
“மக்கா, உனக்க அப்பன கடலுக்கு கூட்டிட்டு போனவனும் நான் தான், இப்ப என்னனா உன்னையும் கூட்டிட்டு போக சொல்லுதா உன் அம்ம” என்றவாறே வலையின் கிழிந்த பகுதிகளைத் தைத்துக் கொண்டிருந்தார். நெடுக்காக பாதி உடைத்த பிளேடை உதட்டால் கவ்வி கொண்டே அவர் பேசுவதை அவன் ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.
“நீயோ சின்ன பயலா இருக்க, உன் அப்பன் செத்த பிறகு அறுதலி அவளுக்கும் வேற போக்கில்ல, பொட்ட பிள்ளைய வச்சிட்டு அவளும் என்ன செய்வா? கூட கூட்டிட்டு போய் தொழில் படிச்சு குடுங்க பெரியப்பானு நின்னு மருவுனா’’ என்று சொல்லிவிட்டு அவனை நிமிர்ந்து பார்த்தார்.
வெற்றிலை இட்ட அவரின் வாய் சிவந்திருந்தது. புதிதாக யாரேனும் பார்த்தால் வாயில் கவ்விய பிளேடு கிழித்து வழியும் இரத்தம் என்றே நினைப்பார்கள். அவன் அவரையே பார்த்துக் கொண்டிருந்தான். அவரின் பின்புறம் மறையும் சூரியன் குளிர் நீரில் இறங்க தயங்கி நிற்கும் குழந்தையைப் போல தொடுவானில் நின்றிருந்தது. கடல் முழுவதும் பரவி பிரதிபலித்துக் கொண்டிருந்த மஞ்சள் ஒளியில் அவரின் தலை, கை, உடலில் இருந்த வெண்முடிகளெல்லாம் மஞ்சளாக ஒளிர அவரும் அவனைப் பார்த்தார்.
“ஒரு முறைல நான் உனக்க தாத்தனாக்கும். உன் அப்பன போல ஒரு கோவாக்காரன நான் பாத்ததில்ல கேட்டியா, தொழிலுனு வந்தா அவன் கிறுக்கனாக்கும், யாரா இருந்தாலும் அவன் சொல்றத தான் கேக்கணும், எவனாவது வலைய ஒழுங்கா பிடிக்கலனா பேயப் போல நின்னாக்கும் ஆடுவான்” அவர் முகத்தில் மெல்லிய புன்னகை படர்ந்தது. “ஒரு தடவ உன் சித்தப்பனுக்கும் அவனுக்கும் கடல்ல வச்சு வல பிடிக்குறதுல வழக்காகி போச்சு. ஆத்திரத்துல உன் சித்தப்பன அடிச்சு தூக்கி கடல்ல போட்டுட்டு கரைய வந்துட்டான் உன் அப்பன். கடல்ல மூச்ச பிடிச்சிட்டு கிடந்தவன மணக்குடிக்காரன் தான் அவன் மரத்துல ஏத்தி கரைய கொண்டு வந்தான். அதோட அவங்க ரெண்டு பேருக்கும் இடைல இருந்த பேச்சு, உறவு எல்லாம் முடிஞ்சு போச்சு” என்று அவர் சொன்னபோது வாழ்க்கை முழுவதும் ஏமாற்றத்தின் படிகளில் வழுக்கி விழுபவனைப் போல அவர் முகத்தில் விரக்தி பரவியிருந்தது. பெருமூச்சு விட்டுக் கொண்டே வாயில் இருந்த பிளேடை எடுத்து கீழே வைத்துவிட்டு ஊறியிருந்த வெற்றிலை எச்சிலை மணலில் துப்பியப் பின், கோணல் மாணலாக வாயைச் சுளித்தும் நெளித்தும் கடைவாயில் தேங்கியிருந்த வெற்றிலை சக்கையையும் துப்பினார். அவன் அருகிலிருந்த தண்ணீரை எடுத்துக் கொடுக்கவே, அதை வாங்கி வாயைக் கொப்பளித்தபோது பல் விழுந்திருந்த அவரின் பொக்கை வாய் நீர் நிரப்பப்பட்ட பலூன் போல குலுங்கியது. இரண்டு மடக்கு குடித்துவிட்டு அவரைப் பார்த்தபோது சிந்திய நீர் துளிகள் அவர் தாடியிலும், நெஞ்சு முடியிலும் நின்றிருந்தன. பின் இடுப்பில் சொருகி பாதியில் அணைத்து வைக்கபட்டிருந்த சுருட்டை எடுத்து பற்ற வைத்தார். தீக்குச்சி உரசி உருவான நெருப்பை அடிக்கும் கடற்கரை காற்றில் இருந்து பாதுகாக்க அவர் கைகளுக்குள் மறைத்த வேகம் 82 வயதிலும் அவர் உடலில் எஞ்சியிருந்த வலிமையைக் காட்டியது. நெருப்பில் கனன்ற சுருட்டின் புகையை உள்ளிழுத்து, கடலைப் பார்த்துக் கொண்டே, “பல தடவ உன் அப்பன்ட நான் சொன்னதுண்டு, தனியாளா தொழிலுக்கு போகாதனு, கேக்கவா செஞ்சான் அவன், ஒத்த ஆளா இந்த கடலையே அள்ளிடலாம்னு நினைச்சான்” என்று அவனிடம் சொன்னபோது இரு முறை தொண்டையைச் செருமிக் கொண்டார். “நிக்கர் உறிஞ்சு விழுற வயசுல என்கூட தொழிலுக்கு வந்தான் உன் அப்பன், இப்ப நீ வந்து நிக்குற, வருஷம் புல்ல போல தான் பறந்து போகுது” என்றபோது கடலையே பார்த்துக் கொண்டிருந்த அவரின் முகம் எந்த உணர்வுகளுமில்லாமல் வெறுமையாக இருந்தது. சட்டென அவன் பக்கம் திரும்பி, “சரில மக்கா, நீ வீட்ல போய் என்னவும் தின்னுட்டு கிடந்து உறங்கு. சாமத்துல அம்ம எழுப்பி விடுவா அப்ப இங்க வா” என்றவாறே விரிந்து கிடந்த வலையை இழுத்துக் கட்டத் தொடங்கினார்.
