். ஒவ்வொரு முகமும் ஒரு பெயரை ஞாபகப்படுத்தியது. அவர்களின் உடலில் ஏற்பட்ட காயங்களில் புல் பூண்டு முளைத்து விட்டிருந்தது. சிலர் தங்கள் தலையைக் கையில் பிடித்தபடி செத்துக்கிடந்தனர். அவர்களின் கழுத்தில் விழுந்த வெட்டுக் காயங்கள் மிக ஆழமாக இருந்தன. மார்பு பிளந்து கிடந்தவர்களும் உண்டு. நிற்கப் பலமற்று சாய்ந்த உடல்கள் கற்களையும் புல் பூண்டுகளையும் நசுக்கியபடி மண்ணில் புரண்டன. இரும்பு ஆயுதங்கள் தரையில் ‘குவாங் குவாங்’ என்ற அதிர்வுடன்  மோதின.

அவருக்குத் திடீரென்று உயிர்த்தியாகம் செய்த அனைவரின் பெயர்களும் நினைவுக்கு வந்தன.

கடும் ஆயுத மோதலுக்குப் பிறகு, புதர்களில் ஆங்காங்கே இரத்தக் கறைகள் படிந்திருந்தன. இரத்தத்தைத் தவிர, எதுவும் அங்கே விட்டுவைக்கப்படவில்லை. உடல்களும் போராளிகள் அணிந்திருந்த காலணிகள் அனைத்தும் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டன.

ஆனால் ஒருமுறை இரத்தக் கறை படிந்த டக்பில் தொப்பி ஒன்று சருகு குவியல்களிலிருந்து கண்டெடுக்கப்பட்டது. தெற்கு நோக்கிய நகர்ச்சியில் இருந்தபோது தேவையற்ற கவனத்தைத் தவிர்க்கும் பொருட்டு தொப்பியின் நடுவில் இருந்த சிவப்பு நட்சத்திரத்தை அகற்ற இயக்கம் உத்தரவிட்டிருந்தது. தொப்பியில் நட்சத்திரம் இருந்த பகுதி சூரிய ஒளிபடாத  காரணத்தால் நிறம் மங்காமல் பளிச்சென்று தெரிந்தது. தொப்பி கொஞ்சம் ஈரமாக இருந்தது. நட்சத்திரம் நீக்கப்பட்ட இடமும் மழையில் நனைந்து  ஈரமாக இருந்தது.

5.

இரயில் நின்றது. அவர் ஜன்னல் வழியாக வெளியே பார்த்தார். ஜன்னல் சட்டகத்தில் மழை நீர் இன்னும் கண்ணீர் துளிப்போல உருண்டோடிக் கொண்டிருந்தது. இந்த நிலையத்தின் பெயரை அவர் அறிந்திருந்தார். இந்த நிலையம் முன்பொரு காலத்தில் ஒதுக்குப்புறமாக இருந்தது. அவர் முன்பு ஒருமுறை இங்கு வந்திருக்கிறார். அப்போது அது ஒரே ஒரு சாலையைக் கொண்ட ஊர். அவரோடு ஓரணியில் நின்ற போராளிகளில் பல பேர் இந்த ஊரைச் சுற்றியுள்ள தோட்டங்களில் வசித்தனர்.

ஆயேர் ஈத்தாம் . கறுப்பு நிற நீர்.

இரயிலுக்குள் விளக்குகள் மங்களாக எரிந்தன. படுக்கை திரைச் சீலைகள் இழுத்து மூடப்பட்டிருந்தன. சிலரின் கால்கள் வெளியே நீட்டிக்கொண்டு தெரிந்தன. அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தவர்களின் குறட்டைச் சத்தம் சன்னமாகக் கேட்டது.

படுக்கையிலிருந்து புரண்டு உடலைத் திருப்பி ஒருவாராக எழுந்து அமர்ந்தார். உடல் சற்று இலகுவாக இருப்பதைப்போல உணர்ந்தார். உடலின் அசைவும் சுறுசுறுப்பானது. குடையை ஊன்றி படுக்கையிலிருந்து இறங்கினார். இரயில் பெட்டிகளைக் கடந்து சென்று பின்னர் இரயிலிலிருந்து கீழே இறங்கினார். மழை நின்றுவிட்டது போல் தெரிந்தது. வானத்திலிருந்து மழை நீர் விழவில்லை. ஆனால் பனி மூட்டம் சூழ்ந்திருந்தது. புல் தரையிலும் மண் பரப்பிலும் மரங்களின் மீதும் கடுமையான பனி மூடியிருந்தது ஒரு மின்மினிப் பூச்சி அவர் ஆடையின் விளிம்பை நெருங்க முயன்றுகொண்டிருந்தது.

பாதிப் புல் மூடிய மண் சாலையில் அவர் நின்றுகொண்டிருந்தார். அவருக்கு இந்த ஒற்றையடிப் பாதை நன்கு பரிச்சயமானது. “திருப்பிப் பார்க்காதே!” அவருடைய இதயத்துக்கும் மனதுக்கும் இடையிலிருந்து எழுவதுபோல் ஒரு கட்டளையைக் கேட்டார்.

அவர் திருப்பிப் பார்க்கவில்லை. என்றாலும், சற்று முன்பு அங்கிருந்த இரயில் இப்போது பொத்தல்கள் விழுந்து வளைந்து துருப்பிடித்த பழைய இரும்புப் பொருளாக மாறிவிட்டது என்பது அவருக்குத் தெரியும். அதன் உள்ளிருந்து லாலான் புற்கள் வளர்ந்திருந்தன. அது ஆந்தைகள், காக்கைகள், எலிகள் வாழுமிடமாக மாறியிருந்தது.

தெரு விளக்குகள் தூரத்திலிருந்த மண் சாலையை ஒளிரச் செய்தன. வரிசையாக இருந்த மரங்களின் நிழல்கள் சில நேரங்களில் தோன்றி மறைந்தன. கடந்த காலத்திற்குத்  திருப்பியதைப்போல இந்தச் சாலை அவருக்கு நன்கு பழக்கப்பட்டதாக இருந்தது. இருட்டாக இருந்தபோதிலும் நீண்டு வளர்ந்திருந்த லாலான் புதர்களுக்கு மத்தியில் கல்லறைக் கற்களையும் கடலாமையின் தலை வடிவம்கொண்ட சமாதிகளின் முன் பகுதிகளையும் காண முடிந்தது. ஆனால் கல்லறைக் கற்களில் பொறிக்கப்பட்டிருந்த எழுத்துக்களை படிக்க முடியவில்லை.

சாலையின் முடிவில் ஒரு பாழடைந்த பலகை வீடு இருந்தது. வீட்டின் கதவு மூடப்பட்டிருந்தது.  ஆனால், வாசல் சட்டகத்தை உள்ளேயிருந்து வரும்  விளக்கு வெளிச்சம்  பளிச்சென அலங்கரித்துக்கொண்டிருந்தது.

