எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்களின் ‘வேல்’ சிறுகதைத் தொகுப்பு 2024-இல் வெளியிடப்பட்ட நூலாகும். இத்தொகுப்பில் மொத்தம் 13 சிறுகதைகள் அடங்கியுள்ளன. தொகுப்பில் உள்ள கதைகள் இதற்கு முன்னறே இதழ்களில் வெளியாகி அதன்பின் காலச்சுவடு பதிப்பகத்தின் வழி நூல் வடிவம் பெற்றுள்ளது. இந்தத் தொகுப்பில் உள்ள ஒன்பது கதைகள் ஒரு பொருள் (பாடுபொருள், பாத்திரங்கள், கதை சொல்லும் முறை) சார்ந்தவையாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. வேளாண் வாழ்வில் வளர்ப்பு விலங்குகளையும் நடுத்தர குடும்பத்து வளர்ப்பு விலங்குகளையும் மையமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளன.
அடிப்படையில் வேளாண் குடும்பத்திலிருந்து வந்துள்ள எழுத்தாளரின் வாழ்க்கைக்கு மிக நெருக்கமான நாய், பூனை இவைகளைக் கொண்டே கதைகள் உருவாக்கப்பட்டுள்ளன. வேளாண்மைக்கு முற்றிலும் மற்றொரு முகமாக இருக்கின்ற இப்போதைய நவீன வாழ்க்கை முறையிலும் வளர்ப்பு விலங்குகள் முந்தைய காலத்தைக் காட்டிலும் மனிதர்களுக்கு இன்னும் நெருக்கமான உறவில் பிணைத்துக் கொண்டிருப்பதை, மனிதர்களின் தனிமை உணர்வை மெய்ப்பிப்பதாகவும் எழுத்தாளர் நூலின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். மேலும் வளர்ப்பு விலங்குகளால் குடும்ப உறவுகளில் ஏற்படும் சிக்கல்கள், மாற்றங்கள் என நுட்பமாகப் புரிந்து கொள்வதற்கு வளர்ப்பு விலங்குகளைவிட ஒரு மனிதர் மற்றொரு மனிதருக்கு மிக அன்னியமாகி வருகின்ற சூழலையும் எழுத்தாளர் இந்தச் சிறுகதைத் தொகுப்பில் சொல்ல முனைந்திருக்கிறார்.

எழுத்தாளர் பெருமாள் முருகன் கோவிட் தொற்று பின்னணியில் ‘மியாடீ’ என்றொரு கதை எழுத அதனிலிருந்து கிளைத்து இன்னும் எட்டு கதைகளை ஒற்றைப் பாடுபொருளில் எழுதியிருக்கிறார் ; அதிலிருந்து வேறுபட்டவையாக நான்கு சிறுகதைகள் இத்தொகுப்பின் இறுதி கதைகளாக இருக்கின்றன.
முதல் கதையான ‘டைகர்’-இல் விவசாயக் கூலித்தொழிலாளியாக இருக்கின்ற மயிலான் குடிபோதைக்குப் பித்தாகி அதிலிருந்து மீள முடியாமல் இரு மனநிலையில் தவிப்பவராக இருக்கிறார். விவசாயக் கூலி வேலைகளைச் செய்து மனைவி, இரு மகள்களென மிக ஏழ்மையான நிலையில் வாழ்கிறார். இந்த ஏழ்மையிலும் இரண்டாவது மகள் ‘இனியா’ புதருக்குள் யாரோ வீசிவிட்ட பிறந்து கண்கூட திறக்காத மூன்று குட்டி நாய்களில் ஒன்றை முதலில் தூக்கி வருகிறாள். பொதுவாகவே, நமக்குள் இருக்கின்ற கருணையையும் அன்பையும் பிறிதொரு உயிர் மீது செலுத்துவதற்கு ஒரு தயக்கம் இருந்து கொண்டே இருக்கிறது. அதற்கான நம்பிக்கை முதலில் நம் மீது நமக்கே வர வேண்டும். ‘இனியா’ அந்த நம்பிக்கையை முதல் ஆளாக ஒரு குட்டிநாயைத் தூக்கி மற்ற நண்பர்களுக்கு அந்தத் துணிச்சலைக் கொடுக்கிறாள். ஏழ்மையான சூழலிலும் தங்களுக்கு எந்த வகையிலும் பணப்பெறுமதியற்ற ஒரு நாயை வளர்ப்பதென்பது பொருள்வயத்திற்கு அப்பால் தங்களுடைய வாழ்க்கைக்குப் புத்துணர்வுக் கொடுக்கக்கூடிய தன்மையை ஒரு நாயிடம் கண்டு கொள்வதை மயிலான் குடும்பத்தில் பார்க்க முடிகிறது. இயல்பிலேயே மிருகத்தன்மை கொண்ட நாய் மெல்ல மெல்ல மனிதர்களின் வாழ்க்கைக்குள் நின்று மனித இயல்புகளுக்குப் பழகி அதற்குள் தன்னையும் ஒரு ஆளாகப் பொருத்திக் கொள்கின்ற பாவனைகளை ‘டைகர்’ தொடர்ந்து காட்டிக் கொண்டே இருக்கிறது.