அவன் எழுந்து வீட்டை நோக்கி மெல்ல நடக்கத் தொடங்கினான். நேற்று வரை பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தவன் தான். அவன் தந்தையின் எதிர்பாராத மரணத்திற்குப் பிறகு அவன் தாய் மீன் விற்று சம்பாதித்த பணம் ஃபைபரிலான படகும், இஞ்சினும் வாங்கிய கடனுக்கான வட்டியைத் தவிர அவர்கள் உணவுக்குக்கூட எஞ்சவில்லை. கையை மீறி பாயும் வெள்ளத்தைத் தடுக்க முடியாமல் தேவைக்காக மட்டும் எடுக்கும் நீரைப் போல சிறிதளவு பணத்தையும், உறவினர்கள் அவ்வப்போது செய்யும் உதவிகளையும் கொண்டு ஒரு வருடத்தை எப்படியோ கடத்திவிட்டாள் அவன் அம்மா.
“ஊர்ல எல்லாரும் நடக்குறப்ப உன் மாப்ள மட்டும் பறக்கணும்னு ஆசபட்டான். இப்ப யாருக்கு கஷ்டம்? இங்க பாரு செசிலி, வட்டி தந்தே காலத்த ஒட்டிடலாம்னு நினைக்காத, இன்னும் மூணு மாசத்துல அசலு வேணும், அதுக்கு உண்டான வழிய பாரு” என கடன் கொடுத்திருந்த வியாபாரி சொல்லி சென்றபோது, கையை மீறி பாயும் வெள்ளம் தங்கள் தலைக்குமேல் செல்கிறது என அவனுக்குப் புரிந்தது. அவன் தந்தை இறந்த சமயத்தில் அவர்களைச் சுற்றியிருந்த கண்களில் கண்ட இரக்கமும், பரிதாபமும் நாளடைவில் மறைந்து போனது. எல்லோருக்கும் தீர்ப்பதற்க்கு அவரவர் துன்பங்கள் இருந்தன. இதையெல்லாம் புரிந்து கொள்ளும் அளவிற்கு அவன் பெரிய பையன் இல்லை, 12 வயது நிரம்பிய சிறுவன் தான். ஆனால் மனிதர்களின் முதிர்ச்சி என்பது வயதினால் அல்ல, வாழ்க்கையின் அனுபவங்களில் சூழ்ந்திருக்கும் உலகின் மாற்றங்களைக் கவனிப்பதன் மூலமே சாத்தியப்படுகிறது. உறவினர்களின் வீடுகளில் அவன் உறங்கிவிட்டதாக எண்ணி பேசப்படும் இளக்கார பேச்சுகளில் அவன் வேறு முகங்களைக் கண்டான்.
“கொஞ்சம் பெருமையா காட்டுனா இவ, அவன் யாரையாவது மதிச்சானா? இப்ப பாரு கிடக்கத!!! இதுக்கு தான் அடக்கம் வேணும்னு சொல்றது, நான் தான்னு கிடந்து ஆடுனா கடைசில இப்படி தான் சோத்துக்கு வழியில்லாம கிடக்கணும்” ஒன்றுவிட்ட அத்தை பேசிய வார்த்தைகளில் உண்மை இல்லாமலில்லை. அவன் அம்மா பூரித்து மகிழ்ந்திருந்த நாட்களும், அவன் அப்பா நெஞ்சு நிமிர்த்தி நடந்த நாட்களும் நன்றாகவே அவன் நினைவில் இருந்தன.
அந்த ஊரில் எல்லோரும் கட்டுமரம் மூலம் கடலுக்குச் சென்று கொண்டிருந்த காலத்தில், அவன் தந்தை தான் முதன் முறையாக ஃபைபர் படகும், இஞ்சினும் வாங்கினார். கட்டுமரம் கைகளால் தொடுக்கப்பட்டு, இலையைப் போல கடலில் தவழ்ந்து செல்லும்போது, ஃபைபர் படகு கடலின் மேல் காற்றைப் போல விரையும். யாராலும் செல்ல முடியாத ஆழங்களுக்கு அவன் தந்தை சென்று அரிய வகை மீன்களை அள்ளி வருவார் என நண்பர்களிடம் பெருமையாகப் பேசினான். அவர்களின் ஃபைபர் படகைக் கடலுக்குள் இறக்கிய அன்று ஊரே கடற்கரையில் நின்று வேடிக்கை பார்த்தது. 5 மீட்டர் நீளமும், 10 சென்டிமீட்டர் அகலமும் கொண்ட நான்கு அல்லது ஐந்து மரக்கட்டைகளை இணைத்துக் கயிரால் கட்டபட்டு செய்யப்படும் கட்டுமரத்தைக் காட்டிலும் எடை குறைவாகவும் ஆள் உயரத்திற்கு எழுந்து குவிந்திருந்த அணியத்துடன் கம்பீரமாக கரையில் நின்றிருந்த படகை முழுவதும் பூமாலைகளால் அலங்கரித்திருந்தனர். படகில் ஏற்றபட்டிருந்த புது வலையில் அவன் அம்மா கொடுத்த பானைகளில் இருந்த அசனத்தைக் கொட்டிக் குவித்துக் கொண்டிருந்தார் அவன் அப்பா. பச்சரிசியுடன் பெரும்பயறை வேகவைத்து கருப்பட்டியும் தேங்காயும் சேர்த்து பொங்கிய அசனத்தின் மணம் அந்தக் கடற்கரை காற்றில் நிறைந்திருக்க அங்குச் சூழ்ந்து நின்றவர்களை விட உயரத்தில் அவன் அப்பா நின்றிருந்தார். அதீத மகிழ்ச்சியின் விளைவால் ஏற்பட்ட பதற்றம் சிரிப்பாகவும், பாவனைகளாகவும் வெளிபட்டுக் கொண்டிருக்க காரணமின்றி அங்குமிங்கும் சென்று எல்லோரிடமும் பேசிக் கொண்டிருந்தாள் அவன் அம்மா. உழைத்து சம்பாதிக்கும் தைரியமும், எதிர்கால வாழ்வைப் பற்றிய ஆசைகளும் கனவுகளும் கொண்ட ஆணை மணந்த மனைவியின் பூரிப்பு அவள் உடல் முழுவதிலும் வெளிபட்டுக் கொண்டிருந்தது.
“எல, பர்னபாசு, ஒத்த ஆளாவா இந்த பெரிய மரத்த கொண்டு கடலுக்கு போக போற” சுற்றி நின்ற கூட்டதிலிருந்து ஒரு பெரியவர் கேட்க, “ஆமு, அதுக்கு என்ன இப்பம்” என சொன்ன அவன் அப்பாவின் பதிலில் கோவம் தெறித்தது.
