
“சூரியன ரசிச்சது போதும் மாமா!” பானுதான் சொன்னாள்.
சட்டென திரும்பலாமா வேண்டாமா என நிதானித்தேன். இப்படி நிதானமாக அமர்ந்து காலை நேரச் சூரியனைப் பார்த்து பல நாட்களாகிவிட்டதென தோன்றியது. சரியாகச் சொல்வதென்றால் மூன்று வருடங்கள்.
”சாப்பாடு ஆரிடப்போவுது… சீக்கிரம் வாங்க மாமா,” குரலில் அன்பிருந்ததால் சிரித்தபடியே மனைவியைப் பின் தொடர்ந்தேன். தமிழகத்துப் பெண். கிராமத்துக்காரி. சொந்தம் விட்டுப்போகக் கூடாது என அம்மா இறக்கும் முன் கட்டிவைத்த பிறகே நிம்மதியாகக் கண் மூடினார். இவளும் ‘மாமா மாமா’ என என் மீது உயிரையே வைத்திருந்தாள். மூன்று வருடங்களுக்குப் பின்னர் ஊர் திரும்பியுள்ள என்னை மகிழ்ச்சியிலேயே திளைக்க வைக்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்பது அவள் ஒவ்வொரு அசைவிலும் தெரிந்தது.
எனக்குப் பிடித்த பாலாப்பம் தயார் செய்யப்பட்டிருத்தது. சுற்றிலும் மெல்லிய பொரியலுக்கு மத்தியின் பௌர்ணமி நிலா போல மையம் வெண்ணிறத்தில் பொங்கியிருந்தது. ‘இன்னைக்கு ஒரு பிடி பிடிச்சிடலாம்.’ உணவில் கைவைக்கும் நேரம் என் மகளின் விக்கல் சத்தம் கேட்டது. விக்கலின் உந்துதலுக்கு ஏற்றமாதிரி அவள் படுத்திருந்த தொட்டிலில் மெல்லிய குதிப்பிருந்தது. குடுகுடுவென தொட்டிலை நோக்கி விரைந்தேன். என்னைப் பின் தொடர்ந்து மனைவியும் ஓடி வந்தாள். ”அம்முக்குட்டி,” எனத் தொட்டிலுக்குள் தலையை விட்டதுதான்; ஒரே அலறல் சத்தம் போட்டாள். விக்கல் நின்றது. அலறலை நிறுத்தத்தான் மனைவிக்கு அரைமணி நேரமானது. மூன்று வருடங்களாகக் குழந்தையைப் பார்த்துக் கொண்ட தனக்கு ஒரு விக்கலைச் சமாளிக்கத் தெரியாதா என்பது போல இருந்தது பானுவின் பார்வை.
நேற்று இரவும் இப்படித்தான். வீட்டுக்கு வந்து சேர்ந்த நேரம் மகள் தூங்கிக் கொண்டிருந்தாள். மூன்று வருட இடைவெளியின் கனத்துடன் என்னை நோக்கி வந்த மனைவிக்கு மெல்லிய அணைப்பைக் கொடுத்துவிட்டு, மகளை வாரி அணைக்க ஓடினேன். மனைவி எவ்வளவு தடுத்தும் கேட்காமல் முகம் முழுவதும் முத்தம் கொடுத்த என்னைப் பார்த்து இப்படித்தான் அலறினாள்.
”தூக்கத்துல இருந்து எழுப்புனா இப்படித்தான்,” என்றாள். ஆனால் அப்போது மகளின் முகத்தில் மிரட்சி இருந்தது.
