
அறிவியக்கத்தின் ஆணிவேராக இருப்பது மொழிபெயர்ப்பு. அறிவும் கலையும் இலக்கியமும் உலகம் முழுக்க சென்று சேர மொழிபெயர்ப்புகள் துணைபுரிகின்றன. நவீனத் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் மொழிபெயர்ப்பின் பங்கு பெரியது. ரஷ்ய இலக்கியம், வங்க இலக்கியம், தென் அமெரிக்க இலக்கியம், ஐரோப்பிய இலக்கியம் என ஒவ்வொரு காலகட்டத்திலும் உலக இலக்கியங்கள் தமிழ் இலக்கியத்தைச் செறிவாக்கியுள்ளன.
மலேசியாவின் தேசிய மொழி மலாயாக இருந்தபோதும் ஆங்கிலமும் சிறுபான்மையினர் பேசும் தமிழும் சீனமும் முக்கியத்துவம் பெற்ற மொழிகளாகவே உள்ளன. ஆகவே உண்மையில் மலேசியாவில் விரிவான மொழிபெயர்ப்புப் பணிகள் நடை பெற்றிருக்க வாய்ப்புகள் உண்டு. ஆனால் மலேசியாவில் மொழிபெயர்ப்புத் துறை என்பது தேசிய மொழி வளர்ச்சிக்கான ஒரு செயல்பாடாக மட்டுமே இருக்கின்றது.
மலேசிய மொழிபெயர்ப்புக் கழகம் (Institut Terjemahan & Buku Malaysia (ITBM) பிற உலக மொழி நூல்களை மலாய் மொழிக்கு மாற்ற உதவுகிறது. அதேபோல் மலாய் மொழி நூல்களை உலக மொழிகளுக்குக் கொண்டு செல்லவும் முயற்சிகளை எடுக்கின்றது. ஆனால் உள்நாட்டில் பல்லின மக்களின் தாய்மொழி நூல்களை மொழிபெயர்க்கும் முயற்சிகள் மிகக் குறைவாகவே நடைபெறுகின்றன. ஒப்பிட்டளவில் மலேசிய சீன மொழி படைப்புகளைவிடத் தமிழ்மொழி நூல்கள் மொழிபெயர்க்கப்படுவது மிகக் குறைவு. உதாரணமாக, டேவான் பாஹாசா டான் புஸ்தாக்கா (Dewan Bahasa dan Pustaka (DBP) மலேசிய சீன எழுத்தாளர்களின் இலக்கியப் படைப்புகளை மாஹுவா இலக்கியம் ( Sastera Mahua) என்ற அடையாளத்துடன் தொடர்ந்து மலாய் மொழியாக்கம் செய்து வருகின்றது. இதுவரை மூன்று சிறுகதை தொகுப்புகள் வெளிவந்துள்ளன. ஆனால் தமிழ்மொழி படைப்புகளில் இவ்வாறான முயற்சிகள் நடைபெறுவதில்லை. டேவான் சஸ்தெரா, டேவான் பஹாசா போன்ற இதழ்களில் சில படைப்புகள் வந்துள்ளன. இவை நிச்சயம் போதாது. நல்ல இலக்கிய வாசகர்களும் அறிவுத்தேடல் உள்ளவர்களும் உலக இலக்கியங்களை அறியும் அதே நேரம் தங்களோடு வாழும் மக்களைப் பற்றியும் அறிந்துகொள்ளவே விரும்புவர்.
இச்சூழலில் மலேசியாவில் சீன மொழிப் படைப்புகளையும் தமிழ்மொழிப் படைப்புகளையும் தற்போது சிறு இலக்கியக் குழுக்கள் மொழியாக்கம் செய்யும் முயற்சிகளை முன்னெடுக்கின்றன. அந்த முயற்சிகளுக்கு இலக்கிய வாசகரின் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கின்றது. இந்த நூலும் அவ்வகையான ஒரு முயற்சிதான்.
