செல்சி நீலம்

லிம் ஜுன் லோங்

”Do you know Chelsea Blue?”அப்பா இறுதி மூச்சை விடுவதற்கு முன் என்னிடம் கடைசியாகக் கேட்டது அதுதான். அப்போது அப்பாவின் குரல் ஓர் உரோமம் கீழே உதிர்வது போல எடையற்று ஒலித்தது.

“செல்சி நீலம்” நான் பலமுறை சொல்லிப்பார்த்தேன். அது முதலில் ஏதோ அதிகாலையில் இரகசியமாகச் சந்திக்கும் காதலர்களுக்கிடையே எழும் ஏக்கப் பெருமூச்சுபோல ஒலித்தது. அதன் ஓசை மர்மமானது. சேர்ந்திருக்கும் அந்த இரண்டு ஆங்கிலச் சொற்களும் தரும் உண்மை  அர்த்தம் எனக்குப் புரியவில்லை என்றாலும்கூட அதை ஒரு நாவலின் தலைப்பாக வைக்கலாம் எனத் தோன்றியது. ஒருவேளை அது ஏதோ ஒரு பாடலின் தலைப்பாகவோ, அல்லது ஒரு வகை மாணிக்கத்தின் பெயராகவோகூட இருக்கலாம்.

அப்படி இல்லாமலும் இருக்கலாம். எது எப்படி இருந்தாலும் ‘செல்சி’ என்ற  சொல் பலருக்கும் லண்டனில் உள்ள உலகப் புகழ் பெற்ற ஒரு காற்பந்து அணியை  நினைவூட்டக்கூடும். அந்தக் காற்பந்து அணியின் சீருடையும் நீல நிறம்தான். அது நாம் அடிக்கடி பயன்படுத்தும் சங்குப் பூவின் நீலத்தை ஒத்தது.

அப்பா அந்தக் காற்பந்துக்குழுவைப் பற்றித்தான் பேச வந்திருக்கிறார் என நினைத்தேன். ஆனால், அவர் இறக்கும் தறுவாயில் அந்தக் காற்பந்துக் குழுவைப் பற்றிப் பேச என்ன காரணம் இருந்திருக்கும் எனப் புரியவில்லை.  ஒருவேளை நான் அந்தக் காற்பந்துக்குழுவின் மேல் பந்தயம் கட்டி வெற்றியடைய வேண்டும் என நினைத்தாரோ? ஆனால், அந்த அணி சரியாக எந்தத் தேதியில் எப்பொழுது வெற்றியடையும் என்பது குறித்து  அப்பா என்னிடம் தெரிவிக்காத பட்சத்தில் அக்குழு எப்போது வெல்லும் என்பது எனக்கு எப்படித் தெரியும்?

அப்பா முன்பு என்னிடம் அவர் அனுபவத்திலிருந்து நிறையக் கதைகளைக் கூறியதுண்டு. அப்பா கூறிய ஒவ்வொரு கதையும் ஒரு துளி நீர் என்று கணக்கிட்டாலும் மொத்தத்தில் அவை ஓர் ஆற்றின் நீர் போல் பெருகக்கூடியவை. சில இரவுகளில் அந்த நதிக்கரையின் ஓரமாக நின்று  சில குவளை  நீரை அள்ளி எடுத்துப் பார்க்கிறேன். செல்சி நீலத்தில் என்னதான் உள்ளது? உண்மையில் அப்பாவுக்கு ஒரு காற்பந்து அணியின் வெற்றியைக் கணிக்கும் ஆற்றல் உள்ளதா எனத் தேடிப் பார்த்துவிட்டேன். இல்லை என்பதுதான் துரதிர்ஷ்டவசமான பதில். ஆனால் எதிர்பாராவிதமாக நான் வேறொன்றைக் கண்டுபிடித்தேன். செல்சி நீலம் என்பது ஒரு பூனையின் பெயரோடு தொடர்புடையதாக இருக்கலாம் என்று தோன்றியது.

அந்தப் பூனை அப்பாவிடம் பாதிப்புகளை மட்டும் விட்டுச் செல்லவில்லை.  கூடுதலாக ஒரு மீடியத்துடன் (மீடியம் என்பது மனிதர்களுக்கும் ஆன்மாவுக்கும் இடையில் தொடர்பை ஏற்படுத்துபவர்கள்) மோதலில் ஈடுபட்டிருந்தது என்பது பாதி உண்மையாக இருக்கலாம். அந்த மீடியம் சர்வ நிச்சயமாக என் அப்பா இல்லை, ஆனால் என் அப்பாவின் அப்பா.

பாட்டி  இரட்டைக்குழந்தைகளைப் பெற்றெடுத்தார். அதில் மூத்தவர்தான் என் அப்பா. சில கனங்கள் கழித்து என் சித்தப்பா பிறந்தார். அப்பா கழுத்தில் கொடி சுற்றிப் பிறந்தார். அந்தத் தொப்புள் கொடி வெட்டப்பட்ட பிறகும் பலவீனமாக இருந்த அப்பா பின்னர் சில நிமிடங்களில் இறந்தார்.

பிரசவம் பார்த்த சீன மருத்துவர் பதற்றமடைந்தார். அவர் அப்பாவைத் தலைகீழாகப் பிடித்து பிட்டத்தில் அடித்தார். அவர் எவ்வளவு முயன்றும்  அப்பாவிடம் எந்த எதிர்வினையுமில்லை. மாறாக அருகில் தாதியின் கையில் இருந்த என் சித்தப்பாதான் வேகமாக அழுதார். இறுதியாக என் அப்பா இறந்துவிட்டதாக மருத்துவமனை உறுதிசெய்து இறப்பைப் பதிவு செய்தது.

மகிழ்ச்சியும் துக்கமும் என் தாத்தாவின் குடும்பத்தை அலைக்கழித்தது. குழந்தையே இல்லாத என் தாத்தா, பாட்டிக்கு இரட்டைக்குழந்தைகள் பிறந்து பின்னர் அதில் ஒன்று இறந்திருந்தது. அத்துக்கம் அவர்களின் இன்பத்தை விழுங்கிவிட்டிருந்தது. மருத்துவமனையிலிருந்து வெளியேறும்போது அந்தத் தம்பதிகள் ஆளுக்கொரு குழந்தையை ஏந்தியிருந்தனர். அதில் ஒரு குழந்தை அழுது கொண்டிருந்தது. இன்னொன்று ஆழ்ந்து உறங்குவதுபோல இருந்தது.  பாட்டி கையிலிருந்த சித்தப்பா விடாமல் உரக்க அழுதுகொண்டிருந்தார்; அப்பா தாத்தாவின் அணைப்பிலிருந்தார்.

வீடு திரும்பும்வரை இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவில்லை. மூச்சுப் பேச்சின்றி சவம்போல வந்துகொண்டிருந்தார்கள். இறப்புக்கான இறுதிக் காரியங்களைச் செய்வதா அல்லது  தங்களுக்கு மகன் பிறந்திருப்பதைக் கொண்டாடுவதா எனும் குழப்பத்தில் மூழ்கிப்போயிருந்தனர். “உண்மையான குரலைவிடவும் இறப்பின் குரல் வலிமையானது,” பாட்டி சொன்னார்.

ஒரு தாவோ மத குருவான (சேக்கோங்) என் தாத்தா, தீவிரச் சிந்தனைக்குப் பின் ஒரு வழியாகத் தனது இளைய மகனின் பிறப்பை ஏழு நாட்கள் கழித்துக் கொண்டாட முடிவெடுத்தார். அதற்கு முன்னதாக மிக எளிய முறையில் என் அப்பாவுக்கான இறுதிச் சடங்கைச் செய்து அவரது ஆன்மாவை அழைக்க முடிவெடுத்தார். துக்கத்தை முதலில் அனுசரித்துவிட்டு பின்னர் அந்த துரதிர்ஷ்டமான உணர்வலையை  ஒரு கொண்டாட்டத்தின் வழி சுத்தம் செய்வதுதான் தாத்தாவின் திட்டம்.

ஆனால், இறுதிச் சடங்கின் இரவில்தான் யாருமே எதிர்பார்க்காத ஒரு சம்பவம் நடந்தது. சிறிய ஓர்க் மரப் பெட்டியில் இருந்த அப்பா மீண்டும் உயிர் பெற்றார். அழுகுரல் கேட்டு சவப்பெட்டியின் அருகில் காவலில் இருந்த தாத்தா  எழுந்துகொண்டார். அழுகுரல் தொடர்ந்து கேட்டதால் தனது இளைய மகன்தான் பசியில் பாலுக்கு அழுகிறான் என நினைத்தார். அவர் வேகமாகப் பாட்டி இருந்த அறைக்குச் சென்றபோது அங்குச்  சித்தப்பா  பாட்டியின் பக்கத்தில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தார். தாத்தா அறையைவிட்டு வெளியே வந்தபோது ஒரு கரிய நிழல் அப்பாவின் பிணம் கிடத்தி வைக்கப்பட்டிருந்த வரவேற்பறையிலிருந்து  வேகமாக வெளியேறிக்கொண்டிருந்ததைக் கண்டார்.  தாத்தா அந்த நிழலை விரட்டிக்கொண்டு ஓடினார். அந்தக் கரிய நிழல் வீட்டின் ஓரம் இருந்த வேலிக்கு அருகில் நிதானமாக நின்று மெல்லத் திரும்பி வீட்டினுள் பார்த்துவிட்டு புதருக்குள் மின்னல்போல மறைந்தது.

தாத்தாவுக்கு உடனே புரிந்துவிட்டது. வளர்ப்பார் இல்லாத அந்தப் பூனை அப்பாவுக்கு உயிர் கொடுப்பதற்காக  எங்கிருந்தோ, மக்களைவிட மாடுகள் அதிகம் உள்ள அந்தக் கம்பத்துக்குள் வந்ததுள்ளது.  என் அப்பா உயிர்பெற்றதை அறிந்த  என் பாட்டி அவரை அள்ளி அணைத்துக்கொண்டு  ஓவென்று அழுதார். அவர் அழுவதைப் பார்க்கக் கிட்டத்தட்ட அப்பா மீண்டும் இறந்துவிட்டது போலவே இருந்தது. ஆனால் தாத்தாவால் அந்தப் பூனையின் கூரியப் பார்வையை மறக்க முடியவில்லை. பச்சை நிற ஒளிக்கீற்றை வெளிப்படுத்திய அந்தக் கண்கள் அச்சமூட்டுபவை. என் தாத்தா, ‘சேக்கோங்’ ஒருவர் தன் வாழ்வில் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய சாங்கிய சம்பிரதாயங்களை நூறு விழுக்காடு நம்புபவர்.  அது கறுப்புப் பூனை என்பதால் சொல்லவே வேண்டாம். மிகவும் விநோதமாக இருந்தது. தாத்தாவைப் பொருத்தவரை, மீண்டும் உயிர்பெற்ற அப்பாவின் உடலுக்குள் இருப்பது அசலான ஆத்மா அல்ல, என்று கருதுவது அவருக்கு அதீதமாகத் தோன்றவில்லை.

