
மலேசிய உருவாக்கத்திலும் பண்பாட்டுப் பரிணாமத்திலும் சீன சமூகத்தின் பங்கு மிக ஆழமானது. சீனர்கள் வரலாற்றுக் காலம் தொட்டே மலாய் தீவுகளுடன் வியாபாரத் தொடர்புகளைக் கொண்டிருந்தனர். மலாய் சுல்தான்களும் சீனாவுடன் நட்புறவு கொண்டே அரசு செய்தனர். சுல்தான் மன்சூர் ஷா ஆட்சிக் காலத்தில் அவர் ஹங் லி போ எனும் சீன இளவரசியை மணந்ததுடன் இளவரசியுடன் மலாக்காவில் குடியேறிய ஐந்நூறு சீனர்களை புக்கிட் சீனா எனும் இடத்தில் குடியமர்த்தினார் என்ற தகவல்களைப் பண்டைய குறிப்புகள் காட்டுகின்றன.
ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் பிற்காலச் சீனர்கள் அதிகமாக மலாயாவில் குடியேறினர். தென்னிந்திய மக்கள், ஆங்கிலேயர்களால் மலாயாவுக்குக் கொண்டுவரப்பட்ட அதே காலகட்டத்தில்தான் நவீனக் காலச் சீனர்களின் குடியேற்றமும் நிகழ்ந்தது. அவர்களில் பெரும்பகுதியினர் ஈய லம்பங்களில் வேலை செய்யவும், புதிதாகத் தோன்றிய நகர்ப்புறங்களில் தொழில் செய்யவும் மலாயாவுக்கு வந்தனர். ஈய வயல்களைச் சீனர்களே குத்தகைக்கு எடுத்து நிர்வாகம் செய்தனர். அதோடு நகர்ப்புறங்களில் பலர் பல்வேறு சொந்தத் தொழில்களில் ஈடுபட்டு பொருள் ஈட்டினர். ஆங்கில முதலாளிகளுக்கு இணையான பொருளாதார பலத்துடன் பல சீன முதலாளிகள் சிங்கப்பூர், கோலாலம்பூர் பினாங்கு போன்ற நகரங்களில் தொழில் முனைவோராக வாழ்ந்தனர். பல்வேறு புதிய தொழில்களையும் நகர்ப்புற வளர்ச்சித் திட்டங்களையும் அவர்களே முன்னோடிகளாக இருந்து நடத்தினர். இன்றும் மலேசியப் பொருளாதாரத்தின் முக்கிய தூண்களாகச் சீனர்களே இருக்கின்றனர்.
இரண்டாம் உலகப்போர்க் காலத்தில் மலேசியச் சீனர்கள் தங்கள் அரசியல் பாதையை இந்நாட்டில் உருவாக்கத் தொடங்கினர். ஜப்பானிய எதிர்ப்பு இயக்கத்தை வழிநடத்தியதோடு சீன நாட்டு அரசியலில் உருவான கம்யூனிச எழுச்சியைப் பின்பற்றி இங்கும் கம்யூனிசக் கட்சியை உருவாக்கிச் செயல்பட்டனர். ஜப்பானியர் காலத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட சமூகமாகச் சீன சமூகத்தையே குறிப்பிட முடியும். சீனாவுக்கும் ஜப்பானுக்கும் இருந்த முன் விரோதத்திற்குப் பலி தீர்க்கும் களமாக இங்குள்ள சீனர்களும் பெண்களும் ஜப்பானிய ராணுவத்தால் வேட்டையாடப்பட்டனர். சயாம் – பர்மா மரண ரயில் கட்டுமானத்திற்குக் கட்டாயத் தொழிலாளிகளாகப் பல்லாயிரம் பேர் கொண்டு செல்லப்பட்டார்கள்.
இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் மலாயா கம்யூனிஸ் இயக்கத்தினர் ஆங்கில ஆட்சியாளர்களின் பகைவரானார்கள். பிகெஎம் எனப்படும் மலாயா கம்யூனிஸ்ட் கட்சி ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஆயுத போராட்டத்தை முன்னெடுத்தது. ஆயுதப் புரட்சியின் வழி மலாயாவை ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கும் புதிய திட்டத்தில் அவர்கள் இறங்கினார்கள். பெரும்பான்மை சீன இளைஞர்களைக் கொண்டு இயங்கிய மலாயா கம்யூனிஸ்ட் இயக்கம் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்குப் பெரும் இடையூறுகளை உருவாக்கியது. இந்நாட்டின் ரப்பர் வளத்திலும் ஈய வளத்திலும் பெரும் முதலீடுகளைச் செய்திருந்த ஆங்கிலேய முதலாளிகள் சுதந்திரமாகச் செயல்பட முடியாதபடி கம்யூனிஸ் இயக்கத்தினரும் அவர்களின் தொடர்பில் இருந்த தொழிற்சங்கத்தினரும் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். தோட்டங்களிலும் ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டிலிருந்த ஈய லம்பங்களிலும் புகுந்து பொருட்சேதங்களை ஏற்படுத்தியதோடு உயிர்ச்சேதங்களும் நிகழ்ந்தன. பிகெஎம்-மின் குறிப்பிடத்தக்க ஆயுதத் தாக்குதலாக அமைந்தது மலேசிய ஆளுநராக இருந்த சர் ஹென்றி கனியைச் சுட்டுக் கொன்றதாகும். அத்துர்சம்பவத்திற்குப் பிறகு மலேசிய கம்யூனிஸக் கட்சியை முற்றாகத் துடைத்தொழிக்கும் தீவிரப் பணியில் ஆங்கில அரசு ஈடுபட்டது. அதன் முதல்கட்டமாக, நகரின் உட்புறங்களிலும் காட்டுப் பகுதிகளிலும் வசித்த சீனர்கள் திரட்டப்பட்டு ‘புதுக்கிராமங்களில்’ மறு குடியமர்வு செய்யப்பட்டனர். சீனர்களின் ஆதரவைப் பெற்ற கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்பாடுகளால் சீண்டப்பட்ட மலாய் சமூகத்தை ஆங்கில அரசு மிகச் சரியாகப் பயன்படுத்தி கம்யூனிஸ்ட் ஒழிப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியது. இது மிக விரைவில் நாட்டில் இனப்பிரிவினைவாதமாக வேரூன்றி வளர்ந்தது. பாமர மக்களின் பார்வையில் சீனர்களை மலாய் மக்களின் எதிரிகளாகக் கட்டமைக்க மலாயா கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்பாடுகளை ஆங்கிலேயர் தந்திரமாகப் பயன்படுத்திக் கொண்டனர்.
நாடு சுதந்திரம் அடையும் காலத்தில் நாட்டின் நிர்வாகத்திற்குப் பொறுப்பேற்ற தரப்பினரின் அரசியல் வியூகத்திலும் கம்யூனிஸ்ட்டுகளைக் களை எடுக்கும் திட்டங்கள் தொடர்ந்து நிலைபெறுவதை ஆங்கில ஆட்சியாளர்கள் உறுதிசெய்து கொண்டனர். ஆயினும் தேசியக் கட்டமைப்புக்கு ஒத்துழைப்பு வழங்கும் சீன மற்றும் இந்தியர் அரசியல் கட்சிகளின் ஆதரவால் நாடு சுதந்திரம் பெற்றது. மலேசியச் சீனர்கள் தேசிய அரசியலில் இடம் பெற்றுச் சூழலை மாற்றியமைத்தனர். தேசிய இன ஒருமைப்பாடு இன நல்லிணக்கம் போன்றவற்றில் சீன சமூகத்தின் பங்கு தொடர்ந்தது.
இந்நிலையில் 1969-ஆம் ஆண்டு மே இனக்கலவரத்தினால் சீன சமூகம் மிகப்பெரிய இக்கட்டுகளைச் சந்திக்க நேர்ந்தது. நீறு பூத்த நெருப்பாக இருந்த இனவாதம் அக்கலவரத்தால் பூதாகரமாக வெடித்து உயிர்ப்பலிகள் நிகழ்ந்தன. மலாய்க்காரர்களின் உரிமைகளைச் சீனர்கள் பறிக்க முயல்வதாக எழுந்த குற்றச்சாட்டுகள் மேலும் தீவிரமடைந்தன. ஆயினும் தேசியவாத பல்லின அரசியல் தலைவர்களின் முயற்சிகளால் இன நல்லிணக்கம் காக்கப்பட்டது.
