புதையல்

1

அரியது எனத் தோன்றும் பொருட்களையெல்லாம் சேர்த்து வைக்கும் பழக்கம் எந்தப் பிராயத்தில் தொற்றிக் கொள்ள ஆரம்பித்தது என சரியாகச் சொல்ல முடியவில்லை.

என் ஊரிலேயே நன்கு பம்பரம் விடத் தெரிந்தவரான பாண்டி அண்ணன் அழகான கோலிக்குண்டுகளைச் சேர்ப்பவராக இருந்தார். என்னுடனேயே சுற்றித் திரியும் ஓவு என்ற சின்னப்பையன் எதிர்க்காற்றில் வேகமாகச் சுற்றுவதற்கு இசைவான ஓலைகளைச் சேர்ப்பவனாக இருந்தான். என் வகுப்பில் நன்றாகப் படிக்கும் பையனான இளங்கோ அஞ்சல்தலைகளையும், நாணயங்களையும் சேர்த்து வைப்பான். எனக்கு மிகவும் பிடித்த சுதா, மயில் இறகுகளைச் சேகரிப்பதற்காகவே எங்களுடன் காட்டுமேட்டில் விளையாட வருவாள். கைவிடப்பட்ட பறவைக் கூடுகளைச் சேர்ப்பதற்கென ஒருவன் எங்களுடன் இருந்தான்.

நாம் எதை சேர்த்து வைக்கிறோம் என்பதிலிருந்து நமக்கான ஓர் அடையாளம் உருவாகி வருவதாகத் தோன்றுகிறது. ஒருவர் சேர்க்கும் பொருளைக் காண நேர்ந்தால் அவர்களின் நினைவு வருகிறது. ஒருவேளை அப்பொருள் நமக்குப் பிடித்தவர் சேர்த்து வைக்கும் ஒன்றாயிருந்தால் அவற்றை எடுத்துப் பத்திரப்படுத்தி அவருக்குக் கொடுக்கிறோம். அப்படி நான் சுதாவிற்காக எடுத்துக் கொடுத்த இறகுகள் ஏராளம்.

சிறியவர்களுக்கு அரியது எனத் தோன்றும் விஷயங்கள் பெரியவர்களுக்கு அவ்வாறு தோன்றுவதில்லை என்பதையும் கவனித்திருக்கிறேன். நானும் எதையாவது உருப்படியாகச் சேர்த்து வைக்க விரும்பி என் நாட்டம் இழுத்துச் செல்லும் திக்கெல்லாம் திரிந்து அதை கண்டறிய முயன்றேன். வளவளப்பான கூழாங்கற்கள், வண்ணநிற முட்டையோடுகள், மினுங்கும் தாள்கள், புத்தகத்தில் பதனிடப்பட்ட விதவிதமான பூக்கள், தீட்டப்பட்ட கொட்டாங்குச்சிகள், வளையல் துண்டுகள் என சேர்க்க ஆரம்பித்தேன். அப்படிச் சேர்க்க ஆரம்பித்தபோது முயல் புழுக்கை கூட அழகாகத் தெரிய ஆரம்பித்தது. வேப்பங்கொட்டைகளைக்கூட அலசி சேர்த்து வைத்திருந்தேன். ஒன்று அரிதாக இருக்கும்போதே மதிப்பு அதிகம் என்பதை வளர வளரவே தெரிந்து கொண்டேன்.

நான் சேர்த்து வைத்த பொருட்களிலிருந்து துர்நாற்றம் வீச ஆரம்பித்தபோதுதான் என் பாட்டி “பூனைப் பீயை பொட்டலம் கட்டுகிறவன்,” என என்னை நோக்கிச் சொல்லும் பழமொழிக்கு அர்த்தம் புரிந்தது.  

ஒரு நாள் நான் சேர்த்துவைத்திருந்த எல்லா பொருட்களையும் பாட்டி குப்பையில் வீசியிருந்தாள். வீடு முழுவதும் நான் தேடிக் கொண்டிருப்பதைச் சட்டை செய்யாமல் அரிசிக்குக் கல் பொறுக்கிக் கொண்டிருந்தாள். அவள்தான் அவற்றை எடுத்து குப்பைமேட்டில் வீசியிருக்கிறாள் என்று கண்டறிந்து முறையிட்டபோது எந்தவித குற்றவுணர்ச்சியுமில்லாமல் என்னைக் கடிந்து கொண்டாள். அன்று முழுவதும் அழுது கொண்டே இருந்தேன். அவளைத் தண்டிப்பதாக நினைத்து அன்று சோறு உண்ணவில்லை. அவள் கண்களில் மின்னிய அந்த ஏளனச் சிரிப்பின் குரூரம் கனவுகளிலும் வந்து என்னை அலைக்கழித்தது. அதன்பிறகுதான் அவளிடம் பேசாமல் ஆனேன். அறியாமல் செய்கிறாள் என்றோ, அதன் மதிப்பு புரியவில்லை என்றோ பலவாறு மனதைச் சமாதானம் செய்து கொள்ளப் பார்த்தேன். ஆனால் அவள் கண்களில் தெரிந்த அந்தக் குறுஞ்சிரிப்பு அதை செய்யவிடாமல் தடுத்தது. அவள் வீசியவற்றிலிருந்து சிலவற்றை எடுத்து வந்து அலசி காயவைத்தேன். அது அரியது என்ற எண்ணத்தைத் தோற்கடிக்கும்படி அதிலிருந்து கெட்ட வாடை வந்து கொண்டிருந்தது. மீண்டும் புதிய பொருட்களைச் சேர்ப்பதின் மேல் ஆர்வம் இழந்து சோர்ந்து போனேன். ஊரில் என்கூட்டுப் பிள்ளைகளுடன் விளையாடாமலும் பேசாமலும் ஆனேன்.

சுதாவுக்கு இறகுகள் எடுத்துக் கொடுப்பதை நிறுத்தியிருந்தேன். அவளுக்குப் பாண்டி அண்ணன் வைத்திருந்த கோலிக்குண்டுகள் பிடித்திருப்பதை அறிந்தபோது புதிய பொருட்கள் சேர்ப்பதை முழுவதுமாகக் கைவிட்டேன். நான் இன்னார் என யாருக்கும் காண்பித்துக் கொள்ளத் தேவையில்லை என்பது உண்மையிலேயே விடுதலையாக இருந்தது. தனிமையை நோக்கிச் செல்லும்போது வேறோரு உலகம் திறக்கிறது. எப்போதும் யாருடனும் சேராமல் தனியாக அமர்ந்திருக்கும் வேலுவை அப்போது தான் சரியாகக் கவனிக்க ஆரம்பித்தேன்.