அவர் என் அப்பாவை உடனடியாகக்  கைவிட்டுவிட நினைத்தார். அந்த  எண்ணத்தைப் பாட்டியிடம் சொன்னார். தன் குழந்தை உயிர் பெற்றுவிட்ட மகிழ்ச்சியில் சிரித்துக்கொண்டிருந்த பாட்டிக்கு அந்நேரத்தில் பெரும் கோபம் எழுந்தது.

“உங்களுக்கு என்ன பைத்தியமா? பிள்ளை திரும்பி வந்துவிட்டதற்குக் கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்.  அவனை எப்படி  நாம் கைவிட முடியும்?”

அப்பாவை இறுக அணைத்தபடி பாட்டி தேம்பித் தேம்பி அழுதுகொண்டிருந்தார்.

“இவன்  என் அன்புக்குரிய குழந்தை!” அவரது உடலின் குழந்தை ஓர்  உறுப்பாகி விட்டதுபோல இருந்தது அவர் செயல். 

ஓயாமல் அழுதுகொண்டிருக்கும் பாட்டியை அதற்கு மேலும் வற்புறுத்தத் தாத்தா விரும்பவில்லை. ஆனால், அன்று முதல் அப்பாவிடம் கடுமையை மட்டுமே காட்டினார் தாத்தா. ஒருபோதும் அப்பாவிடம் கண்டிப்பைத் தளர்த்திக்கொண்டதே இல்லை.  அந்தக் கறுப்புப் பூனை ஒரு தீய ஆன்மாவைக் கொண்டு வந்து சேர்த்துவிட்டது எனவும் விரைவில் மீளமுடியாத பெரும் அழிவு ஒன்று தன் குடும்பத்திற்கு வரப்போகிறது என்றும் தாத்தா நம்பியிருந்ததாகப் பாட்டி சொல்லிக் கேட்டபோது நான் வாய்விட்டுச் சிரித்துவிட்டேன். ஒருவேளை தாத்தா லாம் சிங் யிங் நடித்த படங்களை அதிகம் பார்த்திருப்பார் போல எனத் தோன்றியது (Lam Ching-ying அதிகமாகத் தாவோ மத குருவாகப் பாத்திரம் ஏற்றுப் பல ஹாங் காங்  பேய்ப் படங்களில் நடித்துள்ளார்.)

அந்தச் சம்பவத்திற்குப் பிறகும் அந்தக் கறுப்பு பூனை தாத்தாவின்  கம்பத்தில்தான் வாழ்ந்தது. தனது கரிய நிறத்தைப் பயன்படுத்தி மிகச் சுலபமாக அதனால் தன்னை இருளுக்குள் மறைத்துக்கொள்ள முடிந்தது. அப்போது என் அப்பாவும் சித்தப்பாவும் ஆரம்பப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தார்கள். ஒருநாள் பள்ளி முடிந்து வீடு திரும்பும்போது இருவருமே அந்தப் பூனையை முதல் முறையாக  எதிர்கொண்டனர். அது ஒரு கறுப்பு மின்னல்போல ஓடி காட்டுக்குள் மறைவதை அதிர்ச்சியுடன் அவர்கள் பார்த்தார்கள். அவர்கள் அவ்வகை பூனையை அதற்கு முன் பார்த்ததில்லை. அவர்கள் பிறந்தவுடன் கம்பத்திலிருந்த அனைத்துப் பூனைகளும் மறைந்துவிட்டன என்ற பேச்சிருந்தது. மறுநாளும் அவர்கள் அந்தப் பூனையை எதிர்கொண்டனர். முதல் நாள் அவர்கள் பார்த்த அந்தக் கரு மின்னல் அன்று ஒரு நிழலாக அவர்களின் முன் நின்றது. அப்பா கையசைத்து அந்தப் பூனையை  அழைத்தார். பூனைக்கு அப்பாவின் எண்ணம் புரிந்ததால் வாலை நிமிர்த்தியபடி அவர்களின் அருகில் வந்தது. அந்தப் பூனை அவர்கள்  இருவரையும் சுற்றிச் சுற்றி வந்து செல்லம் கொஞ்சும் குழந்தையைப்போலத் தன் கன்னங்களை அவர்களின் கால்களில் உரசியது. சித்தப்பாவுக்கு அதை அதிகம் பிடித்துப்போனது. குறிப்பாக அதன் நீலக்கண்களையும் அதன் பிரகாசத்தையும். சித்தப்பா அதை மிக அருகில் இருந்து பார்த்தார்.  அதன் கண்ணின் மணிகள் தூய படிகம் போல ஒளிவீசின.  தெளிந்த நீரோடைபோல அத்தனை தெளிவான கண்கள் அந்தப் பூனையினுடையவை.  சித்தப்பாதான் ஷுய் டி என அதற்குப் பெயரிட்டார். அப்படியென்றால் நீர்த்துளி என அர்த்தம்.  ஒளி ஊடுருவக்கூடிய பெயர் அது.

அந்தப் பூனையைப் பார்த்ததிலிருந்து அவர்கள் இருவரும் தங்கள் மதிய உணவைத் திட்டமிட்டே முழுமையாகச் சாப்பிடுவதில்லை. பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும் வழியில் ஷுய் டிக்கு மீத உணவைக் கொடுப்பார்கள். சில சமயம்  சியூ மாய், சில சமயம் ச்சார் சியூ பாவ் அல்லது மீகூன் பிரட்டலில் பாதிப் பொட்டலம் எனக் கொடுப்பார்கள். முதல் மறையாக அந்தப் பூனை உணவை மென்று தின்பதைக் குந்தியிருந்து பார்த்தபோது அவர்களுக்கு ஏதோ ஒன்று புரிய ஓரக்கண்ணால் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். அப்போது மின்சார ஒளிபோல ஒரு சிந்தனை ஒரே நேரத்தில் இருவரின் தலைக்குள்ளும் பாயவே இருவரும் ஒன்று போலவே தங்களது ஆள்காட்டி விரலை எடுத்து அவரவர் உதடுகளில் வைத்தனர். என்ன நடந்தாலும் அதை அப்பாவிடம் சொல்லக்கூடாது என்பதற்கான அடையாளம் அது. அது அவர்களுக்கு மட்டும் தெரிந்த ரகசியம். அவர்கள் இரட்டையர்கள் என்பதை இந்தச் சம்பவம் உறுதி செய்தது. சொற்களால் பேசாமல் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்ட அந்த அரிய அனுபவம் அவர்கள் வாழ்விலேயே அந்த ஒருமுறை மட்டும்தான் நிகழ்ந்துள்ளது.

அவர்கள் ஷுய் டி யுடன்  ஏறக்குறைய அரை ஆண்டுக் காலம் பழகியிருப்பார்கள். கடுமையான சூரிய ஒளியில் ஆவியாக மறையும் நீர்த்துளிபோல ஒருநாள் மறைந்துபோனது ஷூய் டி. இறுதியாக அப்பா அதை ‘பசித்த பேய்கள்’ விழாவின்போது கம்பத்தில் பார்த்தார். தாத்தாதான் அந்தச் சடங்கிற்குத் தலைமை ஏற்று இருந்தார். வழிபாட்டுக் காகிதங்கள் கம்பத்து வாசிகளால் குவித்து வைக்கப்பட்டிருந்தன. அச்சடங்கு சற்று இருண்ட சூழலில் நடத்தப்பட்டதால் அந்தக் காகிதக் குவியலுக்கு அருகில் அமர்ந்திருந்த ஷுய் டீயை யாருமே கவனிக்கவில்லை.  அப்பா அதன் மீது தீ பட்டுவிடக்கூடாது என வேகமாக விரட்டினார். அதுமட்டுமில்லை தாத்தாவுக்குக் கறுப்புப் பூனையென்றாலே பிடிக்காது. ஆனால்  எவ்வளவு விரட்டியும் அது நகர மறுத்தது. அப்பா அதை அணைத்துத் தூக்க முயன்றார். ஆனால் அது ஓட்டமெடுத்தது. அந்தக் காகிதங்கள் கொளுத்தப்பட்ட பிறகுதான் அது அங்கிருந்து நகர்ந்தது. நிழலின் பிரதி அது; எந்த ஓசையும் எழுப்பாமல் இருளுக்குள் மறைந்தது. சுட்டெரிக்கும் தீ அதைத் தொடர்ந்து சென்றது.  ஆனால் ஏதோ பலமுறை இச்சூழலுக்குப் பழகியதுபோல அது நிதானமாகவே இருந்தது. தன்னுடைய உலகைவிட்டு மனித உலகிற்கு வந்து  நல்ல நாடகம் ஒன்றைப் பார்த்துவிட்டுச் செல்வதுபோல அந்தப் பூனை மீண்டும் அடர் இருளில் மறைந்து போனது.

அப்பாவிடம் எந்தக் கவலையும் இல்லை. அது ஒருநாள் மீண்டும் வந்துவிடும் என்ற எண்ணத்தில் இருந்தார். மாறாக ஷுய் டீ காணாமல் போனதிலிருந்து சித்தப்பாவால் மதிய உணவைக்கூடச் சாப்பிட முடியாமல் போனது. அதைக் கவர்வதற்காக அவர் தனது மதிய உணவை, வழக்கமாக ஷுய் டீக்கு உணவளிக்கும் இடத்தில் வைத்துக் காத்திருந்தார். ஆனால் அது வரவேயில்லை. அந்த அணுகுமுறை பலனளிக்கவில்லை. சித்தப்பா நாளுக்குநாள் மெலிந்துகொண்டே போனார். கடைசியில் 22வது வயதில் அனரோக்சிய நோயால் இறந்துபோனார். ஆனால், அது இந்தச் சம்பவம் நடந்து பல ஆண்டுகளுக்குப் பின் நடந்தது.

