ஒரு படைப்பு முழுமையடைந்த பின்பு எழுத்தாளர்கள் பதிப்பாளர்களை நாடி நூல்களைப் பதிப்பிக்கிறார்கள். தன்னுடைய படைப்பு நூல் வடிவம் பெருவதில் மிகுந்த அக்கறை செலுத்தும் எழுத்தாளர்கள் அதற்கான ராயல்டி தொகையைப் பெறுவதில் அக்கறையுடனும் விழிப்புடனும் இருக்கிறார்களா என்பது கேள்விக்குறியே. குறிப்பாக 2013ஆம் ஆண்டு மலேசிய எழுத்தாளர் சங்கம் பதிப்பித்து வெளியீடு செய்த ‘பந்துவான் (Bantuan) -2012 ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதைகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பினால் வெளிபட்ட ராயல்டி சர்ச்சை மலேசியத் தமிழ் எழுத்தாளர்களில் பலருக்கும் ராயல்டி தொடர்பான விழிப்புணர்வு இல்லாதிருத்தலை தெள்ளத் தெளிவாக காட்டியது. நாளிதழ்களுக்கு எழுதப்பட்ட தங்களுடைய படைப்பு நூல் வடிவம் பெறுவதை எழுத்துப்பூர்வமாக எழுத்தாளர்களுக்கு அறிவிக்காதது ஒருபுறம் இருக்க ராயல்டி ஒப்பந்தங்கள் செய்துகொள்ள படாமல் நூல் வெளியீடு கண்டது இளம் எழுத்தாளர்களின் கண்டனத்திற்குட்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். தவிர, மலாய் இலக்கிய உலகிலும் 2007ஆம் ஆண்டு தொடங்கி ராயல்டி சர்ச்சைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கதாகும்.
ராயல்டியின் தேவைகளைப்பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்பு எழுத்தாளர்கள் அது தொடர்பாக இதுவரை கொண்டிருக்கும் தவறான முன்முடிவுகளை களைய வேண்டியது அவசியமாகும். ‘பரிசு பணம் போதும், பண முடிச்சுகள் போதும், எங்கள் கதை புத்தகத்தில் பிரசுரிக்கப்பட்டால் போதும், ராயல்டியெல்லாம் தேவையில்லை’ என்று கூறுவது “எனக்கு சிகப்பு அடையாள அட்டை மட்டும் போதும்” என்பதற்கொப்பாகும்.
ராயல்டி (தெளிவான விளக்கம்)
ராயல்டி (உரிமம்) எனப்படுவது ஒரு நிறுவனம் அல்லது தனிநபர் (உரிமதாரர் –licensor) மற்றொரு நிறுவனத்திற்கு அல்லது தனிநபருக்கு (licensee) தன்னுடைய அறிவுசார்ந்த அல்லது பொருட்சார்ந்த உரிமையைப் பயன்படுத்த அல்லது விற்பனைச் செய்ய அனுமதித்ததற்காக வழங்கப்படும் ஒருவகை கட்டணமாகும். ராயல்டி முறையை பரவலாக பயன்படுத்தும் துறைகளாக இசைத்துறை, ஓவியத்துறை, புத்தகத்துறை, ஊடகத்துறை, எண்ணெய் மற்றும் எரிவாயு துறை போன்றவை திகழ்கின்றன. அடிப்படையில் இந்த ராயல்டி முறை ஒரு பொருளின் உரிமதாரருக்கும் அதன் பெறுநருக்கும் லாபத்தைக் கொடுக்க வேண்டும் எனும் வகையில் வடிவமைக்கப்பட்டது. முறையான ராயல்டி ஒப்பந்தம் செய்துக்கொள்ளும் போது எந்தவொரு தரப்பினரும் சட்ட ரீதியிலான சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்காது. அப்படியே ஏதாவது ஒரு தரப்பு நேர்மையற்ற வழியில் செயல்பட்டால் மிகச் சுலபான ராயல்டி ஒப்பந்தத்தை முன்வைத்து சட்ட ரீதியாக ஞாயம்பெறவும் முடியும். மேலும், ராயல்டி ஒப்பந்தம் ‘உரிமதாரர்’ மற்றும் ‘பெறுநர்’ ஆகிய இரு தரப்பினருக்கும் பின்வருமாறு பலவழிகளில் நன்மையை விளைவிக்கின்றது.