வேலு பெரும்பாலும் கனவுலகில் வாழ்பவன் போல கோயில் மரத்தின் தடித்த கிளைகளில் யாருக்கும் தெரியாதவாறு மறைவாக அமர்ந்திருப்பான். எப்போதாவது அவன் கண்களை இயல்பாகச் சந்திக்கும் தருணங்களில் எளிய புன்னகை மட்டும் செய்திருக்கிறேன். மெல்ல அவன் உலகத்திற்குள் சென்றபோது தான் “யாருக்கும் சொல்லாதலே. ஒனக்கு மட்டும் சொல்லுதேன்,” என்று மண்ணைத் தோண்டும்போது புதையல் கிடைத்தது பற்றிய செய்தித் துணுக்கு ஒன்றை என்னிடம் காட்டினான்.

அவன் மட்டுமே அறிந்த ரகசிய பாதைக்குள் அன்று முதல் என்னைச் சேக்காளியாகச் சேர்த்துக் கொண்டான். மின்னும் தங்கக் காசுகள், தகடுகள், சிலைகள் என புதிய பொருட்கள் பற்றிய எண்ணம் அவன் வழியாகவே வந்து சேர்ந்தது. ஒரு பொருள் கடந்த காலத்தில் இருந்து இன்று அருகி விடுவதால் மதிப்படைகிறது என புதையலுக்கான விளக்கத்தை வேலு வழியாக அறிந்தேன். மதிப்பான ஒன்றைத் தேடுவதற்கான புதிய பாதையை நோக்கி என் அன்றாடத்தை அவனுடன் இணைந்து வடிவமைத்துக் கொண்டேன்.

ஊர் அப்போது எங்கள் கண்ணுக்குப் புதிதாகப் புலப்படத் தொடங்கியது.  என் கூட்டுப் பிள்ளைகள் பெரும்பாலும் வெளியே வராத பின்மதியங்களில், அதிகாலைகளில், இரவுகளில் பறக்காவட்டியைப் போல சிக்கும் இடங்களிலெல்லாம் மானாவாரியாகத் தோண்டிக்கொண்டிருந்தோம். யாருக்கு என்ன கிடைத்தாலும் இருவரும் பங்கிட்டுக் கொள்ள வேண்டும் என்று ஒப்பந்தம் எங்களுக்குள் இருந்தது. எனக்கு முதலில் கிடைக்கும் பட்சத்தில் அந்த ஒப்பந்தத்தை மீறிவிட வேண்டும் என்ற ரகசிய ஆசை என்னில் இருந்தது. எதுவும் கிடைக்காத சலிப்பு அவ்வப்போது வந்தாலும் அது கிடைக்கும் நாளில் நான் எப்படிப் பார்க்கப்படுவேன், எவ்வளவு உயரத்தில் மதிக்கப்படுவேன் என்ற கற்பனை என்னை உந்தித் தள்ளியது. செய்தித்தாளில் என் புகைப்படம் வருவதைப் பற்றிய கனவை மெல்ல வளர்த்துக் கொண்டேன். யாருடைய கையிலேயோ இது போல துண்டுச் செய்தியில் முகம் தெரிபவனாக இருக்க ஆசைப்பட்டேன். சில சமயம் கொலை செய்துவிட்டு அவ்வாறு நின்று போஸ் கொடுப்பவர்களைப் பார்த்துக்கூட பொறாமை கொண்டிருக்கிறேன்.

ஒரு நாள் நாங்கள் தோண்டும் குழி மறுநாள் அல்லது அதற்கு மற்றொரு நாள் இல்லாமல் ஆவது புதிராக இருந்தது. புதையலைக் காக்கும் பூதங்கள் இருப்பதாக வேலு சொன்ன அன்று பயமாக ஆனது. எங்கள் ஊரிலுள்ள பால்வண்ணநாதர் கோயிலின் கருவறைக்கு வெளியே உள்ள உயரமான காவல் தெய்வங்களைச் சுட்டிக் காட்டி பூதங்கள் அவ்வாறு இருக்கும் என்று வேலு சொன்னது முதல் தான் அப்படிப் பயம் வந்தது. முட்டை கண்களும் நீண்ட கோரைப் பற்களும் கொண்ட பூதங்களை நாம் ஏன் பகைத்துக் கொள்ள வேண்டும் என்று மனதின் ஓரத்தில் தோன்றியது. அதை வேலுவிடம் முறையிட்டபோது அவன் பூதங்கள் உரிய நேரத்தில் உரியவர்களுக்குப் புதையலைத் தரும் என்றும் அதற்காக ஒவ்வொரு நாளும் அதனிடம் வேண்டிக் கொள்ள வேண்டும் என்றும் சொன்னான். அன்று முதல் புதையல் தோண்டுவதற்கு முன் பூதங்களை வேண்டுவதை வழக்கமாகக் கொண்டேன்.

ஆனால் புதையல் தோண்டுவதும் நிற்கும்படி ஒரு நாள் பாட்டி என்னைக் கோயில் மரத்தில் கட்டிவைத்து அடித்தபோது தான் நாங்கள் தோண்டிக்கொண்டிருந்தது அத்தனை ரகசியமாக இல்லை என்று புரிந்தது. அவள் எனக்குப் பைத்தியம் பிடித்திருப்பதாக நினைத்தாள். “ஈசாக்கு பய”, ”கோயான்” என்று என்னை அடிக்கும்போது வைதாள். அப்பாவும், அம்மாவும் என்னை அனாதையாக விட்டுவிட்டு செத்துப் போனது என் ராசி எனக் கடிந்துகொண்டாள். மேலும் ஏளனம் கூடிக் கொண்டிருந்த அவள் கண்களைச் சந்திக்க மனமில்லாமல் அன்று இரவே வீட்டை விட்டு ஓடிப் போனேன். எனக்குப் பூனை மீசை முளைக்க ஆரம்பித்த தைரியம் மட்டும் உடனிருந்தது.

அன்றெல்லாம் சென்னிகுளத்தில் ரயில் நிற்கும். அது எங்கள் ஊர்க்காரர்கள் போராடி பெற்றுத் தந்தது. நெல்லை சீமையில் பிறந்தவனின் பெரிய கனவு மதுரை செல்வதைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்? தயக்கமே இல்லாமல் வடக்கு நோக்கிச் செல்லும் வண்டி வந்ததும் ஓடிப்போய் ஏறிக் கொண்டேன்.  

