விண்ணிலிருந்து வீழாதவர்களின் கதைகள்

அண்மையில் வெளியீடு கண்ட ‘விண்ணிலிருந்து வீழ்ந்த பெண்’ என்ற மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பின் தலைப்பை வல்லினத்தின் பெரு முயற்சிக்கான உருவகமாகவே காண்கிறேன். மலேசிய இலக்கிய வரலாற்றில் இந்த அரிய முயற்சியானது தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குப் புதியதொரு பாதையைத் திறந்து வைத்துள்ளது. மலேசிய நவீன தமிழ் இலக்கிய அறிவுத்துறை வளர்ச்சிக்கும் இந்த முன்னெடுப்பு மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இலக்கியத்தின்வழி பன்முக பண்பாடு மற்றும் வாழ்க்கை முறை அறிமுகம் தமிழ் வாசகர்களிடையேயும் படைப்பாளர்களிடையேயும் புதியதொரு வாசிப்பு அனுபவத்தை வழங்கும்.

இத்தொகுப்பு வல்லினத்தின் தீவிர இலக்கிய முன்னெடுப்பின் இன்னொரு மைல்கல். இவ்வாறான முன்னெடுப்பின்வழி இரு வேறுபட்ட சூழலில் தனித்தனியாக இயங்கி வந்த இலக்கியங்களின்  புனைவு இடைவெளிகள் குறைக்கப்படுகிறன. மலாய் இலக்கியங்களின் செல்நெறியை அறிந்துகொள்வதன்வழி அவ்வினத்தின் வாழ்க்கை முறையை அறிந்து செயல்படுவதோடு தமிழ் படைப்பாளர்களின் படைப்புகளில் மலேசிய மண்ணின் பன்முகத் தன்மையைக் காண முடியும். மேலும், மொழி, இனம், மதம் போன்றவற்றை அரசியல் கருவியாக்கி வேற்றுமையையும் இடைவெளிகளையும் உருவாக்கி அரசியல் நடத்துவோருக்கு எதிர்ப்பான பரப்புரை கருவியாக இந்த மொழிபெயர்பு இலக்கியங்கள் செயல்படும். 

மூல மொழியில் உள்ள கதையை இன்னொரு மொழிக்கு மாற்றும்போது அதன் அசல் தன்மைக்குப் பாதிப்பு ஏற்படாமல் இருக்க வேண்டும்.  ஒரு மொழி படைப்பின் நோக்கமும்,  இலக்கும் பிசகாமல்  வேறுபாடுகளைக் கருத்தில் கொண்டு, சரியான பொருளையும், நடையையும் வெளிப்படுத்த வேண்டும்.  இச்சிறுகதைகளை மொழிபெயர்ப்பு செய்த அ. பாண்டியன், அரவின், சாலினி ஆகிய மூன்று எழுத்தாளர்களும் மிக நேர்த்தியாகத் தங்களின் படைப்புகளை வழங்கியுள்ளனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இத்தொகுப்பில் உள்ள 10 கதைகளும் மூல மொழியின் கருத்து மற்றும் உணர்வுகளை இலக்கு மொழியில் அதே அளவில் வெளிப்படுத்தி மிகச் சிறப்பாக எழுதப்பட்டுள்ளன. மூல மொழியில் இருக்கும் மலாய் வாழ்க்கை மற்றும் பண்பாட்டுச் சூழலை எந்தவித மாற்றமும் இல்லாமல் அப்படியே வழங்கப்பட்டுள்ளது. மலாய்மொழியின் இயற்கையான நடை மற்றும் அமைப்பைப் பின்பற்றி தமிழ்மொழிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ள புனைவுநடை வாசிப்பில் எந்தத் தடையும் ஏற்படுத்தவில்லை.

இச்சிறுகதைகள் அனைத்திலும் ஓர் ஒத்தமைவு இருப்பதைக் காண முடிகின்றது. மூல மொழியான மலாய்மொழிக்கும் இலக்கு மொழியான தமிழுக்கும் இடையேயுள்ள ஒத்தமைவை முடிந்தவரை மொழிபெயர்ப்பாளர்கள் சிறப்பாகவே பேணியுள்ளது பாராட்டிற்குரியது. மேலும் மூல மொழியில் வெளிப்படும் அழகியலும் கலைநயமும் கொஞ்சமும் குன்றாமல் தமிழ்மொழியான இலக்கு மொழியில் வாசிக்கும்போது உணர முடிகின்றது.