உரிமதாரர் –licensor |
பெறுநர்– licensee |
ராயல்டி
|
வியாபார பெருக்கம்
|
அங்கிகாரம் ; விளம்பரம்
|
அங்கிகாரம் ; விளம்பரம்; நம்பகத்தன்மை
|
வர்த்தக நீட்டிப்பு
|
நம்பகத்தன்மை
|
நூல் வர்த்தகத் துறையும் ராயல்டியும்
எழுத்தாளர்கள் 2 வழிகளில் தங்களது புத்தகங்களைப் பதிப்பித்து விற்பனைச் சந்தைக்குக் கொண்டு செல்ல முடியும்.
சுய பதிப்பு
சுய பதிப்பு முறையின்வழி எழுத்தாளர்கள் சுயமாகவே தங்களது புத்தகத்தை அச்சிட்டு விற்பனைச் சந்தைக்குக் கொண்டு செல்கின்றனர். தன்னிச்சையாக புத்தகத்தை பதிப்பிக்கும்போது எழுத்தாளர்களே அச்சு தொடர்பான அனைத்து வேலைகளையும் கண்காணிக்க வேண்டியிருக்கும். அச்சு தொடர்பான நுணுக்கங்கள் ஒரளவாவது தெரிந்திருப்பதன்வழி நல்ல தரமான புத்தகத்தை அச்சிட முடியும். மேலும், புத்தகங்களுக்குத் தேவையான ISBN மற்றும் CIP தரவுகளைப் பெறுவது போன்ற சிறு சிறு முக்கிய வேலைகள் தொடங்கி விளம்பரபடுத்துதல் போன்ற சற்று கடினமான வேலைகளையும் சுயமாக செய்வதே சுய பதிப்பு முறையாகும். இது சற்று சிரமமான வேலையாகத் தெரிந்தாலும் நூலுக்கான மொத்த உரிமையும், அதன் இலாப நஷ்டம் அனைத்தும் எழுத்தாளர் ஒருவரையே சாரும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
பதிப்பு நிறுவனம் / பதிப்பாளர் மூலம் பதிப்பித்தல்
சுயமாக அச்சிட்டு வெளியிட முடியாதவர்கள் பதிப்பு நிறுவனத்தில் சேவையை நாடுகிறார்கள். பெரும்பாலும் எழுத்தாளர்கள் அச்சு தொடர்பான சிக்கல்களைத் தவிர்க்கவும், தங்களது நூல்களை எளிதில் சந்தைப்படுத்தவும் பதிப்பு நிறுவனங்களின் சேவையை நாடுகின்றனர். உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் புத்தகத்தை விளம்பரப்படுத்தி நூல் வர்த்தகச் சந்தைக்குள் எளிதில் நுழையும் ஆற்றலும் கட்டமைப்பும் பதிப்பு நிறுவனங்களுகே அதிகம் உள்ளது என்பதை மறுக்க முடியாது. இவ்வாறு பதிப்பு நிறுவனங்களின் மூலம் புத்தகங்களைப் பதிப்பிக்கும் எழுத்தாளர்கள் ராயல்டி தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனம் செலுத்துவது அவசியமாகும்.