2

எந்த ஊரைவிட்டு ஓடுபவனும் முதலில் போய் நிற்கும் ஓட்டல் முகப்பில் நானும் சென்று நின்றேன். சோறும் கதகதப்பும் நிறைந்த இடம் வீட்டை விட்டு ஓடிவந்தவனுக்கு ஓட்டலைத்தவிர வேறொன்றும் இருக்க முடியாது. மதுரை மாட்டுத்தாவணியில் இருந்த பல பரோட்டா கடைகளில் ஒன்றில் இயல்பாக வேலையில் இருந்தேன். முதல்முறையாக பணத்தைச் சேர்க்க ஆரம்பித்தது அங்குதான். அதை சேர்க்கும்போதே என்றோ ஒரு நாள் அனைத்துமே கைவிட்டுப் போகும் என்ற பயம் உடன் வந்தது எதனால் என்று தெரியவில்லை. அதன்பொருட்டு கவனம் வருவதற்குப் பதில் அசட்டையே வந்து சேர்ந்தது. நான் விழித்திருந்தாலும் தூங்கினாலும் என்னிடமிருந்து திருட முடியாத விஷயங்களைத் தேடுவது பற்றிய சிந்தனையே என் பகற்கனவுகளை நிறைத்திருந்தது.

விடுமுறை நாட்களில் மதுரையில் நாடகம் பார்க்கப் போவதை வழக்கமாக்கிக் கொண்டேன். மதுரகவி பாஸ்கரதாஸின் சித்ரகலா ஸ்டுடியோ, நவாப் ராஜமாணிக்கம்பிள்ளையின் தேவி பால விநோத சங்கீத சபை ஆகிய குழுக்களின் நாடகங்களின் மேல் பெரிய விருப்பம் இருந்தது. அதன் வழியாக கதைகள் வாசிப்பது என்ற பழக்கம் தொற்ற ஆரம்பித்தது. குறிப்பாக ரங்கராஜுவின் கதைகள். அவருடைய கதைகள் நாடகமாக்கப்படுவதற்குத்தான் பெரிய தொகைகள் செலவளிக்கப்பட்டன. கதையும் நாடகமும் என்னை விசையுடன் பற்றி இழுத்துச் சென்றது.

என் வயதொத்த பையன்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு போதை இருந்தது. சிலருக்குக் குடி, சிலருக்குப் பெண்கள். அதுபோலவே எனக்குக் கதையும், நாடகமும் ஒரு போதையாக மாறிப் போனது. எல்லா போதையிலும் ஒரு சலிப்பு அம்சம் உடனிருக்கும். நாடகத்தின் இடத்தைச் சினிமா கவ்விக் கொண்டிருந்த காலக்கட்டம் அது. இசை நாடகங்கள் இல்லாமல் ஆகி விட்டிருந்தது. சினிமாவுக்கு ஈடுகொடுக்க மாயாஜாலங்களும், தந்திரக் காட்சிகளும் பெருகிக் கொண்டிருந்தது. இன்னொரு பக்கம் அரசியல், சமூகவியல் நாடகங்கள் அரசியல் கருத்துக்களைப் பிரதிபளிப்பதற்கெனவே போடப்பட்டது. சினிமாவின் பிரபல்யம் நாடகத்தைச் சரித்துக் கொண்டிருந்தது போலவே மதுரை தன் பிரபல்யத்தை மதராஸுக்கு இழந்து கொண்டிருந்தது.

எனக்கும் மதராஸுக்கு சென்று விட்டால் என்ன என்று அப்போது தான் தோன்றியது. ஏனெனில் ரங்கராஜு அங்கு தான் வசிப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். சினிமாவுக்கு அவருடைய கதைகள் விற்கப்படுவது ஆரம்பமானதும் அவர் நாடகத்துக்குத் தன் கதைகளைப் பயன்படுத்துவதைத் தடுக்க நாடக கம்பெனிகளால் கொடுக்க முடியாதளவு உரிமை பணத்தைக் கோரலானார். மெல்ல அவர் கதைகள் நாடகத்தில் இல்லாமலானதும் என் நாடகப்பித்து குறைந்ததற்குக் காரணம் என்று சொல்லலாம். அதன்பின் தான் புத்தகம் வாசிப்பதைத் தீவிர பழக்கமாக்கினேன். அவருடைய நாவல்களைப் பித்துப் பிடித்தாற் போல வாசித்துத் தள்ளினேன். என் பாட்டியின் கண்கள் என்னைத் துரத்துவது இல்லாமல் ஆனது அப்போது தான். நான் கற்பனையில் விரித்தெடுக்கும் ஒன்றை யாராலும் கைப்பற்ற முடியாது என்று எண்ணமே புத்தகங்களை மேலும் அணுக்கமாக்கியது. செய்தித்தாளிலிருந்த ரங்கராஜுவின் புகைப்படம் ஒன்றை கத்தரித்து என் படுக்கைக்கு அருகில் ஒட்டியிருந்தேன். அவரைப் பார்க்கலாம் என்றோ, அவரின் புத்தகங்கள் உடனுக்குடன் கிடைக்கும் என்றோ, வேறு வேலை தேடலாம் என்றோ தான் மதராஸுக்கு ரயிலேறினேன்.

3

மதராஸில் இறங்கியதும் சென்றது திருவல்லிக்கேணிக்குத்தான். அங்கு ஒரு மேன்சனில் தங்கியவாறு பார்த்தசாரதி கோயிலை ஒட்டிய தெருக்களில் ரங்கராஜு ஐயாவின் வீட்டைச் சிரமப்பட்டுத் தேடி அடைந்தேன். அவர் வீட்டிலுள்ள நூலக அறை பற்றி பத்திரிகைகளில் வாசித்திருக்கிறேன். அதை எப்படியாவது ஒருமுறை பார்த்துவிட வேண்டும் என அந்த வீட்டிற்கு முன் போய் பல முறை நின்றிருக்கிறேன். ஆனால் உள்ளே போகும் தைரியம் வராமல் தெருக்களிலேயே உலவிக் கொண்டிருந்தேன். அங்குக் கோயிலைச் சுற்றி இருந்த நேர்த்தியான வீடுகள் எங்கள் கிராமத்தை நினைவுபடுத்தியது. ஆனால் சற்றே வெளியே வந்து பாரதி சாலையை அடைந்தால் டிராம் செல்ல போடப்பட்ட சாலையை ஒட்டி உருவான கடைகள் நகரம் எனக் கூவிக் கொண்டு, முண்டியடித்துக் கொண்டு உருவாகியிருப்பதைப் பார்க்கலாம். அந்தச் சாலையில் பழைய புத்தகக் கடைகள் அதிகமிருந்தன. பெரிய அச்சு ஆலைகள் ராயப்பேட்டையிலும், திருவல்லிக்கேணியிலும் இருந்ததால் தான் இங்கு இத்தனை விமரிசையாக புத்தகக் கடைகள் இருக்கிறது என்பதைப் பின்னர் தெரிந்து கொண்டேன். இதை விட்டால் ஜார்ஜ் டெளன், பிராட்வே அல்லது டி.நகர் செல்ல வேண்டும். நான் திருவல்லிக்கேணியிலேயே இருக்கலாம் என்று முடிவு செய்து அங்கிருந்த புத்தகக் கடை ஒன்றில் வேலைக்குச் சேர்ந்து கொண்டேன்.

