இலக்கியத்தில் சிக்கலான தன்மை ஏன் உருவாகிறது?

ஜார்ஜ் ஆர்வெல்

தீவிர இலக்கியத்தின் தொடக்கநிலை வாசகர்கள் உணரும் சிக்கல்தன்மை என்பது எழுத்தாளர் வேண்டுமென்றே முனைந்து உருவாக்குவதல்ல. எளிமையான அணுகலை முன்னுரிமைப்படுத்தும் நேரடிக் கதைகூறலைப் போலன்றி தீவிர இலக்கியத்தின் இயல்புகளான, ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தங்கள், நுணுக்கமான சித்திரங்கள், திறந்த முடிவுகள் ஆகியவற்றினால் தொடக்கநிலை வாசகர் அதைச் சிக்கலாக உணர்கிறார். ஆழமான தத்துவ விசாரணைகள், வழக்கத்திற்கு மாறான கதைகூறல், மொழியியல் பரிசோதனைகள், துல்லியமான சித்தரிப்புக்காகப் பயன்படுத்தப்படும் சொற்கள் ஆகியவற்றின் மூலமும் வாசகர் உணரும் சிக்கல் உருவாகிறது. மேலும், படைப்பின் ஒருபகுதி ஒரேநேரத்தில் சமூக வர்ணனையாக, கதாபாத்திர ஆய்வாக, தத்துவப் பிரதிபலிப்பாகச் செயல்படும். எனவே எந்த விளக்கம் சரியானது அல்லது இது சரியான விளக்கம்தானா என்று வாசகருக்கு ஏற்படும் குழப்பங்களும் படைப்பைச் சிக்கலானதாக உணர வைக்கின்றன.

எனினும், அவ்வாறு வாசகரைக் குழப்புவதல்ல படைப்பின் நோக்கம். மாறாக அவற்றின் நோக்கம் சமூகத்தின் நிலை, மனிதகுலம் எதிர்கொள்ளும் சிக்கல்கள் மற்றும் உணர்ச்சி சார்ந்த விஷயங்களைக் கூடுமானவரையில் துல்லியமாக வெளிப்படுத்தி அவைகுறித்த வாசகரின் புரிதலை மேம்படுத்துவதே. சிக்கலானது என்று வாசகர் உணரும் படைப்புகள் ஒவ்வொரு வாசிப்பிலும் புதிய பரிமாணங்களை வெளிப்படுத்தக் கூடியவை. அதை ஒரே முயற்சியில் முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. தொடர்வாசிப்பின் மூலமே இத்தகைய குழப்பங்கள் விலகும். இதுகுறித்து சென்ற கட்டுரைகளில் குறிப்பிடப்பட்டிருக்கிறது என்றாலும் அவற்றைத் தொகுத்துப் பேசுவதே இக்கட்டுரையின் நோக்கம்.

1. பல அடுக்கு அர்த்தங்கள்

தீவிர இலக்கியம் ஒரே மட்டத்தில் செயல்படுவதல்ல. மேற்பரப்பில் விவரிக்கப்பட்டதற்கு அப்பால் குறியீட்டு, தத்துவ மற்றும் உளவியல் பரிமாணங்களைக் கொண்டுள்ளது. வாசகரின் பார்வை, பண்பாட்டுப் பின்னணி மற்றும் ஈடுபாடு ஆகியவற்றின் அடிப்படையில் வெவ்வேறு விளக்கங்களின் சாத்தியத்தை அனுமதிக்கிறது. படைப்பிலுள்ள குறியீடுகளை, உருவகங்களை வாசகர் கண்டுகொண்டால் கதையின் ஆழத்திற்குச் செல்வது எளிதாகிவிடும். உதாரணமாக ஒரு புத்தகம் ஒரு பயணத்தைப் பற்றிய கதையைச் சொல்லக்கூடும், ஆனால் அந்தப் பயணம் என்பது தனிப்பட்ட நபரின் உள்முக வளர்ச்சியையோ அல்லது வாழ்க்கையின் அர்த்தத்தைத் தேடுவதையோ குறிக்கலாம். புத்தகத்தின் வெவ்வேறு பகுதிகளுக்கு இடையிலான குறியீடுகள், கருப்பொருள்கள் மற்றும் தொடர்புகளை ஆய்வு செய்வதன் மூலம், வாசகர்கள் இந்த ஆழமான அடுக்குகளைக் கண்டுபிடித்து படைப்பின் செழுமையை உணரலாம்.

