இறைவனிடம் திரும்புதல்

டாய் சியாவ் ஹுவா

ஹெபேயின் காங்ஜோவில் உள்ள அம்மாவின் சொந்த ஊரான சியான்சுவாங் கிராமத்திற்கு அவருடன் முதன்முறையாகச் சென்ற பழைய நினைவுகளை அசைபோட்டேன். அங்கே ஐந்து நாட்களுக்கு ஒரு முறை கூடும் சந்தைக்குத் தற்செயலாகச் செல்ல நேர்ந்ததும் நினைவுக்கு வந்தது.

கிராம மக்கள் பலரை அங்கே பார்த்தேன், ஆண்கள் வெள்ளை குல்லா அணிந்திருந்தனர். சில பெண்கள் ‘ஹிஜாப்’ அணிந்திருந்தனர். ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் குர்ஆனின் புனித வசனங்களைத் தாங்கிய தகடுகள் மாட்டப்பட்டிருந்தன. அவை ‘புனித வசனப் பிரார்த்தனைகள்’ என்று அழைக்கப்படுவதாக உறவினர்கள் சொன்னார்கள். இந்தப் புனித வசனங்களைப் பார்க்கும் எந்தவொரு முஸ்லிமும் அவ்வீட்டில் வசிப்பவர்கள் ‘தோஸ்திஅதாவது நண்பர்கள் என்பதையோ ஒரே இனத்தைச் சார்ந்தவர்கள் என்பதையோ ஒரே மதத்தைச் சார்ந்த சகோதரச் சகோதரிகள் என்பதையோ அறிந்து கொள்வார்களாம். ஆகவே, பசியோ தாகமோ ஏற்பட்டால், உடனே ஏதாவதொரு வீட்டுக் கதவைத் தட்டலாம். வீட்டுக்காரர் கதவைத் திறந்ததும் வலது பக்க மார்பில் கை வைத்து “அஸ்ஸலாமு அலைக்கும்,” என்று சொல்ல வேண்டும். அவரும் அதே போல வலது பக்க மார்பில் கை வைத்து சற்றே உடலைக் குனிந்து ‘வலைக்குமுஸ்ஸலாம்எனப் பதிலளிப்பார். ஒருவரையொருவர் இவ்வாறு முகமன் கூறுவது ஒரே மதத்தைச் சார்ந்தவர் என்பதைக் காட்டும். பின்னர் அந்த நபர் வீட்டிற்கு அழைக்கப்பட்டு அவருக்கு அன்புடன் உணவு வழங்கப்படும்.

நானும் அம்மாவும் தூரத்திலிருந்து வந்திருப்பதால் எங்கள் உறவினர்கள் முன்னமே ஒரு கிடாயை வெட்டியிருந்தனர். எங்கள் மூதாதையர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள மையத்துக் கொல்லைக்குச் செல்வதற்கு முன் மசூதியில் உள்ள பெண்கள் வழிபடும் பகுதியில் உள்ள கழிப்பறைக்கு எங்களை அழைத்துச் சென்று உடலை நன்கு சுத்தப்படுத்திக்கொள்ளச் செய்தனர். சிறு வயதிலிருந்தே எவ்வித இஸ்லாமியக் கல்வியையும் பெறாத நான், திடீரென்று நடந்த அனைத்து அனுபவங்களாலும் சற்றே குழம்பிப் போயிருந்தேன்.

உடலைச் சுத்தம் செய்த பிறகு மனமும் அமைதியடையும் என அத்தை  கூறினார். உடல் மட்டும் சுத்தமாவதில்லை, உள்ளமும் கூடத்தான். ஆக,  ‘உடலைச் சுத்தப்படுத்துவது’ என்பது, ‘உள்ளத்தையும் ஆன்மாவையும் தூய்மைப்படுத்துவதும்தான்’. குளியலறைக்குள் சென்று, அத்தையின் வழியைப் பின்பற்றி உடலைச் சுத்தம் செய்தேன். உடலைச் சுத்தம் செய்யும்போது, திடீரென அம்மாவின் விம்மல் சத்தம் கேட்டது. பின்னர் அவரின் அழுகை இன்னும் தீவிரமாகக் கேட்க ஆரம்பித்தது.

சுத்தம் செய்வதைச் சட்டென நிறுத்தி, குழாய் நீரையும் மூடிவிட்டு அம்மாவை நோக்கி, “…ம்மா என்ன ஆச்சு?” எனப் பதற்றமாகக் கேட்டேன்.

அம்மாவின் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது, அம்மா குந்தி அமர்ந்து தன்னால் முடியுமட்டும் கதறி அழுதார். அழுகைக்கிடையே “என் பாவம் இனி நிச்சயம் மன்னிக்கப்படாது!” என்றார்.

அப்போதுதான் அம்மாவின் ஆழ்மனதில் புதைந்திருந்த உணர்வுகளை நான் உணர்ந்தேன். 1949ஆம் ஆண்டின் இறுதியிலேயே அம்மா அப்பாவோடு தனது பெற்றோரையும் பிறந்த மண்ணையும் விட்டுவிட்டு, தைவானுக்குக் குடிபெயர்ந்துவிட்டார். தனது அரசியல் கட்சியின் கொள்கையினால் சொந்த ஊரில் உள்ள குடும்பத்திற்கும் உறவினர்களுக்கும் பிரச்சினை வந்துவிடுமென அப்பா அஞ்சினார். அவர் தனது பெயரையும் பிறப்பிடத்தையும் மட்டும் மாற்றவில்லை; தனது மத நம்பிக்கைகளையும் மறைத்தார்.

எனக்கு இன்னும் நினைவிருக்கிறது, ஒவ்வொரு முறையும் குடும்பத்தில் ஏதேனும் பிரச்சினை அல்லது துர்சம்பவங்கள் நடந்தால், அம்மா நிச்சயமாகத் தன்னைத்தானே குற்றம் சாட்டிக் கொள்வார். தனது பாவம் மிகப் பெரியது எனவும் தன்னால்தான் இக்குடும்பம் பாவத்தைச் சுமந்துதுன்பங்களையும் கஷ்டங்களையும் அனுபவிக்க வேண்டியுள்ளது என்றும் கூறுவார். அப்போது அம்மா சொன்ன பாவம் என்ன என்பது எனக்குப் புரிந்ததில்லை. இப்போதுதான் புரிகிறது, அம்மா தனது பிள்ளைகளை இஸ்லாமிய மத போதனையின்படி வளர்க்கவில்லை அதனால், இஸ்லாம் மதம் சார்ந்த எந்த அறிவையும் நாங்கள் பெற்றுக்கொள்ளவில்லை.