அங்கேயும் அல்லும் பகலும் என ரங்கராஜுவின் நாவல்களை வாசித்துக் கொண்டிருந்தேன். வந்த சில நாட்களிலேயே எங்கள் கடைக்கு அருகிலுள்ள புத்தகக் கடையில் எப்போதும் கூடும் ஒரு இலக்கியக் கூட்டத்தைக் கவனிக்கலானேன். எத்துப்பல் கொண்ட ஒருவரும் முட்டை கண் முழி கொண்ட இன்னொருவரும் எல்லா நாளிலும் முதலில் வருவார்கள். பெரும்பாலும் காப்பியை மெல்ல உறிஞ்சியபடி யாரையாவது நக்கலடித்துக் கொண்டிருப்பார்கள். மெல்ல ஐந்தாறு பேர் சேர்ந்ததும் ஐந்தரை வாக்கில் மெரீனாவை நோக்கி கிளம்பிவிடுவார்கள்.

“நானும் வரலாமா?” என்று தயங்கியபடி நான் கேட்ட நாள் ஒன்றில் அவர்களில் முட்டை கண்காரர் தன் அடிப்பொடியான சோடாபுட்டிக் கண்ணாடி அணிந்த இளைஞனைப் பார்த்து கண் அசைத்ததும் “காப்பிக்கு காசு வச்சிருக்கீருமா?” என்று அந்த இளைஞன் கேட்டான்.

நான் அவசர அவசரமாகப் பையைத் தடவி புதிய ஐந்து ரூபாய் தாளை எடுத்துக் காண்பித்து என் அந்தஸ்தை அக்குழுவில் நிலை நாட்டினேன்.

“அப்ப எல்லாருக்கும் இவன்தான் இன்னிக்கு டிபன் செலவு” என்றார் தெத்துப்பல்காரர். அவர் பெயர் ராமையா என பின்னர் தெரிந்து கொண்டேன்.

“ஓ சரி” என பாந்தமாக நான் தலையாட்டிய சைஸைப் பார்த்துச் சிரித்தவர் முட்டை கண்ணரிடம் திரும்பி “என்ன ஓய், இவனும் தேறாத கேஸா ஆக வாய்ப்பிருக்கா?” என்று கேட்டார்.

என்னை ஏற இறங்கப் பார்த்தவர், “தெளிவா இருக்க மாதிரி தெரியறான். பாப்போம்” என்றார். நான் தெளிவாக இருக்கிறேன் என்பதை ஒருவர் சொல்லக் கேட்பது அதுவே முதன்முறை. அவர் பெயர் சொ.விருத்தாசலம் என்பதைப் பின்னர் தெரிந்து கொண்டேன். தெளிவாக இருப்பது இந்தக் கூட்டத்தில் தகுதியாக இல்லை என்பதை அப்போதுதான் உணர்ந்தேன். சுற்றி முற்றி உடனிருந்தவர்களைப் பார்த்தபோது என்னை ஒப்பு நோக்க ஒரு தெளிவின்மையும், கிராக்குத் தன்மையும் கூடிய அம்சம் வெவ்வேறு விகிதாச்சாரத்தில் அவர்களில் இருந்ததை உணர முடிந்தது.

நான் இதுவரை என் உலக அனுபவத்தில் அறிந்தது எந்த ஆண்கள் வட்டத்திலும் ஒருவன் இணைய இரண்டில் ஒரு தகுதி இருக்க வேண்டும் என்பது. ஒன்று மேதாவித்தனம். இரண்டாவது பணம். இரண்டும் கட்டாயம் இருக்க வேண்டும் என்பதும் இல்லை. அது இருப்பது போல நடிக்கக் கற்றுக் கொண்டாலே அந்த வட்டத்தில் இணைந்து விடலாம். இம்மட்டுக்குள் நடிப்பதைச் சரியாக கற்றுக் கொண்டிருந்தேன். வட்டத்தில் இணைந்த ஒரு வாரத்திற்குள் ஒவ்வொருவரின் பாவலாக்களை அறிந்து கொள்ளலாம். அதற்கேற்றாற்போல அவர்களிடம் பேசினால் மேலும் நெருக்கமாகலாம். நான் எப்போதும் எனக்குப் பிடித்த பாவலாக்களில் ஒன்றை தேர்வு செய்து விரும்பியவர்களுடன் ஒட்டிக் கொள்வேன்.

ஆண்கள் கூட்டத்தில் மேதாவி என யாரும் இல்லை என்பது என் தீர்க்கமான எண்ணம். நூற்றுக்குத் தொண்ணூற்றொன்பது பேர் என்னை மாதிரி மேதாவி போல நடிக்கக் கற்றுக் கொண்டவர்கள் மட்டுமே. பணத்தைப் பொறுத்தளவில் நானெப்போதும் செலவளிக்காத, ”இதோ தருகிறேன்!” என்று எடுத்து மீண்டும் பைக்குள் வைத்துக் கொள்ளும் ஒரு அழகான ஐந்து ரூபாய் தாளை வைத்திருப்பேன். மதுரையில் நான் புழங்கிய வட்டத்திலிருந்து அரசியல், நாடக நடிகைகள்- நடிகர்கள் பற்றிய வம்புகளை அறிந்திருந்ததால் எனக்குத் தெரிந்த நல்ல நல்ல புரணிகளை இந்தக் கூட்டத்தினரிடம் எப்படிச் சொல்லிப் பெயரெடுக்கலாம் என மனம் கணக்குப் போட்டுக் கொண்டிருந்தது.

