1

மேனேஜரிடம் முறையிட்டு நான்கைந்து நாட்களாகிவிட்டது. ஒன்றும் பதில் இல்லை. ஒருவேளை என் விருப்பத்திற்கு எதிராக அவர் முடிவு எடுப்பாரெனில் இங்கிருப்பதில் பயனில்லை. பேப்பர் போட்டுவிட்டு வேறிடம் பார்க்கலாம். ஒரு மணி நேரத்தில் அடுத்த வேலையை வாங்கிவிடலாம். ஆனால் இங்கே இருக்கும் வசதிகளாலும் பழகிய முகங்களாலும் அவ்வளவு எளிதில் விட்டுக் கிளம்பிட மனம் ஒப்பவில்லை. பதினைந்து வருடம் இந்த வயது முதிர்ந்தோருக்கான நர்சிங் ஹோமில் வேலை பார்க்கிறேன். இடையில் பல மேனேஜர்கள் வந்திருக்கிறார்கள்; சென்றிருக்கிறார்கள்.
இது பாரபட்சமில்லாத இடமாற்றம்தான் என்றாலும் எனக்கு இந்த வார்டு செட் ஆகிவிட்டது. இங்கிருந்து மாற்றினால் என்னால் தொடர்ந்து பணிபுரிய முடியாது என நாகு, மனோ இன்னபிற நிர்வாக ஆட்களில் காதுபட கூறியிருப்பதால் விஷயத்தை சீரியசாக எடுத்துக்கொள்வார்கள். எனக்கு இந்த வார்டு சொந்த வீடு போல. வேலைக்கு சேர்ந்த இந்த பதினைந்து ஆண்டுகளில் வேறெந்த வார்டுக்கும் சென்றதில்லை.
இந்த முதியோர் பராமரிப்பு இல்லத்தை வாங்கிய புதிய நிறுவனம் இங்கே பணிபுரிபவர்களை இடமாற்றம் செய்ய முடிவெடுத்து சுற்றறிக்கை அனுப்பியது. இடமாற்றம் என்றால் வேறிடத்தில் அல்ல; இதே கட்டடத்தின் வேறொரு தளம், வேலையில் வேறு எந்த மாற்றமுமில்லை. முன்பிருந்த மேனேஜர் சென்ற பிறகு புதிய மேனேஜர் வந்தவுடன் செய்த முதல் மாற்றம். அவர்கள் தரப்பில் ஏதேதோ காரணம் சொன்னார்கள். ஆனால் என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
பேருந்தில் ஏறி அட்டையை உரசி இருக்கையைத் தேடிப்பிடித்து அமர்ந்து மீண்டும் யோசிக்கலானேன். அந்த வார்டில் என்னைவிட பத்து ஆண்டுகள் மூத்தவர் செல்வம். இடுப்புக்குக் கீழே எதுவுமே செயல்படாது. 26 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விபத்தில் இங்கு வந்து படுத்தவர்; பிறகு எழவேயில்லை. செல்வம் ஒரு டிரைவர். சிங்கப்பூரின் பிரபலமான ஒரு பேக்கரியில் டெலிவரி வேலையில் இருந்தவர். எல்லாமே அதிகாலை டெலிவரிகள். அப்படி ஒருநாள் விபத்தில் சிக்கி இங்கு வந்தார். இன்றுவரை அவரது மனைவியும், வேறொரு காதலியும் வாரம் ஒருமுறையாவது வந்து பார்த்துவிடுவார்கள். முதல் முதலாக நர்ஸ் வேலைக்கு சிங்கப்பூர் வந்தபோது இந்த வார்டில்தான் விட்டார்கள். எனக்கு வேலை பிடிக்கவேயில்லை. பாஷை புரிவதில் பெரும் சிக்கலாக இருந்தது. செல்வம்தான் மெல்ல எனக்கு ஆங்கிலத்தில் பேச தைரியம் கொடுத்து என்னை வளர்த்தெடுத்தவர். ஒருவேளை செல்வம் இல்லாதிருந்தால் மறுபடி நான் ஊருக்கே சென்றிருப்பேன்.
அறவே நினைவழிந்த சீனர். அவருக்கு என்னையும் அவரது மகள்களில் ஒருவரை மட்டுமே நினைவில் தங்கியிருக்கிறது. மகன்கள் பேரன்கள் யாரும் நினைவில் இல்லை. அவரது மனைவி இதே காப்பகத்தில் ஏழாவது தளத்தில் இருக்கிறார். அவரையும் மறதி தின்று விட்டது. நாளில் ஒருமுறையாவது அவரது மனைவி வந்து பார்த்துவிட்டுச் செல்வதுபோல ஏற்பாடாகியிருந்தது. புதிதாக சந்தித்துக்கொண்ட இரு மனிதர்கள் பேசுவது போல பேசிப் பிரிவார்கள்.
ஒரு அமெரிக்கர் இருக்கிறார். வயது அறுபதுக்குள் இருக்கும். அவரும் ஏதோ ஒரு விபத்தில் சிக்கி கோமா சென்றவர் பல வருடம் கழித்து மீண்டார். இதற்கிடையில் அவரது மனைவி வேறு ஒரு திருமணம் செய்து சென்றுவிட்டார். இவர் பணிபுரிந்த நிறுவனம்தான் இவரைப் பார்த்துக்கொள்கிறது. பெரிய அறிவியல் திறமுடையவர் என்று நினைக்கிறேன். அத்திறன்கள் எல்லாம் மூளையில் ஏதோ ஒரு அடுக்கில் படுத்துறங்கி நீண்ட வருடங்களாகிவிட்டது. இந்த வார்டிலே சொல்பேச்சைக் கேட்கிற ஒழுக்கமான மனிதர் இவர் ஒருவரே.