ராயல்டி கணக்கிடப்படும் முறை
புத்தக விற்பனையில் எழுத்தாளருக்குக் கிடைக்கும் வருமானத்தையே ராயல்டி என்று அழைக்கின்றோம். இதனை பதிப்பாளர்களே எழுத்தாளர்களுக்கு வழங்குகின்றனர். உலக அளவில் ஒரு புத்தகத்திற்கு சராசரியாக 10% முதல் 12% வரை ராயல்டி வழங்கப்படுகிறது. பிரபலமான எழுத்தாளர்களின் புத்தகங்களுக்கு 15% முதல் 20% வரை அதிக ராயல்டியும் பிரபலமில்லாத எழுத்தாளர்கள் / புதிய எழுத்தாளர்களுக்கு 7.5% முதல் 9.5% வரையிலான ராயல்டியும் வழங்கப்படுகிறது. இவ்வாறு ராயல்டி தொகையை நிர்ணயிக்கும் உரிமை பதிப்பாளர்களைச் சார்ந்ததாகும். மொழிபெயர்ப்பு நூல்கள், நேரடியாக எழுதப்பட்ட நூல்கள், மொழி மாற்றம் செய்யப்பட்ட நூல்கள், தடித்த / மெலிந்த அட்டை கொண்ட நூல்கள், வண்ணப்படங்களால் ஆன நூல்கள் என புத்தகத்தின் வகை சார்ந்து ராயல்டி தொகை நிர்ணயிக்கப்படுவதும் வழக்கதில் உள்ளது. இனி ராயல்டி கணக்கிடப்படும் மூன்று முறைகளைக் காண்போம்.
நிலையான கட்டணம்
இம்முறையின்வழி எழுத்தாளர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையினை பதிப்பு நிறுவனம் நூல் அச்சிடப்படுவதற்கு முன்போ அல்லது அச்சிடப்பட்ட பின்போ கொடுத்துவிடும். குறிப்பாக, ஓர் எழுத்தாளர் நாடு கடந்து புத்தகங்களைப் பதிப்பிக்கும்போது ராயல்டி முறை பின்பற்றப்படாமல் இம்முறையிலான கட்டணமே வழங்கப்படுகிறது என்பதை எழுத்தாளர்கள் நினைவில் கொள்ளவேண்டும். பெரும்பாலும் புத்தகங்கள் முழுமையாக அச்சாகி விற்பனைக்குத் தயாரான பின்பு அந்நூலுக்கான அச்சு செலவு, தபால் செலவு, விநியோக செலவுகள் போன்றவற்றை கணக்கிட்டு அதன் பிறகு இந்நிலையான கட்டண தொகை நிர்ணயிக்கப்படும். உதாரணமாக, ஒரு புத்தகத்திற்கு நிலையான கட்டணம் ம.ரி. 1,000 என்று நிர்ணயிக்கப்படும்போது அப்புத்தகம் வெறும் 10 பிரதிகள் மட்டுமே விற்பனையானாலும்சரி அல்லது 1 மில்லியன் பிரதிகள் விற்பனையானாலும்சரி எழுத்தாளனுக்கு எந்தவொரு விபரமும் தெரிவிக்கப்பட மாட்டாது. அதிக புத்தகங்கள் விற்பனையாகும்போது அதன் லாபத்தையோ அல்லது எந்தவொரு கூடுதல் தொகையையோ எழுத்தாளர்கள் பதிப்பாளரிடமிருந்து கேட்டுப்பெற முடியாது.
அதேபோல், புத்தக விற்பனை நட்டப்பட்டாலும் எழுத்தாளர்கள் அதற்கு பொறுப்பேற்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், அதே புத்தகம் மறுபதிப்பு செய்யப்படும்போது மீண்டும் எழுத்தாளருக்கு ஒரு குறிப்பிட்ட தொகை நிலையான கட்டணமாக வழங்கப்படும். மறுபதிப்புக்கான சூழல் உருவாகும்போது எழுத்தாளர் இந்நிலையான கட்டண முறையிலிருந்து விடுபட்டு வேறு வகையான ராயல்டி முறையைத் தேர்வு செய்ய முடியும். இருப்பினும் தொடக்கக்கட்ட ராயல்டி ஒப்பந்தத்தில் மறுபதிப்பு, மீள்பதிப்பு, திருத்தப்பட்ட பதிப்பு தொடர்பாக என்ன மாதிரியான உடன்படிக்கைகள் இடம் பெற்றுள்ளன என்பதைத் தெளிவுபடுத்திக் கொண்டபின் தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்வது சிறப்பு.