ஆனால் இந்தக் கூட்டம் பாவலாக்களுக்கு அப்பாற்பட்டதாக இருப்பதை அந்த நாளின் இறுதியிலேயே அறிந்தேன். தீவிரமான உரையாடல்களைப் பேசுபவர்களாக, தீவிரமான கனவுகளைச் சுமந்திருப்பவர்களாக பெரும்பான்மையானோர் இருந்தார்கள். மீதி சிலர் பற்ற வைத்தால் சுடர்விட்டெறியும் கற்பூரம் போன்ற பாவனையில் அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். எனக்குப் பயமாக இருந்தது. நான் அதுவரை வாசித்த அத்தனையும் அங்குக் கேலிப்பொருளாக எடுத்தாளப்படுவதைப் பார்க்கவும் கேட்கவும் மட்டுமே என்னால் முடிந்தது. ரங்கராஜுவின் நாவல்களெல்லாம் மருந்துக்குக் கூட இலக்கியம் என அவர்கள் ஒத்துக் கொள்ளவில்லை. தமிழ் இலக்கியத்தில் நவீனத்துவத்தைக் கொண்டு வருவது என்ற பொருளில் பேச்சு இருந்தது. அப்போது தான் நான் வாசித்த நாவல்களில் இருந்த மரபை வியந்தோதும் அம்சத்தைப் பொறிதட்டியது போல உணர்ந்தேன். நான் மிகவும் கவனமாகவும் ஆர்வமாகவும் அவர்கள் பேசுவதைக் கேட்டேன்.

உலக இலக்கியங்கள் பற்றிய பேச்சு தான் அன்றைய தினம் அதிகமாக இருந்தது. அவர்கள் பேசிய எந்த நாட்டைப் பற்றியும், எந்த எழுத்தாளர்களைப் பற்றியும் நான் தெரிந்திருக்கவில்லை. பெயர்களை மண்டையில் குறித்து வைக்க முற்பட்டுத் தோற்றுப் போனேன். இரு பெயர்கள் ஓயாமல் ஒலித்துக் கொண்டே இருந்ததால் அது மட்டும் நினைவில் நின்றது.

”ஸ்டெந்தாலும் ஸ்காட்டும் ஒரே காலகட்டத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் ஏன் ஸ்டெந்தாலுடைய புகழ் காலத்தால் மங்காமல் மெருகுடன் இருந்தது, ஸ்காட்டினுடைய புகழ் படிப்படியாக மங்கியது” என்ற கேள்வியை ராமையா ஆரம்பித்தார்.

தடித்த சோடாபுட்டிக் கண்ணாடி போட்ட இளைஞன் ஸ்காட்டின் ‘மிட்லாத்தியன்’ நாவலை முன் வைத்து அது ஏன் என நிறுவி, தமிழில் எதெல்லாம் இருவர் படைப்புகளிலிருந்தும் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்ற பட்டியலை முன்வைத்தார். அவர் பெயர் சுப்ரமண்யம் என்றும் தஞ்சாவூரைச் சேர்ந்தவர் என்றும் பின்னர் தெரிந்து கொண்டேன்.

விருத்தாச்சலம் ஸ்காட்டிலிருந்த சிந்தனையின் ஆதிக்கம் என்ன என்பது பற்றியும், அவரின் கருத்துக்களின் பேதத்தை அறியும் தன்மையை அலசினார். அவர் நாவலுடன் சேர்த்து எழுத்தாளரின் அகத்தையும் உரித்துக் காண்பித்தார்.

“அனேகமாக நாளைக்கு ஒரு தழுவல் கதை எழுதி எடுத்தாந்திடுவீர் போலயே” என்று கண்ணடித்தவாறு அந்தக் கூட்டத்தில் இருந்த வயதான ராமசாமி சொன்னார்.

“தழுவல் எழுதறேன்னு நானாவது சொல்லிட்டு எழுதறேன். ஆனா அது சட்டை மாதிரி தான். ஆன்மா தமிழ் மனத்துடையது” என்றார் சொ.வி. பேச்சு தழுவலுக்கும் மொழிபெயர்ப்புக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை நோக்கிச் சென்றது. விவாதத்தில் சுப்ரமண்யத்தின் குரல் ஓங்கியிருந்தது. எனக்குத் தலை சுற்றியது. வெற்றிகரமாக அன்று தான் என்னுடைய ஐந்து ரூபாயும் முழுவதும் செலவானது. எல்லோரும் களைந்து சென்ற பின் தனியாக பாரதி சாலையில் என் கடைக்கு முன்னால் வந்து உட்கார்ந்தேன். வேகம் வந்தது போல கடைக்குள் புகுந்து ஸ்காட், ஸ்டெந்தாலின் புத்தகங்களைத் தேடினேன். அகப்பட்ட ஸ்காட்டின் ‘மிட்லாத்தியன்’ நாவலை இரு நாட்கள் சோறு தண்ணீர் இல்லாமல் வாசித்து முடித்தேன். நானும் மெல்ல மெல்ல தேராத கேஸாக அவர்களுடன் சேர்ந்து மாறிக்கொண்டிருந்தேன். என்றாவது அவர்களுக்கு இணையாக ஒரு சொல்லையாவது அவர்கள் மத்தியில் சொல்ல வேண்டும் என்பது மட்டுமே என் வாழ்க்கையின் லட்சியமாக மாறிப் போனது. ரங்கராஜுவைச் சந்திக்க வேண்டும் என்பதை நான் மெல்ல என்னையறியாமலேயே மறந்து போனேன். இது தான் எழுத்து என்பது தெரிந்தபின் அவரிலிருந்த வணிகத்தன்மையும், ஜனரஞ்சகத்தன்மையும், சாரமற்ற வாழ்க்கை நோக்கும் எனக்கு ஒவ்வாமை அளித்தது. ஆனால் பொது ஜனரஞ்சகத்தன்மை பற்றி அவ்வாறு ஒவ்வாமை கொள்ளத் தேவையில்லை என்பதைச் சுப்ரமண்யம் சொல்லிக் கொண்டே இருப்பதையும் பின்னர் கவனத்தில் கொண்டேன்.

ஒரு இரவு சொ.வியும், சுப்ரமண்யமும் டிக்கன்ஸ் என்ற எழுத்தாளருக்கு இருக்கும் குழந்தை நோக்கு சுபாவம் பற்றியும், தொடர்கதைகளையும் இலக்கியத்தரமாக டிக்கன்ஸ் போல செய்து நாவல் முயற்சிகளை ஆரம்பிக்கலாம் என்பதை எடுத்து விவாதிக் கொண்டே பிராட்வே நோக்கி நடையாகவே செல்வதைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தேன். டிராமில் சென்றால் இன்னொரு காப்பிக்குக் காசிருக்காது என அவர்கள் நடந்து செல்வதை அறிவேன். பிராட்வேயிலுள்ள டக்கர்ஸ் சாலையில் மணிக்கொடி அலுவலகம் இருந்தது. அங்குச் சென்று வேறு தலைப்பில் உரையாடலைத் தொடங்குவார்கள். நானும் அங்குச் செல்ல முடியாதது சற்று வருத்தமாக இருந்தது. இந்த நான்கு மணி நேரம் நான் கடையில் இல்லாமல் ஒரு பையன் மட்டும் இருப்பது தெரிந்தால் முதலாளி சம்பளத்தைக் குறைத்துவிடுவார். பின்னர் இவர்களுக்கு ஒருவேளை காப்பி கூட வாங்கிக் கொடுக்க முடியாமலாகும். அவர்களைப் பற்றியே என் மனம் இரவு அசைபோட்டபடி இருந்தது. யாராலும் எப்போதும் எடுத்துக்கொள்ள முடியாத ஒரு அம்சம் அவர்களிடமிருந்தது. தொடத்தொட ஊறிவரும் அறிவுக்கிணையாக இந்த உலகில் எதையும் ஈடு இணை வைக்க முடியாது என்று தீர்க்கமாக நம்ப ஆரம்பித்தேன். அதையே வாழ்நாள் முழுவதும் தேட வேண்டும் என்று சொல்லிக் கொண்டேன்