அதிக குடிபோதையில் வீட்டிற்கு வருகின்ற மயிலான் தன் மனைவியைக் கடுமையான வார்த்தைகளால் பழித்து அடிப்பதோடு தடுக்க வந்த பிள்ளைகளையும் விரட்டுகிறான். மனைவி தன் குழந்தைகளுடன் வெளியேறி சிற்றப்பா வீட்டிற்குச் செல்கிறார். இப்படியான பதட்டமான சூழலை ‘டைகர்’ மிக கூர்மையாகப் பகுத்தறிந்து செயல்படுகின்ற மனித உணர்வைக் காட்டும் வகையில் ஒவ்வொன்றாக நிகழ்த்திக் கொண்டே இருக்கிறது. முதலாவதாக மயிலான் தனியாக வீட்டில் குடிபோதையில் இருக்கும்போது இரண்டு நாட்களுக்குப் பிறகு அவன் வந்து பார்க்கும் வரையில் பசியால் ஒரு குரைப்புகூட கொடுக்காமல் மெளனமாக இருப்பதும் அவனாகவே தெளிந்து வந்து உணவு கொடுக்கும் வரையில் காத்திருந்து உணவு பெற்று கொள்வதும்; தனக்கு இந்த நாய் மாதிரிகூட சுயக்கட்டுப்பாடோடு இருக்க முடியவில்லை என மயிலானே உணர்ந்து நொந்து போகிற மனநிலைக்கு ‘டைகர்’ ஆட்படுத்துவது தெரிகிறது. மனிதர் போல சிந்திக்க முடியாததலேயே மிருகமாகப் பார்க்கப்படுகிற நாய், எல்லாம் தெரிந்தும் ஒழுக்கமற்று மிருக மனநிலையோடு வாழ்கிற மயிலானைச் சிறு சிறு செயல்களால் திருத்தி நல்வழிப்படுத்துவதைக் கதையின் இறுதியில் பேரழுகை போல ஊளைச்சத்தம் விட்டு டாஸ்மாக் பக்கம் போனவனைத் திரும்ப தன் பக்கம் அழைத்து இனி எப்போதுமே மயிலான் குடிக்கபோவதில்லையென மயிலான் வாழ்க்கைக்கு வழிக்காட்டுதுவது போன்று அவனுக்கு முன் ‘டைகர்’ ஓடினான். இப்படியாகக் கதை முடியும்போது வாழ்க்கை பூரணம் பெற்றுவிட்டதாகப் படுகின்றது.
இரண்டாவது கதை ‘கருப்பி என்கிற பாப்ஸ்’. வேளாண்மை நிலத்தில் பிறந்து வளர்ந்து அங்கேயே வேலையைச் செய்கிற இளைஞர்கள் இருவர்களுக்கும் இடையில் வளர்ப்பு விலங்குகள் மேல் இருக்கின்ற முற்றிலும் முரணான மன உணர்வைக் கதை காட்டுகிறது. வீட்டில் வளர்த்த க்ளூஸ் என்ற பூனை காணாமல் போனப்பின் ஒரு வாரத்திற்குச் சாப்பிட முடியாமல் தவிக்கும் கதிர்வேலுவும் மனைவி ஆசையாக வளர்த்த பூனையை நன்றாகப் பார்த்துக் கொள்கின்ற தெரிந்தவர்களிடம் கொடுத்து விட்டதாகச் சொல்லி நடுக்காட்டில் தன்னந்தனியாக விட்டுச் சென்ற தங்கராசும் என வெவ்வேறு முனையில் நின்று வளர்ப்பு விலங்குகளைப் பார்க்கின்ற பாவத்தை அவதானிக்க முடிகின்றது. பொருள் அடிப்படையில் எதையுமே ஈட்டித்தர முடியாத வளர்ப்பு விலங்காக இருக்கும் பூனையான ‘பாப்ஸ்’-க்குத் தங்கராசு எந்த வகையிலும் முக்கியத்துவம் கொடுப்பது பயனற்றதாக நினைப்பதோடு அதை அலட்சியமாகவும் கையாள்கிறான். தங்களின் வீட்டைத் தேடி வந்த கருப்பியைக் கதிர்வேல் அரவணைப்பதும் அது பெண் பூனை என்று தெரிந்தப் பிறகு அம்மாவுடன் சண்டையிட்டுக் கருப்பியை வீட்டுடன் வைத்து கொள்கிறான். கருப்பியுடன் கதிர்வேல் காட்டும் தொடுதல் அதற்கு ஈடாகக் கருப்பியும் கதிர்வேலுவின் தோள், தலை என உடல் அங்கங்களையும் தொட்டு தன் ஆனந்தத்தை வெளிக்காட்டுவதாய் தோன்றுகிறது.
