பெருஞ்செயல்களின் அளிப்பும் ஏற்பும்

நமது வாழ்க்கை நமது செயல்பாடுகளால்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. நல்லதும் அல்லதும் விளைவது நமது செயல்பாடுகளால்தான். இன்று நாம் நம் வாழ்க்கையில் துய்கின்ற பல்வேறான படைப்புகள் அனைத்தும் எங்கோ எப்போதோ யாரோ ஒருவரால் அல்லது கூட்டுச் செயல்களால் உருவாக்கப்பட்டவை என்பதுதான் உண்மை. நல்ல செயல்களால் மனித வாழ்க்கையில் அகம் புறம் என்ற இரு நிலைகளிலும் வளர்ச்சியியும் மேன்மையும் தொடர்ந்து பெருகி வருகின்றன. சிறுமை செயல்களால் குற்றமும் குறைகளும் வழக்காகிப் போகின்றன. பொதுநலம் கருதி செயல்களாற்றும்போது அச்செயல்கள் செய்தவருக்கும் பிறருக்கும் பயன் தருகின்றன. சுயநலத்தை மையமாகக் கொண்ட செயல்கள் தனிமனித வளர்ச்சிக்கும் தன்னைச் சுற்றியுள்ள சிறு குழுவிற்கும் மட்டுமே பயனளிக்கின்றன. இப்படி எவ்வகை செயல்களாக இருந்தாலும் அச்செயலில் உறுதியும் தளராத தீவிரமும் கொள்கையும் கொண்டு செயலாற்றும்போதுதான் அச்செயல்கள் பெருஞ்செயல்களாகின்றன.

பெருஞ்செயலாற்றுவதற்கு எது தேவை என்று எண்ணிப் பார்க்கும்போது ஒரு செயல் குறித்த மிகத் தீவிர முன்னெடுப்புகள் தேவை. இந்தத் தீவிர முன்னெடுப்புகள் பொதுநலம் கருதி அமையும்போது சவால்களும் தடைகளும் அதிகமாகின்றன. இதில் சுய இழப்புகளும் பொதுப் பார்வையின் விமர்சனங்களும் நிகழ்வதுண்டு. இவை இரண்டையும் பொருட்படுத்தாது ஒரு தீவிரத்தனத்தோடு செயலை அளித்து இலக்கை அடைய வேண்டும். நம் செயலின் அளிப்பு இலக்கிடப்பட்ட ஏற்பை அடையும்போதுதான் பெருஞ்செயல்கள் பலனடைகின்றன. இவ்வாறு மலேசிய நாட்டில் இடைநிலைப்பள்ளி தமிழ் இலக்கியப் பாட வளர்ச்சிக்குப் பெருஞ்செயலாற்றியவர்தான் பி. எம். மூர்த்தி.

பி.எம். மூர்த்தியின் பெருஞ்செயல்களின் அளிப்பும் ஏற்பும் இன்று இலக்கியப் பாடம் தொடர்ந்து மலேசியக் கல்வித் திட்டத்தில் நிலைத்திருப்பதற்குப் பெரும் காரணமாக அமைந்துள்ளது என்றால் அது மிகை இல்லை.

அரை நூற்றாண்டுக்கும் மேலாக தமிழ் இலக்கியப் பாடம் மலேசியக் கல்விச் சூழலில் இயங்கி வருகிறது. ஒரு பாடம் கல்வி அமைச்சில் தேர்வுப் பாடமாக அல்லது கற்றல் கற்பித்தலுக்கு உட்பட்டிருக்க வேண்டுமென்றால் அப்பாடத்தை எடுத்து படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையைப் பொருத்துதான் நிகழ்கிறது. நாடு தழுவிய நிலையில் அப்பாடத்தை எடுத்துப் படிக்கும் மாணவர்கள் குறைந்த பட்சம் குறிப்பிட்ட ஓர் எண்ணிக்கையைக் கொண்டிருக்க வேண்டும். இல்லையென்றால் அப்பாடமானது கல்வி அமைச்சின் பாடப் பட்டியலிலிருந்து நீக்கப்படும்.