15 வயது வரையில் அப்பாவின் வாழ்க்கை வெறுமை நிறைந்ததாகவே இருந்தது.. தாத்தாவின்  அன்பு கிடைத்ததே இல்லை. தாத்தா தம்பியிடம் மட்டுமே அன்பு காட்டுவார். அப்போது அப்பா இன்னும் சிறுவன்தான். அதனால், தாத்தாவின் புறக்கணிப்புக்கான காரணத்தைப்  புரிந்துகொள்ள முடியவில்லை. ஒருமுறை  தான்  அவருக்குச் சொந்தப் பிள்ளை இல்லையோ என்ற சந்தேகம் அவருக்கு வந்தது. ஆனால், ஒவ்வொருநாளும் பள்ளிக்குச் செல்லும்முன் அம்மாவுடைய நிலைக்கண்ணாடியில் தான் அசப்பில் தாத்தாவின் செல்லப்பிள்ளையான தம்பியைப் போலவே இருப்பதைப் பார்க்கும்போதெல்லாம் அவருக்கும் பெரும் குழப்பம் ஏற்படும்.

அப்பாவுக்குச் சிறு வயது முதலே ஓட்டப்பந்தயம், கயிறு இழுத்தல் காற்பந்து என அதீத உடல் பலம் தேவைப்படும் சவால்மிக்க விளையாட்டுகளின் மீது ஆர்வம் அதிகம். அவர் ஆறாம் ஆண்டு பயிலும்போது ஆரம்பப் பள்ளிகளுக்கிடையே நடைபெறும் மாவட்ட அளவிலான காற்பந்து விளையாட்டுப் போட்டியில் கலந்துகொண்டார். தாக்குதல் விளையாட்டாளராக அப்பா சிறப்பாக விளையாடியது அவரைத் தனித்துக் காட்டியது. தொடர்ந்து அந்த அணியின் முதல்நிலை வெற்றிக்குப் பங்காற்றினார். யாராலும் தோற்கடிக்க முடியாத  டைகொ அர்மண்டோ மரடோனா ஃப்ரான்கோ போல ஒரு சிறந்த தாக்குதல் வீரராக வேண்டும் என அப்பா ஆசைப்பட்டார். அப்பாவுக்குக் காற்பந்துக் களத்தில் தனித்துத் தெரியும் மிகச் சிறந்த வீரராக வேண்டும் என ஆசை இருந்தது.

அப்பா என்னிடம் தனது சின்ன வயது ஆசையைச் சொன்னபோது நான் அப்போதுதான் முதலாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். அது ஒரு வாரயிறுதி நாள். அப்பா என்னைக்  காற்பந்தாட்டத் திடலுக்கு அழைத்துச் சென்றிருந்தார். “அப்பா நீங்கள் மிகச்சிறந்த காற்பந்து விளையாட்டு வீரர் ஆகிவிட்டீர்களா?” நான்  கேட்டேன்.

”இல்லையா என்ன?” பதில் பூடகமாக இருந்தாலும் அப்பா அதைத் தெளிவான தொனியில் சொன்னார். அதைச் சொல்லியபின் அவரது ஆள்காட்டிவிரலில் பந்தைச் சுழலவிட்டு அது கீழே விழாதபடிக்கு கவனமாக இருந்தார்.

“Cool! அப்படியென்றால் நிறையப் பேருக்கு உங்கள் பேர் தெரியும்தானே?”

அப்பா என் கேள்விக்குப் பதிலளிக்கவில்லை. மாறாகப் பந்தை எப்படிக் கால்களால் ‘ஜகல்’ செய்வது என நடுத் திடலில் எனக்குச் செய்து காட்டிக் கொண்டிருந்தார்.

அபாரம்! நான் கீழே விழாத பந்தை ஆச்சரியமாகப் பார்த்தேன். அப்பாவின் தொடையில். முட்டியில், கெண்டைக்காலில், பாத மூட்டில், குதிகாலில் என எல்லாப் பகுதியிலும் பந்துடன் மெல்லிய நூல் இணைக்கப்பட்டது போல இருந்தது. பந்து பரிபூரணமாகக் கையாளப்பட்டது. காலைப் பனித்துளிகளில் பட்டு ஈரமாகி இருந்த அந்தப் பந்து சூரிய ஒளியில் கொஞ்சம் மின்னிக்கொண்டிருந்தது.

அப்பா ஒரு தேர்ச்சி பெற்ற காற்பந்து விளையாட்டு வீரர் இல்லை. உண்மையில்  ஆங்கில இடைநிலைப்பள்ளியில் பயில நகரத்திற்குச் சென்றது முதல் அப்பா காற்பந்து விளையாடவே இல்லை. அதற்கும் தாத்தாதான் முக்கியக் காரணம். அப்பா பயன்படுத்திய விளையாட்டுக் காலணிகளின் முன்பகுதியும் பின்புறத்தில் கணுக்கால் பகுதியும் தேய்ந்து கிழிந்து விட்டன. செருப்பு தைப்பவரால்கூட அதைச் சரிசெய்ய முடியவில்லை. ஒரு போதும் தன் மகனை நேசிக்க முடியாத என் தாத்தாவால் எப்படிப் புதிய காலணியை வாங்கிக்கொடுக்க முடியும்? அதிலும் 1970களில் பின்தங்கிய மனநிலையைக் கொண்டிருந்த அவருக்குக் காற்பந்து என்பது எந்தப் பயனையும் அளிக்காத ஒரு வெற்றுப் பொழுதுபோக்கு விளையாட்டு என்றே எண்ணமிருந்தது.

அப்பா பள்ளி முடிந்து வீட்டுக்கு நடந்து வரும்போது ஒரு காலணிக் கடையைக் கடந்துதான் வருவார். அக்கடையில் உள்நாட்டில் தயாரிக்கப்படும் வெள்ளை நிறப் பள்ளி காலணிகள், பாட்டா வகைக் காலணிகள், குதிக்கால் உயர்ந்த காலணிகள், துணிக் காலணிகள்,  வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சில பிரபல நிறுவனங்களின் காலணிகளும்  இருந்தன. அவற்றில் பிராண்டட் வகைக் காலணிகளில் ஒரு காலுக்கு உரியவை மட்டும் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. மற்ற பலவகை காலணிகளுடன் அவை  நேர்த்தியாக அடுக்கப்படாத அட்டைப் பெட்டிகளின் மேல் வைக்கப்பட்டிருந்தன. மாலை வேலையில் வாடிக்கையாளர்கள் அக்கடைக்கு மிக அரிதாகவே வருவர். எனவே கடைக்காரர் கல்லா மேசைக்கு பின்புறமாகக் குட்டித் தூக்கம் போடுவது வழக்கம். அப்பாவுக்கு  அட்டைப்பெட்டியின் மீது பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த அடிடாஸ் காற்பந்துக் காலணிகளில் ஒன்றைப் பிடித்திருந்தது. அந்த வகைக் காலணி 1994ஆம் ஆண்டு சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு புதுமையான தயாரிப்பு. அது சந்தைக்கு அறிமுகப்படுத்தப்பட்டு சில ஆண்டுகள் ஆகிவிட்டிருந்தாலும் அதற்குப் பின்பு பல புதிய தலைமுறைக் காலணிகள் அறிமுகம் செய்யப்பட்டிருந்தாலும் அந்த முதல் தலைமுறை காலணியின் விலை அதிகமாகவே இருந்தது. உண்மையில், சிறிய நகரங்களில் அந்தக் காலணிகளை வாங்கும் வாடிக்கையாளர்கள் அரிதாகவே இருந்தனர்.

கடையில் காட்சிக்கு வைக்கப்பட்ட முதல் நாளிலிருந்தே அப்பா அந்தக் காலணி மீது விருப்பம் கொண்டிருந்தார். 1979இல் அறிமுகமான சற்று மென்மையான ‘கோப்பா மூண்டியல்’ வகைக் காற்பந்துக் காலணியோடு ஒப்பிட்டால் அது இன்னும் திடமாகவும் முரட்டுத்தனமாக இருந்தது.  கறுப்பு நிறக் காலணியின் மேற்பரப்பில் அமைந்திருந்த மீன் துடுப்புகள் போன்ற உராய்வுக்கோடுகளும், முப்பரிமாண  அமைப்பிலிருந்த காலணியின் உட்புறமும் அதற்கு வித்தியாசமான ‘ஃபங்க்’ வகைத் தோல் காலணியின் தோரணையைக் கொடுத்திருந்தது. காலணியின் அடிப்பகுதியில் கோணல் மாணலாக இணைக்கப்பட்டிருந்த சில ஆணிகள் இணைந்து ‘X’ என்று ஆரஞ்சு எழுத்து உருவாக்கியிருந்தது, அது  ‘8’ அல்லது ’00’ போலவும்  காட்சியளித்தது.

அப்பாவைப் பொருத்தவரை, முரட்டுத்தனமான அந்தக் காற்பந்துக் காலணி எரிமலைக்குழம்பு போன்றது.  அந்தக் காலணிக்கு ‘predator’ என்ற மூர்க்கமான பெயர் கொடுக்கப்பட்டிருந்தது.

‘predator’ஐ அணிபவர் யாராக இருந்தாலும் உடலின் கீழ்ப்பகுதி தசையிலும்,  தசைநார்களிலும் சக்தியை ஒன்றிணைக்க அனுமதிக்கிறது என்ற தனித்த பிம்பத்தைக் கொடுத்தது. அந்தக் காலணிகளை அணிந்துகொண்டு இயற்கை புல்லால் மூடப்பட்ட திடலில் தன்னால் விளையாட முடிந்தால், எந்த நேரத்திலும் அதிவேகத் தூர உதையின் வழி அதிரடியான கோல் அடிக்கமுடியும் அல்லது ஒரு பலமான தூர உதையால் எதிராளியின் கட்டமைப்பைக் குலைக்க முடியும் என்று அப்பா சொல்வார்.

அந்தக் காலணிகளை அணிந்துகொண்டு காற்பந்துத் திடலில்  திருப்தியடையும்வரை ஓடவேண்டும் என்ற பெரும் விருப்பத்தில் அப்பா இருந்தார். இறுதியாக, ஒரு மாலையில் அவரது கனவு நனவாகியது. அப்பா தனக்குப் பிடித்த காலணியை கவனமாக கையில் ஏந்தினார். அதன் ஒவ்வொரு பகுதியும் எலும்புபோல உறுதியாக இருக்கிறதா எனச் சூரிய ஒளியின் கீழ் பரிசோதித்தார். ஆனால் அப்பாவிடம் ஒரு காலணி மட்டுமே இருந்தது. அதை ஒரு காலில் அணிந்து  இன்னொரு காலில்  அணிந்திருந்த ‘கோப்பா மூண்டியல்’ காலணியோடு ஒப்பிட்டார். இரண்டும் புதிய காலணிகள். ஒரே அளவிலானவை. ஆனால், வெவ்வேறு வகைமையைச் சார்ந்தவை. அந்தக் காலணியை அணிந்துகொண்டு  தன் அறையில் இஷ்டம்போல் சுற்றி வந்து குதித்துப் பார்த்தார். அவர்  நினைத்ததுபோலவே இரண்டு காலணிகளும்  எடையற்று இருந்ததால் அப்பா உற்சாகமானார்.