என் மகள் பிறந்தது முதல் ஆறு மாதம் வரை நான்தான் கூடவே இருந்தேன். எல்லாப் பொறுப்புகளையும் நானே பார்த்துக் கொண்டேன். என் அம்மாதான் மீண்டும் பிறந்திருக்கிறார் என இன்று வரையிலும் நம்புகிறேன். அவளுக்காகவே வீட்டில் பல வசதிகளைச் செய்தேன். எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் அவள் என் கண் பார்வையிலேயே இருக்க வேண்டுமென்றே வீட்டில் சி.சி.டிவிகளைப் பொருத்தினேன். என்ன வேலையாக இருந்தாலும் ஒவ்வொரு நாளும் மூன்று வேளையாவது அழைத்து அவளைக் கொஞ்சித் தீர்ப்பேன். அவளும் ‘அப்பா அப்பா’ என ஏதேதோ மழலையில் பேசுவாள். அப்படி நேற்று காலை வரை தொலைப்பேசியில் அப்பாவென்று மழலை குரலில் கொஞ்சிய அவள் இன்று என்னைப் பார்த்தாலே அலறுவது வியப்பாகத்தான் இருந்தது.
சாப்பிடப் பிடிக்காமல் சோற்றைப் பிசைந்து கொண்டிருந்தேன். ”இன்னைக்குத் தானே வந்தீங்க… அதான் பயப்படுகிறாள் போல மாமா…” எனக்கு ஆறுதலாய் பேசிய பானுவிடம் நான் ஒன்றும் சொல்லாததால் மகளை ஆறுதல் படுத்துவதில் தீவிரமாகிவிட்டாள்.
திருமணத்திற்கு முன்பும் சரி பின்பும் சரி என் கைப்பேசியின் திரையில் நடிகை திரிஷாவே சிரித்துக் கொண்டிருப்பாள். இதனால் திருமணமான புதிதில் எங்களுக்குள் சில சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன. ”திரிஷாவா அன்னாடைக்கும் சமச்சி போட்டு, துணி தொவைச்சி இந்த வீட்டப் பாத்துகிறா? இனிமே டீ காப்பி வேணுமுன்னா திரிஷா கிட்டயே கேட்டுக்கோங்க” என அணலை அள்ளிக் கொட்டுவாள்.
பானுவின் கோபம் எனக்கு வேடிக்கையாகத்தான் இருக்கும். எப்போதும் சேலையையே உடுத்தியிருந்தாள். நவீன ஆடைகள் எத்தனை வாங்கிக் கொடுத்தும் தவிர்த்துவிட்டாள். எதுவும் வேண்டுமென வாய் திறந்து கேட்கத் தெரியாதவள். என்ன கோபப்பட்டாலும் ‘மாமா’ என மீண்டும் என்னிடம் வந்து அரைமணி நேரத்தில் பேசிவிடுவாள்.
அவளது ஊடல் எதற்கும் சற்றும் அசையாத என் மனம், மகளின் புன்முறுவளில் மாறியது. திரிஷா எவ்வளவு கெஞ்சியும் அவளைக் கைப்பேசியில் இருந்து கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளியப் பிறகு மகளை அங்கே அமர வைத்தேன். என் கைப்பேசி அதற்குப் பின் பல மடங்கு அழகாகவும் அர்த்தமுள்ளதாகவும் மாறியுள்ளதை பின்நாட்களில்தான் உணர்ந்து கொண்டேன்.
எழுந்து கைகளைக் கழுவி வாயைத் துடைத்தேன். தேங்காய்ப்பால் மணம் இன்னும் கையில் ஒட்டிக் கொண்டிருந்தது. அதிகம் பிசைந்ததால் இருக்கலாம். ஆனால், நாவில் எந்தச் சுவையும் ஒட்டியிருக்கவில்லை. என்னை அறியாமல் கண்களில் கண்ணீர் கலங்கி நின்றது. இப்படியான ஒரு சாப்பாட்டிற்கு எத்தனை முறை ஏங்கியிருப்பேன்? வேலை நாட்களில் உணவை வெறுங்கையில் சாப்பிட இயலாது.