சீனர்கள், புத்த மதம், தாவோ மதம், கிருஸ்தவம், இஸ்லாமியர், மத நம்பிக்கையற்றவர்கள் எனப் பல்வேறு ஆன்மீகத் தரப்பினராகப் பிரிந்துள்ளனர். அதே போல் பொதுவாகச் சீனர்கள் என்று குறிப்பிடப்பட்டாலும் அவர்களில் ஹாக்கா, கன்டனீஸ், தியோச்சு, ஹொக்கியன் எனப் பல்வேறு இனப்பிரிவுகளும் அவர்களின் மொழி வழக்குகளும் உள்ளன. ஆயினும் அனைவரும் சீனர்கள் என்ற அடிப்படையில் மண்டரின் மொழியை அதிகாரத்துவத் தொடர்பு மொழியாகப் பயன்படுத்துகின்றனர்.
மலேசியாவில் சீனர்கள் வியாபாரத்துறைகளில் உறுதியாகக் காலூன்றியுள்ளனர். கல்வித்துறையில், மண்டரின் மொழிக்கு நிலையான இடம் உள்ளது. ஆயிரத்திற்கும் அதிகமாகச் சீன தொடக்கப்பள்ளிகளும் பல சீன இடைநிலைப் பள்ளிகளும் மலேசியாவில் இயங்குகின்றன. உயர் கல்விக்கூடங்களிலும் சீன மொழி தக்க இடத்தைப் பெற்றுள்ளது. சீன மொழி ஊடகங்களும் வெற்றிகரமாகச் செயல்படுகின்றன. ஆகவே மலேசியாவில் சீன மொழியில் இலக்கியப் படைப்புகள் தொடர்ந்து எழுதப்படுகின்றன.
***
சீனர்களை ‘தியோங் ஹுவா’ என்ற (சீன நாட்டு வழித்தோன்றல்கள்) சொல்லில் குறிப்பிடுவதே அரசியல் சரிநிலை என்று ஏற்கப்பட்டுள்ளது. ஆகவே, மலேசியச் சீன மொழிப் படைப்புகளை மலாயில் மாஹுவா இலக்கியம் (Sastera Mahua) (மாஹுவா என்பது மலேசிய தியோங் ஹுவா என்பதன் சுருக்கம்) என்ற அடையாளத்துடன் மலாயில் மொழிபெயர்ப்பது வழக்கமாக உள்ளது. டெவான் பஹாசா டான் புஸ்தாக்கா (DBP)யும் வேறு சில அமைப்புகளும் அவ்வாறு சில சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளன. ஆயினும் அது மிகச் சிறிய முயற்சி என்றே சொல்ல முடியும்.
இத்தனை ஆழமும் அடர்த்தியும் கொண்ட ஒரு சக இனத்தின் இலக்கியம் பற்றிய புரிதல் தமிழ்ச்சூழலில் எவ்வாறு இருக்கின்றது என்பது முக்கியமான வினா?
மலேசியத் தமிழர்கள் சீன மக்களுடன் மிக நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள். பல தமிழர்கள் சீன மொழி பேசப் பழகியிருக்கின்றனர். சிலர் தங்கள் பிள்ளைகளைச் சீனப் பள்ளிக்கு அனுப்புகின்றனர். சீன உணவுகள் மலேசியத் தமிழர்களின் விருப்ப உணவுகளில் முதலிடம் பெறுகின்றன. ஆயினும் மலேசியச் சீன இலக்கியம் பற்றியோ சீன படைப்புகளைப் பற்றியோ அறிதல் உண்டா என ஆராய்ந்தால் ஏமாற்றமே மிஞ்சும். மலேசியாவில் சீன மொழிப் படைப்பை வாசித்த தமிழர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். ஆகவே சீன மொழிப் படைப்புகள் பற்றியே உரையாடலே தமிழ்ச்சூழலில் நிகழ்வதில்லை. ஏறத்தாழ அறுபது ஆண்டுகள் அண்டை அயலாராக வாழும் மக்களின் நிலை இவ்வாறு இருப்பது மிகப் பெரிய துயரம்.