மொழிநடை சார்ந்த விவாதங்கள், இலக்கிய வடிவம் சார்ந்த பல முக்கிய முயற்சிகள் என பலவும் இவர்களின் விவாதத்தில் பேசுபொருளாக இருக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக சிறுகதைகளின் ஆன்மாவைப் பற்றிதான் அதிக பேச்சுக்கள் நடக்கும். அதன் பேசுபொருள் என்ன, அதன் சிந்தனையம்சம் எந்தப் புள்ளியிலிருந்து தொடங்குகிறது என்றெல்லாம் பேசுவார்கள். அப்படியே பேச்சு ஐரோப்பாவின் வரலாறு, தத்துவம் என நீளும். ஒவ்வொரு பிராந்தியத்திலுள்ள அழகுணர்வு, பிரச்சனைகள் படைப்புகளை எவ்வாறு பாதிக்கின்றன, தமிழ்மனம் எதை பேச வேண்டும் என்றெல்லாம் பேச்சுகள் விரியும். பிரான்ஸ், ஸ்காட்லாந்து, அமெரிக்கா, ரஷ்யா என நான் போகவே முடியாத இடங்கள் பற்றிய கனவுகள் என்னில் நிறைய ஆரம்பித்தன.

ஒருவர் வராத அன்று அவர்களைப் பற்றிய குறைபாடுகளை மற்ற நண்பர்கள் பேசிக் கொள்வதைக் கேட்டிருக்கிறேன். அழகிரி என்ற இளைஞன் ஒரு எதிர்க்குரலுடன் அங்கு இருந்தான். சுப்ரமண்யத்தின் விமர்சனம் வெறும் அபிப்ராயமாக மட்டுமே இருப்பதும், அது தொடர்ந்தும், தீவிரமாகவும், அதிகமாகவும் வந்து கொண்டே இருப்பது ஆபத்து என்றும் அவன் தான் முதலில் சொன்னான். அதற்கு மாற்றாக இன்னொரு தரப்பு சொல்லப்பட வேண்டும் என்று வலியுறுத்தினான். ஆனால் அது நடக்காது. ஏனெனில் சுப்ரமண்யம் அளவுக்கான தீவிரம் கொண்ட இன்னொரு நபரை அந்த வட்டத்தில் நான் பார்த்ததில்லை. விருத்தாசலம் போன்ற மேதை தமிழின் நவீன இலக்கிய காலகட்டத்தின் ஆரம்பத்திலேயே உருவாகி வருவதைச் சாபமாகப் பார்த்த ஆட்களும் இருந்தனர். இந்த உயர்வான இலக்கு பல எளிய, புதிய முயற்சிகளைச் செய்யப் புறப்படும் ஆட்களை அதன் மூலாதாரத்திலேயே கைவிட்டுச் செல்லும் என அழகிரி ஒருமுறை ஆவேசமாக எச்சரித்தது நினைவில் உள்ளது. அதை பற்றி உணர்வதற்குள்ளாகவே அந்தக் கைவிடுதலகள் நிகழ்ந்து பல தசாப்தங்களைக் கடந்து திரும்பவியலாத ஒரு பாதையைக் கை கொண்டிருப்போம் என்று கையறு நிலையில் சொன்னான். ஆனால் சொன்னவர்களும் கேட்டவர்களும் உணர்ந்தவர்களும் எல்லோருமே சொ.வி-யின் மேதாவிலாசத்தால் அடித்துச் செல்லப்பட்டனர் எனலாம். என்னால் வெறுமனே பார்க்க மட்டுமே முடிந்தது.

மெல்ல ஒட்டியும் ஒட்டாமலும் என விலகி நின்று அவர்களை ஒரு வாசகனாகப் பார்க்கும் பார்வையை மட்டும் தக்க வைத்துக் கொண்டேன். எழுதுவதற்கான எண்ணம் எனக்கு இருக்கவில்லை. அது எனக்குக் கையளிக்கப்படவுமில்லை. என்னைப் போல சில வாசகர்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் தீவிரமாக எந்த விமர்சனத்தையும் எழுதாமலானால் விமர்சகத்தரப்பை ரசனை அடிப்படையில் அமைதியாக தேர்வு செய்து கடத்திச் சென்றுகொண்டே இருப்பார்கள் என்று தோன்றுகிறது.

4

நான் இங்கேயே நண்பர்களின் உதவியுடன் தெய்வானை என்ற பெண்ணை எளிமையாக பார்த்தசாரதி கோயிலில் திருமணம் செய்து கொண்டேன். திருவல்லிக்கேணி பெல்ஸ் தெருவில் ஒரு ஒண்டிக்குடித்தனத்தில் குடியமர்ந்தேன். திருமணத்திற்குப்பின் நானே சொந்தமாக ஒரு பழைய புத்தகக்கடையைப் பாரதி சாலை பிளாட்பாரத்தில் போட்டுக் கொண்டேன். அதை கொண்டு குடும்ப வருமானத்தைக் கவனிப்பது, எழுத்தாளர்களின் காப்பி டிபன் செலவுகளுக்குப் பணம் கொடுப்பது, சேமித்து வைத்த பணம் சொல்லிக் கொள்ளும்படி சேரும்போது அவர்களின் கிராக்கு முயற்சிகளுக்குச் செலவிடுவது என இருந்தேன். பெரும்பாலும் இத்தகைய பணத்தைச் செல்லப்பாவைத் தவிர யாரிடமும் நான் கொடுத்ததில்லை. ஏனெனில் அவர் தான் சரியாகவும் பிடித்தமாகவும் செலவு செய்வார். எலி தன் பொந்துக்குள் பதுக்கி வைப்பது போல எப்போதும் வைத்திருப்பவர் அவர் மட்டும் தான்.

