
அப்பாவின் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரனைக்கு வருகிறது. ஒரு மாதமாக டெல்லியிலிருக்கும் உறவினர் வீட்டிலிருந்து அதற்கான வேலைகளைச் செய்தோம்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் எங்களுக்கு எதிராக வந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அப்பா மனு போட்டார். ஒரு அரசாங்கத்திற்கு எதிராக தனி மனிதர் போராடுவது கடினம். அதோடு வெற்றி பெறுவதென்பது அரிது என பல்வேறுவிதமாக சொல்லியபோதும் அப்பாவைத் தடுக்க முடியவில்லை. என் பாட்டனாரின் உரிமையை விட்டுத் தரமாட்டேன் என பிடிவாதமாக இருக்கிறார். உச்சநீதிமன்றத்திலும் நமக்கு எதிராக தீர்ப்பு வந்தால் என்ன செய்வீர்கள், பணம்தானே விரயம் என அம்மா கேட்டபோது போராடுவதற்கு முன்பே தோல்வியைப் பற்றி எண்ணக் கூடாது எனக் கூறி அடக்கிவிட்டார்.
விசாரணை தொடங்க இன்னும் பத்து நிமிடங்கள் இருந்தன. வெளி வராண்டாவில் இருந்த இருக்கைகளில் அமர்ந்திருந்தோம். அப்பாவின் முகம் எப்போதும் போல எவ்வுணர்வுகளையும் காட்டாமல் இருந்தது. அப்பா, சிடுமூஞ்சி மனிதரில்லை. பார்த்துக் கொண்டே இருக்கத் தோன்றுமளவிற்கு இவர் முகம் சிரிக்கும்போது அத்தனை அழகாயிருக்கும். ஆனால், அது எப்போதாவது நிகழும் அரிதான தரிசனம்தான். அழுத்தமான மனிதர் என்று உள்குரல் ஒலித்தது. இம்மாதிரி மனிதர்களுடன் வாழ்வது சாகசம்தான். நாம் கணிப்பது போல நடந்தால் பரவசமும் எதிராக நடந்தால் கழிவிரக்கமும் மாறிமாறித் தோன்றிக் கொண்டேயிருக்கும். சந்திரனுக்கோ ஜோசப்புக்கோ இம்மாதிரியான தடுமாற்றங்கள் இல்லை. அவர்களுக்குத் தங்கள் அப்பா எந்த விசயத்திற்குத் திட்டுவார் எம்மாதிரியான விசயத்திற்கு மகிழ்வார் என்பது பற்றிய தெளிவான புரிதல் இருந்தது. எனக்கு அப்படி அமையவில்லை. செமஸ்டரில் மதிப்பெண் குறைந்ததற்குத் திட்டுவார் என்று எதிர்பார்த்தபோது பரவாயில்லை விடு என்று தோளில் தட்டிக் கொடுத்தார். ஒன்றும் சொல்லமாட்டார் என ஒருநாள் இரவு ஒரு மணி நேரம் தாமதமாகச் சென்றதற்குக் கடுமையாக வைதார்.
அம்மாவிடம் கேட்கும்போதெல்லாம் “எப்போ எப்படி நடந்துக்குவார்னு அவருக்கு மட்டுந்தான் தெரியும்… ஒருவேளை அவருக்குமே கூடத் தெரியாது” என்று சொல்வார். ஆனால் அவர் ஏதோவொரு ஒழுங்கில்தான் நடக்கிறார், அதை எங்களால்தான் உணர்ந்துகொள்ள முடியவில்லை என அவ்வப்போது தோன்றும். அதை எங்களுக்கு உணர்த்த அவர் எப்போதும் முயன்றதில்லை என்பது அவர்மீது மரியாதையையும் மெல்லிய வெறுப்பையும் ஒருசேர உருவாக்கியிருந்தது.
எங்கள் ஊரில் ஒரு சிவன் கோவிலும் ஒரு மாரியம்மன் கோவிலும் உள்ளது. மாரியம்மன் கோவில் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் உருவானது. சிவன் கோவிலோ நூற்றியைம்பது ஆண்டுகளுக்கு முன். அது உருவானதையே பெரிய கதையாகக் கூறிக் கொண்டிருக்கிறார்கள்.
காலை பத்து மணிக்கு மேல் வயலில் நிற்க முடியாதவாறு சூரியன் கொளுத்திய முன்பொரு காலம். காலையில் சேவல் கூவும் முன்பே எழுந்து வயலுக்குப் போனால்தான் கொஞ்சமாவது சீராக்க முடியும். எனவே, மறுநாள் காலைக்கும் மதியத்திற்கும் தண்ணீர் ஊற்றி வைக்குமளவிற்குச் சோறு வடித்து, மூன்று நாட்களுக்கு வருமளவிற்குப் புளிக்குழம்பைக் கொதிக்க வைத்து, அதை பொழுதடைந்தவுடனேயே சூடாக உண்ட பிறகு அடுத்த வீடுகளில் மோப்பம் பிடிக்கும் பூனைகளும் அவற்றையொத்த சிலரும் தவிர மற்ற அனைவருமே படுத்துவிட்டார்கள். அன்று பகலில் எப்போதையும்விட அதிக வெயில் என ஒவ்வொருவரும் உணர்ந்தாலும் “ரத்தம் சுண்டிப்போனா ஒரைப்பு அதிகமாத் தெரியும்” என கெக்கலிப்பார்களே என்பதற்காக யாரும் மற்றவரிடம் கூறவில்லை.
