மலாய் மொழியில் தமிழின் பத்து சிறுகதைகள்

மலேசியத் தமிழ்ச் சிறுகதை வரலாற்றை 1930 முதல் 1978 வரை ந. பாலபாஸ்கரன் ஆறு காலக்கட்டமாகப் பிரித்திருந்துள்ளார். மலேசிய சிங்கப்பூர் ஆய்வுலகின் முதன்மையான ஆளுமையாகக் கருதப்படும் அவரது வரையறையே இன்றும் இலக்கிய ஆய்வுகளில் பிரதானமானது.

ந. பாலபாஸ்கரன் கருத்துப்படி 1930களில் மலேசிய சிறுகதை இலக்கிய வரலாறு தொடங்குகிறது. 1941 வரை மலேசியாவில் வெளிவந்த பல தமிழ் நாளிதழ்களில் சிறுகதைகள் பிரசுரமானாலும் பொருள் ஈட்ட வந்த தமிழ்நாட்டு தமிழர்கள் மற்றும் இலங்கை நாட்டுத் தமிழர்களால் எழுதப்பட்ட அந்தப் புனைவுகள் அவரவர் நாட்டின் சூழலையே சார்ந்திருந்தது. எனவே அவற்றை முழுமையான மலேசியச் சிறுகதைகளாக வரையறுப்பது பொருந்தாது என்பது ந. பாலபாஸ்கரனின் கருத்து, அதன் பின்னர் வந்த நான்கு ஆண்டுகளை (1942–1945) ஜப்பானியர் காலம் என வரையறை செய்கிறார் அவர். அவரை ஒற்றி வந்த பிற ஆய்வாளர்களும் அக்காலக்கட்டத்தில் ஜப்பானிய ஆட்சி இருந்ததால் புனைவு முயற்சிகள் என எதுவும் பெரிதாக நடக்கவில்லை என்றே தெரிவிக்கின்றனர்.

1946இல்தான் மலேசிய நிலத்தையும் இங்குள்ள வாழ்வியல் சிக்கல்களையும் இலக்கியத்தின் வழி பதிவு செய்ய வேண்டும் என்ற எண்ணம் மலேசியத் தமிழ் எழுத்தாளர்களிடையே எழுந்தது. மலாயாதான் தங்கள் நாடு. எனவே இந்நாட்டில் எதிர்க்கொள்ளும் அனுபவங்களைப் புனைவுகளில் பதிவு செய்ய வேண்டும் எனும் எண்ணம் 50களில் தீவிரமானது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு மலேசிய அரசாங்க கொள்கைகளைச் சார்ந்தும் சுதந்திர மலேசியாவில் இந்திய மக்களின் வாழ்க்கை நிலை குறித்தும் சிறுகதைகள் எழுதப்பட்டன. ஆனால் அவை கலை வடிவம் பெறவில்லை எனும் விமர்சனமும் அதே காலக்கட்டத்தில் மலேசிய நாளிதழில் பணியாற்ற வந்த கு. அழகிரிசாமி என்ற தமிழகத்தின் மிக முக்கியமான எழுத்தாளர் போன்றவர்களால் வைக்கப்பட்டது.  இந்த நிலை 70களில் மாற்றம் கண்டு மலேசியச் சிறுகதை இலக்கியம் மெல்ல மெல்ல தனக்கான கலை வடிவத்தை ஈட்டிக் கொண்டது.

70களில் மலேசிய எழுத்தாளர்கள் தரமான தமிழகப் புனைவுகளை விரிவாகவே வாசிக்கத் தொடங்கியிருந்தனர். தமிழக எழுத்தாளர்களுடனான நேரடி உரையாடல்களும் உருவானது. சில முன்னணி எழுத்தாளர்கள் மலேசியாவுக்கு வரவழைக்கப்பட்டு சிறுகதைகள் குறித்த தீவிரமான உரையாடல்களைத் தொடங்கினர். மலேசியாவில் எழுதப்பட்ட சிறுகதைகள் சில, தமிழகத்தின் முதன்மையான இதழ்களில் இடம்பிடித்தன; பரிசுகளும் பெற்றன. 