இத்தொகுப்புக் கதைகளின் கருப்பொருள்கள் குறித்துப் பார்க்கும்போது பெரும்பாலும் வாழ்க்கையின் நுண் அரசியல் குறித்து அதிகமாகவே பேசுகின்றன. மனிதவெளியின் மிக நுட்பமான உணர்வுகளையும் அகப் பேராட்டங்களையும் பல கதைகள் மாய யதார்த்த தன்மைக்குள் நுழைந்து பேசிச் செல்கின்றன. கதை சொல்லும் முறையில் வாழ்க்கையில் கண்டதை, கேட்டதை, உணர்ந்ததை மிக அப்பட்டமாக அப்படியே சொல்லாமல் கற்பனை எனும் கலை நுட்பத்தின்வழி சொல்லியிருப்பது வாசகனுக்கு நல்ல  வாசிப்பனுபவத்தை ஏற்படுத்துகிறது. மலேசிய தமிழ்ச் சிறுகதைகளில் விரவிக் கிடக்கும் அரசியல் விமர்சனம், நவீன வாழ்க்கை முறையின் அழுத்தம், வர்க்க வேறுபாடு, மனப் போராட்டம், நகர்ப்புற சமூகத்தின் அவலம் போன்ற கருப்பொருள்களே எஸ். எம். ஷாகீரின் கதைகளிலும் காண முடிகின்றது. மலேசியச் சூழலில் அனைத்து இனத்தினரும் எதிர்நோக்கும் பொதுவான சமூகச் சிக்கல்களையும் மனப் போராட்டங்களையும் இக்கதைகளும் தமக்கே உரிய அழகியலில் முன் வைக்கின்றன. குறிப்பிட்ட ஓர் இனத்தின் வழக்கமான மனநிலையையோ அல்லது வாழ்க்கை முறையையோ அழுத்தமாகப் பேசும் கதைகள் இத்தொகுப்பில் இல்லாதது கொஞ்சம் ஏமாற்றம்தான். மொழிபெயர்ப்புக் கதைகளின்வழி ஓர் இனத்தின் மன அமைப்பையும் வாழ்க்கை முறையின் அவலங்களையும் விழுமியங்களையும் புரிந்து கொள்ளுதல் அவசியம் எனத் தோன்றுகிறது.         

அரசியல் என்பது ஒரு நாட்டின் மக்களை வழிநடத்தும் நிர்வாகக் குழு. பொது மக்களின் நலன் காக்கும் துறைகள் அனைத்தையும் சீரான முறையில் நிர்வகித்து விளைபயன் மிகச் செயலாற்றுவதுதான் அரசியலின் அறம். ஆனால் இத்தகைய அரசியலில் சுயநலம் தலை தூக்கும்போது பல்வேறு அறமற்ற செயல்பாடுகள் வழக்கமாகி விடுகின்றன. இந்தச் சுயநல அரசியல் வழக்குகள் சமூக அமைப்பில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி மனித பாகுபாட்டை உருவாக்கியுள்ளது.  பொருளியல் அடிப்படையில் பலம் கொண்ட அதிகார வர்க்கம் தனக்குக் கீழ் உள்ளவர்களை எல்லா வகையிலும் ஆட்டிப் படைக்கிறது. வலுவற்றவர்கள் தங்கள் சுயத்தை இழந்து அதிகார வர்க்கத்தின் இழுத்த இழுப்புக்கெல்லாம் தலையாட்டிப் பொம்மைகளாகச் செயல்படுகின்றனர். இந்த வழக்கு சராசரி மனிதர்களின் வாழ்க்கை அரசியலாகவும் மாறிவிட்டது. பொருள் தேவைக்காக ஒருவரை நத்திப் பிழைக்கும் ஊடாட்டத்தில் மனிதர்களின் மன அமைப்பையும் செயல்பாடுகளையும் காட்டும் கதைதான் ‘அரசியல்வாதி’.