முதல் கனவின் தொடர்ச்சியாக கூரையில் கற்கள் விழுந்த சத்தம் மிக அதிகமாகக் கேட்டதும் திடுக்கிட்டு விழித்தார்கள். எழுந்து பார்த்தபோதுதான் மழை எனத் தெரிந்தது. மழையின் வேகம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்தது . சிறிது நேரத்திலேயே கட்டையைக் கொண்டு கூரையை விளாசுவது போன்ற சத்தம் கேட்க ஆரம்பித்ததும் கூரை தாங்குமா என்ற அச்சம் தோன்ற ஆரம்பித்தது. பக்கத்து வீடுகளில் இருப்பவர்களை அழைத்தபோதும் மழை சத்தத்தை மீறி குரல் வெளியே செல்லவில்லை. கண்மாய்க்கரை இந்த வேகத்தைத் தாங்குமா அல்லது கரைந்து வழிவிட்டு நீரை ஊருக்குள் அனுப்பி வைக்குமா என்ற கலவரம் மனதை ஆட்டுவித்தது. வீட்டிற்கு வெளியே ஓடிக் கொண்டிருந்த நீரைக் கண்டபோது தெப்பம் போல வீடு மிதப்பதான பிரமை தோன்றியது. எதிர் வீடுகளிலும் கதவைத் திறந்து நின்றவர்களின் முகங்கள் அவ்வப்போது வெட்டிய மின்னல் ஒளியில் வெளிறித் தெரிந்தது. ஒன்றும் யோசிக்கக்கூட முடியாத கையறு நிலையில் வீட்டில் இருந்தவர்களிடம் கூட எதையும் பேச வார்த்தையெழாமல் திகைத்திருந்தார்கள். மோப்பம் பிடிக்கச் சென்றவர்களின் முகத்தில் அசடை மறைத்து மழையின் நீர் வழிந்தது. நீர்த்துளிக்கு இத்தனை வேகம் இருக்குமா என நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இளம்பிள்ளைகள் கூட அழத் தோன்றாமல் விழித்திருந்தன. ஆல விழுதுகள் போல தாரைதாரையாக மழை இறங்கிக் கொண்டிருந்தது. மாலையில் நீலத்திரை போல வெறித்திருந்த வானத்தில் இவ்வளவு மழை பெய்யுமளவிற்கு மேகங்கள் எங்கிருந்து வந்திருக்கும். காவல்காரன் மடையைத் திறந்துவிட்டிருப்பானா அல்லது அவனும் திகைத்துப்போய் நிற்கிறானா. இல்லையில்லை… காவல்காரன் தைரியமானவானவன். ஊர்மீது அக்கறையுள்ளவன். நிச்சயமாக மடையைத் திறந்து விட்டிருப்பான் என இன்னொரு மனம் நம்ப விரும்பியது. தெய்வமல்லவே அவனும் மனிதன்தானே… நேரம் செல்லச்செல்ல கவலைப்படுவதால் எதையும் தடுக்க முடியுமா… என்ன நடக்க விதிக்கப்பட்டுள்ளதோ நிகழட்டும் பார்ப்போம் என்று எல்லோரும் ஒரு விரக்தி மனநிலையை அடைந்து விட்டார்கள்.
இரண்டு மணி நேரத்திற்கு பிறகு மழை நின்றது. ஆனாலும் வீட்டைவிட்டு யாரும் வெளியே வரமுடியாதவாறு நீர் ஓடிக் கொண்டிருந்தது. “எதுவாயிருந்தாலும் விடிஞ்சதும் பாத்துக்கலாம்பா… எல்லோரும் படுங்க” என்ற ஓங்கிய குரல் மெல்லியதாய் அனைவருக்கும் கேட்டது. அவ்வளவு நேரம் பதட்டத்தில் படபடத்திருந்த மனதிற்கு அந்த ஆசுவாச வார்த்தையே தேவைப்பட்டது. உடனேயே எல்லோரும் படுத்து தூங்கிவிட்டார்கள். இந்த மழையும் நீரும் கனவிலும் வருமளவிற்கு ஆழ்ந்த நித்திரை. அதுபோலொரு நிச்சலமான உறக்கத்தை எப்போதும் அடைந்ததில்லை என பிறகு பல நாட்கள் பேசித் திரிந்தார்கள்.
காலை புலரியின்போதே எழுந்த ஆண்கள் மட்டும் சென்று கண்மாயைப் பார்க்கப் போனார்கள். ஒழுங்கை, ஆற்றுப்படுகை போல மென்மணல் பரப்பாக வரியோடிக் கிடந்தது. இளங்குழவியின் சதைப்பரப்பென மிக மிருதுவாகத் தோன்றிய அதில் வைப்பதற்கே பாதத்தில் கூச்சம் எழுந்தது. சிறு தயக்கத்திற்கு பின் மூத்தவர் ராசு முதலடியை எடுத்து வைத்ததும் மற்றவர்களும் அடி பதிய நடந்து சென்றார்கள். எங்குமே தண்ணீர் தேங்கியிருக்கவில்லை. இரவு மழை பெய்தது என்பதற்கான சான்றாக நிலத்தின் தடமும் மரம் மற்றும் செடிகளின் பூரிப்புமே இருந்தது. அதுவும் இல்லையென்றால் அனைவரும் கண்ட ஒரே கனவு என்றே ஆகியிருக்கும். அத்தனை நீரும் எப்படி மாயமாக முடியும். எவருக்கும் பதில் தெரியாது என்பதை உணர்ந்ததால் மற்றவரிடம் யாரும் வினவவில்லை. வீண் பேச்சுகளால் மனதில் உறைந்திருக்கும் அமைதி விரைவாக கலைந்துவிடக்கூடும் என்ற எண்ணத்தால் பேசாமலிருந்து அதை நீட்டிக்க விரும்பினார்கள்.