ராயல்டி
ஒரு புத்தகத்திற்கு இத்தனை சதவீதம் எனும் அடிப்படையில் பதிப்பாளர் அந்நூலின் ஆசிரியருக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுப்பார். உலக அரங்கில் ஒரு புத்தகத்திற்கு 8% முதல் 10% வரை ராயல்டி வழங்கப்படுகிறது. பெரும்பாலும் இவை காலாண்டு அட்டவணைப்படி மார்ச், ஜூன், செப்டம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் புத்தக விற்பனை கணக்கிடப்பட்டு அதன்படி தவணைமுறையில் வழங்கப்படும். ஆண்டுக்கு இருமுறை ராயல்டி கொடுக்கும் பதிப்பாளர்களும் உள்ளனர். இம்முறையிலான ராயல்டி தொகை முழுக்க முழுக்க சந்தையில் புத்தக விற்பனையை அடிப்படையாகக் கொண்டதாகும். புத்தக விற்பனையின் ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப எழுத்தாளர்கள் ராயல்டி தொகையைப் பெறுவார்கள். பெரும்பாலும் பிரபலமான எழுத்தாளர்கள் இம்முறையிலான ராயல்டியைத் தேர்ந்தெடுப்பது வழக்கம்.
தவிர, புதிய எழுத்தாளர்கள் தங்களுடைய தரமான நூல்களை வர்த்தகத்துறையில் முன்னனியில் இருக்கும் பதிப்பாளர்களை நாடி இம்முறையின்கீழ் தங்களுடைய புத்தகங்களை பதிப்பிப்பதன்மூலம் ஓரளவு நல்ல ராயல்டி தொகையை பெற முடியும். இம்முறையிலான ராயல்டியை செயல்படுத்தும் பதிப்பாளர்கள் தரமான புத்தகங்களை மட்டுமே தேர்ந்தெடுக்க முனைப்புக் காட்டுவார்கள். தரமான புத்தகங்களை நல்ல விளம்பரங்களின்மூலம் விற்பனை செய்து இப்பதிப்பாளர்கள் பிரபலமானவர்களாகவும் லாபகரமான வியாபாரிகளாகவும் இருப்பர். மேலும், இம்முறையின்கீழ் ஒவ்வொரு காலாண்டிலும் அல்லது அறையாண்டிலும் பதிப்பாளர்கள் நூல் விற்பனை அறிக்கையை எழுத்தாளர்களுக்கு அனுப்பி முறையான ராயல்டி வழங்கப்படுவதை உறுதிபடுத்துவார்கள்.
ராயல்டி கணக்கிடப்படும் முறை 1 | ||
ஒரு புத்தகத்தின் விலை |
: |
ம.ரி. 25.00 |
ராயல்டி விகிதம் |
: |
10% |
ஒரு புத்தகத்திற்கு கொடுக்கப்படும் ராயல்டி |
: |
ம.ரி. 2.50 |
ராயல்டி கணக்கிடப்படும் முறை 2 | ||
ஒரு புத்தகத்தின் விலை |
: |
ம.ரி. 25.00 |
(-) விளம்பரம், தபால் மற்றும் இதர செலவுகள் |
(-)ம.ரி. 5.00 |
|
கட்டுபடுத்தப்பட்ட விலை |
ம.ரி. 20.00 |
|
ராயல்டி விகிதம் |
: |
10% |
ஒரு புத்தகத்திற்கு கொடுக்கப்படும் ராயல்டி |
: |
ம.ரி. 2.00 |
முன்கட்டண முறையிலான ராயல்டி
இம்முறையின்கீழ், நூல் அச்சு வடிவில் வந்த பிறகு எழுத்தாளருக்கு ஒரு குறிப்பிட்ட தொகை கொடுக்கப்பட்டு, தொடந்து, புத்தக விற்பனையைக் கருத்தில் கொண்டு ம.ரி. xx/புத்தகம் (RMxx per book) எனும் அடிப்படையில் தொடர்ந்து ராயல்டி பணம் கொடுக்கப்படும். நிலையான கட்டணம் மற்றும் ராயல்டி ஆகிய இரண்டையும் உள்ளடக்கியதே இந்த முன்கட்டண முறையிலான ராயல்டியாகும். உதாரணமாக, அச்சிடப்பட்ட 2,000 புத்தகத்திலிருந்து ஏறக்குறைய1,000 புத்தகத்திற்கு ம.