‘சீ… பொலப்பா அது… செத்தா கூட ஒரு தடவதான் பூமிக்குள்ள போயிருப்பேன். இவனுங்கிட்ட மாட்டிகிட்டு தினம் தினம் பூமிக்கு அடியில பல கிலோமீட்டர் போயிட்டு போயிட்டு வரேன். இதையெல்லாம் வெளிய சொல்லக்கூடாதுன்னு உத்தரவு வேற. அதையும் மீறி சொன்னாலும் நம்புரத்துக்கு ஆள் இல்லை,’ மனம் புலம்பியது.
தினமும் அதிகாலை 4 மணிக்கே காலை சிற்றுண்டியும் மதியச் சாப்பாடும் ஹாஸ்டல் வாசலுக்கு வந்துவிடும். காலை 5.30 மணிக்கு லாரியில் ஏறும் பொழுதே அந்த இரண்டு பொட்டளத்தோடு ஏறிவிட வேண்டும். லாரியில் இருந்து வெளியே பார்க்க முடியாது. எங்கு வேலை என்பது எங்கள் யாருக்கும் தெரியாது. அதை தெரிந்துகொள்ளும் ஆர்வமும் எழுவதில்லை. காலை சிற்றுண்டி சாப்பிடுவதற்கு ஏதுவாக அரை மணி நேரம் தரைப்பயணம். அதன் பிறகு. கைத்தொலைப்பேசியில், கடைசியாக மணியே பார்த்துட்டு எல்லா உடமையையும் லாக்கரில் வைத்துவிட்டு, ஐந்து ஸ்கேன் இயந்திரங்களைத் தாண்டி நடக்க வேண்டும். ஒவ்வொரு இயந்திரமும் ஒவ்வொரு வண்ணத்தில் என்னைப் படம் பிடித்துக் காட்டும். கடைசியாக நிறுவனம் கொடுக்கின்ற வெள்ளை நிற பாதுகாப்பு உடை, கண்ணாடியாலான ஆக்சிஜன் முகக்கவரியை அணிந்து கொண்டு விண்வெளி வீரனைப் போல பயணத்தை ஆரம்பிக்க வேண்டியதுதான். ரோலர் கோஸ்டர் பயணம் போன்றது அது. ஆனால் பயணம் பூமிக்கு அடியில். நேரக கொஞ்ச நேரம், பக்கவகிடில் கொஞ்ச நேரம், மேல்நோக்கி கொஞ்ச நேரம், இறுதியாக கீழ்நோக்கியும் நகரும்போது வயிறு பிடுங்கிக் கொண்டு வந்து தொண்டையை அடைப்பதை உணர முடியும். அதன் பிறகு கண்களுக்கு வேலை இல்லை. எவ்வளவு முயற்சித்தாலும் எதுவும் தெரியாது.
ஆரம்ப நாட்களில் இந்தப் பயணத்தை எதிர்கொள்ள முடியாமல் தலைவலியால் தவிப்பதும், வாந்தி எடுப்பதும் காதுகள் அடைப்பட்டு அவதிப்படுவதமாக ஆரம்பித்து இப்பொழுது பாதுகாப்பு பெல்டைப் போட்டதும் நிதானமாக மூச்சுவிடும் அளவில் மனமும் உடலும் பழகியிருந்தது. ஆனால் மூன்று வருடம் ஆகியும் மூளைக்குத்தான் எங்கு, என்ன, ஏன் வேலை செய்கிறேன் என்பது புரியவே இல்லை.
