அனல் மடி

சிலாவாடீ கடற்கரை ரிசார்ட்டிலிருந்து பார்க்கையில், ஒட்டு மொத்த தாய்லாந்து கடலும்  விழிகளுக்குள் அடங்கி விடுவதாகவே எண்ணிக் கொண்டேன். நோக்கு மறையும் தொலைவிற்கு வெறும் நீல திரை போன்ற நீர்தான். ‘என் ஊரிலும் இதே நீர்தான் இருக்கின்றது. ஏன் அங்குப் பார்த்த கடலை விட, இங்குப் பார்க்கும் கடல் வேறொரு உணர்வைத் தருகிறது’ என யோசித்தேன்.

அப்பொழுதுதான் சற்றும் தொடர்பில்லாமல் அவளின் நினைவு வந்தது. கடலைப் போலவா பெண்கள்? இப்படியான கேள்விகள் என் மனதில் தோன்றும்போதெல்லாம் மூளையில் ஈக்கள் மொய்க்கும். அந்தப் பெருமோசையில் பதிலைத் தேடித் தேடி கண்டடைவேன். ஆனால் இம்முறை பதில் கிடைக்கும் முன்னர் “சார்” என்ற சத்தம் திடுக்கிடச் செய்தது.

திரும்பிப் பார்த்தேன். அறையில் ஒருவன் நின்றுக் கொண்டிருந்தான். அனுமதியின்றி அறையில் நுழைய எவருக்கும் அனுமதியில்லை. ஒருவேளை நான் கதவைத் திறந்து வைத்திருந்தேனா? வைத்திருந்தால் என்ன… எப்படி இவன் நுழையலாம்? உடலில் எனக்குப் பதற்றம் கூடியது. கழுத்தை இன்னும் திருப்பி அவனை நோக்கினேன். மெலிந்த உருவம். நெடிந்த உயரம். முகம் மட்டும் சிறுவனுக்குரியது. இறுக்கமான  கருப்பு நிற ஆடை அணிந்திருந்தான். செம்பழுப்பு நிற முடி. சீவாமல் கலைந்திருந்தது.

என்னைப் பார்த்து விட்டு முகத்தைக் கீழே தொங்க விட்டுக் கொண்டான்.

“யார் நீ?” என்று ஆங்கிலத்தில் கேட்டேன். அவன் பதிலேதும் கூறாமல் என்னையே நோக்கிக் கொண்டிருந்தான். படுத்திருந்த சொகுசு பலகையிலான நீண்ட நாற்காலியிலிருந்து எழுந்தேன். வெள்ளை நிற உள்ளாடை மட்டும் அணிந்திருந்தேன்.

“மசாஜ் செய்ய வந்துருக்கிறேன்?” முகம் தூக்கி என்னைப் பார்த்து பேசினான். இளம் பச்சை நிற விழிகள். பாம்பைப் போன்றது என்று எண்ணிக் கொண்டேன். நான் ஒன்றும் சொல்லாமல் முறைத்தேன்.

“கீழே  ரிசப்ஷனில் சொன்னார்கள். உங்களுடைய அறை நம்பர் சொன்னார்கள்.”

“சொன்னால்… நீ அனுமதி இல்லாமல் உள்ளே நுழைந்து விடுவாயா?” கத்தினேன். உண்மையில், நான் ஒரு மசாஜ் செய்யும் பெண்ணை எதிர்ப்பார்த்துக் காத்திருந்தேன்.

“வாடிக்கையாளர்களைச்  சந்தோஷப்படுத்துவது எங்கள் ரிசொர்ட்டின் முதன்மையான நெறி. மேலும் இது சோங்க்ரான் திருவிழா கொண்டாடும் நாள். நீங்கள் அவசரமாக வெளியேறக்கூடும் என நுழைந்துவிட்டேன்”, ஆங்கிலத்தில் மிகச் சரளமாக, அமெரிக்க நெடி கலந்து, ஒப்புவிப்பது போல் சொன்னான்.

“நான் என்ன கேட்கிறேன் நீ என்ன சொல்கிறாய். வாடிக்கையாளரைச் சந்தோஷப்படுத்த அனுமதி இல்லாமல்தான் நுழைவாயா?”

“கதவு திறந்திருந்ததால் நீங்கள் காத்திருப்பதாக எண்ணி  நுழைந்துவிட்டேன்… மன்னித்துவிடுங்கள்,” இதை பலமுறை தனக்குத் தானே சொல்லி அகத்தில் நடித்திருக்கிறான் போல தோன்றியது.

“வெளியில் இருந்து கதவைத் தட்ட உனக்கு என்ன?”

“மன்னித்துவிடுங்கள்… உங்களை மகிழ்விப்பதே என் விருப்பம்”, மிக மென்மையாய்ப் புன்னகைத்தான்.

பிறகு ஒரு கணம் அவன் விழிகள் விலகி கீழே பார்த்து விட்டு, மீண்டும் மேலே நோக்கியது. அவன் எதைப் பார்த்தான்? கூரிய அம்புகளால் உடல் துளைக்கப்பட்ட வலி போன்று எதுவோ என்னுள் ஊர்ந்து செல்வதை உணர முடிந்தது. கொதிக்கும் உலையின் நெடி போல, என் மூச்சுக்காற்று வெளிவந்து கொண்டிருந்தது.

“மசாஜை ஆரம்பிக்கலாமா?” அவன் எந்தக் குற்ற உணர்ச்சியும் இல்லாமல் கேட்டது என்னைச் சீண்டியது.

“வரும்பொழுது கதவைத்  தட்ட வேண்டுமென்று உனக்குத் தெரியாதா? அதை உனக்கு யாரும் சொல்லித் தரவில்லையா? இதுதான் நீங்கள் ரிசொர்ட் நடத்தும் லட்சணமா? நீ திருட வந்தவன் போல்தான் இருக்கிறாய். சொல் எதற்காக உள்ளே வந்தாய்? கதவைத் தட்டி வராததற்கு, உன்னை உன் நிர்வாகத்திடம் சொல்லி வேலை நீக்கம் செய்ய முடியும். செய்யவா?” என்று சொல்லி அருகிலிருந்த ஹோட்டல் ரூம் ரிசப்ஷன் தொலைபேசியை எடுக்கப் போனேன்.