ஒரு தளத்தில் தங்கராசு வளர்ப்பு விலங்குகளைப் பணப் பெறுமதியற்ற விலங்குகளாக விலக்கி வைப்பது போலவே அதன் இன்னொரு தளத்தில் கதிர்வேலுவின் அம்மா வளர்ப்பு விலங்குகளில் ஆண், பெண் எனப் பாகுபாடு வைத்து பெண் வளர்ப்பு விலங்குகளை முற்றிலுமாக விலக்கும் மனநிலை மற்றொரு வகையான வெறுப்பைக் காட்டுவதாகப்படுகிறது. தங்கராசுவின் மனைவி பூரணா கருப்பியான ‘பாப்ஸ்’-ஐ தன்னுடைய குழந்தையைப் போல உறவு வைத்து அன்பு காட்டுவதும் அவள் வந்து அழைத்ததும் தன் தாயே வந்து அழைத்தது போல கருப்பி நொடிப்பொதுதில் தாவிப் பாய்ந்து நெருக்கமாக ஒட்டிக் கொள்வது, மனித உறவைச் சமன்செய்யக்கூடிய அளவுக்கு இருப்பதை உணர முடிகிறது. பூரணா கருப்பிக்காகத் தன் கணவனைக் கோபித்துக் கடிந்து பேசுவதோடு கணவனை நிற்கதியாய் விட்டுவிட்டு வண்டியை எடுத்துச் செல்வது, அன்பு மனிதர் விலங்கு என்ற பேதமையைக் கடந்து பூரணாவிடம் வேர் பதிந்திருப்பதைக் காட்டுகிறது. இந்தக் கதையில் பூனை மீது அதீத அன்பு வைத்திருக்கின்ற பூரணாவுக்குப் பூனையைக் கண்டாலே ஒவ்வாமையை அடைகிற தங்கராசு கணவனாகக் கிடைப்பதும் பூனைகளைத் தனக்கு உற்றத்துணையாகப் பாவித்து அதனைக் கொஞ்சும் கதிர்வேலுவுக்கு இன்னும் திருமணமாகாமல் இருப்பதும் அவன் அம்மா கருப்பியையே கதிர்வேலுவுக்கு திருமணமாவதற்கான அறிகுறியாக நினைத்துக் கொஞ்சுவதும் என வளர்ப்பு விலங்கு குடும்ப உறவுகளில் சிக்கல்களுக்குக் காரணியாகவும் வெறுமையின் வெற்றிடத்தில் நிறப்பியாகவும் மனிதர்களின் சுபாவத்திற்கேற்ப பரிணமிப்பதைக் கதையில் காண முடிகிறது.