தினமும் காலையில் ‘டூல் பொக்ஸ் மீட்டிங்’ என ஒன்றை வைத்து புரியாத மொழியிலே பேசிக்கொள்வார்கள் (என்ன மொழி எனச் சொல்ல முடியாது; தேவையில்லாத தலைவலி எனக்கு). ஏதாவது உயரதிகாரிகள் இருக்கும் நேரத்தில் மட்டும் ஆங்கிலத்தில் பேசுவது ஓரிரு வார்த்தைகள் காதில் விழும். இப்படி விழும் வார்த்தைகளையும் அவர்களது உடைகள், சின்னங்களைக் கூட்டுச்சேர்த்து நான் அந்நாட்டு இராணுவம் சம்பந்தப்பட்ட கட்டடத்தில் இருக்கிறேன் எனவும் அது பூமிக்கு அடியில் 88 மாடிகளைக் கொண்டுள்ளது என்பதும் என் கணிப்பு. அது அந்நாட்டின் புதிய பாதுகாப்புத் திட்டம். பூமிக்கு அடியில் இராணுவத்திற்கென அமையும் இரகசிய நகரம் எனவும் சொல்லலாம். அதை அமைக்கும் மாபெரும் பணியில் சிறிய ஈசல் நான். எங்கள் குழுவில் இருபத்து ஐந்து பேர். எங்களுக்கு ஒரு முதலாளி. அவன்தான் எங்களுக்குச் சம்பளம் கொடுப்பான். அந்தக் காலத்து கங்காணி முறை போல.
பூமிக்கு அடியில் தங்கும் வசதிகளோடு அடுக்குமாடி முறையில் வீடுகளை அமைப்பதை யாராவது சொன்னால்தான் புரிந்துகொள்ள முடியும். எனக்கு ஒவ்வொரு முறையும் பிரமாண்ட கரையான் புற்றில் இருப்பதுபோலத்தான் தோன்றும். அங்கு யாராவது வெள்ளை தொப்பிகாரன் கையிலே பிடித்துக் கொடுத்திடுவார்கள். நான் மஞ்சள் தொப்பி போட்டுக் கொண்டு அவன் பின்னால் போக வேண்டியதுதான். அவன் சொல்கிற வேலை எதுவாக இருந்தாலும்… அது புரிந்தாலும் புரியாவிட்டாலும் செய்ய வேண்டும்.
இப்படித்தான் ஒரு நாள், அவன் “சிறுநீர் கழிக்கப்போகிறேன்” என்றான். என்னவென்று தெரியாமல் நான் அவன் பின்னாலேயே கழிப்பறை வரைக்கும் டூல் பொக்ஸோடு பொய்விட்டேன். அதை சொல்லியே ஒரு சில நாட்கள் என்னை அவர்கள் கிண்டல் செய்ததும் உண்டு. வெள்ளை தொப்பிகாரனுக்கு எந்நேரம் பசிக்கிறதோ அந்நேரம் தான் எனக்கும் சாப்பிடும் நேரம். உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை தூசு, அழுக்கு மற்றும் பிசுபிசுப்புடன் இருக்கும் நான் கவரை ஓர் உதறு உதறி கையில் மாட்டிக் கொண்டு உணவை அள்ளி விழுங்க வேண்டியதுதான். இரசாயணங்களின் துர்நாற்றத்தைத்
தாண்டி இதுவரை எந்த மசாலாவும் நாசியைத் தொட்டது இல்லை. குண்டு விளக்கின் மங்கிய ஒளியில் வெள்ளை சோறே சாம்பலாகத்தான் இருக்கும்.
பல வேளைகளில் சோறு ஆறிப்போய் கல்லைப் போல கெட்டிக்கிடக்கும். பிசைந்து குழைக்க விரல்களுக்குப் பலம் வேண்டும். குழம்பும் கெட்டுப்போகும் தருவாயில்தான் இருக்கும். என் முதலாளிக்கு கெதெரிங் வியாபாரமும் இருப்பதால் அங்கு வெந்தும் வேகாத மிச்சங்கள் அனைத்தும் எங்களுக்கே வந்து சேரும். எங்களின் உணவு பல மணி நேரம் கெடாமல் இருக்க சோற்றில் சுண்ணாம்பையும் கறியில் அஜினமோத்தோவையும் அதிகமாக கலக்கிறார்கள் என்பதும் பின்நாட்களில்தான் தெரிய வந்தது. இதில் விந்தை என்னவென்றால், கெட்ட உணவையே கெடாமல் இருக்குமாறு எங்களுக்குப் பேக் செய்து அனுப்ப; அது தெரிந்தும் நாங்கள் கையும் நாக்கும் படாமல் அதை விழுங்கி வாழ்வது தான்.