இவர்கள் பயந்தது போல் அல்லாமல் கண்மாய்க்கரையில் எந்த விரிசலும் ஏற்படவில்லை என்பதை தூரத்திலேயே உணர்ந்தபோது மனம் ஆசுவாசமடைந்தது. ஒரு பக்கம் வயலும் மறுபக்கம் கொல்லையுமாக நீடித்த ஒழுங்கையில் நடந்தவர்களின் வேகம் மனதின் ஆவலுக்கேற்ப கூடிக் கொண்டிருந்தது. சற்று இடைவெளிவிட்டு நடந்தவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஒருத்தரை ஒருத்தர் உரசுமளவிற்கு நெருக்கமானார்கள். கரையில் ஏறியபோது பெருநடை ஓட்டமாக மாறியிருந்தது.
முதலில் ஏறியவர்களின் கண்களில் தெரிந்த பரவசத்தைக் கண்டதும் பின்னால் வந்தவர்களின் துடிப்பு அதிகமானது. ஏறியவர்கள் அத்தனை பேரும் கண்மாயின் நீரையே பார்த்துக் கொண்டு நின்றார்கள். கரையின் மேல்மட்டத்திலிருந்து ஒரு அடி கீழே வெண்நுரைக் குமிழிகளுடன் தளும்பிக் கொண்டிருந்தது நீர். கண்ணுக்கெட்டியவரை வெளிறிய மஞ்சள்நிற நீராலான விரிப்பு, காற்றால் லேசாக மேலெழுவதும் தாழ்வதுமாய் இருந்தது. நேற்று கண்மாய்க்குள் நின்ற கருவேல மரங்கள் அத்தனையும் நீருக்குள் மூழ்கியிருந்தன. அவற்றில் அமர்ந்து மீன்களைப் பிடித்துண்ட நாரைகளும் காகங்களும் கெச்சலிட்டுப் பறந்தலைந்தன. நீரின் அசைவினால், சில வினாடிகளில் இவர்களுக்குமே மேலும் கீழும் தளும்புவதான மயக்கம் தோன்றியது. காற்று சற்று வேகமாக வீசியபோது இவர்களின் கால்களில் சாரல் துமிகள் பட்டன. கரை ஏதோவொரு வாக்குக்குக் கட்டுப்பட்டதைப் போல கரைந்திடாமல் நிற்பதை உணர்ந்தனர். இவர்களின் எடையால் கரை சிறிது அழுந்தினாலும் தளர்ச்சியடைந்து நீர் கசியக்கூடும் என தோன்றிய கணம் அத்தனை பேரும் கீழே குதித்து இறங்கினர். அப்போதுதான் காவல்காரர் வேகமாக மூச்சிளைக்க ஓடி வந்தார். “ராவெல்லாம் வெளிய வரமுடியாம ஒடம்பு ஒரே காந்தலா இருந்துச்சுங்க. கைகாலெல்லாம் வெடவெடன்னு ஆடுச்சு. நம்ம அய்யனாருதான் கரையை ஒடையாம பாத்துக்கிட்டு ஊரக் காப்பாத்தியிருக்காரு…” என அய்யனார் நிற்கும் வடக்கு திசையை நோக்கி கும்பிட்டவாறு உள் மடைக்கு அருகில் இறங்கி மூழ்கினார். இருவர் அவருக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால் செய்வதற்கு ஏதுவாக அருகில் நின்றார்கள். இரண்டு நிமிடத்திற்குள்ளாகவே வாய்க்காலில் நீர் ஓடத் தொடங்கியது.
நீருக்குள்ளிருந்து வெளியே வந்து கரையில் ஏறி தலைமுடியிலிருந்து முகத்தில் வழிந்த நீரை கையால் வழித்தபடியே வந்தார் காவல்காரர். “ரெண்டடி கொறஞ்சதும் மடைய அடைச்சிடு. கரை தாங்கும். வயலுக்குள்ள போற தண்ணி சும்மாதானே காயும்..” என மூத்தவர் செல்லையா அவரிடம் கூறினார். ஆமோதிப்பாக தலையை ஆட்டிய காவல்காரர் “நம்ம சுப்பையாபிள்ளை கொல்லைக்குள்ள தண்ணி நெறைஞ்சு நிக்குது. நடுவுல நின்ன மூங்கிப் பொதரு சாஞ்சு கெடக்குது… வெரசா வந்ததால சரியா கவனிக்காம வந்துட்டேன்” என்று சொன்னார்.
எல்லோருக்குமே ஆச்சரியம் தாளவில்லை. சுப்பையாபிள்ளைக்குமேதான். திகைத்து நின்ற சுப்பையாபிள்ளையின் தோளில் கை வைத்து “வாங்க மச்சான் போயிப் பாப்போம்” என்று அசைத்து ஊக்கினான் ராமையா.