மலேசியத் தமிழ்ச் சிறுகதைகள் ந. பாலபாஸ்கரனின் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட காலம் 1978 வரை மட்டுமே என்பதால், 1980க்குப் பின்னர் மலேசியச் சிறுகதைகளின் போக்கை எனது முதுகலை ஆய்வுக்காக நான் மேலும் மூன்று காலக்கட்டமாக வகுத்தேன்.

என் ஆய்வின் அடிப்படையில் 1998க்குப் பின்னரே மலேசியச் சிறுகதை இலக்கியத்தில் புதிய பாய்ச்சல் நிகழ்ந்தது. 2006இல் இலக்கிய இதழ்களும் அதைத் தொடர்ந்து இணைய இதழ்களும் தோன்றியதால் புதிய முயற்சிகளும் தீவிரமான சிறுகதைகளும் எழுதப்பட்டன. இன்று மலேசியத் தமிழ்ச் சிறுகதைகள் மலேசியா எனும் தேச எல்லையைக் கடந்த தமிழ் இலக்கியம் வாசிக்கப்படும் தேசங்கள் தோறும் தனித்த கவனத்தை அடைந்துள்ளன.

***

கிட்டத்தட்ட 95 ஆண்டு காலமாக மலேசியாவில் வேரூன்றியுள்ள தமிழ்ச் சிறுகதைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பத்து சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இவை மலேசியத் தமிழ்ச் சிறுகதைகளில் ஆகச் சிறந்தவை எனும் பொருளில் தொகுக்கப்படவில்லை; ஆனால் இவை தனது உள்ளடக்கத்தால் தனித்துவமானவை. மேலும், பதிப்புரிமை, எழுத்தாளரின் அனுமதி போன்ற நிபுணத்துவமான அணுகுமுறைகளுக்குப் பின்னரே இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள சிறுகதைகள் தேர்வு செய்யப்பட்டன.

இந்நாட்டில் பல்லின மொழி பேசும் மக்கள் வாழ்கின்றனர். மலாய் தேசிய மொழியாக இருக்கும் பட்சத்தில் பல்வேறு இனத்திற்கிடையிலான உரையாடல்கள் அம்மொழி வழியாகவே சாத்தியமாகின்றன. இலக்கியம் என்பதும் ஒருவகை உரையாடல்தான். ஆனால் அவ்வுரையாடல் ஆழ்மனதிலிருந்து எழுவது. ஒருவகையில் தாய்மொழிகளில் எழுதப்படும் படைப்புகள், ஒரு தரப்பு ஞாயத்தை பொது சமூகத்தின் முன் ஆழமாக முன்வைப்பவை என்று பொருள் கொள்ளலாம். அவை தேசிய அளவில் கவனிக்கப்படும்போதுதான் பல்லின மக்களின் சமூக புரிதல் விரிவடையும். இலக்கியத்தின் முக்கியப் பணிகளில் அதுவும் ஒன்று.  ஆனால் இந்நாட்டில் பல காலமாக அவ்வுரையாடல் அந்தந்த மொழிகளுக்குள் மட்டுமே நடப்பது துரதஷ்டமானது. இம்மொழிபெயர்ப்பு முயற்சி அந்த இடைவெளியைக் குறைக்கவே தொடங்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பும், முன்னோடிகள் சிலரால் தமிழ்ச் சிறுகதைகள் சில மலாயில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. என்றாலும் அவை தனி மனித முயற்சிகளாக இருந்துள்ளன. அதோடு மலேசியத் தமிழ்ச் சிறுகதைகளின் போக்கை வெளிப்படுத்தும் தொகுப்பு நூலாக அவை வெளியிடப்படவில்லை.

இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள சிறுகதைகள், மலேசியத் தமிழ்ச் சமூகம் இந்நாட்டில் எதிர்க்கொண்ட பல்வேறு வாழ்வியல் சிக்கல்களை உள்ளடக்கமாகக் கொண்டவை. தோட்டங்களில் தொழிலாளர்களாகவும் நகரங்களில் உதிர் மனிதர்களாகவும் நிலத்திலிருந்து இடம்பெயர்ந்த வேரற்றவர்களாகவும் குடும்ப நெருக்கடிகளில் நசுக்கப்பட்டவர்களாகவும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள மனிதர்களையும் அவர்களின் உளவியலையும் இந்தியர்கள் அல்லாத பெரும்பாலோர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இத்தொகுப்பு அவர்களை அறியத்தரும் ஒரு முயற்சி. இதன் வழியாகவே இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வும் மெய்யான நெருக்கமும் ஒவ்வொரு இனங்களுக்கிடையே துளிர்விடுகிறது.

இனங்களுக்கிடையிலான ஒற்றுமை மொழியை அறிவதால் மட்டுமே உருவாவதில்லை. இலக்கியம் வெளிப்படுத்தும் ஆழுணர்ச்சிகள் வழியாகவே அது சாத்தியமாகிறது. அந்த உணர்ச்சியை இன்னொரு மொழிக்குக் கடத்துவதுதான் அதில் உள்ள பிரதானமான சவால். இந்தச் சாவலைக் கடக்க நண்பர் சரவணனின் பங்களிப்பு இதில் பிரதானமானது.

***

இந்த முயற்சியின் நோக்கத்தை அறிந்தே நண்பர் சரவணன் தனது மலாய் மொழி ஆற்றலை முழுமையாக பயன்படுத்தியுள்ளார். சரவணன் 2020இல் முதன்முறையாக மொழிபெயர்ப்பு முயற்சியைத் தொடங்கினார். எனது சிறுகதைகளை மொழிப்பெயர்ப்பதில்தான் அவரது முதல் முயற்சி தொடங்கியது. நட்பார்ந்த ரீதியில் தொடங்கிய முயற்சி அது. இன்று வரையும் நட்புணர்வுதான் ஆக்ககரமான இந்த முன்னெடுப்புகளுக்கு ஆணிவேராக உள்ளது.

சிறுகதைகளின் சாரத்தையும் அதன் உள்ளார்ந்த தன்மையையும் அறிந்து மொழியாக்கத்தில் மெனக்கெடும் அவரது உழைப்பின் பலனாக இத்தொகுப்பு முழுமை பெற்றது. அவ்வகையில் மலேசிய இந்தியர்கள் குறித்த ஆழமான புரிதலை மலேசிய இலக்கிய வாசகர்களிடையே இத்தொகுப்பு உருவாக்கும் என நம்புகிறேன். 

அதுபோல எஸ்.எம். ஷாகீர் அவர்களின் நட்பு இத்தொகுப்பில் விளைச்சலுக்கு உரமூட்டியுள்ளது. நூசா செண்ட்ரல் வழியாக வெளிவரும் இத்தொகுப்பு மலாய் வாசகர்களிடம் பரவலான கவனத்தைச் சென்றடையும் என்பதில் சந்தேகம் இல்லை. அதோடு இத்தொகுப்பை மலாய் வாசகர்கள் மத்தியில் பரவலாக எடுத்தும் செல்லும் முயற்சியில் PEN அமைப்பும் இணைந்துள்ளது கூடுதல் உற்சாகத்தைக் கொடுக்கிறது.

மலேசிய இலக்கிய வரலாற்றில் தமிழ்ச் சிறுகதைகளின் தொகுப்பு மலாய் பதிப்பகம் வழியாக வெளிவருவது இதுவே முதன்முறை. இதில் இடம்பெற்ற சிறுகதைகளைத் தேர்ந்தெடுக்க என்னுடன் இணைந்து பணியாற்றிய அ.பாண்டியனுக்கு நன்றிகள் பல. இந்த முயற்சியைத் தொடக்கமாகக் கொண்டு இன்னும் பிற மொழியாக்கங்கள் மலேசியாவில் பரவலாக வேண்டும். அதன் வழியாகவே இந்நாட்டின் இன ஒற்றுமை பாவனையின்றி உயிர்க்கும்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...