வேலை முடிந்து வெளியே வரும்போது ஒவ்வொரு முறையும் வெளிச்சத்தை எதிர்ப்பார்த்து ஏமாந்து போவேன். இருளில் இருந்து மீண்டு வரும்போது அந்தத் துவாரத்தில் கொஞ்சமேனும் ஒளி எனக்காகக் காத்திருந்ததில்லை.
விடுமுறை நாட்களில் நாங்களே ‘செப்ஃ’ஆகக் களமிறங்குவதும் உண்டு. ஆனால் அப்போதும் இந்த வீட்டுச் சாப்பாட்டின் சுவையும் மணமும் கிடைப்பது அரிதுதான்.
அந்த நாட்டுச் சட்டத்தில் என்னவோ தொழிலாளிகளுக்கு 8 மணி நேரம் தான் வேலை. (இங்கு நான் நாட்டின் பேரைச் சொல்லாததற்குக் காரணம் இதை அவர்கள் பார்வைக்கு எப்படியாவது சென்று மீண்டும் வேலைக்குச் செல்லும்போது சேர்த்துக்கொள்ள மாட்டார்களோ என்ற பயம்தான் என்பதை இந்நேரம் அறிந்திருப்பீர்கள்.) ஆம்! அது கெடுபிடியான நாடுதான். 2 பேர் படுக்கும் வசதியிலே அறை, மாதா மாதம் சம்பளம் என எழுத்தளவில் முறையாக சட்டங்களை வைத்திருக்கிறது. சட்டங்களைப் படிக்கவே இனிமையாக இருக்கும். நான் வேலைப் பார்க்கும் முதலாளி அதற்கும் ஒரு படி மேல் சென்று, ‘வெயில் படாத வேலையோடு 3 வேளை உணவையும் இலவசமாகத் தருவோம்’ என்று சொல்லி விளம்பரம் செய்திருந்தார். அதற்கு அர்த்தம் எனக்கு அப்பொழுது புரியவில்லை.
16 மணி நேரம் வேலை, 6 பேர் கொண்ட அறை, 4 மாதச் சம்பளம் வேறு பாக்கி இருந்தது. உலக நாடுகளுக்கெல்லாம் தலைமை வங்கியாகச் செயல்படும் அந்நாட்டிற்கு எங்கள் வங்கி கணக்கில் மட்டும் மாதச் சம்பளம் முறையாக நுழையாததைக் கண்டுபிடிக்க இயலாதது வேடிக்கையாகத்தான் இருந்தது.
‘ஆண்பிள்ளை அழக்கூடாது’ என அம்மா அடிக்கடி சொல்லியிருப்பதால் கலங்கிய கண்களை மறைக்க வாயோடு சேர்த்து முகத்தையும் கழுவினேன். உள்ளிருந்து ஏதோ ஒரு சோர்வு வாட்டியது. உறங்கிக் கொண்டிருந்த மகளின் அருகே போய்ப் படுத்தேன். தரையில் படுத்து வீட்டின் விட்டத்தைப் பார்த்தேன். வியப்பாக இருந்தது.