மலேசியாவில் பிறந்து வளர்ந்த பெரியவர். இரண்டு கால்களும் சர்க்கரைக்கு கொடுத்தவர். அவர் வந்து சில வருடங்களே ஆனாலும் பல வார்டுகளில் பந்தாடி இங்கு வந்து சில மாதங்கள் ஆகிறது. ஓயாது பேசிக்கொண்டே இருப்பார். பெரும்பாலும் வசைச் சொற்கள். மாநிற பெண் தாதிகள் வந்தால் “நீ பறச்சியா”? என்று கேட்பார். என்னைத் தொடக்கூடாது, வேறு யாரையாவது வரச்சொல், மருந்தை தொடாதே என்பார். நடத்தைக் கோளாறுள்ளவர் என்று எழுதி வேறு வார்டுக்கு மாற்ற பரிந்துரைத்து விடுவார்கள். இப்படிதான் என் வார்டுக்கு வந்தார். என்னையும் அப்படி கேட்டார். நடத்தைக் கோளாறுடன் சேர்த்து மனநிலை பாதிப்பும் இருக்கிறது என எழுதி மேலே அனுப்பி விடுவேன் என சிரித்துக் கொண்டே சொன்னேன். பிறது திரும்ப என்னிடம் வசைபாடுவதை நிறுத்திவிட்டார். மனநிலை பாதிப்பு என்றெழுதிவிட்டால் அதற்கென இருக்கும் மருத்துவமனைக்கு அனுப்பிவிடுவார்கள். எந்தவொரு சொல்லும் ஏற்கப்படாது. தனிமைச்சிறை. அது கொடுமை என அவருக்குத் தெரியும்.
ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி, மீன்கடைக்காரர், ஓய்வு பெற்ற அரசு ஊழியர், என வார்டில் பதினாறு பேர் இருக்கிறார்கள். எல்லோரும் என் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் போல பழகிவிட்டேன். இப்போது வார்டு மாற்றினால் எப்படி செல்வது. தொடர்ந்து இரண்டு நாட்கள் விடுப்பு எடுத்து மூன்றாவது நாள் வேலைக்குச் செல்லும்போது, ஏக்கத்துடன் என்னைப்பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழும் ஆட்கள் இந்த வார்டில் உண்டு.
நர்ஸ் படிப்பை முடித்து இரண்டாண்டுகள் மும்பையில் வேலை செய்தபோது கிடைத்த வாய்ப்பில் சிங்கப்பூர் வந்தேன். படிப்பின் இரண்டாம் ஆண்டின் இறுதியில் அப்பா மடி நிறைய கடன்களோடு இறந்தார். பல கொடிய சூழல்களுக்கிடையில் படிப்பை முடித்தேன். பதினைந்தாண்டுகள் போனது தெரியவில்லை. தம்பியையும், தங்கையையும் படிக்க வைத்து ஆளாக்கிய இடைவெளியில் என்னைக் குறித்து சிந்திக்காமல் போனேன். அம்மாவும் இறந்த பிறகு திருமணம் வேண்டாம் என்ற முடிவுக்கு வந்து வருடங்களாகிறது. நாற்பதைத் தொட்டு, மறைக்க இயலாதபடி நரைகள் தோன்றியாயிற்று.
வேலையே வேண்டாம் என முடிவெடுத்து ஊருக்கு செல்லலாம் என்று நினைத்தால் கூட அங்கு நமக்கென்று ஒருவரும் இல்லை. தனியாக அங்கிருப்பதைவிட இங்கிருப்பதே மேல் என்று மனம் ஆசுவாசமடைந்தபோது நிறுத்தம் வந்தது. அட்டையை உரசி இறங்கி வார்டு நோக்கி நடந்தேன்.
2
குழப்பம் நேரும்போதெல்லாம் கடற்கரையில் வந்து அமர்ந்துவிடுவேன். தீர்வு கிடைக்கிறதோ இல்லையோ அமைதி கிடைக்கும். எட்டு மணி நேரம் கூட தொடர்ந்து இங்கே அமர்ந்திருக்கிறேன். சென்னையில் உள்ளதுபோல பேரலைகள் அல்ல, சாங்கி கடற்கரையின் அலைகள் குழந்தைகளின் சிணுங்கள் போல, ஓடையின் மெல்லிய சத்தம்போல இனிமையானவை. நாள்முழுக்க பார்த்துக்கொண்டே இருக்கலாம். இவை எனக்கு சலிப்பதேயில்லை. சில நெரங்களில் மழை வந்துவிடும், அந்நேரங்களில் மேலும் அழகு கூடிக்கொள்ளும்.
மேலே அண்ணாந்து பார்த்தேன். மழைக்கான அறிகுறிகள் ஒன்றும் தென்படவில்லை. பத்துமணிக்கு மேல் இந்த ஈஸ்ட்கோஸ்ட் கடற்கரையில் ஆளரவம் இருக்காது. மிக ரம்மியமாக இருக்கும். இன்னும் ஐந்து மணி நேரத்தில் வெளிச்சம் வந்துவிடும் பிறகு செல்லலாம் என்று மனம் சொல்லியது. அதற்குள் மனக்குழப்பங்கள் தீரலாம். அக்கணத்திற்காகக் காத்திருந்தேன்.
இந்த மாதத்தோடு வேலையை விட்டு சென்னைக்கு சென்றுவிடலாம் என்று முடிவெடுத்திருக்கிறேன். இம்முடிவு குறித்த குழப்பம் எழுந்தபடியே இருப்பதால் இன்று கடற்கரை வந்து அமர்ந்துவிட்டேன். யோசித்துப் பார்த்தால் இவ்வழக்கிற்காக என் பல வருட சம்பாத்தியத்தை இழந்திருக்கிறேன். கடந்த ஏழு வருடங்களில் என் ப்ரியத்திற்குரிய மகளோடு ஒரு முழுநாளை நான் செலவழித்ததில்லை. மாதம் ஒருமுறையாவது கோர்ட் வாய்தா விசாரணை என்று இழுத்த எங்கள் விவாகரத்து வழக்கு முடிவுக்கு வந்தது. இப்போது மகளுக்கு 12 வயது. இடைப்பட்ட இவ்வருடங்களில் 50 முறையாவது தஞ்சைக்கும் சிங்கைக்கும் பயணப்பட்டிருப்பேன். ஆரம்பத்திலேயே நான் சம்மதித்திருந்தால் ஒருவேளை சீக்கிரம் கிடைத்திருக்கும். எனக்கு அவளோடு வாழ்ந்திட முடியும் என்ற நம்பிக்கை இருந்ததால் நான் சம்மதியாமல் இருந்தேன். அதற்கு வாய்ப்பில்லை என்று உணர்ந்தபோது நேரம் கடந்துவிட்டிருந்தது. அவளுடைய பெற்றவர்கள் உடனடியாக மறுமணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார்கள். வாட்சப்பில் பத்திரிகை வந்தது.
