மலேசிய தேசிய இலக்கியம் நான்கு மொழி இலக்கியங்களைக் கொண்டிருந்தாலும் ஒவ்வொரு மொழி இலக்கியமும் தனித்தே பயணித்துக் கொண்டிருக்கிறது. ஒரு மொழியின் இலக்கியம் மற்றொரு மொழியின் இலக்கியத்தோடு தொடர்பற்று இருக்கின்றது. தமிழ் இலக்கிய சமூகத்திற்கும் மலாய் இலக்கிய சமூகத்திற்கும் ஓரளவு தொடர்பு இருக்கிறதென்றாலும், சீன இலக்கியத்துடனான தொடர்பு மலேசிய தமிழ் இலக்கியவாதிகளுக்கு அறவே இல்லை என்றே சொல்லலாம். எனவே, சீன இலக்கியத்துடன் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ளும் வகையில், சீன எழுத்தாளர்களை அடையாளம் கண்டு அவர்களது படைப்புகளைத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளது. முதற்படியாக மலேசிய சீன இலக்கியத்தில் நன்கு அறிமுகமான எழுத்தாளரான கவிஞர் லூய் யோக் தோவுடனா நேர்காணல் இடம்பெறுகிறது.
திரு. லூய் 1969ஆம் ஆண்டு அக்டோபர் எட்டாம் தேதி, பினாங்கு மாநிலத்தில் ஜோர்ஜ் டவுனில் பிறந்தவர். சுங் லிங் மேற்பள்ளியில் உயர்நிலைப் படிப்பை முடித்த அவர், துங்கு அப்துல் ரஹ்மான் கல்லூரியில் பட்டப் படிப்பை மேற்கொண்டார். தகவல் தொழில்நுட்பத் துறை பட்டதாரி. தற்போது பெட்டாலிங் ஜெயாவில் குடும்பத்துடன் வசிக்கிறார். CIMB வங்கியில் தகவல் தொழில்நுட்ப நிர்வாகியாக பணிபுரியும் திரு லூய் இலக்கியத்தில் அதிக ஆர்வம் கொண்டவர்.
பதினைந்தாவது வயதில் எழுதத் தொடங்கிய லூய், கடந்த 20 ஆண்டு காலமாக இலக்கியத் துறையில் தீவிரமாக இயங்கிக்கொண்டிருக்கிறார். ஆரம்ப நிலைகளில் சீன நாளிதழ்கள் நடத்திய போட்டிகளில் இவரது கவிதைகள் ஆறுதல் நிலைப் பரிசுகளைப் பெற்றன. கல்லூரிக் கவிதைப் போட்டியில் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக இவரது கவிதைகள் முதல் பரிசு பெற்றன. அதனைத் தொடர்ந்து அவரது படைப்புகள் பத்திரிகைகளில் அதிகமாக வெளிவரத் தொடங்கின. அனைத்துலக அளவில் நடத்தப்பட்ட கவிதைப் போட்டிகளில் லூயின் கவிதைகள் பரிசுகளை வென்றிருக்கின்றன.
லூயின் முதல் கவிதைத் தொகுப்பு 1991ஆம் ஆண்டும், இரண்டாம் தொகுப்பு 2008ஆம் ஆண்டும், மூன்றாம் தொகுப்பு 2013ஆம் ஆண்டும் வெளிவந்தன.
நீங்கள் தொடர்ந்து பின்நவீனத்துவ கவிதைகளை எழுதுவதற்கான காரணம் என்ன?