என் வீடு. வீடு கட்டி முடிந்து இரண்டு வருடம் கழித்து முதல் முறை இவ்வீட்டில் படுத்து ஓய்வெடுக்கிறேன். வெளிநாடு செல்லும் முன் ஏதோ ஒரு நம்பிக்கையில் கடன் வாங்கி வீடு கட்டும் பணியைத் தொடங்கிவிட்டு விமானம் ஏறினேன். ஆறு மாதம் வேலையை இழுத்தடித்து பணம் போதவில்லை என குத்தகையாளர் சொல்ல அங்கிருந்தபடியே யார் யாரிடமோ கேட்டு கடன் வாங்கி ஒருவழியாகக் கட்டி முடித்தேன். மகள் நல்ல வசதியான வீட்டில் வாழ வேண்டும் என்பதுதான் என் ஆசையாக இருந்தது. இன்னும், இவ்வீடு கட்டுவதற்காக வாங்கிய கடனில் பாதி மீதம் உள்ளது எனும் நினைப்பு வந்தபோது வந்த தூக்கமெல்லாம் பறந்தது. மனதுக்குள்ளேயே கணக்குப் போடத் தொடங்கினேன். ஒரு வேளை தினமும் மது வாங்கும் பணத்தையும் சேர்த்துச் சிக்கனம் செய்திருந்தால் இன்னும் 2 வருடத்தில் கடனை அடைத்து நிரந்தரமாக நாடு திரும்பி இருக்கலாம்.
அது முடியுமா? மது இல்லாத வாழ்க்கை. நினைக்கவே வெறுமையாக இருந்தது. நான் செய்யும் வேலை கொடுக்கும் அசதியை மறக்கடிப்பது இந்த மதுதான். சில சமயம் அது கவலைக்கு ஏற்ற மருந்தாகவும் மாறிவிடுவதுண்டு. வேலை முடிந்த பிறகு உறக்கத்திற்குச் செல்லும் முன் கிடைக்கும் அந்த 3 மணி நேர இடைவெளி மிகக் கொடுமையானது. வேலை செய்யும் இடம் தங்குகிற இடம் என எல்லா இடத்திலும் மனிதர்கள் இருந்தாலும்; எப்பொழுதுமே தனியாக இருக்கிற வெறுமையின் உணர்வுதான் சூழ்ந்திருந்தது. எவ்வித பொழுதுபோக்குமின்றி இருக்கும் பொழுதுகள். அந்த நேரத்தில் கைப்பேசி மட்டுமே உற்றத்துணை. ஏதோ ஆறுதல் தேடி குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் அழைக்கும் ஆசை எழும். ஆர்வமான அழைப்புகள் ஒரு நிமிடத்தில் தடம் மாறி பிரச்சைனையிலும் வாய்ச் சண்டையிலும் நகரும். உடல் வலி, மனச்சோர்வு, முதலாளியின் அழுத்தம், சக தொழிலாளியிடம் காட்ட முடியாத கோபம், கைக்குவராத சம்பளம் என என்னுடைய எல்லா இயலாமைக்கும் ஆறுதல் அந்த பீர்தான். அவனையா விட்டுப் பிரியனும்? கஷ்டம்தான்.
”விருந்துக்குப் போகணும் மணியாச்சி, சீக்கிரம் கிளம்புங்க மாமா,” எனும் குரல் என் தூக்கத்தைக் கலைத்தது.”யார் வீட்டு விருந்து, எதற்கான விருந்து?” என வினவிக் கொண்டே அறையை விட்டு வெளியேறினேன். என் குரல் ஒலித்த திசையை நோக்கி என் மகள் அப்பாவென்று ஓடி வந்தாள். ஆனால் என் முகத்தைப் பார்த்ததும் மீண்டும் அதே அலறல். அவளின் இளமஞ்சள் முகம் சிவந்தது. கால்கள் தன் அம்மாவைத் தூக்கச் சொல்லிக் குதித்தன. பானு சட்டென அவளை வாரி அணைத்து ஆறுதல் படுத்தினாள். அவளது கண்கள் என்னை ஆறுதல்படுத்தும் வகையில் கெஞ்சிக் கொண்டிருந்தன.
மூவரும் புதிய ஆடைகளை அணிந்து கொண்டாலும் மகிழ்ச்சி இல்லை. காரில் மௌனம். மகள் தேம்பியபடி இருந்தால். பானு அவளுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டே காரின் பின்பக்கமாக அமர்ந்துகொள்ள நான் டிரைவர் போல தனியாகவே காரை ஓட்டி வந்தேன்.