நான் இன்னொரு வாழ்க்கையப் பற்றி யோசிக்கவில்லை. அப்பா ஒருவர்தான் இருக்கிறார். தங்கையின் குடும்பத்தோடு இருக்கிறார். அவர் செலவுக்கென்று ஒரு தொகை மாதம் கொடுக்கவேண்டியது தவிர வேறெந்த கடமைகளும் அற்ற மனிதனாக நான் மாறிவிட்டிருந்தேன். இங்கிருக்கும் வேலையை சென்னையில் செய்தாலும் ஒன்றும் மாற்றமிருக்காது. நண்பர்கள் பலரும் ‘போக வேண்டாம் இங்கேயே இரு. இந்தச் சம்பளம் ஊரில் கிடைக்காது. கொஞ்சம் காசு சேர்த்து ஓய்வு காலத்தை ஊரில் செலவிடு’ என்று ஆலோசனை சொன்னார்கள். சேமிப்பதும், சேர்த்து வைப்பதும் யாருக்காக என்ற கேள்வி எழுகிறது.
இப்படியாக யோசித்துக்கொண்டிருக்கும்போது என்னருகில் ஒரு வயதான பெரியவர் வந்து அமர்ந்தார். பொதுவாக இந்த நேரத்தில் யாரும் வருவது மிக அபூர்வம். நான் சற்று தள்ளி அவருக்கு இடம் விட்டு அமர்ந்தேன். மிகவும் சோர்ந்திருந்தார். முடி கலைந்து முகமும் உடலும் அழுக்கடைந்திருந்தது. ஆனால் முகத்தில் ஒரு பணக்காரக் களை, நடுத்தர வர்க்கத்தினரும், புதுப்பணக்காரர்களும் எவ்வளவு பூசிக்கொண்டாலும் முகத்தில் தென்படாத களை அது. எதாவது குடிக்க வேண்டுமா எனக் கேட்டேன். அவர் மேலும் கீழுமாக தலையசைத்தார். ஒன்றும் பேசவில்லை. இங்கேயே இருங்கள் என்று சொல்லிவிட்டு கடைநோக்கி நடந்தேன்.
எனக்கும் அவருக்குமாக ரொட்டி காயாவும், தண்ணீர் பாட்டிலும், தேத்தண்ணியும் வாங்கிவந்தேன். அவரும் கடலைப் பார்த்தபடியே அமர்ந்திருந்தார். ஒரு முழு பாட்டில் தண்ணீரையும் ஒரே மடக்கில் சரித்துக்கொண்டார். நீர் உள்ளே சென்றதும் கண்கள் ஒளிகொண்டது. திரும்பி சினேகமாக சிரித்தார். அவர் பெயரைக் கேட்டேன்.
நீண்ட நேரம் யோசித்தும் பிடிபடாமல் “நினைவில் இல்லை” என்றார். மறதிக்குறைபாடு உள்ளவராய் இருக்கக்கூடும் என்று நினைத்தபடியே அவரைப் பார்த்துக்கொண்டிருந்தேன். திடீரென நினைவு வந்தவராய் “உப்பிலி” என்றார்.
எங்கிருந்து வருகிறீர்கள்? எனக்கு அவரிடம் கேள்விகள் கேட்க விருப்பமில்லை என்றாலும் அவர் இப்படியே உலாத்திக்கொண்டிருக்க முடியாது. வயதானவர்களுக்கே உரிய நோய்களைக் கொண்டிருப்பவராக இருக்கக்கூடும். நீண்ட நேரமாக வெளியிலே சுற்றிக்கொண்டிருப்பவர் போல தென்பட்டார். வீட்டையோ, வழியையோ மறந்திருக்க வேண்டும். இந்நேரம் இவர் வீட்டில் உள்ளவர்கள் தேடிக்கொண்டிருப்பார்கள். காவல்துறைக்கு அழைத்துத் தகவல் சொல்லலாம்.
”வீட்டுக்கும் போகணும்” என்றார்.
”வீடு எங்கிருக்கிறது?”
மறுபடியும் மௌனம்,
”அது வீடில்லை” என்றார்.
”மருத்துவமனையா?”
பதில் இல்லை.
என் கேள்விகளை அவர் கிரகித்து மூளையில் உள்ளே சென்று பதில்களை துழாவித் தேடி திரும்ப நீண்ட நேரமாகியது. பலவற்றுக்கு பதில் இல்லை.
என் செல்போனைக் காண்பித்து, ”எனக்காக சில பாடல்களை ஒலிக்க முடியுமா?” என்றார்.
”என்ன பாடல்கள்?” என்றேன்.
“ஏ.எம்.ராஜா” பாடல்கள்.
இணையத்தில் தேடி பாடல்களை ஒலிக்கவிட்டேன். ‘துயிலாத பெண்ணொன்று கண்டேன், ‘தனிமையிலே இனிமை காண’, ‘நிலவும் மலரும் பாடுது’, ‘ கண்மூடும் வேளையிலும்…’ ஒரு ஏழெட்டுப்பாடல்கள் தொடர்ச்சியாக ஓடிக்கொண்டிருந்தது. அவரும் நானும் பேசாமல் அமர்ந்திருந்தோம். அவர் கண்களை அகலத் திறந்தவாறு பாடலை உள்வாங்கிக்கொண்டிருந்தார். இந்தப்பாடல்களை என் சிறுவயதில் எங்கோ கேட்டிருக்கிறேன். காலம் கருப்பு வெள்ளையாக இருந்தது அப்போது.