மலேசியத் தமிழ் இலக்கியச் சூழலில் இதற்கு முன்னர் சிலர் இதுபோன்ற மொழிபெயர்ப்பு முயற்சிகளில் இறங்கியுள்ளனர். மா. இராமையா, சி. வடிவேல் போன்றவர்கள் தங்கள் சிறுகதைகளைச் சுய முயற்சியால் நூலாகத் தொகுத்துள்ளனர். ஆனால் அந்நூல்கள் தமிழ்ச் சூழலுக்குள் முடங்கிவிட்டன. தனது புனைவுகளை மலாயில் மொழியாக்கம் செய்ததன் வழியாக மலாய் வாசகர்கள் மத்தியில் கவனம் பெற்ற எழுத்தாளராக ம. நவீனைக் குறிப்பிடலாம். அதுபோல பிற மொழிப்படைப்புகளை மொழியாக்கம் செய்வதில் பா. அ. சிவம், விஜயலட்சுமி, சீ. முத்துசாமி ஆகியோர் பங்களித்துள்ளனர். பா.அ.சிவம் மலாய்க் கவிதைகளையும் விஜயலட்சுமி கே.எஸ். மணியம் சிறுகதைகளையும் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்தார். சீ. முத்துசாமி கௌஜின் ஜியாங்கின் சிறுகதைகளை மொழிபெயர்த்தார். மலாயா பல்கலைக்கழகத்தில் ஈராண்டுகள் வருகைதரு பேராசிரியராகப் பணியாற்றிய எம்.ஏ.நுஃமான் அவர்கள் மலாய் மொழிக் கவிதைகளைத் தமிழில் மொழிபெயர்த்து நூலாகவும் பதிப்பித்தார். இதுதவிர வல்லினம் பதிப்பகம் வழியாகவே மலேசியாவின் குறிப்பிடத்தக்க சிறுகதைகள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு ‘Children of Darkness’ எனும் தலைப்பில் நூலுருக் கண்டுள்ளது. இந்த முயற்சிகளுக்கு மத்தியில் எழுத்தாளர் ரெ. கார்த்திகேசு அவர்கள் ‘கடலுக்கு அப்பால்’ என்ற ப. சிங்காரத்தின் நாவலை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தது அவர் தன் வாழ்நாளில் இலக்கியத்திற்கு ஆற்றிய பெரும்பணி.

மலேசிய தமிழ் எழுத்தாளர்களிடையே உள்ள எதிர்பார்ப்பு தங்கள் படைப்புகள் பிற மொழிகளில் பெயர்க்கப்பட வேண்டும் என்பது. அந்த எதிர்பார்ப்பில் தவறு இல்லை. ஆனால் மொழிபெயர்ப்பு என்பது ஒருவகை அறிவுப் பரிமாற்றம். ஆகவே அது இருவழிகளிலும் நிகழ வேண்டும். நம் படைப்புகள் பிற மொழிகளில் மொழி பெயர்க்கப்படுவது போலவே பிற மொழியின் சிறந்த இலக்கியங்கள் தமிழில் மொழியாக்கம் காண வேண்டும். பிற நாட்டு இலக்கியங்களுடன் தமிழுக்கு இருக்கும் அறிமுகம் மலேசியாவில் எழுதப்படும் மலாய், சீன இலக்கியங்களுடன் நிகழவில்லை. காரணம் அவை தமிழில் மொழியாக்கம் கண்டதில்லை. அந்த இடைவெளியின் தூரத்தைக் குறைக்கவே இந்த முயற்சி. ஒரு மலாய் எழுத்தாளரின் பத்து கதைகளைக் கொண்ட ஒரு தொகுப்பு நூல் தமிழில் வெளிவருவது இதுவே முதல் முறை. உலக தமிழ் வாசகர்களுக்கு இந்நூல் சிறந்த வாசிப்பனுபவத்தைத் தரும்.
எழுத்தாளர் எஸ்.எம். ஷாகீர், விஷ்ணுபுரம் விழா (2023) விருந்தினராக அழைக்கப்பட்ட பிறகு தமிழ் இலக்கியச் சூழலின் மீது தனிக் கவனம் செலுத்தத் தொடங்கினார். மலேசிய சீன மொழிக் கதைகளை அவர் மலாய் மொழியாக்கம் செய்து நூலாக தொகுக்க பெரும் முயற்சி எடுத்து வெற்றி பெற்றுள்ளார். ஆகவே மொழியாக்கத்தின் அவசியத்தை அவர் அறிந்துள்ளார். தன் கதைகள் உலகத் தமிழ் வாசகர்களிடம் செல்ல வேண்டும் என்ற அவரின் ஆவலை அவர் ம. நவீனிடம் முன்வைத்து அதற்கான ஒத்துழைப்பையும் வழங்கினார். காப்புரிமை போன்ற விவகாரங்களில் தளர்வு செய்ய முன்வந்தார். அவரின் முழு ஒத்துழைப்பில் இந்நூல் வெளிவருகிறது. இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள கதைகள் 2000ஆம் ஆண்டுகளுக்குப் பின் எழுதப்பட்டவை. ஆகவே இவற்றை சமகால மலாய் சிறுகதைகளின் எடுத்துக்காட்டுகளாகவும் கொள்ளலாம். இந்நூலில் எட்டு கதைகளை நான் மொழிபெயர்த்துள்ளேன். இரண்டு கதைகளை அரவின் குமாரும் சாலினியும் மொழி பெயர்த்துள்ளனர்.
இந்நூல் வல்லினம், யாவரும் கூட்டுப்பதிப்பில் வெளிவருவது மகிழ்ச்சி. இவ்விரு பதிப்பகங்கள் வழி இந்நூல் பரந்த வாசகரைச் சென்று சேரும் என்று நம்புகிறேன்.