
பி. எம். மூர்த்தி அவர்களை நேர்காணல் செய்யும் வாய்ப்பு வல்லினம் வழியாக அமைந்தது. குறிப்பாக ஒரு பள்ளி ஆசிரியராக அவர் மேற்கொண்ட பயணங்களை அறிந்துகொள்வது ஓர் ஆசிரியரான எனக்கு ஊக்கமூட்டுவதாக இருந்தது.
உண்மையில் பி. எம். மூர்த்தி அவர்களின் முதல் பள்ளி அனுபவம் மிகவும் சுவாரசியமானது. அவர் 1984ஆம் ஆண்டு லாடாங் பீயோங் என்ற முதல் தமிழ்ப்பள்ளிக்குச் சென்ற அனுபவம் வியக்க வைத்தது. அவர் அப்பள்ளியில் பூர்வக்குடியினர் பிள்ளைகளுக்குப் பாடம் கற்பித்த போது மற்ற இன மாணவர்களின் பலம் பவீனத்தையும் தெரிந்து கொண்டு அவர்களிடையே கல்வியில் மாற்றத்தை ஏற்படுத்த முயன்றுள்ளார். மேலும், மாணவர்களின் தேவையை அறிந்து பள்ளியில் செயல்படுவதனின் வழி அவர்களின் வருகை, பாடத்தில் ஆர்வத்தையும் ஏற்படுத்த முயன்றார். அதுமட்டுமின்றி, மாணவர்களின் பெற்றோருடன் ஒரு சுமூகமான உறவை ஏற்படுத்திக் கொண்டு கடினமான பாதைகளை இலகுவாகக் கடந்துள்ளார்.
தொடர்ந்து, பி. எம். மூர்த்தி அவர்கள் 1986ஆம் ஆண்டு முதல் 1989ஆம் ஆண்டு வரை ரெஞ்சோக் தமிழ்ப்பள்ளியில் துணை தலைமையாசிரியராகப் பணியாற்றினர். அவர் 1987ஆம் ஆண்டிலேயே தமிழ்ப்பள்ளியில் கணினி தொழிற்நுட்பத்தைப் புகுத்துவதில் பெரும் பங்கை ஆற்றியுள்ளார் என்பதையும் அவர் ஓர் ஆசிரியராகக் கல்விச்சூழலில் நிகழ்த்திய மாற்றத்தின் வழி அறிந்துகொள்ள முடிந்தது. பள்ளிக்கூட தேவைக்கு மட்டுமல்லாது மாணவர்களுக்கும் கனிணியின்பால் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளார். தலைமையாசிரியரின் உதவியால் தமிழ் மென்பொருள் முரசுவைக் கணினியில் பொருத்தி மலேசியாவில் தமிழ்க்கணினியைப் பயன்படுத்திய முதல் ஆசிரியராகவும் திகழ்ந்தவர் பி. எம். மூர்த்தி.
பி. எம். மூர்த்தியை நேர்காணல் செய்தபோது அவரின் முன்னெடுப்புகள் ஒவ்வொரு பள்ளிகளிலும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டிருந்ததைக் காண முடிந்தது. அவர் ரெஞ்சோக் தமிழ்ப்பள்ளியில் பணியாற்றியபோது மாணவர்களுக்கான வானொலி நிலையம் ஒன்றை நிறுவி, அவர்களை அறிவிப்பாளராக்கியதுடன் மாணவர்களின் வளர்ச்சியை ஒலிபெருக்கியின் வழியாகத் தெரிவித்து அவர்களை ஊக்குவித்துள்ளார். மாணவர்களுக்குத் தன்னம்பிக்கையூட்டும் வகையில் தன்முனைப்பு பாடல்களை ஏற்பாடு செய்து காலையிலே ஒலிபரப்பவும் செய்துள்ளார். இதனால், பள்ளிக்குச் சோர்ந்து வரும் மாணவர்களைத் தத்துவ பாடல்களின் மூலம் உற்சாகப்படுத்தியுள்ளார்.