சுப்பையாபிள்ளையின் கொல்லை அரை ஏக்கர் பரப்பு கொண்டது. இது வானம் பார்த்த பூமியாக உள்ள வடக்கு கொல்லை எனச் சொல்லப்படும் பகுதியில் பலரின் கொல்லைகளுக்கு நடுவே இருந்தது. மற்ற எல்லோருடைய கொல்லைகளிலும் நெல்லும் வேர்க்கடலையும் மானாவாரிப் பயிராக விதைப்பார்கள். மழை கைகொடுத்தால் தானியம், இல்லையேல் பட்டுப்போன பயிர்கள் சாவியாக மாடுகளுக்கு ஆகும். சுப்பையாவின் கொல்லை விவசாயத்திற்குத் தன்னை ஒப்புக் கொடுக்கவில்லை. உழமுடியாத அளவிற்குக் கடினமான தரையாக இருந்ததால் அப்படியே போட்டுவிட்டார்கள். நிலத்தின் நடுவே மூங்கில் புதர் மட்டும் மண்டியிருந்தது. வீட்டு மனையாக மட்டுமே பயன்படுத்ததக்க இடம் ஊரைவிட்டு சற்று தள்ளியுள்ளதால் அடுத்த தலைமுறைகளில் வருபவர்கள் கட்டிக் கொள்ளட்டும் என இருக்கிறார்கள்.
பக்கத்திலிருந்த கொல்லைகளெல்லாம் ஈரமாக இருந்தபோதும் சொட்டுத் தண்ணீர் இல்லை. அந்தக் கொல்லையில் மட்டும் தண்ணீர் பழுப்பு நிறத்தில் தேங்கியிருந்தது. நடுவிலிருந்த மூங்கில் புதர் மொத்தமாக இணைந்தபடிக்கே பெருங்குதிர்போல அப்படியே சாய்ந்து கிடந்தது. தூர்பகுதியில் மண் கருப்பாக படிந்திருக்க வேர்களின் நுண்முனைகள் வெண்புழுக்கள் போல தோற்றம் கொண்டிருந்தன. சுப்பையா பிள்ளையும் ராமையாவும் முதலில் இறங்க தொடர்ந்து மற்றவர்களும் முழங்கால் அளவு தண்ணீருக்குள் நடந்து அருகில் சென்றார்கள். இருவருமே சட்டென திகைத்து நின்றார்கள். சாய்ந்து கிடந்த மூங்கில் வேர்களுக்கு அருகே கரும்பாறை ஒன்று நின்றது. இரண்டடி விட்டத்திற்கு வட்டமாக அரையாள் உயரத்திற்கு நின்றது. கருங்கல்லாக இருந்தபோதும் மிளிர்ந்து கண்களைக் கூச வைத்தது. மூங்கில் புதருக்குள் இருந்து அரை இஞ்சு கனத்த நான்கடி நீள கருநாகம் இவர்கள் நின்றதற்கு எதிர்பக்கமாக நீருக்குள் பாய்ந்து நழுவிச் சென்றதை அனைவருமே இமைக்காமல் பார்த்தார்கள்.
பத்து நாட்கள் அந்த நீர் வற்றாமல் அப்படியே கிடந்ததை பல ஊர்களிலும் இருந்து வந்து அதிசயமாக பார்த்துச் சென்றார்கள். இதனாலேயே பிறகு கோவில் எழுப்பியபோது பலரிடமிருந்தும் உதவிகள் எளிதாகக் கிடைத்தன.
கோவிலுக்கு அருகே தன் வழித்தோன்றல்கள் குடியிருக்க வேண்டும் என்பதற்காக அந்தக் கொல்லையில் பத்தில் ஒரு பங்கை மட்டும் தன் அடுத்த தலைமுறைக்கென வைத்துக் கொண்டு முழுதாக ஊருக்கு அளிப்பதாக சுப்பையாபிள்ளை கூறிவிட்டார். சுற்றி இருந்த கொல்லைக்காரர்களும் தங்களது இடத்தில் சிறு பகுதியை அளிக்க சிவன் கோவில் உருவானது. கோவில் உருவானபோதே ஊரும் கோவிலை நோக்கி நகர்ந்தது. சுப்பையாபிள்ளையின் மகன் சிங்காரவேலு கோவில் இடத்தை ஒட்டிய தங்கள் இடத்தில் வீட்டைக் கட்டினார். சிவன் கோவில் குடமுழுக்கு முடிந்த அடுத்த மாதத்தில் குடிபுகுந்தார்.
சுப்பையாபிள்ளையின் எட்டாவது தலைமுறை வாரிசுதான் என் அப்பா ஜான் செல்வராஜ். இப்போது நடுத்தர நகரமாக இருக்கும் எங்கள் ஊர் முன்பு விவசாய ஊராக இருந்தது என்பதை பெரும் கற்பனை திறன் இருப்பவரால்தான் ஏற்க முடியும். அப்பா சிவன் கோவில் உருவான கதையைக் கூறியபோது கண்மாய் எந்த இடத்தில் இருந்திருக்கும் என யோசித்து இரண்டு நாள் தலைவலியோடு கிடந்ததுதான் மிச்சம். கணிக்கக்கூட முடியவில்லை.
ஒரு பண்டிகைக் கொண்டாட்டம்தான் இந்தப் பிரச்சனைக்கான தொடக்கமாக அமைந்தது என்பது முரணான ஒன்றுதான். ஆனால் கால மாற்றத்தில் நடப்பதெல்லாமே முரணாகத்தானே உள்ளன. பழைய அரசுகளெல்லாம் பிரிந்து கிடந்த மக்களை இணைத்து அதன் மூலம் கிடைத்த பலனை அடைந்தார்கள். மக்களுக்கும் அதனால் பயனிருந்தது. நவீன அரசுகள் தாங்கள் லாபம் அடைவதற்காக இயைந்திருக்கும் மக்களின் மனதில் பிரிவினையை விதைத்து பிரிக்கிறார்கள்.