தமிழர்களுக்கு முற்றிலும் அந்நிய நிலங்களான ரஷ்யாவும் தென் அமெரிக்காவும் நமக்கு இலக்கியத்தின் வழிதான் அறிமுகமாகின. அந்நிலத்தின் மக்கள் வாழ்க்கையும் அவர்களின் சிக்கலும் இலக்கியம் நமக்குத் திறந்து காட்டியவை. ஓர் இனத்தின் மொழியைத் தொழில் நிமித்தமாக கற்றுக் கொண்டு பேசுவதாலோ, அவர்களின் உணவை ருசித்துச் சாப்பிடுவதாலோ நாம் அவர்களின் ஆழ்மனதையும் சிந்தனைப் போக்குகளையும் அறிய முடியாது. பள்ளிப் படிப்பும் கூட அதற்கு உதவாது. மாறாக அவர்களின் இலக்கியங்களை ஆழ்ந்து வாசிப்பதன் வழி மட்டும்தான் நாம் அவர்களின் அந்தரங்க மனதுடன் உரையாட முடியும்.
இப்படிக் கலை இலக்கியத்தில் இருக்கும் இடைவெளியைக் குறைக்கச் சில தொடர் அடிகளை எடுத்து வைத்தவர் என எழுத்தாளர் கங்காதுரையைக் குறிப்பிடலாம். சீன சமூகத்தின் முதன்மையான அமைப்புகளில் ஒன்றான தோங் ஜியாவ் ஸோங், மலேசியச் சீன இலக்கியம் குறித்த அறிமுகக் கட்டுரைகள், லூய் யோக் தோ மற்றும் ஜேம்ஸ் லீ போன்றவர்களுடனான நேர்காணல்கள் எனத் தன்னளவில் சில முயற்சிகளை மேற்கொண்டார். அது தொடரப்படாததாலும் சீன இலக்கியச் சூழலில் அப்படியான எளிய முயற்சிகள் கூட நடந்ததற்கான தரவுகள் இல்லாததாலும் இருமொழி இலக்கியங்களுடனான தூரமும் அதிகரித்தே சென்றது.
இந்த நூற்றாண்டு இடைவெளியை ஓரளவு சரிசெய்யும் முயற்சியாக வல்லினம் இந்த மொழிபெயர்ப்பு நூலை வெளியிடுகின்றது.
***
இந்நூலில் இடம்பெற்றுள்ள ஏழு சீன மூலக்கதைகளும் நூசா சென்டர் பதிப்பகம் ‘Tasik Itu Bagai Cermin’ எனும் தொகுப்பில் மலாய் மொழிபெயர்ப்பில் வெளியானவை. மார்ச் 2024இல் வல்லினம் ஏற்பாட்டில் நடைபெற்ற மலாய் – சீன அறிமுகக் கருத்தரங்கின் தொடர்ச்சியாகவே இம்முயற்சி தொடங்கப்பட்டது. எஸ்.எம். ஷாகீர் மற்றும் டாக்டர் ஃபுளோரன்ஸ் ஆகியோரின் கூட்டு உழைப்பில் உருவான அத்தொகுப்பு தமிழில் வெளிவர வேண்டும் என அப்போதே முடிவு செய்யப்பட்டு சிறுகதைகள் பிரித்தளிக்கப்பட்டன.

அவ்வகையில் ஓராண்டு உழைப்பில் மலாய் மொழிபெயர்ப்பை அடிப்படையாகக் கொண்டு இச்சீன மொழி கதைகளைத் தமிழில் வெளிக்கொணர்கிறோம். இந்நூலில் இடம்பெற்றுள்ள ஏழு கதைகளும் மலேசியச் சீன மக்களின் பல்வேறு சிக்கல்களையும் வாழ்க்கை முறைகளையும் வெளிப்படுத்துகின்றன. நாம் இத்தனை காலம் அறிந்து கொண்ட வெளிப்புறமான சீன மக்களின் வாழ்க்கையிலிருந்து இவை புதிய வெளிச்சம் பாய்ச்சுகின்றன. சில கதைகள் மறைமுகமாகப் பேசும் அரசியல் மிக அழுத்தமானது. அவசியம் கவனிக்கப்பட வேண்டியது.