லூய்: படிக்கும் காலத்தில் பாடல்களை மிகவும் விரும்பிக் கேட்பேன். பாடல்களின் வரிகளை மிகவும் கூர்ந்து கவனிப்பேன். எப்படி இவ்வளவு அழகாக பாடல்களை எழுதுகிறார்கள் எனப் பிரமித்துப்போவேன். அதன் தாக்கத்தில் கவிதை எழுதத் தொடங்கினேன். தொடர்ந்து கவிதைகளை வாசிக்கும்போது தைவானிய எழுத்தாளர்களின் கவிதை என்னை மிகவும் பாதித்தது. அப்போதைய சூழலில் தைவானில் பின்நவீனத்துவ கோட்பாடு அறிமுகமாயிருந்தது. மலேசியாவில் பின்நவீனத்துவ எழுத்துக்கள் மிகக் குறைவு. பின்நவீனத்துவம் எனக்கு நன்கு வசப்பட்டிருந்தது. பின்நவீனத்துவ கவிதைகள் மூலமாக எனது எண்ணங்களைக் கேள்வியாக வைக்கின்றேன்.
பின் நவீனத்துவம் கார்ல் மார்க்ஸ் சொன்ன உதிரி மனிதர்களான (பிச்சைகாரர்களின், பாலியல் தொழிலாளர்களின், ரௌடிகளின்) நியாங்களையும் பேசுகிறது. சீனத்தில் பின்நவீனத்துவ இலக்கியம் இது போன்ற விடயங்களைப் பேசுகிறாதா?
லூய்: நிச்சயமாக. சீன இலக்கியமும் உதிரி மனிதர்களையும் அவர்களது நியதிகளையும் பேசுகின்றது. ஒரே பொருளை, நாம் பார்க்கும் பார்வை வேறுபடுத்துகின்றது. வழக்கமாக நாவலில் அல்லது சிறுகதையில் பணக்காரன் தீயவனாகவும் ஏழை நல்லவனாகவும் சித்தரிக்கப்படுவான். பின் நவீனத்துவம் அப்படியல்ல. இந்தச் சமூகம் கட்டமைத்து வைத்திருக்கும் பிம்பங்களை உடைத்தெறிகின்றது.
மதம், சமயம், அரசியல் போன்ற அதிகார பீடங்களையெல்லாம் பின்நவீனத்துவம் கேள்வி எழுப்புகிறது. நமது நாட்டில் அதற்கான சுதந்திரம் இருப்பதாக நம்புகிறீர்களா?
லூய்: அதற்கான சுதந்திரம் இருப்பதாகவே கருதுகிறேன். குறிப்பாக கவிதை வழி மதம், சமயம், அரசியல் போன்ற அதிகார பீடங்களைப்பற்றி கேள்வி எழுப்ப முடிகிறது. சீன இலக்கியத்தில் பாமரர்களின் நியாயம் குறித்தும் அவர்கள் மீதான இனப் பாகுபாடு பற்றியும் பேச முடிகிறது. என்னுடைய கவிதைகளில் நான் அரசியலையும் அதனைச் சார்ந்த அதிகார பீடங்களைப் பற்றியும் எழுதுகிறேன்.
தமிழில் பெண்ணிய இலக்கியம் பெரிய அளவில் பேசப்படுகிறது. குறிப்பாக பெண் கவிஞர்கள் தங்கள் உடல் குறித்து வெளிப்படையாகப் பேசத்தொடங்கி பரவலான சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளனர். சீனப் பெண் இலக்கியவாதிகள் அவ்வாறான பாடுபொருளில் இயங்குகின்றனரா?
லூய்: மலேசிய சீன இலக்கியத்தில் பெண் இலக்கியவாதிகள் எண்ணிக்கைக் குறைவு. உடல் அரசியல் பற்றி ஓரிரு படைப்புகளில் வெளிவந்துள்ளது. எழுத்தாளர் லீ ச்சுச் சூ தனது கட்டுரைகளில் உடல் அரசியலைப் பற்றிப் பேசியிருக்கிறார்.
லெஸ்பியன், ஹோமோ போன்ற ஓரின உறவு முறைகள் தமிழ் இலக்கியத்தில் பேசப்படுகிறது. சீன இலக்கியம் இத்தகைய உறவுமுறைகள் குறித்துப் பேசுகிறதா?