மூன்று ஆண்டுகளுக்கு முன் கிருஸ்துமஸ் தினம். இரவெல்லாம் பக்கத்து ஊரிலிருக்கும் தேவாலயத்திற்குச் சென்று பிரார்த்தனையும் ஊழியமும் செய்துவிட்டு விடிகாலையில்தான் வீட்டிற்கு வந்தோம். என் நண்பர்களுக்கெல்லாம் அன்று எங்கள் வீட்டில் விருந்து என்பது சில வருட முறைமை. நண்பர்களில் பெரும்பாலானவர்கள் சிவன் கோவிலுக்குச் செல்பவர்கள். அவர்கள் நெற்றியில் எப்போதும் திருநீறின் தீற்றல் சிறிய அளவிலேனும் அழியாமல் இருக்கும். அவர்கள் எங்கள் வீட்டிற்குள் எந்தச் சங்கோசமுமின்றி புழங்குவார்கள்.
அன்று காலை சிற்றுண்டி முடித்தவுடன் வழக்கம் போல வீட்டின்முன் பட்டாசுகளை வெடித்தோம். அப்போது அடுத்த வார்டு கவுன்சிலர் கோவிலுக்குப் போய்விட்டு வந்தார். நண்பர்களில் சிலர் கவுன்சிலரின் பகுதியைச் சேர்ந்தவர்கள். பட்டாசு வெடித்தபடியே சத்தமாக களிப்புடன் பேசிச் சிரித்துக் கொண்டிருந்தோம். அவர் எங்களை முறைத்தபடியே சென்றார். அவரைப் பற்றி எதுவும் சொல்லி நகைப்பதாக எடுத்துக் கொண்டார் என எனக்குத் தோன்றியது. அவர் பகுதியைச் சேர்ந்த சத்யாவிடம் அதைக் கூறினேன். “அவனுங்க கட்சிக்கு யாரும் சேர்ந்திருந்தாலே பிடிக்காது. அதுவும் ஒங்க வீட்ல நின்னு கொண்டாடுறோமே. பாத்ததும் பத்திக்கிட்டு எரியத்தானே செய்யும். ப்ரீயா விடு மச்சான்…” எனக் கூறிவிட்டான்.
ஆனால், அவர் எளிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்பதை பத்து நாட்களுக்குப் பிறகு கோவில் செயல் அலுவலரிடமிருந்து வீட்டிற்கு நோட்டீஸ் வந்தபோதே தெரிந்தது. அதில், நாங்கள் கோவில் இடத்தை ஆக்கிரமித்துள்ளதாகவும் மூன்று மாதங்களுக்குள் காலி செய்ய வேண்டும் எனவும் தவறினால் சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அப்பா விளக்கமளிக்கச் சென்றபோது வேறு மதத்தைச் சேர்ந்தவராக இருந்து கொண்டு நிலத்தையும் ஆக்கிரமித்துள்ளதாக கடும் வார்த்தைகளில் கூறினார்களாம். நாங்கள் காலி செய்யாததால் நீதிமன்றத்தில் வழக்கு பதியபட்டது. நீதிமன்றத்திலும் எங்கள் வாதங்கள் ஏற்கப்படவில்லை. சுப்பையாபிள்ளையின் வாரிசாக ஜான் செல்வராஜ் எப்படி இருக்க முடியும் என்ற முன்முடிவுக்கு அவர்கள் வந்துவிட்டதால் எங்கள் விளக்கங்களைக் கேட்கவோ ஆவணங்களைச் சரியாக பார்க்கவோ இல்லை.
முறைமையே அப்படித்தானோ அல்லது புத்திசாலித்தனமா என்று தெரியவில்லை, கோவில் நிலத்தை உண்மையாகவே ஆக்கிரமித்திருந்த நான்கு பேரோடு ஐந்தாவதாக அப்பாவையும் இணைத்திருந்தார்கள். முதல் நான்கு பேரின் ஆவணங்கள் அவர்கள் ஆக்கிரமித்துள்ளதைப் பட்டவர்த்தனமாக காட்டும்படி இருந்தது. ஐந்தாவதாக எங்கள் ஆவணங்களைப் பார்க்கத் தொடங்கும்போதே இதுவும் அப்படித்தான் இருக்குமென்ற எண்ணத்துடனேயே அணுகும்படி அமைந்துவிட்டது.
“நீதிபதி என்பதும் ஒரு பதவிதானே… அதில் அமர்ந்திருப்பவரும் ஆசாபாசங்களும் தனக்கென தனிப்பட்ட உணர்வுகளும் கொண்ட மனிதர்தானே” என கோவில் இடத்தை விட்டு அந்த நான்கு பேரோடு எங்களையும் வெளியேற்ற வேண்டுமென தீர்ப்பு வந்தபோது அப்பா கூறினார்.
இங்கேயே மேல்முறையீடு என யோசித்தபோது, ஒரு வழக்கின் மேல்முறையீட்டை முதலில் விசாரித்த அதே நீதிபதிதான் விசாரிப்பார் என்ற முறைமை தெரிந்தது. எங்கள் வழக்கறிஞர்தான் உச்சநீதிமன்றத்தில் சிறப்பு மனு தாக்கல் செய்யும் யோசனையைக் கூறினார். டெல்லியில் இருக்கும் அவரது உறவினரான மூத்த வழக்கறிஞர் சந்தானகோபாலிடம் பேசி அதற்கான ஆயத்தங்களைச் செய்தார்.