இக்கதைகளைத் தமிழில் மொழிபெயர்ப்பதிலும் நூலாகத் தொகுப்பதிலும் தொடக்கம் முதலே மிகுந்த ஆர்வமும் ஒத்துழைப்பும் நல்கிய எழுத்தாளர், எஸ். எம் ஷாகீர். டாக்டர் ஃபுளோரன்ஸ் குவேக் ஆகியோருக்கு நன்றி. அவர்களின் அனுமதியும் ஒத்துழைப்பும் இன்றி இந்நூல் சாத்தியமாகியிருக்காது. அடுத்து இக்கதைகளை மலாய் மொழிபெயர்ப்பிலிருந்து தமிழுக்கு மிகச் சிறப்பாக மொழிபெயர்த்த எழுத்தாளர்கள் கி. இளம்பூரணன், விஸ்வநாதன், அரவின் குமார், சாலினி, ஆசிர் லாவண்யா, சல்மா தினேசுவரி, ம. நவீன் ஆகியோருக்கு நன்றி. மேலும் மொழிபெயர்ப்பு குறித்த ஆலோசனைகளை வழங்கிய எழுத்தாளரும் மொழிபெயர்பாளருமான ஶ்ரீதர் ரங்கராஜ் அவர்களையும் தக்கச் சமயத்தில் இஸ்லாமியத் தமிழ் கலைச்சொற்களைப் பற்றிய ஆலோசனைகளைக் கொடுத்துதவிய சிங்கை எழுத்தாளர் ரியாஸ் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.
***
மொழிபெயர்ப்பு என்பது ஒரு கலையாக வளர்ந்துள்ளது. சொல்லுக்குச் சொல் மொழிபெயர்ப்பது சரியான இலக்கிய மொழிபெயர்ப்பல்ல. மொழிபெயர்ப்பில், பண்பாடு, பேச்சு வழக்குகள், உட்பொருள் என பல விடையங்கள் கணக்கில் கொள்ளப்பட வேண்டும். மொழிபெயர்ப்பை ‘எழுதியதன் மேல் எழுதுதல்’ என சுருக்கமாகச் சொல்லலாம். அதாவது ஏற்கனவே எழுதப்பட்ட ஒரு பிரதியின் தன்மை மாறாமல் வேற்று மொழியில் எழுதும் திறன். இது மெட்டுக்குப் பாட்டெழுதுவது போன்ற ஒரு பணி. ஒரே மெட்டுக்குப் பல மொழிகளில் பாட்டெழுதினாலும் மெட்டை விட்டு விலகாத சொற்களையும் பொருள் சிதையாத சொற்களையும் பாடலாசிரியர் கையாளத் தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான் அது ஒரு சிறந்த பாடலாக அமையும். இந்நூலில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள கதைகள் அனைத்தும் சீன மொழி மற்றும் பண்பாட்டைச் சரியாக வெளிப்படுத்தும் அதே நேரம் தமிழ் வாசிப்புக்கு இடையூறு இல்லாத வகையில் சரளமாக அமைந்துள்ளது அக்கதைகளை மொழிபெயர்த்தவர்களின் திறமைக்குச் சான்று.
இந்நூல் மலேசிய இலக்கியத்தில் ஒரு முன்னோடி முயற்சி என துணிந்து கூறலாம். ஆகவே இதே போல மேலும் பலரும் முன்வந்து நம் சக இன மக்களின் இலக்கியங்களைத் தமிழுக்கும் தமிழ்க் கதைகளை மற்ற மொழிகளுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்பதே நமது அவா. அதுவே மலேசிய இனங்கள் பற்றிய உண்மையான புரிதல்களுக்கு வழி வகுக்கும். நன்றி