1990ஆம் ஆண்டு மத்தியில் தமிழ் இலக்கியப் பாடத்தை எஸ்.பி.எம் தேர்வுக்கு எடுத்த மாணவர்களின் எண்ணிக்கை ஏறக்குறைய முன்னூறாக மட்டுமே இருந்தது. இவ்வெண்ணிக்கை மேலும் குறைந்தால் கல்வி அமைச்சின் தேர்வுப் பாட பட்டியலிலிருந்து நீக்கப்படும் நிலையிலிருந்தது. அந்தக் காலக் கட்டத்தில்தான் பி.எம்.மூர்த்தி அவர்கள் கல்வி அமைச்சின் தேர்வு வாரியத்தில் தமிழ்மொழி அதிகாரியாகப் பணிக்கு அமர்த்தப்பட்டார்.  இயல்பாகவே வாசிப்பில் ஆர்வம் கொண்ட மூர்த்தி அவர்களுக்குப் படைப்பிலக்கியத்தின் மீதும் ஈடுபாடு இருந்தது. இலக்கியத்தின்வழி சமூக மாற்றங்கள் உருவாக வேண்டும் என்ற எண்ணம் கொண்டவராகவும் இருந்தார். இதன் விளைவாகத்தான் தன் பணி எல்லைக்குட்பட்ட நிலையில் அமைந்த அனைத்து சாதகங்களையும் பயன்படுத்தி இலக்கியப் பாடம் மற்றும் தொடக்க மற்றும் இடைநிலைப்பள்ளி படைப்பிலக்கியக் கூறுகளின் எல்லைகளை விரிவுப்படுத்தத் தொடங்கினார்.

வெறும் முன்னூறாக இருந்த தமிழ் இலக்கியப் பாடம் எடுக்கும் மாணவர்களின்  எண்ணிக்கையை மூவாயிரமாக மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தை ஆழமாகத் தன்னுள் விதைத்துக் கொண்டு பணிச் சூழல்களுக்கிடையே இது தொடர்பான களப்பணிகளும் ஆற்றத் தொடங்கினார். பணி நிமித்தமாக தமிழ்ப்பள்ளி மற்றும் இடைநிலைப்பள்ளி ஆசிரியர்களைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த தருணங்களிலெல்லாம் இலக்கியப் பாடம் தொடர்பான விழிப்புணர்வை விதைக்கத் தொடங்கினார். இந்த நாட்டில் இலக்கியப் பாடத்தின் எதிர்கால நிலையைக் கண்முன் நிறுத்தி ஆசிரியர்களுக்குள் சிந்தனை எழுச்சியை ஏற்படுத்தினார். இந்தக் காலக்கட்டதில்தான் மூர்த்தி அவர்களின் தொடர்பும் எனக்குக் கிடைத்தது. என் சிறுகதைகளே அவரை எனக்கு அறிமுகப்படுத்தியது.

பணிக்கு வந்து இரண்டு மூன்று ஆண்டுகளிலே கல்வி அமைச்சு பணிகளுக்காக மூர்த்தி அவர்களின் தலைமையில் சில கூட்டங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. கல்வி அமைச்சு பணிகள் ஒரு பக்கமிருக்க ஒவ்வொரு சந்திப்பிலும் மலேசியச் சூழலில் படைப்பிலக்கியங்கள் குறித்தும் இலக்கியப் பாடம் குறித்தும் தொடர்ந்து பேசிக் கொண்டே இருப்பார். வெறும் கொள்கை பேச்சல்ல, நம்மை வழிநடத்தும் பேச்சு. இலக்கியப் பாட வளர்ச்சிக்குத் தமிழாசிரியர்களின் அன்றாட இயல்பான ஆசிரியர் பணிக்கு அப்பால் ஆற்ற வேண்டிய செயல்பாடுகள் குறித்த பேச்சாகத்தான் இருக்கும். பள்ளி அளவு பணிகளோடு நின்று இலக்கியப் பாட வளர்ச்சிக்குப் பணியாற்றுதல் பெரும் விளைவுகளை ஏற்படுத்தாது; சமூகத்தில் களப்பணிகளாற்ற வேண்டும் என்ற சிந்தனை விதைத்தார். இவரின் ஆற்றுவிக்கும் பேச்சுத்தான் எனக்கு அன்று இலக்கியப் பாடத்தின் நிலையைத் தெளிவாக உணர்த்தியது. இந்நாட்டில் இலக்கியப் பாடம் வாழ்வதும் வீழ்வதும் தமிழாசிரியர்களின் கைகளில்தான் உள்ளது என்பதையும் உணர்ந்தேன். அன்று தொடங்கி இன்று வரை தொடர்ந்து இப்பாடத்திற்கான என்னாலான பணிகளை ஆற்றி வருகிறேன்.   