ரி. 4000த்தை முன்பணமாகக் கொடுத்து ராயல்டி தொகை ஒரு பிரதிக்கு ரி.ம. 2.00 என்று நிர்ணயிக்கப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். அப்படியென்றால் அவ்வெழுத்தாளன் முதல் 1,000 புத்தகத்திற்கான ராயல்டி தொகை ம.ரி. 4000த்தை பெற்றுக்கொள்வதோடு, தொடர்ந்து விற்கப்படும் 1,000 பிரதிகளுக்குப் புத்தகம் ஒன்றிற்கு ரி.ம 2.00ஐ ராயல்டியாக எழுத்தாளர் தொடர்ந்து பெறுவார். இது ஒவ்வொரு காலாண்டிலோ அல்லது அறையாண்டிலோ விற்பனை அறிக்கையுடன் இணைத்துக் கொடுக்கப்படும். இதனைத் தவிர்த்து, முன்கட்டணத்திற்கு பதிலாக குறிப்பிட்ட எண்ணிக்கையிலான புத்தகங்களை எழுத்தாளரிடம் கொடுத்துவிடும் பதிப்பாளர்களும் உண்டு. அதாவது ரி. ம. 2000க்கு ஈடாக 100 புத்தகங்கள் கொடுக்கப்படும். அப்புத்தகங்களை விற்று அதிலிருந்து கிடைக்கப்படும் பணம் முழுவதும் எழுத்தாளரின் உரிமையாகிறது.
ராயல்டி கணக்கிடப்படும் முறை 3 | ||
ஒரு புத்தகத்தின் விலை |
: |
ம.ரி. 20.00 |
மொத்த பிரதிகள் |
: |
(x) 2000 |
2000 புத்தகங்களின் மொத்த விலை |
: |
ம.ரி. 40,000.00 |
முன் கட்டணம் |
(இது முதல் ஆயிரம் புத்தகத்திற்கான 10% ராயல்டி)
:
ம.ரி. 4,000.00
தொடர் ஆயிரம் புத்தகத்திற்கான ராயல்டி
(இது புத்தக விற்பனையைப் பொறுத்து ஒவ்வொரு காலாண்டிலும் / அறையாண்டிலும் கொடுக்கப்படும்)
ம.ரி. 2.00
/
ஒருபுத்தகம்
இவற்றோடு மேலும், ராயல்டி கட்டண முறையில் கருத்தில் கொள்ள வேண்டிய சில அம்சங்களையும் பார்ப்போம்:
- எழுத்தாளர்கள் ராயல்டி பணம் பெறும் அதேவேளை 10 முதல் 25 பிரதி புத்தகங்களை இலவசமாகப் பெறமுடியும். இதனை விளம்பர நோக்கத்திற்காக எழுத்தாளர்கள் பயன்படுத்தலாம்; விற்பனையும் செய்யலாம்.
- அச்சு செலவு, தபால் செலவு, விநியோக செலவுகள் போன்று கழிவு விலை (discount), புத்தகக் கண்காட்சிகளுக்கான விலை போன்ற மாறுபட்ட விலையிலான புத்தகங்களுக்கான எவ்வகை ராயல்டி போன்றவையும் ராயல்டி ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
- ஒன்றுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் இணைந்து வெளியிட்ட புத்தகமாயின் அதன் முதல் எழுத்தாளருக்கே (first author) ராயல்டி பணம் வழங்கப்படும். இதர துணை எழுத்தாளர்களுக்குச் சேரவேண்டிய ராயல்டி பணத்தைப் பகிர்ந்தளிக்கும் பொறுப்பை எழுத்தாளர்களே மேற்கொள்ள வேண்டும். இதில் பதிப்பாளர்கள் தலையிடவோ, பொறுப்பேற்கவோ வேண்டிய அவசியமில்லை.
- எழுத்துப் பிரதிகளுடன் சம அளவில் படங்கள், ஓவியங்கள் (illustrations) உள்ள புத்தகங்களில் எழுத்தாளருடன் சேர்த்து ஓவியருக்கும் ராயல்டி வழங்கப்பட வேண்டும். முறையான ராயல்டி தொகையைப் பங்கிட்டுக் கொடுக்கும் பொறுப்பு பதிப்பு நிறுவனத்தினுடையதாகும்.