எடுத்துக்காட்டாக ஜார்ஜ் ஆர்வெல்லின் ’விலங்குப்பண்ணை’— கதை, பண்ணை விலங்குகள் தங்கள் மனித உரிமையாளருக்கு எதிராகக் கலகம் செய்வது பற்றியது. இருப்பினும், உள் அர்த்தங்களை உணரமுற்படும் வாசகர்கள் இது அரசியல் அமைப்புகளின் விமர்சனம், குறிப்பாக ரஷ்யப் புரட்சி மற்றும் சர்வாதிகாரத்தின் ஆபத்துகள் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். இந்தக் கருப்பொருள் கூறுகளை இணைப்பதற்கு ஆழமான பகுப்பாய்வு தேவை.

கி. ராஜநாராயணன்

2. சிக்கலான மொழி மற்றும் பாணி

பல இலக்கியப் படைப்புகள் அடர்த்தியான உரைநடை, வழக்கத்திற்கு மாறான வாக்கியக் கட்டமைப்புகளைப் பயன்படுத்துகின்றன, இதனால் அவற்றைப் புரிந்துகொள்வது வாசகர்களுக்குக் கடினமாகத் தோன்றலாம். சில எழுத்தாளர்கள் தற்போது பயன்பாட்டிலில்லாத சொற்கள், வட்டாரப் பேச்சுவழக்குகள் அல்லது கவித்துவமான சொற்களைப் பயன்படுத்தலாம், உண்மையில் அவை படைப்பிற்குச் செழுமையைச் சேர்க்கின்றன, ஆனால் அதேசமயம் வாசகர்களிடமிருந்து அதிக முயற்சியையும் கோருகின்றன. மேலும், நனவிலியை எழுதுதல் போன்ற கதை நுட்பங்கள் வாசகருக்கான சவாலை அதிகரிக்கக்கூடும்.

உதாரணமாக, கி.ரா அல்லது ஜெயமோகன் எழுதும் வட்டார வழக்கு. உண்மையில் இவை தமிழ்நாட்டிலே பிறந்து தமிழைத் தாய்மொழியாகக் கொண்டு வேறு ஒரு வட்டார வழக்கில் பேசிக் கொண்டிருப்பவர்களுக்குமே சிக்கலான ஒன்றுதான். இவ்வாறான படைப்புகள் முதலில் அணுகமுடியாததுபோல் தோன்றினாலும் தொடர் வாசிப்பாலும், இடம் பார்த்துப் பொருள் கொள்ளுதல் என்ற முறையாலும் மிக எளிதாக கடக்கக்கூடியவை.

3. வழக்கத்திற்கு மாறான கட்டமைப்பு

காலவரிசைப்படி தொடரும் வழக்கமான கதைசொல்லலைப் போலன்றி, தீவிர இலக்கியம் பெரும்பாலும் நேரியல் அல்லாத கதைசொல்லல், கண்ணோட்ட மாறுதல்கள் அல்லது பல கதைசொல்லிகளைப் பயன்படுத்துகிறது. இது வாசகரின் காலம் மற்றும் காரண-காரிய உணர்வுக்குச் சவாலாக இருக்கலாம். இதைச் சமாளிக்க நிகழ்வுகள் மற்றும் பொருள்களை ஒன்றிணைப்பதில் தீவிர கவனம் செலுத்தினாலே போதும். பல கதாபாத்திரங்கள் கொண்ட அளவில் பெரிய படைப்புகளில், நேரியல் அல்லாத முறைக் கதைகளில் சிறுகுறிப்புகள் எழுதி வைத்துக் கொள்வது வாசகருக்கு உதவும்.