மிகக் குறுகிய நேரத்திலேயே அந்தக் காலணிகளைத் தாத்தா பார்த்துவிட்டார்.. தாத்தா அந்தக் காலணிகள் எப்படிக் கிடைத்தன என்று கண்டிப்புடன் விசாரித்தார்.

அப்பா மிக நிதானமாக, இரண்டு வெவ்வேறு கால்பந்தாட்டக் காலணிகளையும் அணிந்து பார்ப்பதற்காகக் காலணிக் கடையிலிருந்து இரவல் வாங்கியதாகப் பதிலளித்தார்.

இந்தப் பதிலைக் கேட்டதும் தாத்தா அப்பாவைப் பளாரென்று அறைந்தார். அப்பாவை அவர் அத்தனை உக்கிரமாக அறைந்தது அதுதான் முதல் முறை. உண்மையில், அப்பா ‘predator’ காலணிகளைத் தனக்கு உரிமையாக்கிக்கொள்ள  விரும்பவில்லை. அதை அணிந்து பார்த்து, அதுவரையிலான தனது ஊகத்தைப்போலத்தான் அது இருக்கிறதா  என  உறுதி செய்ய மட்டுமே நினைத்தார். திடலில் ஒருமுறை மட்டும் பந்தை உதைத்துப் பார்த்துவிட்டு காலணிகளைக் கடைக்காரரிடம் திருப்பித் தருவதே அவரது திட்டம்.

ஆனால் இரண்டு மணிநேரத்திற்குக் குறைவாகவே அணிய முடிந்த அந்த இரண்டு காலணிகளையும் கடை முதலாளியிடம் திருப்பிக் கொடுக்கும் கட்டாயம் அப்பாவுக்கு ஏற்பட்டது. இந்த நிகழ்வு நினைவுக்கு வரும் ஒவ்வொருமுறையும், என் தந்தையின் விதியையும்  அந்த இரண்டு காலணிகளின் விதியையும்  என்னால் கற்பனை செய்ய முடிகிறது.  முன்பு எனக்கு விதியின் மீது எந்த நம்பிக்கையும் இருந்ததில்லை. ஆனால் நாம் செய்யும் தேர்வுகளும், பல்வேறு பொருள்களுக்கும் அல்லது சம்பவங்களுக்கும் இடையில் உள்ள தொடர்புகளும், நம் கடந்த காலத்தை அல்லது எதிர்காலத்தை முடிவு செய்யும் யாவும், எல்லாரும் சொல்வதுபோல, முன்னரே விதிக்கப்பட்டவை என  அண்மைய காலமாக உணரத் தொடங்கியுள்ளேன். கைவிடப்பட்ட ஒரு பூனை என் அப்பாவின் உயிரை மீட்டுக்கொடுக்க வந்ததையும், ஒரே முகத் தோற்றமுடைய இரு மனிதர்களின் விதி வெவ்வேறாக அமைந்ததையும் நான் இப்படி யோசிக்கிறேன். அவை ஒரே அளவில் இருந்த வெவ்வேறு வகை கற்பந்து காலணிகளை அப்பா  தேர்ந்தெடுத்த சம்பவத்தின் அடுக்காக இருக்கலாம் அல்லவா?  அப்பாவின் உயிர் அந்தக் கறுப்புப் பூனையால்தான் மீட்கப்பட்டதா அல்லது கர்ப்பப்பையில் வளர்ந்த அசலானதுதானா என இன்றுவரை யாராலும் உறுதி செய்ய முடியவில்லை. ஆனால், பாட்டியின் சிந்தனை எளிமையானது. ‘இருவருமே என் குழந்தைகள்’ அல்லது ‘அந்த மீட்பு ஒரு வரம்’. இதனால்தான் அப்பா பிறசிந்துவுடனே  இறந்தபோது  பாட்டி அவ்வளவு சோகமாகவும் மனம் தளர்ந்தும் போயிருந்தார்.

சில சமயங்களில் பாட்டி, அப்பாவைச் செல்லம் கொஞ்சுவது, தன் மகன் மீண்டும் தன்னை விட்டுப் பிரிந்துவிடுவானோ என்ற அச்சத்தின் வெளிப்பாடு போல இருக்கும். அப்பா குடும்பத்தைவிட்டு வெளியேறியபோது, பாட்டி கோழிக்கூண்டைச் சுத்தம் செய்து கொண்டிருந்தார். மகன் குடும்பத்தைவிட்டுச் செல்லவிருக்கும் செய்தியைக் கேட்டபோது திடீரெனப் ​​​​பாட்டியின் கால்கள் வலுவிழந்தன; மூச்சிரைத்தபடி கோழிக்கூண்டின் முன் உட்கார்ந்து, அப்பாவின் பெயரைக் கூவியபடி அழுதார். அழுகைச் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் என்ன நடந்தது என வந்து பார்த்தனர். யாருமே இல்லாத ஓர் ஒற்றையடிப் பாதையை அப்போது பாட்டி பார்த்துக்கொண்டிருந்ததை அவர்கள் பார்த்தனர். பாட்டி அழுதுகொண்டே கையசைத்துக் கொண்டிருந்தார். பாட்டியின் தலைமுடியிலும் சட்டையிலும் அங்குமிங்குமாகக் கோழி எச்சங்களும் இறகுகளும்  ஒட்டிருந்தன. பாட்டியை அப்படிப் பார்த்த அக்கம்பக்கத்தினர் பாட்டி வளர்த்த எல்லாக் கோழிகளும் ஓடிவிட்டன என்று நினைத்துக்கொண்டனர்.

படிக்கின்ற காலகட்டத்தில் அப்பா பள்ளிக் காற்பந்து அணியில் சிறந்து விளங்கினாலும் திருப்திகரமான தேர்வு முடிவுகளைப் பெற்றதே இல்லை. 1977ஆம் ஆண்டில் அப்பா 15 வயது இளைஞன். அப்போது மோசமான பொருளாதார வீழ்ச்சி ஆசியாவையே பாதித்தது. அதன் விளைவாக, பங்குச் சந்தை சரிந்தது; பணவீக்கம் மோசமடைந்தது; வேலையின்மை விகிதம் உயர்ந்தது. ஏழைக் குடும்பங்கள் மேலும் ஏழ்மையாகினர். இந்தச் சமூகத்தில் உள்ள ஒவ்வொருவரும் தங்கள் தலைவிதியைப் பற்றிக் கவலைப்பட்டுக்கொண்டிருந்தனர். தேர்வில் திருப்திகரமான முடிவுகளைப் பெறாத அப்பாவை மேலும் படிக்க வைக்கத் தாத்தாவிடம் பணம் இல்லை.  இறுதியாகத் தாத்தா அப்பாவைப் பள்ளியிலிருந்து நிறுத்திவிட்டு அந்தப் பணத்தை மிச்சப்படுத்தி சித்தப்பாவைப் படிக்க வைக்க முடிவெடுத்தார். இதற்கிடையில், அப்பாவை வேலைக்குச் சென்று குடும்பப் பொறுப்பின் ஒரு பகுதியை ஏற்றுக்கொள்ள எடுத்துக்கொள்ளச் சொன்னார் தாத்தா. குறுகிய காலத்திலேயே அப்பா வேலை தேட குடும்பத்தை  விட்டுச் சென்றார்.

உண்மையில் அப்பாதான்  குடும்பத்தை விட்டுச் செல்ல வேண்டும் என்ற  எண்ணத்தை வெளிப்படுத்தினார். அது அப்பாவின் மனதில் நீண்ட நாட்களாக இருந்த திட்டம். ஆனால் அது பாட்டியை நோகடிக்கும் என்ற பயத்தில் மனத்திலேயே வைத்திருந்தார். பாட்டி, உறவினர்கள், நண்பர்கள் என அனைவருமே அதற்குச் சம்மதிக்கவில்லை.  அவர்கள் அப்பா இன்னும் சிறுவன் என நினைத்தனர். அந்தக் கம்பத்தில் தாத்தா மட்டும்தான் அப்பா முதிர்ச்சி அடைந்துவிட்டதாகவும் வேலைக்குச் செல்லத் தடையில்லை என்றும் நினைத்தார். அப்பா வீட்டைவிட்டுச் சென்றதால், சித்தப்பாவின் பல்கலைக்கழகப் படிப்புக்கும் அவரது அனரோக்சிய நோயின் சிகிச்சைச் செலவுக்கும் போதுமான பணம் அக்குடும்பத்திற்குக் கிடைக்கும் என அவர் நினைத்தார் . 

பள்ளி இறுதி நாள் காலையில், அப்பா பள்ளிக்குச் சென்றபோது காற்பந்துப் பயிற்றுநர் என் அப்பாவிடம் “நீ பள்ளிக்கு வரவில்லை என்றாலும் பயிற்சியை வழக்கம்போல செய்,” எனச் சிரத்தையுடன் நினைவூட்டினார். அவர் அப்பாவின் தோள்களைத் தொட்டு அதைக் கூறியது அவருக்கு அப்பாவின் திறனின் மீது இருந்த மரியாதையைக் காட்டியது. ஆனால் அந்தச் சமயத்தில் அப்பா எதுவுமே சொல்லாமல் தலையை மட்டும் ஆட்டிவிட்டுக் கொஞ்ச நேரத்தில் பள்ளியிலிருந்து கிளம்பினார். பின் அப்பா கோலாலம்பூருக்குச் சென்று அங்கே ஓர் உறவினர் வீட்டில் தங்கி வேலை தேடினார். நாட்டின் மோசமான  பொருளியல் சூழலில் படிப்பைப் பாதியில் விட்ட 15 வயது இளைனுக்கு  யாரும் வேலைக்கொடுக்க முன்வரவில்லை. அப்பாவுக்கு மிகக் குறைந்த தேர்வுகளே இருந்தன.