பணத்திற்காக தன் நண்பனிடம் கையேந்தி நிற்கும் கதைச் சொல்லி அவனுக்கும் பொருளாசையை ஏற்படுத்தித் தன் தேவையை நிறைவு செய்துகொள்கிறான். பொருளால் வலிமையற்றவன் கூனிக் குறுகி இழிவுப்பட்டு வலியவனின் மேட்டிமை நாடகத்திற்குப் பலியாகி தனக்கான தேவையைப் பெற்றுக்கொள்ளும் அரசியலை இக்கதையில் வரும் சௌபிக், விருந்து ஏற்பாடு செய்திருக்கும் அரசியல்வாதி, இறுதியில் கதைச் சொல்லியே ஓவியக் கலைஞரிடம் பேசிக் கொண்டிருக்கும்போது தான் வந்த நோக்கத்தை மறந்து வலியவனின் மேட்டிமை செயலுக்குள்ளானதைப் பார்க்க முடிகின்றது. சமூகம் கட்டமைத்த இந்த ஆண்டான் அடிமை அரசியல் மன அமைப்பு இன்று சாமானியனின் மத்தியிலும் இயல்பாகி விட்டது.

‘இரண்டாம் துணை’ காதல் எனும் உணர்வை அலசிப் பார்க்கும் கதையாக அமைகிறது. இன்றைய காதல் பல்வேறான கட்டமைப்புகளுக்குள் சிக்கி பன்முகம் பெற்றிருப்பதை நாம் உணர்வதில்லை. காதல் எனும் ஒத்த உணர்வுக்குப் பொருள், இனம், மதம், பண்பாடு, மரபு போன்ற கட்டுப்பாட்டுத் தகுதிகள் அளவுகோலாகும்போது தூயக் காதல் உணர்வில் கலப்படம் ஏற்பட்டு விடுகிறது. பலரும் காதலுக்குத் தங்களுக்கேற்றப்படி விளக்கம் சொல்லும்போது காமத்தைச் சிறிதளவும் கலக்காமல் காதலைச்  சொன்னதில்லை. காதல் என்றாலே காமம் அதில் சுவையூட்டியாகச் சேர்க்கப்படுகிறது. அதுவே காதலிப்பவர்களின் போக்காகவும் அமைந்து விடுகிறது. காதலில் உடல் கிளர்ச்சியைத் தூண்டக் கூடிய மெய் தீண்டல் இருக்க வேண்டும். இல்லை என்றால் காதல் நிலைக்காது, அன்பு போலியானது என்றெல்லாம் வியாக்கியானம் எழுகின்றது. இது போன்ற கட்டமைப்புகளையெல்லாம் தாண்டி காதல் என்பது உடலின்பம் தேடாத மிகத் தூய உணர்வு என்பதை முன் வைக்கிறது இந்தக் கதை. எந்த எதிர்பார்ப்புமின்றி கண்கள் மோதிக்கொள்ளும்  நொடியில் பற்றிக்கொள்கிறது காதல். பாலின ஈர்ப்பும் அழகும் காதலின் அடிப்படையாக இருந்தாலும், காண்கின்ற எல்லா எதிர்ப்பாலினத்தினரோடும் காதல் பற்றிக்கொள்வதில்லை. காதல் தனக்கான துணையைக் கண் சிமிட்டும் நேரத்தில் மிக ஆழ்ந்து நோக்கியே தேர்ந்தெடுத்துக் கொள்கிறது. கண்கள் வழியும் உள்ளத்தின் வழியும் தொடங்குகின்ற ஓர் ஈர்ப்பு இரு பாலினத்தினரிடையே ஒத்த நேரத்தில் ஒருமித்துக் கொள்ளும்போது காதல் முகிழ்த்துவிடுகிறது. இக்கதையில் வரும் கதைச் சொல்லிக்கு எந்தச் சிக்கலும் இல்லாத அன்பான ஆதரவான மனைவி அமைந்தும் அவன் மனம் இன்னொரு பெண்ணைக் காதலிக்கத் தொடங்கிவிடுகிறது. இந்தத் செயல்தான் காதல் என்ற உணர்வின் வரையறைகளையும் எல்லைகளையும் மீள்ளாய்வு செய்ய வைக்கிறது. காதலின் மெய்யியலை அலசுகிறது.       