இவ்வளவு காலமாக, இது அம்மாவின் உள்ளத்தை ரண வேதனையில் ஆழ்த்தியதால் அவர் அடிக்கடி தன்னைத்தானே குற்றம் சாட்டிக் கொண்டார். ஆனால் அத்துணை வேதனையையும் அம்மா தன்னந்தனியே சுமந்து கொண்டிருந்தார். அவர் யாரிடமும் அதைச் சொல்லத் துணியவில்லை. என்னாலும் கண்ணீரை அடக்க முடியவில்லை. அம்மாவைக் கட்டியணைத்து ஆசுவாசப்படுத்தினேன், “அல்லாஹ் பெருங்கருணையாளன். கிராமத்திலுள்ள குடும்பத்தினரையும் உறவினர்களையும் காப்பதற்காகத்தானே அப்படிச் செய்தீர்கள், அவன் நிச்சயம் உங்களை மன்னிப்பான், அதான் அத்தை சொன்னார்களே, குளித்து உடலைத் தூய்மைப்படுத்திய பின், எல்லாப் பாவங்களும் மன்னிக்கப்படும் என்று! வாருங்கள், சீக்கிரம்…  நாம் இடுகாட்டிற்கு வேறு செல்ல வேண்டும்.”

மையத்துக் கொல்லைக்குச் சென்றபோது அம்மா தனது பெற்றோரின் சமாதி முன் மண்டியிட்டு அழுதார். அவரின் கதறல் நின்றபாடில்லை, “நான் விசுவாசமான பிள்ளையாக இல்லை, என் தாய்க்கும் தந்தைக்கும் ஒருநாள்கூட அவர்களுக்கான கடமையை நான் செய்ததில்லை. இன்று முதல் நான் அடிக்கடி என் அம்மா அப்பாவின் மண்ணறைக்கு வருவேன். இறந்த பின்பும் உங்களின் பக்கத்திலேயே இருந்து கடைசி வரை பார்த்துக் கொள்வேன்.”

இந்தச் சம்பவம் என்னுள் மிக ஆழமாகப் பதிந்துவிட்டது.

அதன் பின், 1999ஆம் ஆண்டு கோடையில், திடீரென இருதய நோயால் பாதிக்கப்பட்டு இறந்து போகும் வரை அம்மா தன் சொந்த ஊரிலேயே இருக்க முடிவு செய்தார். அவரின் சொந்த ஊரில் உள்ள உறவுக்காரர்கள் அம்மாவின் இறுதிச் சடங்கை வழிநடத்தினர். அம்மாவின் நல்லடக்கச் சடங்கு முழுவதையும் நான் நேரில் பார்த்தேன். இதைப் பற்றி முன்பு உறவினர் பேசுவதை நான் கேட்டிருக்கிறேன். ஆனால், அப்போது எனக்குச் சரியாகப் புரியவில்லை. தெளிவாகக் காட்சிப்படுத்திக் கொள்ள முடியவில்லை. இப்போதுதான் ஞாபகத்தில் தங்கிவிட்ட பழைய காட்சிகள் ஒன்று திரண்டு கண் முன் நடப்பது போல் தோன்றுகின்றன. இப்போதுதான் இஸ்லாத்தின் போதனைகளையும் நடைமுறைகளையும் ஓரளவு புரிந்துகொள்கிறேன். வாழ்க்கையின் மீதும் ஆன்மாவின் மீதும் அவர்கள் கொண்டிருக்கும் மதிப்பு என்னை நெகிழவும் வியக்கவும் செய்தது.

முஸ்லிம்கள் மரணத்தை ‘மவுத்’ (அரபு சொல்) என்று குறிப்பிடுகின்றனர், சீனாவில் உள்ள முஸ்லிம்கள் பொதுவாக அதை ‘வுச்சாங்’ (பௌத்தப் போதனையில் நிரந்தரமின்மையைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படும் சொல். இச்சொல் சீனாவில் உள்ள முஸ்லிம்களால் சிறப்பு வார்த்தையாகக் கடன் வாங்கிப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது) என்று கூறுகின்றனர். இருப்பினும், அவர்கள் பொதுவாக அதை ‘இறைவனிடம் திரும்புதல்’ என்று குறிப்பிடுகிறார்கள். அதாவது மீண்டும் அல்லாஹ்விடம் சென்றடைவது. உண்மையில், ‘இறைவனடி திரும்புதல்’ என்பது மரணம் பற்றிய முஸ்லிம் மக்களின் கருத்தைத் துல்லியமாகப் பிரதிபலிக்கிறது. ஒரு முஸ்லிம், மரணப்படுக்கையில் கிடக்கும்போது அவர் சுயநினைவுடன் இருப்பின், தான் செய்த பாவங்களுக்கு வருந்தி ‘தெளபாசெய்ய வேண்டும். தனது வாழ்நாள் முழுவதும் செய்த பாவங்களுக்காக வருந்தி அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.

இஸ்லாமிய இறுதிச் சடங்குகளில் உள்ள இரண்டு முக்கியக் கூறுகள்உடனடியாக அடக்கம் செய்வதும் (கப்பலில் இறந்து மூன்று நாட்களுக்குள் தரையிறங்க முடியாவிட்டால், உடனே கடலில் அடக்கம் செய்ய அனுமதிக்கப்படுகிறது). ‘வாழ்நாளில் உங்கள் பெற்றோரைக்  கவனித்துக்கொள்ளத் தாராளமாகச் செலவிடுங்கள், அவர்களின் இறுதிச் சடங்கின்போது மிதமாகச் செலவு செய்யுங்கள்’ என்ற கொள்கையைக் கடைப்பிடிப்பதுமாகும்.

இறுதிச் சடங்கை விரைந்து செய்தல் என்பது, இறுதிச் சடங்குக்கான குறிப்பிட்ட நாளைத் தேர்வு செய்யாமல், உடனடியாக எளிமையாக நடத்தப்பட வேண்டும் என்பதாகும். சவப்பெட்டியைப் பயன்படுத்தாமல் மூன்று நாட்களுக்குள் அடக்கம் செய்ய வேண்டும். ஏனெனில் இறந்தவரின் ஆத்மா சாந்தியடையச் சடலம் உடனடியாக அடக்கம் செய்யப்பட வேண்டும். ஆதலால்தான், ஒரு முஸ்லிம் தன் கடைசி மூச்சை எங்கு விடுகிறாரோ அங்கேயே அடக்கம் செய்யப்படுகிறார். சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கத் தேவையில்லை, தொலைதூரத்து உறவுக்காரர்கள் வந்து சேருவதற்காகக் காத்திருக்கவும் தேவையில்லை.