எ.கா: சாரு நிவேதிதா  எழுதிய ஜீரோ டிகிரி நாவல்.

சாரு நிவேதிதா

4. தெளிவின்மை மற்றும் திறந்தநிலை

தெளிவான தீர்வுகளை வழங்குவதற்குப் பதிலாக தீவிர இலக்கியம் பெரும்பாலும் தெளிவின்மையை ஏற்றுக்கொள்கிறது, பல விளக்கங்களுக்கு இடமளிக்கிறது. எழுத்தாளர்கள் தகவல்களை நேரடியாகச் சொல்வதைத் தவிர்க்கலாம், வெவ்வேறு கதைசொல்லிகளை அல்லது ஒன்றுக்கொன்று முரண்பட்ட கண்ணோட்டங்களை முன்வைக்கலாம். வாசகர்கள் வெறும் கதையை மட்டும் செயலற்ற முறையில் உள்வாங்குவதற்குப் பதிலாக அர்த்தங்களை  உருவாக்கிக் கொள்வதில் தீவிரமாக ஈடுபட கட்டாயப்படுத்தும் கூறுகள் இவை. இதுகுறித்து சென்ற கட்டுரையில் விவாதிக்கப்பட்டுள்ளது.

5. தத்துவம் மற்றும் உளவியல்

தீவிர இலக்கியம் பெரும்பாலும் ஆழமான தத்துவ விசாரணைகள், சிக்கலான உளவியல் நிலைகளை ஆராய்கிறது. கதாபாத்திரங்கள் இருத்தலியல் சங்கடங்கள், தார்மீகத் தெளிவின்மைகள் அல்லது முரணிலைக் கருத்துகளுடன் போராடுவதாக இருக்கலாம். தத்துவம் அல்லது உளவியல் கட்டமைப்புகளைப் பற்றிய புரிதல் இல்லாமல் பாத்திரங்களின் உந்துதல்கள் மற்றும் செயல்களைப் புரிந்துகொள்வது கடினம். இதற்கு தத்துவம் மற்றும் உளவியல் குறித்த அடிப்படை அறிமுகம் போதுமானது. மிக எளிதாகச் சில மாதங்களில் வாசித்துப் பெறக்கூடிய அறிவு அது.

எ.கா: ஜெயமோகன் எழுதிய விஷ்ணுபுரம், காடு நாவல்கள்.

6. பண்பாடு  மற்றும் வரலாற்றுச் சூழல்கள்

சில படைப்புகள் குறிப்பிட்ட பண்பாடு, அரசியல் அல்லது வரலாற்று அமைப்புகளில் ஆழமாக வேரூன்றியிருக்கும், இதனால் அந்தப் பின்னணிகளைப் பற்றி அறிமுகமில்லாத வாசகர்களுக்கு அவை சவாலாக இருக்கும். வரலாற்று நிகழ்வுகள், தொன்மக் குறியீடுகள் அல்லது இலக்கிய மரபுகள் பற்றிய அறிதல், படைப்பின் ஆழத்தையும் முக்கியத்துவத்தையும் முழுமையாகப் புரிந்துகொள்ள உதவும். ஒரு குறிப்பிட்ட படைப்பு சார்ந்த வரலாற்று நிகழ்வுகள், தொன்மங்கள் குறித்து அறிந்து கொள்வது இணையப் பயன்பாடு அதிகரித்துள்ள இன்றைய காலகட்டத்தில் மிக எளிது. இதுகுறித்தும் சென்ற கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

7. ஊடுபிரதித்தன்மை (Intertextuality)