மௌனம் கலைந்து என்பக்கம் திரும்பி பாடல்களை நிறுத்தச் சொன்னார்.
“தம்பி, எனக்கு மறதி நோய் உள்ளதுதான், அவ்வப்போ சில ஞாபகங்கள் வர்றதுண்டு. நான் ஓடி வந்துட்டேன். இந்நேரம் என்னை தேடிட்டு இருப்பார்கள்.”
”எங்கிருந்து ஓடிவந்திங்க?”
3
நினைத்தது போலவே என்னை வார்டு மாற்றியிருந்தார்கள். மேனேஜர் அழைத்து அரைமணி நேரம் சமாதானம் சொன்னார். ”ஒரு ஆறு மாதம் கழித்து பழைய வார்டுக்கே மாற்றுகிறேன். உனக்கு சலுகை கொடுத்தால் எல்லாரும் கேட்பார்கள். போக, உனக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் வார்டு ஹை ப்ரொஃபைல் நோயாளிகள் உள்ளது. பெரும் பணக்காரர்கள், சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்துள்ளவர்கள், பெரும் உயரதிகாரிகள், அரசியல்வாதிகள் அடங்கிய வார்டு. மற்ற வார்டுகளைப் போல் அல்லாமல் மிகுந்த அமைதியாக இருக்கும். பிறகு நானே மாறச்சொன்னாலும் நீ மாறமாட்டாய்.”
அவருடைய சமாதானத்திற்கு என்றில்லை. வேலையை விடுவது மடத்தனம். அதற்கு உயிரை விடலாம். வேலை இல்லாமல் போனால் தறிகெட்டு ஓடும் எண்ணங்களுக்கு பதில் இல்லாமல் போகும்.
”எப்போதிலிருந்து இந்த மாற்றம் அமலுக்கு வருகிறது?”
”உடனடியாக, வரும் திங்கள் முதல்.”
”சரி” என்று வார்டு நோக்கி நடந்தேன். கண்ணில் நீர் கட்டிக்கொண்டு கீழிறங்காமல் தேங்கி நின்றது. ‘இவர்கள் என்ன ஒட்டா உறவா? சம்பளத்திற்கல்லவா வேலை செய்கிறேன். இவர்களைப் போல இன்னும் சிலருக்கு என் சேவை உதவப்போகிறது, எதுவானாலும் ஒன்றுதானே!’ எவ்வளவு சமாதானம் கூறியும் மனம் ஏன் ஒப்பவில்லை என யோசித்தேன். தாயின் இடத்தில், தந்தையின் இடத்தில் வைத்து உறவு கொண்டாடியவர்கள் அவர்கள் என மனம் சொன்னது. சில மாதங்கள்தானே! திரும்ப நம் வார்டுக்கே சென்றுவிடலாம்.
இரவு டூட்டி பார்த்த மியான்மர் பெண், நோயாளிகளை என்னிடம் ஒப்படைப்பதற்கான பணிகளில் மும்முரமானாள். நான் ஒவ்வொருவரிடமாக சென்று சில நொடிகள் நின்று பார்த்துவிட்டு பேப்பர்களை பார்வையிட்டேன். ஒவ்வொரு மணிக்கொருதரம் எடுத்த உடல் வெப்பம், இரத்த அழுத்தம் எல்லாருக்கும் நார்மலாக இருந்தது. கையெழுத்திட்டு வாங்கி வார்டை எனக்கு சொந்தமாக்கிக்கொண்டேன். அடுத்த எட்டு மணி நேரத்திற்கு இந்த பதினாறு உயிர்களும் என் பாதுகாப்பில் இருக்கும்.
ஒவ்வொருவராக குளிக்க அழைத்துச் செல்ல வேண்டும். நடக்கும் நிலையில் உள்ளவர்களுக்குதான் குளியல். மிக்கேலா ஒரு பிலிப்பினோ பெண். அப்போதுதான் பிள்ளை பெற்று குழந்தையை ஊரில் விட்டுவந்த சோகத்தில் இருந்தாள். அவள் வார்டில் இருந்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி, வயதானவர் என்றாலும் உடலின் வலு கொஞ்சம் மிச்சமிருந்தது. முரட்டுத்தனம் மிகுந்தவர். வீல் சேரில் அமர்ந்திருந்தவர், பால் கட்டி உப்பியிருந்த அவளது முலையினை ஓங்கி ஒரு குத்து விட்டார். சில நேரங்களில் இப்படி ஆகிவிடுவதுண்டு. அவரின் மூளையில் என்ன ஓடிக்கொண்டிருந்ததோ தெரியாது. உடலால் இங்கிருந்தாலும் அவரின் நினைவுகள் எங்கோ யாருடனோ விவாதம் புரிந்தபடி இருக்கும். திடீரென கட்டுப்பாட்டை இழந்துவிடுவார்கள்.
இதுபோன்ற சம்பவங்கள் சாதாரணம். நல்லவேலையாக என் வார்டில் நடத்தைக் கோளாறுள்ளவர்கள் யாரும் இல்லை. அப்படி உள்ளர்வர்களின் வார்டில் பணிபுரிவது கண்ணி வெடிகளுக்கிடையே நடப்பது போன்ற ஆபத்து. எப்போது என்ன செய்வார்கள் என தெரியாது.