அம்மாவின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக, இறுதிச் சடங்கை அவசர அவசரமாக நடத்தும் முஸ்லிம் வழக்கத்தை நான் பின்பற்றவில்லை. (உண்மையில், அப்போது எனக்குப் போதுமான தெளிவில்லை. மாறாக, எனது அம்மாவின் ‘மய்யித்தை  (சடலத்தை) அவரது சொந்த ஊருக்கு அனுப்பினேன். அப்படிச் செய்ததால் ஏச்சுப் பேச்சுக்கு ஆளாவேன் அல்லது தண்டிக்கப்படுவேன் என்று வருத்தப்படவில்லை. ஆனால், அவ்வாறு செய்தது அம்மாவின் நல்லடக்கத்தைத் தாமதப்படுத்தி அதனால் அவரின் மறுமை வாழ்க்கையைப் பாதிக்குமோ என்று கவலைப்பட்டேன்.

உலகில் உள்ள மக்கள் துன்பப்படுவதை அல்லாஹ் விரும்புவதில்லை. இதற்கெல்லாம் உலக மக்களை அவர் தண்டிப்பதில்லை,” என இமாம் என்னிடம் கூறினார். மேலும் “நாம் புனிதமானவர்கள் அல்ல; தவறே செய்யாமல் இருக்க முடியுமா? அல்லாஹ் பெரும் மன்னிப்பாளன், அறிந்தே பாவங்களைச் செய்தவர்களும்கூட, தங்களின் செயல்களுக்கு உண்மையிலேயே மனம் வருந்தினால், அல்லாஹ் அவர்களின் தண்டனையைக் குறைப்பார் அல்லது விலக்களிப்பார். தற்செயலாகச் செய்யும்  தவறுகளுக்குச் சொல்ல வேண்டுமா என்ன? செய்த தவற்றையும் உணர்ந்தவுடன் உடனடியாக மனம் வருந்தி வேண்டினால் போதும், அல்லாஹ் நிச்சயம்  அவர்களை மன்னிப்பார்.”

அவரின் விளக்கத்தைக் கேட்ட பிறகுதான், எனக்கு மனதை அழுத்திக் கொண்டிருந்த பதற்றம் நீங்கி நிம்மதியாக இருந்தது.

மேலும், பெற்றோரை, அவர்கள் வாழும் காலத்தில் தாராளமாகச் செலவு செய்து கவனிக்க வேண்டும்; மரணத்திற்குப் பின் நல்லடக்கத்திற்குச் சிக்கனமாகச் செலவிட வேண்டும்,” என்பது பெற்றோர் உயிருடன் இருக்கும்போதே பிள்ளைகள் அவர்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளை நிறைவாகச் செய்ய வேண்டும் என்பதையும், பெற்றோர் இறைவனிடம் திரும்பிய பிறகு, அவர்களின் இறுதிச் சடங்குகள் எளிமையாகவும், சுருக்கமாகவும், ஆடம்பரமின்றியும் இருக்க வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்துகின்றது. வாழும்போதும் மரணத்திற்குப் பிறகும் சொத்தும் செல்வங்களும் உடன் கொண்டு செல்லப்படுவதில்லை. மேலும் எந்தவொரு பொருளையும் படையலையும் சடலத்துடன் சேர்த்துப் புதைப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

பெற்றோர் இறந்த பிறகு, பெற்றோரின் சேமிப்பில் ஒரு பகுதியையும் நம் சொந்தச் சேமிப்பில் சிறு பகுதியையும் ஏழை எளியவர்களுக்கு அல்லது சமூக நலனுக்காகத் தானம் செய்வதே சிறந்த வழி. இதுதான் இஸ்லாத்தில் பரிந்துரைக்கப்பட்ட  ஓர் உன்னதமான பழக்கமாகும்.

இஸ்லாத்தில் இறுதிச் சடங்கு உண்மையில் நான்கு அடிப்படைக் கடமைகளை உள்ளடக்கியது. அவை குளிப்பாட்டுதல், கஃபனிடுதல், பிரார்த்தனை செய்தல், அடக்கம் செய்தல் ஆகியனவாகும்.

பொதுவாகச் சடலத்தைக் குளிப்பாட்ட மூன்று பேர் தேவைப்படுவர். ஒருவர் கெண்டியில் நீர் நிரப்பவும், ஒருவர் சடலத்தின் மேல் நீர் ஊற்றவும், மற்றொருவர் வெள்ளைத் துணி அல்லது வெள்ளை கையுறைகளால் உடலைச் சுத்தம் செய்யவும் வேண்டும்.

மார்க்கம், சடலத்தைக் குளிப்பாட்டுவதற்கு மிகவும் தகுதியான நபர்களாக நெருங்கிய உறவினரையும் குடும்ப உறுப்பினரையும் குறிப்பிடுகின்றது. அல்லது பக்தியுள்ளம் கொண்டவராக அதாவது தொழுகை, நோன்பு, மத நம்பிக்கையை நிறைவேற்றும் பிற முஸ்லிமாகவும்  இருக்கலாம். ஏனெனில், அவர்கள்தான் நல்லதைப் பேசுவார்கள், இறந்தவரைப் பற்றிய மோசமான விஷயங்களை நினைவுகூர மாட்டார்கள்.

அல்குஸ்ல்’ (அதாவது முழு உடலையும் குளிப்பாட்டி புனிதமாக்குவது; சுயமாகத் தமக்குத் தாமே செய்து கொண்டால் ‘குஸ்ல்என்று அழைக்கப்படும்). பெண்கள்தான் அதனைச்  செய்ய வேண்டும். ஆனால், எனக்கும் அக்காவுக்கும் அதை எப்படிச் செய்ய வேண்டும் என்பதே தெரியவில்லை. எனவே, நாங்கள் பள்ளிவாசலில் இறுதிச் சடங்கை எடுத்து நடத்துபவரிடம் அம்மாவின் ஜனாஸாவைக் (சடலத்தை) குளிப்பாட்ட உதவி கேட்டோம். முஹம்மது நபி கூறியதாவது: யார் ஒருவர் முஸ்லிமின் ஜனாசாவைக் கழுவி அதன் குறைகளை (அவனுடைய குற்றங்களையும் குறைகளையும்) மறைத்துப் பாதுகாக்கிறாரோ, அல்லாஹ் அவருக்கு 40 முறை மன்னிப்பு வழங்குவான்”.

