
மைக்கல் ஒபியின் எதிர்பார்ப்புகள் அவர் நினைத்ததைவிடவும் சீக்கிரமாகவே நிறைவேறியது. அவர் இண்டுமே இடைநிலைப் பள்ளியில் 1949ல் தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டிருந்தார். அப்பள்ளி எந்த விதத்திலும் முன்னேற்றம் காட்டாத பள்ளியாக இருந்தமையால் கல்வி இலகா தூரநோக்கு கொண்ட ஓர் இளம் ஆசிரியர் ஒருவரை அங்கு அனுப்ப வேண்டியிருந்தது. மிகுந்த பொறுப்புணர்ச்சியோடும் ஆர்வத்தோடும் ஒபி அந்தப் பதவியை ஏற்றுக் கொண்டார். அந்தப் பள்ளியை மறுசீரமைப்பு செய்து முன்னேற்ற அவரிடம் பல ஆக்ககரமான எண்ணங்களும் அவற்றை முறைமைபடுத்தி நிறைவேற்றத் திட்டங்களும் இருந்தமையால் இந்த நியமனத்தை நல்வாய்ப்பாகக் கருதினார். சக ஆசிரியர்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது அவர் இடைநிலைக் கல்வி போதனையில் சிறப்பாகப் பணியாற்றிருக்கிறார் என்று கல்வி இலாகா ஆவணக் கோப்புகள் கட்டியம் கூறின. பிற குறைந்த கல்வித் தகுதி கொண்ட மூத்த தலைமை ஆசிரியர்களைக் காட்டிலும் ஒபி வெளிப்படையாகத் தன் கருத்தை முன்வைப்பவராகவும் கல்வி சார்ந்து முற்போக்கான சிந்தனையுடையவராகவும் இருந்தமையால் அவருடைய மேலதிகாரிகள் அவர்மீது நல்ல அபிப்பிராயம் கொண்டிருந்தனர்.
தன் பதவி உயர்வைப் பற்றி கேள்விப்பட்ட ஒபி, “நாம் இந்த வாய்ப்பை நல்முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும், சரிதானே? என்று தன் மனைவியிடம் சொன்னார்.
“ஆம், கடுமையாக உழைத்து நல்ல முன்னேற்றம் காட்ட வேண்டும்,” என்று பதிலுரைத்துவிட்டு இப்பள்ளியை மகிழ்ச்சியான கல்வி கற்கும் இடமாக்க முதலில் இதன் வளாகத்தை அழகான பூந்தோட்டமாக மாற்றியமைக்க வேண்டும்,” என்றாள் நேன்சி. ஒபியோடு வாழ்ந்த இந்த இரண்டு ஆண்டு காலக்கட்டத்தில் ஒபியின் நவீன பள்ளி பற்றிய கனவுகளுக்குத் தன்னை ஒப்புக்கொடுத்துவிட்டவளாகவும், பழைய பாணி நிர்வாக முறைக்கு முற்றிலும் மாற்றுக் கருத்து கொண்டவளாகவும் அவள் தன்னைத் தகவமைத்துக் கொண்டிருந்தாள். பள்ளிக் கல்வி போதிக்கும் முறைமைகளை நவீன மயமாக மாற்றியமைக்கும் சிந்தனை இல்லாதவர்கள் ஒனிஷா சந்தையில் வியாபாரம் செய்யவே லாயக்கானவர்கள் என்ற கருத்தையும் கொண்டிருந்தாள். இப்போதே தன்னை இளைய தலைமை ஆசிரியரின் மனைவியாகவும் பள்ளியின் மகாராணியாகவும் கனவு காண ஆரம்பித்திருந்தாள் நேன்சி.
மற்ற ஆசிரியர்களின் மனைவிமார்கள் அவளுக்குக் கிடைத்திருக்கின்ற அந்தஸ்த்தின் மீது பொறாமைகொள்வார்கள் என்று நினைக்கும்போது அவள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தாள். எல்லாவற்றிலும் புதிய திட்டங்களை வகுத்து அசத்த வேண்டும் என்றும் நினைத்தாள். அத்தருணத்தில் அவளுக்கொரு சந்தேகம் தோன்றியது, பள்ளியில் வேறெந்த பெண்ணாவது அவரைக் கவர்ந்து மனைவியாக வாய்த்துவிட்டால் என்னாவது? என்று எண்ணினாள். அச்சத்தோடும் அவநம்பிக்கையோடும் கணவனை நோக்கிப் பள்ளி ஆசிரியைகளைப் பற்றிக் கேட்டாள்.