அவன் சடாரென்று என் காலில் விழுந்து விட்டான். ஏதோ மொழியில் கெஞ்சினான். அழுவது போல் அவன் குரல் இருந்தது. அவன் நாட்டு மொழியிலும் கதறினான். ஆங்கிலத்திலும் அரற்றினான். ஒரு கொடூரமான நிம்மதி, ஊற்று போல் என்னுள் நிறைந்தது. அவன் இன்னும் கெஞ்ச வேண்டுமென்று அது சொன்னது.

என் காலைப் பிடித்த அவன் கைகளை, என் காலாலேயே எட்டினேன். அவன் அஞ்சி பின்னடைந்து, கீழே அமர்ந்து கொண்டான். எழுந்து சென்று என் துண்டை எடுத்து வர சொன்னேன். பதற்றத்துடன் அதை எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தான். அவன் கைகள் நடுங்குவதைக் கண்டேன். அறியாமல் முகத்தில் எனக்குப் புன்னகை வந்தது. பிறகு அவனைப் பார்த்தேன். துண்டை அவன் கைகளிலிருந்து பிடுங்கிக் கொண்டேன். என் கைகள் மேல், அவன் கரங்கள் படாதவாறு சட்டென விலகிக் கொண்டான். அவனை நோக்கி மலத்தைப் பார்ப்பது போல் முகத்தை வைத்துக் கொண்டேன். அவன் பச்சை விழிகள் மெல்ல அதை சந்தித்து குனிந்துக் கொண்டன. கழிவறை கதவைத் திறந்து, உள்ளே போனேன்.

அதன் கதவு பெரு ஓசையுடன் சாத்திக் கொண்டது. நான் ஓங்கி அடித்ததன் விளைவாய் இருக்கலாம். அவன் இருப்பை நான் உள்ளிருந்தே உணர்ந்து கொண்டிருந்தேன். ரிசார்ட்டின் அறைக்கு  வந்தவுடன், நான் முதலில் நுழைந்தது இந்தக் கழிப்பறையில்தான். அவன் வருவதற்கு முன்பு, நான் என் ஆடைகள் அனைத்தையும் களைந்து உள்ளாடைக்கு மாறியது இதே கழிப்பறையில்தான். இப்பொழுது முற்றிலும் புதியதாக இருந்தது.

துண்டைக் கழற்றி, அருகிலிருந்த மூங்கில் தண்டைக் கொண்டு செய்திருந்த ஒரு கொடியின்  மீது மாட்டி வைத்தேன். அந்தக் கழிவறையே ஒரு மூங்கில் காட்டுக்குள் எழுந்த ஒரு அழகிய நீர்சோலை மைதானம் போன்றது என்று எண்ணிக் கொண்டேன். உள்ளே, மிக மெல்லியதாக ஒரு புல்லாங்குழல் இசை. பின் ஏதோ ஒரு நறுமணம். எங்கேயோ முகர்ந்த ஒரு பரிச்சியமான மணமது. துண்டை மாட்டியவுடன், என் உள்ளாடையைக் கழற்றினேன். அதையும் அதே கொடியில் மாட்டி வைத்தேன். எதிரே ஒரு பக்க சுவர் முழுதும் நிறைந்திருந்த கண்ணாடி முன் சென்று நின்றேன். என் நிர்வாணத்தை நானே கண்டேன். ஒருவரும் அறியாமல்… நானும் கூட அறியாமல். என் அகம் மட்டுமே அறிய கூடிய ஒரு நிர்வாணமது. மேலிருந்து கீலுடல் சென்று பிறகு ஒவ்வொரு உறுப்புகளையும் கூர்ந்து பார்த்தேன். நானறியாத புதிய ஒருவன் அங்கே நின்று கொண்டிருந்தான். என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான்.

அவன் யாரென்று எனக்கு அறிந்து கொள்ள முடியவில்லை. பதற்றமானேன். நானே உருவகித்துக் கொள்ளும் ஒரு பிம்பம், என் விழிகளுக்கு மட்டும் புலப்படும் ஓர் உருவம். முன்பு எப்போதாவது கனவுகளில் வருபவன். பிறகு நேரிலும் வரத் தொடங்கினான். அவன் யார்? அதிகமாய்க் குடிப்பதால் அவன் என் விழிகளுக்குத் தெரிகிறானா, அல்லது போதையை உள்ளிழுப்பதால் வருபவனா?

அவன் சொல்வதையெல்லாம் என்னைச் செய்ய வைக்க கூடியவன். ஒருமுறை என்னையே என்னைக் கொண்டு கொலை செய்ய சொன்னான். என்னை நானே வெறுப்பதால், நீ வாழ தகுதியில்லை என்று சொன்னான். அதை தினமும் என்னிடம் வந்து சொல்லத் தொடங்கினான். அதை மிக ரகசியமாக என் ஆபிசில் பணிபுரியும் ஸ்வேதாவிடம் பகிர்ந்த பிறகே, அவள் என்னை மனநல மருத்துவரிடம் சென்று  பார்க்கச் சொல்லி, முறையாக சிகிச்சியைப் பெற வைத்து குணமாக்கினாள். என் மீது அக்கறை செலுத்திய முதல் பெண். அந்த மன நோய் குணமாகி ஆறு மாதங்களாகி விட்டன. மிகச் சரியாக மருந்துகளும் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். மீண்டும் அவ்வாறு தெரியும் ஒரு உருவம் தானா இது? ஸ்வேதாவிடம் புலனத்தில் மெசேஜ் செய்து விட வேண்டுமென்று எண்ணி, பின் தயங்கி வேண்டாமென்று எண்ணிக் கொண்டேன். கண்களை இறுக மூடி, தொண்டைக்குள் எச்சிலை விழுங்கி கண்ணாடியைப் பார்த்தேன். தெரிவது நான்தான் என்பதில் இப்போது சந்தேகம் இல்லை.

ஆண்குறியைத் தொட எத்தனித்துக் கொண்டிருக்கும் சரிந்த தொப்பை. முதிரா இளம்பெண்களுக்குரியது போன்ற மார்புகள். சரும மயிர் வளராத வளவளப்பான தோல். வெண்மை திரண்டு பெருகியிருந்த உடல். பெரும் ஸ்டிக்கர் போன்று செம்பழுப்பு நிறத்தில் முலை காம்புகள். தொப்பை பெருத்து, இடுப்பு பகுதியில் தனியே தொங்கிக் கொண்டிருந்த கொழுப்பு சதைகள். பெருத்த தொடை. அப்படியே கீழிறங்கி உடலுக்குச் சம்மந்தமே இல்லையென்று, குறுகிய கால்கள்.