அந்த மூன்று பெண்களும் அம்மாவைச் சவப்பெட்டியிலிருந்து தூக்கி ‘உலர்ந்த பலகை’ (ஒரு பிரத்தியேகக் குளியல் படுக்கை, ‘நீர் சரிவு பலகை’ என்றும் அழைக்கப்படுகிறது) மீது வைத்தனர். அம்மாவின் ஆடைகளைக் கழற்றி விட்டு அவரது உடல் பாகங்களை வெள்ளைத் துணியால் மூடினர். அவர்கள் நன்மை பயக்கும் அகர்பத்திகளை (பாலன் தூபம்)  ஏற்றி அதைப் பிடித்தபடி தீய ஜின்களும் சைத்தான்களும் தீண்டாதிருக்கும் பொருட்டு அம்மாவை மூன்று முறை வலம் வந்து ‘அப்தாஸை’ (அடிப்படை குளியல்) தொடங்கினார்கள்.

ஒருவர் கெண்டியில் நீரை நிரப்பினார், ஒருவர் சடலத்தின் மீது நீரை ஊற்றினார், மற்றொருவர் அம்மாவின் இரு கைகளையும் கழுவினார். அடுத்து, அம்மாவின் உடலின் கீழ்ப்பகுதியைச் சுத்தம் செய்வதற்காக ஜனாஸா சுத்தம் செய்பவர் வெள்ளைக் கையுறைகளை அணிந்தார். பிறகு புதிய கையுறைகளை அணிந்து கொண்டு அம்மாவின் வாயை ஈரமான பருத்தியால் கொப்பளிக்கும் செயலுக்கு மாற்றாகத் துடைத்தெடுத்தார். பின்னர் மூக்கைச் சுத்தம் செய்து, முகம் கழுவி, இரு கைகளையும் தோள் வரை கழுவினார். தொடர்ந்து தலை, காதுகள், கழுத்து ஆகியவற்றைத் துடைத்து, இறுதியாக இரு கால்களையும் கழுவினர்.

அடிப்படைக் குளியல் முடிந்ததும், உடல் முழுவதையும் புனிதமாக்கும் குளியலை அம்மாவுக்குச் செய்தனர். அம்மாவின் உடலின் மேல் பகுதியிலிருந்து குளிப்பாட்ட ஆரம்பித்து, பின்னர் கீழ்ப்பகுதியைக் குளிப்பாட்டினர். அதேபோல்   முதலில் வலது புறத்தையும், பின்னர் இடது புறத்தையும் குளிப்பாட்டினர். பிறகு  முதலில் மார்பைக் கழுவிப் பின் முதுகைக் கழுவினர். மேலிருந்து கீழாக, முதலில் வலது புறம், பிறகு இடது புறம் என அம்மாவின் உடல் முழுவதும் அழுக்கு இல்லாமல் ஆகும் வரை மூன்று முறை குளிப்பாட்டப்பட்டது.

அம்மாவின் தோல் வெண்மையாகவும் மாசு மருவற்று வழவழப்பாகவும் 80 வயது ஆகிவிட்டவருக்கான அடையாளங்கள் கொஞ்சமும் இல்லாமலும் இருந்தது. அம்மா எந்தத் தோல் பராமரிப்பு பொருட்களையும் பயன்படுத்தியோ, சாப்பிட்டோ நான் பார்த்ததில்லை. ஒருவேளை இது மரபியல் காரணமாகவும் அம்மாவின் உணவுப் பழக்கத்தின் காரணமாகவும்  இருக்கலாம். ஏனெனில் உணவுண்ணும் பழங்கவழங்களில் முஸ்லிம்கள், பசியின்போது சாப்பிடத் தொடங்கு, வயிறு நிறையும் முன்பு சாப்பிடுவதை நிறுத்திவிடு எனும் பரிந்துரையை முன்வைக்கிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் சுகாதாரத்தின் அடிப்படையில், முஸ்லிம்கள் சுயமாக இறந்த விலங்குகளையும் (மீன்களைத் தவிர) கிருமிகள் சேர்ந்துவிடும் என்பதால் விலங்குகளின் ரத்தத்தையும் உண்பது ஹராமாக்கப்பட்டுள்ளது.  ரசனையின் அடிப்படையிலும் அறத்தின் அடிப்படையிலும் பன்றி இறைச்சி உண்பது ஹராமாக்கப்பட்டுள்ளது. ஏனெனில் பன்றி பேராசை, அமைதியற்ற மனம் கொண்ட அழுக்கான விலங்காகக் கருதப்படுகிறது. மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, பன்றி இறைச்சியில் மனித ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கும் பல ஒட்டுண்ணிகளும் கிருமிகளும் உள்ளன என்று கூறப்படுகின்றது.

அதுமட்டுமல்லாது, வனவிலங்குகள், கோரைப் பற்கள் அல்லது தந்தங்களைக் கொண்ட விலங்குகள், இரையை வேட்டையாடி உண்ணும் விலங்குகள், நகங்கள் அல்லது கூர்மையான அலகுகள் கொண்டவை; தீய, முரடான, பேராசையான, கஞ்சத்தனமான, கொடூரமான, அழுக்கான, அழுக்கானதை உண்பவை, வியப்புக்குரிய வடிவத்தில் இருப்பவை, மனிதனைப் போல உருவம் கொண்டவை என பல விலங்குகள் ஹராமாக உள்ளன.  என்னைப் பொறுத்தவரை, இந்த வகை உணவைச் சாப்பிடாமல் இருப்பது என்பது முன்னோர் கூற்றான “நாம் எதைச் சாப்பிடுகிறோமோ அதுவாகவே ஆகிறோம்” என்பதற்கு ஒப்பானதாகும். எதை ஒருவர் சாப்பிடுகிறாரோ அது அவரின் குணத்தையும் ஆளுமையையும் வடிவமைக்கும்.

பிறகு, ​​ அம்மாவின் உடலை ஒருவர் சாய்த்து, அமர்ந்த நிலையில் தூக்கி, வயிற்றில் உள்ள அழுக்கு, மலம் ஆகியன வெளியேற வயிற்றில் மெதுவாக உருவினார். வயிற்றில் அழுக்கு இருந்து வெளியேறும் பட்சத்தில் அது சுத்தமாகும் வரை கழுவினால் போதும். மீண்டும் அடிப்படைக் குளியலையும் புனிதக் குளியலையும் மேற்கொள்ள வேண்டியதில்லை. குளிப்பாட்டிய பிறகு, ஒரு சுத்தமான துணியால் அம்மாவின் உடலையும் முகத்தையும் உலரும்வரை மெதுவாகத் துடைத்தனர். துர்வாடையை அகற்றவும் புழுக்கள் வராமல் தடுக்கவும் அவரது உடல் துவாரங்களில் வாசனையைத் தடவினார்கள்.