மூன்றாவது கதை ‘மணி’. மணி என்ற இரண்டு வயது விளையாட்டுத்தனமான நாய்க்குள் இருக்கின்ற குழந்தைக்கான சுபாவத்தோடு கதை தொடங்குகிறது. மாட்டுக்கு மூக்கணாங்கயிறு மாற்றுவதற்காக வைத்திருந்த ‘செலொடேப்பு’ காணாமல் போக மந்திரியப்பனும் அழகரும் துடிப்போடு அங்குமிங்கும் ஓடி சிறு சிறு குறும்புதனங்களைச் செய்கின்ற நாயைப் பழிச்சுமத்துங்ககின்றனர். பழனிச்சாமி முதலில் மணிக்காக வாதிப்பதும், பின் சூழல் இன்னும் இறுக்கமாகும்போது நாயை அவரே வைது விரட்ட, நாய் காட்டில் ஓடிப் போகிறது. இந்தக் கதையில் ஒரு நாய் மனிதர்கள் பேசுவதை மட்டுமல்லாது அவர்களின் உடல்மொழியையும் கூர்ந்து கவனித்துப் புரிந்து கொள்கின்ற ஆற்றலோடு உள்வாங்கிக் கொண்டு மனிதர்களைப் போலவே எதிர்வினையாற்றவும் பரிணமித்துக் கொண்டிருப்பதைக் காண முடிகிறது. ஒரு சிறுவனுக்கான மனோபாவத்தைக் கொண்டிருப்பது போல் மணி நடுக்காட்டில் ஓடிப்போய் விடுவதும் பழனிச்சாமி அருகில் வந்து அழைக்கும்போது அவனிடம் கோபித்துக் கொண்டு எதிர்ப்பக்கம் பார்த்து திரும்பி படுத்துக் கொள்வதும் நாயிற்குப் பதிலாக ஒரு சிறு பையனை அந்த இடத்தில் பொருத்திப் பார்ப்பதாகப்படுகிறது. மனிதர்கள் சொல்கின்ற சொற்களுக்கு ஒரு மிருகம் என்று சொல்லப்படக்கூடிய நாயிடம் உணர்ச்சியவயப்படுகின்ற குணத்தைப் பார்க்கும்போது ஒரு நாயாக நாம் அதைப் புரிந்து கொள்ள நம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டிய காலத்தில் இருப்பதை உணர முடிகின்றது. அதோடு தவறே செய்யாத விலங்கைக் கண்டிக்க எல்லா வகையிலும் முயற்சி செய்கிற பழனிச்சாமி, அதைப் பற்றின உண்மை நிலவரம் தெரியவரும்போது தவறு செய்துவிட்டு நாய்மேல் பழிபோட்ட மந்திரியப்பனையும் அழகரையும் ஒன்றுமே சொல்லாமல் மெளனமாக அந்தச் சூழலைக் கடந்து செல்வது நம்முடைய நியாயங்களைக் கேள்விக்குறியாக்குகிறது.
நான்காவது கதை ‘பொட்டி’. வளர்ப்பு விலங்குகள் வீட்டிலோ, நகரத்தின் சாலைகளிலோ எளிமையாக உணவு கிடைத்துவிடுகின்ற வாய்ப்பு இருந்துவிட்டாலும் பசிக்காக வேட்டையாடி உண்ணும் குணம் பல ஆயிரம் ஆண்டுகளாக பதப்படுத்தி வைத்தது போல் அவைகளுக்குள் இருந்து கொண்டே இருக்கின்றனது. தனியாக ஒரு நாய் இருப்பதைவிட நாய்கள் கூட்டமாக ஓரிடத்தில் இருக்கும்போது தன்னிச்சையான வீரியம் கொண்டுவிடும் இயல்பு இந்தக் கதையில் பார்க்க முடிகிறது. அதுவும் குட்டிப்போட்டு இருக்கின்ற அம்மா நாய்க்கு இயல்பாகவே தன் குட்டிகளைத் தற்காக்க வேண்டிய இயல்பு தன்னில் இருக்கும் மிருகத்தன்மையை ஒரு படி மேல் சென்று வெறிக்கொள்கிறது. சாலை இருட்டில் கூட்டமாக மற்ற நாய்கள் எல்லாம் குரைத்து பயமுறுத்தும்போது அம்மா நாய் முருகேசுவின் காலைக் கவ்வுகிறது. நாய்களைவிட மனிதன் அவனைத் தற்காத்துக் கொள்ள அவனுக்குள் இருக்கின்ற மிருகத்தன்மையை வெளிக்காட்டுவதற்குப் பயப்படுவதும் இல்லை. முருகேசு நாய்களிடம் எதிர்வினையாற்றுகின்ற செயல் கூட்டமாக இருக்கின்ற நாய்களையே விஞ்சியிருப்பதைப் பார்க்க முடிகிறது. நாய்களைப் பயமுறுத்தி விரட்டுவதற்காக முருகேசன் தனக்குள் ஆழ்ந்திருக்கின்ற கொடூரமான மிருக வடிவத்தைத் தன் முகத்திலும் உடலிலும் பொருத்தி ஆங்காரமாய் ஒரு பாவனையை நிகழ்த்துகிறார். அதில் யானை, புலி, பாம்பு என அனைத்தும் கலந்த மிருகம் பீறிட்டு வருவது போன்ற தோற்றமும் ஒலியும் மற்ற நாய்களைப் பயமுறுத்தி ஓடச் செய்கிறது. ஒவ்வொரு விலங்கிடமும் மனிதர்கள் உட்பட ஆபத்திலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்வது ஆதியிச்சையாக இருப்பதால் அததன் வீரியத்திற்கேற்ப அந்தத் தருணத்தில் தங்களை வலிமைப்பெறச் செய்யும் மிருகத்தன்மையை உயிர்ப்பாக்கின்றன. முதலில் ஒரு பெண் நாயை இருட்டில் பார்த்து கொஞ்சலாகப் பேசிய முருகேசுவும் இறுதியாக அதே நாயை உணவில் விஷம் வைத்துக் கொல்ல வேண்டும் என்ற வெறிகொண்டவரும் ஒருவர்தானா என்ற சந்தேகம் மனிதர்கள் மேல் நெறிமுறைகள் என்ற முலாம்பூசி அவர்களின் மிருகக்குணங்களை அமைதிப்படுத்தி வைத்திருப்பதை உணர முடிகிறது.