அப்படித்தான் இவர் தூவிய விதை சில இடங்களில் துளிர் விடத் தொடங்கியது. மாநிலம்தோறும் சில ஆசிரியர்கள் இவரின் எண்ணத்திற்கு நீரூற்றத் தொடங்கினர். மூர்த்தி அவர்களோடு இணைந்து இலக்கியப் பாட வளர்ச்சிக்குப் பணியாற்ற பலர் கைகோர்த்தனர். எண்ணமாக மட்டும் இருந்த பெருஞ்செயலுக்கான இயக்கம் செயல்வடிவம் பெறத் தொடங்கியது.

பெருஞ்செயல்களாற்ற சில வேளைகளில் கூட்டு முயற்சிகள் அவசியம். இது போன்ற கல்வி சார்ந்த செயல்பாடுகளில் அவசியம் களப்பணியாற்றுகின்ற ஆசிரியர்களின் ஒத்துழைப்பு அளப்பரியது. மூர்த்தி அவர்களின் எண்ணமும் செயலும் நனவாக வேண்டுமென்றால் அவரோடு பொருந்திச் செயலாற்றுகின்ற ஆசிரியர்கள் அவசியம் தேவை.  அந்தக் காலக்கட்டத்தில் இவரோடு மிக நெருக்கமாக இணைந்து பணியாற்ற திரு. சேகரன், முனைவர் திரு. குணசீலன், திரு. கார்த்திகேசு, திரு. ராஜேந்திரன் போன்றோர் முன்வந்தனர். இவர்களின் கூட்டமைப்பு மிகத் தீவிரமாக இயங்கியது. அடுத்தடுத்து எடுத்த பல்வேறு நடவடிக்கைகள் இலக்கியப் பாட வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியது. முன்னூறிலிருந்து மூவாயிரம் என்ற இலக்கை முதன்மையாக வைத்துச் செயலாற்றினர். 

இலக்கிய நடவடிக்கை குழு என்ற பெயரில் இவர்கள் இலக்கியப் பாட வளர்ச்சிக்குத் தடையாக இருந்த காரணங்களை ஆராய்ந்து செயல்படத் தொடங்கினர். இலக்கியப் பாட நூல்கள் இல்லாமை, ஆசிரியர்களுக்குத் தமிழ் இலக்கியப் பாடம் குறித்த பயிற்றியல் போதாமை, பள்ளிகளில் வகுப்புகள் இல்லாமை, பொது மக்கள் மத்தியில் இலக்கியப் பாடம் பற்றிய விழிப்புணர்வு இல்லாமை போன்ற முதன்மைக் காரணங்கள் ஆராயப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

இப்பாடத்தைக் கற்றுத் தருவதற்கான ஆசிரியர்கள் உருவாக்கப்பட வேண்டும் என்ற முயற்சியில் கல்வி அமைச்சு அதிகாரிகளோடு கலந்து ஆலோசிக்கப்பட்டுப் பட்டத்துக்குப் பிந்திய ஆசிரியர் பயிற்சியில் தமிழோடு இலக்கியப் பாடமும் துணைப் பாடமாக இணைக்கப்பட்டுப் பயிற்சிகள் வழங்கப்பட்டன. இரண்டாயிரத்தாம் ஆண்டுகளின் தொடக்கத்தில் தமிழ் இலக்கியப் பாடத்திற்கென பயிற்சி பெற்ற ஆசிரியர் குழு உருவாகத் தொடங்கியது. இந்தக் குழுவில் உருவாக்கப்பட்ட ஆசிரியர்தான் நானும். முதலில் தமிழாசிரியர் பயிற்சிக்கு இணைந்ததும் இணைப் பாடமாக வேறு பாடமே (Pengajian Am) ஒதுக்கப்பட்டது. சில நாட்களிலே அப்பாடம் நீக்கப்பட்டு தமிழ் இலக்கியம் இணைப்பாடமாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டது. இந்த மாற்றத்திற்குப் பின்னணியில் இருந்து செயல்பட்டவர் மூர்த்தி அவர்கள் என்பது பின்னாளில்தான் தெரிய வந்தது. தமிழ்மொழியோடு இலக்கியப் பாடத்தையும் கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற உந்துதலோடே களம் இறங்கினேன். என்னோடு சேர்ந்து நாடு தழுவிய நிலையில் 40 ஆசிரியர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டபோது இலக்கியப் பாடம் எடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது.