முழு உடலையும் தூய்மைப்படுத்தும் செயல்பாட்டின்போது ஜனாஸாவை ஒழுங்குபடுத்துபவர்களில் ஒருவர் தவா ஓதிக் கொண்டே குளிப்பாட்டினார். அந்த மூன்று பெண்களைத் தவிர நானும் அக்காவும் மட்டுமே அருகில் மண்டியிட்டு அமர்ந்திருந்தோம். மகன்களும்  உறவுக்காரர்களும் உள்ளே வர அனுமதிக்கப்படவில்லை.

பிறகு, அம்மாவுக்கு ‘கஃபான்’ (வெள்ளைத் துணி) அணிவிக்கத் தொடங்கினர். ஹடிஸ் விளக்கப்படி, ஜனாஸாவை மறைக்க வெள்ளை பருத்தி துணி மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. ஜரிகைப் பூ வேலைப்பாடுகள் உள்ள துணி அல்லது பட்டுத் துணி போன்றவை பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ‘கஃபான்துணி பொதுவாக ஆண்களுக்கு மூன்று அடுக்குகளும் (பெரிய கஃபான், சிறிய கஃபான் மற்றும் சட்டை) பெண்களுக்கு ஐந்து அடுக்குகளும் (பெரிய கஃபான், சிறிய கஃபான், காமிஸ் சட்டை, முக்காடு மற்றும் கைலி) ஆகும்.  ஒவ்வொரு துணிக்கும் திட்டவட்டமான அளவு உள்ளது. (உடல் அளவிற்கு ஏற்ப பெரிய கஃபான் மேல் பகுதியிலும் கீழ் பகுதியிலும் 7 அங்குல நீளம் கூடுதலாகவும், அகலம் 4.05 அடியும்; சிறிய கஃபான் உடல் அளவிற்கு ஏற்ப அதிகப்படியான துணி இல்லாமலும், அகலம் 4.05 அடி; சட்டை அகலம் 1.2 இருந்து 1.3 அடிகளுக்குள் இருக்கும்). முஸ்லிம்களைப் பொறுத்தவரை, உலகத்திலிருந்து எடுத்துச் செல்லப்படும் ஒரே  ‘உடைமை’ இதுதான்.

வெதுவெதுப்பான மரப் படுகையில் ஒரு பெரிய கஃபானையும் அதைத் தொடர்ந்து ஒரு சிறிய கஃபானையும், பின்னர் ‘பிரஹான்’ (காமீஸ் ஆடை) யையும் விரித்து அதன் மேல் சுத்தமாகத் துடைக்கப்பட்ட அம்மாவின் உடலை, குளியல் படுக்கையிலிருந்து தூக்கி வைத்தனர். ‘காமிஸ்ஆடையை அணிவதற்கு முன், ஒரு கைலித் துணியால் மார்பு முதல் தொடை வரை போர்த்தினர். அம்மாவின் தலைமுடியில் கஸ்தூரி வாசனைத் தெளிக்கப்பட்டது. மேலும் நெற்றி, மூக்கு, கைகள், முழங்கால்கள், கால்களில் வாசனைத் திரவியம் தெளிக்கப்பட்டது; அதன் பிறகு முடி இரண்டாகப் பிரிக்கப்பட்டு காமீஸ் ஆடையின் மேல் வைக்கப்பட்டது. முக்காட்டால் (சுமார் மூன்று அடி நீளம்) தலையை மூடுவதற்கு முன் பாதுகாப்பு “துஆ” (புனித வரிகள்) அம்மாவின் நெஞ்சுப்பகுதியில் வைக்கப்பட்டது. அம்மாவின் உடலை ஒரு சிறிய கஃபானால் கஃபனிட ஆரம்பித்தார்கள். மீண்டும் ஒரு பெரிய கஃபானால் கஃபனிட்டார்கள். கஃபனிடும் முறை என்பது, முதலில் இடது பக்கத்திலிருந்து மடித்து, பின்னர் வலது பக்கம் மடிப்பதாகும். இறுதியாக, இரு முனைகளும் திறக்காதபடி கயிற்றால் இறுக்கமாகக் கட்டப்பட்டது.

இவை அனைத்தும் முடிந்த பிறகுதான், உறவினர்கள் கடைசியாக ஜனாஸாவைக் காண அழைக்கப்பட்டார்கள். இந்தச் சடங்கு ‘இறுதி மரியாதை செலுத்துதல்’ என்று அழைக்கப்படுகிறது.

சல்மா தினேசுவரி

அல்குஸ்ல்முடிந்து, அதாவது முழு உடலையும் புனிதமானதாக்கிய குளியலுக்குப் பிறகு, நானும் அக்காவும் அம்மாவுக்கு இறுதி மரியாதை செலுத்திக் கொண்டிருந்தபோது, ​​திடீரென்று ஓர் அதிசயம் நடந்தது! கண்களை மூடியிருந்த அம்மாவின் முகம் முன்பு போல நெற்றி சுருங்கியபடியோ வாயைப் பிதுக்கிய வண்ணமோ இல்லை. கவலையும் விருப்பமின்மையும் மறைந்து அம்மாவின் முகம் நல்ல தூக்கத்தில் ஆழ்ந்திருக்கும் குழந்தையின் முகம் போல் நிதானமாக இருந்தது.

என் கண்களால் நான் அதைப் பார்த்தேன். ஆதலால், அம்மாவின் ஆத்மா சாந்தியடைந்து விட்டதை முழுமையாக நம்பினேன். அல்லாஹ்வை விட்டு விலகி வாழ்ந்த பாவங்கள் அனைத்தும் இந்தப்  புனித நீராடலுக்குப் பிறகு சுத்தப்படுத்தப்படும் என்பதில் அம்மா உறுதியாக இருந்தார். அம்மாவின் ஆவியும் உடலும் தூய்மைப்படுத்தப்பட்டு, புனிதமாக்கப்பட்டுள்ளது. இனி, மீண்டும் அல்லாஹ்விடமே சென்று சேரத் தயாராகிவிட்டார்.

அம்மாவின் முகத்தில் ஏற்பட்ட மாற்றம், சகோதரிகளான எங்களை நெகிழச் செய்து கண்களில் கண்ணீர் சுரந்து முகத்தை நனைத்தது. சொற்களற்று நாங்கள் இருந்தோம்

அம்மா இறந்த செய்தியை அறிந்ததும் கிராம மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தக் கூட்டமாகக் குவிந்தனர். சிலர் ஊதுவத்தி ஏற்றினர், சிலர் அம்மாவின் இரங்கலுக்காகவும் பிரார்த்தனைக்காகவும் நன்கொடை கொடுத்தனர்.