என் வார்டில் உள்ள நோயாளிகள், முந்தைய பணியாளர்கள் தங்களை ஏதாவது கோபமாக நடந்துகொண்டார்களா என்பதை என்னிடம் தெரிவிக்கும் இடம் குளியலறைதான். நான் அவர்களுக்கு சமாதானம் சொல்வேன். குளியலுக்குப் பிறகு, ஆடை மாற்றி, படுக்கைப்புண்களுக்கு மருந்திட்டு, முகம் திருத்தி, படுக்கையில் கிடத்த வேண்டும். தானாக உணவு உண்பவர்கள் சிலருண்டு. அவர்கள் அருகில் உணவை வைத்தால் எடுத்து உண்பார்கள். பலருக்கு ஊட்ட வேண்டும். வெகு சிலருக்கு சிரிஞ்ச் மூலமாக திரவ உணவை செலுத்த வேண்டும். உலாத்த வேண்டும் என்றால் பத்து நிமிடம் வீல் சேரில், பக்கத்து வார்டில் உள்ள நண்பர்களை சந்தித்து இரண்டொரு வார்த்தை பேசி வரலாம். நிறைய கணவன் மனைவி சோடிகள் வெவ்வேறு தளங்களில் உள்ளனர். அவர்கள் சந்தித்துக் கொள்வது வேடிக்கையாக இருக்கும். சிலர் சண்டையிட்டுக் கொள்வார்கள், சிலர் ஒருவரை ஒருவர் மறந்திருப்பார்கள், சிலர் ஒருவார்த்தை கூட பேசாது, நோக்கியிருந்தபடி பிரிவர். ஏன் இவர்களை ஒரே வார்டில் அனுமதிப்பதில்லை என்பதுதான் புரியவில்லை.
காலையில் டாக்டர் ரவுண்ட்ஸ் வந்து அனைவரையும் ஓரிரு நொடி பார்த்து, சார்ஜ் ஷீட்டை நோட்டமிட்டு மாற்றமிருந்தால் சொல்வார். பெரும்பாலும் எந்த மாற்றமும் இருக்காது. இடையில் ஒவ்வொரு மணிநேரமும் உடல் வெப்பத்தை சோதனையிட்டு கம்ப்யூட்டரில் பதிவேற்ற வேண்டும். எல்லா நொடியும் வேலை ஆக்கிரமித்துக் கொள்ளும். இரவு வேலையில் மட்டும் சிறிது கண்ணயர நேரம் கிடைக்கும், மற்றபடி காலை, மதிய ஷிப்ட்களில் ஓய்வென்ற சொல்லுக்கு இடமில்லை.
4
மவுனமாக என்னைப் பார்த்தார். பிறகு மீண்டும் பார்வை கடல்பக்கம் திரும்பியது.
”இங்கே எப்படி வந்திங்க?”
”நடந்துதான்.”
”அய்யா, வீட்டில் இருப்பவர்கள் பதட்டமடைவாங்க, நீங்க சொல்லுங்க நான் கொண்டுபோய் விடறேன். டாக்சில போலாம்.”
”கொஞ்ச நேரம் இருந்துட்டுப் போலாமே,”
”உங்களுக்கு எல்லாமே நினைவில் இருக்கு என்றால், எனக்கொன்றும் பிரச்சினை இல்லை. நான் உங்களை வீட்டில் இறக்கிவிட்டு பிறகு செல்கிறேன்” என்றேன்.
அவர் தலையாட்டினார்.
”உங்கள் பெயர் என்ன சார்?” என்று மறுபடி கேட்டேன்.
பாக்கெட்டில் வைத்திருந்த தனது பல்செட்டை எடுத்து அணிந்துகொண்டார். ”உப்பிலினுதான் எல்லாரும் கூப்பிடுவாங்க” என்றார்.
பெயர் வினோதமாக இருந்ததால்தான் மீண்டும் கேட்டேன், அதைச் சொன்னால் அவஎ கோபப்படக்கூடும். வம்பெதற்கு. என் பெயர் மதிவாணன். மதின்னு கூப்பிடுவாங்க. அறிமுகம் கொண்டோம்.
பல்செட்டை அணிந்தபிறகு அவரிடமிருந்து வந்த வார்த்தைகள் தெளிவாக இருந்தன.
”இங்கயே பிறந்தவரா நீங்க?”
“இல்லை, சிவகெங்கை, அப்பாரு 25ல வந்தாரு, கப்பல்ல, வட்டித்தொழிலு, இங்க காச சேத்துட்டு ஊர்ல கலியாணம் பண்ணி நான் பிறந்ததும் என்னை இங்க கூட்டிவந்தார். இரண்டு வயசுல வந்தேன். சில முறை ஊர் போய் வந்திருக்கேன். பெரிய தொடர்பில்லை.”
”உங்களுக்கும் வட்டித்தொழிலா?”
”இல்ல, எனக்கு துணி வியாபாரம். லுங்கி பிசினஸ், இலங்கை, இந்தோனேசியா, மலேசியா, பர்மா, வியட்நாமுக்கு ஏத்துவேன். இப்பமாதிரி இல்ல. அப்போலாம் லுங்கி நல்ல வியாபாரம். அந்த தொழில்ல உச்சத்துல நான் இருந்தபோது நான் வாங்கின சொத்துதான் இன்னைக்கிம் இருக்குது. பீச் ரோட்டுல கடை வச்சிருந்தேன் சொந்த கடை. எண்பத்தி அஞ்சு, தொன்னூறு வரைக்கும் உக்காந்து வியாபாரம் பாத்தேன். பிறகு பசங்க எடுத்துகிட்டாங்க. தேக்கால ரெண்டு பசங்களும் தனித்தனி கடை வச்சி கொடுத்தேன். பேரப்பசங்க கல்யாணம் வரைக்கும் பாத்தாச்சு. நாலஞ்சு வருசம் மின்ன ராமேசுவரம் போனோம். என் கண்ணு முன்னாடி வீட்டம்மா ரயில்ல தவறி விழுந்து இறந்துபோனாங்க. அன்னிலருந்து எதுலயும் ஈடுபடல. பிரிச்சிக் கொடுத்ததுல பசங்களுக்குள்ள தகராரு, வந்த மருமகள்களும் ஏட்டிக்கி போட்டியா குடும்பத்துல குழப்பம் பண்ணிட்டே இருந்தாங்க. அவ இருந்த வரைக்கும் என்கிட்ட இந்த மாதிரி பிரச்சினல்லாம் வராம அவளே பாத்துக்குவா. இந்த நாலஞ்சி வருசத்துல அவ போன வருத்தத்தை விட இவனுங்க கிட்ட படற பாடு தாங்க முடியல. நானாவே போய் ஹோம்ல சேந்துட்டேன். இப்ப கொஞ்ச நாளா, நினைவு தடுமாறிட்டே வருது. பழசை எல்லாம் கலச்சி போட்டு, நீருக்கு அடிலே இருந்து மெதுவா மிதந்து மேல வர்ற மாதிரி ரொம்ப பொறுமையா நினைவுகள் வருது. பல விஷயங்கள் ஞாபகம் வரதில்ல. போன வாரம் மக வயித்துப் பேரன் வந்து விசிட்டர் நேரத்துல பாத்தான். அவன் முகத்தை உத்து பாத்துட்டே இருந்தேன். பேர் நினைவுக்கு வரல. இந்த மாதிரி நேரங்கள்ல என்னோட மறதிய நினைச்சு கோபம் வருது.”