“எதுக்குல இப்ப கிடந்து சாடுத, துணைக்கு யாரையும் கூட்டிட்டு போனா உனக்கு ஏந்தலா இருக்கும்னு தான் கேக்குதேன்”
“ஓய், உவரிக்காரன் மரத்த விக்குதான் வாங்கி தொழில் பாக்கலாம்னு இவனுவ கிட்ட கேட்டதுக்கு” என்று சுற்றி நின்றவர்களைக் கைசுட்டி காட்டிவிட்டு, “என்னவே சொன்னானுவ?” அவன் அப்பாவிடம் கேள்வி கேட்ட பெரியவர் எதுவும் கூறாமல் அமைதியாக நின்றிருக்க, “அதெல்லாம் சரியா வராதுணு போனவனுவ தானே, இப்ப என்ன மயித்துக்கு நான் இவனுவள தொழிலுக்கு கூட்டிட்டு போகணும்?, தனியா தொழில் பாக்க எனக்கு தெரியும்” என்ற அவன் அப்பாவின் பதிலை மறுத்து யாரும் பேசவில்லை. அதே வேகத்தில் மனைவியிடம் திரும்பி, “ஏ செசிலி, பயல போய் சாமியார கூட்டிட்டு வர சொல்லு, அவரையும் காணுல, மரத்த அவர் வந்து மந்திரிச்சா நேரங்காலத்துல கடல்ல இறக்கலாம்” என்றவுடனே அவன் திரும்பி மேடையை நோக்கி வேகமாக ஓட ஆரம்பித்தான். பாதி வழியிலேயே அந்த ஊருக்கென மறைமாவட்ட திருச்சபையால் நியமிக்கபட்டிருந்த பாதிரியார் வந்து கொண்டிருந்தார். அவன் வேகமாக ஓடிச் சென்று, “ஃபாதர் உங்கள அப்பா கூட்டிட்டு வர சொல்லுச்சு, மரத்த மந்திரிக்கணும், சீக்கிரம் வாங்க” என மூச்சு வாங்கிக் கொண்டே சொன்னான். “சரிடே, அதுக்குதானே வந்துட்டு இருக்கேன், உன் அப்பனுக்க அவசரத்துக்கு நான் என்ன பறக்கவா முடியும்” என்றவாறே அவன் கூட நடந்தார். அப்போதும் அந்தச் சிறுவனின் வேகத்துக்கு அவரால் ஈடுகொடுக்க முடியவில்லை. படகு நின்றிருந்த இடத்திற்கு அவர்கள் சென்று சேர்ந்தபோது சுற்றி நின்றவர்களின் சலசலப்புக்கு நடுவே அவன் அப்பாவின் குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தது.
“யார்ல திமிர் எடுத்து துள்ளுதது, எல ஏரப்பாளிவளே, உன்னுவ கிட்ட நான் கேக்காம இருந்திருந்தா நீனுவ பேசுறது நியாயம். ஆனா இப்ப, மாப்ள செத்த மூண்டச்சிய தொழிலுக்கு கூட்டிட்டு போனாலும் போவேனே தவிர உன்னுவள கூட்டிட்டு போமாட்டேன்ல தள்ளய கிடந்தவனுவளா!!! போங்கல போய் பெண்டாட்டி சீலய மூடித்து உறங்குங்க”
“எல பர்னபாசு, நல்ல காரியம் நடக்குற இடத்துல பேசுற பேச்சால இது” என்றவாறே பாதிரியார் கூட்டத்தை விலக்கி உள்ளே வந்தார்.
“மன்னிசிருங்க சாமி, ஆனா…”
“லே, வாய மூடுல, நான் உங்கிட்ட அமைதியா பேசுறது நான் போட்ருக்க இந்த உடுப்புக்கு குடுக்குற மரியாதையாக்கும்” என்று அவன் அப்பாவிடம் சொல்லிவிட்டு,“ சுற்றி நின்றவர்களைப் பார்த்து, “என்னங்கடே வேணும் உங்களுக்கு, ஒருத்தன் கஷ்டபட்டு முன்னுக்கு வரணும்னு நினைச்சா உதவி செய்யலனாலும் உபத்திரம் செய்யாதீங்கடே” என்றவுடன்,
“ஆ… அப்படி சொல்லுங்க சாமி, நான் கண்டவன் காலையும் பிடிச்சு பைசா மறிச்சு மரத்த வாங்குனது சடங்கான பிள்ளைய போல இவனுவள கூட்டிட்டு போகவா?”
“லே, வாய மூடுல, இது சரிபட்டு வராது, நான் வந்த வேலைய பாத்துட்டு போறேன், நீங்க உங்க பாட பாருங்க” என்று சொல்லிவிட்டு கையில் வத்திருந்த பைபிளை திறந்து வாசிக்கத் தொடங்கினார்.
“விண்ணரசு கடலில் வீசபட்டு எல்லா வகையான மீன்களையும் வாரிக் கொண்டு வரும் வலைக்கு ஒப்பானது. வலை நிறைந்ததும் அதை கரையில் கொண்டு போய் நல்ல மீன்களை வெளியே எறிவர். இவ்வாறே உலக முடிவிலும் நிகழும். வானதூதர் சென்று நேர்மையாளரிடையே இருந்து தீயோரைப் பிரிப்பர். பின் அவர்களைத் தீச்சூளையில் தள்ளுவர். அங்கே அழுகையும், அங்கலாய்ப்பும் இருக்கும்.”
“எல மக்கா பர்னபாசு, ஆண்டவராகிய இயேசு உனக்கு தந்திருக்குற வசனத்த பாத்தியா? நல்ல மீனா இருக்குறதும், கெட்ட மீனா இருக்குறதும் உன் கைல தான் இருக்கு பாத்துக்க” என்று சொல்லிவிட்டு அவர் கொண்டு வந்திருந்த தண்ணீரில் சிறிது உப்பைக் கலந்து படகைச் சுற்றி நடந்து அதன் மீது தெளித்து மந்தரித்த பின் செசிலியை நோக்கி, “அசனத்தை உன் கையால எடுத்து எல்லாருக்கும் குடம்மா” என்றபின் சுற்றி நின்றவர்களிடம், “எப்பா, என்னதான் இருந்தாலும் நம்ம பயலாக்கும், அசனத்தை தின்னுட்டு ஆளுக்கொரு கைவச்சு மரத்த கடல்ல இறக்கி விடுங்க” என்று பாதிரியார் சொன்னதைப் பொருட்படுத்தாமல் சலசலத்து கலைந்த கூட்டத்திலிருந்து மூன்று நான்கு பேர் மட்டும் வந்து படகைக் கரையிலிருந்து தள்ளி கடலில் இறக்கினர். சீர்நடையிட்டு வரும் பட்டத்து யானையின் மத்தகம் போல படகின் அணியம் அலையில் மேலும் கீழுமாக அசைந்து கொண்டிருந்தது.