லூய்: மூத்தவர்களிடமோ அல்லது பெற்றோர்களிடமோ இதைப் பற்றி பேச முடியாது. இம்மாதிரியான வாழ்க்கை முறை குறித்த அவர்களது பார்வை இன்னும் பக்குவம் பெறவில்லை. இவ்வாறான வாழ்க்கை முறை சமூகத்தில் இன்னும் அங்கீகரிக்கப்படாத நிலையில்தான் உள்ளது. இது தனி மனித சுதந்திரம் சார்ந்தது. சீன எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளில் ஹோமோவைப் பற்றி அதிகம் எழுதுகிறார்கள். பெரும்பாலும் ஆண் எழுத்தாளர்களே ஹோமோவைப் பற்றி எழுதுகிறார்கள். ஆனால் லெஸ்பியன் பற்றி யாரும் எழுதுவதில்லை. இதுவரை லெஸ்பியன் பற்றி எந்த எழுத்தும் வெளிவந்ததாகத் தெரியவில்லை.
சீன சமூகத்தின் அடிப்படையான பிரச்சினையாக எதைக் கருதுகிறீர்கள்? அது பற்றி சீன இலக்கியம் பேசுகிறதா?
லூய்: சீன சமூகம் அரசாங்கத்தின் இனப் பாகுபாட்டை (unequal treatment) அடிப்படைப் பிரச்சினையாக கருதுகிறது. சீன இலக்கியமும் அதைப் பிரதிபலிக்கின்றது. எழுத்தாளர்கள் இரு பிரிவினர்களாக உள்ளனர். முதற் பிரிவினர் அழகியலை மட்டுமே சார்ந்த எழுத்தாளர்கள். அவர்களது படைப்புகள் வாழ்க்கை முறை, இயற்கையைப் பற்றி மட்டுமே பேசும். அவர்கள் வெறும் அலங்கார எழுத்தாளர்கள். மற்றொரு பிரிவினர் அடிப்படை பிரச்சினைகளைப் பற்றி எழுதும் எழுத்தாளர்கள். அவர்கள் தங்கள் படைப்பில் அடிப்படை பிரச்சினைகளைக் கேள்விகளாக முன்வைக்கின்றனர்.
கடந்த தேர்தலில் சீனர்களிடம் இருந்து ஒட்டுமொத்தமான புறக்கணிப்புப் பாரிசானை நோக்கி எழுந்தது. இந்தப் புரட்சிக்குக் காரணியாக/ பின்புலமாக சீன எழுத்தாளர்கள் எவ்வாறு இயங்கினர்?
லூய்: ஆமாம், கடந்த தேர்தலில் சீனர்கள் பாரிசானைப் புறக்கணித்தனர். அரசாங்கத்தின் மீதான புறக்கணிப்பை சில எழுத்தாளர்கள் தங்களின் கதைகள், கவிதைகள் வழி வெளிப்படுத்தியுள்ளனர். ஓர் எழுத்தாளனாக நான் பெர்சே பேரணியில் பங்கேற்றேன். பேரணியில் கண்ணீர் புகை பாய்ச்சினார்கள். நான் எனது புறக்கணிப்பை கவிதை மூலமாக வெளிப்படுத்தினேன். பகாங் மாநிலத்தில் இயங்கும் லினாஸ் அரிய மண் தொழிற்சாலையைப் பற்றி சக எழுத்தாளர் ஒருவர் அங்குள்ள உண்மையான தகவல்களைத் திரட்டி ஒரு நாவல் எழுதியுள்ளார். சீன எழுத்தாளர்கள் நிச்சயமாக புரட்சிக்குக் காரணியாக உள்ளனர். அதில் ஐயம் ஏதுமில்லை.