”ஹோம்ல இருந்துதான் வந்திங்களா?”
”அப்டிதான்னு நினைக்கிறேன்.”
”வீடு ஞாபகம் இருக்கா? ஹோம் பேர் என்ன?” என என் போனை எடுத்து கூகிளில் தேட முற்பட்டேன்.
”யோசிச்சிட்டு சொல்றேன்! கொஞ்ச நேரம் இருந்துட்டு போயிடறேன். தயவு செஞ்சி போலீசுக்கு போன் அடிக்காதிங்க” என்றார். விடிவதற்கு இன்னும் இரண்டு மணி நேரம் இருந்தது.
6
வார்டு மாத்தின முதல் டூட்டியே இரவில் போட்டது கண்டு ரோஜரிடம் முறையிட்டேன். “இப்படி புது வார்டுல, நோயாளி ஹிஸ்டரி தெரிஞ்சிக்காமலே நைட் டூட்டி போடக்கூடாதுன்னு தெரியும்ல?” ஏதாச்சும் ஆச்சின்னா எம்பேர் இல்ல மேல போகும். ஏன் இப்படி டூட்டி ரோஸ்டர் போட்டாய்? என்றேன்.
”இந்த ஹோம்லயே பெஸ்ட் சீனியர் நர்சு நீங்க, நிறைய அனுபவம் உள்ள ஆளு, நாலு முறை தொடர்ந்து பெஸ்ட் நர்ஸ் ஆப் த இயர் அவார்டு வாங்கிருக்கிங்க, நீங்களாம் புது வார்டுல நைட் டூட்டி பாக்கறது கஷ்டம்னா யார் நம்புவாங்க?”
இப்படிதான் சிரித்துப் பேசி சமாளிப்பதில் தேர்ந்தவன் ரோஜர்.
புதிய அக்சஸ் கார்டை கையில் திணித்துவிட்டு, ”பதினோராவது மாடி. கார்னர் ஃப்ளோர். திரைச்சீலையை விலக்கினா தூரத்துல கடல் தெரியும். விஐபி வார்டு. நிறைய சலுகைகள் உண்டு. விசிட்டர்ஸ் வந்தாங்கன்னா நல்லா கவனிப்பாங்க. எல்லாரும் அந்த வார்டுக்குப் போக போட்டி போடுவாங்க. நீங்க என்னடான்னா வெறுப்பு காட்டறிங்களே செல்வி!”
”புதிய அட்டை உரசியதும் அத்தளத்தின் கதவு திறந்து வழிவிட்டது. இந்த வார்டில் நிறைய பெண்கள். மூன்றே மூன்று ஆண்கள். அதில் ஒரே ஒருவர் தமிழ் பேசுபவர்” என்று அடைப்புக்குள் குறிப்பிடப்பட்டிருந்தது.
பெரும்பாலும் அரசாங்கத்தின் பெரும் உயர் பதவிகளில் இருந்தவர்களாக இருந்தனர். அதில் ஒருவர் முன்னாள் பிரதமரின் மெய்க்காப்பாளர்களில் ஒருவர். அவர் கட்டிலுக்கருகில் தடித்தடியான புத்தகங்கள் இருந்தன. பெரும்பாலான நேரங்களில் படித்துக்கொண்டே இருந்தார். யாரிடமும் பேசாத மவுனி. நேர்த்தியாக உடலைப் பராமரித்து, எல்லா செயலிலும் ஒரு ஒழுங்கு கூடியிருந்தது அவரிடம். புத்தகத்தின் பக்கத்தைக் கூட மிகத் திருத்தமாக சத்தமெழாமல் திருப்பக்கூடியவர்.
சுவற்றுப்பக்கமாக திரும்பி அமர்ந்தபடி யாரையும் முகம் பார்க்காமல் அமர்ந்திருந்த பெண்மணிதான் இந்த வார்டிலேயே கொஞ்சம் அதிக கவனம் செலுத்திப் பார்த்துக்கொள்ள வேண்டிய நிலையில் இருந்தார். அவரிடம் முகம் பார்த்துப் பேசினால் கோபமடைவார். பெரும்பாலும் பின்புறமிருந்தே அவரிடம் பேசுமாறு குறிப்பில் இருந்தது. கட்டிலில் காலைக் கீழே தொங்கப்போட்டு காலை ஆட்டியபடியே இருந்தார்.
வார்டின் இன்னொரு மூலையில் ஒரு போதகர் இருந்தார். அவர் எப்போதும் பெரிய பைபிள் ஒன்றைப் படிப்பதும் முணுமுணுப்பதுமாக இருந்தார். மாத்திரையின் பெயர்களும் என்ன நேரத்திற்கு எந்த நிறம் என எல்லாமே அவருக்கு நினைவிருந்தது.