இப்போது உச்சநீதிமன்ற வழக்குக்கான எல்லா ஆவணங்களையும் ஸ்கேன் செய்து மென்நகலாக இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்பதாக மாறிவிட்டது. ஒருநாள் வழக்குரைப்பதற்கான தொகை சில லட்சங்களாக இருந்தபோதும் இந்தப் பதிவேற்றலுக்கான தொகை தனியாம். எளியோர்கள் எளிதாக அணுக முடியாதவாறு முறைமைகளைக் கடினமானவையாக மாற்றிக் கொண்டே இருக்கிறார்கள். எல்லாப் பத்திரங்களையும் ஆதாரங்களையும் எடுத்துக் கொண்டு அப்பாவும் நானும் ஒரு மாதத்திற்கு முன் டெல்லிக்கு வந்தோம்.
சந்தானகோபால் அனுபவம் வாய்ந்த மூத்த வழக்கறிஞர் என்பதால் பலரும் அவரிடம் தங்கள் வழக்குகளை ஒப்பளித்திருந்தனர். மூன்று மாடிக் கட்டடம் ஒன்றில் தரைத் தளம் முழுவதையும் தன் அலுவலமாக மாற்றி வைத்திருந்தார். இருபது பேர்களுக்கு மேல் அவருக்கு உதவியாளர்கள் இருந்தார்கள். உதவியாளர்களிடம் மேல் கீழ் என பல படி நிலைகள் இருந்தது. வழக்கின் சுருக்கத்தை எங்கள் சென்னை வழக்கறிஞரே கூறியிருந்ததால் சந்தானகோபாலை அலுவலகத்திற்குச் சென்று சந்தித்தபோது “கண்டிப்பா ஜெயிச்சிடலாம்” என்று சொல்லிவிட்டு தன் உதவியாளர்களைக் கை காட்டி “அவங்க வழி காட்டுவாங்க. டாக்குமென்ட்ஸ முதல்ல அப்லோட் பண்ணுங்க. அதுக்கப்புறம் பாத்துக்கலாம்” என்று கூறியபடி காத்திருந்த அடுத்த நபரிடம் பேசத் தொடங்கிவிட்டார். அவரின் உதவியாளர்கள் பல வழக்குகளுக்கும் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள். அங்கு நடந்து கொண்டிருந்ததைக் கண்டபோது கரையான் புற்று போல என்ற எண்ணம் தோன்றியது. வியப்புடன் அவ்வெண்ணத்தைக் கூர்ந்தபோதுதான் இங்கும் அங்குமாய் வெவ்வேறு பணிகளுக்கு ஒரே நேரத்தில் விரைந்தோடிக் கொண்டிருந்த உதவியாளர்கள்தான் கரையான்கள் எனப் புரிந்தது. நாங்கள் கொண்டு சென்றவற்றை வரிசைக்கிரமாக ஸ்கேன் செய்து கொண்டிருப்பவன் யாரோ அவன் பெயரை அழைத்ததும் அப்படியே விட்டுவிட்டுச் செல்வான். நாங்கள் வெறுமனே அமர்ந்திருப்பதைக் கண்டு வேறொருவன் வந்து விசயத்தைக் கேட்டு ஸ்கேன் செய்வான். கணினியில் ஏற்கனவே சேமிக்கும் அதே கோப்பில் சேமிக்கிறானா என மனதில் பதட்டம் தோன்றும். எங்கள் முகத்தைப் பார்த்துவிட்டு “பயப்படாதீங்க… எங்கேயும் போகாது” என்று கூறியவாறு தன் பணியைச் செய்வான்.
எல்லாவற்றையும் ஸ்கேன் செய்வதற்கு மூன்று நாட்களானது. அதன் பிறகு உச்சநீதிமன்ற இணைய தளத்தில் பதிவேற்றம். அதற்கு ஒரு வாரம் பிடித்தது. இணையத்தில் பதிவேற்றம் என்பது சம்மந்தப்பட்டவரின் ஊழினைப் பொருத்தது. பல சமயங்களில் தீயூழின் பிடியே இருக்கும். ஏதோவொரு சிறுசிறு பிசகுகளால் நிராகரிப்பே நிகழ்ந்து கொண்டிருக்கும். மனம் மிகச் சோர்ந்து தளர்ந்து இது தேவையா என்று யோசனை தொடங்கும்போது பச்சை டிக் தோன்றும். வழக்கில் வெற்றி பெறும்போது அடையும் மகிழ்ச்சிக்கு இணையானதே பதிவேற்றம் வெற்றிகரமாக ஏற்கப்பட்டபோது அடைந்த மகிழ்ச்சி. இந்த விவரங்களையெல்லாம் அப்பா அம்மாவிடம் தொலைபேசியில் தெரிவித்தார். அதுவும் பதிவேற்றம் முடிந்தது என்ற விவரத்தைக் கூறியபோது இருபக்கமும் பெரும் மகிழ்வு தெரிந்தது.
இந்தப் பணிகளில் ஈடுபட்டிருக்கும்போதும் மனதினுள் பல கேள்விகள் வண்டு போல் குடைந்து கொண்டேயிருந்தன. உச்சநீதிமன்றத்திற்கு இந்த ஆதாரங்கள் போதுமானவையா. ஒரு நிரபராதிதான் தன்னை நிரபராதி என நிரூபித்துக் கொள்ள வேண்டும் என்பது எத்தனை துயரமிக்கது. நாங்கள் வழக்கில் வெற்றி பெற்றாலும் எங்கள் எதிரிக்குத் தோல்வியில்லை. எங்களை நிம்மதியிழக்கச் செய்ய வேண்டுமென்ற நோக்கம் நிறைவேறிவிட்டதல்லவா. ஆனால், தீர்ப்பு எதிராக வந்தால் எங்கள் நிலைமை… கையறு நிலையில் நிற்பதை எண்ணும்போதே பகீரென்றிருந்தது. அப்பாவின் முகம் அப்போதும் எதையும் வெளிக்காட்டாமலே இருக்கக்கூடும். குற்றம்சாட்டியவன் எந்த மனக்கிலேசமுமின்றி உலவ, எந்தத் தவறும் புரியாத நாங்கள் தவித்தலைவதுதான் நவீன நீதிமுறையா… என்ற கேள்வி எழுந்தபோது தொலைகாட்சியில் பார்த்த ராமாயணம் தொடரின் சீதையின் முகம் நினைவில் தோன்றியது.