தவளை சதை தொங்கி, வீங்கிய கன்னங்களுடன் ஆங்காங்கே மெல்லிய பூனை முடி போல வளர்ந்த தாடியும் மீசையும். பாத்திரம் தேய்க்கும் பழைய கம்பி பஞ்சு என்று நினைத்துக் கொண்டேன். கருவளையம் சுற்றிய சோர்வடைந்த கண்கள். பெரிய நெற்றி. அதற்கும் அப்பால் வழுக்கை. அது நீண்டு கொண்டே சென்றது. முகத்தைப் பார்க்க பிடிக்காமல் அப்படியே சரிந்து தரையில் அமர்ந்தேன். இத்தனை அவலட்சணம் ஒரு மனிதனுக்கு அவசியமா?

மிக மௌனமான அழுகை அது. உள்ளுக்குள்ளே அழுதுக் கொண்டேன். வாழ்வை இப்பொழுது நினைத்து பார்க்கையில், இது ஒரு பெரும் மலநதிச்சுழல் போலிருந்தது. இளவயதில், அப்பாவின் பணத்தில், குடியும் கூத்தும், நண்பர்களும் என்று சகட்டு மேனிக்குப் பண விரையம். வயது முப்பத்தைந்து வந்த பொழுது, அப்பா பெண் பார்க்கக் கூட்டிச் சென்றார். அவளைத் திருமணமும் செய்து கொண்டேன். இரண்டே வருடத்தில் விவாகரத்து. நான் முதலில் ஆவலுடன் உறவு கொள்ளும் பொழுது, அவள் அவமானபடுத்தியது என் ஆண்மையை. சீ, அவளைப் பற்றி ஏன் இப்பொழுது நினைக்கிறேன். சனியன், என் வீட்டு வேலைக்கார, தோட்டக்கார நாய்களுடன் புணர்ந்தவள். பங்களாதேஷ், பாகிஸ்தான் நாட்டுகாரர்கள். அவளுக்கு என்ன அத்தனை காம வெறி? அவளை ஒரு நாள் கொல்வேன் என்று நினைத்துக் கொண்டேன்.

அவளுக்குப் பின்பு பல மதுபான விடுதிகளில் பல பெண்களுடன் நட்பு வளர்த்திருக்கிறேன். எவ்வளவு தவிர்த்தும் அவர்களாகவே உடலுறவு வரை அழைத்துச் செல்வார்கள். என் இடுப்புக்கு கீழே பார்த்த பின்பு, முகத்தில் ஒரு ஏளன சிரிப்பைச் செருகிக்கொள்வார்கள். பணம் மட்டும் வாங்கி கொண்டு செல்வார்கள். அப்படிச் சொல்லிவிட முடியாது. நானே பணத்தை அள்ளி அடிப்பேன். அவர்கள் மேற்கொண்டு ஏளனமாகச் சிரிக்காமல் இருக்க என்னால் அதையே செய்ய முடிந்தது. பணத்தைப் பொறுக்கிச் செல்லும் அவர்களை நாய்கள் போல ஏளனமாகப் பார்ப்பேன். நிம்மதியாகத் தூக்கம் வரும்.

அவர்களின் நினைவு வந்து கசப்பு தொண்டையை அடைக்கும்போதெல்லாம் சட்டென ஸ்வேதா நினைவில் வந்து நின்றுவிடுவாள். மனம் இனிக்கத் தொடங்கும். என் ஆபிசில் வேலை பார்ப்பவள். தூய அழுக்கிற்கு பிறகு வரும் பரிசுத்த நினைவு அவள்.  கடலைப் பார்த்தபோதும், அவள் நினைவுதான் வந்தது. அவளுக்கும் என் மீது அன்புதான். என்னிடம் சிரித்துப் பேசுவாள். என்னைப் போலவே கொஞ்சம் பருமன். ஆனால் எல்லாம் அளவாகவே இருக்கும். எங்கள் நட்பு கொஞ்சம் எல்லை மீறியது என்று நானே எண்ணிக் கொள்கிறேன். அவளிடம் என் ஆசையைச் சொல்லிவிட வேண்டுமென்று எத்தனையோ முறை எண்ணியிருக்கிறேன். வாய்ப்பு வந்தும், அதை தவிர்த்து விடுவேன். அவளிடம் நான் கொண்டிருப்பது அன்பு. அதை அவள் நிராகரித்து விடக் கூடாது. என்னால் அதை தாங்கிக் கொள்ள முடியாது.

உறவு கொல்வதை நான்தான் முடிந்தவரை தவிர்த்து வந்தேன். அவள் என்னைப் பார்த்து கேலியாகச் சிரிப்பதை என்னால் கற்பனை கூட செய்ய முடியவில்லை. அதனாலே அவளிடமிருந்து விலகி விட வேண்டும். என்னை அவள் முற்றாக சிதைப்பதற்கு முன்பே ஓடி விட வேண்டும். மிக தொலைவிற்கு. நீண்ட தூரத்திற்குச் சென்று ஒளிந்துக் கொள்ள வேண்டும். அவள் சென்றடைய முடியா பால் வெளியில் சென்று மூழ்கி விட வேண்டுமென்று எண்ணிக் கொண்டேன்.

எழுந்து, துண்டைக் கட்டிக் கொண்டு கழிவறை கதவைத் திறந்தேன். அவன் நின்று கொண்டிருந்தான். கைப்பேசியை எடுத்துப் பார்த்தேன். ஸ்வேதாவிடமிருந்து ஏராளமான அழைப்புகள். நிறைய குரல் பதிவுகள். எல்லாவற்றிலும் நான் எங்கே சென்றேன் எனும் கேள்வி இருக்கலாம். அடைத்து வைத்தேன். அனைத்தையும் நிதானமாகச் செய்தேன், கொஞ்ச நேரம் அவனைக் காக்க வைத்தேன். மெத்தையில் மல்லாந்து படுத்து  இருந்தேன். அப்படியே படுத்து, அவனிடம் கட்டளைகளைப் பிறப்பித்துக் கொண்டிருந்தேன். அவன் மெதுவாக என் துண்டைக் கொஞ்சமாய் மேலே நகர்த்தி தைலத்தை என் கால்களில் தேய்த்தான். இறுக்கமான கைகள். பின் மெல்ல கால்களுக்கு வந்து, பிறகு தொடைகளையும் தேய்த்தான். மிக நுணுக்கமான சில இடங்களில் கை வைத்து அமுக்கியதில், கட்டுண்டு இருக்கும் தசைகள் விடுபடுவதுப் போல் உணர்ந்தேன். என்னுடலைத் தொட, அவன் எவ்வித தயக்கமும் காட்டவில்லை.