நடத்தைக்கோளாறுள்ளவர் என ஒருவரும் இல்லை. எல்லாருமே தினப்படி வேலைகளுக்கு ஒத்துழைப்பவர்களாக இருந்தார்கள். மேனேஜர் சொன்னதுபோல இந்த வார்டில் வேலை பார்ப்பது எளிது; சவாலானாதல்ல. சில நோயாளிகள் அதிக உடல் பருமனுடன் இருப்பதுண்டு. அவர்களை குளிக்க வைப்பது, இடம்மாற்றுவதில் சிரமம் இருக்கும். அதிக உடல் வலு வேண்டும். எல்லா நேரத்திலும் உதவிகள் கிடைக்காது. இந்த வார்டில் எல்லாருமே உடலைப் பேணுபவர்களாக பருமனில்லாதிருந்தனர். என்றாலும் பழைய வார்டின் நோயாளிகள் நினைவாகவே இருந்தது. லிம், கேத்தி, சுமிதொம் கண்ணீர் சிந்தக்கூடியவர்கள். ஷிப்ட் முடிந்து போகும்போது ஒரு எட்டு பார்த்துப் போகவேண்டும்.
அவரவர்களுக்கு கொடுக்க வேண்டிய மாத்திரைகள், இன்சுலின் ஊசி, டையாபர்கள் மாற்றி உறங்க வைத்தாயிற்று. அரைமணிக்கு ஒருதரம் மானிட்டர் செய்தால் போதும். பழைய வார்டில் இரவு ஷிப்டின்போது அதிகாலை மூன்றிலிருந்து ஐந்தறை வரை செய்வதற்கு ஒன்றுமில்லாத ஓய்வில் உறங்க நேரம் கிடைக்கும். இந்த வார்டில் இரண்டு மணிக்கே எல்லா வேலைகளையும் ஒழுங்கு செய்து ஓய்வெடுக்கும்படியாக இருந்தது.
விளக்குகளை அணைத்து, திரைச்சீலையை ஒரு ஆள் நிற்குமளவு மட்டும் திறந்துவிட்டு தூரக்கடலை பார்த்துக்கொண்டிருந்தேன். நங்கூரமிட்ட பெரிய கப்பல்களில் எரிந்த விளக்குகள் நட்சத்திரங்களைப்போல மின்னின. ஏராளமான நட்சத்திரங்கள் விதவிதமான நிறங்களில் நிற்பதும் நகர்வதுமாக இருந்தது. அப்படியே முழுதாக மூன்று மணிநேரம் உறங்கியிருந்தேன். இப்படி ஒருநாளும் இருந்ததில்லை. உயர்தரமான சோஃபாவில் தலை சாய்த்ததும் உறங்கியிருக்கிறேன்.
எழுந்து முகம்கழுவி ஒவ்வொரு கட்டிலாகச் சென்று குறிப்பெழுதும்போதுதான் கவனித்தேன் உப்பிலியைக் கட்டிலில் காணவில்லை. இடப்பக்க பாத்ரூமில் பார்த்தேன் விளக்கெரியவில்லை. அருகில் சென்று கதவைத் தட்டினால் திறக்கவில்லை.
சுற்றிலும் பார்வையை ஓடவிட்டேன் நடமாட்டம் ஒன்றும் தென்படவில்லை. இடுப்புப்பட்டையில் தொங்க விடப்பட்டிருந்த அக்சஸ் கார்டுக்கு அனிச்சையாக கை சென்று அதைக்காணாமல் திகைத்தேன். நிலைமை கொஞ்சம் தீவிரமடைந்திருந்தது. ப்ளோர் மேனேஜரிம் ஓடி விஷயத்தைத் தெரிவித்தேன். நோயாளி பற்றிய விவரங்களைக் கேட்டறிந்தார். நினைவுப்பழுதுள்ளவர். இங்கே எங்கேயாவது சென்றிருப்பார் நன்றாகத் தேடுங்கள். எப்படியாகிலும் கட்டடத்தைவிட்டு நீங்கியிருக்கமாட்டார் என சமாதானம் சொன்னார்.
செக்யூரிட்டியை அழைத்து சொன்னேன். மேலிருந்து கீழ்வரை எல்லா தளத்திலும் தேடி ஓய்ந்து செக்யூரிட்டி கேமராக்களை சோதித்துக்கொண்டிருந்தார். என்னுடைய அக்சஸ் கார்டை வைத்து அவர் வெளியேறுவது தெரிந்தது. நோயாளி உடையிலிருந்து வேறு உடை அணிந்திருந்ததாலும், ரிசப்ஷன் அருகில் ஆட்கள் இல்லாதிருந்ததாலும் அவர் வெளியே சென்றதை யாரும் கவனிக்கவில்லை. இப்படி ஒரு சம்பவம் இதற்கு முன் நடந்ததேயில்லை. அதிகபட்சம் கட்டடத்திற்குள்ளே எங்காவது ஒளிந்திருப்பார்கள். அவர்களாகவே திரும்பியும் விடுவார்கள். நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்கும். அதைப்பற்றி பிறகு கவலைகொள்ளலாம். உப்பிலி எவ்வித ஆபத்துமில்லாது திரும்பவேண்டும்.
முதல் வேளையாக காவல்துறைக்கு அறிவித்தார்கள். தகவல்கள் சேகரித்து அவரின் பிள்ளைகள் வீட்டிற்கு அழைத்து விசாரித்தார்கள். அங்கு எங்கேயும் இல்லை, கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்து விசாரித்தார்கள். அப்படி ஒருவர் வழிதவறி சென்றதாக தகவல் வரவில்லை என்றார்கள். எல்லா காவல், ரோந்து போலீசுக்கும் தகவல் சென்றது. சில மணி நேரத்திற்குள் மீட்காவிடில் அவருக்கு உடலில் பிரிச்சினைகள் தொடங்கும்.
என்ன செய்வதெனக் குழம்பி மூலையில் அமர்ந்து எல்லாக் கடவுள்களிடமும் முறையிட்டேன். முதல்நாளே இப்படி ஆகியிருக்கக் கூடாது.
போதகர் என் அருகில் வந்து. உன் கண்ணீரை வீணாக்கவேண்டாம். அவர் திரும்பி வருவார். நீ சும்மா இரு. என்றார். அவர் வார்த்தைகள் இதமளித்தாலும் நம்பிக்கையின்மை மனதில் இருந்து மறையவில்லை.