“நம்மோடு படித்தவர்கள் பெரும்பாலும் இளமையாகவும் திருமணம் ஆகாதவர்களாகவும் இருக்கிறார்கள்,” என்று ஆர்வத்தோடு பதில் சொன்னபோது அவள் ஒன்றும் பேசாமல் சலனமுற்றிருந்தாள். “இது நன்மைக்குத்தானே,” என்று தொடர்ந்து சொன்னான் அவள் கணவன்.
“ஏன்?”
“ஏனெனில் அவர்கள் தங்களின் அளப்பரய சக்தியையும் உழைப்பையும் பள்ளியின் முன்னேற்றத்துக்காக வழங்குவார்கள் அல்லவா?” என்றான்.
நேன்சி அப்போது தாழ்வுணர்ச்சிக்குள்ளானாள். அக்கணத்தில் அவளுக்குப் புதிய பள்ளியைப் பற்றி சந்தேகங்களும் அவநம்பிக்கைகளும் எழத் தொடங்கின. ஆனால் அவ்வுணர்வு நீடிக்கவில்லை. அவளுடைய அந்த எண்ணம் கணவரின் குறிக்கோளைப் பாதித்துவிடக்கூடாது என்பதற்காக அதனை நிராகரித்தாள். நாற்காலியில் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்த ஒபியைப் பார்த்தாள். பூஞ்சையான கூன்விழுந்த நெஞ்சு அவனைச் சற்று வயதானவனாகக் காட்டியது. ஆனால் சில சமயங்களில் இவ்வாறு அமர்ந்திருந்தவாறே அதீத உடல் வலிமை கொண்டு செயலாற்றுவதை வியப்போடு பார்த்திருக்கிறாள். ஆனால் அவனின் உள்ளொடுங்கிய விழிகள் எதையும் கூர்மையாக ஊடுறுத்து நோக்கும் ஆற்றல் மிகுந்தவனாகக் காட்டியது. அவனின் வயது என்னவோ இருபத்தாறுதான், இருந்தாலும் முப்பதைத் தாண்டியவனாகக் அவனது தோற்றம் இருந்தது… இருப்பினும் அழகற்றவன் என்று சொல்லிவிட முடியாது.
ஒரு மகளிர் சஞ்சிகையைக் கையில் வைத்து வாசித்துக் கொண்டிருந்தவள் போல பாவனை செய்தவள் சற்று நேர மௌனத்துக்குப் பின்னர், “உனக்குச் சில ஆலோசனைகள் மைக்,” என்றாள்.
“ஒரு பள்ளியைத் திறம்பட எப்படி நடத்த வேண்டும் என்பதை இந்த ஊர் மக்களுக்கு நிரூபித்துக் காட்ட நமக்குக் கிடைத்த ஓர் அரிய வாய்ப்பு இது என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.” என்றாள்.
இண்டுமே பள்ளிக்கூடம் எல்லா வகையிலும் பின்தங்கிய நிலையில் இருந்தது. திரு ஒபியும் அவர் மனைவியும் இப்பள்ளி முன்னேற்றத்துக்காகத் தங்களின் எல்லா உழைப்பையும் நேரங்காலம் பார்க்காமல் நல்கிக் கொண்டிருந்தார்கள். ஒபியிடம் இரண்டு முக்கிய குறிக்கோள்கள் இருந்தன. தரமான கல்வியை மாணவர்க்குச் சளைக்காது வழங்க வேண்டிய கடப்பாடும், பள்ளி வளாகத்தை ஒரு அழகிய பூந்தோட்டமாக மாற்றி அமைத்துவிட வேண்டுமென்ற எண்ணமுமே அந்த இரு குறிக்கோள்கள் ஆகும்.
மழையின் காரணமாக நேன்சியின் கனவான அழகான பூந்தோட்டம் விரைவிலேயே பலிதமானது. அது பூத்துக் குலுங்கியது. செடிகொடிகள் மண்டிய புதராக இருந்த பள்ளி நிலம் கண் கவரும் சிவந்த செம்பரத்தை மலர்களாகவும் மஞ்சள் நிற அலமந்தா பூக்களாகவும் பள்ளி வளாகத்தை வனப்பாக்கியது.
ஒருநாள் மாலை வேளையில் ஒபி பூங்காவைப் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கும் தருவாயில் ஒரு கிழவி பள்ளியின் பூக்கள் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்த பூங்காவின் குறுக்கே நடந்து போய்க் கொண்டிருந்ததைப் பார்த்தவர் பதறிப் போய்விட்டார். அவர் அருகே போய்ப் பார்த்தபோது அவள் நடந்துபோன இடத்தில் பழைய மங்கிய நடைத் தடம் ஒன்று மறுபக்கம் நோக்கி குறுக்கே ஓடுவது தெரிந்தது.