அவர் வீட்டின் கதவை மெதுவாகத் தள்ள முயன்றார். ‘கிரீச்ச்ச்’ கதவு பூட்டப்படாமல் இருந்தது. ஒரு  மூதாட்டி திரையை விலக்கி அவரைப் பார்த்தார்.

“பாதியிலே திரும்பிவிட்டாயா? ஏதாவது சாப்பிட்டாயா?”

பின்னர் தூபப் புகை போடப்பட்டது. பூசை மாடத்தில் காகித அச்சு வடிவத்தில் டத்தோ கோங் பெரிதாக வாய் பிளந்து சிரித்துக்கொண்டிருந்தார்.

மண்ணெண்ணெய் விளக்கின் அருகில் சில புத்தகங்கள் வைக்கப்பட்டிருந்தன. விளக்கின் சுடர், காற்றில் அசைந்து ஆடிக்கொண்டிருந்தது. இறந்துபோன அந்துப் பூச்சிகள் விளக்கின் அருகில் குவிந்து கிடந்தன. ஒரு பல்லி அவரை கவனித்துக்கொண்டிருந்தது. கிங் ஷான் பு காப் (மலை எப்போதும் பசுமைதான்). வூ ஹூய் (வருத்தமில்லை), ஹவ் தி ஸ்டீல் டெம்பர்ட் ஆகிய சீன மொழிபெயர்ப்புப்  புத்தங்களின்  மேல் சற்றே எடையுள்ள ஒரு கை முஷ்டி அளவிலான பெரிய கல் ஒன்று அழுத்திக்கொண்டிருந்தது.

அவர் திடீரென தனது அடிவயிற்றில் பயங்கரமான வலி பரவுவதை உணர்ந்தார். பித்தப் பையில் கல் சிக்கியது போன்ற வலி.

சுவரின் ஓரத்தில் மரத்தாலான மக்கிப்போன பூசை மாடம் ஒன்று இருந்தது. அந்தப் பூசை மாடத்தில் சிவப்புச் சாயத்தில் எழுதப்பட்டிருக்கும் பெயர்தான் அவர் இப்போது பயன்படுத்தும் பெயர். ஒரு மங்கலான புகைப்படம், வண்ணங்கள் உதிர்ந்து மங்கிய தோற்றத்தில்  வைக்கப்பட்டிருந்தது.

6.

நீர் வளையங்கள்போல காலம் கடந்துபோனது. சிறு அலைகள் கரையை மோதுகின்றன. அலை மோதும்போது ஒவ்வொரு பாறையின் பின்னாலிருந்தும் தண்ணீர் தெறிக்கிறது.  ஒருவேளை அலைப்பெருக்கு தொடங்கியிருக்கலாம் .

தூரத்தில் விளக்குகள் எரிவது தெரிந்தது. வெளிச்சத்தை நோக்கி, வேற்று கிரகவாசிபோல தோற்றமளித்த கறுப்பு வடிவத்தை நோக்கிப் படகுச் செலுத்தப்படுகிறது.

அருகில் சென்று பார்த்தபோதுதான் அது கடலிலிருந்து அடித்து வரப்பட்ட மரக் கட்டைகளைக்கொண்டு கட்டப்பட்ட ஒரு படகுத்துறை என்று தெரிந்தது. பல ஆண்டுகளுக்கு முன்பு ஜப்பானிய வீரர்களின் தாக்குதலிலிருந்து தப்பி ஓடும்போது அவர், இதேபோன்ற எத்தனை படகுத் துறைகளில் ஏறினார் என்று சரியாக அவருக்கு நினைவில்லை. ஆனால் இவ்வளவு விசித்திரமான ஒன்றை அவர் இதற்கு முன்பு பார்த்ததில்லை. ஒருவேளை இந்தப் படகுத் துறை மரவேர்களைக் கொண்டு கட்டப்பட்டிருக்கலாம். ஒரு மரத்துண்டுகூட வழக்கமான பலகைபோல நேராகவும் தட்டையாகவும் இல்லை. எல்லாம் முறுகலும் வளைவுமாக இருந்தன. மரக்கட்டைகள் ஒவ்வொன்றும் இடைவெளி இல்லாமல் நெருக்கமாகவும் நடப்பவர்கள் தவறாக அடியெடுத்து வைத்தால் கால்கள் இடறக்கூடிய அளவு பெரிய இடை வெளிகளுடனும் பிணைக்கப்பட்டிருந்தன. அவருடைய வயதை ஒத்த ஒருவருக்கு ஒவ்வொரு அடியும் பேராபத்தில் முடியலாம்.

ஆனாலும், அவர் மனம் தளரவில்லை. கைப்பிடிச் சட்டத்தைப் பிடித்தபடி  மரக்கட்டைகளின் வரிசையைக் கவனமாக ஆராய்ந்து ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்தார். சற்றுச் சிரமப்பட்டாலும் படகுத் துறையைக் கடக்க முடிந்தது.

நடைபாதையிலும் அதேபோன்ற மரத் துண்டுகள் அடுக்கப்பட்டிருந்தன. நெருப்பு எரியும் திசையை நோக்கி நடந்தபோது மரக் கட்டைகள் எரியும் வாடை வந்தது. கடந்த 30 வருடங்களாக அவர் சொகுசாக வாழ முடிந்தாலும், புரட்சியில் ஈடுபட்டிருந்த காலத்தில் ஒவ்வொருமுறையும் உணவு தயாரிக்கும்போது விறகுகளை எரிக்க வேண்டியிருந்தது. இரவின் இருளும் தீப்பிழம்பும் உறவாடிக்கொண்டிருக்க, மரக்கட்டைகள் எரிந்து கொண்டிருக்கும் இடத்தில் யாரோ ஒருவர் அவரது வருகைக்காகக் காத்திருப்பதாக  உள்ளுணர்வு அவருக்குச் சொன்னது. முடிவற்ற இருளால் போர்த்தப்பட்ட யாரோ ஒருவர்.

இருட்டில் எத்தனை ஜோடிக் கண்கள் அவரைப் பார்த்துக்கொண்டிருந்தன என்று அவருக்குச் சரியாகத் தெரியவில்லை. சில அகலத் திறந்திருந்தன, சில மூடிக்கொண்டிருந்தன, சில சிமிட்டிக்கொண்டிருந்தன.

“அமரு, நீ வருவாய் என நீண்ட காலம் காத்திருக்கிறேன்.”

அந்த நபரை நெருங்கியபோது, அவர் மனம் அமைதியற்ற நிலையில் இருப்பதாக உணர்ந்தார். அவர் பேசியது சாதாரண மனிதர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்டு இருந்தது. அவர் பேசிய மொழியில் சில பேச்சுவழக்குச்  சீனச்  சொற்களுடன் அந்நிய மொழிகளின் கலவையும் இருந்தது. கலவையாக ஊறவைத்து அல்லது நொதிக்கச் செய்த  பழ ஊறுகாய்போல அந்த மொழி சில போதாமைகளுடன் இருந்தது.