என் அப்பா காப்பிக் கடைகளில் சிப்பந்தியாகவும் திருமண விருந்துகளில் உணவுகளைப் பரிமாறுபவராகவும் மேசைகளைச் சுத்தம் செய்யும் பணியாளராகவும் வேலைகள் செய்தார்.  வேலை முடிந்த பிறகு உறவினர் வீட்டில் ஓய்வெடுப்பார். வாழ்வு தினமும் ஒரே மாதிரி இருந்தது. காலப்போக்கில் அவரது வலுவான தசைகளும் தொழில்முறை காற்பந்து வீரராக வேண்டும் என்ற அவரது லட்சியமும் மெல்ல மெல்ல மங்கி வருவதை உணரத் தொடங்கினார். அவரது வாழ்விலிருந்து காற்பந்து முழுமையாக மறையாமல் இருக்க அப்பாவால் செய்ய முடிந்தது காற்பந்துப் போட்டியைப் பார்ப்பது  மட்டும்தான். நல்லவேளையாக அப்பாவுடன் இருந்த அந்த உறவினரும் காற்பந்துப் பிரியர். அவரும் காற்பந்துப் போட்டிகளைத் தவறாமல் பார்ப்பவர். இருவருமாக நள்ளிரவுவரை கண்விழித்து போட்டியைப் பார்த்துவிட்டு முடிவடைந்த பிறகும் எவ்வளவு தாமதமானாலும் தூங்காமல் அது பற்றிப் பேசிக்கொண்டிருப்பார்கள். இதனால் அப்பா அடிக்கடி வேலையில் கவனம் செலுத்த முடியாமல் தவறுகள் செய்வார். முதலாளி சம்பளப் பணத்தை வெட்டிக்கொள்ள  அதையே காரணமாக்கிக்கொள்வார்.

“அப்படி வெட்டப்பட்ட சம்பளத்தை ஒன்றாகச் சேர்த்தாலே தாய்லாந்துக்குப் போய் பெண் தேடி இருக்க முடியும்,” என்று சத்தமாகக் கூறியபடி அப்பா இருபுறமும் பூச்செடிகள் நடப்பட்டிருந்த நடைபாதை வழியாக நடந்துகொண்டிருந்தார். அப்போது அவருக்கு வயது 50. நான் அவரை தாமான் பெலியாவில் நடைப்பயிற்சிக்கு அழைத்துச் சென்றிருந்தேன்.

அவருடைய வார்த்தைகள் என் அம்மா முன்னர் சொன்னதை நினைவுபடுத்தியது. உண்மையில், என் தந்தை தாய்லாந்து எல்லைக்கு அருகில் சிறிது காலம் வாழ்ந்தார். “அப்படியென்றால்  அதற்குப் பிறகு உண்மையாகவே தாய்லாந்திற்குப் பெண் தேடிப் போனீர்களா?”

Cervical Syndrome என்ற நோய் காரணமாக அப்பாவுக்கு வேகமாகத் தலையாட்டத் தைரியமில்லை. அவரது தலையில் சில முடிகள் மட்டும்  இல்லையென்ற பதிலை அசைந்து பிரதிபலித்தன. “அப்பா அப்போது வட்டி முதலைகளிடம் கடன் வாங்கி இருந்தேன். இந்தச் சூழலில் எனக்குத் தாய்லாந்தில் பெண் தேட ஏது பணம்? அந்தச் சமயத்தில் என்னைவிடவும் இன்னும் பல மடங்கு கஷ்டப்பட்டவர்கள் இருந்தார்கள்,” என்று அப்பா சொன்னார்.

நெஞ்சுச்சளியைக் காரி நடைபாதை ஓரமாக இருந்த சிறிய சாக்கடையில் துப்பிவிட்டு, வட்டி முதலையிடம்  கடன் வாங்கிய  கதையையும் முழுமையாகச் சொல்லத் தொடங்கினார்.

“முதலில், அப்பா கொஞ்சமாகப் பந்தயம் கட்டி அதில்  கொஞ்சம் கொஞ்சமாக ஜெயிக்கத்தான் நினைத்தேன். 98ஆம் ஆண்டு உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி, பணத்தை ஜெயிக்க முடியும் என்ற  நம்பிக்கையை எங்களுக்குக் கொடுத்திருந்தது. பிரேசில் ஜெயிக்கும் என்றுதான் எல்லோருமே நம்பினோம். எல்லோரும் பிரேசில் ஜெயிக்கும் எனப் பந்தயம் கட்டினார்கள்.  நானும்தான். ஏனென்றால் பிரேசிலில் ரொனால்டோ (Ronaldo Luís Nazário de Lima) இருக்கிறார். அந்த சமயத்தில் அதுதான் மிகச் சிறந்த அணியாக இருந்தது.  ஃபிஃபா (FIFA) உலக தரவரிசையில் முதலிடத்தில் இருந்தது, தெரியுமா?”

”பிரேசில் அணி இருக்கிற ஒவ்வொரு உலகக் கோப்பை போட்டியிலும்  அப்பா கண்டிப்பாக பிரேசில்தான் ஜெயிக்கும் எனப் பந்தயம் கட்டுவேன். பிரேசில் என்னை  ஒருபோதும் ஏமாற்றியதே இல்லை. அப்பா அதுவரை பணம் ஜெயித்ததெல்லாம் பிரேசிலால்தான்.”

“ஆனால் அந்த உலகக்கிண்ணப் போட்டியின் இறுதிச் சுற்று நாளில் என்னவாகும் என யாருக்குத் தெரியும்? எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது. அந்த ஒளிபரப்பு  1998 ஜூலை 13 அன்றைக்குச்  சரியாகக் காலை நான்கு மணிக்குத் தொடங்கியது. அந்த நேரத்தை  ஏன் என்னால் சரியாக ஞாபகம் வைத்திருக்க முடிகிறது என்றால் அன்றைக்குக் காலையில் சரியாக 5.00க்கு இடியும் புயலுமாக இருந்தது. வானமே வந்து இடிந்து விழுந்துவிடுமோ என நினைத்தோம். அன்றைக்கு நிறையப் பேர் பிரேசிலை வாங்கினார்கள். பந்தயங்களை நிர்வகிக்கும் ‘house’ வெளியிட்ட சலுகை விலை பந்தயத்திலும், இறுதிப் போட்டி விளையாட்டு சமநிலை அடைந்தால் கூட பிரேசிலை வாங்கியவர்கள் பாதிப் பணத்தையாவது ஜெயித்திருக்கலாம் என்றுதான் கூறப்பட்டது. அன்றைக்கு பிரேசில் ஒரு கோல்கூட போடாது என நினைக்கவே இல்லை. பிரான்ஸ் பிரேசிலை 3-0 இல்  ஜெயித்து முதலிடத்தைப் பிடித்தது.”

”பிரேசிலை வாங்கிய நாங்கள் எல்லாம் அன்றைக்குத் தலைகீழாகத்தான் சவாரி செய்தோம். வானமே இடிந்து விழுந்தது போல எல்லாருமே கவலையா இருந்தோம். அதுவரை பந்தயத்தில் ஜெயித்துச் சேர்த்திருந்த என்னுடைய அத்தனை பணமும் அப்படியே மறைந்து போனது. அதுமட்டுமில்லை, அதில் பாதிப் பணம் நான் வட்டி முதலைகளிடம் கடன் வாங்கியது. நாங்கள் மனம் உடைந்து போயிருந்தோம். அப்போது மழை பெய்தது. கூரையில் விழுந்த மழை அதிகச் சத்தமாக இருந்தது. என் பக்கத்தில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரும் பிரேசில் ஜெயிக்கும் என பந்தயம் கட்டியவர்தான் என நினைக்கிறேன். அவர் சொன்னார், “இந்த உலகமே வெள்ளத்தில் மூழ்கிவிடுவது மேலானது.” அப்பா இதைச் சொல்லிவிட்டுச் சிரித்தார்.

“அவர் சொன்னதைத்தான் நாங்கள் எல்லோருமே நினைத்திருந்தோம். அன்று மழை நீண்ட நேரம் பெய்வதற்கு முன்னமே கோலாலம்பூர்  வெள்ளத்தில் மூழ்கிவிட்டது தெரியுமா. மதியமான பிறகுதான் வானிலை ஆய்வு மையம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பியது: ‘இன்று காலையில் தென்மேற்கு பருவக்காற்று சுமத்ராவிலிருந்து மலாக்கா நீரிணையை நோக்கி வீசியது.’ அன்று ஓர் ஆங்கிலப் பத்திரிகையின் இரண்டாவது பக்கத்தில் வந்த செய்தி எனக்கு இன்றும் நினைவிருக்கிறது. காரணம் ‘தென்மேற்கு பருவக்காற்று கொண்டு வரும் அசாதாரணக் கனமழை, தீபகற்ப மலேசியாவின் மேற்குக் கரையை விழுங்கி விடுவதுபோல மெதுவாக வடக்கு நோக்கி நகர்கிறது.” என்பது போன்ற செய்தியை நான் அதற்கு முன் வாசித்ததில்லை.

“அந்த ஆங்கிலப் பத்திரிகையின் மொழி அழகாக இருக்கிறதே,” என நான் சொல்லிக்கொண்டேன். 

நீண்ட நேரம் நடந்து களைத்த பிறகு நாங்கள் ஒரு சிமெண்ட் நாற்காலியில் அமர்ந்தோம். அப்பா கதை சொல்லி முடித்திருந்தார். ஆனால் அப்பா அப்போது அவர் வாழ்வில் பட்ட கஷ்டத்தை அதிகம் சொல்லியிருக்கவில்லை. அதனால் நான் கேட்டேன், “அந்தப் பந்தயத்தில் தோற்ற பிறகு வாழ்க்கை ரொம்ப கஷ்டமாக இருந்ததா?”

என்னிடம் சொன்ன அனைத்தையும்  மீண்டும் கற்பனையில் நிகழ்த்திப் பார்ப்பதைப்போல, அவர் அசைவற்றும் எதையும் பேசாமலும் இருந்தார். நான்  அந்தி வெயிலில் மஞ்சளாகத் தெரிந்த புல்வெளியின் முகப்பைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அப்பா பெருமூச்சுவிட்டார் “பந்தயத்தில் தோற்பது கஷ்டமில்லையா? அப்போது பொருளியல் வீழ்ச்சி வேறு, அந்தச் சமயத்தில் பந்தயத்தில் தோற்பது மோசமானது. பலர் கட்டடத்திலிருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டனர். உதாரணத்திற்கு, என்னுடன் வழக்கமாகக் காற்பந்து போட்டிகளைப் பார்க்கும் உறவினர். அவர் ஏழாவது மாடி ஜன்னலிலிருந்து குதித்ததைப் பார்த்தேன்.”