பி. எம். மூர்த்தியின் சேவை மாணவர்களிடையே மட்டும் இல்லாமல் பள்ளி வளர்ச்சியிலும் இருந்துள்ளது. அவர் போதனையை மட்டும் செய்யாமல் ரெஞ்சோக் தமிழ்ப்பள்ளி வளாகத்தையும் மாற்றி அமைத்துள்ளார். அப்பள்ளியில் பூச்செடிகளை நட்டுப் பள்ளி வளாகத்தை அலங்கரித்துள்ளார். ஓர் ஆசிரியராகப் பள்ளியின் சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதில் முனைப்புக் காட்ட வேண்டும் என்பதை நிகழ்த்திக் காட்டி அதை மாணவர்களுக்கும் கடத்தியுள்ளார்.

பி. எம். மூர்த்தி 1990ஆம் ஆண்டு முதல் 1995ஆம் ஆண்டு வரை எடின்பக் தமிழ்ப்பள்ளியில் நிர்வாகத்துணைத் தலைமையாசிரியராகப் பணியாற்றினார். எடின்பக் தமிழ்ப்பள்ளியில் பெஸ்தா ரியா விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்து அதன் வழி கிடைக்கப்பெற்ற பணத்தில் ஆசிரியர் அறை, நூலகம் போன்ற கட்டிடங்கள் எழுவதற்குப் பெரும் பங்கினையாற்றியுள்ளார். இப்பள்ளியில் பணியாற்றிய போது ‘முயல்’ இதழ் மூலம் மாணவர்களின் படைப்புகளை வெளியிட்டுள்ளார். மூர்த்தி அவர்கள் ஓவியங்கள் வரைவதிலும் வனப்பெழுத்து எழுதுவதிலும் கைத்தேர்ந்தவர். மாணவர்களுக்காக உருவாக்கப்பட்ட ‘முயல்’ இதழில் அவர் பல ஓவியங்களையும் வனப்பெழுத்துகளையும் வரைந்து மாணவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். மேலும், இவ்விதழின் வழி மாணவர்களின் ஆற்றலையும் மேம்படுத்தி மாணவர்களுக்கு வாசிப்புத் திறனில் ஆர்வத்தையும் மீட்டியுள்ளார். ஒர் ஆசிரியராக, மாணவர்களிடம் உள்ள கட்டுரை, கதை, கவிதை மற்றும் ஓவியம் போன்ற படைப்பாற்றல் திறனை வலுவாக்கியுள்ளார்.
இவரின் சேவை தமிழ்ப்பள்ளியிலேயே முடங்கி விடாமல் மலாய் பள்ளியிலும் தொடர்ந்துள்ளது. இவர் 1995ஆம் ஆண்டில் ஜாலான் ஹாங்துவா 2 மலாய் பள்ளியில் துணைதலைமையாசிரியராகப் பணியாற்றினார். தமிழ்ப்பள்ளிகளில் நிகழ்த்திய மாற்றங்களின் அடிப்படையிலும் அவரின் திறமையாலும் மலாய் பள்ளியில் பணியாற்றும் வாய்ப்பும் கிடைத்தது. அதுமட்டுமின்றி மலாய் சமூகத்தினரோடு இணைந்து பள்ளி பணிகளைச் சுமூகமாகச் செயலாற்றினார்.