எல்லோரும் கடலில் இருந்து ஒன்றன்பின் ஒன்றாக எழும்பி கரையில் அடிக்கும் அலைகளையே கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்தனர். ஒரு அலைக்கும் இன்னொரு அலைக்குமான இடைவெளி நேரத்தைச் சரியாக கணித்து படகைக் கடலில் தள்ளிவிட வேண்டும். அப்போதுதான் அடுத்த அலை மேலெழும்பும் முன் இயந்திரத்தை இயக்கி அலைகளில் சிக்கிக் கொள்ளாமல் வேகமாக முன்னேறிச் செல்ல முடியும். அன்று காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் கரைக்கு வரும் அலைகளின் தொடர்ச்சியும், உயரமும் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருந்தன. கைகுவித்து நின்றிருந்த செசிலியின் கண்களில் இருந்து கண்ணீர் கன்னத்தில் வழிந்து கொண்டிருந்தது.
“எல மிக்கேலு, இந்த கடலடிச்சு திரும்ப போகும் போது அதுகூட சேர்ந்து மரத்த தள்ளணும் கேட்டியா!!! அப்ப தான் கொஞ்ச தூரம் அதுகூட உள்ள போக முடியும், நேரமும் கிடைச்சும்” என்ற அவன் அப்பாவைப் பார்த்து தலையசைத்து விட்டு எல்லோரும் படகின் மீது கைவைத்து தயாராக இருந்தனர். கடலில் இருந்து கரையில் வந்த அலையில் மிதந்த படகை, அலை கடலினுள் திரும்பிய அதே நொடியில் எல்லோரும் சேர்ந்து தள்ளி வேகமாக கடலுக்குள் செலுத்தினர். விசில் சத்தம் கேட்டவுடன் முன்னோக்கி பாயும் ஓட்ட பந்தய வீரனைப் போல கடலினுள் நுழைந்த படகின் பின்புறத்தைத் தொற்றி உள் ஏறிய பர்னபாசு வேகமாக இயந்திரத்தைக் கடலில் இறக்கி அதன் விசையை முடுக்கினார். ஆனால் அது இயங்கவில்லை. மீண்டும் மீண்டும் இயந்திரத்தின் விசை கயிற்றை இழுத்து முடுக்கிக் கொண்டே இருந்தார். இயந்திரம் எந்த உறுமலும் இன்றி அமைதியாக இருக்கவே, அதற்குள் கரை நோக்கி எழுந்த அடுத்த அலையில் படகு ஏறி இறங்கித் தப்பித்தது. விலகி சென்று ஆங்காங்கே கூடி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஆண்கள் பர்னபாசின் படகு கடலில் தத்தளிப்பதைக் கண்டு கைகளை வீசிக் கொண்டு பதட்டமாக கடலின் அருகில் வந்து ஏதேதோ கூவினர். அவன் அப்பா அது எதையும் செவிசாய்க்கவில்லை. இயந்திரத்தில் எதையெதையோ சோதனை செய்தார், பின் விசை கயிரை இழுத்து இயந்திரத்தை முடுக்கிக் கொண்டே இருந்தார். அப்போது எழுந்த அடுத்த அலையில் படகு கிட்டதட்ட தலைகுப்புற கவிழும் நிலைக்குச் சென்று இறுதி நொடியில் அலையின் மறுபக்கம் விழுந்தது. கரையில் நின்ற பெண்கள் பலரும் அழ தொடங்கி விட்டனர். சிலர் “இயேசுவே, மாதாவே காப்பாதுங்க” என அரற்றிக் கொண்டிருந்தனர்.
ஆண்களில் சிலர் நீந்தி சென்று படகைக் கரையில் இழுக்க கடலில் குதித்தனர். தன்னுணர்வற்று விழுந்த செசிலியைச் சில பெண்கள் மடியில் கிடத்தி தண்ணீர் தெளித்து எழுப்பிக் கொண்டிருக்க அவன் தங்கை அவள் அருகில் அமர்ந்து அழுது கொண்டிருந்தாள். அவனைச் சுற்றி அல்லோகலப்படும் கூட்டதைப் பொருட்படுத்தாமல் அவன் தந்தையையே பார்த்துக் கொண்டிருந்தான். அவன் கண்களில் துளியும் கண்ணீர் இல்லை. அவன் இதயத்தில் கொஞ்சமும் பதட்டம் இல்லை. பின்னாலிருந்து எழுந்து வரும் அலையின் அமைதியில் இயந்திரத்தை இயக்க போராடும் அவன் தந்தையின் கண்களை அவன் கண்கள் சந்தித்த அந்த நொடி இயந்திரம் இயங்கியது. அவன் தந்தை இயந்திரத்தின் விசையை வேகமாக முடுக்க, முன்னிருகால் தூக்கி பாயும் போர் குதிரை போல அலையில் ஏறி முன்னோக்கி பாய்ந்து சென்ற படகின் பின் எழுந்த ஊரார்களின் ஆரவாரம் அலையின் சத்ததையும் தாண்டி மேலெழுந்தது.