அவன் செய்து கொண்டிருந்த மசாஜ் என்னை தூங்கத் செய்தது. ஆனால் தூங்க கூடாது என்று மூளை சொல்லிக் கொண்டே இருந்தது. பின் பக்கத்தில் முழுவதுமாய் எண்ணெய் போட்டுத் தேய்த்தவுடன், திரும்பிப் படுத்தேன். துண்டைக் கொண்டு என் இடுப்பிற்குக் கீழ் மறைத்துக் கொண்டேன். அவன் அதை பார்த்து விடக் கூடாது. ஓர் ஆண் அதை பார்பதென்பது எனது ஆணவத்திற்கு விழும் பேரடி. அவன் தேய்த்துக் கொண்டிருந்தான். நான் கண்களை மூடிக் கொண்டே, அவன் உருவை நினைவு படுத்திக் கொண்டேன். அவன் எவ்வித தயக்கமுமின்றி என் உடலைத் தொடுகிறான்.  கூச்சமின்றி தன் வேலையைச் செய்கிறான். எவ்வித எதிர்ப்புமின்றி, என் முன் பணிந்து நிற்க அவனால் முடிகிறது. ஒருவன் அவ்வாறு இருக்க முடியுமா? முழுதாய் வெளிபடுவதும், மொத்தமாய் கரைந்தழிவதும் மானுடனுக்கு இயல்வது தானா? அவனால் எப்படி இத்தனைக்குப் பிறகும் என்னை இம்மியளவும் வெறுக்காமல், முகம் சுளிக்காமல் தொட முடிகிறது? அவன்  எனக்கு இன்னும் அணுக்குமானான்.

“நீ இந்த ஊர்க்காரனா? விழி மூடியபடியே கேட்டேன். அவன் ‘ஆம்’ என்றான். முன்னிலும் வேகமாய் சரும தோல் சூடு ஏறத் தேய்த்தான். கண் திறந்து அவனைப் பார்த்தேன். அடுக்கி வைத்த  வெள்ளை சுண்ணகற்கள் போன்ற பல்லைக் காட்டி சிரித்தான். மெய்யான சிரிப்புதான்.

“இங்கே தான் பிறந்தாயா, இல்லை சொந்த ஊர் எதவாது உண்டா?” அவன் காலுக்கு இடையில் அமர்ந்து விரல்களை நீவிக் கொண்டிருந்தான். மெல்லிய சுகம் உடல் முழுதும் பரவி இருந்தது. “சொந்த ஊர் சியாங் கான் எனும் ஒரு கிராமம். இங்கிருந்த ஆயிரம் கிலோமீட்டருக்கு மேல். விமானத்தில் போகலாம். ஆனால், ரயிலில் அல்லது பேருந்தில் சென்றால் இருபது மணி நேரமாகும்.” அவன் அத்தனை  இயல்பாய்ப் பேசியது எனக்கு ஆச்சரியம்தான்.

“பிறகு இங்கு எப்படி வந்தாய், நீ ஆங்கிலத்தில் பேசுவதைக் கண்டு நானே ஆச்சரியப்பட்டு போனேன். படித்தவன் போலிருக்கிறாய், வேறு அலுவலக வேலைக்குப் போக வேண்டியது தானே?”

அவன் தொண்டையைச் செருமிக் கொண்டான். “இல்லை எனக்கு இந்த வேலை பிடித்து இருக்கிறது,”என்றான்.

“உனது பெற்றோர்கள், உறவினர்கள், சொந்தகாரர்கள் என்று யாரும் எதுவும் கேட்க மாட்டார்களா?”என்றேன்.

“இல்லை எனக்கு யாருமில்லை. பதினாறு வயதிலே எங்கள் ஊரிலிருந்து வந்து விட்டேன். எங்கள் கிராமத்தில், கோழி விற்பவரிடம்தான் வளர்ந்தேன். பிறகு அங்கிருந்து புறப்பட்டு இங்கு வந்து விட்டேன். இங்கே இருப்பதுதான் எனக்குப் பிடித்திருக்கிறது,” என்றான்.

“ஏன் உன் ஊரிலிருந்து வந்து விட்டாய்?” என்றேன்.  “இல்லை எனக்குப் பிடிக்கவில்லை,” என்றான்.

“எனக்கும் என்னுடைய ஊர் பிடிக்கவில்லை. அங்கு வாழும் மனிதர்களைப் பிடிக்கவில்லை. எங்குப் பார்த்தாலும் கசப்பான மனிதர்களே கண்களுக்குத் தெரிகிறார்கள். துரோகம் செய்கிறார்கள். இகழ்கிறார்கள். நம்பியவர்கள் ஏமாற்றுகிறார்கள். வாழ்வில் ஒருமுறை கூட நான் மகிழ்ச்சியை உணர்ந்ததில்லை,” என்றேன். அவன் முகம் நிமிர்ந்து  என்னைப் பார்த்தான்.

“நிஜமாகவா?” என்றான்.

“ஏன் அப்படிக் கேட்கிறாய்?” என்றேன். அவன் இதையெல்லாம் கடந்த உண்மையான காரணம் ஒன்றைக் கண்டடைந்து விட்டானா எனப் பயம் வந்தது.

“இல்லை உங்களிடம் பணமிருக்கிறது. ஆடம்பரம், போதை என எல்லாமிருக்கிறது. இருந்தும் உங்களுக்கு மகிழ்ச்சி இல்லை,” என்றான். நான் சட்டென நிமிர்ந்து அவனைப் பார்த்தேன். அவன் அஞ்சி பின்னடைந்து விட்டான். நான் சிரித்தேன்.

“நான் உன்னை அடிக்க போவதில்லை. முன்பு கோபம் கொள்வது போல் நடித்தேன்”.