பொதுவாக சீன எழுத்தாளர்கள் எவ்வாறு மலேசிய அரசியல் சூழலைப் பார்க்கின்றனர். சீன அரசியல்வாதிகளை நம்பி இலக்கியம் வளர்க்கும் சூழல் மலேசியாவில் உள்ளதா?
லூய்: (சத்தமாக சிரித்துவிட்டு) யாரும் யாரையும் சார்ந்து இருப்பதை விரும்புவதில்லை. நாங்கள் இலக்கியத்துக்குள் அரசியலைக் கொண்டுவர விரும்புவதில்லை. இதிலும் இருவகை எழுத்தாளர்கள் உண்டு. அரசியல்வாதிகளைச் சார்ந்திருக்கும் எழுத்தாளர்கள்; சாராதிருக்கும் எழுத்தாளர்கள். சில மூத்த எழுத்தாளர்கள் மட்டுமே அரசியல்வாதிகளைச் சார்ந்துள்ளனர். மூத்த எழுத்தாளர்கள் அரசியல்வாதிகளிடம் சுமூகமான உறவை வைத்துக்கொள்ள விரும்புகின்றனர். அவர்களுக்கு நிதியுதவி தேவைப்படுவதால் தங்களின் நிகழ்ச்சிகளுக்கு அரசியல்வாதிகளை அழைக்கின்றனர். இளம் எழுத்தாளர்களின் சிந்தனையும் போக்கும் வேறு. அவர்கள் அரசியலை விரும்புவதில்லை. குறிப்பாக இளம் எழுத்தாளர்கள் மசீச-வை எதிர்க்கின்றனர். தங்களுடைய இலக்கிய நடவடிக்கையில் அரசியல் தலையீட்டை நிராகரிக்கின்றனர்.
மலேசிய சீன இலக்கியத்தின் உச்சமாக எதைக் கருதுகிறீர்கள்?
லூய்: இந்தக் கேள்விக்கான பதில் சற்று சிரமமானது. மலேசிய சீன இலக்கியத்தில் ஆயிரக்கணக்கான படைப்புகள் உள்ளன. அவரவர் ரசனைக்கு ஏற்பவே இலக்கியப் படைப்புகளைக் கொண்டாடுகின்றனர். நான் ஒரு படைப்பைத் தேர்ந்தெடுத்து இதுதான் சிறந்த படைப்பு என்றால் இன்னொருவர் அதை மறுப்பார். இலக்கியத்தில் இது இயல்பு. ஆக, இக்கேள்விக்கான பதில் என் ரசனையைச் சார்ந்தது. எழுத்தாளர் லீ ச்சுச் சூ எழுதிய ‘யேக் பூ சாக்’ என்ற புத்தர் பற்றிய படைப்பு. அதை நான் மிகச் சிறந்த படைப்பாகக் கருதுகின்றேன். மேலும், தைவானில் விரிவுரையாளராக பணிபுரியும் எழுத்தாளர் குவாங் சிங் சூ எழுதிய “Zài dǎoyǔ” (தீவுக்குத் தீவு) எனும் படைப்பையும் சிறந்த படைப்பாகக் கருதுகின்றேன்.
மலேசிய தமிழ் எழுத்தாளர்கள் தமிழ் நாட்டு இலக்கியப் போக்கை ஒரு முன்மாதிரியாகக்கொண்டு செயல்படுகின்றனர். சீன இலக்கியம் அவ்வாறு எதை முன்மாதிரியாகக் கொண்டுள்ளது?
லூய்: மலேசிய சீன எழுத்தாளர்கள் 1970களின் தைவான் எழுத்தாளர்களைப் பின்பற்றி எழுதினர். தற்சமயம் தைவான், சீன நாட்டு இலக்கியங்களை முன்மாதிரியாகக்கொண்டு செயல்பட்டாலும் தங்களுக்கென்று ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியுள்ளனர். தங்களுக்கென்று தனி அடையாளம் இருப்பதையே மலேசிய சீன எழுத்தாளர்கள் பெரிதும் விரும்புகின்றனர்.