டாக்பில் தொப்பி அணிந்தவர் அங்குள்ள பாறை மீது ஏறி அமர்ந்தார். அவரின் பிட்டம் கல்லின் குளிர்ச்சியை உணர்ந்தது. அருகிலிருந்த நெருப்பு மூட்டம் கனன்று கொண்டிருந்தது. வட்டமாகப் படிந்துகிடந்த சாம்பலுக்கு நடுவில், மனிதத் தொடையளவுகொண்ட இரண்டு மரக்கட்டைகளில் எரிந்த தீ அணையும் நிலையில் இருந்தது.

ஒருவேளை இப்போதுதான் சடங்கு முடிந்திருக்கலாம். அந்த நபருக்குச் சற்று மூச்சு வாங்கியது. அவரின் நெஞ்சு இறங்கி ஏறிக்கொண்டிருந்தது. ஒருவேளை இது இறுதிக் கட்டமாக இருக்கலாம். ஒரு படகு கடந்து சென்ற பிறகு நீரில் எழும் கடைசிச் சிற்றலையைப்போல இருக்கலாம். காய்ந்து, சுருக்கங்களுடன் இருந்த அந்த முகம் இருளில் நீரில் அடித்து வரப்பட்ட கட்டை போல இருந்தது. டக்பில் தொப்பியில் இருந்தவருக்கு அந்த நபர் யார் என்று நினைவுக்கு வந்தது. உரோமம் அடர்ந்த ஒன்று அவரை அணைத்தபடி இருந்தது. அவரது இடது தோளில் இருந்த குரங்கு ஒன்று கொட்டாவி விட்டது.

“நீயா… உன்னைத்தான் ஃபோ ஹியூவிலேயே (Thành pho Hue) கதையை முடித்து விட்டார்களே!” அவர்கள் அந்தத் தோழரை எப்படிப் பிடித்தார்கள் என்பது அவருக்கு இன்னும் நினைவிருக்கிறது. கோபம் தீரும்வரை அவரை அடித்து, பின்னர் அவரது முகத்தை தரையோடு அழுத்தித் தேய்த்து அவரது பின்னந் தலையின் சுட்டார்கள். அந்த நபருக்கு உண்மையிலேயே உயிர் பிரிந்துவிட்டது என்பதை உறுதிப்படுத்த, அந்த உடலை முன்பக்கமாகத் திருப்பி நெஞ்சில் மேலும் இரண்டு குண்டுகளைச் சரமாரியாக இறக்கினார்கள். அப்போது அந்த நபரின் முகம் துப்பாக்கிக் குண்டு வெடித்ததில் பாதி சிதைந்துவிட்டது. பின்னர் நிலத்தைத் தோண்டி, பிணத்தைப் புதைத்து மண் தட்டையாகும் வரை அதை மிதித்தார்கள். அப்போது நிலத்தில் பதிந்திருந்த கால் தடங்கள் அவருக்கு இன்னும் நினைவில் பதிந்துள்ளது.“உனக்கு மட்டும்தான் மாற்று ஆள் இருக்க முடியும்  என்று நினைத்தாயா?”

அந்த நபர் பொறுமையின்றிப் பதிலளித்தார். பற்களிலிருந்து சிதறி விழும் எச்சங்கள் போன்று இருந்தன அவர் சொற்கள்.  “… நான் இப்போ இந்த தோற்றத்தில் இருக்கிறேன். என்னை அடையாளம் தெரிகிறதா? நான் யார் என்று உனக்குத் தெரியுமா?” டக்பில் தொப்பியில் இருந்தவருக்கு மூச்சுத் திணறியது.

அந்த நபர் திடீரென தொண்டையைச் செருமினார். அவரைச் சுற்றியிருந்த விளக்குகள் அனைத்தும் கண்களை விரித்துப் பார்த்தன.

“நீ சாம்பல் ஆனாலும் உன்னை எனக்கு அடையாளம் தெரியும்.”

அந்த நபர் இன்னும் எரிந்துகொண்டிருந்த கட்டைகளைக் கிளறினார்.  இப்போது அவர் இருட்டுக்கு தன்னை பழக்கமாக்கிக்கொண்டு விட்டார். அனைத்தையும் இன்னும் துல்லியமாகப்  பார்க்க முடிந்தது. அந்த மனிதன் குரங்குத் தோலால் தன்னை மூடிக் கொண்டு முகத்துக்கு வெள்ளைச் சாயத்தைப் பூசிக்கொண்டிருந்தான். கால்களை அகற்றி அமர்ந்திருந்த அவன் காற்சட்டை போடவில்லை. அவனுடைய அந்தரங்கப் பகுதியை  அடர்ந்த கருநிற ரோமங்கள் மறைத்திருந்தன. சிவந்த பிட்டமுள்ள மூன்று பெண் குரங்குகள் அவன் உடலில் உண்ணிகளைத் தேடிக்கொண்டிருந்தன. ஒரு குரங்கு அந்த மனிதரின் தலைமுடியை இழுத்து விளையாடியது.

மற்றொன்று அவர் முதுகில் நகங்களைக் கொண்டு கீறிக் கொண்டிருந்தது. இன்னொரு குரங்கு கால்களுக்கு இடையில் உட்கார்ந்திருந்தது. தூணுக்குப் பக்கத்தில் இரண்டு கறுப்பு நிழல்கள் குந்தி அமர்ந்திருந்தன. அவற்றின் ஒவ்வொரு  அசைவின் போதும் இரும்புச் சங்கிலிகள் உராய்ந்தன. அவை இரண்டு மனிதக் குரங்குகளா அல்லது இரண்டு மனிதர்களா? அவை குரங்குகளாக இருந்தால் கால்கள் ஏன் இவ்வளவு நீளமாகவும்  உரோமமின்றியும் இருக்கின்றன? தொடைகளுக்கு இடையே கொட்டாங்கச்சியைத் தொங்க விட்டிருக்கின்றனவே?

அந்த நபர் கொட்டாங்கச்சியில் ஒருவிதப் பானத்தை நீட்டினார். புத்துணர்ச்சி தரும்  ‘துவாக்’  என்றார்.

“எடுத்துக்கொள்,” என்றார்.