இரண்டு நாட்களுக்குப் பிறகு பதிவேற்றிய மிகப் பழையதாக இருந்த ஆவணங்களெல்லாம் ஸ்கேன் செய்தபோது கருப்படித்ததாக தெளிவில்லாமல் இருப்பதால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என சந்தானகோபாலின் முதன்மை உதவியாளர் சொன்னார். அவற்றினை புதிதாக அதேபோல் தட்டச்சு செய்து இணைக்க வேண்டும் எனக் கூறி தட்டச்சு செய்ய வேண்டியவை என இருபத்தியைந்து பக்க எண்களைக் குறித்துக் கொடுத்தார். “இங்கிருக்கும் இள உதவியாளர்கள் பலருக்கு சரியான விவரம் தெரியவில்லை” என்று அலுப்புடன் கூறியபடி நாங்கள் மேற்கொண்டு எதுவும் கேட்பதற்கு முன்பே சாதுர்யத்துடன் நகர்ந்துவிட்டார்.
சென்னையில் என் நண்பன் பாலுவின் அப்பா டிடிபி மையம் வைத்திருந்தார். அவரிடம் விசயத்தைக்கூறி அவரின் நான்கு பணியாட்கள் மூலம் விரைவாக தட்டச்சு செய்யக் கோரினேன். பழைய ஆவணங்களின் எழுத்துருக்கள் வித்தியாசமாகவும் வேறுவேறு குறிகளாகவும் இருந்ததால் அவற்றை புரிந்து வாசித்து அடிப்பது கடினமான பணியாகவே அமைந்தது. பழைய எழுத்துருக்களை நண்பனின் அப்பாதான் வாசித்துச் சொன்னாராம். இரண்டு நாட்களில் முடித்து மின்னஞ்சலில் அனுப்பிவிட்டு கூறினார்.
ஏற்கனவே ஸ்கேன் செய்திருந்த கோப்பில் சரியில்லாதவற்றை நீக்கி அவ்விடத்தில் இப்போது தட்டச்சு செய்ததைக் கோர்க்கும் வேலை இரண்டு மணி நேரம் நடந்தது. மீண்டும் பதிவேற்றுவதற்கான பணி ஆதியிலிருந்து தொடங்கியது. அந்நேரம் முதன்மை உதவியாளர்களில் மற்றொருவர் வந்து “தமிழ் கோப்புகளைப் பதிவேற்றக் கூடாது. மொத்தமும் ஆங்கிலத்தில்தான் இருக்க வேண்டும்..” எனக் கூறினார். உடலினுள் ரத்தம் சூடானதை உணர்ந்தேன்.
“இத்தனை நாட்களாக ஏன் தெரிவிக்கவில்லை…” எனக் கேட்டேன்.
கோபத்தைப் பெரிதாக கண்டு கொள்ளாமல் “பழைய எழுத்துருக்களை ஆங்கிலமென்று நினைத்துவிட்டார்கள். இப்ப இதை மொழிபெயர்ப்பதற்கான வேலையைப் பாருங்க” என்று கூறியபடி நகர்ந்தார். அப்பா என் தோள் மேல் தன் வலது கையை வைத்து லேசாக அழுத்தியதால் மேற்கொண்டு பேசாமல் அடுத்து செய்ய வேண்டியதை யோசித்தேன். “இவங்க கையில பல வழக்குங்க இருக்கு. ஒன்னு கொறையிறதுல பெரிய நஷ்டமில்லை. ஆனா நமக்கு, இருக்குற ஒரே வழக்கை ஜெயிக்கனும்ல” என்று அப்பா அம்மாவிடம் மாலை பேசுவார் எனத் தோன்றியது.
சந்திரனையும் ஜோசப்பையும் அழைத்து விவரத்தைக் கூறினேன். அவர்கள் மொழிபெயர்க்க வேண்டியதை அனுப்பி வைத்தேன். கூகுள் உதவியுடன் ஆங்கிலத்திற்கு மாற்றும் வேலையைத் தொடங்கினோம். முதலில் ஒவ்வொரு பத்தியாக நகலெடுத்து மொழி மாற்றி அதை மீண்டும் நகலெடுத்து இன்னொரு கோப்பில் ஒட்டி முடித்தோம். இதற்கே இரண்டு நாட்கள் ஆனது. அடுத்த இரண்டு நாட்கள் முதலிலிருந்து வாசித்து முன்பின்னாக மாறியிருந்த சொற்களைப் பெரிதாக அர்த்தம் மாறி விடாத அளவிற்குப் பார்த்து ஒழுங்கு செய்ததில் அப்பாவின் பங்கும் கணிசமாக இருந்தது. வழக்கிற்கான ஆவணம் என்பதால் ஐந்தாம் நாள் அப்பா மட்டும் மொத்தமாக மீண்டும் ஒருமுறை வாசித்து சரி பார்த்து சிறு திருத்தங்களைச் செய்தார்.