இறுதி அஞ்சலிக்குப் பிறகு, அம்மாவின் தலை வடக்கு நோக்கியும், பாதங்கள் தெற்கேயும், முகம் மேற்குப் பார்த்தும் அதாவது புனிதத் தளமான ‘மெக்காவின்’ திசையில் அமைந்திருக்கும்படி, கூடத்தின் நடுவில் வைக்கப்பட்ட சிறப்புதாபுக்குக் (சவப்பெட்டிக்கு) மாற்றினர். இமாம் முழு மரியாதையுடன் ‘ஜனாஸாசடங்கை நடத்தினார். இது ஒரு மரபான சடங்காகும். மிகவும் உன்னதமான எளிமையான, முஸ்லிம்களின் நல்லடக்கச் சடங்குகளில் மிகவும் புனிதமானதும் கூட. இசை இல்லை, மேளம் கொட்டவில்லை, அமரவோ குனிந்து வணங்கவோ இல்லை.ஜனாஸாசடங்கிற்கு வந்தவர்கள் நிமிர்ந்து நின்றபடி இறந்தவருக்காக முழு மனதுடன் பிரார்த்தனை ஓதும் குரல்கள் மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது.

தக்பீர்’ (புகழ் வசனம்)  சொல்வதில் அனைவரும் இமாமைப் பின்பற்றி, ‘அல்லாஹு அக்பர்!’ (அல்லாஹ் பெரியவன்) என முழங்கினர்.

முஸ்லிம் அன்பர்களின் ஆழுள்ளத்திலிருந்து பிரார்த்தனைகள் உச்சரிக்கப்பட்டன.  அவர்களுடைய இதயங்கள் எப்போதும் அல்லாஹ்வுடன் தொடர்பில் இருப்பதால்எல்லாம் அறிந்தவனும்சர்வ வல்லமையுள்ளவனும் எல்லா இடங்களிலும் நிறைந்திருப்பவனுமாகிய அல்லாஹ், அவர்களுடைய பிரார்த்தனைகளை எப்போதும் செவிமடுக்கிறான் என்பதில் உறுதியாய் இருக்கிறார்கள்.

முஹம்மது நபி கூறியதாவது, “நீங்கள் ஒரு ஜனாஸாவுக்குப் பிரார்த்தனை செய்யும்போது, இறந்தவருக்காக மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள்.”

ஒரு முஸ்லிம் இறந்துவிட்டால், அவருக்காக 40 நபர்கள் (எவர் அல்லாஹ்வை மட்டுமே வழிபட்டு, அவனுக்கு இணை வைக்காமல், இறைவன் ஒருவன் தான் என உறுதியாக நம்பும்) ஜனாஸா தொழுகை நடத்தினால், அல்லாஹ் அவர்களின் பிரார்த்தனையை (துஆவை) ஏற்றுக்கொள்வான்.”

எனவே, ஜனாஸா சடங்கு மிகவும் முக்கியமானதும், அர்த்தமுள்ளதும் என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது.

முஸ்லிம் அன்பர்கள் நான்கு முறை தக்பீர் ஓதிய பிறகு, ‘சலாம்’ (கடவுள் உங்களுக்கு அமைதியை ஆசீர்வதிக்கட்டும் என்று அர்த்தம் தரும் முகமன்) செய்துகொள்கிறார்கள். அவர்கள் ‘பிரார்த்தனையை’ தங்கள் கைகளை ஏந்தி ஆமின் என உறுதிப்படுத்தியதன் வழி  ‘ஜனாஸாபிரார்த்தனை முடிவுக்கு வந்ததாகக் கருதப்படுகிறது.

தொடர்ந்து, ‘தாபுத்தைச் (சவப்பெட்டியை) சுமக்கக் கிராமவாசிகள் முண்டியடித்தது எங்களை மிகவும் நெகிழச் செய்தது. முஸ்லிம்களைப் பொறுத்தவரை, இறந்தவர்களைச் சுமப்பது தங்கள் பாவங்களைப் போக்கிக்கொள்ளும் ஓர் இறைத்தொண்டாகும். இத்தகைய உன்னத மரபுகள் துக்க வீட்டாருக்கு உதவுவது மட்டுமல்லாமல், முஸ்லிம்களிடையே உள்ள ஒத்துழைப்பையும் வெளிப்படுத்தும். பொதுவாக ஜனாஸாவை அடக்கம் செய்வதற்காக மையத்துக் கொல்லைக்கு எடுத்துச் செல்ல எட்டு அல்லது 16 முஸ்லிம் ஆண்கள் தேவைப்படுவார்கள்.

வழி நெடுக, உறவினர்கள் மெதுவாக விசும்பும் சத்தம் மட்டும் கேட்டது. யாரும் ஒப்பாரி வைக்கவில்லை. ஏனெனில், இவ்வுலக வாழ்க்கையே வாழ்க்கைப் பயணத்தின் முதல் நிலை என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள். மரணம் என்பது இரண்டாவது நிலை மட்டுமே. ‘மறுமையில் உயிர்த்தெழுதல்’ என்பது மூன்றாம் நிலை. இதுதான் மனிதர்கள் இவ்வுலக வாழ்க்கையை முடித்துக் கொண்டு அல்லாஹ்வால் தீர்மானிக்கப்பட்ட, அவனது அருளை நோக்கித் திரும்பி மறுமையை நோக்கிச் செல்லும் பயணமாகும்.  மரணம் என்பது வாழ்க்கையின் முடிவு அல்ல; ஆனால் அடுத்த வாழ்வின் தொடக்கப் புள்ளி. அதேபோலத்தான் யூத மதத்திலும் கிறிஸ்தவத்திலும் மறுமையில் நம்பிக்கை வைக்கின்றனர். பெளத்த மதத்தின் மறுபிறப்பு கோட்பாட்டோடும் இது பொருந்துகிறது.

செம்மண் படர்ந்த புதிய தோட்ட நிலத்தில் அமைந்திருந்த இடுகாட்டுக்கு வந்ததும், அம்மா நிரந்தரமாக ஓய்வெடுக்கும் இடமாக வடக்கு-தெற்கு திசையில் புதிதாகத் தோண்டப்பட்ட ‘லஹட்’ (புதைகுழி) இருந்தது.

முஸ்லிம்களைப் பொறுத்தவரை, மனிதர்கள் மண்ணிலிருந்து தோன்றியவர்கள் எனவே அவர்கள் மண்ணுக்குத்தான் மீண்டும் திரும்ப வேண்டும்.