அவர் கை அசைத்தார். இரண்டு குரங்குகள் விசித்திரமான வாடையுடன் ஒரு சிறிய கொடியை கையில் ஏந்தி வந்தன. மூக்கைத் துளைக்கும் பல வருட சிறுநீரின் வாடை.. உண்மையில் அது ஒரு தெருப் பொறுக்கியின் ஆடை. அந்த நபரிடமிருந்து டக்பில் தொப்பி அணிந்தவர் அதை வேறு வழியின்றி வாங்கிக்கொண்டார். தொடும்போது, அந்தத் துணியின் கரடுமுரடான தையல்களை அவரால் உணரமுடிந்தது. அந்த ஆடை ஒட்டுத் துணிகளிலிருந்து தயாரிக்கப்பட்ட போர்வை போலக் கந்தல்களின் ஒட்டுகளில் தயாரிக்கப்பட்டிருந்தது. அதில் தெற்குக் குடியரசு என்ற எழுத்துகள் அவிட் பூச்சியின் கால்களைப்போல அழகற்று தாறுமாறாகக் கிறுக்கப்பட்டிருந்தன.

சீன மொழியில் ‘குடியரசு’ என்ற வார்த்தையை காற்சட்டையில் தைப்பது எளிதானது என்றாலும் அதுவும் அலங்கோலமாகவே இருந்தது. அது ஆணின் முதிர்ந்து வாடிய விரைகளைப்போல் மேல் நோக்கி விரிந்திருந்தது. அவருக்கு சூடேற்றப்பட்ட ‘பேனா’ ஒன்று கொடுக்கப்பட்டது. அந்தப் பேனா மனிதனின் உடலின் ஒரு பகுதி போன்று இருந்தது. ‘குடியரசு’ என்ற கடும் துர்நாற்றம் வீசும் வார்த்தைக்குக் கீழ் அவரது கையொப்பம் வைக்க அறிவுறுத்தப்பட்டது.

“கையொப்பமா? மக்களுக்குத் தெரிந்த என் உண்மைப் பெயரையா?”

“ஸ்!” அந்த நபர்  கொத்த வரும் பாம்புபோலச் சீறினான்.

அந்த ஆள் கொடுத்த அந்த மென்மையான ‘பேனா’வை அழுத்தி, வெளிப்பட்ட வெள்ளை நிற பிசினில் பிற பெயர்களுக்குக் கீழே தன் பெயரை அவர் அவசரமாக எழுதினார்:  அவர் தனது பெயரை மற்றொரு பெயரில் விரைவாக எழுதி கையொப்பமிட்டார். ‘சின் பெங்’ (Chin Peng). அவரது பெயர்  ஸ்டாலின் (Stalin), மா சேதுங் (Mao Zedong), ஹோ சீ மின் (Ho Chih Min) எனப் பொடி எழுத்துகளில் எழுதப்பட்டிருந்த மற்ற பெயர்களுக்குக் கீழே எழுதப்பட்டது.

7.

இரயிலின் பிரேக்குகள் விடுவிக்கப்பட்டன. இரயில் முன்னோக்கி நகர ஆரம்பித்தது. ஏதோ ஒரு வாடை நாசியைத் துளைத்துக்கொண்டு ஊடுருவியது. தோளுக்குப் பின்னால் அழுக்குப் பையை சுமந்தபடி பரட்டைத் தலையுடன் ஜிப்சி இனத்தைச் சேர்ந்தவள் மாதிரி இருந்த ஒரு மூதாட்டி இரயில் வண்டியில் ஏறினாள். பல சிறிய வண்ணக் கற்களில் தொடுத்த மாலையைக் கழுத்தில் மாட்டியிருந்தாள்.  தலைமுடி சடை சடையாகச் சிக்கல் விழுந்து  சிலந்தி வலைபோல் இருந்தது. அந்தப் பெண் நேராக அவரது படுக்கைக்கு வந்து பிதுங்கிய விழிகளில் அவரைப் பார்த்தாள். அவளின் முகம் முழுக்க சுருக்கங்களால் நிரம்பி இருந்தது.

அவள் திடீரென்று சபிக்கத் தொடங்கினாள். ஒரு கொடும் தீயவனுக்கு எதிராக உச்சரிக்கப்படும் மந்திர உச்சாடனம் போல அந்த வசைகள் இருந்தன. அவர் கார் விபத்தில் மரணமடைய வேண்டும், சுறா விழுங்க வேண்டும், ஆயிரம் அம்புகள் தாக்க வேண்டும், ஒரு தடியனால் குடல் பிதுங்க நசுக்கப்பட வேண்டும், உயிரோடு புதைக்க வேண்டும் கோடிக் கணக்கான எறும்புகள் கடித்துக் குதற வேண்டும். சாக்கடையில் விழுந்து அழுகிச் சாக வேண்டும் என  ஆக்ரோஷமாகச் சாபமிட்டாள்.

இயக்கத்தில் சேர்ந்து பரிதாபமாக இறந்துபோன தன் அப்பாவி மகளைப் பற்றி அவள் விவரித்தாள். இறுதியில் தன் துணிப் பையிலிருந்து ஒரு மண் குடுவையை வெளியே எடுத்தாள். மந்திர வரிகளை உச்சரித்த பின் குடுவையின் மூடியைத் திறந்தாள். அவளின் அசுத்தமான விரல்கள் அவர் முன் நடனமாடின. அவரின் உயிர் உறிஞ்சப்பட்டு அந்தக் குடுவைக்குள் அடைக்கப்படும். அவர் இந்த பூமியிலிருந்து மறைந்து அவரின் உடல்  நிலத்தின் மணலைப்போல அர்த்தமற்றதாகும்  என அவள் முணுமுணுத்தாள்.

டக்பில் தொப்பி அணிந்திருந்தவர் தன் இருதயம் திடீரென இறுக்கமாவதை உணர்ந்தார். மிகவும் வலிமையான கையால் இறுக்கப்பட்டவரைப்போல், அவரது இதயம்  கடுமையாக வலித்தது. அவரால் மூச்சுகூட விடமுடியவில்லை. பலத்த காற்றினால் அவர் அணிந்திருந்த டக்பில் தொப்பி பறந்து போனது. அவருடைய கைகள் தன்னிச்சையாக நெஞ்சை பலமாகப் பிடித்தன. அந்த மண் குடுவைக்கு முன்,  இருண்ட பொறிக்குள்  சுழன்று சென்று சிக்கும் மணல் துகள் போல அவர் இந்த இயற்கைச் சூழலிருந்து மறைந்துப் போவதை உணர்ந்தார். மழைத் துளிகளின் ஓசை மணல் உரசும் ஓசையை ஒத்திருந்தது.