மீண்டும் பதிவேற்றமெனும் படிக்கட்டு. இப்போது தடைகளைப் பற்றிய போதம் இருந்ததால் நிராகரிப்பையும் ஏற்றுக் கொள்ள மனம் பழகிவிட்டிருந்தது. இந்த முறை எட்டாவது தடவையே பச்சை டிக் வந்ததை கூறியபோது அப்பா முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது. கடந்த முறை பத்தாவது முயற்சியில்தான் பச்சை டிக் வந்திருந்தது.
விசாரணைக்கு வர எப்படியும் பத்து நாட்கள் ஆகும் என்று கூறினார்கள். ஊருக்குச் சென்று வருவதில் அப்பாவுக்கு விருப்பம் இல்லாததால் டெல்லியிலேயே தங்கினோம். சுற்றுலாத் தலங்களுக்குச் செல்வதற்கான மனநிலை இல்லாததால் நான் மட்டும் சாலைகளில் வெறுமனே சுற்றினேன். பெரிய பெரிய புதிய கட்டடங்களுக்கு மத்தியில் பழைய கட்டடங்களும் இருந்தன. சாலையோரங்களில் புங்கை மரங்களும் கொன்றை மரங்களும் அடர்ந்து நிழல் பரப்பிக் கொண்டிருந்தன. அவற்றின் இலைகளில் தூசிபடிந்து அழுக்காக திரண்டிருந்தன.பல்லடுக்கு வீடுகளின் பால்கனிகளில் தொட்டிகளிலிருந்த செடிகள் செழித்திருந்தன. மிக நவீன வாகனங்களுடன் தள்ளு வண்டிகளும் போட்டியிட்டு நகர்ந்தன. பெரிய உணவகங்களுக்கு முன்பாக நின்ற வண்டிக்கடைகளிலும் பலர் தட்டுகளைக் கையில் பிடித்தபடி உண்டு கொண்டிருந்தார்கள். அவசரமில்லாத பொழுதும் கண்டுணரும் மனமும் வாய்த்தால் இந்தியாவின் அத்தனை விதமான வேற்றுமைகளையும் ஒற்றுமைகளையும் ஒருசேர பார்த்துவிட முடியும் என்று தோன்றியது. இந்தியாவின் முதன்மையான நகரமே மிகப் பழமையான நகராகவும் அமைந்துள்ளதை எண்ணியபோது மனதில் விகசிப்பு தோன்றி சில நிமிடங்கள் நீடித்தது.
நீதிபதி வந்ததும் விசாரணை தொடங்கியபோது மனம் பதட்டத்தில் வேகமாகத் துடித்தது. அழுத்தமான விவரங்களை அளித்ததாலேயே எங்களது மேல்முறையீடு ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது. இருதரப்பு விவாதங்களைக் கேட்பதற்கு முன்பே நீதிபதி ஒரு முடிவுக்கு வந்துவிட்டார் என்றே தோன்றியது. எனவே, நீண்ட விவாதங்களலெல்லாம் நடக்கவில்லை. தமிழக அரசு வழக்குரைஞர் தனது கருத்தைக் கூறியபிறகு சந்தானகோபால் எங்கள் ஆதாரங்களை முன்வைத்து எங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக அழுத்தமாகக் கூறினார். இதனை எப்படித் தவறவிட்டீர்கள். “நிலத்தை அளித்தவர்களையே ஆக்கிரமித்தவர்கள் என எப்படிக் கூறுகிறீர்கள்…” என அரசு தரப்பு வழக்கறிஞரைக் கேட்டபோதே தீர்ப்பு என்னவென்று எல்லோருக்குமே தெரிந்துவிட்டது.
அன்று இரவே சென்னை வந்து ஊருக்குத் திரும்பினோம். அப்பா முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தாலும் சிரிப்பாக மலரவில்லை. இத்தனை நாள் அலைக்கழிப்பின் தாக்கம் என்று எண்ணினேன். மறுநாள் நாளிதழ்களில் நான்காம் பக்கம் மூன்று பத்திகளில் “தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் குட்டு” என்ற தலைப்பில் இச்செய்தி வெளிவந்தது. நண்பர்கள் மற்றும் உறவினர்களின் அழைப்புகள் வந்து கொண்டேயிருந்தன. நானும் அம்மாவும்தான் அவர்களின் வாழ்த்துகளைப் பெற்றுக் கொண்டிருந்தோம்.
அப்பா காலையிலேயே வெளியே சென்றுவிட்டு கையில் சில பத்திரத்தாள்களோடு மத்தியானம்தான் வந்தார். அவற்றை, ஏசு படத்தின் முன்பிருந்த பீடத்தில் வைத்துவிட்டு அருகிலிருந்த மெழுகுவர்த்தியை ஏற்றினார். தேவகுமாரனைப் பார்த்தபடியே தரையில் முழங்காலிட்டு பிரார்த்தனை செய்தார். சில நிமிடங்களுக்குப் பின் சிலுவையிட்டுக் கொண்டு எழுந்தவர், புரியாமல் பார்த்த என்னையும் அம்மாவையும் நோக்கி “இந்தச் சொத்த கோயிலுக்கே எழுதிக் கொடுக்கப் போறேன். நாளைக்கு காலையில ரெஜிஸ்டர் ஆபீஸ்க்கு போகனும். தயாராயிடுங்க…” என்று சொன்னார். ஒரு கணத்தில், இதனால் எதிரி அடையப்போகும் அரசியல் லாபத்தை நோக்கிச் சென்ற என் மனதை, அப்போது அப்பாவின் முகத்தில் திகழ்ந்த அவருடைய பிரத்யேகமான அற்புதப் புன்னகை தடுத்தாட்கொண்டது.