“நானும் உங்களைக் கண்டு அஞ்சவில்லை. நடுங்குவது போல் பாசாங்கு செய்தேன்”, என்றான். இருவரும் பலமாய் சிரித்துக் கொண்டோம். அவனை அருகே அணைத்து என் பக்கத்தில் அமர வைத்துக் கொண்டேன். ஏனோ எனக்கு அணுக்கமானவன் போல உணர்ந்தேன்.

“உண்மையில் நீ பயப்படவில்லையா?” என்றேன்.

“நீங்கள் என் மேல் கோவம் கொண்டது உண்மைதான். ஆனால் அஞ்சுவது போல் நான் இருந்தது பொய்யே,” என்றான். “எங்கள் வாடிக்கையாளர்களை நாங்கள் கடவுள் போலவே நடத்துவோம். அது எங்கள் தொழில் தர்மம்,” என்று சொல்லிப் பொய்யாக வணங்கினான். அவனிடம் அத்தனை குறும்பு இருக்குமென்று நான் எதிர்பார்க்கவில்லை. அவன் உடல் மொழியும் ஒரு குறும்புக்காரனுக்கு உடையது போலவே இருந்தது. நாங்கள் இயல்பாகிவிட்டோம். வெகு நாள் பிரிந்திருந்த நண்பர்கள் போல.

“சோங்க்ரானில் கலந்துகொள்ளவில்லையா?” என்றான்.

“இல்லை… நான் எங்கும் போகவில்லை. தாய்லாந்து வந்ததே என்னை அங்கிருந்து முற்றிலும் விடுவித்து கொள்வதற்கு தான்,” என்றேன்.

“என்ன சொல்கிறீர்கள். இந்த சீசனில் வந்து சோங்க்ரான் விழாவை அனுபவிக்கவில்லையா? அது எங்களுக்கு நீங்கள் செய்யும் துரோகமல்லவா. நாம் வெளியே சொல்வோம். ஆனால் யாருக்கும் தெரிய கூடாது. நாம் திருட்டுத் தனமாகத்தான் போக போகிறோம்,” என்றான்.

“இல்லை இது இரவு நேரம், எங்கே செல்வது,” என்றேன். “அதை நான் பார்த்துக் கொள்கிறேன்,” என்றான்.

“குளித்துவிட்டு வரவா?”

“குளியலா…” அவன் வேகமாகச் சிரித்தான்.

ஒருகணத்தில் அவன் தன்னையே மறந்து விட்டான். முற்றிலும் தான் யாரென்று மறக்கும், தன்னிலை விட்டு விலகும் குணத்தைப் பெற்றிருந்தான். என்னவோ தெரியாமல் எனக்கும் ஆர்வம் தொற்றிக் கொண்டது.

அவன் அணிந்திருந்த சட்டை அந்த ரிசார்ட்டின் சீருடை. அதை மாற்றவில்லையா என்று கேட்டேன். வெளியே சென்றவுடன், அவன் சட்டையைக் கழற்றிக் கொள்வதகச் சொன்னான். சரியென்று இருவரும் வெளியே சென்றோம். உடலில் எண்ணெய் பிசுபிசுப்பு இருந்தது. நான் எனது கைத்தொலைபேசியை, வாங்கி வந்திருந்த ஒரு பிளாஸ்டிக் கவருக்குள் போட்டுக் கொண்டேன். அதற்கு முன்னர் அதை மீண்டும் முடுக்கி ஸ்வேதாவிடம் புதிய அழைப்புகள் வந்துள்ளதை உறுதி செய்துகொண்டேன். மகிழ்ச்சியும் துக்கமும் ஒரு சேர வந்தது. அடைத்து வைத்து அதை கழுத்தில் மாட்டிக் கொண்டேன். எங்குச் செல்கிறோம் என்று நான் கேட்டு முடிப்பதற்குள் அவன் என் கைகளைப் பிடித்து இழுத்துச் செல்ல ஆரம்பித்தான். சற்று முன்பு என்னிடம் அஞ்சி  பயந்தவன் தானா இவன் என்று எண்ணிக் கொண்டேன்.

நடந்தேதான் சென்றோம். அத்தனை தொலைவு இல்லை. ஆனால் அவன் என் கையைப் பிடித்திருந்த பிடியை விடவில்லை. என்னிடம் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தான். அவன் எங்குச் செல்கிறான் என்பதை என்னால் யூகிக்க முடிந்தது. அவன் என்னைக் கடற்கரைக்கு அழைத்து செல்கிறான். அது நான் தங்கியிருந்த ரிசார்ட்டிற்கான தனியார் கடற்கரைதான். இரவில் கடல், இருள் சூழ்ந்த பெரும் பரப்பு போன்று இருந்தது.

நாங்கள் மணலில் நடந்துக் கொண்டிருந்தோம். ஆனால் அவன் அங்குச் செல்லாமல் எதோ ஒரு குறுக்கு சந்தில் நுழைந்தான். எனக்கு மூச்சு வாங்கிக் கொண்டிருந்தது. இருந்தும் அவனைத் தொடர்ந்து சென்றேன். ரிசார்டிலிருந்து வெகு தொலைவு இல்லை அது. அந்தக் குறுக்கு சந்தை தாண்டிய பொழுது, அங்கு அப்படி ஒரு இரவு சந்தை இருக்குமென்று எனக்குத் தெரிந்திருக்கவில்லை. அத்தனை பிரம்மாண்டமான, ரிசொர்டிக்கு பக்கத்திலே, ஒரு மிக சாதாரண மீன் விற்கும் இரவு சந்தை. இது இங்கிருப்பதற்கான தடயமே அங்குத் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கு தெரிந்திருக்காது.

உள்ளே செல்ல செல்ல, சத்தம் வலுத்தது. ஆனால் அவன் பிடித்திருந்த  பிடியை மட்டும் விடவில்லை. அவனிடம் யார் யாரோ வந்து பேசினார்கள். சிலர் எதையோ வந்து அவனிடம் தந்தார்கள். இங்கு அவன், வாடிக்கையாக வருவான் என்பது மட்டும் தெரிந்தது. இன்னும் உள்ளே செல்ல, சிலர் அவர்களின் கடைகளின் முன்பு மிகப் பெரிய தொட்டிகளில் தண்ணீர் நிரப்பி, கைகளில் பொம்மை துப்பாக்கிகள் வைத்திருந்தனர். அதில் தண்ணீரைக் கொண்டு நிரப்பி மற்றவர் மேல் அடித்துக் கொண்டிருந்தனர். நான் தயங்கினேன். ஆனால் அவன் என்னை வற்புறுத்தி அந்தக் கூட்டத்திற்குள் அழைத்து சென்று விட்டான்.