அப்போது அவள் அம்மா ஊரிலிருந்து அழைக்கவும் எடுத்துப் பேசினாள். ”மாப்புள வந்துட்டாரா…” என்பதை மட்டும் நான்கைந்து முறை கேட்டார். வீடியோ அழைப்பில் மகளைப் பார்த்துக் கொஞ்சினார். என்னிடம் பேச வேண்டும் என்றபோது ”அவரு கார் ஓட்டுறாரும்மா” என்றாள் பானு. ”பரவால கொடு” என்றபோது தயங்கியபடிக் கொடுத்தாள்.
அப்போதுதான் கவனித்தேன். திரையில் என் முகம் மட்டுமே தெரிந்தது. மாமியார் இருக்க வேண்டிய இடத்தில் அசையும் வெளிச்சம் ஒன்று துடித்துக் கொண்டிருந்தது. நான் பானுவை முறைத்துப் பார்த்தேன். அவள் தலையைக் குனிந்து கொண்டாள். மாமியாரிடம் வழக்கமான சொற்கள் சிலவற்றை பேசிவிட்டு வைத்தேன்.
”அப்ப இத்தனை நாளா எம்மூஞ்சி ஸ்கிரின்ல வரலயா?”
”பாப்பா ஒரு தடவ ஃபோன தூக்கி போட்டுச்சி. அப்ப இருந்து…”
”எப்ப நடந்துச்சி” நான் பற்களைக் கடித்து கோபத்தை அடக்கிக் கொண்டேன்.
”ஞாபகம் இல்லங்க மாமா…”
”அப்ப அத்தனை நாள் ஆச்சி…”
அவள் தலையைக் குனிந்து கொண்டாள். பின்னர் நடுங்கிய குரலில் ”நீங்களே வாங்குன கடன கட்டி முடிக்க ராப்பகலா வேல செஞ்சி காச அனுப்புறீங்க. இதுல இந்த செலவ வேற சொல்லனுமான்னு இருந்துட்டேன் மாமா” என்றாள்.
”என்னைய பாக்கணுமுன்னு தோணலயா ஒனக்கு…”
”ஒங்க மொகந்தான் என் மனசுக்குள்ளயே இருக்கே மாமா” என்றாள். வேறெதற்கு இல்லாவிட்டாலும் இந்தச் சினிமா வசனத்தைப் பேசியதற்காகவாவது அவள் மண்டையில் நங்கென கொட்ட வேண்டுமென தோன்றியது. அடக்கிக் கொண்டேன்.
அவள் தோழியின் நிச்சயத்தார்த்த விழா அது. தோழிகளை உருவாக்கிக்கொள்வதில் பானு கெட்டிக்காரியாக இருந்தாள். மூன்று வருடத்தில் பலருக்கும் அவளை நன்கு தெரிந்திருந்தது. விழாவில் எங்களுக்குக்கான வரவேற்பும் மரியாதையும் அதிகமாகத்தான் இருந்தது. மனதிற்குள் குமைந்து கொண்டிருந்த கோபத்தால் யாரிடமும் சிரித்துப் பேச முடியவில்லை. “சைட் இஞ்ஜினியராம், நம்ம ஊரு டாக்டர விட சம்பளம் கூட வரும்” என கூட்டத்தில் யாரோ பேசியது காதில் விழுந்தது. ஒரு ஆள் ”அந்த நாட்டுல குப்பைய போட்டா போலிஸ் பிடிச்சிடுமாமே, குறட்டை விட்டா டைவஸ் வரைக்கும் போகுமாமே” என எவனோ யூடியுப்பில் பரப்பின செய்திகளை உளறிக் கொண்டிருந்தார். நானும் தலையாட்டிக் கொண்டிருந்தேன்.
உண்மையில் நான் வேலை செய்யும் நாட்டில் என் உலகம் என்பது வேலை செய்யும் இடம் மட்டும்தான். அடுத்து நான் தங்கும் ஹாஸ்டல். அதிகம் போனால் அங்குள்ள நகரம். வேறு எதையும் நான் அறிந்ததோ அனுபவித்ததோ இல்லை.