அவன் ஒவ்வொரு இரவிலும் மறுநாள் விரைவாக விடிய வேண்டும் என்பதற்காகவே சீக்கிரமே உறங்கப் போனான். வீட்டு முற்றத்தில் விரித்த பாயில் தந்தைக்கும் தாய்க்கும் நடுவில் படுத்து இரவு வானில் மின்னும் நட்சத்திரங்களைப் பார்த்தபடியே, கார் குரலில் அவன் தந்தை பாடும் பாடல்களைக் கேட்டுக் கொண்டே உறங்கினான். அவன் தந்தையின் உடல் வாசமும், ரோமங்கள் அடர்ந்த வலுவான கைகளின் அணைப்பும் இந்த உலகில் எதையும் அடைந்துவிட முடியும் என்ற நம்பிக்கையை அளித்தன. அவன் கனவுகளில் ஆழ்கடலின் பலவிதமான மீன்கள் வந்து அவனிடம் முறையிட்டன. சில மீன்கள் அவற்றின் வாழ்வுக்காக அழுது கண்ணீர் வடித்தன. அந்த நாட்களில் அவன் காலைகள் குளிர்கால சூரியனின் இதமான தொடுகையுடன் விடிந்தன. உறக்கப் பாயிலிருந்து எழுந்து அம்மா தரும் நீராகாரத்தை வாங்கிக் கொண்டு நேராக கடற்கரைக்கு விரைவான். கடற்கரையின் மிருதுவான மணலை எடுத்து பல் துலக்கி, கடல் நீரில் வாய் கொப்பளித்து காத்திருப்பான். கரைக்கு வரும் கட்டுமரங்கள் தூரத்தில் புள்ளிகளாக தெரிய ஆரம்பிக்கும்போது அவனிடம் உற்சாகம் பிறக்கும். கருநிற பாய் விரித்து கரைக்கு ஓடிவரும் கட்டுமரங்களுக்கு இடையே அலட்சியமாக அவர்களை முந்தி முன்னேறும் அவன் தந்தையின் இயந்திர படகை அங்குமிங்கும் அவன் கண்கள் தேடும். படகைக் கண்டவுடன் கரையில் நிற்கும் அவன் அவ்வளவு தூரத்தில் இருந்து பார்த்தால் தெரியமாட்டான் என்ற சுயநினைவு கூட இல்லாமல் அணிந்திருக்கும் சட்டையைக் கழற்றி மேல்தூக்கி சுழற்றி அலைகளில் சிக்கிக் கொள்ளாமல் அவன் தந்தை கரையேறுவதற்குச் சைகை செய்வான்.
அவன் செய்த சைகையினாலே தந்தை பத்திரமாக கரையேறியதாக நண்பர்களிடம் பெருமையாகப் பேசுவான். ஆழ்கடலின் மீன்கள் அவன் தந்தையின் படகில் நிறைந்திருக்கும். படகினுள் ஏறி நேற்று பார்க்காத புதிய மீன்கள் ஏதேனும் இருக்கிறதா என்று பார்ப்பான், அவ்வாறு இருந்தால் அதை அவனுக்கென்று எடுத்துக் கொள்வான். அவன் கொடுத்த நீராகாரத்தைப் படகில் அமர்ந்து குடித்துக் கொண்டே தந்தை அவனைப் பார்த்து சிரித்துக் கொண்டிருப்பார். எத்தனை விலை கொடுத்தாவது மீன்களை வாங்க வியாபாரிகள் அவன் தந்தையின் படகைச் சுற்றி முண்டியடிப்பார்கள். ஏற்றுமதி மீன்களுக்கு மவுசு அதிகம். அவன் தந்தை வகை பிரித்து வைக்கும் மீன்கள் வியாபாரியால் விலை சொல்லி ஏலம் இடப்பட்டு கணக்குகளைத் தீர்த்த பிறகு தந்தையுடன் வீடு திரும்பி குளித்து பள்ளிக்குச் செல்வான். மதியம் உணவு இடைவேளையில் வீட்டுக்கு வரும்போது அவன் தேர்ந்தெடுத்த மீனை உரிய முறையில் சமைத்து அவன் தந்தையே அவனுக்கு ஊட்டி விடுவார். அப்போது அவர் சாராயம் குடித்திருப்பார்.
எல்லா நாட்களும் எந்த மாற்றமும் இல்லாமல் இப்படியே போய் கொண்டிருந்த சமயத்தில் தான் ஒருநாள் வெகு நேரமாகியும் அவன் தந்தையின் படகு கரைக்கு வரவில்லை. வெயில் ஏறும் வரையிலும் காத்திருந்து களைத்து வீட்டுக்குத் திரும்பிச் செல்லும் வழியில் அவன் அம்மா தலைவிரி கோலாமாக அழுது புலம்பிக் கொண்டு அவன் எதிரே வந்தாள். அவனால் அதை புரிந்துகொள்ள முடியவில்லை ஆனால், என்னவோ விபரீதமாக நடந்திருக்கிறது என்பதை மட்டும் அவனால் உணர முடிந்தது. அவனை எதிர்கொண்ட அம்மா அவனிடம் ஏதும் பேசாமல் கடற்கரை நோக்கி ஓடினாள். அவனும் பின்னாலேயே ஓடினான். கடற்கரையில் மணலில் விழுந்து அழுது புலம்பி கொண்டிருந்த அவளை யாரும் பொருட்படுத்தாமல் கரையை நோக்கி வரும் கட்டுமரத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர். சில பெண்கள் மட்டும் அவன் அம்மாவின் அருகில் அமர்ந்து ஆறுதலுக்காக அவளை மடியில் கிடத்தியிருந்தாலும் அவர்களின் கவனமும் கரைநோக்கி வரும் கட்டுமரத்தை நோக்கியே இருந்தது. அவன் வேகமாக ஓடி கடலின் அருகில் கூடியிருந்த ஆண்களின் நடுவில் நின்றான். கரையில் வந்த கட்டுமரத்தில் கைகளும், கால்களும், முகமும் அழிந்து யாரென்றே அடையாளம் காண முடியாத ஒரு உருவம் கிடத்தபட்டிருந்தது. ஊர் மக்களின் கூக்குரல்களுக்கு மத்தியில் அவன் அம்மா அந்த உருவத்தை அணைத்துக் கொண்டு அழுதாள். ஆனால் அவனால் அந்த உருவத்தைத் தந்தையென்று ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கண்களுக்குத் தெரிகின்ற உண்மையை ஏற்றுக்கொள்ள முடியாத அவன் மனம் இது அப்பாவாக இருக்கக்கூடாது என்றே விரும்பி கடலையே பார்த்துக் கொண்டிருந்தது. இன்று வரை அவன் அப்பா திரும்ப வரவில்லை. ஆனால் உருவழிந்து வலையில் சிக்கிய அந்த சடலமே மின்னலால் தாக்கபட்டு இறந்த அவன் அப்பா என்ற ஊர்க்காரர்களின் கதையே உண்மையென்று ஆகிவிட்டது.