கூட்ட அலைமோதலால் நாங்கள் மிதந்து தான் கொண்டிருந்தோம். யாரென்று தெரியாதவர்கள் எல்லாம் வந்து எங்கள் மீது தண்ணீரைக் கொட்டினார்கள். அந்தப் பொம்மை துப்பாக்கியைக் கொண்டு தண்ணீரைப் பீச்சி அடித்தார்கள். பெண்கள் ஆண்களென எவ்வித பாகுபாடும் அங்கில்லை. ஒருவருக்கொருவர் கட்டித் தழுவிக் கொண்டார்கள். முத்தமிட்டுக் கொண்டார்கள். ஆண்கள் ஆண்களை. பெண்கள் பெண்களை. பிறகு ஆண்கள் பெண்களை.

சட்டென கைதொலைபேசி ஞாபகம் வரவே, அது இருக்கிறதா என்று பார்த்துக்  கொண்டேன். கழுத்தில் அந்த பிளாஸ்டிக் கவருக்குள் பத்திரமாய் இருந்தது. ஸ்வேதா நினைவு வந்தது. அந்தக் கூட்ட வெள்ளத்தில், நான் சுழற்றியடிக்கப் பட்டேன்.  யாரென்று தெரியாத கரங்கள் என்னைத் தொட்டு விலகின. எவ்வித நோக்கமுமின்றி தழுவும் கரங்கள். வெறும் மகிழ்ச்சியும், நிறைவும் நிறைந்த கைகள். கண்களைத் திறக்க முடியாத அளவிற்குத் தண்ணீர் எங்கள் மேல் தெறிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. அந்தக் கூட்டத்திலிருந்து பாய்ந்து, வறுமுலைகள் தொங்க ஒரு கிழவி எங்களிடம், அவள் கையில் வைத்திருந்த இரண்டு பொம்மை துப்பாக்கியைக் கொடுத்து கூட்டத்தில் மறைந்து போனாள். தண்ணீரை, என் பலங்கொண்ட மட்டும் பீச்சி அடித்தேன். அது ஒருவகை கொண்டாட்டாம் போலிருந்தது. ஒரு திருவிழா. ஒரு மனநிலை. எல்லாவற்றிலுமிருந்து  ஒரு விடுதலை.

கூட்டம் அப்படியே எங்களை நகர்த்தி அப்பால் கொண்டு வந்து நிறுத்தியது. முழுவதும் நனைந்து, உடலோடு ஒட்டி, ஆடையிலிருந்து வழிந்தோடும் நீர் உடலை நனைத்து இறங்கிக் கொண்டிருந்தது. திரும்பி அவனைத் தேடினேன். என் கைகளை விட்டு விட்டான். திரும்பி கூட்டத்தில் இறங்கித் தேடினேன். கூட்ட மோதலில் அவனைக் கண்டு பிடிக்க முடியவில்லை. கண்களில் நீர் இறங்கி எரிச்சலைக் கிளப்பியிருந்தது. அவன் பெயர் கூட தெரிந்திருக்வில்லை. ஒவ்வொரு முகங்களாய்த் தேடினேன். அவனில்லை. கத்தினேன். சட்டனே பின்னிருந்து இரு கைகளைத் தாவி எழுந்து என் வயிற்றைச் சுற்றி அணைத்துக் கொண்டு, அப்படியே அந்தக் கூட்டத்திலிருந்து வெளியே இழுத்துக்  கொண்டு தள்ளியது. கைகள் உடலைத் தொட்டவுடன், அது அவன் கைகளே என்று அறிந்து கொண்டேன். அத்தனை அணுக்கமான கைகளை நான் அதுவரை உணர்ந்ததில்லை. அது அவனே தான்.

“எங்குச் சென்றாய்?” என்றேன்.

“இதோ இங்குதான் இருந்தேன்,”என்றான்.

“உன்னைத் தேடிக் கொண்டிருந்தேன்,”என்றேன்.

“இதோ வந்து விட்டேனே,”என்றான்.

மீண்டும் என் கைகளைப் பிடித்துக் கொண்டு ஓடினான். என் பெருவுடலைத் தூக்கி கொண்டு நானும் ஓடினேன். எடையற்றது போல் நானே என்னை உணர்ந்தேன். ஒரு மீன் கடையின் முன் நின்றான். உயிருள்ளே எதையோ எடுத்து வாயில் போட்டு மென்றான். எனக்குக் குமட்டிக் கொண்டு வந்தது. என் வாயிலும் அதை போட்டு மெல்லும்படி அதை நீட்டிக் கொண்டு வந்தான். நான் வேண்டாமென்று ஓடினேன். அவன் உயரத்திற்கு என்னைத் தாவி  பிடித்து, வலுகட்டாயமாக அதை என் வாய்க்குள் போட்டு கடிக்கச் சொன்னான். வாயில் விழுந்தவுடன் நாவில் அது கரைவது போலிருந்தது. ஒன்றுமில்லை என்று சொல்லி நன்றாக மென்று கடிக்கச் சொன்னான். ஒரு ருசியும் தெரியவில்லை.

“உப்பு கரிக்கிறதா,” என்று கேட்டான். நான் முகத்தை இறுக்கிக் கொண்டேன் “இது என்ன?”என்றேன்.

“இது கடலில் வாழும் ஒரு வகை புழு. இங்கு அதிக அளவில் உப்பு போட்டு பொரித்து உண்பார்கள். பொரித்தாலும் அது உயிரோடு தான் இருக்கும். நாவிற்குச் சுவை கொடுக்கும். தண்ணீர் விளையாட்டில் உலர்ந்த நாக்கிற்கு இது இதமாயிருக்கும்,” என்றான். புழு என்றதும் குமட்டியது. ஆனால் நாவில் எவ்வித ருசியுமில்லை.