”சாலையில் ஓர் ஈ தலைச்சுற்றி வீழ்வதுபோல் அவர் விழுந்தார். அவ்வளவுதான் மனுஷன். அப்படியான முடிவு அவருக்கு மட்டும்தான் நடந்திருக்கும் என  நினைக்கிறாயா? உண்மையில், இந்தப் பட்டணத்தில் ஒவ்வொருநாளும்  தற்கொலைகள் நடந்தன. அந்தச் சமயத்தில் எல்லாருமே கஷ்டத்தில்தான் வாழ்ந்திருப்பார்கள் என நீ  யோசிக்கவில்லையா?

அப்பா உண்மையில் அந்தத் துன்பச் சூழலில் ஒரு நடிகனாக இருக்க விரும்பவில்லை. அதனால் திடீரென ஒருநாள் அவரின் பெயரை அறிந்தவர்களுக்கு மத்தியிலிருந்து காணாமல் போனார். வட்டி முதலைகள் அவரைக் கண்டுபிடிக்காமலிருக்க கையிலிருந்த  மீதிப் பணத்தில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து, மலேசியா-தாய்லாந்து எல்லைக்கு ஓடிவிட்டார். தாய்லாந்தில் தனியாக மகிழ்ச்சியாக வாழ்ந்ததாக அவர் ஒருமுறை என்னிடம் கூறியதுண்டு. ஆனால் கதையைக் கேட்ட பிறகு அவரது வாழ்க்கை அங்கே மிகவும் கடினமாக இருந்துள்ளது என நினைத்துக்கொண்டேன். நல்லவேளையாக அவருக்குச் சந்தையில் மீன்களை லாரிகளில் ஏற்றும் வேலை கிடைத்தது. அந்த வேலையில் குறைந்த சம்பளமே பெற்றார்.

அந்தச் சில வருடங்களில் அவர் ஒரு நாளைக்கு இரண்டு வேளை மட்டுமே சாப்பிட்டிருக்கிறார். ஒவ்வொரு நாள் மாலையிலும் இரவிலும் அவர் நகர மையத்தில் உள்ள ஒரு புத்தக் கோவிலுக்குச் செல்வார். காரணம், அங்கு யாராவது தானம் கொடுப்பார்கள். வயதானவர்கள், பிச்சைக்காரர்கள், வீடற்றவர்கள், கைவிடப்பட்ட நாய்களுக்கு மத்தியில் தன்னையும் இடுக்கிக்கொண்டு உணவைப் பெற அப்பா அமர்ந்திருப்பார். அவர்கள் கூச்சலிட்டனர்; அதிகம் பேசினர்; ஆனால் அப்பாவுக்கு எதுவுமே புரியவில்லை. முகத்தில் காட்டப்படும் உணர்ச்சி மட்டுமே அவர்களின் தொடர்புமொழி. அவர்களில் பெரும்பாலானவர்கள் உண்மையான  அனுதாபத்தைப் பெற  தகுதியற்றவர்கள் என அப்பா சொல்லி இருக்கிறார். காரணம் வியாபாரச் சந்தையில் உள்ளவர்களைப்போல அவர்களும் ஒருவருக்கொருவர் போட்டியிட்டுக்கொண்டனர். ஒரு சுற்றுலாப் பயணி முதல் நபரின் பாத்திரத்தில் பணத்தைப்போட்டு இரண்டாவது பிச்சைக்காரனுக்குப் பிச்சை கொடுக்கவில்லை என்றால், இரண்டாவது பிச்சைக்காரன் எழுந்து, பிச்சை கொடுத்த சுற்றுலாப் பயணியைத் திட்டுவான்.

“யாராவது தினமும் புகார் சொல்லிக்கொண்டிருப்பார்கள்,” அப்பா மேலும் சொன்னார்.

அவர்கள் எப்பொழுதும் பௌத்த ஆலயத்தின் பிரதான மண்டபத்திற்கு முன்னால் உள்ள பிரார்த்தனைக் குளத்தைச் சுற்றி உணவு நேரத்தில் அமர்ந்திருப்பார்கள். குளத்தின் நடுவில் ஒரு தாமரை மேடை உள்ளது. மேடையில் பளிங்கால் செய்யப்பட்ட புத்தர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அப்பா எப்பொழுதும் சாப்பிடும்போது புத்தர் சிலைக்கு அருகில் அமர்ந்திருப்பார். அதனால்தான் சில சமயம் தலையை உயர்த்தும்போது புத்தரின் கண்கள் அவரையே கூர்ந்து பார்ப்பதுபோல் இருக்கும். புத்தரின் மார்பின் முன் செப்பாலான ஒரு பிச்சைப் பாத்திரம் வைக்கப்பட்டிருந்தது. வேண்டுதல் உள்ளவர்கள் தங்கள் ஆசைகள் நிறைவேற அந்தக் கிண்ணத்தில்தான்  நாணயங்களை வீசுவார்கள். என் தந்தையின் கூற்றுப்படி, அனைத்துப் பிரார்த்தனை குளங்களிலும் கோய் மீன்கள் வளர்க்கப்பட்டன.  எறியப்பட்ட நாணயம் வெற்றிகரமாகச் செப்புப் பாத்திரத்தில் விழுந்தால் வீசியவர்களின் வேண்டுதல் நிறைவேறும்; ஆனால், ஒரு வேளை பாத்திரத்தில் விழாமல் குளத்தில் விழுந்தால், நாணயம் சுமந்து செல்லும் ஆசைகள் பசியுடனுள்ள கொய் மீன்களால் சாப்பிடப்படும். நான் பாலர் பள்ளி பயிலும்போது, ​​இந்தக் கதையைக் கேட்கும் போதெல்லாம் பதற்றமடைவேன். “காசு கிண்ணத்துக்குள் போகாவிட்டால் வேண்டுதல்  நிறைவேறாதா?” உருளைத் தலையணையை மிகவும் இறுக்கமாக அணைத்துக்கொண்டு அப்பாவிடம் பதற்றமாகக் கேட்டிருக்கிறேன்.

“ஆமாம் உண்மைதான்” என அப்பா சிரிப்பை அடக்கிக்கொண்டு சொல்வார். அப்படி இல்லையென்றால் “அந்தச் சில்லறையை விழுங்கிய மீனிடம் உன் வேண்டுதலைக் கக்கிவிடச் சொல்.”

பயத்தில் நான் வேகமாக அழுவேன்.

என்றாவது அந்த செப்புக்கிண்ணத்தில் தன் வேண்டுதலை நினைத்து அப்பா சில்லறையை வீசியிருக்கிறாரா என்பதை அறிய எப்போதுமே நினைத்திருக்கிறேன். ஓர் இரவு அப்பாவிடம் இந்தக் கேள்வியைக் கேட்டேன்.

“நான் அதைச் செய்திருக்கிறேன். உண்மையில் பணம் கிண்ணத்தில் விழுந்துள்ளது,” என்றார் அப்பா.

ம. நவீன்

“அப்பா என்ன வேண்டினீர்கள்?”

”நிபுணத்துவம் பெற்ற காற்பந்து வீரராக வேண்டும் என்று, என்று சொன்னார்.

அப்போது எனக்கு அப்பா ஒரு நிபுணத்துவம் பெற்ற காற்பந்து வீரர் அல்ல என்பதே தெரியாமல் இருந்தது. மாறாக நான் அப்பாவைப் புகழ்பெற்ற காற்பந்து ஆட்டக்காரர் என்று நினைத்து என் வகுப்பு நண்பர்களிடம் தினம் தினம் அப்பாவின் புகழைப் பெருமையாகப்  பேசுவேன். அப்பா காற்பந்து வீரர் இல்லை. அவர் படகுத் துறையிலிருந்து பொருள்களைச் சந்தைக்கு எடுத்துச்செல்லும் ஒரு சாதாரண மீன் வியாபாரி என அறிந்தபோது என் கவலையும் கோபமும் ஏதோ இரு பெரும் குன்றுகள்போல அப்பாவை நோக்கி வேகமாக உருண்டன. என் மனதை அமைதிப்படுத்துவதற்காக அப்பா இன்னொரு கதையைச் சொன்னார்.

அப்போது அப்பாவுக்குச் சந்தைக்கு மீனை எடுத்துச் செல்லும் வேலை இன்னமும் கிடைத்திருக்கவில்லை. தன் ஒருவருக்குக் கூட போதாத அளவுக்கு அப்பா வறுமையில் இருந்தார். ஒரு சமயம், அந்த செப்புக்கிண்ணத்தில் கிடக்கும் பணத்துக்கு அவர் மனம் ஏங்கியதுண்டு. அந்தக் கிண்ணத்தில் நிச்சயமாக நிறையச் சில்லறைகள் இருக்கும் என அப்பா நினைத்தார். அதிலும் கோயிலின் கதவு எப்போதும் திறந்தேயிருக்கும்; இரவில் கூட. எனவே, ஒருநாள், அப்பா நடு இரவில் செயலில் இறங்கத் தைரியமான ஒரு முடிவை எடுத்தார். அவர் குளத்திற்குள் மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்து இறங்கி தாமரை மேடையை நோக்கி நகர்ந்தார். அவருடைய அசைவுகள் யாரையும் எந்தப் பொருளையும் திடுக்கிடச் செய்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார். எவ்வளவு கவனமாக இருந்தும், குளத்தில் உள்ள மீன்கள் நீர் ஓட்டத்தின் சலனத்தால் திடுக்கிடவே செய்தன. அவை அப்பாவைத் தங்களுக்கான உணவு எனத் தவறாக நினைத்துக்கொண்டன. மெல்ல மெல்ல அவை ஆசையுடன் அப்பாவைச் சூழ்ந்துகொண்டன. சுமார் இரண்டு மீட்டர் அளவு ஆழம் மட்டுமே கொண்ட அந்தக் குளத்தின் தாமரை மேடையை அப்பா நான்கே அடிகளில் அடைந்துவிட்டார். தாமரை மேடையின் மீது ஏறுவதுதான் அதைவிடக் கடினமாக இருந்தது. தாமரை மேடையிலிருந்து வழுக்கி விடுவோமோ என்று அப்பா பயந்தார். அதனால் மேடையில் ஏறி நிற்பதற்கு  முன் கால்களை உலரவைக்கச்  சிறிது நேரம்  அமர்ந்தார்.

ஆனால், மேடைமீது ஏறி நின்றதும் திடீரென உடம்பின் பின்பகுதியில் குளிர்ச்சியை உணர்ந்தார்.