8

அன்றைய வானிலை மிகவும் மேக மூட்டமாக இருந்தது. இருண்ட மழை மேகம் முழு வானத்தையும் மூடியிருந்தது. எந்த நேரத்திலும் புயலோடு சேர்ந்து கடும் மழை பெய்யலாம். அது காலையா அல்லது மாலையா என்று நேரம் சரியாகத் தெரியவில்லை. டக்பில் தொப்பி அணிந்தவர் சிறுநீர் நெடி நிறைந்த இரயில் பெட்டியில் தனியாக அமர்ந்திருந்தார். இரயில் பெட்டியின் சட்டகத்தில் பச்சை நிற பெயிண்ட் மங்கி உரிந்து வெளியே தொங்கிக்கொண்டிருந்தது. இரயிலின் பாதி திறந்திருந்த ஜன்னல்கள் வழியாக குளிர்ந்த காற்று உள்ளே வந்தது. தண்டவாளத்தின் இரு புறமும் இருந்த இடுகாடுகளையும் கல்லறைகளையும் கடந்து இரயில் சென்றுகொண்டிருந்தது. சிங் மிங் திருவிழா முடிந்திருந்தது. பல கல்லறைகளின் வெளிகள் சுத்தம் செய்யப்பட்டிருந்தன.  லாலான்கள் பிடுங்கி எரிக்கப்பட்டிருந்தன. சாம்பல் நிறக் கடலாமை  ஓடுகளின் வடிவத்துடன் வடிவமைக்கப்பட்ட கல்லறைகளின் மேல் பகுதிகள் வெளியே தெரிந்தன. திறந்தக் குடைகள் போன்ற வடிவிலான பல சிறிய மரங்கள் அதிகம் உயரமில்லாத குன்றின் அலங்கரித்தன.  அகன்ற வெண்ணிற நீரிணை போல சில கல்லறைகள்  கம்பீரமாகக் குன்றின் உச்சியில் தோற்றம் தந்தன. எல்லா கல்லறைகளிலும் எழுத்துகள் வரிசையாகப் பொறிக்கப்பட்டிருந்தன. இருப்பினும், அந்த வாசகங்கள் அனைத்தும் எறும்புகளைப்போல சிறுத்துத் தெரிந்தன. அவற்றை படிக்க முடியவில்லை. ஆனால், வாயிலின் பெரிய கதவில் சீன எழுத்துக்கள் தெளிவாகத் தெரிந்தன ‘தியோங் ஹுவா (Tionghua) இடுகாடு’

ஜன்னலுக்கு வெளியே நிலமும் கல்லறைகளும் மட்டுமே இருந்தன.

இந்தப் பூமி முழுக்க வெறும் கல்லறைகளால் சூழப்பட்டதா? இரயில் பாதைகள் கல்லறையுடன் நீண்ட காலமாக ஒன்றோடு ஒன்று பிணைந்திருப்பதாகத் தோன்றியது. ஒரு இடுகாட்டைக் கடந்தால் சற்று நேரத்தில் எதிரில் வருவதும் இன்னொரு  இடுகாடாகத்தான் இருக்கிறது ‘தியோங் ஹுவா இடுகாடு’ என்று எழுதப்பட்ட இன்னொரு பெயர்ப் பலகை எதிரில் வந்துகொண்டிருக்கிறது.

9.

‘கம்போங் பூங்கா ஆப்ரிகோட்’ என்ற பெயர் பலகையை இரயில் கடந்து சென்றது. இரயில் அடுத்த நிலையத்தில் வந்து நின்றது. அந்த வழித்தட அடையாளத்தின் மீதிருந்த வண்ணம் உதிர்ந்து, மங்கிக்காணப்பட்டது. பெயர்ப் பலகையின் ஒரு முனை பிய்ந்து வெளியே தொங்கிக்கொண்டிருந்தது. பெயர்ப் பலகையில் ‘ஹூனான் 691’ (Hunan 691) என்று சீனச் சித்திர எழுத்துகளால் கறுப்பு மையில்  எழுதப்பட்டிருந்தது.

இரயில் ஜன்னலுக்கு வெளியே முழுதும் பனிபடர்ந்த பிரம்மாண்டக் காட்சி அலங்கரித்துக்கொண்டிருந்தது. உயரமான மிடுக்கான ஆண்கள் ஒரு வரிசையாக நின்று கொண்டிருந்தனர். அவர்கள் கரடியின் ரோமங்களைக் கொண்டு செய்யப்பட்ட  ஆடைகளை அணிந்திருந்தனர்.

மரங்கள் நிறைந்த இந்தப் பகுதி நிலையத்தைக் கடும் பனி மூடியிருந்தது.

பேரமைதிக் கொண்ட இந்த இடத்தில்தான் லியோ டால்ஸ்டாய் இறந்தார் என்று சிலர் கூறுகிறார்கள். வழித் தடப் பலகைகளில் அனைத்து வார்த்தைகளும் ரஷ்ய மொழிக்கு மாற்றப்பட்டிருந்தது. பலகையின் மேல் குவிந்திருக்கும் பனிக் குவியல் சாய்வாக அணிந்த தொப்பிபோல இருந்தது.

ஒரு கம்பீரமான தலைவர் அந்நிய மொழியில் உரையாற்றிக்கொண்டிருந்தார். மொழி பெயர்ப்பின் உதவியுடன் பேச்சைப் புரிந்துகொள்ள முடிந்தது. மொழிபெயர்ப்பு செய்து கொண்டிருந்த அழகிய பெண் சொன்னாள் “நீங்கள் அனைவரும் வலிமையாகவும், இறுதிவரை விடாமுயற்சியுடனும் இருக்க வேண்டும்”. வெண்பனி அந்த இடம் முழுவதையும் மூடியிருந்தது. நெடுக பீர்ச் மரங்கள் விடுபடாமல் தெரிந்தன.

இரயில் மலைப் பாதையில் மெதுவாகக் கரும் புகையை உமிழ்ந்த வண்ணம் ஊர்ந்து கொண்டிருந்தது. பனியில் ஆங்காங்கே இரத்தக் கறைகள் படிந்திருந்தன. விலங்குகள்  தாக்கி இருக்குமோ? ஒழுங்கற்றக் கால் தடங்கள் சிதறிப் படிந்திருந்தன. இது ஒருவேளை சைபீரியப் புலியின் கால் தடங்களாக இருக்குமோ?

10.

மழை தூறிக் கொண்டிருந்தது. வெளி மண்டபத்தில் யாரோ ஒருவரின் நிழலுருவம் தெரிந்தது. அந்த நபர் அவரது வருகைக்காகக் காத்திருந்தார். எனவே, டக்பில் தொப்பி அணிந்தவர் சிரமத்துடன் அவரை நோக்கி நடையை எட்டிப்போட்டார். சட்டென்று அவர் கைக்கடிகாரத்தின் வினாடி முள், முன்னும் பின்னுமாக நகர்ந்தது. பிறகு, நிமிட முள்ளும் அதேபோல் நகர்ந்தது. தொடர்ந்து மணி முள்ளும் வழக்கமான கடிகாரத் திசையில் செல்லாமல்  எதிர்த் திசையில் சுழன்றது.