“என் நாவிற்கு எந்தவிதமான ருசியும் இல்லையே. எனக்கு உப்பு கரிக்கவில்லை,”

“உங்கள் நாக்கு செத்து விட்டது போல. இந்த மொத்த கடலையும்  உங்கள் வாயில் ஊற்றினாலும், உங்கள் நாவிற்குச் சுவை தெரியாது”, என்று சொல்லி என் பெருந் தொப்பையைத் தட்டினான். நான் பொய்யான கோபம் கொள்வது போல் அவனை அடிக்கத் துரத்தினேன். மான் எழுந்து குதித்து ஓடுவது போல் பாய்ந்து ஓடினான். இருவரும் ஓடினோம். ஓடிச் சென்று அங்கிருந்த கடற்கரையின் மணலில் அமர்ந்தோம்.

எங்கள் முன் பரந்து விரிந்த கடல். இருள் சூழ்ந்த பெரும் விரிவு. இங்கனைத்திலும் நிரந்தரமாய் தங்கியிருப்பது இருளே என்று சொல்வது போலிருந்தது. கரையில் கூட்டமில்லை. எங்கோ தொலைவில் எவனோ ஒருவன்,  சிறு கடை வைத்து, எதையோ விற்றுக் கொண்டிருந்தான். ஆள் நடமாட்டமில்லாத கடற்கரை. ஓசையுடன் எழுந்து வந்து கொண்டிருந்த கடலைகள். கழுத்தில் மாட்டியிருந்த கைதொலைபேசியைத் தாங்கிய பிளாஸ்டிக் கவரை எடுத்து மணலில் வைத்தேன். கீழே வைத்த அதிர்வினால், அதன் முன்திரை திறந்து மணி பத்தரை என்று காட்டியது.

“உனக்குத் திருமணம் ஆகிவிட்டதா?” என்று அவனிடம் கேட்டேன். அவன் சிரித்து விட்டான்.

“என்னைப் பார்க்க திருமணம் ஆகியவன் போலவா  இருக்கிறது,” என்றான்.

“இல்லை சும்மா கேட்டேன்,” என்றேன். “உங்களுக்கு ஆகிவிட்டதா?”

“ஆம்,” என்றேன். “அப்படியா, ஏன் உங்கள் மனைவியைக் கூட்டி வரவில்லை?” என்றான்.

“இல்லை நாங்கள் விவாகரத்துச் செய்து கொண்டோம்,” என்றேன்.

“காதல் திருமணம் தானே,” என்றான்.

“இல்லை, என் அப்பா பார்த்துக் கொண்டு வந்தார்,” அதற்கும் அவன் சிரித்தான்.

“எங்கள் ஊரில் காதல் தான் அனைத்தையும்  தீர்மானிக்கும். காதலித்து தான் திருமணம் செய்து கொள்வோம். காதலுக்கு முன்பே உறவு வைத்துக் கொள்வோம். பிறகு தான் திருமணம். நீங்களும் அப்படிதானே,” என்றான்.

“இல்லை நாங்கள் அப்படியல்ல. திருமணத்திற்குப் பிறகுதான் உறவு கொள்வோம். ஆனால் எங்களுக்குள் உறவு நடக்கவில்லை,” என்றேன். அவன் அதிர்ச்சியானான்.

“உண்மையாகவா, நீங்கள் எந்தப் பெண்ணுடனும் உறவு கொண்டது இல்லையா, ஏன்?” என்று கேட்டான்.

“இல்லை, என்னால் உறவு  கொள்ள முடியாது.” என்றேன்,

“அது தான், ஏன் என்று கேட்கிறேன்?”

நான் மௌனமாக இருந்தேன்.

அவன் திரும்பி என்னைப் பார்த்து விட்டு, கடலை நோக்கினான்.

“ஏதும் மருத்துவ சிக்கலா?” என்று கேட்டான்.

“எப்பொழுதும் என் தொடைகளுக்கு நடுவே ஒரு சிறிய நெருப்பு துளி இருப்பதை மட்டும் நான் உணர்ந்துள்ளேன். ஆனால் அது மேல் நோக்கி பிரகாசிக்காத அரிய வகை தீத்துளி. காலம் முழுவதும் கண்ணீர் போல கவிழ்ந்து கிடக்கும் தீத்துளி” என்றேன். அவன் புரிந்தது போல் தலையாட்டினான்.

எங்கள் இருவருக்கும் இடையே பெரும் அமைதி. அவனே பேசினான்.

“நான் நிறைய உறவு வைத்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் தங்கி இருக்கிறீர்களே, அந்த ரிசார்ட்டில்தான். ஆண், பெண் என்று வேறுபாடு இல்லாமல் உறவு வைத்து கொள்வேன்,” என்றான். நான் திரும்பி அவனைப் பார்த்து விட்டு, ஒன்றும் பேசாமல் கடலை நோக்கினேன்.

“சிலவை விரும்பியும், பலவை விருப்பம் இல்லாமலும் நடந்தவைதான். பணக்கார கிழவிகள் நிறைய பேர் மசாஜ் என்று அழைப்பார்கள்,” என்றான்.

“எப்பொழுதாவது அதை அருவருப்பாக நீ எண்ணியிருக்கிறாயா?” என்றேன்.

“இல்லை. அப்படி நான் நினைத்தது கிடையாது. இங்கே, இது மிக சாதாரணமான விஷயம். சென்ற வாரம்கூட ஒரு தம்பதிகள் வந்திருந்தனர். கணவனைக் குடிக்க அனுப்பிய பிறகு, அந்தப் பெண் என்னை மசாஜ் என்று அழைத்து உறவு கொண்டாள். எல்லாம் தேவைகள்தான். எனக்குப் பணம் தேவை,” என்றான்.

கடலலையோசை, கொஞ்சம் சீற்றம் கொண்டு கரை தட்டுவதை நாங்கள் அமைதியாய் கேட்டுக் கொண்டிருந்தோம். அவன் சட்டென எழுந்து கொண்டான்.

“உங்களுக்கு நீச்சல் தெரியுமா?” என்று கேட்டான். “கொஞ்சம் தெரியும், ஏன்?” என்றேன்.