- நிறுவனங்களின் ஆண்டறிக்கைகள், உரைகள், மாநாட்டு ஆய்வடங்கல்கள் போன்றவற்றில் ஒருவரின் எழுத்துப்படிவங்கள் இடம்பெற்றிருந்தாலும் அதற்கு ராயல்டி வழங்கப்படமாட்டாது.
ராயல்டியின் தேவைகளும்
எழுத்தாளர்கள் அதிக அளவில் ராயல்டி தொடர்பாக அக்கறை காட்டாதிருப்பதற்கு சில காரணங்களை முன்வைக்கலாம்.
- பதிப்பாளர்கள் ‘பணமுடிப்பு, பரிசு’ எனும் பெயரில் ஒரு தொகையை எழுத்தாளர்களுக்குக் கொடுத்து விடுவது
- ராயல்டி தொடர்பான விழிப்புணர்வு இல்லாமை; தவறான புரிதல்
- பிறமொழி இலக்கியங்களைப்போல் தமிழ் நூல்கள் உலக அரங்கில் விற்பனை ஆகாது என்ற கணிப்பு
முதலில் ராயல்டி எனப்படுவது பதிப்பாளர்களோ அல்லது அரசியல்வாதிகளோ மனமுவந்து கொடுக்கும் தொகையில்லை என்பதை எழுத்தாளர்கள் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். அப்படியே கொடுக்கப்பட்டாலும் அவை நன்கொடையாக ஏற்றுக்கொள்ளலாமே அன்றி அதற்காக ராயல்டியை விட்டுக்கொடுப்பதும் அலட்சியப்படுத்துவதும் எவ்வகையிலும் அறிவார்ந்த செயலன்று. ராயல்டு என்பது எழுத்தாளனின் / படைப்பாளனின் அறிவுசார்ந்த உழைப்புக்கு ஞாயப்படி கிடைக்கவேண்டிய உரிமைப் பணமாகும். அது மிகுச்சிறிய தொகையாக இருந்தாலும் உரிமையுடன் பெற்றுக்கொள்வதே சிறப்பு.
தொடர்ந்து, 10% ராயல்டி தொகை ஓர் எழுத்தாளனை சுரண்டும், அவன் உழைப்பை அவமதிக்கும் கணக்கு முறையாக எண்ணிவிடக் கூடாது. தனக்கு எத்தனை விழுக்காடு ராயல்டி கிடைக்கிறது என்பதை தெளிவாக கேட்டுத் தெரிந்துகொள்ளும் அதேவேளை எத்தனை பிரதிகள் விற்பனையாகும் என்பதையும் தெரிந்துகொள்ள முனைப்புக்காட்ட வேண்டும். 50% ராயல்டி தருவதாக சொல்லிவிட்டு வெறும் 20 பிரதிகளை மட்டுமே விற்றுத் தந்தால் லாபம் பார்க்க முடியுமா? அதேவேளை, 10% ராயல்டியில் 1,000 பிரதிகளை விற்க முடிந்தால் ஏற்றுக் கொள்வதில் தவறேதுமில்லையே.
ஆக, ராயல்டியை பொறுத்தவரை சரியான பதிப்பாளரை தேர்ந்தெடுப்பதே ஒவ்வொரு எழுத்தாளனின் அறிவுசார்ந்த செயல்பாடாகும். அதை விடுத்து, எடுப்பார் கைப்பிள்ளையாக நமது உழைப்பை பிறர் உறிஞ்ச; பிறர் பெயர் சொல்லிக் கொள்ள விட்டுவிடுவது அறிவீனமே. சரி, எழுத்தாளனுக்கு 10% ராயல்டி என்றால் மீத 90% பணத்திற்கான கணக்கு என்ன என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டியுள்ளது. பதிப்பாளர்களுக்கான செலவுகளாக சிலவற்றை சீர்துக்கிப் பார்ப்பதன்வழி 90% பணம் எங்கு செல்கிறது என்பதை அறியலாம். பொதுவாக, பதிப்பாளர்கள் ஈடுகட்ட வேண்டிய செலவுகளாக அச்சு செலவு (தாள், அச்சு, பைண்டிங், முன் அட்டை வடிவமைப்பு), தபால் செலவு, போக்குவரத்து, விளம்பரம், பளுதடைந்த புத்தகங்களை மீட்டல், இடைத்தரகர்களுக்கான (கடைக்காரர்கள்) செலவு போன்றவற்றைக் கூறலாம். இவை அனைத்திற்கும் தனித்தனியாக குறிப்பிட்ட சதவீத பணத்தை ஒதுக்கிப் பார்த்தால் பதிப்பாளர்களும் புத்தக விற்பனையில் பெரிய லாபத்தைக் கண்டுவிட முடியாது என்பது புரியும்.