“எனக்கு இது வியப்பாக இருக்கிறது!” என்று மூன்றாண்டுகள் அப்பள்ளியில் பணியாற்றம் ஆசிரியரிடம் மனம் நொந்து சொன்னார் ஒபி. “நீங்களெல்லாம் பள்ளி நிலத்தில் மக்கள் நடமாடுவதை வெறுமனே பார்த்துக் கொண்டிருந்ததை என்னால் நம்ப முடியவில்லை!” என்று கூறி ஏமாற்றத்தோடு தலையை ஆட்டினார்.
சற்று வருத்தத்தோடு, “இந்தப் பாதை….. அவர்களுக்கு இது ஒரு அவசியமான வழி. அடிக்கடி பயன்படுத்தமாட்டார்கள், இது அவர்கள் வணங்கும் வழிபாட்டுத் தளத்தையும் இடுகாட்டையும் இணைக்கும் பாதையாதலால் ஊர் மக்கள் இதனை அவ்வப்போது பயன்படுத்தி வந்தனர்,” என்றார்.
“அதற்காக, பள்ளிக்கூட நிலத்தை ஏன் பாவிக்க வேண்டும்? பள்ளிக்கும் அவர்கள் நம்பிக்கைக்கும் என்ன தொடர்பு?”
“தெரியவில்லை சார்,” என்று தன் தோள்களைக் குலுக்கியபடி இன்னொரு ஆசிரியர் பதில் சொன்னார். ”ஆனால் சார் கொஞ்ச காலத்துக்கு முன்னால் நாங்கள் இந்தப் பாதையை பொதுமக்கள் பயன்படுத்த கூடாது என்று சொல்லி தடை செய்தபோது பெரிய கலேபரமே நடந்துவிட்டது.” என்றார் அவரே.
“அது அப்போது… இனிமேல் இதைப் பயன்படுத்த அனுமதிக்கப்படமாட்டாது” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்து கொண்டே, “அடுத்த வாரம் அரசாங்கக் கல்வி அதிகாரிகள் வந்தால் பள்ளி நிர்வாகத்தைப் பற்றி என்ன நினைப்பார்கள்? இப்படியே விட்டால் அதிகாரிகள் மேற்பார்வையின்போது இந்த ஊர் மக்கள் பள்ளி வகுப்பறைகளைச் சாமியாடுவதற்கும், குறி சொல்வற்கும் பயன்படுத்திக்கொள்ள மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?” என்றார் நடந்து கொண்டே.
அதன் பின்னர் அந்த நடைப்பாதையை யாரும் பயன்படுத்தாமல் இருப்பதற்கு பள்ளிப் பூங்காவைச் சுற்றிலும் வலிமையான தூண்கள் ஊன்றப்பட்டு முள் வேலி போடப்பட்டது.
மூன்று தினங்களுக்குப் பிறகு அவ்வூரின் பாதிரியார், தலைமை ஆசிரியரைக் காண வந்திருந்தார். அவர் சற்று முதியவர். கோல் ஊன்றித் தாங்கித்தாங்கி நடந்தபடியே அலுவலகம் வந்திருந்தார். ஒவ்வொரு முறையும் தன் வாதத்தை வைக்கும்போது, அது நியாமானது என்று நிரூபிக்க தன் கைத்தடியைத் தரையில் அழுத்தமாகத் தட்டிய வண்ணம் இருந்தார்.
“எங்கள் முன்னோர்கள் காலங்காலமாய் பயன்படுத்தி வந்த இந்த வழித்தடத்தை நீங்கள் வலுக்கட்டாயமாக மூடிவிட்டதாக எனக்குப் புகார் வந்திருக்கிறது.”
“ஆமாம்” என்றார் ஒபி. “பள்ளி வளாகத்தை பொதுமக்கள் நெடுஞ்சாலையாகப் பாவிப்பதை அனுமதிக்க முடியாது!”