மலேசிய சீன இலக்கியம் தேசிய இலக்கியமாகக் கருதப்படுவதில்லை. தமிழ் இலக்கியமும் அவ்வாறுதான். இந்த நிலையை மாற்ற சீன இலக்கிய சங்கம் ஏதும் முயற்சிகள் செய்துள்ளதா?
லூய்: மலேசிய சீன எழுத்தாளர்கள் சங்கம் இருக்கின்றது. சங்கத்தில் இந்நிலையை மாற்றியமைப்பதற்கான சில ஆலோசனைகளை எழுத்தாளர்கள் முன்வைப்பதுண்டு. ஆனால் ஆலோசனைகள் கடைசி வரை ஆலோசனைகளாகவே இருந்து நீர்த்துவிடும். சங்கம் இதில் எந்தவித தொடர் நடவடிக்கையும் மேற்கொள்வதில்லை.
சீனர்களைப் பிரதிநிதிப்பதாகச் சொல்லும் இலக்கிய இயக்கங்கள் எவ்வாறு செயல்படுகின்றன?
லூய்: இலக்கிய இயக்கங்கள், எழுத்து ஆர்வத்தைத் தூண்ட சில போட்டி நிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள் போன்றவற்றை ஏற்பாடு செய்வதை மட்டுமே கடமையாகக் கொண்டிருக்கின்றன. கடந்த காலங்களில் பல புத்தகங்களை அச்சிட்டு விற்பனை செய்தன. இப்போது அதிலிருக்கும் சிரமத்தின் காரணமாக அந்நடவடிக்கையைக் கைவிட்டுவிட்டன.
கம்யூனிஸியத் தாக்கம் இன்னமும் சீனர்கள் மத்தியில் உண்டா? சீன இலக்கியங்களில் கம்யூனிஸியக் கோட்பாடுகள் பேசப்படுகிறதா?
லூய்: கம்யூனிஸியத் தாக்கம் சீனர்களிடமும் இல்லை. சீன எழுத்தாளர்களும் கம்யூனிஸக் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் உள்வாங்கவில்லை. ஆயினும் அதைப் பற்றி எழுதுவார்கள். குறிப்பாக கம்யூனிற ஆட்சிக் காலங்களில் மக்கள் எவ்வாறு சிரமப்பட்டனர் என்பதை எழுதுவார்கள்.
உண்மையில் சீனர்கள் யாரைத்தான் தங்கள் தலைவராக நினைக்கிறார்கள்? யாருடைய கட்டளையைப் பின்பற்றுகிறார்கள்? எப்படி சீனர்களின் முடிவு ஒரே மாதிரியான முடிவாக நாடு முழுவதும் அமைகிறது?
லூய்: சீனர்கள் தலைவரென்று யாரையும் பின்பற்றுவதில்லை. அரசியல் ரீதியில் பார்க்கும் போது, அவர்கள் தங்களின் புறக்கணிப்பை அரசாங்கத்திற்கும் அம்னோவுக்கும் எதிராக வெளிப்படுத்துகின்றனர். சீனர்கள் சுயமாக இயங்குவதையே விரும்புகின்றனர்.
தேசிய அமைப்புகளாக இல்லாமல் எவ்வாறு சீனர்களின் தீவிர இலக்கியம் வளர்க்கப்படுகிறது?
லூய்: சீன நாளிதழ்கள் மூலமாக இந்நாட்டில் இலக்கியம் வளர்க்கப்படுகின்றன. ஒவ்வொரு வாரமும் நாளிதழ்களில் இலக்கியப் பகுதிகள் பிரசுரிக்கப்படுகின்றன. எழுத்தாளர்களின் இலக்கியப் படைப்புகளை மக்களிடம் கொண்டு செல்ல அவை துணைப் புரிகின்றன. இக்கால இளைஞர்களை எழுத்துத்துறையில் ஊக்குவிப்பதற்கு நாளிதழ்கள் இலக்கியப் போட்டிகளை நடத்துகின்றன.