கடிகாரம் பலமாக அதிரத் தொடங்கியது. படீரென்று கடிகாரக் கண்ணாடி உடைந்து சுக்கு நூறாகியது. கடிகாரத்தின் தங்க நிறத்திலான பெரிய முள்ளும்,  சிறிய முள்ளும் உடைந்து வெளியே சிதறித் தெரித்தன. “ஐயா தாமதமாகி விட்டது.” வெளி மண்டபத்தில்  இருந்தவரின் குரல் பனிக் குகையிலிருந்து வருவதுபோல் உறைந்திருந்தது .

11.

அவர் காணாமல் போனார் என்ற செய்தி இயக்கத்துக்குக் கிடைத்தவுடன் அனைவரும் குழப்பத்தில் ஆழ்ந்து போயினர். அதே பெட்டியிலும் அவருக்கு பக்கத்திலும் பயணம் செய்த இயக்கத் தோழர்கள் அவரை மிகக் கவனமாக கண்காணித்துக் கொண்டிருந்ததாகவே சத்தியம் செய்தார்கள். யாருமே தூங்கவும் துணியவில்லை என்றனர். இரயில் ஆற்றைக் கடந்த பிறகு அவர் படுக்கையிலிருந்து எழுந்து வெளியேறியதை யாரும் பார்க்கவில்லை. அப்படியே அவர் எங்காவது சென்றிருந்தாலும் அவர் இரயில் பெட்டியிலிருந்து இறங்குவது முற்றிலும் சாத்தியமற்றது. அவரது படுக்கையைச் சுற்றியிருந்த திரைச் சீலைகள் இறுக்கமாக மூடப்பட்டிருந்ததால், அவரை யாரும் தொந்தரவு செய்யவும் முடியாது. குடிநுழைவு நிலையத்திற்கு வந்ததும், ஆவணங்களைச் சரிபார்க்க அதிகாரிகள் இரயிலில் ஏறியபோதுதான் அவர் காணாமல் போனதையே அவர்கள் உணர்ந்தனர். அவர் அணிந்திருந்த டக்பில் தொப்பியும் கைக்கடிகாரமும் காணாமல் போயிருந்தன. ஆனால் அவருடன் எடுத்து வந்திருந்த பயணப்பை மட்டும் அப்படியே இன்னும் படுக்கையின் அருகில் இருந்தது.

தோழர்கள் இயக்கத்திடம் ஒப்புக்கொள்ளத் துணியாத விஷயம் என்னவென்றால், அவர்கள் அன்று இரவு நன்றாகத் தூங்கிப் போயிருந்தார்கள். இரயில் குலுங்குவதையும், ‘கட கட’ என்ற சத்தத்தையும் கவனிக்காத அளவுக்கு அயர்ந்த தூக்கம். ஒரு மாயச் சக்தி அவர்கள் அனைவரையும் தூக்கத்தில் மூழ்கடித்திருந்தது. அவர்கள் அனைவரும்  மன உறுதியுடனும், உயர்ந்த இலட்சியத்துடனும் உலா வந்த முன்னொரு காலத்தில் மிதந்து கொண்டிருந்தார்கள்.  சிலர் அந்தக் கனவுலகில் தங்களுடைய முதல் காதலரை அணைத்துக் கொண்டிருந்தார்கள். தங்கள் முயற்சிகள் மற்றும் நம்பிக்கைகள் மூலம் இந்த உலகத்தைச் சிறந்த இடமாக மாற்ற முடியுமென்ற நம்பிக்கையில் அவர்கள் திளைத்திருந்தனர். இரயில் பெட்டியில் என்ன நடக்கிறது என்பதை அவர்கள் யாரும் சரியாக உணரமுடியாத அளவு அவர்களின் கனவுகள் இருந்தன. அவர் எங்கு மறைந்து போனார் என்று தெரியவில்லை. ஓர் ஓரினச் சேர்க்கைக் காதலர்கள் திரைக்குப் பின்னால் ஏழு முறை கூடிக்களித்தார்கள் என்பதையும் அவர்கள் அறியவில்லை.

நடந்த அனைத்தையும் ஒருமுறை ஓட்டிப் பார்த்தால், இரயில் பல நிலையங்களில் நின்றது. அப்போது பலத்த மழையுடன் கூடிய பனிமூட்டம் எங்கும் நிறைந்திருந்தது. யாரும் அறியாதபடி, பயணிகள் இரயிலில் ஏறுவதும் இறங்குவதும் சாத்தியமான விஷயம்தான். ஏதோ ஒரு நிறுத்தத்தில் அவர் இறங்கிய பின் தன் நினைவாற்றலை இழந்திருக்க வாய்ப்பிருக்கிறது. தன்னை யார் என்பதை அவர் மறந்திருக்கலாம். தான் எங்கே இருக்கிறோம், இனி, என்ன செய்வது என்று புரியாமல் தவித்துக் கொண்டிருக்கலாம்.

நிலைமை அப்படி ஆகியிருந்தால், அவரைத் தேடியாக வேண்டும். இந்தத் தேடுதல் பணி காவல் துறையின் கவனத்தை ஈர்த்தாலும் அவரைத் தேடுவதில் உறுதியாக இருக்க வேண்டுமென்று நினைத்தார்கள். மேலும் இயக்கத்தைச்  சேர்ந்தவர்கள் இரயில் நின்ற அனைத்து நிலையங்களிலும் தகவல்களைத் திரட்ட வேண்டும். ஆனால் அவர்களுக்குப் பயனுள்ள தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. அவர் டக்பில் தொப்பி அணிந்திருக்கும் படத்தைக் காட்டும் வண்ணச் சுவரொட்டிகள் எல்லா இடங்களிலும் ஒட்டப்பட்டன. ‘மறதி நோயால் (amnesia) பாதிக்கப்பட்ட முதியவர் ஒருவர் இரயிலில் தொலைந்து போனார்’. உள்ளூர் செய்தித்தாள்களும் பல நாட்கள் செய்திகளை வெளியிட்டன. ஆயினும் அவரைப் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. தேடப்படும் முதியவர் ஒரு மர்ம ஆசாமி என்றோ, மலாயாவின் வரலாற்றில் முக்கியமானவர் என்றோ யாரும் கருதவில்லை. இரயில் நிலையங்களில் பணியில் இருந்த அனைத்து அதிகாரிகளிடமும் விசாரணை நடத்த அந்த இயக்கம் முயன்றது. சம்பவம் நடந்த அன்று அவர் போன்ற ஒரு பயணி இரயிலைவிட்டு இறங்கினாரா என்பதை யாராலும் உறுதிப்படுத்த முடியவில்லை. அறிவார்த்தமாகச் சிந்தித்துப் பார்த்தால் அவர் இரயிலிலிருந்து இறங்கியிருக்க வேண்டும். ஆனால் ஏன் அவரை அறவே கண்டுபிடிக்க முடியவில்லை? ஒருவருக்கும் தெரியவில்லை. கோலாலம்பூர் ஸ்டேஷனில் இறங்கிய பிறகு அவருடைய அடையாளம் மாற்றப்பட்டிருக்குமோ? அங்கு அவரை சந்தித்த அந்த இளைஞன் யார்? ஆனால் அவர்களின் விசாரணையின்படி அந்த இளைஞனின் பின்னணியில் எதுவும் இல்லை. அந்த இளைஞன் அப்போது டக்பில் தொப்பி அணிந்தவர் எழுத்தாளர் Xiaohei என்று நினைத்ததாகக் கூறினான். அதனால்தான் அவரை அணுகி சிறிது நேரம் உரையாடினேன் என்றும் கூறினான். இளைஞனின் காரணமும் விளக்கமும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருந்தது. ஆனால் அதன்பிறகு அந்த இளைஞன் திட்டமிட்டு ஏதாவது தந்திரம் செய்திருக்கலாம் என்றும் அமைப்புச் சந்தேகித்தது. இருப்பினும், அந்த இளைஞன் வேண்டுமென்றே எதையும் மறைத்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை.