இதற்கு மத்தியில் மாப்பிள்ளையின் தந்தை என்னைத் தனியே அழைத்து எப்படியாவது தன் மகனுக்கும் அந்நாட்டிலேயே வேலை வாங்கித்தருமாறு கட்டாயப்படுத்திக் கொண்டிருந்தார். நான் ஏதேதோ காரணங்களைக் கூறி தட்டிக்கழித்தேன். ஆனால், அவர் விடாப்பிடியாக இருந்தார். இறுதியில் வேறு வழியின்று, “அதெல்லாம் ஒரு அடிமைத்தனமான வேல. சிரிச்சிப் பேசக்கூட ஆள் இருக்காது. இப்ப எல்லாம் சந்தோசமா இருக்கிங்களே… அது அங்க கெடைக்காது” என்றேன் கொஞ்சம் அழுத்தமாக. அவர் ஒன்றும் சொல்லாமல் போய்விட்டார், ஆனால் யாரோ ஒரு முதியவரிடம் “நம்ம இனமே இப்படித்தான், உதவி செய்ய மாட்டாங்க… அவங்க மட்டும் தான் நல்லா இருக்கணும்னு எண்ணம்!” என ஏதேதோ வாய்க்கு வந்ததைப் பேசிக் கொண்டிருந்தது காதில் கேட்டது.
விழா சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. என் மகள் அங்கும் இங்கும் ஓடி விளையாடிக் கொண்டிருந்தாள். அவளின் குறும்புகளைப் பார்த்து விழாவிற்கு வந்த பலர் இரசித்துக் கொண்டிருந்தனர். நான் தூரத்தில் இருந்தபடியே அவள் உற்சாகத்தை ரசித்துக் கொண்டிருந்தேன்.
வந்திருந்த பிரமுகர்களில் சிலரை மேடையில் வாழ்த்துரையாற்ற அழைத்தனர். என் கவனம் எதிலும் செல்லவில்லை. நான் மகள் தத்தி நடக்கும் அழகிலிருந்து கண்களை அகற்றாமல் இருந்தேன். திடீரென என் பெயர் அழைக்கப்படவும் திடுக்கிட்டு பானுவைத் தேடினேன். அவள் முகத்தில் பெருமை பொங்க மேடையின் ஓரம் நின்று கொண்டிருந்தாள்.
‘நான் என்ன பேசுவது?’ என பார்வையாலே முறைத்தேன். அவள் முகத்தில் பெருமை குறையவில்லை. வேறு வழியில்லாமல் மேடைக்கு ஏறி மைக்கைக் கையில் எடுத்தேன். அப்போதும் மகளையே கண்கள் தேடின. யாரோ கொடுத்த பலூனை எடுத்து விளையாடிக் கொண்டிருந்தாள்.
நான் மைக்கில் ”அனைவருக்கும் வணக்கம்” என்றபோது சட்டென அதிர்ச்சியாகி திரும்பிப் பார்த்தாள். அந்தப் பார்வை எனக்கே ஆச்சரியமாக இருந்தது. நான் தொடர்ந்து பேசியபோது கையில் வைத்திருந்த பலூனை தூக்கி தூரமாகப் போட்டவள் மேடைக்கு அருகில் வந்து என்னை வெறித்துப் பார்த்தாள். நான் ஒரு நிமிடம் பேச்சை நிறுத்தினேன்.
அவள் என்னைப் பார்த்து ”அப்பா” என்றபோது அப்படியே அங்கேயே அமர்ந்து அழத் தொடங்கினேன். இருளில் இருந்து மீளும்போது எதிர்படும் மெல்லிய ஒளி ஒன்றால் அந்நிமிடம் அசைவு மாறாமல் அப்படியே அமர்ந்திருந்தேன்.
மெல்லுணர்ச்சியைத் தூண்டும் நல்ல கதை.