எஸ். எம். ஷாகீர்

சமூகத்தில் புறையோடி போயிருக்கின்ற ஏற்ற தாழ்வுகளையும் மேட்டிமைவாதத்தையும் முன் வைக்கும் கதைதான் ‘இழிந்த வீடு’. இரண்டு முரண்பட்ட குடியிருப்புப் பகுதிகளை ஒப்பிட்டு கதை நிகழ்கிறது. இரு பகுதிகளிலும் வாழ்கின்ற மக்களின் சுற்றுச்சூழல், வாழ்க்கை முறை, சமூகத் தொடர்பு ஆகிய முரண்பட்ட நிலைகளை இக்கதை அலசுகிறது. பொருளாதார பற்றாக்குறையினால் அல்லலுறும் மக்களின் நிகராளிதான் மாலேக். தோணி பண பலம் படைத்த அதிகாரவர்க்கத்தின் நிகராளி. இவர்களுக்கிடையே ஏற்பட்ட சிறு மோதல் கதையில் நிகழப் போகின்ற பெரிய வன்மத்திற்குக் காரணமாகி விடுகிறது. அதிகாரவர்க்கத்தைச் சார்ந்த ஒருவன் தனக்கு எதிராகப் பேசிய தாழ்ந்தவனைப் பழிவாங்கத் தொடங்குகிறான். ஏற்கெனவே தாமான் பாயு மேல் இருந்த தோணியின் அதிருப்தியின் விளைவுதான் மாலேக்குடன் எற்பட்ட சின்ன உரசலைப் பேரிடராக மாற்ற முனைந்துவிட்டது. நவீன பொருளியல் நடைமுறைகளில் எளியவனின் வாழ்வாதாரத்தைச் சுரண்டி சுகம் காணும் பொருள் முதல்வாத முதலைகளின் போக்கு இயல்பாகிவிட்டது.  

அதே வேளையில் இக்கதையின் கீழடுக்கில் மலேசிய நாட்டில் சமநிலை இல்லாத பொருளாதார வளர்ச்சி இனங்களுக்கிடையிலான போட்டி பொறாமைகளையும் ஒற்றுமையில்லா நிலையையும் ஏற்படுத்துகிறது என்ற எச்சரிக்கை தொனிக்கிறது. இந்த மண்ணின் மைந்தர்கள் மலாய்க்காரரை வறியவராகவும் வந்தேறியான சீனரைச் செல்வந்தராகவும் காட்டி மண்ணுக்குச் சொந்தமானவர்களை விரட்டியடிக்கும் முயற்சி தொடங்குவதாக கதை விரிகிறது. இது ஆதிக்க சமூகமான மலாய் இனத்திற்கு விடப்பட்ட எச்சரிக்கை.  

‘உடும்பு தோசம்’ அரசியல் சூழலை விமர்சிக்கும் கதை. சமகால அரசியல் சூழலுடன் ஒரு விடுதி நிர்வாகியை ஒப்பிட்டுக் கதை நகர்கிறது. விடுதி நிர்வாகியாக இருப்பவன் நாட்டின் அரசாங்கம் செய்யும் ஊழலைப் பற்றி விமர்சனம் கொண்டிருக்கிறான். ஆனால் எத்தனை ஆட்சி மாறினாலும் ஏன் நாட்டின் நிலை மாறவில்லை என அவனுக்குப் புரியவில்லை. ஆனால் மறதி கொண்ட மனிதர்களை மேய்க்கும் வாய்ப்பு வரும்போது அவனும் ஊழல் பேர்வழியாக ஆகிறான். மக்களின் மறதிதான் எல்லா ஊழலுக்கும் காரணம் எனக் குறியீடாகச் சொல்லப்படுகிறது. ஆனால் அவன் எப்படி அவனது சிக்கலுக்கு உடும்பு தோஷம்தான் காரணமென நினைக்கிறானோ அப்படியே மக்களும் தங்கள் நிலையைத் தாங்களே எளிய சமாதானங்களால் சொல்லிக் கடக்கிறார்கள்.