அப்போது, அவர் இரயிலிலே விட்டுச்சென்ற பயணப்பையில், இரகசியக் காப்பகத்தின்  சிறப்புப் பதிப்பான (Secret Archives of the Plenipotentiary Representative) ‘முழு அதிகாரம் படைத்தவர்களின் பிரதிநிதியின் இரகசிய ஆவணத் தொகுப்பு’இருந்ததை மலாயா கம்யூனிஸ்ட் வரலாற்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டும்வரை யாரும் கண்டுகொள்ளவில்லை. பிற பதிப்புகளில் இல்லாத ஒரு விபரம் அவர் விட்டுச்சென்ற தொகுப்பில் இருந்தது.  யாருடைய மரணமும் குறிக்கப்படவில்லை. அந்தப் புத்தகத்தில் எழுதப்பட்ட விஷயங்கள் சந்திப்பு, புரிந்துணர்வு சார்ந்ததாக மட்டுமே இருந்தது. விபரமும், ஆதாரங்களும் யாருடைய மரணம் குறித்தும் அதில் எழுதப்படவில்லை.

இயக்கத்தினர் தொடர்ந்து அவரை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். எனவே மாற்று யோசனையான இரண்டாவது திட்டத்தையும் (பிளான் பி) செயல்படுத்தியாக வேண்டும். அவர் வேறு ஒரு முகத்துடன் யாராலும் அடையாளம் கண்டுகொள்ள முடியாத நிலையில் மாயமாக மறைந்துள்ளார். ஒரு சிலருக்கு மட்டுமே இரகசியம் தெரியும். எனவே அந்த அமைப்பு அவரது ஒத்த வயதுடைய உடல் பெருத்த ஒரு மனிதரை அதே முகம் மாற்று நிபுணரிடம் பிளாஸ்டிக் அறுவைசிகிச்சை செய்ய வட கொரியாவுக்கு அனுப்பியது. எனவே இயக்கத்துக்கு, அவருக்கு மாற்றாக ஊடகங்களில் அடிக்கடி வெளியாகும் பருத்த முகம் கொண்ட ஒருவர் கிடைத்தார். பொது மக்களின் கவனத்தைத் திசை திருப்பும் வகையில், சின் பெங் மலேசியாவில் தனது சொந்த ஊருக்கு தனது தாய் தந்தையரின் கல்லறையை வணங்க வருவதற்கு அனுமதிகோரும் விண்ணப்பம் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் அந்த விண்ணப்பம் உடனடியாக நிராகரிக்கப்பட்டது. எனவே அமைப்பு அதிகாரத்தின் முடிவுக்குப் பதிலளிக்க ஓர் அறிக்கையைத் தயார்செய்து பத்திரிகைகளுக்கு அனுப்பியது. சின் பெங்கின் முதுமை நிறைந்த எந்தவித ஈர்ப்புமற்ற முகம் சீனச் செய்தித்தாள்களில்  சில நாட்களாக வெளியிடப்பட்டது.

இருப்பினும் அவரை ஏன் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதில் இயக்கம் குழப்படைந்திருந்தது. அவர் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்பதே கேள்விக் குறியாக இருந்தது. முதுமையும் உடல் தளர்வுடனும் இருந்த அவர் உலகில் ஏதோ ஓர் அறியப்படாத மூலையில் இறந்திருக்கலாம். ஒருவேளை அவர் இறந்துவிட்டால், அவரது அடையாளத்தை யாரும் கண்டுபிடிக்க முடியாது. நினைவாற்றலை இழந்து அலைந்து திரிந்து விழுந்து இறந்த முதியவராக அவர் கருதப்படலாம். ஓடும் ஆற்றில் வந்து விழும்  மழை நீரின் ஒரு துளி போல. சேற்றில் விழுந்த ஒரு மணல் துகள் போல.

சிறிது காலங்களுக்குப் பிறகு, முக மாற்றம் செய்துகொண்ட பருமனான உடல்வாகு கொண்டவர்  நீரிழிவு நோயாலும், உடல் உறுப்புகள் சில செயலிழந்ததாலும் இறந்து போனார். அதனால் அமைப்பு அவரது இறுதிச்சடங்கை அதிகாரப்பூர்வமாக நடத்த வேண்டியிருந்தது. அந்த நபரின் உடல் தாய்லாந்தில் தகனம் செய்யப்பட்டது. அனைத்தையும் முடிவுக்குக்கொண்டு வர தாய்லாந்து நாட்டில் உள்ள இயக்கத்தவர்கள், உடனடியாக மலேசியப் பதிவுத் தரவுக் காப்பகத்தை ஊடுருவிச் செய்து அந்த நபர் பயன்படுத்திய ‘வாங் ஷி – கு’ என்ற பெயரை  அழித்தனர்.

ஊடகங்களில் அவரின் மரணச்செய்தி வந்த பின்னர் அவரது அஸ்தியை மலேசியாவுக்குள் எடுத்து வர மலேசிய அதிகாரிகள் தடைவிதித்தனர். அவரது பெயர் தேசியப் பாதுகாப்புக்கு மிரட்டலாகும் கூறுகளுடன் தொடர்புப்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து அடுத்தடுத்த வாரங்களில், தாய்லாந்திலிருந்து திரும்பும் சீனர்கள் பலரின் பயணப்பைகள்  மலேசிய எல்லையில் கடும் பரிசோதனைக்குள்ளாயின.  ஆனால், அந்த நபரின் (மாற்றுமுக அறுவைசிகிச்சை செய்துக் கொண்டவரின்) சாம்பல் தாய்லாந்து நாட்டில் தயாரிக்கப்பட்ட  டின் உணவாக மாற்றப்பட்டு அதை சின் பெங்கின் சொந்த ஊரில் புதைக்கக் கொண்டு வரப்பட்டது. கீழே உதிர்ந்த ஒரு சருகைப்போல, சாம்பல் அதன் அசல் இடத்திற்குத் திரும்பியது.