பல இலக்கியப் படைப்புகள் மற்ற இலக்கிய நூல்கள், தத்துவ நூல்கள் அல்லது கலை இயக்கங்களைப் பற்றிக் குறிப்பிடுகின்றன அல்லது அதன் பகுதியைப் பயன்படுத்துகின்றன. இதுவே ஊடுபிரதி (Intertext) எனப்படுகிறது. இரண்டுக்குமிடையேயான தொடர்புகளை அறிந்தவர்கள் மட்டுமே அணுகக்கூடிய பொருள் அடுக்குகளை அவை உருவாக்கும். குறிப்பிடப்பட்ட படைப்புகளுடன் பரிச்சயம் இல்லாத நிலையில் அவை தெளிவற்றதாகத் தோன்றலாம். இதைத் தவிர்க்க அக்குறிப்பிட்ட படைப்பை இயன்றால் வாசிக்கலாம் அல்லது அதன் சுருக்கத்தை வாசித்தால் கூட பல சமயங்களில் தெளிவு கிடைக்கும்.

எ.கா: டி.எஸ். எலியட்டின் பாழ்நிலம்.

டி.எஸ். எலியட்

8. ஒழுக்கம் மற்றும் தார்மீகச் சிக்கல்

தீவிர இலக்கியம் பெரும்பாலும் வழக்கமான ஒழுக்கநெறிகளைக் கொண்ட கருப்பொருள்களை ஆராய்வதில்லை. அவை கதாபாத்திரங்கள் மற்றும் சூழ்நிலைகளை தெளிவான சரி-தவறு என்ற இருமையில் இல்லாமல் முன்வைக்கின்றன. இந்தத் தார்மீகத் தெளிவின்மை, வாசகர்கள் முன்வரையறுக்கப்பட்ட ஒழுக்க/தார்மீக நெறிமுறைகளை ஏற்பதற்கு பதிலாக, தாங்கள் நம்புபவற்றை கேள்விக்குள்ளாக்க வேண்டும் என்பதற்கான முயற்சி என்பதை வாசகர்கள் புரிந்துகொள்ள வேண்டியது முக்கியம்.

எ.கா: இமையம் எழுதிய எங்கதெ.

9. பரிசோதனை முயற்சிகள் மற்றும் நுண்மமான கதைசொல்லல்

சில இலக்கியப் படைப்புகள் வேண்டுமென்றே கதை மரபுகளை மீறுகின்றன. நுண்மமான (Abstract), சர்ரியல் தன்மை கொண்ட அல்லது துண்டு துண்டான கதைசொல்லலைப் பயன்படுத்துகின்றன. இந்த நூல்கள் தெளிவான கதைக்களத்தைக் கொண்டிருக்காமல், பாரம்பரியமற்ற சொற்றொடரியல் சார்ந்து இருக்கலாம் அல்லது வழக்கமான வாசகர் எதிர்பார்ப்புகளை சீர்குலைத்து, வேறுபட்ட ஈடுபாட்டு முறையைக் கோரலாம்.

எ,கா: ஆதவன் தீட்சண்யாவின் மீசை என்பது வெறும் மயிர்.

தீவிர இலக்கிய வாசிப்பின் அடிப்படைத்தேவை முயற்சி. ஒரு படைப்பைச் சிக்கலானது என வாசகர் உணர்ந்தாலும் அது ஒரு தடையல்ல, மாறாக அது வாசகருக்கு விடப்படும் ஓர் அழைப்பு — விமர்சன ரீதியாகச் சிந்திக்கவும், பிரதிக்குள் ஆழமாக ஈடுபடவும், ஒரு படைப்பை ஆழமாக்கும் அர்த்த அடுக்குகளை வெளிக்கொணரவும் விடுக்கப்படுவது. மேற்கூறிய கூறுகள் வாசிப்பைக்  கடினமானதாக மாற்றும் அதேசமயத்தில் மிகப்பெரிய வெகுமதிகளையும் வழங்கக்கூடியவை, வாசகரை அறிவுபூர்வமாக, உணர்ச்சி பூர்வமாக வளப்படுத்தும் ஓர் அனுபவமாக மாற்றக்கூடியவை.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...