‘வண்ணத்துப் பூச்சிகளின் வீடு’ சிறுகதை தகவல் தொழில்நுட்ப உலகில் ஒரு தனிமனித மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட நகர சமூகத்தின் வாழ்க்கையை விவரிக்கிறது. அவர்கள் தங்கள் சொந்த கூடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு, இரவில் அந்தந்த ‘கூடுகளுக்கு’  திரும்பி, பகலில் மீண்டும் வெளியே வருகிறார்கள். இந்தச் சிறுகதை தொழில்நுட்ப முன்னேற்றத்தின் எதிர்மறையான தாக்கத்தையும், அதிகரித்து வரும் தனித்துவ நவீன வாழ்க்கை முறையையும் எடுத்துக்காட்டுகிறது. நகர்ப்புற சமூகம் தங்களைப் பற்றி அதிகம் கவனம் செலுத்துவதாகவும், சுற்றியுள்ள சூழலில் குறைவாக அக்கறை கொண்டதாகவும் விவரிக்கப்படுகிறது.

அதாவது, தங்கள் ‘உலகத்தை’ நிர்வகிப்பதில் மும்முரமாக இருக்கும் நகரவாசிகளின் வாழ்க்கை. இந்த நகரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் பட்டாம்பூச்சிகளுடன் ஒப்பிடப்படுகிறார்கள். இந்த பட்டாம்பூச்சிகள் ஒரு குறுகிய, சிறிய இடத்தில் அடைபட்டு, ஒரு கூட்டில் இருப்பது போல கூட்டாக வாழ்கின்றன, நேரம் வரும்போது, ​​அவை சுதந்திரமாக வெளியே பறக்கும். அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள நகரவாசிகளின் நிலைமையை விவரிக்க ஆசிரியர் இந்தக் குறியீட்டைப் பயன்படுத்துகிறார், அவர்கள் வேலைக்குச் செல்ல விரும்பும்போது மட்டுமே அந்தந்த வீடுகளிலிருந்து ‘தங்களை விடுவித்துக் கொள்கிறார்கள்’. இங்கே, இந்த உலகில் சமூகத்தில் மங்கி மறைந்து போகத் தொடங்கும் சுற்றுப்புறத்தின் மதிப்புக் குறித்த சமூக விமர்சனத்தை ஆசிரியர் தெளிவாக வெளிப்படுத்துகிறார்.

இத்தொகுப்பில் இடம்பெற்ற சிறுகதைகளில் அதிகமானவைச் சமூகம் மற்றும் தனி மனிதர்களின் அகப் புற வாழ்க்கை நடைமுறைகளை முன் வைக்கின்றன. இவை மாய யதார்த்த உத்தியைப் பயன்படுத்திச் சொல்லப்பட்டுள்ளன. இதுவே எஸ்.எம். ஷாகீரின்  பலமாகவும் எண்ணத் தோன்றுகிறது. இந்த உத்தி சிறுகதைகளுக்குக் கூடுதல் கலைத்துவத்தைக் கொடுப்பதோடு கதையில் முன்வைக்கின்ற இயல்பு வாழ்க்கை குறித்த விமர்சனத்தை உன்னதமயமாக்கி நாம் தொடாத எல்லையைக் கண்டடைய வைக்கிறது.

மொழிபெயர்ப்பு புனைவுகள் வெவ்வேறு வாழ்க்கை முறை மற்றும் பண்பாடுகளுக்கிடையில் பாலமாகச் செயல்படுகின்றன. வெவ்வேறு மொழிகளில் உள்ள புனைவுகளை மற்ற மொழிகளில் வாசிக்கவும், புரிந்துகொள்ளவும், ரசிக்கவும் மொழிபெயர்ப்பு உதவுகிறது. இதன் மூலம் உலக இலக்கியங்கள், கருத்துக்கள், கதைகள் ஆகியவை பரவலாக மக்களைச் சென்றடைகின்றன. இவை அறிவாற்றல், கலாச்சார பரிமாற்றம் மற்றும் உலகளாவிய புரிதலுக்கு உதவுகின்றன.  

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...