மய்யித்’ (சடலம்) புதைக்கப்படுவதற்கு முன், புதைகுழியை முதலில் குடும்பத்தினர், குறிப்பாக மகன்கள் அல்லது சகோதரர்கள் சரி பார்க்க வேண்டும். இறந்தவர் நிரந்தரமாக அதில் ஓய்வெடுக்க வசதியாக இருக்கும் பொருட்டு, மண்ணறையின் உள்ளே தரை தட்டையாகவும் உலர்ந்ததாகவும் மண் கட்டிகள் அல்லது குறுங்கற்கள் இல்லாமல் இருப்பதையும் சடலத்தைப் புதைப்பதற்குப் போதுமான இட வசதியும் இருப்பதை உறுதி செய்வதே இதன் முக்கிய நோக்கம். முஸ்லிம்கள் இறந்தவர்களிடம் தங்கள் உணர்வுகளைக் கடைசியாக வெளிப்படுத்த இதுவும் ஒரு வழியாகும். இந்தப் பணி நிச்சயமாக அம்மாவின் அன்புக்குரிய மூத்த தம்பிக்குத்தான் வழங்கப்படும்.

மூத்த தம்பி விரைந்து குழிக்குள் குதித்தான். அவன் செம்மண்ணில் படுத்து அதைக் கவனமாகப் பரிசோதித்தான். திடீரென அவன் உடம்பெல்லாம் நடுங்க ஆரம்பித்தது. மீண்டும் எழுந்திருக்கச் சக்தியற்றுக் கிடந்தான்! அவன் நிலையைக் கண்ட மாமா உடனடியாக உள்ளே குதித்து அவனைச் சவக்குழியிலிருந்து வெளியே இழுத்தார். பின்னர் தாயின் அடக்கத்தை விரைவுபடுத்துமாறு உத்தரவிட்டார்.

முஸ்லிம் சகோதரர்கள் ‘தாபூத்தைத் திறந்து, அம்மாவின் உடலைத் தூக்கி மெதுவாக வைத்தார்கள். மூத்த தம்பியும் மாமாவும் கைகளை நீட்டி அம்மாவின் உடலைப் பெற்று ‘லஹத்தில்’ (புதைகுழியில்) வைக்க உதவினர். சீனாவில்காஃபா’ (புனித பூமியான மெக்கா) மேற்கில் அமைந்திருப்பதால், ஜனாஸாவின் தலை வடக்கும் பாதங்கள் தெற்கு நோக்கியும் வைக்கப்பட்டு, உடல் வலது திசையை நோக்கிச் சாய்த்தும் முகம் ‘கிப்லாடைநோக்கி மேற்கில் காபாவை எதிர்கொள்ளும் வண்ணமும் வைக்கப்பட்டது.

மண்ணறையின் வடக்கு முனையில் ‘முல்லாக்கள்’ சிலர் (அதாவது தஹ்ஃபிஸ் பள்ளி மாணவர்கள்) மண்டியிடதெற்கு முனையில் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட கூட்டத்தினர் மண்டியிடஓர் இமாம் அவர்களை வழிநடத்தினார். அவர்கள் அனைவரும் சேர்ந்து இறுதிச் சடங்கு முடியும் வரை ‘தல்கீன்ஓதினார்கள்.

மூத்த தம்பி அம்மாவின் மண்ணறையின் அருகில் நின்று கொண்டிருந்தான். அவன் முகம் வெளிறிக் காணப்பட்டது. இப்போது அம்மா இறைவனிடம் திரும்பிவிட்டார். இனி அம்மாவிடம் தான் செலுத்த வேண்டிய நன்றிக்கடன்கள் அனைத்தும் இந்த வாழ்நாளில் திருப்பிச் செலுத்தப்பட முடியாது என்பது அவனுக்குத் தெரியும்!

இறுதிச் சடங்கிற்குப் பிறகு, நாங்கள் இமாமையும் ‘முல்லாக்களையும்’ மாமாவின் வீட்டிற்குப் பாதுகாப்பு துஆவும் ஷுகூர் துஆவும்  ஓதவும் உறவினர்களுக்கு மார்க்கச் சொற்பொழிவு செய்யவும் அழைத்தோம். (இறந்தவர்களை நினைவுகூரும் பொருட்டு அல்லாஹ்வின் சேவையில் தங்களையும் உறவினர்களையும் ஈடுபடுத்திக்கொள்ளும் இஸ்லாமிய மக்களின் சிறந்த இறைத்தொண்டு இதுவாகும்). தொடர்ந்து விருந்துபசரிப்பும் நடைபெற்றது. ‘யூக்சியாங்எனும்  பலகாரமும் கட்டாயமாகப் பரிமாறப்படும். (‘யூக்சியாங்ஹுய் மக்களுக்குத் தனித்துவமான ஒருவகை மாவு உணவு, அதே சமயம் இஸ்லாமியர்களுக்கு இது கடவுளிடமிருந்து கிடைக்கும் ஆசீர்வாதத்தைக் குறிக்கின்றது. இந்தச் சிறப்பு உணவு திருமணங்கள், இறப்புச் சடங்குகள் அல்லது சிறப்புக் கொண்டாட்டங்களின்போது மட்டுமே தயாரிக்கப்படும். இந்தப் பலகாரம் ஒருவருக்கொருவர் வாழ்த்தவும் அல்லது அன்பின் அடையாளமாகப் பரிசாகவும் வழங்கப்படுகின்றன). சிறப்பு விருந்துகளின் கட்டாய உணவுகளில் இதுவும் ஒன்றாகும். இதுமட்டுமல்லாமல், கோழிகள், ஆடுகள் அல்லது மாடுகளும் ஒவ்வொரு குடும்பத்தின் நிதி நிலைக்கேற்ப வெட்டப்படுகின்றன.

அம்மாவை மனதாரப் போற்றும் நாங்கள், அவரின் பெயரில் நிறைய ‘நியாட்’ (தர்மம் செய்தல் அல்லது சொத்து தானம் வழங்குதல்) செய்து, அதன் வழி அம்மாவுக்குச் சேரும் புண்ணியங்களால், அவர் சொர்க்கத்தில் அனுமதிக்கப்பட முயற்சிகள் செய்தோம்.  பள்ளிவாசலுக்குப் பணத்தை நன்கொடையாக வழங்கியதோடு, ஒரு மாட்டை அறுத்து மூன்று பகுதிகளாகப் பிரித்தோம்: ஒரு பகுதி நாங்கள்  உண்பதற்கு, ஒரு பகுதி அண்டை வீட்டார்களுக்கும் உறவினர்களுக்கும் விநியோகிக்கப்பட்டது, மற்றொரு பகுதி ஏழைகளுக்குத் தானமாக வழங்கப்பட்டது. பசுவின் தலை, தோல், வால் ஆகியவற்றை அம்மாவுக்குப் பிரார்த்தனை செய்த இமாமுக்கு நன்றி பாராட்டும் வகையிலும் மரியாதையின் அடையாளமாகவும் வழங்கினோம்.