எனவே, எழுத்தாளர்கள் சரியான பதிப்பாளரைத் தேர்வு செய்து முறையான ராயல்டி ஒப்பந்தம் செய்வதை இனி நிச்சயம் சீர்தூக்கி பார்க்க வேண்டும். ராயல்டி தொகை ஒவ்வொரு பதிப்பாளருக்கும் மாறுபடலாம். இதுவரை பதிப்பித்த புத்தகங்களின் அச்சுத் தரம், விற்பனை உத்தி, ராயல்டி விகிதம் ஆகியவற்றை நன்கு ஆராய்ந்த பின்னர் பதிப்பாளரை நியமிப்பது சிறப்பாகும். ராயல்டி ஒப்பந்தம் கையெழுத்திட்ட பின்பு அதன் பிரதியை தவறாமல் பெற்றுக் கொள்வது ஒவ்வொரு படைப்பாளனின் கடமையாகும். அச்சுப் பிரதிகள் இணையங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டு மின்-புத்தகங்களாக மாறிக்கொண்டிருக்கும் இக்காலக்கட்டத்தில் ராயல்டியின் அவசியத்தை அலட்சியப்படுத்துவது எவ்வளவு அபத்தம் என்பதை எழுத்தாளர்கள் காலம் தாழ்த்தி உணர்வதின் பயனேதுமில்லை.
இவ்வளவு தகவல்கள? சர்ச்சைகள் வரும் போது இது போன்ற கட்டுரைகள்தான் அனைவரின் வாயையும் அடைக்கும். வாழ்த்துகள் விஜயா
Karuthukal mikavum serivaaga ullana. Puthiya takavalkalai arinthu konden. Ungal muyarchi melum thodaraddum
உங்கள் கட்டுரை எனக்கு பெரிய தெளிவைக் கொடுத்தது . தொடர்ந்து இது போன்ற வித்தியாசமான கட்டுரைகளை வழங்கி எங்களுக்கு வழிகாட்ட வேண்டும்.
ORU KALVIYALARUKKU TEVAYANA TAKAVAL. VUJAYA NEENGAL VIRIVURAIYALARA? TAMILIL ELUTA MUDIYAMAIKKU MANNIKAVUM.
நன்றி. வல்லினத்தை தேர்ந்தடுத்து வாசித்தமைக்கு மிக்க நன்றி. நூல் தொடர்பான வேறு விஷயங்களில் விளக்கம் தேவைப்படின் பகிரலாம். அதுகுறித்த தகவல்களை திரட்டி விளக்கபடுத்த முயற்சிப்பேன். நான் விறிவுரையாளர் இல்லை.
GREAT JOB
வல்லினத்தில் வந்துள்ள பல கட்டுரைகள் சர்ச்சைக்குறியதாக இருந்தாலும் இது போன்ற கட்டுரைகளை எங்கள் பாட வேளைகளில் கூட பயன்படுத்தும் தன்மையைக் கொடுக்கிறது. மிக முக்கியமான அனைவருக்கும் சேர வேண்டிய கருத்துகள்.
மிகவும் சிறப்பான, தேவையான பதிவு. நன்றி!
எழுத்தாளரின் வலியும், ராயல்டியின் பயனும் மற்றும் பல விசயங்களையும் மிக தெளிவாக புரிந்துள்ளது நன்றி.