“கடலில் நீந்தலாம்,” என்றான். “இந்த நேரத்திலா?” என்று சொல்லி கை தொலைபேசியை எடுத்தேன். ஸ்வேதா மெசேஜ் அனுப்பியிருந்தாள். அதை திறந்து பார்த்தேன் . பிறகு அவனை நோக்கினேன். அவன் எழுந்து சென்று காலை, கடல் நீரில் நனைத்துக் கொண்டிருந்தான். ‘எங்கு இருக்கிறாய்’ என்று ஸ்வேதா பல தடவை மெசேஜ் அனுப்பியிருக்கிறாள். அநேகமாக நிறைய முறை அழைத்தும் இருப்பாள். அது அவள் இயல்புதான். நான் இங்கே இருப்பது அவளுக்குத் தெரியாது. அவளிடம் சொல்லவும் இல்லை. அவளது அக்கறையும் அன்பும் எனக்கு வேண்டாம். அதை பெற தகுதியுள்ளவன் நானல்ல. அவளிடமிருந்து விலகவே இங்கு வந்தேன். முற்றிலும் விலக வேண்டும். அவளது ஏளன சிரிப்பிலிருந்து முழுமையாக விடுதலை கொள்ள வேண்டும். அது நடக்கும் முன்னரே ஓடி மறைந்து விட வேண்டும்.

அவன் திரும்பி என்னிடம் வந்து “இரவில் கடலில் நீந்துவது அளப்பரிய சுகத்தைக் கொடுக்கும், அது போல் விடுதலையை நாம் உணர முடியாது. இங்கே எவருமில்லை. வெறுமனே உடலை மட்டும் நனைத்து வருவோம்,’’ என்று சொல்லி, அவன் அணிந்திருந்த காற்சட்டையையும் பிறகு  உள்ளாடையையும் கழற்றி என் முன் நிர்வாணமாக நின்றான். நான் அவன் உடலை நிமிர்ந்து பார்த்தேன். என்னையும் எல்லாவற்றையும் கழற்றி நிற்கச் சொன்னான். உடல் வேகமேழுந்து,  நானும் நிர்வாணமடைந்தேன்.

இருவரும் பாய்ந்து சென்று கடலில் குதித்தோம். பேரலைகள் எழுந்து கொண்டிருந்தன. கடல் நீர் உடல் முழுதும் மூடிக் கொண்டது. ஒரு கணம் உடல் உஷ்ணம் மறைந்து, ஆழி நீரின் குளிர் உடலைக் கவ்விக் கொண்டது. குளிரேறிய மறுகணமே, கடல் நீரும் சூடாக இருப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. இரவில் கடல் நீர் வெம்மை கொண்டிருப்பது உடலுக்கு இதமாயிருந்தது. உள்ளே மூழ்கி நீர் தெறிக்க மீண்டும் வெளியே வந்தேன். நுரைகள் கொப்பளித்து வெடித்துக் கொண்டிருந்தன. அலைகள் ஒவ்வொன்றாக மேலேறி எங்களைக் கடந்து கரை தொட்டுக் கொண்டிருந்தது.

நான் அவனைத் தேடினேன். அருகில்தான் நீந்திக் கொண்டிருந்தான். அவன் உடல் ஒரு மீன் போல் என்று எண்ணிக் கொண்டேன். தேர்ந்த வீரன் போல நீந்திக் கொண்டிருந்தான். இன்னும் இன்னுமென்று ஓங்கி குதித்து நீந்தினான். சட்டென எகிறினான். மீண்டும் பாய்ந்து உள் ஒளிந்து கொண்டான். நீந்தி தலை எட்டி வெளியே பார்த்தான். என்னைப் பார்த்து எதுவோ கத்தினான். இன்னமும் கடலுக்குள் சென்று கொண்டிருந்தான். நானும் உள்ளே சென்று மூழ்கி எழுந்தேன். அத்தனை கருமையில், உடல் அனைத்திலும் ஆழி நீர் பட்டு, என்னைக் கட்டி அணைத்துக் கொள்வது போல் உணர்ந்தேன். தலை தூக்கி அவனைத் தேடினேன். அவன் காணவில்லை. மீண்டும் மூழ்கினேன். அவன் கடலுக்குள் இருந்தான். என்னை ‘அருகே வா’ என்று அழைத்தான். அவன் நீந்திய பொழுது அவன் வெற்றுடலை நான் பார்த்தேன். விழிகள் அந்தக் கருமையில் அவன் ஆண்குறியைத் தேடியது. தெரியவில்லை. கடல் நீர் இன்னும் சூடாவது போல் உணர்தேன். அவனும் நானும் மட்டுமேயான ஓருலகு. அவன் இன்னும் உள்ளே சென்று நீந்தி என்னை அழைத்தான். நான் மூச்சுக்குக் காற்றை இழுக்க கடல் மேல் வந்து தலை நீட்டிப் பார்த்தேன்.

கரையில் யாரோ ஓடிக் கொண்டிருப்பது போலிருந்தது. நெடிந்த உயரம். விழிகளுக்கு சரியாகப் புலப்படவில்லை. ஆனால் அவனைப் போலவே இருந்தது.

கடலைப் பார்த்தேன். ஸ்வேதாவின் நினைவு வந்தது. பெண் என்பவள் கடல்தான். அனைவருக்கும் ஒரே உடல்தான். இருந்தும் ஒவ்வொரு கணத்திலும் வேறேதுவாவோ உருப்பெருகின்றனர். கடலலைப் போல் பெருகி எழுந்தும், பின் மறுகணத்தில், தெறித்து மறையும் அதன் குமிழிகள் போல் மாறுபட்டுக் கொண்டேயிருகின்றனர். மென் அலையால் வாழ வைகின்றனர். பேரலையால் அழித்து விடுகின்றனர். ஒன்றும் செய்யாமல் அமர்ந்திருகின்றனர். சீற்றம் கொண்டு உள்ளிழுத்துக் கொள்கின்றனர்.

மீண்டும்  அவனைத் தேடி கடலுக்குள் சென்றேன். அங்கே அவனிருந்தான். என்னை அருகே அழைத்தான். என் கைகளைத் தொட்டான். கடல் நீர் தன் பல்லாயிரம் கைகளைக் கொண்டு எங்களை அணைத்துக் கொண்டது. வாய்க்குள் உப்பு நீர் நுழைய, நெடு நாட்களுக்கு பிறகு உப்புச் சுவையை நாக்கு அறிந்துக் கொண்டது. அது என்னை வெறி கொள்ள வைத்து, இன்னும் இன்னுமென்று உப்பு நீரைக் குடிக்கச் சொல்லியது. உடலே, உப்பு நீரால் நிறையுமளவிற்குக் குடித்தேன். அத்தனைக்கும் பிறகு, ஆழியிடம் எங்களை இன்னும் இறுக அணைத்துக் கொள்ள சொன்னேன்.

அப்படியே செய்தது கடல்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...