என்னுடைய ஷிப்ட் நேரம் முடிந்தது. அடுத்த பொறுப்பெடுத்துக்கொள்ளும் ஆட்கள் வந்துவிட்டனர். உப்பிலி தவிர்த்த அனைவரும் ஹேண்ட் ஓவர் கொடுத்துவிட்டேன். அவர் காணாமல் போய் இரண்டு மணி நேரத்திற்கும் அதிகமாகிவிட்டது. ஒன்றும் தகவல் இல்லை. மற்ற வார்டுகளில் இருந்து வந்து எனக்கு சமாதானம் சொன்னார்கள்; தைரியமூட்டினார்கள்.
7
உப்பிலி என்னிடம் இரண்டு மணி நேரங்களுக்கும் அதிகமாக பேசிக்கொண்டிருந்தார். ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத சம்பவங்கள். உதிரி உதிரியான அவரது நினைவுகள் கேட்க சுவாரசியமாக இருந்தாலும் எனக்கு நிறைய விஷயங்கள் புரியவில்லை. அவருக்கு யாரிடமாவது பேசிக்கொண்டிருக்கவேண்டும் என்பதுதான் தேவை. இரண்டு காதுகளையும் அவரிடம் ஒப்படைத்து கேட்டுக்கொண்டிருந்தேன்.
தம்பி, சூரிய உதயம் பாத்ததும் கிளம்பிடறேன். போறதுக்கு முன்னாடி ஒரு உதவி வேணும் என்றார்.
சொல்லுங்க என்ன உதவி
போறதுக்கு முன்னாடி ஒரு கூட்டாளிய சந்திக்கணும். திரும்ப இதுமாதிரி வெளிய வரமுடியுமோ, அவன் உயிரோட இருக்காரோ, தெரியல
எங்க இருக்கார்? அட்றஸ் தெரியுமா?
லாவண்டர் தெருல வீடு. மகன் கூட இருக்கார். அங்க போனா அடையாளம் சொல்லிடுவேன்.
இருவருமாக சூரிய உதயம் பார்த்துக் கிளம்பினோம்.
அவருடைய நண்பர் வீட்டைப் பார்த்ததும் கதவில் இருந்த வினோதமான ஓவியம் ஒன்றை வைத்து அடையாளம் சொன்னார். அத்தர் வியாபாரம் செய்தவர். பழைய காலத்து நட்பு. சந்தித்து பல வருடங்கள் ஆகிவிட்டன என்றார்.
அதிகாலையில் அந்த வீட்டின் கதவைத் தட்டினோம். நண்பரின் மகனுக்கு இவரை அடையாளம் தெரிந்தது. தன் அப்பா இறந்துபோய் மூன்றாண்டுகளுக்கு மேலாகிவிட்டதாக சொன்னதும் கலங்கினார். அவர்கள் உரையாடலில்தான் கவனித்தேன். அவரை அந்த இளைஞன் ‘சட்டநாதன் அங்கிள்’ என அழைத்தார். புறப்படும்போது ”அப்பாவின் பெயர் என்ன?” என்று கேட்டபோது ”சந்தனக்கிருஷ்ணன்… உப்பிலின்னு சொன்னாதான் தெரியும்” என்றார். நான் அதிர்ச்சியில் சட்டநாதனைப் பார்க்க அவர் எந்த முகமாற்றமும் இல்லாமல் ‘ஆமாம்’ என இயல்பாகத் தலையை ஆட்டினார்.
”அப்பாவுக்கு வியாபாரம்…” என இழுத்தேன்.
”துணி வியாபாரம். லுங்கி பிசினஸ்…” என்றபோது எனக்குத் தலை சுற்றிக்கொண்டு வந்தது.
விடைபெறும் நேரம் வந்தபோது அவரிடம் சற்று கடுமையாகவே கேட்டேன் “இப்போதாவது எந்த நர்சிங் ஹோம் என்று சொல்லுங்கள்” காணாமல் தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு ஒரு நிம்மதியாவது கிட்டும் என்றேன்.
டாக்சி பிடிக்க சொன்னார்.
நர்சிங் ஹோமில் டாக்சி நின்றதும் அவரைக் கைப்பிடித்து அழைத்துச் சென்றேன். அமைதியாயிருந்த ரிசப்ஷனில் பதற்றம் தொற்றிக்கொண்டது. பத்திரமாக திரும்பியது குறித்து தகவல்கள் பறந்தன.
கொஞ்ச நேரத்தில் அங்கே ஒரு கூட்டம் கூடியது. அவரைத் தனியாகக் கூட்டிக்கொண்டுபோய் மருத்துவர்கள் சோதித்தனர்.
என் விவரங்களை ரிசப்ஷனில் குறித்துக்கொண்டார்கள். கடற்கரைக்கும் இந்த நர்சிங் ஹோமிற்கும் ரெண்டு மைல் தொலைவு இருக்கும். எப்படி வந்திருப்பார் என யோசித்துக்கொண்டிருந்தேன்.
எங்கிருந்தோ புயல் போல வந்த ஒரு பெண்மணி தூரத்திலிருந்தே மானசீகமாக பத்திரமாக மீட்டுக்கொண்டு வந்ததற்காக கைகூப்பியபடி என்னருகில் வந்தாள். ”உப்பிலி அங்கிள அழைச்சுட்டு வந்ததுக்கு…” என அவள் சொல்லி முடிக்கும் முன்பே அவர் பெயர் ‘உப்பிலி’ இல்லை என்றேன்.
அப்பெண்மணியிடம் நடந்த கதைகளைச் சுவாரசியமாகச் சொல்லி முடித்தேன். அப்போதுதான் ஒன்றை கவனித்தேன். சங்கடமான சில தருணங்களை சுவாரசியமாகச் சொல்லும்போது அது மெல்லிய இலையாக உதிர்ந்து இயல்பாக விலகிவிடுகிறது. இப்படியாகச் செல்வியை நான் தெரிந்து கொண்டேன். இந்த ஊரை விட்டுச் செல்வதாக எடுத்த முடிவையும் தள்ளி வைத்தேன்.