ஊர் கோவிலின் மணி இரண்டு என்று அடிக்கும்போது அவன் எழுந்து நேராக கடற்கரையை நோக்கி நடந்தான். கடற்கரையில் இருந்த மாதா குருசடியின் முன் நின்றிருந்த தாத்தா அவன் வருவதைப் பார்த்து, “என்ன மக்கா, அம்ம நேரமே எழுப்பி விட்டுட்டா போல” என சாதாரணமாக கேட்க அவன், “இல்ல, இராத்திரி முழுக்க எனக்கு உறக்கமே வரல” என்ற அவன் பதிலைக் கேட்டு, “இதக்க இப்படியாக்கும், வேண்டாமினு சொன்னாலும் நம்மள வுடாது, சரி வா மக்கா, மாதாவுக்க காலடிய தொட்டு கும்பிட்டு காணிக்கைய போடு, முதமுறையா தொழிலுக்கு வார, மாதாவுக்க ஆசீர்வாதம் வேணும்லா” என்றவாறே மடியிலிருந்து ஒரு ரூபாயை எடுத்து அவன் கையில் கொடுத்தார். அவன் மாதாவை வணங்கி காணிக்கையைப் போட்டுவிட்டு அவர் பின்னாலேயே நடந்தான். பாதி நிலா வானில் அலையும் மேகங்களில் மறைந்தும் வெளிபட்டும் கொடுத்த வெளிச்சத்தைத் தவிர அந்தக் கடற்கரையின் குருசடியின் மேல் எரிந்த ஒற்றை விளக்கின் வெளிச்சமே இருந்தது. கடற்கரையில் பலரும் கட்டுமரங்களில் வலையை ஏற்றிக் கட்டி தொழிலுக்குச் செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர். அவர் கட்டுமரத்தில் வலையைக் கட்டிக் கொண்டே, “மக்கா, இது வாட காத்துக்க காலமாக்கும். அவ்வளவு வெலங்க (தூரம்) போகாண்டாம், மீன் கரைய தான் கிடக்கும்” என்றவாறே அவனைப் பார்த்தார். அவன் “வாட காத்துனா” என சந்தேகமாக கேட்க அவர் சிரித்துக் கொண்டே, “எல, சின்னபயல, வாட காத்துனா கிழக்க இருந்து மேக்க வீசுற காத்து, அப்ப கடலு தணுத்து கிடக்கும். இனியும் மே மாசம் வர வாட காத்து தான் வீசும்” என்று சொல்லிவிட்டு, “சரி வா, மரத்த தள்ளுவோம், இப்பவே நேரம் பிந்தியாச்சு” என அவனை அவசரப்படுத்தினார்.
அந்த இருளில் கடலின் ஒலி மட்டும் தான் கேட்டுக் கொண்டிருந்தது. அவர்கள் கடலைகளின் இடைவெளியைக் கணிக்க நிலவு மேகத்தில் இருந்து வெளிவருவதற்காகக் காத்திருந்தனர். அவன் கட்டுமரத்தில் ஏறி அமர்ந்திருந்தான். நிலவு வெளி வந்ததும் அவர் கட்டுமரத்தைத் தள்ளி அதில் ஏறி தொளவை இட ஆரம்பித்தார். கட்டுமரம் அலைகளின் ஏற்ற இறக்கங்களில் மெதுவாக முன்னேறி சென்றது. துடுப்பிட முயன்ற அவன் சிறிய கைகளில் தொளவை அடங்காததைக் கண்டு, “விடு மக்கா, நான் தொடுக்குதேன், நீ கரைய பாரு” என்றார். அவன் திரும்பி அமர்ந்து அவர்கள் விலகி செல்லும் கரையைப் பார்த்துக் கொண்டிருந்தான். மெல்ல மெல்ல கடற்கரையில் இருந்த குருசடி மறைய ஆரம்பித்து அவனின் வலப்புறம் பக்கத்து ஊரின் கோவில் தெரிய ஆரம்பித்தது. தூரம் செல்ல செல்ல கோவிலும் மறைந்து கரை முழுவதும் மரங்கள் காடு போல செறிவாக தெரிய தொடங்கியது. அவன் உத்வேகமாக, “தாத்தா, கரையில மரம் எல்லாம் கூட்டமா தெரியுது” என்றவுடன், “ஆமு மக்கா, பாத்துட்டே இரு, வேற என்ன தெரியுதுணு சொல்லு” என்றார். கட்டுமரம் கடலுக்குள் தூரம் சென்று கொண்டிருக்க கூட்டமாக தெரிந்த மரங்களின் கிழக்கு திசையில் ஒரு மலை நிழலுருவாக தெரிந்தது. அவனுக்கு மூச்சு திணறியது. “தாத்தா ஒரு மல” என்றபோது அவன் உடல் நடுங்க தொடங்கியது. “சரி மக்கா, பதறாத, இப்ப அந்த மலக்க கிழக்கு விளிம்பு காடு கூட சேரும் போது சொல்லு” என்றவாறே அவர் மரத்தைத் தொடுத்துக் கொண்டிருந்தார். அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. அது எப்படி இது இரண்டும் சேரும் என்று ஆர்வமாகப் பார்த்துக் கொண்டிருந்தான். தூரம் செல்ல செல்ல காடும் மலையும் நெருங்கி வந்து ஒரு புள்ளியில் இணைந்தவுடன் அவன், “தாத்தா, இரண்டும் சேர்ந்திருச்சு” எனக் கூவிய உடனேயே அவர் சட்டென தொடுப்பதை நிறுத்தி நங்கூரத்தைக் கடலில் வீசினார். பின் அவனை நோக்கி, “இது தான் மக்கா கணியம், அந்த காடும் மலையும் சேருற இடத்துல தான் நம்ம வலைய போடணும்” என்றபோது அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. இத்தனை தொலைவில் இருக்கும் காடும், மலையும் எப்படி இவ்வளவு தெளிவாக தெரிகிறது என்கிற ஆச்சரியமும் அவனுக்கு விலகி இருக்கவில்லை. கடலில் வலையைப் போடுவதற்காக மும்முரமாக வேலை செய்து கொண்டிருந்த அவரிடம், “இந்த இடத்துல வல போட்டா மீன் கிடைக்குமா” என ஆர்வமாகக் கேட்டான். “அப்படி சொல்ல முடியாது மக்கா, இதெக்க ஒரு கணிப்பு தான், பழங்காலத்துல இருந்தே வாறது, நமக்கு முன்னால பாரு அங்க ஒருத்தன் வல போடுதான், பின்னாலயும் ஒருத்தன் வல