தற்காலிக குழுவாகச் செயல்பட்டுக் கொண்டிருந்த இலக்கிய நடவடிக்கை குழுவை வலுப்படுத்தும் நோக்கத்தில் திரு. மூர்த்தியின் ஆலோசனையில் ‘இலக்கியகம்’ என்ற பதிவு பெற்ற தமிழ் இலக்கிய ஆசிரியர் கழகம் உருவாக்கப்பட்டது. இதில் நாடு தழுவிய நிலையில் பல தமிழாசிரியர்கள் உறுப்பியம் பெற்று இலக்கியப் பாட வளர்ச்சிக்குப் பங்காற்றத் தொடங்கினர். இதில் நானும் சாதாரண உறுப்பினராக இணைந்து இலக்கியக நிகழ்ச்சிகளுக்கு வற்றாத ஆதரவை வழங்கினேன். இந்தத் தருணத்தில் மூர்த்தி அவர்களின் இலக்கியப் பாட வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை நேரடியாகவே காண முடிந்தது. அவரோடு நல்ல நட்பும் ஏற்பட்டது.

முன்னூறாக இருந்த இலக்கியப் பாடத்தை எடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கை மூவாயிரம் எனும் இலக்கை நோக்கி நகரத் தொடங்கியது. மூர்த்தி அவர்களின் கனவு நனவாகத் தொடங்கியது. இருப்பினும் இப்பாட கற்றல் கற்பித்தலில் ஏற்பட்ட சில நடைமுறை சிக்கல்கள் இலக்கியப் பாடத்தின் வளர்ச்சிக்கு முட்டுக் கட்டையாகவே இருந்தன. அதில் முதலாவது, இலவச இலக்கியப் பாடநூல் இல்லாமை. பாடநூல் இல்லாததாலே மாணவர்கள் இப்பாடத்தை எடுக்கத் தயங்கினர். நான் கற்றுக் கொடுத்த பள்ளியிலும் இதே நிலைதான். இந்தக் காலக்கட்டதில் நாவல், நாடகம், கவிதை நூல்களைச் சொந்த செலவில் படியெடுத்துக் கொடுத்து நட்டப்பட்டதுண்டு. இச்சிக்கல்களையெல்லாம் மூர்த்தி அவர்களின் கவனத்திற்குக் கொண்டு வந்தபோது இலவச நூல் தருவிக்கும் திட்டம் மேற்கொள்ளப்பட்டது.  அன்று இருந்த சில அரசியல் தலைவர்களின் ஆதரவில் இலவச நூல்கள் தருவிக்கும் பணிகளிலும் மூர்த்தி அவர்கள் தீவிரமாக ஈடுபட்டார். இதன் விளைவு, போதிய அளவிற்கு இலக்கியப் பாட நூல்கள் தருவிக்கப்பட்டு நாடு தழுவிய நிலையில் இலக்கியப் பாடம் எடுக்கும் படிவம் 4 மற்றும் 5 மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டன. இலவச இலக்கியப் பாடநூல் தருவித்துக் கொடுத்தது இலக்கியப் பாட வளர்ச்சிக்கு மிகப் பெரிய உந்துதலாக அமைந்தது. மூவாயிரம் என்ற இலக்கையும் தாண்டி எண்ணிக்கை ஐயாயிரத்தை நோக்கிப் பயணிக்கத் தொடங்கியது.