ஓர் ஆசிரியராகவும் துணைதலைமையாசிரியராகவும் பல சேவைகளை ஆற்றிய பி.எம் மூர்த்தியின் தலைமைத்துவத்தில் அப்பர் தமிழ்ப்பள்ளி ஒரு சிறப்பிடம் பெற்றுள்ளது. அவர் 1996ஆம் ஆண்டு அப்பர் தமிழ்ப்பள்ளியில் முதன் முதலில் தலைமையாசிரியராகப் பணி உயர்வு பெற்றார். அவரின் முற்போக்கான செயலால் மூடுவிழா காணும் நிலையில் இருந்த தமிழ்ப்பள்ளி இன்னும் இயங்கிக் கொண்டிருக்கின்றது. அவர் அப்பர் பள்ளிக்காக பேருந்து வாங்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டார். அப்பள்ளி பேருந்துக்காக ‘பாட்ஷா’ திரைபடத்தை மண்டபத்தில் பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்தார். அதனைத் தொடர்ந்து புத்திரி என்ற சீனப்பெண்மணியின் ஆலோசனை படி சீனப்பள்ளிகளில் நன்கொடையையும் பெறுவதற்கு ஏற்பாடும் செய்தார். அதுமட்டுமின்றி, புக்கிட் பிந்தாங் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் லீ சோங் மொங் அவரிடம் உதவி நிதி கொரினார். அவ்வட்டார மக்களைச் சந்தித்து மாணவர்களை அப்பர் பள்ளிக்கு அனுப்புமாறும் கேட்டுக் கொண்டார். இவரின் அயராத உழைப்பால் தமிழ்ப்பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமானது. இவ்வாறு ஒரு தமிழ்ப்பள்ளியை வாழ வைத்த பெருமையும் இவரையே சாரும். ஒரு தூர நோக்கு சிந்தனையுடன் சேவையாற்றுவதன் வழி மாணவர்களுக்கும் பள்ளிக்கும் தன்னால் இயன்ற பங்கினையாற்றியுள்ளார்.
இவரின் தூர நோக்கு சிந்தனையை அப்பர் தமிழ்ப்பள்ளியில் 1996ஆம் ஆண்டில் ஆறாம் ஆண்டு மாணவர்களுக்குப் பட்டமளிப்பு விழாவை வழிநடத்தியதைப் பகிர்ந்துகொண்டபோது அவதானிக்க முடிந்தது. ஆம்! இவர் தலைமையாசிரியராகப் பணியாற்றிய போது நான்கு பள்ளியுடன் இணைந்து ஆறாம் ஆண்டு மாணவர்களுக்குப் பட்டமளிப்பு விழாவைப் பல்கலைகழகத்தில் நடைபெறுவதைப் போல் வழி நடத்தினார். மேலும், அம்மாணவர்கள் 2003ஆம் ஆண்டில் ஒரு சிறந்த பட்டதாரியாக வேண்டும் என்ற எண்ணத்தை 1996ஆம் ஆண்டிலேயே அவர்களின் ஆழ் மனதில் விதைத்துள்ளார்.

பி. எம். மூர்த்தி அப்பர் தமிழ்ப்பள்ளியில் நிகழ்த்திய மாற்றங்களைக் கருத்தில் கொண்டு அவருக்கு 1997ஆம் ஆண்டு ஜூலை மாதம் செந்தூல் தமிழ்ப்பள்ளிக்குத் தலைமையாசிரியராகப் பணி புரியும் மாற்றம் கிடைக்கப்பெற்றது. அவர் அப்பள்ளியின் மண்டப வளர்ச்சிக்காக சில ஏற்பாடுகளைச் செய்தார்.
பி. எம். மூர்த்தி அவர்கள் செயலாற்றிய ஒவ்வொரு பள்ளியிலும் ஏதாகினும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி விட்டு சென்றுள்ளார் என்பதை இந்த நேர்காணால் வழி அறிந்து கொண்டேன். ஒரு சராசரி ஆசிரியராக இல்லாமல் தன் தனித் திறமையால் தமிழ்ப்பள்ளியில் மாற்றத்தை ஏற்படுத்திய ஓர் ஆசானாக திகழ்ந்துள்ளார். இவரின் கடமை உணர்ச்சியையும் தான் ஓர் ஆசிரியர் என்ற எண்ணத்தையும் ஒவ்வொரு பள்ளியிலும் ஓர் அடையாளமாக விட்டுச் சென்றுள்ளார் என்பதைச் செவிமடுத்தபோது உள்ளம் எழுச்சி அடைந்தது. இவரை போல ஒரு பள்ளியில் பணியாற்றும்போது மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களின் வளர்ச்சியின்பால் அக்கறையும் ஆர்வத்தையும் புகட்ட வேண்டும் என முடிவெடுத்துக் கொண்டேன்.