அந்த இருளில் நடப்பதையெல்லாம் ஒரு ஜோடிக் கண்கள் பார்த்துக் கொண்டிருப்பதுபோல் ஓர் உணர்வு அப்பாவுக்கு ஏற்பட்டது. சந்தேகத்தில் சுற்றிச் சுற்றிப் பார்த்தார். திடீரெனத் திருடலாமா வேண்டாமா என்ற தடுமாற்றம் ஏற்பட்டது. அப்பா ஒரு முடிவை எடுத்த பிறகு அதில் தடுமாறுபவர் இல்லை. தொடர்ந்து நிற்கவே முடிவெடுத்தார். தண்ணீரில் விழாமல் இருக்க சிலையின்  இடது கையைப் பிடித்தார். அப்பா எழுந்து நின்றபோது புத்தர் சிலை அளவுக்கு உயரமாக இருந்தார். புத்தர் தன்னை நேரெதிராகப் பார்ப்பதுபோல ஒரு நொடி தோன்றினாலும் உண்மையில் புத்தரின் பார்வை எப்பொழுதும் நீரின் மேல்தான் இருந்தது.

அந்த இருளில் தன்னைப் பார்த்துக்கொண்டிருக்கும் கண்கள் புத்தருடையதாக இருக்கலாம் என்று நினைத்தார். அப்பா புத்தரிடம் பலமுறை மன்னிப்புக்கேட்டார்: “இப்போது எனக்கு இந்தப் பணத்தை எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை. ஆனால் நிச்சயம் இதை உன்னிடமே திருப்பித் தந்துவிடுவேன், என உறுதியளிக்கிறேன்.” புத்தரின் கண்களைப் பார்க்கும் துணிவு அப்பாவுக்கு வரவில்லை. பளிங்கால் செய்யப்பட்ட அந்தப் புத்தர் சிலையின் முன், தலை கீழ் நோக்கியும் உள்ளங்கைகள் மார்புமுன் விரிந்து கையேந்தியபடியும் அவர் மன்னிப்புகோரினார். அப்பாவின் கைகள் நடுங்கின. அவர் தண்ணீரில் விழாமல் இருந்தால் மட்டுமே அவரின் அந்தச் செயலின் தடையத்தை மற்றவர்கள் அறியாமல் இருப்பார். அப்பா தன் சிந்தனையை மாற்றத்  தன்னைக் கட்டாயப்படுத்திக்கொண்டிருந்தார். இறுதியில் ஒரு வழியாக மிகுந்த கவனத்துடனும், மரியாதையுடனும் பலரது ஆசைகள் அடங்கி நிற்கும் அந்தச் செப்புக்கிண்ணத்தை அப்பா எடுத்துக்கொண்டு உடனடியாகக் கோவிலைவிட்டு வெளியேறினார்.

அப்பா அந்தக் கிண்ணத்தைத் தன் உடலோடு அனைத்துப்பிடித்தபிடி கோவிலிலிருந்து வெளியேறினார். ஆனால், கிண்ணத்திலிருந்து சில்லறைகளின் ஓசை கேட்கவில்லை. அப்பா நடையை மெதுவாக்கி சில்லறைகளை எடுக்கக் கிண்ணத்தினுள் கையைவிட்டார். அதில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான  சில்லறைகளே இருந்தன. அது அப்பாவின் நான்குவேளை உணவுக்கு மட்டுமே போதுமானது. தன்னைத் தவிர வேறு ஆள் நடமாட்டம் இல்லாத அந்தச் சாலையில் நடக்க அப்பாவுக்குத் திடீரென அச்சம் ஏற்பட்டது. அவர் இந்தக் கிண்ணத்தை எடுத்து அடகுவைக்கலாமா என யோசித்தார். அவர் தன்னையறியாமல் ஒரு திடலைச் சென்றடைந்தார். அது இருளால் மூடியிருந்தது. சுற்றி இருந்த ஓரிரு சாலை விளக்கின் ஆரஞ்சு ஒளி பட்டு திடலின் வடிவக்கோடு தெரிந்தது. அந்தத் திடலை அடைந்துவிட்டால் அப்பா குடியிருக்கும் வீட்டிற்கு மிக அருகில் வந்துவிட்டார் என அர்த்தம். அப்படி இருந்தாலும் இருளில் மங்கித் தெரிந்த அந்தத் திடலை அப்பா தன்னை மறந்து பார்த்துக்கொண்டிருந்தார். அப்பாவின் கண்கள் இயல்பைவிட இருளுக்கு நன்கு பழகியிருந்தன. அப்பா தன் பார்வையைத் திடலின் ஓர் இருண்ட மூலைக்குக் குவித்தார். ஒவ்வொரு திடலிலும் அவர் நின்று களமாடிய இடம் அதுதான். தனது ஆக்ககரமான செயலை நின்று பார்த்த இடம். இருளுக்குக் கண்கள்  பழகிய பின்பு அப்பாவின் பார்வை மேலும் தெளிவானது.

இருட்டு  விடியலாக மாறியது. புற்களில் இருந்த பனித்துளிகள் கெண்டைக்காலில் விழுந்தபோது உடலின் பின்புறம் சில்லிட்டு உரோமங்கள் சிலிர்த்து நிமிர்ந்தன. ஒரு காற்பந்து அவரது தலைக்கு மேலே பறந்தபோது புலர்ந்த மயக்கும் நீல வானத்தை அப்பா திடீரெனப் பார்த்தார். வானம் அப்பாவைக் கவர்ந்தது. அப்பா தயாரானார். அதிகாலைக் காற்றும் செழிப்பான நிலமும் அப்பாவைப் பரவசப் படுத்தின. அதிகாலைக் காற்று அப்பாவின் முகத்தை நோக்கி வீசியதால் நீல நிற செல்சி ஜெர்சியின் துணி மார்போடு ஒட்டிக்கொண்டது. பந்தைத் துரத்த அவரது ரத்தம் சூடேறியது. ஒரு முடிவுக்கு வந்தவராய் பந்தை வாங்கிக்கொள்ளத் தனது காலை உயர்த்தினார். அவர் அணிந்திருந்த ‘Predator’ காலணி கொடுத்த உணர்வால் தனது கவனம் அனைத்தையும் வலது காலில் குவித்தார். பளபளப்பான பந்தை முழுப் பலத்துடன் உதைத்தார்.

பார்வையாளர்கள் தங்கள் கையில் இருந்த சோளப்பொறியை மறந்து அதைக் கீழே விழவிட்டு நின்ற  ஒரு பதற்றமான சூழலில், வளைவெடுத்த அந்தப் பந்து, பல வீரர்களைக் கடந்து சென்று கோல் கம்பத்தில் நுழைந்தது. பார்வையாளர்கள் அனைவரும் ஆரவாரம் செய்தனர். அந்த ஆரவாரம் அவரை வானளவு உயர்த்தியது. அப்பா ஒரு கழுகுடன் சேர்ந்து பறந்தார். மேலும் மேலும் உயரமாகப் பறந்தார்.  விமானம் பயணிக்கும் உயரம்வரை பறந்துகொண்டே இருந்தார். அப்பா மிகவும் உற்சாகமாக ஒரு கணம் கீழே பார்த்தார். அனேகமாகப் பலரும் உயரங்களிலிருந்து கீழே விழுவதுபோல காணும் கனவுகளில் நிகழ்வதுபோல அவர் திடுக்கிட்டு வானத்திலிருந்து தலைகுப்புற கீழே விழுந்தார். பூமியில் வந்து விழ அப்பா அதிக நேரம் எடுத்துக் கொண்டாலும் இறுதியில் விழுந்தார்.

காலை பனித்துளிகள் வழக்கம்போல குளிர்ந்தன. விடிந்துவிட்டது என்பதையும் ஒரு சாலையில் நிற்கிறோம் என்பதையும் நினைவுறுத்தின. அப்பா தன் நினைவுகளில் ஆழ்ந்திருந்தார். கடந்த காலங்களின் தேர்ந்த காற்பந்து வீரராக வேண்டும் என்ற லட்சியத்தை மீண்டும் நினைவுகூர்ந்தார். அது எத்தனை அழகானது. கைதட்டல்களும் ஆரவாரங்களும் ஓய்ந்தன. அப்பா இருண்டு இருந்த அந்தத் திடலுக்கே மீண்டும் திரும்பினார். அந்த இரு வேறு காலணிகளையும் கடைக்காரரிடம் திருப்பிக் கொடுத்தபோதே அவரது  கனவுகள் கலைந்து போயின. குடும்பத்தைவிட்டு வந்தபோது நன்கு சம்பாதிக்கும் காலத்தில் மீண்டும் காற்பந்துப் பயிற்சியில் ஈடுபடத்  திட்டமிட்டிருந்தார்.

காகித விமானம் ஒன்று தன் கனவுகளை ஏற்றிக்கொண்டு அழகான மேகக்கூட்டங்களை நோக்கிப் பயணிப்பதுபோல அது முழுமையான திட்டமிடலாக இருந்தது. ஆனால் இன்றுள்ள சூழலில் அந்தக் காகித விமானம் யாரும் தொட முடியாத  உயர்ந்த மரக்கிளைகளுக்கிடையில் சிக்கிக்கொண்டிருக்கலாம் எனத் தோன்றியது. அல்லது அது ஏதோ துக்கமும் துர்நாற்றமுமிக்க ஒரு பெரிய கால்வாயில் விழுந்திருக்கூடும்.

அணைத்துப் பிடித்திருந்த வெங்கலக் கிண்ணத்தை ஒருமுறை பார்த்தார். அபோதமற்ற யோசனை சிந்தனையைக் கடந்தது. உடனே தன் சட்டைப்பையிலிருந்த ஒரு நாணயத்தை எடுத்து மனத்தில் தன் வேண்டுதலை முன்வைத்தார். பின்னர் அதைக் கிண்ணத்துக்குள் போட்டார். மற்றவர்களை போலல்லாமல் எளிய முறையில் அதைச் செய்தார். கிண்ணம் ஒலியெழுப்பியது. வேண்டுதல்  ஏற்கப்பட்டது. அப்பாவின் ஆசை நிறைவேறும் என்பதற்கான அடையாளம்போல அது இருந்தது.