பெருஞ்செயலாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளவர்கள் அடிமட்டம் வரை இறங்கி பணி செய்யும் இயல்பைக் கொண்டிருக்க வேண்டும். வெறும் செயல் வடிவம் பெறாத கொள்கை பேச்சுகளின்வழி எதையும் சாதித்திட இயலாது. மூர்த்தி அவர்களும் தன் இலக்குச் சார்ந்த அனைத்துச் செயல்களிலும் அடிமட்டப் பணிகளின் அவசியம் அறிந்து செயலாற்றுபவராகவே இருக்கின்றார். இலக்கியப் பாட வளர்ச்சிக்கு அடிமட்டத்தில் இயங்குகின்ற பொது மக்களின் விழிப்புணர்வு மிக அவசியம் என்பதை மூர்த்தி அவர்கள் தன் பணிப் படையோடு களப்பணியாற்றத் தொடங்கினார்.  பொது மக்களிடையே இலக்கியப் பாடம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு மூர்த்தி அவர்களின் தலைமையிலான ஒரு குழு மக்களோடு மக்களாக இணைந்து பல இடங்களுக்குச் சென்று பரப்புரைகளில் ஈடுபட்டனர். தமிழர்கள் அதிகமாக கூடும் நிகழ்ச்சிகளுக்குச் சென்று விழிப்புணர்வு கையேடுகளையும் வழங்கினர்.

சாமி இடம் கொடுத்தாலும் பூசாரி இடம் கொடுப்பதில்லை என்பார்கள். இதற்கேற்பவே இடைநிலைப்பள்ளிகளில் ஆசிரியர்கள் இப்பாடத்தைக் கற்றுக் கொடுக்கத் தொடங்கியபோது பள்ளி முதல்வர்கள் தடையாக நின்றனர். தங்கள் பள்ளி முதல்வர்களின் புறக்கணிப்பை எதிர்கொள்வதில் ஆசிரியர்கள் பெரும் போராட்டத்தை எதிர்நோக்கினர். இச்சிக்கலைக் களையும் நடவடிக்கையாக மூர்த்தி அவர்கள் மாநிலத் தமிழ்மொழி உதவி இயக்குநர்களுடன் சந்திப்புகள் நடத்தினார். சிக்கல்கள் எழும்போது தமிழ்மொழி உதவி இயக்குநர்கள் தலையிட்டு அச்சிக்கலைக் களைய முன்வர வேண்டும் எனப் பரிந்துரைக்கப்பட்டது. மேலும், சில வேளைகளில் அரசியல்வழி தீர்வுகளும் வேண்டப்பட்டது. அன்று இருந்த இந்தியர்களின் நிகராளி கட்சி மேல்பட்ட தலைவர்களின் ஆதரவும் நேரடி தலையீடும் இச்சிக்கலைத் தீர்க்க வழி செய்தன.

இலக்கியப் பாட வளர்ச்சியில் வரலாற்றுச் சிறப்புமிக்க பெருஞ்செயலாக அமைந்தது மலேசியத் தமிழ் நாவல் பாடநூலாக அறிமுகப்படுத்தப்பட்டதுதான். இதற்கும் வித்திட்டவரும் மூர்த்திதான். இலக்கியப் பாடம் அறிமுகப்படுத்தப்பட்ட நாளிலிருந்து தொடர்ந்து தமிழ்நாட்டு நாவல்களே பாட நூலாகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டன. இந்த நிலை குறித்து எனக்கு ஒரு மாற்றுக் கருத்து எழுந்ததுண்டு. ஏன் இலக்கியப் பாட நாவல் தேர்வில் மலேசிய படைப்புகளுக்கு இடம்தரக் கூடாதென்று? நம் மண்ணின் நடைமுறை வாழ்க்கைக்குப் பொருந்தாத அந்நியப்பட்ட நிலத்தின் வாழ்க்கையை அறிமுகப்படுத்துவதைவிட நம் நிலத்தில் தமிழர்களின் வாழ்க்கையை நாவல்கள்வழி சொல்லலாமே என்ற ஆதங்கம் இருந்தது. அவரோடு பேசும் சில சந்திப்புகள் ஏற்பட்டபோது என் ஆதங்கத்தை அவரிடம் கூறியதுண்டு.  மூர்த்தி அவர்கள் கல்வி அமைச்சில் தமிழ்மொழித் தேர்வு அதிகாரியாகப் பணியாற்றிய காலத்தில்தான் மலேசிய நாவலுக்கு இடம் கிடைத்தது. இவரின் அரிய முயற்சியால் முதன்முறையாக ஐ. இளவழகுவின் ‘இலட்சியப் பயணம்’ என்ற உள்நாட்டு நாவல் பாடநூலாகத் தேர்தெடுக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டது. இது மலேசிய படைப்புகளுக்குக் கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரம் என்றே கூறலாம். இலக்கியத்தின்வழி நம் மாணவர்களுக்கு மலேசிய தமிழர்களின் வாழ்க்கைத் தடங்களைப் புகட்டப்பட வேண்டும் மூர்த்தி அவர்களின் கனவின் விளைவுதான் இந்தத் தேர்வு.  