தன்னுடைய கைத்தடியைத் தரையில் தட்டியபடியே சொன்னார் பாதிரியார், “இங்க பாருங்க சார்….. இந்த வழித்தடம் நீங்கள் பிறப்பதற்கு முன்பே இங்கே இருந்தது. இன்னும் சொல்லப்போனால் உங்கள் தந்தை பிறப்பதற்கு முன்பே இருந்தது. இந்த ஊர் மக்களின் நம்பிக்கையோடு ஆத்மார்த்தமாக சம்பந்தப்பட்டது. எங்கள் இறந்த உறவினர்கள் இதன் வழியேதான் போய்ச் சேர்ந்தார்கள். எங்கள் முன்னோர்கள் இதன் வழியேதான் எங்களை வந்தடைகிறார்கள். அதனைவிட முக்கியமானது இனி பிறக்கப்போகும் குழந்தைகளும் இந்த வழியேதான் வருவார்கள்.”
முகத்தில் ஒரு புன்னகையோடு அமைதியாகப் பாதிரியார் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தார் தலைமை ஆசிரியர்.
“இந்தப் பள்ளியின் தலையாய நோக்கம் இதுபோன்ற மூடநம்பிக்கையைத் துடைத்தொழிப்பதுதான். இறந்தவருக்கு எந்த வழித்தடமும் தேவையில்லை! நீங்கள் சொல்வதெல்லாம் வெறும் கற்பனையே. உங்கள் பிள்ளைகளுக்கு நாங்கள் முதலில் சொல்லித்தரப்போவதெல்லாம் இதுபோன்ற கற்பனை கதைகளையெல்லாம் நம்பக்கூடாது என்பதையே.”
“நீ சொல்வது ஒருவேளை உண்மையாக இருக்கலாம். எங்கள் தந்தைமார்கள் சொல்லி வந்ததைத்தான் நாங்கள் பின்பற்றுகிறோம். நீங்கள் மீண்டும் இந்தப் பாதையைத் திறந்துவிட்டால் நான் உங்களோடு வாதிடப் போவதில்லை! உங்களுக்கு நான் என்ன சொல்வேனென்றால் ‘let the hawk perch and let the eagle perch.’ இரு வேறு அபிப்பிராயங்கள் கொண்டவர்கள் ஒரே வீட்டில் வாழ்வதில்லையா அப்படி நாமும் இருந்துவிட்டுப் போகலாமா” என்று கூறிவிட்டு பாதிரியார் கிளம்ப ஆயத்தமானார்.
தலைமை ஆசிரியர் சொன்னார், “என்னை மன்னிக்க வேண்டும்…. இந்தப் பள்ளியில் இதற்கெல்லாம் இடம்தர முடியாது. இப்பள்ளி அரசாங்க சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டது. நீங்கள் வேறொரு புதிய பாதையை அமைத்துக்கொள்ளுங்கள். இந்தப் பள்ளி மாணவர்களை வேண்டுமானால் உதவிக்கு அனுப்புகிறோம். உங்கள் முன்னோர்கள் அந்தப் புதிய வழியை உபயோகிக்க சிரமமாகக் கருதமாட்டார்கள்.”
“இனி உங்களிடம் பேசுவதற்கு என்னிடம் வார்த்தைகள் இல்லை,” என்று வெடுக்கென சொல்லிவிட்டு பாதிரியார் வெளியே போய்விட்டார்.
அது நடந்து இரண்டு நாட்களுக்குப் பின்னர் அந்த ஊரில் ஒரு மாது காய்ச்சல் கண்டு படுக்கையிலேயே இறந்து போனார்.
மறுநாள் காலை ஒபி வேலை பளுவை நினைத்துக் கொண்டே துயில் எழுந்தார். பள்ளி வளாகத்தைச் சுற்றி போடப்பட்டிருந்த முள்வேலி நீக்கப்பட்டிருந்தது. பூந்தோட்டம் கன்னாபின்னவென்று சிதைக்கப்பட்டிருந்தது. பள்ளியின் கட்டடம் ஒன்று தரைமட்டமாக்கப்பட்டிருந்தது. அன்றைய தினத்தில்தான் கல்வி அதிகாரியும் வந்திருந்தார். அவர் தன்னுடைய அறிக்கையில் பள்ளியின் கட்டடம் ஒன்று தரைமட்டமாக்கப்பட்டதையும் பள்ளி வளாகத்தின் சீரழிந்த நிலைமையையும் எழுதிக் கொண்டார். பள்ளிக்கும் ஊர்மக்களுக்குமிடையேயான கலவரம் ஒன்று வெடித்துள்ளதாக மேலிடத்தில் முறையிட கடிதம் ஒன்றை எழுதினார். இதெல்லாம் புதிதாக நியமிக்கப்பட்ட தலைமை ஆசிரியரின் நிர்வாகத் திறமயின்மையால் உண்டானது என்றும் அறிக்கையை முடித்திருந்தார்.
Dead men’s path
தமிழில்: கோ.புண்ணியவான்.