புறச்சூழல் மாறிக் கொண்டே இருந்தது. சுதந்திரம் கிடைத்தது. சொ.வி காலமானார். மணிக்கொடி இதழ் முற்றிலும் இல்லாமல் ஆனது. எழுத்து இதழ் தொடங்கப்பட்டது. புதிய இதழ் முயற்சிகள், பதிப்பக முயற்சிகள் நிகழ்ந்து கொண்டிருந்தது. சுப்ரமண்யத்திற்குக் கீழ் பிரகாஷ் என்ற பையன் வந்து சேர்ந்தான். பழைய இலக்கியக் குழு சிதறியிருந்தது. மெல்ல மெரீனா செல்வது இல்லாமல் ஆனது.

அவ்வபோது எங்காவது முக்கியமான இலக்கியக் கூட்டங்கள் என்றால் அங்குச் செல்வேன். அதிலும் வெளி மாநில எழுத்தாளர்கள் பங்கு கொள்ளும் கூட்டங்களில் எல்லாம் தன் கருத்தை ஆணித்தரமாகச் சொல்லவும், தமிழ் இலக்கியத்தைப் பற்றிய சரியான கண்ணோட்டத்தை அளிக்கவும் சுப்ரமண்யம் கட்டாயம் வருவார். வேர்க்க விறுவிறுக்க நடந்து வரும் அவருக்கு காப்பியும் தோசையும் இனிப்பும் வாங்கிச் சென்று சந்தித்து வருவது அடுத்த சில மாதங்கள் என் வாழ்க்கையை ஓட்டுவதற்கான தெம்பைத் தரும். அவர் டெல்லி சென்றதும் அந்த அல்ப மகிழ்ச்சியும் இல்லாமல் ஆனது.

பிரகாஷ் மதராஸ் வரும் போதெல்லாம் அவனைச் சந்திப்பதும் அவன் செய்து கொண்டிருக்கும் பணிகளைப் பற்றி தெரிந்து கொள்வதும் சேர்த்து வைத்திருக்கும் பணத்தை அவனுக்குக் கையளிப்பதும் என அதன்பின் வாடிக்கையானது. அவனிடம் ஒரு துடிப்பு இருந்தது. சுப்ரமண்யத்திடமிருந்த ஒரு துடிப்பு அது. இல்லை. இன்னும் சிலரிடம் பார்த்திருக்கிறேன். இலக்கியத் திட்டங்களைப் பற்றி பேசும்போதும் செயல்படுத்தும்போதும் பலரிலும் மின்னி மறையும் துடிப்பு அது. காலந்தோறும் கடத்தப்பட்டுக் கொண்டே இருக்கும் துடிப்பு. அடுத்த தலைமுறை ஒன்று கண் முன் உருவாகி வருவதைப் பார்க்க ஆறுதலாக இருந்தது.

என்னைச் சுற்றியும் புறச்சூழல் மாறிக் கொண்டிருந்தது. குழந்தை, படிப்பு, அவர்களுக்குக் கல்யாணம் என மெல்ல அது என்னை மாற்றிக் கொண்டிருந்தது. பிரகாஷுடன் மட்டும் கடிதத்தொடர்பு இருந்தது.  என் மகன் வயது அவனுக்கு. ஒரு இனம் புரியாத பாசம் அவன் மேல். சொருகும் பெரிய விழிகளுடன் கூடிய அவனின் தீட்சண்யமான பார்வை மேலும் ஒரு ஈர்ப்பைத் தந்திருந்தது ஒரு காரணமாக இருக்கலாம்.

சுப்ரமண்யம் இறந்த சில நாட்களில் பிரகாஷ் கடைக்கு வந்திருந்தான். அவரின் சில நூல்களைப் பதிப்பிக்க வேண்டும் என்ற திட்டத்தை முன் வைத்தான். என் சேமிப்புக் கணக்குகளைச் சிந்தித்தவாறு, “உறுதியாக செய்துவிடலாம்” என்ற நம்பிக்கையை அவனிடம் அளித்தேன். அவனும் பதிப்பிப்பதற்காக ஆகும் செலவுக்காக கடன் கேட்டிருந்த இடங்களைப் பகிர்ந்து கொண்டான். பையன் பெரிய பெரிய செயல்திட்டங்களுடன் இருந்ததைப் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. நானும் அவனும் சேர்ந்து தான் அன்று சுப்ரமண்யத்தின் வீட்டுக்குச் சென்றோம். மனைவி வீட்டில் இருந்தார். அதிகம் பேசவில்லை. அழையா விருந்தாளிகள் அடையும் சங்கோஜத்தை அடைந்தோம். பிரகாஷ் பதிப்பு திட்டங்களைப் பற்றி விரிவாகச் சொல்லி சுப்ரமண்யத்தின் நாவல், கைப்பிரதிகள் சிலவற்றின் பெயரைச் சொல்லி அவற்றை பதிப்பிப்பதற்காகக் கேட்டான்.

“ஐந்து லட்சம் கொடுத்தால் எல்லாவற்றையும் எடுத்துப் போகலாம்” என்று அவர் மனைவி எந்தவித தயக்கமும் இல்லாமல் சொன்னார். அசெளகர்யமான ஒரு அமைதியுடன் இருவரும் உட்கார்ந்திருந்தோம்.

“காப்பி போடவா” என்று அந்த அமைதி குழையும்படி அவர் கேட்டதும், ஒரு கணம் தயங்கி “வேண்டாம். கிளம்பறோம்” என்று சொல்லிவிட்டு பிரகாஷ் எழுந்துவிட்டான். இருவரும் கடைக்குச் சென்று காப்பி வரவழைத்து சாப்பிட்டோம். கடையை மூடும் வேளை வரை கடைக்கு வெளியில் உள்ள பிளாட்பாரத்தில் கைவிடப்பட்டவன் போல அவன் உட்கார்ந்திருந்ததைப் பார்த்தபோது கலக்கமாக இருந்தது. சாப்பிடச் சொல்லி எவ்வளவு வற்புறுத்தியும் மறுத்துவிட்டான். சுப்ரமண்யம் குடிப்பது போல கசப்பான, சீனி தூக்கலான காபியை மீண்டும் மண்டினோம். மேன்சனுக்கு செல்வதாக என்னிடம் விடைபெற்றுக் கொண்டு சென்றான். நானும் அன்று சாப்பிடவில்லை.