போடுதான். அவங்களுக்கும் கணியம் கிடச்சிருக்கு. இதுல யாருக்க வலைல மீன் கிடைக்கும்னு யாருக்கும் தெரியாது” என்றவரிடம், “ஆனா, இந்த மலையும், காடும் எப்டி இவ்ளோ தெளிவா தெரியுது” என அவன் கேட்க, “அது நீ இருட்டுல இருந்து இருட்ட பாக்கும் போது தூரத்துல இருக்கதும் தெளிவா தான் தெரியும் மக்கா, சரி இந்த வலைய பிடி வலுவு எங்க பாத்து நிக்குனு பாக்கணும்” என்று சொல்லிவிட்டு வலையின் விளிம்பைக் கடல் நீரில் இறக்கினார். அப்போது தான் அவன் கடல் நீரைக் கவனித்தான். நிலவின் வெளிச்சத்தில் சுற்றி இருக்கும் கடல் நீர் பளபளத்துக் கொண்டிருக்க, அவர் இறக்கிய வலையின் விளிம்பு மேற்கு நோக்கி இழுபட்டது. “வான்வாடு வலுவு நிக்கு, பாத்தியா மேக்க பாத்து இழுக்குது, மரம் இன்னும் வெலங்க போகணும்” என்றுவிட்டு நங்கூரத்தை உயர்த்தி மரத்தில் கட்டிவிட்டு தெற்கு நோக்கி மரத்தைத் தொடுக்க ஆரம்பித்தார். அவன் கடலையே பார்த்துக் கொண்டிருந்தான். கடலில் நீர் ஆறு போல மேற்கு நோக்கி மெதுவாக ஓடிக் கொண்டிருந்தது. சிறிது தூரம் சென்றபின் அவர் அவனிடம், “மக்கா, நான் மரத்த தொடுத்துட்டே இருப்பேன், நீ வலைய இப்படி சிக்குவிழாம மெதுவா கடல்ல இறக்கி விடணும்” என்று வலையை விரித்துக் காட்டினார். அவர் சொன்னது போல அவன் வலையைக் கடலில் இறக்கிவிட, நெருக்கமாக இடைவெளி விட்டு சிறிய இரும்பு எடைகள் கட்டபட்ட வலையின் கீழ்பகுதி கடலில் மூழ்கியும், மிதவைகள் கட்டபட்ட மேற்பகுதி கடலின் மேல் மிதந்தும் போர்வையைப் போல வலை கடலினுள் விரிந்து சென்றது. அவர் கட்டுமரத்தைத் தெற்கு நோக்கி தொடர்ந்து தொடுத்துக் கொண்டே சென்று, கிழக்காக திரும்பி பின் வடக்கு திசையில் கொண்டு வந்து மேற்கு திசையில் செல்லும் நீரோட்டத்தில் நிறுத்தி நங்கூரத்தை இட்டார். கட்டுமரம் மெதுவாக நீரோட்டத்தில் வழிந்து செல்ல செல்ல வலை சரியாக நீரோட்டத்தின் குறுக்கே தெற்கு வடக்காக கடலினுள் 100 மீட்டர்கள் வரை நீண்டு கிடந்தது. வலை கடலினுள் சரியாக அமைந்துவிட்டதை உறுதிபடுத்திவிட்டு இடுப்பில் கட்டியிருந்த பொட்டலத்தைப் பிரித்து வெற்றிலையைப் போட ஆரம்பித்தார். அவன் கண்ணுக்கெட்டிய தூரம் வரை நீண்டு கிடந்த வலையைப் பார்த்துக் கொண்டிருந்தான். வெற்றிலையுடன் இடித்த பாக்கையும் புகையிலையும் சேர்த்து பொக்கை வாயில் இட்டு மென்று கொண்டே, “நம்ம வேல முடிஞ்சது மக்கா, இனி உள்ளதக்க ஆண்டவன் உட்ட வழியாக்கும்” என்றவாறே நீண்டு கிடந்த வலையைப் பார்த்தார். அப்போதுதான் அவன் குளிரை உணர ஆரம்பித்தான். கடல் நீரில் நனைந்திருந்த அவன் உடல் முழுவதும் குளிரில் நடுங்கிக் கொண்டிருக்க கைகளை உடலுக்குக் குறுக்காக கட்டி அமர்ந்திருந்தான். சுற்றிலும் கூரிருட்டு. கட்டுமரம் கடலில் தவழும் ஒலி மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது. வாயிலிட்ட வெற்றிலையை அவர் நன்றாக மென்று எச்சிலை துப்பிவிட்டு,
“மக்கா, இந்த கடல்ல ஒவ்வொரு மீனுக்கும் ஆயிரம் பாதை உண்டு, ஆனா தனிதனியா பாதை தேடுற புத்திய ஆண்டவன் அதுவளுக்கு குடுக்கல, கூட்டமா போற அதுவளுக்கு ஒரு பாதை தான் உண்டு, இதக்க நமக்கு முன்ன உள்ளவங்க சொல்லி வச்சிட்டு போனதாக்கும். இன்னா நீண்டு கிடக்கே வல, பரந்து விரிஞ்ச இந்த கடல்ல இது எம்புட்டு நீளம் வரும்? இந்த பாதைல தான் மீனு வரும்னு எதாவது கணக்கு இருக்கா சொல்லு, வலைல மீனு பாஞ்சா ஒவ்வொருத்தனும் கரைல வந்து எதுக்கு அந்த ஆட்டம் போடுதான்? நூத்துகணக்கா போட்ட வலைல ஜெய்ச்சது அவனாக்கும். ஆனா நாளைக்கே அவன் அதே இடத்துல போய் வல போட்டா மீனு கிடைக்குமானா தெரியாது. இதக்க மேல உள்ளவன் விளையாட்டாக்கும். ஆனா சிலர் உண்டு உன் அப்பன மாதிரி, அவனுக்க சக்திய மீறி ஒரு அடி முன்ன எடுத்து வச்சு பாஞ்சான், கடலுக்கு முன்ன நெஞ்சு நிமித்தி நின்னு அத ஆண்டு போடலாம்னு நினைச்சான், அவன கடவுளுக்கு இஷ்டபட்டு போச்சு, மேல இருந்து பாத்து அவன ரசிச்சு தொட்டு பாக்கணும்னு கைய நீட்டிட்டாரு, எவன் செஞ்ச பாவமோ அந்த கை மின்னலா வந்து அவன் உயிர எடுத்துட்டு போய்டுச்சு” என்றபோது அவர் கண்களில் இருந்து கன்னத்தில் வடிந்த கண்ணீர் துளி போல கிழக்கு வானில் விடிவெள்ளி தோன்றியது. அவர் கண்களைத் துடைத்துக் கொண்டே “வெள்ளி முளைச்சிருச்சு மக்கா, இன்னும் கொஞ்ச நேரத்துல விடியும்போது நம்ம வலய வலிக்கணும்” என்றார்.