பெருஞ்செயல்களின் உழைப்பு என்பது எத்துணைக் கடினமானதாகவும் பெருஞ்செலவுகளைக் கோருவதாகவும் இருக்கலாம்.  இவை யாவும் இலக்கிடப்பட்ட தரப்பினரால் ஏற்றுக் கொள்ளப்பட்டால் மட்டுமே பெருஞ்செயல்களின் வெற்றியையும் விளைபயனையும் காண முடியும். இல்லையென்றால் உழைப்பனைத்தும் வீண்தான். மூர்த்தி அவர்களின் தூயநோக்கமும் உள்நோக்கம் இல்லா செயல்பாடும் அவரின் பெருஞ்செயல்கள் அனைத்தும் இலக்கிடப்பட்ட தரப்பினரால் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு ஏதுவாக அமைந்திருந்தன. மாணவர்கள், ஆசிரியர்கள், பொது மக்கள் என மூன்று தரப்பினரும் இலக்கியப் பாட வளர்ச்சி தொடர்பான முயற்சிகளை ஏற்றுக் கொண்டு ஆதரவு வழங்கியதால் மூர்த்தி அவர்களின் முன்னெடுப்புகள் பயனளித்தன.

தனியனாக நின்று சமுதாயம் சார்ந்த பெருஞ்செயல்களாற்றும்போது பொது வெளியில் அது சார்ந்த மதிப்பிடல்கள், எதிர்வினைகள், குறை கூறல்கள் எழுவது மிக இயல்பானதே. மனத் திண்மையும் கொள்கையில் உறுதியும் உடையவர்கள் மட்டுமே இவற்றை எதிர்கொண்டு போராடி வெற்றி பெற முடியும். அத்தகைய பண்பு கொண்டவராகவே மூர்த்தி அவர்கள் விளங்கினார். வேலையிடத்தில் சக ஊழியர்களால் கொடுக்கப்பட்ட நெருக்கடி, ஆசிரியர்களிடமிருந்து எழுந்த எதிர்வினைகள், அதிருப்தி அடைந்தவர்கள் பேசிய அவதூறு என அடிப்படையின்றி எழுந்த எதிர்மறை செயல்பாடுகள் அனைத்தையும் நேர்மறையாக கையாண்டார். அப்படியே குறை குற்றம் இருப்பின் அதைச் சீர்தூக்கிப் பார்த்து தகுந்த நடவடிக்கைகள் எடுத்துத்  திருத்தி கொள்ளும் பண்பு கொண்டவராகவும் மூர்த்தி விளங்கினார்.    

மூர்த்தி அவர்களின் தொடர்ச்சியான முயற்சியும் அயராத உழைப்பும் மலேசியக் கல்வித் திட்டத்தில் தமிழ் இலக்கியப் பாடம் இன்று வரை நிலைத்திருப்பதற்கு ஒரு காரணமென்றால் அது மிகையில்லை. அவரின் பெருஞ்செயல்கள் அளிப்பும் ஏற்பும் தமிழ் இலக்கியப் பாடத்திற்கு வலுவான வழிதடங்கள் அமைத்து கொடுத்து இன்றுவரை நிலைபெறச் செய்துள்ளது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...