அனைத்துலக நிலையில் மலேசிய சீன இலக்கியம் எந்த நிலையில் உள்ளது?
லூய்: அனைத்துலக நிலையில் மலேசிய சீன இலக்கியம் தனித்துவத்துடன் மிளிர்கின்றது. தனக்கென ஓர் அடையாளத்தையும் பெற்றிருக்கின்றது. அண்டை நாடான சிங்கப்பூர் சீன இலக்கியத்தில் சற்று பின்தங்கியுள்ளது. தைவான், சீன நாட்டு இலக்கியங்களுக்கு அடுத்து மலேசிய சீன இலக்கியம் முக்கியமாக கருதப்படுகிறது.
சீன சமூகத்தின் ஆதரவு எழுத்தாளர்களுக்கு மனநிறைவை அளிக்கின்றதா?
லூய்: (சத்தமான சிரிப்புக்குப் பின்) சீன எழுத்தாளர்கள் தங்களுடைய படைப்புகளைப் புத்தக வடிவில் கொண்டு வந்து மக்களிடம் சேர்ப்பதில் பெரும் சிரமத்தை எதிர்நோக்குகின்றார்கள். சீனர்கள் புத்தகங்களை வாங்கி ஆதரவு கொடுப்பது என்பது மிகவும் குறைவு. எழுத்தாளர்கள் 1,000 பிரதிகளை அச்சிட்டு அதில் பாதியை விற்பதற்குள் பல சிரமங்களைக் கடக்க வேண்டியிருக்கிறது. நானும் அதேநிலையைதான் எதிர்நோக்குகிறேன். நான் ஒவ்வொரு கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் உரையாற்ற செல்லும்போது என் படைப்புகளை அவர்களிடம் அறிமுகம் செய்து விற்பனை செய்வேன். அப்படிச் செய்யும் பட்சத்தில் இருபது புத்தகங்கள் வரை விற்பனையாகும். என் புத்தகத்தை நானே அறிமுகம் செய்து அதனை விற்பனை செய்யும் விற்பனையாளனாகவும் இருக்கின்றேன்.
வல்லினத்தின் இந்த நேர்காணல் தன்னைத் தமிழ் இலக்கியம் மீது திரும்பிப் பார்க்க வைத்திருப்பதாக திரு. லூய் உற்சாகத்துடன் கூறினார். மலேசியாவில் நாம் எந்த மொழியில் எழுதினாலும் நாம் அனைவரும் இலக்கியப் படைப்பாளிகள். நமக்குள் ஓர் இலக்கியத் தொடர்பு இருக்க வேண்டும் என்பதை ஒப்புக்கொண்டார். இந்த மகத்தான காரியத்தை வல்லினம் அமைப்பு முன்னெடுத்திருப்பதை எண்ணி தாம் மகிழ்ச்சி கொள்வதாகவும் தெரிவித்தார். இந்தச் சந்திப்பு வெறும் இலக்கியம் சார்ந்த சந்திப்பாக இல்லாமல் தொடர்ந்து ஆக்கபூர்வமான இலக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ள இதை முதற்படியாகக் கருதுவதாகவும் தெரிவித்தார். மலேசிய சீன இலக்கியத்திற்கு, தமிழ் இலக்கியத்தை அறிமுகப்படுத்துவதே தமது அடுத்த இலக்கு என நம்பிக்கையை வார்த்தைகளாக மனதிற்குள் விதைத்தார் திரு. லூய்.
இது போன்ற முயற்சிகள்தான் தேவை. கங்காதுரை மூலம் என்னால் ஒரு சீன இலக்கியவாதியை அறிய முடிந்ததில் அதி மகிழ்ச்சி…
Neengal innum kuuda Sila keelvikalai keedirukalamo ena ninaikiren. Kurukku keelvikal illaye…