கட்டுமரம் அவர்கள் வலை போட்ட இடத்திலிருந்து மிக நீண்ட தூரம் நீரோட்டத்தால் இழுத்து வரபட்டிருந்தது. அதன்பிறகு இருவரும் பேசிக்கொள்ளவில்லை. அவன் கிழக்கு வானையே பார்த்துக் கொண்டிருந்தான். நேரம் செல்ல செல்ல கிழக்கு வானில் மெல்லியதாக மஞ்சள் ஒளி பரவ ஆரம்பித்து, இளஞ்சிவப்பாக மாறி நினைத்திராத கணத்தில் சூரியன் மெதுவாக மேலெழுந்தது. அவர்கள் வலையைக் கடலில் இருந்து இழுக்கத் தொடங்கினர். அது முடிவே இல்லாதது போல வந்து கொண்டே இருந்தது. கை வலிக்க ஓய்வெடுத்து மீண்டும் இழுத்தபோது அவர்கள் வலையில் சாளை மீன்கள் கூட்டமாக பாய்ந்திருந்தன. விடியல் சூரியனின் ஒளியில் ஒவ்வொரு மீனும் பொன்னென மின்ன, எடை கூடிய வலையை இழுக்கும் சிரமத்திலும் இருவரும் சிரித்துக் கொண்டேயிருந்தனர். இழுத்து ஏற்றிய வலையைக் கட்டுமரத்தில் கயிரால் இழுத்து கட்டிவிட்டு கரையை நோக்கி சென்றனர். கரையை நோக்கி செல்ல செல்ல மலையும் காடும் மறைந்து குருசடியின் மேல் விளிம்பு தெரிய தொடங்கி பின் கடற்கரை துலங்கி வந்தது. கடலில் இருந்து கரைக்குச் செல்வது ஏற்றத்தில் இருந்து கீழிறங்குவது போல அவனுக்குத் தோன்றியது. கரையை நெருங்க நெருங்க கடலில் இருந்து கரைக்குச் செல்லும் அலைகளின் இடைவெளியைக் கணித்து அவற்றில் சிக்காமல் இருக்க கவனமாக அவர் கட்டுமரத்தைச் செலுத்திய போதிலும் முதுமையின் வேகமின்மையால் ஒரு அலையின் முன் அவர்களின் கட்டுமரம் சிக்கிக் கொண்டது. அலையில் இருந்து தப்பிக்க கடலில் குதிப்பதைத் தவிர வேறு வழியில்லை என அவர் உணர்ந்து, “கடல்ல சாடுடு மக்கா” என சொல்லி அவர் கடலில் குதிக்கவும், அவன் பின்னால் திரும்பி பார்க்கவும் அலை கட்டுமரத்தை அடித்து தூக்கி வீசியது. அவன் கடலில் மூழ்கி அலையால் புரட்டப்பட்டு மூச்சுதிணறி மேலெழுந்தபோது, கட்டுமரம் அவனுக்கும் அவருக்கும் நடுவில் கடலில் கவிழ்ந்து கிடந்தது. அவர் வேகமாக மரத்தை நோக்கி நீந்தி அதை பிடித்துக் கொண்டு, “மரத்த பாத்து நீந்தி வா மக்கா” என அவனைப் பார்த்து உரக்க கத்தினார். ஆனால் அலையின் வேகத்தை எதிர்த்து அவனால் நீந்த முடியவில்லை.
தந்தையிடமிருந்து கற்றுக் கொண்ட நீச்சல் கடலில் மூழ்கிவிடாமல் மிதக்கவே அவனுக்கு உதவியது. கரையில் நின்றிருந்த சில ஆண்கள் அவர்கள் கடலில் தத்தளிப்பதைப் பார்த்து “ஓய், மரத்த விட்டுட்டு கரைய பாத்து நீந்தும் ஓய்” என உரக்கக் கத்தினர். ஆனால் கவிழ்ந்து கிடந்த மரத்தில் வலையைச் சுற்றிக் கட்டியிருந்த கயிரைப் பிடித்து மரத்தை நிமிர்த்த அவர் முயன்று கொண்டிருந்தபோது அடித்த அலையில் இருவரும் கரையை நோக்கி இழுத்துச் செல்லபட்டனர். அவர்கள் இருவருக்கும் முன்னால் கரையை நோக்கி அடித்துச் செல்லபட்டு, அலையில் அதே வேகத்தில் கடலுக்குள் திரும்பிச் செல்லும் கட்டுமரத்தைப் பார்த்தபடி அவன் செய்வதறியாது திகைத்து நின்றான். அப்போது கரையில் நின்றிருந்த ஆண்களில் ஒருவர், கட்டுமரத்தைக் கரையில் தூக்கி வைக்க உதவும் மரத்தடியால் கட்டுமரத்தைத் தடுத்து நிறுத்தி விட்டு, அவனை நோக்கி திரும்பி, “எல அறுதலி பெத்த பயல, இது சிலுவ மரமாக்கும், நீ கவனமா இல்லனா இந்த கடலு உன்ன அதுல வச்சு அறஞ்சு போடும்” என்று சொல்லிவிட்டு அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். அப்போது அந்த ஊரின் கோவில் மணியுடன் “சீமோனே, உன் வலையை விட்டுவிட்டு என்னை பின் தொடர், நான் உன்னை மனிதர்களை பிடிப்பவன் ஆக்குவேன்” என்ற வசனம் அவன் காதில் ஒலித்தது.
மிக சிறப்பு!👌🏻👌🏻👌🏻 வட்டார வசைச்சொல்லான “அறுதலி” பதிவு செய்தது மேலும் சிறப்பு 👍🏻ரோட்ரிக்ஸ்.