0.

சில மாதங்கள் கழிந்தது.

இரகசியக் காப்பகங்கள், வெளியீடு 198. கு – அக்பேன் என்ற மூத்த பத்திரிகையாளர் ஒரு பரபரப்பான செய்தியை வெளியிட்டார். இரகசிய ஆய்வறிக்கைகளின் ஆதாரத்தின்படி, டோங் சோங்கின் இயக்குநரும் சீன தொழில் முனைவருமான, விசித்திரமான கலைப் பொருட்கள் சேகரிப்பில் பிரபலமானவருமான டாக்டர் வுடான் (DR Wutan3), தற்போது மூன்று புதிய சேகரிப்புகளை வாங்கியுள்ளார். மறைந்த இரண்டு சுல்தான்கள் மற்றும் இயக்கத்தின் பொதுச் செயலாளர் ஆகியோரின் உடல்கள்தாம் அவை. மறைந்த பொதுச் செயலாளர் தனது பெற்றோரின் கல்லறைகளுக்குச் சென்று வர மலேசியாவில் உள்ள தனது சொந்த ஊருக்குத் திரும்பும் திட்டம் வெளியாட்களுக்கு எப்படியோ தெரிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. எனவே, அவர்  பிளாஸ்டிக் அறுவைசிகிச்சை மூலம் முகத்தை மாற்றி புது முகத்தைக் கொண்டிருந்தாலும், மலேசியாவில் வந்திறங்கியபோதே அடையாளம் தெரியாத தரப்பினரால் கடத்தப்பட்டார் என்று கூறப்படுகிறது.  ஆனாலும் டாக்டர் வூ -டான் தாய்லாந்து மருத்துவமனையின் உதவியுடன் பொதுச் செயலளாரின் டிஎன் ஏ மாதிரிகளைப் பரிசோதித்து உறுதிப்படுத்தியிருந்தார்.

இருப்பினும், டாக்டர் வு- டான் மரபனு பரிசோதனை மாதிரியை எப்போது எடுத்தார், பொதுச் செயலாளர் உயிருடன் இருந்தபோதா அல்லது இறந்த பின்னரா என்பது யாருக்கும் தெரியாது. டாக்டர் வு டான் சாதாரணமானவர் அல்ல. மூன்று முனைவர் பட்டங்கள் பெற்றவர். ஆனாலும் அவருடைய பட்டங்கள் அனைத்தும் அமெரிக்க டாலரில் வாங்கப்பட்டவை என்றும் கூறப்படுகின்றது. மூன்று பட்டங்கள் வாங்கினால் ஜிம்பாவே நாட்டின் (Zimbakwee) தேசியப் பல்கலைக்கழகத்தின் துணைப் பேராசிரியரின் அங்கீகாரச் சான்றிதழும், இறுதிச் சடங்கின் முகமூடியும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

டாக்டர் வூ டான் நிர்வாகத்தில் திறமை மிக்கவர்.

பல்கலைக்கழகம், கல்லூரியைத் தவிர, அவருக்கென்று சொந்தமாக மருத்துவமனை, பதிவுபெறாத தொழிற்சாலை, நீர் சுத்திகரிப்பு நிலையம், மிருகக்காட்சிச் சாலை, சர்க்கஸ், முதியோர் இல்லம் ஆகியவையும் உள்ளன. தலைவர்களின் உடல் கூறு மாதிரிகளைப்  பெறுவது அவருக்கு ஒன்றும் அவ்வளவு கடினமான விஷயம் இல்லை. இயக்கம் முன்வைத்த விமர்சனங்களை எதிர்கொள்ளும்போது (இதுவரை இயக்கம் அவரிடமிருந்து நிதி பெற்றுள்ளது). “நீங்கள் சொல்லும் விலை நியாயமாக இருந்தால், அதை உங்களிடம் விற்பது பற்றிப் பரிசீலிக்கிறேன்” என்று மட்டும்டாக்டர் வு டான் கூறினார்.

குறிப்பு

  1. ‘தி-காங்’ (சீன-ஹொக்கியன் பேச்சு வழக்கு) என்பது மிக உயர்ந்த அல்லது வானக் கடவுளைக் குறிக்கிறது. தாவோயிஸ்டுகள் வானத்திற்கும் பூமிக்கும் நீதியை நிலைநிறுத்தும் சக்தி இருப்பதாக நம்புகிறார்கள். எனவே, ஆகாயக் கடவுளை வழிபட ‘தி-காங்’ தூபம் தவிர்த்து, பூமி தேவியை வழிபடப் பூமித் தூபத்தையும் தயார் செய்தனர்.
  1.  தாவோயிஸ்டுகள் தங்கம், வெள்ளிக் காகிதங்களை எரித்து முன்னோர்களின் தேவர்களையும் தேவிகளையும் ஆவிகளையும் வணங்கி வழிபடுகிறார்கள்.
  1.  “வு டான்” என்பதன் பொருள் “கறுப்பு நிலக்கரி” என்பதாகும்.

HUJAN RENYAI – RENYAI

சீன மூலம் : இங் கிம் சியூ (NG KIM CHEW)

மலாய் மொழிபெயர்ப்பு: ஃபுளோரன்ஸ் குவெக் (Florence Kuek)

தமிழில்: ஆசிர் லாவண்யா

1 comment for “தூறல் மழை

  1. May 1, 2025 at 10:21 pm

    மலாயாவின் அவசர காலம் 1948 தொடங்கி 1960 வரை நீடித்தது. கம்னியூஸ் ஆதிக்கம் இருந்த காலக்கட்டம் அது. அவர்கள் மறைந்திருந்து காலனித்துவ ஆட்சியை எதிர்த்தார்கள்.அதனை பயங்கரவாதம் என்று காலனித்துவர்கள் திரித்துப் பரப்பினார்கள். கம்னியூஸ்ட் ஆதிக்கத்தின்போது போது போராடிய ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது. இம் கிம் கியூ தூறல் மழை கதையில் கதைக்களத்தைக் குறுக்கு வெட்டுத் தோற்றத்தில் சித்தரிக்கிறார். சுதந்திரமடைந்த பின்னர் மலாயா திரும்பும் நாயகன் எதிர்கொள்ளும் இன்னல்கள் கதையில் துல்லியமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. 1960 களுக்குப் பிறகான கம்னியூஸ்ட் வாழ்க்கை எவ்வாறிருந்தது என்பதை வரலாற்றின் துணையோடு சொல்கிறார் கதாசிரியர். நான் வாசித்த ஒரு சில சீனமொழிக் கதைகளில் இக்கதையே சிறந்தது. தமிழில் பிசிறில்லாமல் மொழிபெயர்த்த ஆசிர் லாவண்யா பாராட்டுக்குரியவர்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...