வேண்டுதல் நிறைவேற அந்த வெங்கலக் கிண்ணத்தைக் கண்டிப்பாகப் புத்தரின் கையில் வைப்பதே சரி என அப்பா நம்பினார். எனவே கிண்ணத்தை எடுத்துக்கொண்டு மீண்டும் கோவிலுக்குச் சென்றார். வெங்கலக் கிண்ணத்தை மீண்டும் வைக்கும் தன் இலக்கை நிறைவு செய்யப் பொறுமையில்லாமல் அவசரம் காட்டியதால் தாமரை மேடையில் ஏறும்போது கால் ஈரத்தைத் துடைக்க மறந்துவிட்டார். மேடையிலிருந்து வழுக்கிக் குளத்தில் தலைகீழாக விழுந்தார். வெங்கலக் கிண்ணம் கவிழ்ந்து சில்லறைகள் அனைத்தும் குளத்தில் சிதறி விழுந்தன. அப்பா குளத்தினுள் உட்கார்ந்துவிட்டார். ஒருவேளை தன்னை நிதானப்படுத்திக்கொள்ள முயன்றிருக்கலாம்.

அவர் நிதானமடைந்த பின்னர் தன் கைக்கு அடியில் நிறையச் சில்லறைகள் இருப்பதை உணர்ந்தார். அவை எத்தனை ஆண்டு காலமாக அந்தக் குளத்தடியில் கிடக்கின்றன எனத் தெரியவில்லை. அப்பா மனதுக்குள்  சிரித்துக்கொண்டார். மக்கள் வேண்டுதல்களை  எங்குத்  தொலைக்கிறார்களோ அந்த இடத்தில்தான் நிறையப் பணத்தைத் தேட முடியும் போலும்.  அன்று உண்மையில் அப்பாவுக்கு அதைவிடவும் மோசமான துரதிர்ஷ்டம் நிகழ்ந்திருக்கக்கூடும். ஆம் திருடியதற்காக உள்நாட்டு போலிஸ் கைது செய்திருக்கும். கீழே விழுந்த ஓசை ஒரு கறுப்புப் பூனையின் கவனத்தை ஈர்க்கும் என அப்பா எதிர்பார்க்கவே இல்லை. குளத்தில் அமர்ந்திருந்த அப்பா குளத்தருகில் இருந்த அந்தப் பூனையைப் பார்த்துவிட்டார்.  அது அவர்  சிறுவனாக இருந்தபோது தன் தம்பியுடன் வளர்த்த ஷுய் டி என்ற கறுப்புப் பூனை என நினைத்தார். அப்பா அதைக் கட்டி அணைக்க எழுந்தார். அது தன்னை விடுவித்துக்கொள்ளத் துடித்தது. ஆனால், அதன் முன்னங்கால்களால் அப்பாவின் தோல்களைப் பற்றி, பின்னங்கால்கள் மார்புக்கு நேராக தொங்கியபடி அதன் மூச்சுக்காற்று,  காதுக்கருகில் காதலனின் மனதை சாந்தப்படுத்த ரகசிய வார்த்தை போல ஒலித்தது.

அதன் உரோமம் மென்மையாகவும் பளபளப்பாகவும் இருந்தது. அது பார்க்கக் கைவிடப்பட்ட பூனை போல இல்லை. அப்பா அதன் பிட்டத்தைப் பிடித்துத் தூக்கியபோது அது அவர் உடலில் ஏதோ ஒரு குண்டர் கும்பல் தலைவனின் உடலில் கச்சிதமாகக் குத்தப்பட்ட ஆழமான  பச்சை போலப் பதிந்து இருந்தது.

தன் கனவு குலைந்ததையும் வெங்கலக் கிண்ணம் கவிழ்ந்ததையும் தனது ஏழ்மையையும் எண்ணி அப்பா வருத்தத்துடன் மனம் தளர்ந்திருந்தார். ஆனால் அந்தக் கறுப்புப் பூனையின் வருகை அவரின் மனநிலையைச் சாந்தப்படுத்தியது. அது அப்பாவைக் கண்டு அஞ்சவில்லை. அதன் மீசை வாயருகில் தொங்கிக் கிடந்தது. அதன் பாவனை பழைய நண்பனை நீண்டநாள் கழித்துச் சந்தித்ததுபோல இருந்தது. அவர்களின் சந்திப்பு மர்மமான குளிர்ந்த நீல நிறத்தால் சூழப்பட்டிருந்தது.

அப்போது அந்தப் பட்டணமும் வானமும் சிறுவன் ஒருவன் நீர் வண்ணத்தைப் பயன்படுத்தி அல்ட்ரா மெரின் எனும் நிறத்தில் வரைந்த காட்சிபோல இருந்ததாக அப்பா சொன்னார்.   

அதன் கண்கள் வழியே, அது ஷுய் இல்லை என்பதை அப்பா புரிந்து கொண்டார். காரணம் ஷுய் டியின் கண்கள் வான் நீல வண்ணத்தில் இருக்கும். ஆனால், அந்தப் பூனையின் கண்களோ ஆழ்கடலின் இரு சொட்டு நீர் போல ஊடுருவும் ஆற்றலை அதிகம் கொண்டிருந்தது.

அந்தக் கண்களை நேருக்கு நேர் எதிர்கொண்ட கனம் கருநீலத்திலான அதன் கூரியப் பார்வை அப்பாவின் கண்களைத் துளைத்துக்கொண்டு சென்றது. கூர்மையான களியொன்று மூளைக்குள் செருக்கிக்கொண்டதுபோல அது ஏற்படுத்திய எரிச்சல் இருந்தது. தியானத்தில் இருந்த துறவிக்குச் சட்டென ஞானம் கிட்டியதுபோல அப்பா தெளிவு பெற்றார்.  நிலையான நிரந்தமான யாராலும் கலைக்கவோ அழிக்கவோ முடியாத ஒன்றை அவர் மனம் நாடியது.

ஓர் அமைதியான பட்டணம் மட்டுமே அப்படி நிலையான நிரந்தமான எப்போதும் அழியாததாக இருக்க முடியும் எனத் தோன்றியது.

வயல் பறவை ஒன்று தன் எண்ணத்தை உரத்த குரலில் வெளிப்படுத்திக்கொண்டிருந்தது; அப்பாவைப் பொருத்தவரை அந்தச் சத்தம் சூழலுக்குப் பொருந்தாமல் இருந்தது. பலரும் அந்தச் சத்தத்தைக் கேட்டு தங்களது வீடுகளிலிருந்து வெளியே வந்தனர். அந்த அதிகாலையில்  அறிமுகமே இல்லாத பெண் ஒருத்தி அப்பாவுக்குத் துண்டு ஒன்றைக் கொடுத்தாள். அப்பாவின் உடலில் ஒட்டியிருந்த பாசிகளையும் மீனின் கழிவுகளையும் சுட்டிக்காட்டி, ” You can clean it up” எனக் கூறினாள்.

அப்பா அந்தத் துண்டைப் பெற்றுக்கொண்டு நன்றி என ஆங்கிலத்தில் கூறினார். அந்தப் பெண் முதுகில் பெரிய துணிப்பையை மாட்டியிருந்தாள். கழுத்தில் Leica காமிராவை தொங்கவிட்டிருந்தாள். அவள் ஓர் அசலான பேக்பேக்கர் போல இருந்தாள். அந்தப் பெண் அப்பாவை வீடற்றவர் என நினைத்து ஒரு நீர் புட்டியையும் கொடுத்தாள். அப்பா துண்டால் உடலைச் சுத்தம் செய்தபோது, ​​​​கறுப்புப் பூனை அப்பாவின் தலையை மிதித்து ஒரு தோளிலிருந்து மற்றொன்றுக்குச் சென்றதை அப்பெண் படம் எடுத்துக்கொண்டாள். அந்தப் புகைப்படம், ஆல்பத்தில் மற்ற பல படங்களுடன் இப்போதும் என் அம்மா, அப்பாவின் கட்டிலின் கீழ் உள்ள ஒரு பிஸ்கட் டப்பாவில் உள்ளது. பின்னாளில் அந்தப் பெண் எனக்குத் தாயானாள்.

அந்தச் சந்திப்புக்குப் பின் சிறிது காலத்திலேயே அவர்கள் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர். பின் ஓராண்டு கழித்து நான் பிறந்தேன்; அதன் பிறகு அப்பா எங்களை மீண்டும் கம்பத்திற்குத் தாத்தா பாட்டியைச் சந்திக்க அழைத்துச் சென்றார். ஆனால் தாய்லாந்தில் அவர் சந்தித்த அந்தப் பூனையைப் பற்றி அப்பா தன் தம்பியிடம் மட்டுமே கூறியிருந்தார். அந்தப் பூனையின் பெயர் செல்சி  எனச் சொல்லியிருந்தார். அப்போது சித்தப்பாவுக்கு 21 வயதுதான்; மலாயா பல்கலைக்கழகத்தில் உயிரியல் மருத்துவத் துறையில் படித்துக்கொண்டிருந்தார்.

இவ்வளவுதான் என் அப்பாவின் கதை. அதற்குப் பின் அவரது வாழ்வு சுவையற்றதாக அமைந்தது. சுவாரசியமான கதைகள் என  எதுவும்  இல்லை. இதற்கு மேல் ஏதும் கதை சொன்னால் நீங்கள் ஓடிவிடக்கூடுமென எனக்குப் பயமாக உள்ளது. ஒருவேளை செல்சி நீலம் என்பது என்ன என்ற கேள்வியைத் தொடர்ந்து நீங்கள் கேட்டுக்கொண்டிருக்கலாம் என்று நினைக்கிறேன். உண்மைதானே?

அப்படிக் கேள்வி இருந்தாலும், அதற்கும் காற்பந்துக் குழுவுக்கும் அதிகம் சம்பந்தம் இல்லை என புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.

உண்மையில் தொடர்பில்லாத நிறையக் கதைகளை உங்களிடம் சொல்லிவிட்டதற்காக மன்னிப்புக்கேட்க நினைக்கிறேன். இன்னும் செல்சி நீலம்  குறித்து யூகங்களே இருக்குமானால், என்னால் உங்களிடம் சொல்ல முடிந்தது அது ஓர் உணர்ச்சி என்பதை மட்டுமே. ஆனால் என்னால் அதை இன்னமும் உணரமுடியவில்லை. என் சிறிய வயது காரணமாக இருக்கலாம். எது எப்படி இருந்தாலும் என் பெற்றோரின் சந்திப்பின் வழி,  ஒவ்வொருவரும் ஒருநாள் அதை உணரக்கூடிய காலம் ஒன்று வரும் என்பது எனக்குத் தெரியும்,  நான் அதை உறுதியாக நம்புகிறேன்.

சீன மூலம்: லிம் ஜுன் லோங் (Lim Jun Long)

மலாய் மொழிபெயர்ப்பு: சியாலிலிங் (Seah Li Ling)

தமிழில் : . நவீன்

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...