அதன்பிறகு ஆறு மாதங்கள் கழித்து பிரகாஷிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. எழுத்தாளர் ரங்கராஜுவின் நூலக சேமிப்புகளை அவரின் குடும்பத்தினர் பழைய புத்தகக் கடைக்குப் போடப்போவதாகவும், அதற்குமுன் இலக்கிய வாசகர்கள், எழுத்தாளர்கள் விருப்பப்பட்டால் வீட்டிற்கு வந்து எடுத்துக் கொள்ளலாம் என குடும்பத்தினர் அறிவித்திருந்தது பற்றி சுருக்கமாக எழுதியிருந்தான். அவன் எடுத்தது போக மிச்சப் புத்தகங்களை என்னுடைய கடையில் பத்திரமாக வைக்க வேண்டும் என்றும் எழுதியிருந்தான். அப்போது எனக்கென சொந்தமாக ஒரு கடை நல்லதம்பி தெருவில் இருந்தது. ரங்கராஜுவின் புத்தக சேமிப்புகளை என் கடையில் வைப்பதற்கான இடத்தை ஒதுக்க ஆரம்பித்தேன்.

கடிதம் கிடைத்து ஒரு வாரம் கழித்து வடகிழக்கு பருவமழையைக் கையோடு கூட்டி வந்திருந்தான் பிரகாஷ். அவன் வந்து சேர மாலையாகியிருந்தது.

ரங்கராஜுவின் வீட்டைச் சுற்றி அமைந்திருந்த பெரிய, உயரமான காம்பவுண்ட் கேட்டிற்குள் புத்தகம் எடுக்க வந்த எழுத்தாளனாக பிரகாஷ் தன்னை அறிமுகம் செய்து கொண்டு படபடப்புடன் உள்ளே நுழைந்தான். என் மனம் அமைதியாக இருந்தது. கையில் இரண்டு சாக்குப் பைகளுடன் இளமையில் நான் கற்பனையில் உருவாக்கி வைத்திருந்த அவரின் நூலக அறையை நினைத்தவாறு மெல்ல வயதானவர்களுக்குரிய தளர்ந்த நடையுடன் நானும் அவனுடன் நுழைந்தேன். வீட்டின் முகப்பில் நரைத்த தலைமுடியுடன் உயரமான நிமிர்ந்த தேகம் கொண்ட பெண்மணி எங்களை உள்ளே வரவேற்காமல் வீட்டின் பின்புறத்திற்கு அழைத்துச் சென்றார். ரங்கராஜுவின் மனைவி என பிரகாஷ் எனக்கு மட்டும் கேட்கும்படியாக சொன்னான். வெளிச்சம் குறைவாக இருந்ததால் அவர் கை நீட்டிய திசையைப் பார்த்துச் சுதாரிப்பதற்குச் சில வினாடிகள் ஆனது. எனக்கு நெஞ்சு படபடவென அடிக்க ஆரம்பித்தது. நான் உடனடியாக பிரகாஷைத்தான் திரும்பிப் பார்த்தேன். அவன் உறைந்து போயிருந்தான். “ஒரு பாலித்தீன் கவராவது போட்டு மூடி வைச்சிருக்கலாமே” என்று கைவிடப்பட்டவன் போல கேட்டான்.

வீட்டுபின்கட்டின் வாசலில் கையைக் கட்டியவாறு சாய்ந்து நின்றிருந்த அந்த அம்மா அவன் சொன்னதைச் சட்டை செய்யாமல் “பாலித்தீன் கவர் வெல அதிகம்” என்றாள். அவள் கண்களை அப்போது தான் சந்தித்தேன். அந்தியிலும் அந்தப் பார்வையின் ஆழத்தை என்னால் உணர முடிந்தது. அந்தப்  பார்வையை நான் ஏற்கனவே அறிந்திருக்கிறேன். மறக்கவே இயலாத பார்வை அது. என் பாட்டியின் பார்வை. ஒரு மின்னல் போல அது வந்து சென்றது. எனக்குக் கை நடுக்கம் கொள்ள ஆரம்பித்தது.

பிரகாஷைப் பார்த்தேன். அவன் கண்களிலும் உடலிலும் தண்மை கூடியது போல நிராதரவுடன் மழையில் ஊறிய புத்தகங்கள் இருந்த அந்தக் குவியலைப் பார்த்தவாறு நின்றிருந்தான். நான் அங்கேயே சரிந்து அந்தப் புத்தகக் குவியல்களின் ஈரத்திற்குள் விழுந்து புதைந்தேன். கண்கள் என் பிரக்ஞையில்லாமல் மூடுவதை உள்ளிருந்து பார்த்துக் கொண்டிருக்க இருள் போர்வைப் போல என் மேல் மூடிக் கொண்டது. யாரும் தேட முடியாத, தோண்டப்படாத ஆழத்திற்குள் எனச் சென்று அமிழ முற்பட்டேன். பிரகாஷ் முழு பலத்தையும் திரட்டி என் கனமான தேகத்தை இரு கரம் பற்றி தூக்க முயற்சிப்பதை உணர்ந்தபடி மேலும் அமிழ்தேன்.

2 comments for “புதையல்

  1. Soundar
    July 1, 2025 at 2:15 pm

    ஒருவரின் பொக்கிஷம் மற்றவருக்கு கூலாங்கல்லாக தோன்றும் விந்தை, கதையின் கடைசிவரை கூடிவந்துள்ளது.

    பக்தனை ஞானி எள்ளுவதும், ஞானியை முனிவன் முரண்படுவதும், முனிவனை சாருவாகன் காறி உமிழ்வதும் ,அவரவர் பொக்கிஷத்தின் மதிப்பென்ன எனும் ஆடலே.

    நல்ல முயற்சி.
    வாழ்த்துக்கள் ரம்யா

  2. July 1, 2025 at 7:49 pm

    கதையில் வரும் சில பாத்திரங்களின் பெயர் தமிழக முன்னோடி எழுத்தாளர்களின் பெயர்கள், சில நேரிடையாக, சில மறைமுகமாக குறிப்பிடப் பட்டுள்ளதாக தெரிகிறது.

    முக்கிய பிழை:

    மாட்டுத்தாவணி பஸ் நிலையம் ஆரம்பித்து 28 வருடங்கள் தான் ஆகிறது.
    அந்நாட்களில் மதுரையில் வெளியூர் பஸ்கள் வந்து சேருமிடம் “மத்திய பேருந்து நிலையம்” தான்.
    ஆனால் கதையில், கீழ்க்கண்டவாறு வருகிறது.

    # மதுரை மாட்டுத்தாவணியில் இருந்த பல பரோட்டா கடைகளில் ஒன்றில் இயல்பாக வேலையில் இருந்தேன்.

    (கதையில், இந்நிகழ்விற்கு பின்னர்)

    #சுதந்திரம் கிடைத்தது. சொ.வி காலமானார். மணிக்கொடி இதழ் முற்றிலும் இல்லாமல் ஆனது. எழுத்து இதழ் தொடங்கப்பட்டது.

    ஆசிரியர் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

    அன்புடன்,
    ஜீவன்.

Leave a Reply to Soundar Cancel reply