ஐந்தாவது கதை ‘வேல்’. பணி ஓய்வு பெறுகின்ற பேராசிரியர் குமராசுவுக்கு நாய்க்குட்டி பரிசாகக் கிடைக்கிறது. ‘வேல்’ என்று பெயர் சூட்டி அதை பணிஓய்வு பெற்றதிலிருந்து பன்னிரெண்டு ஆண்டுகள் ஒரு குழந்தையை வளர்ப்பது போல ஒவ்வொன்றையும் மிகக் கவனமாகப் பார்த்துச் செய்கிறார். அதன் குழந்தைப்பருவம், இளமைப்பருவம், நடுத்தரப்பருவம், முதுமைப்பருவம் என எல்லாவற்றையும் கண்முன் பார்த்து இரசித்து அதனுடைய மரணத்தின் துயரக்கனத்தையும் மனதுக்குள் ஏந்தி வாழ்கிறார். குமராசு தன்னுடைய இளமைக்காலத்தில் இரசிக்கவிட்டதை ‘வேல்’-இன் துள்ளலான இளமைப்பருவத்தில் இரசித்து அனுபவிப்பதாக இருந்தது. வேலின் மரணத்திலிருந்து ஒரு வாரத்தில் மெதுவாக மீண்டு வந்தாலும் அதன் பாரத்தைச் சொந்த ஊருக்கும் சுமந்து வருவதும் அதைப் பற்றி ஓய்வில்லாமல் ஊர் உறவுக்காரர்களிடம் பேசிப்பேசி ஒரு தருணத்தில் நண்பன் முத்தரசுவுடன் நடைப்பயணத்தில் முற்றிலும் ‘வேல்’-இன் நினைவுத்துயரத்திலிருந்து முற்றிலுமாக விடுப்படும் பாவத்தில் வேகமாகக் கைவீசி விடைக்கொடுக்கிறார். ‘வேல்’-இன் இடத்தில் மற்றொரு நாயை நிறப்ப முடியாது என்ற மனநிலைக்கு வந்து புதிய குட்டிநாயை வளர்க்க வேண்டாம் என்ற முடிவையும் எடுக்கிறார்.
இப்படியாக மனிதர்களுக்கும் வளர்ப்பு விலங்குகளுக்கும் இணைக்கின்ற உறவுப்பாலத்தில் வளர்ப்பு விலங்குகளுக்கு மனித உணர்வுகளை ஏற்றுவதும் வளர்ப்பு விலங்குகள் மனிதர்களின் வாழ்க்கையில் மற்றொரு மனிதரைவிட மிக முக்கியமான இடத்தைப் பெற்று விடுவதும் அதனால் குடும்ப உறவுச்சிக்கல் எனப் பல்வேறு அடுக்குகள் நம்முடைய வாழ்க்கையைப் பல கோணங்களில் வளர்ப்பு விலங்குகளோடு பார்க்கின்ற வாய்ப்பைப் பெருமாள் முருகன் இந்நூலில் படைத்திருக்கிறார். இவருடைய நடை வேளாண் நிலத்தின் உயிர்ப்போடு எளிமையாக வாசகரின் கற்பனைக்கும் அறிவுத்திறனுக்கும் உரமாக இருப்பதை உணர முடிந்தது.