மாமா எங்களுக்கு நினைவூட்டினார், “உடன்பிறந்த நீங்கள் வெவ்வேறு இடத்தில் வாழ்ந்தாலும், உங்களால் முடிந்தால், ஏழாவது, 40-ஆவது, 100-வது நாள்களிலும், 10-ஆம் ஆண்டு நினைவுநாள், 15-ஆம் ஆண்டு நினைவுநாளிலும் உங்கள் அம்மாவின் மண்ணறையைப் பார்க்கக் கிராமத்திற்கு வர முயற்சி செய்யுங்கள். இது உங்கள் தாயை நினைவுகூருவதற்காக மட்டுமல்லாமல் மன்னிப்பைப் பிரார்த்தனை செய்யவும் நீங்கள் செய்யும் அனைத்து நற்செயல்களின் புண்ணியங்களும் உங்கள் அம்மாவுக்கு வழங்கப்படவும் வழியமைக்கும். நீங்கள் ஆழ்ந்து தியானிக்கவும் உங்களைச் சுயபரிசோதனை செய்து கொண்டு இந்த வாழ்க்கையின் உண்மையை உணரவும் இதுவும் ஒரு வழிமுறையாகும்.”

நான் இந்த இடத்தைவிட்டுச் செல்லமாட்டேன், நான் இங்கேயே குடியேறப்போகிறேன். அம்மாவின் மண்ணறைக்குச் செல்லும் கடமையை நானே செய்கிறேன். நான் அதை அடிக்கடி செய்வேன்,” மூத்த தம்பி உடனே பதிலளித்தான்.

அம்மாவின் வாழ்க்கையின் முதல் கட்டம் கசப்பானதாகவும் வெறுமையானதாகவும் அமைந்தது. போர்க் கலவரங்களாலும், அந்த நேரத்தில் ஏற்பட்ட கொந்தளிப்பின் காரணமாகவும் சொந்த ஊரையும் உறவினர்களையும் விட்டு விலகி இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மூத்த தம்பிக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையும் அம்மாவுக்குப் பேரடியைக் கொடுத்தது. அம்மா உள்ளுக்குள்ளே மிகுந்த வேதனையை அனுபவித்தார். இருந்தபோதிலும், அம்மா எல்லாவற்றையும் சகித்துக் கொண்டார்; பொறுமையாக எல்லாவற்றையும் எதிர்கொண்டார், ஆனாலும் இறுதியில் அவரால் நோயின் தாக்குதலை எதிர்த்துப் போராட முடியவில்லை. அம்மா தன் வாழ்நாள் முழுவதும் இன்பத்தை அனுபவித்ததே இல்லை. இது எங்களுக்கு மிகுந்த வேதனையாக இருந்தது.

இப்போது அம்மா இறைவனிடம் திரும்பிவிட்டார். அம்மாவின் இரண்டாம் கட்ட வாழ்க்கைப் பயணத்தில் அவர் சொர்க்கத்தின் அழகை நிரந்தரமாக அனுபவிக்க எங்களால் முடிந்த நற்செயல்களைச் செய்து அவருக்குப் புண்ணியங்கள் சேர்க்கப் பாடுபடுவோம்.

ஓரிரு நாட்களாகப் பல விஷயங்களை இடைவிடாமல் செயல்படுத்த வேண்டியிருந்தது. எல்லாமுமே எனக்கு முதல் அனுபவமாக இருந்தது. ஒரு நிமிடம்கூடத் தாமதிக்க முடியாத, தாமதிக்கத் தைரியம் இல்லாத விஷயங்களின் செயல்பாடாகவே முழுதும் அமைந்தது. நேரத்தைத் துரத்திப் பிடிப்பது என்பது ஒரு கடுமையான போரைச் சந்திப்பது போன்றது. பதற்றமான மனநிலையிலேயே இருந்தது. இறுதியாக இப்போது, நிதானிக்கவும்  ஓய்வெடுக்கவும் முடிகிறது.

அன்று இரவு, தங்கும் விடுதியின் படுக்கையில் படுத்துக் கொண்டே எல்லாவற்றையும் யோசித்தேன். எல்லாம் கற்பனைக்கு அப்பாற்பட்டிருப்பது போல் தோன்றியது. இருப்பினும் எனக்குத் தெரியும்  எதோ ஓர் அதீத சக்தி எனக்கு உதவியாகவும் உந்துதலாகவும் இருந்துள்ளது. ஊக்கப்படுத்தவும் சிரமங்களையெல்லாம் சமாளிக்கவும் உதவும் இந்த அபார ஆற்றல் ‘அன்பின்’ சக்தியாகும். அம்மா அல்லாஹ்விடமிருந்து வெகுதூரம் விலகி விட்டது போல இருந்தது. அந்நிய மண்ணில் அலைந்து திரிந்து கொண்டிருந்தவர் என்ற போதும் இம்முறை அம்மாவின் உடலை அடக்கம் செய்யச் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தபோது இமாம்களும் முஸ்லிம் சகோதரர்களும் அதை அலட்சியப்படுத்தவில்லை. மாறாக அவர்கள் அம்மாவின் இறுதிச் சடங்கை நன்முறையில் வழிநடத்தினர். மேலும் அம்மா மீண்டும் அல்லாஹ்விடம் திரும்பிட அம்மாவின் பாவங்களை மன்னிக்க வேண்டுமாறு இறைவனை வேண்டினர்.

உண்மையில், இவ்வுலகில் உள்ள எந்த ஒரு மதமும் (அது வழிமாறிய போதனையாக இல்லாதவரை) அதை ஏற்றுக் கொண்டோரை உன்னத இதயமுள்ளவர்களாகவும், நல்ல நோக்கங்களைக் கொண்டவர்களாகவும், ஒருவரையொருவர் மதிக்கவும் நேசிக்கவும்தான் அறிவுறுத்துகிறது.

இருப்பினும், மதத்தின் பெயரால் மோதலைத் தூண்டி போர்கள் ஏற்படச் செய்யும் மனிதர்களும் இருக்கவே செய்கின்றனர். சகிப்புத்தன்மையும் ஒத்துழைப்பும் பேரன்பும் கொண்டுள்ள மதம் ஏன் மனிதர்களால் திரிக்கப்பட்டுத் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது?

என் எண்ணங்கள் அலைபாய்ந்து கொண்டிருக்கும்போதே, நான் மெல்ல மெல்லக் கனவுலகிற்குள்  மிதந்து  சென்று கொண்டிருக்கிறேன்.

Kembali ke Rahmatullah

சீன மூலம்:  டாய் சியாவ் ஹுவா (Dai Xiao Hua)

மலாய் மொழிபெயர்ப்பு: லியாவ் லே சான் (Liau Lay San)

தமிழில் : சல்மா தினேசுவரி

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...